யாருமிங்கு அனாதையில்லை - 30

#1
யாருமிங்கு அனாதையில்லை – 30
எழுதியவர்: முனைவர். பொன்.கௌசல்யா.

அத்தியாயம் - 30


அப்போது அவனுக்கு ஆதரவாய் முதல் குரலாய் முரளியின் குரல் ஒலித்தது. தொடர்ந்து பள்ளிக்கூட வாத்தியார் எழுந்தார். “அய்யா...இள வயசுப்பசங்க....இவ்வளவு நம்பிக்கையோட சொல்லும் போது...நாம மூத்தவங்க..அவங்களுக்குத் தடை போடலாமா?...நம்ம பசங்களை நாமே நம்பலேன்னா எப்படி?...நான் அவங்களுக்கு உத்துரவாதம் தர்றேன்....நீங்க அவங்க கிட்டே இந்தப் பொறுப்பை ஒப்படைங்க!..” என்று அவர் பஞ்சாயத்து தலைரைப் பார்த்துச் சொல்ல, கூட்டத்திலிருந்து பல ஆதரவுக் குரல்கள் ஒலித்தன.

“நம்ம பசங்க...இதுவரைக்கும் எல்லாத்தையும் நல்ல முறையாய்த்தான் செஞ்சிருக்காங்க!...கண்மாயைத் தூரெடுக்க வேலையிலேயே அவங்களோட திறமையை ஊர் பார்த்திடுச்சு...அதனால அவங்களை நம்பலாம்”

“குடுத்துத்தான் பார்ப்போமே...அவங்க சாமார்த்தியத்தையும்”

வேறு வழியில்லாமல் பொன்னுரங்கமும், பஞ்சாயத்து தலைவரும், அந்தப் பொறுப்பை ஒப்படைக்க, சந்தோஷமாய் எழுந்தான் தனசேகர். அவன் சகாக்கள் நாலு பேர் ஆங்காங்கே எழுந்து நின்றனர். “அப்ப...இன்னிக்கு ராத்திரியே நாங்க மேலே போறோம்”என்றான் தனசேகர்.

“எதுக்கும் கொஞ்சம் நிதானமாகவே அவனைக் கையாளுங்கப்பா...” என்றார் பஞ்சாயத்து தலைவர். “ஜாக்கிரதை”என்றார் கோவில் பூசாரி.

இளைஞர்கள் மீதிருந்த நம்பிக்கையில் எல்லோரும் சந்தோஷமாய்க் கலைந்து செல்ல, செல்லக்கிளி மட்டும் வியாக்கியான பேசிக் கொண்டே சென்றாள். “பெருசுக...தாங்க தப்பிக்கறதுக்காக....சிறுசுக தலைல பொறுப்பைக் கட்டிடுச்சுக!...பாவம் பசங்க...என்ன கதி ஆகப் போறானுகளோ?”

இரவு. வானில் வளர் பிறை நிலவு நிதானமாய் ஊர்ந்து கொண்டிருந்தது. காற்றில் ஜில்லிப்பு கூடியிருக்க, கீழ் வானில் அவ்வப்போது மின்னல் கீற்றுக்கள் ஓடிக் கொண்டிருந்தன. எங்கோ ஒரு நாய் எதற்கோ ஊளையிட்டது.

இளைஞர் நற்பணி மன்றத்தைச் சேர்ந்த நாலு வாலிபர்களும் மலை அடிவாரத்தின் நின்று, மலையின் உச்சியிலிருக்கும் பச்சை நாயகி அம்மன் கோவிலை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தனர். “ஹூம்...வழக்கமா நாலாப்பக்கமும் ஜகஜ்ஜோதியா லைட்டு எரிஞ்சுக்கிட்டிருக்கும்...இப்பப் பாருங்கடா இருளடைஞ்சு போய்க் கிடக்கு நம்ம குல தெய்வம் கோவில்!...அந்தப் பைத்தியக்காரனுக்கு பயந்து யாருமே மேலே போறதில்லை...லைட்டுப் போடக் கூட ஆளில்லை!” வருத்தத்தோடு சொன்னான் தனசேகர்.

