Advertisement

               மாயவனோ!! தூயவனோ!! – 4 

 மனோகரன் மித்ரவிடம் கூறிய இரண்டு நாட்கள் அன்றோடு முடிந்தது.. ஆனால் அழைத்து செல்வதாய் கூறிய அவனை மட்டும் இன்னும் காணவில்லை..

ஒருவேளை தன்னை அன்று சாப்பிட வைப்பதற்காக பொய் கூறினானோ என்றெல்லாம்நினைக்க தொடங்கினாள் மித்ரா.

மனோகரன் இல்லாத இரண்டு நாட்களும் மித்ரா நிறைய யோசித்தாள். அங்கு அவனது வீட்டிற்கு சென்று என்னென்ன செய்ய வேண்டும், எப்படி பேசவேண்டும் என்றெல்லாம் யோசித்து யோசித்து தன்னை தயார் படுத்தி வைத்து இருந்தாள்.

ஆனால் தன் முயற்சிகள் எல்லாம் எங்கே தோல்வி அடைந்து விடுமோ என்ற பயமும் ஒருபுறம் அவளுக்கு இருந்தது.. போதாத குறைக்கு அவள் கணவனும் அன்று வருவதாய் கூறி இன்னும் வரவில்லை.. இதெல்லாம் சேர்ந்து மனதில் ஏனோ சொல்ல முடியாத நடுக்கத்தை உணர்ந்தாள்..

இந்த இரண்டு நாட்களில் அவள் மற்றொன்றையும் சிந்திக்க தவறவில்லை அது மனோகரன் அவளிடம் தன் காதலை கூறியது.. “ காதலிச்சு கல்யாணம் பண்ணேன்னு சொன்னான்.. ஆனா இப்பயும் அந்த காதல் அவனுக்குள்ள இருக்குமா ?? பாத்தா அப்படியா இருக்கு.. எந்நேரமும் கோவம், அதிகாரம். இது மட்டும் தான் அவனுக்கு தெரியும் போல. பாவம் அவன் தம்பிங்க எல்லாம் எப்படி தான் இவன்கிட்ட இருந்து சமாளிக்கிறாங்களோ “ என்று எண்ணினாள்.

மித்ராவின் மனதில் மனோகரனை பற்றி தோன்றியது எல்லாம் ஒன்றே ஒன்று தான். மனோகரன் கடுமையானவன், முசுடு, திமிர் பிடித்தவன். அவனுக்கு அன்பாய் இருக்க தெரியாது. எந்நேரமும் அனைவரையும் தன் இஷ்டத்திற்கு ஆட்டி படைப்பவன்.. அவனிடம் இத்தனை வருடங்களாக அவன் தம்பிகள் மாட்டிகொண்டு என்னென்ன கொடுமைக்கு ஆளாகினரோ.

ஆகையால் மித்ரா அங்கே சென்று அவர்களை எல்லாம் தன் பக்கம் இழுத்து இந்த மனோகரனை பழி வாங்க வேண்டும் என்று முடிவு செய்து இருந்தாள்.   “ என் குடும்பத்துல இருந்து என்னைய பிரிச்சு இப்படி தனியா இருக்க வச்சல.. இரு இரு அங்க வந்து நான் யாருன்னு உனக்கு புரிய வைக்கிறேன் “ என்று மனதிற்குள் சூழுரைத்து கொண்டாள்..

இப்படி எல்லாம் மித்ரா திட்டம் போட்டு இருக்க, அதை நிறைவேற்றும் வழி தான் அவளுக்கு இன்னும் கிடைக்கவில்லை..

“ ச்சே இவன் சொன்னதை நம்பி இருக்கவே கூடாது.. ஒரு நிமிசத்துல என்னைய ஏமாத்திட்டான். ஐயோ கடவுளே நான் கடைசி வரைக்கும் இங்கேயே  தான் இருக்கணுமா ?? எனக்கு ஒரு விடிவு இல்லையா “ என்று மனதிற்குள் அவனை திட்டிக்கொண்டும், இறைவனிடம் வேண்டிக்கொண்டும் இருந்தாள்..

அப்பொழுது தான் உள்ளே கார் வந்து நிற்கும் ஓசை கேட்டது.. “ யாராய் இருக்கும் “ என்று எண்ணியவள் “ ஆமாமா இங்க அந்த துறைய தவற வேற யார் வர போறா?? இன்னைக்கு இருக்கு அவனுக்கு..” என்று கறுவிக்கொண்டாள்..

அவள் நினைத்தது போல வந்தது மனோகரன் தான்.. அவனுக்கும் தெரியும் தான் மித்ரா கோவமாய் இருப்பாள் என்று. அறைக்குள் நுழையும் பொழுதே சமாதான கொடியை பறக்கவிட்டபடி வெள்ளை கோடி வேந்தனாக வந்தான்..

“ சாரி சாரி மித்து.. நான் மார்னிங் வர ட்ரை பண்ணேன் மா. பட் முடியல.. அதுவும் இல்லாம அங்கே வீட்டுல வேற இப்போ ஈவ்னிங் தான் எல்லா வேலையும் முடிஞ்சது.. நாளைக்கு சண்டே தம்பிங்க எல்லாம் வீட்டுல இருப்பாங்க. சோ நம்ம நாளைக்கு போகலாம் “ என்று அவள் கேட்கும் முன்னே அனைத்தையும் கூறிவிட்டான்.

எதோ பிள்ளைகள் பெரியவர்கள் கேட்கும் முன்னே அனைத்தையும் ஒப்பிப்பது போல தோன்றியது அவளுக்கு. மனோகரனை சிறு பையன் போலவும், அவன் முன் அவள் கோவமாக கையில் கம்புடன் நிற்பது  அவள் அறியாமல் அவள் மனம் கற்பனை செய்து பார்த்தது. அவ்வளோதான் அடக்க மாட்டாமல் சிரித்து விட்டாள்..

மித்ரா ஏன் சிரிக்கிறாள் என்று விளங்கவில்லை அவனுக்கு. வியப்பாக இருந்தது. இங்கு வந்து இத்தனை நாளில் இன்று தான் சிரிக்கிறாள். அவள் தன் வயிற்றை பிடித்துகொண்டு சிரிப்பதை ரசித்து பார்த்தான்.

