sithara vaiththa sempaavaiyaal - 03

Advertisement

shamla

Writers Team
Tamil Novel Writer
அத்தியாயம் 03


“பாலா கதவை மூடிட்டு உள்ள என்னடி பண்ற...” கதவு தட்டும் ஓசையுடன் அன்னையின் குரலும் கேட்க தலையை உலுக்கிக் கொண்டவள் “என்னம்மா...” எரிச்சல் குரலில் சீறியபடி கதவை திறந்தாள்.

“எதுக்கிடி கத்துற வெளிய சொந்தக்காரங்க வந்திருக்காங்க நீ பாட்டுக்கு ரூமுக்குள்ள அடைஞ்சி இருந்தா வந்தவங்க என்ன நினைப்பாங்க... ட்ரெஸ் மாத்திட்டு வெளிய வா அடவச்ச கோழி மாதிரி ரூமுக்குள்ளேயே அடைஞ்சி கிடக்காம...” எரிந்து விழுந்தவர் சிறு முறைப்புடன் சென்று விட்டார்.

சட்டென கண்களில் சூழ்ந்து கொண்ட கண்ணீரை பெரும்பாடு பட்டு உள்ளிழுத்து கொண்ட பாலா முகத்தில் புன்னகையை படர விட்டுக் கொண்டாள்.

சில வேளைகளில் வயதுக்கு மீறிய முதிர்ச்சியுடன் இருப்பவள் சிறு நேரங்களில் குழந்தையாய் மாறி விடுவாள். சட்டென உணர்ச்சிவசப்படும் குழந்தை. நொடியில் கட்டுக்குள் கொண்டு வரும் வித்தையும் கை வந்த கலை. இப்போதும் அது தான் கைகொடுத்தது.

குளியலறைக்குள் நுழைந்து முகம் கழுவி வந்தவள் அலுமாரியை திறந்து எதை உடுத்துவது என குழம்பிப் போய் நின்றாள்.

“இந்த ரெட் கலர் உனக்கு ரொம்ப மேட்சா இருக்கு...” செவியில் அவள் மனதை சலனப்படுத்தியவனின் குரல் அபஸ்வரமாய் ஒலித்தது.

காதல் என்ற உணர்வே இல்லாமல் தான் இருந்தாள். தெளிந்த நீரோடை போல். அதை குலைப்பதற்காவகே வந்தவன் போல் அவள் மனதை அம்பு விட்டு அசைத்து விட்டானே அவன். காதலில் நம்பிக்கையே இல்லாமல் இருந்தவளுக்கு தற்போது அந்த காதல் தனக்கும் வராமலே இருந்திருக்கலாம் என்றே தோன்றியது.


மீண்டும் அந்த நாள் நினைவு.


அவள் அண்ணன் ஆதியின் மனைவியான அதாவது அவளது அண்ணி மீராவின் வீட்டில் இருந்து விருந்திற்கு அழைத்திருக்க கலையரசியும் மார்த்தாண்டமும் உறவினர்கள் வீட்டிலிருப்பதால் வரமுடியாது போக சம்பிரதாயத்திற்காய் மகன் மருமகளுடன் பாலாவையும் அனுப்பி வைத்தனர்.

அவளுக்குமே உள்ளுக்குள் சிறு ஆசை. அவளையும் அறியாமல் அவனை பார்ப்போமா எனும் கள்ளத்தனம். தன்னை நினைத்தே ஆச்சரியமும் கூட. காரணம் கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களாய் அவள் பின்னே ஒருத்தன் நாயாய் பேயாய் அலைந்து கொண்டிருக்க அவனை நிமிர்ந்தும் பாராதவள் இவனை எதற்காய் தேடுகிறோம் என துடிக்கும் இதயத்துடன் தனக்குள்ளே கேள்வி எழுப்பிக் கொண்டாள்.

காதலை மதிப்பவள் தான். ஆனால் தான் என்று வரும் போது அவளுக்கு அந்த காதல் வெறும் பொய்யாய் தான் தோன்றியது. பெற்றோர்களை துறக்க செய்யும் காதல் என்ன காதலோ என்ற உள்ளூர நினைப்பு கொண்டவள்.

அதற்கு மாறாய் அவளது வயது அவளையும் அதில் தள்ள முயன்றது. அதில் விளைந்த ஈர்ப்பு அவன்பால் அவளை ஈர்த்து தொலைத்தது.

“பாலா எப்பிடிம்மா இருக்க வாங்க.. மாப்பிள்ளை வாங்க... மீரா மாப்பிள்ளையையும் பாலாவையும் வீட்டுக்குள்ள அழைச்சிட்டு வாம்மா... சம்பந்தியும் வந்திருக்கலாம்...” மீராவின் தாயாரான மங்கை அவர்கள் மூவரையும் உபசரித்த வண்ணம் சமையல் அறைக்குள் சென்று ஜூஸ் எடுத்து வந்து கொடுக்க வரவேற்பறையில் இருந்த இருக்கையில் அமர்ந்து மூவரும் பருகினர்.

சிறிது நேரத்தில் பாலா வீட்டினுள் இருக்க முடியாமல் தோட்டத்து பக்கமாய் சென்றாள். இதுவரைக்கும் அவள் அண்ணியின் வீட்டுக்கு இரண்டொரு முறை தான் வந்திருக்கின்றாள். அதிலே மீராவின் குடும்பத்தினருக்கு பாலாவை பிடித்து போய்விட்டது. அவளுமே பாசக்காரி என்பதால் சட்டென அவர்களுடன் ஒண்டிக்கொண்டாள்.

தோட்டத்து பூச்சாடிகளில் ரோஜாக்கள் மலர்ந்து இருக்க அந்த சிகப்பு ரோஜாக்களை மென்மையாய் வருடிக் கொடுத்தாள். மென்மையான அதன் ஸ்பரிசம் அவளுக்கு அவனை நினைவு படுத்தியது.

இருந்தும் அதை மறைத்துக் கொண்டு ரோஜாக்களை பார்த்திருந்தவளின் காதில் “இந்த ரெட் கலர் உனக்கு ரொம்ப மேட்சா இருக்கு...” சிறு இடைவெளி விட்டு அவள் மேல் படாத தூரத்தில் நின்று உரைத்தவனின் குரல் அவளை அதிர செய்ய பயத்தில் துள்ளி குதித்தாள்.

நெஞ்சுத்துடிப்பு அபரிதமாய் இருக்க முகத்தினில் துளியாய் வியர்வைகள். பனி படர்ந்த ரோஜா இதழ்கள் போல். நெஞ்சத்தின் துடிப்பிற்கேற்ப அதனுடன் போட்டி போட்டுக் கொண்டு அவளது செப்பு இதழ்களும் துடித்தது.

துடிக்கும் இதழ்கள் அவனை வா வாவென அழைப்பது போல் இருக்க அவசரமாய் விலகி நின்று கொண்டான். முதல் தடவை அவளை தொட்டது போல் மீண்டும் தொட முயற்சிக்கவில்லை. அவளின் முதல் ஸ்பரிசமே ஆயுளுக்கும் போதுமானதாய் இருந்தது ஆடவனுக்கு.

இவனின் வருகையை எதிர்பாராதவள் விழிகளை விரித்து கணநேரத்தில் அவனை தன் கண்களுக்குள் நிறைத்துக் கொண்டாள். ஒரு சில நொடிகள் தான்... இருந்தும் ஆழமாய் பதிந்து விட்டான்.

சடுதியில் தன் பார்வையை மாற்றிக் கொண்டவள் அங்கிருந்து செல்ல முயற்சிக்க “மது ப்ளீஸ்..” போக விடாமல் கை நீட்டி தடுத்தான்.

“டோன்ட் கால் மீ மது...”

“சரி கூப்பிடல... பேபின்னு சொல்லட்டுமா... இல்ல ஸ்வீட்ஹார்ட்... அதுவும் இல்லன்னா ஹனி... ம்... அது தான் உனக்கு பொருத்தமாவும் இருக்கும்... இனி நான் உன்னைய ஹனி ன்னு தான் கூப்பிடுவேன்...”

“லூசுத்தனமா உளராம வழி விடுங்க... நான் போகணும்...”

“ஏய் ஹனி... நான் என்ன உன்னைய கட்டிபிடிச்சிருக்கேனா... நான் இவ்ளோ தூரம் தள்ளி தான்மா நிற்கிறேன்...” ஒரு அடி இடைவெளியை நூறு மீட்டர் இடைவெளி அளவுக்கு சொல்லியவனை பார்த்து கடையோரத்தில் பொத்துக்கொண்டு வந்த சிரிப்பை அரும் பாடுபட்டு வெளி வராமல் காத்தவள் அவனை முறைத்து வைத்தாள்.

அவளின் முறைப்பை கூட ஆசையாய் ரசித்தவன் ‘இப்பிடி முறைக்கும் நீ ஒரு நாள் என்னை காதலுடன் பார்ப்பாய் ஹனி... அந்த நாளுக்காக நான் காத்திருக்கேன்...’ அவஸ்தையுடன் எண்ணிக் கொண்டான். காதல் கொடுத்த அவஸ்தை அது.

அதை நினைத்து பார்த்தவளின் கண்கள் குளம் கட்டியது. உடைப்பெடுக்காமல் உள்ளிழுத்து கொண்டாள். வேண்டாவெறுப்புடன் சிகப்பு நிற சுடிதாரை கையில் எடுத்தவள் அதை மென்மையாய் தடவிக் கொடுத்தாள். ஒற்றை துளி கண்ணீர் அதில் பட்டு சிதறிப்போனது. அவள் மனதில் உதித்த காதலை போன்று.

