Advertisement

தேடல்  – 2

“ம்மா புவ்வா… ஆ…” என்று அழகாய் பூர்வி வாய் திறக்க, புவனாவிற்கு மகிழ்ச்சியாய் இருந்தது. எந்த குழந்தையும் அடம் செய்யாமல் இங்கு அங்கு ஓட்டம் பிடிக்காமல் சமத்தாய் உண்டால் யாருக்கு தான் மகிழ்வாய் இருக்காது.

“பூர்வி குட்டி சமத்து குட்டி.. எவ்வளோ அழகா வாய் திறக்கிறா…” என்று அவள் கன்னத்தில் தன் முத்தத்தை பதிக்க, அவள் உதட்டிலும் லேசாய் பூர்வியின் கன்னத்தில் ஒட்டியிருந்தது ஓட்டிக்கொண்டது.

“ஹி..ஹி….ம்மா பூவி.. புவ்வா…”என்று பூர்வி கை தட்டி சிரிக்க, அவளுமே தன் வாயை துடைத்தபடி சிரித்துக்கொண்டாள்.

நாளுக்கு ஒருவேளையாவது பூர்வியை அவர்கள் வீட்டுக்கு எதிரே இருக்கும் சிறுவர் பூங்காவிற்கு அழைத்து சென்று ஊட்டவேண்டும். அன்றும் அப்படிதான் மாலை நேரம் என்பதால், நிறைய குழந்தைகள் விளையாடிக்கொண்டு இருக்க, புவனாவும் பூர்வியை அமர்த்தி வேக வைத்த ஆப்பிளை மசித்து ஊட்டிக்கொண்டு இருந்தாள். அப்படியே கொடுத்தால் துப்பி விடுகிறாள் என்று இப்படி கொடுப்பது. பூர்விக்கு தான் சாப்பிடும் அனைத்துமே புவ்வா தான்.

“ண்ணா… க்கா…” என்று அங்கே இருக்கும் சிறுவர்களை கை காட்டியபடி உண்ட பூர்வியையும், அவளது அத்தனை பேச்சிற்கும் பதில் சொல்லிக்கொண்டு பொறுமையாய் குழந்தையோடு பேசும் புவனாவையும் அகிலன் பார்வை அளந்தபடி இருந்தது.

அகிலனின் இந்த பழக்கம் இரண்டொரு நாளாய் தொடர்கிறது. முதல் நாள் எதார்ச்சையாக இப்பக்கம் வந்தவன், அலைபேசி அழைக்கவும் காரை பார்க்கின் மர நிழலில் நிறுத்திவிட்டு பேசினான்.

“எஸ் எஸ்.. நீயு ப்ராஜெக்ட் தான்.. யா டிப்பரன்ட்டா ட்ரை பண்றாங்க அதான் ஓகே சொன்னேன்…”

….

“நோ.. நோ… நீங்க சொல்றது தப்பு.. ஒரு மாசமோ ஒரு வருசமோ… நம்ம எப்படி நடிக்கிறோம்.. ஆடியன்ஸ் கிட்ட ரீச் எப்படின்னு தான் பார்க்கணும்..”

….

“எஸ்.. மினி சீரியல் தான்.. டோட்டலி ஒன் அண்ட் ஹால்ப் மன்த் டெலிகாஸ்ட்…”

“ஓகே.. தேங்க்ஸ்..” என்று அலைபேசியை அணைத்தவனின் கவனத்தை பூர்வியின் “ம்மா…” என்ற குரல் தான் ஈர்த்தது. கையில் எதுவோ ஒரு இலையை வைத்துக்கொண்டு வேகமாய் புவனாவை நோக்கி ஓடி வந்தாள்.

இப்பொழுதெல்லாம் எந்த குழந்தையை பார்த்தாலும் அவர்களது உடல் மொழியை சற்று கூர்ந்து கவனிக்க தொடங்கியிருந்தான் அகிலன். புது நாடகத்திற்கான ஆயத்தம். குழந்தைகளிடம் புதிதாய் வித்யாசமாய் ஏதாவது பழக்கம், செய்கை இருக்கிறதா என்று பிறருக்கு தெரியாமல் கவனிப்பான்.

