Advertisement

அத்தியாயம் – 10

 

வளைகாப்பிற்கு வாராதவன் அவள் ஊருக்கு சென்று பத்து நாட்கள் கழிந்த பின்னே நேராக மதுரைக்கு பிளைட் பிடித்து வந்து சேர்ந்தான்.

 

 

மாமனாருக்கு மட்டும் அழைத்து விபரம் சொல்லியிருந்ததால் மருமகனை அழைக்க அவர் விமான நிலையத்திற்கே வந்து விட்டார். மருமகனை அழைத்துக் கொண்டு காரில் வீட்டிற்கு சென்று இறங்கினார் சொக்கலிங்கம்.

 

 

வாசலில் வண்டி ஏதோ வந்து நின்ற சத்தம் மித்ராவிற்கும் கேட்டது. தெருவில் ஏதோ ஒரு வண்டி வந்திருக்கிறது என்று எண்ணி அவள் அசட்டையாக அமர்ந்திருந்தாள் தந்தையின் குரல் கேட்கும் வரை.

 

 

“மித்ராம்மா என்ற சொக்கலிங்கத்தின் அழைப்பு கேட்டதும் ‘இந்த நேரத்துல அப்பா குரல் கேட்குது என்று எண்ணிக்கொண்டே வாயிலுக்கு வந்தவள் அவருடன் வந்தவனை பார்த்ததும் சந்தோசமாக இருந்தது.

 

 

மனதிற்குள் சட்டென்று ஒரு கோபம் மூண்டது. முதல் நாள் அவளிடம் பேசிய போது கூட இன்று வருவதாக சொல்லவில்லையே என்று எண்ணிக்கொண்டு வந்தவனை வா என்றும் கேட்காமல் அப்படியே சிலையாய் நின்றுக் கொண்டிருந்தாள்.

 

 

“மித்ராம்மா என்ன இது வந்தவங்களை வாங்கன்னு கேட்காம அப்படியே நிக்குதீங்க என்றார் கண்டிப்பாய்.

 

 

தந்தையின் குரலில் இருந்த வேறுபாட்டை உணர்ந்தவள் “வாங்க என்று சைதன்யனை அழைத்தாள்.

 

 

“அம்மா எங்க??

 

 

“பின்னாடி இருக்காங்க என்றவளிடம் “நான் போய் கூட்டியாறேன் நீ மாப்பிள்ளைய பாரு என்றவர் மருமகனிடம் திரும்பி “நீங்க உள்ள வேணா போய் ரெஸ்ட் எடுங்க மாப்பிள்ளை என்றார்.

திரும்பி மகளை பார்த்து உள்ளே அழைத்து செல்லுமாறு ஜாடை காட்டிச் சென்றார். “வாங்க என்று சுரத்தேயில்லாமல் சொன்னவள் அவனை உள்ளே அழைத்துச் சென்றாள்.

 

 

“என்னாச்சு எதுக்கு இப்படி ஒரு ரியாக்சன் கொடுக்கற??

 

 

“ஒண்ணுமில்லை

 

 

“அப்போ நெறைய இருக்கு, என்ன பிரச்சனை சொல்லு??

 

 

“நேத்து போன் பேசினப்போ கூட ஒரு வார்த்தை சொல்லலை நீங்க வர்றீங்கன்னு. இப்படி திடுதிப்புன்னு வந்து நிக்கறீங்க என்றாள் அவன் தன்னிடம் சொல்லவில்லையே என்ற ஆதங்கத்தில்.

 

 

“நான் இங்க வருவேன்னு உனக்கு தெரியாதா?? என்றான் அவளை ஆழமாய் பார்த்து.

