Advertisement

அத்தியாயம் – 9

 

 

அழைத்த அந்த குரலுக்கு சொந்தக்காரி அஸ்வினியே தான். மித்ரா அந்த பார்ட்டிக்கு செல்ல வேண்டாம் என்று நினைத்தது அவளை பார்ப்போமோ என்று எண்ணியே!!

 

 

விதி யாரை விட்டது அவள் கண்ணிலேயே விழுந்துவிட்டாள். மித்ரா அவள் பேச்சு காதில் விழாதவள் போல் அவள் புறம் பார்க்காமல் அடுத்து நின்றிருந்தவரிடம் பேச ஆரம்பித்தாள்.

 

 

“மித்ரா எதுக்குடி என்னை அவாய்ட் பண்ணுற?? நான் உன்னை என்னடி பண்ணேன்?? என்று சொல்லி அவளை தன்புறம் திருப்பினாள் அஸ்வினி.

 

 

வந்த இடத்தில் தேவையில்லாத ரசாபாசம் வேண்டாம் என்றெண்ணியவளாக “இப்போ என்ன வேணும் உனக்கு?? என்றாள் தோழியை பார்த்து காரமாக.

 

 

“ஹேய் உனக்கு கல்யாணம் ஆகிடுச்சாமே இப்போதான் செபாஸ்டியன் சொன்னான். கேரிங்கா இருக்கியா!! ஏன்டி எனக்கு ஒரு வார்த்தை கூட சொல்லலை

 

 

“உனக்கு மட்டும் இல்லை யாருக்குமே நான் சொல்லலை என்றாள் முகத்தில் அடித்தது போல்.

 

 

“எல்லாரும் நானும் ஒண்ணா உனக்கு. நாம சேர்ந்து எவ்வளவு சுத்தியிருப்போம், எவ்வளவு பேசியிருப்போம். எல்லாமே மறந்து போச்சா உனக்கு

 

 

“அதையெல்லாம் எதுக்கு இப்போ பேசிட்டு இருக்க என்றாள் மித்ரா.

 

 

“எல்லாம் அந்த இடியட்னால வந்தது. அவனை பத்தி பேசப் போய் தான் நீ என்னைவிட்டு போய்ட்ட என்று சைதன்யனை திட்டியவளை ஓங்கி அறையவேண்டும் போல் தோன்றியது மித்ராவுக்கு.

 

பல்லைக் கடித்து பொறுத்தவள் “தேவையில்லாம அவரை எதுக்கு இதுல இழுக்கற. உனக்கும் எனக்குமான பிரச்சனை அவரால வரலை. உன்னோட தரம் பார்த்து பழகுற குணத்தினால வந்தது என்று திருப்பிக் கொடுத்தாள் மித்ரா.

 

 

“எப்படியிருந்தாலும் அந்த ராஸ்கல் பத்தி பேசினப்போ தான் நமக்குள்ள பிரச்சனை ஆச்சு என்றாள் அஸ்வினி.

 

 

மித்ராவுக்கு ‘அவன் என் கணவன், அவனை பற்றி தகுதி குறைவாக பேசாதே என்று அந்த ஹாலே அதிரும் படி கத்தத் தோன்றியது. இவளிடம் அதை சொன்னால் இவள் இவ்விசயத்தை நல்லவிதமாக எடுத்துக் கொள்ள மாட்டாள் என்று தோன்றியது.

 

 

தன்னை நிலைப்படுத்திக் கொள்ள அஸ்வினிக்கு பதில் கூறாமல் திரும்பி நின்றுகொண்டாள். அஸ்வினி விடாமல் அவள் புறம் வந்து மீண்டும் பேச ஆரம்பித்தாள்.

 

 

“அவனை பத்தி பேச்சை விடு. நீ ஏன் உன் கல்யாணத்துக்கு கூட எனக்கு சொல்லலை. கூட வேலை பார்த்த கடமைக்காச்சும் சொல்லியிருக்கலாம் என்று அங்கலாய்த்தவளை எரித்துவிடுவது போல் பார்த்தாள் மித்ரா.

