Advertisement

                         மாயவனோ !! தூயவனோ – 11

 “ குட் மார்னிங் மிஸ்…. “ என்று சிரித்தபடி தன் முகம் பார்த்து கூறும் அந்த ஆறு வயது குழந்தையின் கன்னத்தில் லேசாக தட்டி, “ குட் மார்னிங்…” என்று தானும் சிரித்தபடி கூறினாள் அந்த பள்ளிக்கு வந்து ஒரு மாதமே ஆனா புது ஆசிரியை மீரா..

வந்து ஒரு மாதம் தான் ஆனது ஆனாலும் அதற்குள்ளே அனைவரது மனதிலும் இடம் பிடித்தாயிற்று..  எப்பொழுது முகத்தில் இருக்கும் புன்னகை, முகத்திலும், உடலிலும் இருக்கும் நிமிர்வு  , நேர்க் கொண்ட பார்வை, இவை எல்லாமே அவளை  தனித்துவமாய் காட்டியது..

தானுண்டு தன் வேலையுண்டு, பாடம் சொல்லி குடுப்பது மட்டுமே என் கடமை என்பது இல்லாமல் அதையும் தாண்டி உடன் வேலை செய்பவரிடமும், பள்ளி குழந்தைகளிடமும் எப்பொழுதும் அன்பாக அக்கறைய பழகும் அந்த புதியவளை யாருக்கு தான் பிடிக்காது.

வயலூர் மேற்கு தொடர்ச்சி மலையின் குன்னூர் அருகே ஒரு சிறு மலை கிராமம்.. அடிப்படை வசதிகள் அவ்வளவு ஒன்றும் இல்லாத ஆனால் இயற்கை எழில் கொஞ்சம் மண் மனம் மாறாத விவசாய பூமி..

சுற்றிலும் மலைகளும், கண்ணுக்கெட்டிய தூரம் வரை பச்சை புடவை உடுத்தியது போல நிலமும் , எப்பொழுதுமே காற்றில் மிதக்கும் ஈர பதமும் யாருக்குமே காண தெவிட்டாது.. வயலூர் எப்பொழுதுமே அதிகாலை நான்கு மணிக்கு எல்லாம் விழித்துவிடும்..

ஆடு மாடு மேய்பவர்கள், பால் வியாபாரத்திற்கு பால் கறக்க வருபவர்கள், அருகே இருக்கும் வேறு ஊர்களுக்கு கூலி வேளைக்கு செல்பவர்கள் என்று ஆளாளுக்கு ஒரு வேலையை வைத்துகொண்டு கதிரவன் வானில் தோன்றும் முன்னே மக்கள் முழித்து விடுவர்.. 

அந்த ஊரும் அந்த ஊர் பழக்க வழக்கமும் முதலில் அவளுக்கு ஒட்டாமல் தான் இருந்தது.. ஆனால் என்ன செய்வது பிழைக்க வந்த இடத்தில்  இதெல்லாம் பார்க்க முடியுமா என்ன ?? நாட்கள் செல்ல செல்ல அனைத்தும் பழகிவிடும் அல்லவா ??  இல்லை தன்னையே அந்த  புதிய இடத்திற்கு ஏற்ப பழக்கி கொண்டாள்..     

 “ என்னா கண்ணு மீரா, நீ காலையில சாப்பிடாம கூட வந்துட்ட ?? இன்னும் மணி அடிக்க பத்து நிமிஷம் இருக்கு அதுக்குள்ள இந்த ரெண்டு இட்லிய வாய்ல போடு “ என்று கரிசனமாக கூறும் தனம் அக்காவை புன் சிரிப்போடு எதிர்கொண்டாள் மீரா..

“ அக்கா உங்க கிட்ட நான் எத்தனை தடவ சொல்லுறது.. சத்து மாவு காஞ்சி குடிச்சேனே.. அதுவே வயிறு திம்முன்னு இருக்கு.. அப்புறம் கிளாஸ்ல போயி நானும் தூங்கனும்.. பிள்ளைங்க எல்லாம் என்னைய கிண்டல் பண்ணனும்,, இது தான் உங்க ஆசையா ??” என்று தனம் கையில் இருந்த உணவு பாத்திரத்தை வாங்கியபடி கேட்டாள்..

