Advertisement

தேடல்  – 1

“குட்டி குழந்தைகளின் சுட்டி தனங்களை…..”

“ஆ… ஆ… ஆ….”

“கட்… கட்….”

இயக்குனர் கட் சொல்வதற்கு முன்னே அகிலன் சொல்லியிருந்தான். “பேபி இஸ் க்ரையிங்..” என்றபடி அவன் கையில் இருந்த ஒருவயது குழந்தையை அருகில் இருந்த பெண்ணிடம் கொடுத்துவிட்டு,

“என் லாஸ்ட் ஆட்ல ஆக்ட் பண்ண பேபியே பிக்ஸ் பண்ணிருக்கலாமே பிரான்ஸ்…” விளம்பர பட இயக்குனரிடம் லேசாய் கடிந்தான் அகிலன். அடுத்தடுத்து அவனுக்கு ஷூட்டிங் இருந்தது.

அகிலன் – இரண்டு ஆண்டுகளாய் சின்னத்திரையின் முடி சூடா மன்னன். வசதியான குடும்பம் தான் ஆனாலும் இவனுக்கு நடிப்பின் மீது ஒரு காதல். அனைத்து சேனல்களிலும் அகிலனின் நிகழ்ச்சி ஏதாவது ஒன்று ஒளிப்பரப்பாகிக்கொண்டு தான் இருக்கும். காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்பது போல், வாய்புகள் வரும் போதே அதை சரியான விதத்தில் பயன்படுத்திக்கொண்டான். எதார்த்தவாதி ஆனால் தொழிலில் சரியாய் இருந்திட வேண்டும். தன்னை சுற்றி இருப்பவர்களும் சரியாய் இருக்கவேண்டும் என்று எண்ணுபவன்.  

“சாரி சார்… இந்த பேபி தான் ஆப்ட்டா இருக்கும்னு…”

“அந்த பேபி அவ்வளோ கோ அப்ரேட் பண்ணது.. பேக்கப் பண்ணலாம்..” என்றவன் கிளம்ப தயாராக,

“சார் சார்.. ஜஸ்ட் டென் மினிட்ஸ்.. இன்னிக்கோட பினிஷ் பண்ணிடலாம்..” என்றபடி பிரான்ஸ் பின்னோடு வர,

“நோ…” என்றவனின் அருகில் வந்து அவனது உதவியாளர் எதுவோ சொல்ல, சற்றே யோசனை பாவனை காட்டியவன்.

“டென் மினிட்ஸ் தான்…” என்று பிரான்ஸை பார்த்து அழுத்தமாய் கூறிவிட்டு மீண்டும் ஷாட்டுக்கு தயாரானான்.

பத்து நிமிடங்கள் மேலும் பத்து பத்தாய் இழுத்தாலும் சிறு குழந்தைகளுக்கான பிரத்யேக ஆடை விளம்பரம் வெற்றிகரமாகவே முடிந்தது.

அடுத்தடுத்து ஷூட்டிங் முடித்து இரவு வீடு திரும்பும் பொழுது அவன் மனம் ஏனோ அமைதியாய் இல்லை. எப்பொழுதுமே வேலை முடிந்து வீடு திரும்பும் பொழுது அவன் மனம் நிர்மலமாய் இருக்கும். அது அவனது தொழில் கொடுத்த திருப்தி. ஆனால் இப்பொழுதெல்லாம் அப்படியில்லை.

இன்றும் கூட அனைத்துமே சரியாய் தான் நடந்தது ஆனால் என்னவோ ஒன்று  குறைவது போல ஓர் உணர்வு. என்னது என்றும் அவனுக்கு விளங்கிடவில்லை. அகிலன் அமைதியாய் வருவதை கண்ட அவனது உதவியாளர்,

“என்ன சார் எதுவும் பிரச்சனையா??” என்று கேட்க,

“ஹா.. நத்திங் சுதன்.. டைரக்டர் மூர்த்தி பேசினாரா..??” என்று பேச்சை திருப்பினான்.

“எஸ் சார்..”

“நிர்மல் ப்ரொடக்சன்ல இருந்து எனி கால்ஸ்??”

“எஸ் சார், நாளைக்கு ஈவ்னிங் மீட்டிங்ன்னு அல்ரெடி உங்க கிட்டே சொன்னேனே…”

“ஓ.. எஸ்.. மறந்துட்டேன்.. அந்த ஸ்கிரிப்ட் கேட்டேனே..”

“உங்க பேக்ல வச்சிட்டேன் சார்..”

“ஓகே..” என்றவன் அத்தோடு பேச்சை முடித்துக்கொண்டான்.

சமீபமாகவே வீட்டில் நடக்கும் பிரச்சனைகள் அவனை இப்படி ஒரு குழப்ப சூழலில் தள்ளியது. பொதுவாய் வீட்டு பிரச்சனையை வெளியே காட்டிக்கொள்ள மாட்டான், வெளி டென்சன்களை வீட்டில் நுழைக்கமாட்டான்.

ஆனால் இப்பொழுது அவன் இல்லத்தில் இருக்கும் பிரச்சனைகளோ வெளியே தெரிந்தால் நிச்சயம் ஒரு மாதத்திற்கு ஹாட் டாபிக் இவனது தான். கண் காது மூக்கு வைத்து HD மேக்கப் போட்டு திரித்து விடுவர். அனைத்தும் வெளியே தெரிவதற்குள் சரி செய்தாக வேண்டும் என்ற எண்ணம் தோன்ற சரியாய் அவன் வீடும் வந்துவிட்டது.

“ஓகே சுதன், டுமாரோ ஈவ்னிங் வாங்க.. போதும்..” என்று சென்றுவிட்டான்.

வீட்டினுள் நுழைந்தால் அமைதி அமைதி அமைதி மட்டுமே. இதற்கு வீட்டில் அப்பா அம்மா அண்ணன் அண்ணி குழந்தை வேலையாட்கள் என்று அத்தனை பேர். ஆனால் எப்பொழுதுமே இரவு வரும் பொழுது இப்படித்தான் இருக்கும்.

எத்தனை தாமதமாய் வந்தாலும், வா என்று வரவேற்கவோ, உண்டாயா என்று உபசரிக்கவோ, இன்று நாள் எப்படி போனது?? என்ன நடந்தது என்று அவனோடு அமர்ந்து பேசிடவோ ஒருத்தருக்கும் நேரமில்லை. மனமில்லை என்று சொல்லவேண்டும்.

ஹாலில் நின்று ஒருமுறை தன் வீட்டை பார்வையால் அலசியவன், ஆழ்ந்த மூச்சை எடுத்துவிட்டு வேகமாய் தன் அறைக்கு சென்றுவிட்டான்.

ஏனோ அதிசயமாய் அவனது அம்மா, நடக்கும் பிரச்னைகளுக்கு பொறுப்பேற்று தானே அதனை சரி செய்வதாய் சொல்லியிருக்கிறார். அவ்வளவு தான் அதற்குமேல் எதுவும் இவனிடம் அதை பற்றி பேசிக்கொள்ளவில்லை. இவனும் கேட்கும் மனநிலையில் இல்லை.

இரவு குளியலை முடித்துவிட்டு நேராய் சமையலறைக்கு வந்து தானே பாலும் சூடு செய்து குடித்துவிட்டு, சுதன் தன் பேக்கில் வைத்திருந்த அடுத்த நாடகத்திற்கான ஸ்கிரிப்ட்டை படிக்க தொடங்கினான். எத்தனை பெரிய கம்பெனியாக இருந்தாலும் கதை தனக்கு பிடித்தால் மட்டுமே சம்மதிப்பான்.

ஒரு குழந்தையை மையமாய் வைத்து நகரும் கதை போல. படிக்க ஆரம்பித்தவன் அப்படியே லயித்துவிட்டான். நேரம் போனது கூட தெரியவில்லை. பாதிக்கும் மேலே படித்தவன் அப்படியே உறங்கியும் போனான்.

ஆனால் அதே சென்னையில் மற்றொரு மூலையில் ஒருத்தி உறக்கம் வராமல் தவித்துக்கொண்டு இருந்தாள். புவனா. அவளருகில் படுத்திருந்த இரண்டு வயது  குட்டி பூர்வி ஆழந்த உறக்கத்தின் அடையாளமாய் சீரான மூச்சை வெளியிட்டு கொண்டு இருந்தது.

மெல்ல அதன் கன்னங்களை தன் விரலால் வருடியவள் மனதில் எண்ணிலடங்கா கவலை கோடுகள்.

வீட்டினர் சொல்லும் விசயங்களோ எட்டிக்காயாய் கசந்தது. கண் முன்னே அவளுக்கு இருக்கும் பொறுப்பும், கடமையும் படுத்திருக்க, இவள் எப்படி திருமணம் என்ற பந்தத்தில் தன்னை பிணைத்துகொள்ள முடியும்.

