Advertisement

உன் நினைவு – 8

வார்த்தைகளை விரயமாக்கி

உன் கண்ணீரை பெற்றுகொண்டேன்..

இனி நான் என்ன செய்வேன் ??

வீட்டில் நடக்கும் நிகழ்வுகள்.. வசுமதி மனதில் என்ன இருக்கிறது.. தன் அத்தை வீட்டில் என்ன எண்ணத்தில் இருக்கிறார்கள் என்றே மனதினுள் யோசனை ஓடியது கதிரவனுக்கு.. அரிசி ஆலைக்கு சென்று அமர்ந்து விட்டான்.. அங்கு வேலை பார்க்கும் ஆட்கள் எல்லாம் பின் பக்கம் இருக்கும் ஒரு அறையில் உண்டு கொண்டு இருந்தனர்.. கதிரவனுக்கு மனதில் இருந்தா குழப்பமே அவனை அசதியுற செய்தது..

காதலை உணர்ந்தவனுக்கு அதை எப்படி மேற்கொண்டு செயல் படுத்துவது என்று தெரியவில்லை.. கண்களை மூடி சிறிது நேரம் தன் இருக்கையில் சாய்ந்து அமர்ந்து இருந்தான்.. ” ஆண்டவா மேற்கொண்டு நான் என்ன செய்யவேண்டும் ஒரு நல்ல வழியை காட்டப்பா” என்று மலை கோவில் சிவனை வேண்டிக்கொண்டான்.  அந்நேரம் யாரோ பின் பக்க அறையில் பேசும் சத்தம் கேட்டது..

“ யாராக இருக்கும் இந்நேரத்தில் அனைவரும் உண்ண சென்றுவிட்டார்களே”  என்று சற்று கவனித்தான்,, அந்த குரல்கள் இப்பொழுது நன்றாக கேட்டது.. மிகவும் பரிச்சியமான குராலாக இருந்தது.. மெல்ல எழுந்து சென்று அறையின் பக்கவாட்டு சுவரில் சாய்ந்து நின்றான்.. அந்த குரல்களுக்கு சொந்தம் வேறு யாரும் இல்லை அங்கு வேலை பார்க்கும் மாயனும் குமாரும் தான்..

 “ இந்த நேரத்தில் இவர்கள் இருவரும் என்ன செய்கிறார்கள் இவர்களை நான் லாரி சுத்தம் செய்ய அல்லவா சொல்லி இருந்தேன்..” அவன் மனதிற்கு எதோ தவறு நடக்கிறது என்று தோன்றியது…  என்ன செய்கிறார்கள் இவர்கள் என்று அவர்கள் பேசுவதை உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்தான்..

“ டேய் குமாரு நைட்டு தான் லோடு போகும் எறநூறு கிலோ அரிசி போகுது.  எடை எல்லாம் போட்டு அடுக்கி வச்சாச்சு ஒவ்வொரு மூடையில இருந்து ஒரு கிலோ அரிசி எடுத்தா யாருக்கும் சந்தேகம் வராது “ என்று கூறி கொண்டு இருந்தான்….

இதை கேட்டதும் கதிரவனுக்கு கோவம் தலைக்கு ஏறியது. ஏற்கனவே அவன் மனதில் இருந்த குழப்பமும் உடலில் இருந்த அசதியும் அவனை மேலும் கோவக்காரன் ஆக்கியது.. “ பொறுமை, மனமே நில்.. மேற்கொண்டு என்ன பேசுகிறார்கள் என்று கவனி” என்று எண்ணி நினைத்துகொண்டு நின்றான்..

“ சரிங்க மாயண்ணே அந்த கதிரவன் வரதுக்குள்ள நாம்ம இந்த வேலைய முடிக்கணும்.. அவன் கண்ணுல மாட்டுனா அவ்வளோ தான் உப்புகண்டம் போட்டுவான் “ என்றான் குமாரு…

“ அட போடா குமாரு இப்பல்லாம் அவன் ஒரு மாதிரியா தான் திரியுறான்.. இந்த ஒரு வாரம் அவன் ஆளே சரியில்ல. அவன் வீட்டில் புதுசா ஒருத்தி வந்து இருக்கால எல்லாம் அவ வேலையா தான் இருக்கும்.. அதும் இல்லாம இது அனாதை ஆசிரமத்துக்கு போற லோடு.. கால்வாசி விலைக்கு தான் போகும் அதனால அங்கயும்  யாரும் நிறுத்து பாக்க மாட்டாங்க.. “  

“ அப்படியா அண்ணே எனக்கு இதெல்லாம் தெரியாதே “ என்றான் குமாரு..

“ சரி அதெல்லாம் விடு முதல்ல வேலைய பாரு”  என்று எதோ செய்ய போனார்கள்.. மதியை பற்றி அவர்கள் அப்படி பேசியதும் அவ்வளோதான் தான் காத்து வந்த பொறுமையை கலட்டிவைத்தான். என்ன செய்கிறீர்கள் இருவரும் என்று ஒரு கர்ஜனை ஒலி வந்தது.. மற்ற இருவரும் வெலவெலத்து போயி திரும்பி நின்றனர்.. இவன் இந்த நேரத்தில் இங்கு என்ன வந்தான்..

உடனே சுதாரித்து கொண்ட மாயன்.. “ ஹி ஹி கதிரு தம்பி என்ன இந்த நேரத்துல இங்க இன்னும் சாப்பிட போகலையா??  என்று வினவினான்..

“ நான் சாப்பிட போவது எல்லாம் இருக்கட்டும்..நீங்கள் இருவரும் என்ன செய்கிறீர்கள் “

“ அதுவா அது ராத்திரி லோடு போகுதுல அதான் மூடை எல்லாம் சரியா இருக்கான்னு எண்ணி வைக்க வந்தோம்” என்றான் குமாரு.. முழு புசணிக்காயை சோற்றில் மறைக்கும் கதையாக..

“ ஓஹோ !! சரி பார்க்க வந்தீர்களா ?? சரி சரி ஏன் மாயன் ஒரு ஒரு மூடையில் இருந்து  ஒருகிலோ அரிசி எடுத்தால் வெளியே சந்தேகம் வராதாமே”  என்று நக்கலாக கேட்டான் கதிரவன்.. எல்லாவற்றையும் கேட்டு விட்டுதான் வந்து இருக்கிறான்.. போச்சு சர்வ நாசம் என்று எண்ணிய குமாரு வேகமாக சென்று கதிரவனின்  காலை பிடித்து கொண்டான்..

“ அண்ணே அண்ணே நா வேணானுதா சொன்னேன் ஆனா இவரு தான் கேட்கல.. வெளிய தெரியாது டா உனக்கு ரெண்டாயிரம் தரேன்னு கூட்டிட்டு வந்தாரு.. என்னை மன்னுச்சிடுங்க அண்ணே வேலை இல்லன்னு மட்டும் சொல்லிடாதீங்க “ என்று கதற ஆரம்பித்து விட்டான்.. இதை மாயன் சற்றும் எதிர் பார்கவில்லை..

இருவரும் அவன் முன் கை கட்டி நின்றார்கள்.. “ எத்தனை நாட்களாக நடக்கிறது இது”  அவன் குரலே அவர்களுக்கு உணர்த்தியது.. சரி கதிரவன் ஏதோ ஒரு முடிவு எடுத்துவிட்டான்..

“ இல்லை தம்பி இந்த தடவதான் “

“ ச்சே வாயை மூடுங்கள்.. நம்பிக்கை துரோகம்.. பேசுவதற்கு உங்கள் இருவருக்கும் அருகதை இல்லை.. சம்பளம் பத்தவில்லை என்று கேட்டு இருந்தால் நான் கொடுத்து இருப்பேனே.. போயும் போயும் அனாதை குழந்தைகள் சாப்பிடும் சாப்பாட்டிலா கை வைக்கவேண்டும்.. உங்களை என்ன செய்கிறேன் பாருங்கள் “ என்று போலீசிற்கு போன் செய்தான்..

“ தம்பி தம்பி வேண்டாம் தம்பி போலீஸ் எல்லாம் வேண்டாம் தம்பி.. நீங்க என்ன தண்டனை குடுத்தாலும் நாங்கள் ஏத்துகிறோம்”  என்றான் மாயன்.. ஒரு நிமிடம் சற்று யோசித்தவன்…

“ ம்ம்ம்ம் சரி.. இனிமேல் இங்கு வேலை இல்லை.. இங்கு மட்டும் இல்லை இந்த ஊரில் வேறு எங்குமே வேலை பார்க்க முடியாது நீங்கள் இருவரும்..”

“ தம்பி ….”

