Advertisement

உன் நினைவு 6

இந்த ஒரு ஜென்மம்

போதாது – உன் மீது

நான் கொண்ட நேசத்தை 

சொல்லிவிட…..

நீ ஒரே ஒரு பார்வை மட்டும்

பார்த்துவிடு – ஜென்ம

ஜென்மமாய் வாழ்ந்திருப்பேன்..

ஒரு நிமிட யோசனைக்கு பின், “ என்னை தவறாக எண்ணமாட்டார்கள், நான் பேசுவதை சரியான விதத்தில் புரிந்து கொள்வார்கள், என்னிடம் மிகுந்த அன்பும் நம்பிக்கையும் வைத்திருகிறார்கள் என்று யாரை எல்லாம் நான் நம்புகிறேனோ அவர்களிடம் மட்டும் தான் நான், நானாக நடந்து கொள்வேன் அத்தான்..

“ ஆக, அப்படியானால் என்னை நீ முழுவதுமாக நம்புகிறாயா மதி”  என்றான் அவளை தீர்கமாக பார்த்து. அவனின் பார்வையை அவளால் தாங்கி கொள்ள முடியவில்லை.. தலை குனிந்து கொண்டாள்..

“ என்ன மதி அமைதி ஆகிவிட்டாய் ??”

“ எனக்கு இதற்கு பதில் சொல்ல தெரியவில்லை அத்தான் “அவளின் குரலே அவளின் தடுமாற்றத்தை அவனுக்கு புரியவைத்தது.. ஒரு நிமிடம் அவளையே பார்த்தான்..

“ சரி மதி சாப்பிடு “ அவனும் அமைதியாகி விட்டான்.. கதிரவனுக்கு ஏனோ வெளியே செல்லவே பிடிக்கவில்லை.. வீட்டில் இருக்க வேண்டும் போல் இருந்தது. மீண்டும் மீண்டும் வசுமதியின் நினைவே அவனை ஆட்கொண்டது.. சோபாவில் சாய்ந்து அமர்ந்து இருந்தான்..   

அதே நேரம் வசுமதி “ அம்மாச்சி இதோ பார் சாக்லேட் “ என்று அதை அவரிடம் காட்டினாள்.. அதை பார்த்து கதிரவன் நொந்துகொண்டான்,

“இதை இப்ப அப்பத்தா கேட்டதா.. பேசாமல் இருக்க மாட்டள் போலவே ..”

“ அன்று  மாடியில் பேசியதற்கே அம்மா அப்பா என்ன நினைத்தார்கள் தெரியவில்லை. இதில் சாக்லேட்டை வேறு காட்டுறாளே” என்று மனதினுள் புலம்பியபடி அமைதியாய் இருந்தான்..

“ அப்படியா கண்ணம்மா, சாக்லேட் எதற்கு வாங்கி தந்தான் “” என்று தன் பேரனை பார்த்து நமட்டு சிரிப்பு ஒன்றை சிரித்து விட்டு ஒன்றும் தெரியாததுபோல் தன் பேத்தியிடம் கேட்டார்.. அவரின் யுக்தி அறியாத வசுமதியோ, அன்று மாடிக்கு சென்றது, பின் தண்ணீர் எடுக்க கீழே வந்தது, சேம் பிஞ்ச அடித்து சாக்லேட் கேட்டது என்று அத்தனையும் சொல்லி முடித்தாள்..

“ ஓஹோ !!! இத்தனை நடந்து உள்ளதா வீட்டில்.. வயது ஆகிறது அல்லவா அதுதான் எனக்கு என்னை சுற்றி நடப்பது எதுவுமே தெரியவில்லை”  என்று கிண்டலாக கூறினார்..

“ காடு வா வா என்கிறது.. வீடு போ போ “ என்று அவர் கூறி கொண்டு இருக்கும் பொழுதே, கதிரவன், “ அப்பதா உடனே ஆரம்பிக்காதே சரியா… இங்கு உனக்கு தெரியாமல் எதும் நடந்துவிடவில்லை.. அவள்தான் காலங்காத்தாலே உக்கார்ந்து அரட்டை அடிக்கிறாள் என்றாள் நீயும் இப்படி சேர்ந்துகொண்டு பேசுகிறாய் “ என்று படபடத்தான்..

“ இவ்வளோ நேரம் நன்றாய் தானே இருந்தான் இப்போ எதற்கு இப்படி வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கின்றான் “ என்று அவனை பார்த்தாள் வசுமதி..

“ அதுசரி கண்ணப்பா, எங்களுக்கு தான் வேலை இல்லை உட்கார்ந்து அரட்டை அடிக்கிறோம். உனக்கு தான் நிறைய வேலை இருக்குமே போ பார்ப்பது.  இங்கு என்ன கோந்து எதும் கொட்டி இருக்கா ?? எப்பொழுதும் சரியா எட்டு மணிக்கு  வெளிய கிளம்பிடுவ இப்ப என்ன மணி பதினொன்று ஆனது. இன்னும் வண்டி கிளம்பாமல்   இருக்கு??”  என்று கேட்டார் அன்னபூரணி தன் பேரனையும் பேத்தியையும் மாற்றி மாற்றி பார்த்துகொண்டு … 

“ இப்ப என்ன உனக்கு நான் வெளிய கிளம்பனும் அவ்வளோதான… ஒரு மனுசனை  நிம்மதியா கொஞ்ச நேரம் இருக்க விடமாட்டீங்களே” என்று முனங்கியவாறே தன்னுடைய புல்லட்டில் பறந்துவிட்டான்..

“ ஏன் அம்மாச்சி இப்படி விரட்டுற அத்தானை ” என்று கேட்டாள் வசுமதி…

“ சும்மாதான் கண்ணம்மா, இதெல்லாம் சகஜமான விஷயம், அவன் மனதில் எதும் நினைக்க மாட்டான்..”

“ என்ன சகஜமோ “ என்றாள் வசுமதி.. தன் பேத்தியின் பேச்சை கேட்டு சிரித்தார் அன்னபூரணி.. “ இப்படி சிரிச்ச முகமாவே இரு கண்ணம்மா”  என்று தன் பேத்தியின் தலையை தடவி கொடுத்தார்..

“ அப்படியா.. அப்ப உன் பேரனை என்னிடம் நல்லபடியா நடந்துக்க சொல்லு”  என்று  அவளை அறியாமல் கூறிவிட்டாள்..  பின் சுதாரித்துக்கொண்டு…

“ அத்தான் இப்படி கோவமா நடந்துக்கவும், எனக்கு என்ன செய்வதுன்னே தெரியலை  அம்மாச்சி.. இப்பதான் எனக்கு நிம்மதியா இருக்கு”  என்று கூறி சிரித்தாள்..

அங்கே அரசி ஆலையில் அழகேசனோ “ என்னடா மாப்பிள்ள இவ்வளோ நேரம்??” என்றான் கதிரவனை பார்த்து

“ இல்லடா அழகு வர கொஞ்சம் லேட் ஆகிவிட்டது ”  என்றான் கதிரவன்..

“ அது லேட்டுன்னு எனக்கும் தெரியுது,,, ஏன் லேட்டுன்னு தான் கேட்டேன் “

“ ஏன் டா இப்படி துருவி துருவி கேட்கிற ??கிளம்பி வர கொஞ்சம் லேட். போதுமா “ என்று சலிப்புடன் பதில் கூறினான் கதிரவன்.. “ இந்த சலிப்புக்கு எல்லாம் அசந்துட்டா நான் அழகேசன் இல்லடா “ என்று மனதினுள் நினைத்தவாறே..

“ சரி துருவாம கேட்கிறேன் பதில் சொல் ஏன் லேட்?? என்றான்.. அவ்வளோதான் கதிரவனின் பொறுமை காற்றில் பறந்தது..

“ ஏன் டா இப்படி எல்லாரும் என் உயிரை வாங்குறீங்க..”

“ அவள் தான் என்னை ரூமில் போட்டு பூடிவிட்டாள்.. ஏற்கனவே இரண்டு நாளாய்  அவளிடம் பேசவில்லை.. அந்த கடுப்புல இப்படி செய்துட்டா பதிலுக்கு நானும்  அவளை பாத்ரூமில் வைத்து பூட்டிட்டேன்.. எப்பிடியோ அவளை சமாதானம் செய்து கிளம்பி வர இவ்வளோ நேரம் டா.. வீட்டில் எல்லரையும் அவள் சொல்கிற பேச்சை கேட்கிற மாதிரி மாத்திட்டா டா மாப்பிள்ள “ என்று தெளிவாக அனைத்தையும் உளறி கொட்டினான் கதிரவன்.. ஆனால் அழகேசனுக்கோ தலையும் புரியவில்லை, காலும் புரியவில்லை..

 “ என்னடா. யார் அது.??  ஏன் இரண்டு நாளா பேசலை.. உன்னை ரூம்ல வச்சு பூட்டுகிற அளவுக்கு யாருக்கு டா அவ்வளோ தைரியம்??” 

“ ஆகா!! உளறிட்டமோ.. இவன் விடமாட்டானே… காலையிலே இவன் கிண்டல் செய்துட்டு போனான்.. ஏதாவது சொல்லி சமாளிப்போம்.. ஹி ஹி ஹி…. நான் அப்படியாடா சொன்னேன்.. என் ரூம் கதவு ஜாம் ஆகி அதை சரி பன்னிட்டு வர இவ்வளோ நேரம் டா”  என்று மழுப்பினான்..

“ டேய் டேய்… இந்த பிரட் ஜாம் கதை எல்லாம் என்னிடம் வேண்டாம்.  ஒழுங்கா உண்மையை சொல்லு “ 

“இல்லடா அழகு..” என்று எதோ கூற நினைத்தவன்… சரி இவனிடம் மறைத்து என்ன ஆக போகிறது.. கூறாவிட்டால் பேசியே கொன்றுவிடுவான் என்று நினைத்து அனைத்தையும் கூறி முடித்தான்.. ஆனால் இரவு மாடியில் தானும் அவளும் பேசியதையும், ராமின் பெயரை கேட்டதும் அவனுக்கு ஏற்பட்ட உணர்வுகளையும் கூறவில்லை…  இதை எல்லாம் அமைதியாக கேட்ட அழகேசன் ஒரு முறை கதிரவனை மேலும் கீழும் பார்த்து அவனை ஒரு முறை சுற்றி வேறு வந்து பார்த்தான்..

“ டேய் டேய் அழகு இங்கு நான் என்ன ஷோ எதுவும் காட்டுகிறேனா?? ஏன் டா இப்படி பார்த்து தொலைக்கிறாய்” 

“ இல்லை கதிரவன் கதிரவன் என்று என் நண்பன் ஒருத்தன், மானஸ்தன் ரோஷக்காரன், வயசு பெண்களிடம் பேசக்கூட மாட்டான். ஆனால்  அவன் காணாமல் போய் மிகவும் நாள் ஆனதாம். நீ வேறு பார்க்க அவனை மாதிரியே இருக்கியா அதான் ஒரு வேலை அவனோன்னு நினைத்து பார்துட்டேன்.. ஆனால் நீ அவன் இல்லை”  என்றான் திகைத்தபடி.. இதை கேட்ட கதிரவனுக்கு சற்று எரிச்சல் வந்தாலும் சிரிப்பு தான் ஜாஸ்தி வந்தது..

“ டேய் மாப்பிள்ள கிண்டல் பண்ணாதடா “

“ என்னால் நம்பவே முடியலைடா கதிரவா.. உன்னை எனக்கு கிட்டத்தட்ட இருபற்றி மூணு வருசமா தெரியும்.. ஆனால் நீ இப்ப சொன்னதுக்கும் உன் கேரக்டர்க்கும்  சம்பந்தமே இல்லையே டா “ என்றான்.. கதிரவன் இதை கேட்டு லேசாக சிரித்தபடி நாற்காலியில் சாய்ந்து அமர்ந்து மேலே பார்த்துகொண்டான்..

“ நீ இப்ப கேட்ட கேள்வியை நானும் என்னிடம்  நிறைய தடவை  கேட்டுவிட்டேன் அழகு ஆனால் பதில்தான் தெரியலை “ அந்த சிரிப்பு அவன் முகத்தில் இன்னும் இருந்தது.. அழகேசனுக்கு புரிந்துவிட்டது..

“ சரி பையன் தெளிவா மாட்டிகிட்டான்” என்று நினைத்தான்.. இன்னும் கொஞ்சம் அவனிடம் போட்டு வாங்கலாம் என்று எண்ணி,,,

“ ஏன் கதிரவா உன்னை அந்த பொண்ணு ரூம்மிலே வைத்து பூட்டினதுக்கு கோவம் வரவில்லையா டா ??“

“ இல்லை டா.. எனக்கு இதெல்லாம் புதிதாய் இருக்கு.. வீட்டில் நான் ஆசைப்பட்டது எல்லாமே கிடைக்கும் ஆனால் உரிமையாய் சண்டை போட, கேளி செய்ய அங்கு  யாரும் இல்லை. ஆனால்  இப்போ வீடே கலகலன்னு இருக்கு டா.. நான் பேசாமல் இருந்தேன் என்று அவள் அவர்கள் அம்மா தம்பிகிட்ட கூட பேசவில்லைடா.. பார்த்தியா எவ்வளோ பாசமான பெண் என்று … ரியலி ஷி இஸ் வெரி நைஸ்.. “

“ ஓஹோ !! அந்த சைடும் பச்சைக்கொடி தான் போல!!! அவ்வளோ நைஸ் பொண்ணா????  சரி சரி நம்ம நண்பன் மனதை கொள்ளை அடித்த அந்த அதிர்ஷ்டமான பெண்ணை போய் பார்க்க வேண்டுமே.. இதை சொன்னால் இவன் கண்டிப்பாய்  திட்டுவான்… என்ன செய்யலாம்”

“ டேய் கதிரவா அப்பத்தா திருநெல்வேலியில் இருந்து மூலிகை தைலம் கேட்டாங்க வாங்கிட்டு வந்து இருக்கேன்.. சாயங்காலமா வீட்டுக்கு கொண்டு வந்துதருகிறேன்  என்ன “ என்று கேட்டான்..

“ என்னடா இதுகெல்லாம் என்னிடம் கேட்கலாமா ??.. பொறு ஒருநிமிஷம் வீட்டிலும் யசொல்லிவிடுறேன்”  என்றவாறு அலைபேசியில் வீட்டிற்கு அழைத்தான்.. வசுமதி தான் போனை எடுத்தாள்..

“ஹலோ..”

“அடடா இவளா…. “

“ஹலோ மதி நான்தான் பேசுகிறேன்..”

வசுமதிக்கு தெரிந்து விட்டது இது கதிரவன் என்று ஆனால் கொஞ்சம் அவனை வம்பிழுக்க எண்ணி.. “நானும் நான்தான் பேசுகிறேன்” என்றாள்..

“ ஆகா ஆரம்பித்துவிட்டாளே “ என்று எண்ணியபடி .. “ ஏய் மதி அம்மா எங்கே  அம்மாகிட்ட போன் கொடு  “     

“ எங்கள் அம்மா சென்னையில் இருகாங்க.. அவர்கள் கிட்ட போன் குடுக்கனும்னா நாளைக்கு வர நீங்க வெயிட் பண்ணனும் “

“ அம்மா தாயே !!! நான் உங்க அம்மாவை கேட்கவில்லை என் அம்மாவை தான் கேட்டேன்..”

“ நீங்களே யாருன்னு தெரியாது.. இதில் உங்கள் அம்மாவை நான் எப்படி கண்டு பிடிப்பது??”

“ ஐயோ மதி நான் தான் கதிரவன். கொஞ்சம் அம்மா கிட்ட போன் குடு” 

“ இதை முதலிலேயே  சொல்லி இருக்கலாம் அத்தான்.. பொறுங்க அத்தை கிட்ட தரேன் “ என்று சிரித்தபடி காமச்சியிடம் போனை குடுத்தாள்.. இதை எல்லாம் கண்டுகொண்டு இருந்த அழகேசன் நினைத்தான்

“ ஆத்தாடி ஒரு போனுக்கே கதிரவனை  இப்படி புலம்ப வைக்கிராளே “என்று சிரித்து கொண்டான்…

“அம்மா போன் எடுக்காம எங்க போயிட்டிங்க.. சரி சரி சாயங்காலம் அழகேசன் வீட்டுக்கு வரான்.. அதை சொல்ல தான் கூப்பிட்டேன் ”

“ அப்படியா ஊருக்கு வந்துட்டானா.. தாராலாமா வரட்டும்”  என்று போனை வைத்து விட்டார்..

“ யார் அத்தை வராங்க” 

“அழகேசன் மா நம்ம கதிரவனோட நண்பன்.. சின்ன பிள்ளைங்களா இருக்கும் போதே நல்ல பழக்கம்.. நமக்கு ஒருவகையில சொந்தம்டா.. உனக்கு அண்ணன் முறை. பாவம் அவன் அப்பா அம்மா இரண்டு பேரும் ஒரே நேரத்துலவிபத்துல இறந்து போயிட்டாங்க.. மனசு மிகவும் விட்டு போய் இருந்தான். உன் அத்தான் தான் அவனை தொழில்லையும் கூட்டாளியா சேர்த்துகிட்டான்.. நல்ல பையன் மா “ என்றார்..

அதே நேரம் சிவபாண்டியன் வீட்டிற்கு வந்தார்.. காமாட்சிக்கு ஆச்சர்யமாக இருந்தது.. “ என்னங்க இந்த நேரத்துல வீட்டிற்கு வந்துருக்கீங்க உடம்பு ஏதாவது செய்கிறதா??  என்று வினவினார்..

“ அடடா அதெல்லாம் இல்லை காமாச்சி.. நான் வசுமதி கிட்டதான் பேச வந்தேன்”

“ என்னிடமா?? என் கிட்ட என்ன மாமா ?? ஒரு போன் செஞ்சு இருக்கலாமே மாமா இந்த வெயிலில் அலையாமல்  “ என்றாள்..

“ அப்படி இல்லைடா சின்னக்குட்டி.. போனில் பேசுகிற விஷயத்தை போனில்  பேசலாம்.  அதேசமயம் நேரில் பேச வேண்டிய விஷயத்தை நேரில் தான் பேசவேண்டும்“ என்றார்..

காமாச்சிக்கும் அன்னபூரணிகும் புரிந்தது “ சரி ஏதோ மிகவும் முக்கியமான விஷயம் “என்று 

“ என்ன மாமா சொல்லுங்க “

“ பொறும்மா கதிரவனையும் வர சொல்லி இருக்கிறேன் அவனும் வந்துவிடட்டும் பேசலாம் “ சிறிது நேரம் சென்றபின் கதிரவன் வந்தான்..

“ என்னாப்பா என்ன விஷயம்..”  என்று கேட்டான்..

“ அட கதிரவா இப்படி வந்த உடனே உனக்கு அவ்வளோ அவசரமா நாங்களும் என்ன விசயம் என்று தெரிஞ்சுக்க தான் இவ்வளோ நேரமாய் உட்கார்ந்து இருக்கோம் “ என்றார் அன்னபூரணி.

“ நம்ம வசுமதிக்கு ஒரு நல்ல வரன் வந்திருக்கு அதை சொல்லத்தான் எல்லாரையும் கூப்பிட்டேன் “ என்றார்.. அவ்வளோதான் அங்கே அப்படியொரு நிசப்தம்.. ஆனால் இதை கேட்டதும் வசுமதிக்கும் கதிரவனுக்கும் தங்களை அறியாமலே பார்வை மற்றொருவரின் மீது பாய்ந்தது.. இதை இருவரும் சற்றும் எதிர் பார்க்கவில்லை..

கதிரவன் “என்ன அப்பா வந்து இப்படி வரன் கிரண் என்று பேசுகிறார்.. இப்பொழுதுதான்  இரு குடும்பமும் ஒன்று சேர்ந்து உள்ளது.. இன்னும் சரியாய் பழக கூட ஆரம்பிக்கவில்லை..” வசுமதியின் முகத்தில் தெரிந்த குழப்பம் அவனை ஏனோ வாட்டியது..

“ இவள் வேற என்ன பதில் சொல்ல போகிறாள் தெரியவில்லையே.. பார்க்க சின்ன பெண் மாதிரிதான இருக்கா இப்பவே என்ன கல்யாணத்துக்கு அவசரம்
“ என்று  எண்ணினான்..

வசுமதியோ“ ஆண்டவா இது என்ன புது பிரச்சனை.. கடவுளே எனக்கு இப்போ  கல்யாணம் பத்தியெல்லாம் எந்த ஐடியாவும் இல்லையே.. ஆனால் மாமா மனசது நோகாமல் அதே சமயம் என் கருத்தையும் தெளிவாக சொல்ல வேண்டும். இவன் வேறு எதற்கு நம்மையே பார்க்கிறான்..”

இந்த பேச்சை ஆரம்பித்த உடனே தன் மகனின் முகமும் வசுமதியின் முகமும் மாறியதை சிவபாண்டியன் கவனித்துக்கொண்டார்..

வசுமதி உடனே சுதாரித்து கொண்டு, “ என்ன மாமா என்ன சொல்றிங்க??”  என்று வினவினாள்..

“ கண்ணம்மா நீயும் அத்தானும் டிரஸ் வாங்க கடைக்கு போனிங்களே..”

“ ஆமாம் மாமா..”

“ அந்த கடையோட முதலாளி என் நண்பன்தான் வசும்மா.. “

“ தெரியும் மாமா அத்தான் அறிமுகம் செய்தார்..   “

“அவரோட அண்ணன் மகனுக்கு தான் உன்னை இப்போ பெண் கேட்கிறார்கள். மாப்பிளைக்கு வெளிநாட்டில் வேலை.. ஆஸ்திரேலியாவில் சொந்த வீடு வாங்கி செட்டில் ஆகிட்டாங்க மா..”

“ நானே அந்த பையன் போட்டோ ஒரு முறை பார்த்து இருக்கிறேன். லட்சணமாய்  தான் இருப்பான் “ என்றார்.. இதை கேட்டதும் கதிரவனுக்கு பகீர் என்றது..

 “ ஒரு வேலை சரி என்று விடுவாளோ…  மதி நீ என்ன தான் பதில் சொல்ல போகிறாய் ”  என்று மனதினுள் அவளிடம் பேசிக்கொண்டான்…       

“ மாமா இது எல்லாம் நீங்க அப்பா அம்மாவிடம் தான் பேச வேண்டும். என்னிடம்  ஏன்??”  என்றாள் தயங்கியபடியே.. அவளுக்கு பயம் எங்கு வார்த்தைகள் தவறாக வந்துவிடுமோ என்று..

“ அதெல்லாம் நான் பேசிவிட்டேன்மா.. உன் அப்பா அம்மா இரண்டு பேருமே சேர்ந்து உன் கல்யாண பொறுப்பை என்னிடம் கொடுத்துவிட்டார்கள். அதான் தான் நானே வந்து பேசிக்கொண்டு இருக்கிறேன் “

“ அந்த பையன் அடுத்த மாதம் இங்கு ஏதோ வேலையாய் சென்னைக்கு வருகிரானாம்.. அது தான் உன் முடிவு தெரிந்தால் மேற்கொண்டு பேச வசதியாய் இருக்கும்” அனைவரும் வசுமதியையே பார்த்து கொண்டு இருந்தனர்..

“ மாமா நான் என் மனதில் இருப்பதை சொல்கிறேன் ஆனால் என்னை தப்பா நினைக்க கூடாது “என்றாள்..

“ என்ன வசும்மா உன் மனதில் என்ன இருக்கு என்று தெரியத்தானே உன்னிடம் கேட்கிறேன்“

“அப்ப சரிங்க மாமா… எனக்கு இப்ப கல்யாணம் செய்வதில் எந்த விருப்பமும் இல்லை” 

“ ஏன் வசும்மா.. ஏன்டா உனக்கு வேறு யாரையாவது பிடித்து இருக்கா என்ன ?? சொல்ல சங்கடமாய் இருந்தால் என்னிடம் கூட சொல்லவேண்டாம் அத்தை அம்மாச்சி இப்படி இவர்களிடம் சொல்லுடா “ என்றார்..

ஒரு வேலை அப்படியும் இருக்குமோ என்று குழம்பியபடி கதிரவன் வசுமதியின் கண்களை பார்த்தான்.. தன் மாமா இந்த கேள்வி கேட்டதும் ஒரு நிமிடம், ஒரே ஒரு நிமிடம் வசுமதியின் பார்வை கதிரவனிடம் சென்றது.. அவன் விழிகளில் இவளுக்கென்ன புரிந்ததோ.. இவள் பார்வையில் அவனுக்கென்ன புரிந்ததோ.. ஆனால் எதோ ஒரு மாற்றத்தை மட்டும் இருவரும் உணர்ந்தனர்.. இதை எல்லாம் சிவபாண்டியன் கவனித்து கொண்டுதான் இருந்தார்..

எதுவாக இருந்தாலும் வசுமதியின் வாயில் இருந்தே வரட்டும் என்று காத்து இருந்தார்.. அன்னபூரணி “ கண்ணம்மா மாமா கேட்கிறானே  பதில் சொல்லு தாயி” 

“ அப்படி எல்லாம் எதுவும் இல்லை மாமா.. நான், நான் இன்னும் கல்யாணத்தை பற்றி எதுமே யோசிக்கலை.. நான் படிப்பு முடித்து இன்னும் ஒரு வருஷம் கூட முடியவில்லை எங்கள் அப்பா ஆபீஸில் இன்னும் ஒரு ட்ரைனியா தான் இருக்கேன். இப்படியே போய் கொண்டு இருந்தபோது தான் திடிர் என்று இங்கு வரவேண்டிய சூழ்நிலை மாமா . எனக்கு அங்கு  இருக்கும்  வரைக்கும் லைப் மிகவும் ஈஸியா தெரிந்தது மாமா “

“ ஆனால் இங்கு வந்த பிறகு தான் லைப் ஒரு ஒரு தடவையும் எவ்வளோ விசித்திரமாய் இருக்கு என்று  பீல் பண்றேன்.. அது மட்டுமில்ல மாமா எனக்குமே மனதில் இன்னும் கல்யணம் பற்றி எதுவும் எண்ணமே வரலை “  என்றாள்..

“ ஏண்டா குட்டி பயமா இருக்கா ??” என்றார் சிரித்தபடி..

அவளும் மெல்லிய புன்னகை ஒன்றை புரிந்தவாரே.. “ பயம் எதுவும் இல்லை மாமா.. இங்கு வந்த பிறகு வாழ்கை மேல்  இருக்கிற என்னோட பார்வையே மாறி இருக்கு  மாமா.. அங்கு  நான் இருந்த லைப் ஸ்டைலிற்க்கும் இங்கு இருக்க முறைக்கும் மிகவும் வித்தியாசம் மாமா.. நான் நம்ம வீட்டு பழக்க வழக்கம் எல்லாம் பழக நினைக்கிறேன் அத்தையிடம்  கேளுங்கள்  எனக்கு இன்னும் ரசம் செய்ய என்ன என்ன போடவேண்டும் என்று கூட தெரியவில்லை..முதலில் அதெல்லாம் பெரிதாய் நினைக்கலை மாமா ஆனால் இப்போ எல்லாம் பழகிக்க வேண்டும் என்று ஆசையாய்  இருக்கு.. சோ ஒரு .. ஒரு வருஷம் போகட்டுமே மாமா ப்ளீஸ் “

“ ஒரு வருசமா???? இன்னும் ஒரு வருசதம்  இவள் என்ன செய்ய  போகிறாள்??? அவளின் பதில் சற்று அனைவருக்கும் நிம்மதியை தந்தது.. காமச்சியும் அன்னபூரணியும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்..

சிவபாண்டியன் சற்று யோசித்து.. “ சரி மா நானும் அவங்ககிட்ட எப்படி பதில் சொல்லனுமோ அப்படி சொல்லிக்கிறேன் “ என்றார்..               

“ சரிங்க மாமா.. “

கதிரவனுக்கு ஏதோ ஒரு புயலில் மாட்டி வெளிவந்தது போல இருந்தது… “ மதிக்கு கல்யாணம் என்றால் நமக்கு ஏன் இவ்வளோ டென்ஷன் ஆகிறது “ என்று யோசித்தான்…

“ ச்சே கொஞ்ச நேரத்தில் எப்படி பதற வைத்துவிட்டாள் இந்த குட்டச்சி.. அப்பா அவளிடம்  உன் மனதில் யாரும் இருகிறார்களா என்று  கேட்டதும் ஒரு தடவை என்னை அப்படி ஒரு பார்வை பாத்தாளே.. ஒரு வேலை ஒரு வேலை அவள் மனதில் என்னை  பற்றி எதும் கற்பனை இருக்குமோ.. “

“ ச்சே ச்சே இல்லை இல்லை அவள் சிட்டியில பிறந்து வளர்ந்தவள்.. அவளே சொன்னாலே அவள் ப்ரிண்ட்ஸ் பசங்க பொண்ணுங்க இருக்காங்க என்று.. அது மாதிரி தான் நம்மிடமும் உரிமையாய் பழகுகிறாள் நான் தான் எதுவும் கற்பனை செய்யாமல்  தெளிவாய் இருக்கவேண்டும்..”

இப்படியே அவனே அவனுள் பேசி கொண்டு இருந்தான்.. சிறிது நேரத்தில் குடோனில் இருந்து போன் வரவே கிளம்பி சென்று விட்டான்… தன் மாமாவிடம் பேசிவிட்டு வசுமதி தன் அறைக்கு சென்று விட்டாள்..

கதிரவனும் வெளியே சென்ற பிறகு.. காமச்சியும் அன்னபூரணியும் சிவபாண்டியனை பிடித்து கொண்டனர்..

“ என்ன பாண்டியா திடீர் என்று வந்து இப்படி ஒரு புயலை கிளப்பிட்ட “

“ என்னங்க நான் வசுமதியை நம்ம வீட்டு மருமகளா கொண்டு வந்து அழகு பார்க்க  ஆசைப்பட்டா நீங்க என்னங்க அடுத்த வீட்டிற்கு அனுப்பும்  வழியை  சொல்றிங்க”  என்றார் காமாச்சி…

இருவரையும் ஒரு முறை பார்த்துவிட்டு லேசாக நகைத்து கொண்டே “ எனக்கும் எல்லாம் தெரியும்மா.. ஆனால்  என்னிடம்  நேராக வந்து பெண் கேட்கும் பொழுது  நான்  அதற்கு தகுந்த மாதிரி நடக்கணுமே.. இல்லை இல்லை என் தங்கச்சி மகளை  என் பையனுக்கு கொண்டுபோக போகிறோம் என்று  சொல்ல முடியுமா?? “

“ வசுமதி மனதிலும் என்ன இருக்கு என்று தெரிந்த மாதிரி இருக்குமே. இப்போ  அனைத்தயும் ஒரே வேலையாக முடிந்தது தானே. நமக்கும் நிம்மதி தான” என்றார்.. “அதுவும் சரி தான் “ என்றனர் மற்ற இருவரும்..  

வசுமதி மாடியில் தன் அறையில் இருந்தாள்.. ஏனோ மிகவும் களைப்பாக உணர்ந்தாள்.. “ ச்சே ஏன் நமக்கு இப்படி இருக்கிறது.. ஒரு வேலையும் செய்யலை இருந்தாலும் இப்படி இவ்வளோ அலுப்பா இருக்கே”  என்றவாறு மெத்தையில் சாய்ந்து அமர்ந்துக்கொண்டாள்.. அவளுக்கு கீழே நடந்த அனைத்தும் மனதினுள் ஒவ்வொன்றாக நியாபகம் வந்தது..

“ மாமா இப்படி வந்து கேட்ப்பார் என்று கொஞ்சம் கூட நினைக்கலை.. நமக்கு ஏன் உடனே அவ்வளோ பதட்டம் வந்தது, கல்யாணம் என்று  சொல்லவும் நான் ஏன் கதிரவனை பார்த்தேன் ஒரு வேலை, ஒரு வேலை எனக்கு அவனை.. அட கடவுளே என்ன இது.. இல்லை இல்லை அப்படி எல்லாம் எதுவும் இல்லை நான் சாதரணமாகதான் பார்த்தேன்.. வசுமதி போதும் உன் கற்பனை கழுதையை  கொஞ்சம் நிறுத்து “ என்று அவளே அவளின் எண்ணத்திற்கு கடிவாளம் இட முயன்றாள்..

ஆனால் அவளால் முடியத்தான் இல்லை.. “ கதிர் வேறு என்னை உற்று உற்று  பார்த்தானே.. அவன் பார்வைக்கு என்ன அர்த்தம்?? ஆனால் ஒன்று அந்த பார்வை என்னை ஏதோ செய்தது அதை மட்டும் என்னால உணர முடியுது..”

“ மாமாவிடம் நான் எப்படி அப்படியெல்லாம் பேசினோம்.. நான் பேசினனதை  வைத்து பார்த்தால் என்னவோ லைப் லாங்கா இங்கயே இருக்க போகிறமாதிரி பேசிவிட்டு வந்திருக்கோம்..அட ஆண்டவா.. லூசு மாதிரி உளரிட்டேனோ… ஒருவேலை அதற்கு  தான் அவன் என்னை  அப்படி பார்த்தானோ..”

“ அம்மாச்சி அத்தை எல்லாம் என்ன நினைத்தார்கள் என்று தெரியலையே.. அந்த கதிரவன் என்ன நினைத்தானோ.. “ இப்படி மீண்டும் மீண்டும் அவள் நினைவுகள் கதிரவனிடமே வந்து நின்றது.. அப்படியே  உறங்கியும் போனாள்..

ஏதேதோ குழப்பமான காட்சிகள் கனவில் வந்தன… புரண்டு புரண்டு படுத்தாள்.. இறுதில் கதிரவனின் இருவிழி பார்வை மட்டுமே அவளின் நினைவில் நின்றது.. அந்த பார்வை ஒன்றையே பற்றுகோலாக கொண்டு அதிலேயே மூழ்கி அப்படியே தூங்கியும் விட்டாள்..     

“ வசுமதி… அம்மா வசுமதி எழுந்திரு கண்ணு சாயங்காலம் ஐந்து மணி ஆகுது இன்னும் என்ன தூக்கம் எழுந்திரி வசும்மா “ என்றார் தங்கம்..

“ ம்ம்ம்ம் அக்கா… இன்னும் கொஞ்ச நேரம் ப்ளீஸ் “

“ இன்னும் கொஞ்ச நேரமெல்லாம் இல்லை உனக்கு நைட்டு தூக்கம் வராது.. எந்திரி எந்திரி”  என்று உசுப்பிவிட்டார்..

“ சரி சரி அக்கா பொறுங்க”  என்றபடியே.. “ ஆமா அக்கா என்ன பஜ்ஜி போட்டு இருக்கிங்களா ?? “

“ ஆமாம் கண்ணு நல்ல பிள்ளைல சீக்கிரம் ரெடி ஆகி கீழ வா.. சூடா காபி பஜ்ஜிலாம் சாப்பிடுவ “ என்றவாறே கீழே சென்றார்..

“ தங்கம் அக்கா நான் வந்துட்டேன் எனக்கு எங்க பஜ்ஜி “ என்று கூவியபடியே இறங்கி வந்தாள்..

அதே நேரம் கதிரவனும் அழகேசணும் வீட்டினுள் நுழைந்தனர்.. இவள் துள்ளிக்கொண்டே படி இறங்கி வருவதை கண்டு கதிரவன் ஒரு நிமிடம் நின்றுவிட்டான்.. ” ச்சே இவளை கண்டால் மட்டும் மனம் அப்படியே நின்று விடுகிறதே”  எண்ணி கொண்டவன் அழகேசனை கண்டான்..

“ என்னடா கதிரவா.. இது உங்கள் வீடு தான் தைரியமாய் உள்ளே போகலாம் வா”  என்று அவனை இழுத்து சென்றான்.. கதிரவனுடன் புதியவன் ஒருவன் வருவதை கண்டதும்வசுமதி கொஞ்சம் அடக்கி வாசிக்க ஆரம்பித்தாள்.. வசுமதியை கண்டதும் அழகேசன் எண்ணினான் “ ஆகா இவங்கதான் நம்ம கதிரவனை அடைத்து வைத்த மேடமா..”

“ ம்ம்ம்ம் நல்லா தான் இருக்கு இந்த பொண்ணு, ஆனால்  இவன் சரியான கோவக்காரன் ஆயிற்றே எப்படி சமாளிக்க “ என்று நினைத்தான்..

“ மதி இவன் அழகேசன் என் கிளோஸ் பிரெண்ட்.. சின்ன வயதில் இருந்து பழக்கம் “ என்றான்.. “ அழகு…. இது வசுமதி.. என் ஒரே அத்தையோட ஒரே பொண்ணு “ என்றான் சிரித்தபடி .. 

“ ஹாய் அழகேசன் அண்ணா”  ஒரு கணம் திகைத்த அழகேசன்.. “ ஹாய் தங்கச்சி”  என்றான்..

“ என்ன அண்ணனா ??? “  என்றான் கதிரவன்..

“ ஆமாம் அத்தான்.. அத்தை தான் சொன்னாங்க அழகேசன் எனக்கு அண்ணன் முறை என்று.. அண்ணா நான் உங்களை அண்ணன் என்று கூப்பிடலாம் இல்லையா?? “ என்று வெகு பவ்வியமாக கேட்டாள்..

அவள் கேட்ட விதத்தில் அழகேசனுக்கு சிரிப்பு வந்து விட்டது.. “ அதுதான் ஏற்கனவே அழைத்து விட்டாயே வசுமதி பின் என்ன உண்ட சோறுக்கு ஊறுகாய் தேடுகிறாய் ??” என்றான் அழகேசன்..

“ ஓஹோ சரி சரி .. இனிமேல் நீங்கள் எனக்கு அண்ணன் நான் உங்களுக்கு தங்கச்சி டீல் ஓகேவா??” 

“ ஆகா இப்படி ஒரு தங்கை கிடைக்க நான் அல்லவா புண்ணியம் செய்து இருக்க வேண்டும் என்றபடி டபுள் ஓகே வசுமதி”

“ஆனால் ஒரு கண்டிஷன்”  என்றாள்.. என்ன கண்டிஷன் என்பது போல் அவளை இருவரும் நோக்கினர்.. “ என்னை வசுமதி என்று அழைக்காதீர்கள் அண்ணா ஜஸ்ட் கால் மீ வசு or சுமதி “

அழகேசணும் இதை கவனித்து “ ஏன் இன்னொரு பாதி இருகிறதே மதி என்று அழைக்ககூடாத??”  என்றான்..

“நோ.. நோ..”

“ஏனம்மா??”

“மதி என்று அத்தான் அழைக்கிறாரே..”

“சரி அப்படியானால் நானும் உன்னை அப்படியே அழைக்கிறேன் “ என்றான் அழகேசன்..

“ என்னை இதுவரை யாரும் மதி என்று அழைத்தது இல்லை அண்ணா.. அத்தான் தான் முதலில் அப்படி அழைத்தார்.. சோ அந்த உரிமை இனி அவருக்கு மட்டும்தான்”  என்று தானே புரிந்துகொள்ளாத அறிந்துகொள்ளாத தன் மனதின் எண்ணத்தை கூறிவிட்டாள்..

“ என்ன அத்தான் நான் சொல்வது சரிதானே??”  என்று கதிரவனை கண்டு தன் இரு புருவங்களையும் மேலும் கீழுமாக ஏற்றி இறக்கி கேள்வி கேட்டு அழகு காட்டினாள்.. கதிரவனுக்கோ அவள் கூறியதை கேட்டதுமே மனதில் சொல்ல முடியாத ஒரு உற்சாகம் தொற்றிகொண்டது.. இதில் அவள் இப்படி அபிநயம் பிடித்ததும் அவ்வளோதான் அவன் வானில் பறக்காத குறை மட்டுமே..

“ம்.. ம்..” பொத்தாம்பொதுவாக தலையை மட்டும் ஆட்டிகொண்டான்.. அழகேசனுக்கு தன் நண்பனின் நிலைமை நன்றாக புரிந்து விட்டது.. பரவாயில்லை இப்பயே தலையை ஆட்ட பழகி கொண்டானே என்று எண்ணினான்..                                                            

“ எவ்வளோ இயல்பாக அண்ணன் என்று கூப்பிட்டாள்.. மறுப்பை கூட எவ்வளோ தன்மையாக வெளிபடுத்தினாள் “ என்று எண்ணி கொண்டான்.. வசுமதிக்குமே அழகேசன் பற்றி காமாட்சிகூறவும் மனதில் அவளை அறியாத உணர்வு.. அதுதான் அவளை முதலில் அண்ணன் என்று அழைக்க வைத்தது..கதிரவன் இந்த உலகிலேயே இல்லை..

“ எனக்கு மட்டும் தான் எல்லா உரிமையும் என்று கூறிவிட்டாள் “ என்று மனதினுள் கூப்பாடு போட்டன்.. தம்பி ஒரு நிமிஷம் எல்லா உரிமையும் என்று சொல்லவில்லை மதி என்று கூப்பிட மாட்டும் தான் என்று அவன் மூளை அவனை இடித்தது..

ஆனால் வசுமதியோ அவள் கூறியது அனைத்தும் கதிரவனின் மானத்தில் என்ன மாதிரி மாற்றங்களை ஏற்படுத்தும் என்று அறியாமல் ஆளுக்கு முதலாக சமையல் அறையில் நுழைந்து பஜ்ஜிகலை தன் தட்டில் அடுக்கி கொண்டு இருந்தாள்… 

 

                              உன் நினைவு – 7

என் காதலை கூற

ஒரு நொடி தேவையில்லை

உன் சம்மதம் பெற

காத்திருப்பேன் யுகம் யுகமாய்

காமாட்சி அனைவரையும் உண்ண அழைத்தார். அந்நேரம் “ அம்மா சிலின்டர் புல்லா இருக்கா ??” என்று சிலிண்டரில் ஒரு அழுத்தத்தை தந்து சம்பந்தமே இல்லாத கேள்வியை தன் தாயிடம் கேட்டான். ஆனால் அவன் பார்வையோ சிரித்தபடி மதியிடம் தான் இருந்தது..

“ என்ன இவன் சம்பந்தமே இல்லாமல் எதோ உளறுகிறான் “என்பது போல் அழகேசன் பார்த்தான் நண்பனை.. என்ன கூறுகிறான் என்பதுபோல் பெரிய பெண்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துகொண்டனர்… ஆனால் புரிய வேண்டியவளுக்கு நன்றாக புரிந்தது..

“ ஹலோ ஹலோ அத்தான்”  என்று கோவமாக அவன் பக்கம் திரும்பி தன் இடுப்பில் இரு கைகளையும் வைத்தவாறு நின்றாள்..

“ எஸ் ஸ்பீகிங்”  ..

“ என்னை பார்த்தால் சிலிண்டர் போல் இருக்கறதா??” என்று அவள் கோவமாக கேட்கவும் அனைவரும் சிரித்துவிட்டனர்..

“ அதில் என்ன சந்தேகம் ??” 

அவளுக்கு வந்ததே கோவம்.. ” நான் ஒன்றும் எனக்கு பஜ்ஜி சாப்பிட எடுக்கவில்லை..”

“ ஓ!!!! பின்  யாருக்கு எடுத்தாய்..”

“என் அன்பு அண்ணன் எரு ச்சி.. அருமை அண்ணன் திருவாளார் அழகேசன் உண்ணவே எடுத்தேன்“ என்று கோவமாக கூறியபடியே ஒரு பத்து பஜ்ஜியை தட்டில் வைத்து

“ ம்ம்ம்ம் சாப்பிடுங்கள் அண்ணா”  என்று அவனிடம் நீட்டினாள்..

“ அழகேசன் ஆகா இவர்கள் போதைக்கு நான் ஊறுகாயா ?? ஹி ஹி ஹி வசுமதி உன் பாசம் என்னை மிகவும் புல்லரிக்க வைக்கிறது ஆனால் அதற்காக பத்து பஜ்ஜி எல்லாம் கொஞ்சம் ஜாஸ்தி “ என்றான்.. அவளுக்குமே தான் செய்த அசட்டுத்தனம் புரிந்தது..

ஆனாலும் விடாமல் “அண்ணா நன்றாய்  சாப்பிடுங்கள் அப்போ தான் தினமும்  இந்த அத்தான் கூட இருந்து நன்றாய் குப்பைகொட்ட முடியும் “ என்றாள் வேண்டும் என்றே கதிரவனை பார்த்து..

“ஆகா மறுபடியும் முதலில் இருந்தா ..”

“மதி உனக்கு என்னிடம் பதில் கூற முடியாமல் ஏன் அழகேசனை கூட்டணி சேர்க்கிறாய் ??” என்று சிரித்தபடி கேட்டான்..

“ நாங்கள் அண்ணன் தங்கச்சி எங்களுக்குள் ஆயிரம் இருக்கும் ஏன் ஆயிரத்தி ஒன்று   கூட இருக்கும்.. உங்களுக்கு என்ன ??” என்றாள்.. “ என்ன அண்ணா நான் சொல்வது சரிதானே.. “

“ அட கடவுளே… இதுங்க ரெண்டும் ஏன் என் தலையை போட்டு உருட்டுதுங்க “என்று எண்ணி நொந்து கொண்டான்.. ஆனால் அழகேசனுக்கு இந்த கதிரவன் முற்றிலும் புதியவனாக தெரிந்தான்..

“ சரி சரி நீ என்னவோ செய், அழகேசா இரு நான் போய்  குளித்துவிட்டு வருகிறேன் “ என்று மேலே சென்று விட்டான்.. அவன் சென்றதும் மற்ற அனைவரும் பேசியபடி அமர்ந்து இருந்தனர்..

வசுமதி வார்த்தைக்கு ஒரு அண்ணா போட்டு அவனிடம் நன்றாக ஒட்டி கொண்டாள்.. அழகேசனுக்கு மனதினுள் நிம்மதி பரவுவதை உணர்ந்தான்.. சிறிது நேரம் கழித்து கதிரவனும் கிழே இறங்கி வரவே மீண்டும் அங்கே கேலியும் கிண்டலும் சிரிப்பும் அதிகரித்தது.. நேரம் பார்த்த அழகேசன்.. சரிடா கதிரவா நாளை பார்க்கலாம் என்று கிளம்ப தயாரானான்..

“ சரி எல்லாருக்கும் குட் நைட்”  என்று கூறி அழகேசன் கிளம்பினான் அவனை வழியனுப்ப கதிரவன் வாசல் வரை வந்தான் கூடவே வசுமதியும் வந்தாள்.. 

“மாப்பிள்ள டாட்டா .. மா தங்கச்சி டா டா “  என்று கூறியபடி வண்டியை கிளப்பினான்..

“ குட் நைட் அண்ணா “ என்றபடி அவளும் கையசைத்தாள்.. இருவரும் வெளியே தனித்து நின்றனர்  வெளியே மிகவும் நன்றாக இருந்தது.. சிலு சிலு என்று காற்றும்.. நீர் கொண்ட கருமேகங்களும்.. மெய் சிலிர்க்க வைத்தது..

“ வாவ் கிளைமேட் சூப்பர் அத்தான்..”

“ ஆமாம் மதி..”

“எனக்கு இந்த கிளைமேட் மிகவும் பிடிக்கும் அத்தான்.. ஜில்லுனு காற்று “ என்று தன் இரு கைகளையும் கட்டிகொண்டாள்..

“ எனக்கும் தான்” அவளின் அருகாமையும் அந்த ஊதல் காற்றும் அவனை ஏதோ செய்தது..

“ அத்தான் எனக்கு ஒரு ஆசை”  என்ன என்பதுபோல் அவளை பார்த்தான்..

“ இந்த கிளைமேட்டில் இருபுறமும் மரங்கள் அடர்ந்த சாலையில் பைக்கில் போனால் எப்படி இருக்கும் ??”

“ வித்தியாசமான ஆசைதான் மதி”  என்று “ கூறியவாரே நன்றாக இருக்கும் மதி “ என்றான்..

“ நீ அப்படி சென்று  இருக்கின்றாயா ??” என்று அவசரமாக ஒரு கேள்வி கேட்டான்..

“ ம்ம்ஹு யாருடன் போவது ??” என்று உதடு பிதுக்கினாள்.. அவளின் இந்த செய்கை அவனை நிலைகுலைய வைத்தது… “ சரி மதி குளிர் ஆரம்பித்துவிட்டது உள்ளே செல்லலாம் “ என்று என்று கூறி வேகமாக உள்ளே சென்று விட்டான்..

“ என்ன பேசிக்கொண்டு இருக்கும் போது இப்படியா செல்வது” என்று அவனை திட்டிக்கொண்டே உள்ளே வந்தாள்.. அவனின் தவிப்பு அவளுக்கு என்ன தெரியும்..     மறுநாள் காலை பொழுது அழகாக விடிந்தது.. கதிரவன் வசுமதியின் கண்களில் படவேயில்லை.. அதற்கு காரணமும் இருந்தது.. வேகமாகவே தங்களின் குடோன் சென்று விட்டான்..          

அவனை காணவில்லை என்று சற்று நேரம் தேடிய வசுமதி பின் எதாவது வேலை இருக்கும் சென்று இருப்பான் என்று எண்ணினாள்.. கதிரவனுக்கோ அங்கு எந்த வேலையும் ஓடவில்லை.. அவனின் மனம் முழுதும் மதி மட்டுமே இருந்தாள்.. அவளின் நினைவுகளே அவனை மீண்டும் மீண்டும் சுற்றி வந்தது..  

பொழுது போகவில்லை என்றால் வசுமதி போதும் புத்தகமும் கையுமாக அமர்ந்து விடுவாள்..  சில நேரம் அதுவும் சலிப்பு தட்டினால்  சென்று அனைவரிடமும் அரட்டை அடிப்பாள்.. அம்மாச்சியுடன் கதை பேசுவாள்.. அவளின் அத்தைக்கு உதவியாக இருப்பாள்.. வீட்டில் வேலை செய்பவரிடம் எல்லாம் சென்று பேசுவாள்.. தோட்டத்தில் உலவுவாள்..

காமாச்சியிடமும்  தன் அம்மாச்சியிடமும் வீட்டு பழக்கங்கள் அனைத்தும் பழகினாள்.. இருவரையும் அமரவைத்துவிட்டு இவளே எல்லா வேலைகளையும் கவனித்தாள்.. அழகாக நிர்வகித்தாள்.. காமச்சியை அம்மா என்றும் அன்னபூரணியை பெரியாத்த என்றும் அழைப்பது வழக்கம்.. வேலைக்கு வரும் ஆட்கள் வசுமதியை சின்னம்மா என்று அழைக்க ஆரம்பித்தனர்..

முதலில் இதை வசுமதி ஒத்துக்கொள்ளவில்லை.. என்னை அப்படி அழைக்காதீர்கள் என்று கூறி பார்த்தாள்.. பேசாமல் இருந்து பார்த்தாள்.. ஆனால் யாரும் மசியவில்லை..  தன் அத்தையிடமும் பாட்டியிடமும் சென்று முறையிட்டாள்.. “ அவர்களுக்கு பிடித்த வகையில் அழைக்கட்டும் கண்ணம்மா” என்று இருவரும் அவளை சமாதானம் செய்தனர்.. பின் அவர்களை மாற்றமுடியாமல் அமைதியாக இருந்துவிட்டாள்..   

அந்த வீட்டின் பெரிய பெண்கள் இருவரும் என்ன நடக்க வேண்டும் இவள் எப்படி இருக்க வேண்டு என்று விரும்பினரோ அது கொஞ்சம் கொஞ்சமாக நடந்து கொண்டு இருந்தது..  இப்படியாக அவளின் வாழ்கை சீராக சென்று கொண்டு இருந்தது.. ஆனால் கதிரவன் மட்டும் அவளிடம் இருந்து ஒதுங்கி ஒதுங்கி செல்வது போல் தோன்றியது வசுமதிக்கு..

“ நான் ஏதாவது தவறு செய்துவிட்டேனா??”  என்று எண்ணினாள்.. ஆனால் அவளே எதிர்பார்க்காத வண்ணம் கதிரவனே அவளை தேடி வந்து பேசினான்.. ஆனால் அந்த பேச்சு முற்றிலும் அவள் எதிர்பார்க்காத வகையில் இருந்தது..

அன்று இரவு முழுவதும் கதிரவனுக்கு உறக்கம் பிடிக்கவில்லை..மதியின் வார்த்தைகளே மீண்டும் மீண்டும் அவன் நினைவில் உலா வந்தது..

“நான் இந்த வீட்டின் பழக்கவழக்கம் அனைத்தையும் பழகவேண்டும் மாமா.. இந்த வாழ்கை முறைக்கு என்னை மாற்றிக்கொள்ள நினைக்கிறன் மாமா, என்னை மதி என்று அழைப்பதற்கு அத்தானுக்கு மட்டுமே உரிமை உள்ளது அழகேசன் அண்ணா “ இந்த வார்த்தைகளே அவனின் மனதிலும் செவிகளிலும் மீண்டும் மீண்டும் ஒலித்து அவனை பேரும் இம்சைக்கு ஆளாக்கியது..

“என்ன மாதிரியான உணர்வு இது.. ஏன் இப்படி அவளின் வார்த்தைகளே நம்மை இப்படி குழம்ப செய்யகிறது.. அவளுக்கும் என்னை பிடித்து இருக்கிறதா என்ன ??”

“ அவளுக்கும் என்றால் என்ன அர்த்தம் ?? அப்போ எனக்கும் அவளை பிடித்து உள்ளதா ??? என்ன இது எதிலும் தெளிவாக உறுதியான முடிவு எடுப்பவன் என்று பெயர் வாங்கிவிட்டு இன்று இவளின் நினைவுகளால் தூக்கம் வராமல் என் மனதில் என்ன நினைக்கிறேன் என்றே உணரமுடியாமல் இப்படி தவிக்கின்றேனே.. என் இயல்பை இப்படி எல்லாம் மதியின் வரவு மாற்றிவிட்டதா???  முதலில் என்னை நானே கண்டுகொள்ள வேண்டும்.. “

அவன் மனதே அவனிடம் நிறைய கேள்விகள் கேட்டது.. “ மதியை தவிற வேறு யாரிடமாவது இதுவரை இத்தனை உரிமையோடு பேசி சண்டை இட்டு அவளை சமாதானம் செய்து இப்படி அவளின் ஒரு ஒரு வார்த்தைக்கும் காத்திருப்பாயா ???”

மதியை தவிற வேறு ஒரு பெண்ணா ?? முடியவே முடியாது …

“ சரி காலை உன் அப்பா மதிக்கு வரன் வந்துள்ளது என்று கூறும்போது எப்படி உணர்ந்தாய் ??”

“ அது .. அது எப்படி என்று சொல்ல தெரியவில்லை.. ஆனால் எனக்கு அதில் எந்த உடன்பாடும் இல்லை.. ஒரு வேலை அவள் சரி என்று கூறிவிடுவளோ என்று பயமாக இருந்தது..”

“ ஏன் பயமாக இருந்தது..???”

“ அது அவள் என் அத்தை மகள்.. முதல் உரிமை எனக்கு தான்.. அவள் எங்கள் வீட்டு பெண்..”

“ இது மட்டும் தான் காரணமா ??”

“ அவள் என் மதி.. அவளை எப்படி இன்னொருவனுக்கு மணம் முடித்து தர முடியும் அதிலும் ஆஸ்திரேலியாவிற்கு… ம்ம்ஹு முடியவே முடியாது… “

“ சரி ஒருவேலை உன் வீட்டில் மதியை வேறு ஒருவனுக்கு திருமணம் செய்து தர முடிவு செய்தால் என்ன செய்வாய்???”

“ என்னை மீறி எந்த விசயமும் நடக்காது “ என்றான் உறுதியாக… “ அப்போ உனக்கு புரியவில்லையா முட்டாள் உன் மனதில் அவள் தான் இருக்கிறாள்”  என்றது அவன் மனது.. இது எப்படி சாத்தியமாகும் என்று நினைத்தான்..

“ அடடா காதல் எல்லாம் ஜாதகம் பார்த்து நல்ல நேரம் பார்த்து இது சரியா தவறா என்று யோசித்து கொண்டா வரும் “ என்று அவன் மனதே கேட்டது..

“ உனக்கே தெரியாமல் உன்னுள் நேசத்தை வளர்த்துவிட்டாள் அவள் “ என்றது அவனின் மனது.. கதிரவனுக்கு தான் அவள் மேல் கொண்ட காதலை உணர்ந்ததும் மகிழ்ச்சி தாங்கவில்லை..     

“ நான் காதலிக்கின்றேனா ??? அதுவும் மதியை… ஓஹோ!! இது என்ன இப்படி நான் இந்த குட்டச்சியிடம் மாட்டிக்கொண்டேன்“ என்று அவனாக மகிழ்ச்சியாக பேசிகொண்டான்..

“அப்பத்தாவை கேட்கவே வேண்டாம்… அம்மா அப்பா மிகவும் சந்தோஷம் கொள்வார்கள்.. ஆனால் இது எல்லாம் வீட்டில் இருப்பவர்களுக்கு முன்பே தெரியுமோ.. அதுனால் தான் என்னையும் மதியையும் கண்டும் காணமல் விட்டார்களோ.. எது எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும் அவள் எனக்கு தான் எனக்கு மட்டுமே தான் “ என்று கூறிக்கொண்டான் ..      

“ என் மதி.. எனக்கு மட்டுமே சொந்தமான மதி.. மதி…. மதி… மதி…”

 

 “மதி முகம் கண்டேனடி – நான்

 மதி மயங்கி நின்றேனடி “

அங்கு இருந்த ஒரு காகிதத்தில் இப்படி எழுதி வைத்தான்.. காதல் வந்ததும் கவிதையும் தானாக வந்துவிடுமாமே என்று அவனாக நகைத்து கொண்டான்.. 

 “ ஆகா முதல் நாளே இப்படி நம்மை தூங்க விடாமல் தனியே இப்படி புலம்ப வைத்துவிட்டாளே..இனி வாழ்நாள் முழுவதும் நம்மை என்ன பாடு படுத்தபோகிறாளோ… ஒரு நிமிடம்.. ஒரு நிமிடம்.. மனமே அமைதியாக இரு.. நான் என் பக்க முடிவை வைத்து மட்டுமே கற்பனையை வளர்க்க முடியாது.. மதி என்ன நினைக்கிறாள், அத்தை மாமா எல்லாம் என்ன நினைப்பார்கள் என்று தெரியவேண்டுமே.”

“ ஒரு வேலை அவர்கள் அங்கே படித்து வேலை பார்க்கும் மாப்பிள்ளைக்கு மணம் முடிக்கும் எண்ணத்தில் இருந்தால் ?? அவளின் அங்கு இருக்கும் பழக்கதிர்க்கும் இங்கு இருக்கும் முறைக்கும் அனைத்தும் ஒத்து வருமா ?? சிவில் படித்தவள்.. வேலைக்கு செல்கிறாள்… என் காதலால் அவளின் அத்தனை ஆசைகளும் காணல் நீராக வேண்டுமா ?? என் காதலை வெளிப்படுத்தி அவளை திருமணமும் செய்து கொண்டால்  அவளை இங்கேயே முடக்கி வைத்தது போல் ஆகாதா?? “ இப்படி வேண்டாத சிந்தனை எல்லாம் வந்து போனது..

“ முதலில் அவளுக்கு என்னை பிடிக்க வேண்டுமே, பிடிக்காமல் தான் என்னிடம் பேசுகிறாளா ?? எப்படி பேசுகிறாள் ?? இயல்பகத்தனே இருக்கிறாள் வேறு எந்த வித்தியாசமோ நெருக்கமோ தெரியவில்லையே ??”

“ முதல் அடியை நீ எடுத்து வை.. நீ முதலில் நெருங்கி பழகு அவளிடம்.. உன் காதலை செயல்களாலும் வார்த்தைகளாலும் அவளுக்கு உணர்த்து… பின் அவளே உன்னை புரிந்து கொள்வாள் “ என்று அவனின் மனமே அவனுக்கு அறிவுரை வழங்கியது.. இப்பொழுதே சென்று அவளை காண வேண்டும் போல் இருந்தது அவனுக்கு.. இதோ இங்கு தான் இருக்கிறாள்.. எதிர் அறையில் தான் இருக்கிறாள்..

“ கை எட்டும் தூரத்தில் இருந்து கொண்டு என்னை படுத்துகிறாள்.. போய் பார்க்கலாமா என்று ஒரு நிமிடம் எண்ணியவன் இல்லை இல்லை வேண்டாம்.. இப்போது எதுவும் கூடாது முதலில் அவள் மனதில் என்ன இருக்கிறது என்று அறிய வேண்டும்.. ஆனால் ஆனால் இது எல்லாம் சரிபட்டு வருமா ??? வசந்தி அத்தைக்கு ஆசை இருந்தாலும் மாமா இதற்கு சம்மதிக்க வேண்டுமே.. அவருக்கும் தன் மகளின் வாழ்க்கை பற்றி நிறைய கனவுகள் இருக்கும் அல்லவா??”

“  உங்கள் அனைவரையும் நம்பிதானே என் மகளை இங்கு விட்டு சென்றேன் நீயே இப்படி செய்யலாமா ?? என்று கேட்டுவிட்டால்.. இல்லை என் காதல் சிறிது காலத்திற்கு என்னுள்ளே இருக்கட்டும். நேரம் வரும்பொழுது தான் வெளிபடுத்த வேண்டும்.. இல்லை என்றால் அனைவருக்கும் கஷ்டம்தான்.. சரியான நேரம் வரும் வரை மதியிடம் இருந்து சற்று ஒதுங்கியே இருக்க வேண்டும்”  என்று சரியாக தவறான முடிவு ஒன்றை எடுத்தான்..

ஆனால் இதற்கு எல்லாம் காரணமானவளோ நிம்மதியாக அவன் தந்த சாக்லேட்டை உண்டுவிட்டு உறங்கி கொண்டு இருந்தாள்.. கதிரவனோ உறக்கம் வராமல் தவித்து கொண்டு இருந்தான்.. மறுநாளில் இருந்து மறுபடியும் இவர்களின் கண்ணாமூச்சி ஆட்டம் ஆரம்பித்தது.. ஆனால் இது பெரியவர்கள் பார்வைக்கு தெரியாத வன்னம் வைத்துகொண்டான்..

வசுமதிக்கு தான் கதிரவனின் இந்த திடீர் மாற்றத்தை எல்லாம் எண்ணி எண்ணி மிகவும் குழம்பி போனாள்.. நேற்று வரை நன்றாக பேசினான் ஆனால் இன்று என்ன வந்தது இவனுக்கு..

“ நான் எதுவும் அவனைகோவபடுத்தும் விதமாக எல்லாம் நடக்கவில்லையே பின் என்னவாயிற்று “ என்று நினைத்தாள்..

“ ஏன் எப்பொழுதும் அவன் என்ன நினைக்கிறான்.? அவன் நம்மை எதுவும் தப்பாக நினைத்துவிடுவானோ என்றே பயம் கொள்கிறோம்.. ஏன் இப்படி அவனின் எண்ணங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து நான் ஏதாவது தவறு செய்துவிட்டேனோ என்று என்னை நானே சந்தேகிக்கிறேன்?  ச்சே இப்படி என்னை நானே சந்தேகிக்கும் அளவுக்கு என்னை மாற்றி விட்டானே “ என்று புலம்பி தீர்த்தாள்..

ஆனால் இதெல்லாம் ஏன் எதற்கு என்று தன் மனதிடம் கேள்வி எழுப்பியிருந்தாள் என்றாள் அதற்கான விடை கிடைத்து இருக்கும்…  இந்த குழப்பத்தில் இருந்து தன்னை விடுவித்துகொள்ள வீட்டில் அனைத்து வேலைகளையும் இழுத்துபோட்டு கொண்டு செய்தாள்..         

ஒரு வழியாக வீட்டு பொறுப்புகள் எல்லாம் அவளிடம் வர காமச்சியிடமும் அன்னபூரனியிடமும் வீட்டை நிர்வகிப்பதில் கெட்டிக்காரி என்று பெயரும் பெற்றாள்.  அந்த வீட்டின் சாவிகொத்து மட்டும்தான் இவள் இடுப்பில் தொங்கவில்லை மற்றபடி எல்லாமே அவளிடம் ஒரு வார்த்தை கேட்டு இல்லையென்றால் அவள் கூறுவது தான் அங்கு வழமை ஆனது.. வேலையாட்களே புரிந்து கொண்டனர்.. சரி இந்த வீட்டின் அடுத்த எஜமானி அம்மாள் வசுமதி தான் என்று.. ஆனால் அவர்கள் தரும் மரியாதை முக்கியத்துவம் எல்லாம் வசுமதிக்கு வித்தியாசமாகவும் சந்தோசமாகவும் இருந்தது..

அப்படித்தான் அன்று ஒருநாள் வீட்டில் காமாச்சி, சிவபாண்டியன் இருவரும் ஏதோ ஒரு வீட்டின் விசேஷத்திற்கு சென்று விட்டார்கள்.. பெரியாத்த ஓய்வு எடுத்துக்கொண்டு இருந்தார்.. வசுமதி மட்டும் தான் வீட்டில் இருந்தாள்…

கதிரவன் அப்பொழுது ஏதோ முக்கியமான குத்தகை பத்திரம் எடுப்பதற்காக வீட்டிற்கு வந்தான்.. கதிரவனின் வண்டி சத்தம் கேட்டதுமே தோட்டத்தில் இருந்த வசுமதி வீட்டின் உள்ளே வந்து எட்டி பார்த்தாள்.. வீட்டில் யாரும் இல்லை.. இது ஒரு நல்ல வாய்ப்பு இவனிடம் கேட்கலாம் ஏன் இப்படி பேசாமல் ஒதுங்கி ஒதுங்கி போகிறான் என்று நினைத்தாள்.. 

அவனிடம் சென்று பேசலாம் என்று எண்ணியவள் கதிரவன் அவர்கள் வீட்டின் இரும்பு பெட்டி (கஜானா ) இருக்கும் அறைக்கு சென்று ஏதோ பத்திரங்களை எடுத்து கொண்டு வெளியே வந்து ஹாலில் அமர்வதை கண்டாள்.. அவன் முகமே ஏதோ டென்சனில் இருக்கிறான் என்பதை காட்டியது….

“சரி இப்பொழுது நாம் எதுவும் பேசக்கூடாது”  என்று நினைத்தவள் ஹாலில் வந்து பேன் சுவிட்சை போட்டு விட்டு சமையல் அறைக்கு சென்று அவனுக்கு குடிக்க நீர் மோர் கலக்கி கொண்டு வந்து அவன் முன் வைத்தாள்.. அவள் முன் வந்து மோர் டம்ப்ளரை வைக்கவும் தான் இவன் நிமிர்ந்து பார்த்தான்.. அப்பொழுதுதான் புரிந்தது வீட்டில் வசுமதியை தவிற யாருமில்லை…

சுற்றும் முற்றும் ஒருமுறை பார்த்தான்..

“ அத்தை மாமா எல்லாம் விசேஷம் ஒன்றுக்கு சென்றிருக்கிறார்கள்.. அம்மாச்சி ஓய்வு எடுக்கிறார்கள் “ என்றாள் உணர்ச்சிகள் எதுவும் அற்ற குரலில்.. அவன் அதற்கு எந்த பதிலும் கூறவில்லை.. மறுபடியும் தன் வேலையை தொடர ஆரம்பித்தான்..

“ என்ன திமிர் இவனுக்கு.. பேசுகிறேனே எதாவது பதில் கூருகிறானா ?? ச்சே இவனுக்கு போய் நான் மோர் எடுத்து வந்தேனே என்னை சொல்ல வேண்டும்.. ஆனால் எனக்கு இவன் மீது கோவம் கூட வரமாட்டேன் என்கிறதே.. “ என்று எண்ணினாள்..   

வசுமதிக்கு மிகவும் கஷ்டமாக இருந்து ஏன் இப்படி செய்கிறான் என்று எண்ணினாள்..  ஒரு நிமிடம் பதில் கூறுவான் என்று எண்ணி அங்கே நின்றாள் ஆனால் அவனோ குனிந்த தலை நிமிரவே இல்லை.. அவனுக்கு அவள் வீட்டின் வழக்கம் போல் மோர் கலக்கி கொண்டு வந்ததே மிகுந்த ஆச்சர்யம் தந்தது.. ஆனால் மனதினுள் அவனாக பேசிகொண்டான்..

“ மதி எனக்கு தெரியும் நீ என்ன நினைக்கிறாய் என்று.. ப்ளீஸ் மதி என்னை தவறாக எண்ணாதே. எல்லாம் இன்னும் கொஞ்ச நாள் மட்டும் தான் மதி பொறுத்துக்கொள்..  உன் முகமே காட்டுகிறது, மதி நான் செய்யும் செயல்கள் எல்லாம் உன்னை இவ்வளோ பாதிக்கின்றனவா ???  “

மதி சிறிது நேரம் நின்று விட்டு அவன் எதுவும் கூறவில்லை என்றதும் சென்று விட்டாள் பின் பக்கம் என்ன வேலை நடக்கிறது என்பதை பார்க்க. அதே நேரம் வீட்டு வேலை செய்யும் ஒருவன் வந்தான்..

கதிரவனை கண்டதும் தம்பி “ சின்னம்மா இல்லையா தம்பி “ என்று கேட்டான்..

“ யார் ?? யாரை கேட்கிறாய் முத்து”  என்றான்..

“ அதான் தம்பி நம்ம சின்னம்மா வரச்சொன்னாங்க “ என்றான்..

“ சின்னம்மவா ?? யாரை சொல்கிறான் இவன்” என்று எண்ணியவாரே “அம்மா அப்பா எல்லோரும் வெளியே சென்று இருக்கிறார்கள்.. தங்கம் அக்கா கூட இங்கு இல்லை” 

அந்த நேரம் “ என்ன முத்து அண்ணா நான் எப்போது வர சொன்னேன் நீங்கள் இப்போதுதான் வரிங்க “ என்றபடி உள்ளே வந்தாள்..

“ இல்லை சின்னம்மா கொஞ்சம் லேட் ஆய்டுச்சு “ என்றான் தன் தலையை சொறிந்தபடி..

“ ஆகா !!! இவள் தான் இந்த வீட்டின் சின்னம்மாவா. இது எப்போ இருந்து நடக்கிறது.. நமக்கு தெரியாமல் வீட்டில் நிறைய விஷயம் நடக்கிறது போலவே”  என்று எண்ணியபடி நடப்பதை கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தான்..

“ ம் சரி சரி லேட்டாக வந்து விட்டு அதற்கு பொய்யாக ஒரு காரணம் வேண்டாம் “ என்றாள் சற்று அழுத்தமான குரலில்..

அவள் குரலில் ஆளுமையும் மரியாதையும் கலந்து ஒலித்தது.. “ அட இவளால் இப்படி கூட பேச முடியுமா ??” என்ன என்று வியந்தான்..

“ இனிமே இப்படி நடக்காதுங்க சின்னம்மா”  என்றான் முத்து..

அவனுக்கு ஒரு தலையசைப்பை கொடுத்து அவனுக்கான வேலைகளை பட்டியல் போட தொடங்கினாள். இது எல்லாம் கதிரவனுக்கு பார்க்க பார்க்க ஒரு புறம் சந்தோசமாகவும் இன்னொரு புறம் ஆச்சர்யமாகவும் இருந்தது..

“ குட்டச்சி நீ கலக்குற டி”  என்று மனதினுள் நினைத்துகொண்டான்.. அவள் கூறுவதற்கு எல்லாம் முத்து சரிங்க சின்னம்மா என்று கூறி கொண்டே இருந்தான்.. சரிங்க முத்து அண்ணா இந்தாருங்கள் என்று ஒரு ஐம்பது  ரூபாய் தாளை குடுத்து “ டீ அல்லது காபி செலவிற்கு வைத்து கொள்ளுங்கள்”  என்றாள்.. அவனுக்கு அவளோதான் வாய் எல்லாம் பல்லாகி விட்டது..

கதிரவன் இமைக்க மறந்து தன் மதியை பார்த்து கொண்டு இருந்தான்..                                                                                            என்னதான் நடக்கிறது வீட்டில்.. ஒரு நான்கு  நாட்களாக வீட்டில் சரியாக இல்லை அதனால் இது எதுவும் எனக்கும் தெரியவில்லை..

“ ஆக வீட்டில் அனைவரின் மனதிலும் இடம் பிடித்துவிட்டாள்.. அனைவரின்  மனதிலும் இந்த எண்ணம் இருக்க வேண்டும் இல்லையென்றால் யாரும் அவளை சின்னம்மா என்று அழைக்க சரி சொல்லி இருக்க மாட்டார்கள்.. “

இது மறைமுகமான சம்மதம் அல்லவா சம்மதம் என்பதை விட அவள் இந்த வீட்டிற்கு மருமகளாய் வர மறைமுகமான விருப்பம் அல்லவா.. புரிந்துகொண்டான். “ நான்தான் எதையும் கவனிக்காமல் விட்டுவிட்டேன். ச்சே என்ன ஒரு முட்டாள் தனம்.. ஆனால் மதி எப்படி இதற்கு எல்லாம் சம்மதித்தாள்.. ஒரு வேலை ஒரு வேலை. அவளுக்கும் இதில் விருப்பம்தானா?? அவசரம் வேண்டாம் கதிர்.. பொறுமை பொறுமை… அவளின் மனதில் என்ன இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டு மேலே முடிவு செய் “ என்றது அவன் மூளை..

“ சரி முதலில் அப்பத்தாவிடம் கொஞ்சம் பேசவேண்டும்”  என்று  சென்றான்..

“  வா கண்ணப்பா அப்பொழுதே உன் வண்டி சத்தம் கேட்டது அறைக்கு வருவாய் என்று இருந்தேன் “ என்றார்..

“ அப்பொழுதே  வந்துவிட்டேன் அப்பத்தா.. புதிதாய் வாங்கின தோப்பின் பத்திரம் எடுக்க வந்தேன் “ என்றான்… 

“ ஒஹோ சரி !!! எதாவது  குடித்தாயா” 

அவன் மெல்ல நகைத்தபடி ” ம் குடித்தேன் குடித்தேன்.. இந்த வீட்டின் சின்னம்மா குடுத்தார்கள்”  என்றான்.. “ இனி அப்படி தானே கூறவேண்டும் உன் பேத்தியை “ என்றும் கூறி கொண்டான்..

அதை கேட்ட அன்னபூரணிக்கும் சிரிப்பு வந்தது.. “ அவள் முன் அப்படி எதுவும் கூறிவிடதே கண்ணப்பா.. இவள் பழகும் விதம் பார்த்து வேலையாட்கள் அவர்களாகவே அப்படி கூப்பிட்டார்கள். இதற்கே அவளுக்கு சரி கோவம். முதலில் இதை அவள் ஏற்றுகொள்ளவே இல்லை.. அத்தானுக்கு மனைவியாய் வருபவருக்குதான் இந்த பெயர் இந்த உரிமை எல்லாம் இருக்கிறது என்று ஒரே அடம்..  பின் நானும் உன் அம்மாவும் கொஞ்சம் அவளை சமாளித்து சமாதானம் செய்யவும் அமைதியாகிவிட்டாள்.. “

அவன் மனதினுள் சிரித்து கொண்டான்.. “ சரி அப்பத்தா.. கொஞ்சம் வேலை இருக்கிறது மத்தியம் சாப்பிட தான் வருவேன்”  என்று கூறிவிட்டு வண்டியை கிளப்பி சென்று விட்டான்..

 

Advertisement