 

 

“அதான் சொல்லவேயில்லைனு கேட்டுட்டு இருக்கேன். எனக்கு முன்னமே தெரிஞ்ச மாதிரி கேட்கறீங்க

 

 

“நீ வரணும்ன்னு சொன்னதுனால தானே வந்தேன். இப்போ ஏன் வந்த அப்படிங்கற மாதிரி பார்க்கற

 

 

“உங்களை வரச்சொன்னேன் தான் டெலிவரி அப்போ வரச்சொன்னேன். இப்படி எனக்கு சொல்லாம கொள்ளாம வாங்கன்னு சொல்லலையே

 

 

“டெலிவரி டைம் தானே உனக்கு. சரியா தானே வந்திருக்கேன். அப்போ உன்னை பார்க்க உன்கிட்ட நான் பர்மிஷன் வாங்கிட்டு தான் வரணுமா?? என்று கொக்கி போட்டான்.

 

 

இப்போது அவள் வாயடைத்து போனாள். “நான் என்ன சொன்னேன் நீங்க இப்படி சொல்றீங்க?? நான் எதுவும் பேசலை என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவள் தந்தை எட்டி பார்த்தார்.

 

“மித்ராம்மா என்ன பழக்கம் இது அவரை நிக்க வைச்சே பேசிட்டு இருக்க வந்தவருக்கு காப்பித்தண்ணி வைச்சு கொடுத்தியா, சாப்பிட்டுங்கன்னு சொன்னியா என்னம்மா பழக்கம் பழகுதீங்க நீங்க என்று குரலில் சற்று கடுமையுடன் கூறினார்.

 

 

சைதன்யனோ எதுவும் பேசாமல் அமைதியாய் இருந்தான். அதற்குள் ஈஸ்வரி கையோடு கொண்டு வந்திருந்த பழச்சாறை மருமகனிடம் நீட்டினார்.

 

 

மனைவியை நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்துவிட்டு “தேங்க்ஸ் அத்தை என்று வாங்கிக்கொண்டான்.

 

 

“மதியத்துக்கு கோழி அடிக்க சொல்லி இருக்கேன். குழம்பு வைச்சிடட்டுங்களா?? என்று மருமகனை பார்த்து கேட்டார் ஈஸ்வரி.

 

 

“எனக்காக புதுசா எதுவும் செய்ய வேணாம் அத்தை. என்ன இருக்கோ நான் அதையே சாப்பிட்டுக்கறேன் என்றான்.

 

 

“புதுசா என்ன புதுசா நீங்க வாரதே எங்களுக்கு விசேஷம் தான். கல்யாணம் முடிச்சு மறுவீட்டுக்கு வந்தது. புறவு இப்போதேன் வர்றீங்க, நான் போய் வேலைய பாக்கேன் என்று நகர்ந்துவிட்டார் அவர்.

 

 

சொக்கலிங்கமும் மகளை ஒரு பார்வை பார்த்துவிட்டு மனைவியின் பின்னே சென்றுவிட்டார். “உனக்கு நான் வந்தது பிடிக்கலையா?? என்றான்.

 

 

‘இதென்ன புதுக்கதை நான் எப்போ அப்படி சொன்னேன் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டிருக்க “வரச்சொல்லிட்டு ஏன் வந்தேன்னு பார்க்கற மாதிரி இருக்கு அதான் கேட்டேன் என்றுவிட்டு ரெப்ரெஷ் செய்ய சென்றுவிட்டான்.

 

 

‘ஆமா நான் ஏன் கேள்வி கேட்டேன். ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம்ன்னு தானே கேட்டேன். அதுல என்ன தப்பிருக்கு என்று நினைத்துக்கொண்டு மேலே எதுவும் பேசி கெடுத்துக் கொள்ள வேண்டாம் என்று அமைதியானவள் இன்னும் சற்று நேரத்தில் மீண்டும் அவனிடம் பஞ்சாயத்து ஆரம்பிக்க போகிறோம் என்றறியாமல் சபதம் எடுத்துக் கொண்டிருந்தாள்.

 

 

மதிய உணவு அருந்தி முடிக்கவும் வேணியின் கணவன் பாண்டியன் வந்திருந்தான் சைதன்யன் வீட்டிற்க்கு வந்த விஷயம் கேள்விப்பட்டு.

