Advertisement

அத்தியாயம் எழுபத்தி இரண்டு :

பேசும் விழிகள்… பேசா மொழிகள்!

வர்ஷினி வாயிலில் நிற்கும் ஈஸ்வரின் பெற்றோரைப் பார்க்கவும், உடனே எழுந்தாள். அப்போது தான் ஈஸ்வர் அவர்களைப் பார்த்தான்.. “மா” என்று அழைக்கவும் இருவரும் உள்ளே வரவும்..

வர்ஷினியின் இயல்பு அப்படியே மட்டுப் பட்டது. என்ன என்று சொல்ல முடியாத ஒரு தயக்கம், பயம், மனதினில்.. கண்களிலும் அழுகை வருவேனா என்று நின்றது.. தொண்டையும் அடைத்துக் கொண்டது.. அப்படியே மாறிப் போனாள்..

வர்ஷினி என்று மலர் அவளின் அருகில் தானே செல்ல.. சிரிக்க முயன்றாலும் சிரிப்பு வருவேனா என்றது.. கண்களிலும் நீர் நிறையப் பார்திருந்தவளை,

“என்ன? என்னாச்சு?” என்று பதறினார் மலர், பின்னே சிரித்துக் கொண்டிருந்தவள் தன்னைப் பார்த்ததும் இப்படி செய்தால் என்ன வென்று நினைப்பார்..

ஒன்றுமில்லை என்பது போல தலையாட்டி நிற்கவும்.. ஈஸ்வரும் “என்ன வர்ஷி?” என.. அவனைப் பார்த்தும் ஒன்றமில்லை என்று தலையாட்டியவள்,

“வந்துடறேன் அத்தை!” என்றவள்.. “என் ரூம் எது?” என்றாள் ஈஸ்வரை பார்த்து, அவன் காட்டவும்.. உள்ளே சென்றாள்.

அவள் சென்றதும் பெற்றோர் இருவரும் என்ன என்பது போலப் பார்க்க.. “தெரியலைம்மா நல்லா தான் பேசிட்டு இருந்தா.. திடீர்ன்னு என்ன ஆச்சுன்னு தெரியலை”

“ஒரு வேளை நாங்க வந்தது பிடிக்கலையோ” என்று நமஷிவாயம் சொல்ல..

“பிடிக்கலைன்னா அழுவாங்களா.. என்னப்பா நீங்க?” என்றவன், “எல்லோரையும் பார்க்கத் தயங்குறாம்மா, ரொம்ப வருஷம் ஆச்சு இல்லையா விட்டுப் போய்.. யார் என்ன சொல்வாங்களோ இல்லை அவ டைவர்ஸ் அனுப்பினதை பத்திக் கேட்பாங்களோன்னு நினைக்கறா போல!”

முகம் கலங்கி நின்ற மலரை பார்த்து “சரியாகிடுவாம்மா, நான் பார்த்துட்டு வர்றேன்” என்று ரூமின் உள் நுழைய..

அங்கே படுக்கையில் தலையணையில் முகம் புதைத்து படுத்திருந்தால் வர்ஷினி.. உடலின் அதிர்வுகள் அவள் அழுது கொண்டிருகிறாள் என காட்ட ..

“என்ன வர்ஷி?” எனப் பரிவாக கேட்டபடி அருகில் அமர்ந்தான்.. ஆனாலும் முகத்தை எடுக்கவில்லை, அழுது கொண்டே இருக்கிறாள் எனப் புரிய..

“எதுக்கு இப்படி அழறா” என்று ஈஸ்வரும் கலங்கித் தான் போனான். “வர்ஷி அழாதே” எனத் திரும்ப திரும்ப சொல்லி அவன் அமர்ந்த வாக்கிலேயே படுத்திருந்த அவளின் இடையை அணைவாய் பிடிக்க,  

அடுத்த நொடி முகத்தைத் துடைத்தபடி எழுந்தாள். ஈஸ்வர் பார்க்கவும், ஒரு கண்ணில் இருந்த லென்ஸ் இல்லை..

ஒரு கண் லென்சுடனும் ஒரு கண் லென்ஸ் இல்லாமலும் அந்த தோற்றம் ஈஸ்வருக்கு ஒரு மாதிரி இருக்க… “ஒரு கண்ல லென்ஸ் இல்லை வர்ஷ்” என்றான்..

அழுததில் இன்னொரு கண்ணில் இருந்ததும் வெகுவாக உறுத்த அதையும்  எடுத்து விட்டாள்.. இப்போது அந்த நீல நிறக் கண்கள் அவனைப் பார்த்து இருக்க, ஈஸ்வரும் அதனையே விடாமல் பார்த்திருந்தான்.

அதுவரை அவளைப் பார்த்ததில் இருந்து இருந்த அசட்டுத்தனங்கள் எல்லாம் அந்தக் கண்களை பார்த்த நொடியில் விடைபெற்றுப் போக..

ஆழ்ந்து அவளைப் பார்த்தவன் “என்ன வர்ஷ்?” என்றான் திரும்பவும்..

“ப்ச்” என சலித்தவள், “தெரியலை அழுகை வந்துச்சு, என்னவோ.. ரொம்ப காம்ப்ளெக்ஸ் டெவலப் பண்றேனா இல்லை தனியாவே இருந்துட்டு எல்லோரையும் பார்த்ததும் நான் மட்டும் தனியா இருந்திருக்கேன்னு தோணுதா தெரியலை”     என்றவள் அப்படியே பிறகு நிறுத்திக் கொண்டாள்.

ஈஸ்வரும் அதனை மேலும் துருவாமல் “அவங்க வந்ததுனால தான் நீ அழறியோன்னு நினைச்சு அவங்க அழுதுடுவாங்க போல” எனவும்… வேகமாக குளியலறை சென்று  முகம் கழுவி வரவும், “டிரஸ் மாத்திக்கோ.. இது வேண்டாம்” என்றும் அவன் சொல்ல.. அதையும் தட்டாமல் அவன் வெளியில் சென்றதும் ஒரு சுரிதார் மாற்றி வந்தாள்.

சற்று தெளிவான முகத்துடன் வரவும் தான் மலருக்கு சற்று கலக்கம் குறைந்தது.. “அத்தை” என்று அருகில் அமர.. “எதுக்கு அழுத?” என்றார்.

“தெரியலை” எனவும், அவர் நம்பாமல் பார்க்கவும்.. “நிஜமா தெரியலை.. ஒரு வேளை யார் கிட்டயும் சொல்லாம கொள்ளாம, பார்க்கவும் செய்யாம போயிட்டேன் இல்லையா, அதனால கூட இருக்கும்!” என்றாள்.

“கொஞ்சம் நேரம் நல்லா பேசிட்டு இவனுக்கு தெரியாம உன்கிட்ட சண்டை போடணும்ன்னு தான் வந்தேன். என் ப்ளான் எல்லாம் ஃபினிஷ்” என அவர் சொல்ல..

“எதுக்கு சண்டை?” என…

“பின்னே என்னை பார்க்கவும் விடலை, பேசவும் விடலை. யாராவது என்கிட்டே உன் மருமக எப்படி இருக்கான்னு கேட்டா கூட எனக்கு சொல்லத் தெரியலை.. யாரையும் உன்கிட்ட பேச விடாம பொத்தி பொத்தி வைக்கறான்” என்றார் ஈஸ்வரை பார்த்துக் கோபமாக.

எதற்கும் பதில் பேசாமல் ஈஸ்வர் அமர்ந்திருந்தான்.. மனதிற்குள் ஒரு முறுவல் கூட.. “ஆனாலும் இந்த அம்மா கொஞ்சம் தேறிட்டாங்க” என நினைத்து.  

வர்ஷினி ஏதோ பதில் பேச வரவும்.. கண்களால் “பேசாதே” என்று வர்ஷினியிடம் சொன்னான்.

அவள் தானே யாரையும் பேச அனுமதிக்கவில்லை, ஏன் ஈஸ்வர் கூட பேசியது கிடையாதே.. இன்று அவர்களுக்குள் நடந்த பேச்சுக்கள் கூட அவர்களே எதிர்பாராதது தானே..

