Advertisement

மாயவனோ !! தூயவனோ !! – 3

    “மருது அண்ணா!! ப்ளீஸ் நீங்க சொல்லுறது எல்லாம் புரியுது. எனக்கு இப்ப ரொம்ப முக்கியமான மீட்டிங் இருக்கு.  நான் வரதுக்குள்ள எப்படியாவது மித்ராவ சாப்பிட வையுங்க.. நான் மதியம் அங்க வரேன் “ என்று மிக மெதுவாக அதே நேரம் அழுத்தமாகவும் முகத்தில் எதையும் காட்டாமலும் தன் அலைபேசியில் பேசி கொண்டு இருந்தான் மனோகரன்.

அந்த பக்கம் இருந்து என்ன பதில் வந்ததோ “ அண்ணா சரி ஒரு மணி நேரத்துல மீட்டிங் முடிச்சு நான் வரேன் “ என்று கூறி போனை வைத்துவிட்டு தன் வேலையில் ஆழ்ந்தவனுக்கு வேலை எதுவும் ஓடவில்லை.

எந்த ஒரு சூழ்நிலை என்றாலும் அனாயசமாக சமாளிப்பவன், மித்ராவை திருமணம் செய்த பிறகு அவளை ஒவ்வொரு நொடியும் சமாளிப்பது மிகவும் கஷ்டமாக இருந்தது..

மனதை ஒருமுக படுத்தி கொண்டு அவன் முன் இருந்த கோப்புகளை பார்க்க ஆரம்பித்தான். ஆனால் முடியவில்லை.. கண் முன்னே மித்ராவின் சோர்ந்த  முகமே வந்து போனது.. “ ச்சேய் “ என்று கைகளை உதறியபடி கோப்புகளை டேபிள் மேல தூக்கி எறிந்தான்..

ஒரு சிறு நேரம் கண்கள் மூடி அமர்ந்து இருந்தவன் தன் மேனேஜெருக்கு அழைத்தான் “ இன்னைக்கு இருக்க அப்பாயின்மென்ட் எல்லாத்தையும் கான்செல் பண்ணிடுங்க சதாசிவம்..” என்றான்

….

“ இல்லை இல்லை முக்கியமான வேலை இருக்கு”

….

“நான் சொல்லுறதை கேளுங்க. எவ்வளோ லாஸ் ஆனாலும் சரி. நான் இப்ப கிளம்பி ஆகணும்” என்று உறுதியாக கூறிவிட்டு கிளம்பியும் விட்டான்.

டிரைவர் உடன் வருகிறேன் என்று கூறியதற்கும் வேண்டாம் என்று கூறி தானே காரை ஓட்டினான்.. என்ன வேகத்தில் ஒட்டினானோ அவன் கூறியதை போல ஒரு மணி நேரத்திற்கு முன்பே அந்த தோப்பு வீட்டை அடைந்தான்.. 

வீட்டு வாசலிலே அவனுக்காக மருதுவும் பொன்னியும் காத்து இருந்தனர்.. “ நாங்க என்ன சொல்லியும் நேத்து இருந்து தங்கச்சி சாப்பிடல தம்பி “ என்று கூறி கைகளை பிசைந்தனர்.

“ சரி நீங்க எதுவும் கவலை படவேண்டாம்.. சாப்பிட எடுத்து வையுங்க.. நான் ஒரு பத்து நிமிசத்துல மித்ராவ சாப்பிட கூட்டி வரேன் “ என்று கூறிவிட்டு அவர்கள் அறைக்கு சென்றான்.

அங்கே அவன் கண்ட காட்சி அவனை அதிர்ச்சி அடைய வைத்தது.. ஏனெனில் மித்ரா தான் கொண்டு வந்த பெட்டி எல்லாம் எடுத்து கிளம்ப தயாரான நிலையில் நின்று இருந்தாள். அவளை பார்த்து ஒரு நிமிடம் திகைத்தவன் தன் அதிர்ச்சியை வெளிக்காட்டாது “ மித்ரா நீ.. நீ எங்க கிளம்பிட்ட?? ” என்றான்

அவனை கண்டதும் மித்ரா ஆங்காரத்தை தன் அணிகலனாக சூடி கொண்டாள். அவன் கேள்விக்கு பதில் ஏதும் கூறாமல் அமைதியாக அவனையே முறைத்தபடி நின்றாள். “ நான் கேட்கிறேனே மித்ரா “ என்றான் அழுத்தமாக..

