தூரம் போகாதே என் மழை மேகமே!! - 39

Advertisement

Yogiwave

Writers Team
Tamil Novel Writer
main-qimg-624c51f7bbaee0b441e15b97c59d36e9-c.jpegகுகையை அங்கும் இங்குமாக பார்த்த ஆதிரைக்கு ரிதிகாவின் கை வேளையில் பலதுவும் தென்பட்டது. பனஓலையில் செய்யப்பட்ட சின்னசின்ன பெட்டிகளில் சமைக்க தேவையான பொருட்களை அழகாக அடுக்கி வைத்திருந்தாள். அந்த மரவீட்டிலிருந்த புற்களால் ஆன மெத்தையையும் ரிதிகாதான் செய்திருப்பாள் போலும். இந்தக் குகையிலும் அது போன்ற ஒரு மெத்தை இருந்தது. அதிகமாக இல்லை என்ற போதும் சமைப்பதற்கென்று ஒரு சில மண்ணால் ஆன பானைகளும் மரத்தால் ஆன கரண்டிகளும் ஓரமாக இருந்தது. மூன்று மரத்தால் ஆன குடுவைகள் இருந்தது. ஒரு மூலையில் சில பெரிய பானைகள் ஒன்றின்மீது ஒன்றாக அடுக்கி வைக்கப் பட்டிருந்தது. சிறியது என்றும் இல்லாமல் பெரிது என்றுமில்லாமல் அளவாக அந்தக் குகை இருந்தது. எண்ணையிட்டு இரண்டு எண்ணை விளக்குகள் இருந்தது. அவற்றில் ஒன்று பெரிதாகவும் ஒன்று சிறியதாகவும் இருந்தது. அது அமைக்கப் பட்டிருந்த விதமும் மிகவும் விசித்திரமாக இருந்தது. கண்ணாடியால் ஆனது போல் இல்லாமல் அது மரத்தினால் ஆனது போல இருந்தது. இருந்தும் அந்த நெருப்பு அந்த மரத்தினை எரித்திடாமல் அடக்கமாக எரிந்து கொண்டிருந்தது.


ஒரு சிறிய மேஜை போன்ற அமைப்பும் அருகில் கட்டையால் ஆன சில மனைகளும் இருந்தன. அந்த மேஜையின் மீது சில ஓலைகளும் அருகில் சிறிய பெட்டியில் மையும் , சில இறகுகளும் இருந்தது. அதனைப் பார்க்கும் போதும் அடிக்கடி எதையோ யாரோ எழுதுவது போல தெரிந்தது. பன ஓலைகள் மட்டுமில்லாமல் சில மரத்தின் பெரிய இலைகளிலும் ஏதோ எழுதப் பட்டு எண்ணையிட்டு பத படுத்தப்பட்டு இருந்தது போல தெரிந்தது. பார்க்கும் போதே ஆதிரைக்குத் தெரிந்தது. தன் அண்ணன்தான் இங்கிருப்பதை ஆராய்ந்து எழுதிக் கொண்டிருக்கிறார் என்பது. அண்ணி சொன்ன ஆராய்ச்சி இதுவாகத்தான் இருக்கும். ஒரு வாரு எல்லாவற்றையும் பார்த்துமுடித்த ஆதிரையின் விழிகள் தன் அண்ணனைத் தேடியது.


“அண்ணி… அண்ணா எங்கே? குகையில் இருப்பாரென்று சொன்னீங்களே” என்று கேட்டாள் ஆதிரை.


“தம்பி அந்த விரகு கட்டை இப்படித் தள்ளி விடு.” என்று சொல்லிய வண்ணம் அங்கே மண்ணால் எழுப்பப்பட்டிருந்த அடுப்பிலிருந்த சாம்பலை வெளியில் தள்ளி ஒரு மண் சட்டியைஅ அடுப்பில் வைத்துப் பற்ற வைத்துக் கொண்டே சொன்னாள் ரிதிகா.


“என்ன ஆதி. அவரா! அவர் தண்ணீர் கொண்டுவரப் போயிருப்பார் என்று நினைக்கிறேன். தண்ணீர் பாத்திரம் இங்கு இல்லை. இரு ருத்வியிடம் சொல்லி அனுப்பலாம்.” என்றாள் ரிதிகா.


“ருத்வி.. போ.. போய் அரவிந்த் எங்க இருக்காருனு பார்த்து கூட்டிட்டு வா” என்று ஆதிரையுடன் ஒட்டினார் போல அமர்ந்திருந்த அந்த அணில் ருத்வியென்ற அழைப்பில் விழுக்கென்று எழுந்து பின் குகையைவிட்டு ஓடிச் சென்றது.


விரகினை ரிதிகாவிற்கு அருகில் இழுத்து வைத்துவிட்டு அந்தக் கட்டை பிரித்து அவளுக்கு வசதியாக வைத்தான் அர்ஜூன். ரிதிகாவின் குரலுக்கு ஓடிய அணிலினை ஆச்சரியமாகப் பார்த்த அர்ஜூன் ஆதிரையும் ,”என்ன அக்கா. உன் சொல்லினை அணிலும் புரிந்து கொள்ளுமா! உடனே அந்த அணில் ஓடிச் சென்றுவிட்டது” என்று கேட்டான்.