பூர்வி,‘ம்மா’ என்று அழுத்தமாய் சொல்லும் பொழுது அப்படியே அணைத்துக்கொண்டு முத்தமிட வேண்டும் போல் இருக்கும். மெல்ல நடந்தும், வேகமாய் ஓடும் அழகை இன்றெல்லாம் பார்த்தபடி இருக்கலாம். அவளது மழலையில் தேவகானமும் தோற்கும். இப்படி ஒரு அழகு குட்டியை கையில் வைத்துகொண்டு அவள் எப்படி அத்தனை சீக்கிரம் திருமணம் செய்துகொள்ள முடியும்??

ஆனால் அவள் அம்மாவோ, “இப்போவே பண்ணினா தான் ஆச்சு.. பூர்வி பெரியவளான பின்னாடி அத்தனை சுலபமா முடியாது. உனக்கும் வயசு ஓடுதா இல்லையா?? ஏன் டி நீயும் எங்களை படுத்துற..” என்று தன் பங்கிற்கு ஒரு பாடு அழுது தீர்த்தார்.

வீட்டினர் சொல்வது எல்லாம் சரிதான். ஆனால் பூர்வி..?? அவளுக்கு ஒரு அன்னையின் அரவணைப்பு வேண்டாமா??? கையில் குழந்தையோடு என்னை ஏற்றுகொள்ள யார் முன்வருவர்??

தன்னை பார்த்து பூர்வி ம்மா என்று வரும் போதெல்லாம் தன் மனம் உணர்வதை வார்த்தை கொண்டு பிறருக்கு உணர்த்திட முடியுமா?? நான் ஒருத்தி என் வாழ்வை மட்டும் சரியாக்கி சென்றுவிட்டால், பிறகு அப்பா அம்மாவை யார் பார்ப்பது, பூர்வியை யார் பார்ப்பது?? என்றெல்லாம் தோன்ற புவனாவிற்கு உறக்கம் சிறிதும் வருவது போல் தெரியவில்லை.

இதில் இப்பொழுது புதிய பிரச்சனை வேறு. என்றோ பிரிந்து சென்ற சொந்தம் ஒன்று இப்பொழுது தேடி வந்திருக்கிறது. இத்தனை வருடங்களாய் நல்லது கெட்டது என்று எதற்கும் வராமல், ஒட்டுமில்லை உறவுமில்லை என்று இருந்தவர்கள் இன்று போன் மேல் போன், ஆள் மேல் ஆள்.

“சுயநல கூட்டங்கள்…” என்று பற்களை கடித்துக்கொண்டாள்.

அவள் அப்பாவின் ஒன்றுவிட்ட அக்காவாம். இதே சென்னையில் தான் இத்தனை வருடங்களாய் இருக்கிறார்களாம். ஆனால் இதுநாள் வரை அவள் அவர்களை எல்லாம் கண்டது கூட இல்லை. புவனாவின் வீட்டில் நடந்த எந்த ஒரு நிகழ்வுக்கும் அவர்கள் வந்தது இல்லை.

அவர்கள் வீட்டில் நடந்தவைக்கு இன்று வரையிலும் ஒரு அழைப்பு இல்லை. ஆனால் இன்று அவர்களுக்கு ஒரு தேவை என்றதும் ஓடி வருகிறார்கள். காணமல் போன உறவை மீண்டும் கை பிடித்துக்கொள்ள துடிக்கிறார்கள்.

இதற்கும் ஒருபாடு புவனா பொருமி தள்ளினாள்.

“அவங்க எல்லாம் பெரிய இடம்டி..” என்று கோமதி சொல்ல,

“இருக்கட்டும் இனியும் அப்படியே இருக்க வேண்டியது தானே.. இப்போ வந்து ஏன் நம்ம நிம்மதியை கெடுக்கணும்…”

“ஷ்.. புவி.. அவங்க எனக்கு அக்கா ஒரு வகையில…”என்று தனசேகர் தன் பங்கிற்கு வர,

“இந்த அக்கா இத்தனை வருஷம் எங்கப்பா போனாங்க..” என்று அவரிடமும் தன் கோவத்தை காட்டினாள்.

புவனாவின் இத்தனை கோவத்திற்குமான காரணம் அவர்கள் இவளை பெண் கேட்டது தான். அதுவும் எப்படி ஏற்கனவே தன் மகனுக்கு வேறு ஒரு பணக்கார இடத்தில் பெண் பார்த்து பேசி முடித்து அது நின்றுபோக, இது வெளியே தெரியுமுன்னே அவசரமாய் இன்னொரு பெண்ணை முடிக்க வேண்டிய நிர்பந்தம்.