“ அட என்னா கண்ணு.. வாத்தியாரம்மா நீ கிளாஸ்ல கத்தி பேசவாது தெம்பு வேணாமா ?? பாரு இப்பையே இவ்வளோ ஒல்லியா இருக்க ?? அப்புறம் வெளிநாடுல இருந்து வந்து உன் வீட்டுக்காறரு என்னைய கேட்கமாட்டாரா ?? இது தான் நீங்க என் பொண்டாட்டிய கவனிச்ச அழகான்னு ?? ” என்று சற்றே  தாட்டியமாக தனம் பேசவும்

“ அய்யோ !! அக்கா சரி சரி நான் சாப்டுறேன்.. இனிமே சாப்பிட்டுட்டே ஸ்கூல் வரேன் போதுமா ??” என்று கூறி உன்ன தொடங்கியவளை பார்த்த தனம் “ அதானே புருஷன் பேரை சொல்லவும் தான் சாப்பாடு தண்ணி உள்ள இறங்குது “ என்று கூறி சிரித்துவிட்டு சென்றார்..

தனம்… அந்த பள்ளி கூடத்தில் எல்லாமே அவர் தான்.. அதாவது அங்கு வேலை செய்யும் ஆசிரியைகள் முதல் கொண்டு படிக்கும் குழந்தைகள் வரை அனைவரையும் கவனித்து கொள்ளும் வேலை.. ஆனால் அதை வேலை என்று எண்ணி செய்யமாட்டார்.. அவர் கவனிக்கும் விதத்தில் ஒரு நேசம் இருக்கும்..

எப்பொழுதும் யாரையும் என்னா கண்ணு என்று தான் ஆரம்பித்து பேசுவார்.. யார் என்ன வேலை கூறினாலும் முகம் சுளிக்காமல் செய்வார்.. இறக்க குணம் நிறைய.. சமையல் செய்வது என்றாள் தனம் அக்காவிற்கு அல்வா சாப்பிடுவது போல.. ஆனால் இத்தனை நல்ல உள்ளம் கொண்டவருக்கு விதி வாழ்கையை மட்டும் சோகமாக குடுத்து நடுத்தர வயதிலேயே தனிமையையும் குடுத்து விட்டது.. 

வயலூரில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் இயங்கி வரும் ஒரு பள்ளிக்கு தான் ஆசிரியை வேலைக்கு வந்து இருக்கிறாள் மீரா.. முழுக்க முழுக்க பெண்களால் நடத்தப்படும் பள்ளி என்பதால் தைரியமாக கிளம்பி வந்துவிட்டாள்.. ஆனால் வந்த முதல் நாள் மீராவிற்கு தங்கும் இடத்தை ஏற்பாடு செய்ய மிகவும் சிரமமாய் இருந்தது.. எங்கு செல்வது, யாரிடம் உதவி கேட்பது என்று திணறி கொண்டு நின்று இருந்தவளை தானே முன் வந்து தனம்

“ என்னா கண்ணு புது வாத்தியாரம்மாவா..?? நான் தனம்.. இங்க ஆல் இன் ஆல் நான் தான்.. பெரிய மேடம் என்னைய பத்தி சொல்லலையா ??” என்று கேட்டார் இடுப்பில் கை வைத்து.

மீராவிற்கோ புதிய இடத்தில இப்படி தானே வந்து தாட்டியாயமாக பேசும் புது பெண்மணியை பார்த்து திகைத்தாலும் வெளியே காட்டாமல் “ ஆமாங்க புதுசு தான்.. இல்ல மேடம் எதுவும் என்கிட்டே சொல்லல..” என்றாள் தயங்கி..

தனம் பதில் கூற வரும்முன் பின்னே இருந்து ஒரு குரல் “ என்ன தனம் வந்த உடனே மீரா கிட்ட உன் வேலைய காட்டிட்டியா ?? பாரு ஒரு நிமிஷம் மீரா முகம் எப்படி டென்ஷன் ஆயுடுச்சுன்னு “ என்று சிரித்தபடி வந்தார் அப்பள்ளியில் அனைவராலும் மதர் என்று அழைக்கப்படும் தலைமை ஆசிரியை..

அவரை பார்த்து தனம் “ இல்ல மதர் புதுசா இருக்கே பொண்ணு அப்படின்னு தான் சும்மா விசாரிச்சேன்” என்றார் லேசாக தன் கையை பிசைந்தபடி..

