Advertisement

அத்தியாயம் – 18

 

 

மித்ராவுக்கு அவனில்லாத பொழுதை நெட்டித் தள்ள வேண்டியதாகி போனது. தினமும் போனில் அவன் எப்போது பேசுவான் என்று ஆர்வமாய் காத்திருந்தாள்.

 

 

இதுநாள் போலல்லாமல் இருவரும் ஒருவரிடம் ஒருவர் போனில் பேசுவதை சந்தோசமாய் அனுபவித்தனர். புதிதாய் காதலிப்பவர்கள் போல் உணர்ந்தனர்.

 

 

சைதன்யன் வேறு அவ்வப்போது ஏதாவது சொல்லி அவளை பேச்சிழக்க வைத்துவிடுவான். எப்போதடா அவன் வருவான் என்று பேராவலாய் காத்திருந்தாள் அவள்.

 

 

அவன் ஊருக்கு சென்ற இரண்டாவது நாள் அவள் மாமியாருக்கு அழைத்து பேசி அவர்கள் நலம் விசாரித்துக்கொண்டு சென்னை வருவதாக சொன்னாள்.

 

 

மகேஸ்வரியும் கூட அவளிடம் பேசுவதில் வித்தியாசம் உணர்ந்தாள் அவள். இவ்வளவு அன்பாய் அவர் பேசி அவள் கண்டதில்லை. எதையும் அதிகாரமாய் தான் சொல்லி அவருக்கு பழக்கம். எல்லாமே நல்லதாகவே தோன்றியது அவளுக்கு.

 

 

மகேஸ்வரியிடம் பேசிவிட்டு வைத்தவளுக்கு அவள் அன்னை ஞாபகம் வந்தது. அவளாக சென்று அவரிடம் பேசவேயில்லை இதுவரை. குழந்தை பிறந்த பிறகு அவள் அன்னை அவளிடம் பேசினாலும் கூட மித்ரா என்னவென்றால் என்ன என்பது போல் இருந்துவிடுவாள்.

 

 

அவரிடம் பேசவேண்டும் போல தோன்றியது. தானும் ஒரு தாய் என்ற ஸ்தானத்தில் இருந்து அவள் அன்னையின் மனநிலையை அன்று தான் உணர ஆரம்பித்தாள்.

 

 

சற்றும் தாமதிக்காமல் அவள் தந்தைக்கு போன் செய்தாள். “மித்ராம்மா எப்படிடா இருக்கே?? மாப்பிள்ளை, மதுக்குட்டி எல்லாம் எப்படி இருக்காங்கடா என்றார் சொக்கலிங்கம்.

“நல்லாயிருக்கேன்ப்பா… அவர்க்கு கேம்ப் போட்டு இருக்காங்கப்பா அவர் ஊருக்கு போய் இருக்கார், வர்றதுக்கு மூணு நாள் ஆகும். மதுக்குட்டி நல்லாயிருக்காப்பா என்றாள்.

 

 

“அப்போ நீ தனியாவாம்மா இருக்கே??

 

 

“ஆமாப்பா இங்க ஒண்ணும் பயமில்லைப்பா… அம்மா எப்படி இருக்காங்க?? அக்கா, மாமா, ஐஸ்வர்யா, அர்ஜுன் எல்லாம் நல்லா இருக்காங்களாப்பா?? எல்லாரையும் பார்க்கணும் போல இருக்கு என்றாள்.

 

 

வெகு நாளைக்கு பின் மகள் அனைவரையும் விசாரித்திருக்கிறாள் என்பதை குறித்துக்கொண்டார் அவர். “எல்லாரும் நல்லாயிருக்காங்கம்மா.. நீ தனியா இருக்க மாதிரி இருந்தா சொல்லுடா அப்பா வேணா வர்றேன் என்றார்

 

 

“அதெல்லாம் வேண்டாம்ப்பா இங்க எந்த பிரச்சனையுமில்லை. அப்… அப்பா… என்று இழுத்தாள்.

