Advertisement

மாயவனோ!!தூயவனோ – 7 

மித்ராவிற்கு என்ன செய்வது என்றே புரியவில்லை.. அவள் என்ன செய்தாலும் என்ன பேசினாலும் அவளது வார்த்தைகளை வைத்தே மனோகரன் காதல் வசனங்கள் பேச தொடங்கியது தான் அவளது நிலைக்கு காரணம்..

ஏற்கனவே அவளது மனதில் ஆயிரம் கேள்விகள், பதில் இல்லாமல் அவளை போட்டு பாடாய் படுத்தி கொண்டு இருந்தது.. இதில் இப்பொழுது மனோகரனின் காதலும் சேர்ந்து கொண்டது.. சில நேரங்களில் இவன் மனதில் நிஜமாகவே காதல் இருக்கிறதா என்று யோசிக்கும் அளவிற்கு மித்ரவிடம் கடுமையாக நடந்து கொண்டான் மனோகரன்.

ஆனால் அவள் எதிர் பார்க்காத நேரத்தில் எல்லாம் அவளை தன் காதல் மொழிகளாலும், பார்வையாலும் மேலும் மேலும் படுத்தினான்.. அவனது கோபத்தை கூட தாங்கி கொள்வாள் போல அவனது நேசமான வார்த்தைகளை தான் இவளால் பொறுக்க முடியவில்லை.. அவனது பார்வையிலும் பேச்சிலும் தன் மனம் பலவீன படுவதை உணர்ந்தாள் மித்ரா.. அதுவே அவளுக்கு இன்னும் கோபத்தை தூண்டியது..   

“ச்சே நான் ஏன் இப்படி இருக்கேன் ?? கடவுளே எனக்கு ஏன் எந்த வழியும் தெரியல.. இவன் கோவமா பேசுனா கூட நான் பதிலுக்கு பதில் பேசிடுறேன்.. ஆனா அன்பா ஒரு பார்வை பார்த்தா கூட என்னால ஏன் எதுவும் செய்ய முடியல?? ” என்று இறைவனிடம் தன் சந்தேகத்தை கேட்டாள்.. அவரோ வழக்கம் போல அமைதி காத்தார்..

(உனக்கா மித்ரா இந்த நிலைமை ???)

அன்று இரவு மனோகரன் மித்ராவிற்கு தேவையான பொருட்கள் வாங்கி வந்ததில் இருந்து அவனின் பேச்சும் பார்வையும் அடிக்கடி மாறுவதை மித்ரா உணர்ந்தே இருந்தாள்..

“ என்னாச்சு இந்த கிறுக்கனுக்கு?? ஏன் அப்ப அப்ப இப்படி பார்த்து தொலைக்கிறான் ?? லவ் டார்ச்சர் பண்ணுறானே… ஓ !!! மனு என்னைய இப்படி தனியா உக்காந்து புலம்ப வச்சுட்டே இல்ல.. இருடா உன்னய என்ன பண்ணுறதுன்னு வேற தெரியலையே “ என்று கோபத்தில் ஆரம்பித்து சோகமாக முடித்தால் மித்ரா..

(அட ராமா )

சில நேரம் அவளுக்கே அவளை நினைத்து பார்க்கும் பொழுது சிரிப்பாக வந்தது.. அவளது நிலைமை என்ன ?? எதிர்காலம் என்ன?? என்றே அவளுக்கு தெரியவில்லை. ஆனால் இங்கே வந்து என்னவோ அவள் தான் இந்த வீட்டின் எஜமானி போல வேலை ஆட்களை மேற்பார்வை செய்வதும், சமையல் அறையில் தானே முன் நின்று பார்த்து பார்த்து சமைப்பதும், பூஜை அறையில் தினமும் விளக்கு ஏற்றி பூஜை செய்வதும், வீட்டினரை அக்கறையாக  கவனிப்பதுமாக இருப்பதும், அவளுக்கே புரியவில்லை தான் ஏன் இப்படி நடந்து கொள்கிறோம் என்று..

“ அவன் சொன்னதுக்காகவா நான் இப்படி எல்லாம் செய்யுறேன்… அங்க என் அப்பா வீட்டுல கூட நான் இதெல்லாம் செஞ்சது இல்லையே..” என்று யோசிக்கும் பொழுதே அவளுக்கு ஒன்று மனதில் சாட்டை அடி போல உரைத்தது

“ அது அப்பா வீடு என்றால் அப்போ இது ??? இது… என் வீடா.. இந்த நினைப்பு எப்படி என் மனசுக்குள்ள வரும் ??? ஐயோ எல்லாம் இந்த மனுனால தான்.. அவன் தான் பேசி பேசியே என்னைய இப்படி புலம்பி தவிக்க விடுறான்.. டேய் பனைமரம் ஏன்டா இப்படி எல்லாம் பண்ணுற ??? “ என்று அனைத்திற்கும் அவன் மீதே பழி போட்டாள் மனோவின் அன்பு மனைவி..

ஆனால் இதெல்லாம் அவனிடம் நேரில் கூற முடியுமா என்ன ?? அவ்வளோதான் ஏற்கனவே ஒரு வார்த்தை பேசினால் மறு நிமிடம் கண்ணே மணியே என்று கொஞ்ச ஆரம்பித்து விடுகிறான்.. வேறு எதாவது தான் செய்ய வேண்டும் என்று அமைதியாக அமர்ந்து இருந்தாள்..

“ என்ன அண்ணி டல்லா இருக்கீங்க ?? உடம்பு எதுவும் சரி இல்லையா ?? “ என்று அக்கறையாக கேட்டபடி வந்தான் திவா.. அவனை இந்த நேரத்தில் எதிர்பார்கவில்லை மித்ரா..

( உங்க அண்ணனை கட்டுனா வேற எப்படி இருப்பா )

“ அதெல்லாம் ஒண்ணுமில்ல திவா.. போர் அடிச்சது அதான்.. ஆமா நீ என்ன இந்த நேரத்துல?? ”

“ இல்ல அண்ணி ஒரு சைட் பாக்குறதுக்கு இந்த பக்கம் வந்தேன்.. வேலையும் முடிஞ்சது.. சரி அப்படியே  வீட்டுக்கு போவோம்னு வந்துட்டேன்… “

“ ஓ !!! சரி திவா.. காபி போட்டு குடுக்கவா ??”

திவாவிற்கு மித்ராவிடம் எதோ மாற்றம் இருப்பது போல தெரிந்தது.. மித்ரா அங்கு வந்த மறுநாளே திவாகர் புரிந்துகொண்டான் தன் அண்ணனுக்கும் அண்ணிக்கும் இடையில் எதுவும் சாதரணமாக இல்லை என்று.. அதற்கு காரணமும் அவன் அண்ணன் தான் என்பதால் அவன் முடிந்த வரை மித்ராவின் மனம் நோகாதவாறே நடந்துகொள்வான்..