 

 

இருவருமாக பொதுவாக பேசிக் கொண்டிருந்தனர். “சாரி அன்னைக்கு வேணி வரவும் உங்களை பாதியில விட்டு கிளம்பிட்டேன். தப்பா எடுத்துக்காதீங்க என்று சைதன்யனிடம் மன்னிப்பு கேட்டான் பாண்டியன்.

 

 

“என்ன அண்ணா நீங்க என்னை போய் நீங்க வாங்க போங்க பேசிட்டு. சும்மா பேரு சொல்லி கூப்பிடுங்க. என்கிட்ட நீங்க மன்னிப்பு கேட்கணும்ன்னு எந்த அவசியமும் இல்லை

 

 

“பொண்டாட்டியை பார்த்து புருஷன் கொஞ்சம் பயப்படுறதுலயும் மரியாதை கொடுக்கறதுலயும் ஒண்ணும் தப்பில்லை என்றவனின் பார்வை மித்ராவை தொட்டு நின்றது.

 

 

‘பேசுறதை பாரு இவரு என்னை பார்த்து பயப்படுறாரா!! நான் தான் இவரு எப்போ என்ன பேசுவாருன்னு நினைச்சு பயந்துகிட்டு இருக்கேன் என்று நினைத்துக் கொண்டாள்.

 

 

பாண்டியன் அப்போது தான் திரும்பி மித்ராவை பார்த்தான். “சாரிம்மா மித்ரா நீ வந்ததும் வரணும்ன்னு நினைச்சேன். கொஞ்சம் ஈரோடு வரைக்கு ஒரு வேலையா போயிட்டேன்

 

 

“இன்னைக்கு தம்பி வர்றாருன்னுமாமா சொன்னாங்க. அதான் உங்க ரெண்டு பேரை பார்த்து போகலாம்ன்னு வந்தேன். எப்படிம்மா இருக்க?? நல்லாயிருக்கியா?? என்றான் பாண்டியன்.

 

 

“நான் நல்லா தான் மாமா இருக்கேன். உங்களுக்கெல்லாம் தான் என்னைய கண்ணுக்கே தெரிய மாட்டேங்குது. நான் என்ன குத்தம் பண்ணிட்டேன்னு உங்க பொண்டாட்டி என்னைய பாக்க கூட வரமாட்டேங்குற

“பிள்ளைகளை கூட அனுப்பி வைக்கலை. உங்களையாச்சும் அனுப்பி வைச்சிருக்காளே அதே சந்தோசம் தான். ஒரு வேளை நீங்க அவளுக்கு தெரியாம வந்திருக்கீங்களா என்று அவனை கேள்வியாய் பார்க்கவும் பாண்டியனுக்கு சங்கடமாகி போனது.

 

 

சைதன்யன் அவனின் நிலை உணர்ந்து மித்ராவை அதட்டினான். “மித்ரா என்ன பேச்சு இது?? கொஞ்சம் பேசாம இரு என்று அதட்டிவிட்டு பாண்டியனிடம் சமாதானம் பேசி அவன் சங்கடத்தை போக்கி அனுப்பி வைத்தான்.

 

 

அவர்கள் அறைக்கு திரும்பி வந்தவன் மித்ரா கட்டிலில் அமர்ந்து கொண்டிருப்பதை பார்த்து அவளருகே சென்றான். “என்ன உனக்கு பிரச்சனை?? எதுக்கு இப்படி எல்லாரையும் காய்ச்சு எடுக்கற?? என்றான்.

 

 

“ஒண்ணுமில்லை

 

 

“நீ ஒண்ணுமில்லைன்னு சொன்னாலே நெறைய இருக்கும். சொல்லு என்னாச்சு. அந்த அண்ணா உன்னை பார்க்கணும்ன்னு வந்தா இப்படி தான் முகத்தில அடிச்ச மாதிரி பேசுவியா?

