தூரம் போகாதே என் மழை மேகமே!! - 40

Advertisement

Yogiwave

Writers Team
Tamil Novel Writer


விழி விரித்துக் கேட்டுக் கொண்டிருந்த ஆதிரை, “ அண்ணி மிகவும் வலித்ததா? நீங்க வலி தாங்க மாட்டிங்களே” என்று ரிதிகாவின் வலியை அவள் உணர்ந்தவளாகக் குரல் தாழ்த்திக் கேட்டாள்.


அதற்குப் பதிலாக புன்னகித்த ரிதிகா பின் ,”முதலில் கஷ்டமாக இருந்தது டா. இங்கு நான் பலதும் பலகிவிட்டேன். “


“ம்ம்… புரிகிறது. “ என்ற ஆதிரை. ‘எனக்கும் தான் அண்ணி. முதலில் கஷ்டமாக இருந்தது. பின் பலகிவிட்டது’ என தன் மனதின் வலியை எண்ணினாள்.
“பிறகு மாமா எப்படி உன்ன கண்டுபிடிச்சாரு அக்கா” என்று மற்றதும் தெரிந்து கொள்ள கேட்டான் அர்ஜூன்.


“அவரா! .. அவரை அந்த மழை மேகம் தான் என்னிடம் சேர்த்தது. மூன்று நாள் மிகவும் கஷ்ட பட்டுப் பல மிருகங்களிடம் போராடி இருக்கிறார். பின் அந்த மழை மேகம் வந்திருக்கு. அந்த மழை மேகத்தைப் பார்த்தால் சில விலங்குகள் இப்போதும் பயப்படும். விலகி ஓடிவிடும். நான் சொன்னேனே அந்தக் கரடி அவன் பெயர் உத்ரா. அவன் கூட பயப்படுவான்” என்றாள் ரிதிகா.


“உத்ராவா… என்ன அக்கா எல்லா விலங்குக்கும் பெயர் சூட்டி நட்புக் கொண்டாடிட்டு இருக்க. நீ சொல்றத பார்த்தா எங்களை பயமுறுத்தியது கூட உன் நட்பு கரடி தான் போல” என்று சிரித்துக் கொண்டே கேட்டான்.


“இருக்கலாம். உத்ராவாக கூட இருக்கலாம். இங்கு இன்னும் கொஞ்சம் தூரம் அந்தப் பக்கமா போனீங்கனா ஒரு பெரிய கரடி கூட்டம் இருக்கும். அங்குதான் உத்ராவும் இருப்பான். அவைகளுக்காகதான் தர்பூசணி விதைகளை எப்போதும் தோட்டம் செய்வோம். அவற்றின் விருப்பமான உணவு தர்பூசணியும், மூங்கில் இலைகளும்தான். அவற்றின் தர்பூசணியை அந்தக் கரடிகளே நமக்குத் தந்தால்தான் உண்டு. நாமே எடுத்து வந்தோமென்றால் வந்து எடுத்துக் கொண்டு போய்விடும். ஆனால் ருத்விக்கு உத்ராவை கண்டால் பொறாமையென்று தோன்றும். உத்ராவை பார்த்தாலே ஓடிச் சென்று மறைந்து கொள்வாள். உத்ரா போகும் வரை வெளியிலே வர மாட்டாள்.“ என்றாள் ரிதிகா.


“ஓ … அதுதான் கதையா! அப்போது எங்களை பயமுறுத்தியது கண்டிப்பாக உத்ராவாகதான் இருக்க முடியும். தர்பூசணிக்காகவே வந்திருக்கக் கூடும்” என்றான் அர்ஜூன்.


“அது இருக்கட்டும் அண்ணி அப்புறம் அண்ணா எப்படி நதியின் அந்தப்புறமிருந்து இந்தப்பக்கம் வந்தார்.” எனக் கேட்டாள் ஆதிரை.


“ம்ம்.. அவரே ஒரு மரத்தினால் ஆன படகினை செய்திருக்கிறார். பின் அந்த மழை மேகம் அவரே அறியா வண்ணம் அந்தப் படகில் கிடத்தி அவர் சுயநினைவில்லாமல் இந்தப் பக்கம் வந்ததாக அவர் சொல்ல கேட்டேன். எனக்கு அவர் உயிருடன் மீண்டதே பெரியதாக இருந்ததால் நான் மேலும் அந்த மழையினை பற்றி கேட்கவில்லை. ஆனால் உன் அண்ணன் வெகுவாக மாறித் தெரிந்தார்.” என்றாள் ரிதிகா.


“ஏன் அண்ணி..” என்றாள் ஆதிரை.


“எல்லாம் அந்த மழைதான். அவரின் மனதில் ஏதோ நான் அவரை ஏமாற்றுவது போலவும் , ஏதோ முப்பிறவியில் அவர் எனக்குச் செய்த தீங்கிற்காக அவரைப் பழிவாங்கவே அவரைத் திருமணம் செய்து கொண்டது போலப் பலவிதமாக கனவுகளைத் தோற்றுவித்திருக்கிறது. என் மீது எவ்வளவு பாசமா உன் அண்ணன் இருப்பாரென்று உனக்கு தெரியுமில்லை. ஆனால் அப்போது அவர் எவ்வளவு கோபப்பட்டார் தெரியுமா!?” என இன்று நடந்தது போல உணர்ந்து ஆதிரையிடம் கூறினாள் ரிதிகா.


“ஓ…” என்ற ஆதிரையின் மனக்கண்ணில் ‘பூர்வ ஜன்மம் போல அர்ஜூன் திகேந்திரனாக நின்றது அப்போது நிஜமில்லையா! எல்லாம் அந்த மழை தோற்றுவித்த மாயமா! ஆமாம் அப்படிதான் இருக்க வேண்டும். இல்லையென்றால் இந்தத் தீவிற்கு வரும் போது அவ்வளவு கோபமாக இருந்த அர்ஜூன் மேல் எனக்கு இப்படி ஒரு ஈர்ப்பு உண்டாகியிருக்கக் கூடுமா! இவை நிஜமல்ல என்பதை இனியாவது தெரிந்து கொள்ள முடிந்ததே. இனி அவனிடம் நேற்றைய என் நிலைக்குக் காரணம் சொல்லி விலகிவிடலாம். அவனும் புரிந்து கொள்ள கூடும். சான்றாகத்தான் அவன் அக்காவின் கதையே இருக்கிறதே’ என்று எண்ணி எதிலோ வென்றது போல உணர்ந்த ஆதிரையின் உள்ளம் காற்றுமில்லாத வெற்றிடம் போல காளியானது.


“ஆமாம் ஆதி… அவர் என்னிடம் காட்டிய வெறுப்பிற்கு நான் இறந்திருந்தால் கூட மேல் என்று நினைத்தேன். உத்ராவும் என்னுடன் தான் இருந்தான். அரவிந்த் என்னிடம் கத்தியதை பார்த்து அவனுக்குக் கோபம் வந்து எனக்குக் காவல் போல எங்கள் இருவருக்கும் இடையில் நின்று காத்தது இன்றும் நினைவில் மறையவில்லை. அவ்வளவு கோபம் இருந்த போதும் உன் அண்ணன் என் காலில் அடிப்பட்டதைப் பார்த்து பயந்துவிட்டார். மேலும் நான் பேச முடியாமல் திக்கி கண்ணீர் விடுவதை அவரால் தாங்கவே முடியவில்லை. ஓடி வந்து என்னைப் பற்றி ‘என்ன செய்கிறது ரிதி…. ஏன் பேச மாட்டேன் எங்கிறாய். என்னாச்சு உன் காலுக்கு’ என்றார். அவரே என்னையும் உப்பு மூட்டை தூக்கிக் கொண்டு இந்தக் காட்டின் உள்ளே நடந்து வந்தார். அப்போதுதான் உன் அப்பா அம்மாவைப் பார்த்தோம். அவர்கள் இலைகளைத்தான் ஆடையாக்கி அணிந்திருனர். எங்களுக்காவது எங்களுடன் சேர்ந்து சில luggage பெட்டிகள் flight –ல் இருந்து கரை ஒதுங்கி இருந்தது. அதனால் இதுவரை ஆடைக்கு எந்தப் பஞ்சமும் இல்ல. அவர்கள் கிட்டத்தட்ட 20 வருடம் இங்கே இருந்திருக்கின்றனர். யாருமே வர முடியாத இந்தத் தீவில் எப்படி இருந்தார்கள் என்பது ஆச்சரியம்.


அவர்களே எனக்குப் பச்சிலை கட்டுப் போட்டு குணமாக்கினர். அவர்கள் விட்டுச்சென்ற வாழ்க்கை தடுத்தினாலும் உணவு வழிமுறைகளினாலுமே நாங்கள் இங்கு இந்த வாழ்க்கையைத் தொடர முடிந்தது. அதன் பின் அரவிந்தை அந்த மழை அடிக்கடி தொந்தரவு செய்திருக்கிறது. என்னை அது ஒரு நாளும் அனுகவில்லை. அதன் விளைவாக இருவருக்கும் நிறைய சண்டைகள் மனவருத்தமும். அவர் கோபமாக பேசினாலும் நான் அன்பாக இருப்பதை பார்த்திருந்த அவருக்கு முடிவாக 5 மாதத்தில் அது ஒரு மாய மழை மேகம் என்பது தெரிய வந்தது. அதை அறிந்த பின்னே அவரை அந்த மழை மேகம் துரத்துவதிய விட்டது.” என்று முற்றிலும் சொல்லி முடித்தாள் ரிதிகா.


“ஓ… இப்போது புரிகிறது. அப்புறம்..” என்று இழுத்த ஆதிரை, “பின் அவர்கள் எப்படி இறந்தனர்” என்றாள்.


“அவர்கள் என்று உன் பெற்றோரைத்தானே சொல்கிறாய் ஆதிரை” என்றாள் ரிதிகா.


“அவர்கள் இறக்கப் போவது அவர்கள் ஏற்கனவே அறிந்திருக்கின்றனர். நாங்கள் வந்து அடுத்த பௌர்ணமியிலே இருவரும் இறந்துவிட்டனர். அவர்கள் இறக்கப் போவதை அறிந்ததும் , அவர்களுக்கு ஏனோ அரவிந்தை பார்க்க வேண்டுமென்று தோன்றி இருக்கிறது. அதனால்… அதனால்…” என்று எதையோ சொல்ல முயன்றவள் குகையின் வாசலில் நிழலாடியதில் நிறுத்தினாள் ரிதிகா.


அரவிந்த்தான் அங்கு வந்திருந்தான். ஆதிரையைப் பார்த்ததும் ஆசையுடன் தங்கையே என்று அணைத்துக் கொள்ள கூடுமென்று எண்ணிக் காத்திருந்த ஆதிரைக்கு அவன் ஏமாற்றத்தையே தந்தான். மாறாக ரிதிகாவை கண்டிப்புடன் பேசினான்.


“ரிதி… என்ன… செய்து வைத்திருக்கிறாய்?” என்று படப்படப்புடன் கேட்டான். “நாம் வந்து மாட்டிக் கொண்டது பற்றாதென்று இவளையும். நான் அவளைக் கூப்பிடாதே என்று சொன்னேன்ல.. ஏன் எனக்கு தெரியாம அங்க போய் அவளைக் கூப்பிட்ட? உன் தம்பியையும் அல்லவா கூப்பிட்டு வந்திருப்பாய் போல… என் அம்மா அப்பாவை போல நாமும் இங்கு வனவாசம் போல 20 வருடமோ அல்ல வாழும் காலம் முழுக்க இங்கு மாட்டுக் கொண்டு கிடக்கப் போகிறோம். இதில் இவர்களையும் மாட்டிவிட்டுவிட்டாயே ரிதி “ என்று பயமும் வேதனையுமாக ரிதிகா நோக்கி அவள் கையை பற்றிக் கொண்டே பேசிக் கொண்டிருந்தான் அரவிந்த்.


“அரவிந்த்.. எனக்கு வேறு வழி தெரியவில்லை. எனக்குப் பயம் வந்துவிட்டது. ஒருவேளை ஒருவேளை என்னுடை இந்தப் பிரசவத்தில் எனக்கு ஏதேனும் ஆகிவிட்டால் , நீங்க எப்படி இந்தத் தீவில் தனியே இருக்க முடியும். நீங்களும் அல்லவா இறந்துவிடக் கூடும். அதனோடு முன்பு போல குழந்தை பேறு கஷ்டமென்றால்! அடுத்து என்ன நடக்குமென்று என்னால் யோசிக்கக் கூட முடியவில்லை. என்னை மன்னித்துவிடுங்க அரவிந்த். அதனோடு நான் ஆதிரையை மட்டும்தான் அழைத்தேன். அவள் எனக்குப் பிரசவம் பார்க்க கூடும். அதனோடு உங்க அம்மா சொன்னது போல ஆதிரையே கூட நாம் இந்தத் தீவைவிட்டு செல்ல வழிகாட்ட கூடுமென்று நம்புதான் இவ்வாறு செய்துவிட்டேன். அர்ஜூன் எப்படி இங்கு வந்தான் என்பது எனக்குப் புரியவில்லை. I am sorry அரவிந்த். எனக்கும் இப்போது இன்னும் பயமாக இருக்கிறது” என்று உண்மையான பயமுடனும் கண்ணீருடனும் அரவிந்தின் தோளில் சாய்ந்து கொண்டே சொல்லிக் கொண்டிருந்தாள் ரிதிகா.


அவர்கள் பேசுவது புரியாமல் மழுங்க மழுங்க விழித்துக் கொண்டிருந்த அர்ஜூனும் ஆதிரையும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். ‘இன்னும் எத்தனை புதிர்களைத்தான் இந்தத் தீவு நமக்குத் தர காத்திருக்கிறது.’ என்று இருவருமே நினைத்தனர்.


“சரி… விடு இனி என்ன செய்வதென்று பார்ப்போம். ராஜாவும் இவர்களுடன் வந்தானா.. அனாமிகா நலமுடம் இருப்பதை அறிவதற்காகத்தான் உன்னை நான் அந்தக் கோவிலுக்கு அழைத்துச் சென்றேன். ஒருமுறைதானே நீ அங்கு வந்தாய். எப்படி நீ மீண்டும் அங்கு என் துணையுமில்லாமல் சென்றாய்.” என்றான் அரவிந்த்.


“ம்ம்ம் ராஜா அவர்களுடன் வரவில்லை.. உத்ராதான் என்னை அழைத்துக் கொண்டு போனான். என்னை மன்னிச்சிடுங்க.” என்றாள் ரிதிகா மீண்டும் ஒருமுறை.


“அண்ணா..” என்று ஒற்றைச் சொல்லில் அழைத்தாள் ஆதிரை.


அந்த அழைப்பில், ரிதிகாவை விலக்கி ஆதிரையின்புரம் திரும்பிய அரவிந்த், “ஆதிமா.. எப்படி இருக்க. ஏன் இப்படி இளைப்பாய் தெரிகிறாய். ஒழுங்காக சப்பிடுவதில்லையா! ராஜா எப்படி இருக்கான். ரொம்ப சேட்டைச் செய்கிறானா என்ன? உன்னைத் தனித்துவிட்டு வந்ததில் என்மீது கோபமாடா” என்று அடுக்கடுக்காக பேசிக் கொண்டு அவளின் அருகில் சென்று அவள் கைகளை பற்றிக் கேட்டான்.