“ நான் போறேன்..” என்றாள் மொட்டையாக..

“ எங்க ?? ”

“ எங்கயோ போறேன்.. உனக்கு என்ன ?? ” என்று அவள் எடுத்தெறிந்து பதில் பேசவும் அவனுக்கு கோவம் வந்து விட்டது..

“ ஏய் என்ன டி நானும் பாக்குறேன் ரொம்ப தான் பேசுற.. என்ன நினைச்சுக்கிட்டு இருக்க உன் மனசுல ?? ” என்று அவள் கைகளை பிடித்து தன் பக்கம் திருப்பினான்..

“ நான் என்ன நினைச்சா உனக்கு என்ன ?? ஆனா நீ என்னைய பத்தி என்ன நினைச்சுக்கிட்டு இருக்க அதான் எனக்கு புரியல “ என்றாள் கண்ணீர் வழிந்தபடி..

அவள் கண்ணீர் அவனை கரைத்து போல “ ஹேய் மித்ரா இப்ப என்ன நடந்திடுச்சினு அழுகுற ?? முதல்ல கண்ண துடை.. வா சாப்பிட போகலாம். நேத்து இருந்து நீ சப்பிடலையாமே.. உனக்கு ஏன் இவ்வளோ பிடிவாதம். வெறும் வயித்துல இருந்தா இப்படி தான் அழுகை வரும் வா “ என்று அவள் கை பிடித்து இழுத்தான்..

இழுத்த அவன் கைகளை உதறியவள் “ என்ன நடந்திடுச்சா ?? என்ன நடக்கலை இங்க ?? காட்டின பொண்டாட்டி சாப்பிடலைங்கிறதே உனக்கு வேற ஒருத்தர் சொல்லி தான் தெரியுது.. உனக்கு கேவலமா இல்ல “ என்றாள் ஆங்காரமாக..

“ சரி சரி.. ஈஸி மித்ரா.. முதல்ல வந்து சாப்பிடு.. உனக்காக நான் இன்னைக்கு இருக்க எல்லா அப்பாயின்மென்டையும் கான்செல் பண்ணிட்டு வந்து இருக்கேன்.. வா மித்ரா” என்றான் பொறுமையாக..

ஆனால் அவளோ நின்ற இடத்தில் இருந்து சிறிதும் அசையவே இல்லை. மனோகரன் அவளை பார்கவும் தன் கண்களை அழுந்த துடைத்து கொண்டவள் “ சாப்பிடறது எல்லாம் அப்புறம் இருக்கட்டும். முதல்ல பேச வேண்டியதை எல்லாம் பேசி முடிக்கலாம் “ என்றாள் அழுத்தமாக.

அவள் குரலே அவனுக்கு அவள் பிடிவாதத்தை உணர்த்தியது.. “ என்ன பேசணும் “ என்றான் அவனும் அதே அழுத்தத்துடன்..

“என் வாழ்கைய பத்தி “

“ உன் வாழ்கைய பத்தி என்ன மித்ரா ?? நான் தான் சொன்னேனே உன்னைய நான் தொல்லை செய்ய மாட்டேன்னு.. அப்புறம் உனக்கு இங்க என்ன குறை ?? “ என்றான் சலிப்பாக.. அவனது பதிலில் மேலும் ஆத்திரம் அடைந்தவள் அவன் அருகே நெருங்கி வந்து..

“ என்ன குறையா ?? நெஜமாவே உனக்கு புரியலையா ?? எல்லாமே குறை தான்.. “ என்று கூறி தன் முகத்தை இரு கைகளால் மூடி கதறி அழுதாள்.. அவள் அழுவதையே எதுவும் செய்ய இயலாதவன் போல பார்த்து கொண்டு இருந்தான் மனோகரன்..

ஒரு மூச்சு அழுது தீர்த்தவள் “ உனக்கு தெரியுமா நான் எவ்வளோ சந்தோசமா என் அம்மா அப்பா கூட இருந்தேன்னு ?? எல்லாம் போச்சு.. ஒரு பத்து நாள்ல எல்லாம் போச்சு..”

“ பிரண்ட்ஸ் போல பழகுன அப்பா அம்மா முதல்லா மாறுனாங்க. அப்புறம் திடீர்னு யாருக்கும் தெரியாம ஒரு கல்யாணம்.. கல்யாணம் ஆனா முதல் நாளே இங்க உன்கிட்ட விட்டிட்டு போயிட்டாங்க என்னைய..”

“ நீ எதுக்காக என்னைய இப்படி ஒரு கல்யாணம் பண்ணி யாருமே இல்லாத இடத்துல கொண்டு வந்து வச்சு இருக்கன்னு தெரியல.. ரெண்டு நாள் இங்க இருந்த அப்புறம் போனவன் தான் இதோ இப்பதான் இங்க வந்து நிக்கிற அதுவும் மருது அண்ணன் போன் செய்த பின்னாடி.”

“ நான் என்னனு நினைக்கட்டும் சொல்லு ?? இங்க நீ சொல்லாம எதுவும் நடக்காது போல. வெளிய தோட்டத்துல நடக்க கூட முடியல. எந்நேரமும் நாயை அவிழ்த்து விட்டு இருக்காங்க.. சொல்லு ஏன் இப்படி என்னைய படுத்துற “ என்று சட்டையை பிடித்து உலுக்கினாள்..

அப்பொழுது தான் அவனுக்கு புரிந்தது தான் இங்கே இல்லாமல் போனதால் அவள் மனதில் பயம் வந்து விட்டது. அந்த பயத்தை கோவமாக வெளிப்படுத்துகிறாள் என்று. ஆனாலும் இப்பொழுது அவள் கேட்ட கேள்விக்கு எல்லாம் அவன் பதில் கூறும் நிலையில் இல்லையே..

“ என்ன அமைதியா இருக்க.. பதில் பேசு.. எதுக்காக என்னைய கல்யாணம் பண்ண?? ஏன் இப்படி ஒருத்தருக்கும் தெரியாம கொண்டு வந்து வச்சு இருக்க ?? எனக்குன்னு ஒரு மனசு இருக்கே அது உனக்கு புரியலையா ?? நானும் மனுசி தானே ”  என்று கேட்டவளுக்கு விடை அவனின் அமைதியே கிடைத்தது..

“ எந்த காரணத்துக்காக என்னைய இப்படி எங்க அப்பா அம்மா விட்டு போனாங்க தெரியல.. ஆனா நீ சொன்னயே இது நிஜ கல்யாணம்னு. அப்புறம் ஏன் இப்படி என்னைய மறைச்சு வச்சு இருக்க ?? சொல்லு ஒருவேளை என் அப்பாவ அம்மாவையும் ஏமாத்திட்டு இப்படி பண்ணுறையா ??  உன் மனசுல என்ன தான் இருக்கு “ என்று பேசிக்கொண்டே யோசித்தவள்

திடீரென நிமிர்ந்து “ ஒரு வேலை நீ… நீ.. என்னைய இங்க …கீப்பா.. “ என்று பேசி கொண்டு இருக்கும் பொழுதே அவள் கன்னம் பழுத்தது..

“ ஏய் என்ன டி விட்டா நீ பாட்டுக்கு பேசிக்கிட்டே போற.. ஒரு தடவ சொன்னா புரியாது உனக்கு.. உன் கழுத்துல தொங்குதே அதுக்கு பேரு என்ன ?? ” என்று அவளை கோவமாக இழுத்து அவள் கழுத்தில் தொங்கிய தாலியை வெளியே இழுத்தான்..

“ சொல்லு இதுக்கு பேரு என்ன ?? வாயில வந்தது எல்லாம் பேசுற.. ச்ச்சே.. உன் அப்பா அம்மா முன்னால தானே தாலி கட்டினேன்.. உன்னைய இழுத்துகிட்டு வந்தா வச்சி இருக்கேன்.. என்ன வார்த்தை சொல்லிட்ட “ என்று அருகில் இருந்த சுவரில் ஓங்கி குத்தினான்..

அவன் கோவம் இன்னும் அடங்க வில்லை.. அவளோ அடி வாங்கிய வலியிலும், அவன் கோவத்தை பார்த்து பயத்திலும் நடுங்கி போய் நின்று இருந்தாள்.. 

ஊசி விழுந்தாள் கூட அங்கே நன்றாய் கேட்கும் போல அப்படி ஒரு அமைதி நிலவியது.. அவனுக்கு அவளை அடித்தது எண்ணி மனம் மிகவும் வேதனை பட்டது.. கண்களில் இருந்து நீர் வழிய இமைக்க கூட மறந்து பயந்த பார்வை பார்த்தபடி நிற்கும் தன் மனைவியை கை பிடித்து அழைத்து சென்று அமர வைத்தான். அவளோ பொம்மை போல செயல் பட்டாள்..

“ மித்ரா இங்க என்னய பாரு” என்று அவள் முகத்தை தன் பக்கம் திருப்பினான்.. அவன் விரல்களின் தடம் அவள் பால் வண்ண கன்னத்தில் அப்படியே பதிந்து இருந்தது..

“ சாரி மித்ரா.. நான் உன்னைய அடிக்கணும்னு அப்படி செய்யல.. உன் வார்த்தை தான்.. என்.. என்னைய இப்படி பண்ண வச்சிடுச்சு” என்றான் நிஜமாகவே வருந்தும் குரலில்.. அவளிடம் எந்த பதிலும் இல்லை..

அவளது அமைதியும் அவள் அமர்ந்து இருந்த விதமும் அவனை என்ன செய்ததோ ஒரு நீல மூச்சு எடுத்து அவனே பேச தொடங்கினான்,

“ இனி ஒருதரம் இப்படி பேசிடாத மித்ரா.. நான் என்ன செய்வேன்னு எனக்கு தெரியாது.. ஏன்னா நான் உன்னைய காதலிச்சு கல்யாணம் பண்ணினவன் மித்து “ என்றான் தன் காதலை எல்லாம் குரலில் தேக்கி..

இதை கேட்டதும் மித்ராவிற்கு உடலில் ஒரு அதிர்வு ஏற்பட்டது.. திகைத்து போய் அதிர்ச்சியாய் அவனை ஒரு பார்வை பார்த்தாள். அவனும் மெல்ல புன்னகைத்தபடி,

“ ஆமா மித்து உனக்கு இதை நம்ப கூட முடியாதுன்னு எனக்கு தெரியும்.. ஆனா இது தான் உண்மை.. உன்னைய பார்த்ததுமே நான் காதலிக்க ஆரம்பிச்சுட்டேன்.. ஆனா இதை உன்கிட்ட சொல்ல தான் எனக்கு கொஞ்சம் தயக்கமா இருந்தது..”

“ எங்க நீ முடியாதுன்னு சொல்லிடுவியோன்னு ஒரு பயம்.. வாழ்கையில இது வரைக்கும் நான் எதுக்குமே பயந்தது இல்லை மித்து.. முதல் முறையா என்னை காதலை உணர வைச்சதும் நீ தான், பயத்தை உணர வைச்சதும் நீ தான்.”

“ எப்படியாவது உன் கூட பேசணும்னு எனக்கு ரொம்ப ஆசையா, ஏன் வெறியா கூட இருக்கும்.. ஆனா யாரு என்னன்னே தெரியாம என்ன பேசுறது எப்படி பேசுறது.. எத்தனையோ நாள் தூக்கம் இல்லாம தவிச்சு இருக்கேன்.”

“ அப்புறம் உன்னைய பத்தி விசாரிக்கும் பொழுது தான் நீ ரவி சார் பொண்ணுன்னு தெரிஞ்சது.. இது தெரியவும் எனக்கு எவ்வளோ சந்தோசமா இருந்தது தெரியுமா ?? என்னவோ நம்ம கல்யாணமே முடிவானது மாதிரி பீல் பண்ணேன்.. வீட்டுல என் தம்பிங்க கிட்ட கூட சொன்னேன்.. உனக்கே தெரியாம அவங்க எல்லார் கிட்டையும் உன்னைய அறிமுகம் செஞ்சு கூட வச்சேன்”

“அதன்பிறகு தான் உன் அப்பகிட்ட என் மனசை சொல்லி உன்னைய பொண்ணு கேட்க அன்னிக்கு உங்க வீட்டுக்கு வந்தேன்.. நான் என்ன என்னவோ கற்பனை, கனவுகளோட வந்தேன் மித்து.. ஆனா என்னென்னவோ நடந்து இப்படி ஒரு சூழ்நிலையில நம்ம கல்யாணம் நடக்கும்னு நான் கொஞ்சம் கூட எதிர் பார்க்கலை மித்து “ என்றான் வேதனை நிறைந்த குரலில்..

அவன் பேசுவது எல்லாம் அவள் காதுகளில் விழுந்தது.. மனதிலும் பதிந்தது. ஆனால் மூளை தான் “ நீ கூறுவதை எல்லாம் நான் நம்ப மாட்டேன் “ என்று சண்டித்தனம் செய்தது.. அது அவள் முகத்தில் அப்படியே பிரதிபலித்தது..

மீண்டும் மனோகரனே பேச்சை தொடங்கினான்..” எதுக்காக நம்ம கல்யாணம் இப்படி அவசரமா யாருக்கும் தெரியாம நடந்ததோ அந்த காரணம் எல்லாம் இன்னும் அப்படியே தான் இருக்கு மித்து.. “

“ அதை எல்லாம் சரி பண்ணிட்டு தான் உன்கிட்ட நான் என் காதலை சொல்லனும்னு இருந்தேன். ஆனா நீ இன்னைக்கே சொல்ல வச்சிட்ட.. இனியாவது நீ என்னைய நம்புவியா மித்து ?? ” என்று கேட்டான் அவளை பார்த்து..

அவளிடம் எந்த அசைவும் இல்லை என்பதை உணர்ந்த மனோகரன் “ மித்து “ என்று அவளை பிடித்து உலுக்கினான். இத்தனை நேரம் அவன் முகத்தில் இருந்த கோவம் இப்பொழுது இல்லை.. அவன் தான் தன் காதலை கூறிவிட்ட நிம்மதியில் இருகின்றானே..

நிஜமாகவே மனோகரன் நிம்மதியாக தான் உணர்ந்தான். அவன் மனதில் இப்பொழுது பெரும் பாரம் குறைந்தது போல இருந்தது.. காதலித்தவள், மனைவி ஆன பிறகும் அவளிடம் தன் காதலை கூறமுடியாமல் தவித்தவனுக்கு இன்று அதை வெளிபடுத்தியதும் மனம் லேசாக இருந்தது.  

ஆனால் மேலும் குழம்பி தவிப்பது மித்ரா தான்.. “ என்ன மித்து அப்படியே பிரீஸ் ஆகிட்ட.. நான்.. நான் பேசுனது எல்லாம் கேட்டியா ?? ” என்றான் ஒரு மாதிரி குரலில்..

அவன் பேசுவது எல்லாம் கேட்டாள் தான்.. ஆனால் அவன் காதல் என்று கூறுவான் என்று மித்ரா கனவிலும் நினைக்கவில்லை.. அந்த ஒற்றை வார்த்தை அவளை என்னவோ செய்தது..” காதலா ?? இவனுக்கு என் மீது காதலா ?? “ என்று தனக்குள் தானே கேட்டு கொண்டாள்..

இதே கேள்வி தன்னை போட்டு படுத்துவதை உணர்ந்த மித்ரா தலையை உளுகிக்கொண்டு அவனை பார்த்தாள்.. அவன் முகத்திலும் அவன் கண்களிலும் காதல் அப்பட்டமாக தெரிந்தது.. ஆனால் அவளால் அதை ஏற்க தான் முடியவில்லை..

“ என்ன மித்து இப்படி பாத்துக்கிட்டே இருந்தா என்ன அர்த்தம் ஏதாவது பேசு மா “ என்றான் மென்மையாக..

ஒரு நேரம் கோவத்தில் குதிக்கிறான், இப்பொழுது மென்மையில் குளிர்கிறான்.. இவனது வார்த்தைகள் அமிலமாகவும் அமுதமாகவும் மாறி மாறி வந்து மித்ராவின் மனதை போட்டு பாடாய் படுத்தியது..

“ என்ன பேச சொல்லுற?? இனி பேசி என்ன ஆக போகுது “ என்றாள் விட்டேரியாக..

“ இப்படி சொன்னா எப்படி மித்து ?? நான் இப்ப பேசுனது எல்லாம் உனக்கு புரியலையா ?? “ என்றான் எங்கே தான் காதலை கூறியதை அவள் கவனிக்கவில்லையோ என்ற ஆதங்கத்தில்..

மித்ரா சில நொடிகள் கண்களை இறுக மூடி யோசித்தாள். பின்  “ எல்லாம் புரியுது.. நீ என்னைய காதலிச்ச.. அதை என்கிட்டே சொல்லல.. என் வீட்டுக்கு வந்து பொண்ணு கேட்டு கல்யாணம் தேதி எல்லாம் பேசி முடுச்சு இருக்கீங்க. அதையும் யாரும் என்கிட்ட சொல்லல”

“ இதுக்கு நடுவில எதோ பிரச்னை வேற இருக்கு.. அது என்னனு யாருமே.. யாருமே என்கிட்டே மூச்சு கூட விடல… நாளைக்கு கல்யாணம்னு இன்னைக்கு ராத்திரி சொல்லி, யாருக்கும் தெரியாம அதையும் முடிச்சு இங்க கொண்டு வந்து என்னைய மறைச்சும் வச்சாச்சு.. என் அப்பா அம்மா எங்க இருகாங்க கூட தெரியல. ஏன் போனாங்க ?? அதுக்கு என்ன காரணம்னு சொல்லல “

“ இப்படி எல்லாமே குழப்பமா இருக்கும் போது, நீ மறுநாள் போனவன் தான் இதோ இப்ப வர.. வந்து நான் காதலிச்சு உன்னைய கல்யாணம் பண்ணேன்னு சொல்லுற.. ஆனா உன் வீட்டுக்கும் கூட்டி போகமாட்ட.. ஹ்ம்ம் இதெல்லாம் கேட்டு என் மனசு என்ன பாடுபடும்னு யாராவது கொஞ்சம் நினைச்சு பாத்திங்களா ??”

“எனக்குன்னு ஒரு மனசு இருக்கு, அதுக்கு உணர்வுகள் இருக்குன்னு யாருமே யோசிக்கல.. கேட்டா எல்லாம் உன் நல்லதுக்கு தான் அப்படின்னு சொல்லி என் வாய அடைச்சிடுங்க” என்று கூறி தன் முகத்தை இரு கைகளால் மூடி அழுதாள்..

அவள் அழுவதை ஏனோ மனோகரனால் பொறுத்து கொள்ள முடியவில்லை. இப்பொழுதே எல்லா உண்மைகளையும் கூறி அவளை தன்னோடு சேர்த்து அணைத்து கொள்ள வேண்டும் போல அவனது இதயம் துடித்தது..

ஆனால் இப்பொழுது இருக்கும் நிலையில் அனைத்தயும் கூறினால் மித்ராவிற்குள் இருக்கும் சிறு நிம்மதியும் தைரியமும் கூட காணமல் போய்விடும்.. இதை எல்லாம் யோசித்தவன் தன் மனதிற்கு கடிவாளம் இட்டு நிறுத்தினான்..

மீண்டும் கோவத்தை முகத்தில் பூசிக்கொண்டு “ மித்ரா இப்ப இப்படி அழுவதுனால எந்த பிரயோஜனமும் இல்லை புரியுதா ?? வா முதல்ல சாப்பிடு “ என்றான் கடுமையாக..

இத்தனை நேரம் அவன் குரலில் இருந்த குழைவு என்ன?? இப்பொழுது காட்டும் கடுமை என்ன..?? வேறுபாட்டை உணர்ந்து அவனை நிமிர்ந்து பார்த்தாள்..

“ நிமிசத்துக்கு நிமிஷம் இப்படி மாத்தி மாத்தி பேசுறே உன்னைய நான் எப்படி நம்புறது ?? ” என்று தாங்க முடியாமல் கேட்டே விட்டாள்..

அவள் அமர்ந்து இருந்த இருக்கையின் இருபக்கமும் கைகளை வைத்து அவள் முகத்தை கூர்ந்து பார்த்தான்.. “ என்னை நம்பித்தான் ஆகணும். உனக்கு வேற வழி இல்லை புரியுதா “ என்று உறுமினான்..

மித்ராவின் மனம் மேலும் மேலும் சலிப்படைந்தது.. “ ம்ம்ச் நான் உன்னைய நம்புற மாதிரி எதா ஒரு விஷயம் பண்ணு. அப்புறம் உன்னைய நம்பவா வேண்டாமான்னு யோசிக்கிறேன் “ என்றாள் உறுதி மாறாமல்..

“ நான் என்ன செய்யணும் ?? ” என்றான் ஒன்றும் தெரியாதவன் போல.. மனதிற்குள்ளே அவனுக்கு நூறு ஆர்ச்சனை மாலைகள் சூட்டியவள்

“ உன் வீட்டுக்கு கூட்டிட்டு போ “ என்றாள் நிதானமாக..

“ ச்சே என்ன பேசினாலும் கடைசில இதுல தான் வந்து நிக்கிறா “ என்று நினைத்தவன் வேண்டுமென்றே “ ஏன் மித்து என் வீட்டுக்கு வந்து என் கூட சேர்ந்து வாழ உனக்கு அவ்வளோ ஆசையா ?? இல்ல அவசரமா ?? ” என்றான்.

அவனது பதில் கேள்வியில் மித்ராவிற்கு கோவம் தலைக்கு ஏறியது..” மண்ணாங்கட்டி.. இப்படி ஒருத்திக்கு தாலி கட்டி யாருக்கும் தெரியாம மறைச்சு வச்சு இருக்கியே வெளிய தெரிஞ்சா உன் மானம் தான் போகும். அதை பத்தி கூட உனக்கு கவலை இல்லையா ?? “ என்று பொரிந்தாள்.

“ எனக்கு எதை பத்தியும் கவலை இல்லை.. நான் எனக்கு என்ன சரின்னு தோணுதோ அதை செய்து முடிப்பேன்.. அது சரியா தப்பா எல்லாம் எனக்கு தெரியாது.. நான் என் தம்பிங்ககிட்ட எதுவும் மறைக்க மாட்டேன்.. மத்தபடி எனக்கு அடுத்தவங்க என்ன நினைப்பாங்கனு எல்லாம் கவலை இல்லை..” என்றான்..

“ஆனா எனக்கு என்னைய பத்தி நிறைய கவலை இருக்கு.. கொஞ்சம் நினைச்சு பாரு என்னைய பத்தி எல்லாம் என்ன நினைப்பாங்க??”

“ நீ தானே சொன்ன இந்த கல்யாணம் நிஜம்னு. அப்ப எதிர்காலத்துல என்னைய சொல்வாங்க தானே, இவங்க கல்யாணம் பண்ணி இந்த பொண்ண இவன் தனியா கொண்டு போயி வச்சு இருந்தான்னு. என்ன பிரச்சனையோ என்னவோன்னு வாய்க்கு வந்தபடி எல்லாம் சொல்வாங்க தானே..”

“ ஒரு வேலை எதிர்காலத்துல நம்ம நல்லா சந்தோசமா வாழலாம். ஆனா இது எதுவுமே மாறாதே.. எல்லாம் இதை தானே சொல்வாங்க.. அப்போ எனக்குனு ஒரு மரியாதை, அங்கீகாரம் வேண்டாமா ?? சொல்லு “ என்று கேட்டாள்.

அவள் கேட்பதும் சரி தானே.. என்னதான் பெற்றோர் முன் திருமணம் செய்தாலும் இப்படி ஒருவருக்கும் தெரியாமல் தனி வீட்டில் இருப்பதும், அவன் அவ்வபோது வந்து செல்வதும், இதெல்லாம் வெளியே தெரிந்தால் என்ன மாதிரியான கருத்து நிலவும்..

அவளை அல்லவா அனைவரும் தவறாக எண்ணுவர்.. அவனுக்கு என்ன “ எல்லாம் உன் நன்மைக்கு தான் “ என்று கூறியே காலத்தை கடத்தி விடுவான். ஆண்மகன் அல்லவா இந்த மாதிரி விசயங்கள் எல்லாம் பாதிக்காது..

ஆனால் மித்ரா அப்படி இல்லையே.. அவள் வாழ்வில் இத்தனை ஆண்டுகள் அவளுக்கு தெரிந்தது எல்லாம் மகிழ்ச்சி, உற்சாகம், சந்தோசம் மட்டுமே.. முதல் முறையாக இப்படி ஒரு சூழலில் சிக்கி தவிக்கிறாள்.

உதவுவதற்கு யாரும் இல்லை. பெற்றவர்களோ இவனிடம் ஒப்படைத்துவிட்டு தங்கள் கடமை முடிந்தது என்பது போல எங்கேயோ கண் காணமல் சென்று விட்டனர்.

தாலி கட்டியவனோ, அவன் பேசுவது எது பொய், எது உண்மை என்று கண்டு பிடிக்கவே முடியவில்லை.. இதில் அவளது எதிர்காலம் பெரிய கேள்வி குறி தானே..

மனோகரனும் மித்ரா கூறியதை எல்லாம் யோசனை செய்தான்.. “ அவ சொல்றதும் சரிதானே.. இதை ஏன் நான் யோசிக்காம விட்டேன்.. கடைசியில் எல்லாரும் என் மித்துவ தான் தப்பா பேசுவாங்க.. ஆனா இங்க இருக்கிறது தான் எல்லாருக்கும் நல்லது.. “ என்று யோசித்தவன்

“ இப்ப என்ன உனக்கு என் வீட்டுக்கு போகணும் அவ்வளோதானே?? ஒரு ரெண்டு நாள் பொறுத்துக்கோ. உன்னைய அங்க கூட்டி போறேன் “ என்றான் உறுதியாக..

இதை கேட்டதும் அத்தனை நேரம் மித்ராவின் முகத்தில் இருந்த உணர்வுகள் எல்லாம் மறைந்து போயின “ நிஜமாவா ?? ” என்றாள் நம்பாமல்..

“ ம்ம் “ என்றவன் ஆமாம் என்பது போல தலை ஆட்டினான்.. ஒரு சிறு நேரம்  அவனையே பார்த்தவள்

“ நீ சாப்பிட்டியா ?? ” என்றாள் புரியாத குரலில்.. அவள் கேட்ட கேள்வியில் திகைப்பது இப்பொழுது அவன் முறை ஆனது.

“பேசி பேசி நாக்கு எல்லாம் வறண்டு போச்சு “ என்று கூறியவள் இத்தனை நேரம் இங்கு எதுவுமே நடக்கவில்லை என்பது போல முன்னே நடந்தாள்..

“ என்னடா இது இவ்வளோ நேரம் அழுது ஆர்பாட்டம் பன்னுனா.. வீட்டுக்கு கூட்டி போறேன்னு சொன்னதும் அப்படியே மாறிட்டா.. ஒருவேளை இவ்வளோ நேரம் ஆக்டிங் செய்தாளா?? ” என்று யோசித்தவன் தன் தலையை குலுக்கி

“ ச்சே ச்சே இருக்காது.. என் மித்து ரொம்ப நல்லவ.. அவளுக்கு இப்படி நடிக்க எல்லாம் தெரியாது “ என்று தனக்குள் கூறி கொண்டான். பாவம் அவனுக்கு தெரியவில்லை அவன் வீட்டில் வந்து மித்ரா என்ன என்ன செய்ய போகிறாள் என்று.

எதுவும் பேசாமல் தன் முன்னே அமர்ந்து உண்ணுபவளை கண் இமைக்காமல் பார்த்து கொண்டு இருந்தான்.. இவளை என்னவென்று நினைப்பது என்றே அவனால் உறுதியாக நினைக்க முடியவில்லை.. கோவத்தில் கத்துகிறாள், அழுகிறாள், ஆனால் சில சமயம் எதுவுமே நடக்கவில்லை என்பது போல அமைதியாக நடந்து கொள்கிறாள்..

மனோகரனுக்கு மித்ரா ஒரு புரியாத புதிராகவே ஆனால்.. மித்ராவோ மனதில் “ மவனே நல்ல குழம்பு.. நான் எப்படி குழம்பி தவிக்கிறான்.. என்னைய என்ன வகைன்னு உன்னால கடைசி வரைக்கும் கண்டு பிடிக்க முடியாது.. “ என்று எண்ணிக்கொண்டாள்..

“ நீ சாப்பிடல ?? ” பார்வையிலேயே கேள்வியாக..  “ சாப்பிட்டேன் “ என்றான் ஒற்றை வார்த்தையில்..

“ அதானே.. இவன் ஒரு வேலை சாப்பிடலைனாலும் இவன் உயரம் கம்மியாகிடாது.. வளந்துகேட்டவன்.. அண்ணாந்து பாத்து பாத்து கழுத்து தான் வலிக்கிது “ மனதிற்குள் திட்டிக்கொண்டே தன் வயிறை நிரப்பி கொண்டு இருந்தாள் மித்ரா..

அப்பொழுது தான் மனோகரனுக்கு நியாபகம் வந்தது  கல்யாணம் ஆனா இந்த பத்து நாட்களில் அவள் தன் பெற்றோரை பற்றி ஒரு கேள்வி கூட கேட்க வில்லை.. ஏன் அவர்களை பற்றிய பேச்சையே எடுக்கவில்லை..

அவள் உண்டு முடிக்கும் வரை காத்து இருந்தவன், மெல்ல “ மித்து உன் …
என்று தொடங்கும் போதே..

“ ரெண்டு நாலா சரியா தூங்கல.. இப்ப தூக்கம் வருது.. “ என்று கூறி உள்ளே சென்றுவிட்டாள்..  “ ராங்கி பிடிச்சவ..” என்று திட்டி கொண்டே வெளியேறினான் மனோகரன்..      

                              மாயம் – தொடரும்                                                                       

                                                                  

                           

Advertisement