தூரம் போகாதே என் மழை மேகமே!! - 42

Advertisement

Yogiwave

Writers Team
Tamil Novel Writer


அர்ஜூன் ஆதிரையை உப்பு மூட்டை போல தூக்கிக் கொண்டு ருத்வி சொல்லச் சொல்ல ஓடை பக்கம் நடந்தான்.

நேற்று இருந்த வெள்ளோட்டமான பேச்சு ஆதிரை மற்றும் அர்ஜூனிடம் இப்போது இருக்க வில்லை. இருவரும் அமைதியுடன் நடந்தனர்.

ருத்வி ஒரு ஓடையின் புறம் நின்று ஆதிரையை இறக்கிவிடச் சொல்லியது. அது ஒரு சிறிய அருவியின் மிக அருகில் ஓடிய ஓடை. அந்த அருவியின் ஊற்று அந்தக் குன்றின் மீதுதான் இருக்கும் போல அந்தக் குன்றின் இருபுறமும் அருவியாக நீரினை கொட்டிக் கொண்டிருந்தது. ஆதிரையை இறக்கியதும் அர்ஜூனின் தோள் மீது மீண்டும் ஏறிய ருத்வி, அவனை இன்னும் முன்நோக்கி செல்ல எத்தனித்தது.

இருவரும் எப்படி ஒன்றாகக் குளிப்பது என்ற யோசனையில் இருந்த அர்ஜூன் மற்றும் ஆதிரையின் எண்ணத்தைப் படித்து வேலை செய்வது போல அந்த அணில் அதன் வேலையைச் செய்தது. இதனால் இருவருக்கும் இடையிலிருந்த இறுக்கம் சிறிது குறைந்தது. அர்ஜூனை அழைத்துக் கொண்டு ருத்வி அந்தக் குன்றின் அந்தப்புற அருவியில் விட்டுவிட்டது.

அர்ஜூனுக்கும் இந்த வித இயற்கை அமைப்பு வியப்பைத் தந்தது. இரு ஓடைகளும் மிக அருகிலே இருந்த போதும் அந்தக் குன்றிலிருந்து இரண்டும் வெவ்வேறு திசைகளில் பிரிந்து சென்றது. ஒரு பக்கத்திலிருந்து மற்றோரு பக்கம் தனிமையை தரும் விதமாக அந்தக் குன்று இரு அருவிகளையும் பிரித்து நின்றதை, குன்றுக்கு நடுவிலிருந்து பார்க்கும் போது மிகவும் அழகாகத் தெரிந்தது.

அர்ஜூனை எதிர் ஓடையில் விட்டதும் , ஆதிரையை நோக்கி அந்த அணில் மீண்டும் ஓடி வந்து அங்கிருந்த பாறைகளில் ஒன்றில் அமர்ந்து கொண்டது. ஆதிரையிருந்த இடத்தில் பாறைகள் அதிகமில்லாமலும் அதிக மாக வலுக்காமல் மணல் நிறைந்தும் காணப்பட்டது. அதனால் லேசாகக் கால்களை ஊன்றிய போதும் அந்த சில்லிட்ட நீரோட்டத்தில் காலில் ஏற்பட்ட வலியினை அவளால் தாங்கிக் கொள்ள முடிந்தது. அதிக சிரமப்படாமல் ஆதிரை விரைவிலே வந்த வேலைகளை முடித்துவிட்டு அவள் போட்டிருந்த உடையினையும் துவைத்துவிட்டாள்.

ஆனால் சிறிது நேரத்தில் அவள் இஷ்டத்திற்கு மாறாக அவளது கால் ஒத்துழைப்பு தராமல் ஏமாற்றிவிட, சிறிது நேரத்தில் லேசாக வீக்கமுற துவங்கியது. இதனைக் காலில் அடிப்பட்ட உடனே எதிர்பார்த்திருந்த ஆதிரைக்கு இவ்வளவு நேரம் கழித்து திடீரென்று கால் வீக்கமடைந்து வலியையும் அதிகரிப்பதை அவள் எதிர்பார்க்கவில்லை.உடனே சீக்கிரமாக ஆடை அணிந்துக் கொ.0ண்டு ருத்வியிடம் சொல்லி அர்ஜூனை விரைவில் வரச் சொல்லி குகைச் சென்று சேரலாம் என்று எண்ணி ஓடை நீரிலிருந்து வெளியில் வந்து கையிலிருந்த ஈரமான துணிகளை அவசரமாகக் காய போட்டு எடுத்து வந்திருந்த புடவையும் அதனுடன் சேர்ந்த துணிகளையும் எடுத்துக் கொண்டு நீரில்லாத இடமாக பார்த்துக் கொண்டு கடைசியாக இருந்த பாறையின் அருகில் சென்று ஆடைகளை அணிய எத்தனித்தாள்.

அருவியின் அந்தப்புறம் அர்ஜூன் ,விரைவிலே குளித்துவிட்ட போதும், பாதி குளித்துக் கொண்டிருக்கும் போது ஆதிரையின் முன் சென்று நின்றால் நன்றாக இருக்காது என்று எண்ணி அங்கிருந்த ஒரு பாறையின் மீது அமர்ந்தான். ருத்வி வருவதற்காகக் காத்திருந்தான். அப்போது ஆதிரையைப் பற்றிய எண்ண அலைகள் அவனுள் வந்து அவனை இம்சை செய்ய தொடங்கியது. ஆதிரையை முதலில் அவன் பார்த்ததிலிருந்து ஒவ்வொன்றாக எண்ணிப் பார்த்தான்.

‘சேகர் அங்கிள் அவருக்குத் தெரிந்த பெண்ணிற்கு வேலை வேண்டுமென்றார். அழைத்தும் வந்தார். அவளைப் பற்றி ISI மார்க் போல 100% நம்பலாம் என்று நம்பிக்கை கொடுத்தார். அவளென்னவென்றால் சென்னை வந்த அன்றே கடலில் விழுந்து சாக ஓடினாள். யாரென்று தெரியாத போதும் என் மனம் ஒரு நொடிகூட பொறுக்காமல் அவளுக்காகத் துடித்தது. ஓடிச் சென்று என்னையும் அறியாமல் அவளைக் காப்பாற்றினேன். சரி காப்பாற்றிய எனக்கு நன்றியும் சொல்லாமல் அலட்சியப் படுத்திய அவள்’என் குழந்தை என் குழந்தை’ என்று தாய்மையின் வேகத்தில் அலற்றினாள். அவள் ஒரு குழந்தையின் தாயாக இருக்கக் கூடுமென்ற எண்ணமற்ற எனக்கு அவளது ஒதுக்கமும் அலறலும் எதையோ இழந்தது போன்ற உணர்வையே ஏற்படுத்தியது. அவள் திருமணமானவள் என்பதற்கான எந்த அறிகுறியும் இல்லாததால், அடுத்த நாள் நேர்காணலில் அவளின் ஆண் நட்பு வட்டாரத்தை பற்றிப் பேசியதற்கு ‘அப்படி யாருமில்லை’ என்று அவள் கூறிய போது மகன் என்ற பெயரில் ராஜா இருந்த போதும், ஏனோ என் மனம் குத்தாட்டம் போட்டது. நான் எல்லை மீறிப் பேசியதை தவறு என்று சுட்டி காட்டி திமிராக பேசிவிட்டு அந்த நேர்காணல் அறையையும் அவள் விட்டுச் சென்றுவிட்டாள்.

ஒரு நொடி ‘இப்படிப்பட்ட பெண்ணை அல்லவா என் துணைவியாக தேடிக் கொண்டிருந்தேன்.’ என்ற எண்ணம் எனக்குத் தோன்றியது. இருந்தும் ஒரு குழந்தையின் தாயை அவளறியாமல் மனைவியாக்கிக் கொள்ள நினைப்பது தகாத உறவிற்குச் சமம் என்று என் எண்ணங்களை ஒதுக்கினேன். அவளைப் பற்றிய என் மன ஓட்டத்திற்குத் தடை போட்டேன். எங்குத் தவறாக பேசியதற்கு நேற்றைப் போல் சாக முயன்றுவிடுவாளோ என்று அவள் அறையைவிட்டுச் சென்ற சில நிமிடங்களில் ,முட்டி மோதிக் கொண்டு அவள் அனுமதியில்லாமல் அவள் அறை சென்று நின்றேன். அவளை அழைத்துச் வர அங்கிள் சொன்னதாக பொய்யொன்று சொல்ல அது உண்மையாகி அவளை அழைத்தேன். வேலைக் கொடுக்க போகிறவன் என்ற எண்ணமும் இல்லாமல் , அவளது களங்கம் அற்ற மனம். அதனை நிரூபிக்கத் துடிக்கும் வார்த்தைகள். அவன் இடத்திலிருந்து கொண்டே அவனை அவள் இருந்த அறையை விட்டு விரட்டிவிடத் துடித்த பெண்மையின் வீரம், கோபம் ஒன்று சேர்த்து என்னை இன்னுமல்லவா அவள் வசம் இழுத்துச் சென்றிருக்கிறது. இதை அறியாமல் இருந்து நான் அறிந்தது நேற்று காலை அவளுக்கு என்னை அறியாமல் நான் கொடுத்த முத்தத்தில்தானே!.

கடற்கரையில் மீண்டும் அவள் காணவில்லையென்ற போது வெளியில் இயல்பு போல காட்டிக் கொண்ட போதும் என் இதயம் கால்பந்தாட்ட பந்தைப் போல அல்லவா இங்கும் அங்கும் பறந்து கொண்டிருந்தது. அவளை நேரில் பார்க்கும் போது என் உயிரே மீண்டது போன்ற உணர்வு இதுவரை நான் அறிந்திராத சுகமல்லவா! அவள் அருகில் அந்தப் படகில் கைகளை கட்டிக் கொண்டு படுத்திருந்த போதும் உறக்கம் வராமல் அவள் தவித்த தவிப்பும் அந்த நிலவொளியினை பார்த்துக் கொண்டிருந்தவிதமும், இதற்குமுன் ஒரு விவரம் அறிந்து எந்த ஆணின் அருகிலும் அவள் உறங்கியதில்லை என்பதை அல்லவா அவளது களங்கமற்ற முகம் காட்டியது. அந்த முகத்தைக் காண இரவெல்லாம் கண்விழித்து திருட்டு பூனை போலப் பார்த்திருந்தது இப்போதும் மெய்சிலிர்க்க வைக்கிறதே!

போனால் போகட்டும் இவை என்னுடைய எண்ணங்கள். ஆனால் ஆதிரையே என்னை நேற்று அவனுடையவனாக எண்ணித்தானே யாரிடமும் விளக்கம் கொடுக்க விரும்பாத அவளது ராஜாவைப் பற்றியும் வெளிப்படியாக சொன்னாள். அவள் அவ்வாறு பேசியதால்தான் என்னாலும் என் எண்ணங்களை அவளிடம் சொல்ல முடிந்தது. இப்படி இருக்க என் விருப்பத்தை ஆதரிப்பது போலத்தானே என் மார்பில் அவளும் சாய்ந்து கொண்டாள். என் அணைப்பையும் அவள் விலக்கவில்லையே!. ஆனால் இன்று எல்லார் முன்னிலையிலும் இப்படிச் சொல்லிவிட்டாள். ஒரு வேளை இவளும் மற்ற பெண்களை போலவோ. என் அக்கா இருப்பதால் என்னிடம் பணம் எதையும் கரக்க முடியாது என்று இப்போது விலகிக் கொள்கிறாளோ! இல்லை இல்லை அப்படி இருக்க வாய்ப்பில்லை. அவள் நெருங்க வேண்டுமென்றால் என் முத்தத்தின் போதே செய்திருக்கலாமே. ஆதிரை அப்படிப்பட்டவளில்லை’ என்று பலவாறு யோசித்து ஆதிரையைப் பற்றி ஒரு தவறான முடிவும் எடுக்க முடியாமல், அவளது சைகையின் காரணமும் புரியாமல் குழம்பினான்.

‘ ம்ம்.. இப்படி யோசித்துக் கொண்டிருந்தாள் எதுவும் நல்லதுக்கு இல்லை’ என்று இப்போது இருக்கும் மனநிலையை மாற்ற அதையே யோசிக்காமல் கவனத்தை முழுதும் திசை திருப்பி அந்தக் காட்டை உற்று நோக்கச் செய்தான் அர்ஜூன்.

அந்தக் காட்டின் அழகையும் ஒரு சேர பல தரப்பட்ட மரங்கள் மிக நெருக்கமாக அமைந்திருப்பதையும், ஒரு மரம் மற்றொரு மரத்தை அழித்து வளராமல் அவற்றின் கிளைகள் ஒன்றோடொன்று பின்னி பிணைந்து இருப்பது விசித்திரமாகவும் ரம்யமாகவும் அர்ஜூனுக்கு தோன்றியது. ‘சிம்லாவிலிருக்கும் மரங்கள் ஒரு சில வகைகளே இருக்கும். அவையும் வெவ்வேறு இடங்களில் இருக்கும். இப்படி பலதரப்பட்ட மரங்கள் குறுகிய நிலப் பகுதியில் இருக்காது’ என்று ஆழ்ந்த சிந்தனையில் இருந்த அர்ஜூனுக்கு திடீரென்று ஏதோ பெண்ணின் அம்மா என்ற அலறல் கேட்டது.

இந்தப் புறம் ஆதிரை ரவிக்கையை அணிந்து கொண்டு முந்தானையையும் எடுப்பாகப் பிடித்துவிட்டாள். இடது காலின் வலியை இனியும் பொறுக்க முடியாது என்பதை உணர்ந்து வலித்த காலினை உயர்த்தி, ஒற்றைக்காலில் நின்று கொண்டு புடவையின் கொசுவத்தை அடுக்காகப் பிடிக்க முயன்றாள் ஆதிரை. அந்தச் சமயம் யானையின் பிளிரல் சப்தம் போல் ஏதோ ஒரு மிருகத்தின் உருமல் கேட்டது. ஏற்கனவே ஒற்றைக்காலில் நின்று கொண்டு இருந்த ஆதிரை அந்த திடீர் சப்தத்தில் பயமுடன், சமநிலை இழந்து சட்டென அவளது இடது காலை வேகமாக நிலத்தில் ஊன்றினாள். அதனால் ஏற்பட்ட வலியினாலும் அங்கிருந்த பாறை மீது தன் தலையை லேசாக மோதியதாலும் உயிர் போகும் வலி ஏற்பட்டு ஆதிரை, “அம்மா…” என்று அலறிவிட்டாள். இந்த அலறல் அருவியின் சத்தத்தையும் மீறி அர்ஜூனின் காதில் விழுந்தது.

சேலையின் கொசுவத்தை நழுவ விட்டு அங்கிருந்த பாறையின் மீது டொம்மென்று விழுந்தாள் ஆதிரை. தலையில் ஏற்பட்ட லேசான வலியினூடே, “ரு…த்வி… ருத்வி… அ… அர்… அர்ஜுனை…” என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே ஆதிரை மயங்கிவிட்டாள். அவளது இந்த நிலையில் உடனிருந்த ருத்வியும் பார்த்துப் பயந்துவிட, விரைந்து ஓடிச் சென்றது.

ருத்வி அவனை அடையும் முன்னரே , எந்த வேகத்தில் அர்ஜூன் வந்தான் என்று தெரியவில்லை. அர்ஜூன் ஆதிரையின் அருகில் வந்திருந்தான். அவனைப் பார்த்த பின் ருத்வி வேகமாக வேறு எங்கோ ஓடிச் சென்றதை அர்ஜூனும் உணரவில்லை. மயங்கிய நிலையிலிருந்த ஆதிரையும் அறியவில்லை. ஆதிரையின் நிலை கண்டு பயந்து ஓடி வந்து அவளை அவன் மடியில் போட்டு அவள் முகத்தை மறைத்திருந்த முடியினை விலக்கி “ஆதிரை… ஆதிரை…” என்றான் அர்ஜூன்.

அவள் எழு வதற்கு வலியில்லாமல் கிடப்பதை பார்த்து அவளை அருகிலிருந்த சமதள தரையில் கிடத்திவிட்டு தண்ணீரினை அல்லிக் கொண்டு வந்து அவளது முகத்தில் தெளித்தான்.

அதில் விழித்தெழுந்த ஆதிரை “அ… அர்ஜூன்…” என்றாள். ஏனோ அவளுள் ஏற்பட்ட பயம் அவனை இறுக்கமாக பற்றிக் கொள்ள செய்தது.

“எ.. என்ன ஆச்சி… ஆதிரை. எதையும் பார்த்து பயந்துவிட்டாயா?” என்ற போதும் அவளுக்கு ஆதரவாக அவளை அணைத்துக் கொண்டான்.

அவளையும் அறியாமல் அவளது கண்களில் நீர் வழிந்து கொண்டிருந்தது. “அர்ஜூன்… என்னை விட்டுப் போய்விடாதீர்கள்… எ.. எனக்குப் பயமா இருக்கு” என்றாள் அவளையும் அறியாமல். அவளது உடல் நடுக்கம் இன்னும் சரியானது போலத் தெரியவில்லை.

அவளது வார்த்தையின் பொருளை உணர்ந்த அர்ஜூன். ‘இவள் நினைக்கும் போது அவளை அரவணைத்தும், அவள் அலட்சியப் படுத்தும் போது எதுவும் நடவாதது போலும் இருக்க வேண்டும் போல ஏன் இப்படி மாறி மாறி ஆதிரை நடந்து கொள்கிறாள்’ என்று அர்ஜூன் சிறிது கடுப்புற்றான்.

அந்தக் கோபத்துடனே, “ஆதிரை… என்ன நினைத்து நீ என்னிடம் அப்படிச் சொல்கிறாய் என்று தெரிகிறதா!” என்று குரலில் கொஞ்சம் கடுமை பரப்பியும் அவன் பற்றியிருந்த அவளது மேல்கையில் இறுக்கம் ஏற்பட அவளை அவனிலிருந்து விலக்கியும் கேட்டான் அர்ஜூன்.

அவன் கைகள் அவனது இறுக்கத்தால் வலித்திட, உணர்வு வந்த ஆதிரை, அவளது முந்தானை சரிந்தும் கொசுவமாகப் பிடித்த சேலை கீழே இரைந்தும் கிடப்பதைப் பார்த்து , விரும்பியவனாகவே இருந்த போதும் திருமணமாகாத நிலையில் அர்ஜூனின் முன் இருக்கக் கூடாத நிலையில் இருப்பதைப் போல் உணர்ந்து பதற்றமுட்டாள். சட்டென அவன் கைகளிலிருந்து நழுவி , அவன் பார்வையிலிருந்து விலகி இரைந்து கிடந்த சேலையை அவசரமாக அள்ளி அணைத்த வண்ணம் அவனுக்கு முதுகு காட்டி அமர்ந்தாள்.

அவளது இந்தச் செயலில் சிறிது பொறுமை இழந்த அர்ஜூன், அவளை அவனுக்கானவளாகவே எண்ணியும் அதனை அவள் வாயினால் அறிந்துவிடும் துடிப்புடனும், “ உன்னிடம்தான் கேட்கிறேன். என்னைப் பார்த்து என்னவென்று எண்ணி நீ அப்படிக் கேட்டாய்” என்று அதட்டாலான குரலில் சட்டென அமர்ந்த நிலையிலே அவளது இடது கையினை வேகமாக அவன்புறம் திருப்பிக் கேட்டான்.

அவன் இழுத்த வேகத்தில் சேலையை மீண்டும் தவற விட்டு, எதிர்க்கும் சக்தியற்று அவனது விழிகளை நேராக நோக்கினாள் ஆதிரை.
 

banumathi jayaraman

Well-Known Member
ஆதிரையைப் பற்றிய அர்ஜுனின் சுய அலசல் சரிதான்
ஆனால் ரிதிகாவின் தம்பியாக அவளை கண்டபடி பேசியதை மறந்துட்டான் போல
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top