Advertisement

அத்தியாயம் – 6

 

 

மித்ராவிற்கு உறக்கம் வருவேனா என்றிருந்தது. இன்னும் சற்று நேரத்தில் பொழுது புலர்ந்துவிடும் சைதன்யன் தன் கழுத்தில் தாலி கட்டப் போகிறான் என்ற எண்ணமே அவளை தூங்கவிடாமல் செய்தது.

 

 

அவள் மனம் அவன் அவர்கள் வீட்டிற்கு வந்து போன பின்னே நடந்தவைகளை அசை போட ஆரம்பித்தது. எல்லாம் ஒருவழியாய் பேசி முடித்து வந்தவர்கள் விடைபெற சொக்கலிங்கம் மகளை பார்த்தார்.

 

 

“என்னப்பா என்றாள் அவர் பார்வையை புரிந்தவளாக. “அவங்களை வழியனுப்பிட்டு வா என்று அவர் கூற அவரை சற்று ஆச்சரியமாய் பார்த்துவிட்டு “சரிங்கப்பா என்றவள் அவன் பின்னே சென்றாள்.

 

 

அவன் அன்னை அவளையே பார்த்துக் கொண்டிருந்தார். ‘இவர் தன்னை பிடித்து தான் பார்க்கிறாரா?? இல்லை இவருக்கு என்னை பிடிக்கவில்லையா?? என்ற ஐயப்பாடு அவளுக்கு எழுந்தது.

 

 

“ஏன் உங்க அப்பாகிட்ட நான் தான் கல்யாணத்துக்கு நெருக்கடி கொடுத்தேன்னு சொல்லவிடலை என்றான் நேரடியாகவே.

 

 

“அது… அது வந்து நீங்க தான் அப்படி சொன்னீங்கன்னா அது தப்பா போகும்

 

 

“என்ன தப்பா போகும்??

 

 

“அப்பா சொன்னது கேட்டீங்கள்ள!! அவர் உங்ககிட்ட அப்படி கேட்கும் போது நீங்க என்ன செஞ்சிருப்பீங்க!! என்றாள்.

 

 

“என்ன செஞ்சிருப்பேன்னு நீ நினைக்கிற?? என்றான்

 

 

“உங்களால அவரை மறுக்க முடிஞ்சிருக்காது. உங்க அவசரம் எனக்கு தெரியும்… புரியும்… அதை ஏன் எல்லார்கிட்டயும் சொல்லணும். இதுக்கு நான் தான் காரணம்ன்னு சொன்னதுனால அப்பா உங்களை மேற்கொண்டு எதுவும் கேட்கலை தானே

 

 

“அதுக்காக தான் நான் பழியை என் மேல போட்டுக்கிட்டேன். நீங்க வேற எதுவும் தப்பா எடுத்துக்காதீங்க என்றாள்.

 

 

அவன் அன்னை மகேஸ்வரி இருவரும் தனியே பேசட்டும் என்று சற்று ஒதுங்கி நின்றார். இருவருமே வீட்டின் முன் வாயிலில் ஒரு ஓரத்தில் நின்றே பேசிக் கொண்டிருந்தனர்.

 

 

“நிஜமாவே அது தான் காரணமா?? என்று அழுத்தமான குரலில் அவன் கேட்க சற்று திணறியவள் “வேறென்ன இருக்க முடியும் என்றாள்.

 

 

“ஹ்ம்ம் சரி நல்லது தான் என்றுவிட்டு நகரப்போக “ஆமா மாமாவை உங்களை அழைச்சுட்டு வரச்சொன்னேனே. அவர் உங்க கூட வரவேயில்லையே என்னாச்சு என்றாள்.

 

 

“வழியில உங்கக்காவை பார்த்தோம் என்று மட்டும் சொன்னான். அதற்கு மேல் என்ன நடந்திருக்கும் என்று அவளுக்கு புரிந்தது. வேணியை கண்டதும் அவளின் மாமா பாண்டியன் பாதியிலேயே அவர்களை விட்டு போயிருப்பார் என்று புரிந்தது.

