Advertisement

உன் நினைவு 3

உன் விழி பார்த்து

நான் நிற்க..

என் முகம் பார்த்து

நீ தவிக்க..

உனக்கும் எனக்கும் இடையில்

நடப்பது எதுவோ ??

விடை தெரியா கேள்விக்கு

விடை என்னவோ  ??? 

வசுமதியும் அவளின் குடும்பமும் சென்னையிலிருந்து போடிக்கு வந்து ஒரு வாரம் ஆயிற்று.வசந்திக்கு  மகிழ்ச்சியும்  நிம்மதியும் தாளவில்லை. எதோ தனி உலகத்தில் இருப்பது போல தன் அம்மா அண்ணி அண்ணன் என்று அவர்களிடமே பேசிக்கொண்டும் முன்னும் பின்னும் சுற்றிக்கொண்டும் இருந்தார்.

பின்னே சும்மாவா இருபற்றி ஐந்து வருட கதைகளை எல்லாம் பேசி முடிக்க வேண்டாமா ??

சிவாவிற்க்கு கதிரவன் உடன் சுற்றவே நேரம் சரியாக போயிற்று. சண்முகநாதன் சிவபாண்டியன் இருவரும் சேர்ந்து வெளியே சென்றால் அவர்களுக்கு நேரம் போவதே தெரியவில்லை. அனைவருக்கும் பேசவும் செய்யவும் ஏதாவது விஷயங்களும் வேலைகளும் இருக்கவே செய்தன..

ஆக மொத்தத்தில் அங்கு தனித்து விடப்பட்டது வசுமதி தான்.

முதல் மூன்று நாட்கள் வீட்டையும் வீட்டை சுற்றி உள்ள தோட்டத்தையும் சுற்றி சுற்றி வந்தாள். பின் ஒருவாறு அங்கு நடைபெறும் தினசரி வேலைகள், யார் யார் என்ன என்ன வேலைகள் செய்கின்றனர் எந்த நேரம் வீட்டில் ஆட்கள் வேலை செய்ய வருவர் எந்த நேரம் செல்வர், அம்மாச்சி எப்பொழுது எழுந்திருப்பார், அத்தை என்ன மாதரி வீட்டை நிர்வாகம் செய்கிறார் என்று ஒரு ஒரு விஷயமாய் கவனித்து மனதில் பதித்து கொண்டாள்.

இன்னொரு முறை தன்னை அந்த கதிரவன் குறை கூறும் படி நடந்து கொள்ள கூடாது என்று மனதில் நினைத்து கொண்டாள்..

முக்கியமாக கதிரவன் எந்த நேரம் வீட்டில் இருப்பான் எந்நேரம் வெளியே செல்வான் என்று மனதில் பதித்து கொண்டாள். அவன் வாசலில் வந்தான் என்றால் இவள் சாதாரணமாக மாடி ஏறுவது போல் அவளின் அறைக்கு சென்று விடுவாள். அவன் அறையில் இருந்தான் என்றால் இவள் கிழே இருப்பாள் இல்லை அவளின் அறையிலேயே முடங்கி விடுவாள்..

அவனுமே அப்படி தான் அவள் அம்மச்சியுடன் இருந்தாள் என்றால் இவன் ஹாலில் இருப்பான், இல்லை அங்கே படிக்கும் அறையில் இருந்து விடுவான். தவிர்க்க முடியாத சமயங்களில் பட்டும்படாமல் தாமரை இலை மேல் தண்ணீர்துளி போல் ஒட்டாமல் இருந்தனர். அவர்களின் கண்ணாமூச்சி ஆட்டத்தை சிவா, அன்னபூரணி, காமாட்சி கவனித்து கொண்டேதான் இருந்தனர்.

இப்படியே பத்து நாட்கள் சென்று விட்டன, வசந்தி தன் அம்மா மற்றும் அண்ணனிடம் “  நாங்கள் வந்து பத்து நாட்கள் ஆனது அம்மா, அவரும் இங்கு இருந்து போன் வரவும் போட்டது போட்டபடி வந்துவிட்டார், சிவாவிற்க்கும்  இன்னும் இரண்டு நாளில்  காலேஜ் திறக்கிறது, நாங்கள் ஊருக்கு போகவேண்டும் “ என்று கூறவும்

கதிரவனுக்கோ மனதினுள் ஏதோ சொல்ல முடியாத கலக்கம். ஒருவேலை வசுமதி சென்றுவிடுவளோ என்று எண்ணினான். அவன் பார்வை அவனை அறியாமல் மதியிடம் தான் சென்றது, ஆனால் முகத்தில் எதையும் காட்டாமல் இருந்தான்..

இதை அவனின் அப்பத்தா கண்டுவிட்டார்.

சிறிது அமைதிக்கு பின் “ அதுவும் சரி தான் வசந்திம்மா பிழைப்பு என்று ஒன்று  இருக்கிறதே.. ஹ்ம்ம் இப்ப தான் எல்லாம் சரி ஆகிவிட்டதே அதுவே போதும் ஆனால்  சமயம் கிடைக்கும் போது எல்லாம் நீங்கள்  வந்துவிடனும் ” என்று கூறினார்.

வசந்தியும் சண்முகநாதன் இருவருமே நாங்கள் இங்கு வராமல் வேறு எங்கு செல்ல போகிறோம் நீங்கள் எதுவும் மனதில் வருத்தபடவேண்டாம் என்று கூறினர்.

வசுமதிக்கு ஏனோ மனதினுள் சொல்ல முடியாத ஒரு வருத்தம் குடிகொண்டது. அனைவருடனும் நன்கு பழகிவிட்டு இப்படி அவனிடம் மட்டும் முகம் திருப்பிக்கொண்டு செல்கிறோமே என்று எண்ணியவள், அவளை அறியாமலே கதிரவனை பார்த்தாள்.

அவனும் அதையே எண்ணியவன் அவளை தான் பார்த்துகொண்டு நின்றான். இருவரின் பார்வையும் ஒன்றோடு ஒன்று பின்னி நிலைத்து நின்றன.

காமாட்சி இதை கவனித்து விட்டு தன் நாத்தியிடம் “ வசந்தி அவருக்கு ஆபீஸ் வேலை, சிவாவிற்க்கு காலேஜ், உனக்கு அவர்கள் இரண்டு பேரையும் கவனிக்கும் வேலை. சரி, ஆனால் வசுமதி அங்கு வந்து என்ன செய்ய போகிறாள்?? அவளை இங்கு விட்டு போகலாம் இல்லையா ?? “ என்று கைகளை பிடித்து கேட்டார்..

அதற்கு சிவா, “ அட அத்தை என்ன இப்படி சொல்லிவிட்டிங்க சுமதிக்கு அவள் தான் சென்னை முழதும் தாங்குகிறாள் என்று நினைப்பு, அவள் இல்லாமல் அங்கு ஒரு அணுவும் அசையாது என்று அவள் மனதில் ஒரு அசாத்திய நம்பிக்கை”  என்று வம்பிளுத்தான்.

முன் மாதிரி என்றால் அவனை ஒரு வழி செய்து இருப்பாள் ஆனால் இப்பொழுதோ அவன் பேசியதை அவள் சட்டை செய்யவே இல்லை.

“ ஆமா வசந்தி, வசுமதி இங்கயே இருக்கட்டுமே” என்று அன்னபூரணி கூறவும் வசந்தி வசுமதியிடம் வந்து

“ ஏன் சுமதி உன்னை தான் இங்க எல்லாரும் இருக்கும்படி கூறுகிறார்கள், உன் முடிவு என்ன ??”  என்று கேட்டார்..

வசுமதி ஒரு நிமிடம் அவர் என்ன கூறினார் என்றே கவனிக்கவில்லை, “ ஆங்.. என்னம்மா என்ன ??” என்று கேட்டாள் ,

“ சரியாய் போனது நீ எங்களுடன் வருகிறாயா இல்லை இங்கேயே இருக்கிறாயா??”  என்று கேட்டகவும் அவளுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை..

அவள் எண்ணங்கள் அனைத்தும் கதிரவனையே வலம் வந்தது.. இவன் என்ன நினைப்பான் என்றே அவள் எண்ணிக்கொண்டு இருந்தாள்..

கதிரவனின் பார்வை வசுமதியிடமே நிலைத்து நின்றது. இவள் என்ன கூறப்போகிறாள் ஊருக்கு கிளம்பிவிடுவாளோ?? அவன் மனதின் ஒரு மூலையில் அவள் இங்கு இருக்கவேண்டுமே என்று ஒரு எண்ணம் தோன்றி மறைந்தது.

 “   ஆமா நீ அப்படியேஅவளிடம் நடந்துகொள்ளும் முறைக்கு அவள் இங்கு இருந்துவிட்டு தான் மறுவேலை பார்ப்பாள்”  என்று அவனின் இன்னொரு மனம் அவனை இடித்தது..  தன் மகனின் முகத்தில் என்ன கண்டாரோ, அவரே வசுமதயிடம் சென்று “ சிறிது நாள் இங்கேயே இரு வசும்மா, நீயும் போயிவிட்டால் வீடு வெறிச்சோடி இருக்கும். உன் அத்தைக்கும் பெண் குழந்தை இல்லை என்று கவலை. நாங்கள் ஆண் பிள்ளைகள் காலையில் வெளியே போனால் பொழுது சாய்ந்து தான் வருகிறோம், நீயும் இல்லாமல் அம்மாச்சிக்கும் அத்தைக்கும் எப்படியோ இருக்கும்”  என்று அவளின் தலையை வருடியபடி கூறினார்.

“ இல்லை மாமா அது வந்து “ என்று அவள் பதில் கூறும் முன்னே ,

“ அப்பா விடுங்க இருக்க இஷ்டமிருந்தால் தானாகவே இருப்பாள், அதைவிட்டு இப்படி எல்லாரும் தாங்க வேண்டும் என்று நினைக்க மாட்டாள்”  என்று அவனின் கோவத்தை வெளிக்காட்டி விட்டான்..

வசுமதி வேறு எந்த பதிலும் கூறாமல் “ மாமா நீங்க, அத்தை, அம்மாச்சி சொல்வதினால் நான் இங்கு இருக்கிறேன் , என்னை யாரும் தாங்க வேண்டும் என்று  நினைக்கவில்லை, அப்படி நினைப்பவளும் நான் இல்லை, எனக்கு குடுத்த வேலை எல்லாம் பாதியில் விட்டு வந்துவிட்டேன் அதை என்ன செய்ய வேண்டும் என்று தான்  யோசனையில் இருந்தேன் வேறொன்றும்  இல்லை”  என்று படபடவென்று பதில் கூறினாள்.

முதல் முறையாக வீட்டினர் அனைவரின் முன்னும் இருவரும் தங்கள் கோவத்தை வெளிப்படுத்திவிட்டார்கள், இது அனைவருக்கும் அதிர்ச்சியை தந்தது. கதிரவனும் இப்படி கோவத்தை காட்டுபவன் இல்லை, வசுமதியும் இப்படி பேசுபவள் அல்ல..

வசந்தி, “ ஏய் வசு என்ன இப்படி  பேசுகிறாய்  “ என்று தன் அன்னை அதட்டவும் ,

“ அம்மா நீங்கள் சென்னை போங்கள் நான்.. நான் இங்கேயே இருக்கிறேன் “ அவள் கூறவுமே கதிரவனிடம் இருந்து ஒரு பெருமூச்சு வந்தது. 

இதையெல்லாம் பார்த்து கொண்டிருந்த சிவா கதிரவனிடம் ஊருக்கு செல்லுமுன் தனியே பேசவேண்டும் என்று எண்ணி கொன்டான்..

 “ அத்தான் “ என்று கூறியபடி சிவா கதிரவன் அறைக்கு வந்தான்,

“ வா சிவா என்ன விஷயம் “ என்று கேட்டவாறே புன்னகை பூத்தான்..

“ அத்தான் உங்களுக்கும் சுமதிக்கும் என்ன சண்டை என்று யாருக்கும் தெரியாது, ஆனால் உங்கள் இரண்டு பேருக்கும் சாதாரணமாய்  நடக்கிற பேச்சுவார்த்தை கூட இல்லை என்று வீட்டில் எல்லாருக்கும் தெரியும்.. நீங்கள் இரண்டு பேரும் ஆடும் கண்ணாமூச்சி ஆட்டத்தையும் எல்லாம் கவனித்து கொண்டு தான் இருக்கோம் ”

“ அட அப்படியா முகத்தில் தெரியும் விதமாகவா நடந்துக்கிறோம் “ என்று எண்ணினான் கதிரவன்..  

“ எதுவானாலும் சரி அத்தான் சுமதி எங்கள் வீட்டில் மகாராணி போல வளர்ந்தவள், அவளை யாரும் கடுமையாக  பார்த்தது கூட இல்லை.  நான் அவளை சும்மா சீண்டுவேனே ஒழிய அவளை காயப்படுத்தாத மாதிரி பார்த்து கொள்வேன். அவள் மனதில் பட்டதை சரியோ தவறோ முகத்திற்கு நேராய் பேசிவிடுவாள், மனதில் எதையும் வைத்துகொள்ள மாட்டாள். ஆனால்  அந்த கோவத்தை எல்லாம் சிறிது  நேரத்தில் மறந்து அவளே இயல்பாக பேசி சிரிப்பாள். அவள் முகத்தில் எப்பொழுதும் ஒரு தெளிவும் சிரிப்பும் இருக்கும் ஆனால் இங்கு வந்த கொஞ்ச நாளில் எல்லாம் அவள் முகத்தில் ஏதோ சிந்தனையும், குழப்பும் தான் இருக்கிறது.”

 “ ஒரு நிமிஷம், அத்தான் நான் சொல்ல வந்ததை சொல்லிவிடுறேன், அவள்  எதையோ தொலைத்தவள் போல அல்லாடுகிறாள்.  அத்தான் எதுவாக இருந்தாலும் சரி நான் உங்களை நம்பி தான் அவளை இங்கு விட்டுப்போகிறேன்”  என்று பொறுப்புள்ள தம்பியாக பேசினான்.

அவன் பேசியதை கேட்ட கதிரவனுக்கு சற்று திகைப்பாக இருந்தது, “ உன்னை சிறு  பையன்னு  நினைத்தேனடா ஆனால் அப்படி இல்லை என்று தெரிகிறது.  ஹ்ம்ம் போனது போகட்டும் உன் நம்பிக்கை வீண் போகாது சிவா, நீ அடுத்த முறை இங்கு வரும் போது அவள் இந்த வீட்டு பெண்ணாவே மாறி சந்தோசமாய் உன்னிடம் பேசுவாள் பாரேன்”  என்று கூறினான்..

“ சரி அத்தான்”  என்று கூறி சென்றான்.. கதிரவனுக்கு இன்னும் திகைப்பாக இருந்தது ,

 “ சிறுவன் என்று நினைத்தால் மறைமுகமா மிரட்டிவிட்டு போகிறானே “ என்று எண்ணினான்..

அதே சமயம் கிழே வசந்தி தன் அண்ணியிடம் , “ அண்ணி அவள் மிகவும் செல்லமாய்  வளர்ந்தவள், அவளை யாரும் ஒரு வார்த்தை சொன்னது இல்லை.  என்ன கொஞ்சம் விளையாட்டு புத்தி ஜாஸ்தி ஆனால் சொன்னால் சரியாய் புரிந்து நடந்து கொள்வாள்.  அவளுக்கு நீங்கள் தான் நம் வீட்டு பழக்கவழக்கம் எல்லாம் சொல்லி தரவேண்டும்     அண்ணி” 

“ என்ன வசந்தி, நீ கவலை படாமல் ஊருக்கு போ, நீயே கூப்பிட்டாலும் உன் மகள்  அடுத்த முறை அங்கு வர இஷ்டமில்லை என்று சொல்வாள் பாரேன்”  என்று கூறினார்..

ஒருவழியாக வசுமதியை தவிர அவளின் குடும்பம் ஊருக்கு கிளம்பி சென்றது. வசுமதிக்கே புரியவில்லை தான் ஏன் இப்படி இருகின்றோம் என்று.  இனிமேல் சற்று கதிரவனிடம் நல்லபடியாக நடந்து கொள்ளவேண்டும் என்று முடிவு செய்தாள்.. முடிவு என்னவோ செய்துவிட்டாள் ஆனால் அதை செயல்முறை படுத்தவே அவளுக்கு பெரிய திண்டாட்டமாக இருந்தது.                                              

காமாட்சி தன் மகனிடம் “ கதிரப்பா நான் சொல்வதை கேள் வசுமதி சின்ன பொண்ணுடா அவள்,  உன்னை விட நாலு வயது சின்னவள், அவளிடம் கொஞ்சம் பொறுமையாய்  போ கண்ணா”  என்று கூறிச்சென்றார்..

“ என்ன இது எல்லாம் என்னையே காரணம் காட்டுகிறார்கள், அப்படி என்ன நான் அவளிடம் குடும்பிப்பிடி  சண்டை போட்டுவிட்டேன்.. அனைவரையும் அவளுக்கு ஆதரவாய் திருப்பிட்டாள் அமைதியா இருந்தே எனக்கு எதிராக எல்லாரையும் திருப்பிட்டா குட்டச்சி”  என்று செல்லமாக கடிந்து கொண்டான்..

வசுமதி தன் அறையில் ஜென்னல் பக்கம் இருக்கும் சிறு சாய்வு மெத்தையில் படுத்து வெளியே வானத்தை பார்த்து படுத்திருந்தாள். பௌர்ணமி நிலா அழகாக தெரிந்தது..

ஏனோ தன்னை அறியாமலே அவன் மதி என்று அழைத்தது நினைவு வந்தது.. அந்த சூரியனிடம் இருந்து ஒளியை வாங்கி தானே இந்த நிலா இவ்வளோ பளிச்சென்று தன் குளிர்ந்த ஒளியை  வீசுகிறது.

அதாவது அந்த கதிரவன் இல்லை என்றால் இந்த மதி இல்லை என்று நினைத்து கொண்டு இருந்தவள் தன் எண்ணம் போகும் திசையை கண்டு பதறி எழுந்துவிட்டாள்

“ என்ன இது நாம் என்ன நினைக்கிறோம்.  இப்படி எல்லாம் எனக்கு எப்படி நினைக்க தோன்றலாம், அங்கு  சென்னையில் அத்தனை பேருடன் பழகி இருக்கிறேன்அப்பொழுது  எல்லாம் ஏற்படாத சலனம் இந்த காட்டனிடம் ஏன் எனக்கு??..”

“ இல்லை இல்லை அவனிடம்  சரியாய் பேசாமல் இருப்பதால் வந்தது. நல்லபடியாக  பேசிவிட்டால் எல்லாம் சரி ஆகிவிடும்”  என்று அவளே ஒரு முடிவிற்கு வந்தாள். அந்த அறைக்குள் மூச்சு விடுவதே சிரமமாக இருப்பது போல் இருந்தது வசுமதிக்கு.

இப்படியே இருந்தாள் சரி பட்டு வராது கொஞ்சம் நேரம் மொட்டைமாடிக்கு சென்று வரலாம் என்று எண்ணி சென்றாள்.  அதே நேரம் கதிரவனும் மொட்டை மாடியில் சிறிது நேரம் இருக்கலாம் என்று எண்ணி அவனின் அறையிலிருந்து வெளியே வந்தான். இருவரின் பார்வையும் ஒருவரை ஒருவர் தாங்கி நின்றது..

இருவருக்குமே ஒருவரிடம் மற்றொருவர் பேசவேண்டும் என்ற எண்ணம் வந்தது, அவர்களை அறியாமல் புன்னகை வந்தது,

இருவரும் ஒரே நேரத்தில் “ சாரி மதி “ என்று அவனும் , “ சாரி கதிர்”  என்று அவளும் கூறவும் அவர்களின் புன்னகை பலத்த சிரிப்பாக மாறியது..

உடனே அவன் வாயில் விரல் வைத்து “ உஷ் எல்லாம் கிழே உறங்குகிறார்கள்  மெதுவாக”  என்று ரகசியமாக கூறினான்.

“ ஓ சரி சரி “ என்று அவளும் அவனை போல் பேசவே இருவருக்குள்ளும் ஒரு இதமான சூழ்நிலை உருவானது.

“ ஆமாம் தூங்கவில்லையா ?? என்று மறுபடியும் ஒரே மாதிரி ஒரே நேரத்தில் கேட்கவும் மறுபடியும் அங்கு சிரிப்பு வந்தது இருவருக்கும்..

மதி தான் முதலில் கூறினாள் ”  தூக்கம் இல்லை கதிர்.  அதான் கொஞ்ச நேரம் மாடியில்  நடக்கலாம்  என்று வந்தேன் நிலா வேறு அழகாக தெரிகிறது“ 

“ ஓ எனக்கும் தூக்கம் இல்லை நானும் மாடிக்கு போகத்தான் வந்தேன் “ என்று கூறினான். இருவருமே ஏன் தூக்கம் வரவில்லை என்ற கேள்வியை தங்கள் தொண்டையிலேயே அடைத்தனர்..

 “ வா மாடிக்கு போகலாம் ”  என்று கூறவும்,

இந்நேரத்தில் இவனுடன் தனியாக எப்படி என்று தயங்கியவள், பின் அவளே முதலில் படி ஏறினாள்.. கதிரவன் ஒரு சிறு இடை வெளி விட்டு அவனும் மேலே ஏறினான்.. இரவு நேரம் என்பதால் தன் நீள கூந்தலை தளர்வாக பின்னி இருந்தாள், அவள் படி ஏறுவதற்கு தக்க அவள் கூந்தலும் பெண்டுலம் போல் ஆடியது..

அதை கண்ட கதிரவனின் மனதும் சிறிது ஆட்டம் கண்டது. கை துரு துரு என்றது அவளின் ஜடையை பிடித்து இழுக்க, என்ன இது நாம் ஏன் இப்படி இருக்கின்றோம் இப்படியா நினைப்பது என்று தன்னையே உலுக்கிகொண்டான்.. இருவரும் மனதிற்குள் என்ன பேசுவது எப்படி ஆரம்பிப்பது என்றெல்லாம் எண்ணியவாறு மாடியில் சென்று நின்றனர்.

கதிரவன் அந்த கல் மேடையின் மீது ஏறி அமர்ந்துக்கொண்டான், வசுமதிக்கோ தயக்கமாக இருந்தது

“ நின்று கொண்டே பேசுவதா இல்லை இவன் பக்கத்தில உட்கார்ந்து பேசலாமா ?? “ என்று ஒரே சிந்தனை. அவள் சிந்தனையை கலைப்பவன் போல

“ ஏன் நிற்கிறாய் மதி வா வந்து உட்கார் “ என்று கூறவும் சிறிது தயகத்திற்கு பின் அமர்ந்தாள் ஆனால் அவர்கள் இருவருக்கும் நடுவில் ஒரு பைக்கே  ஓட்டிவிடலாம் போல இடைவெளி இருந்தது.. என்ன பேசுவது என்று தெரியாமல் சற்று நேரம் அமைதியாக இருந்தனர் இருவரும்.

பின் கதிரவனே தான் பேச்சை ஆரம்பித்தான் “ மதி அதுவந்து”   என அவன் இழுக்கவும்

“ பழையது எதுவும் பேசவேண்டாம் கதிர் , தப்பு இரண்டு பேரிடமும் தான். சோ இனி நாம்  நடந்து கொள்ளும் முறையை பற்றி யோசிக்கலாம்” 

“ ஹ்ம்ம் அதும் சரிதான். ஆனால் ஒன்று  என்  பேச்சை யாரும் தட்ட மாட்டார்கள்   என்று நினைத்தேன், நீ எல்லாரையும்  உன் பக்கம்  திருப்பிவிட்டாய்  மதி” 

என்ன கூறுகிறாய் என்பது போல பார்த்தாள் , பின் கதிரவனே கூறினான் சிவா வந்து தன்னிடம் பேசியது , காமாட்சி பேசியது எல்லாம் அவளிடம் கூறினான். அப்பொழுதான் அவளுக்கு தோன்றியது அனைவரும் தன் மீது எத்தனை அன்பு வைத்துள்ளார்கள் என்று.

 “ சிவாவிற்கு என் மேல்  மிகவும் பாசம் கதிர் ஆனால் வெளிய காட்டிக்கொள்ள  மாட்டான்”  என்றாள் ஒரு சிறு புன்னகையுடன்..

அந்த நிலா ஒளியில், அவளின் சிறு புன்னகை கூட அவனை இம்சித்தது.. அவன் பார்வைக்கு அவள் ரவிவர்மா ஓவியம் போல் தெரிந்தாள்..  

“ என்னை புரிந்து கொள்வது மிகவும் ஈஸி கதிர் மனதில் தோணுவதை மறைக்காமல்  என்னிடம் பேசினாலே போதும். நானும் அப்படித்தான் ஆனால் அதுக்காக  ஒரேடியாக ஓபன் புக் டைப் அல்ல.  நான் நெருங்கி பழகும் என் நண்பர்களுக்கும் என் வீட்டினருக்கும் என்னை பற்றி தெரியும்..”

நண்பர்கள் என்றவுடன் அவன் முகத்தில் ஒரு சிறு சுணக்கம் ஏற்பட்டதை கண்டாள்.. “ என் நண்பர்கள் வட்டத்தில் ஆண்கள் பெண்கள் இருக்கிறார்கள்.  ஆனால்  அதில் பாமிலி பிரண்ட்ஸ் தான் நிறைய.. என் பிரண்ட்ஸ்  யார் யார் அவர்களின் குடும்பம் எது எப்படி எல்லாம் எங்கள் வீட்டில் தெரியும்.  ராம் எனக்கு உடன் பிறக்காத அண்ணன் போல கதிர். ஆனால்  நான் இதை வெளியே சொல்லிக்கொள்ள மாட்டேன்..”

“ அன்று சிவா, அப்பா எல்லோரும் ராம் பற்றி பேசும்போது ஏனோ உங்கள் முகத்தில்  ஒரு ரியாக்சன், அது என்ன என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் ஒன்று  மட்டும் நன்றாக தெரிந்தது  நீங்கள் எதோ தவறாக எண்ணுகிறீர்கள் என்று அதுவே எனக்கு கோவம் ஒரு பக்கம் வருத்தம் ஒரு பக்கம் தந்தது” என்று நேரடியாக விசயத்திற்கு வந்தாள்..

இவள் இப்படி வெளிபடையாக பேசுவாள் என்று அவன் கொஞ்சம் கூட நினைக்கவில்லை. ஏன் வருத்தமாக இருந்தது என்று கேட்க நினைத்தவன் எதுவும் கேளாமல்,

“ ஓ சரி மதி “ என்று மட்டும் விட்டான் .

அவளும் அவனின் நிலையை புரிந்து கொண்டாள், பின் அவளாகவே பேச்சை மாற்றினால் “ பௌர்ணமி என்றால் நான் சிவா அனைவரும் மாலையில் அங்கு பீச்சிற்க்கு சென்றுவிடுவோம் அத்தான் “ என்று சந்தோசமாக கூறினாள்..

மூன்றாவது முறை அத்தான் என்று கூறுகிறாள் என்று கணக்கு செய்துகொண்டான். மேடம் எதாவது உணர்ச்சிவசம் ஆகும்போது தான் அத்தான் என்று கூறுகிறாள் என்று எண்ணி கொண்டான்.

“ என்ன கதிர் ஒரே சிந்தனை??”

“ இல்லை மதி எனக்கு இப்படி யாருடனும் அமர்ந்து பேசி பழக்கம் இல்லை அதுவும் இந்த நேரத்தில். ஹ்ம்ம் என்ன பேச என்று தெரியவில்லை அதுதான் நீ பேசுவதை கேட்டுக்கொண்டு அமர்ந்து விட்டேன்”

“ ஓ!!அப்போ நான் மட்டும் இப்படி அமர்ந்து பேச டிரைனிங் எடுத்து கொண்டா வந்தேன் “ என்று கூறி சிரித்தாள்.. அவனும் சிரித்துகொண்டான்.

“ முழு நிலா அழகாக தெரிகிறது கதிர், நான் சிறுவயதில் நினைப்பேன் ஊருக்கு ஒரு நிலா இருக்கும் போல”  என்று தன் சிறு வயது எண்ணங்களை கூறினாள்.

அவன் சிரித்து விட்டான் “ ஆகா அப்புறம் சிறுவயதில் வேறு என்ன என்ன எல்லாம் நினைப்பாய் “ அவன் சிரிப்பை அடக்க முடியாமல்..

“ பார்தீர்களா நீங்களும் சிவா போல் சிரிக்க ஆரம்பித்து விட்டீர்கள்.. போங்கள் அத்தான் நான் எதுவும் சொல்ல மாட்டேன்”  என்று கையை கட்டி அமைதியாகி விட்டாள்.

“ எவ்வளவு உரிமையாக அத்தான் என்று அழைக்கிறாள். ஹ்ம்ம் ஆனால் கொஞ்சம் சேட்டைகாரி” என்று நினைத்தவன், “இல்லை இல்லை மதி நான் சிரிக்கமாட்டேன் , சொல் சொல் “ என்று அவளை ஊக்குவித்தான் ..

“ அது சின்ன பிள்ளையில் டிவி பார்க்கும்பொழுது நியூஸ் எல்லாம் போடுவார்கள் இல்லையா “

“ ஆமாம் போடுவார்கள் இப்பொழுது நீ பெரியவள் ஆகிவிட்ட பிறகும் நியூஸ் போடுகிறார்கள்தானே “ என்று அவளை கிண்டல் செய்து  மறுபடியும் சிரித்தான்.

“ நான் எதுவும் சொல்லவில்லை போங்கள் நான் கிழே போகிறேன் “ என்று எழுந்திருக்க போனாள்

“ ஹே ஹே இல்லை மதி நான் நீ கூறி முடிக்கும் வரை எதுவும் சொல்லமாட்டேன் ஓகே வா .. “

“அது நியூஸ் வாசிபவர்கள் என்னை பார்த்து தான் பேசுகிறார்கள் என்று நான் அவர்களை பார்த்து சிரிப்பேன் அத்தான். எனக்கு தெரியாது இது முன்பே பதிவு செய்து ஒளிப்பரப்புகிறார்கள் என்று.  டிவியின் பின் அமர்ந்துகொண்டு தான் பேசுகிறார்கள் என்றே நினைப்பேன், நியூஸ் முடிந்து விட்டால் டிவிக்கு பின்னால் சென்று தேடுவேன்”  என்று அவள் கூறி முடிக்கும் முன்னே கதிரவனுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.

கண்ணில் நீர் வர சிரித்தான் அவளுக்குமே அவனின் சிரிப்பை கண்டு சிரிப்பு வந்தது.. “  மதி சிவா சொல்வது போல் நீ ஒரிஜினல் பீஸ் தான்”  என்று சொல்லி மறுபடியும் அவள் கூறியதை நினைத்து  சிரித்தான்..

”  போங்கள் அத்தான் பின்ன அம்மா தான் இதை கவனித்து விட்டு எனக்கு விளக்கம் எல்லாம் கூறினார்கள் “ என்றாள்..

“ ஓ இதற்கு விளக்கம் வேறா ஹ்ம்ம்”  மறுபடியும் சிரித்தான் அவள் முறைத்தாள், “ சாரி  மதி பட்  என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை “

ஆனால் அவளுக்குமே சிரிப்பு தான்.. எப்படி இவனிடம் இது அனைத்தையும் வெகு இலகுவாக பகிர்ந்து கொள்ள முடிகிறது என்று எண்ணினாள்.. ஒருவேலை சிரித்தே மயக்குகிறானோ என்று எண்ணினாள். அவ்வளோதான் அமைதியாகி விட்டாள். 

“ சரி கிழே போகலாம் மதி நேரம் ஆயிற்று நானும் காலை வேகமாக எழவேண்டும் “ என்று கூறி கிழே செல்ல கிளம்பினர்..

அப்பொழுது காமாட்சி சிவபாண்டியன் இருவரும் மாடிக்கு வந்தனர், அவர்களை கண்டதும் கதிரவனுக்கும் வசுமதிக்கும் திகைப்பு என்ன நினைப்பார்களோ என்று மனதில் ஒரு நடுக்கம் ஓடியது..

கதிரவன் தான் முதலில் ஆரம்பித்தான் “ அது வந்து அப்பா அம்மா என்ன இந்த நேரத்தில் மொட்டை மாடிக்கு??”  என்று கேட்டான்..

சிவபாண்டியன் சிரித்துக்கொண்டே “ அதே கேள்வியை நானும் கேட்கலாம் தானே ??” என்றார்..

 “ அது வந்து அப்பா”  என்று அவனும் ,” இல்லை மாமா”  என்று அவளும் என்ன கூறுவது என்று தெரியாமல் சற்று விழித்தனர்.

பின் கதிரவன் தான் கூறினான் “ அது வந்து அம்மா ,மதி உறக்கம் வராமல் மாடிக்கு ஏறினாள்,  நான் தான் இந்த நேரத்தில் அவள் தனியே இருக்க வேண்டாம் என்று கூட வந்தேன்” 

அவள் ஒரு நிமிடம் திகைத்து பார்த்தாள் பின் அவனின் அழுத்தமான பார்வையை கண்டு அவள் “ ஆமாம் மாமா , நான் தனியாக இருக்கின்றேன் என்று தான் துணைக்கு வந்தார்”  என்று கூறினாள்.

“ சரி வசும்மா நம்பிவிட்டோம்”  என்று காமாட்சி கூறவும் சிவபாண்டியன்கு சிரிப்பு தாங்கமுடியவில்லை.  ஆனால் முகத்தில் வெளிகாட்டமல் அமைதியாக நின்றார்..

கதிரவனுக்கு புரிந்து விட்டது தன் அம்மாவும் அப்பாவும் மனதில் வேறு எதுவோ நினைத்துவிட்டனர் என்று. “  உடனே அம்மா அப்பா நீங்கள் நினைப்பது போல் எல்லாம் இல்லை நாங்கள் சும்மாதான் பேசிக்கொண்டு இருந்தோம்”  என்று வேகமாக கூறினான்.. நாங்கள் எதுவுமே நினைக்கவில்லையே என்று சிவபாண்டியன் கூறினார்.

இந்த பேச்சை இப்படியே வளர விடக்கூடாது என்று எண்ணி.  கதிரவன் “ சரி சரி நேரம் ஆகிறது கிழே போகலாம்”  என்று வேகமாக கதிரவன் இறங்கவும் அனைவரும் கிழே இறங்கி வந்தனர்.

“ அத்தை மாமா குட் நைட் “ என்று வசுமதி கூறினாள், “ நிம்மதியாக தூங்கு கண்ணம்மா”  என்று கூறி சென்றனர். அவர்கள் இறங்கவும், கதிரவனும் வசுமதியும் அப்பாடி என்று ஒரே சமயத்தில் மூச்சுவிட்டனர்.. இருவரும் ஒரேமாதிரி செய்யவும் மறுபடியும் இருவருக்கும் சிரிப்பு வந்தது..

“ குட் நைட்  மதி நேரம் ஆயிற்று நன்றாக தூங்கு “

“ ஸ்வீட் ட்ரீம்ஸ் அத்தான்”  என்று கூறி, இருவரும் தன் அறைக்கு வந்தனர்..

கதிரவனுக்கு மனதில் இன்னும் பதற்றம் குறைவில்லை. தன் அப்பாவும் அம்மாவும் ஏதோ நினைத்து விட்டனர் என்று எண்ணினான்.. முதல்முறையாக அவர்களிடம் பொய் சொல்லிவிட்டேன் என்றும் எண்ணினான்.

“ குட்டச்சி என்னை என் அப்பா அம்மாவிடமே பொய் சொல்ல வைத்துவிட்டாள்”  என்று செல்லமாக அவளை கடிந்தான். ஆனால் அவனே “  அவளா உன்னை அப்படி கூறும்படி கூறினாள், அது சரி நீ பனைமரம் உயரம் வளர்ந்து இருந்தால் அவள் உனக்கு குட்டச்சியா?? ”  என்று அவன் மனமே அவனை இடித்தது.

இவளிடம் நெருங்கினாலும் நம்மை படுத்துகிறாள் விலகி இருந்தாலும் படுத்துகிறாள் என்று எண்ணி சிரித்து கொண்டான்..

அதேநேரம் வசுமதி தன் அறையில் படுத்தவாறே யோசித்துக்கொண்டு இருந்தாள், “ எப்படி நாம் இங்கு இருக்க சம்மதித்தோம், பெற்ற அம்மா அப்பா உடன் பிறந்த தம்பி , பிறந்து வளர்ந்த ஊர், பார்க்கும் வேலை, என் பிரண்ட்ஸ் என்று  அனைத்தையும் விட்டு விட்டு, எதை நம்பி இங்கு இருக்க சரி என்று கூறினோம்”  என்று அவளே அவளிடம் கேட்ட கேள்விக்கு கதிரவனின் சிரித்த முகமே பதிலாக வந்தது..

“ இல்லை இல்லை அப்படி எல்லாம் இல்லை அவனுக்காக எல்லாம் நான் இங்கு தங்கவில்லை “ என்று வேகமாக  கூறிக்கொண்டாள்..

தண்ணீர் தாகம் எடுத்தது, அப்பொழுத்தான் அவளுக்கு நியாபகம் வந்தது காமாட்சி “ தண்ணீர் பாட்டில் மேலே கொண்டு போ மா”  என்று கூறினார் ஆனால் மறந்துவிட்டு வந்து விட்டாள்..

சரி கிழே போய் தண்ணீர் எடுத்துக்கொண்டு வரலாம் என்று கிழே இறங்கினால், அதே நேரம் கதிரவன் கையில் ஒரு தண்ணீர் பாட்டிலோடு மேலே ஏறிக்கொண்டு இருந்தான்..

இருவரும் சந்தித்து கொண்டபோது அவர்களை அறியாமல் முதல் முறை மோதிக்கொண்டது நியாபகம் வந்தது, உடனே வசுமதி சற்று அவனுக்கு வழி விட்டு நின்றாள்.. அவனும் லேசாக சிரித்துகொண்டான்.

“ என்ன மதி இன்னும் தூக்கம் வரவில்லையா ??” என்று கேட்கவும்,
“இல்லை என் ரூமில் தண்ணீர் இல்லை அதை எடுக்க வந்தேன் “ என்றாள்.

“  ஓ என் ரூமிலும் தண்ணீர் இல்லை அதை எடுக்கவே நானும் சென்றேன்”  என்றான்..

“ ஓ !! அப்படியானால் சேம் பிஞ்ச் கிவ் மீ  எ சாக்லெட் “  என்றாள் சிரித்துக்கொண்டே..

“ அவன் வாட் சேம் பிஞ்சா ???  மதி இன்னும் என்ன சிறுபிள்ளையா சேம் பிஞ்ச்  அடித்து சாக்லெட் கேட்க”  என்று சிரித்தான்.

அவளும் பதிலுக்கு இப்படி “ சிரித்து மழுப்பாதிர்கள் அத்தான், எனக்கு சிறு வயதில் இருந்தே பழக்கம் ஆகிவிட்டது.. நான் தான் முதலில் சேம் பிஞ்ச் அடித்தேன் சோ  கண்டிப்பாக எனக்கு சாக்லெட் வேண்டும் “ என்று பிடிவாதம் பிடித்தாள்..

கதிரவனுக்கு தான் என்ன கூறுவது என்று தெரியவில்லை “ ஹ்ம்ம் வாங்கி தருகிறேன், சரி உனக்கு என்ன சாக்லெட் பிடிக்கும்?? “

“ தட்ஸ் குட்.. எனக்கு பெருசா எந்த சாக்லெட் வேண்டாம் ஒரே ஒரு டெம்டேசன் சாக்லெட் போதும் “ என்றாள்..

ஓ !! மேடம்க்கு டெம்ப்டேசன் தான் பிடிக்குமா ?? சரி அதில் நான்கு வகை இருக்கிறதே அதில் எது பிடிக்கும்?? 

அவள் சற்று நேரம் அவனை குறும்பாக பார்த்து தலையை சரித்து “ ரம் ப்ளேவர்  பிடிக்கும் அத்தான் “ என்று கூறி கலகலவென சிரித்தாள்..

“மதி உனக்கு மிகவும் குறும்பு தான் ரம் ப்ளேவர் வேண்டும் என்று என்னிடமே கூறுகிறாயா?? “ என்று அவனும் விளையாட்டாக கேட்டான்..

“ ஹ்ம்ம் விளையாட்டிற்கு கேட்டேன் கதிர், ஆல்மன்ட்  ப்ளேவர்  இருக்கும் அது வாங்கி தாருங்கள் “ என்றாள்.

இருவருக்குமே அவர்களை எண்ணி ஆச்சரியமாக இருந்தது, நட்ட நடு ஜாமத்தில் வீட்டில் அனைவரும் தூங்கும் வேலையில் இப்படி இருவரும் மொட்டைமாடியிலும், கீழ் இறங்கும் மாடி படிக்கட்டுகளிலும் நின்று பேசி சிரித்து கொண்டு இருக்கின்றோம் என்று இருவருமே எண்ணினர் ..

“ சரி மதி நேரம் ஆயிற்று”  என்று கூறவும் அவள் “ சரி அத்தான் “ என்று மாடி ஏற போனாள். “  ஹே மதி தண்ணீர் வேண்டாமா ??” என்று கேட்ட பின்தான்

“ அட ஆமாம் மறந்துவிட்டேன்”  என்று கூறி கிழே சென்று தண்ணீர் பாட்டில் ஓடு வரும் வரை கதிரவன் படிகளில் தான் நின்றிருந்தான்.. அவன் நின்றதே அவளுக்கு மனதினுள் இதமாக இருந்தது.. பரவாயில்லை துணைக்கு நிற்கிறான் என்று எண்ணினாள்.

இருவரும் ஒன்றாகவே படி ஏறினர்.. “ அட இன்னும் நீங்கள் இருவரும் என்ன செய்கிறீர்கள் “ என்று பின்னால் இருந்து குரல் வரவும் இருவருமே திடுக்கிட்டு திரும்பினர்.

அந்த குரலின் சொந்தகாரர் வேறு யாரும் இல்லை , காமாட்சி தான், இப்பொழுது வசுமதி முந்திக்கொண்டாள் “ இல்லை அத்தை தண்ணீர் பாட்டில் இல்லை அது தான் எடுக்க வந்தோம்”

 அவர் மெலிதாக புன்னகைத்தவாறே”  சரி சரி சென்று தூங்குங்கள்”  என்று கூறி சென்றார்.. அவர் செல்லவுமே இருவருக்கும் ஒரே நேரத்தில் பெருமூச்சு வெளிவந்தது.. இருவருமே நகைத்துகொண்டனர்..