அதற்குள் கலையரசி மீண்டுமொருமுறை குரல் கொடுக்க அதற்கு மேலும் தாமதிக்காமல் அந்த ஆடையை உள்ளே வைத்தவள் கைக்கு கிட்டியதொன்றை எடுத்து அணிந்து கொண்டு வெளியில் வந்தாள்.

வெளிர் நீல நிறத்தில் இருந்த சுடிதார் வெகு பொருத்தமாய் அவள் உடலை தழுவி இருந்தது. நீண்ட கார் கூந்தலை தூக்கி போனி டெயில் போட்டிருந்தாள். அதற்கும் அடங்க மறுத்த சில முடிகற்றைகள் அவள் கன்னத்தில் இடம்பிடித்து ஒதுங்கிக் கொண்டன அழகுக்காய். ரூஜ் தடவாமல் சிவந்து கிடந்த கன்னங்களும் விழியில் தீட்டியிருந்த மையும் அழகுக்கலை நிபுணர்களின் கைவண்ணமின்றியே மிளிரச் செய்திருக்க அழகு தேவதையாய் நடந்து வந்தாள்.

அந்தி சாயும் நேரத்தில் திறந்திருந்த ஜன்னல் வழியால் வந்த மஞ்சள் பூசிய சூரிய ஒளியின் கலவையில் அவள் அழகு மேலும் கூடித்தான் போயிற்று.

அதே நேரம் வீட்டிற்குள் நுழைந்தான் ஆர்யன். நேர் எதிரே இருவரும். யாரை பார்க்க கூடாதென மனதிற்குள் சபதமெடுத்திருந்தாளோ விதி மீண்டும் அவனை அவள் கண் முன்னே நிறுத்தி இருந்தது. சற்று நேரத்தின் முன் தன் விழிகளில் இருந்து வந்த கண்ணீருக்கு இவன் தகுதியானவன் தானா என்று அவனை பார்த்த வண்ணம் எண்ணியவளுக்கு அது இல்லை என்று தான் தோன்றியது.

ஆயிரம் பேரை காதலித்தவனுக்கு தானும் ஆயிரத்தில் ஒருத்தி தான் என்ற எண்ணமே அவளை சுக்கு நூறாய் உடைக்க மறக்க நினைத்தும் முடியாமல் உள்ளத்தில் பூத்த முதல் காதல் ஆழமான வடுவாய் மீண்டும் அவள் நெஞ்சத்தை கிழித்தது.

அந்த வடுவினால் உண்டான வலி காதலாய் பார்க்க வேண்டியவனை வெறுப்புடன் தழுவியது. தன் கண்ணீருக்கு சிறிதும் தகுதியற்றவன் என்ற அகந்தையுடன்.

அவனோ சிறிதும் சலனமில்லாமல் அவளை பார்த்து தன் ஆக்மார்க் புன்னகையை சிந்தியவன் அவளை பார்த்த வண்ணமே வரவேற்பறையில் இருந்த சோபாவில் போய் அமர்ந்து கொண்டான்.
 

shamla

Writers Team
Tamil Novel Writer
அவனை பார்த்த பின்பு தான் அவளுக்குமே இன்றைய உறவினர்களின் வருகைக்கான காரணம் நினைவில் வந்தது. அவளது அண்ணி மீராவின் வயிற்றில் அவர்களது வீட்டு வாரிசு உயிர்பெற்றிருக்கிறது அல்லவா.. அதை எப்படி மறந்து போனாள்.

எல்லாம் இவனால்... அவளையும் மீறி அவள் பார்வை அவன் புறம் திரும்பியது. அவனும் அவளை தான் பார்த்திருந்தான். அதை பார்த்து படக்கென தலையை திருப்பிக் கொண்டவள் அண்ணனின் அறைக்குள் நுழைந்து அண்ணியை வெளியே அழைத்து வந்தாள். அவளது பிறந்த வீட்டினர் தங்கள் மகளின் தாய்மையை அறிந்து பூரிப்புடன் வந்திருந்தனர்.

அவர்கள் ஒன்றாய் ஐக்கியமாகி விட அங்கிருக்க முடியாமல் சமையல் அறைக்குள் நுழைந்தவளை பார்த்து “என்னடி ஆடி அசஞ்சு நிக்கிற போ போய் வந்தவங்களுக்கு ஸ்நாக்ஸ் எடுத்திட்டு போய் கொடு...” என்று அங்கிருந்த தட்டுக்களை காட்ட மீண்டும் அவனை பார்க்க வேண்டுமா என வெறுப்புடன் எண்ணிக் கொண்டவள் தாயின் சொல்லை மீற முடியாமல் அதை கைகளில் ஏந்திக் கொண்டு வரவேற்பறைக்கு வந்தவள் அங்கு அவனை காணாது நிம்மதி பெருமூச்சுடன் ஒவ்வொருவராய் கொடுத்துக் கொண்டு வந்தாள்.