 

 

“நான் ஒண்ணும் அவரை கஷ்டப்படுத்தணும் நினைக்கலை. என் கூடப்பிறந்தவ அவளுக்கு என் மேல பாசமே இல்லையேன்னு ஆதங்கம் அதை கூட கேட்க கூடாதா நானு

 

 

“அதை நீ உங்க அக்காகிட்ட கேட்டிருக்கணும். இல்லை சண்டை போட்டிருக்கணும் அதைவிட்டு அவரை கேட்டா என்ன அர்த்தம்

 

 

மித்ராவின் முகம் சுருங்கி போனது அவளருகே வந்தவன் “இங்க பாரு மித்ரா உன் பக்கமாவே சுயநலமா யோசிக்காத. அவங்களுக்கு எப்படி இருந்திருக்கும்ன்னு அவங்களை பத்தியும் யோசி என்றான்.

 

 

மித்ராவோ வெடுக்கென்று “சுயநலத்தை பத்தி நீங்க பேசாதீங்க. எல்லாம் எனக்கு தெரியும் என்றுவிட முகத்தில் அறைவாங்கியது போல் இருந்தது சைதன்யனுக்கு.

மேற்கொண்டு எதுவும் பேசவில்லை அவன். சட்டையை மாட்டிக்கொண்டு வெளியில் சென்றுவிட்டான். அவன் சென்ற பின்னே தான் அவள் பேசிய வார்த்தையின் அர்த்தம் உணர்ந்தவள் அதை நினைத்து வருந்திக் கொண்டிருந்தாள்.

 

 

வெகு நேரம் கழித்து வீட்டிற்கு வந்தவன் இரவு உணவு அருந்திவிட்டு அவர்கள் அறைக்கு வந்து பேசாமல் கட்டிலில் ஓரத்தில் படுத்துக்கொண்டான். மெதுவாக அவனருகே சென்றவள் அவனை அழைத்து பார்த்தாள்.

 

 

பதிலேதும் சொல்லாமல் அமைதியாகவே படுத்திருந்தான் அவன். அவன் தட்டி அழைக்கவும் மெதுவாய் எழுந்து அமர்ந்தான். அப்போதும் ஒன்றும் பேசவில்லை.

 

 

“இல்லை நான் பேசினதுல நீங்க கோவமா இருக்கீங்களா?? அது வந்து… வந்து நான் வேற ஏதோ பேச வந்து என்னென்னமோ பேசிட்டேன்… சாரி

 

 

“எதுக்கு சாரி?? நீ சொன்னதுல ஒண்ணும் தப்பேயில்லையே. சுயநலத்தை பத்தி பேச எனக்கு கொஞ்சம் கூட அருகதை இல்லை தானே

 

 

“இல்லை நீங்க… என்று அவள் ஏதோ மறுத்துக் கூற “வேணாம் மித்ரா எதுவும் சொல்ல வேண்டாம். நீ சொல்லலைன்னாலும் எனக்கே தெரியும்

 

 

“என்னோட சுயநலத்துனால நீ தான் அதிகமா பாதிக்கப்பட்டிருக்க!! எனக்கு அது புரியாம இல்லை. எனக்கும் இப்போ என்ன பண்றதுன்னு தெரியலை. சாரி சொன்னா சரியாகாதுன்னு தெரியும். ஆனாலும் உனக்கு என்ன பதில் சொல்லன்னு தெரியலை என்றவன் அதிகமாய் வருந்துவது புரிந்தது.

 

 

“நான் ஏதோ லூசு மாதிரி பேசிட்டேன். நீங்க அதை மனசுல வைச்சுட்டு உங்களையே ஏன் தாழ்த்தி பேசிக்கறீங்க

 

 

“தாழ்த்தி எல்லாம் பேசலை அது தானே உண்மை, ப்ளீஸ் மித்ரா மேல பேச வேண்டாம் இதோட விட்டிரு என்றவன் அதற்கு மேல் எதுவும் பேசவில்லை.