 

 

“நீ சொல்லிட்டு போனியா என்கிட்ட?? இந்த பிரான்ச்ல இருந்து மாத்திக்கிட்டு போனியே அப்போ நீ சொல்லிட்டு போனியா என்கிட்ட?? அங்க போய் ஒரு போனாச்சும் நீ எனக்கு பண்ணியிருப்பியா?? என்று காரசாரமாகவே திருப்பி கேட்டாள் அவள்.

 

 

“ஹேய் நான் சொல்லக் கூடாதுன்னு எல்லாம் நினைக்கலை மித்து. நீ வேற என்கிட்ட பேசலை, சைத்துவும் என்னை புரிஞ்சுக்கலை. எனக்கு எப்படி இருந்துச்சு தெரியுமா என்றவளை பார்த்து பல்லைக்கடிப்பதாக நினைத்த மித்ரா உதட்டை கடித்தாள்.

 

 

லேசாய் கசிந்த ரத்தம் அவள் உணரவும் தான் தன்னை கட்டுப்படுத்திக் கொள்ள முனைந்தாள். “இப்போ என்ன பண்ணணுங்கற?? என்று நேரடியாகவே அஸ்வினியை பார்த்து கேட்டாள்.

“மித்து கேட்குறேன்னு தப்பா நினைக்காதடி. நீ சொன்னது எவ்வளவு உண்மைன்னு இப்போ எனக்கு புரியுது. சைத்துவை மிஸ் பண்ணதுல இருந்து அவரோட ஞாபகமாவே இருக்கு மித்ரா

 

 

“அவரை நீ அதுக்கப்புறம் எப்பவாச்சும் பார்த்தியா?? அவர் அப்போவே வேலை விட்டு போயிட்டார்ன்னு தெரியும். அவர் வேலை செஞ்ச இடத்துக்கும் போய் பார்த்திட்டேன் அங்க அவங்க வீட்டு அட்ரஸ் கிடைச்சு போனேன்

 

 

“ஆனா சைத்து அதுக்குள்ள வேற வீடு மாறிப் போயிட்டார்ன்னு சொன்னாங்க. அவரோட போன் நம்பர் கூட மாத்திட்டார் போல என்று அவள் சொல்லிக்கொண்டே போக மித்ராவுக்கு அதற்கு மேல் அங்கு நிற்க முடியும் போல் தோன்றவில்லை.

 

 

அஸ்வினியை எதுவும் சொல்லாமல் போகவும் அவளுக்கு மனமில்லை. அவளுக்கு நன்றாக திருப்பிக் கொடுக்க நாவு துடித்துக் கொண்டிருந்தது.

 

 

“கொஞ்ச நேரம் முன்னாடி திட்டின. இதென்ன புதுக்கதை அவரை செல்லமா கூப்பிடுற?? என்றாள் மித்ரா. தன் கணவனை அவள் செல்லமாக கூப்பிடுவது அவளுக்கு மகா எரிச்சலாக இருந்தது.

 

 

“ஒரு கோபம் திட்டினேன். அதெல்லாம் லவ்வர்ஸ்குள்ள சகஜம், திட்டின நானே இப்போ அவரை கொஞ்சுவேன் என்றவளை அடிக்காமல் விட்டதே அவளுக்கு பெரிய விஷயமாக இருந்தது.

 

 

“நீங்க லவ்வர்ஸ் ஆ!!!

 

 

“ஆமா அவர் என்னை லவ் பண்ணார், நான் அவரை லவ் பண்ணேன். அப்போ நாங்க லவ்வர்ஸ் தானே என்று கூற மித்ராவுக்கு நெஞ்சு வெடித்துவிடும் போல அழுகை தயாராக ஆரம்பித்தது, தன்னை கட்டுப்படுத்திக்கொண்டு எதிரிலிருந்தவளிடம் வெடித்தாள்.