 

 

“சொல்லும்மா….

 

 

“அம்மா பக்கத்துல இருக்காங்களாப்பா பேசணும்ப்பா… அம்மாவை நான் ரொம்ப கஷ்டப்படுத்திட்டேனாப்பா… என்றாள் தழுதழுத்த குரலில்.

 

 

“அவ உங்கம்மாடா உன்னை தப்பா எல்லாம் நினைக்க மாட்டா… உன்னை பத்தி தான் உங்கம்மா எப்பவும் பெருமையா பேசிட்டு இருக்கா தெரியுமா…

 

 

“நீ லைன்ல இருடா நான் அம்மாகிட்ட தர்றேன்… நீ பேசறேன்னு சொன்னா ரொம்ப சந்தோசப்படுவா… என்று சொல்லிக்கொண்டு அவர் மனைவியை அழைத்தார்.

 

 

“ஈஸ்வரி எங்க போய்ட்ட?? இங்க வா மித்ராம்மா உன்கிட்ட பேசணும் லைன்ல இருக்கா என்று அவர் அழைக்கவும் அரக்கபரக்க ஓடிவந்தார் ஈஸ்வரி. கணவரிடம் இருந்த போனை கிட்டத்தட்ட பிடிங்கியவர் போனை வாங்கி காதில் வைத்தார்.

 

 

அவருக்கு வார்த்தையே வரவில்லை. மித்ராவின் திருமணத்தின் போது மகளின் நலன் குறித்து கவலைக்கொண்ட தாயாய் தான் பேசிய வார்த்தை மகளை எந்தளவுக்கு பாதித்திருந்தால் இத்தனை வருடமாய் பேசாமல் இருந்திருப்பாள் என்று நினைத்து அவர் வருந்தாத நாளில்லை.

 

 

மகள் நன்றாக வாழ்கிறாள் என்ற பின்னே தான் அவரால் நிம்மதியாய் உணர முடிந்தது. ஆனாலும் தன்னிடம் பேசாமல் இருக்கும் மகளை நினைத்து அவர் வருந்தாமல் இருந்ததில்லை.

 

 

பேறுகாலத்தின் போது வந்திருந்தவளிடம் பேச முயற்சித்த போது கூட ஒற்றை வார்த்தையில் பதில் சொன்ன வீம்புகாரியாயிற்றே அவர் மகள். இப்போது தன்னிடம் பேச வேண்டும் என்று அவளே சொல்லியிருக்கிறாள் என்றால் என்று எண்ணி அவரால் பேசவே முடியவில்லை.

 

 

மித்ரா தான் எதிர்முனையில் அழைத்தாள். “அம்மா…. அம்மா லைன்ல இருக்கீங்களாம்மா… எப்படிம்மா இருக்கீங்க?? என்றாள்.

 

 

“என் மேல இன்னும் உங்களுக்கு கோவமாம்மா??எதுவும் பேச மாட்டேங்கறீங்க?? என்றாள் உடைந்த குரலில்.

 

 

“எனக்கு என்ன பேசன்னு தெரியலைடா மித்ரா… உங்கம்மா கூறுகெட்டு போய் ஒரு வார்த்தை சொன்னா பேசாமலே இருந்திருவியாடா…

 

 

“நீ நல்லாயிருக்க கூடாதுன்னுதேன் அம்மா நினைப்பனாடா?? என்றவரின் கண்ணில் இருந்து கண்ணீர் வழிய ஆரம்பித்தது.

 

 

“நீங்க அப்படி நினைக்க மாட்டீங்கன்னு புரியுதும்மா. ரொம்ப லேட்டா தான் புரியுதும்மா… என்னை மன்னிப்பியாம்மா என்றாள்.

 

 

“சீய் கழுதை!! உன்னைய நான் மன்னிக்கவ, நமக்குள்ள என்னடா இருக்கு. உங்கக்காவும் உன்னைய பேசுனதை நினைச்சு ரொம்ப வருத்தப்பட்டு கிடக்கா… உனக்கு தோதுப்பட்டா அவகிட்டயும் ஒரு வார்த்தை பேசுடா

 

 

“பிள்ளைங்களும் சித்திய பார்க்கணும்ன்னு கேட்டுக்கிட்டு தான் கிடக்கு. உங்கக்கா தான் உன் முகத்துல எப்படி முழிக்க அப்படின்னு நினைச்சு விசனப்பட்டுக்கிட்டு கிடக்கா என்றார்.

 

 

“நான் அக்காகிட்ட பேசறேன்ம்மா. நாங்க ஊருக்கு வரும் போது எல்லாரையும் போய் பார்க்கறேன்ம்மா

 

 

“சரிடா… நீ பேசின சந்தோசத்துல மாப்பிள்ளையையும், மது செல்லத்தையும் பத்தி விசாரிக்க மறந்திட்டேன். எப்படி இருக்காங்க மாப்பிள்ளை?? பேத்தி கண்ணுக்குள்ளவே இருக்கா வளர்ந்திட்டாளா என்றார்.

 

 

மித்ராவும் அவருக்கு பதில் பேசிவிட்டு மேலும் ஏதேதோ பேசிவிட்டு ஒரு மனநிறைவுடன் போனை வைத்தாள். மூன்று நாட்கள் எப்படியோ கழிந்து நான்காம் நாள் சைதன்யனின் வருகைக்காய் மித்ரா காத்திருக்க அவனிடமிருந்து போன் தான் வந்தது.

 

 

“ஹலோ டார்லிங்!! என்றான்.

 

 

“ஹலோ சொல்லுங்க!! எப்படியிருக்கீங்க?? எங்க இருக்கீங்க?? எத்தனை மணிக்கு வருவீங்க?? என்று தொடர்ந்து கேள்வியாய் கேட்டாள்.

 

 

“மிதும்மா ரொம்ப ரொம்ப சாரிடா எனக்கு இன்னைக்கும் இங்க வேலையிருக்கு. நாளைக்கு தான் வரமுடியும் போல என்றான் அவன்.

 

 

மித்ரா பதிலேதும் பேசவில்லை. “மிதும்மா… மிது… மித்ரா இருக்கியாடி லைன்ல

 

 

“ஹ்ம்ம்… என்ற முனகல் மட்டும் வந்தது.

 

“அதென்னடி வாட்டர் பால்ஸ் ஓபன் பண்ணியே வைச்சிருப்பியா பொசுக்குன்னு கண்ணீர் விடுற என்றான் அவன்.

 

 

‘என்ன நான் அழறது அவருக்கு தெரியுதா எப்படி என்று சுற்று முற்றும் திரும்பினாள்.

 

 

“என்ன இப்படி தலையை உருட்டி எங்க பார்க்கற?? என்றான் அவன்.

 

 

‘இவர் நிச்சயம் இங்க தான் இருக்கார். வேணுமின்னே என்னை வெறுப்பேத்துறார் என்று அவளுக்கு நன்றாக தெரிந்தது.

 

 

“உண்மையை சொல்லுங்க எங்க இருக்கீங்க?? எதுக்கு என்னை அழவைச்சு பார்க்கறீங்க!! பிடிக்கலைன்னா சொல்லுங்க நான் ஊருக்கு போறேன் அதுக்காக இப்படி எல்லாம் செய்யாதீங்க என்றாள் நிஜமாகவே உடைந்து போய்.

 

 

“லூசாடி நீ!! என்ன பேச்சு பேசற!! என்றவாறே திறந்திருந்த கதவின் வழியே உள்ளே அப்போது தான் நுழைந்தான் அவன்.

 

 

அவளை நோக்கி அவன் வந்துக்கொண்டிருக்கும் போதே அவள் ஓடிவந்து அவனை அணைத்துக் கொண்டு அவன் மீது சாய்ந்து அழ ஆரம்பித்தாள்.

 

 

எங்கே விட்டால் அவன் ஓடிவிடுவானோ என்பது போல் அவனை இறுக்கியிருந்தாள். “மிதும்மா ஒண்ணு சொல்லவா என்றான். அவளிடம் இருந்து பதிலொன்றும் வரவில்லை ஹ்ம்ம் என்ற முனகல் மட்டுமே வந்தது.

 

 

“எலும்பு நொறுங்கற அளவுக்கு கட்டிப்பிடிப்பாங்கன்னு கேள்வி பட்டிருக்கேன். நிஜமாவே இன்னைக்கு தான்டி பீல் பண்ணுறேன். இந்த ஒல்லி உடம்புல இருக்கற அத்தனை எலும்பையும் நொறுக்கிருவ போல இருக்கேடி. நீ நல்லா மொசக்குட்டி மாதிரி இருக்க, மாமா பாவமில்லையா!! என்றான் முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு.

 

 

“உங்களை… போங்க… என்று அவன் நெஞ்சில் குத்தினாள்.

 

 

“அப்பாடா லூசா விட்டுட்டா என்றான் சைதன்யன்.

 

 

“என்னைய பார்த்தா மொசக்குட்டி மாதிரியா இருக்கு… என்று முறைத்தாள்.

 

 

“மொசக்குட்டி அழகா தானே இருக்கும் நான் என்ன தப்பா சொல்லிட்டேன்னு நீ இப்படி முறைக்கிற… நெஜமாவே எனக்கு வலிக்க ஆரம்பிச்சுட்டு அதான் அப்படி சொன்னேன்

 

 

“ரொம்ப வலிக்குதா சாரிங்க… என்றாள்.

 

 

“சீய் சும்மா சொன்னேன் மித்ரா. நீ ரொம்ப பீல் பண்ணிட்டு இருந்த அதான் மூடை மாத்த அப்படி சொன்னேன். உனக்கு இல்லாததா நீ எவ்வளவு டைட்டா வேணா கட்டிப்பிடிச்சுக்கோ நான் ஒண்ணுமே சொல்ல மாட்டேன்

 

 

“அப்பப்போ கிஸ் கூட கொடுத்துக்கலாம். நான் அதுக்கும் எதுவும் சொல்ல மாட்டேன். கன்னத்துல தான் கொடுக்கணும்ன்னு இல்லை உதட்டில கூட கொடுக்கலாம் என்று அவன் பேசிக்கொண்டே போக அவள் வலக்கரம் நீண்டு அவன் வாயை மூடியது.

 

 

இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டியிருக்க அவர்களின் செல்ல மகள் அவர்களிருவரையும் பாவமாய் பார்த்துக்கொண்டிருந்தாள்.

 

 

“ப்பா… பாப்பா… தூக்கு… என்று இருவரையும் கட்டிக்கொண்டு நின்றாள். சட்டென்று இருவருமே சுதாரித்தனர். சைதன்யன் குனிந்து அவன் செல்ல மகளை தூக்கிக் கொண்டான்.

 

 

“சாரிடா செல்லம் அப்பா உங்களை கவனிக்காம விட்டேன். உங்கம்மாவை பார்த்தா அப்பாக்கு எல்லாமே மறந்து போகுதுடா என்று சொல்லி மனைவியை பார்த்து கண்ணடித்தான் அவன்.

“உங்கப்பா சும்மா சொல்றார்டா குட்டி. உங்கப்பா இல்லாம அம்மாக்கு தான் எல்லாமே மறந்து போகுது… என்றுவிட்டு அவள் நகரப்போக “ஏய்… என்றவன் அவள் புடவையை பிடித்து இழுத்தான்.

 

 

அதை எதிர்பார்க்காதவள் அவன் இழுப்பில் அவன் மீது முட்டி நின்றாள். “நிஜமாவாடி சொன்னே, நான் இல்லாம உன்னால இருக்க முடியலையா என்றான் அவள் காதில் கிசுகிசுப்பாக.

 

 

“அப்பா எனக்கு… என்றாள் அவன் மகள்.

 

 

இருவருக்குமே அவள் என்ன கேட்கிறாள் என்று புரியாமல் விழிக்க “அம்மாக்கு மட்டும் உம்மா எனக்கும்… என்று அவள் கன்னத்தை காண்பிக்க சைதன்யன் அவன் மகளின் கன்னத்தில் மாறி மாறி முத்தம் வைத்தான்.

 

 

“அப்பா… பன்னீரு… பன்னீரு… என்றாள்.

 

 

“என்னடா பன்னீரு, அப்பாக்கு புரியலையே

 

 

“ஏங்க அவ நீங்க வந்ததும் பன்னீர் அண்ணா வந்திருப்பாங்கன்னு அவங்களை தான் கேட்கிறா அதானேடா குட்டி என்று மதுவை பார்த்து சொல்லவும் குழந்தை தலையாட்டினாள்.

 

 

“அச்சோ நான் இப்போ தான் பன்னீர் அண்ணனை வீட்டுக்கு போகச் சொன்னேன்… இரு வெளிய போய் பார்ப்போம் என்று வாசலுக்கு வந்தான் சைதன்யன், பின்னோடே மித்ராவும் வர பன்னீர் வாசல் வரை வந்து திரும்பிக் கொண்டிருந்தார்.

 

 

குழந்தையோ “பன்னீரு… பன்னீரு… என்று அழைக்க அவருக்கு அவ்வளவு ஆனந்தம், வேகமாக வந்து குழந்தையை நோக்கி கையை நீட்ட மது அவரிடம் தவ்வினாள்.

 

 

“நானே பாப்பாவை பார்த்திட்டு போகலாம்ன்னு தான் நின்னுட்டு இருந்தேன். வரலாமா வேணாமான்னு யோசனை பண்ணிட்டே இருந்தேன் நீங்களே வந்திட்டீங்க என்று அகமகிழ்ந்து போனார் பன்னீர்.

 

 

“மதுக்குட்டி அவங்க அப்பா வந்ததும் நீங்களும் வந்திருப்பீங்கன்னு அவங்கப்பா பார்த்ததுமே உங்க பேரை தான் சொல்லி கூப்பிட்டு இருந்தா, அதான் நீங்க இருக்கீங்களான்னு பார்க்க நாங்க வெளிய வந்தோம் என்றாள் மித்ரா.

 

 

அவருக்கு கண்ணில் குளம் கட்டிவிட்டது. “பாப்பா என்னைய தேடுனீங்களா நீங்க!! என்றதும் குழந்தை தலையசைத்து ஆமோதிக்க அவர் அப்படியே அணைத்துக்கொண்டார் மதுவை.

 

 

“என்ன ஆச்சுங்க அண்ணா ஏன் இவ்வளவு எக்சைட் ஆகுறாங்க என்று ரகசிய குரலில் கணவனிடம் கேட்டாள்.

 

 

“அவங்களுக்கு இப்போ குழந்தை இல்லை மித்ரா. ஒரு பையன் இருந்தான் சின்ன வயசுல மஞ்சள் காமாலை வந்து இறந்து போய்ட்டான். அவங்க மனைவிக்கு குழந்தையே பிறக்காதுன்னு சொல்லிட்டாங்க

 

 

“நம்ம மது அவர்கிட்ட ரொம்ப ஒட்டிக்கிட்டா இல்லையா!! அதான் அண்ணன் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டாங்க போல என்று மனைவிக்கு விளக்கம் கொடுத்தான்.

 

 

அவர் ஏதோ கேட்க வருவதும் பின் தயங்குவதுமாக தெரிய “என்ன அண்ணா சொல்லுங்க?? என்றாள் மித்ரா.

 

 

“என் வைப் கிட்ட பாப்பா பத்தி சொல்லியிருக்கேன். பார்க்கணும்ன்னு அவங்களுக்கு கொள்ளை ஆசை, எங்க வீடு இதே தெருவில தான் கடைசியா இருக்கும்மா. நான் பாப்பாவை கூட்டிட்டு போகட்டுமா என்று தயங்கி தயங்கி கேட்டார்.

 

 

“அதுக்கென்ன அண்ணா கூட்டிட்டு போயிட்டு வாங்க… நீங்க திரும்ப வரும் போது அண்ணியையும் வீட்டுக்கு கூட்டிட்டு வாங்க. இன்னைக்கு உங்க ரெண்டு பேருக்கும் எங்க வீட்டுல தான் சாப்பாடு என்றாள்.

“அய்யோ என்னம்மா நீங்க எங்களுக்கு போயிட்டு… அதெல்லாம் வேணாம்மா என்று கூச்சமாய் மறுத்தார் அவர்.

 

 

“என்னங்க சொல்லுங்க?? என்று கணவனை இடித்துவிட்டு “நீங்க கூட்டிட்டு வர்றீங்க. இல்லை நீங்க அவங்களுக்கு போன் போடுங்க நான் பேசுறேன் என்று விடாமல் அவரை வற்புறுத்தி அவர் மனைவியிடம் பேசி இருவருக்கும் அழைப்பு விடுத்தாள்.

 

 

அவர்கள் வருவதாக கூறிய பின்னே தான் மித்ரா அமைதியானாள். பன்னீர் குழந்தையை அழைத்துக்கொண்டு காரில் ஏறிச் செல்ல மித்ராவும் சைதன்யனும் வீட்டிற்குள் சென்றனர்.

 

 

உள்ளே நுழையும் போதே கதவை வேகமாக சைதன்யன் அடைத்துவிட்டு மித்ராவின் பின்னே வந்து அவளை கட்டிக்கொண்டான்.

 

 

“ஏய் கேடி செம ஆளுடி நீ… பாப்பாவை நைசா பன்னீர் அண்ணா கூட அனுப்பிட்டு என்னோட ரொமான்ஸ் பண்ணுறதுக்கு தானே ப்ளான் போட்டே என்று கிண்டலடித்தான் சைதன்யன்.

 

 

அவள் இடுப்பை சுற்றியிருந்த அவன் கையை விலக்கி அவன் புறம் திரும்பியவள் “அப்படி இருந்தா தான் என்ன இப்போ?? என்று அவனுக்கு சளைக்காமல் பதில் சொன்னாள்.

 

 

“அய்யோ மேடம் செம மூட்ல இருக்காங்க போல, சைத்து இனி ஒரு நிமிஷம் கூட வேஸ்ட் பண்ணாதேடாஎன்றவன் அவளை தள்ளிக்கொண்டு அவர்கள் அறைக்கு சென்றான்.

 

 

“இப்போ எதுக்கு என்னை இங்க தள்ளிட்டு வர்றீங்க என்றாள்.

 

 

“நீ தானேடி சொன்ன ரொமான்ஸ் பண்ணலாம்ன்னு, பாரு மாமா ஆசையா வந்தா தள்ளிட்டு வந்தா எதுக்குன்னு கேட்குற என்றான்.

 

 

“நானும் அப்போல இருந்து பார்த்திட்டு இருக்கேன். யாரை மாமான்னு சொல்லிட்டு இருக்கீங்க என்றாள்.

“நான் தானே உனக்கு புருஷன் அப்போ நான் தான் உனக்கு மாமா

 

 

“நாங்க எல்லாம் எங்க ஊருல புருஷனை…

 

 

“புருஷனை…

 

 

“டேய்ன்னு தான் கூப்பிட்டுவோம்

 

 

“என்னது டேய்யா… சரி போகட்டும் விடு எப்படி வேணா கூப்பிட்டுக்கோ என்றவன் அவள் இடையை வளைத்து கழுத்தில் முகம் பதிந்தான்.

 

 

“என்ன பண்றீங்க?? என்று குரலே எழும்பாமல் கேட்டாள் அவன் மனைவி.