“த பாரு தனசேகர்... “அவன் கைல தடி வெச்சிருக்கான்!...மலையேறி வர்றவங்களையெல்லாம் அடிக்கறான்!”னு சொல்றாங்க!...அதனால...நாமும் ஆளுக்கொரு தடியை கையில் எடுத்துக்குவோம்!...அதுதான் நல்லது” என்றான் முரளி.

“அது எதுக்கு?...நாமதான் “அவனை அடிக்கறதில்லை!”ன்னு கூட்டத்துல வெச்சு வாக்குக் குடுத்திட்டு வந்திட்டோமே?”

“வாஸ்தவம்தான்!...அதுக்காக வெறும் கையோடவா போறது?...அட...சும்மா அவனுக்கு பயம் காட்ட வேணும்...ஒரு குச்சியை வெச்சுக்குவோமே?” முரளி விடாமல் கேட்டான்.

“ம்ஹூம்...வேண்டவே வேண்டாம்!...ஏன்னா...அது கைல இருந்தா நம்மையும் மீறி...நாம அவனைத் தாக்கிடுவோம்!...அதனால வெறும் கையோடவே போவோம்” உறுதியாய்ச் சொன்னான் தனசேகர். எல்லோரும் அரை மனதுடன் தலையாட்டி அதை ஆமோதிக்க,

“சரி...புறப்படுவோம்...நாலு பேரும் ஒண்ணாப் போய் நிப்போம்!...ஆரம்பத்துல தணிவாய்ப் பேசுவோம்...அவன் பதிலுக்கு எப்படி நடந்துக்கறான்?ன்னு பார்த்து அதுக்குத் தகுந்த மாதிரி நாமும் செயல்படுவோம்!...எந்தச் சூழ்நிலையிலும் நாம உணர்ச்சிவசப் படவே வேண்டாம்...என்ன?” சொல்லியவாறே தனசேகர் முதல் படியில் காலை வைக்க மற்றவர்கள் அவனைப் பின் தொடர்ந்தனர்.

மலைப் பாதையின் பக்கவாட்டு மரங்களில் ஒளிந்திருந்த பறவைகள் இவர்களின் காலடிச் சத்தம் கேட்டு “பட...பட”வெனச் சிறகடித்துப் பறந்தன. கீழே, ஊருக்குள் யாரோ வீட்டில் குழந்தையொன்று வீறிட்டு அழும் குரல் காற்றில் மிதந்து வந்தது. புதருக்குள்ளிருந்து பூச்சிகளின் ரீங்கரம் தொடர்ந்து கேட்டுக் கொண்டேயிருந்தது.

அடுத்த இருபதாவது நிமிடம் மலை உச்சியை அவர்கள் அடைந்த போது அந்தப் பைத்தியக்காரன் அந்த நேரத்திலும் கண்ணயராமல் வானத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான். வலது கை தடியை இறுக்கிப் பிடித்திருந்தது. மலை மேல் யாரோ வந்திருப்பதை உணர்ந்த அந்தப் பைத்தியக்காரன், பார்வையை வானத்திலிருந்து கீழே இறக்கி, அவர்களைப் பார்த்தான். அடுத்த விநாடி அவன் விழிகள் பெரிதாகி, அவர்களை எரித்து விடுவது போல் பார்க்க,

“ஏய்...யாரப்பா நீ?...எங்க குல தெய்வம் கோயில்ல வந்து எதுக்கு உட்கார்ந்திட்டிருக்கே?...எந்திரி...எந்திரி...மொதல்ல கிளம்பு இங்கிருந்து” என்று ஆரம்பித்தான் தனசேகர். அவன் பதிலேதும் பேசாமல் மீண்டுமொரு முறை வானத்தை அண்ணாந்து பார்த்து விட்டு திரும்பவும் அவர்களைப் பார்த்தான்.