இல்லையெனில் அவர்களது ஹை ஸ்டேட்டஸ் வாழ்வு என்னாவது?? வெளியில் தெரிந்தால் அது இதென்று பேசுவார்களாம். தேவையில்லாத மன உளைச்சலாகுமாம். அதுவும் இவர்களது அருமை புதல்வனுக்கு மன உளைச்சல் ஆனால் அது அவனின் தொழிலை பாதிக்குமாம்.இப்படி நிறைய கதை பேசினார்கள். எல்லாம் கேட்க கேட்க புவனாவிற்கு எரிந்தது.

“ஏம்மா நான் என்ன சாய்ஸா.. ஏன் இவங்களுக்கு இப்போ இன்னொரு பணக்கார வீட்ல பொண்ணு கிடைக்கலையா என்ன??”

“ஏன் டி எல்லாத்தையும் தப்பு தப்பாவே நினைக்கிற. இப்போ நம்ம என்ன குறைஞ்சிட்டோம். அவங்க அளவுக்கு இல்லைனாலும் நம்மளும் நல்லாதானே இருக்கோம்..”

“அதையே தான் நானும் கேட்கிறேன்.. நம்ம நல்லாதானே இருக்கோம். பின்ன எதுக்கு அவங்க வந்ததுமே நீயும் அப்பாவும் விழுந்தடிச்சு கவனிக்கிறீங்க..”

“என்ன இருந்தாலும் சொந்தம் டி.. நீ ஒருத்தியா நிக்கிற.. பூர்வி வேற இருக்க. நாளைக்கு பின்ன நமக்கு ஆள் வேணாமா??”

“இதுக்கு நான் கண்டிப்பா சம்மதிக்க மாட்டேன் ம்மா..”

“கோமதி… வேணாம் இதை பத்தி பேசாத…” என்று தனசேகர் தன் மனைவியை அடக்க,

“எனக்கென்ன உங்க அக்காகேட்டா நீங்களே சொல்லுங்க..” என்று நகர்ந்தார்.

பத்து நாட்களாய் இது தினமும் நடக்கும் ஒன்றானது. அனைத்தையும் நினைத்தபடி ஆழ்ந்த மூச்சினை விட்டவள், பூர்வியை பார்த்தபடி கண்ணயர்ந்தாள்.

விடியல் யாருக்குமே என்ன வைத்திருக்கிறது என்று யாரும் அறியார். ஆனால் அனைவருக்குமே மனதில் ஒரு நம்பிக்கை இன்றைய விடியல் இனியதாய் இருக்குமென்று. தேடல்கள் இல்லாத வாழ்வே இல்லை. தினம் தினம் ஒவ்வொரு விதமானதாய் நம் தேடல் இருக்கிறது. 

அப்படியான அன்றைய தேடல் என்னவாக இருக்கும் என்று நினைத்தபடி தான்  அகிலனும்எழுந்தான். இன்று அவனுக்கு ஷூட்டிங் எதுவும் இல்லை. மாலை புது ஒப்பந்தம் போட படுவதற்கான மீட்டிங் மட்டுமே. சற்றே ரிலாக்ஸாக வீட்டில் இருக்கலாம் என்று எண்ணியபடி குளித்து, முடித்து கீழே வந்தான்.

அதிசயத்தின் அதிசயமாய் குடும்பம் மொத்தமும் ஒன்றாய் அமர்ந்திருந்தனர் டைனிங் ஹாலில்.

“இன்னிக்கு மழை நிச்சயம்..” என்றபடி அவனும் அங்கே செல்ல, அகிலனை கண்டதும் அவன் அண்ணன் முகிலன் லேசாய் புன்னகை புரிந்தான்.

அவன் அம்மா அப்பா மில்லி மீட்டர் புன்னகையோடு ஒருபார்வை பார்த்தார்களே ஒழிய எதுவும் பேசவில்லை. யாருக்கும் பாசம் இல்லாமல் இல்லை, ஆரம்பத்தில் இருந்து தாங்கள் பெரிய ஆட்கள் என்ற தோரணை.

ஆனால் அகிலனுக்கு இதெல்லாம் சுத்தமாய் பிடிக்காது. குடும்பத்திற்குள் என்ன சிறிய இடம், பெரிய இடம் என்ற எண்ணம். இவர்களோடு அமர்ந்து பெயருக்கு ஒன்றாய் உண்ண பேசாமல் திரும்பிவிடலாம என்று யோசித்தவனை

“சித்தப்பா.. இன்னிக்கு படம் பாக்க போலயா..” என்று கேட்ட அண்ணன் மகன் பிரணவின் கேள்வி நிறுத்தியது.

தினம் அகிலன் ஷூட்டிங் கிளம்புவது அந்த வாண்டை பொறுத்தவரை படம் பார்க்கும் வேலை என்பதாகவே இருந்தது.

“இல்லடா குட்டி.. இன்னிக்கு ஒரு படமும் சித்தப்பாக்கு இல்ல..” என்று அவன் கன்னம் தடவி கொஞ்ச,

“வேற ப்ராஜெக்ட் எதுவும் சைன் பண்ணலையா அகில்..” என்று முகிலன் கேட்க,

“ஈவ்னிங் ஒரு  மீட்டிங் இருக்கு முகில்…” என்றான் அகிலன்.

“ஹ்ம்ம் எல்லாரும் சேர்ந்து வெளிய போகலாம்னு நினைச்சேன்..” என்று அம்பிகா கூற,

“எதுவும் என்கிட்டே சொன்னாதானேம்மா தெரியும்.. எப்பவுமே நீங்களா ஒரு முடிவுக்கு வரிங்க. பிரச்சனைன்னா மட்டும் என்கிட்டே வரிங்க…”

“அகில்….!!!”

“ப்ளீஸ் ப்பா.. என்னை கொஞ்சம் பேச விடுங்க.. நான் வெளிய தான் ஸ்டார் அது இதெல்லாம் இங்க உங்க மகன் தானே. நானும் வீட்ல ஒருத்தன் தானே. எந்த ஒரு விசயமும் என்கிட்ட வர்றது இல்லை. ஒரு பிரச்சனை ஆனா மட்டும் என்ன பண்றதுன்னு கேக்குறீங்க..?? ”

“அகில் நடந்த குழப்பத்துக்கு நான் தான் பொறுப்பு ஏத்துக்கிட்டேனே.. அதை நானே சரி பண்றேன்னும் சொல்லிட்டேன்..”

“இது தான் ம்மா இங்க பிரச்சனையே… இது குடும்பம். எல்லாரும் ஒண்ணா உட்கார்ந்து பேசி முடிவு எடுக்கனும். அப்படி இருந்தா மட்டும் தான் நல்லது. அதை விட்டு எல்லாரும் நான் நான் நான் எனக்கு எனக்குனு முடிவு எடுத்து போயிட்டே இருந்தா பின்ன ஏன் எல்லாரும் ஒண்ணா இருக்கணும்.. தனி தனியா போகலாமே.. ”

“பிரச்சனை வேண்டாம் அகில்..”

“இல்ல அண்ணி.. இன்னிக்கு நான் பேசித்தான் ஆகணும்.. நீங்களும் இந்த வீட்டுக்கு வந்து அஞ்சு வருஷம் ஆச்சு.. இப்போ வரைக்கும் எனக்கு தெரிஞ்சு நீங்க எதுக்குமே வாய் திறந்தது இல்லை..” என்றவன் தன் அண்ணனை முறைக்கவும் தவறவில்லை.

இத்தனை நாள் அடக்கி வைத்திருக்க கோவம் ஆதங்கங்கள் எல்லாம் இன்று அகிலன் கொட்டி தீர்த்தான்.

அம்பிகா நல்லவர் தான், ஆனால் ஏனோ யாரிடமும் அத்தனை எளிதில் ஓட்ட மனமில்லை. அது பிள்ளைகளே என்றாலும். இப்படி ஒரு இறுக்கமாய் இருந்தால் தான் தன்னை அனைவரும் மதிப்பர் என்ற எண்ணத்திலேயே இத்தனை வருடமும் வாழ்ந்துவிட்டார். இனி அதை மாற்றிக்கொள்ள முடியவில்லை.

அவரின் இந்த குணமே இன்று அகிலனின் பிரச்சனைக்கு காரணம் ஆனது.  அவனை பொருத்தமட்டில் வீட்டில் இயல்பாய் இருக்க வேண்டும். சிரிப்பு கேலி கிண்டல் கோவம் சண்டை என்று எப்பொழுதும் வீடு வீடாய் இருக்க வேண்டும். ஆனால் அது எதுவுமே இங்கில்லை.

 

 

 

Advertisement