Advertisement

  மாயவனோ !! தூயவனோ !! – 17

 “ அம்மா !!!! அம்மா !! எங்க மா என் ப்ளூ கலர் சுடி?? ” என்று தன் அறையில் இருந்து காட்டு கத்தலாக கத்தி கொண்டு இருந்தாள் மித்ரா.

மித்ராவின் அன்னை தாமரையோ சமையல் அறையில் இருந்தார்.. “ அம்மா !!!” என்று கத்தியபடி வரும் மகளை மெளனமாக எதிர்கொண்டார் அன்னை..

“ என்ன மா நான் அப்ப இருந்து கேக்குறேன்ல ?? எங்கமா என் ப்ளூ கலர் சுடி “ என்று மீண்டும் தன் கேள்வியை கேட்கவும் தாமரை அவளை ஆச்சரியமாக பார்த்தார்..

“ ஏன் டி மித்ரா வேலைக்கு போற அன்னிக்கே நீ சூரியன் நடு வானத்துக்கு வரவும் தான் முழிப்ப. இன்னிக்கு லீவு நாளும் அதுவுமா காலங்காத்தால எங்க போக எந்திரிச்சு குளிச்சு வேற வந்துநிக்கிற?? “

“ம்ம்ச் அம்மா !! நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாம நீங்க ஏன் பதில் கேள்வி கேட்குறிங்க?? சொல்லு மா.. சுடி எங்க ??”

“ ஏன் டி…??? இப்படி வந்து நொய்யி நொய்யின்னு பேசிட்டு இருக்க.. தள்ளு உங்க அப்பா வேற எதோ மீட்டிங் போகணுமாம். நான் சமையல் செய்யணும். போ போயி இருக்குற சுடிதார எடுத்து போடு “ என்று மகளை நகட்ட பார்த்தார்..

அவளோ அவ்விடம் விட்டு அசைவதாய் இல்லை.. அவளை பார்த்து முறைத்து கொண்டே “ ஏன் டி என் உயிரை வாங்குற ??” என்றார் தாமரை

“ நான் கேட்டதுக்கு பதில் சொன்னா, நான் ஏன் உங்க உயிரை வாங்குறேன் ??” என்றாள் பதிலுக்கு மகள்.

“ ஏன் வேற சுடிதாரே இல்லையா உன்கிட்ட” என்று பதில் கூறினார் மகளிடம் காய்கறி நறுக்கி கொண்டே..

“ அம்மா நான் லைப்ரேரி போகணும், அப்புறம் கொஞ்சம் ஷாப்பிங் பண்ணனும்.. இப்ப கொஞ்ச நேரத்துல நான் கிளம்புனா தான் மதியம் வீட்டுக்கு வருவேன் இல்ல நான் சாயங்காலமா தான் வருவேன் “ என்றாள்

“ அது சரி வீட்டுல இருக்குறதே ஒரு நாள் தான் வாரத்துல.. இப்படி வேற நீ ரவுண்டு அடி.. ஹ்ம்ம் எல்லாம் உங்க அப்பாவை சொல்லணும்.. அவர் குடுக்கிற செல்லம் தான் உனக்கு இப்படியெல்லாம் பேச வைக்கிறது.. அதெல்லாம் எங்கயும் போக வேண்டாம் “ என்று கடிந்தார்.

“ என்ன என் தலை இங்க உருளுது?? “ என்று கேட்டபடி வந்தார் ரவிச்சந்திரன்.. மகள் அங்கு இருப்பதை கண்டதும் “ மித்ரா குட்டி இங்க தான் இருக்கியா ?? இந்தா இந்த செக்க கலக்சன்ல போட்டுறு சரியா “ என்று வினவவும்

“ ஏங்க நான் அவளை வெளிய போகவேண்டாம் சொல்லிட்டு இருக்கேன். நீங்க என்னடான்னா அவளை வெளிய அனுப்ப ஒரு வேலை வேற சொல்லிட்டு இருக்கீங்க ??” என்று தன் கோப விழிகளை கணவரிடம் திருப்பினார்.

தன் தந்தையிடம் காசோலையை வாங்கிகொண்டு “ அப்பாடி நல்ல வேலை அப்பா வந்து தலை குடுத்தாரு.. “ என்று நினைத்து மகிழ்ந்தபடி மெல்ல தன் அறைக்கு நழுவினாள்.

வெளியே தாயும் தந்தையும் பேசும் குரல் கேட்டாலும் அதை எல்லாம் சிறிதும் பெரிது  பண்ணாமல் வெளிய போக தயாராகி கிளம்பி வந்தாள்.