“இங்க பாருப்பா...எங்க பூசாரி தெனமும் இங்க வந்து பூசை பண்ணுவார்!...அதே மாதிரி எங்க ஜனங்களும் தெனமும் பந்து சாமி கும்பிட்டுட்டுப் போவாங்க....ஆனா நீ இங்க வ்ந்து உட்கார்ந்ததினால அவங்கெல்லாம் இங்க வரப் பயந்திட்டு...வர்றதேயில்லை!...அதனால...பிரச்சினை எதுவும் பண்ணாம நீயே அமைதியாய்க் கிளம்பிப் போயிடு!” முரளி நிதானமாய்ச் சொன்னான்.

அவன் பேச்சை சிறிதும் கண்டு கொள்ளாமல் அண்ணாந்து அண்ணாந்து வானத்தையே பார்த்துக் கொண்டிருந்தான் பைத்தியக்காரன். இளைஞர்கள் நாலு பேரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். “அந்த வானத்துல அப்படி என்ன தெரியுது?ன்னு இவன் இந்தப் பார்வை பார்க்கறான்?” என்று முணூமுணுப்பாய்ச் சொன்ன தனசேகர், அடுத்த செய் முறைக்குத் தாவும் விதமாய் மிரட்டல் குரலைக் கொண்டு வந்தான். “டேய்...பைத்தியக்காரா...என்னடா நெனச்சிட்டிருக்கே?...நாங்க பாட்டுக்குப் பேசிட்டிருக்கோம்...நீ என்னமோ வானத்தையே பார்த்திட்டிருக்கியே?...உதை வாங்கிட்டுத்தான் போறதுன்னு முடிவு பண்ணிட்டியா?”

“விருட்”டென்று தலையைத் திருப்பி தனசேகரை கோபமாய் அவன் பார்க்க, “என்னடா மொறைக்கறே?...ரொம்ப அடாவடி பண்ணினே?....நாங்க நாலு பேர் இருக்கோம்...அப்படியே உன்னை மலையிலிருந்து கீழே உருட்டி விட்டுடுவோம்” முரளி கத்தலாய்ச் சொன்னான். அதுவரையில் உட்கார்ந்திருந்த அந்தப் பைத்தியக்காரன் மெல்ல எழுந்தான். தடியைப் பிடித்திருந்த அவன் பிடி மேலும் இறுகியது.

“ஹேய்...என்ன?...என்ன?...” முரளி மேலும் எகிற, சட்டென்று தன் கையிலிருந்த தடியால் அவன் முரளியின் நடு மண்டையில் ஓங்கி அடித்தான். “அய்யோ”என்று கத்தியபடி பீச்சியடித்த குருதிக்குக் கையால் அணை போட்டபடி கீழே விழுந்தான் முரளி.

அதிர்ந்து போன மற்ற மூவரும் அவனருகே ஓடிச் சென்று அவனைக் கைத்தாங்கலாய்ப் பிடிக்க, மெல்ல...மெல்ல...மயக்கத்திற்குப் போனான் அவன். தங்களுடன் வந்த ஒருவன் தாக்கப்பட்டு மயக்க நிலைக்குப் போனதில் ஆவேசம் தூண்டப்பட்ட அந்த மூன்று பேரும் கோபாவேசமாயினர். “தனசேகர்...இனி இவன் பேச்சு வார்த்தையெல்லாம் எடுபடாது!...நாமும் திருப்பித் தாக்கறதைத் தவிர வேற வழியில்லை!” உருவத்தில் குள்ளமான...ஆனால் உடல் பலத்தில் இரும்பு போன்றவனான ராஜ் அந்தப் பைத்தியக்காரனை நோக்கி வேக வேகமாய்ச் சென்றான்.

