தூரம் போகாதே என் மழை மேகமே!! - 43

Advertisement

Yogiwave

Writers Team
Tamil Novel Writer
அவன் இழுத்த வேகத்தில் சேலையை மீண்டும் தவற விட்டு, எதிர்க்கும் சக்தியற்று அவனது விழிகளை நேராக நோக்கினாள் ஆதிரை.

அவனது பார்வை அவளது விழியினை ஊடுருவுவதாக இருந்த போதும், சில்லென்று வீசிய காற்று வெற்றாக இருந்த ஆதிரையின் அங்கங்களையும் இடையையும் தழுவிச் சென்று அவளை கூச்சமடைய செய்தது. அவன் விழியையே பார்த்திருந்த போதும் , பெண்மையின் நாணத்தில் சற்று தள்ளி விழுந்திருந்த சேலையினை எட்டி எடுக்க முயன்று முடியாமல் தோற்றாள். ஒற்றைக்கையால் சேலையை எடுத்துப் பிடிக்க வசதியுமில்லாமல் அர்ஜூனின் விழிகளும் அவன் பிடித்திருந்த அவளது இடது கையும் அவளை இப்படி அப்படி அசைக்க விடாமல் தடுத்தது.

இருந்தும் கூச்சத்தினாலும் குளிரினாலும் அவளது உடல் நடுங்கியது. அதனால் உண்டான அசௌகரிய சூழ்நிலை ஆதிரையைக் கோபம் கொள்ளச் செய்தது. சேலையை எட்டி எடுப்பதற்குப் பதிலாக, அவசரமாகத் தனது வலதுகையால் தன் தலையில் முடியினை இறுக்கிப் பிடித்து கொண்டை போட்டிருந்த கொண்டை ஊசியினை அவசரமாகப் பிரித்துவிட்டு ஆடைக்குப் பதிலாக தன் முடியினையே ஆடையாக்கினாள். அவளது முடி காற்றில் ஆடி அர்ஜூனின் முகத்திலும் அறைந்து விழுந்தது.

பாவம் ஆதிரைக்குத் தெரியவில்லை. அவளது கூந்தல் அவளது அழகை இன்னும் பன்மடங்காக்கி காட்டக் கூடுமென்று.!! அந்தக் கருநிற கூந்தள்ஆடையில் கொஞ்சம் கொஞ்சமாக எட்டிபார்த்திருந்த அவளது இடையழகு அர்ஜூனை வசிகரிக்காமல் இல்லை. அர்ஜூன் பேசுவதை நிறுத்திவிட்டு ஒரு நொடி ஆதிரையினை உச்சி முதல் பாதம் வரை பார்த்தான். பின் அவனது விழி மீண்டு ஆதிரையின் விழிகளையும், செவ்விதழையுமே மாறி மாறிப் பார்த்திருந்தது. அந்தப் பார்வையில் ஆதிரைக்கு ஆக்ஸிஜன் பற்றாதது போல் மூச்சு வாங்கியது. அவனது பார்வையிலிருந்து விலகி மண்ணுள் போய்விடமாட்டோமா என்று ஒரு நொடி ஆதிரையை உணரச் செய்தான் அர்ஜூன். அவன் பார்வை அவளது பெண்மையை உணரச் செய்தது. முயன்று அவனது கையிலிருந்து விலகிச் சென்று மெதுவாக அங்கிருந்த சேலையை எடுத்துவிட எத்தனித்தாள். ஆனால் அவள் அசைவில் அர்ஜூனின் கையிறுக்கம் மேலும் வலுப்பெற்றது. ஏனோ அர்ஜூனுக்கு ஆதிரையை அவன் பார்வையை விட்டு விலகுவது பிடிக்காமல் போனது. சேலையை எடுக்க முடியாமல் காற்றும் வேலைக் காட்ட அந்தச் சேலை இன்னும் தள்ளிச் சென்று கைக்கெட்டாத தூரம் விழுந்தது. அதனால் இன்னும் கோபமுற்று அர்ஜூனை நேராக வெறித்துப் பார்த்தாள் ஆதிரை.

அவளது பார்வையில் சுயனினைவுற்ற அர்ஜூன் ,‘சே.. என்ன இப்படி பார்த்துக் கொண்டிருந்துவிட்டோம். அவள் ஏற்கனவே குழப்பத்திலிருக்கும் போது, நாமும் இப்படி நடந்து கொண்டுவிட்டோமே. அவளிடம் என்னைப் பற்றி ஏதோ ஒருவித பயம் இருக்கிறது. அது போய்விட்டால் அவள் என்னிடம் முழுமையாகச் சேர்ந்துவிடுவாள். அதை விடுத்து என்ன காரியம் செய்து கொண்டிருக்கிறேன்’ என்று ஆதிரையைப் பிடித்திருந்த பிடியைத் தளர்த்தி அவளுக்கு முதுகு காட்டி நின்றான் அர்ஜூன்.

அவனின் பிடியிலிருந்த விடுபட்ட ஆதிரை, மெதுவாக எழுந்து அவனிலிருந்து தள்ளிச் சென்று தன் சேலையை எடுத்துக் கட்டிய வண்ணம் ,’தன்னை இப்படி சங்கடத்தில் இருத்தி கேள்விகளை கேட்டுக் கொண்டிருக்கும் அர்ஜூனின் மீதும், அவனையேதேடி பிடித்து விரும்பிய அவளது மனத்தின் மீதும், அந்தக் காதலை மறைக்கக் கூட முடியாத தன் பயத்தின் மீதும் ஆதிரைக்குக் கோபம் கோபமாக வந்தது.

அந்தக் கோபத்தினூடே சேலையைக் கட்டிவிட்டு துணிஊசி இல்லாமல் சரிந்து சரிந்து விழுந்து கொண்டிருந்த முந்தானையை இழுத்து தன் இடுப்பைச் சுற்றி கொண்டு வந்து முன் இடுப்பில் சொருகிய வண்ணம் “தரம் தாழ்ந்து பேசிவிட்டு எவ்வளவு உரிமையாய் கையையும் பிடித்துக் கொண்டு கேள்வி கேட்கிறான். எல்லாம் ஆண் என்ற திமிர் வேறென்ன?” என்று வாய்விட்டே முணுமுணுத்தாள். பாவம் குழப்பத்திலிருந்த ஆதிரைக்கு மறந்துவிட்டது சிறிது நேரத்திற்கு முன் மிகவும் உரிமையுள்ளவள் போல அவனை அணைத்துக் கொண்டிருந்தது அவள்தான் என்று.

அவளது செய்கையை, கையைப் பற்றியதற்கே அவனது செயலாக்கி அந்நியாயமாக அர்ஜூனை குறை சொன்ன ஆதிரையின் மீது அடக்க முடியாத கோபம் கொண்டு அர்ஜூன் , அவளை நோக்கி வேகமாக வந்து அவளது இடையை இழுத்து அணைத்த வண்ணம், “என்ன சொன்னாய்! நானா உன்னைத் தேடி தேடி வந்தேன். உரிமை மீறினேன். எப்போதும் எதைப் பார்த்தோ இல்லை விழுந்தோ மயங்கி எழுந்ததும், நீயே வந்து என்னை அணைத்துக் கொண்டு உன்னைவிட்டுப் போய் விடாதே என்று பிதற்றிவிட்டு, இப்போது நான் உரிமை எடுத்துக் கொண்டேனென்றா சொல்கிறாய். உரிமை மீறல் என்றால் என்னவென்று தெரியுமா! இப்போது அணைக்கப் போகிறேனே இதுதான் உண்மையான உரிமை மீறல்.!” என்று அவள் எலும்புகள் நொறுங்கும்படி அவளை இழுத்து அணைத்துக் கொண்டான்.

அவனது இந்த திடீரென்ற கோபமும் , அவனது சைகையும் ஆதிரையைத் திக்குமுக்காட செய்தது. அவனது அணைப்பில் மூச்சுவிடவும் முடியாமல் தவித்தாள். அவளது இடையிலிந்த அவனது வலது கையையும் முதுகிலிருந்த இடது கையையும் விலக்கி விட முயன்ற வண்ணம், “எ… என்னை விடுங்க… என்ன செய்கிறீங்க.. என்னை விடுங்க” என்று பிதற்றிய வண்ணம் அவனிடமிருந்து விடுபட முயன்றாள். ஆனால் ஆதிரையின் முயற்சி தோற்க அர்ஜூனின் இறுக்கம் இன்னும் அதிகமானது. ஆதிரையும் மெதுவாக அவள் வசம் இழக்க ஆரம்பித்தாள். அந்தத் தருணத்தில் அவளை விடுவித்து , “உரிமை மீறுவதென்றால் இதுதான். புரிகிறதா” என்று அதே கோபத்தில் சொன்னான் அர்ஜூன். பின் இன்னும்கோபம் குறையாதவனாக அவளை விடுத்து சற்று தள்ளிச் சென்று அவளுக்கு முதுகு காட்டி நின்றான்.

அவனிலிருந்து விலகி இருத்தப்பட்ட ஆதிரையினால் சில நொடிகள் எதுவும் பேச முடியவில்லை. தலை தாழ்த்தி அப்படியே தோய்ந்து அருகிலிருந்த மரத்தில் சாய்ந்த வண்ணம் நின்றாள். சில நொடிகளில் நிமிர்ந்த ஆதிரை அர்ஜூனின் முதுகையே வெறித்தாள்.

அவளுக்கு முதுகு காட்டி நின்றிருந்த அர்ஜூன் ஒரு கையைக் கொண்டு தன் தலையை கலைத்துக் கொண்டும் மற்றொரு கையினை இடுப்பில் வைத்துக் கொண்டும் ,“ஏதோ குழப்பத்திலிப்பவளை தெளிவு படுத்திவிட வேண்டுமென்று யோசித்துக் கொண்டிருந்தால் என்னை என்னன்னமோ பேசுகிறாள் உரிமையுள்ளவள் போல நடந்து கொண்டவள் அவள். அப்படி இருக்க என்னைக் குறை சொல்கிறாள். சே நேரிடையாக எல்லை மீறிய அந்த face book பெண்களே மேல். இவளென்னவென்றால் என்னையல்லவா எல்லை மீறச் செய்திடுவாள் போல. இவளை விரும்பியதற்கு எனக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும்” என்று ஆதிரையின் செவிபடும்படியே கத்தினான். அதே கோபத்தில் அவன் பாதத்தின் அருகிலிருந்த சிறிய கல்லை தன்னால் கோபம் போகும் வரை உதைத்துத் தள்ளினான்.

அவனளவு கோபம் ஆதிரைக்கும் இருந்தது. அதே கோபத்தில் அவளது சைகையின் காரணத்தை அவனுக்குப் பதிலளித்துவிடும் வேகத்தில் ஆதிரை “உங்களுக்கு என்ன தெரிய வேண்டும்! நான் உங்களை என்னவென்று எண்ணி அணைத்துக் கொண்டு ‘என்னை விட்டு போய்விடாதீங்கனு’ சொன்னேன்று தானே!” என்றாள் அவனுக்குச் சளிப்பில்லாத அதே கோபத்துடன்.

அவளது குரலில் அவள்புரம் திரும்பிய அர்ஜூன், “ஆமாம். யாரையும் விரும்பும் எண்ணமில்லை என்றாய். இப்போது என்னிடம் உன்னை விட்டுப் போய்விடாதே எங்கிறாய். ஒரு அந்நிய ஆணிடம். “ என்று ஒரு நொடி நிறுத்தி அவளைப் பார்த்து ஏளனமாக புன்னகித்து ,” நீ அப்படிதானே என் அக்காவிடம் சொன்னாய். என்னை வெளியாள் என்று. அப்படிப்பட்ட அந்நிய ஆணான என்னை அணைத்துக் கொண்டு அவ்வாறு சொன்னால் அதன் பொருள் என்னவென்று தெரியுமா?” என்றான் அர்ஜூன்.

‘இவனிடம் நான் விரும்புவதை இனியும் மறைக்க முடியாது. இல்லை என்றால் என்னைப் பற்றி தவறாக எண்ணி விடுவான். எண்ணி விடுவான் என்ன எண்ணி விட்டதைத்தான் அவன் வாயாலே கேட்டுவிட்டேனே. யாரென்று தெரியாத போதே தவறாக பேசியவன், இப்போது பேச மாட்டானா! என்ன’ என்று பலவாறு எண்ணி சில வினாடிகள் எடுத்துக் கொண்ட அவளது விழிகள் சிந்தனையில் நடனமாடியது . அவனை நேரே பார்த்து சொல்லும் சக்தியற்று தலை குனிந்த ஆதிரை, “தெரியும்! நன்றாகத் தெரியும். எவ்வளவு தடுக்க முயன்றும் என் வசம் இழந்து உங்களையே தேடும் என் மனதை என்னால் கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. முயன்று தோற்று உங்கள் முன்னிலையில் இப்படிக் கூனி குறுகி நிற்கிறேன். உ….உங்களை எ… என்னவனாக எண்ணியதால் வந்த வார்த்தைகள் அவை! போதுமா !” என்று மென்று விழுங்கி ஒருவழியாகச் சொல்லிவிட்டாள் ஆதிரை.

‘தன்னை விரும்புகிறாள். இதை ஒரு பத்து நிமிடம் முன்பு சொல்லியிருந்தால் எவ்வளவு இதமாக இருந்திருக்கும்.’ என்று எண்ணிய அர்ஜூன், “ ஓ…. அப்படியா…. ஒருவரை விரும்புவது அப்படியொரு குற்றமில்லையே … இதில் மனதைக் கட்டுக்குள் கொண்டு வர என்ன இருக்கிறது. அதனோடு கூனி குறுகவும் என்ன இருக்கிறது. ஒருவேளை வேறொருவனை ஏற்கனவே விரும்புகிறாயோ! அதனால்தானோ என்னை விரும்பக் கூனி குறுகுகிறாய். அப்படி இருந்தால் நீ இனி கூனவும் வேண்டாம் குறுகவும் வேண்டாம். நான் இனி உன்னை விரும்புவதற்கு இல்லை. யாரை விரும்புகிறாயோ அவனை விட்டு இனியும் உன் மனதை குழப்பிக் கொள்ளாதே! ” என்று ஆதிரையை உதாசினபடுத்திக் அவளை காயபடுத்திவிடும் வேகத்துடனே சொன்னான் அர்ஜூன்.

அவனது ஏளனமான பதிலில் நிமிர்ந்த ஆதிரை அவனை எரித்துவிடுபவள் போல் வெறித்தாள். அவளது பார்வைக்காகவே காத்திருந்தவன் போல அர்ஜூன் ஏளனமாக என்ன என்பது போல் தலை அசைத்தான்.

‘அவனை விரும்பியதற்கும் அவனை ஆதரவாக நினைத்ததிற்கு எனக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும் என்று ஆதிரையின் மனதை அவளது புத்தி வேண்டுமளவு வசை பாடியது. “என்ன சொன்னீங்க! வேறொருவனை விரும்பினேனா!. என்னை என்னவென்று எண்ணி நீங்க பேசிக் கொண்டிருக்கீறிங்க. என் மனதிற்குள் யார் வேண்டுமென்றாலும் அவ்வளவு எளிதில் நுழைய முடியுமென்றா! உங்களை விரும்பிய என் உள்ளத்திற்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும்” என்று அவளையே நிந்தித்துக் கொண்டாள்.

“பின்னே வேறென்ன சொல்ல . என் அக்காவிடம் நான் நீ வேறொருவரை விரும்பலாமென்று சொன்னதற்கு மறுப்பேதும் சொன்னதாக நினைவில்லை. உனக்கு facebook –ல் கிடச்ச girl friends –எ எவ்வளவோ பரவாயில்லை. அவர்கள் உண்மையை மறைக்கவில்லை. உன்னைப் போல நாடகமாடவில்லை.” என்று ஆதிரையின் பண்பினையும் நடவடிக்கையையும் ஏளனமாகப் பேசினான்.

இதனால் வெகுண்ட ஆதிரை, “ இனியும் உங்களிடம் மறைத்து பயனில்லை. என்ன என்னைப் பற்றி நீங்க இரண்டு வருடத்திற்கு முன் பேசியதை திரும்ப நானே என் வாயில் சொல்லி அசிங்க பட்டுக் கொள்ள வேண்டும். எப்படியும் உங்களுக்கும் நீங்க பேசியது நினைவிருக்கும்தானே. இல்லை என்னைப் போல எத்தனைப் பெண்களிடம் அப்படி பேசினீங்களோ ஞாபகம் இல்லாமல் கூட போயிருக்கலாம். காயம் பட்டவர்களுக்குத்தானே அது மறக்காது. பலரைக் காய படுத்தியவர்களுக்கு இது ஒன்றும் மறந்து போவது ஒன்றும் பெரிய விஷயம் இல்லையே” என்றாள் அவனுக்குக் குறையாத அதே நக்கலான குரலில்.

“அப்பப்பா! முடியவில்லை. உன்னை நியாய படுத்த முயற்சிக்காதே ஆதிரை.. உன்னை நான் தெளிவாக அறிந்து கொண்டேன். வீண் முயற்சி பலன் அளிக்காது” என்பது போல கண்டனம் கொடுத்தான் அர்ஜூன்.

“எனக்கு எதையும் முயற்சி செய்ய வேண்டிய அவசியம் எப்போதும் இருக்கவில்லை. நீங்க என்னை இனி விரும்ப மாட்டீங்க என்று சொன்னதும் எனக்கு ஒருவிதத்தில் மகிழ்ச்சியே” என்று சொன்னபோதும் அவளது மனம் ஏனோ அழுதது. இருந்தும் மறுத்துப் பேச தோன்றாமல் தொடர்ந்து பேசினாள் ஆதிரை, “உங்களை என்னவன் என்று நான் எண்ணியது உண்மையே. அது தானாக உண்டானது அல்ல, எல்லாம் அந்த மழை மேகத்தால் வந்தது. உங்களை நான் விரும்பியது அந்த மழை மேகத்தால்தான். எனக்குக் கனவினை தோற்றுவித்து உங்களை என் மனம் கவர்ந்தவனாக காட்டியது அந்த மழை மேகம்தான். அதனால் அது ஒரு மாயம் என்று நான் நம்புகிறேன். என் அண்ணியும் அதையே தானே சொன்னாங்க. நினைவில்லை.? அந்த மழை மேகம் வெறுப்பவர்களை நெருங்கவும், விரும்பியவர்களை வெறுக்கவும் செய்தது என்று நினைவில்லை? அதே சமயம் மாயமோ மாயம் இல்லையோ நான் முதலில் மனதுள் அனுமதித்த ஆண் நீங்க மட்டும்தான். அதனால் இனி என்னால் வேறு யாரையும் நினைக்க முடியாது. நான் குளிக்கும் போது கேட்ட ஏதோ மிருகத்தின் உருமலில் ஏற்பட்ட பயம் உங்களைப் பார்த்ததும் என்னையும் அறியாமல் ஆதரவாகப் பற்ற செய்தது. ஆனால் இனி ஒரு போதும் அவ்வாறு நடக்காத வண்ணம் நான் எச்சரிக்கையாய் இருக்கிறேன். முடிந்தவரை உங்களை விட்டுத் தள்ளி இருக்க முயற்சிக்கிறேன்” என்றாள் ஆதிரை.

வெளியில் பார்ப்பதற்கு ஆர்வமற்றவாறு இருந்த போதும், ஆர்வமாகக் கேட்ட அர்ஜூன் “என்ன! மழை மேகமா? அக்கா சொன்னது நினைவிருக்கிறது. மழை மேகத்தால் அக்காவும் மாமாவும் சண்டையிட்டது. ஆனால் அவர்கள் சண்டையிட்ட போதும் மாமாவின் அன்பு குறைந்துவிடவில்லையே. மழை மேகத்தின் தாக்கம் சில நிமிடங்கள் இருக்கலாம். ஆனால் அவர்களின் உண்மைத் தன்மை நீண்ட நேரத்திற்கு மாறிவிடாது. இதுதான் எனக்குப் புரிந்தது. ஆனால் அந்த மழை மேகத்தினையும் அதைச் சுற்றி சொல்லப்பட்ட கதையையும் நம்புவதற்கு என்னால் முடியாது. அதை விடுத்து ஏதோ இரண்டு வருடத்திற்கு முன் ஏதோ பேசினேன் என்றாயே அதைச் சொல். கிளம்பலாம் எனக்குப் பசிக்கிறது. உன்னுடன் வீண் விவாதம் செய்ய எனக்கு விருப்பமில்லை” என்றான் விற்றேறியாக.

அவனது இந்த அலட்சிய பேச்சு ஆதிரைக்கு எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல இன்னும் பலம் சேர்த்தது. இனியும் மறைத்துப் பேசி பயனில்லை என்பதை உணர்ந்த ஆதிரை அவனுக்குப் பதிலளித்தாள். “ நீங்க பணம் படைத்தவர், நேற்று தனிமையிலிருக்கும்போது உண்டான ஏதோ ஒரு கிளர்ச்சியில் என்னிடம் விரும்புவதாக சொன்னீங்க. ஆனால் நாளையே ஊர் சென்றதும் ‘என்னை விரும்பவில்லை. அந்தத் தீவில் ஏதோ அப்படித் தோன்றியது’ என்று சொல்லிவிட்டாள் ? என்னால் தாங்க முடியாதென்று நேற்று நீங்க என்னிடம் மணக்கக் கேட்ட போது, துள்ளலுற்ற என் மனதையும் எவ்வளவு கஷ்டப்பட்டு தடுத்து ஊர் சென்ற பின் சொல்லலாமென்று காத்தேன் தெரியுமா!?. எங்கே உங்கள் உள்ளம் ஊர் சென்றபின் மாறிவிட்டால்?!! பணம் படைத்த ஆண்களை மணக்கத்தான் ஆயிரம் பெண்கள் இருக்கிறார்களே. அப்படி இருக்க ஒரு குழந்தையுடன் என்னை ஏற்க வேண்டுமென்று உங்களுக்கு என்ன இருக்கிறது. அதனால் ஊர் சென்ற பின்பும் உங்கள் மனம் மாறாமலிருந்தால் என் விருப்பம் உங்களிடம் சொல்லலாமென்று எண்ணியிருந்தேன். உங்களிடம் என் காதலை எப்படியெல்லாம் சொல்வதென்று ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தேன் தெரியுமா! அதை எண்ணி என்னவெல்லாம் கனவுகள் கண்டேன் தெரியுமா?“ என்று அவளது நேற்றைய அமைதியின் காரணம் சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஆதிரையின் கண்கள் ஈரம் பணித்தது.

அசுவாரசியமாகக் கதை கேட்பது போல் இருந்த போதும் ‘இவள் இதில் இப்படி வருத்திக் கொள்ள வேண்டிய அவசியமே இல்லையே. நேற்றே என்னிடம் அவள் காதலை சொல்லியிருந்தால் நான் தவறாக எண்ணவும் வாய்ப்பில்லையே’ என்று எண்ணினான் அர்ஜூன்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top