“ இல்ல அண்ணி வேண்டாம்.. இப்போ கொஞ்ச நேரத்துல அண்ணனும் வரேன் சொன்னாங்க, எல்லாம் சேர்ந்து காபி குடிக்கலாம் “

மனோகரன் வருகிறான் என்றதுமே மித்ரா முகம் மேலும் இருண்டது.. ஆனாலும் எதுவும் வெளிய கூறவில்லை.. இதே வந்த புதிதில் இருந்த மித்ரா என்றால் திவாவை கிண்டல் செய்து இருப்பாள்.. மனோவை ஏதாவது சொல்லி இருப்பாள் ஆனால் இன்று மௌனியாகிவிட்டாள்..

மனோகரன் உள்ளே நுழையவுமே “ நான் போய் காபி எடுத்து வரேன் “ என்று கூறி சென்று விட்டாள்.. அவனது முகத்தை கூட அவள் பார்கவில்லை.. இதை எல்லாம் திவா பார்த்தும் பார்க்காதது போல தான் இருந்தான்.. தன் முகத்தை கூட காணாது செல்லும் தன் மனைவியை ஒரு வலியோடு பார்த்தபடி வந்து அமர்ந்தான் மனோகரன்..

( எங்க வலிக்கிறது ??)

மித்ரா திரும்பி வருவதற்குள் திவா தன் அண்ணனிடம் என்ன கூறினானோ தெரியவில்லை மித்ரா திரும்பி வரவும் அவள் தந்த காப்பியை அருந்தியபடி

“ மித்து, பிரபா, கிருபா எல்லாம் வரவும் ரெடி ஆகுங்க நம்ம எல்லாரும் சேர்ந்து வெளிய போகலாம் “ என்றான்.. இதை கேட்டதும் மித்ராவிற்கு உலகமே தலைகீழாக சுழலுவது போல இருந்தது.. நிஜமாகவே இவன் வெளிய அழைத்து செல்வதாய் தான் கூறுகிறானா என்று அவளால் நம்ப முடியவில்லை.. மித்ரா மனதில் நினைத்தது அவள் முகத்திலும் தெரிந்தது போல..

அதை கண்டுவிட்ட மனோகரன் “ நான் நிஜமா தான் மித்து சொல்றேன்.. உனக்குமே ஒரு மாற்றமா இருக்கும்ல.. நீயும் வீட்டுக்குள்ளையே இருக்க..” என்றான் தன்மையாக..

(அது உனக்கு இப்பதான் தெரியுதா ராசா )

ஆனால் அனைத்துமே மித்ராவிற்கு நடிப்பாகவே தெரிந்தது.. “ ஹ்ம்ம் “ என்று கூறிவிட்டு எழுந்து அவர்கள் அறைக்கு சென்றுவிட்டாள்.. சிறிது நேரம் மனோகரன் அலைபேசியில் சில நபர்களிடம் பேசினான்.. அதன் பின் மித்ராவை காணவென அவர்கள் அறைக்கு வந்தான்.. அவளோ தோட்டத்தை வெறித்து பார்த்தபடி ஜன்னல் பக்கம் நின்று இருந்தாள்..

அவளது தோள்களில் கை வைத்து திருப்பி “ என்ன டா?? ஏன் இவ்வளோ டல்லா இருக்க ?? திவா என்னைய கேக்குறான்.. நான் தான் அவங்க அண்ணியோட சந்தோசத்தை கெடுக்கிறேனாம்.. சொல்லு மித்து உனக்கு என்ன பிரச்சனை ??”

மித்ரா எதுவுமே பதில் பேசவில்லை.. அவன் முகம் காணாது தலை குனிந்து நின்று கொண்டாள்.. “ என்ன மித்து… வெளிய போய்ட்டு வந்தா உனக்கு நல்லா இருக்கும்னு தான்.. அவ்வளோ ரிஸ்…. “ என்று எதுவோ கூற வந்தவன்   “ நான் எல்லாரும் வெளிய போய்ட்டு வரலாம் சொன்னேன் “ என்று கூறி முடித்தான்..

மித்ரா படக்கென்று அவனை நிமிர்ந்து பார்த்தாள்.. “ என்னவோ சொல் வந்தவன் அதை மாத்தி வேற எதுவோ சொல்றானே “ என்று கேள்வியாக பார்த்தாள்.. ஆனால் அத்தனை நேரம் அவன் முகத்தில் இருந்த மென்மை காணாமல் போனது..

கல் சிலை போல் இருந்த அவன் முகத்தில் இருந்தது என்ன விதமான உணர்வு என்றே மித்ராவால் உணர முடியவில்லை.. “ தம்பிங்க எல்லாம் வரவும் சீக்கிரம் ரெடியாகு..” என்று கூறிவிட்டு சென்று விட்டான்..

(ரிஸ்க் எடுக்கிறது எல்லாம் உனக்கு ரஸ்க் சாப்பிடுறது போல மனோ )

“ திமிர் திமிர்.. எல்லாம் திமிர்.. ச்சே மனுசனே இல்லை.. ஒரே மாதிரி இவனால இருக்க முடியாதா என்ன ?? பக்கி.. எதையோ மறைக்கிறான்.. ஆமா இவன் என்ன சொல்ல வந்தான் ??” என்று திட்டியபடி யோசித்தவளுக்கு மனதில்  எதுவும் தோன்றவில்லை..

அதன் பிறகு பிரபா கிருபா எல்லாம் வந்த பிறகும் மனோவை கண்ணில் காணவில்லை..” களவாணி.. நேருல வந்தா நான் ஏதாவது கேட்பேனு போய் ஒளிஞ்சுகிட்டான்..” என்று அவனை திட்டியபடியே தயாரானாள் மித்ரா..

(அட பாருயா பிள்ள நல்ல திட்ட பழகிடுச்சு )

அவள் ஒன்றை மட்டும் உணரவில்லை சிறிது நாட்களாகவே அவள் மனம் ஓயாத அலை போல மனோகரனையே நினைக்கிறது என்று.. சில நேரம் அவள் மனம் அவளிடமே கேள்விகள் எழுப்பினாலும் அவள் அதை ஒதுக்கி வைத்து விடுகிறாள்..