“டேய்...டேய்...ராஜ் வேண்டாம்டா” கத்தினான்.

எப்படியும் அந்தப் பைத்தியக்காரன் முரளியை அடித்தது போல் தன்னையும் தலையில்தான் அடிப்பான் என்று எதிர்பார்த்து, இரு கைகளையும் தூக்கித் தலைக்கு மேல் கவசமாய் வைத்துக் கொண்டு, அவனைக் காலால் உதைத்துக் கீழே தள்ளிவிடும் நோக்கத்தோடு இடது காலைத் தூக்கினான் ராஜ்,

“படீர்” என்ற ஓசையோடு அந்தத் தடி தூக்கிய காலின் மீது இறங்க உள்ளே எலும்பு முறியும் ஓசை வெளியில் கேட்டது. மேற்கொண்டு நிற்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்ட ராஜ் அப்போதும் துணிவை இழக்காது கைகளை உபயோகிக்க முயன்றான். அடுத்த நிமிடமே சரமாரியான அடிகள் இரண்டு கைகளின் மீதும் விழ, தாக்குப் பிடிக்க முடியாமல் தரையில் சாய்ந்தான் ராஜ்.

தனசேகர் தன்னுடனிருந்த தியாகுவைப் பார்த்து, “டேய் தியாகு...தனித்தனியாப் போனாத்தானே அவன் அடிக்கறான்...வா...நாம ரெண்டு பேரும் ஒண்ணாய்ப் போய் அவன் மேல் மோதி...அவனைக் கீழே விழ வைத்து...அவன் கையிலிருக்கற தடியையே பிடுங்குவோம்!” என்றான். தியாகு தலையாட்டி சம்மதிக்க, இருவரும் தயாராயினர். “ஒன்...டூ...த்ரீ”...இளங்கோ சொல்ல, ஒரே வேகத்தில் இருவரும் அந்தப் பைத்தியக்காரனை நோக்கி ஓடினர். அவர்களின் எண்ணத்தை யூகித்து விட்டவன் போல் அந்தப் பைத்தியக்காரன் தன் கையிலுள்ள தடியைக் காற்றில் அசுர வேகத்தில் சுழற்றினான்.

அந்தச் சுழற்றலில் கன்னாபின்னாவென்று அடி வாங்கி...ஆளுக்கொரு திசையில் போய் விழுந்தனர் தனசேகரும், தியாகுவும். விழுந்தவர்களை எழ விடாமல் தொடர்ந்து விளாசித் தள்ளினான் அந்தப் பைத்தியக்காரன். அவன் ஏமாந்த ஒரு விநாடியில் சட்டென்று எழுந்து இருட்டில் மறைந்து...படிக்கட்டுகளைத் தொட்டு… அதில் “மள...மள”வென்று இறங்கி அடிவாரத்தை நோக்கி ஓடினான் தனசேகர்.

விடிந்தும் விடியாத அதிகாலைப் பொழுதில், முப்பதுக்கும் மேற்பட்ட ஆட்களுடன் மலையேறினான் தனசேகர். “என்னப்பா சொல்றே?...உன்னோட சிநேகிதனுக மலை மேலே அடிபட்டுக் கிடக்கறானுகளா?” முரளியின் தங்கை புருஷன் சொக்கு வேக வேகமாய்ப் படியேறிக் கொண்டே கேட்டான்.

“ஆமாம் சொக்கு....பஞ்சாயத்து தலைவர் சொன்னார்... “வேண்டாம்...அந்தப் பைத்தியக்காரப் பயல் கைல தடி வெச்சுக்கிட்டு போறவங்களையெல்லாம் கன்னா பின்னான்னு அடிச்சிட்டிருக்கான்”ன்னு...நான்தான் அதைக் காதில் வாங்கிக்காமல் முரளியையும்...மத்தவங்களையும் சேர்த்துக் கூட்டிட்டுப் போனேன்....இப்ப மத்தவங்க மலை மேலே அடி பட்டு மயங்கிக் கிடக்கறாங்க” புலம்பிக் கொண்டே வந்தான் தனசேகர்.

அவர்கள் மலையுச்சியைத் தொட்ட போது அங்கே அந்தப் பைத்தியக்காரன் சிறிதும் மாறாமல் அதே கம்பீரத்தோடு வானத்தைப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான். “பார்த்தீங்களா...பார்த்தீங்களா...இப்படித்தான் எப்பப் பார்த்தாலும் வானத்தைப் பார்த்துக்கிட்டே உட்கார்ந்திட்டிருக்கான்” ‘கிசு...கிசு’ குரலில் சொன்னான் தனசேகர்.

“அவன் எப்படியோ உட்கார்ந்திட்டுப் போறான்!....இப்போதைக்கு நாம யாரும் அவனைத் தொந்தரவு பண்ண வேண்டாம்...மொதல்ல நம்ம பசங்களை எழுப்பிக் கீழே கொண்டு போய்...அவங்களுக்கு சிகிச்சை குடுப்போம்...அப்புறமா இவனை என்ன பண்றது?ன்னு யோசிப்போம்!” தெளிவாய்ச் சொன்ன சொக்கு, அந்தப் பைத்தியக்காரன் அமர்ந்திருக்கும் திசைப் பக்கமே திரும்பாமல் ஆங்காங்கே சிதறிக் கிடந்த முரளியையும் அவன் நண்பர்களையும் தண்ணீரைத் தெளித்து மயக்கத்திலிருந்து விடுவித்தான்.

எல்லோருமாய்ச் சேர்ந்து அவர்களைக் கைத்தாங்கலாய்ப் படிகளில் இறக்கி கீழே கொண்டு சென்றனர். “அப்படியே என்னோட டிராக்டர்ல ஏத்துங்க...நான் வைத்தியர் வீட்டுக்குக் கூட்டிட்டுப் போயிடறேன்” என்றபடி முன் வந்த கோபால்சாமியின் டிராக்டரில் அவர்களை ஏற்றினான் சொக்கு.

அன்று மாலையே பொன்னுரங்கம் வீட்டில் கூட்டம் போடப்பட்டது. செல்லக்கிளிதான் ஏகமாய்க் குதித்தாள். “இப்படித்தான் நடக்கும்னு நான் நெனச்சேன்...அதே மாதிரி ஆயிடுச்சு!...அவன் ராட்சஸன் மாதிரி இருக்கான்...அவனைக் கிளப்ப இந்தப் பசங்களை அனுப்பிச்சா ஆகுமா?”

“பஞ்சாயத்து தலைவரய்யா...எனக்கென்னவோ போலீஸுக்குப் போயிடறதுதான் “சரி”ன்னு படுது!...ஏன்னா...இன்னும் ரெண்டு மூணு நாள்ல பௌர்ணமி வந்திடும்!...அதுக்குள்ளார அவனை விரட்டினாத்தான் நம்ம குல தெய்வத்துக்கு பௌர்ணமி பூஜையை செய்ய முடியும்...இப்பவே வெளியூரிலிருக்கற நம்ம சாதி சனமெல்லாம் ஒவ்வொருத்தரா வர ஆரம்பிச்சிட்டாங்க!” ஸ்கூல் வாத்தியார் சொல்ல,

“வாத்தியாரய்யா...போலீஸுக்குப் போறதைப் பற்றி எனக்கொண்ணும் ஆட்சேபனையில்லை...ஆனா...நம்ம இளைஞர்கள் நாலு பேரையும் பந்தாடிய அந்தப் பைத்தியக்காரன்...வர்ற போலீஸ்காரங்களையும் அதே மாதிரித்தானே பந்தாடுவான்?”

“நம்ம பசங்க வெறும் கையோட போயி அடி வாங்கிட்டு வந்தானுக...ஆனா போலீஸ்காரங்க அப்படியா போவாங்க?...லத்தியோட போயி...அவனை நாலு இழுப்பு இழுத்தல்ல தூக்கிட்டு வருவாங்க!...போலீஸு அடியே வேற...அதிலும் இப்ப வந்திருக்கற இன்ஸ்பெக்டர் திவாகர்...சாதாரண ஆளில்லை!...நல்லவருக்கு நல்லவர்...கெட்டவருக்கு கெட்டவர்!”


“அட...என்னப்பா?...நம்ம பச்சைநாயகி அம்மன் சன்னதில ரத்தக் கறையே படக் கூடாது!ன்னு நெனச்சுத்தான் நம்ம பசங்களையே ஆயுத ஏந்த வேண்டாம்!னு சொன்னேன்!...நீ என்னடான்னா...சன்னதில சவம் விழ வழி சொல்லறியே?” பஞ்சாயத்து தலைவர் கோபமானார்.

“அதான் ஏற்கனவே நம்ம பசங்களோட ரத்தக்கறை படிஞ்சாச்சே...அப்புறம் சவம் விழுந்தா என்ன?...சட்டி பானை விழுந்தா என்ன?...ஒரு வீச்சரிவாளோட போயி அவனை வெட்டிக் கூறு போட்டு சாக்குல அள்ளிட்டு வர்றதை விட்டுட்டு வேண்டாத வெட்டி நியாயம் எதுக்கு?” செல்லக்கிளி இடையில் புகுந்து கூவினாள்.

அவளை எரிப்பது போல் பார்த்து விட்டு மற்ற பெரியவர்களுடன் ஆலோசித்த பஞ்சாயத்து தலைவர் “எப்படியும் பௌர்ணமிக்கு இன்னும் ரெண்டு மூணு நாளு இருக்கல்ல?....அதனால நாம கொஞ்சம் பொறுமை காப்போம்!...அடுத்த ரெண்டு நாள்ல அவனா அந்த இடத்தை விட்டுப் போறானா?ன்னு பார்ப்போம்....போகலைன்னா...அப்புறமா போலீஸுக்குப் போவோம்...போலீஸ் பாதுகாப்போட பௌர்ணமி பூஜையை செய்து முடிப்போம்” என்று முடிக்க,

“க்கும்....நாலு நாளா போகாதவன்...இந்த ரெண்டு நாள்லதான் போயிடப் போறானாக்கும்?” கழுத்தை நொடித்துச் சொன்னாள் செல்லக்கிளி.

“த பாரு செல்லக்கிளி...தலைவர் ஒண்ணு சொல்றாருன்னா...அதுல ஏதாவது உள்ளர்த்தம் இருக்கும்!...ஏற்கனவே அந்தப் பைத்தியக்காரன் நாலு நாளா சாப்பிடாமலே கிடக்கான்!...அவன் பைத்தியக்காரனாவே இருந்தாலும் அவனால் எத்தனை நாளைக்கு வயித்துக்கு ஆகாரம் போடாம தெம்பா இருக்க முடியும்?....அதை வெச்சுத்தான் தலைவர் பொறுமையா இருக்கலாம்கறார்” பள்ளிக் கூட வாத்தியார் விளக்கமளித்தார்.

“அது மட்டுமில்லைங்க வாத்தியாரய்யா...இன்னிக்கு காலைல இருந்து வானம் எப்படி இருக்கு பார்த்தீங்களா?...எப்படியும் இன்னிக்கு...நாளைக்கும் மழையடிக்கும்...இது தெக்கத்தி மழை...அதனால காத்து எக்கச்சக்கமாய் அடிக்கும்!...காத்தடிக்கும் போது யாரும் மலை மேலே இருக்க முடியாது...அதனால...அந்தக் காரணத்தினாலேயும் அவன் கீழே இறங்கி வந்துட வாய்ப்பிருக்கு” பொன்னுரங்கம் அய்யா வேறொரு விளக்கத்தை முன் வைத்தார். ஒரு இளக்காரப் புன்னகையோடு தலையை வேகமாய் ஆட்டினாள் செல்லக்கிளி.

பஞ்சாயத்து தலைவர் சொன்னது போலவே அடுத்த நாள் காலையில் ஆரம்பித்த மழை நிற்காமல் பொழிந்து கொண்டேயிருந்தது. ஊருக்குள் வீடுகள் அதிகமிருந்ததால் சற்று மந்தமாகவே வீசிய காற்று மலையின் மீது அசுர வேகத்தில் வீசியது. ஊர் மக்கள் அனைவரும் அந்தப் பைத்தியக்காரன் எப்படியும் கீழே இறங்கி வந்து விடுவான் என்று உறுதியாய் நம்பினார்.

மறுநாள் காலை அனைவரும் மழை சற்று ஓய்ந்ததும், தைரியமாய் மலை மீது ஏறிச் சென்றனர். போனவர்கள் அதே வேகத்தில் அலறியடித்துக் கொண்டு கீழே வந்தனர். “அய்யய்யோ...அந்தப் பைத்தியக்காரன் இத்தனை நாளு பூசாரியோட சிலம்பத் தடியைத்தான் கைல வெச்சிருந்தான்...இன்னிக்குப் போய் பார்த்தா....நம்ம பச்சை நாயகி அம்மனோட சூலாயுதத்தை எடுத்துக் கைல பிடிச்சிட்டிருக்கான்!...எந்தக் காத்தும்...எந்த மழையும் அவனை ஒண்ணும் செய்யலை!...”முதல் ஆளாய் இறங்கி வந்த டீக்கடை தேவேந்திரன் கதறினான்.

“அவந்தான் எந்நேரமும் வானத்தையே பார்த்துக்கிட்டு உட்கார்ந்திட்டிருக்கானே...அவனை காத்தும் அசைக்காது...மழையும் அசைக்காது!”

அப்போது இடையில் புகுந்த கோயில் பூசாரி, “அவன் அம்மனோட சூலாயுதத்தைக் கைல வெச்சிருக்கான்!ன்னா...அம்மன் சன்னதிக் கதவை உடைச்சிட்டு உள்ளார போயிருக்கான்” பதைபதைத்தார்.

“ஏன் பூசாரி அய்யா அம்மன் சிலை மேல் ஏதாச்சும் நகை நட்டு இருந்திச்சா?” பஞ்சாயத்துத் தலைவர் கேட்டார்.

“அப்படியெல்லாம் எதுவுமில்லை...நாமதான் விசேஷ நாளைக்கு மட்டும் தர்மகர்த்தா வீட்டில் இருக்கற அம்மன் நகைகளை எடுத்திட்டு வந்து.... அம்மனுக்கு நகை அலங்காரம் பண்ணிப் பூஜையை முடிச்சிட்டு...உடனே கழட்டிக் கொண்டு போய் தர்மகர்த்தாவிடமே ஒப்படைச்சிடறோமே?...” என்றார் பூசாரி. “அப்பாடா” என்று நெஞ்சில் கையை வைத்து நிம்மதியானார் பஞ்சாயத்துத் தலைவர்.
(தொடரும்)​
 
#4
பொன்னுரங்கம் போலீஸுக்கு போக வேண்டாம்ன்னு ஏன் சொல்லுறார்?
என்ன காரணம்?
அடிக்கடி செல்லக்கிளி குறுக்கே புகுந்து ஊடால பேசுறாள்
அப்போ அந்த ஆளுக்கும் செல்லக்கிளிக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமோ?
 
Last edited:

தரணி

Well-Known Member
#5
அப்படி என்ன தான் இருக்கு வானத்தில்.... திவாகர் வந்தா தான் இவனை சமாளிக்க முடியும் போலவே
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes