உனக்காக துடிக்கும் என் இதயம்-1

Kavitasuman

Writers Team
Tamil Novel Writer
#1
பருத்தியூரின் எல்லையில் நுழைந்தது அந்த வெள்ளை நிற மாருதி கார்.அதில் முன் சீட்டில் அமர்ந்திருந்தார் ராமலிங்கம்.நான்கு நாட்களாக வெளியூரில் இருந்து விட்டு அன்று தான் ஊர் திரும்பியிருந்தார்.வீடு நெருங்க நெருங்க அவரின் மனதில் சிறு நெருடல்.அவர் குடும்பத்தை பற்றி அவர் நன்கு அறிந்தவர் தான்.குடும்பத்தவர் அனைவருக்கும் அவர் சொல் வேத வாக்கு.ஆனால் அன்று அவர் சொல்ல போகும் விஷயம் வேறு விதமானது.உட்கார்ந்தவாறே தலையை சிறிதே திருப்பி பின் சீட்டில் அமர்ந்திருந்த இருவரையும் பார்த்தார்.

கலங்கிய விழிகளை புடவை தலைப்பால் துடைத்துக் கொண்டிருந்தாள் அந்த பெண்.அவளின் இன்னொரு கையோ ஐந்து வயது மதிக்கத்தக்க சிறு மலரை இறுக பற்றியிருந்தது.

அவர்களை கண்டு அவரின் உள்ளம் வருந்தியது.இந்த சிறு வயதில் அவள் வாழ்வு கருகியதை எண்ணி நெடுமூச்செறுந்தார் அவர்.

ராமலிங்கத்தின் தாயின் பிறந்த வீடு சிறுநாகரூர்.அங்கே ஆண்டுதோறும் நடைபெறும் ஊர் திருவிழாவிற்கு அவர் தவறாமல் செல்வது வழக்கம்.அப்படியே அந்த வருடமும் நான்கு நாட்களுக்கு முன்பே அங்கே சென்றிருந்தார்.அங்கே அவரின் தாய்மாமன் ரத்னவேலுவின் வீட்டில் தங்கினார்.

எப்போதுமே அங்கே வரும்போதெல்லாம் சிறு வயதில் தாயோடு வந்து மகிழ்ந்த நாட்களை எண்ணி மனம் பூரிப்பார் அவர்.மாமன் வீட்டில் எப்போதும் போல எல்லாமே நன்றாக இருந்தது ஒன்றைத் தவிர.

மாமன் வீட்டில் விருந்து எப்போதுமே தடபுடலாக இருக்கும்.ஆனால் அந்த ஆண்டு உண்ட உணவு தேவாமிர்தமாக இருந்தது.ராமலிங்கத்திற்கு எப்போதுமே வெளி உணவு பிடிப்பதில்லை.அவர் மனைவி முத்துலட்சுமியும் மருமகள் மங்கையர்க்கரசியும் செய்வதை தவிர வேறு எதிவும் அவருக்கு பிடிக்காது.தவிர்க்க முடியாத சூழ்நிலை இருந்தால் மட்டுமே.இல்லையென்றால் வீட்டிற்கே வந்து விடுவார்.

ஆனால் அன்று மாமன் வீட்டில் உண்டதோ அவர் மனைவி மருமகள் தான் அங்கே வந்து சமைத்தனரோ என அவருக்கு சந்தேகத்தை உண்டாக்கி விட்டது.இருக்காது............ஏனென்றால் ஒரு மாதம் முன்பு தான் தன் மூன்றாவது மகன் விஸ்வாவை பெற்றெடுத்திருந்தாள் மங்கையர்க்கரசி.பிள்ளை பெற்ற மருமகளை தன் கண்ணுக்குள் வைத்து பார்த்துக் கொண்டிருந்தார் முத்துலட்சுமி.அதனால் இது கண்டிப்பாக இது வேறு யாரோ செய்தது தான் என தன் மாமனிடம் விசாரித்தார்.

"மாமா!இது என்ன சாப்பாடு ஏ கிளாஸா இருக்கே....யாரு செஞ்சது?"

"அது புதுசா ஒரு பொண்ண சமையலுக்கு வெச்சிருக்கோம்...அது பரவாயில்லைன்னு செய்யுது"என்றார் அலட்சியமாக.

தன் மாமன் வேலை வாங்குவதில் எவ்வளவு தாராளியோ அவ்வளவு நல்லதை புகழ்வதில் கஞ்ச மகா பிரபு என்று நன்கு உணர்ந்திருந்த ராமலிங்கம் மேலே எதுவும் கேட்காமல் மவுனமானார்.

அந்த மூன்று நாட்களும் திருப்தியாக உணவுண்ட ராமலிங்கம் நான்காம் நாள் காலை முகம் கழுவதற்காக புழக்கடைப்பக்கம் சென்றார்.அங்கே அவர் கண்ட காட்சி அவர் நெஞ்சை பிழிந்தது.

அந்த பெண் குழந்தைக்கு ஐந்து வயது இருக்கலாம்.தன் சின்னஞ்சிறு கைகளால் துடைப்பத்தை தூக்க முடியாமல் தூக்கி அங்கே பெருக்க முயன்றுக் கொண்டிருந்தது.பக்கத்தில் அவர் தாய் மாமனின் மருமகள் அந்த குழந்தையை சரியாக செய்யுமாறு விரட்டிக் கொண்டிருந்தாள்.அந்த சமயத்தில் ஒரு பெண் வேகமாக அவர்கள் அருகில் ஓடி வந்தாள்.

"சின்னம்மா!அது குழந்தைங்க அது எதுக்குங்க எது பண்ணனும்னாலும் எங்கிட்ட சொல்லுங்க...நா பண்றேன்."என்றாள் கெஞ்சும் குரலில்.

"என்ன அதுக்கு வேலை சொல்லக் கூடாதா?உன்னோட சேர்த்து அதுக்கும் தான் மூணு வேளை சோறு போட்றோம்......திங்கற சோத்துக்கு சரியா வேலை செய்ய வேண்டாமா?"

"அப்படி இல்லைங்கம்மா...அது இன்னும் பச்சை பிள்ள.....அதான்.... நீங்க என்ன செய்யனும்னு சொல்லுங்க...நா செய்றேன்...அது வேண்டாங்க"

அவள் பேச்சைக் கேட்டு தாங்க முடியாத கோபத்தில் அந்த பெண்ணின் கன்னத்தில் பளார்.....என அடித்தாள் பெரிய வீட்டு மருமகள்.

"ஏன்டி....நிக்க நெழல் இல்ல...கஞ்சிக்கு வழியில்லாத அனாதை நாயி.....எனக்கே சொல்றியா!ம்.....இனிமே உனக்கு இங்க வேலை இல்ல...முதல்ல இந்த சனியனையும் கூட்டிக்கிட்டு எடத்த காலி பண்ணு"

அவள் காலில் விழுந்த அந்த பெண்,

"அம்மா! அப்படி சொல்லாதீங்க....அம்மா... நீங்க வெளிலே போகச் சொன்னா இந்த குழந்தையை கூட்டிக்கிட்டு நா எங்க போவேன்...தயவுசெஞ்சு மன்னிச்சிடுங்க...."

"உன் மன்னிப்பு தேவையில்லை...மொத்தல்ல போ வெளியே!"

இந்த சத்தத்தை கேட்டு ரத்னவேலு அவர் மகன் இருவரும் அங்கே வந்தனர்.

"என்னம்மா மருமவளே என்ன பிரச்சினை....?"

"பாருங்க மாமா இவள வேலை செய்ய சொன்னா என்னையே எதுத்து பேசறா... இந்த மாறி இருக்கறதுங்க நமக்கு தேவையல்ல....மொதல்ல இதுகள வீட்டை விட்டு வெரட்டுங்க"

"என்னம்மா வைதேகி!பாவம் புருஷன் செத்தவ...வேற நாதி இல்லேன்னு கூட்டிட்டு வந்து வேலைக் கொடுத்தா...இப்படியா பண்றது....கட்டு மூட்டைய போ வெளியே..."என்றார் கருணையில்லாமல்.

"ஐயோ அய்யா! அப்படியெல்லாம் சொல்லாதீங்க....நீங்களே போக சொன்னா நா இந்த பச்ச பிள்ளைய கூட்டிக்கிட்டு எங்க போவேன்... தயவுசெஞ்சு மன்னிச்சிடுங்க... அய்யா.... இனிமே இப்படி ஆகாது..."என்று கதறினாள் அந்த பெண்.

"அதெல்லாம் சொன்னா சொன்னதுதான்....போ...போ....எங்கயாவது போ.... உடனே இடத்த காலி பண்ணு"என கத்தினார் ரத்னவேலு.

அந்த பெண் அழுதபடி உள்ளே சென்று ஒரு சிறு மூட்டையோடு தன் மகளையும் அழைத்துக் கொண்டு வெளியேறினாள்.