 

 

“ஆகா நீ என்னை தேடினது உனக்கு மாமா வேலை பார்க்க அப்படி தானே. சீய்!!! நீயும் ஒரு மனுஷியாடி எப்படி இப்படி எல்லாம் உன்னால முடியுது

 

 

“எப்படி எப்படி என்கிட்ட சொல்லிட்டு போனா நான் முகத்தை திருப்பிக்குவேனா!! என்னைக்கு நான் அப்படி செஞ்சிருக்கேன். இதோ இப்போ நீ வந்து பேசின, நான் உன்கிட்ட பேசாமலா போயிட்டேன்

 

 

“உனக்கு இப்போ என் மூலமா காரியம் ஆகணும் அதுக்கு தான் நீ என்னைத் தேடி வந்திருக்க!!நீ நல்லவன்னு உன்னை நம்பி உன் கூட சுத்திட்டு இருந்த அந்த பழைய மித்ரான்னு நினைச்சியா என்னை!!

 

 

“அன்னைக்கு நீ பேசின பாரு தகுதி தராதரம் எல்லாம் அன்னைக்கு தான் உன்னோட உண்மையான கேவலமான மனசு எனக்கு புரிஞ்சுது

 

 

“அன்னைக்கே உன்னை பத்தி முழுசா தெரிஞ்சுகிட்டேன் நினைச்சேன். இன்னைக்கு தான் உன்னை நான் முழுசாவே தெரிஞ்சுருக்கேன். உன்னோட புறம் வேணா அழகா இருக்கலாம்

 

 

“உன்னோட அகம் அழுக்கா இருக்கு அஸ்வினி, அதை மாத்திக்கோ முதல்ல. தேவைன்னா யூஸ் பண்ணிக்கறதும் தேவையில்லான டிஸ்யு பேப்பர் மாதிரி கசக்கி தூக்கி போடுறதும் தான் உன்னோட குணம்ன்னு நல்லா புரியுது எனக்கு

 

 

“இது தான் கடைசி அஸ்வினி நான் உன்கிட்ட பேசுறது. என்கிட்ட இனி பேச ட்ரை பண்ணாத, அப்புறம் நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது என்று கடுமையாக சொல்லிவிட்டு நகர்ந்தாள் மித்ரா.

 

 

மளுக்கென்று கண்ணில் நீர் வந்தது அஸ்வினிக்கு ஓடிப்போய் மித்ராவின் கையை பிடித்தாள். “ஹே!! மித்து என்னடி என்னென்னலாமோ பேசுற?? நான் எப்போ மித்து இப்படி எல்லாம் நினைச்சேன்

 

 

“இங்க பாரு என்னை தொடாதே!! என்று அவளை பார்த்து திட்டியவள் அவள் ப்ராஜெக்ட் லீடரை தேடிச்சென்று சொல்லிவிட்டு அவ்விடம் விட்டு அகன்றாள்.

 

 

வீட்டிற்கு வந்ததும் அவள் அறைக்குள் புகுந்து கொண்டவள் தான் யாரிடமும் எதுவும் பேசாமல் அறைக்குள்ளேயே அடைந்து கிடந்தாள். மகேஸ்வரி வந்து கதவை தட்டினார்.

 

 

மெதுவாய் எழுந்து வந்து கதவை திறந்தவளின் முகம் சரியில்லாததை கண்டு கொண்டார் அவர். “சாப்பிட்டியா?? என்றார்.

 

 

“ஹ்ம்ம்...” என்ற அவளின் ஈனஸ்வரமான பதிலே அவள் எதுவும் சாப்பிடவில்லை என்பதை பறை சாற்றியது.

 

 

“சரி பரவாயில்லை கொஞ்சம் சாப்பிடு வா!! என்றழைத்தார்.