வீட்டில் பிரணவ் இருக்கிறான் தான். அகிலன் வீட்டிற்கு செல்லும் நேரம் அவன் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பான். இதில் எங்கே அவனோடு நேரம் செலவிடுவது.

இப்படி ஆரம்பித்தது தான் இது. ஷூட்டிங்குகள் இருந்தாலும் மாலை வேளைகளில் நேரம் கிடைத்தால் இங்கே வந்துவிடுகிறான். காரினுள் இருந்தே   இவர்களை பார்த்தபடி அமர்ந்திருப்பான். அவனுக்கு புவனாவையும் யார் என்று தெரியாது, பூர்வியையும் யார் என்று தெரியாது.

ஏனோ பூர்வியை காணும் பொழுதெல்லாம் மனம் லேசாகிறது. இவனது கதைக்கும் இப்படியான இரண்டு வயது சுட்டி குழந்தை தான் தேவை. இந்த சில நாட்களில் பூர்வியிடம் அவனை இழுக்கும் ஒரு விசயம்,புவனா என்ன சொன்னாலும் அதை சரியாய் புரிந்துகொண்ட அதற்கேற்ப நடக்கிறாள்.   தேவையில்லாத அடம் அழுகை எதுவும் இல்லாத சுட்டி பெண்.

இப்படியான ஒரு குழந்தை அவன் கதைக்கு அமைந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றிய அதே நொடி, இந்த குழந்தையையே கேட்டு பார்ப்போம் என்ற எண்ணம் தோன்ற, வேகமாய் காரை விட்டு இறங்கியிருந்தான். இன்னொன்று தான் கேட்டு ஒருவர் மறுப்பார்களா என்ற எண்ணமும் இருந்தது.

அவ்வளவு தான் அங்கே இங்கே என்று விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் இவனை கண்டதும், ஓடி வந்து இவனை சூழ்ந்துகொண்டனர்.முகம் சுளிக்காமல், ஆளுக்கு தக்க ஒரு பதில் சொல்லி அனைவரது கவனத்தையும் விளையாட்டின் பக்கம் மீண்டும் திருப்பி விட்டு, புவனா பக்கம் திரும்பினான்.

எப்படியும் அவளும் தன்னை தான் ஆச்சரியமாய் பார்த்தபடி இருப்பாள் என்ற எண்ணத்தோடு பார்த்தால் அகிலனுக்கு பெருத்த ஏமாற்றமே. ஏனெனில் அவன் நடிக்க வந்த பிறகு யார் அவனை பார்த்தாலும் ஒரு சிநேக புன்னகையாவது புரிவர்.

ஆனால் இவளோ அகிலன் என்று ஒருவன் அங்கு இருக்கிறான், இத்தனை நேரம் அங்கிருந்த குழந்தைகள் எல்லாம் அவனை சூழ்ந்து நின்று ஆரவாரம் செய்தனர் என்பது எல்லாம் எங்கோ நடக்கிறது இல்லை இங்கு அப்படி எதுவும் நடக்கவில்லை என்ற பாவனையில் இருந்தாள்.

இவனுக்கு ஆச்சரியமாய் போனது. ஆச்சரியம் என்பதனை விட அதிர்ச்சி. ஒருவேளை பிள்ளைக்கு உணவூட்டுவதில் அவனிடம் கவனமில்லையோ, என்று எண்ணியபடி அவளருகில் சென்றான். 

“ம்மா…” என்று பூர்வி புவனாவின் கன்னம் தொட்டு அகிலனை காட்ட,

“அமைதியா சாப்பிடு பூர்வி…” என்றவள் அவன் நிற்பதை சிறிதும் சட்டை செய்யவில்லை. அகிலனுக்கு ஒருமாதிரி ஆகிவிட்டது. என்ன ஒரு திமிர் இவளுக்கு என்று எண்ணியவன்,  

“எக்ஸ்கியூஸ் மீ…” என்று அழுத்தமாய் அழைக்க,

“உங்களுக்கு எல்லாம் எத்தனை தடவை சொன்னாலும் புரியாதா?? இல்ல புரிஞ்சுக்க மண்டைக்குள்ள எதுவும் இல்லையா???” என்று கண்களை விரித்து நாசி விடைக்க புவனா கேட்ட விதத்தில் நிஜமாகவே அகிலன் திகைத்து தான் நின்றான்.

ஆனால் புவனா இதோடு நிற்பதாய் தெரியவில்லை.

“என்ன அப்படியே ஸ்டன் ஆகி நிக்கிறீங்க..?? உங்க நடிப்பை என்கிட்ட காட்ட வேண்டாம்…” என்றவள் “வா டா குட்டி வீட்டுக்கு போவோம்…” என்று பூர்வியை தூக்கி நடக்க, அகிலனுக்கு தன் உணர்வுகளை கட்டுப்படுத்த முடியவில்லை.

அவனுக்கு தெரிந்து யாரும் இப்படி அவனை அவமான படுத்தியது இல்லை. முதல் முறையாய் ஒருத்தி யாரென்றே தெரியாதவள், எதற்கென்றே தெரியாமல் இப்படி பேசவும் அவனுக்கு ஒரு மாதிரியாகிவிட்டது. தன்னிடம் இவள் என்ன குறை கண்டாள் என்று தெரிந்தே ஆகவேண்டும் போல் தோன்ற,

“ஏய் நில்லு…” என்று புவனாவின் கைகளை பிடித்து நிறுத்தியிருந்தான்.

“ஹவ் டேர் யூ…” என்றபடி அவள் திரும்ப, அவனது பிடி இன்னும் இறுகியது.

முறைத்தபடி அவன் முகம் நோக்க, அவனுமே கூட கோவமாய் தான் புவனாவின் முகத்தை பார்த்தபடி நின்றிருந்தான். இருவரின் பார்வையும் ஒன்றோடு ஒன்று போரிடும் வேலை,

“ம்மா…” என்ற பூர்வியின் குரல் இருவரையும் கலைத்தது

ஒருமுறை கண்களை இறுக மூடி திறந்தவள், “ப்ளீஸ்.. இனியும் நீங்களோ உங்க பேமிலியோ எங்களை தொல்லை செய்யாம இருந்தா நல்லது…” என்று பதமாய் தான் கூறிட முயன்றாள்.

“என்னை யாருன்னு தெரியுமா…??” என்றவனின் வார்த்தைகளில் அனலின் நெடி.

“ஏன் தெரியாது..??நல்லாவே தெரியும்…”

“என்ன நல்லாவே தெரியும்???” நீ விளக்கம் சொல்லியே ஆகவேண்டும் என்ற பாவனை அவனிடம் இருக்க, அங்கே இங்கே என்று தெருவில் இருப்போருக்கெல்லாம் இவர்கள் பேசுவது நல்ல வேடிக்கையாய் இருந்தது.

அகிலன் ஊரறிந்தவன், புவனாவையும் அங்கே அனைவர்க்கும் தெரியும். ஆனால் சம்பந்தமே இல்லாமல் இவர்கள் ஏன் இப்படி பேசிக்கொள்கிறார்கள் என்று அனைவருமே ஒரு நாடகம் பார்ப்பது போல் பார்த்துகொண்டு இருந்தனர். அதற்குள் விஷயம் புவனாவின் வீட்டிற்கு சென்றிருக்க, தனசேகர் வேகமாய் ஓடிவந்தார்.

“புவி என்னமா இது ரோட்ல நின்னு.. தம்பி உள்ள வாங்க… உள்ள வாங்க…” என்று அழைக்க, அவனோ யாரிவர் என்பது போல பார்த்தான்.

“தாத்தா….” என்று பூர்வி அவரிடம் தாவ, பூர்வியை தன் தந்தையிடம் கொடுத்துவிட்டு அகிலனை ஒரு பார்வை பார்த்தவிட்டு வேகமாய் தங்கள் வீட்டிற்குள் சென்றுவிட்டாள் புவனா.

கோமதி, “என்ன புவி…” என்று கேட்டபடி வர, அதற்குள் தனசேகர் அகிலனை வீட்டிற்குள் அழைத்து வந்திருந்தார்.

அவனுக்கு நிஜமாகவே நடப்பது அனைத்தும் புதிரான கதை போலவே இருந்தது.கோமதியும் மரியாதையாய் “வாங்க தம்பி…” என்றழைக்க, இவளோ இடுத்தமாய் நின்றிருந்தாள். அகிலனை பொருத்தமட்டில் தான் ஒரு நடிகன் என்பதனாலேயே இத்தனை மரியாதை என்று எண்ணியிருந்தான்.

“நேத்து தான் உங்கம்மா கிட்ட பேசினேன்..” என்று தனசேகர் கூறவும்,

“வாட்..??” என்று புரியாமல் பார்த்தான்.

அவனுக்கு நிஜமாகவே புரியவில்லை. இவர்களை எல்லாம் வாழ்வில் முதல் முறை காண்கிறான். ஆனால் இவர்களோ நன்கு அறிந்தவர்கள் போல் பேசுகிறார்களே என்று யோசனையாய் இருந்தது. 

“சும்மா ஒன்னும் தெரியாத மாதிரி நடிக்காதீங்க…” என்று வேகமாய் புவனா முன்னே வர,

“புவி…” என்ற தனசேகரின் பார்வை அவளை அப்படியே நிற்க வைத்தது.

“இங்க பாருங்க தம்பி. அம்பிகாக்கா உங்ககிட்ட எல்லா விவரமும் சொல்லியிருப்பாங்க தானே. புவனாவை பொண்ணு கேட்டு வந்தது சந்தோசம் தான். ஆனா பாருங்க, அவளுக்கு இப்போ கல்யாணம் பண்றதுல விருப்பம் இல்லை…” என்றார் தன்மையாகவே பேசினார்.

“அப்பா.. இப்போன்னு இல்லை எப்பவுமே இவரை கல்யாணம் பண்ண எனக்கு விருப்பம் இல்லை. எப்படி எப்படி ஒருத்திய நிச்சயம் பண்ணுவீங்க, அது நின்னு போனா அதே இடத்துல இன்னொருத்தியே வேகமா உக்கார வைக்க நினைப்பீங்க.. கொஞ்சம் கூட பீலிங்க்ஸ் எதுவுமே இல்லையா??” என்று பொரிய தொடங்கவும், அகிலனுக்கு தலையும் புரியவில்லை காலும் புரியவில்லை.

எது.. எது.. அம்மா இவர்கள் வீட்டில் பெண் கேட்டார்களா??அதும் கையில் குழந்தையோடு இருக்கும் ஒருத்தியை.. என்று எண்ணியவன், ஆராய்ச்சியாய் புவனாவை பார்க்க, அவனையும் அறியாமல் அவனது கண்கள் அவள் மீது படர்ந்தது.

அவன் கண்கள் காண்பதை மனம் உணரவில்லை. ஆனால் பார்பவர்களுக்கு அது புரியாதே. அகிலன் புவனாவை காண்கிறான் என்ற அளவே அடுத்தவர்களுக்கு புரிந்தது.

“ச்சே….” என்று அருவருப்பாய் அவன் முகம் பார்த்துவிட்டு பூர்வியை தூக்கி கொண்டு வேகமாய் தன் அறைக்குள் சென்று கதவை சாத்திக்கொண்டாள்.

கோவமாய் அகிலன் எழ, “தம்பி தம்பி… தப்பா நினைக்காதீங்க..” என்று தனசேகரும், கோமதியும் வர,

“இங்க பாருங்க, எனக்கு நிஜமாவே என்ன நடந்ததுன்னு தெரியாது. எங்கம்மா என்ன பேசினாங்க, என்ன சொன்னாங்க எதுவுமே எனக்கு தெரியாது.. சொல்ல போனா நீங்க எல்லாம் யாருன்னு கூட தெரியாது. இந்தபக்கம் வரும் போது அந்த குட்டி பாப்பாவ பார்த்தேன், என் சீரியல்ல நடிக்க கேக்கலாமேன்னு பேச வந்தேன். அவ்வளோதான்.. கொஞ்சம் உங்க பொண்ணுகிட்ட சொல்லி வைங்க…” என்றவன் கிளம்பிவிட்டான்.

அதற்குள் அங்கே புவனாவின் வீட்டு வாசலில் சற்றே கூட்டம் கூடியிருந்தது. எல்லாம் அக்கம் பக்கத்தினர் தான். தினமும் தாங்கள் டீவியில் பார்க்கும் நாயகன் இன்று கண் எதிரே வந்தால் யாருக்கு தான் வியப்பாய் இருக்காது.அதுவுமில்லாமல் புவனாவோடு வேறு நின்று பேசவும் என்னவென்று தெரிந்துகொள்ளும் ஆவலும் சேர, ஒரு வித எதிர்பார்ப்பில் நின்றிருந்தனர். ஆனால் அகிலனோ யாரையும் காணாது வேகமாய் தன் கார் நோக்கி சென்றான்.

அத்தனை வேகமாய் சென்றவனுக்கு என்ன தோன்றியதோ, லேசாய் திரும்பி பார்க்க, புவனா தான் கையில் பூர்வியை வைத்துகொண்டு பால்கனியில் இவன் போவதை வெறித்து பார்த்தபடி நின்றிருந்தாள்.பெரியவளின் முக பாவத்திற்கு அப்படியே நேர்மாறாக சிறியவளின் முகம் இருந்தது.

இவன் திரும்பிப்பார்க்கவும் பூர்வி லேசாய் சிரித்து, “டா டா…” என்று கையசைக்க, அகிலனுக்கு அத்தனை நேரம் இருந்த கோவத்தை பிடித்து வைக்க முடியவில்லை. அவனையும் அறியாது ஒரு மென் முறுவல் பூக்க, பூர்வியை பார்த்து கையசைத்தவன், புவனாவை முறைத்துவிட்டே சென்றான்.

கார் ஒட்டியவனின் மனமோ அதனை விட வேகமாய் ஓடிக்கொண்டு இருந்தது. அகிலனின் வாழ்வு இத்தனை கீழிறங்கி விட்டதா?? ஒரு திருமணத்திற்காக இன்னும் யார் யாரிடம் பேச்சு வாங்கவேண்டி இருக்கிறது. அவனை திருமணம் செய்ய ஆயிரம் பெண்கள் வருவர் ஆனால் அவனோ குடும்பத்திற்கு ஏற்ற பெண்ணை பெற்றோர் கொண்டு வரட்டும் என்று பொறுப்பை ஒப்படைக்க இதோ இப்படி எல்லாம் பேச்சு வாங்கும் நிலைக்கு வந்துவிட்டான்.

அவனுக்கு அவனது வீட்டினரை நினைத்து கடும் கோபம் தான். இன்று வரைக்கும் கூட ஒருவார்த்தை என்னிடம் பேசினால் என்ன. என் வாழ்கை தானே இது, இனி அனைத்தும் என்னிஷ்டம் என்ற முடிவிற்கு வந்துவிட்டான். 

“அம்மா…..” என்று கத்திக்கொண்டே தான் உள்ளே நுழைந்தான்.

ஹாலில் தான் அம்பிகா அமர்ந்திருந்தார். பிரணவ் அவனின் அம்மா வெண்ணிலா எல்லாம் அமர்ந்திருக்க, இவனது பார்வையோ தன் அன்னையை மட்டும் நோக்கியது.

“ஷ்.. என்ன அகில் இது.. இவ்வளோ சத்தம் போட்டு பேசினா வேலைக்காரங்க என்ன நினைப்பாங்க…” என்று அம்பிகா லேசாய் கடிய,

“என்ன நினைப்பாங்க??? இது வீடு தானே.. ஏன் இங்க சத்தம் கூச்சல் எல்லாம் இருக்க கூடாதா..??”

“நம்மக்குன்னு ஒரு ஸ்டேட்டஸ் இருக்கு அகில்…”

“மண்ணாங்கட்டி ஸ்டேட்டஸ்… தூக்கி குப்பைல போடுங்க…”

“அகில்…!!!!”

“அண்ணி ப்ளீஸ்…”

“இப்போ என்ன அகில் உனக்கு பிரச்சனை…???”

“புவனா யாரும்மா…???”

அகிலன் கேட்ட கேள்வியிலேயே அவனுக்கு அனைத்தும் தெரிந்துவிட்டது என்று புரிய, அம்பிகா, வெண்ணிலாவை ஒரு பார்வை பார்க்க, அவளோ நான் சொல்லவில்லை என்பது போல் தலையை உருட்டினாள்.

“அண்ணிய ஏன் ம்மா பாக்குறீங்க.. இப்போதான் அந்த புவனாவை பார்த்துட்டு வரேன்..” என்று உஷ்ணம் தெறிக்க கத்தினான்.

“ஓ..!!நல்லது தானே… அதுக்கு ஏன் இவ்வளோ கோவம்..”

“நல்லதா?? எது நல்லது?? என் மகனை கல்யாணம் பண்ணிக்கோன்னு போய் அந்த புவனா கிட்ட கேட்டிங்களா??? முதல்ல அவங்கல்லாம் யாரும்மா…”

“தனசேகர் ஏன் தம்பி…”

“அட.. அட… இத்தனை வருசமா இப்படி ஒரு தம்பி இருக்காங்கன்னு சொல்லவே இல்லையே… உங்களுக்கு வேண்டாம்னா சொந்தத்தை ஒதுக்கி வைப்பீங்க.. வேணும்னா கூட சேர்த்துப்பீங்க…”

“ரொம்ப பேசாத அகில்…”

“அப்படிதான் பேசுவேன்.. ஏன்னா இப்போ அந்தரத்துல தொங்கிறது என் லைப். என்கேஜ் ஆன மேரேஜ் நின்னு போச்சுன்னு தெரிஞ்சா வெளிய என்னால கொஞ்ச நாளைக்கு தலை காட்ட முடியாது… இதுல இந்த பிரச்சனை வேற…”

“அதுனால தான் நான் புவனாவை பேசினேன் டா…”

“என்கிட்டே கேட்டு இருக்கணும்…”

“நீ பிசியா இருக்க அகில், தேவை இல்லாத டென்சன் உனக்கு தர விரும்பலை…” என்று அம்பிகா மிக சாதாரணமாய் சொல்ல,

“ஸ்டாப் இட் மாம்… திஸ் இஸ் மை லைப்.. யாரும் இனி தலையிட தேவையில்லை…” என்றுவிட்டு நகர போக,

“நான் முடிவு பண்ணிட்டேன் அகில், புவனா தான் உனக்கு வைப்…” என்ற அம்பிகாவின் குரலில் திரும்பியவன், நக்கலாய் ஒரு புன்னகை புரிந்து,

“நானும் முடிவு பண்ணிட்டேன். புவனா தான் என் வைப். ஆனா அதை என் வழியில பார்த்துக்கிறேன். நீங்க யாரும் இதுல தலையிட கூடாது..” என்றுவிட்டு வேகமாய் சென்றுவிட்டான்.

அவன் புவனா பூர்வி யாரை பற்றியும் நினைக்கவில்லை. தான் எடுத்த முடிவு பற்றி மட்டுமே நினைத்தான். 

 

 

 

 

 

 

Advertisement