இது அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த ராமலிங்கத்திற்கு அந்த இரக்கமற்ற பாவிகள் வீட்டில் இனியும் இருக்க கூடாது என தன் காரில் உடனே புறப்பட்டு விட்டார்.வழியெங்கும் அவர் மனத்தில் அந்த தாயும் மகளுமே நிறைந்திருந்தனர்.

இலக்கில்லாமல் வெளியே பார்த்தபடி அவர் இருந்த போது வயலின் மத்தியில் இருந்த கிணற்றில் ஒரு உருவம் ஏறுவதைப் பார்த்தவர் பதறிக் கொண்டு காரிலிருந்து இறங்கி ஓடினார்.

அருகில் போகும் போதே அது அவரின் மாமன் வீட்டாரால் விரட்டி அடிக்கப்பட்ட பெண்ணும் அவளின் மகளுமே என்பதை கண்டார்.அவள் கிணற்றில் குதிக்கும் முன் அவள் கையைப் பற்றி இந்த புறம் இழுத்தார்.

மனத்தை திடப்படுத்திக் கொண்டு கிணற்றில் விழ இருந்த அந்த பெண் யாரோ தன்னை இழுத்து இறக்கியதும் திடுக்கிட்டு அந்த நபரை நிமிர்ந்துப் பார்த்தாள்.அதில் அதிர்ந்து அழுத குழந்தையை ராமலிங்கம் தன் கைகளில் தூக்கிக் கொண்டார்.அவர் அதன் முதுகை மென்மையாகத் தட்டிக் கொடுக்கவும் அதுவும் பயம் தெளிந்து அழுகையை நிறுத்தியது.அந்த பெண் தன் வாய்யை பொத்திக் கொண்டு குலுங்கி அழுதாள்.

"ஏம்மா இப்படியா பண்றது?தற்கொலை தப்பான விஷயம்... கடவுள் கொடுத்த இந்த உயிரை விடுறத்துக்கு யாருக்கும் உரிமையில்லை..இந்த உலகத்துலயே விலைமதிப்பில்லாதது இந்த மனுச உசிருதான்...நீ சாக போனதே தப்பு அதுல இந்த பிஞ்சு குழந்தையும் சாகடிக்க பாத்தியே...அது மகா பாவம்...நா மட்டும் அந்த நேரத்துல இந்த பக்கம் வராம இருந்திருந்தா என்ன ஆகிருக்கும்"என்று படபடத்தார் அவர்.

"என்ன ஆகிருக்கும்.... இந்த உலகத்து கஷ்டத்துலேந்து எனக்கும் என் மகளுக்கும் விடுதலை கெடைச்சிருக்கும்....நிம்மதியா உயிரை விட்டுருப்போம்"

"அப்படி சொல்லாதேம்மா..... எந்த கஷ்டத்துக்கும் தற்கொலை தீர்வாகாது...எது வந்தாலும் எதுத்து நிக்கனும்....அத விட்டு சாக நெனைக்கறது கோழைத்தனம்.... உன் கஷ்டம் எதுவா இருந்தாலும் என்கிட்ட சொல்லும்மா...நா உனக்கு உதவறேன்"

"அய்யா இதுவரைக்கும் யாரும் என் கஷ்டத்த கேட்டு உதவி செஞ்சதில்ல நீங்க தான் முதன்முதலா கேக்கறீங்க....."என்றவள் அவள் தன் கதையைக் கூறத் தொடங்கினாள்.

வைதேகி பெற்றோருக்கு ஒரே பெண்.அவள் பத்து வயதான போது அவள் அன்னை இறந்து விட்டார்.அதன் பின் அவள் தந்தை அவளை கண்ணுக்குள் வைத்து வளர்த்தார்.வைதேகிக்கு பதினெட்டு வயதான போது பக்கத்து ஊரில் இருந்த ராமையனுக்கு அவன் மொடா குடிகாரன் என்பதை அறியாமல் மகளைத் திருமணம் செய்துக் கொடுத்தார்.குடிகாரனான ராமைய்யா வைதேகியை அடித்து உதைத்து துன்புறுத்தினான்.மாப்பிள்ளையைப் பற்றி அறியாமல் தன் ஆசை மகளை கொடுத்து விட்டோமே என்ற வருத்தத்தில் அவள் தந்தை சில நாட்களிலேயே தன் மனைவியை பின்பற்றி விட்டார்.

ஒரு தினம் அதிகமாக குடித்துவிட்டு ரோட்டில் நடந்து வந்த ராமையாவின் மேல் கார் ஏறிவிட்டதால் அவனும் அந்த இடத்திலேயே உயிரிழந்தான்.

திக்கற்று போன வைதேகியை அந்த ஊர் பெரிய மனிதரான ரத்னவேலு தன் வீட்டிற்கு வேலை செய்ய அழைத்து போனார்.அங்கும் விதி அவளை விடவில்லை.வைதேகியை முதலிலிருந்தே வெறுத்த அவரின் மருமகள் கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு அவளை வெளியே போகுமாறு செய்துவிட்டாள்.திக்கற்ற வைதேகிக்கு தற்கொலை ஒன்றே அப்போது சரியாகத் தோன்றியது.தன் வாழ்வை சுருக்கமாக கூறியவள்,

"இப்ப சொல்லுங்க அய்யா... யாருமில்லாத அனாதையான நாங்க எதுக்கு வாழனும்?யாருக்காக வாழனும்?"

"அம்மா நீ யாருக்காக வாழலைனாலும்
இந்த குழந்தைக்காக நீ வாழத்தான் வேணும்...இனிமே உனக்கு எந்த கஷ்டமும் வராது...நீ என்னோட எங்க வீட்டுக்கு வந்து இரு....அங்கே என் மனைவி மகன் மருமகள் பேர பிள்ளைங்க எல்லாரும் இருக்காங்க...நீ அங்கே நிம்மதியா வாழலாம்....இந்த குழந்தையும் என் பேத்தியா நானே வளக்கறேன்...என்னமா யோசிக்கறே... சரின்னு சொல்லு..."

சிறிது யோசித்த வைதேகி கடைசியில் சரியென தலையாட்டினாள்.

அப்படித்தான் வைதேகியும் அவள் மகளும் அவரோடு அவரின் வீட்டை நோக்கி சென்றுக் கொண்டிருந்தனர்.

சிறிது நேரத்தில் சுற்றிலும் பரந்து விரிந்த தோட்டத்தின் மத்தியிலிருந்த பிரமாண்டமான வீட்டின் முன் கார் சென்று நின்றது.

அவளை முன் கட்டிலிருந்த சேரில் அமர்த்தியவர் உள்ளே சென்று தன் மனையாளிடம் நடந்த அனைத்தையும் விவரமாக சொன்னார்.அவர் கூறியதை பொறுமையாக கேட்ட அவர் அவரோடு வேகமாக முன் கட்டிற்கு வந்தார்.அங்கே வைதேகியையும் அவள் தோளில் சோர்ந்து போய் படுத்திருந்த குழந்தையும் கண்ட அவர் அவளருகில் சென்று அவள் தலையை மென்மையாகத் தடவினார்.

பெற்றோர் இருவரும் சென்ற பின் பாசமென்பதையே அறியாது இருந்த வைதேகிக்கு அவரின் மென்மையான கரங்கள் தன் மேல் பட்டவுடன் மடைத் திறந்தது போல் கண்கள் கண்ணீரை பொழிந்தது.அவள் அழுவதைக் கண்டு அவளின் தோளை அணைத்தவர்

"சே சே அழக் கூடாது கண்ணம்மா...இங்கே வந்திட்டே இல்ல... இனிமே உனக்கு ஒரு கஷ்டமும் இல்ல...இத உன் பொறந்த வீடுன்னு நெனைச்சுக்க...சரியா....வா உள்ளே....பேத்தி பொண்ண எங்கிட்ட கொடு.....பெண் குழந்தையே இல்லாத இந்த வீட்டுல இந்த குழந்தை துள்ளி விளையாடட்டும்"

என்றபடி குழந்தையை தன் கைகளில் ஏந்தியவர்,

"குழந்தை பேரு என்னம்மா?"என்றார்.

"பூங்குழலி அம்மா!"

"ஆங்....குழலி.... பூங்குழலி.....அம்சமான பேரு...வாம்மா உள்ளே"
என்று அவர்களை உள்ளே அழைத்துச் சென்றார்.

அவர் குடும்பத்தாரிடம் சென்று வைதேகியைப் பற்றி கூறியது தான் தாமதம் வீட்டிலிருந்த அனைவரும் உடனே அவளை தங்களுள் ஒருத்தியாக ஏற்றுக் கொண்டு விட்டனர்.

சுந்தரேசனுக்கு அவள் தங்கையானாள்.வைதேகி என அன்போடு அழைத்தார் மங்கையர்க்கரசி.பிள்ளைகள் இருவரும் அத்தை என்ற அந்தஸ்தை கொடுத்துவிட்டனர்.

பூங்குழலியோ அந்த வீட்டின் செல்லக் குழந்தையானாள்.பாட்டி, தாத்தா, மாமா, அத்தை, மணி, சிவா,விசு என அனைவருடனும் ஒன்றிப் போனாள் அவள்.
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement