தூரம் போகாதே என் மழை மேகமே!! - 41

Advertisement

Yogiwave

Writers Team
Tamil Novel Writer
அவன் சொல்லிய கடைசி வார்த்தையில் ஆதிரையும் அதிர்ந்தாள். அர்ஜூனும் ஆச்சரியமுற்றான்.


அதன் பொருள் உணர்ந்த ரிதிகாவிற்கு கொண்டாட்டமாக இருந்தது. காலையில்தானே எண்ணினாள், அர்ஜூனும் ஆதிரையும் திருமணம் செய்து கொண்டாள் எவ்வளவு நன்றாகியிருக்குமென்று. அந்த எண்ணத்தை மெய்ப்பிக்கும் விதமாக அல்லவா, அரவிந்த் சொல்லிக் கொண்டிருந்தான்.


“தம்பி… மாமா சொல்வது உண்மைதானே!” என்று அர்ஜூனருகில் வந்து அவனிடம் குதுகலத்துடன் கேட்டாள் ரிதிகா.


‘அவளுக்கு என்னவென்று பதிலளிப்பது, ஆதிரை இன்னும் சம்மதம் சொல்லாத நிலையில் ஆமாம் என்பதா! அல்ல இல்லை என்பதா’ என்று யோசித்துக் கொண்டே ஆதிரையின் முகத்தைப் பார்த்தான். அவளது விழிகளில் இருந்த கருவண்டுகள் செய்வதறியாது படபடத்துக் கொண்டிருந்தது. அதைப் பார்த்திருந்த அர்ஜுனின் உதடுகள் மெல்லிய புன்னகையை உதிர்த்தது. பின் ‘எப்படியும் நான் ஆதிரையை விரும்புவது உண்மையென்றே மாமா சொன்னார். ஆதிரை என்னை விரும்புவதாக சொல்லவில்லையே அதனால் இது உண்மைதான்’ என மனதில் நினைத்து ஒருவாறு முடிவடுத்து, “அவர் சொல்வது உண்மைதான் அக்கா. எனக்கு ஆதிரையின் மீது விருப்பம்தான்” என்றான் எந்தச் சலனமுமின்றி.


அவனது பதிலுக்காக காத்திருந்தது ரிதிகா மட்டுமல்ல ஆதிரையின் செவிகளும்தான். அவனது பதிலில் கீழே குனிந்து கொண்டு பயந்து கொண்டிருந்த ஆதிரை அதிர்ந்து நிமிர்ந்து ‘என்ன ஆமாம் என்றுவிட்டான்.’ என்று அவனை நோக்கினாள். அவளது பார்வைக்காகவே காத்திருந்தது போல மெல்லிய புன்னகையுடனே “ஆனால் , ஆதிரை என்னை விரும்புவதாகத் தெரியவில்லை. அவளுள் வேறு யாராவது இருக்கலாம். அல்ல காரணமே இல்லாமல் என்னை வெறுக்கவும் செய்யலாம். விரும்புவதும் வெறுப்பதும் அவரவர் சொந்த மனநிலையை பொறுத்தது அல்லவா!” என்றான் அர்ஜூன்.


ஒரு பெரு மூச்சை வெளியேற்றிய ஆதிரையை அர்ஜூனை தவிர வேறு யாரும் கண்டிருக்கவில்லை. ஓரக்கண்ணால் அதனைப் பார்த்த அர்ஜூன், ‘ஏன் இந்த நிம்மதி. என் மீது ஆதிரைக்கு உண்மையிலே விருப்பமில்லையா!. அவளே சொல்ல கூடுமென்றே நான் இப்படிச் சொன்னேன்’ என்று எண்ணிக் குழப்பமடைந்தான். இருந்தும் தன் அக்கா மாமாவின் முன்னிலையில் எதையும் காட்டிக் கொள்ளாமல் அந்தப் புன்னகையை தொடர்ந்தான்.


அர்ஜூன் அவ்வாறு சொன்னதும் அடுத்து தனக்குத்தான் கேள்விக் கணைகள் வரும் என்று ஏற்கனவே யோசித்துக் கொண்டிருந்த ஆதிரையிடம், ரிதிகா, “ஆதிமா.. என் தம்பி சொல்வதைப் பார்த்தால்.. அவனிடம் உனக்கு விருப்பம் இல்லையோ!” என்று கேட்டாள்.


புன்னகை மாறாமலே ஆதிரை , “அண்ணி.. அவரை எனக்கு அதிக பட்சமாக நான்கு நாட்கள் கூட தெரியாது. அப்படியிருக்க அவ்வளவு எளிதில் ஒருவரை விரும்பிவிட முடியுமா! அதனோடு அவர் உங்க தம்பி என்பதும் எனக்கு முன்பு தெரிந்திருக்கவில்லையே. அது போதாதா! நான் முடிவெடுக்க. எனக்கு அவர் மீது எந்த விருப்பமும் இல்லை. “ என்றவளின் உள்ளம், ‘வெறுப்பு மட்டும் எரிமலையைப் போல இருக்கிறது. யாரென்றே தெரியாத போது என்னிடம் அவன் என்னைப் பற்றி அவதூறாகப் பேசிய பேச்சொன்று போதாதா! இப்போது நல்லவன் போல எப்படியொரு வேடம்.’ என்று கனல் பரக்க அவனோடு சேர்த்து மொத்த ஆண்களையும் திட்டிக் கொண்டிருந்தது.


“ஆ.. ஆதிமா… எ.. என்ன சொன்ன?” என்று புரியாமல் மீண்டும் கேட்ட ரிதிகாவின் செவியில் நன்றாகக் கேட்டது , ‘அவர் உங்க தம்பி அது போதாதா’ என்பதே! அதன் பொருள் அறிந்தவள் அங்கிருக்கும் அனைவரிலும் ரிதிகாவே. ஏனென்றால் எப்போது என் தம்பி என்று ரிதிகா பேசினாலும் ஆதிரை கோபம் கொள்வதும் பேச்சை மாற்றுவதும் உண்டு. இன்று அவனை யாரேன்று தெரியாமல் விருப்பம் கொண்டிருக்கலாம். ஆனால் அவன் என் தம்பி என்றதும் ஆழ் மனதில் வளர்த்துக் கொண்டு வந்த அவளது வெறுப்பு வெளிப்பட்டுவிட்டதோ!’ என்று உணர்ந்தாள்.


ரிதிகாவின் கேள்விக்கு பதிலாக ஆதிரை, “அண்ணி.. எனக்கு இப்போது யாரையும் விரும்பும் மன நிலை இல்லை என்றேன்” என்றாள் மீண்டும் ஒருமுறை.


இந்தப் பதிலை எதிர்பார்க்காத அர்ஜூன், ஒரு நொடி அதிர்ந்தான். நேற்று அவள் அவன் மார்பில் சாய்ந்து கொண்டது உரிமையுள்ளவள் போலல்லவா! இன்று அப்படியொன்று நடக்காதது போலவே காட்டிக் கொண்டது அர்ஜூனிடம் ஒரு அதிருப்தியை உண்டாக்கியது. இருந்தும் மற்றவர் முன்னிலையில் எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் அமைதியாக நின்றான்.


இவை அனைத்தையும் எதுவும் பேசாமல் பார்வையாளர் போல பார்த்துக் கொண்டிருந்த அரவிந்த் எல்லாம் அறிந்தவனாக புன்னகையுடனே சூழலை சுமுகமாக்க, “ என்ன ரித்தி, ஒண்ணு சொன்னா அதை பிடித்துக் கொண்டு அவர்கள் இருவரையும் மாற்றி மாற்றி கேள்விகள் கேட்டுக் கொண்டிருக்கிறாய். பார்.. இருவரும் மிகவும் சோர்ந்து தெரிகிறார்கள். முதலில் போய் சமை.”என்று ரிதிகாவை விரட்டினான்.


ஆதிரையும் , அர்ஜூனும் பேச மனமற்று அமைதியாக இருந்தனர். ஏனோ முன்பு போல இயல்பாக அர்ஜூனால் ஆதிரையின் அருகில் அமர முடியவில்லை. அவனுக்கு இன்னும் கொஞ்சம் இடம் விட்டு அமர எண்ணி ஆதிரை நகர முயன்றாள். தசை நார் விலகிப் போன அவளது கணுக்கால் வலித்ததில், “ஆ…” என்று சத்தமிட்டாள்.


அவளது குரலில் திரும்பிய அர்ஜூனும் ஒரு நொடி அவள் அருகில் செல்ல எண்ணி நின்றான். அதற்குள் “ஆதிரை.. என்ன ஆச்சி” என்று அவளது குரலில் அருகில் சென்ற அரவிந்திடம் ஆதிரை ,” அண்ணாக் கால் அடிப்பட்டுச்சு” என்று விளக்கமாகச் சொன்னாள் ஆதிரை.


“ஓ.. இருமா. நான் போய் சில மூலிகை இலைகளைப் பறித்து வந்துவிடுகிறேன். கட்டுப் போட்டாள் இரண்டு மூன்று நாட்களில் சரியாகிடும். நம்ம ஊரு அல்லோபதியெல்லாம் விட இந்த முறையில் 10 மடங்கு விரைவில் குணமாகும். இதோ வருகிறேன்.” என்று ரிதிகாவிடம் ஒரு வார்த்தை சொல்லிக் கொண்டு கிளம்பினான் அரவிந்த்.


ரிதிகாவின் அருகிலே நின்றிருந்த அர்ஜூனிடம், “டே தம்பி. ஏன் நிக்கிற. போ போய் உட்காரு. ஆதிரையின் அருகில் இடமிருக்கிறதே!” என்றாள் அடுப்பில் விறகை வைத்துக் கொண்டே!


“இல்ல அக்கா.. பரவாயில்லை… நீ என்ன செய்கிறாய் என்று பார்க்க வேண்டும் போல தோன்றுகிறது” என்று ஆதிரையை விலக்கிப் பேசினான். இதில் ஆதிரை சுகத்தையே உணர்ந்திருக்க வேண்டும் . மாறாக வெறுமையே தோன்றியது.


“அது சரி… இருக்கட்டும் அந்த மனையையாவது போட்டுக் கொண்டு இப்படி என் அருகில் உட்காரு.” என்றாள் ரிதிகா.


அவள் சொன்னதை அப்படியே கேட்ட அர்ஜூன், வேறேதும் பேசவில்லை. ரிதிகா தான் பேசினாள், “ஆமாம் பல் துலக்கினீர்களா? அப்படியே சாப்பிட போறீங்களா” என்று கேட்டாள் ரிதிகா.


அதற்கு அர்ஜூன் பதில் சொல்லுவதற்கு முன் எங்கிருந்தோ ஓடி வந்த ருத்வி ரிதிகாவிடம் , சைகையில் இல்லை என்பது போல சொன்னது. “ என்ன அக்கா நடக்கிறது பல் துலக்குவது என்றால் என்னவென்று இதற்குக் கூட தெரியுமா!” என்றான் அர்ஜூன்.


“தெரியுமாவா.. நான் எப்போதும் காலையில் வாயில் குச்சி வைத்திருப்பேனா. அது என்ன என்ன வென்று என்னைத் துளைத்து எடுத்து தெரிந்து கொண்டாள். ரொம்ப சுட்டி. “ என்றஆள் ரிதிகா.


“ இங்கு ஒரு குட்டி ராஜியமே நடத்திக் கொண்டிருப்பாள் போல உன் அணில் குட்டி.” என்றான்.


“ம்ம். அது இருக்கட்டும். முதலில் இருவரும் பல் துளக்கிவிட்டு, முகம் கைகால்கள் கழுவிட்டு வாங்க. அங்க தெரியுற luggage பெட்டியில் உனக்கும் ஆதிரைக்கும் துணிகள் இருக்கும். ஆதிமா. சேலை தான் இருக்கும் உனக்குக் கட்ட ஞாபகம் இருக்குல்ல. நீயும் நானும் ஒரே உடல் வாகு என்பதால் அளவில் பிரட்சனை இல்லை. “ என்றாள் ரிதிகா.


“ஆன்.. ஞாபகம் இருக்கு அண்ணி. இப்போதெல்லாம் hospital –க்கு சேலைதான். அதனால் பிரட்சனையில்லை. “ என்றாள் ஆதிரை.


“தம்பி உனக்கு அரவிந்த் t- shirt- ம் முக்கால் பேண்ட் இருக்கும் அதை எடுத்துக் கொள். ருத்வி அவுங்கள நாம எப்போவும் போவோம்ல அந்த ஓடைக்கு கூட்டிட்டு போ.. ஆதிரையுடனே இரு.. விலகிப் போய்விடாதே! “ எனக் காரியத்தில் கண்ணாக இருந்தாள் ரிதிகா.


“சரி அக்கா... மாமா வந்துவிடட்டுமே. ஆதிரைக்குக் காலில் கட்டுப் போட்டுவிட்டு நாங்க மூவருமாகப் போய் வருகிறோம் “ என்று ஆதிரையுடனான தனிமையை விலக்கும் விதமாகப் பேசினான் அர்ஜூன்.


இதனை கண்டு கொண்ட போதும் ரிதிகா அறியாதது போல, “தம்பி.. அவர் வர நேரம் ஆகும். மூலிகை இலைகள் எடுத்துவருவது கொஞ்சம் தூரம் இருக்கிறது. அவரும் நானும் காலையிலே பழங்களைச் சாப்பிட்டோம். உங்களுக்கு உணவிற்குத் தாமதம் ஆகிவிடும். அதனால் உடனே கிளம்புங்க” என்றாள் ரிதிகா.


“அண்ணி. அவர் சொல்வதும் சரி தானே அண்ணி. இங்கிருந்து எவ்வளவு தூரம் இருக்கோ அந்த ஓடை. அதுவரை இவர் என்னை எப்படித் திரும்பவும் தூக்கிச் செல்வார். அவரும் பாவம்தானே” என்று அர்ஜூனுக்கு பரிவு போல பேசி அவளுக்கும் அப்படி அவனுடன் தனித்து போவதில் அவளுக்கும் விருப்பமில்லை என்பதை காண்பித்துக் கொண்டாள் ஆதிரை.


“அச்சோ இருவரும் . பேசாமல் நான் சொல்வதை செய்யுங்க. அங்க அந்தப் பெட்டியில் அரப்பு இருக்கும் அதை எடுத்துக் கொள்ளுங்க. இங்குச் சோப்பெல்லாம் கிடையாது. இந்த பனஓலை பெட்டியில் வேம்பு குச்சிகளும் , ஆலம் குச்சிகளும் இருக்கிறது, எது வேண்டுமோ எடுத்துக் கொண்டு போய் பல் துளாக்கிவிட்டு ஒரு குட்டி குளியல் போட்டுட்டு வாங்க அதற்குள் நான் சமைத்துவிடுவேன்” என்று அடுக்காக பேசிக் கொண்டு அவர்களை விரட்டினாள் ரிதிகா.


“சரி அண்ணி. என்றவள் அதற்கு மேல் எதுவும் பேசாமல் மெதுவாக நொண்டிக் கொண்டு ஏற்கனவே அவனுக்கான துணிகளை எடுத்துக் கொண்டிருந்த அர்ஜுன் அருகில் சென்று நின்றாள். முன்பு போலல்லாமல் அவளது அருகாமை ஏனோ அவனுக்கு அந்நியத்தன்மையை தந்தது. அவள் அருகில் வந்ததை உணர்ந்து விலக முயன்றான் அர்ஜூன். ஆனால் அமர முயன்ற போது நடுநிலையை இழந்து விழ இருந்த ஆதிரை, அர்ஜூனின் தோளிலே கைகளை ஊன்றி அருகில் அமர்ந்தாள். அதனை எதிர்பாராத அர்ஜூன், தோட்பட்டையிலிருந்த அவளது கையை பற்றி அவளைப் பிடித்து நிறுத்தினான்.


இருவரின் விழிகளும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட போதும் வாய்கள் பேசிக் கொள்ளவில்லை. அவன் மீதிருந்த கையினை விரையில் விலக்கிக் கொண்டு, “சாரி சார்” என்றாள் ஆதிரை.


“எதற்கு… இதற்கா “ என்று அவள் கையை பார்த்தும்,” அல்ல முன்பு நீ பேசியதற்கா!” என்று யோசித்தும் கேட்டான் அர்ஜூன் . அதற்குப் பதிலேதும் பேசாமல் தலை தாழ்த்தி அவன் முன் அமர்ந்திருந்தாள் ஆதிரை. அவள் பதில் சொல்லும் எண்ணமற்று இருப்பதைப் பார்த்து, “ சீக்கிரமாக உன் உடைகளை எடுத்துக் கொள் ஆதிரை. நாம் கிளம்பலாம். என்ன ருத்வி போலாமா” என்ற வண்ணம் அவன் எழுந்து கிளம்ப தயாரானான்.


ஆதிரையும் கிளம்பியதும் , எல்லா பொருட்களையும் முன்பு போல் ஆதிரையின் கையில் கொடுத்துவிட்டு , அர்ஜூன் ஆதிரையை உப்பு மூட்டை போல தூக்கிக் கொண்டு ருத்வி சொல்ல சொல்ல ஓடை பக்கம் நடந்தான்.
 

banumathi jayaraman

Well-Known Member
ருத்வி ரொம்பவே கெட்டிக்காரியா இருக்காளே

ஹா ஹா ஹா
ஆதிரையை உப்பு மூட்டை தூக்கியே அர்ஜுன் ஒரு வழியாயிடுவான் போலவே
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top