இளம் மஞ்சள் நிற காட்டன் புடவை அணிந்து, முதுகு வரை அடர்ந்து படர்ந்திருந்த கருங்கூந்தலை ஒரு சிறு கிளிப் மட்டும் போட்டு விரித்து விட்டு இருந்தாள்.. முகத்தில் எந்த வித ஒப்பனையும் இல்லை.. ஆனாலும் கண்ணாடி முன்பு அமர்ந்திருந்தாள்.. வில் போன்ற இரு புருவங்களுக்கு இடையில் ஒரு சிறு பொட்டு, கண்களுக்கு லேசாக மை.. இதுவே அவளை ஓவியம் போல காட்டியது.

ஆனாலும் தன் முகத்தில் எதுவோ குறைவது போல உணர்ந்தாள்.. ஆனாலும் அவளால் என்னவென்று கண்டுபிடிக்க முடியவில்லை.. என்னவென்று யோசித்தவளுக்கு தன் அன்னை எப்பொழுது உச்சியில் இடும் குங்குமம் நினைவு வந்தது..

(இது வேறையா ???)

திருமணம் ஆன இத்தனை நாளில் ஒருமுறை கூட மித்ரா அப்படி வகிட்டில் குங்குமம் வைத்தது இல்லை.. ஆனால் தன் அன்னை வைக்கும் பொழுது மிகவும் ரசித்து பார்ப்பாள்.. அவளை அறியாமல் அவளது கரங்கள் குங்கும சிமிழை திறந்து குங்குமத்தையும் எடுத்து தன் நெற்றியில் வைத்தும் விட்டாள்.

ஏனோ அவளுக்கு தன் அன்னையின் நினைவு மிகவும் வந்தது.. ஆனாலும் மனோகரனிடம் எதுவும் கேட்கவும் முடியாதே.. கண்களில் நீர் முட்டியது.. அவளது கண்ணீருக்கு போட்டியாக வகிட்டில் இருந்த கும்குமம் ஜொலித்தது..

அப்பொழுது தான் அவள் செய்த காரியத்தை உணர்ந்தாள் மித்ரா “ நா… நானா வச்சேன்?? இது எப்படி முடியும்?? நான் இந்த கல்யாணத்தையே ஏத்துகலையே பின்ன இது மட்டும் எப்படி நடக்கும் ?? இல்ல இந்த மனோ தான் பேசி பேசி என்னைய என்னவோ பண்ணுறான் “ என்று என்னும் பொழுதே அவள் இன்னொரு மனம்

“ ஓ !! அப்ப கல்யாணத்தை ஏத்துக்காமதான  நீ இங்க இருக்க ?? ஏதோ இது உன் வீடு போல இஷ்டத்துக்கு எல்லாம் செய்யுற ?? உன் அப்பா அம்மாவ பத்தி கூட தெரிஞ்சுக்காம அவன் சொல்றதை எல்லாம் கேட்கிற ?? ” என்று கேள்வி எழுப்பியது..

அவள் மனம் அவளிடம் கேட்ட கேள்விகளில் திகைத்து போய் அமர்ந்து இருந்தாள்.. இது எதற்கும் அவளிடம் விடை இல்லை.. ஆனால் இப்படிபட்ட கேள்விகளை தன்னிடமே தன் மனம் கேட்கும் என்று அவள் சிறிதும் நினைத்து பார்கவில்லை..

மித்ரா தயாராகி விட்டாளா என்று காண வந்த மனோகரன் அவளின் மோன நிலையை கண்டு ஒரு நொடி தன்னை மறந்தான்.. அவள் சேலையும், நெற்றியில் இருந்த குங்குமமும் அவனை வேறு உலகத்திற்கு அழைத்து சென்றது..

“வாவ் !!!!! மித்து… மஞ்சள் தேவதை தான் ரூம்குள்ள இருக்கோன்னு நினைச்சுட்டேன்.. ஆனா தேவதைக்கு எல்லாம் தேவதை அதும் இந்த மனு ஓட தேவதை தான் இங்க இருக்கிறதா ??? ” என்றான் உல்லாசமாக..

அவனது குரலை கேட்டதும் மித்ரா உடனே தன் முகத்தை மாற்றி கொண்டாள்.. அவள் எண்ணமெல்லாம், எக்காரணம் கொண்டும் தன் மனதில் மனோகரன் பற்றி தோன்றி இருக்கும் இந்த புதிய சஞ்சலம் அவனுக்கு தெரிந்து விட கூடாது என்பது தான்..

அவன் முகத்தை கூட பாராமல் தன் கையில் இருந்த வளையலை ஆராய்ச்சி செய்து கொண்டு இருந்தாள்.. ஆனால் மனமோ “ கொஞ்ச நேரத்துக்கு முன்ன தான் முகத்தை திருப்பிக்கிட்டு போனான்.. இப்ப வந்து இளிக்கிறான்..” என்று எண்ணியது..

“ என்ன மித்து.. நான் இவ்வளோ ஹாப்பியா பேசிட்டு இருக்கேன்.. நீ என்ன இப்போ எல்லாம் அமைதியா இருக்க ?? சொல்லு என்ன குழப்புது உன்னைய ?? என்கிட்டே சொல்லு “ என்று கூறவும் அவள் திடுக்கிட்டு அவனை பார்த்தாள்..

( உனக்கு நிஜம்மாவே தெரியாதா மனோ ??)

“ சோ!!! உன் மனசுல வேற ஏதோ ஒரு குழப்பம் இருக்கு இல்லையா ?? “ என்றான் அவளது விழிகளை ஊடுருவி.. ஏனோ அவனது விழிகளில் மூழ்கி மூழ்கி அவனுள்ளே பயணிப்பது போல உணர்ந்தாள் மித்ரா. அவளை அறியாமல் கண்கள் கலங்கின..

மனோவும் அவளது முகத்தில் என்ன கண்டானோ.. “ என்ன மித்து ??? ” என்றான்..

ஒரு நொடியில் தன் தடுமாற்றத்தை சுதாரித்தவள் “ ஹா !! ஒண்ணுமில்ல.. கிளம்பலாமா ??”

அவள் எதையோ மறைக்கிறாள் என்று மனோகரன் புரிந்துகொண்டான்.. என்ன ஏது என்று கேட்டால் இன்னும் விறைத்து கொள்வாள் என்று அவனுக்கு தெரியாதா என்ன ??அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு  “ம்ம் போலாம் “ என்று கூறி முன்னே நடந்தான்..

கிளம்புவதற்கு முன் மித்ராவிற்கு தெரியாமல் ஒரு சிறு கை துப்பாக்கியை எடுத்து தன் சட்டையினுள் மறைத்து வைத்தான் மனோகரன்.. ஆனால் யாருக்கு தெரிய கூடாது என்று நினைத்தானோ அவள் தான் முதலில் அதை கண்டுகொண்டதே..

(என்ன துப்பாக்கியா???? அய்யோ )

மனோவின் நல்ல நேரமோ இல்லை மித்ரா மனம் அவனுக்கு சாதகமாக நினைக்க தொடங்கி விட்டதோ என்னவோ மித்ரா “ ஆமாமா இவன் பெரிய மகாராஜான்னு நினைப்பு.. பாதுகாப்பிற்கு துப்பாக்கி வேற.. கடவுளே… இவன் ஏன் இவ்வளோ அலம்பல் பண்ணுறான்.. “ என்று எண்ணியவள் அவனிடம் அதை கேட்டும் விட்டாள்..

அவள் கண்டுகொண்டால் என்று தெரிந்தால் நிச்சயம் மனோகரன் ஏதாவது கூறி மழுப்புவான், இல்லை கோவப்படுவான் அதை வைத்து அவனை நன்றாக வாங்கு வாங்கு என்று வாங்கிவிடலாம் என்று நினைத்தே மித்ரா கேட்டது..

ஆனால் அவனோ “ ஊப் !!!! பாத்துட்டியா ?? ரொம்ப நல்லது.. இல்ல உனக்கு தெரிஞ்சிடுமோன்னு டென்ஷன் இருந்துகிட்டே இருக்கும்.. யப்பா.. இப்போ தான் நிம்மதியா இருக்கு “ என்று கூறி முன்னே சென்று விட்டன்..

(ரொம்ப வழியுது )

“ கிறுக்குப்பய.. நான் என்ன கேட்டேன் இவன் என்ன சொல்லுறான் ?? துப்பாக்கிய கையில வச்சுக்கிட்டு சுத்துற அளவுக்கு இவனுக்கு என்ன பிரச்னை இருக்கும் ?? ஹ்ம்ம் நிஜமாவே அவளோ பெரியா ஆளா இந்த மனு ?? ஒரு வேலை தீவிரவாதியா இருப்பானோ ” என்றெல்லாம் கற்பனை செய்ய தொடங்கிய தன் மனதை அடக்கி அமைதியாக சென்றாள் மித்ரா..

பிரபா தான் வெளியே செல்கிறோம் என்றதும் சந்தோஷத்தில் குதித்து கொண்டு இருந்தான்.. “ எத்தன நாள் ஆச்சு இல்லையா ணா..?? ” என்று தன் அண்ணன்கள் மூவரிடமும் மாற்றி மாற்றி கேட்டுக்கொண்டு இருந்தான்..

மனோ திவாவை தனியாக அழைத்து “ திவா நான் சொன்ன எல்லா ஏற்படும் சரியாய் பண்ணிட்ட தானே.. நம்ம எவ்வளோ பெரிய ரிஸ்க் எடுக்கிறோம்ன்னு உனக்கே தெரியுமே டா “ என்று.. அவன் நேரம் மனோ ரிஸ்க் என்று கூறியது மட்டும் மித்ராவின் காதுகளில் விழுந்துவிட்டது..

அப்பொழுது தான் திவா மனோ இருவரின் முகத்தையும் கூர்ந்து கவனித்தாள்.. குடும்பத்துடன் வெளியே செல்கிறோம் என்ற மகிழ்ச்சியை விட வேறு எதோ ஒன்று அவர்கள் முகத்தில் இன்னது என்று கண்டு பிடிக்க முடியவில்லை அவளால்..                  

மித்ரா தங்களை கவனிக்கிறாள் என்று தெரிந்ததுமே அண்ணன் தம்பி இருவருமே தங்கள் முகத்தை மாற்றி கொண்டனர்..

(அதானே பாத்தேன் )

கிருபா “ ஏன் ணா வரும் போது ஹோட்டல்ல சாப்பிட்டு வரலாமா ?? “ என்றான் மகிழ்ச்சியாக.. மித்ராவும் வேகமாக மனோவின் முகத்தை பார்த்தாள்..

“ இல்ல கிருபா கோவிலுக்கு மட்டும் தான் போறோம்.. அங்க இருந்து கிளம்பவே எவ்வளோ நேரம் ஆகும் தெரியல.. வீட்டுல சமைக்க சொல்லி இருக்கேன் வேணும்னா நம்ம எல்லாம் கார்டன்ல உக்கார்ந்து சாப்பிடலாம் ” என்றான் மனோ..

“ ஆமாமா இந்த துறை இப்ப கோவிலுக்கு கூப்பிட்டு போறதே பெருசு.. இதுல பாவம் கிருபா,  அவங்க அண்ணனை பத்தி அவனுக்கு இன்னும் தெரியல.. கஞ்சப்பய “ என்று மனோவை கறுவும் பொழுதே அவள் மனதில் அன்று அவளுக்கு வாங்கி வந்த பொருட்கள் அனைத்தும் வந்து போயின..

(ஏன் உனக்கு நல்லா அவனை பத்தி தெரியுமோ ??)

காருக்குள் ஏறும் பொழுது தான் கவனித்தால் மித்ரா ஏற்கனவே அவர்கள் வாகனத்திற்கு முன்னும் பின்னும் இரண்டு கார்கள் நின்று இருந்தன.. ஒன்றில் மருது பொன்னி இருப்பது தெரிந்தது.. மற்றொன்றில் யார் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை..

“ என்ன நடந்தாலும் சரி.. இத்தனை நாளுக்கு அப்புறம் இப்போதான் மித்ரா நீ வெளிய போற.. சோ எதையும் கண்டுக்காம உன் மனசை நீ தான் ரிலாக்ஸ்டா பார்த்துக்கணும் “ என்று தனக்கு தானே கூறிக்கொண்டு தன் குடும்பத்தினருடன் கிளம்பினாள்..

காரில் ஏறி அமர்ந்ததுமே மனோகரன் “ ஜன்னல் கதவ யாரும் திறக்க கூடாது” என்று ஒரு கட்டளை பிறப்பித்தான்.. ஆனால் மித்ரவோ ஏ. சி  வண்டில் சென்றாலும் ஜன்னலை திறந்து விட்டு வேடிக்கை பார்த்தபடி தான் செல்வாள். இவன் இப்படி கூறவும் அவளுக்கு சட்டேன்று கோவம் வந்துவிட்டது..

( ஒரு நாள் செமத்தியா நீ வாங்கி கட்டிக்க போற மனோ )

மனோவை முறைத்து பார்த்து “ இது எல்லாம் கொஞ்சம் உங்களுக்கு ஓவரா தெரியல ?? ” எனவும், அவனோ இல்லை என்பது போல தன் தோளை குலுக்கிவிட்டு வண்டியை ஓட்ட தொடங்கினான்..