“ எனக்கு தெரியாமல் ஏதாவது குள்ளநரித்தனம் செய்யலாம் என்று நினைத்தால் அவ்வளோதான் தொலைத்து விடுவேன் ஜாக்கிரதை”  என்று கர்ஜித்தபடியே இவருக்கும் ஆயிரம் ஆயிரம் ரூபாய் தந்து உங்கள் கணக்கு முடிந்தது என்று கூறினான்.. “ தம்பி எங்கையும் வேலை இல்லன்னு சொன்னா எப்படி தம்பி குடும்பம் எல்லம் இருக்குல”  என்றான் மாயன்..

போதும் என்று கை உயர்த்தி… கதவு திறந்து இருக்கிறது வெளிய செல்லலாம் என்றான் கதிரவன்.. அவன் இவ்வளோ பொறுமையாக பேசுவதே பெரிய விஷயம் என்று எண்ணி இருவரும் வெளியே சென்றனர்.. ஆனால் அவனின் கோவம் இன்னும் குறையவில்லை..

“ எல்லாம் அவளால் வந்தது “ என்று அனைத்து கோவமும் வசுமதியிடம் திரும்பியது. அவன் கண்கள் சிவந்து கை முஷ்டி இறுக அங்கு இருந்த மேஜை மீது குத்தினான்.. அந்நேரம் அங்கு வந்த அழகேசன் இதை கண்டுவிட்டு..

“ டேய் டேய் கதிரவா… என்னடா இந்த மேஜை உன்னை என்ன செய்தது, அதை போட்டு ஏன் இப்படி குத்துகிறாய் “ என்றபடி வந்து அமர்ந்தான் கதிரவன் அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு அமைதியாக அமர்ந்துக்கொண்டான்..

“ என்னடா என்ன நடந்தது?? ஏன் இவ்வளோ கோவமாய் இருக்க?? எதுவானாலும் சொன்னால் தானே தெரியும்??” கதிரவனுக்கு இன்னும் ஆத்திரம் தீரவில்லை.. அழகேசனுக்கு பொறுமை போனது..

“ டேய் இங்கு ஒரு மனுஷன் கேள்வி கேட்டு இருக்கிறேன் நீ பாட்டுக்கு எருமை மாடு மேல் மழை பெய்ஞ்ச மாதிரி ஆடாமல் அசையாமல் இருக்க” என்று ஒரு கத்து கத்தினான்..

“ ஏய் இப்ப ஏண்டா இப்படி கத்துற??”  என்று பதிலுக்கு கத்தினான் கதிரவன்.

“ அ !! இப்ப கத்து.. அப்ப இருந்து கேட்டுகிட்டு இருக்கேனே பதில் சொன்னால் என்ன எதுவும் கொம்பு கிம்பு உனக்கு முளைத்து விடுமா ??” என்றான் அழகேசன்..

பின் கதிரவன் சுருக்கமாக நடந்ததை கூறி முடித்தான்.. ஆனால் வசுமதியை பற்றி அவர்கள் கூறியதை மட்டும் கூறவில்லை.. “ அடபாவிங்களா இவ்வளோ தைரியம் அவனுங்களுக்கு.. நீ சும்மாவாடா  விட்ட “

“ இல்லை அழகு வேலையை விட்டு அனுப்பிவிட்டேன் “ என்றான்.. இதை கேட்ட அழகேசன்.. “ இவன் இவ்வளோ பொறுமையாக ஹேண்டில் பண்ணதே பெரிய விஷயம்”  என்று நினைத்தான்.. அழகேசனுக்கு தெரியும் இதற்கு மேல் கதிரவன் எதுவும் பேசமாட்டான் என்று..

“ சரிடா கதிரவா வீட்டிற்கு போய் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துவிட்டு வா.. அதுவரைக்கும் நான் பார்த்துகிறேன்”  என்று கூறினான்.. இல்லை என்று கதிரவன் மறுப்பு கூறும் முன்னே.. “ நான் சொல்வதை கேள் கதிரவா போ போய்விட்டு  வா “ என்று அவனை தள்ளாத குறையாய் அனுப்பி வைத்தான்.. வீட்டிற்கு சென்று சாப்பிட்டுவிட்டு சிறிது நேரம் ஓய்வு எடுத்தால் சரியாகி விடுவான் என்று நினைத்துதான் அழகேசன் அவனை வீட்டிற்கு அனுப்பியது..

ஆனால் அவன் கதிரவன் அல்லவா?? அவன் கோவம் அவ்வளவு  எளிதில் குறைந்துவிடுமா என்ன ?? புயலென வண்டியை கிளப்பி கொண்டு வந்தான்.. வீட்டிற்கு நுழைந்தவன் ஒரு நிமிடம் அப்படியே நின்று விட்டான்..

வீட்டு வாசல் திறந்தபடி இருக்கிறது.. ஹாலில் பேன் ஓடிக்கொண்டு இருக்கிறது.. போதாத குறைக்கு டீபாயில் பாதி சாப்பிட்டு வைத்த பழத்தட்டு… பின்ன சாண்டில்யனின் கடல் புறா புத்தகம் திறந்து இருந்தது அதன் தாள்கள் காற்றில் பறந்து கொண்டு இருந்தன. அவனுக்கு புத்தகங்கள் எல்லாம் எடுத்த இடத்தில் இருக்கவேண்டும். கண்ட இடத்தில் போட்டு வைத்தால் பிடிக்காது. ஒருமுறை காமாட்சியே இதற்காக மகனிடம் வாங்கி கட்டிகொண்டார். 

ஏற்கனவே கோவத்தில் வந்தவன்.. இதை எல்லாம் பார்த்தபின் கேட்கவேண்டுமா ??

எங்கே அவள் என்று சுற்றும் முற்றும் பார்த்தான். அன்னபூரணியின் அறையில் இருந்து பேச்சு குரல் வந்தது..   “ ஏய் வசுமதி… “ என்று கத்தியவாறே அங்கு சென்றான்.. அவள் என்ன ஏது என்று உணர்வதுகுள்ளே சாமியாட ஆரம்பித்துவிட்டான்..

“ ஏய் !! இதுதான் நீ வீட்டை கவனிக்கும் லக்ஷ்ணாமா. வீட்டு வாசல் திறந்து இருக்கிறது, ஹாலில் பேன் அதுபாட்டில் ஓடிக்கொண்டு இருக்கிறது, சாப்பிட்ட தட்டு அப்படியே கிடக்கிறது… புத்தகம் திறந்து காற்றில் தாள்கள் பறந்து கொண்டு இருக்கிறது நீ என்னவென்றால் இங்கு வந்து அப்பத்தாவிடம் அரட்டை அடித்து கொண்டு இருக்கிறாய்”  என்று கோவமாக பேசினான்.. “

“உன் சொகுசு வாழ்கை எல்லாம் சென்னையோடு வைத்துக்கொள் என்ன” என்று உறுமினான்.  “அவள் இல்லை அத்தான்” என்று ஏதோ கூறவந்தாள்..

“ ம் பேசாதே.. என்ன பழக்கம் பதிலுக்கு பதில் பேசுகிறாய்.. தப்பு செய்துவிட்டு அதை சமாளிக்க காரணம் வேறு சொல்கிறாயா ?? வாயை மூடு வசுமதி “ என்று கத்தினான்..

“ கண்ணப்பா!!”  ..

“ நீ சும்மா இரு அப்பத்தா.. நீ என்ன உன் பேத்திக்கு சப்போர்ட்டா ?? நீயும் அம்மாவும் குடுக்கும் இடம் இதெல்லாம்”  என்று அவரையும் ஒரு கடி கடித்தான்.. “போதும் அத்தான்” என்று வசுமதி கத்தியேவிட்டாள்..    

அவளுக்கு ஏற்கனவே அவன் விலகி விலகி போகிறான் என்ற வருத்தம் இருந்தது.. பின் இப்படி அவன் கோவமாக பேசவும் எல்லாம் ஒன்று சேர்ந்துவிட்டது.. “ போதும் கொஞ்சம் நிறுத்துகிறீர்களா “ என்று அவனை பார்த்து சொன்னாள்..

“ ஏய் “ என்று அவன் எதோ கூறவந்தான்.. அவள் கண்களில் நீர் கோர்த்துவிட்டது.. அவனை அடிபட்ட ஒரு பார்வை பார்த்தபடியே “ எதையும் கண்ணால் காணும் காட்சிபடி அப்படியே எடுத்துகொள்ளதீர்கள். அதன் பின் அனைத்திற்கும் ஒரு காரண காரியம் இருக்கும் என்பதை மனதில் வைத்து பின் வந்து இப்படி தாண்டவம் ஆடுங்கள்”  என்று கூறிவிட்டு வெளியே செல்ல கிளம்பினாள்..

கண்ணம்மா சாப்பாடு என்று பெரியாத்தா கூறவும்..

விரக்தியான ஒரு சிரிப்பை சிரித்துவிட்டு “ போதும் அம்மாச்சி என் வயிறும் மனதும் நிரம்பி விட்டது “ என்று கண்ணீரை துடைத்து கொண்டு அங்கு இருந்து சென்று விட்டாள்.. அவள் தட தட என்று மாடி ஏறும் சத்தம் கேட்தது இருவருக்கும்….

“என்ன சாமி இது கண்ணுமண்ணு தெரியாமல்  இப்படி பேசிட்ட “

“ என்ன நான் கண்ணுமண்ணு தெரியாமல்  பேசுகிறேனா என்ன அப்பத்தா??  என்று சற்று காட்டமாகவே கேட்டான்..

“ முதலில் இந்த கோவத்தை கலட்டிவை சாமி.. வா இங்கு வந்து உட்காரு”  என்று தன் பேரனை அழைத்தார்.. அவனும் வேண்டாவெறுப்பாக வந்து அமர்ந்தான்..

“ என்ன சொல்லு,,,,  என்ன சொல்லபோற  எப்படினாலும் உன் பேத்திக்கு தான தோதா பேசுவ “ என்றான்.. அவர மெதுவாக சிரித்துவிட்டு..

“  ஏன் உனக்கு இவ்வளோ கோவம்.. அவள் அப்ப இருந்து உனக்காக சாப்பிடாமல்  கூட காத்திருந்தால். பொழுது விடிந்ததில் இருந்து எல்லா வேலையும் இழுத்துபோட்டு அவள் தான் செய்கிறாள் நான்தான் நீ வரவரைக்கும் வெறும் வயிரோட இருக்க வேண்டாம்  சொல்லி பழம் சாப்பிட சொன்னேன்..”

“அவளும் புத்தகம் படிச்சுகிட்டே சாப்டிட்டு இருந்தா நடுவில் எனக்கு ஒரு மாதிரி புகைச்சலா வரவும் என்னை கவனிக்க தான் போட்டது போட்டபடி வந்தா.. அதற்குள் நீ வந்து இப்படி கோவமா பேசிட்ட.” என்று தன் பேரனுக்கு மெதுவாக நடந்ததை எடுத்து கூறினார்..

“ அடடா நான் அவசரம் பட்டுவிட்டேனோ ?? தேவையில்லாமல் அனைத்து கோவத்தையும் என் மதியிடம் அல்லவா காட்டிவிட்டேன்.. இனி என்ன செய்வது..”

ஆமாம் இப்போ சொல்லு என் மதி என்று.. கோவத்தில் என்ன சொன்னாய் ஏய் என்றும் வசுமதி என்றும் கத்திக்கொண்டு அல்லவா வந்தாய் என்று அவன் மனமே அவனை வசை பாடியது.

கதிரவன் தன் வாழ்வில் முதல் முறையாக செய்வது அறியாது நின்றுவிட்டான் ” ஏன் நான் இப்படி அவசரப்பட்டுவிட்டேன்.. என் கோவத்தை எல்லாம் என் மதியிடம் அல்லவா காட்டிவிட்டேன்.. அழுதபடி சென்றுவிட்டாளே.. என்னை பதிலுக்கு கோவமாக கூட திட்டவில்லை.. எப்படி எல்லாம் பேசிவிட்டேன் என்னவளை..”

“ ச்சே என்னை நினைத்தால் எனக்கே இப்பொழுது கடுப்பாக இருக்கிறது.. அவள் பாவம்.. யாருக்காக தன் குடும்பம், தான் பார்க்கும் வேலை, தன் நண்பர்கள் என்று அனைத்தையும் விட்டுவிட்டு இங்கு தமிழ்நாட்டின் தென் பகுதயில் இப்படி மலையடிவாரத்தில் வந்து உட்கார்ந்து இருக்கிறாள்.. சொந்தம் வேண்டும் என்பதற்காக தானே.. அப்படி பட்டவளை நான் என் முன் கோவத்தினால் மிகவும் கஷ்டபடுத்துகிறேன்..”

“ எனக்காக உண்ணாமல் கூட காத்து இருந்தளாமே.. ச்சே எப்படி இனிமையாய் கழிய வேண்டிய பொழுதை நான் என் மடத்தனத்தால் கெடுத்துவிட்டேன்.. இனி என்ன செய்வது.. பேசுவதை எல்லாம் பேசிவிட்டு மதி என்று போய் சமாதானம் செய்தால் அவள் என்னை பற்றி என்ன நினைப்பாள்..”

“சரிதான் போடா என்று கூறிவிட்டாள். ஒரு வேலை ஊருக்கு கிளம்பி போய்விட்டாள்..” இல்லை இல்லை அவளை உருக்கு போக அனுமதிக்க கூடாது.. அவள் இல்லாமல் நான் எப்படி இங்கு இருப்பது”  என்று அவன் அறையில் குறுக்கும் நெடுக்கும் நடந்தபடி அவனை அவனே திட்டிகொண்டு இருந்தான்..

அதே நேரம் வசுமதி தன் அறையில் மெத்தையில் குப்புற படுத்து அழுதபடி இருந்தாள்..” எப்படியெல்லாம் பேசிவிட்டான்.. ஒரு வார்த்தை ஒரே ஒரு வார்த்தை என்னை பேசவிட்டானா ?? அவனால் எப்படி முடிகிறது என்னிடம் இப்படி எல்லாம் கடுமையாக நடந்து கொள்ள.. ஒரு வேலை நான் இங்கு இருப்பது பிடிக்கவில்லையோ???… அன்று மாமா என்னை இங்கு தங்கும்படி கூறவும் என்ன சொன்னான் யாரையும் வற்புறுத்தி இருக்க சொல்ல வேண்டாம் என்று அல்லவா கூறினான்..”

“ இதற்கு என்ன அர்த்தம் அவனுக்கு நான் இங்கு இருப்பது பிடிக்கவில்லை என்றுதானே பொருள்.. அதனால் தான் என்னிடம் முகம் குடுத்து பேசக்கூட அவனுக்கு பிடிக்கவில்லை.. அவனுக்கு பிடிக்கவில்லை என்றால் என்ன???  இது என் பாட்டி வீடு என் அம்மா பிறந்த வீடு”  என்று அவளின் மனம் ஒரு மூலையில் அவளுக்கு உரைத்தது..

“ இதெல்லாம் சரிதான் ஆனாலும் அவனின் வெறுப்பை தாங்கி கொண்டு என்னால் இங்கு இருக்க முடியுமா ?? அதற்கான தெம்பு எனக்கு இருக்கிறதா என்ன ??” இப்படி பலவாறு அவளே சிந்தித்து கொண்டு இருந்தாள்..

கதிரவன் அவன் அறையில் அவன் இஷ்டதிற்கு தன் மனதை போட்டு உருட்டிக்கொண்டு இருந்தான்.. வசுமதியோ அழுது புரண்டு கொண்டு இருந்தாள்..

அந்நேரம் வெளியே சென்று இருந்த காமாட்சிசிவபாண்டியன் இருவரும் வந்தனர்.. வீடு ஏதோ ஒருவித அமைதியை ஆடையாக அணிந்துக்கொண்டு இருந்ததை உணர்ந்தனர்.. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துகொண்டு அன்னபூரணி அறைக்கு சென்றனர்..

அங்கு அன்னபூரணி கண்களை மூடி சாய்ந்து அமர்ந்து இருந்தார்.. அவர் முகமே ஏதோ நடந்து இருப்பதாய் மற்ற இருவருக்கும் உணர்த்தியது.. அத்தை என்று அவர் அருகில் சென்று அமர்ந்தார் காமாச்சி..

“ வந்து விட்டீர்களா.. விசேஷம் எல்லாம் நல்ல படியா முடிந்ததா ??”  என்று கேட்டார்..                                                     

“ அது எல்லாம் நல்லபடியா நடந்து முடிந்தது அத்தை.. கதிரவன் வசுமதி இரண்டு பேரையும் காணவில்லை எங்கே அத்தை“ என்று வினவினார்..ஒரு பெருமூச்சை வெளியிட்டு நடந்ததை சுருக்கமாக கூறினார் பெரியாத்தா.. சிவபாண்டியன் இதை எல்லாம் அமைதியாக கவனித்து கொண்டு இருந்தார்..

“ என்ன அத்தை நான் அவர்கள் இருவருக்கும் நடுவில் ஒரு பிணைப்பு ஏற்பட வேண்டும் என்றுதானே தங்கத்தை கூட விடாமல் அழைத்து சென்றேன் ஆனால் இப்படி நேர்ந்து விட்டதே.. இந்த பையன் கதிரவனுக்கு நான் என்ன சொல்லி புரிய வைக்கட்டும் அத்தை.. ஜான் ஏறினால் முலம் சறுக்குகிறதே அத்தை நான் என்னதான் செய்ய..”

“ ஒரு பக்கம் வசுமதி நடந்து கொள்வது நமக்கு சந்தோசத்தை கொடுத்தாலும்  மறுபுறம் கதிரவன் நடந்துகொள்வது மிகவும் சங்கடத்தை அல்லவா தருகிறது”  என்று மிகவும் வருத்தப்பட்டார்..

“ எனக்கும் அதுதான் புரியவில்லை காமாச்சி.. இப்படியே போனால் அவள் இன்னும் சென்னைக்கு கிளம்பி விடுவாள்.. நாமும் தடுக்க முடியாது.. அவளுக்கு பிறகு இங்கு வரவேண்டும் என்ற எண்ணமே தோன்றாது.. நாம் அவசர பட்டுவிட்டோமோ என்று தோன்றுகிறது”

“அடடா ஆரம்பித்துவிட்டீர்களா !!! அத்தையும் மருமகளும்.. முதலில் ஒன்றை இருவரும் புரிந்து கொள்ளுங்கள் எல்லாமே உடனேயே நடந்துவிடாது..”

“ என்ன பாண்டியா மனதிற்குள்ளும்  அன்பு இருக்கே..”

“ அம்மா அன்பு இருக்கு சரி தான்.  ஆனால்  அதே அன்பு ஆசையாக காதலாக மாற கொஞ்ச நாள் பிடிக்கும் அல்லவா ?? செடியை நட்டுவைக்கிறோம் உடனேவா பூ பூத்துவிடுகிறது இல்லை தானே?? தளிர் விட்டு இலை விட்டு மொட்டாகி பின் அல்லவா மலர் தருகிறது… ஆனால் அதற்குள் அந்த செடி எத்தனை தடைகளை தாண்டி வரவேண்டி உள்ளது.. வெயிலில் காய்ந்தும் மலையில் நினைந்தும் இப்படி எத்தனை இன்னல்களை தாண்டி பலன் தருகிறது..”

“ அதே போல் தான் காதலும் இருவரும் முழுதாக இத்தனை ஆண்டுகள் பார்த்தது கூட இல்லை. இது என்ன சினிமாவா மாமன் மகனை கண்டதும் முகத்தை மூடி வெக்கப்பட்டு காதல் வயப்பட.. இல்லை கட்டினால் அத்தை மகளை தான் மணம் முடிப்பேன் என்று சபதம் போட..”

“ நீங்கள் சொல்வது எல்லாம் சரிதான் ஆனால் இவன் இப்படி செய்தால் சாதாரண பேச்சு கூட இல்லாமல் போகும் போலவே”  என்றார் காமாச்சி..

“ காமாட்சிமுதலில் நீ ஒன்றை புரிந்துகொள்.. சிறு சிறு சண்டையும், கோவமும் தான் ஒருவரை மற்றொருவர் புரிந்துகொள்ள ஏதுவாக இருக்கும்.. அம்மா உங்களுக்கு தெரியாதது இல்லை..  சின்ன சின்ன சண்டை வந்தால் என்ன.. பார்த்த உடனே காதல் வந்து அவர்கள் நம்மிடம் சொல்லி கல்யாணமும் முடிந்த பிறகு இப்படி சண்டை வந்தால் இரண்டு பேர் மனதிலும் நாம் தப்பான முடிவு எடுத் விட்டோமோ என்ற ஒரு எண்ணம் வந்துவிடும்.. அதுவே நாளடைவில் ஒரு வெறுப்பு வர காரணமாகும்“

“ என்னங்க இது நீங்க சொல்றது எல்லாம் சரிதான் ஆனால் இப்படியே போய்கொண்டு இருந்தா எப்படி”  என்று கேட்டார் காமாச்சி..

“ ஒன்றும் கவலைபடாதே காமாச்சி.. இப்ப வர சின்ன சண்டை மனஸ்தாபம் இதெல்லாமே மறைமுகமாய்  இவர்கள் இப்படித்தான்… இது இவர்களுக்கு பிடிக்காது.. இது இவர்களை கோவபடுத்தும் என்று ஒருத்தர் மனதில் இன்னொருத்தரை  பத்தின எண்ணத்தை பதிய வைக்கும்.. போக போக அவர்களே  ஒருவரை இருவர்  புரிந்து விட்டு குடுத்து போக பழகிவிடுவார்கள் ”  என்றார் சிவபாண்டியன்..          

கிழே இத்தனை நடந்து கொண்டி இருக்க அங்கு மேலே கதிரவனோ வசுமதியை சமாதனாம் செய்ய கிளம்பினான்.. “ வேறு வழி இல்லை வெள்ளைக்கொடி வேந்தனாக மாறிவிட வேண்டியதுதான்.. ஒரு வேலை அவள் உன்னை மதிக்கவில்லை என்றால்.. அதெல்லாம் பரவாயில்லை இப்போ இவளை சரி பண்ண வேண்டும்”  என்று எண்ணியவன் எதிரே மதியின் அறைக்கு சென்றான்..

அதே நேரம் காமாட்சிபடி ஏறி கொண்டு இருந்தார்.. தன் மகன் வசுமதியின் அறைக்கு செல்வதை பார்த்துவிட்டு “ சரி இனிமேல் அவன் பார்த்து கொள்ளட்டும்”  என்று தன் அறைக்கு திரும்பி விட்டார்.. வசுமதியின் அறை கதவு உள் பக்கமாக பூட்டியிருந்தது.. கதிரவன் தட்டினான்.. முதலில் பதிலே இல்லை..

“ மதி கதவை திற..”  உள்ளே அழுதபடி படுத்து இருந்த மதிக்கு முதலில் எதுவுமே கேட்கவில்லை.. மறுபடியும் டம டமவென்று தட்டினான்.. யாராக இருக்கும் என்று ஒரு நிமிடம் யோசித்தாள்.. அப்பொழுதுதான் மதி நான்தான் கதவை திற என்று மறுபடியும் அவன் கூறினான்..

“ ஓ !! கதிரவன் மகாராஜாவா?? இங்கு எதற்கு வந்தான் கீழே வறுத்து எடுத்தது போதாது என்று இப்பொழுது இன்னும் கொஞ்சம் ருசி சேர்க்க வந்துவிட்டானோ???.”  அமைதியாக அமர்ந்து இருந்தாள்… இவன் என்ன சொன்னாலும் சரி கதவை மட்டும் திறக்க கூடாது..

“ மதி ப்ளீஸ் கதவை திற “ என்றான் அவன் குரலில் நிஜமாகவே ஒரு வருத்தம் தெரிந்தது..

“ அட ப்ளீஸ்ஸா!!! இருக்கட்டும் இருக்கட்டும்.. நான் திறக்க மாட்டேன் “ என்று மனதினுள் எண்ணி கொண்டே உள்ளே கண்களை துடைத்து விட்டு அமர்ந்து இருந்தாள்.. அவன் குரல் கேட்டதுமே அவன் மதி என்று அழைத்ததுமே அவளின் அழுகையும் கண்ணீரும் அவளின் அனுமதி இல்லாமையே நின்று விட்டது.. இதை அவளும் உணர்ந்தாள்.. “ ச்சே என் கண்ணீர் கூட என் பேச்சை கேட்க மாட்டேன் என்கிறது “ என்று எண்ணிக்கொண்டாள்..

“ மதிம்மா  சாரி டா ப்ளீஸ் கதவை திற “

“ ஆகா!! சாரி கூட இவனுக்கு கேட்க தெரியுமா ?? “ அவனின் மதிம்மா என்ற அழைப்பில் அவளின் மனம் சற்று இளகியது.. “தேள் கொட்டுவது போல் கொட்டிவிட்டு இப்பொழுது வந்து மதிம்மா வா ??  நான் திறக்க மாட்டேன் “ என்று இவள் மனது நினைத்தாலும் கால்கள் தானாக கதவின் பக்கம் சென்று நின்று விட்டது..

கதவின் அருகே வெளியே அவனுக்கு அவளின் நிழல் தெரிந்தது.. “ குட்டச்சி கதவு அருகில் நின்று கொண்டு தான்  திறக்காமல் இருக்கிறாயா ??” என்று மனதினுள் செல்லமாக கருவியபடி..

“ மதி இப்போ நீ கதவை திறக்கவில்லை என்றால் ஒன்று கதவை உடைத்துக்கொண்டு உள்ளே வருவேன் இல்லை  பின்புறம் உள்ள பைப் வழியாக உன் அறைக்கு உள்ளே வந்து விடுவேன் “ என்றான்..    

“ ஆகா !! இவன் ஸ்பைடர் மென் வேலை பார்க்க போகிறானா??”  என்ன நினைத்து கொண்டாள்..