 

 

“இல்லை அத்தை வேணாம்

 

 

“ஒண்ணு சொன்னா சரின்னு உடனே கேட்கறீங்களா எல்லாரும். நான் என்ன உன்னைய மட்டுமா சாப்பிட சொன்னேன். வயித்து பிள்ளைக்காரி ரெண்டு பேருக்கு சேர்த்து சாப்பிடணுமேன்னு இருக்கா உனக்கு என்று அவர் குரல் உயரவும் இருக்கிற தலைவலியில் இது வேறு எதற்கு என்று எண்ணியவள் “நான் சாப்பிடுறேன் அத்தை என்று எழுந்தாள்.

 

 

“நீ இரு!! என்றுவிட்டு உள்ளே சென்றவர் அவளுக்கு சாப்பாடு தட்டுடன் வந்து சேர்ந்தார். அவள் எதிரிலேயே அமர்ந்து கொள்ளவும் செய்தார். இனி அவரை ஏமாற்றி சாப்பிடாமல் இருக்க முடியாது என்று எண்ணியவள் உணவை அள்ளி விழுங்க ஆரம்பித்தாள்.

 

 

சாப்பிட்டு முடித்த சற்று நேரத்திலேயே அவள் சாப்பிட்ட மொத்தமும் வாந்தி எடுத்துவிட்டாள். கண்ணில் நீர் வழிய மாமியாரை பார்த்தாள். “இப்போ இப்படி தான் இருக்கும் அதுக்காக சாப்பிடாம இருக்க முடியுமா

 

 

“நீ சாப்பிட்டு வாந்தி எடுத்தா கூட பரவாயில்லை. ஒரு பிடியாச்சும் எப்படியும் உள்ள போயிருக்கும் என்றவர் பாலை சூடாக்கி கொண்டு வந்து அவளை குடிக்க வைத்த பின்னே தான் அங்கிருந்து நகர்ந்தார்.

 

 

அவள் முகம் சரியில்லாதது கண்டு காவ்யாவை அவளுக்கு துணையாக படுத்துக் கொள்ள அனுப்பினார் அவர். மித்ராவின் அறைக்கதவை காவ்யா தட்டவும் மறுபடியும் மாமியாரோ என்று எண்ணி அவசரமாய் கதவை திறக்க காவ்யா நின்றிருந்தாள்.

 

 

“சொல்லு காவ்யா

 

 

“நான் உங்க கூட படுத்துக்கட்டுமா அண்ணி என்றவளை மறுக்க தோன்றாமல் “என்ன கேள்வி இது?? வா வந்து படுத்துக்கோ என்றாள். காவ்யா இருந்ததாலோ அன்றி சோர்வினாலோ படுத்ததும் உறங்கிவிட்டாள் மித்ரா.

 

 

மறுநாள் அவளுக்கு விடுமுறை தினம். சுஜி அன்று வருவதாக கூறியிருந்தது கூட அவளுக்கு மறந்திருந்தது முதல் நாள் அஸ்வினியை பார்த்ததில்.

 

 

காலை வேலைகளை முடித்து காவ்யாவும் சைலேஷும் வெளியே கிளம்பிச் செல்லவும் அவள் அறைக்குள் சென்று அடைந்தாள் அவள்.

 

 

ஹாலில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தார் மகேஸ்வரி. வாசலில் ஏதோ வண்டி வந்து நிற்கும் சத்தமும் அதை தொடர்ந்து அவர்கள் வீட்டின் அழைப்புமணி சத்தமும் கேட்கவும் எழுந்து சென்று கதவை திறந்தார் அவர்.

 

 

வாயிலில் நின்றிருந்தவர்களை பார்த்து “சொல்லுங்க யாரு வேணும்?? என்றார்.

 

 

“மித்ரா… இது மித்ரா வீடு தானே??

 

 

“ஆமா மித்ரா என்னோட மருமக தான் நீ… நீங்க??

