புள்ளினங்காதல் - 1

Advertisement

Kamali Ayappa

Well-Known Member
ஆதவன் ஒரு புறம் மறைந்துகொண்டிருக்க, "அவன் சென்றால் என்ன? நான் இருக்கிறேனே", என்று மொழியும் வண்ணம், மதி மயக்கும் வெள்ளி கதிர்களை வீசும் அந்த மதி மங்கை ஒரு புறம் எட்டி பார்க்க, காலையில் வெளியில் சென்ற கணவன்மார்கள் எதிர்நோக்கி இல்லத்து பெண்கள் வாசலிலே அமர்திருந்த அந்தி மாலை நேரம்...



"தேன் அருவி காதில் பாயும் என்று எழுதிய கவிகள், இந்த பறவைகளின் கீச்சு குரல் கேட்டு தான் எழுதினாரோ?" என்று எண்ணி, சிறகுவிரித்து பறக்கும் அந்த பறவைகளின் அழகிலும், அதன் கொஞ்சும் மொழியிலும் தன்னை மறந்து உப்பரிகை அருகில் நின்றிருந்த மன்னன், "தந்தையே !" என்று கொஞ்சும் மொழியில் விளித்து, கொஞ்சி விளையாடும் தன் மகளையும் ஒரு நிமிடம் மறந்து தான் போனான்.



எழில்வேந்தன் உப்பரிகை அருகில் நின்று அந்த புள்ளினங்களின் அழகை ரசித்துகொண்டிருந்த நேரம், அவன் அருகில் வந்து நின்றாள் அவன் மகள், மயூரிகா. " தந்தையே...தந்தையே..." என்று மூன்று நான்கு முறை அழைத்தும், தன் தந்தையின் கவனம் தன் புறம் திரும்பாமல் இருக்க, அவன் கால்களை கட்டிக்கொண்டாள் அவனின் ஏழு வயது மகள். தன் கால்களை கட்டிக்கொண்டு நின்ற தன் செல்வ புதல்வியை, கரங்களில் சுமந்து நெஞ்சோடு அணைத்து கொண்டு, "நீயும் பாரம்மா...இந்த பறவைகளின் அழகை" என்று காமிக்க, இவளோ, தன் தந்தை கைகளில் இருந்து கீழே இறங்கி, முகத்தை வேறு புறம் திருப்பி கொண்டு, "எப்பொழுதும் பறவைகள்...பறவைகள்...அந்தப்புரத்தில் பறவைகள், அவையிலும் பறவைகள்...நான் தங்கள் கண்ணிற்கு தெரிவதே இல்லை..."என்று செல்லமாய் கோபித்து கொண்டாள் மயூரிகா.





புவி ஆளும் அரசனாய் இருப்பினும், தன் மகவுக்கு முன், அவன் ஒரு தந்தை தானே...வேறு புறம் திரும்பி கோபித்து கொண்டு நிற்கும் தன் புதல்வியை தன் புறம் திருப்பி, அவள் முன் மண்டியிட்டு, "தோகை விரித்து ஆடும் அந்த வண்ண மயிலை ஒத்தவள் என் மகள்...தத்தி தத்தி அவள் நடக்கும் அழகில், அந்த மயிலின் ஒயில் கூட தோற்று போகும்" என்று அவளை செல்லம் கொஞ்சினார் எழில்வேந்தன்.



"அரசே..." என விளித்து, வந்த விஷயத்தை கூற, அவர் அனுமதி வேண்டி கைகட்டி நின்றுருந்தான் அந்த காவலன். " சொல். வந்த செய்தி என்ன?" என்று அரசர் கேட்க, "தங்கள் அழைப்பை ஏற்று அண்டை நாடு மன்னர் மாறவர்மன் வருகை தந்துள்ளார் அரசே" என்று கூறினான்.



"ம்ம். வருகிறேன்" என்று கூறிவிட்டு, தானும் வருவேனென அடம் பிடித்த தன் மகளை சுமந்துகொண்டு அரசவைக்கு சென்றார்...



தன் மெய்க்கீர்த்தி முழங்க அரசவைக்குள் நுழைந்தவர், தன் ஆசனத்தில் அமர்ந்து, தன் மகளை மடியில் அமர்த்திக்கொண்டார். அவர் ஆசனத்தின் அருகில், மற்றோரு ஆசனம் போடப்பட்டு, அதில் அமர்ந்திருந்தார் மாறவர்மன். "மாமா..." என அழைத்து கொண்டு, மயூரிகா மாறவர்மனிடம் தாவ முயற்சிக்க, அவளை தடுத்து அவர் புறமே அமர்த்திக்கொண்டார் எழில்வேந்தன்.



"வாருங்கள் மாறவர்மன் அவர்களே. காலை தான் அழைப்பு விடுத்தேன். கூடு விட்டு சென்ற பறவைகள் கூடு வந்து அடைவதற்குள் வந்துவிட்டீரே!" என்று எழில்வேந்தன் கூற, மாறவர்மன் முகம் மாறியது. "என் ஆருயிர் நண்பனின் அழைப்பை ஏற்று, அவனை காண வர தாமதம் செய்வேனா என்ன?" என்று கேட்டார் மாறவர்மன்.



"ஆனால் இம்முறை அழைப்பு விடுத்தது...நட்பு பாராட்டுவதற்கு அல்ல மாறவர்மா!" என்று எழில்வேந்தன் கூற, "அறிந்துகொண்டேன் எழிலா. எப்பொழுதும் மாறா என்று வாஞ்சையுடன் அழைப்பவன் மாறவர்மன் அவர்களே என்று அழைத்த உன் அழைப்பிலும், எப்பொழும் விருந்தினர் மாளிகையில் அமர்த்தி உரையாடுபவன், இன்று அரசவையில் நிறுத்தி வைத்துளாயே...அந்த உபசரணையிலும்...மாமா என்று ஆசையாய் துள்ளி வந்து குழந்தையை கூட தடுத்தாயே...அந்த செயலிலும் அறிந்துகொண்டேன் எழிலா...நீ அழைத்தது நட்பு பாராட்ட அல்ல என்று".



"நல்லது" என்று கூறிய எழில்வேந்தனிடம், "ஏன் எழிலா? இப்படி மூன்றாவது மனிதர் யாரிடமோ உரையாடுவது போல உரையாடுகிறாயே!" என்று வருத்தத்துடன் வினவ..."உன் ராஜ்யத்தின் நடுவே இருக்கிறதே அந்த ஏரி. அந்த ஏரிக்கு ஒரு ஆண்டிற்கு சுமார் 40,000 பறவைகள் அந்த ஏரிக்கு வருகை தருவதை அறிவாய் அல்லவா, மாறா? உண்ணிக்கொக்கு, சிறுவெண்கொக்கு, சிறிய நீர்க்காகம், கூழைக்கடா, மஞ்சள் மூக்கு நாரை,வெள்ளை அரிவாள் மூக்கன், குருட்டுக்கொக்கு, நத்தைகுத்தி நாரை, கொண்டை நீர்க்காகம் என்று எத்தனை வகையான உள்நாட்டு பறவைகைகள் இனப்பெருக்க காலத்தில் அந்த ஏரிக்கு வருகை தருகின்றன என்று அறிவாயா? இவை மட்டும் அல்லாமல், தன் நாட்டின் குளிர் தாங்க முடியாத எத்தனை அரியவகை அயல்நாட்டு பறவைகள் இங்கு தஞ்சம் புகுகின்ற என்று அறிவாய் அல்லவா? கிளுவை, ஊசிவால் வாத்து, நீலச்சிறகி வாத்துகள், தட்டவாயன், பச்சைக்காலி, பவளக்காலி என்று ஐரோப்பாவை சேர்ந்த எத்தனை பறவைகள் இங்கு குடிபெயர்கின்றன...உன் நாட்டில் தஞ்சம் புகும் அந்த அற்ப புள்ளினங்களை பாதுகாப்பது, அந்த நாட்டின் வேந்தனாகிய உன் கடமை அல்லவா? நாட்டின் மக்களை காப்பது மட்டுமா வேந்தனின் வேலை? நாட்டின் வளங்களை காப்பதும் அவன் கடமை அல்லவா? போன முறை நான் வந்த பொழுதே, உன்னிடம் கூறியும், நீ இன்னும் அந்த பறவைகளை வேட்டையாடும் அந்த உள்ளூர் பண்ணையார்களுக்கு எந்த தண்டனையும் அளிக்கவில்லை" என்று சினம் கொண்டார் எழில்வேந்தன்.



"எழிலா...இதுதான் விஷயமா...இதற்குதான் இத்தனை கோவமா?" என்று மாறவர்மன் கேட்க, "இதை இவ்வளவு சாதாரணமாக எடுத்துக்கொள்ளாதே மாறா...ஒருவேளை, ஒரு அரசனாக நீ உன் பொறுப்பை செய்யாவிடின், உன் நாட்டின் பொறுப்பையையும் நானே எடுத்துக்கொள்ள, உன் மீதே போர் தொடுக்க வேண்டியிருக்கும்" என்று எச்சரிக்க, " என்ன? போரா? அதுவும் நீ, என் மீதா? எழிலா...முதலில் நான் சென்று அந்த ஏரியில் தஞ்சம் புகும் பறவைகளை யாரும் துன்புறுத்தாத வண்ணம் ஏற்பாடு செய்து விட்டு, உன்னை பிறகு வந்து சந்திக்கிறேன்" என்று கூறிவிட்டு, எழில்வேந்தனின் பதிலுக்கு கூட காத்திராமல் வெளியேறினார் மாறவர்மன்.



மாறவர்மன் கிளம்பிய உடன், "மயூரிகா... நீ அன்னையிடம் செல். நான் மற்ற அலுவல்களை முடித்து விட்டு வருகிறேன்" என்று மகளை அனுப்பிவிட்டு, இரவு தான் அந்தப்புரத்திற்கு சென்றார்.



அங்கு அரசியார், பஞ்சணையில் அமர்ந்திருக்க, அவர் மடியில் மயூரிகா உறங்கி கொண்டிருக்க, அவர் அருகில் வந்து அமர்ந்தார் எழில்வேந்தன்.



"வாருங்கள். ஏன் முகம் சோர்வாக உள்ளது?" என்று அரசியார் வினவ, "அப்படி ஏதும் இல்லையே" என்று பதில் அளித்தார் அரசர். "ஏதும் இல்லாமல் தான் இன்று மாறவர்மன் அண்ணனிடம் கூட அவ்வளவு கடுமையா?" என்று அரசியார் கேட்க, "அரசவையில் நடந்தது உன் செவிகளுக்கு எட்டியது எப்படி?" என்று அரசர் கேட்க, "எனக்கு தெரியாமல் எப்படி?" என்று பதில் கேள்வி கேட்டார் அரசியார். "நான் நாடெங்கும் நடப்பதை தெரிந்து கொள்ள, ஒற்றர்கள் வைத்து உளவு பார்த்தால், உன் மகளை வைத்து என்னையே உளவு பார்க்கிறாயா?" என்று செல்லமாக மிரட்டினார் மன்னர்.



"மனைவி செய்தால் அதன் பெயர் உளவு பார்ப்பது அல்ல. அக்கறை கொள்வது. சரி. அதெல்லாம் இருக்கட்டும். முக்காலமும் அறிந்த மன்னனின் கவலையின் காரணம் என்னவோ?" என்று அரசியார் கேட்க, "முக்காலமும் அறிந்ததால் தான் கவலையே" என்று உடைந்து போனவர் போல பதில் அளித்தார் மன்னர்.



ஏதும் புரியாமல் அரசியார் விழிக்க, அரசரே மீண்டும் தொடர்ந்தார். "முக்காலமும் அறியும் என் ஞானம் மூலம், வீழ்ச்சியை அனுமானித்தேன்" என்று கூற, "வீழ்ச்சியா? நாட்டின் வீழ்ச்சியா? நம் அரசாட்சியின் வீழ்ச்சியா? ஏதேனும் போரில் நமக்கு வீழ்ச்சி உண்டாக போர்கிறதா?" என்று அரசியார் பதட்டமாக கேட்க, விரக்தியாக சிரித்தார் அரசர். "ஒரு நாட்டின் வீழ்ச்சி, ஒரு அரசனின் வீழ்ச்சி என்பது இயற்கையின் நியதி. இன்று ஒரு ராஜ்யத்தை ஆளும் அரசனே அதை என்றும் ஆளவேண்டும் என்று எந்த நிர்பந்தமும் கிடையாது. ராஜ்ய பாரத்துடன் சேர்த்து, கிரீடமும் ஒரு அரசன் சிரத்தில் இருந்து என்று வேண்டும் என்றாலும் இறக்கிவைக்க படலாம். உன் கணவன் இந்த அரியாசனத்தை எண்ணி ஏங்குபவன் என்றா தேவி நினைத்தாய்?" என்று கேட்டார் எழில்வேந்தன்.



"நீங்க கவலை பட கூடிய வேறு வீழ்ச்சி என்ன அரசே?" என்று அரசியார் யோசனையுடன் கேட்க, "இயற்கையின் வீழ்ச்சி. இயற்கையின் ஒரு முக்கிய அங்கமாய் விளங்கும் புள்ளினங்கள் வீழ்ச்சி" என்றார் எழில்வேந்தன்.



ஒன்றும் புரியாமல் அரசியார் விழிக்க, "எந்த கவலையும் இன்றி வானை அளந்து பறந்து கொண்டிருக்கும், இந்த பறவைகள் கொஞ்சம் கொஞ்சமாக அழியப் போகிறது. ஒவ்வொரு இனமாக இந்த உலகை விட்டு மறைய போகிறது" என்றார் மன்னர். அதிர்ச்சியில் உறைந்த அரசியார், "அதற்கு காரணமாய் இருக்க போவது எது?" என்று அரசியார் கேட்க, "மனிதர்கள்" என்றார் அரசர்.



"மனிதர்களா?" என்று அரசியார் கேட்க, "ஆம் தேவி. மானுடர்கள் தான். தானே தான் இயற்கையின் அழிவுக்கு காரணம் என்பதை உணராமல், கண் முன் சீரழையும் இயற்கையையும் பொருட்படுத்தாமல், தன் அகங்காரத்தையும், அங்கீகாரத்தையும், மேன்மையையும், முதலாலித்துவதையும் நிலைநாட்டுவதிலே குறியாய் இருக்க போகின்றனர் மூடர்கள். இயற்கை அழிவின் முதல் படி, பறவைகளின் அழிவே" என்றார் அரசர்.



மன்னர் கூறுவதில் ஸ்தம்பித்து நின்ற அரசியார், "இதை மாற்றி அமைக்க வழி ஏதும் இல்லையா அரசே?" என்று அவர் வருந்தி கேட்க, "முக்காலத்தையும் கணிக்கும் திறன் தான் எனக்கு உள்ளதே தவிர, அதை மாற்றி அமைக்க இல்லை" என்றார் அரசர். "வேறு என்ன செய்வதாய் உத்தேசம். இதை அறிந்தும் அமைதி காக்க போகிறீரா?" என்று கேட்க அரசியிடம், "வேறு என்ன செய்ய சொல்கிறாய். இப்பொழுதே சென்று இயற்கையின் அழிவு, புள்ளினங்கள் அழிவு என்று சொற்பொழிவு ஆற்றினால் கேட்போரின் செவிகளை எட்டுவது கூட கடினம். இந்த நிலையில், இது அவர்கள் அறிவை எட்டி, அவர்கள் ஆற்றலுடன் செயல்படுவது என்பது நடக்காத காரியம். இன்று மட்டும் அல்ல. ஆயிரம் வருடம் கழித்தும், மனித இனம் தன்னுடைய தனிப்பட்ட மேன்மையை தேடி, அதன் பின் செல்லுமே தவற, இதை பற்றி அக்கறை கொண்டு செயலாற்ற போவதில்லை" என்றார் எழில்வேந்தன்.



அரசியார் மௌனத்தில் கேட்க, "ஆனால் ஒரு வழி உண்டு" என்று அரசர் கூற, கேள்வியாய் அவர் முகம் நோக்கினார் அரசியார். "செல்வம்" என்றார் அரசர். "இன்று, நேற்று, நாளை என்று முக்காலமும் மனிதர்கள் ஓடுவது இந்த செல்வத்தின் பின்னே. செல்வமே ஒருவனுக்கு மேன்மை தரும் என்று ஆழமாக நம்புகின்றனர். தன் சந்ததியருக்கு செல்வம் சேர்க்கும் ஓட்டத்தில், தன் உடல், உயிர் என எதையும் பொருட்படுத்தாமல் ஓடும் இந்த மனிதர் கூட்டம். அதை உபயோகித்து கொள்ள போகிறேன். அழியும் பறவைகள் பற்றியும், அணு அணுவாய் அழியும் இந்த இயற்கை பற்றியும் எதிர்கால சந்ததியருக்கு நினைவு படுத்த" என்று கூறினார் மன்னர்.



"எப்படி?" , என்று அரசியார் கேட்க , "நான் சொல்ல நினைப்பதை ஒரு ஓலையில் எழுதி, அதை புதையலுடன் வைக்க போகிறேன்"என்று அரசர் கூற, "அப்படி வைத்தால், பணத்தாசை உள்ளவர்கள் தானே புதையலை தேடி வருவார்கள்! அவர்களுக்கு தேவையான பணம் கிடைத்தவுடன், நீங்கள் எழுதி வைக்கும் ஓலை எப்படி அவர்கள் கண்ணிற்கு தென்படும். அதை படித்தது பார்க்க கூட பிரயத்தனம் செய்வார்களோ என்பதே சந்தேகிக்க வேண்டிய விஷயம் தான்" என்றார் அரசியார். "நான் என்ன அவ்வளவு மூடனா?" என்று சிரித்து கொண்டே கேட்ட மன்னர், "செல்வத்தை விட பறவைகளை பெரிதாக மதிக்கும் ஒருவன், பறவைகள் மீது அலாதி பிரியம் கொண்ட ஒருவனால் தான் அந்த புதையலை நெருங்கவே முடியும்" என்றார் அரசர்.



"அரசே" என்று அரசியார் ஏதோ கேட்க விழையும் போதே, "நீ என்ன கேட்க விழைகிறாய் என்று அறிவேன் தேவி. செல்வத்தை மதிக்காமல் பறவைகள் மீது அன்பு கொண்ட ஒருவன் எப்படி புதையலை தேடி வருவான் என்று தானே? அப்படி செல்வத்தை மதிக்காத ஒருவனுக்கு புதையல் எதற்கு என்று தானே?" என்று அரசர் கேட்க, "ஆமாம்"என்று தலை அசைத்தார் அரசியார்.



"நான் எதிர்பார்ப்பது போல ஒருவன் வந்து, அந்த ஓலையை படித்து, அதில் இருக்கும் உண்மையை உணர்ந்து கொண்டாலும் கூட, இப்படி ஒரு ஓலை கிடைத்தது, இப்படி அதில் இருந்தது என்று கூறினால், மற்றவர் அதற்கு செவி மடுக்க மாட்டார்கள். ஆனால், இவ்வளவு புதையல் கிடைத்தது, அந்த புதையலுடன் இந்த ஓலை இருந்தது என்று கூறினால் அனைவர் கவனமும் அதன் மேல் விழும்" என்றார் அரசர்.



"அப்படி ஒருவனை எப்படி வரவைப்பது அரசே?" என்று அரசியார் மீண்டும் கேட்க,



புதைந்த புள்ளினங்கள் அவை மீண்டும் தலையெடுக்க,

எம்மை போல் அவைகளின் மேல் தீரா காதல் கொண்ட ஆணவன் உதித்திடுவான்...

அவன் தன் கடமையை செய்வதறியாது இருளில் மூழ்கி தவித்திருக்க.,

நம் வழி சந்ததியவள் அவனுக்கு இருள் நீக்கும் ஒளியாய் தோன்றுவாள்..

இதுவே நான் வணங்கும் இறையவணின் திரு வாக்கு..”




என்றார் எழில்வேந்தன்.
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
உங்களுடைய "புள்ளினங்காதல்"-ங்கிற
அழகான அருமையான புதிய
லவ்லி நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
கமலி அய்யப்பா டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top