“ஓ.. அதுவா… அதுதான் என்னுடைய ஒரே தோழிடா. அது குட்டியாக இருக்கும் போதே ஒரு பருந்து தூக்கி போய்க் கொண்டிருக்கும் போது தவறி கீழே விழுந்தது. அறை உயிராக இருந்த அதனை நானும் அவரும் தான் தேற்றி காப்பாற்றினோம். அதன் பிறகு எங்கு அணில் கூட்டம் இருக்குமென்று தேடி அங்கு விட முயன்றோம். ஆனால் ருத்விதான் திரும்பத் திரும்ப இந்தக் குகைக்கு ஓடி வந்து கொண்டே இருந்தாள். என்னுடன்தான் எப்போதும் தூங்குவா. நேற்று வரவில்லையா! நான் கொஞ்சம் பயந்துவிட்டேன். அதுதான் தேடிக் கொண்டு வந்துவிட்டேன்.என்னைப் போல ஆதிரையையும் ருத்விக்கு பிடித்துவிட்டது என்று நினைக்கிறேன்” என்று புன்னகித்த வண்ணம், சில மக்காச்சோள கதிர்களின் மேல் தோள்களை நீக்கிக் ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொண்டிருந்தாள்.


“ஆமாம் அண்ணி. எனக்குக் கோவை பழமெல்லாம் ஊட்டிவிட முயன்றது அந்த அணில். எனக்கும் ருத்விய ரொம்ப பிடிச்சிருக்கு” என்றாள் ஆதிரை.


“அது சரி.. இப்போ தெரியுது ஏன் நீங்க இப்படி ஆத்மார்த்தமான தோழிகள் என்பது. “ என்ற வண்ணம் ஆதிரையின் அருகில் சென்று அமர்ந்தான்.


அவனைப் பார்க்க முயன்ற ஆதிரையை அவளுள் ஏதோ தடுத்தது. ‘ஏன்’ என்று கேட்க தோன்றிய அவள் எண்ணம் தடைப்படு ரிதிகாவையே கவனித்தது.


அவளுக்குப் பதிலாக ரிதிகாதான் “ஏனோ!” என்றாள்.


“பின்ன என்ன இருவரும் ஒன்று போல இருந்தால் பிரட்ச்சனை வராதுதானே. ஒருவரை ஒருவருக்கு பிடித்துத்தானே ஆக வேண்டும்” என்றான் காரணம் போல.


“அப்படியா தம்பி! நீ முன் போல இல்லாமல் மிகவும் தன்மையாக பேசுவது போலத் தெரிகிறது. என்ன உன் மனம் கவர்ந்தவளை கண்டுவிட்டாயா! இல்ல திருமணமே முடிந்துவிட்டதா!.” என்று ஆதிரையையும் ஒரு பார்வை ஆர்வமாக ரிதிகா.


“அதெல்லாம் இல்லை அக்கா. நான் எப்போதும் போலத்தான் இருக்கிறேன்.“ என ஒரு பார்வை ஆதிரையைப் பார்த்தான்.


“டே தம்பி. உன்னை எனக்கு நன்கு தெரியும். என்னிடம் மழுப்பாதே” என்றாள் ரிதிகா.


ஏனோ ஆதிரைக்கு இந்தப் பேச்சு பிடிக்கவில்லை. ‘ஒருவேளை அண்ணியிடம் அர்ஜூன் என்னிடம் சொன்னது போலத் தன்னை மணக்க விரும்புவதாகச் சொல்லிவிட்டால்? என்ன செய்வது?’ என்று ஒரு நொடி பயந்து, பேச்சை மாற்றும் விதமாக, “அ..அண்ணி.. என்ன சமைக்க போறீங்க. நானும் உதவட்டுமா!” என்று கேட்டாள் ஆதிரை.


ஆதிரையின் நேற்றைய மன நிலையில் ஏதோ மாற்றம் இருப்பதை அர்ஜூனுக்கு அவளின் வெட்டி மாற்றும் பேச்சில் புரிந்தது. இருந்த போதும் வேறேதும் பேசாமல் ஆதிரையை ஒரு நொடி பார்த்துவிட்டு வேறுபுறம் திரும்பினான். அவன் பார்த்த ஒரு நொடி ஆதிரையின் முகம் வெளுத்து தரையை பார்த்தது.


அதற்குப் பதிலாக புன்னகை செய்த ரிதிகா, “ நீ இன்னும் மாறவே இல்லை ஆதிமா. பெரிதாக ஒன்றுமில்லை. சில மரவள்ளிக் கிழங்குகளையும் இந்த மக்காச் சோளத்தையும் வேக வைக்கப் போகிறேன். காலையில் சாப்பிடுவதற்கு” என்றாள் ரிதிகா.


“ஓ.. சரீங்க அண்ணி.. ஆனால் முதலில் இங்கு வந்த போது மிகவும் கஷ்டமாக இருந்திருக்குமில்லை” என வசதிகள் பலவந்த நவீன இடத்திலிருந்து இங்குஇருக்கும் சூழலைப் பார்த்து அதில் உள்ள பேதம் புரிபடக் கூறினாள் ஆதிரை.


“உண்மை தான் ஆதிமா. ஆனால் இயற்கையாய் இருக்கும் இந்தச் சூழல் உண்மையில் நவீன உலகில் இல்லை. அதனோடு நீ இந்திரபிரதேஷ் வந்ததில்லை அதனால் உனக்கு இவை புதிதாக தெரியும். எனக்கு இவை பார்த்து பழகியவை. ஏனென்றால் இந்திரபிரதேஷில் அதிக பட்ச நவீன வசதிகள் இல்லை ஆதிமா.” என்றாள் ரிதிகா.


“ஓ… நீங்க சொல்கிறதும் சரிதான் அண்ணி. ஒரு பிளாஸ்டிக்கையும் நான் பார்க்கவில்லை. நீங்களும் இங்கு நன்றாகப் பழகிவிட்டது போலதான் தெரிகிறது. அது சரி அண்ணீ. நீங்க இங்க எப்படி வந்தீங்க. உங்க குரலில் ஏதோ கொஞ்சம் மாற்றம் தெரிவது போல இருக்கு. அதனோடு இங்கு வருவதற்கு முன் நீங்க என்னை அழைப்பது போல ஒரு பிரமை உண்டானதே! அதற்கும் இந்தத் தீவிற்கும் ஏதேனும் சமந்தம் இருக்கா!” என்று கேட்டாள் ஆதிரை.


“ம்ம். சொல்கிறேன். முதலில் நீங்க எப்படி இந்தத் தீவிற்கு வந்தீங்க. நான் நினைத்துக் கொண்டிருப்பது போல இந்தத் தீவு நம் குடும்பத்தில் இருப்பவர்களுக்கு மட்டும்தான் தெரிகிறது போலத்தான் இருக்கிறது. இல்லையென்றால் யாரும் வர முடியாத இந்தத் தீவிற்குள் உங்க அம்மா அப்பாவை அடுத்து நாங்களும் இப்போது நீங்களும் வந்து நிற்க முடியுமா.?” என்று கோர்வையாக சொன்னாள் ரிதிகா.


“அண்ணி எனக்கு நம் குடும்பம் மட்டும் வரமுடியாமா என்று தெளிவாக தெரியவில்லை. ஆனால் நான் இங்கு வந்ததே மாயம் தான். என்னை தேடிக் கொண்டு வந்ததில் அர்ஜூன் சாரும் மாட்டிக் கொண்டார்” என்று நடந்த முழுக்கதையையும் சொல்லி முடித்தாள் ஆதிரை.


“ஓ.. இங்கும் அந்த டால்பின்தான் உதவியதா!. Flight –லிருந்து கடலில் விழுந்த என்னையும் அந்த டால்விந்தான் இந்தத் தீவிற்கு அருகில் சேர்த்தது. பின் ஒரு பெரிய அலை இந்தக் கரையில் சேர்த்துவிட்டது. கீழே விழுந்த வேகத்தில் என் தொண்டையிலும் வலது தொடையிலும் நன்றாக அடிப்பட்டுவிட்டது. நடக்கவும் முடியாமல் செய்வதும் அறியாமல் கடற்கரையில் நான் கிடந்தேன். அனாமிகாவின் நிலையும் அறியாமல் , அரவிந்த் என்ன ஆனாரேன்றும் தெரியாமல் நான் தவித்துக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு கரடி குட்டி என்னை நோக்கி வந்தது. நகரவும் முடியாமல் பசித்து களைத்தும் இருந்த என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. ஏன் தொண்டை வலியில் கத்தவும் முடியவில்லை. அவ்வளவுதான் இறந்துவிடப் போகிறோமென்று நினைத்து பயந்து கொண்டிருந்த தருணத்தில் அந்தக் கரடி என்னிடம் ஒட்டிக் கொண்டு அமர்ந்து கொண்டது. அதன் கையில் ஒரு தர்பூசணி பழமிருந்தது. அதனை அதன் கையின் நகங்களைக் கொண்டே பிளந்து பாதியை என்னிடம் கொடுத்தது. எனக்கு ஆச்சரியமாய் போனது. அதற்கு என்னை மிகவும் பிடித்துவிட்டது. 4 நாட்கள் அதன் பாதுகாப்பில்தான் நான் இருந்தேன் என்று சொல்லலாம்” என்றாள் ரிதிகா.


விழி விரித்துக் கேட்டுக் கொண்டிருந்த ஆதிரை, “ அண்ணி மிகவும் வலித்ததா? நீங்க வலி தாங்க மாட்டிங்களே” என்று ரிதிகாவின் வலியை அவள் உணர்ந்தவளாகக் குரல் தாழ்த்திக் கேட்டாள்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top