 

 

மித்ராவுக்கு குற்றவுணர்ச்சியாக இருந்தது. ஏதோ ஒன்று சொல்ல போக அது எங்கோ போய் முடிந்துவிட்டதே என்று நினைத்து வருந்தினாள். அவளுக்கு இருந்த மனக்கவலையில் அடிவயிற்றில் சுரீர் என்று ஏற்பட்ட வலியை பிரமை என்று கருதி அமர்ந்திருந்தாள்.

 

 

ஏனோ மாலையில் இருந்தே இப்படி லேசாய் வலிப்பதும் பின் வலியே இல்லை என்பது போலவும் இருக்க அவளும் அதை பற்றி யாரிடமும் சொல்லவில்லை.

 

 

அன்னையிடம் சகஜமாய் பேசியிருந்தால் ஒருவேளை சொல்லியிருப்பாள். ஈஸ்வரி அவளிடம் ஒரேடியாக பேசவில்லை என்று சொல்ல முடியாது.

 

 

முன்பு போல் சகஜமாய் பேசா விட்டாலும் மகளின் மேல் இருந்த பாசமும் அவள் குழந்தையை சுமந்து கொண்டிருப்பதும் அவர் மனதை சற்றே இளகியிருந்தது.

 

 

தினமும் மகளுடனே படுத்து கொள்பவர் அன்று மருமகனின் வருகையில் வெளியில் படுத்துக் கொண்டிருந்தார். எப்போதும் இரவில் இரண்டு மூன்று முறை எழுந்து மகளின் அசைவை பார்ப்பது அவர் வழக்கம்.

 

 

அவர் இருந்திருந்தால் அவள் அசைவிலேயே எழுந்து அமர்ந்திருப்பார். மித்ராவுக்கு நேரம் ஆக ஆக விட்டுவிட்டு வந்து கொண்டிருந்த வலி தொடர்வலியாக ஆரம்பித்தது.

 

 

பல்லைக்கடித்து பொறுத்து பொறுத்து பார்த்தவள் முடியாமல் அம்மாவென்று வலியில் முனக சைதன்யன் திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தான். தெரியாமல் கை கால் எதுவும் அவள் மேல் பட்டுவிட்டதோ என்று எண்ணி அருகில் பார்க்க அவள் கட்டிலின் ஓரத்தில் அமர்ந்திருந்தாள்.

அவளருகே சென்றவன் “என்ன மித்ரா?? என்னம்மா செய்யுது?? என்று கேட்க அவன் கேட்ட விதமே அவளுக்கு இன்னும் அழுகையை கொடுக்க “முடியலைங்க… என்றாள் வலியுடன்.

 

 

“மித்ரா என்னன்னு சொல்லு எனக்கு ஒண்ணும் புரியலை என்று கேட்கவும் “வலி தாங்க முடியலைங்க ரொம்ப வலிக்குது என்றவள் அருகில் அமர்ந்திருந்தவனின் தோளில் அப்படியே சாய்ந்து கொண்டாள்.

 

 

அவனுக்கு பதட்டம் தொற்றிக்கொள்ள “ஒரு நிமிஷம்மா நான் போய் அத்தையை எழுப்பி கூட்டிட்டு வர்றேன். அதுவரை இப்படி சாய்ஞ்சு உட்காரு என்று அவளுக்கு வசதியாக தலையணையை வைத்துவிட்டு அவளை சாய்த்து அமர்த்திவிட்டு கதவை திறந்தான்.

 

 

ஈஸ்வரி அவன் கதவை திறந்த சத்ததிலேயே எழுந்துவிட்டிருந்தார். அவருக்கு முன்னமே சந்தேகமிருந்தது மித்ராவின் மேடிட்ட வயிறு இறங்கியிருந்ததில் இன்னும் வாரத்திற்குள் அவளுக்கு பிரசவம் ஆகிவிடும் என்பது அவர் கணிப்பு.

 

 

“என்னாச்சு என்று அவர் எழுந்து அமரவும் ஒற்றைகட்டிலில் ஓரமாய் படுத்திருந்த சொக்கலிங்கமும் எழுந்து வந்தார். “அத்தை மித்ராக்கு ரொம்ப வலிக்குதுன்னு சொல்றா என்றவனின் முகத்தில் அப்பட்டமான பயம் தெரிந்தது.

 

 

ஈஸ்வரி சற்றும் தாமதியாது உள்ளே விரைய “என்னாச்சு மித்ரா?? ரொம்ப வலிக்குதா எவ்வளவு நேரமாம்மா வலிக்குது எனவும் “சாயங்காலத்தில இருந்தே விட்டு விட்டு வலிச்சுதும்மா

 

 

“நான் தான் குழந்தையோட அசைவில வலிக்குதுன்னு பேசாம இருந்திட்டேன் என்றாள் கண்ணீருடன். ஈஸ்வரிக்கு புரிந்துவிட்டது மகளுக்கு பிரசவ வேதனை என்று சற்றும் தாமதியாது கணவனை நோக்கி “ஏங்க நம்ம வெங்கடேசு வண்டியோட வெளிய தானே இருக்கான். நீங்க போய் வண்டி எடுக்க சொல்லுங்க

 

 

“நான் ஆஸ்பத்திரிக்கு போக தேவையானதை எடுத்து வைக்கறேன் என்று நகர்ந்தவர் “நீங்க கொஞ்சம் அவளை பார்த்துக்கோங்க மாப்பிள்ளை என்றுவிட்டு வெளியில் சென்றார் அவர். சைதன்யனுக்கு அவள் படும் வேதனை பார்க்க முடியவில்லை.

 

 

அவளருகே அமர்ந்து அவள் கையை எடுத்து தனக்குள் வைத்துக்கொண்டான். அவன் மேலேயே சாய்ந்துகொண்டவள் வலியில் வெகுவாய் முனக ஆரம்பித்தாள்.

 

 

ஒரு கட்டத்தில் முடியாமல் “உயிர் போற மாதிரி வலிக்குதே என்றவள் “இப்படி வலிக்கறதுக்கு செத்து போய்டலாம் போல இருக்கேஎன்று பிரசவ வேதனையில் முனக சைதன்யன் அவளைவிட்டு எழுந்து நின்றிருந்தான்.

 

 

ஈஸ்வரியும் உள்ளே வர போகலாம் என்பது போல் தலையசைத்தவர் மகளருகே சென்று “வா மித்ரா என்று அவள் கைப்பிடித்து பற்றி எழுப்பினார்.

 

 

கட்டிலில் இருந்து இறங்கி கீழே நின்றவளால் நிற்க கூட முடியாமல் தள்ளாட அவளையே பார்த்திருந்த சைதன்யன் “அத்தை நீங்க போய் வண்டியில உட்காருங்க. மித்ராவை நான் கூட்டிட்டு வர்றேன் என்றுவிட்டு சற்றும் யோசிக்காமல் அவளை இருகைகளாலும் தூக்கிக் கொண்டான்.

 

 

ஈஸ்வரியே அவனை வாயடைத்து போய் பார்த்துக் கொண்டிருந்தார். கதவை பூட்டிக்கொண்டு மருத்துவமனைக்கு விரைய செல்லும் வழியில் அவன் அன்னைக்கு அழைத்து விபரம் சொன்னான்.

 

 

மித்ராவோ விடாமல் அனத்திக் கொண்டே வந்தாள். சைதன்யனுக்கு என்ன தோன்றியதோ மேடிட்ட அவள் வயிற்றில் மேல் கை வைக்க சற்று நேரத்தில் மித்ராவின் முனகல் குறைந்திருந்தது.

 

 

உள்ளிருந்த அவன் மகள் தந்தையின் வரவை உணர்ந்து அவன் தொடுகை உணர்ந்து அன்னையை சற்று வேதனையில் இருந்து குறைத்தாள் போலும். மித்ரா அப்போது தான் அவன் தொடுகையை உணர்ந்தாள்.

 

 

அவர்களின் பிள்ளையும் தான் இருக்கிறேன் என்று தன் அசைவை காட்ட சைதன்யனுக்கு அந்த அனுபவம் சொல்லி மாளாது என்பதை அவன் முகத்தில் தோன்றிய உணர்ச்சியிலேயே கண்டுகொண்டாள்.

 

 

அதற்குள் மருத்துவமனையும் வந்திருக்க முதலில் இறங்கிய சைதன்யன் அவளை தூக்கிக்கொள்ள போக “இல்லை நானே வர்றேன் என்றவள் அவன் கையை பிடித்துக்கொண்டு மெதுவாய் இறங்கினாள்.

 

 

“பரவாயில்லைம்மா நான் வேணா தூக்கிட்டு போறேன். இல்லைன்னா உள்ள போய் ஸ்ட்ரெச்சர் கொண்டு வர சொல்லட்டுமா என்றான் மென்மையான குரலில்.

 

 

மித்ராவுக்கு அவனின் மென்மையான பேச்சே இனிமையாய் காதுக்குள் இறங்கியது. வேண்டாம் என்று மறுத்தவள் அவன் கைப்பற்றிக்கொண்டு உள்ளே சென்றாள்.

 

 

மருத்துவர் அவளை பார்த்துவிட்டு அது பிரசவ வலி என்பதை உறுதிப்படுத்தி அட்மிஷன் போட சொன்னார். இன்னும் சில மணி நேரத்தில் குழந்தை பிறந்து விடும் என்று கூற சைதன்யனுக்கு தான் தவிப்பாய் இருந்தது.

 

 

உள்ளே சென்றவளின் குரல் வெளியே அவனுக்கு கேட்டது. அந்த நேரத்தில் அவளுக்கு மட்டும் தான் பிரசவம் நடந்து கொண்டிருந்தது என்பதாலும் இரவு நேரம் என்பதாலும் மெல்லிய ஒலி கூட பெரிதாய் கேட்டது.

 

 

சற்று நேரத்தில் மருத்துவர் வெளியில் வந்து “கொடி சுத்தியிருக்கு, ஆபரேஷன் பண்ணிடறது தான் பெட்டர் என்று கூறவும் சைதன்யன் தன் மாமனார் மாமியாரை பார்த்தான்.

 

 

சீருடை அணிந்த நர்ஸ் ஒருவர் வந்து அவனிடம் கையெழுத்து வாங்கி போக சைதன்யன் மருத்துவரை பார்க்க சென்றான். தானும் டெலிவரியின் போது உடனிருக்க வேண்டும் என்று அவன் அடம் பிடிக்க பின்னோடு வந்த சொக்கலிங்கம் “அதெல்லாம் இங்க பழக்கமில்லைங்க மாப்பிள்ளை, வேண்டாங்க என்று மறுத்தார்.

மருத்துவருக்கு சொக்கலிங்கத்தை முன்பே பழக்கம் என்பதால் அவரிடம் உரிமையாய் “மாமா உங்க மருமகனுக்கு கொஞ்சம் புரிய வைங்க. நான் உள்ளே போறேன் என்று வெளியே செல்ல கிளம்பினார்.

 

 

சைதன்யன் விடாப்பிடியாய் நிற்க மாமனாரும் மாமியாரும் எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை. மருத்துவர் அவனுக்கு ஒரு மாஸ்க்கை கொடுத்து அணிய செய்து அவனையும் உள்ளே அழைத்து சென்றார்.

 

 

அவர்கள் சென்ற அரைமணிக்குள்ளாகவே சைதன்யனின் மகள் ஜனனித்திருந்தாள். மித்ரா மயக்கத்தில் இருந்ததால் சைதன்யன் அவளுடன் இருந்தான் என்பதே அவளுக்கு தெரியாது.

 

 

குழந்தை பிறந்த மறுநாள் காலையிலேயே சைதன்யன் அவன் மனைவி விழிக்கும் வரை கூட காத்திராமல் ஊருக்கு கிளம்பிச் சென்றிருந்தான். மித்ராவுக்கு மீண்டும் ஏமாற்றமாய் இருந்தது.