 

 

“சாரி… மாமாக்கு அக்கான்னா கொஞ்சம் பயம். அவ எதுவும் சொல்லிடுவாளோன்னு கிளம்பி இருப்பார் என்றாள்.

 

 

“உங்க மாமாக்கு மட்டும் தான் பயமா?? என்றவனின் குரல் உணர்த்திய சேதி அவளுக்கு புரியவில்லை. அவனுக்குமே ஏன் அப்படி சொன்னோம் என்று விளங்கவில்லை.

 

 

“சரி கிளம்பறோம், ஊருக்கு போய் போன் பண்ணுறேன் என்றான்.

 

 

“நைட் தானே ட்ரைன் இப்போ எங்க போவீங்க?? என்றாள்.

 

 

“எனக்கு தெரிஞ்சவங்க வீடு இருக்கு, அவங்க வீட்டுக்கு போயிட்டு கிளம்பிடுவோம். அப்போ நாங்க கிளம்பறோம், நாள் பார்த்திட்டு சீக்கிரமே போன் பண்ணுறோம் சரியா

 

 

“ட்ரைன் ஏறுறதுக்கு முன்னாடி போன் பண்ணுங்க என்றாள்.

 

 

அவன் லேசாய் தலையசைத்தான். மகேஸ்வரி அருகில் வந்தார் “பார்த்து போயிட்டு வாங்க அத்தை. ஊருக்கு போனதும் போன் பண்ணுங்க என்று தன் அன்னையை பார்த்து சொன்னவளை இமைக்காமல் பார்த்தான்.

 

 

“சரிம்மா நாங்க கிளம்புறோம். ராஜா கிளம்புவோமாப்பா என்றார் மகேஸ்வரி.

 

 

ராஜாவா!! என்று ஒரு நொடி மித்ரா விழிக்க “அது வீட்டில என்னை எல்லாரும் அப்படி தான் கூப்பிடுவாங்க. ஸ்கூல், காலேஜ்ல தான் என் பேரு சைதன்யன் என்று அவளுக்கு விளக்கம் கொடுத்தான்.

 

 

பின் அவர்களுக்கு தனிமை கொடுத்து பேச வைத்த சொக்கலிங்கத்திடம் சென்று நன்றியுரைத்தவன் அவள் அன்னையிடமும் சொல்லிக்கொண்டு இருகரம் கூப்பி விடைபெற்றான்.

 

 

அவர்கள் கிளம்பி சென்ற பின்னே ஆரம்பித்தவர் தான் ஈஸ்வரி. இன்னமும் அவளை திட்டி தீர்த்துக் கொண்டிருக்கிறார். அவள் அன்னை ஈஸ்வரியும் உடன் பிறந்தவளும் மித்ராவின் கூறை மெச்சி மெச்சி(!) அவளை பேசியதில் அவளுக்கு காது தான் வலித்தது.

 

 

இதில் பெரிய விஷயம் என்னவென்றால் சைதன்யன் வந்து போன அன்றிலிருந்து அவளின் அன்னை மகளிடம் முகம் கொடுத்து பேசவில்லை. மறுநாள் அன்னையின் அழைப்பில் வீட்டிற்கு வந்திருந்த வேணியும் அதையே கடைப்பிடித்தாள்.

 

 

பொறுத்து பார்த்த மித்ரா இது தான் விதி என்று அதற்கு மேல் அவர்களை தொல்லை செய்யவில்லை. அவள் எண்ணங்களில் இருந்து கலைய ஆரம்பிக்கவும் விடியல் ஆரம்பிக்கவும் சரியாக இருந்தது.

எழுந்து குளியலறைக்குள் சென்றவள் ஹீட்டர் ஆன் செய்து குளித்து முடித்தாள். அதற்குள் அவள் அறைக்கு வந்த வேணி எதுவும் பேசாமலேயே தங்கைக்கு வேண்டியதை செய்தாள்.