“ம்ம்.. மி… மீரா… இவங்க தனம்.. இங்க தான் ரொம்ப வருசமா இருக்காங்க.. நம்பிக்கையான லேடி.. உங்களுக்கு என்ன ஹெல்ப் வேணும்னாலும் இவங்களை கேட்கலாம்.. இதே ஊருதான் இவங்க.. தனம் இவங்க மீரா.. புதுசா வந்து இருக்க டீச்சர் “ என்று இருவருக்கும் மாறி மாறி அறிமுகம் செய்துவைத்தார்..

மதரே தன்னை பற்றி நல்ல விதமாக கூறவும் தனத்திற்கு பெருமை தாங்க முடியவில்லை.. மீராவும் அவரை பார்த்து மெல்ல புன்னகைத்தாள்..  ஏனோ தனத்திற்கு மீராவை முதல் பார்வையிலேயே பிடித்துவிட்டது. மதர்” என்ன மீரா இங்கயே நிக்கிற ?? என்ன யோசனை ??“ என்று வினவவும்

“ இல்லை மதர் இந்த ஊருல ஸ்டே பண்ணுறதுக்கு எங்க இடம் கிடைக்கும்னு தெரியல.. யாருகிட்ட கேட்கிறதுன்னு தெரியல.. அதான் யோசனை பண்ணிட்டு இருக்கேன்..” என்றாள் மீரா..

மெல்ல தன் புன்சிரிப்பை சிந்திய மதர் தனத்தை பார்த்து  “ என்ன தனம் ?? உனக்கு தெரிஞ்ச இடம் ஏதா இருக்கா ??” என்று விசாரித்தார்..

“ என்ன மதர் இப்படி சொல்லிட்டிங்க… என் வீடு எதுக்கு இருக்கு ?? நான் ஒண்டிக்கட்டை தானே.. அங்க தங்கிக்கட்டும்.. ஆனா இவங்களுக்கு அங்கன எல்லாம் பிடிக்குமா ??” என்று யோசனையுடன் மீராவை பார்த்தார்..

மீராவிற்கு முதலில் தயக்கமாக இருந்தது.. ஆனால் மதர்” மீரா உனக்கு தனம் வீட்டை விட பாதுக்காப்பான இடம் எதுவும் கிடைக்காது.. அதுவும் இல்லாம என் வீட்டுக்கும் பக்கம் தான்.. சோ உனக்கு எந்த குழப்பமும் வேண்டாம்.. மன்த்லி சார்ஜ் எவ்வளோன்னு கேட்டு குடுத்திடு சரிதானே “ என்று கூறவும் சரி என்று தலையாட்டினாள் மீரா..

ஆனால் தனத்தை வீட்டு வாடகை வாங்க சம்மதிக்க வைப்பதற்குள் மீராவிற்கு போதும் போதும் என்றானது.. “நீங்க வாடகை வாங்கிக்கிறேன்னு சொன்னாதான் நான் உங்க வீட்டுக்கு வருவேன் “ என்று அவள் பிடிவாதமாக கூறவும் தான்  தனம் சரி என்று கூறினார்.  

ஆனாலும் வீடு எப்படி இருக்குமோ என்று தயங்கியபடி சென்றவளுக்கு ஆச்சரியம்.. ஒரு சிறு ஓட்டு வீடுதான்.. ஆனால் அதை சுற்றி போடப்பட்டு இருந்த வேலியும், வேலிக்கும் வீட்டிற்கும் இடையே இருந்த இடத்தில் அமைந்து இருந்த தோட்டமும் மீராவின் மனதை பறித்தன..

வெளியே இத்தனை அழகும் வீட்டிற்குள் சுத்தமாகவும் அமைதியாகவும் இருக்கவும் மீராவின் மனம் முழு நிம்மதி கொண்டது.. “ என்னா கண்ணு மீரா வீடு பிடிச்சு இருக்கா ?? நான் மட்டும் தான் இங்க.. “ என்று கூறி அவளுக்கு தன் சிறிய அரண்மனையை சுற்றி காட்டினார்..

ஒரு படுக்கை அறை கொண்ட வீடுதான்.. ஆனால் அழகாக நேர்த்தியாக இருந்தது.. சமையல் அறையில் இருந்து தோட்டத்திற்கு செல்ல தனி கதவு  இருந்தது.. முன் புறம் ஒரு சிறு ஹால். பூஜை அரை என்று தனியாக இல்லை ஹாலிலேயே சுவாமி படங்கள் மாட்டப்பட்டு விளக்கு ஏற்றி இருந்தார் தனம்.