 

“அவளோட பிரண்டும்மா சுஜி என்றாள்

 

 

“வாங்க உள்ள வாங்க என்று வந்தவர்களை சோபாவில் அமர வைத்துவிட்டு மித்ராவை அழைத்தார். அவள் அறைக்கதவை தட்டவும் திறந்தவள் “சொல்லுங்கத்தை என்றாள்.

 

 

“உன்னோட பிரண்டு வந்திருக்காம்மா என்றதும் தான் தாமதம் வெளியில் வந்தவள் சுஜியை கண்டதும் தாயை பிரிந்த கன்று போன்று வேகமாய் வந்து அவளை அணைத்துக் கொண்டாள்.

 

 

மகேஸ்வரி கண்டிப்பாக “மித்ரா வயித்து பிள்ளைக்காரி இப்படி வேகமா ஓடி வரலாமா?? அந்த பிள்ளையும் மாசமா இருக்கு போல பார்த்து என்றுவிட்டு அவர்களுக்கு குடிக்க எதுவும் கொண்டுவருவதற்காக உள்ளே சென்றார்.

 

 

“மித்து நீ மாசமா இருக்கியாடி?? எத்தனை மாசம் வயிறே தெரியலையே?? என்றாள் சுஜி.

 

 

“நாலு மாசம், ஆமா உனக்கு??

 

 

“உன்னை விட ரெண்டு மாசம் கூட, ஆறு மாசம் என்றாள்

 

 

மித்ரா அப்போது தான் அவள் உடன் வந்தவர்களை பார்த்தாள். சுஜியுடன் அவள் கணவர் பெருமாளும் அவர்களின் பெண் மஞ்சரியும் வந்திருந்தாள்.

 

 

“சாரி அண்ணா சுஜியவே பார்த்திட்டு இருந்ததில உங்களை கவனிக்கலை. எப்படியிருக்கீங்க?? என்று அவரிடம் சம்பிரதாயமாக விசாரித்துவிட்டு மஞ்சரியை தூக்கி மடியில் இருத்திக்கொண்டாள்.

 

 

வந்தவர்கள் சற்று நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு கிளம்பவும் மித்ராவின் முகம் வாடியது. சுஜிக்கு என்ன தோன்றியதோ மகேஸ்வரியிடம் திரும்பியவள் “அம்மா மித்ராவை நான் கொஞ்ச நேரம் எங்க வீட்டுக்கு கூட்டிட்டு போயிட்டு வரட்டுமா??

 

“திரும்ப நாங்களே கொண்டு வந்து விட்டிறோம் என்று அனுமதி வேண்டினாள். ஏற்கனவே மருமகளின் வாடியிருந்த முகமும் தோழியை கண்டு மலர்ந்த அவள் முகமும் வந்து போக “சரிம்மா கூட்டிட்டு போங்க என்றார் அவர்.

 

 

மகேஸ்வரியை நன்றியாய் பார்த்துவிட்டு மித்ரா அவர்களுடன் கிளம்பினாள். அவள் வீட்டிற்கு சென்றதும் சுஜி தன் கணவரை தோழிக்கு சாப்பிட வாங்கி வருமாறு வெளியே அனுப்பிவிட இரண்டு வயது மஞ்சரியும் அவருடன் சென்றுவிட்டாள்.

 

 

இப்போது இருவரும் மட்டுமாக தனியாக இருக்க “என்ன மித்ரா ஏன்டி இப்படி இருக்க?? என்னன்னு சொல்லு இவ்வளவு நாள் கழிச்சு உன்னை பார்க்கறேன்னு நினைச்சு சந்தோசப்படுறதா??

 

 

“இல்லை நீ இப்படி அழுது வடியற முகத்தோட இருக்கறதை நினைச்சு கவலைப்படுறதா?? என்ன தான் உன் பிரச்சனை?? என்று அவள் உலுக்கவும் மனதில் அழுத்திக் கொண்டிருந்த பாரத்தை தோழியிடம் கொட்டினாள் மித்ரா.