 “ ஒரு மனுசி வீட்டுல இருக்குறதே ஒரு நாள் தான்.. அன்னிக்கும் இப்படிதான் நீங்க சண்டை போடுவிங்களா ?? ச்சே ச்சே இந்த வீட்டுல ஒரு நிம்மதி இல்லை.. நான் வெளிய போறேன் “ என்று கூறியபடி தாயின் பதிலுக்கு காத்திராமல் வெளியே ஓடிவிட்டாள்..

“ ஏய் !!! ஏய் மித்ரா நில்லு டி “ என்று தன் அன்னை கூறுவது கேட்டாலும் திரும்பியும் பார்க்காமல் தன் ஸ்கூட்டியில் பறந்துவிட்டாள்..

தாமரை கோவமாக உள்ளே வரவும் ரவிச்சந்திரன் சிரித்து கொண்டு இருந்தார்..” என்னங்க சிரிக்கிறிங்க ??? அவ சாப்பிடாம கூட போயிட்டா.. “ என்று ஒரு தாயாய் அவர் அதாங்க படவும்

“ என்ன தாமரை இது, அவ என்ன இன்னும் சின்ன பிள்ளையா ?? “ என்று தன் மனைவியை சமாதானம் செய்தார்..

“ தெரியுதுல்ல இன்னும் சின்ன பிள்ளை இல்லைன்னு, அப்ப எப்போ உங்க பொண்ணுக்கு மாப்பிள்ள பார்க்க ஆரம்பிக்க போறீங்க ??” என்று தன் அடுத்த கேள்வியை எழுப்பவும், வீட்டின் அழைப்பு மணி ஒலிக்கவும் சரியாக இருந்தது.

அழைப்பு மணி சத்தம் கேட்கவும் கணவனும் மனைவியும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து கொண்டனர்.. “ யாரா இருக்கும் இந்த நேரத்துல ??” என்று யோசித்தபடி சென்று கதவை திறந்தார் தாமரை..

வெளியே காவி வேட்டி  சட்டை அணிந்த ஒரு நபர் நிற்கவும் அவரை “ என்ன வேண்டும் ??” என்பது போல ஒரு பார்வை பார்த்தார் தாமரை..

“ வணக்கம் மா.. நான் ஜோசியர் சுவாமி வீட்டுல இருந்து வரேன்.. உங்க பொண்ணு ஜாதகம், போட்டோ எல்லாம் பூஜைக்கு குடுத்து இருந்திங்கலாம்.. சுவாமி பூஜை முடிஞ்சு பிரசாதம், அப்புறம் போட்டோ ஜாதகம் எல்லாம் கொடுத்துவிட்டார் “ என்று கூறியவுடன் தாமரையின் மனம் மகிழ்ந்தது..

“ இப்போதான் கல்யாண விஷயம் பேச ஆரம்பிச்சேன் உடனே பிரசாதம் வருதுன்னா எல்லாம் அந்த ஆண்டவன் கிருபை தான் “ என்று எண்ணியபடி “வாங்க.. வாங்க.. உள்ள வாங்க “ என்று அந்த நபரை அழைக்கவும் “இல்லைங்கம்மா நான் இன்னும் நிறைய வீட்டுக்கு போய் பிரசாதம் குடுக்கணும் “ என்று கூறி சென்றுவிட்டார்..

கதவை திறக்க சென்ற தாமரை இன்னும் உள்ளே வராமல் என்ன செய்கிறார் என்று பார்க்க ரவிச்சந்திரன் வாசலுக்கு வரவும் “ என்னங்க “ என்று கூறிக்கொண்டு மகிழ்ச்சியாக தாமரை உள்ளே வரவும் சரியாய் இருந்தது..

“ என்ன தாமரை யாரு வந்தது ??””

“ என்னங்க நான் இப்பதான் மித்ரா கல்யாணம் பத்தி உங்ககிட்ட பேசிக்கிட்டு இருந்தேன் ஆனா பாருங்க சரியாய் அந்த நேரம் பார்த்து பிரசாதம் வந்து இருக்கு.. இது எவ்வளோ நல்ல சகுனம் பாருங்க” என்று சிரித்த முகமாய் பேசும் தன் மனைவியை புரியாத பார்வை ஒன்றை பார்த்து

“ என்ன பிரசாதம் ??” என்று கேள்வி கேட்டார்..

“ அதாங்க அந்த ஜோசியர் வீட்டுக்கு போனோம்ல. அவர் பூஜைல வச்சு பிரசாதம் குடுத்து அனுப்புனாரு.. என்னங்க இன்னைக்கு தரகரை வர சொல்லி நம்ம மித்ரா ஜாதகம் குடுக்கணும்.. வருணுக்கு போன் பண்ணி சொல்லனும். இப்பயே அவன் கிட்ட லீவ்க்கு ஏற்பாடு பண்ண சொல்லிடனும்..   “ என்று அவர் பாட்டுக்கு பேசிக்கொண்டே போனார்..

“ தாமரை… கொஞ்சம் மூச்சு விட்டு பேசுமா.. இது என்ன சந்தையில காய் வாங்குற விஷயமா.. இன்னைக்கு ஜாதகம் குடுத்து நாளைக்கு கல்யாணம் வைக்க.. இது வாழ்கையில ரொம்ப முக்கியமான விஷயம் இல்லையா.. கொஞ்சம் நிதானமா தான் பார்க்கணும்” என்று கணவர் கூறவும்

“ என்னங்க இது என்ன நீங்க பாக்குற கணக்கு வழக்கா ??? நிதானமா பாக்க.. நம்ம பொண்ணு கல்யாணங்க… இப்படி பேசிக்கிட்டு இருக்கீங்க.. இப்பயே அவளுக்கு இருபத்தி நாலு வயசு ஆச்சு.. ஒரு அம்மாவா இதை கூட நான் சொல்ல உரிமை இல்லையா ??” என்று கோபமாக பேசினார் தாமரை..

அவரது மன உணர்வுகளை புரிந்துகொண்ட ரவிச்சந்திரன் “ ஹ்ம்ம் சரி மா… விடு விடு டென்ஷன் இல்லாம இரு.. இது சந்தோசமா செய்ய வேண்டிய வேலை.. நான் தரகரை சாயங்காலமா வர சொல்றேன் “ என்று மனைவியிடம் தன்மையாக பேசிவிட்டு சென்றார்..

தாமரைக்கு இப்பொழுது தான் மனம் அமைதி அடைந்தது.. “ ஆண்டவா என் பொண்ணுக்கு நல்ல வாழ்க்கை அமைச்சு குடு சாமி.. அவ எப்பையும் இதே சந்தோசத்தோட இருக்கனும் “ என்று வேண்டிக்கொண்டார்..

மனோகரன் எப்பொழுதும் வாரத்திற்கு இரண்டு நாட்கள் மட்டுமே தன்னுடைய ஷாப்பிங்க காம்ப்ளக்ஸ் செல்வான் கணக்குகள் எல்லாம் பார்க்க.. ஆனால் என்று மித்ராவை அங்கு பார்த்தானோ அன்றிலிருந்து அடிக்கடி செல்ல ஆரம்பித்தான்..

அங்கே வேலை செய்பவர்கள் கூட ஆச்சரிய பட்டார்கள்.. அவர்களின் ஆச்சரிய பார்வையை உணர்ந்தாலும் அதை எல்லாம் சிறிதும் பொருட்படுத்தாமல் மனேஜரிடம் எதோ பேசிக்கொண்டு இருந்தான்..

அவன் பேச்சு மனேஜரிடம் இருந்தாலும், பார்வையை அங்கே இங்கே என்று  சுற்றி சுற்றி வந்தது.. அதை எதிரில் நிற்பவரோ

“ ஹ்ம்ம் முதலாளிக்கு பேச்சு  இங்க இருந்தாலும் எப்படி சுத்தி நடக்குறதை எல்லாம் கவனிக்கிறாரு.. ஹ்ம்ம் அதான் இவங்க எல்லாம் முதலாளியா  இருக்காங்க” என்று மனதில் மெச்சி கொண்டார்.

அவரிடம் பேசிவிட்டு தன் அறையில் அமர்ந்து கணினியில் ஏதோ பார்த்து கொண்டு இருந்தான் மனோகரன்.. அவன் மேஜை மீது இறங்கு கணினிகள் இருக்கும் ஒன்று அவன் வேலை செய்வதற்கு, இன்னொன்று சிசிடிவி கேமெராவில் பதிவாகும் காட்சிகளை ஒளிபரப்பும்..

வேலை செய்து கொண்டு இருந்தவன் எதார்ச்சையாக திரும்பி வீடியோவை பார்த்தான்.. இல்லை அவனது உள்ளுணர்வுகள் அவனை பார்க்கும்படி தூண்டியதோ என்னவோ, பார்த்தவன் விழிகள் விரிந்தன.. அப்படியே தன்னை மறந்து ஒரு நிமிடம் அமர்ந்து விட்டான்..