ஆனாலும் அவள் சிரிப்பது நிற்பதாய் இல்லை. இமைகள் மூடி சிரித்தவள் கண்கள் திறப்பதும், கண் முன்னே மனோகரனை கண்டதும் மீண்டும் அவள் கற்பனை தலை தூக்குவதும் மீண்டும் சிரிப்பு வருவதும் இப்படியே சில நிமிடங்கள் கடந்தன.

 மனோகரன் பொருத்து பார்த்தவன்  “ மித்து ஏன் சிரிக்கிற ?? ” என்று கேட்டே விட்டான்..    

“ ஹா!! ஒன்னுமில்லை.. சரி சொல்லு நம்ம எப்ப கிளம்பனும் ?? ” என்று சிரிப்பினூடே கேட்டாள்..

“ மித்ரா ஒன்னு சொல்லிட்டு சிரி.. இல்ல சிரிச்சு முடிச்சிட்டு பேசு.. மணி இப்பயே பதினொன்னு ஆச்சு. நாம காலையில நாலு மணிக்கு கிளம்பனும்.” என்றான் அழுத்தமாக..

அவன் மித்ரா என்ற அழைப்பே அவளை சுதரிப்பிற்கு கொண்டு வந்தது.. அதிலும் அவன் நாலு மணி என்று கூறவும் அவனை வித்தியாசமாக பார்த்தாள்.

“ வாட் நாலு மணியா ?? என்ன அர்த்த ஜமாத்துல உன் வீட்டுக்கு கூட்டி போற ?? கல்யாணம் தான் பொழுது விடியுற முன்ன நடந்தது.. இதுவும் இப்படியா ?? ” என்றாள் அவனை பார்த்து கேள்வியாக..

“ ஹ்ம்ம் ஆமா. ஏன் எதுக்குன்னு எல்லாம் கேட்காத.. மூணு மணிக்கு எழுந்து ரெடி ஆகணும். நானும் கொஞ்ச நேரம் தூங்கனும். அதுக்கு முன்ன உன்கிட்ட கொஞ்சம் பேசணும்” என்றான் முகத்தை ஒருமாதிரி வைத்து.

அவன் என்ன மன நிலையில் இருக்கிறான் என்பதையே அவள் பொருட்படுத்தாமல் “என்ன மூணு மணிக்கு முளிக்கனுமா ?? இந்த குளிருல அந்நேரம் குளிக்க வேற செய்யணுமே?? இங்க பாரு அதெல்லாம் ஒன்னும் வேணாம். காலையில ரிலாக்ஸ்டா கிளம்பலாம். இப்ப நீ தூங்கு “ என்றாள்..

“ ஏய் உனக்கு ஒரு தடவ சொன்ன புரியாதா.. நம்ம இங்க இருந்து நாலு மணிக்கு கிளம்புனா தான் அங்க போயி சேர எட்டு மணியாவது ஆகும்.. நீ குளி குளிக்காம கூட  வா. அதை பத்தி எல்லாம் எனக்கு கவலை இல்ல “ என்றான் கோவமாக..

“ இப்ப ஏன் இவன் இப்படி கத்துறான் “ என்று எண்ணியவள் “ எதுவோ பேசணும் சொன்ன ?? ” என்றாள் குரல் கம்ம..

“ ஹ்ம்ம் “ என்று தன் மூச்சை இழுத்து விட்டவன். அங்கு இருந்த நாற்காலியில் சாய்ந்து அமர்ந்தான்.. அப்பொழுது தான் அவன் முகத்தை கவனித்தாள். மிகுந்த களைப்பில் வந்து இருப்பான் போல..

அவன் முகத்தை பார்த்ததும் மித்ராவிற்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை.. அமைதியாக சமையலறை சென்று அவனுக்கு சூடாக பால் எடுத்து வந்தவள் அவன் முன்னே அமைதியாக நீட்டினாள்.. மனோகரனோ அவளை ஆச்சரியமாக பார்த்தான்..

“ நானும் மனுசி தான் “ என்று அழுத்தமாக கூறியவளை ஒரு புன் சிரிப்புடன் பார்த்தபடி அவள் குடுத்த பாலை வாங்கி அருந்தியவன் வாயை வைத்துகொண்டு சும்மா இருந்து இருக்கலாம்..

“ மித்து பர்ஸ்ட் நைட்டுல கூட நீ எனக்கு பால் குடுக்கல “ என்றான் கிண்டலாக.. இதை கேட்டாள் அவள் சும்மா இருப்பாளா என்ன ?? அத்தனை நேரம் அமைதியாக பாவம் என்று இருந்தவளுக்கு மீண்டும் கோவம் வந்து விட்டது..

“ நீ என்ன எல்லாரையும் போலையா என்னைய கல்யாணம் பண்ண ?? யாருக்கும் தெரியாம தானே பண்ண ?? ” என்று வெடுக்கென்று கேட்கவும் அமைதி ஆவது அவன் முறை ஆனது..

மித்ராவோ மனதிற்குள் “ ச்சே எப்படி கோவமா பேசுனாலும் உண்மைய மட்டும் சொல்ல மாட்டுறானே?? இவன் கிட்ட இருந்து எப்படி தெரிஞ்சுக்கிறது ?? ” என்று யோசித்தவள் அவன் “ மித்து “ என்ற அழைப்பில் தான் தன் சிந்தனையில் இருந்து கலைந்தாள்..

“ மித்து !! இப்படி உக்கார். உன்கிட்ட கொஞ்சம் பேசணும்..” என்றான் நாற்காலியை காட்டி.. அவளோ மணியை பார்த்தாள்.. இரவு 12-ஐ நெருங்கிக்கொண்டு இருந்தது.

“ என்ன மித்து உனக்கு தூக்கம் வருதா??” என்றன் மென்மையாக.. மித்ரா இல்லை என்பது போல தலை ஆட்டவும் அவன் பேச தொடங்கினான். இல்லை இல்லை அவள் பாசையில் வகுப்பெடுத்தான்..

அதாவது அங்கு அவன் வீட்டில் வந்து அவள் எப்படி எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று கூற ஆரம்பித்தான்.. அவனுக்கு புரியவில்லை அவனே வலை விரித்து அதில் அவனே விழ போகிறான் என்று..

“ இங்க பாரு மித்து நான் சொல்லுறதை எல்லாம் கவனமா கேளு என்ன “ என்று பீடிகை போட்டு பேச்சை ஆரம்பித்தான்..

“ இவன் வேற எப்ப பாரு மித்து மித்துன்னு..” என்று எண்ணியவள் முகத்தை சீரியசாக வைத்து அவன் கூறுவதை கேட்பவள் போல நடித்தாள்.. அதே நேரம் அவன் பேசுவதில் தனக்கு சாதகமான விஷயங்கள் என்ன என்று கவனிக்கவும் தவறவில்லை..

“ மித்து நீ இங்க பேசுறது போல எல்லாம் அங்க எல்லார் முன்னாடியும் என்னைய நீ வா போன்னு பேச முடியாது” என்று அவன் முதல் கண்டிசனை போட்டான்..

மித்ராவோ “ ஆமாமா இவன் பெரிய மகராஜா வேற எப்படி இவனை பேசுவாங்க?? ” என்று எண்ணியவள் “ பிராண நாதா “ என்று அழைத்தாள். முதலில் இவள் என்ன சொல்கிறாள் என்று அவனுக்கு புரியவில்லை. அதன் பிறகே அவன் மனதில் பதிந்தது..

கண்கள் பளிச்சிட “ பரவாயில்ல மித்து உனக்கு கற்பூர புத்தி.. சொன்னதுமே புரிஞ்சுகிட்ட.. ஆனாலும் உனக்கு கிண்டல் கேலி எல்லாம் நிறைய தான் போல “ என்று கூறிய பிறகே அவள் சிந்தித்தாள்.

வீட்டிலும் தன் தாய் தந்தையிடம் இப்படி தான் வார்த்தைக்கு வார்த்தை கேலி கிண்டல் பேசுவாள்.. இவனிடமும் அதேபோல எந்த வித்தியாசமும் இல்லாமல் பேசுகிறாள் என்றால் இந்த உறவை அவள் ஏற்றுக்கொண்டாளா  என்று அவள் மனம் அவளிடம் கேள்வி கேட்டது..

அவள் மனம் கேட்ட கேள்வியில் அவளே ஒரு நொடி திடுக்கிட்டாள்.. ஆனாலும் அதை தள்ளி வைத்து விட்டு அவன் பேச்சில் தன் கவனத்தை திருப்பினாள்..

மனோகரனோ “ நம்ம தனியா இருக்கும் போது நீ எப்படி வேணா பேசிக்கோ மித்து. ஆனா மத்தவங்க முன்னால கொஞ்சம் மரியாதையா பேசு. நான் சொல்றது உனக்கு புரியும்னு நினைக்கிறேன்” என்றான்

“ நா.. நான் எப்படி.. உன்…. உங்களை கூப்பிடுறது “ என்று அங்கு வந்து இத்தனை நாளில் முதல் முறையாக அவனிடம் தயங்கி தயங்கி பேசினாள்.. இந்த மித்ரா அவனுக்கு புதியவள்..

“ என்ன ஆச்சு இவளுக்கு “ என்று எண்ணியவன் “ தம்பிங்க எல்லாம் அண்ணா இல்ல மனோ அண்ணா அப்படின்னு கூப்பிடுவாங்க. ஆபிஸ்ல சார், பாஸ் இப்படி, ப்ரண்ட்ஸ் மனோ, மனோகர் இப்படி கூப்பிடுவாங்க. நீ உனக்கு எப்படி கூப்பிட வருதோ அப்படி கூப்பிடு “ என்றான்.. ஏனோ அவன் குரலில் உற்சாகம் இருப்பது போல தோன்றியது மித்ராவிற்கு..

“ ஹ்ம்ம் “ என்று யோசித்தவள் “ சரி அப்புறம் “ என்றாள் கதை கேட்பவள் போல.

“ அப்புறம். உனக்குன்னு அங்க நிறைய பொறுப்புகள் இருக்கு மித்ரா.. எல்லாமே உடனே உனக்கு புரியாது தான். ஆனா இத்தனை வருஷமா அது ஒரு பெண் இல்லாத வீடு..  இப்போ நீ வர. எதுவுமே சட்டுன்னு அங்க மாறாது. ஆனா நீ தான் கொஞ்சம் பொறுமையா எல்லாத்தையும் ஹான்டில் பண்ணனும் “ என்றவன் இறுதில் “ எனக்காக “ என்று கூறி முடித்தான்..

“ எங்க அப்பா அம்மா எல்லாம் இறந்த அப்புறம் அங்க பசங்க நாங்க நாலு பேரு மட்டும் தான். சோ கொஞ்சம் உனக்கு செட் ஆகுறது கஷ்டம் தான். ஆனா தம்பிங்க எல்லாம் நல்ல பசங்க. சொன்னா புரிஞ்சுப்பாங்க. நீ என்கிட்டே எவ்வளோ ஹார்ட்டா வேணா நடந்துக்க ஆனா அவங்ககிட்ட நல்லவிதமா பழகனும் மித்து” என்றான் கண்டிப்பான குரலில்..

மித்ரா “ நல்லவிதமா தானே பழகிட்டா போச்சு” என்று எண்ணியவள் வேகமாக தலையை உருட்டினாள்..

“ என்னடா இது நம்ம என்ன சொன்னாலும் தலைய தலைய ஆட்டுறா “ என்று யோசித்துக்கொண்டே மேலும் சில பல விஷயங்கள் பேசினான்.. அவளுக்கு தூக்கம் தாங்கவில்லை..

“ ஷ்ஷ்ஷ்..யப்பா போதும்” என்று கூறியவள் தன் கண்களை கசக்கி விட்டு “ ப்ளீஸ் இதுக்கு மேல கிளாஸ் எடுக்காத.. என்னால முடியல.” என்றவள் “ எனக்கு தெரியும் நான் எப்படி நடந்துக்கணும்னு. கவலை படாத என் டார்கெட் எல்லாம் நீ தான். உன் தம்பிங்க இல்லை “ என்று கூறிவிட்டு சென்று படுத்துவிட்டாள்..

“ அடிப்பாவி.  இவ்வளோ நேரம் நல்லவ மாதிரி கேட்டா.. கடைசியில் இப்படி சொல்லிட்டு போறா?? அவ டார்கெட் நானா?? “ என்று எண்ணியவனுக்கு சிரிப்பு தான் வந்தது “ ராங்கி பிடிச்சவ “ என்று செல்லமாக கடிந்து கொண்டு அவனும் சென்று படுத்தான்..

“ இங்க பாரு முதல்ல நீ முழுச்சு ரெடி ஆகி அப்புறம் என்னைய எழுப்பு. எனக்கு தூக்கம் ரொம்ப முக்கியம் “ என்று கூறிவிட்டு படுப்பவளை என்ன செய்வது என்று தெரியாமல் படுத்தான் மனோகரன்..

“ இங்கயே இவ இப்படி ஆடுறா.. இதுல அங்க வந்து என்ன என்ன செய்ய போறாளோ.. நீ என்ன மனசுல நினைச்சாலும் என்னைய மீறி உன்னால எதுவும் செய்ய முடியாது மித்து “ என்று எண்ணியவரே உறங்கிவிட்டான்..

கதிரவன் இன்னும் தன் கரங்களை நீட்டி பூமி பெண்ணை தழுவ வில்லை.. இன்னும் வான் மேகங்கள் எந்த ஒப்பனையும் செய்யாமல் கருமையாகவே இருந்தன..  ஆனால் மித்ராவோ தன் அணைத்து ஒப்பனைகளையும் முடித்து தயாராய் தன் கணவனின் விழிப்பிற்கு காத்து இருந்தாள்..

“ பெரிய இவன் மாதிரி மணிகணக்கு பேசினான்.. இப்ப பாரு கும்பகர்ணனுக்கு நேரடி வாரிசு போல தூங்குரதை.. “ என்று எண்ணியவளுக்கு நேற்று அவனின் சோர்ந்த முகமே நினைவு வந்தது..

“ பாவம் நிறைய வேலை இருக்கும் போல..” என்று எண்ணிய தன் மனதை ஒரு குட்டு குட்டினாள்..” என்ன நீ எப்ப பாரு இந்த உம்மணா மூஞ்சிக்கே சப்போர்ட் பண்ணுற?? ” என்று தன் மனதை கேள்வி கேட்டு அடக்கியவள் அவனை எழுப்பலாம் என்று அருகே சென்றும் விட்டாள்.

ஆனால் என்ன சொல்லி எப்படி எழுப்பவது?? மனோகரனோ அயர்ந்து உறங்கி கொண்டு இருந்தான்.. அவனை எழுப்ப முடிவு செய்தவள் மலங்க மலங்க விழித்தபடி அவனருகில் நின்று இருந்தாள்.. காதல் மனைவியாக இருந்தால் உரிமையாக அவனை தொட்டு நெற்றி முடி கலைந்து முத்தமிட்டு எழுப்பலாம்.. இவர்கள் திருமணம் தான் எந்த வகை என்றே அவளுக்கு விளங்க வில்லையே..

“ ஹ்ம்ம் “ என்று பெருமூச்சை வெளியிட்டவள் சற்று யோசித்து “ மனு.. மனு ..” என்று அழைத்து அவனது கைகளை தொட்டு லேசாக உசுப்பிவிட்டாள்..

அவனோ அவளது கைகள் மேல் தன் கைகளை போட்டு மறுபுறம் திரும்பி படுக்க புரண்டான் அவ்வளோ தான் “ அம்மா !!” என்ற அலறலில் நன்றாய் உறங்கி இருந்தவனும் அடித்து பிடித்து முழித்தான்..

நடந்தது எல்லாம் இது தான்.. மனோகரன் மித்ராவின் கை மீது தன் கலைகளை அழுத்தமாக சுற்றி புரண்டு படுக்கின்றேன் என்று திரும்பிய வேகத்தில் அவளும் சேர்ந்து விழுந்தால் மெத்தை மீது.. போதாத குறைக்கு மித்ராவின் கைகள் வேறு அவன் அடியில் சிக்கி கொண்டது..

மெத்தையில் அமர்ந்து தன் கைகளை நீவியபடி தன்னை முறைத்து கொண்டு இருந்த மித்ராவை பார்த்து “ ஹேய்!! ஏன் டி இப்படி கத்துன?? கத்துனதும் இல்லாம இப்ப ஏன் என்னைய முறைக்கிற ?? ” என்று தன் தூக்கம் கெட்ட கடுப்பில் கேள்வி கேட்டான்..

“ ஏன் கேட்க மாட்ட?? நீதானே சொன்ன நாலு மணிக்கு எல்லாம் கிளம்பனும்னு.. நீ வேற அசந்து தூங்கிட்டு இருந்த. சரி உன்னைய தொல்லை பண்ணாம நான் முதல்ல ரெடி ஆகிட்டு உன்னைய எழுப்புனா என்னைய இப்படியா தள்ளி விடுவ ?? ” என்று இவளும் பொரிந்து தள்ளினாள்..

“ அட ஆண்டவா விடியும் போதே இப்படியா ?? ” என்று மனதிற்குள் சலித்து கொண்டான். என்ன நடந்து இருக்கும் என்பதை யூகித்தவன் அப்பொழுது தான் அவளை கவனித்தான்..

இளம் பச்சை நிற சேலை கட்டி அழகாய் தலை வாரி முகத்தில் எந்தவித தேவையில்லாத ஒப்பனைகள் இல்லாமலே அழகாய் காலை நேர தேவதை போல தன் அருகில் அமர்ந்து தன்னையே முறைத்து முறைத்து பார்த்து கொண்டிருக்கும் தன் மனைவியை காதல் கொண்ட மனோகரனின் மனது ரசிக்காமல் இருக்குமா என்ன ??

அவனது பார்வையின் வித்தியாசத்தை உணர்ந்த மித்ராவிற்கு உள்ளே ஏதோ செய்தது. “ ஹே !! மனு.. போ போய் குளி.. என்னைய ஏன் இப்படி பாக்குற?? நேரம் ஆகுது “என்று பட படத்தாள்..

“ மித்து.. இப்போ இப்போ நீ.. நீ என்னைய என்ன சொன்ன ?? என்ன சொல்லி கூப்பிட்ட ?? ” என்றான் வேகமாக. அவன் முகம் எல்லாம் சிரிப்பாக இருந்தது. அவன் மனதின் மகிழ்ச்சி அவன் விழிகளில் தெரிந்தது..

“ இவனுக்கு என்ன கிறுக்கு பிடிச்சு இருக்கா என்ன ?? “ என்று எண்ணியவள் “ நீ தானே சொன்ன உனக்கு எப்படி கூப்பிட வருதோ அப்படி கூப்பிடுன்னு “ என்றாள் எரிச்சலாக..

“ அதான்.. அதான் மித்து.. என்ன சொல்லி கூப்பிட்ட.. ப்ளீஸ் ப்ளீஸ்.. என் செல்லம்ல இன்னொரு தடவ சொல்லேன் “ என்று மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்தான்.

அவனையே வித்தியாசமா பார்த்தவள் “ ம.. மனு… மனுன்னு கூப்பிட்டேன்.. ஏன் ?? “ என்றாள்.

“ வாவ்… நான் மனு… நீ மித்து.. சூப்பர்ல  என்னைய யாருமே இப்படி கூப்பிட்டது இல்லை தெரியுமா?? இதுக்கு தான் பொண்டாட்டி வேணும்கிறது” என்று கூறியவன் பட்டென்று அவள் கன்னத்தில் தன் இதழ்களை பதித்தான்.

“ ஹா !!!” என்று வாயை திறந்து கண்கள் இமைக்க மறந்து கன்னத்தில் கை வைத்து அதிர்ந்து அமர்ந்துவிட்டாள் மித்ரா.. இந்த காலை பொழுதில் இப்படி எல்லாம் நடக்கும் என்று அவள் ஜோசியம் பார்த்தாளா என்ன??

அவள் அதிர்ந்து அமர்ந்து இருந்ததை பார்த்தவன் “ மித்து ஜஸ்ட் டென் மினிட்.. ரெடி ஆகிடுறேன் “ என்று கூறி குளியறையில் நுழைந்து கொண்டான்..

அதன் பின்னரே மித்ராவிற்கு நடந்தது முழுதும் புரிந்தது.. “ எவ்வளோ தைரியம் இப்படி சொல்லாம கொல்லாம கிஸ் பண்ணுறான்” என்று நினைத்தவளை அவள் மனம் “ அப்போ சொல்லிட்டு கிஸ் பண்ணி இருந்த பரவாயில்லையா ?? ” என்று கேள்வி கேட்கவும் பேசாமல் இருந்துவிட்டாள்.

“ இல்ல இல்ல இப்போ நம்ம எதுவும் சண்டை போட கூடாது. அப்புறம் இவன் வீட்டுக்கு கூப்பிட்டு போகமாட்டான்.. எதுனாலும் அங்க போய் தான் பாத்துக்கணும் “ என்று முடிவு செய்தவள் அமைதியாக அவனுக்கு காத்து இருந்தாள்..

மனோகரனும் கூறியது போல பத்து நிமிடத்தில் தயாராகி வந்துவிட்டான்.. அவன் மனம் மகிழ்ச்சியில் திளைத்து.. தான் காதலித்தவள், தன்னுடைய மனைவி ஆகிவிட்டாள்.. அவளை இன்று என் வீட்டிற்கு அழைத்து செல்கிறேன்.. அதுவும் இல்லாமல் அவள் மனு என்று பெயரை சுருக்கி வேறு அழைக்கிறாள்..

“ ஏன் மித்து, குளிக்கமாட்டேன் சொன்ன ??  ஒருவேள நான் தூங்கிட்டு இருக்கும் போது குளிக்காம தான் ரெடி ஆகிட்டயோ ??” என்று அவளை பார்த்து கிண்டல் செய்தான்..

“ அடேய்!! அடேய்!! நானே அமைதியா இருக்கணும்னு முடிவு செஞ்சாலும் நீ சும்மா இருக்க மாட்ட போல” என்று எண்ணிக்கொண்டு “ முதல் தடவ அங்க வரேன் குளிக்காமையா வருவேன் “ என்றாள் முகத்தை வேறு பக்கம் திருப்பி.

மித்ரவிற்குமே மனதில் ஏனோ இனம் புரியாத ஒரு உணர்வு இருந்தது.. முதல் முறையாக தன் கணவன் வீட்டிற்கு செல்கிறாள்.. அந்த உணர்வே அவளுக்கு வித்தியாசமாக இருந்தது.. அவளின் அன்னை அருகில் இருந்தாலாவது ஏதா அறிவுரை தைரியம் எல்லாம் கூறுவார்..

ஆனால் அவர்கள் எல்லாம் எங்கே இருக்கிறார்கள் என்றே அவளுக்கு தெரியவில்லை.. ” கல்யாணம் ஆகி பத்து நாள் ஆச்சு. இன்னும் அவங்கள பத்தி எதுவும் தெரியல “ என்று எண்ணியவளுக்கு மனதிற்குள் ஏனோ கூற முடியாத அளவு கோவம் வந்தது.

“ இருக்கட்டும்.. எங்க வேணா இருக்கட்டும்.. நான் அவங்க கிட்ட பேச போறதும் இல்லை. அவங்களை பத்தி கேட்க போறதும் இல்லை. என்னைய பத்தி கொஞ்சம் கூட நினைச்சு பாக்காம இப்படி இவன் கிட்ட விட்டிட்டு போயிட்டாங்கல.. இனிமே நானும் அவங்களை பத்தி யோசிக்க மாட்டேன் “ என்று முடிவு செய்து கொண்டாள்..

என்னதான் தன் பெற்றவர்களை பற்றி சிந்திக்க கூடாது என்று முடிவு செய்து இருந்தாலும் அவள் மனம் மிகவும் சோர்வு அடைந்து விட்டது.. அவள் மனதின் வலி முகத்தில் தெரிந்தது..

அதை கவனித்த மனோகரன் “ இல்ல வேண்டாம் இப்போ ஏதா கேட்டா சண்டை தான் வரும் “ என்று நினைத்து “  மித்து கிளம்பலாம் “ என்று கூறி அவள் கைகளை பிடித்து அழைத்து சென்றான்..

மருதுவும் பொன்னியும் தயாராக வெளியே நின்று இருந்தனர் “ மருது அண்ணா எல்லாம் செக் பண்ணிடிங்களா?? எதுவும் வித்தியாசமா படலையே ?? ” என்று விசாரித்தபடி வண்டியில் ஏறி அமர்ந்தான்.

“ இல்ல தம்பி.. எல்லா சரியா தான் இருக்கு “ என்று அவர் கூறவும் “ அண்ணா சரியா பத்து மணிக்கு லாரி வரும்.. எல்லாம் எடுத்துட்டு அங்க வந்திடுங்க.. நல்லா நியாபகம் வச்சுகோங்க நம்ம இங்க இருந்ததுக்கான அடையாளம் எதுவுமே இருக்க கூடாது “ என்று கூறும் தன் கணவனை புரியாமல் ஒரு பார்வை பார்த்தாள்..

அவள் பார்வையை மனோகரனும் உணர்ந்து தான் இருந்தான் ஆனால் எதுவும் கூறவில்லை.. மருதுவையும் பொன்னியையும் பார்த்து தலை அசைத்தால் மித்ரா. அவர்களும் கை ஆட்டி வழி அனுப்பினர்..

“ அண்ணி வலது கால் எடுத்து வச்சு உள்ள வாங்க “ என்று மூன்று குரல்கள் ஒருசேர கேட்கவும் மித்ரா திகைத்து தான் விழித்தாள்.. அத்தனை பெரிய வீடு.. இல்லை இல்லை பெரிய மாளிகை.. எப்படியும் குறைத்து வைத்து நூறு  ஆட்களாவது தங்கலாம்.. ஆனால் அதில் வசிக்க தான் ஆட்கள் இல்லை..

விதியின் சதி என்று சொல்வதா ?? இல்லை அவரவர் வாங்கி வந்த வரம் என்று கூறுவதா.. பெரிய சுற்று சுவரும் அதற்கும் மேலே மின் கம்பிகளால் ஆனா வேலியும் ஏனோ மித்ராவிற்கு மனதில் பயத்தை குடுத்தது..

“ இவ்வளோ பெரிய வீட சுத்தி பாக்கவே நாலு நாள் ஆகும் போலவே.. “ என்று எண்ணினாள். வேலை ஆட்கள் அனைவரும் வந்துவிட்டனர் தங்களின் புது எஜமானியை காண.. அனைவரும் மனோகரனுக்கு வணக்கம் சொல்ல அவனும் அதை சிரித்தபடி ஏற்றுகொண்டான்..

மித்ராவிற்கு ஏதோ கனவுலகில் இருப்பது போல இருந்தது.. “ வேலைகாரங்களே இத்தனை பேரா ?? இத்தனை பேரோட பெயரையும் நியாபகம் வைக்கவே ஒருவாரம் படிக்கணும் போல “ என்று எண்ணியவளுக்கு மனோகரனை தான் மிகவும் லேசாக எடை போட்டுவிட்டோமோ என்று இருந்தது.

துப்பாக்கி ஏந்திய ஆட்களும் ஆங்காங்கே கண்ணில் பட்டனர்.. “ அட ராமா  இது வேறயா ?? ” என்று எண்ணினாள்.. இதை எல்லாம் பார்க்கும் பொழுதே அவளுக்கு அயர்வாக இருந்தது.. இதை எல்லாம் நிர்வகிப்பது என்றால் ?? நினைத்து பார்க்கும் பொழுதே மித்ராவிற்கு மூச்சு முட்டியது..

“நேத்து ராத்திரி இவன் என்னவோ சொன்னானே.. இல்லை இல்ல இவன் சொல்லகூடாது.. இவர்..” என்று எண்ணியவள் “ இவரா ?? இவ்வளோ மரியாதை எல்லாம் வேணுமா?? மனுவே போதும் “ என்று எண்ணிக்கொண்டாள்..

“ இந்த மனு நேத்து என்னவோ சொன்னானே என்ன அது ?? ஹா எல்லாம் நான் பொறுப்பா பார்த்துக்கணும்னு.. இதை எல்லாம் பார்த்து பழகவே எனக்கு ஆயுள் முடிஞ்சிடும் போலவே.. “ என்று நினைத்துக்கொண்டாள்..

அப்பொழுது தான் கவனித்தாள் மூன்று பேர் தன்னையே ஒரு சன்ன சிரிப்புடனும் அதே நேரம் அன்புடனும் பார்த்து கொண்டு இருப்பதை..

“ வா  மித்து “ என்று கூறி அவளது இடையில் கை போட்டு லேசாக அனைத்தது  போல அழைத்து சென்றான் மனோகரன்.. அனைத்தையும் பிரமிம்ப்பாக பார்த்தபடி நடந்தால் மித்ரா..

“ மித்து இவன் தான் திவாகரன்.. முதல் தம்பி.. சிவில் முடுச்சிட்டு MBA பண்ணிட்டு இப்போ நம்ம கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனில ஜாயின் பண்ணிருக்கான்.. உன்னைய விட ஒரு வயது சின்னவன்.. வீட்டுல நாங்க எல்லாம் திவான்னு கூப்பிடுவோம் “ என்று மனோகரன் அறிமுகம் செய்துவைக்க மித்ரா புன்னகை புரிந்தாள் அவனை பார்த்து..

“ அப்புறம் இவன் ரெண்டாவது தம்பி கிருபாகரன்.. டெக்ஸ்டைல் என்ஜினியர் பைனல் இயர் படிக்கிறான்.. சரியான வாலு.. ஸ்போர்ட்ஸ்னா உயிர் இவனுக்கு “ என்று கூறவும் அமைதியாக அவனையும் பார்த்து சிரித்தாள்..

அடுத்து நின்று இருந்தவனை காணும் பொழுது தான் மித்ராவிற்கு ஆச்சரியமாக இருந்தது.. ஏனெனில் பதினைந்து வயது சிறுவன்.. மனோகரனுக்கும் இவனுக்கும் ஏறக்குறைய பதிமூன்று வயது வித்தியாசம்..

“ இவன் தான் மித்து கடைக்குட்டி எங்க எல்லாருக்கும் ரொம்ப செல்லம்.. பிரபாகரன்.. டென்த் படிக்கிறான்.. சார் எப்பயுமே எதா பிசியா இருக்குரது போலவே இருப்பான்.. ஆனா அப்படி எல்லாம் இல்லை “ என்று தன் தம்பியை லேசாக வம்பிழுத்து அறிமுகம் செய்து வைத்தான்..

மூவரும் ஒரு சேர  “ ஹாய் அண்ணி, வெல்கம் ஹோம்” என்று கூறி சிரித்தனர்..

மித்ரா ஒரு நொடி யோசித்தாள்.. சுற்றியும் பார்த்தாள் வேலை ஆட்கள் எல்லாம் தூரத்தில் இருந்தனர்.. மனோகரனும் அவனது தம்பிகளும் மட்டுமே இங்கே இருப்பதை உணர்ந்து

“ மனு… இன்ட்ரோ குடுத்ததோட உங்க வேலை முடிந்தது.. இனிமே நான் பேசலாமா ?? ” என்றாள் இனிய குரலில்..

இவள் என்ன பேசப்போகிறாள் என்ற யோசனையில் இருந்தவனை மித்ரா கண்டுகொள்ளவில்லை.. தன் கைகளை பின்னே கட்டி கொண்டு மூவரையும் ஒரு சுற்று சுற்றி வந்தாள்.. ” ஒரு முக்காப்படி, ஒரு அரைப்படி, ஒரு காப்படி.. ஹ்ம்ம் இவங்க மூணு பெரும் உங்க பின்னால இருக்க தைரியத்துல தான் உங்களுக்கு ரொம்ப தைரியம்.. இல்ல மனு “ என்றாள் அன்பொழுக…

“ ஆரம்பிச்சிட்டா.. திமிர் பிடிச்சவ.. ராங்கி பிடிச்சவ… நேத்து நான் பேசும் போது நல்லவ மாதிரி கதை கேட்டாளே” என்று பற்களை கடித்தவன் “ தன் தம்பிகள் என்ன நினைப்பரோ ?? ” என்று எண்ணி அவர்கள் முகம் பார்த்தால் அனைவரும் சிரித்து கொண்டு இருந்தனர்..

“அண்ணி அப்போ முழுப்படி யாரு அண்ணனா ?? ” என்று கேட்டு கிருபா சிரிக்கவும் மித்ராவுக்கே ஆச்சரியமாக இருந்தது.. “ பரவாயில்லையே இந்த விக்கெட் வேகமா விழுந்திடுச்சே “ என்று நினைத்து லேசாக சிரித்தவள்

“அப்புறம் திவா உன் கொத்தனார் வேலை எல்லாம் எப்படி போகுது ?? ” என்று திவாவை பார்த்து கேட்கவும் அவனுக்கு இருமலே வந்துவிட்டது.. திவா மிகவும் சாதுவானவன்.. அதே நேரம் கேலி கிண்டலாகவும் பேசுவான்.. அண்ணன் சொல்லே மந்திரம்.. இப்பொழுது அண்ணியும் இதில் அடக்கம்..

“ எ.. என்ன அண்ணி கேட்டிங்க??” என்றான்

அதற்க்கு மித்ரா பதில் கூறும்முன் “ மித்ரா “ என்று அதிர்ந்து விழித்தான் அவளது கணவன்..

“ என்ன மனு இது?? இங்க வந்தும் நான் உங்க கிட்டையே பேசிட்டு இருக்க முடியுமா ?? அப்புறம் இவங்க கிட்ட எல்லாம் என்னைக்கு நான் பேசுறது?? பழகுறது?? ” என்று ஒன்றும் தெரியாத அப்பாவி போல முகத்தை வைத்து கேட்பவளை பார்த்து முறைத்தான் மனோகரன்..

“ அண்ணா விடுங்க அண்ணா. அண்ணி தானே. அவங்க கிண்டல் பண்ணா பதிலுக்கு நாங்களும் பேசிட்டு போறோம்..” என்றான் அமைதியாக திவா..

“ ஹப்பா !! இந்த விக்கெட்டும் அவுட்.” என்று எண்ணியவள் “ திவா தேங்க்ஸ் நீயாவது எனக்கு சப்போர்ட்டா இருக்கையே “ என்று கூறவும் முழுவதும் உருகிவிட்டான் திவா..

அடுத்து நின்று இருந்தது கிருபா “ அப்புறம் கிருபா உனக்கு டைலரிங் படிப்பு எல்லாம் எப்படி போது ?? ப்ராஜெக்ட் இருக்குல.. என்ன செய்ய போற சட்டை எதுவும் தைக்க போறயா ?? இல்ல உங்க அண்ணனுக்கு கோட் தச்சு குடுத்து உங்க கம்பனில பெரிய டைலரா வேலைக்கு சேர போறயா ?? ” என்று கேட்கவும்

கிருபாவும் சிரித்து கொண்டே “ அண்ணி சும்மா சொல்ல கூடாது நீங்க தான் எங்க செட்க்கு எத்த ஆளு.. இத்தனை நாலா நான் பேசுறதுக்கு இங்க யாருக்கும் பதிலுக்கு கவுன்ட்டர் குடுக்க தெரியாது.. “ என்று கூறி அவள் கைகளை பிடித்து குலுக்கினான்..

“ எங்கே தன்னையும் எதாவது கேட்டுவிடுவாளோ “ என்று எண்ணிய பிரபா “ அண்ணி நான் டென்த் தான் படிக்கிறேன்” என்றான் அவசரமாக.. அவன் கூறிய விதத்தில் அனைவருக்கும் சிரிப்பு வந்தது..

“ சரி பிரபு.. நீ குட்டி பையன்ல சோ நீ எப்பையும் என் கட்சி “ என்று கூறி ஹை பை அடித்து கொண்டாள். அங்கே மனோகரனை தவிர மற்ற நால்வரும் பேசி சிரித்து கொண்டு இருந்தனர்..

“ ராட்சஸி.. வந்த அரை மணி நேரத்துல என் தம்பிங்க கூட ஒட்டிட்டா.. பார்த்து பார்த்து சிரி டி பல்லு சுளுக்க போகுது “ என்று எண்ணியவன்

“ மித்து வா பேக் எல்லாம் உள்ள வந்திடுச்சு. நம்ம ரூம்ம பாத்துட்டு வரலாம்” என்று கூறி அவளை இழுக்காத குறையாக அழைத்து சென்றான்..

அறையின் உள்ளே மித்ராவை இழுத்து கதவை சாத்தியவன் “ ஹேய் நேத்து எல்லாம் நான் என்ன சொன்னேன் ??இப்ப நீ என்ன பண்ணிட்டு இருக்க?? ” கோவத்தில் கத்தினான்..

அவளுக்கு அவனின் கோவத்தின் காரணம் நன்றாய் புரிந்தும் “ ஏன் நான் என்ன பண்ணேன் ?? ” என்று பதில் கேள்வி கேட்டாள்..

“ என் தம்பிங்க கிட்ட எப்படி நடந்துக்கணும் சொன்னேன்ல.. சொன்னேனா இல்லையா?? அப்படி இருந்தும் நீ.. நீ இப்படி எல்லாம் அவங்ககிட்ட பேசுற?? உனக்கு என்ன தைரியம் “ என்று பொரிந்து தள்ளினான்..

மித்ரா ஒரு நொடி அவனை தீர்கமாய் பார்த்தாள் அதன் பின் “ நானும் நேத்து உன்கிட்ட ஒன்னு சொன்னேன்.. என் டார்கெட் நீ தான் அவங்க இல்லை.. நான் கசின்ஸ் கூட எப்படி பழகுவேனோ அப்படிதான் இவங்ககிட்டையும் பழகுவேன்.. “ என்று கூறிவிட்டு அவன் பதிலுக்கு காத்திராமல் வெளியே சென்று விட்டாள்..

அவள் போவதையே பார்த்து இருந்தவன் “ இதுக்கு தான் இங்க வரணும்னு அடம் பிடிச்சாளா ?? திமிர் திமிர் எல்லாம் திமிர்.. ராங்கி பிடிச்சவ “ என்று திட்டிக்கொண்டே அவனும் பின்னே சென்றான்..

அனைவரும் பூஜை அறையில் இருந்தனர்.. மித்ரா அப்பொழுது தான் பார்த்தாள் சுவாமி படங்கள் ஒருபக்கம் இருக்க, மறு பக்கம் ஆளுயர குடும்ப போட்டோ இருந்தது.. அதில் நான்கு ஜோடிகள் இருந்தன.. அந்த புகைப்படம் எத்தனை பெரியதோ அதை விட பெரிய ரோஜா பூ மாலை அணிவித்து இருந்தனர்..

கேள்வியாக தன் கணவனை நோக்கினாள்.. அவனும் அதை புரிந்துகொண்டு “ மித்து இவங்க தான் என் அப்பா அம்மா, இவங்க திவா ஓட அப்பா அம்மா, அடுத்து கிருபா அப்பா அம்மா, கடைசில இருக்கிறது என் கடைசி சித்தி சித்தப்பா பிரபா ஓட அம்மா அப்பா “ என்று கூறவும் மித்ராவிற்கு இன்னும் கூடுதல் அதிர்ச்சி..

“அப்போ இவங்க நாலு பெரும் கூட பிறந்த அண்ணன் தம்பிங்க இல்லையா ?? ஆனாலும் எவ்வளோ பாசம் “ என்று எண்ணினாள்..

“ மத்த விஷயம் எல்லாம் அப்புறம் சொல்றேன். இப்போ விளக்கு ஏத்து மித்து  “   என்று மனோகரன் கூறவும் சரி என்பது போல தலையை ஆட்டி விளக்கை ஏற்றினாள்..

ஏனோ மித்ராவிற்கு மனம் பாரமாக இருந்தது. கண்கள் மூடி வேண்டினாலும் மனம் ஒருநிலை படவில்லை.. மனோகரன் வேண்டுவது அப்பொழுது தான் அவள் காதில் விழுந்தது..

“ அப்பா அம்மா, சித்தி சித்தப்பா.. எனக்கு நல்ல தெரியும் இன்னைக்கு உங்க எல்லாரோட ஆன்மாவும் ரொம்ப சந்தோசமா இருக்கும்.. ஏன்னா நம்ம வீட்டுக்கும் ஒரு ராஜகுமாரி வந்துட்டா.. நான் கடைசி நேரத்துல உங்க எல்லார்க்கும் செஞ்சு குடுத்த சத்தியத்தை கண்டிப்பா நிறைவேத்துவேன்.”

“ எங்களை எல்லாம் பார்த்துக்க ஒருத்தி வந்துட்டாங்கிற நினைப்பே எங்களுக்கு எவ்வளோ சந்தோசமா இருக்கு தெரியுமா..?? மித்து.. மித்ரா என் மனைவி.. உங்க மருமக.. அவளை நீங்க எல்லாம் ஆசீர்வாதம் செய்யணும்.. கடவுளா இருந்து எங்க எல்லார்க்கும் நல்ல வழி காட்டனும் “ என்று கண்கள் மூடி இதழ்கள் முனுமுனுக்க வேண்டும் தன் கணவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டு இருந்தாள் மித்ரா..

 

                           மாயம் – தொடரும்                                            

                   

Advertisement