 

 

‘என்கிட்ட பேச மாட்டாளாம் ஆனா எனக்கு எல்லாம் செய்வாளாம். இது மட்டும் எதுக்கு?? என்று மித்ரா மனதிற்குள் கேட்ட கேள்விக்கு “இதெல்லாம் அப்பாவுக்காக தான் என்று பதில் கொடுத்த வேணியை ஒரு நிமிடம் நிமிர்ந்து பார்த்துவிட்டு பின் இமை தாழ்த்திக் கொண்டாள்.

 

 

‘எனக்கென்று யாருமில்லையா!! என்று மனதில் கழிவிரக்கம் தோன்ற மைத்தீட்டிய இமைகளில் இருந்து கண்ணீர் வழிந்து விடுவேன் என்பது போல் நிறைந்திருந்தது.

 

 

கைக்குட்டையை எடுத்து நீரை துடைத்தவள் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டாள். அதற்குள் அவளை வெளியே அழைக்க வேணி தங்கையை அழைத்துச் சென்றாள்.

 

 

சைதன்யனின் அருகில் அவள் அமர வைக்கப்பட ஏதேதோ சடங்குகள் நடந்து கொண்டிருந்தது. பின் இருவரையும் அந்த முருகன் சன்னிதானத்திற்கு அழைத்துச் செல்ல அங்கு அவன் அவள் கழுத்தில் மங்கலநாண் பூட்டினான்.

 

 

அக்கணம் அவளுக்குள் நிறைவாய் உணர்ந்தாள் மித்ரா. அவளுக்குள் வந்த நிறைவு முருகன் திருவடியை கண்டா அல்லது அவன் திருவடியின் முன்னே சைதன்யன் அவள் கழுத்தி தாலியை கட்டியதா என்று யோசிக்க இரண்டுமே தான் என்று மனம் உடனே ஒப்புக்கொண்டது.

 

 

அதன்பின் மளமளவென்று ஏதேதோ வேலைகள் எல்லாம் நடக்க இதோ மித்ரா சென்னைக்கும் வந்துவிட்டாள். மகளுடன் சொக்கலிங்கமும் ஈஸ்வரியும் உடன் வர வேலை இருப்பதை காரணம் காட்டி வேணி வராமல் இருந்து கொண்டாள்.

 

 

சைதன்யன் அவர்கள் குடியிருக்க புது வீட்டை பார்த்திருந்தான் போலும். அவர்கள் நேரே அந்த வீட்டிற்கு தான் சென்றனர். சொக்கலிங்கமும் கையோடு மகளுக்கு கொண்டு வந்த சீர்செனத்தியை கொண்டு வீட்டை நிறைத்துவிட்டார்.

 

 

மகள் பால்காய்ச்சி கொடுக்க ஏனோ அவர் மனம் நிறைந்திருந்தது. எங்கேயோ தவறு செய்துவிட்டோமோ என்று லேசாய் மனதின் ஓரத்தில் இருந்தாலும் மகளின் முகத்தில் தெரிந்த நிறைவு அவருக்கும் நிறைவை கொடுத்தது.

 

 

சைதன்யன் வந்துவிட்டு சென்ற அன்று இரவு மகளிடம் தனியே பேசினார் அவர். “மித்ராம்மா இந்த கல்யாணத்துக்கு நான் சம்மதிச்சதுக்கு முழுக்க முழுக்க நீ மட்டும் தான்டா காரணம்

 

 

“நீ எதையும் தப்பா செய்ய மாட்டேன்னு அப்பா உன் மேல நம்பிக்கை வைச்சிருக்கேன். அந்த நம்பிக்கை மட்டும் தான் என்னை தலையாட்ட வைச்சுது

 

 

“உங்கக்காவுக்கு நாங்க தான் பார்த்து கல்யாணம் பண்ணி வைச்சோம். இதோ கண்ணை கசக்கிட்டு வந்து நிக்குறா?? ஒரு வேளை நாங்க பார்த்து கட்டி வைச்சதுனால தான் இப்படி ஆகிப்போச்சோன்னு மனசுக்குள்ள கொஞ்சம் கவலை என்னை அரிக்குதுடா

 

 

“நீ இதுவரைக்கும் பிடிவாதம் பிடிச்சப்ப முதல்ல கோபம் வந்தாலும் உன்னோட முயற்சி என்னை பேச்சடைக்க வைச்சுது. உன்னோட நிமிர்வு என்னை அமைதியா இருக்க வைச்சுது

 

 

“அதெல்லாம் யோசிச்சு தான் இப்போ நீ இவரை தான் கல்யாணம் பண்ணுவேன்னு வந்து நிக்கும் போது என்னை சம்மதம் சொல்ல வைச்சுது

 

 

“அவர்கிட்ட எந்த பொய்யும் தெரியலை. உன்னை உனக்காக தான் கல்யாணம் பண்ணிக்கறேன்னு சொல்றார். அவர்க்கு வேலை இல்லைங்கறது தான் எனக்கு கொஞ்சம் குறை. அதெல்லாம் நீ பார்த்துகுவன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு

“இனி இது தான் வாழ்க்கை இதுல எந்த சிக்கலையும் நீ ஏற்படுத்திக்காத. நல்ல முறையா வாழ்ந்து நல்ல பேர் எடும்மா. அது தான் நீ எங்களுக்கு கொடுக்கற நிம்மதி என்று அவர் முடிக்கவும் கண்களில் இருந்து பொலபொலவென்று கண்ணீர் வழிந்தது.

 

 

“அப்பா… என்று கூவியவள் வேகமாய் வந்து அவரின் மேல் சாய்ந்து கொண்டாள். வயது வந்த பிள்ளைகள் ஒரு கட்டத்தில் எந்த ஆண்மகனையும் விட்டு தள்ளியே நிற்கும் ஏன் பெற்ற தந்தையும் அதில் அடக்கமே.

 

 

இதுவரை மித்ராவும் அப்படி தான் இருந்தாள். ஏனோ அவள் தந்தை பேசப்பேச அவளால் தாங்க முடியாமல் வந்து அவரை அணைத்து கண்ணீர் சொரிந்தாள்.

 

 

“மித்ரா என்னம்மா இது சின்னபுள்ள மாதிரி பொசுக்குன்னு கண்ணீர் விடுற. எழுந்திருடா என்றவர் மகளை தன்னிடம் இருந்து விலக்கி நிறுத்தினார்.

 

 

“ரொம்ப தேங்க்ஸ்பா என்றவள் அதை உள்ளார்ந்து சொல்கிறாள் என்பதை அவர் புரிந்து கொண்டார். என்ன தான் மகளுக்காய் சம்மத்திருந்தாலும் அவர் சைதன்யனின் கண்ணியத்தையும் மனதில் வைத்தே தலையாட்டினார் என்பதும் உண்மையே.

 

 

தன்னினைவில் இருந்தவர் மகளின் “அப்பா என்ற அழைப்பிலேயே மீண்டார். “பால் எடுத்துக்கோங்கப்பா என்று அவரிடம் ஒன்றை எடுத்துக் கொடுத்தாள்.

 

 

அன்றைய இரவு உணவிற்கு பின் அவர்கள் இருவரும் கிளம்ப மித்ராவிற்கு தான் அழுகை முட்டிக்கொண்டு வந்தது. இத்தனை வருடமாக சென்னையில் தனித்திருந்தவள் தான் அப்போதெல்லாம் இப்படி அழுகை வந்ததில்லை அவளுக்கு.

 

 

இப்போதும் அது போல் தானே ஆனால் ஏன் எனக்கு அழுகை வருகிறது என்று யோசித்தும் அவளுக்கு பதில் கிடைக்கவில்லை. அவள் அன்னை பேசாவிட்டாலும் அவள் தலையும் மகளை பார்த்து விடைபெறுவதாய் அசைந்து கொடுக்க தன்னை மீறி அவள் தலையும் ஆடியது. அந்நேரம் சைதன்யன் அவளருகில் வந்ததையோ அவள் கையை ஆறுதலாய் பிடித்ததையோ அவள் உணரவேயில்லை.

 

 

அவளின் மாமியார் மகேஸ்வரியும் சைதன்யனின் தம்பி சைலேஷும், தங்கை காவ்யாவும் அவர்களின் பழைய வீட்டில் இன்னமும் சாமான்கள் இருப்பதால் அங்கே இரவு தங்கிவிட்டு நாளை எல்லாமும் எடுத்துக்கொண்டு காலையில் வருவதாக சொல்லி கிளம்பிவிட்டனர்.

 

 

‘என்னாச்சு எல்லாருக்கும் ஏன் இப்படி என்னை தனியா விட்டுட்டு போறாங்க என்று நினைக்க நினைக்க இன்னமும் அழுகை வருவது போல் இருந்தது அவளுக்கு.

 

 

சைதன்யன் அவள் அருகே வந்தான். “எவ்வளவு நேரம் இப்படி பனியிலேயே உட்கார்ந்திருக்க போறே?? என்றான்.

 

 

அருகில் கேட்ட அவன் குரலில் வாசலை பார்த்து படியில் அமர்ந்திருந்தவள் சட்டென்று எழவும் தடுமாறி அவன் மேல் சாய்ந்துவிட்டாள்.

 

 

“எதுக்கு இப்போ பதட்டம் ரிலாக்ஸ் என்றவன் “உள்ள போகலாம் வா என்று அவள் கைப்பிடித்து அழைத்து சென்றதை அவள் உணரவில்லை.

 

 

கதவை சாத்திவிட்டு வந்தவன் உள்ளே அறைக்கு அவளை அழைத்துச் செல்ல முதன் முதலாக ஓர் ஆடவனுடன் தனித்திருக்கிறோம் என்ற உணர்வு அவள் வயிற்றை பிசைந்தது.

 

 

அவள் அலுவலகத்தில் உடன் பணிபுரியும் ஆண்களை அவள் பார்த்திருக்கிறாள் தான். சமயங்களில் இரவு வேலைக்கு செல்ல நேரிடும் போது அவர்களுடன் சேர்ந்து அமர்ந்து பணி செய்திருக்கிறாள்.

 

 

ஆனால் இது வேறாயிற்றே!! அந்த அறையில் வேறு அலங்காரம் எல்லாம் செய்து வைத்திருந்ததை பார்த்ததும் உள்ளுக்குள் குளிர் பிறந்தது.

 

மனமொத்து இருவரும் திருமணம் செய்திருந்தால் இதெல்லாம் ஒரு வேளை அவளுக்கு வெட்கத்தை கொடுத்திருக்குமோ என்னவோ இப்போது அந்த அறை அவளுக்கு பயத்தை கொடுத்தது.

 

 

‘யார் இந்த வேலையை செய்தது, இவனுக்கு பிடிக்குமா பிடிக்காதா.. எதுவும் திட்டுவானா என்று எண்ணிக் கொண்டே அவனை பார்க்க அவனோ வெகு சுவாதீனமாக அவளை உள்ளே அழைத்துச் சென்றான்.

 

 

அப்போது தான் மித்ரா உணர்ந்தாள் அவனின் கரத்தில் அவள் கரம் இணைந்திருப்பதை. ‘இது எப்போ பிடிச்சான் என்று திகைத்துக் கொண்டிருக்க “உட்காரு மித்ரா என்றான் அவன்.

 

 

அவன் பேச்சை தான் அவள் வெகுகாலமா கேட்டு அதன் படியே நடப்பவள் போன்று அவன் சொன்னதை செய்தாள். “உன்கிட்ட பேசணும், பேசலாமா என்றான்.

 

 

“ஹ்ம்ம்… என்று முனகல் குரல் மட்டுமே வந்தது.

