இமை – 6

 

சும்மா இருந்தால் மனது அவனைப் பற்றியே எண்ணிக் கொண்டிருக்கும் என நினைத்த பவித்ரா அறையில் அங்கங்கே கிடந்த பொருட்களை எல்லாம் ஒதுக்கி வைக்கத் தொடங்கினாள். மேசை வலிப்பைத் திறந்து கலைந்து கிடந்த பொருட்களை ஒதுக்கியவள் ஓரமாய் ஒரு காக்கி கவரைக் கண்டதும் எடுத்துப் பார்த்தாள். அதில் மித்ரனின் சிறுவயது புகைப்படங்கள் நிறைய இருக்க கண்கள் மலர ஆசையோடு பார்த்திருந்தாள்.

“மித்து…” உதடுகள் காதலுடன் உச்சரிக்க கைவிரல்கள் அவன் முகத்தை ஆசையுடன் வருடிக் கொடுத்தன. அவள் மனதில் பதிந்திருந்த அரும்புமீசை மித்ரனின் ஜாடை அதில் அப்படியே இருந்தது. பட்டைப் போல் மென்மையாய்  புகைப்படத்தைத் தடவிக் கொடுத்தவள் பட்டும் படாமலும் அதில் தன் இதழ் பதித்தாள்.

 

ஒரு போட்டோவில் மித்ரன் மீனாவைத் தோளோடு அணைத்துக் கொண்டு நிற்க அவர் முகம் மகனின் அன்பில் முழுமதியாய் மலர்ந்திருந்தது. அடுத்த படத்தில் அவரது முகத்தில் கேக் பூசி விடும் மித்ரன், அதற்கடுத்து ரோஹிணியும் அவர்களுடன் சேர்ந்து எடுத்த போட்டோ. ஒரு போட்டோவில் மித்ரன் அமர்ந்திருக்க அவனுக்குப் பின்னால் நின்ற ரோஹிணி இரண்டு விரல்களை அவன் தலையில் கொம்பு போல வைத்துக் கொண்டு நாக்கை நீட்டிப் பழித்துக் கொண்டு நின்றாள். அத்தையை இறுக அணைத்து முத்தமிடும் ரோஹிணி, என்று விதவிதமான புகைப்படங்களை வியப்புடன் பார்த்து நின்றாள்.

சாவித்திரி சொன்னது நினைவில் வந்தது. மீனாவுக்கு மித்ரன், ரோஹிணி இருவரின் மீதுள்ள அன்பும் அந்தப் புகைப்படங்களில் நிரம்பி வழிந்தது. அவர்களின் அருகில் மிகவும் சந்தோஷவதியாய் நின்றிருந்த மீனாவை பெருமையுடன் பார்த்தாள் பவித்ரா.

 

“என் மித்துவை அன்னை இல்லாத குறை தெரியாமல் வளர்த்த புண்ணியவதி… இந்தக் காலத்தில் இப்படியும் இருப்பார்களா… அக்காவின் மகனை வளர்ப்பதற்காய் தன் தாய்மையெனும் பாக்கியத்தையே வேண்டாமென்று வைத்தவர்… என்றும் இவரது மனம் கோணாமல் நடந்து கொள்ள வேண்டும்…” மனதில் நினைத்துக் கொண்டாள்.

 

“இப்படி ஒருவரை மனைவியாய் கொண்டும் எப்படி மித்துவின் தந்தைக்கு சந்நியாசம் போகத் தோன்றியதோ..”  யோசித்தவளுக்கு, அவர் சென்ற காரணம் மட்டும் தெரிந்திருந்தால் என்ன செய்வாளோ… அவளை இந்த வீட்டில் கொண்டு சேர்த்தது விதியா, சதியா… என்று காலமே முடிவு செய்யட்டும்.

“சரி… அத்தை வருவதற்குள் குளியலை முடித்து ஏதேனும் சிற்றுண்டி செய்து வைப்போம்…” என நினைத்தவள் குளியலறைக்குள் நுழைந்தாலும் மனது “மித்ரன் எங்கிருப்பான், அவனது இடத்துக்கு சென்றிருப்பானா…” என யோசிக்கவும் மறக்கவில்லை. மனதில் நிறைந்த  கணவனின் நினைவுகளே சுகமான தென்றலாகவும் தகிக்கும் பாலையாகவும் ஒருசேர உணரவைத்தன.

 

அடுக்களைக்குள் நுழைந்தவள் அங்கே உள்ள பொருட்களைப் பார்த்துவிட்டு சாவித்திரி பேச்சுவாக்கில் அம்மாவுக்கு ரொம்பப் பிடிக்கும் என்று சொன்ன உருளைக்கிழங்கு கட்லட் செய்து வைத்தாள். வாசலில் கார் சத்தம் கேட்கவும் ஆவலுடன் வெளியே வந்தாள்.

 

சோர்வுடன் உள்ளே வந்தார் மீனலோசனி. கையிலிருந்த கைப்பையை டீபாயின் மீது வைத்துவிட்டு ஹால் சோபாவில் அமர்ந்தார். வேகமாய் குளிர்ந்த தண்ணி பாட்டிலை எடுத்து வந்து நீட்டிய பவித்ரா, “காபி எடுக்கட்டுமா அத்தை…” என்றாள்.

“ம்ம்… சாவித்திரி எங்கே…”

 

“அவங்க பேரனுக்கு உடம்பு சரியில்லன்னு டாக்டரைக் காட்டிட்டு வரேன்னு போனாங்க… இன்னும் காணோம்…”

 

“ம்ம்…” என்றவர் அமைதியாகிவிட அவள் அடுக்களைக்கு சென்றாள்.

 

“அவர் சொன்ன டிகாஷன் அதிகமாயிடுச்சு…” மனதில் வைத்து சற்றுக் குறைவான டிகாஷனுடன் காபி கலந்து கட்லட் உடன் கொண்டு வைத்தாள்.

 

களைப்புடன் சற்றுப் பசியுமாய் வந்தவருக்கு பிடித்தமான கட்லட்டைக் கண்டதும் முகத்தில் முறுவல் மலர்ந்தது.

 

ஒன்றைக் கையிலெடுத்தவர், “நீயே பண்ணினியா மா…” எனவும், “ஆமா அத்தை… உங்களுக்கு கட்லட் பிடிக்கும்னு சாவித்திரிக்கா சொன்னாங்க… அதான் பண்ணினேன்…” என்றவள் அவரையே ஆவலுடன் பார்த்தாள்.

 

அதை சுவைத்தவர் முகம் சந்தோஷமாய் மலர அவளுக்கு உற்சாகமானது.

 

“நல்லார்க்கா அத்தை…”

 

“ம்ம்… ரொம்ப நல்லார்க்கு… உனக்கு சமையல் நல்லா வரும் போலருக்கு… மதியமும் நல்லார்ந்துச்சு…”

 

அவர் மனதாரப் பாராட்டவும் குளிர்ந்து போனாள். என் மித்துவின் அன்னையின் பாராட்டுக்காய் இன்னும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று தோன்றியது.

 

“நீயும் சாப்பிடு பவித்ரா…”

 

“அப்புறம் சாப்பிடறேன் அத்தை…” அவரது விசாரிப்பு மனதுக்கு சந்தோஷமாய் இருக்க தயக்கத்துடன் அங்கேயே நின்றாள்.

 

அவள் எதோ கேட்க நினைக்கிறாள் எனப் புரிந்து கொண்ட மீனா, “என்ன கேக்கணும் பவித்ரா…” என்றார்.

“வந்து… அவர் கால் பண்ணாரா… நல்லபடியா அங்கே போயிட்டாரா…” ஆவலோடு அவள் கேட்கவும் ஒரு நிமிடம் திகைத்த மீனா, “ம்ம்… எந்தப் பிரச்னையும் இல்லாம அங்கே ரீச் ஆகிட்டேன்னு சொன்னான்…” என்றவர் மேலே பேசாமல் எழுந்து அறைக்கு சென்றுவிட்டார்.

 

அன்று சாவித்திரி வராததால் இரவு உணவுக்கு அவளே இட்லி செய்து மீனாவை அழைக்க செல்ல அவர் படுத்திருப்பதைக் கண்டு பதறிப் போனவள், “என்னாச்சு அத்தை… உடம்புக்கு முடியலையா… டாக்டரைக் கூப்பிடவா…” எனவும், எழுந்து அமர்ந்தவர், “எனக்கு ஒண்ணும் இல்ல பவித்ரா… எதுக்கு இப்படி பதர்றே… கொஞ்சம் கால்வலி… சாவித்திரி இருந்தா தைலம் போட்டு நீவி விடுவா…” என்றவருக்கு அவளது பதட்டம் மனதைப் பிசைவது போலத் தோன்றியது.

 

“நான் இங்கயே இட்லி கொண்டு வரேன் அத்தை… சாப்பிடுங்க… நான் தைலம் போட்டு நீவி விடறேன்…” என்றவள் அவர் பதிலை எதிர்பார்க்காமல் சென்றாள்.

“இந்தப் பெண் ஏன் என்மீது இத்தனை அன்பைப் பொழிகிறாள்… இந்த சில நாள் சொந்தம் இப்படி என் மீது நேசத்தைக் காட்ட வைக்குமா…” யோசித்துக் கொண்டே அமர்ந்திருந்தார். தட்டில் பூப்போன்ற இட்லி சட்னியோடு வந்தவளிடம் மறுக்க முடியாமல் இரண்டு இட்லியை சாப்பிட்டு போதும் என்றுவிட்டார்.

 

அவள் காலில் தைலம் தேய்க்க வர, “வேண்டாம்…” என்று அவர் மறுத்தாலும் கேட்கவில்லை.

 

எந்த சலிப்பும், முகச் சுளிப்பும் இல்லாமல் அன்பை மட்டுமே முகத்தில் வழியவிட்டு சுகமாய் காலில் தைலம் தேய்த்து நீவி விடத் தொடங்கினாள். நேர்த்தியான உழிச்சல் பழகியதைப் போன்ற அவளது செயலும் காலின் இதமும் அவருக்கு ஆச்சர்யமாய் இருந்தது.

 

“பவித்ரா… உனக்கு இதெல்லாம் தெரியுமா…” வியப்புடன் கேட்டவரிடம், “ம்ம்… பக்கத்து வீட்டு அக்கா கேரள ஆயுர்வேத டாக்டர்… பொழுது போகலைன்னா அங்க போயி அவங்களுக்கு ஹெல்ப் பண்ணிட்டு இருப்பேன்… அப்படிப் பழகிட்டது தான்…” என்றாள் புன்னகையுடன்.

 

“ம்ம்… ரொம்ப சுகமா இருக்குமா… தேங்க்ஸ்…”

 

“என்ன அத்தை… நீங்க அவரோட அம்மான்னா, எனக்கும் அம்மா தானே… எங்கயாச்சும் அம்மா பொண்ணுக்கு நன்றி சொல்வாங்களா… இனி எப்ப கால் வலிச்சாலும் இந்த பொண்ணுகிட்டே சொல்லுங்க… நீவி விடறேன்…” என்று உரிமையுடன் சொல்லவும் வாயடைத்துப் போனார் மீனலோசனி.

 

“போதும் பவித்ரா… நீ போயி தூங்கு…”

 

“இன்னும் கொஞ்ச நேரம் பண்ணறேன் அத்தை…”

 

“இல்லம்மா போதும்… டைம் ஆச்சு… நீ தூங்கு…” என்றவர் சரிந்து படுத்துக் கொள்ள எல்லாம் எடுத்துவைத்து அவளது அறைக்கு சென்றாள்.

உள்ளே நுழைந்ததுமே கணவனின் நினைவு வந்து ஒட்டிக் கொண்டது. கட்டிலில் படுத்தாலும் கண்கள் மூடுவேனா என்றது.

 

உன்னைக் காணாமல் எனக்குள்

எதுவும் இயங்க மறுக்கிறதே…

இறகான இமையும் நீயின்றி

இரும்பாய் கனக்கிறதே….

 

சிணுங்கிக் கொண்டே எழுந்தவள் மேசை வலிப்பில் அவளது டைரிக்குள் பத்திரப்படுத்தி வைத்திருந்த மித்ரனின் புகைப்படத்தை வெளியே எடுத்தாள்.

 

“ஹூம்… ஊருக்குப் போனதும் அம்மாக்கு மட்டும் போன் பண்ணி சொல்லத் தோணிருக்கு… இங்கே உன் பொண்டாட்டி உன்னையே நினைச்சு தூங்காம தவிச்சிட்டு இருப்பா… அவகிட்டே பேசணும்னு என் மித்துக்குட்டிக்கு தோணவே இல்லியா…” திட்டுகிறாளா, கொஞ்சுகிறாளா என்று அவளுக்கே தெரியவில்லை.

மனம் நிறைய மித்ரன் மட்டுமே நிறைந்திருந்தான்.

 

இமை காக்கும் விழிகள்

இதயம் திருடல் தகுமோ…

விழியில் நீந்தும் உனை நினைத்தே

இரவைக் கடத்தும் இமைகள்…

 

அவளது எண்ணங்களும், கணவனைக் குறித்த எதிர்பார்ப்புகளும் கவிதையாய் மாறி டைரியில் இடம் பிடிக்கத் தொடங்கின.

 

பவித்ராவுக்குள் பல திறமைகள் நிறைந்திருந்தன.

 

நன்றாகப் படிப்பாள்… பாடுவாள்… ஆடுவாள்… கவிதை எழுதுவாள்… சமைப்பாள்… ரங்கோலி வரைவாள்… வீட்டை அலங்கரிப்பாள்… ஆனால் அவளது திறமைகளைக் கண்டு கொள்ளவோ பாராட்டவோ யாருமில்லாத காரணத்தால் எல்லாம் அவளுக்குள்ளேயே உறங்கிக் கிடந்தன.

 

அடுத்த நாள் சாவித்திரி வந்துவிட சாதாரணமாய் நகரத் தொடங்கியது நாட்கள். வேலை இல்லாத பொழுதுகளில் தோட்டத்தில் உள்ள செடிகளைப் பார்த்துக் கொண்டும் வீட்டை அலங்கரிப்பதிலுமாய் நேரத்தைப் போக்கினாள் பவித்ரா. கணவன் எப்போதாவது தனக்கு அழைப்பானா என எதிர்பார்த்தே ஒவ்வொரு நாளும் நகர்ந்தது.

 

பத்து நாட்கள் இப்படியே செல்ல பவித்ராவின் மாமா அவளைக் காண வந்திருந்தார். வீட்டு விசேஷங்களைக் கேட்டறிந்தவர் மதிய உணவு முடிந்து ஓய்வாக இருக்கையில், “பவிம்மா… உன்னை இப்படி சந்தோஷமா பார்க்க எனக்கு நிறைவா இருக்குமா… என் தங்கச்சி பொண்ணு வாழ்க்கை என்னாகுமோன்னு கவலையா இருந்துச்சு… இப்பதான் நிம்மதியா இருக்கு…” என்றார்.  