“ என்ன ஒரு இடுத்தம் இவளுக்கு.. கதவு அருகில் நின்று கொண்டு, நான் சொல்வதையும் கேட்டுக்கொண்டு ஆடாமல் அசையாமல் நிற்கிறாள்.. இருக்கட்டும் இருக்கட்டும் ஒருநாள் இல்லை ஒருநாள் என்னிடம் தானே வந்தாக வேண்டும் அன்று நான் பார்த்து கொள்கிறேன்”  என்று மானத்தில் நினைத்தபடியே கதவை ஓங்கி குத்த ஆரம்பித்தான்..

“ ஐயோ என்ன இது ஒரு பேச்சுக்கு சொல்கிறான் என்றால் நிஜமாகவே கதவை உடைத்து விடுவான் போல.. சரி ஆனது ஆகட்டும் திறந்து தான் பார்க்கலாம் இவன் என்ன கூறுகிறான் என்று.. ஆனால் ஒன்று மட்டும் உறுதி மதி, அவன் என்ன கூறினாலும் நீ சமாதானம் மட்டும் ஆகக்கூடாது என்று எண்ணியவள். ச்சே என்ன இது என் மனது கூட அவனின் மதி என்ற அழைப்பை கொண்டே என்னை அழைக்கிறதே”  என்று எண்ணினாள்..

மீண்டும் கதவு தட்டும் சத்தம் மிகவும் சத்தமாக கேட்டது.. “ ஆண்டவா எனக்கு தைரியத்தை குடு”  என்று எண்ணியபடியே மெதுவாக கதவை திறந்தாள்..

 

                              உன் நினைவு – 9

உன் ஒரு வார்த்தை கேட்க

நூறு ஜென்மம் தவமிருப்பேன்

உன் ஒரு பார்வைக்காக

காலமெல்லாம் காத்திருப்பேன்

மௌனத்தால் என்னை வதைக்காதே

வாடிய பயிரானேன் நான்…

கதிரவனுக்கு மனதினுள் என்ன ஒரு நெஞ்சழுத்தம் ஒரு மனிதன் இப்படி காட்டு கத்தலாக கத்துகிறான் மெதுவாக கதவை திறந்து விட்டு இப்படி முதுகு காட்டி வேறு நிற்கிறாள் என்று எண்ணினான்.. மதி என்று அழைத்தான்..

அவள் பதில் எதுவும் கூறாது அப்படியே நின்றாள்.அதற்கும் அவளிடம் இருந்து பதில் இல்லை..

“ கதிரவா நீ செய்த வேலைக்கு ராஜமரியாதை எல்லாம் எதிர்ப்பார்காதே அவள் கதவு திறந்ததே பெரிய விஷயம் ஆகையால் கொஞ்ச நேரம் உன் சூடு சுரணை எல்லாம் கலட்டி வைத்துவிட்டு அவளை எப்படி சரிகட்டுவது என்று மட்டும் பார்” என்று அவனின் மனது சரியான யோசனையை வழங்கியது..

தொண்டையை செருமி கொண்டு மீண்டும் “ மதிம்மா “ என்றான்.. அவனின் மதிம்மா என்ற அழைப்பு அவளை ஏனோ அவனிடம் திரும்பி நிற்க வைத்தது..

“ அப்பாடி திரும்விட்டாள் “ என்று மனதிற்குள் எண்ணிகொண்டான்.  ஒரு பெருமூச்சு அவனிடம் வெளிவந்தது.. மீண்டும் மதி என்றான்.. பதிலே இல்லை.. “நான் தான் கூப்பிடுகிறேனே மதி” என்றான் ஒருமாதிரி குரலில்..

“ கேட்கிறது” 

“நிமிர்ந்து என்னை பார் மதி..”

“ ஏன்..” “

“நேராக பார்த்தல் தானே பேசமுடியும்..”

“ எனக்கு காது கேட்கிறது.. நீங்கள் இப்படி பேசினாலும் கேட்கும், காட்டு கத்தலாக கத்தினாலும் கேட்கும் “ என்றாள் குதற்க்கமாக..

“ ம் சரி உனக்கு என் மீது கோவம் அதுதான் இப்படி என்னை பார்த்து கூட பேசமாட்டேன் என்கிறாய்..”

“எனக்கு தேவையில்லாமல் யார் மீதும் கோவம் வராது.. “

“சரி சரி.. நான் தான் மடத்…. தேவையில்லாமல் கோவப்பட்டுவிட்டேன்..”

“அதற்கு என்ன இப்போ???”

“நான் வேறு ஒரு டென்சனில் வீட்டிற்கு வந்தேன் மதி “ என்றான் பொறுமையாக.. மதிக்கு அவன் கதவு தட்டும் பொழுதே தன் கோவம் பறந்து விட்டதை உணர்ந்தாள்..

“ இருந்தாலும் இவனை சும்மா விடக்கூடாது “ என்று எண்ணித்தான் இப்படி அவனிடம் பேசி கொண்டு இருக்கிறாள்.. கோவமாக இருப்பதுபோல் நடிப்பு..அது தெரியாமல் இந்த கதிரவன் பாவம் கெஞ்சிக்கொண்டு நிற்கிறான்..

“ அந்த டென்சனை எல்லாம் என் மீது இறக்கி வைக்கும்படி யாரும் கூறினார்களா??”  என்றாள் ஒரு மாதிரி குரலில்..

” இல்லை மதி.. ம் ஐம் சாரி மதிம்மா “ என்றான்..

“ ம்ம் சரி “ என்றாள்..

ஆனால் அவன் கதிரவன் அல்லவா இப்படியே விடுவானா என்ன..“உனக்கு என் மீது இன்னும் கோவம், அதுதான் என்னை அத்தான் என்று அழைக்கவில்லை “ என்றான் அவளிடம்.. “கண்டுகொண்டானே “ என்று நினைத்தவள்..

“ அது அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை “ என்றாள்..

“சரி வேறு எப்படி..”

“வேறு எப்படியும் இல்லை..”

“அப்படி என்றால் அத்தான் என்று கூப்பிடு..”

அவன் கெஞ்சுவதை பார்த்து அவளுக்கு சிரிப்பு வந்தது ஆனால் அதை அடக்கிகொண்டாள்.. ஒரு நொடியில் அவளின் முக மாற்றத்தை கண்டுகொண்டான்..

“ மதி என்னை ஒரு நிமிடம் பாரேன்”  என்றான் அவன் குரலில் எதுவோ ஒன்று அவளை அசைத்தது..மெல்ல நிமிர்ந்து அவனை பார்த்தாள். கண்கள் சிவந்து இருந்தது..

“அழுதாயா மதி..”

ம்..

“ஏன் மதி நான் கோவபட்டதர்கா??” அவள் அவனை ஒரு முறை முறைத்தாள்..

“இப்படி உன் முட்டை கண்ணை வைத்து முழித்தால் நான் என்ன செய்வேன் மதிம்மா அத்தான் பாவம் இல்லையா”  என்று சற்று கொஞ்சலாக பேசினான்.. இவனின் பேச்சு வசுமதிக்கு முழுதும் மாறுபட்டதாக இருந்தது..

கொஞ்ச நேரம் முன்பு கோவத்தில் குதித்தது என்ன இப்பொழுது வந்து என்னை குளுர்விப்பது என்ன.. பயங்கரமான ஆளுதான் என்று நினைத்துக்கொண்டாள்.. அவள் பேச்சற்று நின்றாள்..

“என்ன மதி எதுவுமே பேசமாட்டேன் என்கிறாய்..”

“என்ன பேசவேண்டும்” என்றாள் வெற்று குரலில்..

“மதி நான் உன்னிடம் பேசத்தான் வந்தேன். ஆனால் நீ இப்படி இருந்தால் நான் எப்படி பேசட்டும்” என்றான்.. அவன் குரலில் நிஜமாகவே அவளுக்கு வருத்தம் தெரிந்தது..

“ ம்ம் கூறுங்கள் அத்தான்”  என்றாள்..

“ மதி எனக்கு என்னை நினைத்தலே வியப்பாக இருக்கிறது.. நான் முன்பெல்லாம் இப்படி இல்லை மதிம்மா “ என்றான்.. அவன் குரலில் இருந்த ஏதோ விவரிக்க இயலாத உணர்வு அவன்  கண்களை நிமிர்ந்து பார்க்க வைத்தது அவளை.. அவனும் அவளின் கண்களை தான் ஊடுருவி பார்த்தான்.. பேச்சு வரவில்லை இருவருக்கும்.. அவள் கண்களில் இருந்து ஏனோ கண்ணீர் வந்தது.. அதை மறைக்க அவள் மறு புறம் திரும்ப எத்தனித்தாள். ஆனால் அவன் அவளின் கண்ணீரை கண்டதும் அவன் மனம் சொல்ல  முடியாத வேதனை அடைந்தது..

“ மதிம்மா ரியலி சாரி, என் கோவமும் என் வார்த்தைகளும் உன்னை இப்படி காயப்படுத்தும் என்று நான் யோசிக்கவே இல்லை “ என்றான்.. மறுபுறம் திரும்பியவள் தான் பேச வார்த்தைகளை தேடியபடி நின்றுவிட்டாள்.. சிறு விசும்பல் மட்டும் கேட்டது.. அவ்வளோதான் அவளை தன்புறம் திருப்பினான்..

“மதி ஒரு முறை என்னை நிமிர்ந்து பார் மதி “ என்றான்…

“ என்னால் உங்களை… உங்கள் கண்களை சந்திக்க முடியவில்லை அத்தான் “  அவனுக்கு இதை கேட்டதும் வானில் பறக்காத குறை தான்..

“ஏன் மதி ..”

“தெரியவில்லை அத்தான்..” அவள் குரல் இன்னும் நடுங்கியது.. அவளின் முகத்தை தான் கரங்களால் நிமிர்த்தினான்.. இதை அவள் சற்றும் எதிர்பார்கவில்லை.. அவள் உடம்பில் ஓடிய நடுக்கத்தை அவனுமே உணர்ந்தான்.. இருவருக்குமே முதல் ஸ்பரிசம் அல்லவா..

அவளால் அவனை கண்ணடபடி நிற்க கூட முடியவில்லை.. உடம்பில் உள்ள அத்துணை பலமும் கரைந்து தொய்ந்து விழுவதுபோல் உணர்ந்தாள்.. கால்கள் நடுங்கின..

இதை எல்லாம் ஒற்றை பார்வையில் உணர்ந்து கொண்ட கதிரவன் அவளை அப்படியே தன் மார்பில் சாய்த்துக்கொண்டான்.. அவளுக்குமே இவன் புதியவன் என்ற எண்ணம் தோன்றவில்லை.. இது என் இடம் எனக்கு மட்டுமே சொந்தமான மார்பில்தான் நான் சாய்ந்துள்ளேன் என்று அவளுக்கு தோன்றியது.. மனதிற்குள் மிகவும் பாதுகாப்பாகவும் ஆறுதலாகவும் உணர்ந்தாள்..

“ மதி ப்ளீஸ் அழாதே” 

“ என்னால் முடியவில்லை அத்தான்.. ஒரு வேலை நான் இங்கு இருப்பதே உங்களுக்கு பிடிக்கவில்லையோ என்று எண்ணிவிட்டேன் அத்தான்..”

“ ச்சி மதி என்ன இப்படி கூறுகிறாய்.. நீ இங்கு இருப்பது எனக்கு பிடிக்கவில்லையா ?? அப்படி எல்லாம் கனவில் கூட நினைக்காதே மதி”   அவன் குரல் தன் மனதை எதோ செய்வதை அவள் நன்றாகவே உணர்ந்தாள்.. 

அவனுக்கு மதி தன் மீது சாய்ந்து நின்றதே மனதிற்கு நிம்மதியை தந்தது.. மெல்ல அவள் தலையை நீவி விட்டான்.. அவள் மேலும் அவனிடம் ஒன்றினாள்..

 “ மதிம்மா முதலும் முடிவுமாக சாரி மதி இனிமேல் இப்படி நடக்காது“ என்றான்.. அவள் நிமிர்ந்து அவனை ஒரு பார்வை பார்த்தாள். அதில் என்ன இருந்தது.. பாசமா?? நேசமா?? காதலா?? அன்பா ?? கோவமா ?? வருத்தமா ?? எதுவும் புரியவில்லை அவனுக்கு….

“அத்தான் நான் ஒன்று கூறட்டுமா ??”

“என்ன மதி..”

“இனிமேல் என்னிடம் சாரி கேட்காதீர்கள் அத்தான்” அவன் புரியாத ஒரு பார்வை பார்த்தான்..

” ஆமாம் அத்தான் இனிமேல் என்னிடம் நீங்கள் சாரி கேட்ககூடாது”  என்றாள் ஒரு அழுத்தமான குரலில்.. 

“ ஏனோ “

“ ஏனோ அத்தான் நீங்கள் என்னிடம் கோவமாக பேசுவது என்னை வருத்துவதை விட நீங்கள் என்னிடம் மன்னிப்பு கேட்பது என்னை மிகவும் கஷ்டபடுத்துகிறது..”  என்ன என்றான் ஒரு வித ஆச்சர்யம் கலந்த குரலில்.. “ ஆமாம் அத்தான் என்னிடம் யாரும் இப்படி இதுவரை கடுமையாக நடந்து கொண்டதில்லை தான்..  இருந்தாலும் நீங்கள் என்னிடம் இது இப்படி மதி இதனால் இப்படி எனக்கு கோவம் என்று மட்டும் கூறுங்கள்.. சாரி மட்டும் கேட்கவேண்டாம்” என்றாள்..

அவனுக்கு என்ன சொல்லவென்றே தெரியவில்லை.. “இது என்ன மாதிரியான அன்பு. நான் அவளை நோகடித்து இருக்கிறேன். ஆனால் நான் அவளிடம் மன்னிப்பு கேட்பது தான் நோகடிக்கிறதாம்..” கதிரவனுக்கு இது ஒன்றே போதுமானதாக இருந்ததது வசுமதியின் மனதில் என்ன இருக்கிறது என்பதை அறிய..

அவனுக்கு எல்லை இல்லா ஆனந்தம் ஆனால் வெளியே காட்டாமல் நின்று கொண்டு இருந்தான்.. மதியின் மனதில் நான் தான் இருக்கிறேன் என்பதை அவனே ஒருமுறை மனதிற்குள் கூறிகொண்டான்.. ஆனால் தான் அறிந்த அவளின் காதலை அவள் அறிந்து கொண்டாளா என்பது அவனுக்கு தெரியவில்லை..

இதற்குமேல் யோசிப்பதற்கு எதுவும் இல்லை இனி அடுத்த அடி எடுத்து வைக்கவேண்டியது தான் என்று எண்ணிக்கொண்டான்.. முதல் வேலையாக மதிக்கு அவள் தன் மீது கொண்ட நேசத்தை காதலை உணர்த்த வேண்டும் என்று எண்ணி கொண்டான்.. ஆனால் இப்படி அவன் யோசித்து கொண்டு இருந்த வேலையில் வசுமதி அவனின் முகத்தையே கண்டு கொண்டு இருந்தாள்..

ஒருவாறு சுதாரித்து கொண்டான்.. “ என்ன அத்தான் அப்படி எந்த கோட்டையை பிடிக்க இவ்வளோ யோசனை “ என்றாள் குழைவாக..

“ ஹா !! மதி என்ன கூறினாய் “ என்றான் கதிரவன்..

“ சரிதான் அத்தான் நீங்கள் இந்த உலகில்தான் இருகின்றீர்களா??”

“ சொல்லு மதி “

“ நீங்கள் தான் சொல்ல வேண்டும் அத்தான்”  என்றாள் அவள் குரலில் இப்பொழுது துளி கூட கோவம் இல்லை…

“என்ன சொல்ல வேண்டும்” என்றான் அவள் குரலில் இருந்ததை உணர்ந்தவனாக மெல்ல நகைத்து கொண்டான்..

“ நான் தான் கூறினேனே என்னிடம் சாரி கேட்க கூடாது”  என்று என்றாள் சற்று உரிமை கலந்த குரலில்.. அவனுக்கு ஏனோ அவளை சீண்ட வேண்டும் போல் இருந்தது..

“அப்படியா நான் சாரி கேட்க கூடாத???”  என்றான் ஒரு புதிர் போடும் குரலில்.. “ஆமாம் அத்தான்” என்றாள் சலுகையாக..

“ அப்படி என்றால் ஒரு கண்டிஷன்”  

மெல்ல நகைத்து கொண்டே தலையை சரித்து அவளை பார்த்து “ மதி நீ என்னை கதிர் என்று ஒரு மாதிரி அழைப்பாய்… அதுபோல ஒருமுறை கூப்பிடு நான் சாரி சொல்லமாட்டேன்”  என்றான்..

இதை சிறிதும் எதிர்பார்க்காத மதியோ “ ஹா!!! இது போங்கு ஆட்டம் அத்தான்”  என்றாள் சிரித்தபடி.. அவளை அறியாமல் அவள் முகம் லேசாக சிவந்துப்போயிற்று.. இதை கதிரவன் கவனித்து கொண்டான்..

 “ நீ கூப்பிட்டால் நான் கூறமாட்டேன்”  என்றான்…

“ இது என்ன அத்தான் இப்படி ஒரு பிடிவாதம் உங்களுக்கு”  என்று சிணுங்கினாள்.. அவளின் சிணுங்கல் மேலும் அவனை தூண்டியது.. “ ஆமாம் பிடிவாதம் தான்… ஏன் நான் உன்னிடம் பிடிவாதம் கொள்ள கூடாதா “ இதற்கு என்ன பதில் கூறுவாள் அவள்..

“ம்ம்ம்ம்…..”

“என்ன ராகம் பாடுகிறாய் மதி பதில் கூறு” 

“ அப்படி இல்லை அத்தான் அது..”

“எது..”

“ச்சு போங்கள் அத்தான்..”

“ சரி சரி நான் இங்கு நிற்பது உனக்கு பிடிக்கவில்லை போல நான் கிளம்புகிறேன்”  என்று வேண்டும் என்றே நடித்தான்.. “ஐயோ அத்தான் “ என்று அவனை பிடித்து நிறுத்தினாள்.. முதல் முறையாக தன் கையை பிடிக்கின்றாள். மனதிற்குள் மழை பெய்தது அவனுக்கு. அவள் பக்கம் திரும்பாமல் நின்றுகொண்டான்..

“ என்ன அத்தான் கோவமா “ என்றாள் கெஞ்சும் குரலில்..

“ நான் ஏன் கோவப்பட போகிறேன் மதி..”

“பின்னே என்னவாம் இப்படி திரும்பி நின்று கொண்டீர்கள் ??” என்றாள் கொஞ்சும் குரலில்.. “ ஏன் டி என்னையே இப்படி படுத்துற “ என்று மனதிற்குள் நினைத்தவாறே திரும்பினான்..

“ சொல் மதி….”

“எதை அத்தான்.”

“ கதிர் என்று சொல் மதி”  என்றான் சிரித்துக்கொண்டே.. சரியான விடாகண்டன் போலவே என்று எண்ணியவள்..

“ம்ஹும் மாட்டேன்” என்றாள்..

“ அப்படியனால் நான் உன்னை பார்க்கும் பொழுது எல்லாம் சாரி கேட்பேன்”  என்றான்.. இப்படி சொன்னதோடு நிற்காமல் “ சாரி சாரி சாரி சாரி சாரி……. “ என்று நிறுத்தாமல் கூற தொடங்கிவிட்டான்.. 

“அட ராமா இது என்ன இப்படி ஒரு சோதனை” என்று எண்ணியவள் வேகமாக சென்று அவன் வாயை அடைத்தாள்.. கதிரவனோ மிகுந்த பாடு பட்டான் தன்னை அடக்கி கொள்ள.. அவன் கண்கள் என்ன கூறியதோ தான் இருந்த நிலை உணர்ந்து பதறி விலகினாள்..

“ சா.. சாரி அத்தான் “ என்று திக்கி திணறினாள்.

 “ நான் கேட்டது சாரி இல்லை மதி “

இவன் விடமாட்டான் போலவே.. “ அத்தான் அது எல்லாம் தானாக தோன்ற வேண்டும் “ என்றாள் எரிச்சல் கலந்த சிணுங்கள் குரலில்..

“ பரவாயில்லை எனக்காக இப்பொழுது “ கூறு என்றான்.. பின் என்ன நினைத்தாளோ.. “ கதிர் இனிமேல் என்னிடம் நீங்கள் சாரி சொல்லகூடாது சரியா”  என்றாள் அவனை போலவே தலையை சரித்து ஒட்டறை புறுவம் தூக்கி.. அவள் கதிர் என்று கூறும் பொழுது லேசாக உதடு சுளித்து அழகு காட்டி கூறினாள்..

“ என்ன மதி கூறிவிட்டாயா ??? எனக்கு சரியாக கேட்கவில்லையே மறுபடியும் சொல்லு  “ என்றான்..

“ ச்சு போங்கள் அத்தான் “ என்று அவன் மார்பில் குத்தினாள்..

“ சொல்லு மதி “ என்றான் கொஞ்சலாக..

“ ம்ம் கதிர் “ என்றாள் அவனுக்கு மட்டுமே கேட்கும் குரலில்..

“ யப்பாடி!!!! சரியான அழுத்தம் மதி நீ.. ஒரு வார்த்தை  உன்னிடம் இருந்து வாங்க இவ்வளோ நேரம்..”  மெல்ல சிரித்தபடி அப்படியானால்

 “ நீங்கள் தான் அத்தான் மிக மிக அழுத்தம் இன்னும் நான் கேட்டதற்கு நீங்கள் சரி சொல்லவில்லையே..”  தன் தொண்டையை மெல்ல செருமி கொண்டு அவள் கையை பிடித்து தன் கைகளில் வைத்து கொண்டான்.. ஒருபுறம் அவளுக்கு கூச்சமாகவும் சங்கடமாகவும் இருந்தது.. உடம்பில் ஒரு வித குளிர் பரவுவதை உணர்ந்தாள்.. அவனை பார்க்காமல் தலையை குனிந்துகொண்டாள்..

தன் விரல்கொண்டு அவள் நாடியை பிடித்து அவள் முகத்தை நிமிர்த்தினான் கதிரவன்.. அவன் கண்களை நேராக காண முடியாது கண்களை மூடி கொண்டாள்..  அவன் குரல் சற்று கரகரப்பாக இருந்தது.. “ மதி இனிமேல் உன்னை கஷ்டப்படுத்தும் எதையும் நான் செய்யவும் மாட்டேன் பேசவும் மாட்டேன் “ என்றான்.. அவளுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.. கண்களை திறத்து மெல்ல சிரித்தாள்..

“ அப்பாடி உன்னை ஒருவழியாக சமாதானம் செய்துவிட்டேன்”  என்று சோம்பல் முறித்தான்..

அவள் அதற்கும் சிரித்தாள்.. “ மதி உனக்கு ஒன்று தெரியுமா அப்பத்தா பயந்துபோய் விட்டார்கள். எங்கே நீ கோவித்து கொண்டு ஊருக்கு போய் விடுவாயோ என்று “

அவ்வளோதான் இவ்வலோ நேரம் சிரித்தபடி இருந்தவள் முறைக்க ஆரம்பித்தாள்..  “ அப்போ அம்மாச்சி வருத்தப்பட கூடாது என்று தான் என்னை சரி செய்ய வந்தீர்களா அத்தான்”  என்றாள் ஒரு வெற்று குரலில்.. அந்த குரல் அவனின் உயிரை உருக்கியது. உனக்கு அப்படி தோன்றுகிறதா மதி என்றான் ஒரு ஆழ்ந்த குரலில்.. அமைதியாகிவிட்டாள் தன் துப்பட்டாவின் முனையை திருகியபடி..

கதிரவனுக்கு முன்பே தெரியும் அவளுக்கு மேலே பேச தெரியவில்லை என்றால்  அமைதியாக இப்படி நின்று விடுவாள் என்று.. பின் “ நீயே நினைத்தாலும் நீ ஊருக்கு போகமாட்டாய் மதி “ என்றான் உல்லாச குரலில்.. அந்த குரல் அவளை சீண்டியது..

“ யார் சொன்னது அப்படி “ என்றாள் பதிலுக்கு..

“ யார் சொல்லவேண்டும் நான் தான் சொல்கிறேன் “ என்றான் கதிரவன்..

“ அப்படியா??? சரி நாளை சிவா வருகிறான் அல்லவா அவனோடு நான் திரும்ப ஊருக்கு போவது உறுதி “ என்றாள் தன் இடுப்பில் கைவைத்து அவன் முகத்தை நேராக பார்த்து.. அவனும் அவளை போலவே நின்று “ நீ ஊருக்கு போக போவது இல்லை மதி இதுவும் உறுதி “ என்றான் சிரித்துக்கொண்டே..

“நான் போவேன்..”

“ ம்ஹும் நீ போக மாட்டாய்.. நான் உன்னை போக விடமாட்டேன்” என்றான்..
“ அப்படியா சரி சவால் அத்தான் நான் ஊருக்கு போகதான் போகிறேன் உங்களால் என்னை தடுக்க முடியாது “

“ அப்படியா நானும் சவாலுக்கு தயார் மதி நீ போக மாட்டாய்..”  என்றான் உறுதியான குரலில்.. “ என்ன திண்ணக்கம் என்று எண்ணினாள்.. நான் கிளம்பினால் இவன் விடமாட்டானாமே.. என்ன செய்து விடுவானாம்”  என்று மனதில் செல்லமாக கொஞ்சினால்.. அந்த எண்ணமே அவளுக்கு சந்தோஷம் தந்தது.. “ பார்க்கலாமா “ என்றாள் குதுகலமாக..

“ஓ!!! தாரளமாக பார்க்கலாம் மதி. நீ நிச்சயமாக ஊருக்கு செல்லபோவது இல்லை “

“ஆகா !! அவ்வளோ உறுதியா அத்தான்..”

“ஆமாம் மதி…”

“ ம்ம்ம் சரி.. பெட் எது வைத்து கொள்ளலாம்..”

“ நீ தானே முதலில் சவால் என்றாய் நீயே சொல் எது பெட் என்று..”

“ ஏன் அத்தான் தோற்றுவிடுவோம் என்று பயமாக இருக்கிறதா?? அதனால் என்னிடம் நகட்டி விடுகிறீர்களா??” என்று கலகலவென்று சிரித்தபடி கையை வீசி பேசினாள்..

“ குட்டச்சி இப்படி என்னை படுத்துகிராளே”  என்று எண்ணினான். அவன் முன் சுடக்கு போட்டு “என்ன அத்தான் பதிலே இல்லை பயம் உங்கள் தொண்டையை அடைத்து விட்டதா” என்றாள் சிரித்தபடி.. அவள் சிரிப்பு அவனை வேறு உலகம் கொண்டு சென்றது.. அத்தான் என்று சற்று அழுத்தமாக அழைத்தாள்.. தன் தலையை சிலுப்பிகொண்டான்..

“ என்ன அத்தான் தோற்று போவீற்கள் என்று பயமா ??”

“ பயமா?? எனக்கா ?? என்ன மதி பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று முதலில் உன்னை என்ன பெட் என்று சொல்ல சொன்னேன்..”

“ ஹ்ம்ம்!! சரி நான் சவாலில் ஜெயித்து அதாவது நான் சிவாவுடன் ஊருக்கு சென்று விட்டால் …??? “ என்று கூறி நிறுத்தினாள்….

“ ம்ம் சொல் மதி, நீ ஊருக்கு செல்ல போவது இல்லை இருந்தாலும், உன் ஆசைக்காக சொல்கிறேன் ஒரு வேலை நீ ஊருக்கு சென்று விட்டால் …..??? சொல் மதி நான் என்ன செய்யவேண்டும் “ என்றான்..

“ ம் நான் எது கூறினாலும் அதை அப்படியே கேட்க வேண்டும் அத்தான்”  என்றாள்..  அவள் நினைத்தாள் இதற்கு இவன் சரி சொல்ல மாட்டான் என்று.. ஆனால் அவள் கூறி முடிக்கும் முன்னேயே டீல் ஓகே என்றான்.. ஒரு நிமிடம் திகைத்தவள் “ அத்தான் யோசித்துதான் கூறுகிறீர்களா”  ??

“ ஆமாம் மதி.. நன்றாக யோசித்து தான் கூறுகிறேன்” என்றான்..

“ சரி மதி ஒருவேலை நீ ஊருக்கு போகாமல் இங்கு இருந்து  விட்டால் ??”

“ இருந்து விட்டால் என்ன அத்தான் ?? “

“ நான் என்ன சொன்னாலும், எது கேட்டாலும் நீ சரி என்று சொல்ல வேண்டும்”  என்றான் ஒரு நிமிடம் தயங்கியவள்.. சரி அத்தான் டீல் ஓகே என்றாள் அவளும்.. வார்த்தை மாறகூடாது மதி என்றான்.. அவள் மனதில் இதை விளையாட்டாக தான் எடுத்துக்கொண்டாள்.. சரி அத்தான் என்று கூறினாள்..

“ அத்தான் என்னை வெளியே எங்கேயாது அழைத்துக்கொண்டு போக முடியுமா ?? “

“ போகலாம் மதி ஆனால் நேரம் பார்த்தாயா?? நாம் இன்னும் மதிய உணவு கூட உண்ணவில்லை“ என்றான்..

“ அது தான் அத்தான் நாம் வெளியே சென்று சாப்பிடலாம்”  என்றாள்..

ஒரு நிமிடம் திகைத்து பார்த்தவன்..  “ அடடா சரி மதி மகாராணியரே. நான் உங்களை அழைத்து செல்ல சித்தமாக இருக்கிறேன் “ என்று கூறினான்.. இதை கேட்ட அவள் கலகல என்று சிரித்து அப்படி வாங்க அத்தான் வழிக்கு என்றாள்..

சிறிது நேரம் முன்பு குப்புற படுத்து குலுங்கி அழுதது என்ன இப்போ அவளை அழ வைத்தவன் கூடவே சந்தோசமாக வெளியே கிளம்புவது என்ன.. வசுமதிக்கு மீண்டும் மீண்டும் அவன் மார்பில் சாய்ந்து அழுதது நினைவு வந்தது.. அவள் கன்னங்கள் சூடேறுவதை உணர்ந்தாள்.. இது என்ன மாதிரியான உணர்வு..

எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும் நான் இப்பொழுது சந்தோசமாகவே இருக்கிறேன் அதுவே போதும் என்று எண்ணினாள்.. “ வேதனையின் அதல பாதாளத்திற்க்கும் மகிழ்ச்சயின் உச்சத்திற்கும் உங்களால் மட்டுமே என்னை ஒரே நேரத்தில் தள்ள முடிகிறது அத்தான்”  என்று எண்ணி கொண்டாள் ..

இருவரும் பேசி சிரித்தபடியே இறங்கி வந்தனர்.. கீழே எதோ பேச்சு குரல்கள் கேட்டன.. புதிதாக யாரோ வந்து இருப்பது போல் தோன்றியது.. வந்து இருந்தது வேறு யாரும் இல்லை காமாச்சியின் தம்பி சுந்தர் அவர் மனைவி மல்லிகா அவர்களின் ஒரே மகள் பொன்மலர்..

வசுமதியும் கதிரவனும் ஒன்றாக பேசி சிரித்தபடி வந்ததை அன்னபூரணியும் காமாச்சியும் கண்டு நிம்மதி அடைத்தனர்.. புதியவர்களை கண்டதும் வசுமதி அமைதியாக வந்தாள்.. கதிரவன் சற்று முன்னே இறங்கி வந்து

 “ வாருங்கள் மாமா அத்தை வாருங்கள்.. வா பொன்மலர் “ என்றான் சிரித்தபடி..

ஆனால் அவ்விரு பெண்களின் பார்வையோ வசுமதியிடம் இருந்தது.. வரேன் தம்பி என்று மட்டும் பொதுப்படையாக கூறினர்.. காமாட்சிஅவர்கள் மூவரையும் அறிமுகம் செய்து வைத்தார்..

சுந்தர் அவளிடம் வந்து “அப்பா அம்மா அனைவரும் நலமா??” என்று அன்பாக கேட்கவும் அவரை அவளுக்கு பிடித்து போய்விட்டது.. ஆனால் மல்லிகாவோ நேர் மாறாக எங்கே போகிறீர்கள் இருவரும் என்று கேட்டார்..

கதிரவன் “நாங்கள் இருவரும் இன்னும் உண்ணவில்லை அத்தை அதான் வெளியே சென்று உண்ணலாம் என்று கிளம்பினோம்”  என்றான்.. இதை கேட்ட காமாச்சிக்கு அப்பாடி எல்லாம் சரியாகிவிட்டது போல என்று எண்ணியவர் “ அப்படியா சரி சரி சீக்கிரம் கிளம்புங்கள்” என்றார்..

ஆனால் பொன்மலரோ “ அடடா.. என்ன அத்தான் இது இவர்கள் தான் பட்டிணத்து பழக்கத்திற்கு சுத்தவேண்டும் என்று நினைத்தால் நீங்களும் இப்படி அழைத்து செல்வதா ??” என்று வெடுக்கென்று கேட்டுவிட்டாள்..

கதிரவனுக்கு மனதில் சட்டேன்று கோவம் வந்தது.. ஆனால் தன் மாமாவிற்காக அமைதி காத்தான்.. வசுமதிக்கு தான் ஒரு மாதிரியாக ஆயிற்று.. பொன்மலரின் கண்களில் அப்பட்டமாக வெறுப்பு தெரிந்தது.. அன்னபூரணி சூழ்நிலையை உணர்ந்து கொண்டு, “ சரி கண்ணப்பா நீங்கள் ஏன் கிளம்பிவிட்டு நிற்கின்றீர்கள் செல்லுங்கள் “ என்று அனுப்பி வைத்தார்..

இல்லை அம்மாச்சி என்று தயங்கியவளை நேரம் ஆயிற்று மதி என்று கை பிடித்து அழைத்து சென்றான் கதிரவன்.. வசுமதியின் மனதில் ஏனோ அவர்களை கண்டதும் உற்சாகம் வடிந்து விட்டது..

இதற்கு காரணம் என்ன ??கதிரவன் வசுமதி இருவரின் சவாலில் யார் ஜெயிப்பார்கள்??மதி ஊருக்கு செல்வாளா ?? கதிரவன் தடுப்பனா ??

 

 

Advertisement