சிறிது நேரம் அங்கே ஒரு பெருத்த அமைதி நிலவியது.. ஆனால் கிருபா இருக்கும் இடத்தில் அமைதி நிலைக்குமா என்ன ?? கிருபா பேச ஆரம்பித்ததும் மித்ராவும் தன் மௌனத்தை கலைத்தாள்..

அதன் பிறகு அங்கே ஒரே சிரிப்பும், பேச்சும், கேலியும், கிண்டலும் தான்.. ஆனால் என்னதான் மித்ரா அனைவரோடும் பேசிக்கொண்டு வந்தாலும் அவளது மனம் மட்டும் அமைதியாக இல்லை..

நகரை விட்டு பல மைல் தூரம் வந்ததை உணர்ந்த மித்ரா “ மனு… எந்த கோவிலுக்கு போறோம் ?? ரொம்ப தூரம் வந்து இருக்கோம் போலையே ?? ”

“ஹ்ம்ம் ஆமா மித்து சிட்டில இருந்து ஒரு இருபது கிலோ மீட்டர்ல நம்ம போற கோவில் இருக்கு “

“ அவ்வளோ தூரம் ஏன் ??” என்று அவள் கேட்கும் பொழுதே கோவிலும் வந்துவிட அனைவரும் காரில் இருந்து இறங்கினர்.. ஆனால் மித்ராவை மட்டும் மனோ இறங்க விடவில்லை.. மருது கோவிலுக்குள் சென்று ஒரு முறை பார்த்துவிட்டு வந்து மனோவிடம் “ தம்பி போகலாம் “ என்று கூறியபின்னே மித்ராவை அழைத்து கொண்டு போனான்..

அவனையே கேள்வியாக பார்த்தபடி இறைவனை வேண்ட சென்றாள் மித்ரா.. கோவிலுக்குள் ஆட்கள் இருக்கும் அரவமே இல்லை.. ஒரே ஒரு குருக்கள் மட்டும் தான்.. “இவர எங்கயோ பாத்த மாதிரி இருக்கே “ என்று யோசித்தவளுக்கு தன் திருமணதிற்கு தாலி எடுத்து குடுத்த குருக்களின் முகம் நினைவு வந்தது..

“ ஆகா அவரா இவரு.. இவரை குத்தகைக்கு எடுத்து இருக்கான் போல “ நினைத்து கொண்டே “ ஏன் திவா உங்க அண்ணன்கு ஆள் நடமாட்டம் இருக்குற கோவிலே எதுவும் தெரியாதா ?? ” என்றாள் நக்கலாக..

(நல்ல கேள்வி மித்ரா)

இதை கேட்டதும் மனோவின் முகம் மட்டும் இல்லை அண்ணன் தம்பி நால்வரின் முகமும் கருத்து சிறுத்தது.. “ சரி சரி நான் எதுவும் சொல்லல பா.. உடனே எல்லாம் சோக கீதம் பாடாதிங்க..” என்று கூறவும் மற்ற மூவரும் தங்களை இயல்பாக்கி கொண்டனர் மனோவை தவிர..

மித்ரா கண்கள் மூடி “ கடவுளே, எனக்கு ஏன் இவ்வளோ குழப்பம்?? எல்லாரும் என்கிட்டே எதையோ மறைக்கிறாங்க.. என் அப்பா அம்மா எங்க இருக்காங்கனே தெரியல.. என் புருஷன் சொல்லுறதை நம்புறதா இல்லையானே எனக்கு புரியல.. நான் என்ன செய்யட்டும்.. எனக்கு ஒரு நல்ல வழிய காட்டுங்க “ என்று மனமுருக வேண்டினாள்..

மனோவோ “ ஆண்டவா எவ்வளோ சீக்கிரம் எல்லா பிரச்சனையும் தீரனுமோ அவ்வளோ சீக்கிரம் தீரனும்.. அதுக்கான தைரியமும் தெம்பும் நீங்க தான் குடுக்கனும்.. ஆனா எந்த காரணத்தை கொண்டும் என் மித்துவுக்கு எந்த ஆபத்தும் வர கூடாது.. நானும் என் மித்துவும் சந்தோஷமான வாழ்கை ஆரம்பிக்கணும்.. என் தம்பிங்க வாழ்க்கை நல்லா இருக்கனும் “ என்று  அவனும் முழுமனதுடன் வேண்டினான்..

மற்றவர்களும் தங்களுக்கு என்ன இறைவனிடம் தேவையோ அதை வேண்டி கொண்டு இருக்கும் பொழுதே மருது “ தம்பி அரை மணி நேரம் ஆச்சு” என்று கூறவும் மனோகரன் அனைவரையும் கிளம்புமாறு கூறினான்.. அவனது உடன் பிறப்புகளோ மறுபேச்சு பேசாமல் அவன் சொல்வதை கேட்டனர்..

ஆனால் மித்ரா “ கோவில்ல கொஞ்ச நேரம் உக்காந்திட்டு போகலாம் “ என்றாள்..

“ உக்காரலாம் வீட்ல போயி “ என்று கட்டளை இடுவது போல கூறிவிட்டு அவளை கைகளை பிடித்து அழைத்து சென்றான்.. இல்லை இல்லை இழுத்து சென்றான்..

 

இது போதாதா மித்ராவின் கோபத்தை தூண்ட..” இந்த அரை மணி நேரத்துக்கு தானா இவ்வளோ அலம்பல்.. ச்சே இதுக்கு இவன் தம்பிங்க வேற ஜால்ரா.. “ என்று முனுமுனுத்து கொண்டே வந்தாள்..

மனோ “ என்ன முனுமுனுப்பு “

“ ஹ்ம்ம் !! என் தலை விதிய நினைச்சு நானே நொந்துகிட்டேன்”

“ ஏன் உன் தலை விதிக்கு என்ன ??”

“ மனு !! தயவு செஞ்சு என்னைய தம்பிங்க முன்னால பேச வைக்காத.. ஒழுங்கா வண்டிய எடு “

(இல்லாட்டினாலும்………..)

இதற்கு மேல் அவளிடம் வாங்கிகட்டி கொள்ள மனோ விரும்புவானா என்ன ?? கிருபா “ அண்ணா  ஒரு ஐஸ் கிரீம் ஆவது வாங்கிட்டு போகலாம் “ என்று கூறவும் சரி என்று ஆமோதித்த மனோகரன் ஒரு பெரிய ஐஸ் கிரீம் பார்லரை பார்த்து வண்டியை நிறுத்தினான்..

ஆனால் அவர்கள் காரின் முன்பு நின்று இருந்த காரை பார்த்ததும் மனோவின் முகம் அப்படியே திகைத்து.. ஆனால் ஒரு நொடி தான்.. புயலென செயல் பட்டான்..

(யாரது ????)

“கிருபா ஒரு பாமிலி பேக் வாங்கிட்டு வேகமா வா “ என்று கூறிக்கொண்டே

“ மித்து உன் மெட்டி சேலை மாட்டி இருக்கு பாரு “ என்று கூறி மித்ரா அதை பார்க்க குனியவும் முன்னே இருந்த காரில் இருந்து ஒரு மனிதன் இறங்கவும் சரியாக இருந்த்து..

மனோவும் திவாவும் அந்த நபரையே இமைக்காமல் பார்த்து கொண்டு இருந்தனர்.. மனோவின் முகம் ஒரு நொடி அந்த மனிதனை எரித்துவிடுவது போல பார்த்தது.. ஆனால் தன் உணர்வுகளை அடக்கி கொண்டான்..

“ லூசு!! சேலை எங்க மாட்டி இருக்கு ?? கிறுக்கன் “ என்று திட்டியவாறே நிமிர்ந்தவள் மனோவின் முகம் கண்டு பேச்சிழந்தாள்.. அவன் கண்களில் தெரிந்த கோவம்.. முகத்தில் இருந்த கடுமை.. திவாவை பார்த்தால் அவனோ ஒருவித திகிலோடு இருந்தான்..

அவள் இன்னதென்று உணர்வதற்குள் கிருபா வேகமாக வந்தான்.. அவன் வந்து அமரவும் மனோ மின்னலென வண்டியை கிளப்பினான்.. அவன் கார் ஓட்டிய வேகத்தை கண்டு மித்ரா பயந்து போய் அமர்ந்து இருந்தாள்.

அதே நேரம் கிருபா “ அண்ணா அங்க “ என்று எதுவோ கூற வரவும் திவா அவனை பார்த்த ஒரு பார்வையில் அடங்கினான்.. சிறிது தூரம் வந்த பிறகே மனோகரன் வண்டியின் வேகத்தை குறைதான்.. தன் அலைபேசியை எடுத்து யாருக்கோ அழைத்தவன் “ நான் என்ன சொன்னேன் நீங்க என்ன பண்ணி இருக்கீங்க ??”

“ நல்லா விசாரிக்க சொன்னேனே.. இப்போ… இப்போ… ஒரு நிமிசத்துல எல்லாம் கெட்டு போயிருக்கும்.. உங்களை நம்பி ஒரு வேலை குடுத்தா ஒழுங்கா செய்ய மாட்டிங்களா?? இனிமே இப்படி ஒரு தடவ நடந்தது நான் மனுசனா இருக்கமாட்டேன் “ என்று கூறி போனை வைத்தவனையே அதிர்ந்து பார்த்தாள் மித்ரா..

( நீ எப்பயும் தெளிவாவே  பேசமாட்டியா மனோ )

மனோகரனோ இல்லை அவனது தம்பிகளோ யாருக் எதுவும் பேசவில்லை வீடு திரும்பும் வரை.. வீட்டிற்கு வந்து இறங்கவும் மித்ரா “ என்னைய கொஞ்சம் தனியா இருக்க விடுங்க” என்று கூறி தோட்டத்தில் இருக்கும் இருக்கையில் சென்று அமர்ந்து விட்டாள்.. அவளுக்கு தலையே வெடித்து விடும் போல இருந்தது..

இதை மனோகரனும் உணர்ந்து இருப்பான் போல எதுவும் கூறாமல் அங்கு காவலுக்கு நின்று இருந்த ஒருவனிடம் கண் காட்டி விட்டு உள்ளே சென்று விட்டான்..

பிரபா தான் சிறிது நேரம் கழித்து வந்தவன் “ அண்ணி ஐஸ் ஏற்கனவே மெல்ட் ஆகிடுச்சு அண்ணி.. “ என்றான்..

( அவன் கவலை அவனுக்கு )

அவன் முகத்தில் என்ன கண்டாளோ “ உன் அருமை அண்ணன் தானே டா கார்டன்ல உக்காந்து சாப்பிடலாம் சொன்னாரு “ என்றாள்.. இதை இவள் இப்படி கூறவேண்டும் என்று தானே மனோகரன் தன் தம்பியை தூது அனுப்பியதே..

மித்ரா இவ்வாறு கூறவும் அடுத்த ஐந்தாவது நிமிடம் அனைவரும் கைகளில் பாத்திரங்களோடு அங்கே இருந்தனர்.. மனோகரனை ஒரு பார்வை பார்த்துவிட்டு எதுவும் கூறாமல் மித்ராவும் அனைவரோடும் உண்ண அமர்ந்தாள்..

(மனோ உனக்கு அடுத்த ஆப்பு ரெடி )

“ என்ன சொல்ற ?? எப்படி எல்லாம் ரெண்டு நாளுல நடந்து இருக்க முடியும் ?? ச்சேய் இது கூட உன்னால உருப்படியா செய்ய முடியாதா ?? அறிவில்ல.. முக்கியமான வேலைன்னு தானே நான் ஊருக்கு போனேன் “ என்று காட்டு கத்தலாக கத்தி கொண்டு இருந்தான் சுந்தர்..

(இது யாரு புது என்ட்ரி ??)

………

“எந்த காரணமும் எனக்கு தேவை இல்லை.. நான் என்ன சொல்லிட்டு போனேன்.. எப்டி இந்த சுந்தர் கண்ணுல மண்ணை தூவ எவனுக்கு தைரியம் வந்தது ??”

“ தெரியல…. தெரியல… எது கேட்டாலும் தெரியல… உங்க எல்லாருக்கும் சம்பளம் குடுக்கிறதே சுத்த வேஸ்ட்.. இன்னும் ரெண்டு மணி நேரம் டைம் தரேன்.. அதுக்குள்ள எனக்கு முழு விவரமும் வந்தாகணும் “ என்று கூறிவிட்டு போனை தூக்கி போட்டு உடைதான் சுந்தர்..

(அட நீயும் தெளிவா பேசமாட்டியா டா )

“ எல்லாம் தின்னுட்டு தின்னுட்டு தடிமாடு மாதிரி இருக்கானுங்க ஆனா வேலைய ஒழுங்கா செய்யுறது இல்லை.. ச்சே வெண்ணை திரண்டு வர நேரத்துல தாளி உடைஞ்ச கதையா போச்சே” என்று தன் போக்கில் கோபத்தில் பேசி கொண்டிருந்தவனை

“ என்னங்க சாப்பாடு எடுத்து வச்சு இருக்கேன் “ என்ற அவனது மனைவி நளினாவின் குரல் மேலும் எரிச்சல் படுத்தியது.. “ ஆமா டி… மனுஷன் இருக்குற டென்சன்ல இப்ப சாப்பாடு தான் முக்கியம்.. போ.. போய் நீயே கொட்டிக்கோ.. வந்துட்டா… உன்னைய எத்தன தடவை சொல்லி இருக்கேன் என் முன்னால வராதன்னு “ என்று கூறி அவளது கைகளை பிடித்து முறிக்கினான் சுந்தர்.

(சரி பின்னால வரலாமா ??)

“ ஏங்க இப்ப என்ன தப்பா சொல்லிட்டேன்.. “ என்று விசும்பினாள் நளினா.. “ நீ எதுவும் தப்பா சொல்லல டி.. எல்லாம் எங்க அப்பா பண்ண தப்பு.. போயும் போயும் உன்னைய எனக்கு கட்டி வச்சாரு பாரு.. அது தான் பெரிய தப்பு “

“  அதுக்கு நான் என்ன செய்வேன்.. கல்யாணத்துக்கு நீங்களும் தானே சரி சொன்னிங்க.. அதுவும் இல்லாம இப்ப அதை பத்தி பேசி என்ன ஆகபோது.. சொல்லுங்க.. நம்ம பொண்ணுக்கே இன்னும் நாலு அஞ்சு வருசத்துல கல்யாணம் செய்யணும்” எனவும் அந்த சுந்தருக்கு எங்கிருந்து தான் அத்தனை கோவமும் ஆங்காரமும் வந்ததோ தெரியவில்லை..

“ஏய் !!! என்னடி எனக்கு வயசு ஆயுடுச்சுன்னு சொல்லாம சொல்லறியா ?? என்ன திமிர் கூடி போச்சா..?? என்னைய பத்தி உனக்கு நல்லா தெரிஞ்சும் இவ்வளோ தைரியமா பேசுற.. என்ன டி குளிர் விட்டு போச்சு போல “ என்று கூறியபடி தன் வாயில் சிகரட்டை வைக்கவும் நளினா  

“ ஐயோ வேணாங்க.. தயவு செஞ்சு நான் சொல்லுறதை கேளுங்க.. நான் சாதரணமா தான் சொன்னேன்.. இத்தனை வருச்சதுல உங்களுக்கு எதிரா நான் ஏதாவது செஞ்சு இருக்கேனா ?? இல்லையே.. ஆனா இப்ப நீங்க செய்யுற காரியம் ரொம்ப தப்புங்க.. நம்ம வீட்டுலையும் ஒரு பொண்ணு இருக்கு “ என்று கரகங்கள் கூப்பி சுந்தரை பார்த்து அழுதாள்..

சுந்தர் அமைச்சர் தர்மதுரையின் அருந்தவப் புதல்வன்.. பெயருக்கு ஏற்றவாறே இந்த காலத்திலும் அரசியலில் நேர்மை, நியாயம், என்று அனைத்திற்கும் முன் உதாரணமாக திகழும் மனிதர் தான் தர்மதுரை..

ஆனால் அவள் பெற்ற புதல்வனோ நேருக்கு மார்.. நேர்மை என்றால் கிலோ என்ன விலை அது எங்கு விற்கிறது என்று கேட்பான்.. ஆனால் தந்தையின் முன்பு நல்ல மனிதன் போல நாடகமாடி விடுவான்.. தர்மதுரை தன் வாழ்வில் செய்த ஒரே தவறு தன் தங்கை மகளான நளினாவை தன் மகனுக்கு திருமணம் செய்து வைத்தது..

சொந்தம் விட்டு போக கூடாது, சொத்து விட்டு போய்விட கூடாது என்றெல்லாம் எண்ணியே இவ்வாறு செய்தார்.. ஆனால் இயல்பிலேயே மிகவும் சாதுவான நளினாவோ சுந்தரை மணந்து மிகவும் பாடு பட்டு விட்டாள்.. இன்னமும் பட்டு கொண்டும் இருக்கிறாள்.. இந்த கொடுமைகளுக்கு நடுவில் ஒரு பெண் பிள்ளை வேறு.

அந்த ஒரு காரணத்திற்காகவே தன் கணவன் செய்யும் அனைத்து அநியாயங்களையும் கண்டும் காணாமல் பொருத்து கொண்டு போகிறாள்.. ஆனால் இப்பொழுதோ அவன் செய்கைகள் எல்லாம் மிகவும் மோசமாக மாறிவிட்டது..

தன் மாமனாரிடம் கூறலாம் என்றால் எங்கே தன் மகனின் சுயரூபம் தெரிந்து அவரின் உடல்நிலை முடியாமல் போகுமோ என்ற பயம் வேறு.. மறுபுறம் கணவன் உயிரையே வாங்கிவிடுவான் என்ற நடுக்கம் வேறு.. இதெல்லாம் நளினாவின் வாயை அடைத்து வைத்து இருந்தது..

 

“மித்து இன்னும் எவ்வளோ நேரம் இங்க இருக்க போற?? பனி விழ ஆரம்பிக்கிறது” என்றான் மனோகரன் அவளது கரம் பற்றி..

“ம்ம்ச் என்னைய விடு நான் கொஞ்ச நேரம் இங்கயே இருக்கேன்.. “ என்றாள் எரிச்சலான குரலில்..

(சரி )

“ சரி நானும் இங்கயே இருக்கேன் “ என்று கூறி அவளிடமே அமர்ந்து கொண்டான்.. “ உனக்கு என்னதான் பிரச்சனை?? என்னைய கொஞ்ச நேரம் தனியா இருக்க விடுன்னு சொல்றேன்ல மனு.. ப்ளீஸ் ட்ரை டூ அண்டர்ஸ்டாண்ட் மீ” என மித்ரா சற்றே வருத்தம் நிறைந்த குரலில் கூறவும்

மனோகரன் “ உனக்கு என்ன ஆச்சு மித்து ?? ரெண்டு நாலா அமைதியா இருந்த.. சரின்னு நானும் எதுவும் சொல்ல.. இன்னைக்கு வெளிய போய்ட்டு வந்தா கொஞ்சம் உனக்கு ரிலாக்ஸ்டா இருக்கும்னு கோவிலுக்கு போய்ட்டு வந்தா அப்புறமும் இப்படியே இருக்க ??

