'நெஞ்சமெல்லாம் அலரே !!' - Epilogue

Advertisement

Priyaasai

Active Member
அகனலர் - 64

"எஸ் டிவோர்ஸ் பேப்பர்ஸ் கையெழுத்து போடு" இன்னையோடு எல்லாத்துக்கும் ஒரு முடிவு கிடைக்கட்டும் என்று கடுமையான குரலில் கூற,



பதறிப்போய் 'நோ முடியாது' என்று கட்டிலில் இருந்து துள்ளி எழுந்தவன், அவளையும் சட்டென இழுத்து நிறுத்தி காற்று புகாதவாறு அணைத்து கொண்டு , "ஏய் என்னடி பேசுற" என்றவனின் குரலில் கலக்கம் பிறக்க அவள் முகத்தை நிமிர்த்தி நெற்றியில் அழுத்தமாக முத்தமிட்டவன் "சாரிடி பட்டு உன்கிட்ட சொல்லாம போனது தப்பு தான் கண்டிப்பா இனி யார் கூப்பிட்டாலும் நான் சினிமாக்கு போக மாட்டேன், எனக்கு எப்பவும் நீ தான் முக்கியம்" என்றான் ஒட்டுமொத்த காதலையும் குரலில் திரட்டி அவனை புரிய வைத்துவிடும் நோக்கத்துடன்.



அவளோ அதை கருத்தில் கொள்ளாமல், "நான் முக்கியம்ன்னு நெனச்சா கையெழுத்து போடு" என்று பிடிவாதமாக நின்றாள்.



அதில் சுறுசுறுவென எழுந்த கோபத்துடன் எழில் "ஏய் அறிவுகெட்டவளே என்னடி பேசுற..?? டைவர்ஸ் என்ன உனக்கு சாதரணமா போச்சா..?? அதுவும் உப்பு சப்பில்லாத விஷயத்துக்கா..??என்று நெற்றியை பிடித்து கொண்டவன், நம்ம குழந்தைங்க பத்தி யோசிக்க மாட்டியா..??" என்று கேட்க,



"ஏன் அவங்களுக்கு என்ன..?? டைவர்சுக்கும் அவங்களுக்கும் என்னடா சம்பந்தம்" என்று அலர் புரியாமல் கேட்க,



"ஏய் லூசு என்னடி பிரச்சனை உனக்கு..?? கொஞ்சமாவது புரிஞ்சி பேசு" என்று சீறியவன்,



"ஊருக்கே கவுன்சிலிங் பண்றவளுக்கு தெரியாதா உன்னை டைவர்ஸ் பண்ணிட்டு நானும் என் பிள்ளைங்களும் எப்படி இருப்போம்" என்று வலியுடன் கேட்க,



அதுநேரம் வரை அவன் பேசுவதை புரியாமல் பார்த்திருந்தவள், "என்னது என்னை டைவர்ஸ் பண்ணுவியா..???" என்று ஒரே உதறலில் அவனிடம் இருந்து விடுபட்டு அவன் சட்டையை கொத்தாக பிடித்தவள்



"என்ன தைரியம் இருந்தா என்னையே டைவர்ஸ் பண்ணுவேன்னு சொல்லுவ...?? என்ன தைரியம்டா உனக்கு " என்று அவன் வாயில் ஓங்கி ஒன்று வைக்க,



எழிலோ வாயில் கை வைத்தவன், "ஏன்டி லூசு இப்போ உன்ன டிவோர்ஸ் பண்ண தானே என்னை நீ கையெழுத்து போட சொன்ன" என்று கேட்க,



"ஓஓஓ... நானே... உன்னை... டிவோர்ஸ்..." என்றவாறே அவனை பார்த்தவள், "உனக்கு அப்படி ஒரு நெனப்பு இருக்காடா " என்று கேட்ட அலர் நொடியில் உக்கிர காளியாக அவதரித்து உலக்கையுடன் அவன் முன் நின்றாள்.



"ஏய் என்னடி இது..??" என்று அதை பார்த்து எழில் மிரள,



அவனை மெத்தையில் அமர்த்தி அவன் முன் மீண்டும் பேப்பரை நீட்டியவள் "இதோ பார் இதுல உன்னை கையெழுத்து போட சொன்னது என்னை டிவோர்ஸ் பண்றதுக்கு இல்லை" என்று நிறுத்த,



வேற யாரை..?? என்று குழம்பி போன எழில், "ஏய் நீ தானேடி என் பொண்டாட்டி ஒருவேளை எனக்கே தெரியாம உன் கனவுல நான் யாருக்காவது தாலி கட்டிடேனா..??" என்று சிந்திக்க,



"எங்க அப்பாவை" என்று அலர் அழுத்தந்திருத்தமாக கூற,



விளையாட்டை கைவிட்டு 'என்னது..??' என்று அன்னிச்சையாக எழுந்து நின்றவனின் முகத்தில் அத்தனை அதிர்ச்சி,



"ஆமா இனி எங்கப்பாக்கும் உனக்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னு சொல்லி அவரை நீ விவாகரத்து பண்ணனும் இல்லை.." என்ற போதே அவள் குரல் கமறிட



அவளுக்கு பதிலளிக்காது இமைக்காமல் அலரை பார்த்த எழிலின் பார்வை அவளை சிறுக சிறுக சிதறடிக்க விழிகளில் திரண்ட நீருடன் அவள் பார்வையை தழைக்க ஆழ்ந்த மூச்சை எடுத்து பின்னந்தலையை வருடியவன் உலக்கையை அவளிடம் இருந்து பிடுங்கி தூர எறிந்துவிட்டு மெத்தையில் இருத்த பேப்பரையும் கிழித்து போட்டு அவளை வாரி அணைத்து கொள்ள, வார்த்தைகள் அற்ற மௌனம் இப்போது அறையை நிறைக்க தொடங்கியது.



மௌனமே காதலாகி போக அலரை வருடி கொடுத்தவாறே எழில் நின்றிருந்தான். அவளும் தன் கேவலை அடக்கி அவன் அணைப்பில் சுகமாய் அடங்கி எழிலின் நெஞ்சில் புதைந்திருந்தாள்.



இதற்குமேல் அலர் எடுத்து சொல்லி புரிய வைக்க வேண்டிய உறவு இல்லையே அவர்களது பல நாட்களாக அவளை அரித்து கொண்டிருக்கும் விடயத்தை வேறு எப்படி கையாள என்று புரியாது தாங்க முடியமல் இப்படி நடந்து கொள்கிறாள் என்பது புரிபட இதற்க்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று மனதினுள் தீர்மானித்தான்.



"எங்க அப்பா வந்த பிறகு நீ என்னை விட்டு ரொம்ப தூரமா போற மாதிரி எனக்கு பீல் ஆகுது மாமா, எங்க அப்பா தான் புரியுது ஆனா இப்போ போதாததுக்கு உன்னோட பொண்ணுங்க வேற, வீட்டுக்கு வந்தாலே உன்னோட நேரம் முழுக்க அவங்க கூட தான் என்று தேம்பியவள் அவங்களை பார்த்ததும் நீ எல்லாமே மறந்துடுற என்றவள் இப்போது கண்ணீரை துடைத்தவாறே அவன் முகம் பார்த்து என்னையும் சேர்த்து தான் என்றபோது எழிலிடம் சிறு அதிர்வு,



"ஆமா, உனக்கு நான் முக்கியம்ன்னு தெரியும் ஆனா இப்போ என்னால உன்னை யார் கூடவும் பங்கு போட முடியலை.., உனக்கும் எனக்குமான நேரம் ரொம்ப குறைஞ்சிடுச்சி அதுக்காக குழந்தைங்களை கட்டுபடுத்த முடியாது அதான் அப்பா..." என்று உதடு கடித்து நின்றவளுக்கு அதற்க்கு மேல் வார்த்தை வரவில்லை மெளனமாக அவனை கட்டிக்கொண்டு நெஞ்சில் சாய்ந்து விழி மூட எழிலின் பார்வை அவள் மீதே..!!



இத்தனை வருடங்களில் அனைத்து தரப்பினரும் எளிதாக நெருங்க கூடிய நீதியின் புறம் மட்டுமே நின்று எதிரில் இருப்பவர்களை தூங்க விடாமல் செய்து எடுக்கும் வழக்குகளில் எல்லாம் பெரும்பாலான வெற்றி பெற்று நகரில் புகழ்பெற்ற வழக்கறிஞராக இருப்பவளிடம் இருந்து வெளிவரும் வார்த்தைகள் அத்தனையும் அவன் மீது அவள் கொண்டுள்ள மாறாத நேசமும் கொள்ளை அன்பின் வெளிப்பாடு அல்லவா..??



கம்பீரமாக நீதிமன்றத்தில் நுழைந்து எதிர் தரப்பினருக்கு சிம்ம சொப்பனமாக திகழ்பவள் வீட்டிற்கு வந்தால் பொறுப்பான குடும்ப தலைவி குழந்தைகளுக்கு அன்பான அன்னை ஆனால் தங்கள் அறைக்குள் என்றுமே அவன் மீது கொண்டிருக்கும் பித்து குறையாமல் சிறுகுழந்தையாய் அவனன்பில் அடைக்கலம் ஆகி நிற்கிறாள்.



ஒற்றை அணைப்பில் தன்னை உணர்த்த முயல, அதற்க்குள் அலரின் கண்ணீர் எழிலின் சட்டையை தாண்டி இருந்தது



'அமுலு' என்று அவள் முகம் நிமிர்த்த , முடியாது என்பதாக அவனை இறுக்கமாக கட்டிக்கொண்டு அவன் மார்பில் முகம் பதித்து நின்றாள் அலர்விழி.



"ஒரு நிமிஷம் விடுடி" என்று அவள் கரங்களை விலக்கி சென்று அறையின் விளக்கை ஒளிர செய்தவன் அடுத்த நொடி அவளுக்காக வாங்கி வந்திருந்த சிக்கன் லாலிபாப்பை எடுத்து வந்து அவள் முன் நீட்டி, "அவர் கூட போனா நான் உன்னை மறந்துடுவேனா..?? என்னோட மூச்சு காற்றே நீ தான்டி..!! உன்னை கூட கூட்டிட்டு போகலையே தவிர எனக்குள்ள தானே நீ இருக்க" என்றவாறே அவளுக்கு ஊட்ட,



முகம் மலர்ந்த புன்னகையுடன் அதை வாங்கி கொண்டவளின் கரத்தை பிடித்து அவளுக்கு பிடித்த மட்டன் கோலா, தந்தூரி சிக்கன் என்று அனைத்தையும் திணித்து,



"ஆமா மத்ததெல்லாம் போட்டோ எடுத்து அனுப்பின நாதாரி நான் வாங்கின பார்சலை மட்டும் எப்படிடி அனுப்பாம விட்டான்" என்று அடக்கப்பட்ட குரலில் எழில் சீற,



"அது அண்ணன் மறந்து இருப்பாங்க" என்று சாப்பிட்டு கொண்டிருந்தவள் தன் போக்கில் சொல்ல அதன் பின்னர் தான் வெற்றியை காட்டி கொடுத்தது புரியவும் கண்களை சுருக்கி இதழ்களை கடித்து அவனை பார்க்க,



"நெனச்சேன்டி அவனாதான் இருப்பான்னு" என்று விழிகள் சிவந்தவன்



"அந்த பரதேசி இன்னும் திருந்தலை இல்லை..??அவனாவது மறக்கிறதாவது..??? நமக்குள்ள பிரச்சனை உண்டாக்குறதே அவனுக்கு வேலையா போச்சு இருக்குடி அவனுக்கு..." என்று எழில் கருவ,



"இதோ பாருங்க எனக்காக தான் என் அண்ணனை உங்களை பாலோ பண்றாரு அதுக்காக அவரை திரும்ப எதிலாவது கோர்த்து விட நினைச்சிங்க அப்புறம் என்ன பன்னுவேன்னே தெரியாது" என்று அவள் எச்சரிக்க,



"ஏய் என்னடி பண்ணுவ, பெரிய அண்ணன் நொண்ணன்னுட்டு" என்று அவளிடம் எகிற அதேநேரம் பன்னிரண்டு மணிக்கு ஒரு நிமிடம் முன் அலர் செட் செய்து வைத்திருந்த அலாரம் ஒலிக்க வேகமாக கைகளை கழுவி வந்தவள் அவனுக்காக செய்து வைத்திருந்த பரிசை எடுத்து வர அதற்குள் வெளியில் இருந்து 'அகனா' என்ற நாதனின் குரல்.



"இதோ வரேன் மாமா" என்று அவசரமாக எழில் திரும்ப,



"டேய்" என்று வேக மூச்சுக்களுடன் அலர் அவனை பார்க்கலானாள் அதற்குள் மீண்டும் 'அகனா' என்ற நாதனின் குரலுடன் இணைந்து 'அப்பாஆஅ' என்ற அவன் தேவதைகளின் குரலும் இணைந்து கொள்ள தத்தளித்து போனான்.



ஒரு நொடி நிதானித்து கதவை நெருங்கி "ஒரு நிமிஷம்டாம்மா அப்பா வந்துட்டேன்" என்று குரல் கொடுத்தவன் மனைவியை நெருங்கி சொல்லுடி என்று அவசரமாக அவள் நெற்றியில் இதழ் பதிக்க "ஹாப்பி பர்த்டே மாமா" என்று எக்கி அவன் இதழில் தன் முத்திரையை பதித்து அவள் பரிசான தங்க சங்கிலியை எடுத்து அவன் கழுத்தில் அணிவிக்க அதில் கோர்க்கபட்டிருந்த இதய விடிவிலான டாலரை உற்று பார்த்தான் எழில்.



இதயத்தினுள் அலர் என்று நூதனமாக பொறிக்கப்பட்டு அதன் பின்னே விழி வரையப்பட்டு இருப்பதை கண்டவன் அவளை பார்க்க,



"இனி இதை பார்க்கும் போது நீ எனக்குன்னு எங்கப்பாக்கு புரியணும் அதான்" என்று இதழ் சுழிக்க அவள் செய்கையில் சட்டென சிரித்து விட்டவன் அவள் நெற்றியை முட்டி நிற்க திரும்ப 'அப்ப்பாஆஆஅ' என்று குரல் கதவின் பின்புறம் இருந்து,



'வந்துட்டேன்' என்று ஓடி சென்று எழில் கதவை திறக்க, மின்னலென அவனை நோக்கி ஓடி வந்த அவன் தேவதைகள் இருவரும் அடுத்த நொடி அவன் கரங்களை நிறைத்திருந்தனர்.



ஆம் தேவதைகள் தான்..!! வரமாய் அவன் கரம் சேர்ந்த தேவதைகளை கண்டவனுக்கு அவர்களை முதன் முதலாக உறுதி செய்த நாள் நினைவிலாடியது.



ஸ்கேன் செய்ததில் அலர் இரட்டை குழந்தைகளை கருவுற்றிருப்பதை மருத்துவர் உறுதி செய்ய எழில், நாதன்,வளர்மதி உட்பட அனைவரின் மகிழ்ச்சிக்கு அளவில்லை என்றாலும் அவிரனை தான் கையில் பிடிக்க முடியவில்லை. ஏற்கனவே தங்கையின் வரவை எண்ணி கனவுலகில் சஞ்சரித்து கொண்டிருந்தவனுக்கு இப்போது இரு குழந்தைகள் என்றதுமே அவன் மகிழ்வு நூறு மடங்காக பெருகி இருந்தது.



நெகிழ்ச்சியுடன் அலரின் முகத்தை தாங்கிய எழிலின் விழிகள் கலவையான உணர்வுகளுடன் அவள் நெற்றியில் இதழ் பதிக்க கலங்கிய விழிகளுடன் அவனை ஏறிட்டவள் எழிலை காற்று புகாதவாறு அணைக்க அவளை வருடி கொடுத்த எழிலின் இமையோரமும் ஈரம் கசிந்திருந்தது.



ஆனால் இரட்டை குழந்தைகளின் செய்தியை கேட்ட நாதன் எந்த அளவு மகிழ்ச்சி கொண்டாரோ அதைவிட இருமடங்காக அவருக்கு உள்ளுக்குள் அச்சம் முகிழ்க்கத்தான் செய்தது. ஆம் அச்சம் தான்..!! ஆனால் அது தன் மகள் குறித்தோ இரு குழந்தைகளை குறித்தோ அல்ல மாறாக எழிலை குறித்து தன் மகளின் பிரசவத்தின் போது அவன் கொண்ட வலிகளை குறித்து...!! ஒரு குழந்தையின் வரவிலேயே மரித்து உயிர்த்தெழுந்தவன் இம்முறை இரு குழந்தைகள் எனும் போது எத்தகைய உயிர்வதை கொள்வானோ என்ற எண்ணமே நாதனின் உறக்கத்தை பறித்திருந்தது.



இரு நாட்களுக்கு பின் ஒரு முடிவோடு மகள் வீட்டிற்கு சென்றவர் மகள் மருமகனுடன் பலகட்டமாக பேசி சம்மதிக்க வைத்தவர் மாலை வீட்டிற்கு திரும்பிய போது மகள் குடும்பத்தையே தன்னுடன் அழைத்து வந்து விட்டார்.



ஆம் எழிலை புரிந்து கொள்ளாமல் ஒருமுறை தான் செய்த முட்டாள்தனத்தை எண்ணி தன்னையே வெறுத்து போயிருந்த மனிதர் இம்முறை எந்த தவறும் நடை பெற கூடாது என்று யோசித்தவருக்கு புலப்பட்ட வழி தான் இது..!!



மகளின் பேறுகாலத்தை அவர்கள் இருவரும் தனியே எதிர்கொள்வதை விட இங்கு தன் வீட்டில் இருக்கும் போது மகள் மீதான எழிலின் பதட்டம் ஒரு வகையில் குறையுமே என்று எண்ணியே நாதன் இம்முடிவை எடுத்திருந்தார்.



நாதன் இதை கூறிய போது முதலில் மறுத்த அலருக்கு மருத்துவர் கூறியது நினைவிலாட, "என்னதான் எழில் முற்றிலுமாக அன்றைய நினைவுகளில் இருந்து மீண்டிருந்தாலும் இப்போது இரட்டை குழந்தைகள் எனும் போது நூற்றில் ஒரு வாய்ப்பாக பழைய நினைவுகளை கிளரும் வாய்ப்பை அவனுக்கு அளிக்க அலர் விரும்பவில்லை. அவள் எழிலுடன் தனியே இருப்பதை விட பெண்களின் அரவணைப்பில் குடும்பத்தின் பாதுகாப்பில் இருப்பது எழிலின் மனநிலையை சமநிலையில் வைக்கும் என்று தீர்மானித்து தந்தையின் முடிவிற்கு சம்மதம் தெரிவித்து இருந்தாள்.



அதன்பின் அவர்களின் ஜாகை நாதன் வீட்டில் தான். வளர்மதி, தாயம்மாள் உடன் இருப்பதாலும் நாதன் பல நேரம் கடையை சம்பத்திடம் ஒப்படைத்து விட்டு அலருடனே இருப்பதாலும் எழில் எவ்வித கவலையும் இன்றி அலுவலகத்திற்கு சென்று வந்தவன் அவிரனை தாங்கியது போலவே அலரின் பேறுகாலத்தை இயல்பாக மகிழ்வாக எதிர்கொண்டான். அதுவே அலருக்கு பாதி சக்தி அளிக்க இருகுழந்தைகளை சுமக்கும் பாரமே பெரிதாக தெரியாமல் போனது அலர்விழிக்கு. சொன்னது போலவே பிரசவ அறையில் அலரின் நம்பிக்கையாய், சக்தியாய் அவளின் அனைத்துமாய் உடன் இருந்தவன் கைகளில் நிமிட நேர இடைவெளியில் பிறந்த அவன் இரு பெண் மகவுகள் பிறந்த நாள் பரிசாய் வீற்றிருந்தனர். அவன் பல வருடமாய் தவமிருந்த வரம் அதுவும் அவன் பிறந்த நாளின் போதே கை சேர்ந்ததில் அவன் கொண்ட உணர்வுகள் எழுத்துக்கும் சொல்லுக்கும் அப்பாற்பட்டது.



'என் தங்கங்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்..!!' என்றவாறே இருவரையும் தூக்கி கொண்டவன்,



"இன்னும் தூங்காம என்னடாம்மா பண்றீங்க" என்று கேட்க,



"உங்க பர்த்டே அப்போ எப்படிப்பா தூக்கம் வரும் மாமா மாமி கூட சேர்ந்து உங்களுக்கு கிப்ட் ரெடி பண்ணிட்டு இருந்தோம்" என்று இருவரும் கோரஸாக கூற அதே நேரம் நாதன், அவிரன், கதிர், ரேணு என்று அனைவரும் அறையினுள் நுழைந்தனர்.



எழிலோ மகள்களை மெத்தையில் இறக்கி நிறுத்தியவன், "இன்னைக்கு என் செல்லகுட்டிகளுக்கும் பர்த்டே அதுக்கு அப்பாவோட கிப்ட்" என்றவன் அவர்களுக்காக வாங்கி வந்த பரிசையும் சாக்லெட்டுகளையும் அளிக்க அவனை கட்டிக்கொண்டு ஆளுக்கு ஒரு புறம் முத்தம் வைத்தவர்கள் 'லவ் யுப்பா' என்று தாங்கள் அவனுக்கு கொண்டு வந்திருந்த பரிசை அவனிடம் நீட்டினர்.



இருவருமே போட்டி போட்டுகொண்டு எழிலை வரைந்து அவனுடன் அவர்கள் இருவரும் கைகோர்த்து செல்வது போல, உடன் அன்னையும் அண்ணனும் இருப்பது போல என்று அவர்களுக்கு தெரிந்த வரையில் வரைந்து அவனுக்கு அளிக்க தனக்காக நேரம் ஒதுக்கி அவர்கள் செய்து கொடுத்த பொக்கிஷங்களை எடுத்து பத்திரமாய் பாதுகாத்து திரும்பிட அவனை கட்டிக்கொண்ட அவிரன், "ஹாப்பி பார்த்டேப்பா" என்று கூற,



"நீயும் தூங்கலையா கண்ணா" என்று கேட்ட எழில் அவன் நெற்றியில் முத்தமிட்டு அவனுக்காக வாங்கி வந்த பொருட்களை அளிக்க, அதற்குள் அப்பா என்று எழிலை நெருங்கிய அவன் மகள்கள்



"அப்பா இங்க பாருங்க அண்ணா எங்களுக்கு கொடுத்த கிப்ட்" என்று கழிவுபொருட்களில் இருந்து அவிரன் அவர்களுக்கு செய்து கொடுத்த பொருட்களை எடுத்து காட்ட எழிலன் முகத்தில் மகனை எண்ணி பெருமிதம்.



அலர் கூறியது போலவே அதன் பின் எழிலை யாரும் நெருங்க முடியாத அளவு மகள்கள் அவனை ஆக்கிரமித்து அவன் நேரத்தை களவாடி கொண்டிருந்தனர். அலர் அழைத்தும் எழிலை விட்டு வர மறுத்தவர்கள் கதிரின் இரண்டு வயது பெண் குழந்தை அழு குரலில் தான் சிந்தை கலைந்து உடனே அவளிடம் ஓடி சென்றனர்.



எழிலை நெருங்கி கட்டிக்கொண்ட கதிர் அவனுக்கு வாழ்த்து தெரிவிக்க அதன் பின் ரேணு, வளர்மதியும் கூற இறுதியாக வந்த நாதன் "பிறந்த நாள் வாழ்த்துக்கள் அகனா" என்று எழிலை அணைத்து விடுவித்து தன் பரிசை அவனிடம் நீட்டினார்.



அதை பிரித்து பார்க்க உள்ளே ஒரு சாவி கொத்து வீற்றிருப்பதை கண்டு 'என்ன மாமா இது..??" என்று கேட்க



நானும் பல வருஷமா உன்னை கடையில வந்து உட்கார சொல்லி சொல்லிட்டேன் ஆனா நீ முடியாதுன்னு சொல்லி நழுவிட்டே இருக்க என்றவரின் பார்வை இப்போது புதிதாக அவன் கழுத்தை அலங்கரித்து கொண்டிருந்த செயினில் நிலைகொண்டு பின் மகளை பார்த்தது.



"அமுலுக்கு ஓகேன்னா இனிமேல் கடை பொறுப்பை ஏத்துக்கோ வளருக்கு கோவில்களுக்கு போகணும்ன்னு ரொம்ப நாள் ஆசை அதனால நானும் அவளும் யாத்திரை கிளம்பலான்னு ஒரு எண்ணம்" என்று கூற, எழிலிடம் பெரும் யோசனை, 'சரி மாமா நான் யோசிச்சி சொல்றேன்' என்றான்.



அன்று மாலை பேத்திகளின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு நாதனின் வீடே கோலாகலமாக களைகட்ட தொடங்கி இருந்தது. வெற்றி தாமரை குடும்பத்துடன் அன்று காலையே வந்துவிட்டனர் சித்தார்த்து, சுபியை கண்டதும் எழிலின் மக்கள் அவர்களுடன் சேர்ந்து ஆட்டம் பாட்டம் என்று ஆர்பரித்து கொண்டிருந்தனர்.



மதியம் போல சுடரும் பாலனும் வேதவியாசினி மற்றும் சர்வேஷுடன் வந்து சேர, மாலை கீர்த்தி சரண், ப்ரீத்தி விஷ்வதேவ் தம்பதியினர் வந்து சேர்ந்தனர். வேதாவின் உதவியுடன் மகள்கள் இருவரையும் அலங்கரித்த அலர்விழி அவர்களை விழா மேடைக்கு அழைத்து வர பிறந்த நாள் கொண்டாட்டம் தொடங்கி இரண்டு மணி நேரமாக நீண்டு கொண்டிருந்தது.



இறுதியாக இரு மகள்களையும் கையில் ஏந்திய எழிலுக்கு ஒருபுறம் மகனும் மறுபுறம் மனைவியுமாக நின்று விருந்தினர்களை உபசரிப்பதை கண்ட நாதனின் கண்களோடு சேர்ந்து மனமும் நிறைந்து போனது.



சுபம்
Loved it n liked it so much
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top