Advertisement

அத்தியாயம் – 8

 

 

முதல் இரண்டு மாதம் அவன் சொன்னது போல் வீட்டை நிர்வகிப்பது அவளுக்கு திணறலாகவே இருந்தது. திருமணத்திற்கு முன் கூட அவள் அன்னையுடன் இருந்து அதையெல்லாம் கவனித்திருந்தால் ஓரளவிற்கு சமாளித்திருந்திருப்பாள்.

 

 

நன்றாக விவரம் தெரிந்த வயதில் வெளியூரில் சென்று படிக்க ஆரம்பித்தவளுக்கு அதிலெல்லாம் அதிக விவரமில்லாமல் போனது. அவள் அக்கா திரிவேணி தான் எப்போதும் அவள் அன்னையுடனே சுற்றுவது.

 

 

அன்றைய கணக்குகளை எழுத அமர்ந்தவளுக்கு அவனை பற்றிய சிந்தனையே. அவன் ஊருக்கு சென்றதும் நடந்த நிகழ்வுகளை அசை போட்டுக் கொண்டிருந்தாள்.

 

 

ஊருக்கு சென்று சேர்ந்ததும் போன் செய்கிறேன் என்று சொன்னவன் போன் செய்தது அவளுக்கல்ல அவன் அன்னைக்கு. அப்போது கூட அவளுடன் பேச வேண்டும் என்று சொல்லி கூட அவன் அவளிடம் போனை கொடுக்க சொல்லாதது அவளுக்கு இன்னமும் கடுப்பாய்.

 

 

அவன் பேசி வைத்ததும் அவளின் மாமியார் வந்து “ராஜா நல்லபடியா ஊருக்கு போயிட்டானாம், உன்ட்ட சொல்லச் சொன்னான். உன்னைய நல்லா பார்த்துக்க சொல்லி என்ட்ட சொன்னான் என்றார்.

 

 

‘ஏன் இதை அவரு என்கிட்ட சொல்ல மாட்டாரா என்று எண்ணி பல்லைக் கடித்தாள். மாமியாரிடமோ “சரிங்கத்தை என்றாள்.

 

 

“நீ அப்புறமா அவனுக்கு போட்டு பேசிடு, தனியா இருப்பான். படிப்பு படிப்புன்னு அவனை கவனிச்சுக்காம இருக்க போறான் என்றார் போகிற போக்கில்.

 

 

‘உங்க பிள்ளைக்கா என்கிட்ட பேசத் தெரியாது. நானா தான் போடணுமா!! இருக்கட்டும் பார்ப்போம்!! அவர் போன் போடாம நான் போடுறதா இல்லை என்று தனக்குள் சங்கல்பம் செய்து கொண்டாள்.

ஒரு வாரம் பொறுத்து பொறுத்து பார்த்தவளுக்கு அதற்கு மேல் தாக்கு பிடிக்க முடியும் என்று தோன்றவில்லை. அவனை நினைத்து அழவும் அவளுக்கு பிடிக்கவில்லை.

 

 

குழந்தையை வயிற்றில் வைத்துக் கொண்டிருக்கும் இந்நேரத்தில் தான் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். இப்படி அழுது கொண்டிருந்தால் அது குழந்தையையும் பாதிக்கும் என்று தோன்ற வேறு வழியில்லாமல் அவளே அவனுக்கு போன் செய்தாள்.

 

 

முதல் ரிங்கிலேயே போனை எடுத்து விட்டான் அவன். எடுத்ததுமே “இது தான் நீங்க எனக்கு போன் பண்ணுறேன்னு சொன்னதா?? என்றவளின் குரலில் நன்றாகவே எரிச்சல் தெரிந்தது.

 

 

“பரவாயில்லையே ரொம்ப மகிழ்ச்சியா இருக்க போல என்று வழக்கம் போல் அவன் நக்கலடித்தான்.

 

 

“என்ன கிண்டல் பண்றீங்களா?? ஊருக்கு போயிட்டு கால் பண்ணுறேன் சொன்னீங்க. நானா போன் பண்ற வரைக்கும் எனக்கு தகவல் சொல்லணும்ன்னு உங்களுக்கு தோணவேயில்லையா?? என்று சிடுசிடுத்தாள்.

 

 

“மேடம்க்கு கோவமா பேசத் தெரியுமா என்றவனின் குரலில் என்ன இருந்தது என்பது வழக்கம் போல் அவளுக்கு தெரியவில்லை.

 

 

இப்போது அவள் குரல் உள்ளிறங்கி போனது “ஏன் போன் பண்ணலை??

 

 

“அதான் அம்மாக்கு போன் பண்ணி சொன்னேனே, அவங்க உன்கிட்ட சொல்லையா??

 

 

“சொன்னாங்க

 

 

“அப்புறம் என்ன எதிர்பார்க்குற??

 

 

‘உன்னை தான்டா எதிர்பார்க்குறேன் என்று கத்த வேண்டும் போல் தோன்றிய எண்ணத்தை கைவிட்டு “என்கிட்ட ஒரு வார்த்தை போன் பண்ணி சொல்ல உங்களுக்கு மனசில்லைன்னு வேணா சொல்லுங்க என்று சொல்லிவிட்டு நாக்கை கடித்துக் கொண்டாள் அதிகமாய் பேசிவிட்டோமோவென்று.

 

 

“நான் என்ன செய்ய முடியும்?? நான் அங்க போய் இறங்குற நேரம் பார்த்து அம்மா போன் பண்ணாங்க நான் வந்திட்டேன்னு அவங்ககிட்ட தகவல் கொடுத்தேன் இதுல என்ன தப்பிருக்கு

 

 

“அப்புறம் இன்னொரு விஷயம் என்றவனை இடைமறித்து “சரி அப்போ புது நம்பர் வாங்கிட்டு கூப்பிடுறேன்னு சொன்னது என்றாள்.

 

 

“அதை தான் சொல்ல வந்தேன். புதுசா நம்பர் வந்தா உனக்கு போன் எடுக்கற பழக்கம் இல்லைன்னு நினைக்கிறேன். மூணு நாளைக்கு முன்னாடி ஒரு முறை போன் பண்ணேன்

 

 

“நீ எடுக்கவேயில்லை, சரின்னு நேத்து ஒரு முறை போன் பண்ணேன் அப்பவும் நீ எடுக்கலை. என் நம்பர்ல இருந்து பண்ணா தான் எடுப்பியோன்னு இன்னைக்கு ரீசார்ஜ் பண்ணிட்டு கூப்பிடலாம்ன்னு நினைச்சேன். நீயே பண்ணிட்ட?? என்றான்.

 

 

இப்போது மித்ரா நன்றாக வாயை மூடிக்கொண்டாள். அவன் சொன்னது சரி தான் அவள் தெரியாத எண்ணில் இருந்து வரும் அழைப்பை பெரும்பாலும் எடுக்க மாட்டாள்.

 

 

அவன் சொன்னது போல அழைப்பு வந்தது உண்மை அதை அவள் ஏற்காமல் விட்டதும் உண்மை. “என்ன வழக்கம் போல மைன்ட் வாய்ஸ் ஆ

 

 

“மாசம் பிறந்தாச்சு வாடகை கொடுத்தாச்சா?? உனக்கு அந்த கணக்கு எல்லாம் மெயின்டெயின் பண்ணுறது கஷ்டமாயிருக்கா?? என்றான்.

 

 

“நேத்தே ஹவுஸ் ஓனர்கிட்ட அக்கவுன்ட் நம்பர் வாங்கி காசை அவர் அக்கவுன்ட்ல போட்டுட்டேன்

“ஏன் அவர் நேர்ல தானே தரச்சொல்லுவார்??

 

 

“கையில தான் தரச்சொன்னார். நான் தான் நீங்க ஊர்ல இல்லைன்னு சொல்லி என்னாலையும் வரமுடியாதுன்னு நிலைமையை எடுத்துச் சொன்னேன்

 

 

“இந்த ஒரு மாசம் அக்கவுன்ட்ல போடச் சொன்னார். அடுத்த மாசத்தில இருந்து அவரே நேரா வந்து வாங்கிக்கறேன்னு சொல்லிட்டார் என்றாள்.

 

 

“பரவாயில்லையே உன்னை தேடி வரவைச்சுட்ட!! என்றவனின் குரல் வேறுபட்டதோ என்று தோன்றியது அவளுக்கு.

 

 

“வீட்டை இங்க கட்டிப்போட்டு அவர் ஒரு கோடியில வீடு கட்டி இருக்கார். என்னைய இந்த கோடில இருந்து அந்த கோடிக்கு வந்து வாடகை கொடுக்க சொல்லுவார். இப்போ நீ சொன்னதும் அவரே வர்றேன்னு சொல்லிட்டார் பெரிய விஷயம் என்றான் மெச்சுதலாய்.

 

 

“போன் ரீசார்ஜ் பண்ணிட்டீங்களா??

 

 

“அது பண்ணதுனால தானே நீ இப்போ பேசிட்டு இருக்க, இன்கமிங்க்கு தான் ரோமிங்ல காசு பிடிப்பாங்களே மறந்து போச்சா??

 

 

“அப்போ ரீசார்ஜ் பண்ணதும் ஏன் போன் பண்ணலை அப்படிங்கறது உன்னோட அடுத்த கேள்வியா இருக்கும்ன்னு என்னால ஊகிக்க முடியுது

 

 

‘ஆஹா நான் கேட்க நினைச்சதை இவரே கேட்டுட்டாரே. என்னை நேர்ல பார்த்தா தான் பேச மாட்டார் போல போன்ல நல்லா தானே பேசுறார் என்று நினைத்துக் கொண்டாள்.

 

 

“உன்னோட மௌனமே நீ அதை தான் நினைச்சேன்னு சொல்லுது. இப்போ கொஞ்சம் முன்னாடி தான் ரீசார்ஜ் பண்ணேன். திரும்ப ரூம்க்கு வந்ததும் பண்ணலாம்ன்னு இருந்தேன், நீயே போன் பண்ணிட்ட. இந்த விளக்கம் போதுமா… இல்லை இன்னும் இழுத்து சொல்லணுமா!! என்றான் கிண்டலாய்.

 

 

“நான் கேட்காத கேள்விக்கு நீங்களா பதில் சொன்னா நான் என்ன செய்ய முடியும் என்றாள்.

 

 

“உனக்கு பேசவும் வருது என்றான் ஒரு மாதிரி குரலில்.

 

 

அடுத்து என்ன பேச என்று அவள் யோசிக்கு முன்னே அவன் அடுத்து கேட்ட கேள்வியில் அவளுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது.

 

 

“உன்கிட்ட நம்ம கல்யாணத்துக்கு முன்னாடியே கேட்டேன். இப்போ திரும்பவும் கேட்குறேன் என்று நிறுத்தினான்.

 

 

‘என்ன கேட்க போறார் என்று யோசித்துக் கொண்டே “கேளுங்க என்றாள்.

 

 

“உன் பிரண்டு இப்போ எப்படி இருக்காங்க??

 

 

“என் பிரண்டா?? எந்த பிரண்டு?? என்று நிஜமாகவே விழித்தாள் அவள்.

 

 

“எனக்கு தெரிஞ்ச உன்னோட பிரண்டு வேற யாரு இருக்க முடியும்

 

 

‘ஓ அவளா!! சார் பேரு சொல்லி கேட்க மாட்டார் போல. சொன்ன வாக்கை காப்பாத்துவேன்னு சொல்லிட்டு அவளை பத்தி என்ன விசாரிப்பு என்று சடசடவென்று அவளுக்குள் கோபம் பொரிந்தது.

 

 

“அவளுக்கென்ன இப்போ?? என்றாள் வெடுக்கென்று.

 

 

“ஒரு கேள்வி கேட்டா பதில் சொல்லணும். திரும்ப கேள்வி கேட்குற

 

 

மனதில் ஒரு வெறுமை பரவ கண்கள் குளம் கட்ட ஆரம்பித்தது “மறந்திருவேன்னு சொன்னீங்களே என்றாள்.

அவள் கேட்டதும் அவன் சிரிக்க ஆரம்பித்துவிட்டான். ‘நான் என்ன சொல்லிட்டேன்னு இவர் சிரிக்கறார். நான் அழறது இவருக்கு சிரிப்பு வருதா என்று குமைந்தாள்.

 

 

“நீ என்ன தேவர் மகன் ரேவதியா?? என்றான்.

 

 

“ஏன் அப்படி கேட்கறீங்க என்றாள்.

 

 

அவள் கேள்வி பட்ட வரையில் நீங்க என்ன மௌன ராகம் ரேவதியா என்று கேட்பார்கள் ஒரு படத்தில் கூட அப்படி சீன் வரும். அதென்ன தேவர் மகன் ரேவதியா என்று கேட்கிறார்.

 

 

‘அந்த படத்தில் அப்படி என்ன இருக்கிறது என்று குழம்பினாள்.

 

 

“படம் பார்த்திருக்கியா?? பார்க்கலைன்னா போய் பாரு?? என்றான்.

 

 

“படம் பார்த்திருக்கேன் ஆனா நீங்க ஏன் அப்படி சொல்றீங்கன்னு எனக்கு புரியலை. நீங்க இன்னும் நான் கேட்டதுக்கு பதில் சொல்லவேயில்லை என்றாள்.

 

 

“உனக்கு நான் எப்பவோ அந்த நம்பிக்கையை கொடுத்திட்டேன். அதை மறந்திட்டு நீ இப்படி கேட்குற

 

 

“என்ன நம்பிக்கை??

 

 

“நம்ம குழந்தையை கேளு சொல்லும், போனை வைக்கிறேன் என்றவன் மேலே எதுவும் பேசவில்லை போனை அணைத்துவிட்டான்.

 

 

‘எப்படி இவரால மட்டும் இப்படி பேச முடியுது என்று மனம் சோர்ந்தது அவளுக்கு. நான் கேட்டதுக்கு பதில் சொல்லாம அந்த நம்பிக்கையை கொடுத்திட்டேன் குழந்தையை கேளுன்னு சொல்றாரு என்றவளுக்கு இருந்த ஒரு நம்பிக்கை அவன் நம்ம குழந்தை என்று சொன்னதே.

 

 

‘எனக்கு தான் அவளை பத்தி பேச பிடிக்கலைன்னு தெரியுதுல அப்புறம் ஏன் அந்த கேள்வியை கேட்குறார் என்று நினைத்தவள் இரவெல்லாம் அழுது ஓய்ந்தாள்.

 

 

நானா இனிமே அவருக்கு போன் பண்ண மாட்டேன், அவரே போன் பண்ணட்டும் என்று மனதிற்குள் சபதம் எடுத்துக் கொண்டாள். (அவனை பத்தி தெரிஞ்சும் இந்த சபதம் தேவையா)

 

 

நாட்கள் ஒரு வாரம் பத்து நாட்கள் என்று ஆகி இன்றோடு முழுதாய் ஒரு மாதத்தை கடந்திருந்தது. அவனாக அவளுக்கு போன் செய்தானில்லை.

 

 

மகேஸ்வரியிடம் அவன் அவ்வப்போது பேசுவது அவள் காதில் விழாமலில்லை. மாமியாரும் மருமகளை பற்றி அவன் கேளாமல் தகவல் கொடுப்பார். கேட்டு தான் கொடுப்பாரோ என்று அவள் அறியாள்.

 

 

அவள் பொறுமையும் பறந்து போய் அந்த மாத செக்கப்பிற்கு சென்று வந்த இரவு அவளாக அவனுக்கு போன் செய்தாள். எப்போதும் போல் ஒரே ரிங்கிலேயே போனை எடுத்தவன் “ஹலோ என்றான்.

 

 

அவனிடம் உள்ள நல்ல பழக்கத்தில் இது அவளுக்கு மிகப்பிடித்தது. போனை அதிக நேரம் அலறவிட்டுக் கொண்டு இல்லாமல் உடனே எடுத்து ஹலோ சொல்லும் அவன் பாங்கு அவளுக்கு பிடிக்கும்.

 

 

“ஹலோ நல்லா இருக்கீங்களா?? என்றாள்.

 

 

“நலத்துக்கு எந்த குறைச்சலுமில்லை. நல்லா தான் இருக்கேன் என்றவன் நக்கலடித்தது போலவும் இல்லாதது போலவும் தோன்றி அவளை குழப்பியது.

 

 

“இப்போ தான் உனக்கு போன் பண்ணணும் எனக்குன்னு தோணிச்சா?? என்றவனின் குரலில் இப்போது நிச்சயம் இருந்தது நக்கலே.

 

 

“அதையே நானும் கேட்கலாமே?? என்றாள் கோபக்குரலில்.

 

 

“எப்போமே நான் கேட்கறதுக்கு பதில் சொல்லாம அடுத்த கேள்வியை கேட்கறதே உனக்கு வழக்கமா போச்சு என்று பெருமூச்சு விட்டவன் “போகட்டும் விடு செக்கப் போனியா இன்னைக்கு. பேபி எப்படி இருக்காம், மாத்திரை எல்லாம் ஒழுங்கா போடுறியா என்றான்.

 

 

எதிர்புறமோ எப்போதும் போல் அமைதி. ‘எப்போமே நான் இவருக்கு முதல்ல தெரியவே மாட்டேனே என்ற ஆதங்கம் அவளுக்கு.

 

 

“ஹ்ம்ம் போனேன், குழந்தை நல்லாயிருக்கான். மாத்திரை எல்லாம் ஒழுங்கா தான் போடுறேன்

 

 

“எதுக்கு இப்படி சிடுசிடுன்னு பதில் சொல்லுற. மனசை எப்பவும் சந்தோசமா வைச்சுக்கோ. அது தான் உங்க ரெண்டு பேருக்குமே நல்லது

 

 

‘நீங்க மட்டும் என்கிட்ட ஒழுங்காவா பேசிகிட்டு இருக்கீங்க. நீங்க நல்ல விதமா பேசினாலே நான் சந்தோசமாகிடுவேனே, இது என்னைக்கு உங்களுக்கு புரிய போகுதோ என்று எண்ணி பெருமூச்செறிந்தாள்.

 

 

“பெருமூச்செல்லாம் பலமா இருக்கு, உன் மைன்ட் வாய்ஸ் என்ன தப்பா அட்வைஸ் பண்ணிக்கிட்டு இருக்கு இப்போ?? என்றான்.

 

 

“நான் சிடுசிடுன்னு எல்லாம் பதில் சொல்லலை

 

 

“ஏதோ கத்திரி போட்டா போல பேசுற. பேச பிடிக்கலைன்னா போன் பண்ணாதே. அதைவிட்டு இப்படி பண்ணா எப்படி. நிம்மதியா என்னால படிக்க கூட முடியலை என்று இப்போது சிடுசிடுப்பாய் பேசி அவனே போனை வைத்துவிட்டான்.

 

 

இவர்கிட்ட பேசி பேசி எனக்கு அழணும்ன்னு விதி போல என்று தன்னை நொந்து கொண்டவள் ‘இவர் சொன்னா பேசாம இருக்கணுமா, எனக்கு எப்போ தோணுதோ அப்போலாம் நான் பேசுவேன் என்ற வீம்பும் பிடிவாதமும் எழ இவளாகவே ஒவ்வொரு முறையும் அவனுக்கு போன் செய்து பேசினாள்.

 

 

அவன் கேட்கிறானோ இல்லையோ குழந்தை பற்றி வீட்டை பற்றி என்று எதையாவது வளவளப்பாள். பத்து நாட்களுக்கு ஒரு முறை அவனுக்கு போன் செய்து பேசுவாள்.

 

 

அவன் அதிகம் பதில் பேசாமல் அவளை பேச வைத்து கடைசியாக ஒரே கேள்வி கேட்டு அவளாகவே போனை வைக்க செய்து விடுவான்.

 

 

என்ன பெரிசா கேள்வி கேட்டிருப்பான் என்று தானே யோசனை. பெரிதாக ஒன்றுமில்லை அஸ்வினி பற்றிய விபரம் கேட்டாலே அவளுக்கு வரும் ஆத்திரத்தில் அவளாகவே போனை வைத்து விடுவாள்.

 

 

ஒரு நாள் அவள் போனுக்கு புதிதாய் ஒரு எண்ணிலிருந்து அழைப்பு எப்போதும் போல் அழைப்பை அவள் எடுக்கவேயில்லை. தொடர்ந்த அழைப்புகள் வந்து கொண்டேயிருந்தது.

 

 

ஏற்கனவே அவர் புது நம்பர்ல இருந்து போன் பண்ணி எடுக்கலைன்னு சொன்னாரே. திரும்ப திரும்ப வேற பண்ணுறாங்க, ஒரு வேளை அவர் நம்பர் மாத்திட்டாரோ என்று எண்ணி போனை அட்டென்ட் செய்து “ஹலோ என்றாள்.

 

 

“அடிப்பாவி உனக்கு எத்தனை முறை தான்டி போன் பண்ணுறது. உன் நம்பர் கிடைச்சு சந்தோசமா பண்ணா அதை எடுக்க ஏன்டி இவ்வளவு நேரம் என்று வைதது ஒரு பெண்குரல்.

 

 

“ஹலோ யாருங்க. எதுக்கு இப்படி போன் எடுத்தும் நீங்க பாட்டுக்கு பேசிட்டு இருக்கீங்க என்றாள் மித்ரா.

 

 

“ஹேய் மித்து நான் சுஜி பேசறேன்டி என்றாள்.

 

 

“சுஜியா… ஹேய் சுஜி நிஜமாவே நீயாடி எப்படிடி என் நம்பர் கிடைச்சுது உனக்கு. இவ்வளவு நாளா எங்கடி போன?? கல்யாணம் ஆகி போனவ ஒரேடியா மறந்தே போயிட்டன்னு நினைச்சேன் என்றாள் மித்ரா

 

 

“கல்யாணம் ஆகி போனவளை மறந்தது நீ தான் மித்து. எப்படியோ நம்ம பிரண்ட்ஸ் சர்க்கிள்ல நம்ம பிபிசி அபியை பிடிச்சி உன் நம்பர் வாங்கிட்டேன். அதுக்கு நான் அவகிட்ட பிட்டை போடுறதுக்குள்ள எப்பப்பா

 

 

“நாக்கு தள்ளிருச்சு எனக்கு. ஆமா உனக்கு கல்யாணம் ஆகிட்டுன்னு அவ சொன்னா?? அப்படியாடி ஒரேடியா நீ என்னை மறப்ப. எனக்கு ஒரு வார்த்தை சொல்லணும்ன்னு தோணலை உனக்கு என்று ஒரு பிடிபிடித்தாள் சுஜி.

 

 

“உன் நம்பர் இல்லை என்கிட்ட, நான் யாருக்கிட்ட கேட்பேன். சாரிடி நிஜமாவே சாரிடி நான் உன்னை ரொம்பவே மிஸ் பண்ணேன்டி. நீ இப்போ எங்க இருக்க??

 

 

“கடைசியா நான் சகிகிட்ட பேசும்போது நீ ஆந்திரால இருக்கேன்னு சொன்னா?? அதுக்கு அப்புறம் நான் பேசவில்லை சொல்லுடி நீ இப்போ எங்க இருக்க??

 

 

“அதை சொன்னா நீ ரொம்ப சந்தோசப்படுவ!!

 

 

“அப்போ சொல்லுடி லூசு

 

 

“சென்னையில தான் இருக்கேன் என்று அவள் சொன்னதும் மித்ராவுக்கு துள்ளி குதிக்காத குறை தான். அவள் இருப்பிடம் விசாரித்தவள் இன்னும் துள்ளினாள் அவள் வீட்டில் இருந்து தோழியின் வீடு இரண்டு நிறுத்தத்திலேயே வந்துவிடும்.

 

 

“அப்போ நாம மீட் பண்ணலாமா!! உன்கிட்ட நெறைய பேசணும்டி என்றாள்.

 

 

“கண்டிப்பா மீட் பண்ணலாம், முதல்ல நான் உங்க வீட்டுக்கு வர்றேன். அட்ரஸ் சொல்லு என்ற சுஜி தோழியின் முகவரியை கேட்டு வாங்கி குறித்துக் கொண்டாள்.

 

 

இரண்டு நாளில் வருவதாக அவள் கூறிவிட்டு வைக்கவும் அவளுக்கு உற்சாகம் பீறிட்டு எழுந்தது.

 

 

மறுநாளே அவள் சந்தோசம் எல்லாம் காற்று போன பலூன் போல் ஆனது அவளின் மற்றொரு தோழியை பார்த்து.

 

 

மித்ராவின் அலுவலகத்தில் கெட்டூகெதர் ஒன்று நடைபெற்றது. அதற்கு அலுவலகத்தில் உள்ள மற்ற பிரான்ச்ஊழியர்களும் கலந்து கொண்டார்கள்.

 

 

பிரபல நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற விருந்து என்பதாலும் அலுவலகத்தில் வேலை செய்யும் அனைவரும் கட்டாயம் வரவேண்டும் என்ற வேண்டுகோள் இருந்ததால் அவளும் கலந்து கொண்டாள்.

 

 

அவள் தயாராகி அங்கு சென்று சேர்ந்தாள். உடன் பணிபுரியும் நட்புகளுடன் கலந்து பேசிக்கொண்டிருக்க அபஸ்வரமாய் ஒரு குரல் அவள் காதில். “மித்ரா என்னை மறந்துட்டியா?? என்று….

Advertisement