தூரம் போகாதே என் மழை மேகமே!! - 38

Advertisement

Yogiwave

Writers Team
Tamil Novel Writer



“என்ன. என் அம்மா அப்பா.. இங்கு தான் இருக்கிறார்களா!. சுனாமியில் இறந்ததாக அல்லவா அண்ணன் சொன்னார்” என்றாள் வியப்பின் உச்சத்தில் ஆதிரை. ‘என்னைப் பெற்றவர்களை நான் பார்க்க போகிறேனா!’ என்று அவள் எண்ணி முடிப்பதற்குள் ரிதிகா “இருக்கிறார்கள் இல்லை. இருந்தார்கள். Sorry ஆதி. தேவையில்லாமல் உன்ன உணர்ச்சிவசப்பட வைத்துவிட்டேன்” என வருத்தத்துடன் கூறினாள்.


ஒரு நொடியில் மலர்ந்த மின்னல் இருளில் வெளிச்சத்தை தருவதற்குப்பதில் கண்ணையே பறித்தது போல உணர்ந்தாள் ஆதிரை. இருந்த போதும் சமாளித்து , “ஓ… பரவாயில்லை அண்ணி. இறந்தவர்கள் என்று எண்ணியவர்கள்தானே! ஒரு நொடி எல்லாரையும் போல இனியாவது அப்பா அம்மாவுடன் வாழ முடியுமென்று மகிழ்ந்துவிட்டேன். என்ன செய்ய என்னுடைய மகிழ்ச்சியெல்லாம் அற்பாயுள் கொண்டதாகவே இருக்கிறது. நீங்க என்ன செய்வீங்க” என்று இலக்கற்ற வெறித்த பார்வையும் முகப்பூச்சு புன்னகையுமாகப் பேசினாள் ஆதிரை. அவளது பேச்சில் அமைதியான ரிதிகா மேலும் பேச சில நொடிகள் ஆயிற்று.


அவளது அந்தக் குரல் அர்ஜூனை என்னமோ செய்திருக்கும் போல ஒருநொடி அவளை அவன் பிடித்திருந்த பிடியின் இறுக்கம் அதிகரித்து ஆறுதல் கூறியது போல ஆதிரைக்கு உணர்த்தியது. அதில் சுய நினைவு வந்த ஆதிரை , ‘ சே என்ன இது மற்றவர் பரிதாபமாக என்னைப் பார்ப்பதே பிடிக்காத நான் தன்னிரக்கத்துடன் பேசிக் கொண்டிருக்கிறேன்’ என்று முகத்தை சிலுப்பிக் கொண்டு, “இன்னும் எவ்வளவு தூரம் போகனும் அண்ணி” என்று பேச்சை மாற்ற முயன்றாள் ஆதிரை.
“அவ்வளவுதான் ஆதி. இன்னும் அரை க்லோ மீட்டர்தான் இருக்கும் . வந்துவிட்டோம். மீதியைக் குகையில் போய் பேசிக் கொள்ளலாம். நேற்றிலிருந்து ஒழுங்காக சாப்பிட்டீங்களானு தெரியல. சோர்வாக தெரியிரீங்க ரெண்டு பேரும். கொஞ்சம் சப்பிட்டுவிட்டு , ஓய்வெடுங்க பிறகு பேசிக் கொள்ளலாம்” என்று மேலும் பேசாமல் நடந்தாள் ரிதிகா.


அர்ஜுன் ரிதிகாவின் தம்பி என்பது தெரிந்ததும் , அர்ஜூனுக்கு ராஜா அவர்கள் வீட்டுப் பிள்ளையென்று தெரிந்திருக்கும். அதனால் இனியும் ராஜாவை ஆதிரையிடம் கொடுக்க மாட்டார்கள். இறந்ததாகவே எண்ணியிருந்த தன் அக்காவையும் மாமாவையும் இனியும் அவனோ அவன் வீட்டு ஆட்களோ எங்கும் அவ்வளவு எளிதில் அனுப்ப மாட்டார்கள். ஆதிரையை யாரென்றே தெரியாதபோதோ அவதூறாகப் பேசிய அர்ஜூனின் மீது உண்டான இனம் புரியாத ஈர்ப்பு ஒரு நாள் கூட ஆயுளற்று இப்போது ஆதிரையின் உள்ளத்தில் இறக்க துடிதுடித்துக் கொண்டிருக்கிறது. ரிதிகா சொன்ன கதையிலிருந்து இந்தத் தீவிலிருந்து 25 வருடத்திற்கு முன்பு குழந்தையாக ஆதிரை இருந்த போதே அவர்கள் பெற்றோர்கள் இந்தத் தீவின் மாய வாளையிலிருந்து தப்பி இருக்கின்றனர். அதற்குக் காரணம் ஆதிரையாக இருக்கலாம் அதனால் எப்படியும் இந்தத் தீவை விட்டுச் சென்றுவிட ஏதேனும் வழி கிடைத்துவிடும். இப்படி இருக்கும் தருணத்தில் ஆதிரை யாருமற்ற அநாதையாகத்தானே போகிறாள் என்ற எண்ணம் அவளுக்கு மேலோங்கி இருந்தது. அந்தத் தருணத்தில் அவள் அம்மா அப்பாவை ரிதிகா கண்டென் என்றது தேவையற்ற உயிர்த் துடிப்பை ஆதிரையிடம் உண்டாக்கி உடனே இறக்கவும் செய்துவிட்டது.


எவ்வளவு முயன்ற போதும் ஆதிரையின் மனச் சோர்வு மறைக்க முடியாமல் விழிகளில் வழிந்தது. அதுவும் ஆதிரையை நங்கு புரிந்து கொண்டிருந்த அர்ஜூனுக்கு பக்கவாட்டில் ஆதிரையின் விழிகள் தீவிர யோசனையுடன் நடனம் ஆடிக் கொண்டிருந்ததும் அவளது நெற்றி பொட்டு முடிச்சும் பார்க்காமலே புரிந்து கொள்ள முடிந்தது.


ஏனோ ஆதிரையின் தவிப்பு அவள் இதயத் துடிப்பு யோசித்துக் கொண்டிருந்ததோ என்னமோ, அவள் இதயத்தோடு முத்துக்குப்புறமாக ஒட்டினார் போல இருந்த அர்ஜூனின் இதயம் உணர்ந்து கொண்டது. அதன் வெளிப்பாடாக, “அக்கா.. நாம் ஊர் சென்றாலும் ராஜா ஆதிரையுடனே இருக்கட்டும். அவனும் இவள் இல்லாமல் 2 மணி நேரம் கூட தொடர்ந்து இருக்க மாட்டான். அம்மா அம்மா என்று இவள் முந்தானையே, இல்லை இல்லை. ஆதிரை சேலை அணிந்து நான் பார்த்ததில்லை. அவள் துப்பட்டாவையே பிடித்துக் கொண்டு சுற்றிக் கொண்டிருக்கிறான். அவன் ஓரளவு விவரம் வரும்வரை ஆதிரையுடனே இருக்கட்டும். சரியா அக்கா” என்றான் அர்ஜூன்.


ஆதிரையின் பெற்றோரை நினைத்துத்தான் ஆதிரை கலங்குகிறாள் என்று எண்ணிக் கொண்டிருந்த ரிதிகாவிற்கு அர்ஜூன் என்ன பேசினான் என்று புரிய சில நொடிகள் ஆகியது ,“என்ன!!” என்றவள் பின் அர்ஜூனின் கண்ணசைவில் சூழ்நிலையை புரிந்து கொண்டு தொடர்ந்து , “என்ன சொல்ற அர்ஜூன். நாங்க எல்லாருமே ஆதிரையுடன்தானே இருக்கப் போகிறோம். சொல்லப் போனால் ஆதிரை திருமணமாகி வேறொருவர் வீடு செல்லும்வரை இனி ஒரு நொடிகூட அவளைப் பிரியும் எண்ணம் எனக்கு இல்லை. இவள் அண்ணனுக்கு எப்படியோ. எனக்குக் கிடைத்த ஆத்மார்தமான் ஒரே தோழி இவள்தான். நீ என்னடானா இவளையும் ராஜாவையும் திரும்பவும் தனித்துவிடுவது போல சொல்கிறாய்” என்று பொய்யான கோபத்தை வெளியிட்டாள் ரிதிகா.


ரிதிகாவின் வார்த்தைகளிலும் அர்ஜூனின் சார்பான பேச்சிலும் , இருள் படிந்திருந்த முகம் ஒருநொடியில் சூரியனைப் பார்த்த சூரியகாந்திப் பூ போல மலர்ந்தது.


அதனை உணர்ந்த அர்ஜூனுக்கு சுகமாகவும் , ரிதிகாவிற்கு ஆதிரையின் மனம் புரியவும் செய்துவிட்டது. “அது சரி… அப்போ நான் மட்டும் என் அக்காவைவிட்டுப் பிரிந்து இருக்க வேண்டுமா! இது அநியாயம் இல்லை. ஆதிரை… நீயே சொல். இது சரியில்லைதானே” என்று ஆதிரையைப் பேச்சுக்கு இழுத்தான் அர்ஜூன்.


அவர்கள் பேசிக் கொண்டதை கேட்டதில் ஏற்பட்ட மகிழ்ச்சியில் திக்குமுக்காடிக் கொண்டிருந்த ஆதிரைக்கு என்ன பேசுவது என்றே தெரியவில்லை, “ஆ… என்ன!!” என்று உலரிக் கொண்டிருந்தாள். தனிமையென்னும் பேய் தன் எதிர்காலத்தில் இருப்பதை எண்ணி பயந்து கொண்டிருந்த ஆதிரைக்கு மனம் லேசானது போல இருந்தது


ரிதிகாவிற்கும் அர்ஜூனிற்கும் இதனால் மன நிம்மதி ஏற்பட்டது. இருந்தும் தொடர்ந்து ரிதிகா, “ அவளை ஏன்டா தம்பிக் கேட்கிற. நான் சொல்கிறேன் கேள். நான் உன்னுடன் வர வேண்டுமென்றால் என் ஆதிரையும் என்னுடன் வர வேண்டும். அது லண்டனாக இருந்தாலும் சரி. இந்திரபிரதேஷாக இருந்தாலும் சரி. இதுதான் என் முடிவு. இவள் அண்ணன்தான் எப்போ பார்த்தாலும் அதை ஆராய்ச்சி செய்கிறேன், இதைச் சோதிக்கிறேனென்று என்னை சோதித்துக் கொண்டிருக்கிறார். ஆதிரையில்லாமல் நான் தனிமையின் பேய் பிடித்துக் கொண்டு தவித்துக் கொண்டிருந்தேன். இனி ஒரு நொடி கூட முடியாது.” என்று நீண்ட நெடிய பேச்சடுத்துக் கொண்டு சொல்லி முடித்தாள்.


“இது நல்ல யோசனை. ஆமாம் ஆதிரையும் எனக்கு வாக்கு கொடுத்திருக்கிறாள் இந்தத் தீவை விட்டுத் தப்பினால் சிம்லாவிற்கு மருத்துவச்சியாக வருவதாக. அதனால் அவள் முடியாது சொல்ல வாய்ப்பே இல்லை. அதனால் இங்கிருந்து தப்பினோமென்றால் எல்லோருமாக இந்திரபிரதேஷில்தான் இருக்கப் போகிறோம். இதில் மாற்றுக் கருத்து கூற யாருக்கும் வாய்ப்பில்லை” என்று கோர்வையாக பேசிக் கொண்டே போனான்.


“அட என்னடா, டாக்டர்னு சொல்லாம மருத்துவச்சினு சொல்லிட்டு இருக்க. அவ படிச்சபுள்ளடா தம்பி” என்றாள் ரிதிகா.


“அப்படியா என்ன.? நா ஏதோ மூலிகை மருந்து கொடுத்து காப்பாற்றும் மூலிகை மூதாட்டினு நினைத்துவிட்டேனே” என்று ஆதிரையை ஒரு நொடி மூதாட்டி போல யோசித்து நடுங்கிய கைகளில் அவளிடம் மருந்து கொடுப்பது போலக் கற்பனை செய்து பார்த்துவிட்டு அர்ஜூன் சிரித்துவிட்டான்.


அவன்தான் அப்படியென்றால் ரிதிகாவுக்கும் ஆதிரைக்கும் கூட சிரிப்பு வந்துவிட்டது. இருந்த போது ஆதிரையின் வீம்பு பேச்சு அவளை அமைதியாக இருக்க விடாமல் ,”என்ன மூதாட்டியா! இன்னும் 25 வயது கூட முடியாத கன்னி பெண்ணாக்கும் நான். நீங்கதான் கிழவன். என்னைத் தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு வரும் 100 வயது கிழவன்” என்று பேசிவிட்டு மறைக்க முடியாமல் வாய்விட்டுச் சிரித்துவிட்டாள்.


“என்னையாக கிழவன் எங்கிறாய் உன்னை . இப்போ பார்” என்று அவளைச் சுமந்த வண்ணம் வேகமாக ஓடினான் அர்ஜூன்.
“டே தம்பி ஓடாதேடா நம் குகை வந்துவிட்டது” என்று சொல்லிய ரிதிகா ஒரு நொடியில் முகம் மாறியது , “ஏய் அர்ஜூன். விளையாட்டு போதும் சீக்கிரமாக என்னுடன் வா நாம் வேகமாகக் குகைக்குள் சென்றுவிட வேண்டும்.” என்று அர்ஜூனின் கையினை ஒரு கையில் பிடித்துக் கொண்டும் , நிரம்பி நின்ற தன் வயிற்றில் ஒரு கையினையும் வைத்துக் கொண்டு முடிந்த அளவு வேகமாக நடந்தாள்.


“என்னாச்சுக்கா! ஏன் தீடிரென்று இப்படி பதட்ட படுகிறாய். “ என்று கேட்ட போதும் அர்ஜூன் நின்றான் இல்லை. ஆதிரைக்கும் ஒன்றும் புரியவில்லை.


“அமதியாக எதுவும் பேசாமல் என்னுடன் வா.” என்றாள் ரிதிகா குரலில் கடுமை பரப்பி.


ஆனால் ஏதோ சூழலில் திடீர் மாற்றத்தை உணர்ந்தாள் ஆதிரை. ‘ ஆ…அந்த குளிர்ந்த காற்று. ‘ என்று அர்ஜூனின் முதுகில் இருந்த வாரே பின்னாடி திரும்பிப் பார்த்தாள். ஆமாம் அங்கு அந்த மழை மேகம் அவர்களை நோக்கித் தான் வந்து கொண்டிருக்கிறது. ‘இதே தீவிலிருக்கும் அண்ணிக்கு இந்த மழை மேகத்தைப் பார்த்தால் என்னைப் போல பயமும் பதட்டமும் ஏற்படுகிறதே!’ ஒரு நொடி ஆதிரை நினைத்தாள்.


முன் போல அல்லாமல் இப்போது ஆதிரை அந்த மழையில் நனையாமல் தப்பிவிட்டாள். அவர்கள் குகைக்குள் நுழைந்துவிட்டனர்.


“என்ன அக்கா.” மீண்டும் கேட்டான் அர்ஜூன்.


“அது … அந்த மழை அர்ஜூன். அது மாய மழை. அது நம் வசம் இழக்கச் செய்யும். பாசமுள்ளவர்களை எதிர்களாக்கவும் , எதிரிகளை நண்பர்களாகவும் சித்தரிக்கும் சக்தியுடையது. இந்தத் தீவை விட்டு எப்போ வேண்டுமென்றாலும் எங்கு வேண்டுமென்றாலும் செல்ல முடியக் கூடிய ஒரே பொருள் அதுதான். சில பல கனவுகளைத் தோற்றுவித்து, அது உண்மை போல நம் ஆழ் மனதை நம்ப வைக்கும் சக்தி உடையது.அதிலிருந்து மீளவே எனக்கு 6 மாதம் ஆனது. எனக்கும் அரவிந்துக்கும் நல்ல சண்டை அந்த மேகத்தால். ஒருமுறை அந்த மேகத்தின் மாயத்திலிருந்து மீண்டு விட்டாள் அது நம்மை நெருங்காது. ஒன்றரை வருடத்திற்குப் பின் அதனை இப்போதுதான் பார்க்கிறேன். அது அனேகமாக உன்னையோ அல்ல ஆதிரையையோ தேடிக் கொண்டு வந்திருப்பதாகத் தோன்றியது. அது தேவையில்லாத பிரட்சனைகளை உண்டாக்கக் கூடுமென்றுதான் உங்களை இழுத்துக் கொண்டு வந்தேன்.” நீண்ட நெடிய மூச்சுகளுடன் கூறி முடித்தாள்.


ஆதிரையைக் கீழே இருந்த கோரைபுல் பாயில் அமரவைத்துக் கொண்டே கேட்டுக் கொண்டிருந்த அர்ஜூனுக்கு தெளிவாக தெரிந்தது அந்த மழை ஆதிரையை தேடிக் கொண்டுதான் வந்திருக்க வேண்டுமென்று, இருந்த போதும் ஏற்கனவே பயந்து போயிருக்கும் ரிதிகாவிடம் ஆதிரை ஏற்கனவே அந்த மழையில் நனைந்திருக்கிறாள் என்று சொல்லாமல் மறைத்தான் அர்ஜூன். ஆதிரைக்கும் ஏனோ அதனைச் சொல்லும் எண்ணம் தோன்றவில்லை.


“சரி… அக்கா. இனி நாங்க எச்சரிக்கையாக இருக்கிறோம்.” என்றான் அர்ஜூன்.


அவனைத் தொடர்ந்து “ஆ… ஆமாம் அண்ணி.. நாங்க விழிப்போடு இருக்கோம்” என்றாள் ஆதிரை.


‘ஏனோ அந்த மழை மேகத்தை விட்டு தூரம் போவதைப் போல நினைக்கும் போதே ஏதோ போல் இருந்தது ஆதிரைக்கு. அது அருகில் வந்தாலும் பயமும் படபடப்பும் தூரமாக நினைத்தாலோ ஏதோ இழப்பது போன்ற உணர்வு’ என்று பெருமூச்சுவிட்டாள் ஆதிரை.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top