 

 

“சோ அஸ்வினியை பார்த்தது தான் இப்போ உன்னோட அழுகைக்கு காரணமா?? என்று கேட்ட சுஜிக்கு “தெரியலை என்று பதில் கொடுத்தாள் மித்ரா.

 

 

“சரி நீ அஸ்வினியை விடு. அவ எல்லாம் ஒரு ஆளே இல்லை. உனக்கு அண்ணா மேல நம்பிக்கை இருக்கா!! இல்லையா!!

 

 

“நம்பிக்கை இருக்கு சுஜி. ஆனா எனக்கு என்னன்னு சொல்லத் தெரியலை. அட்லீஸ்ட் அவர் என்கிட்ட கொஞ்சம் பேசி சிரிச்சு இருந்தாலாவது கொஞ்சம் எனக்கு தெரியாது

 

 

“இப்படி ஒண்ணுமே சொல்லாம அவர் என்ன நினைக்கிறார்ன்னே தெரியாம இருக்கறது தான் எனக்கு பைத்தியமே பிடிக்குது சுஜி

 

 

“மித்து அப்போ உனக்கு அவர் மேல நம்பிக்கை இல்லை

 

“நான் அப்படி சொல்லவேயில்லை என்று தோழியை முறைத்தாள்.

 

 

“அது தான் உண்மை. அண்ணா கல்யாணம் ஆனா மறுநாள் ஒரு கேள்வி கேட்டாங்கன்னு சொன்னியே, அதை இப்பவும் நினைச்சு நீ பீல் பண்ணுற தானே

 

 

“ஆமா!!!

 

 

“நீயேன் இப்படி யோசிச்சு பார்க்க கூடாது. ஒரு வேளை அண்ணா உங்க ரெண்டு பேருக்குள்ள ஒரு நல்ல பாண்டிங் வரணும் அப்படிங்கறதுக்காக கூட அதெல்லாம் செஞ்சிருக்கலாமே

 

 

“இங்க பாரு இதெல்லாம் ஒரு அனுமானம் தான். அது தான் சரின்னு நானும் சொல்லலை. நீ சம்மந்தப்பட்டவ உன்னோட உணர்வுகளை நான் தப்புன்னு சொல்றேன்னு நினைக்காதே

 

 

“உன்கிட்ட அவர் கேட்டவிதம் தப்பாயிருக்கலாம். ஆனா அவர் உன்னை கஷ்டப்படுத்த அப்படி கேட்டிருக்க மாட்டார்ன்னு எனக்கு தோணுது. நான் மூணாவது மனுஷியா இருந்து இதை பார்க்கறேன், அதான் சொல்றேன். நீ அவரை தப்பா நினைக்காம கொஞ்சம் அவருக்காக யோசிச்சு பாரேன்

 

 

“ஏன் சுஜி அப்போ அவர் பேசுனது எல்லாம் சரின்னு நீ சொல்ல வர்றியா??

 

 

“சரின்னு சொல்லலை மித்து, அவர் எதை நினைச்சு கேட்டார்னு யோசிக்கலாமே. இல்லை நீயே அவர்கிட்ட கேட்டிருக்க வேண்டியது தானே

 

 

“மித்ரா நீ ஆசைப்பட்ட வாழ்க்கை இப்போ உன் கையில அதையும் இதையும் நினைச்சு நீயேன் குழப்பிக்கிற. உன்னை அவர் எப்பவும் விட்டு தரமாட்டார். அதுக்கு சாட்சி உன் வயித்துல வளர்ற குழந்தை இதுக்கு மேல நீயேன் கண்டதையும் போட்டு குழப்பிக்கற

 

 

“என்ன சுஜி நீயும் அவர் மாதிரியே சொல்ற?? நான் அவர் மேல நம்பிக்கை இல்லைன்னு எப்போ சொன்னேன். நம்பிக்கை இருக்கு ஆனா அவருக்கு என்னோட அன்பு புரியாமலே இருக்கேன்னு தான் என்னோட கவலை

 

 

“லூசாடி நீ அவர் ஒரு பக்கம் நீ ஒரு பக்கம் இருக்கீங்க இப்போ?? வெயிட் பண்ணு அவர் நினைச்சதை சாதிச்சுட்டு வருவார். அப்புறம் உன்னோட அன்பை அவருக்கு புரியவை அதுக்குள்ள அவர் புரிஞ்சுக்கலை அது இதுன்னு நீயா எதையாச்சும் யோசிச்சு குழப்பிக்கிட்டு குழம்பிக்கிட்டு இருக்காத என்று நீளமாய் தோழிக்கு அட்வைஸ் செய்தாள்.

 

 

சுஜியிடம் பேசியதில் அவளின் மனப்பாரம் சற்றே குறைந்திருந்தது. நாட்கள் யாருக்கும் காத்திராமல் வேகமாய் ஓடிக் கொண்டிருந்தது. இடையில் மித்ராவின் பெற்றோர் வந்து அவளை பார்த்து அவளுக்கு ஐந்தாம் மாதம் செய்துவிட்டு சென்றனர்.

 

 

ஏழாம் மாத இறுதியில் அவள் தந்தை வளைகாப்பை வைத்து மகளை அவருடனே கூட்டிச் செல்ல காத்திருக்க மித்ராவோ பிடிவாதமாக ஊருக்கு வரமுடியாது என்று மறுத்தாள்.

 

 

“ஏன்ம்மா வரமாட்டேன்னு சொல்ற??

 

 

“அப்பா அங்க வந்து நான் என்ன செய்ய?? அம்மாவும் பேச மாட்டாங்க, அக்கா என் முகத்தை கூட பார்க்க விரும்பலை. அப்புறம் யாருக்காகப்பா நான் அங்க வரணும்

 

 

“ஏம்மா எனக்காக நீ வரமாட்டியா??

 

 

“நான் வந்தா கண்டிப்பா உங்களுக்காக தான் இருக்கும்ப்பா. ஆனா நீங்க நாளெல்லாம் வீட்டிலவா இருக்க போறீங்க. நீங்க காலையில கடைக்கு போனா அதோட நைட் தான்ப்பா வீட்டுக்கு வருவீங்க

 

 

“பொழுதுக்கும் நானும் அம்மாவும் மட்டும் தான்ப்பா. எனக்கு பிடிக்கலைப்பா. என்னை வற்புறுத்தாதீங்கப்பா, உங்க பேச்சை மறுக்கறது எனக்கு கஷ்டமா இருக்குப்பா ப்ளீஸ் என்று பிடிவாதமாக அவள் மறுக்க சொக்கலிங்கம் எதுவும் பேசாமல் அமைதியாகிபோனார்.

 

 

இரண்டு நாட்கள் சென்றிருந்த வேளையில் அதிசயமாக மித்ராவின் போனுக்கு அழைத்திருந்தான் சைதன்யன். அலுவலகத்தில் மதிய உணவு இடைவேளை முடிந்து அவள் இருக்கைக்கு வந்து அப்போது தான் அமர்ந்தாள் அவள்.

 

 

அழைப்பவன் கணவன் என்றதும் ஆனந்தமாய் போனை எடுத்து “ஹலோ என்றாள்.

 

 

“எப்படியிருக்க மித்ரா?? என்றான். ‘நிஜமாவே இவர் தானா என்னோட நலமெல்லாம் விசாரிக்கறாரே என்று எண்ணிக்கொண்டவள் “நல்லாயிருக்கேன் நீங்க எப்படி இருக்கீங்க?? எக்ஸாம் எப்போ தொடங்குது என்று விசாரித்தாள்.

 

 

“நல்லாயிருக்கேன், எக்ஸாம் அடுத்த மாசத்துல தொடங்கிரும்

 

 

“மித்ரா நீயேன் ஊருக்கு போக மாட்டேன்னு மாமாகிட்ட பிடிவாதம் பிடிக்கற என்று நேரடியாகவே விஷயத்திற்கு வந்தான். ‘ஓ அப்பா இவரிடம் சிபாரிசுக்கு போயிருக்கிறாரா, அதற்கு தான் இவர் என்னை அழைத்தாரா என்று எண்ணினாள் அவள்.

 

 

“அதுக்கு காரணத்தை அப்பாகிட்ட சொல்லிட்டேன் என்றாள்.

 

 

“மித்ரா நீ பண்றது சரியில்லை. அவர் மனசை ஏன் கஷ்டப்படுத்துற, ப்ளீஸ் எனக்காக போயிட்டு வா

 

 

‘நான் மட்டும் இவருக்கு ப்ளீஸ் பண்ணணும் எனக்காக இவரு எதுவும் பண்ண மாட்டார் என்று மனதிற்குள் அவனை குமைந்து கொண்டவள் சட்டென்று ஒரு முடிவெடுத்து “சரி ஊருக்கு போறேன், ஆனா நீங்க வளைகாப்புக்கு இங்க வரணும், டெலிவரி அப்போ கூடவே இருக்கணும்

 

“அப்போ தான் நான் இதுக்கு ஒத்துக்குவேன். இல்லைன்னா போகறதா இல்லை என்று சிறுகுழந்தை போல் பிடிவாதம் பிடித்தாள்.

 

 

“மித்ரா எனக்கு எக்ஸாம்இருக்குன்னு சொல்றேன் என்ன விளையாட்டு இது. ஏன் புரிஞ்சுக்க மாட்டேங்குற

 

 

“இது விளையாட்டு இல்லை, எனக்கும் தெரியும் உங்களுக்கு எக்ஸாம் இருக்குன்னு. நீங்க படிங்க என்னை பத்தி கவலைப்பட வேண்டாம். அப்புறம் பேசறேன் என்று கத்தரிக்க போனவளை “என்ன பழக்கம் இது மித்ரா பேசிட்டு இருக்கும் போதே வைக்குறேன்னு சொல்ற என்றவனின் குரலில் லேசாய் கோபம் எட்டி பார்த்திருந்தது.

 

 

இதுவரை அவன் கோபக்குரலை அவள் கேட்டதில்லை. கொஞ்சம் அதிக்கபடியாய் நடந்து கொண்டோமோ என்று எண்ணி வருத்தம் கொண்டாள். ஆனாலும் அவள் பிடிவாதத்தை விடுவதாய் இல்லை.

 

 

“சாரி என்றவள் “சொல்லுங்க என்றாள்.

 

 

“என்னால வளைகாப்புக்கெல்லாம் வர முடியாது. முடிஞ்சா டெலிவரி அப்போ வர்றேன்

 

 

எதிர்புறம் எந்த ரியாக்சனும் இல்லாதிருக்க “மித்ரா அடம் பிடிக்காத என்னால ஏதாச்சும் ஒண்ணுக்கு தான் வரமுடியும், ப்ளீஸ் புரிஞ்சுக்கோ என்றான் கெஞ்சுதலாய்.

 

 

“சரி ஆனா கண்டிப்பா வரணும் என்றாள்.

 

 

“வருவேன் நம்பு. என் பேச்சை நீ எப்பவும் நம்பலாம், எனக்கு பொய்யா வாக்குறுதி கொடுக்கற வழக்கமில்லை என்றுவிட்டு போனை வைத்தான்.

 

 

மித்ராவின் வளைக்காப்பு ஒன்பதாம் மாத ஆரம்பத்தில் சைதன்யன் வீட்டில் நடைபெற அன்று இரவே மகளை அழைத்துக்கொண்டு பயணப்பட்டனர் அவள் பெற்றோர்….

 

Advertisement