 

 

“பால் சாப்பிடுறியா?? என்றான்.

 

 

“பாலா?? என்று நிமிர்ந்தவள் “ஹ்ம்ம் பால் தான் நமக்காக தான் வைச்சுட்டு போய் இருக்காங்க என்று அருகில் இருந்த டேபிளில் உள்ளதை சுட்டிக்காட்ட “நீங்க சாப்பிடுறீங்களா என்று கேட்டுக் கொண்டே எழுந்தாள்.

 

 

“எனக்கு சூடா இருந்தா தான் குடிக்க பிடிக்கும் என்று அவன் கூற எழுந்தவள் அந்த சொம்பை தொட்டு பார்க்க சூடு குறைந்திருப்பதாய் தோன்றியது.

 

 

“ஒரே நிமிஷம் பாலை கொஞ்சம் சூடு பண்ணி கொண்டு வர்றேன் என்று அவள் வெளியில் செல்ல போக “பரவாயில்லை விடு மித்ரா என்றான்.

 

 

“இருக்கட்டுங்க நான் இதோ வந்திர்றேன் என்று சென்றவள் மிதமான சூட்டுடன் பாலைக் கொண்டு வந்து அவனிடத்தில் கொடுத்தாள். அப்போது தான் நினைவு வர “ஏதோ பேசணும்ன்னு சொல்லிட்டு இருந்தீங்க என்றாள்.

 

 

“ஹ்ம்ம் ஆமாம் பேசணும். இதை நீ எப்படி எடுத்துக்குவேன்னு தெரியலை என்று வார்த்தைகளை விழுங்கினான்.

 

 

“என்னாச்சு எதுவானாலும் என்கிட்ட சொல்லுங்க. நான் தப்பா எடுத்துக்க மாட்டேன் என்றாள்.

 

 

“நிஜமா தான் சொல்றியா??

 

 

“என் மேல உங்களுக்கு நம்பிக்கை இல்லையா??

 

 

“இது நான் கேட்க வேண்டியதா இருக்கும் இப்போ நீ கேட்குற என்றவனின் பேச்சு அவளுக்கு பூடகமாகவே இருந்தது.

 

 

“என்கிட்ட நீங்க சுத்தி வளைச்சு பேசணும்னு இல்லை. நேராவே பேசலாம், ஏன்னா இப்போ நீங்க என்னோட கணவன் நான் உங்க மனைவி. நமக்குள்ள எந்த ஒளிவு மறைவும் வேணாம்

 

 

“நான் ரொம்ப அதிகபிரசங்கித்தனமா பேசறேன்னு நினைக்க வேண்டாம். உங்களுக்கு இப்போ என்னை பிடிச்சாலும் பிடிக்கலைன்னாலும் நாம ரெண்டு பேரும் சேர்ந்து முடிவு பண்ணி தான் இந்த வாழ்கையை வாழ ஆரம்பிச்சு இருக்கோம்

 

 

“ஹ்ம்ம் அப்புறம் என்றவனின் குரலில் சுவாரசியம் தெரிந்தது.

 

 

‘இவன் கிண்டல் செய்கிறானா!! இல்லை தன்னை தவறாக நினைக்கிறானா!! என்று எண்ணி பேச்சை நிறுத்திவிட்டாள் அவள்.

 

 

“என்னாச்சு பேச்சை காணோம். ஏதோ சொல்ல வந்தியே என்றான்.

 

“அது… அது… மறந்து போச்சு

 

 

“ஹ்ம்ம்… மறந்து போச்சா!! சரி விடு!! இப்போ நீ சொன்னதை தான் திரும்பி படிக்கறேன் கேட்கறியா!!

 

 

“ஹ்ம்ம்… என்றாள்.