 

 

வீட்டிற்கு வந்த பின் அவள் தந்தை சொல்லி தான் தெரியும் மருத்துவமனையில் அவளுக்கு ஆபரேஷன் செய்யும் போது அவனும் உடனிருந்தான் என்று.

 

 

ஒரு வாரம் கழித்து அவனாகவே போன் செய்ய மித்ரா முதலில் அவனிடம் சண்டையிட வேண்டும் என்று தான் நினைத்திருந்தாள். அவன் ஊருக்கு வந்த அன்று தேவையில்லாமல் பேசி அவனை கஷ்டப்படுத்திவிட்டோம் என்பதாலேயே அவனிடம் நல்லவிதமாகவே பேசினாள்.

 

 

குழந்தையை பற்றியே அதிகம் விசாரித்தான். அவளை பற்றியும் ஓரிரு வார்த்தைகள் விசாரித்து வைத்தான். அவர்கள் மகள் பிறந்து ஒரு மாதம் சென்றிருந்த வேளை அவன் எழுதிய பரீட்சையின் முடிவுகள் வெளி வந்திருந்தது.

 

 

அதை சொல்ல அவனாகவே மித்ராவை அழைத்தான். மெயின் எக்ஸாம் பாஸ் செய்த விஷயத்தை சொல்லி மாமனார் மாமியாரிடம் பேசிவிட்டு நேர்முக தேர்விற்காய் தயாராகிக் கொண்டிருந்தான்.

 

 

நேர்முக தேர்விற்கு இரண்டு மாதம் இருக்க பத்து நாட்கள் வந்து தங்கிச் சென்றான். குழந்தையுடனே பெரும்பாலான நேரத்தை செலவிட்டவன் மித்ராவிடம் அதிகமாய் பேசிக்கொள்ளவில்லை.

 

 

பேசவேயில்லை என்று சொல்ல முடியாது. அவள் கேட்டதிற்கு எல்லாம் நல்லவிதமாகவே பேசினான். ஆனால் அதில் முழுதாய் ஒட்டுதல் இல்லையோ என்பது அவள் எண்ணம்.

 

 

இதோ அவன் நேர்முகத்தேர்விலும் வென்று முதல் நூறு இடத்திற்குள் வந்திருந்தான். அதன் பின் நாட்கள் ஓடியதே தெரியவில்லை. ஒரு வருடம் ட்ரைனிங் முடிந்து ஆந்திரா நெல்லூரில் சப் கலெக்டராக தன் பயணத்தை ஆறு மாதம் செய்து முடித்தவனுக்கு இப்போது கடலூரில் போஸ்டிங் ஆகியிருந்தது.

 

____________________

 

 

தன் கதையை ஒருவழியாய் தோழியிடம் சொல்லி முடித்த மித்ரா “போதுமாடி என் கதை இவ்வளவு தான் சொல்லி முடிச்சுட்டேன். இப்போ உனக்கு நிம்மதியா?? என்று சுஜியை பார்த்தாள்.

 

 

“ஏன்டி உன்கிட்ட கதை கேட்டா இப்படி தான் பத்து அத்தியாயத்துக்கு கதை சொல்லிட்டே இருப்பியா?? டைம் பார்த்தியா இனி நீ எப்போ வீட்டுக்கு போவ என்று தோழியை கிண்டல் அடிக்க அப்போது தான் மித்ரா நேரம் பார்த்தாள்.

 

 

மதியத்திற்கு மேல் நேரம் கடந்திருந்தது. “அச்சோ அத்தை!! அத்தை என்ன பண்றாங்களோ என்று பதறிக்கொண்டு எழுந்தாள் மித்ரா.

 

 

“எல்லாம் உன்னால தான் என்று சுஜியை பார்த்து முறைத்தாள். “சரி நான் கிளம்பறேன். அத்தை எனக்காக சாப்பிடாம காத்திட்டு இருப்பாங்க என்றவள் மதுவை தூக்கிக்கொண்டு கிளம்பினாள்…

Advertisement