Advertisement

அத்தியாயம் – 8

“ஹே!! பாப்பா உன் பேர் என்ன???”

“நா,… பூவி… இது ம்மா புவி..” என்று பூர்வி அழகாய் அவளையும், அருகில் இருந்த புவனாவையும் தொட்டு பெருமையாய் சொல்ல, அதே பெருமிதத்தோடு புவனாவும் பார்த்திருந்தாள். 

பூர்வியை வைத்து எடுக்கவேண்டிய காட்சிகள் அனைத்தும் முடிந்தாகிவிட்டது. அகிலனுக்கான காட்சிகள் இன்னுமிருக்க, நாளை புவனாவும் பூர்வியும் மட்டும் சென்னை கிளம்புகிறார்கள். அகிலனுக்கு இவர்களை அனுப்ப மனமில்லை, புவனாவிற்கும் அகிலனை மட்டும் விட்டு செல்ல மனமில்லை.

ஆனாலும் வந்த வேலை முடிந்தது, சென்றுதானே ஆகவேண்டும். தேவையில்லாத பேச்சுக்கள் வரும். என்னதான் இருவருக்கும் பிடித்து இருந்தாலும், அது வீண் பேச்சாய் மற்றவர் வாயில் அரைபடும் அவலாய் இருக்க விரும்பவில்லை.

இருவருமே லேசாய் மனம் சுணங்கி இருக்க, அன்று இயக்குனரின் மகனுக்கு பிறந்தநாள் என்று அவரின் குடும்பமும் ஊட்டி வந்திருந்தது.

அந்த பிறந்தநாள் விழாவில் தான் இப்பொழுது அனைவரும் இருப்பது.

பூர்வி அங்கே ஏற்கனவே பிரசித்தம் என்பதால் அனைவரோடும் வாயடித்து, விளையாடிக்கொண்டு இருக்க, சிறுவர் கூட்டமும் வர, அவர்களோடு இணைந்து கொண்டாள்.

புவனா வந்திருந்தவர்களோடு பேசிக்கொண்டு இருந்தாலும் அவளது பார்வை எல்லாம் பூர்வி மீது தான் இருந்தது. சிறு குழந்தை யாரையும் இக்காலத்தில் நம்பவும் முடியாது.

அகிலனும் அப்படித்தான், அவன் எங்கே நின்றிருந்தளும் ஒவ்வொரு நொடியும் பார்வை புவனா மீதும், பூர்வி மீது படிந்துகொண்டு தான் இருந்தது.

இப்படியான சிறுவர்கள் பேச்சில் தான் பூர்வியிடம் மற்ற குழந்தைகள் கேள்வி கேட்க அதுவும் பெருமையாய் பதில் சொல்ல புவனாவிற்கும் பெருமை தாங்கவில்லை.

அம்மாவை பற்றி கேட்ட பின்னே அடுத்த கேள்வி அப்பாவை பற்றி கேட்பதாகத்தானே இருக்கும்.

“பாப்பா… உன் அப்பா யாரு…??” என்று இன்னொரு வாண்டு கேட்க, இதையெல்லாம் கவனித்து கொண்டு இருந்த புவனாவிற்கு திடுக்கென்றானது.

குழந்தை என்ன பதில் சொல்ல போகிறாள், என்று புவனா குழம்பி பார்க்க, பூர்வியோ அந்த குழப்பம் எல்லாம் எதுவும் இல்லாமல், “ப்பா வா…???” என்று கேட்டுகொண்டே பார்வையை ஓட விட,

புவனா வேகமாய் எதுவோ சொல்ல வர,

அதனினும் வேகமாய் அகிலனை நோக்கி ஓடினாள் பூர்வி… அவனது கைகளை பிடித்து, அங்கிருந்த படியே, “இதா ஏ ப்பா…” என்று அவளை கேள்வி கேட்ட சிறுவர்களை நோக்கி கத்த, அடுத்த நொடி அங்கே மௌனம் மட்டும் தான்.

புவனா அதிர்ந்து போய் பூர்வியை பார்க்க, அகிலனும் அதே போல தான்.

அடுத்த நொடி இருவரின் பார்வையும் சந்தித்துக்கொண்டது.

பூர்விக்கு இதுவரை இப்படி சொல் அப்படி சொல் என்று அகிலனோ புவனாவோ சொன்னதே இல்லை. எப்படி தானாய் புவனாவை பூர்வி அம்மா என்று அழைத்தாளோ அதே போல அகிலனையும் அப்பா என்று சொல்லிவிட்டாள்.

சில விசயங்களை பெரியவர்களை காட்டிலும் சிறு குழந்தைகள் நன்றாய் புரிந்துகொள்ளும். குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில என்று சும்மாவா சொல்லிவைத்தார்கள்.

அகிலன் கொண்டாடினான், பூர்வி உறவாடினாள். புவனா பூரித்தாள்.

பூர்வி அகிலன் அருகில் நிற்க, முதலில் பூர்வியை கண்டவனின் பார்வையோ பின் புவனாவை காண, அவளும் இங்கேயே பார்க்க, பூர்வி அப்படி சொன்னதும் அனைவரும் முதலில் அகிலனையே காண, அவன் பார்வை போன பக்கம் புவனா இருக்கவும் அனைவரின் கண்களும் புவனாவை கேள்வியாய் கேட்க,

அகிலனோ இதற்கென்ன பதில் சொல்ல போகிறாய் என்பது போல பார்க்க, மெல்ல புன்னகைத்தபடி புவனா ஆம் என்பது போல் தலையை ஆட்டினாள்.      

அவ்வளவு தான் அடுத்த நொடி அங்கே கை தட்டலும், ஆரவாரமும்  காதை பிளக்க, அனைவருமே அகிலனையும் புவனாவையும் வாழ்த்தினர்.இது பிறந்தநாள் விழாவா இல்லை இவர்களுக்கான வாழ்த்து விழாவா என்று சந்தேகமே, அப்படி சிறப்பாய் இருந்தது.

பூர்விக்கு தான் என்ன சொன்னோம், எதற்கு இவர்கள் இப்படி மகிழ்கிறார்கள் என்றெல்லாம் தெரியவில்லை, அகிலன் முத்தமிட்டதும் எப்பொழுதும் போல் பதிலுக்கு முத்தமிட,புவனாவும் இவர்கள் அருகில் வந்துவிட அவளது கரங்களையும் இறுக பற்றிக்கொண்டான்.

அனைவரின் மகிழ்ச்சியும் பூர்வியையும் தொற்றிக்கொள்ள, “ஹை…!!!!” என்று அவளும் மகிழ்வாய் கை தட்ட, இன்னும் இன்னும் அவ்விடத்தில் மகிழ்ச்சி பேரலை தான்.

புவனாவிற்கு ஆனந்தம் அளவிட முடியவில்லை. பூர்வி அவளது வாழ்வில் வந்த பின், புவனாவின் முடிவுகள் எல்லாம் பூர்வியை முன்னிட்டே இருக்கும், அதனாலேயே திருமணத்தை தள்ளி போட்டது.

ஆனால் இன்று பூர்வியாய் ஒரு உறவை அங்கீகரித்திருக்கிறாள். என்னதான் மனதில் ஆசை காதல் எல்லாம் இருந்தாலும், பூர்வி அகிலனது உறவு எப்படி இருக்கும் என்று அவள் யோசிக்காமல் இல்லை. இன்றோ அந்த யோசனைக்கு ஒரு நல் முடிவு கிடைத்திருக்க, புவனாவின் மனம் அத்தனை அமைதியை உணர்ந்தது.

அகிலனுக்கும் அதே போலதான்.

ஜெயித்த உணர்வு..

குழந்தைக்கு ஒருவரை பிடிக்கவேண்டும் என்றால் அது சாதாரண விஷயம் இல்லவே. அதுவும் அப்பா என்ற இடத்தில ஒருவரை வைக்கவேண்டும் என்றால் சும்மாவா??

பூர்வியை கீழே இறக்கவே இல்லை அகிலன். தூக்கியே தான் வைத்திருந்தான். தன்னை ஒருபடி பூர்வி மேலே ஏற்றியதாகவே தோன்றியது அவனுக்கு. உண்ணும் பொழுது கூட அகிலன் தூக்கி தான் வைத்திருந்தான், புவனா தான் ஊட்டினாள்.

இப்படி இருவரும் சேர்ந்து தன்னை கவனிக்கவும் அந்த குட்டிக்கு இன்னும் கொண்டாட்டம் தான்.

ஒருவழியாய் அறைக்கு வந்து சேர, இரவாகிவிட்டது. அகிலனின் தோள்களிலே பூர்வி உறங்கிவிட,

“இப்போவாது இறக்கிவிடுங்களேன்…” என்றாள் புவனா.

“ம்ம்…” என்று அவளை பார்த்தபடிதான் அகிலன் பூர்வியை படுக்க போட்டது.

 பார்வையும் மட்டும் புவனாவை விட்டு விலகாது இருக்க, அவளுக்கோ மேற்கொண்டு என்ன சொல்வது என்று தெரியாமல் தயங்கி நிற்க,

“பேபியே அப்ரூவல் கொடுத்துட்டா.. இன்னும் ஏன் புவன் சைலன்ட்டா இருக்க??” என்றபடி அவளருகே வர, அவளோ பின்னே நகர,

“புவன்…” என்று அவள் கரம் பற்றினான்..

மனதினுள்ள நடுக்கம் இருந்தாலும், வெளிக்காட்டாது, “என்ன சொல்லணும்??” என்றாள் மிடுக்காய்.

“ஹா…!!! எதுவுமே சொல்ல இல்லையா???” என்றபடி அகிலன் முன்னேற,

“நீங்க தானே எதுவும் சொல்ல தேவையில்லைன்னு சொன்னீங்க…” என்றாள்..

“அது… அது… ஒரு வேகத்துல அப்படி சொன்னேன்..”

“என்ன வேகம்…??”

“வேகம் இல்ல அழுத்தம்.. மனசை போட்டு கொன்னுட்டு இருந்த அழுத்தம்.. நீ குடுத்த அழுத்தம்…”

“நானா??? நான் எதுவுமே செய்யலையே…”

“எஸ்.. எதுவுமே பண்ணல.. ஆனா எல்லாத்தையுமே பண்ணாம பண்ண..”

“ஷ்…!!! எனக்கு இப்படி டைலாக்ஸ் எல்லாம் புரியாது சரியா..”  என்று அவனை ஒரு பார்வை பார்க்க,

“நான் புரிய வைப்பேன் சரியா??” என்று அவனும் அதே போல பார்க்க,

“ம்ம்ச்.. அகிலன்… போங்க உங்க ரூம்க்கு போங்க.. நேரமாச்சு…” என்றாள் புன்னகை உறைந்த இதழ்களுடன், பார்வையை வேறு எங்கோ பதித்தபடி.

“ஓய் இங்க பார்த்து பேசு… அதென்ன நோட்டம் எல்லாம் வேற பக்கம்…” என்றவனின் குரலில் உல்லாசமும் சல்லாபமும் நிறைந்து வழிய, புவனாவிற்கோ வெக்கம் பிடுங்கி தின்றது.

அவள் மௌனித்திருக்க, அவன் நெருங்கியிருந்தான்.

“அகிலன்… ரூமுக்கு போங்க சொல்றேன்ல…” என்றவளின் குரலில் துளியும் கண்டிப்பு இல்லை.

“என்ன புவன் நீ… பேபிலாம் எப்படி இருக்கா… நீ ரொம்ப மோசம்…” என்றவனின் சுவாசம் அவள் கன்னத்தில் உரச, அவளது விழிகளோ அகிலனை விட்டு அகலவில்லை.

அகிலனுமே புவனாவின் கண்களை கண்டபடி அவள் முகம் நோக்கி வர, சரியாய் அதே நேரம், பூர்வி “ம்மா….” என்று உறக்கத்தில் இருந்து விழிக்க, அவ்வளவு தான் இது தான் வாய்ப்பு என்று புவனா அகிலனிடம் இருந்து தப்பி பூர்வியிடம் வந்தாள்.

“பேபி லாஸ்ட்ல இப்படி கவுத்திட்டியே…” என்றபடி அகிலனும் வர,

“போதும் போங்க… நாளைக்கு நாங்க கிளம்பனும்…” என்று பூர்வியை சமாதானம் செய்தபடி சொன்னவளுக்கும் குரல் உள்ளே சென்று இருந்தது.

“ம்ம்…. ம்ம்ம்…. சரி… தூங்கு…” என்றவன் அதற்குமேல் அவளை படுத்தாமல் அவன் அறைக்கு கிளம்ப, புவனாவும் பூர்வியை உறங்கவைத்து தானும் படுத்தாள்.

உறக்கம் மட்டும் வருவேனா என்றது.

ஒருவழியாய் மறுநாள் கிளம்பி பூர்வியும் புவனாவும் சென்னை கிளம்ப, அகிலனோ முகத்தை தொங்க போட்டு திரிந்தான். புவனா கிளம்பிய அடுத்த நொடியே தன் வீட்டிற்கு அழைத்து பேசியவன் நிச்சயத்திற்கு நாள் குறிக்க சொல்ல,

அம்பிகாவோ, தனசேகரை அழைத்து பேசுகிறேன் என்று சொல்ல, அகிலனோ,

“எல்லாம் முறைப்படி தான் நடக்கவேண்டும்.. நீங்கள் தான் அங்கே செல்லவேண்டும்…” என்று முடிவாய் கூறிவிட, வேறுவழியில்லாமல்அகிலன் வீட்டினரும் புவனா வீட்டிற்கு சென்று பேச,

ஒருவழியாய் நிச்சயதார்த்த நாளும் குறிக்கப்பட்டது.

அகிலன் ஊரில் இருந்து வரவே இன்னும் ஒரு வாரம் இருக்கையில், அவன் வரும் மறுநாளே இருவருக்கும் நிச்சயம் என்று குறிக்கப்பட, புவனா அகிலனது உறவு அடுத்து அலைபேசியில் அரங்கேறியது.

எப்போதடா அந்த நாள் வரும் என்று இருவருமே காத்திருக்க, அவர்களை ரொம்பவும் ஏங்க வைக்காமல் அழகாய் அமைந்தது அவர்களின் மாலை நேரம்…

அழகிய இளம் நீல நிற வண்ணத்தில் டிசைனர் புடவையில் புவனா ஜொலிக்க, அடர் நீல நிற கோட் சூட் அணிந்து கம்பீரமாய் நின்றிருந்தான் அகிலன். இருவரின் முகத்திலும் அத்தனை மகிழ்ச்சி..

இதிலெல்லாம் அனைவரின் பார்வையையும் கவர்ந்தது, பூர்வி தான். அங்கும் இங்கும் ஓடி திரிந்து அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது. அவளும் நீல நிற கவுன் தான் அணிந்திருந்தாள்.

முக்கால்வாசி புகைப்படங்களில் அவளும் நின்றிருக்க, ஓரிரு ஆட்கள் கேள்வியாய் கூட பார்க்க, ஆனால் வந்திருந்த அனைவருக்குமே அகிலன் புவனா ஜோடியில் திருப்தி..

“பரவாயில்ல சொந்தத்துக்குல்லையே முடிச்சிட்டீங்க…” என்று அம்பிகாவை சிலர் கேட்க, அவரோ மகன் திருமணம் இனி தடையில்லாமல் நடக்கும் என்ற நிம்மதியில்,

“ஆமா என்ன இருந்தாலும் ஒன்னுக்குள்ள ஒன்னு.. என் தம்பி பொண்ணு… குடும்பத்துக்கு அடங்கி இருப்பா…” என்று பெருமையாய் பேச,

தனசேகர், கோமதியின் மனதிலும் ஒரு நிம்மதி பரவியது.

மகன் இறந்த பிறகு, பூர்வி வந்த பிறகு எங்கே புவனா தன் வாழ்வை பற்றி சிந்திக்கவே மாட்டாளோ என்ற அச்சம் அவர்களுக்குள் இருந்தபடியே இருந்தது. அப்படியே அவள் திருமணம் பற்றி யோசித்தாலும், வரும் மாப்பிள்ளையும், குடும்பமும் பூர்வியை ஏற்றுகொள்ள வேண்டுமே என்றும் இருந்தது.

ஆனால் அவர்கள் நினைத்ததற்கும் மேலாய் அகிலனது குடும்பம், வந்து சேர இப்பொழுது புவனாவும் மனதார சம்மதிக்க நிம்மதியாய் இருந்தது.

அகிலனுக்கோ கேட்கவே வேண்டாம். ஒரு பெண்ணின் மனதை வெல்வது என்பது வெறும் சாதாரணா விசயமா?? அதுவும் புவனா அவனை அவனுக்காகவேநேசிக்கிறாள். அவன் பணம் புகழை எல்லாம் தாண்டி அவன் குணத்திற்காக விரும்புகிறாள் என்று நினைக்கும் பொழுதே ஒரு கர்வம் தோன்றாமல் இல்லை.

அதே உணர்வு தான் புவனாவிற்கும்..

காதல் என்ற உணர்வை அவளுள் விதைத்த அகிலனை எண்ணி எண்ணி பூரித்தாள்.

ஒவ்வொரு விசயத்திற்கும் தன் மனதை பற்றி நினைக்கும் அகிலனை இன்னும் இன்னும் அதிகமாய் பிடித்திருந்தது அவளுக்கு. அதுவும் இப்பொழுது கூட பூர்வியை தூக்கி நிற்கிறான்.

இது ஒன்றே போதாதா??!!! அவளுக்கு அவனை இன்னும் பிடிக்க..

அகிலனோடு தனிமையில் இருக்க வேண்டும் போல் இருந்தது. இத்தனை நாள் பேசாததை எல்லாம் அவனிடம் பேசவேண்டும் போல் இருந்தது. எப்போதடா தனிமை கிட்டும் என்று காத்திருக்க,

விசேசம் முடிந்த பின்னும், இவர்களின் நெருங்கிய சொந்தங்கள் அமர்ந்து பேசிக்கொண்டு தான் இருந்தனர்.

அகிலன் புவனா ஒரு பக்கம் அமர்ந்திருக்க, பிரணவும் பூர்வியும் ஓடி  ஆடியதில் அயர்ந்து உறங்க, கோமதி, தனசேகர் தன் சொந்தங்களோடு பேசியபடி இருக்க.

அம்பிகாவும் அவர் கணவரும் வந்து புது மருமகளுக்கு தங்கள் பரிசு என்று ஓரு நகை பெட்டியை கொடுக்க, அவளோ அகிலன் முகம் நோக்கினாள். அவன் சம்மதமாய் சிரிக்க, அவளும் வாங்கிக்கொள்ள,

“ரொம்ப மெரட்டி இருக்க போல அகில்…” என்று முகிலன் கூட கிண்டல் செய்தான்.

“உன்னளவுக்கு இல்ல அகில்…” என்று பதிலுக்கு நிலாவை கை காட்டினான் அகிலன்.

அனைத்தும் நன்றாய் தான் சென்றுகொண்டு இருந்தது.. ஆனால் சில நேரங்கள் சொந்தகளின் வாயும் சும்மா இருக்காதே.

“பரவாயில்லக்கா ஒருவழியா அந்த நிச்சயம் நின்னது வெளிய தெரியுறதுக்கு முன்னாடி நம்ம சொந்தம்குள்ளேயே பொண்ண பார்த்துட்டீங்க…” என்று ஒரு பெண்மணி சொல்ல, அம்பிகா முகத்தில் பெருமை தாங்க முடியவில்லை.

“பின்ன இருக்காத.. என் மகன கட்டிக்க குடுத்து வைக்கவேணாமா…??” என்று சொல்ல, அகிலன் கூட புவனாவை பார்த்து புருவம் உயர்த்தினான்..

அவளும் கூட சிரித்துக்கொண்டாள்.

“ஏன் அண்ணி.. முதல்ல தனா அண்ணா வீட்லையும் சரின்னு சொல்லலையாமே…” என்று இன்னொரு பெண்மணி கேட்க, இதற்கு அம்பிகா அகிலன் புவனாவின் காதலை பற்றிகூட சொல்லியிருக்கலாம். ஆனால் என்ன தடுத்ததோ,

“அதெப்படி?? நான் கூட வேற இடம் இது நடக்காதோன்னு நினைச்சேன்.. ஆனா அகில், சொன்ன மாதிரியே செஞ்சிட்டான்..  முன்னமே முடிவு பண்ணிட்டான். என் வழியில இதை சரி பண்றேன்னு சொன்னான்…  அதே போல அவன் வழியிலேயே போய் புவனாவ சம்மதிக்க வச்சிட்டான்.. எத்தனை வசனம் எல்லாம் பேசி நடிக்கிறான்…” என்று அம்பிகா பெருமையாய் பேச,   

சிரித்த முகமாகவே இதையெல்லாம் பார்த்திருந்த புவனாவின் முகம் அப்படியே மாறிவிட்டது.

அன்றே முடிவெடுத்தான் என்றால் என்ன அர்த்தம்?? அப்படியானால் அனைத்துமே முன்பே முடிவு செய்ய பட்டதா?? என் வழியில் பார்த்துக்கொள்கிறேன் என்று கூறியிருக்கிறானே அப்படியானால் இவன் வழி ஏது??

மனம் பலவாறாய் சிந்திக்க, அத்தனை நேரம் இருந்த மகிழ்ச்சி இப்பொழுது சிறிதும் இல்லை. எதிலோ தோற்ற உணர்வு…

நடந்த எதுவும் தானாய் நடக்கவில்லை.. அகிலனின் முடிவுபடி நடந்திருக்கிறது.. அவன் காதல் செய்தது, பார்த்தது, பேசியது, கொஞ்சியது குலாவியது எல்லாம்… எல்லாம்… அவன் முதலிலேயே யோசித்து செய்திருக்கிறான்..

இப்படியெல்லாம் எண்ணங்கள் போக, புவனாவிற்கு ஒருநொடி கூட இருக்க முடியவில்லை..                   

 

 

 

 

 

 

Advertisement