ஆம்! தனிமையை மிகவும் வெறுத்தாள். இதில் யாராவது நன்றாக பேசினால் பார்த்தால் கூட தாங்க இயலாது எனப் புரிந்து தான் யாரையும் அனுமதிக்கவில்லை. தன்னை எல்லோரும் இப்படி ஆக்கி விட்டதாக நினைத்து யாரையும் பார்க்கப் பிடிக்காமல் போனது. இது ஒரு வகையில் பெரிய உண்மை.  

வர்ஷினி தன்னிடம் இவ்வளவு சகஜமாக பேசுவாள் என்று ஈஸ்வர் நினைத்தது கிடையாது, ஏன் வர்ஷினியும் நினைத்துப் பார்த்திருக்கவில்லை. உண்மையில் கோபம் இருந்தாலும் அதை பிடித்து வைக்கவோ காட்டவோ முடியவில்லை.. 

“வீட்ல எல்லோரும் எப்படி இருக்காங்க அத்தை.. பிரணவி, சரண், எல்லோரும்..” என,

“எங்களோட வர்றேன்னு ஒரே ரகளை, நாங்க தான் போயிட்டு கூப்பிட்டுக்கறோம்ன்னு சமாதானம் சொல்லி வந்தேன்.”

“அவங்களுக்கு என்னை ஞாபகம் இருக்கா” என,

“அவங்க சித்தப்பாவை அடிக்கடி பார்க்கும் போது உன்னை எப்படி மறப்பாங்க.. அவன் எங்க யார் கிட்டயும் உன்னைப் பத்தி பேசமாட்டான்.. அவங்க கிட்ட மட்டும் தான் பேசுவான்”  என்றார்..

“வர சொல்லுங்களேன்” என..

திரும்பி அவர் ஈஸ்வரை தான் பார்த்தார்.. “வர சொல்லேன்மா”  என ஈஸ்வர் சொல்லவும்.. “நான் அவங்களை சொல்றேன் நீ ரஞ்சனியை வரச் சொல்லு” என்றார் மலர்..

“மா” என்றான் ஈஸ்வர் அலுப்பாக.. “சொல்லு!” என்று அதட்டினார் மலர்.. “இங்கே அவ உன் வீட்டுக்கு வந்ததே இல்லை!”

“மா, நான் ரஞ்சனி கூப்பிட்டா, அங்கே தானே முரளி எல்லாம் இருக்கான், அவனை எப்படி விட முடியும்” என,

“விஸ்வா, நான் என் பொண்ணை வரச் சொல்றேன்.. வர்ஷினியோட அப்பா வீட்டை இல்லை.. அவங்க வந்தா வரட்டும்.. அதுக்காக நீ ரஞ்சனியை கூப்பிடாம இருக்காதே. வர்ஷினி அவ குழந்தையை பார்க்கணும் தானே” என..

வர்ஷினியைத் தான் பார்த்தான்.. பின்னே என்றைக்கு இருந்தாலும் உறவுகள் எல்லோரையும் அவள் பார்த்து தானே ஆகவேண்டும், அதனை தள்ளி தள்ளி போட்டாலும்.. கடக்கும் நாட்களில் அதன் தாக்கங்கள் அதிகம் தானே..

ரஞ்சனிக்கு அழைத்தான்.. வெகு நாட்களுக்குப் பிறகான அழைப்பு.. எடுத்தவள்.. அவனின் அழைப்பிற்காக காத்திருக்க.. “ரஞ்சி” என்ற ஈஸ்வரின் குரலை கேட்டவள்.. “ஓஹ், உனக்கு என் பேர் எல்லாம் கூட ஞாபகம் இருக்கா” என..

“வீட்டுக்கு வா!” என்றான்.  

“எதுக்கு நான் உயிரோட இருக்கேனா இல்லை செத்துட்டேன்னான்னு நீ பார்க்கவா?”  

“வாயை மூடு” என்று கோபமாக அதட்டல் இட்டவன், “தாஸ் அனுப்பறேன்” என,

“வரலைன்னு சொல்றாங்களா?” என வர்ஷினி கேட்க..

“ஆம்” என்பது போலத் தலையசைத்தவன்…. கைப்பேசியில் “நீ இப்போ வர்ற.. இல்லை உன் வீட்டுக்காரனை கடத்திட்டு வந்துடுவேன்.. அப்புறம் எப்படியும் நீ வந்துடுவ!” என்று நக்கலாகச் சொல்ல..

“உனக்கு அவரை இழுக்கலைன்னா தூக்கமே வராதா” என சண்டையிட்டாள்.

“அவனை நான் எதுக்கு இழுக்கறேன், நீயே வெச்சிக்கோ!” எனவும்.. 

“பின்ன உன்கிட்டயா விடுவேன், நானே வெச்சுக்கறேன், நீ மட்டும் என்ன இவ்வளவு நாள் என்னை வீட்டுக்கு கூப்பிட்டியா, உன் பொண்டாட்டி வரவும் தானே கூப்பிடற” என பதில் பேச,

“ரொம்ப வாயாகிட்டது உனக்கு, குழந்தை தூங்கறான்னு வீட்ல விட்டுட்டு வந்த வாசலோட அனுப்பிடுவேன்” என்றான்.

“அய்ய என் பையன் மேல உனக்கு ரொம்ப பாசம் பாரு, தாய் மாமான்னு ஓடி வந்துட்ட” என ஆரம்பிக்க..  

“ஏய் வாடி முதல்ல, ஓவரா பேசாதே!” என்றபடி ஃபோனை வைத்தான்.

மலரும் வர்ஷினியும் அவனை தான் பார்த்திருந்தனர்.. “வரமாட்டேன்றா நான் என்ன செய்ய?” என்று சலித்தவன்..

“தாஸ்” என அழைக்க.. அதே சமயம் மலருக்கு ரஞ்சனியிடம் இருந்து அழைப்பு “அம்மா உன் மகன் வீடு எங்கே இருக்கு? என்ன வழி?” என,

தாஸிடம் “வேண்டாம்” என்று சொன்னவர், “வழி கேட்கறா” என்று  ஈஸ்வரிடம் கொடுக்க…

“வழி” என ஈஸ்வர் ஆரம்பிக்க.. “ஓஹ், என்னை விட்டுட்டு அப்போ உங்க அம்மாவும் உன் கூட தான் இருக்காங்களா?” என பொரிந்தவள் ஃபோனை வைத்தாள்.

நிறைய வருத்தங்கள் அவள் மனதினில்.. ஆம், அஸ்வின் விஷயம் வந்ததில் இருந்து.. அஸ்வினை ஏன் சேர்த்துக் கொள்கிறாய் என ஈஸ்வருடன் சண்டை, அவனை தள்ளி வைக்காததால் ஈஸ்வருடன் பேசுவதில்லை, வர்ஷினியிடமும் பேசவும் இல்லை..     

“நான் வேண்டாம்” என்று சொல்லும் அஸ்வின் இவர்களுக்கு முக்கியமா என ஒரு கோபம் வருத்தம்.. தானாக ஒதுங்கிக் கொண்டாள். இப்போது ஈஸ்வர் பேசவும் முள்ளாய் கீறியது.

பத்துவிற்கு அழைத்தவன்.. அவனிடம் வீட்டிற்கு வருமாறு அழைப்பு விடுத்து வழி சொல்லவும், அவன் திரும்பத் திரும்ப கேட்க.. “முரளிக்கு தெரியும் கேட்டுக்கோ” என்று வைத்து விட்டான்.. 

எல்லோரையும் எதிர்கொள்ள வேண்டுமா சலிப்ப்பாக வந்தது வர்ஷினிக்கு..

யாரையும் பார்க்கப் பிடிக்கவில்லை.. யாரும் கேள்வி கேட்டால் என்ன சொல்வது என்ற பயம், அப்படி கேட்காவிட்டால் அது என்ன உறவாக இருக்க முடியும் என்ற கோபம்.. தன்னைத் தானே வெறுத்தாள்.

“உனக்கு உறவுகளும் தெரியவில்லை, யாரோடும் பழகவும் தெரியவில்லை, யாரையும் தெரியவில்லை… இதோ இவனிடம்

விவாகரத்து கேட்டு இவனிடமே வெட்கம் கெட்டுப் போய் வந்திருக்கிறாய். ஏன் வரவேண்டும்? எதற்கு வரவேண்டும்? உன் வழியை நீ பார்த்துக் கொண்டு போக வேண்டியது தானே!” என மனது சண்டையிட..

“தனியாக எனக்கு இருக்கப் பிடிக்கவில்லை, நீ என்னிடம் கேள்வி கேட்காதே” என மனதிற்குள் அவளுக்கு அவளே கத்திக் கொண்டாள்..

“பிறகு ஏன் விவாகரத்து கேட்டாய் விட்டு விட்டுப் போக வேண்டியது தானே”

“காரணம் உனக்கு தெரியாதா? அந்தக் காரணத்தை நான் நினைக்க கூட விரும்பவில்லை, நான் நினைக்க மாட்டேன்!” என்று திரும்பும் கத்திக் கொண்டாள். ஆம்! எதை நினைத்தாலும் தனக்கு முன் அவன் வேறொரு பெண்ணிடம் காதல் சொன்னான் என்ற நினைப்பு கூடப் பிடிக்கவில்லை.. வாழ்க்கையில் மிகவும் கேவலமாக தோற்றுப் போய்விட்டதாக ஒரு எண்ணம்..

ஆம்! தன்னை மிகவும் விரும்புகின்றான் என நினைத்து திருமணதிற்கு சம்மதம் சொல்லி  பின்னும் அவன் சொன்னதையெல்லாம் செய்து.. அவன் சரிவர கவனியாத  போதும், ஏன் ஏன் என்று அவனுக்காக காரணங்கள் கண்டு,  எதுவும் பிடிக்காத போதும் தன்னால் ஆன வெகு முயற்சி செய்தாள் அவளைப் பொறுத்தவரை!

அதெல்லாம் இப்போது நினைக்கவும் பிடிக்கவில்லை எப்பொழுதும் போல.. மிகவும் கவனமாக அதை நினைவில் கொண்டு வரவில்லை. குரங்கை நினைக்காதே என்று மனம் நினைத்தால் குரங்கையே நினைத்துக் கொண்டிருப்போமே அப்படி ஒரு நிலை தனக்கு வர அவள் விட்டதில்லை இதுவரை..

இன்று தானாக எல்லாம் மீண்டும் தடம் மாறிக் கொண்டிருக்க..   மீண்டும் திரும்ப தனியாக போய்விடுவோமா என்று தோன்ற ஆரம்பித்தது.

வர்ஷினியைத் தான் கவனமாக பார்த்திருந்தான் ஈஸ்வர்.. மலரும் பார்த்து தான் இருந்தார்.. முகத்தில் எதுவும் தெரியாவிட்டாலும் கண்களில் இருந்த கலக்கம் ஈஸ்வர் கண்களுக்கு தப்பவில்லை..

“அத்தை, நான் போய் குளிச்சிட்டு வரட்டுமா?” என சம்மதம் வேண்டி நின்றாள்..

“போ, போய் குளிச்சிட்டு வா!” என..

ரூம் போகவும் அவளின் பின்னே போன ஈஸ்வர்.. “என்ன.. எங்கு இருக்கிறது” என்று காட்டி வர்ஷினி குளிக்க சென்ற பிறகு வெளியே வந்தான்.

“டைவர்ஸ்க்கு இன்னும் அப்படியே தான் இருக்காளா? மாறலையா? ஆனா ஏன் விஷ்வா?” எனக் கவலையாகக் கேட்க..  

“அம்மா இப்போ தான் வந்து இறங்கியிருக்கா”  

“உன்கிட்ட நல்லா தானே பேசறா, அப்புறம் ஏன் டைவர்ஸ் கேட்கறா? என்ன காரணம்?” என்றார் அப்போதும்..  

“மா, நடக்கறது தான் நடக்கும் விடுங்க.. தயவு செஞ்சு அவ கிட்ட மட்டும் இது பத்தி கேட்டுடாதீங்க”  

வர்ஷினி குளித்து முடித்து ரெடியாகி வர கிட்ட தட்ட ஒரு மணிநேரத்திற்கும் மேலாகியது..

முரளியும் பத்துவும் ரஞ்சனியும் வந்திருந்தனர்.. கையினில் ரஞ்சனியின் ஒன்பது மாதக் குழந்தை.. கொழுக் மொழுக் என்று இருக்க.. வர்ஷினியின் பார்வையில் யாரும் படவில்லை அந்தக் குழந்தை தான் பட்டது.. ஆசையாய் பார்த்திருந்தாள்..     

வர்ஷினியின் பார்வையைப் பார்த்த பத்து ரஞ்சனியிடம் இருந்த குழந்தையை கையினில் வாங்கி.. வர்ஷினியிடம் கொடுக்க.. அவள் வாங்கியதும் புது ஆள் என்பதால் வீரிட்டு அழ ஆரம்பித்தான்.

“அச்சோ அண்ணா, பிடிங்க, அழறான்!” என்று வேகமாக வர்ஷினி திரும்ப பத்து கையினில் கொடுக்க..

“கொஞ்சம் விளையாட்டு காட்டு வர்ஷி, பழகிடுவான்” என பத்து சொன்ன போதும்..  

“கொஞ்சம் அழுகை நிறுத்தட்டும்” என்று திரும்பக் கொடுத்து விட்டாள்.. பத்துவிடம் இருந்து மலர் வாங்கியதும்.. குழந்தை அவரில் முகத்தை புதைத்துக் கொள்ள.. “அழக்கூடாது கண்ணா! அத்தை பாரு” என்று மலர் முதுகை தட்டிக் கொடுத்து சமாதானம் சொல்லவும், அடுத்த நொடி முகம் நிமிர்த்தி பாட்டியிடம் பொக்கை வாய் காட்டி சிரிக்க..   

என்னவோ ஒரு இனம் விளங்கா ஏக்கம் நெஞ்சினில் ஒரு பிரவாகமாக வர்ஷினி பொங்கியது. நினைவு தெரிந்த நாளாக யாரையும் அவள் போல தேடியதில்லை என்றா.. அது போலத் தன்னை யாரும் தட்டிக் கொடுத்து வளர்க்கவில்லை என்றா.. இல்லை தனக்கு அந்தக் குழந்தை போல யாரிடமும் முகம் சாய்க்க முடியவில்லை என்றா..  ஏன் தனக்கு மட்டும் யாரையும் பிடித்தம் கொள்ள முடியவில்லை என்றா.. தெரியவில்லை..  ஒருவன் தன் பின் பித்தனாய் சுற்றிய போதும் எதையும் அவனிடம் பகிர முடியவில்லை, ஆனால் ஒரு வகையில் ஏதாவது பகிர்ந்திருக்கின்றாள் என்றால் அதுவும் அவனிடம் மட்டும் தான்.   

“நீயேன் இப்படி இளைச்சிட்ட வர்ஷி” என்று ரஞ்சனி கேட்க..

“டயட் இருந்தேன் அண்ணி, அண்ட் வொர்க் அவுட் கூட பண்ணினேன்” என்றவள்.. “எப்படி இருக்கீங்க?” என்றவள்.. முரளியைப் பார்த்து “ஷாலினி அண்ணி வரலையா?” என..

எத்தனை முறை ஷாலினி அழைத்தும் எடுக்காதவள் இப்போது எதுவும் நடவாத மாதிரி கேட்கவும்.. “நீ அவ மெசேஜ்கும் ரெஸ்பான்ட் பண்ணலை, ஃபோனும் எடுக்கலை.. எத்தனை தடவை கூப்பிட்டு இருப்பா?” என்ற ஆதங்கம் வெளிவர.  

அந்தக் குரல் அப்பட்டமாய் வர்ஷினியைக குற்றம் சாட்டியது..

அது வர்ஷினியை மிக பலமாய் தாக்க, “ஓஹ்…” என்றவள்… “இப்ப நான் எடுக்கலைன்னு ஷாலினி அண்ணி லைஃப்ல என்ன சேஞ் ஆச்சு அண்ணா.. அவங்க தனியா இருந்தாங்களா? அவங்க அப்பா அம்மா கூடப் பேசலையா? அவங்க கூடப் பொறந்தவங்க பேசலையா? அவங்க பையனை கொஞ்சலையா? அவங்க புருஷன் அவங்களை கவனிக்கலையா? பேசக் கூட ஆள் இல்லாம நிறைய நேரம் தனியா இருந்தாங்களா? ஒரு காய்ச்சல் தலைவலி வயிறு வலின்னு கூட சொல்ல ஆள் இல்லாம இருந்தாங்களா? என்று நிறுத்தியவள்..  

“இன்னும் நிறைய இருக்கு அண்ணா, இவ்வளவு வேண்டாம் இந்த மாதிரி ஒன்னு சொல்லுங்க, நான் ஃபோன் எடுக்காததுனால எந்த வகையில் அவங்க கஷ்டப்பட்டாங்க.. அதை ஒரு பெரிய விஷயமா இப்படி ப்ளேம் பண்றீங்க” என கேட்கக் கேட்க எல்லோரும் ஸ்தம்பித்து நின்றார்கள்..

ஈஸ்வர் தலையை பிடித்துக் கொண்டு அப்படியே அமர்ந்து விட்டான்.. ஆனாலும் வர்ஷினியை நிறுத்தவும் இல்லை.. மனதில் இருப்பதை கொட்டி விடட்டும் வைத்து மருக வேண்டாம் என நினைத்தான்..  

ஆனாலும் அவள் பேச பேச.. உன் மனைவி அவள்.. உன்னால் உன் காதலை அவளுக்கு காட்டிட முடியவில்லை.. புரிய வைக்க முடிந்த அளவிற்கு உணர வைக்க முடியவில்லை..

நிறைய தவித்து இருக்கிறாள்.. உன் குழந்தையை நீ தவிக்க விட்டு விடுவாயா..  அவளும் உன் குழந்தை தானேடா.. யோசிக்கும் போதே கண்கள் கலங்காமல் இருக்க வெகு பிரயர்த்தனப்பட்டான்.    

முரளி உடனே பதறி “வர்ஷினி நான் இந்த அர்த்ததுல எல்லாம் சொல்லலை.. ரொம்ப நாளா நீ எடுக்கவே இல்லை.. எப்பவும் அவ புலம்பிட்டே இருப்பா அதுதான் கேட்டவுடனே வந்துடுச்சு.. இப்போ கூட ஈஸ்வர் ஃபோன் வந்தப்போ தான் குளிக்கப் போனா.. இப்போ செவன் மன்த்ஸ்.. திரும்பவும் கன்சீவா இருக்கா.. நிஷாந்த்க்கு காய்ச்சல் வேற.. அவன் தூங்கறான்..”

“நானும் வருவேன்னு நிக்கறா… அவசரமா கிளம்பாதே.. நீ கொஞ்சம் நேரம் கழிச்சு வான்னு சொல்லிட்டு வர்றதுக்குள்ள போதும் போதும்ன்னு ஆகிடிச்சு..  அப்போவும் அம்மாவை விடலை.. நாம போகலாம் இருங்கன்னு நிறுத்திக்கிட்டா.. அதுதான் தானா கேட்டுட்டேன்.. சாரி!” என்று நீண்ட விளக்கம் கொடுத்தவன்..  

“ஆனா இதெல்லாம் நீயா தான் தேடிக்கிட்ட உன்னை யாரும் விடலை” என..  

“என்னை யாரும் பிடிச்சு வைக்கணும்னு அவசியமெல்லாம் இல்லை அண்ணா அண்ட் கண்டிப்பா இதெல்லாம் நானா தான் தேடிக்கிட்டேன். இதுல எனக்கு எந்த வருத்தமும் இல்லை.. அன்ட் இன்னமும் தேடிக்குவேன் அண்ணா” என்றாள் ஸ்திரமாக..

ஈஸ்வரை டைவர்ஸ் செய்வேன் என்று சொல்லாமல் சொன்ன செய்தி அதில் இருந்ததோ?

இப்படி ஒரு பிடிவாதம் யாரிடமும் கண்டதில்லை அங்கிருந்தவர்கள்.. ஏனிந்த பிடிவாதம்? எதற்கிந்த பிடிவாதம்? அவளின் வாழ்க்கையை அவளே சீர்குலைந்துக் கொள்ளும் பிடிவாதமாக தான் அங்கிருந்த அனைவருக்கும் தோன்றியது..