(ராசா நீ கோவிலுக்கு கூட்டிட்டு போய்ட்டு வந்த அழகை நாங்களும் தான் படிச்சோம் )

அவனை முறைத்து பார்த்தவள் “நிஜமாவே உனக்கு புரியலையா நான் ஏன் இப்படி இருக்கேன்னு ?? எனக்கும் கண்ணு காது எல்லாம் நல்லா தானே வேலை செய்யுது.. நடந்ததை எல்லாம் நானும் பார்த்துட்டு தானே வந்தேன்.. என் மனசுல எழும்புற எல்லா கேள்விக்கும் உன்கிட்ட பதில் இருக்கா சொல்லு ??”

“இல்ல மித்து.. அது வந்து…”

“ போதும் மனு.. எதுவும் சொல்லாத.. உன்கிட்ட எல்லா பதிலுமே இருக்கு.. ஆனா உனக்கு சொல்ல தான் மனசு இல்ல.. ஆனா என்னைய கொஞ்சம் நினைச்சு பாரேன்.. என் இடத்துல வேற ஒரு பொண்ணு இருந்தா இந்நேரம் இப்படி உன்கிட்ட நின்னு பேசிட்டே இருக்க மாட்டா..”

“ நீ சொல்றது எல்லாம் சரிதான் மித்து.. ஆனா ஒரு விஷயம் யோசனை செஞ்சு பாரு..உன் அப்பா அம்மா என்னைய நம்பி அவங்க பொண்ண கல்யாணம் பண்ணி குடுத்து இருக்காங்க.. உன்னைய என்கிட்டே விட்டிட்டு போய் இருக்காங்கன்னா அவங்களுக்கு என் மேல நம்பிக்கை இருக்குன்னு தானே அர்த்தம்.. அந்த நம்பிக்கை ஏன் உனக்கு என் மேல வரல மித்து ??”

விரக்தியாக ஒரு சிரிப்பை சிரித்த மித்ரா “ எப்படி மனு உன்னால இப்படி ஒரு கேள்வி கேட்க முடிஞ்சது.?? நம்ம கல்யாணம் எப்படி நடந்தது கொஞ்சம் நினைச்சு பாரு.. மறுநாள் கல்யாணம்னு முதல் நாள் வரைக்கும் எனக்கு தெரியாது.. இவன் தான் மாப்பிளைன்னு சொல்லி என் மனசுல அது பதியுறதுக்குள்ள நீ எனக்கு தாலியே கட்டிட்ட”

“ இல்ல மித்து நான் உங்க அப்பா அம்மா கிட்ட ஏற்கனவே…..”

“ எல்லாம் சரி மனு.. அவங்க மேலயும் தப்பு இருக்கு.. நான் இல்லன்னு சொல்லல.. ஆனா கல்யாணம் முடுஞ்சதே.. அதுக்கு அப்புறம் நீ என்ன பண்ணி இருக்கனும்..?? நீயாவது என்கிட்டே எல்லாம் சொல்லி இருக்கணுமா இல்லையா ?? பொண்டாட்டின்னு ஒரு உறவு பேருக்கு.. இதெல்லாம் உனக்கு ரொம்ப சாதரணமா இருக்கா?? ஆனா எனக்கு மனசு எவ்வளோ வலிக்கிதுன்னு எனக்கு தான் தெரியும் “ என்று கூறும் பொழுதே அவளது கண்கள் கலங்க ஆரம்பித்தன..

“ எல்லாமே கொஞ்ச நாளைக்கு தான் மித்து.. சொன்னா கேளு.. வா உள்ள போகலாம்.. இப்படி இந்த நேரத்துல இங்க நின்னு அழுதா பாக்குறவங்க என்ன நினைப்பாங்க.. சொன்னா கேளு மித்து …”

“ ஓ !! உனக்கு மத்தவங்க என்ன நினைப்பாங்கன்னு தான் எந்த கவலையும் இல்லையே.. இப்போ என்ன புதுசா?? நான் கொஞ்ச நேரம் தனியா இருக்கனும்.. நீ போ “

( மறுபடியும் முதல்ல இருந்தா )

அவ்வளோ நேரம் மனோகரன் இழுத்து வைத்து இருந்த பொறுமை எல்லாம் காற்றோடு பறந்தது.. 

“ ஏய் !! நானும் உன்கிட்ட பொறுமையா பேசிகிட்டு இருக்கேன் நீ என்ன ரொம்ப போற.. இப்ப உள்ள வரப்போறியா இல்லையா ?? ” என்றான் கோவத்தில்.. மனோவின் எண்ணம் கோவமாக பேசினால் தன்னிடமே கோவப்பட்டு முறைத்து கொண்டு உள்ளே சென்று விடுவாள் என்று ஆனால் மித்ராவோ

“ போதும் மனு.. நீ கோவமா பேசாத.. ஏற்கனவே என் மனசு ரொம்ப நொந்து போய் இருக்கேன்.. உன்னால எனக்கு பிரச்சனையா ?? என்னால உனக்கு பிரச்சனையா ?? இந்த கல்யாணம் ஏன் இப்படி நடந்தது ??”

“முதல்ல இதை கல்யாணம்னு ஏத்துக்கவும் முடியாம உதறி தள்ளிட்டு போகவும் முடியாம நான் எனக்குள்ளவே ரொம்ப போராடிட்டு இருக்கேன்.. இதுல நீ வேற.. “ என்று எதுவோ கூற வந்தவள் பட்டென்று சுதாரித்து வேகமாக உள்ளே சென்று விட்டாள்..

மித்ரா பேசியதை எல்லாம் நெஞ்சில் ஒரு வலியோடு கேட்டு கொண்டு இருந்தவன் இறுதியில் என்ன கூற வந்தாள் என்று அவனுக்கு விலங்கவில்லை..

“ என்ன சொல்ல வந்தா ?? ச்சே ரொம்ப வருத்த படுறாளே.. நான் பார்த்த மித்து, நான் பார்த்ததுமே என் மனசை பறிகுடுத்த மித்து இப்படி இல்லையே.. ஒருவேளை என்னால தான் எல்லாமா ?? ஆனா நான் இவளுக்கு எந்த கெடுதலும் பண்ணலையே “ என்று என்னும் பொழுதே அவன் அலைபேசி சிணுங்கியது…

காதலுக்கும் கல்யாணத்திற்கும்

நடுவில் நான்

விருப்பிற்கும் வெறுப்பிற்கும்

இடையில்  நீ

நிஜமாக நீ இருக்க – உன்

நிழலாக நானிருப்பேன்..

கண்ணை காக்கும் இமை – போல

உன்னை தொடர்ந்தே நான் வருவேன்

ஏழேழு ஜென்மத்திற்கும்… 

                     மாயம் – தொடரும்             

           

Advertisement