 

 

“நாம ரெண்டு பேரும் பிடிச்சாலும் பிடிக்கலைன்னாலும் இப்போ ஒண்ணா ஒரே பாதையில சேர்ந்து பயணிக்க போறோம். நான் பாதைன்னு சொன்னது வாழ்க்கையை

 

 

“நமக்குள்ள இடைவெளி அதிகம் இருக்க வேண்டாம்ன்னு நான் நினைக்கிறேன் என்று நிறுத்தியவன் அவள் அருகில் நெருங்கி அமர்ந்தான்.

 

 

“நான் இடைவெளின்னு சொன்னது இதையும் சேர்த்து தான் என்றதில் அவளுக்கு நெஞ்சில் குளிர் பரப்பியது.

 

 

‘என்ன சுத்தி வளைத்து சொல்லப் போகிறான் என்று அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

 

 

“நாம மற்ற கணவன் மனைவி போலவே இருப்போமே. ந… நமக்குள்ள அது பந்தத்தை உருவாக்கும்ன்னு தோ… தோணுது எனக்கு என்று அவன் சொல்ல வந்ததை சொல்லி முடித்துவிட்டான்.

 

 

‘ஏன் இப்போது மட்டும் என்ன வேறு போலவா இருக்கிறோம் என்று மனதிற்குள் தோன்ற “நாம அப்படி தானே இருக்கோம் என்று அவள் கேட்கவும் அவன் ஒரு விதமாய் பார்க்கவும் அவள் விழி தாழ்த்தினாள்.

 

 

‘என்ன சொல்ல வர்றான். அப்போ… அப்போ அவன் சொன்னது என்றவளுக்கு அவன் பேச்சு லேசாய் புரிந்தது போல் இருந்தது. அவள் மேற்கொண்டு என்ன பேசுவது என்று மௌனமாய் இருக்க “உன் மௌனத்தை நான் சம்மதமா எடுத்துக்கலாமா என்று குனிந்து அவள் முகத்தை பார்த்து கேட்டான்.

 

அவள் தலை தன்னால் ஆடி சரியென்றது. அவள் மனதிற்குள் தான் ஒரு கேள்வி புயலாய் அடிக்க ஆரம்பித்தது ‘அதெப்படி காதலே இல்லாமல் இருவரும் இணைய முடியுமாவென்று

 

 

சைதன்யன் மித்ராவை தன்னுடையவள் ஆக்கிக்கொண்டான். அவளை முழுதாய் தன் வசப்படுத்தினான். இரவில் வெகு நேரம் கழித்து களைத்து படுத்தவளுக்கு உறக்கம் வசப்படவில்லை.

 

 

அவளிடம் உறவாடியதில் களைத்து உறங்கினானோ இல்லை அலுப்பில் உறங்கினானோ சைதன்யன் உறங்கியிருந்தான்.

 

 

உறக்கம் தொலைத்த மித்ராவுக்குள் அந்த கேள்வி மீண்டும் முளைத்தது. ‘காதலில்லாமல் எப்படி இணைய முடியும் என்று. ‘காமம் இருந்தால் முடியும் என்று ஒரு மனம் அறிவுறுத்த அவள் மனம் சட்டென்று அதை மறுத்தது.

 

 

சைதன்யன் தன் மேல் காதலாய் இல்லை தான் ஆனால் நிச்சயம் அவன் செய்கையில் காமமில்லை என்பதை மனம் அடித்துக் கூறியது. தன் உணர்வுகளை அடக்கி அவன் சொன்னது போல் இது இயல்பான கணவன் மனைவிக்கு இடையிலான சங்கமம் என்ற முடிவுக்கு அவள் வந்திருந்தாள்.

 

 

அதன் பின்னே தான் அவளால் நிம்மதியாய் உறங்க முடிந்தது. ஆனால் மறுநாள் காலையில் அவன் கேட்ட கேள்வியில் அவள் மனம் சுக்கு நூறாய் சிதறியது…

 

 

“மித்ராஉனக்கு என் மேல இப்போ நம்பிக்கை இருக்கு தானே. நீ சந்தோசமா தானே இருந்த என்ற கேள்வி அவளை மொத்தமாய் உலுக்கியது….

 

 

 

 

 

 

Advertisement