“அ…அண்ணா.. “ என்றவள் கண்கள் விழிகள் நிரம்ப அவள் ஆசை அண்ணனைக் கண்டது. ‘ தன் அண்ணன் அவளது நல்லதுக்காகவே எல்லாம் செய்திருக்கிறான். அவனைத் தவறாக எண்ணுவதற்குத் துளியுமில்லை. என் மீது எப்போதும் இருக்கும் பாசம் ஒரு துளி கூடக் குறையவில்லை. மாறாகத் தான் படும் கஷ்டம் தன் தங்கைக்கு ஒரு நாளும் உண்டாக கூடாதென்று இப்போது கூட தவிக்கிறானே’ என்று எண்ணியவளின் விழிகள் ஈரமானது. பேச்சேதும் வரவில்லை.


“என்னடா… அழுகாதேடா கண்ணா.. நான் உன்னுடன் இருக்கும் போது எதுவும் உனக்கு நேராது. எதைப் பற்றியும் யோசிக்காதே. இனி எந்தக் காரணம் கொண்டும் உன்னைப் பிரிந்து நான் எங்கும் செல்ல மாட்டேன். இது சத்தியம் சரியா அழுகாத ஆதிரை. என்னால் என்னையே மன்னிக்க முடியவில்லை.. உன்னை இப்படித் தவிக்கவிட்டு நாங்களும் நிம்மதியாக இல்லையடா கண்ணா” என்று அவன் அன்பு தங்கையின் முகவாயை தூக்கி பிடித்துக் கொண்டு குழந்தையைக் கொஞ்சுவது போலப் பேசினான் அரவிந்த்.


அவர்களின் அண்ணன் தங்கை பாசத்தை ஏற்கனவே அறிந்திருந்த ரிதிகாவிற்கு அதிலேதும் பேதம் தெரியவில்லை. ஆனால் அர்ஜூனுக்கு பார்க்க அழகாகவும் அவர்களின் பாசம் ஏனோ அவன் அக்கா மீது அவன் வைத்திருக்கும் பாசத்தை ஒத்திருப்பதையும் உணர்த்தியது. அவர்களின் இந்த பாசப்பிணைப்பில் இடையில் இருக்காமல் ரிதிகாவின் அருகில் சென்று நின்று கொண்டு பார்த்துக் கொண்டிருந்தான் அர்ஜூன்.


ஒருவாறு இருவரும் சரியானதும் , அரவிந்த அர்ஜூன் பக்கம் திரும்பி ,”என்ன மச்சான்.. எப்படி இருக்கீங்க.. நாங்க இறந்துவிட்டதா எண்ணி நீங்க ரொம்ப கவலபட்டிருப்பீங்கல” என்று நேரில் பார்த்தது போலக் கேட்டான்.


“அத்தினையும் உண்மை மாமா.. எனக்கு இப்போது கூட இவையெல்லாம் கனவாகிவிடக் போகிறதோ என்ற பயம் அப்போ அப்போ வருகிறது. இந்தத் தீவுதான் நாங்க இங்க வந்ததிலிருந்து ஒரே புதிர் போட்டுக் கொண்டிருக்கிறதே!” என்றான் அர்ஜூன்.


அதற்குச் சிரித்த அரவிந்த், “இவை உண்மை. உன் அக்காவும் உண்மை.. ஆதிரையும் உண்மை. நீ ஆதிரையை விரும்புவதும் உண்மை” என்று கோர்வையாக சொன்னான் அரவிந்த்.


அவன் சொல்லிய கடைசி வார்த்தையில் ஆதிரையும் அதிர்ந்தாள். அர்ஜூனும் ஆச்சரியமுற்றான்.
 

banumathi jayaraman

Well-Known Member
இந்த தீவில்தான் எத்தனையெத்தனை மர்மங்கள்?
இந்தக் காலத்தில் இப்படியும் நடக்குமாங்கிற மாதிரி பழமையும் புதுமையும் கலந்து இந்த நாவல்
ரொம்பவே நன்றாக இருக்கு,
Yogi டியர்

தங்கச்சியை மச்சான் விரும்புவது
அரவிந்த் மாமனுக்கு எப்படி தெரிந்தது?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top