என்ன குறை இவனிடம்? ஏன் இப்படி தனியாக போகவேண்டும்? தவிக்க வேண்டும்? என்ன? ஏன்? எதுவாக இருந்தாலும் அப்படி சரி செய்ய முடியாதது என்ன? விவாகரத்து வரை போக வேண்டியதே இல்லை! முட்டாள் பெண்ணாகத் எல்லோர் கண்களுக்கும் தெரிந்தாள்.. அவர்களின் பார்வையில் கண்ணிலாதவள் அறிவில்லாதவள் கூட ஈஸ்வரை வாழ்க்கையை விட்டு விலக்க மாட்டார்கள்.

என்னவோ ஈஸ்வரை எல்லோரும் பரிதாபமாகப் தான் பார்த்தனர். இவ்வளவு பேசுகிறாள், எப்படி இவளை சமாளிப்பான் என.. எப்படி இவளை போடி எனச் சொல்லாமல் பொறுமையாக இருக்கிறான்.. இவள் பின்னேயே சுற்றுகிறான்..  என 

ஆம்! வர்ஷினியின் பிடிவாதம் அதிகரிக்க அதிகரிக்க, ஈஸ்வர் மற்றவர் பார்வையில் உயர்ந்து கொண்டே போனான்.. ஐஸ்வர்யாவை ஏமாற்றிய அண்ணன் கூட இப்போது ரஞ்சனியின் பார்வையில் மேலேறினான், எதோ தியாகம் செய்பவன் போல..

வர்ஷினி புரிந்து கொள்ள முடியாதவளாகிப் போய்.. கூடவே பார்ப்பவருக்கு என்ன பெண் இவள் என்று எரிச்சல் கொடுப்பவளும் ஆகிப் போனாள்!

இது தான் உலகம்! இல்லாததை இருப்பதாய் காட்டும்.. இருப்பதை இல்லாததாய்க் காட்டும் மாய உலகம்..

பெண் என்பவள் ஆண் இறங்கி வரும்போது.. மன்னிப்பு கேட்கும் போது.. மன்னிப்பவளாய் இருக்க வேண்டும்.. மறப்பவளாய் இருக்க வேண்டும்.. அப்போது தான் அவள் நல்லவள் எனப் படுவாள். 

என்ன? அப்படி முடியாது! நான் இப்படித் தான்! மன்னிக்கவும் மாட்டேன்! மறக்கவும் மாட்டேன்! என்று சொல்லிக் கொள்ளலாம்..

ஆனாலும் வாழ்க்கை தொலைகிறதே.. எங்கே தேடுவாள்? யாரிடம் தேடுவாள்? இழப்பு அவளுக்கும் தானே! காயம் அவளுக்கும் தானே! வலி அவளுக்கும் தானே!

பேதை பெண் தானோ!    

தோல்விகளையும் வெளியில் காட்டிக் கொள்ளாத மனிதர்களே வெற்றி பெற்றவர்கள் ஆகிறார்கள்.. அந்த வகையில் ஈஸ்வர் வெற்றி பெற.. வர்ஷினி தோற்றுக் கொண்டிருந்தாள்! 

ஆணோ பெண்ணோ.. சில விஷயங்களை மௌனமாய் கடந்து போய் விடவேண்டும்!  வெற்றிக்காக அல்ல.. அமைதிக்காக அல்ல.. நிம்மதிக்காகவும் அல்ல… சந்தோஷத்திற்காக! 

காரண காரியங்களை ஆராய்வது எல்லா இடத்திற்கும் தக்கவைகள் அல்ல!  காதலும் அப்படித்தான்! பிடித்தமும் அப்படித்தான்! கணவன் மனைவியும் அப்படித்தான்!

நிற்கும் நொடிகள் கடந்து கொண்டே இருப்பவை! அதோடு நாமும் கடந்து போன பிறகு திரும்பிப் பார்த்தால்.. எல்லாம் முடிந்து போய் விடுமல்லவா?   

சங்கீத ஜாதி முல்லை காணவில்லை!

 

Advertisement