படுக்கை அறையில் ஒரு குளியல் அறையுடன் கூடிய கழிவறை,  வீட்டிற்கு பின்னே மற்றொரு  குளியல் அறையுடன் கூடிய கழிவறை, என்று சற்றே வசதியாக தான் இருந்தது.

“ அக்கா ஒரு ரூம் தான் இருக்கு ??” என்று தயக்கமாக கேட்டாள் மீரா..

“ஆமா கண்ணு.. எனக்கு ரூம் எல்லாம் தேவை இல்லை.. இப்ப வரைக்கும் நான் அங்க படுத்ததே இல்ல.. நீ அங்க இருந்துக்கோ.. நான் இங்கன ராத்திரி படுத்துப்பேன் “ எனவும் “ ம்ம் சரிக்கா “ என்றாள் மீரா..

அதன் பின் தான் கொண்டு வந்த அனைத்தயும் எடுத்து அடுக்கி வைப்பதிலும் அந்த சிறு ஒற்றை படுக்கை அறையை தன் வசதிக்கு ஏற்றவாறு மாற்றம் செய்யவுமே அவளுக்கு நேரம் போனது.. மீராவிற்கு ஒரு நிமிடம் தன் வீட்டில் அவளின் அறையின் நினைவு வந்தது..

ஆனால் வந்த வேகத்தில் அந்த நினைவு காணமல் போனது “ வேணாம் அதை எல்லாம் நினைக்காதே” என்று தனக்கு தானே கூறிக்கொண்டு வேலையை முடித்தாள்.. அவள் அனைத்தையும் எடுத்து வைத்து முடிக்கும் வரை தனம் அங்கு வரவில்லை..

மீரா அறையை தயார் செய்துவிட்டால் என்று தெரிந்த பின்னே தான் தனம் உள்ளே வந்து “ என்னா கண்ணு எல்லாம் உனக்கு ஏத்த மாதிரி  வச்சுடையா??” என்று  ஒருமுறை அறையை தன் பார்வையால் அளந்தவர் அங்கு இருந்த புகைப்படத்தை பார்த்து “ மீரா கண்ணு இது யாரு ??” என்று கேட்டார் புன்னகையோடு..    

மீராவும் அதே புன்னகையோடு “ என் வீட்டுகாறாரு “ என்றாள்..

“ அடடா… புருசன பத்தி கேட்கவும் புள்ளைக்கு முகத்துல வர சந்தோசத்தை பாரு.. என்னா கண்ணு லவ்வு மேரேஜா ?? ” என்றார் தனம் பதிலுக்கு.. அவரது கேள்வியில் திகைதவள் பின் சுதாரித்து “ ம்ம் கொஞ்சம் அப்படியும் சொல்லலாம் கா.. என்னைய பிடிச்சு போயி வந்து பொன்னு கேட்டு கல்யாணம் பண்ணாங்க.. அப்புறம் எனக்கு அவரை பிடிச்சிருச்சு” என்றாள்

“ஓ !! அதானே ராசாவாட்டம் இருக்கு தம்பி.. யாருக்கு தான் பிடிக்காது.. ஆமா குணம் எப்படி கண்ணு ??”

“ எந்த குறையும் சொல்ல முடியாதுக்கா.. நான் தான் சில நேரம் அவரை புரிஞ்சுக்காம நடந்துப்பேன். ஆனா அதுக்கெல்லாம் அவர் கொஞ்சம் கூட இது வரை முகம் சுளிக்க மாட்டாங்க.. ஹ்ம்ம் இப்ப என்ன செய்றாங்கலோ ?? ” என்றாள் மீரா சிறு ஏக்கம் எட்டி பார்க்க..

அதை பார்த்த தனம் “ அட பொண்ணு நீ ?? டக்குனு ஒரு போன் போட்டு கேட்க வேண்டியது தானே?? ஆமா இம்புட்டு அன்பு வச்சுகிட்டு நீ ஏன் தனியா வந்த ?? ” என்று அடுத்த கேள்வியை வீசவும் என்ன பதில் கூறுவது என்று தெரியாமல் திணறித்தான் போனால் மீரா..

“ அது.. அது.. எப்படி எதிர்பாராத விதமா விதி எங்களை இனைச்சதோ, அதே மாதிரி இப்ப என்னய இங்கயும் அவர வெளிநாட்டுலயும் இருக்க வச்சிடுச்சுக்கா. ஹ்ம்ம் என்ன செய்றது.. இப்ப அங்க நடு ராத்திரியா இருக்கும்.. “ என்று கூறி சமாளித்தாள்..

“ ஓ !!! சரி சரி மனச போட்டு குழப்பிக்காத.. தினமும் போன் போட்டு பேசு.. இவ ஒன்டிகட்ட தானே தப்பா நினைப்பாளான்னு எல்லாம் யோசிக்காத என்ன.. தம்பி வெளிநாடுல இருந்து வந்து உன்னைய கூட்டி போற வரைக்கும் நீ என் பொறுப்பு.. சரியா.. சுடு தண்ணி போட்டு வைக்கிறேன் அலுப்பு தீர குளி “ என்று கூறிவிட்டு தன் வேலையை பார்க்க சென்று விட்டார் தனம்..

அவர் செல்லவும் “ ஊப்!!!! “ என்று பெருமூச்சு விட்டவள் “ ஹ்ம்ம் கடவுளே ஒரு தைரியத்துல இங்க வந்துட்டேன்.. ஆனா நீ தான் சாமி எல்லாத்தையும் நல்லபடியா நடத்தி குடுக்கணும் “ என்று இறைவனை வேண்டிவிட்டு தன் கணவனின் புகை படத்தை அவள் படுக்கைக்கு அருகில் வைத்துவிட்டு தனத்தை பார்க்க சென்றாள்..

இத்தனை நாள் தனியாக இருந்ததால் பேச்சு துணைக்கு கூட ஒருவரும் இல்லாமல் கஷ்டபட்ட தனம் இன்று உடன் தங்கி கொள்வதற்கே ஒருத்தி வரவும் சந்தோசத்தில் தலை கால் புரியவில்லை.. ஊர் கதை அனைத்தையும் மீரா வந்த ஒரே நாளில் பேசி முடித்துவிட்டாள்.. மறுநாளும் பள்ளி விடுமுறை என்பதால் மீராவிற்கு சிறிது நிம்மதியாக இருந்தது. தனம் மீராவை அழைத்துக்கொண்டு ஊரை சுற்றி காண்பித்தார்..

“ கண்ணு நீ பட்டினத்துல இருந்து வந்த பொண்ணு, நீ எதிர் பாக்குற வசதி எல்லாம் இங்க இருக்காது.. அதுனால இப்படி ஏதா லீவ் வந்தா பக்கத்துக்கு டவுன்னுக்கு போயி தான் எல்லாம் வங்கி வந்திடனும்…”

“ அப்புறம் இது தான் இங்க இருக்க ஒரே டாக்டர் வீடு.. நல்ல பாத்து வச்சிக்கோ.. அதுவும் டாக்டர் எப்ப இங்க இருப்பாருன்னு சொல்ல முடியாது.. “

“ இப்படியே போனா ஒரு சின்ன கடை வரும். அங்க மளிகை சாமான், காய்கறி  மட்டும் தான் கிடைக்கும்.. ஆனா ஊரு உலகத்துல இல்லாதா விலை சொல்லுவான்.. “

“ இந்த சந்து வழியா நேரா போயி திரும்புனா ஒரு சிவன் கோவில் வரும் “ என்று அந்த ஊரை பற்றி தன்னால் முடிந்த அளவு மீராவிற்கு கூறி கொண்டு  வந்தார்.. மீராவும் சளைக்காமல் “ம்ம் “ சொல்லி கொண்டு வந்தாள். ஆனால் அவளது மனம் இங்கு இல்லை என்பது தனத்திற்கு புரிந்தது..

“ என்னா கண்ணு ஒரே யோசனையா  வர?? நேத்து தம்பி கூட பேசுனையா இல்லையா ?? ” என்று கேட்கவும்

“  ஹா !!! அதெல்லாம் இல்லைக்கா.. புது ஊருக்கு வரோமே இங்க எல்லாரும் எப்படியோ என்னவோ, தங்க நல்ல இடம் கிடைக்குமா?? இப்படி எல்லாம் ஒரே யோசனையில வந்தேன் ஆனா இங்க உங்களை பார்த்து பேசவும் மனசு நிம்மதியா இருக்கு அதை நினைச்சுக்கிட்டு வந்தேன் அவ்வளோதான் “ என்றாள்..

“ ம்ம்ம்!!!! கேட்க மறந்துட்டேன் பாரு.. உங்க அப்பா அம்மா எல்லாம் எங்க இருக்காங்க?? புருஷன் வெளிநாடு போனா என்ன அவங்க கூட போயி இருக்கிறதை விட்டு இங்க வந்து நீ ஏன் சிரம படனும் ?? ” என்று தன் அடுத்த கேள்வியை தொடுத்தார் தனம்..

இந்த கேள்விக்கு மீரா என்ன பதில் கூறுவாள்.. ஒரு கணம் ஆடித்தான் போனாள்.. ஆனாலும் சமாளித்து கொண்டு “ நீங்க சொல்றது சரிதான் கா.. ஆனா எனக்கு தான் கொஞ்சம் வேற இடத்துல இருந்தா நல்லா இருக்கும்னு தோனுச்சு.. அதுவும் இல்லாம கல்யாணம் ஆன பொண்ணு ரெண்டு மாசம் முடியுறதுக்குள்ள பொறந்த வீட்டுக்கு வந்துட்டா எல்லாம் என்ன பேசுவாங்க..” எனவும்

“ அது சரி தான்.. கை கால் நல்லா இருக்கும் போதே நம்மளும் முடிஞ்ச அளவு உழைச்சிடனும்.. அப்புறம் நீ ரெண்டாவதா சொன்னயே ஊரு உலகம் என்ன பேசும்னு.. பேசியே கொன்னுடும் “ என்று பேசியபடியே இருவரும் ஊரு சுற்றி விட்டு வீட்டிற்கு வந்தனர்..

இப்படியாக தான் இங்கு வந்து சேர்ந்ததை நினைத்தபடியே தனம் குடுத்த இட்லியை உண்டு முடித்தாள் மீரா.. அவள் உண்டு முடிக்கவும் பிரார்தனைகான மணி அடிக்கவும் சரியாக இருந்தது.. 

அன்றைய பள்ளி வேலைகள் ஆரம்பிக்கவும் அதன் பிறகு மீராவிற்கு வேறு எதையும் நினைத்து பார்க்க எல்லாம் நேரம் இல்லை.. அவளுக்கு குடுக்க பட்டு இருந்து முதல் வகுப்பு.. அனைத்தும் ஆறு ஏழு வயது குழந்தைகள்.. சற்று பெரிய வகுப்பிற்கு பாடம் நடத்துமாறு மதர் கூறவும் மீராவே வேண்டாம் என்று மறுத்து இந்த ஒன்றாம் வகுப்பை தேர்வு செய்தாள்..

ஏனோ அந்த சின்னஞ்சிறிய குழந்தைகளை பார்க்கும் பொழுது அவளுக்கு மனதில் இனம் புரியாதா ஒரு அமைதி கிடைப்பது போல தோன்றியது..

மீரா வகுப்பிற்க்குள் நுழையவும்அனைத்து பிள்ளைகளும் எழுந்து நின்று “ குட் மார்னிங் மிஸ் “ என்று ஒரே குரலில் கூறினார்.. மீராவும் சிரித்தபடி “ குட்  மார்னிங் குட்டீஸ் “ என்றாள்..

“ மிஸ் எனக்கு இன்னிக்கு பர்த் டே “ என்று மிட்டாய் டப்பாவை நீட்டிய சிறு குழந்தைக்கு வாழ்த்து கூறி கையில் ஒரு மிட்டாய் எடுத்துக்கொண்டு அன்றைய தினசரி வேலையை செய்ய ஆரம்பித்தாள் மீரா..

இப்படியாக அவள் வாழ்க்கை இங்கு நகர்ந்து கொண்டு இருந்தாலும் மனதில் ஏனென்று கூற முடியாத ஒரு நெருடலும் அவ்வப்பொழுது எட்டி பார்த்தது.. மீராவின் மனமே அவளிடம் “ நீ செய்வது சரிதானா ??” என்று பலமுறை கேட்டுவிட்டது..

பகல் நேரத்தில் வேலையின் காரணமாக நேரத்தை கழித்தாலும், இரவின் தனிமையில் அவள் தன்னை பற்றியும், தன் வாழ்க்கை பற்றியும் சிந்திக்கும் பொழுது அவள் மனதில் பாரம் ஏறி கொள்ளும்.. அதிலும் தன்னவனை பற்றி என்னும் பொழுது அவளால் வேறு எதிலும் கவனம் வைக்க முடியாது..

இப்படிதான் ஒருநாள் தன் கணவனின் புகைப்படத்தை கையில் வைத்து அவனிடம் நேரில் பேசுவது போல பேசிக்கொண்டு இருந்தாள் மீரா..

“ இப்போ நீங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க ?? சாப்பிட்டிங்களா ?? உங்களை நேருல பாக்கணும் போல இருக்கே.. நான் இங்க இருந்தாலும் என் மனசு முழுக்க உங்களை சுத்தி தான் இருக்கு.. ஆனா நமக்கு இதை விட்டா வேற நல்ல வழி இல்லையே.. நம்ம வாழ்க்கை நல்லா இருக்கணும்னா இப்படி நம்ம தனி தனியா தானே இருந்தாகணும் “ என்று தன் போக்கில் பேசி கொண்டு இருந்தவளை தனம் பார்த்துவிட்டார்..

“ என்னா கண்ணு மீரா.. இப்படி போட்டோ கூட நீயா பேசிகிட்டு இருக்க?? இதுக்கு நீயும் தம்பி கூட வெளிநாட்டுக்கே போயி இருக்கலாம்ல??” என்று கேள்வி கேட்டபடி உள்ளே வந்தவரை பார்த்து திறு திறுவென்று முழித்தாள்..

“ என்னா கண்ணு கோழி திருடுன களவாணி பைய மாதிரி முழிக்கிற.. இப்படியா புதுசா கல்யாணம் செஞ்சு பொழப்புக்காக தனி தனியா வந்து கஷ்டபடனும் ??”

“ அது.. அது இல்லை தனக்கா.. அது கொஞ்சம் அவர் நியாபகமா இருந்தது  அதான்.. “ என்று அவர் முகம் பார்த்து பேச இயலாமல் தலை கவிழ்ந்து கொண்டாள்..

“ ம்ம் சரி சரி எனக்கு புரியுது.. நீ எதுவும் வருத்தபடதா என்ன.. நீ வேணா பாரு கொஞ்ச நேரத்துல தம்பி கிட்ட இருந்து போன் வரும் “ என்று கூறி முடிக்கவில்லை, அவளது அலைபேசி சிணுங்க ஆரம்பித்தது..

அதை கேட்ட தனம் “ நான் சொல்லல “ என்று கூறிவிட்டு நிம்மதியா பேசிட்டு தூங்கு என்று கூறி சென்றார்..

அவர் சென்றதும் சில நொடிகள் அலைபேசியையே பார்த்தவள் பின் பேச தொடங்கினாள்.. தன் மனத்தில் நினைப்பது, அவள் வருத்தம், அவள் அன்பு என்று அவள் எண்ணத்தில் என்ன என்ன எண்ணங்கள் அப்பொழுது தோன்றியதோ அனைத்தயும் அலைபேசியில் பேசி முடித்தாள்.. ஆனால் கண்களில் இருந்து வழிந்த கண்ணீரை மட்டும் கட்டு படுத்த முடியவில்லை..

இப்படியாக இங்கு வந்த ஒரு மாதத்தில் மீரா ஒவ்வொரு இரவையும் கண்ணீரில் கழித்தாள்.. சில நேரம் தனத்தின் சந்தேக பார்வையை எதிர்கொள்ள நேரிடும் பொழுது அலைபேசியை எடுத்துக்கொண்டு தன் கணவனோடு பேச சென்று விடுவாள்..

தனத்தின் பார்வையில் இருந்து தப்பியவள் சரியாக மதரின் பார்வையில் மாட்டி கொண்டாள்.. பள்ளி முடிந்து வீட்டிற்கு கிளம்பி கொண்டு இருந்த மீராவை தனம் வந்து “ கண்ணு உன்னைய மதர் கூப்பிட்டாங்க.. நீ என்னானு கேட்டு வா நான் வெளிய இருக்கேன் “ என்று கூறி செல்லவும்
“என்ன விஷயமா இருக்கும்” என்று யோசித்தபடி தலைமை ஆசிரியை அறையை நோக்கி சென்றாள்..

“ மதர் என்னைய கூப்பிட்டதா தனம் அக்கா சொன்னாங்க”

“ ம்ம் உக்காரு மீரா.. உன்கிட்ட பேசணும்னு தான் வர சொன்னேன்.. இங்க நீ வந்த பிறகு உன்ட்ட பேசணும்னு நினைப்பேன். ஆனா நேரம் கிடைக்கல.. சரி சொல்லு என்ன முடிவு பண்ணி இருக்க ??”

அவரது கேள்வியில் முகம் வெளிற எதிரே இருந்தவரை பார்த்தவள் பதில் எதுவும் கூறாமல் “மதர் “ என்று மட்டும் கூறினாள்..

“ஆமா மீரா.. நீ வாழவேண்டிய பொண்ணு.. இந்த வயசுல நம்ம பண்ணுறது எல்லாம் சரியா தான் தோணும். ஆனா பின்னால நினைச்சு பார்க்கும் போது தான் நாம பண்ண தப்பு எல்லாம் தெரியும்..”

“ இல்ல மதர் அது வந்து…”

“ பொறு மா நான் பேசிக்கிறேன்.. நீ வந்து இங்க வேலை கேட்டப்போ என்னால முடியாதுன்னு சொல்ல முடியல.. ஏன்னா அந்த நேரத்துல உனக்கு கண்டிப்பா ஒரு பாதுகாப்பு தேவை பட்டது.. ஆனா இப்போ இங்க வந்து ஒரு மாசத்துக்கும் மேல ஆகபோது..”

“ நல்ல யோசனை செஞ்சு பாரு.. உன் வாழ்க்கை இங்க இல்ல மீரா.. இங்க வந்ததுல இருந்து நானும் பார்த்துகிட்டு தான் இருக்கேன் ஒருநாள் கூட உன் முகம் முழு சந்தோசத்தோட இல்ல.. எனக்கு ஒரு பொண்ணு இருந்தா அவளுக்கும் உன் வயசு தான் இருக்கும்.. அதுனால தான் உன்னைய ஒரு அம்மா ஸ்தானத்துல இருந்து கூப்பிட்டு பேசிட்டு இருக்கேன்..”

“ம்ம் நீங்க சொல்லுறது சரிதான் மதர்.. ஆனா… நான்.. நான் எல்லாம் முடிவு பண்ணிட்டு தான் இங்க வந்தேன்.. கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கு மதர்.. ஆனா போக போக கண்டிப்பா என்னைய நானே மாதிப்பேன் “ என்றாள் குரலில் வருந்தி வரவழைத்த உறுதியுடன்..

அவள் பேசியதை கேட்ட மதர் சிரித்தபடி “ உன் வயசை எல்லாம் தாண்டி தான் மீரா நான் வந்து இருக்கேன்.. நான் இப்போ உன்கிட்ட பேசுறது நீ உன்னைய மாத்திக்க இல்ல.. உன் முடிவை மாதிக்கோன்னு சொல்ல தான்.. உன் வாழ்க்கை உன் கண்ணு முன்னால இருக்குது மீரா..”

“ ஆனா எனக்கு என் வாழ்கைய விட என் ஹஸ்பன்ட் ரொம்ப முக்கியம் மதர்..” என்றாள் கண்ணீர் நிரம்பிய முகத்துடன்..

ஒரு நிமிடம் இமைக்காமல் அவள் முகத்தை பார்த்த மதர் “ ஓகே மை சைல்ட்.. நான் எப்பயும், எந்த நேரத்திலும் உனக்கு ஹெல்ப் பண்ண காத்திட்டு இருக்கேன்.. இன்னும் உனக்கு நேரம் இருக்கு நல்லா யோசி.. ஆனா நீ இங்க இருக்கிற வரைக்கும் உன்னைய பத்தி யாருக்கும் தெரியாது.. அதுக்கு நான் பொறுப்பு இந்த ஊர் , இந்த ஸ்கூல் எல்லாத்தையும் பொறுத்த வரைக்கும் நீ புதுசா வேலைக்கு வந்து இருக்க அவ்வளோதான்..  தைரியமா இரு..” என்று கூறி அனுப்பி வைத்தார்..

தன் கண்களை துடைத்துக்கொண்டு தனம் இருக்கும் இடம் நோக்கி நடந்தாள் மீரா.. “ கடவுளே ஒரு நிமிஷம் மதர் என்னைய போக சொல்லிடுவாங்களோன்னு பயந்துட்டேன் “ என்று நினைத்து கொண்டே இனிமேல் தான் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தபடி நடந்தாள்..

 

உன்னோடு சேர்ந்து நூறு

ஜென்மம் வாழ்ந்திட ஆசை

ஆனால் நம் விதியில்

அப்படி ஒரு வரம்

எழுதப்பட்டு இருக்கிறதா ???

 

காதலை சேர்ந்து இருந்தால் தான்

உணர்த்த முடியும் என்று

யார் கூறியது?? – நான்

என் பிரிவிலும் உணர்த்துவேன்

 

மாயம் – தொடரும்

   

                              

                                              

                              

 

 

 

Advertisement