 

மாலை வீட்டுக்கு வந்த மீனாவும் அவரை நலம் விசாரித்து வீட்டுத் தோட்டத்தில் இருந்த பழம், காய்கறிகளை எல்லாம் அவர் ஊருக்கு செல்லும்போது கொடுத்தனுப்பமாறு சொன்னார்.

ஒருநாள் அங்கே தங்கி இருந்துவிட்டு அடுத்தநாள் காலையில் அவர் கிளம்பி சென்றார். நாட்கள் அழகாய் நகர்ந்தாலும் பவித்ராவின் மனதில் கணவன் தனக்கு அழைக்காமல் அன்னைக்கு மட்டும் அலைபேசுகிறானே என்ற வருத்தம் அதிகமாகிக் கொண்டே இருந்தது.

 

மீனாவும் அவளிடம் அதிக நெருக்கம் காட்டாவிட்டாலும் இயல்பாகவே பழகினார். அடுத்தநாள் சோமசுந்தரம் ரோஹிணியை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வரவும் இயல்பு நிலை மாறிப் போக மீனாவின் முகமும் கடுகடுப்பைக் காட்டியது.

 

ரோஹிணி எப்போதும் போல அவளை வேண்டுமென்றே ஏதேனும் நொட்டை சொல்லி சீண்டிக் கொண்டிருக்க, சோமசுந்தரத்திடம் “சுந்தரிம்மா நல்லாருக்காங்களா…” என்று விசாரித்ததற்கு, “ம்ம்… இருக்கா… இருக்கா…” என்று வேண்டா வெறுப்பாய் பதில் கூறியவர், அவள் நகர்ந்ததும் “அம்மாவாம், அம்மா… எல்லாம் உன் அம்மாவை சொல்லணும்… தராதரம் தெரியாம உரிமை கொடுத்து பழகிட்டு…” என்று மகளிடம் சொன்னது பவித்ராவின் காதிலும் விழ அதோடு நிறுத்திக் கொண்டாள். ரோஹிணியும் சோமசுந்தரமும் மீனாவுடன் மில்லுக்குக் கிளம்பிப் போக மெதுவாய் மூச்சுவிட்டாள் பவித்ரா.

 

அவளுக்கு சோமசுந்தரம் இப்படிப்பட்ட சுபாவம் தான் என்று தெரிந்துவிட்டதால் இப்போது பெரிதாய் வருத்தம் தோன்றவில்லை. ரோஹிணியின் சுபாவமும் அவள் மேல் மீனாம்மாவுக்கு உள்ள பிரியமும் புரிந்து கொண்டதால் அவர்களின் மாற்றமும் அவளைப் பெரிதாய் பாதிக்காமல் எப்போதும் போல அமைதியாய் இருந்தாள்.

 

அடுக்களையில் சாவித்திரிக்கு உதவிக் கொண்டிருந்த பவித்ரா, ஹாலில் வெகுநாட்களாய் வேலை செய்யாமல் உறங்கிக் கொண்டிருந்த தொலைபேசி அழைக்கவும் திகைத்தாள்.

 

“ஒருவேளை என் மித்துவாய் இருக்குமோ…” யோசித்தவள் அடுத்த நிமிடம் ரிசீவரை எடுத்திருந்தாள்.

அவள் எதிர்பார்ப்பு வீண்போகவில்லை. எதிர்ப்புறம் ஒலித்த குரல் அவளது செவியின் வழியாய் இதயத்தை நனைக்க அவளையும் மீறி விசும்பிவிட்டாள்.

 

என் மூச்சுக்காற்றும்

நீயே என்றான பிறகு

உன்னைப் பற்றிய

பேச்சே – என் சுவாசம்

என்றாகிப் போனது…

துடிக்கும் இதயத்தில் உனை

வைக்கத் துணிவில்லை கண்ணா….

உன்மீது தூசி பட்டாலே

துடிக்கும் இமையாக

நானாக வேண்டுமடா…

 

இமைப்பீலி தொடரும்…