 

 

“தெரியலையா!! என்றவன் மெதுவாய் முத்தம் பதிக்க ஆரம்பித்தான்.

 

 

“சமைக்கணும் என்றாள் ஒற்றைச்சொல்லாய்.

 

 

சட்டென்று அவன் ஆசை எல்லாம் வடிந்தது போல் இருந்தது அவனுக்கு. அவளை மெதுவாய் விடுவித்தவன் “சரி போ என்றுவிட்டான். அவன் முகத்தில் சற்றே ஏமாற்றம் தோன்றியது போல் இருந்தது.

 

 

“இல்லை அவங்களை சாப்பிட வரச் சொல்லிட்டேன். அதான் முதல்ல சமைச்சிடலாம்ன்னு சாரிங்க என்றவள் அவன் கைப்பிடித்து நின்றாள்.

 

 

“நான் ஒண்ணும் நினைக்கலை போதுமா… நீ போய் வேலை பாரு, எனக்கும் அதுக்குள்ள கொஞ்சம் வேலையிருக்கு. அதெல்லாம் முடிச்சுட்டு சாயங்காலம் ஆபீஸ் போயிட்டு அங்க இருக்கற ரிபோர்ட்ஸ் எல்லாம் எடுத்திட்டு வரணும்

 

 

“இன்னைக்கு ஈவ்னிங் ஆறு மணிக்கு நாம சென்னைக்கு கிளம்பறோம். பார்த்து அதுக்கு தேவையானதை எடுத்து வைச்சுக்கோ மித்ரா என்றவன் அதற்கு மேல் எதுவும் பேசாமல் அவன் மடிகணினியுடன் அமர்ந்துவிட்டான்.

 

 

‘அச்சோ நல்ல மூடுல இருந்தாரு அதை கெடுத்திட்டமோ என்று யோசித்துக்கொண்டே அவன் முகத்தை பார்த்தாள். அதிலிருந்து ஒன்றும் கண்டுப்பிடிக்க முடியவில்லை.

 

 

அறையில் இருந்து வெளியில் வந்தவள் சமையலறைக்குள் சென்றாள். கை தானாய் வேலையை பார்த்தாலும் மனம் முழுதும் அவனையே சுற்றி சுற்றி வந்தது.

 

 

‘ச்சே எல்லாம் என்னால தான்… ஒரு வேலை முடிக்கணும்ன்னா என் மைன்ட் புல்லா அதையே நினைச்சுட்டு இருக்கேன். சமையல் பண்ணணும்ன்னு சொல்லி இப்போ அவரை மூட் அவுட் பண்ணிட்டனே

 

 

‘மனுஷன் இப்போ தான் ஒழுங்கா என்கிட்ட பேசவே ஆரம்பிச்சார். அதுக்குள்ள சொதப்பிட்டியே மித்ரா என்று தன்னை நோக்கி விரலை நீட்டியவள் ‘தேவையா… தேவையா… இதெல்லாம் உனக்கு தேவையா… என்று அவள் தலையில் அவளே குட்டிக்கொண்டாள்.

 

 

சைதன்யன் கோவமாய் இருக்கிறான் என்று நினைத்து அவள் தன்னையே நொந்துக்கொண்டிருக்க அவனோ சத்தமேயில்லாமல் சமையலறையை எட்டிப்பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான் அவள் செயலில்.

 

 

‘வீம்புக்காரி என்கிட்ட வேலை இருக்குன்னு வாயடிச்சுட்டு இங்க வந்து தனியா புலம்புறதை பாரு என்று மனைவியை செல்லமாக மனதிற்குள் வைதவன் அவர்கள் அறைக்கு சென்று விட்டான்.

 

 

மீண்டும் அவன் வந்து எட்டிப்பார்க்க அவள் வேலையை ஓரளவிற்கு முடித்திருந்தாள். சத்தமில்லாமல் வந்து அவளை பின்னிருந்து அணைத்துக் கொண்டான்.

 

 

இந்த முறை மித்ரா மறுப்பேதும் சொல்லவில்லை. சொன்னால் அவன் கோபித்து கொள்வானோ என்ற பயம் தான் வேறென்ன.

 

 

“முடிஞ்சுதா என்று அவள் காதில் கேட்க ‘ஹ்ம்ம் என்று முனகலை அவனுக்கு பதிலாக கொடுத்தாள் அவன் மனைவி.

 

 

“சரி வா என்று அவன் அழைக்கவும் அவன் கைப்பிடித்து அவனுடன் சென்றாள்.

 

 

“உட்காரு என்று சொல்லவும் சத்தமேயில்லாமல் கட்டிலில் அமர்ந்தாள்.

 

 

“மொசக்குட்டி இது உனக்கு நல்லாவே இல்லை. இவ்வளவு அமைதியா நான் சொல்ற பேச்சை கேட்டுகிட்டு இது என்னோட மித்ரா தானான்னு எனக்கே சந்தேகம் வருது

 

 

அவளோ இன்னமும் பேசாமலே இருந்தாள். எதுக்கு வம்பு எதாச்சும் எக்குத்தப்பா பேசிட்டா மனுஷன் வருத்தப்படுவார் என்று கப்சிப்பென்றிருந்தாள்.

 

 

“மொசக்குட்டி மாமா பீல் பண்ண வைச்சுட்டோம்ன்னு நினைச்சு ரொம்ப பீல் பண்ணிட்டு இருந்த போல. உன்னையே அடிச்சுகிட்டயா வலிக்குதா என்றவாறே வந்து அவள் நெற்றியை தடவிவிட்டு அதில் முத்தம் பதித்தான்.

 

 

“அப்போ நீங்க என்னைய தான் பார்த்திட்டு இருந்தீங்களா!! என்றாள்.

 

 

“ஆமா உன்னை தான் பார்த்திட்டு இருந்தேன்

 

 

“வேலை இருக்குன்னு சொன்னது

 

 

“உன்னை பார்க்க வர்ற நேரம் நெறைய வேலையை வைச்சுக்க கூடாதுன்னு எல்லாமே நேத்தே முடிச்சு வைச்சுட்டேன்

 

“அவங்களை வேற சாப்பிட கூப்பிட்டு இருக்கோம். உன் நினைப்பெல்லாம் அதில தான் இருக்கும்ன்னு தெரியாம நான் தான் உன்னை வம்பிழுத்தேன்

 

 

“அதான் நீ கேட்டதும் சரி போன்னு சொல்லிட்டேன். கோவமா எல்லாம் சொல்லலைடா மிதும்மா. சோ நோ வொர்ரீஸ் ஓகே வா, பீ கூல்

 

 

“அடப்பாவி மனுஷா உங்களை பீல் பண்ண வைச்சுட்டேன்னு நான் பீல் பண்ணா கூலாம்ல கூல்… ஆளை பாரு என்று கட்டிலில் இருந்து எழுந்தாள்.

 

 

“பாரு மிதும்மா நல்லா பார்த்துக்கோ!! நல்லா இருக்கேனா!!

 

 

“மிதும்மா பார்த்தெல்லாம் போதும்டா, ப்ளீஸ் ப்ளீஸ் என்னையும் கொஞ்சம் கவனியேன் என்று சொன்னவன் தான் அவளை கவனித்தான்.

 

 

அவள் முகம் முழுவதும் முத்திரை பதித்தவன் அவள் இதழை தன் வசமாக்கி அவளை முழுவதுமாக தன் வசமாக்கினான்.

 

 

அன்று மாலை அவர்கள் சந்தோசமாக சென்னைக்கு புறப்பட்டுச் சென்றனர். அஸ்வினியை அவர்கள் இருவரும் ஒன்றாக சந்திப்போம் என்று நினைத்திருக்கவில்லை… இனி நடக்கப்போவது….

 

 

 

 

Advertisement