அதுவும் பொறுக்காத கடவுளோ மீராவின் தாயாரான மங்கையின் வாயால் அவளுக்கு வேட்டு வைத்தது.

“பாலாம்மா... ஆர்யா போன் பேசிக்கிட்டே வெளிய போய்ட்டான் நீ இதை எடுத்திட்டு போய் அவனுக்கு கொடும்மா...” என அன்புக்கட்டளை இட, அதை மறுக்க முடியாமல் “சரிங்கத்த...” ஒட்ட வைத்த சிரிப்புடன் தலையசைத்தவள் வெளியில் அவனை தேடி சென்றாள்.

‘போன் பேசிக்கிட்டே போனானாமா எல்லாம் சுத்த டிராமாவா தான் இருக்கும் அவனே பொல்லாத பிராடு... அவனுக்கு நடிக்கவா கத்து கொடுக்கணும்... பிராடு... பிராடு...’ இருக்கும் கோபத்தை எல்லாம் வைத்து அவனை வசைபாடியவள் அவனை காணாது சுற்றும் முற்றும் தேடினாள்.

“என்னைத்தான் தேடிக்கிட்டு இருக்கியா...” பின்னால் இருந்து அவன் குரல் கொடுக்க ஒரு நொடி அவன் வசீகரமான குரலில் நெஞ்சம் வேகமாய் அதிர திகைத்து நின்றவள் மறுநொடி அதற்காய் தன்னையே நிந்தித்து கொண்டு அவன் புறம் திரும்பினாள்.

“இப்போ எதுக்காக இந்த டிராமா...” ஏளனமாய் வந்தது அவள் வார்த்தைகள்.

அது புரியாமல் புருவம் உயர்த்தியவன் “என்ன டிராமா... என்ன சொல்றா... எதையும் புரியும் படியா சொல்ல மாட்டியா...”

அவன் என்னமோ அவள் சொல்வது புரியாமல் சாதாரணமாய் தான் கூறினான் ஆனால் அவளுக்கோ அவன் எரிந்து விழுவது போல் இருக்க அவளையும் மீறி மனம் அவனின் குறும்பான பேச்சிற்காய் ஏங்கியது. உடன் சேர்த்து கண்களும் கலங்கியது.

எல்லாமே சில காலம் தானோ என்ற எண்ணம். தாயின் மிகையான பாசம் சிறு வயதில் தான்.. அதன் பின்பு அது கண்டிப்புடன் கூடியதாய் மாறிவிடும். காலத்தை நினைத்த பயத்தினால் கூடிய கண்டிப்பு அது. உடன் பிறந்தவர்களின் பாசம் திருமணம் வரையிலும் தான். அதன் பின்பு அது அவர்களுக்கு உரிமையானவர்களுக்கு சொந்தமாகி விடும். ஒவ்வொன்றும் காலம் செல்ல செல்ல மாறிவிடும் போல என்று எண்ணியவளுக்கு அவன் காதலின் நினைவு வந்தது.

அது வேறு ஒரு அழகிய நங்கையை காணும் வரை தான். அதன் பின்பு அதுவும் மாறிவிடும்.. இந்த உலகில் மாற்றமில்லாத ஒன்றே கிடையாதா... அதை தான் மாற்றம் ஒன்றே மாற்றம் இல்லாதது என்று சொல்வார்களோ... துக்கத்துடன் எண்ணிக் கொண்டாள். கலங்கிய கண்களை அவனுக்கு கட்டாமல் மறைத்துக் கொண்டவள் தட்டுகளை அவன் முன்பு நீட்டினாள்.

“எடுத்துக்கோங்க” முன்பும் அவனுடன் சாதாரணமாய் உரையாடியது கிடையாது தான் என்றாலும் அதில் சொந்தம் என்ற உறவு முறைக்கான உரிமை இருந்தது. இன்றோ அவள் குரல் அந்நிய தன்மையுடன் வெளிவந்தது.

நீட்டி வெகு நேரமாகியும் அவன் எடுக்கும் வழியை காணாது சலிப்புடன் அவனை நிமிர்ந்து பார்த்தாள். கூர்பார்வையுடன் அவளை தான் அளந்து கொண்டிருதான். ஊசியாய் உடலை தைத்த பார்வை. அதில் அருவருப்புடன் முகத்தை சுழித்து கொண்டாள்.

“உங்க புது காதலியை பார்த்தாலும் தேவலை...” வெடுக்கென கூறிவிட்டாள்.

அதில் கண்களில் சிறு மின்னலுடன் அவளை பார்த்தவன் “உனக்கு எப்பிடி தெரியும்...” அவன் குரலில் என்ன இருந்தது என கண்டுபிடிக்க முடியாத ஒரு குரலில் கூறியவனை வெறுப்புடன் தழுவி மீண்டது அவள் விழகள்.

‘ஊருக்கே உன் காதல் லீலை தெரியும்எனக்கு தெரியாம இருக்குமா... பிராடு... பெரிய காதல் மன்னன் ஜெமினி கணேசன்னு நினப்பு... நினைப்பு தான் பொழப்ப கெடுக்குமாம்...’ வறுத்தெடுத்து விட்டாள்.

“கேட்டேனே...” அவள் பதிலை தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் அவன் வினவ,

“எனக்கு தெரிஞ்சதை எல்லாம் உங்ககிட்ட சொல்லனும்னு எந்த அவசியமும் இல்ல... தயவு செஞ்சு இதை எடுத்தீங்கன்னா நான் உள்ளே போய்டுவேன்.. வெட்டியா உங்க கூட பேசிக்கிட்டு இருக்க எனக்கு நேரம் கிடையாது...” வெட்டு ஒன்று துண்டு ரெண்டு என்பது போல் நறுக்கென வார்த்தைகளை விட,

அதில் முகம் கோண “எனக்கு வேணாம்...” என்றான் ஒரு மாதிரி குரலில்.

‘அப்பிடியா ரொம்ப நல்லதா போய்டிச்சு...’ மனதினுள் எண்ணிக் கொண்டவள் “அதை முன்னாடிய சொல்றதுக்கு என்ன...” சிடுசிடுப்புடன் கூறியவள் தட்டை எடுத்துக் கொண்டு உள்ளே சென்று விட்டாள்.

‘காலை கையை பிடிச்சு எடுன்னு கெஞ்சுவேன்னு நினைச்சிருப்பான்... அதெல்லாம் என்கிட்ட நடக்காது...’ போகும் போது அவனை வெட்டும் பார்வை பார்க்கவும் தவறவில்லை.

“என்னம்மா சாப்பிட்டானா...” மங்கையின் குரலில் அவர் புறம் திரும்பியவள்,

“இல்லத்த... எடுங்கன்னு சொன்னேன் பசியில்ல வேணான்னு சொல்லிட்டாரு...” அதே ஒட்ட வைத்த சிரிப்புடன் கூறியவள் படிக்க வேண்டும் என்ற கூற்றுடன் தன் அறைக்குள் நுழைந்து கொண்டாள். பள்ளியின் இறுதி வருடம்.. பரீட்சை நெருங்கிக் கொண்டு இருந்தது. அறைக்குள் நுழைந்தவள் அவர்கள் கிளம்பும் போது தான் வெளியில் வந்தாள்.

“வரேன் சம்பந்தி... பாலா வரோம்மா... மீரா உடம்ப பார்த்துக்கோ... வேளாவேளைக்கு நல்லா சாப்பிடு... வாந்தி வருதின்னு சாப்பிடாம இருந்திடாத...” மகளின் நலனில் அக்கறை கொண்ட தாயாய் பாசத்துடன் கூற அதை கேட்டு அவரை சொந்தத்துடன் கடிந்து கொண்டார் கலையரசி.

“என்ன அண்ணி இது மீரா உங்களுக்கு மட்டும் பொண்ணில்ல எனக்கு அவ மக மாதிரி தான் நான் பார்த்துக்க மாட்டேனா நீங்க கவலை படாம இருங்க... நாங்க பார்த்துக்கிறோம்...” மங்கையின் கைகளை பற்றி உரிமையுடன் கூறினார்.

அதை புன்னகையுடன் பார்த்திருந்தாள் பாலா. மீரா தன் அத்தையான அம்மாவை நெகிழ்ச்சியுடன் பார்த்தாள். திருமணம் முடிந்த இத்தனை வருடங்களில் ஒரு நாள் கூட அவளை அதட்டியோ திட்டியோ எதுவும் செய்தது கிடையாது. பாலாவை கூட அதட்டி பார்த்திருக்கிறாள் ஆனால் அவளை... அன்பான சொந்தம் கிடைப்பதும் தாய் போன்ற மாமியார் கிடைப்பதும் ஒவ்வொரு பெண்களும் செய்த அதிர்ஷ்டம் தான். தானும் அதிஷ்டக்காரி தான் என சந்தோஷத்துடன் எண்ணிக் கொண்டாள்.

அனைவரும் விடைபெற்று கிளம்பியிருக்க உள்ளே செல்ல முயன்ற பாலாவை “பாலா தோட்டத்து பக்கம் துணி காயவெச்சிருக்கேன்... மழை வர மாதிரி இருக்கு எடுத்து வா...” கூறியவாறு கலையரசி வீட்டினுள் செல்ல,

“ம்மா... என்னால முடியாது... வேணும்னா நீயே போய் எடுத்திட்டு வா... நான் படிக்கணும்...”

“உன்னை யாருடி படிக்க வேணாம்னு சொன்னா.. துணிய எடுத்து வச்சிட்டு நீ தாராளமாய் போய் படிம்மா... உன்னை யார் தடுத்தா... நான் ராத்திரி சமையலை கவனிக்கணும்.. நீ எடுத்து வச்சிட்டு போய் படி...”

‘கலையரசி நீ என்னைய ரொம்ப படுத்திற... ஒரு நாள் இல்ல ஒரு நாள் நீ என்கிட்ட வசமா சிக்க போற அன்னிக்கு குருமா பண்ணாம விட மாட்டேன்...’ செல்ல கோபத்துடன் மனதினுள் சுணங்கிக் கொண்டவள் தோட்டத்து பக்கமாய் நடந்தாள்.

போகும் போதே சிறிதாய் தூறல் ஆரம்பித்திருக்க அவசரமாய் அனைத்தையும் கைகளில் அள்ளிக்கொண்டவள் உள்ளே செல்ல எத்தனிக்கும் போது மழை வலுக்க ஆரம்பிக்க அதற்கு மேல் சென்றால் துணிகள் மொத்தமும் நனைந்து விடும் என்பதால் தோட்டத்தினுள் அமைக்கப்பட்டிருந்த சிறு குடிசையினுள் நுழைந்து கொண்டாள்.
 

shamla

Writers Team
Tamil Novel Writer
அங்கிருந்த கதிரை ஒன்றில் துணிகளை வைத்தவள் அப்போது தான் அப்போது தான் விடுபட்டிருந்த சுடிதாரை பார்த்தாள்.

நாளைய வகுப்பிற்கு செல்வதற்காய் துவைத்து வைக்க கூறி தாயிடம் கொடுத்தது நினைவு வர ‘அச்சோ’ தலையில் தட்டிக் கொண்டவள் மழையை பொருட்படுத்தாமல் ஓடிச்சென்று அதை கைகளில் எடுத்துக் கொண்டவள் மீண்டும் குடிசையினுள் ஓடி வர தொப்பலாய் நனைந்திருந்தாள்.

ஓடிப்போய் ஓடி வந்த வேகத்தில் நெஞ்சாங்கூடு ஏறி இறங்க ஓடிய வேகத்தில் சிலுப்பிக் கொண்டிருந்த கூந்தலில் இருந்து சொட்டு சொட்டாய் இறங்கிய மழைத்துளி நெற்றி வழியாய் தடம்பதித்து அவள் நெஞ்சுக்குழிக்குள் சூடாய் இறங்கிச் செல்ல தொண்டைக்குழி பதட்டத்தில் அவஸ்தை பட்டுக் கொண்டிருக்க உடலோடு ஒட்டியிருந்த உடையோ அவள் இளமையை அப்பட்டமாய் வெளிச்சம் போட்டு காட்டியது.

திடீரென அவள் உள்ளே நுழைந்ததையே ஜீரணிக்க முடியாமல் அவஸ்தைபட்டவன் அவள் தோற்றத்தில் மொத்தமாய் நிலைகுழைந்து போனான். அவளின் இளமை அங்கங்கள் அவனுள் உறங்கிக்கிடந்த அவளை காதலித்தவனை தட்டி எழுப்ப விழித்துக் கொண்டவனோ அவளிடமிருந்து பார்வையை திருப்ப முடியாமல் அவள் அழகில் கட்டுண்டு கிடந்தான்.

அந்த சிறு குடிசையினுள் அவனும் இருப்பதை அறியாதவளாய் தலை குனிந்த வாக்கிலே கையில் இருந்த சுடிதாரை அங்கிருந்த கயிற்றில் விரித்து போட்டவள் கூந்தலின் சொட்டு சொட்டாய் இறங்கும் ஈரம் உணர்ந்து முடியை விரித்து விட்டாள்.

அதுவோ மயில் தொகையை ஈரம் படிந்த இடங்களில் அழகாய் படிந்து அவள் அழகுக்கு மேலும் அழகு சேர்த்தது. அதை பார்த்தவன் பொங்கி எழுந்த இளமை உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாமல் கண்களால் அவளை விழுங்கிக் கொண்டே மெதுவாய் அவளருகில் நெருங்கினான்.

கொட்டும் மழை அதனுடன் கூடிய காற்று மென்மையாய் அவளை நடுங்க செய்ய இரு கைகளாலும் உடலை குறுக்கிக் கொண்டவள் தலையை சிலுப்பிக்கொண்டே மழையை வேடிக்கை பார்க்க மறுபுறம் திரும்பி நின்று கொண்டாள்.

அவன் இருப்பதோ தன்னை நெருங்கி வருவதோ எதையும் அவள் அறிந்தாளில்லை. மழையோசையின் சத்தத்தின் முன்பு அவனின் காலடியோசை மெலிதாகவே கேட்க அதுவோ அவள் காதில் சென்றடையவில்லை.

தன் மனம் கவர்ந்தவளின் அழகை கண்களால் பருகிக் கொண்டே அவளருகில் சென்றவன் அவள் மறுபுறம் திரும்பிக் கொள்ளவும் முதலில் எரிச்சல் பட்டவன் பின்பு பெண்ணவளின் பின்னழகை கண்டு சொக்கித்தான் போனான்.

அவளை தொட்டு தழுவ பரபரத்த கைகளை கட்டுப்படுத்த முடியாமல் அவளருகில் பட்டும்படாமலும் நெருங்கி நின்றவன் அவள் மேனியில் கமழ்ந்த நறுமணத்தில் கண்கள் சொருக அதை ஆழ்ந்து அனுபவித்தவன் அதற்கு மேலும் தாக்குபிடிக்க முடியாமல் பின்னிருந்து இடையழுத்தி அவளை தனக்குள் இறுக்கிக் கொண்டான்.

பின்னால் இருந்து எதுவோ அசையும் அசைவுணர்ந்து திரும்ப எத்தனித்தவள் யாரோ தன்னை இறுக்கி அணைக்கவும் முகம் வெளிற நெஞ்சு உளற பயத்தில் அலறப்போனவளின் வாயையும் தன் கரம் கொண்டு மூட உடல் திமிர அவனின் பிடியிலிருந்து வெளிப்பட முற்பட தாபத்தில் இருந்தவனோ அதை நொடியில் தகர்த்த செயலிழந்து போனவளின் உடலும் தொய்ந்து போனது.

பெண்மையின் மென்மையில் கரைந்து போனவன் அதன் பின்பு தான் அவள் உணர்வற்று கிடப்பதை பார்த்து அவளை தன் புறம் திருப்பினான். கண்கள் சொருக கிட்டத்தட்ட மயக்கநிலைக்கு செல்ல இருந்தவள் கண்முன்னே தெரிந்த தன் மனதை திருடியவனின் முகத்தை கண்டதும் தான் நிம்மதி கொண்டவளாய் அவனை ஆரத்தழுவி கொண்டாள். பயத்தினில்.. ஆறுதலுக்காய்.. உடல் அழுகையில் குலுங்கியது.

அதில் தன் தவறு புரிய கோபத்தில் கண்களை மூடி மூச்சிழுத்து விட்டவன் ஆறுதலாய் அவள் தலையை தடவிக் கொடுத்தான்.

“ஹனி நான் தான்... எதுக்கு அழற... ப்ளீஸ் அழாதடா... என்னை மன்னிச்சிடு... ஹனி...” எத்தனை முயன்றும் அவனால் அவள் அழுகையை தடுத்து நிறுத்த முடியவில்லை.

“ஏன்டா இப்பிடி பண்ண... அன்னைக்கு சொன்னியே காத்திருந்து ஏமாறும் வலியை கொடுத்திடாதன்னு... ஆனா எனக்கு அதையும் விட அதிகமா வலிச்சது... ஏன் அப்பிடி பண்ண...” மரியாதையை கைவிட்டு தன்னிலையில் இன்றி பிதற்ற ஆரம்பித்திருந்தாள்.

“எல்லா பொண்ணுங்களும் என்ன ஆசைபடுவாங்க தெரியுமா... நம்மள மட்டும் காதலிக்கும் பசங்க தான் நம்ம வாழ்க்கை முழுசுக்கும் வேணும்னு ஆசைபடுவா... நானும் அப்பிடித்தான் ஆசைப்பட்டேன்... ஆனா... எனக்கு மட்டும் ஏன் இப்பிடியெல்லாம் நடக்கிது... நான் என்ன யாரும் கேக்காததையா கேட்டிட்டேன்... இல்லையே.. ஆனா நான் கேட்டது மட்டும் கிடைக்கவேயில்ல...” மனதின் ரணம் வார்த்தைகளில் பிரதிபலித்தது.

அதை மௌனமாய் கேட்டுக் கொண்டான். விளக்கம் கொடுக்கவோ ஆறுதல் கூறவோ அவனுக்கு தகுதியில்லை. அவள் மேல் எந்த தப்பும் இல்லையே.. அனைத்தும் தன் மீது எனும் போது என்னவென்று அவளிடம் சொல்வது... அதுவே அவனின் மௌனத்தை உடைக்க மறுத்தது.

சலனமின்றி இருந்தவளை சலனபடுத்தியவன் அவன் தானே. தான் இவளை பார்க்காமலே இருந்திருக்கலாம் என்றே அவனுக்கு தோன்றியது. அவள் வாழ்க்கையில் வராமலே இருந்திருக்கலாம்.. தான் வந்ததால் தானே பெண்ணவளுக்கு இத்தனை வேதனை.

‘என்னை மன்னிச்சிடு ஹனி... நான் உன் வாழ்க்கையில் வந்திருக்கவே கூடாது. தப்பு பண்ணிட்டேன்.. நான் இப்பிடித்தான்னு தெரிஞ்சிருந்தும் உன்கிட்ட அப்பிடி பேசியிருக்க கூடாது தான்... ஐயம் ரியல்லி சாரிடி... இனிமே நான் உன் முன்னாடி வரவே கூடாதுன்னு கடவுளை வேண்டிக்கிறேன்...’ நெஞ்சுக்குள் நமநமத்த வலியுடன் மனதினுள் எண்ணிக் கொண்டான்.

அப்போதும் பெண்ணவளின் புலம்பல் நின்றபாடாய் இல்லை... “உன்ன எவ்ளோ காதலிச்சேன் தெரியுமாடா... ரொம்ம்ம்மம்ம்ம்ப... சொல்ல முடியாத அளவுக்கு... ஆனா நீ... என் மனசில என்ன இருக்கின்னு தெரியாமலேயே வேற பொண்ண தேடி போய்ட்டல்ல... ஆனா நான் அப்பிடி கிடையாது... இனிமேல் எனக்கு காதலே வரக்கூடாதுன்னு தான் தினமும் வேண்டிக்கிறேன்... காதல் என்கிற வார்த்தையே சுத்த பொய்... அந்த வார்த்தை நான் மனசார வெறுக்கிறேன்...” வாய் குழறலாய் வார்த்தைகளை கொட்ட மழையும் சிறிது குறைய ஆரம்பிக்க இதற்கு மேலும் தான் இங்கிருப்பது உசிதமல்ல என்று எண்ணியவன் மழை நீரை பிடித்து அவள் முகத்தில் தெளித்தான்.

முகத்தில் நீர் துளிகள் பட்டதும் சுரணை வர கருமணிகள் லேசாய் உருண்டோட மெதுவாய் கண்களை மலர்த்தினாள். நெஞ்சுக்குள் ரயிலோடும் ஓசை... எம்பி குதிப்பது போல் வேகமாய் துடித்தது. கண்கள் மீண்டும் சொக்குவது போல் இருக்க கண்களை தேய்த்துக் கொண்டு நிமிர்ந்தவள் தன் முன் நின்றவனை பார்த்து அதிர்ந்து பின்பு நடந்தது நினைவு வர ஆக்ரோசத்துடன் அவனை உறுத்து விழித்தவள் அடுத்த நொடி அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள்.

அவள் நிலைக்கு திரும்பியதும் அவளை விட்டு விலக எத்தனித்தவன் எதிர்பாராத நேரத்தில் அவள் ஓங்கி அறையவும் அவனையும் மீறி அவன் செய்த செயலின் தீவிரம் மறந்து ஆண் எனும் ஈகோ தலை தூக்க கோபத்தில் அவளை அறைவதற்கு கையை ஓங்கினான்.

ஆனால் மறுநொடியே ஓங்கிய அவன் கைகள் தொய்ந்து விழுந்தது நெஞ்சை சுருக்கென பதம் பார்த்த பெண்ணவளின் வார்த்தைகளில்..

“காதலிக்கிறதுக்கு இன்னொருத்தி மத்ததுக்கு எல்லாம் நானா என்னை என்னன்னு நினைச்ச ப்ராஸ்டிட்யூட்னா...” வயதுக்கு மீறிய வார்த்தை தான்... அதை சொல்லும் போதே அவளுக்கு உடலெல்லாம் கூசியது. காதல் கொடுத்த வலி வரம்பு மீறி பேச செய்தது. அவனோ அதை கேட்டு துடித்து போய் விட்டான்.

‘என்ன வார்த்தை சொல்லிவிட்டாள் பாவி... எப்பிடிடி இப்பிடியெல்லாம் பேசிற... இதுக்கு பேசாம நீ என்னை கொன்னிருக்கலாம்... பாவி...’ மனம் குமுற அவளை வெற்றுப்பார்வை பார்த்தவன் “இன்னொரு வாட்டி இப்பிடி பேசாத....” கரகரப்புடன் கூறியவன் வேகத்துடன் விரைந்து சென்று விட்டான்...

செல்லும் அவனையே இமைக்காமல் பார்த்திருந்தவளின் விழிகளில் இருந்து கரகரவென கண்ணீர் துளிகள் வழிந்தோடியது. அவன் உருவம் தேய்ந்து மறையும் வரை பார்த்திருந்தவள் உதட்டை கடித்து வெடித்து சிதறிய அழுகையை அடக்கிக் கொண்டாள்.


“தனியாக தவிக்கின்றேன் துணைவேண்டாம் அன்பே போ
பிணமாக நடக்கின்றேன் உயிர் வேண்டாம் தூரம் போ
நீ தொட்ட இடமெல்லாம் எரிகிறது அன்பே போ
நான் போகும் நிமிடங்கள் உனதாகும் அன்பே போ

இது வேண்டாம் அன்பே போ
நிஜம் தேடும் அன்பே போ
உயிரோடு விளையாட விதி செய்தாய் அன்பே போ

தனியாக தவிக்கின்றேன் துணைவேண்டாம் அன்பே போ
பிணமாக நடக்கின்றேன் உயிர் வேண்டாம் தூரம் போ”



சிதறும்...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top