அவனது வாய் மட்டும் “ மித்ரா “ என்று அவள் பெயரை உச்சரித்து… அவள் பெயரை கூறியதும் எங்கு இருந்து தான் அவனுக்கு வேகம் வந்ததோ பட்டென்று தன் இருக்கையில் இருந்து எழுந்து வேகமாக வெளியே வந்தான்..

மித்ரா லிப்டின் வழியாக மேல் தளத்திற்கு செல்ல காத்திருந்தாள்.. மனோவும் மேலே செல்ல காத்திருப்பவன் போல அங்கே நின்று கொண்டான்.. அவன் மனமோ “ பேசலாமா வேண்டாமா “ என்று அவனுள்ளே பட்டிமன்றம் நடத்தி கொண்டு இருந்தது..

ஆனால் மித்ராவோ தன்னருகே ஒருவன் நிற்பதை கூட கவனிக்கவில்லை.. “ பாக்குறாளா பாரு.. எவ்வளோ தெனாவெட்டா நின்னு இருக்கா.. கொஞ்சம் திமிரும் இருக்குமோ “ என்று யோசித்து கொண்டு இருந்தான்.. லிப்டின் கதவுகள் திறக்கவும் இருவருமே உள்ளே நுழைந்தனர்..

லிப்டின் உள்ளே இருக்கும் பணியால் வேகமாக கைகளை உயர்த்தி வணக்கம் வைத்தான் மனோகரனுக்கு.. அவனுக்கு தலை அசைத்து ஏற்றுகொண்டான். இதை கண்ட மித்ரா “ யாரோ பெரிய ஆள் “ போல என்று நினைத்துக்கொண்டாள் ஆனாலும் மறந்தும் கூட மனோவின் பக்கம் திரும்பவில்லை..

மனோகரன் “ செகண்ட் ப்ளோர் “ என்று கூற வந்தவன்  மித்ரா “ பிப்த் ப்ளோர் “ என்று கூறவும் அவனும் அதையே கூறி வைத்தான்..

“ ஹப்பா… பிப்த் ப்ளோர் வர இவ கூட இருக்கலாம்” என்று சிறுவன் போல குதூகலித்தான்.. ஆனால் அவளோ தன் அலைபேசியை நோண்டிய வன்னம் நின்று இருந்தாள்.. அவளையே பார்த்து நின்று இருந்தவனுக்கு பொழுது போனதே தெரியவில்லை போல..

கண் மூடி திறப்பதற்கு முன் ஐந்தாவது தளம் வந்து விட்டது..” அட ச்சே இப்படியா சீக்கிரம் வரணும் “ என்று தன்னை நொந்தபடி வெளியேறினான்.. ஆனால் அது முழுக்க முழுக்க இளம் பெண்களுக்கான தளம் என்பதை மறந்து போனான் மனோ.. எப்பொழுதும் அங்கே அவ்வளவாக செல்ல மாட்டான்.. அங்கே பணியில் இருந்த பெண்கள் எல்லாம் அவனை ஆச்சரியமாக பார்த்தனர். இன்று மித்ராவை தொடர்ந்து அங்கு செல்லவுமே தன்னுடையே மூளை சிறிதும் வேலை செய்யவில்லை என்று அவன் எண்ணினான்..

“ச்சே இப்படியா கொஞ்சம் கூட யோசிக்காம வருவேன் ” என்று நொந்த படி அந்த தளத்திற்கு பொறுப்பாக இருக்கும் ஒரு பெண்மணியை அழைத்து ஏதோ விவரம் கேட்பவன் போல பேசிவிட்டு சென்றுவிட்டான்..

முதலாளியே தன்னை தேடிவந்து பேசவும் அப்பெண்ணுக்கு முகம் எல்லாம் மகிழ்ச்சி தாண்டவம் ஆடியது..

மனோகரன் தன் இருக்கையில் கண்கள் மூடி சாய்ந்து அமர்ந்து இருந்தான்.. அவன் மனமோ சிறிதும் அமைதி இல்லாமல் தவித்தது.. “ என்ன மனோ நீ… ச்சே ஒரு பொண்ணுகிட்ட பேச இவ்வளோ தயக்கமா ??? அதுவும் இப்போ அவ உன் இடத்துல இருக்கா “ என்று அவனின் மனமே அவனிடம் கேள்வி எழுப்பியது..

“ ஆமா அவ என் இடத்துல தான் இருக்கா.. ஆனா பிரச்சினையே இப்போ அதுதான்.. கடைக்கு வந்த ஒரு பொண்ணுகிட்ட நான் வலிய போய் பேசுனா எல்லாரும் என்ன நினைப்பாங்க.. ஒருவேளை அவ வேற ஹார்ட்டா பிஹேவ் பண்ணிட்டா.. “ என்று அவனின் இன்னொரு மனம் பதில் கூறியது..

“ ஆமாமா இப்படியே இரு.. உன்னால அவ யாருன்னு கண்டு பிடிக்கவே முடியாது “ என்று மற்றொரு மனம் எக்காலம் இட்டது..

“ ஏன் ?? ஏன் தெரியாது.. அவ பேரு மித்ரா “ என்று கூறும் பொழுதே பெயரை தவிர அவளை பற்றி வேறு எதுவும் தெரியாது என்பது இப்பொழுதுதான் அவனுக்கு புரிந்தது..

“ ஹ்ம்ம் நீ எல்லாம் பெரிய பிசினஸ் மேன்.. கண் இமைக்கிற நேரத்துல பல டீலிங் முடிக்கிரவன்னு வெளிய சொல்லிக்காத.. மனசுக்கு பிடிச்ச பொண்ண பத்தி ஒண்ணுமே தெரியல “ என்று தன் தலையில் தானே அடித்து கொண்டான்..

“ ஹ்ம்ம் எப்படி எல்லாம் கண்டு பிடிக்கிறது….” என்று யோசிக்கும் பொழுதே அவன் மனதில் ஒரு திட்டம் தோன்றி மின்னல் அடித்தது..

“ யெஸ்… இது.. இது இதான் சரி.. காதல்ன்னு வந்துட்ட நேரா நம்மாலே காலத்துல குதிக்கணும்.. யாரை நம்பியும் இதுல பயன் இல்ல.. டேய் மனோ.. வெற்றியோட திரும்பி வா “ என்று அவனுக்கு அவனே கூறிக்கொண்டு வெளியே கிளம்பி வந்தான்..

அவனது நல்ல நேரமோ என்னவோ மித்ராவும் அதே சமயத்தில் தன் ஸ்கூட்டியை கிளப்பிக்கொண்டு இருந்தாள்.. ஒன்றும் தெரியாதவன் போல மனோவும் தன் காரில் ஏறி அமர்ந்துகொண்டான்.. அவள் வண்டியை கிளப்புவதற்கு காத்து இருந்தான்..

“ இவ பின்னாடியே போய்.. வீடு எங்கன்னு முதல்ல கண்டு பிடிக்கணும்..” என்று கூரிகொண்டவனுக்கு தெரியவில்லை அன்று மித்ராவின் வீட்டை கண்டுபிடிப்பதற்குள் அவனுக்கு தாவு கழண்டு விடும் என்று..

தன் காதல் தந்த உற்சாகத்தில் மனோ ஒன்றை அறியவில்லை.. தன்னை தவிர வேறு ஒரு வண்டியும் மித்ராவை தொடர்ந்து செல்கிறது என்று.. அந்த வண்டியில் வந்தவனுக்கும் தன் காரியமே முக்கியமாய் பட்டதால் மனோவின் காரை கவனிக்க தவறிவிட்டான்.

ஆனால் இந்த இரண்டையும் அறியாத மித்ரவோ தன் விடுமுறை நாளை நன்றாக களித்தாள் ஊர் சுற்றுவதில்..

மனோகரன் “ என்ன டா இது.. கடையில இருந்து நேரா வீட்டுக்கு போவான்னு பார்த்தா, இவ நமக்கு ஊரை சுத்தி காட்டாம விட மாட்டா போலவே.. நல்ல வேலை இன்னைக்கு எந்த மீட்டிங்கும் இல்ல ” என்று கூறி கொண்டான்.

மனோவின் கடைக்கு வருவதற்கு முன்பே மித்ரா தன் தந்தை கூறிய வேலையை முடித்துவிட்டாள்.. அதன் பிறகு சென்றது ஒரு நூலகத்திற்கு.. உள்ளே சென்றவள் ஒரு மணி நேரமாகியும் வெளியே வரவில்லை..

“ ஓ !! புக்ஸ் படிக்கிற பழக்கம் எல்லாம் இருக்கா என் மித்ராக்கு.. ஆனா ஏன் இவ்வளோ தூரம் வந்தா..???” என்று யோசித்தவன் “ சரி நம்மளும் இங்க ஒரு கார்ட் வாங்கி வைப்போம்.. எதுக்கும் யூஸ் ஆகும் ” என்று கூறி உள்ளே சென்றான்..

அங்கு பணியில் இருந்தவரிடம் பேசிக்கொண்டு இருக்கும் பொழுது “ அண்ணா “ என்ற குரல் கேட்டு அதரி பதறி திரும்பினான். பின்னால் நின்று இருந்தது கிருபா தன் நண்பர்களோடு..

“ என்ன அண்ணா இங்க ??? என்ன பண்றீங்க “ என்று கிருபா கேட்கும் பொழுதே “ இந்தாங்க சார் நீங்க கேட்ட கார்ட் “ என்று வந்து குடுத்துவிட்டு போனார் அங்கு வேலையில் இருப்பவர்.

கிருபா தன் நண்பனிடம் “ நீ போடா மச்சி.. எங்க அண்ணன் வந்துட்டாங்கல சோ நான் அவங்க கூட போயிக்கிறேன் “ என்று கூறிவிட்டு கை அசைத்து விடை குடுத்த பின்னர்

“ என்ன கார்டுணா இது “ என்று வினவினான்..

மனோ சமாளிக்கும் விதமாக “ என்னடா நீ … ஆமா முதல்ல சொல்லு நீ என்ன பண்ணுற இங்க ??” என்று கேள்வி எழுப்பினான்..

“ இது என்ன கேள்வி “ என்பது போல அவனை பார்த்த கிருபா “ என் காலேஜ் இங்க இருந்து நடந்து போகுற தூரம் தான்.. இப்ப கிளாஸ் இல்லைண்ணா அதான் கொஞ்சம் ரெபர் பண்ண இங்க வந்தோம்.. அதுசரி நீங்க என்ன பண்றீங்க இங்க ??” என்று பதிலுக்கு வினவினான்..

மனோகரன் பதில் கூறுவதற்கு முன், அங்கே வேலை செய்யும் இன்னொருவர் “ சார் இந்த மெம்பர்ஷிப்  போர்மல ஒரு சைன் பண்ணுங்க போதும் “ என்று கூறவும் “ இவர் வேற நேரம் காலம் தெரியாம “ என்று எண்ணியபடி கையெழுத்து இட்டான் மனோ

“மெம்பெர்ஷிப்பா??? என்ன அண்ணா இது ??” என்று திகைத்து கேட்டான் கிருபா

“ஐயோ இருந்து இருந்து இந்த கிருபா கிட்டையா மாட்டனும்.. ஹ்ம்ம் வறுத்து எடுப்பானே “ என்று தன் விதியை நொந்தபடி

“ சும்மா தான் டா.. இந்த பக்கம் வந்தேன்.. சரி அப்படியே இங்க ஒரு கார்ட் வாங்கலாம்னு “ என்று கூறும் பொழுதே மித்ரா கிளம்பி வெளியே செல்வது தெரிந்தது.. “ ஐயோ கிளம்பி போறாளே…” என்று மனதிற்குள் குமுறினான் மனோ.

தன் அண்ணனின் பார்வையை தொடர்ந்து பார்த்த கிருபா அங்கே ஒரு இளம் பெண் செல்வதை கண்டு திகைத்து நின்றான்.. மனதிற்குள் “ சிங்கம் சிக்கிடுச்சு…” என்று கூரிகொண்டான்.. “ ஆகா அண்ணா… இப்படி போகுதா கதை.. “ என்று எண்ணியவன்

“ என்ன அண்ணா எதா அவசரமான வேலை இருந்தா போங்க “ என்றான் நக்கலாக..

அவனது நக்கல் பேச்சே மனோவிற்கு தம்பி கண்டுகொண்டான் என்று தோன்றியது.. “ ஹி ஹி.. அவசரம் எல்லாம் ஒண்ணுமில்ல டா கிருபா… சும்மாதான் அப்படியே ஒரு ரவுண்டு போகலாம்னு “ என்று வார்த்தைக்கு வார்த்தை திகைத்து திக்கி திணறி பேசும் தன் அண்ணன் முற்றிலும் புதியவனாய் தெரிந்தான்  கிருபாவிற்கு.

“ஹ்ம்ம் ஒரு வார்த்தையில, ஒரு பார்வையில மத்தவங்களை திணறடிக்கும் என் அண்ணன் இப்போ என்னைய சமாளிக்க திணறிகிட்டு இருக்கான் “ என்று எண்ணியவனுக்கு சிரிப்பே வந்தது..

“ ரவுண்டு தானே அண்ணா.. சரி நானும் வரேன் “ என்று கூறி கிளம்பியவனை தடுக்கவும் வழி தெரியாமல், மித்ராவை தவறவிட்டால் என்ன செய்வது என்றும் புரியாமல் பேந்த பேந்த விழித்தான் மனோ..

அவனது முகத்தை பார்த்தே அவன் மனதை கண்டுகொண்டான் இளையவன்..  “ ஹ்ம்ம் அண்ணா சுத்த வேஸ்ட் நீங்க “ எனவும்

“ என்ன டா இவன் இப்படி திடீர்னு சொல்லுறான்னு “ திகைத்து விழித்தான் மனோ..

“ என்ன அப்படி பாக்குறிங்க??? உண்மைய தான் சொல்றேன்.. பின்ன இது என்ன இடம் ??” என்று கேட்டான் கிருபா.. இம்முறை அவனை  முறைதான் மனோ..

“ பின்ன என்ன அண்ணா.. இங்கயே அட்ரெஸ் கிடைக்கும் அதை விட்டு ரவுண்டு அடிச்சுக்கிட்டு இருக்கீங்க “ என்று கூறவும் “ என்னடா சொல்லுற தலையும் இல்லாம காலும் இல்லாம “ என்று சலித்தான் மனோ..

“ ஒக்கே ஒக்கே… அந்த ஸ்கூட்டிய பாலோ பண்ணி தானே நம்ம இன்னோவா வந்துச்சு ??” என்று கேட்கவும் தூக்கி வாரி போட்டது மனோவிற்கு.. இருக்காத பின்னே.. தகப்பன் ஸ்தானத்தில் இருப்பவன் அல்லவா.. அவனே இப்பொழுது ஒரு பெண் பின்னால் சுற்றி கொண்டு அவள் போகும் இடத்திற்கு எல்லாம் போய் கொண்டு இருந்தால் எப்படி ??

முன்னேறு எப்படியோ அப்படிதானே பின்னேறும் இருக்கும்.. அந்த ஒரு நிமிடத்தில் அவனுக்கு மனதில் கூற முடியாத ஒரு வலி வந்தது.. தான் தன் கடமைகளில் இருந்து தவறி விட்டோம் என்று எண்ணினான்.. சிறந்த உதாரணமாக இருக்க வேண்டியவன் இப்படி வேலைகள் அனைத்தையும் விட்டு ஊர் சுற்றி கொண்டு இருப்பது அவனுக்கே அவனை எண்ணினால் எரிச்சலாக இருந்தது..

அத்தனை நேரம் அவனுள் இருந்த ஒரு இனிமையான படபடப்பு, ஒரு பரபரப்பு, இன்னதென்று விளக்கி கூற முடியாத ஒரு துடிதுடிப்பு அப்படியே கொதிக்கும் பாலில் நீர் தெளித்தது போல அடங்கியது..

தன் கடமைக்கும் பொறுப்பிற்கும் முன்னால காதல் இருந்த இடம் காணமல் போனது மனோகரனுக்கு.. அவன் மனமே அவனை குற்றவாளி என்று கூறுவது போல இருந்தது..     

அவனது ஒவ்வொரு முக மாறுதலையும் கிருபா கவனித்து கொண்டு தான் இருந்தான்.. “ என்ன இது அண்ணன் முகம் இப்படி மாறுது ??.. நான் தப்பா எதவும் பேசிடலையே ” என்று யோசித்தவன்

“அண்ணா “ என்றான்..

“ ஹா!! என்னடா கிருபா ??” என்றான் மனோ சுவாதினமே இல்லாமல்..

“ என்ன ணா??? ஒருமாதிரி இருக்கீங்க ??”

“ ஒண்ணுமில்ல வா வீட்டுக்கு போகலாம் “ என்று கூறவும் இம்முறை திகைப்பது கிருபாவின் முறை ஆனது..

“ அண்ணா !! என்ன ??? நீங்க… நம்ம … அந்த ஸ்கூட்டி “ என்று என்ன கூறுவது என்று தெரியாமல் திக்கினான்..

“ அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்.. வா நம்ம வீட்டுக்கு போகலாம் “ என்று இறுகிய முகத்துடன் கூறிய மனோவை பார்த்து கிருபா மனதில் “ இங்க எதுவும் பேச கூடாது “என்று எண்ணிக்கொண்டு தன் அண்ணனோடு கிளம்பி சென்றான்..

சிறிது நாட்களாகவே மனோவின் முகத்தில் இருக்கும் உற்சாகம் அவனது தம்பிகளின் கண்களிலும் கருத்திலும் பதிந்து தான் இருந்தது..

திவா கூட கிருபாவிடம் “ அண்ணன் முகம் இப்பதான் டா பழைய மாதிரி இருக்கு.. என்னவோ நம்ம வீட்டுல ஒரு நல்லது நடக்க போகுதுன்னு நினைக்கிறேன் “ என்று அடிகடி கூற ஆரம்பித்தான்..

மனோவின் அந்த நல்ல செய்திக்காக அவனது இளையவர்கள் மூவரும் ஒவ்வொரு நாளும் காத்தே இருந்தனர்.. ஆனால் இன்றோ மனோ துள்ளலோடு  மித்ராவை தொடர்ந்து நூலகத்துக்கு வந்ததை கண்ட கிருபாவின் மனதில் திவா கூறியது எல்லாம் கூடிய சீக்கிரம் நடக்க போகிறது என்ற மகிழ்ச்சியே இருந்தது…

ஆனால் நொடியில் மாறிவிட்ட மனோவின் முகத்தை பார்த்து குழம்பி போனான்.. வீட்டிற்கு செல்லும் வரை இருவரும் பேசவில்லை.. காரில் மௌனமே ஆட்சி புரிந்தது.. கிருபாவும், மனோவும் ஒன்றாக அதுவுன் இறுகிய முகத்துடன் வீட்டிற்கு நுழைவதை கண்ட திவாவும் பிரபாவும் கேள்வியாய் பார்த்தனர்..

ஆனால் மனோவோ யாரையும் பார்க்காமல் தன் அறைக்கு சென்று கதவை சாத்தி கொண்டான்..

கிருபாவோ கைகளை பிசைந்து கொண்டு தன் மற்ற சகோதரர்களிடம் வந்து நின்றான்..

திவா “ என்னடா என்ன பண்ணி தொலைச்ச??? அண்ணன் முகமே சரி இல்ல.. ஆமா நீ எங்க அண்ணன் கூட ஜாயின்ட் அடுச்ச ??? “ என்று தன் கேள்விகளை ஆரம்பித்தான்..

“ நான் எதுவும் பன்னால டா.. எல்லாம் அண்ணன் தான் “ என்று கூற ஆரம்பித்து அனைத்தையும் ஒன்றுவிடாமல் கூறினான்.. அவன் கூறுவதை முதலில் மகிழ்ச்சியாக கேட்க ஆரம்பித்த இருவரும் பின் கடைசியில் கிருபா கூறியதை கேட்டு கவலை அடைந்தனர்.,.

ஆனால் இதை எல்லாம் அறியாத மனோகரன் தன் அறையில் கட்டிலில் சாய்ந்து அமர்ந்து இருந்தான்.. எதற்கும் கலங்காதவன் இன்று செய்வது அறியாது, ஏன் தன் தம்பிகளையே பார்த்து பேச கூட முடியாமல் தவித்து கொண்டு இருந்தான்..

அவன் மனதில் காதல் மொட்டு விட்டு மலர தொடங்கி நாட்கள் பல  ஆகிவிட்டது.. இன்னமும் காதலில் நறுமணம் அவனது மனதை நிறைத்து கொண்டு தான் இருந்தது.. “மித்ரா” இந்த பெயரை தவிர அவளை பற்றி ஒன்றும் தெரியாது.. ஏன் அவள் யாரென்றே தெரியாது.. ஆனாலும் அவள் தான் தன் சரிபாதி என்ற முடிவிற்கு என்றோ வந்துவிட்டான் மனோ..

ஆனால் இன்று ஏனோ தன் மனம் மிகவும் தவறு செய்துவிட்டது போல உணர்ந்தது.. தம்பிகளின் வாழ்கை அவன் கண்கள் முன்னால் நின்று கேள்வி எழுப்பியது..,

“ நான் பாட்டுக்கு காதல் கல்யாணம்னு சுத்திக்கிட்டு இருந்தா, அப்புறம் இந்த குடும்பம், என் தம்பிங்க இதை எல்லாம் யார் பார்த்துப்பா??” என்று கேள்வியே அவனை போட்டு வாட்டி எடுத்தது..

“ நோ நோ.. நான் அவங்களை எல்லாம் ஒரு நிலைமைக்கு கொண்டு வந்துட்டு தான் என்னைய பத்தி யோசிக்கணும்.. “ என்று என்று என்னும் பொழுதே அவனின் இன்னொரு மனம் “ அதுவரைக்கும் அந்த பொண்ணுக்கு கல்யாணம் ஆகாம இருக்கணுமே ??“ என்று கேள்வி எழுப்பியது..

செய்வது அறியாது சிலையென அமர்ந்து இருந்தான்… காதலா ??? கடமையா ??? அவன் மனம் குழம்பி தவித்தது..

 

உன்னை கண்ட

நொடி முதல் – என்னையே

நான் மறந்தேன்..

காதல் கொண்ட மனம்

கண்ணாமூச்சி ஆடியது..

கண்கள் திறந்தேன் கடமை

என்னை அழைக்கிறது..

 

                           மாயம் – தொடரும்                

                                        

          

             

                                        

   

                                 

                                                 

                       

 

 

Advertisement