“ குட் நைட் மதி “ என்றான் கதிரவன் ,

“ ஸ்வீட் ட்ரீம்ஸ் அத்தான்”  என்றாள் மதி …

மதி “ கதிர், அத்தான் என்று மாற்றி மாற்றி அழைக்கின்றாயே??”  என்றான்..

“ ஹ்ம்ம் இனிமேல் அத்தான் என்றே அழைக்கிறேன். அன்று அம்மாச்சி முன் கதிர் என்று கூறிவிட்டேன் உன்னை விட நாலு வயது பெரியவன் பெயர் சொல்கிறாயா  என்று கேட்டார்கள் அத்தான். சோ இனிமேல் அத்தான் தான் “ என்றாள்.

“ உன் இஷ்டம் மதி உனக்கு எது விருப்பமோ அப்படியே அழை” என்று கூறி தன் அறைக்கு சென்று விட்டான்.

வசுமதியும் தன் அறைக்கு வந்து மணியை பார்த்தால் நள்ளிரவு இரண்டு என்று காட்டியது.  “ அட நான் மாடிக்கு செல்லும்போது மணி பத்து.  இவ்வளோ நேரமாகவா நான் கதிரவன் உடன் கழித்து இருக்கிறேன், நேரம் போனதே தெரியவில்லை ஆனால் மனதிற்கு எவ்வளோ இதமாக இருந்தது அவனுடன் இருக்கும்பொழுது பேசும்பொழுது மனதிற்கு எந்த வித்தியாசமும் தெரியவில்லை எத்தனை பாதுகாப்பாக உணர்ந்தோம்” என்று நினைத்து சிரித்துகொண்டாள்..

அவளுக்கு தெரியவில்லை நாளையே அவனும் அவளும் சண்டை இட போகின்றனர் என்று.. காலை பொழுது அழகாக விடிந்தது மெல்ல சோம்பல் முறித்து தன் போனில் மணி பார்த்தாள்.  சரி நேரம் ஆயிற்று என்று எண்ணி எழுந்தவள் ஜென்னல் திரையை விலக்கினாள், கிழே வீட்டை சுற்றி கதிரவன் ஓடிக்கொண்டு இருந்தான்..

எப்படித்தான் இவனால் மட்டும் சரியாக இருக்க முடிகிறதோ என்று எண்ணினாள் அவளை அறியாமலே முன்தினம் இரவு நடந்தது அனைத்தும் நியாபகம் வந்தது தானாக சிரித்து  கொண்டாள்.

குளித்து விட்டு லெமன் எல்லோ நிற காட்டன் பட்டியாலா அணிந்து அவளின் வழக்கமான ஒப்பனையை முடித்துக்கொண்டு கிழே சென்றாள்..

கிழே கதிரவன் பேப்பர் படித்துக்கொண்டே சத்துமாவு கஞ்சி குடித்து கொண்டு இருந்தான்.. “ இதை குடித்து குடித்து தான் இப்படி ஆள் வளர்ந்திருக்கிறான் போல.. ச்சே அன்னாந்து பார்த்து அல்லவா பேசவேண்டி உள்ளது”  என்று மனதினுள் நினைத்துக்கொண்டாள்..

அதே நேரம் வேண்டும் என்றே கதிரவன் லேசாக இருமினான்.  இவளை பார்த்து சிரித்துக்கொண்டே “ அம்மா என்னை யாரோ மனதினுள்ளே திட்டுகிறார்கள் “ போல என்று தன் தாயிடம் முறையிட்டான்..

வசுமதிக்கு உள்ளே சிரிப்பு வந்தாலும் வெளியே காட்டாமல் “ அத்தை மாமா குட் மோர்னிங் , அத்தான் குட் மோர்னிங் எங்கே அம்மாச்சியை காணவில்லை “ என்று கூறினாள்..

“ அம்மாச்சி பூஜை அறையில் இருக்கிறார்கள் கண்ணம்மா “ என்றவரே கூறி அவளுக்கு குடிக்க ஒரு டம்ளர் சத்துமாவு கஞ்சி கொண்டு வந்தார்.

“ ஹ்ம்ம் அத்தை ப்ளீஸ் எனக்கு காபி மட்டும் போதும்”  என்றாள்..

“ என்ன வசும்மா சத்துமாவு கஞ்சி குடித்தால் உடம்பிற்கு நல்லது, அப்பொழுதுதான் உடம்பு வழு பெரும்”  என்று தன் தங்கை மகளிடம் அன்பாக கூறினார்..

“ மாமா ப்ளீஸ் எனக்கு வெறும் வயிற்றில் இதை குடித்தால் பின் காலை உண்ண முடியவில்லை. சோ அப்புறம் ஒரு பத்து மணிக்கு ஜூஸ் குடிப்பதற்கு பதில் அப்பொழுது இதை குடிக்கிறேன் “ என்று தன் மாமாவிடம் கெஞ்சிக்கொண்டு இருந்தாள்.

இதை பார்த்த கதிரவன், “ அப்பா விஷயம் புரியவில்லையா ஒரு டம்ளர் கஞ்சி குடித்தால் ஆறோ இல்லை ஏழோ  இட்லியோ தோசையோ அவளால் உண்ண உண்ண முடியவில்லை. அதுதான் கொஞ்சம் கவலை. அது மட்டுமில்லாமல் கொஞ்சம் குட்டையாக வேறு இருக்கிறாள் அல்லவா பின் சிலிண்டர் போல் ஆகிவிட்டால் இங்கு இருந்து சென்னைக்கு உருட்டிக்கொண்டு தான் போகவேண்டும் “ என்று அவளை வம்பிழுத்தான்..

அவன் கூறியதை கேட்டு பெரியவர்கள் இருவருக்கும் சிரிப்பு தாங்கவில்லை  ஆனால் பாவம் வசுமதி வருத்தப்படுவாள் என்று வெளி காட்டாமல் “ என்ன கதிரவா இப்படி”  என்று அவர்கள் முடிக்கவில்லை , வசுமதி ஆரம்பித்து விட்டாள் சாமியாட ..

“ஹலோ ஹலோ யாரை பார்த்து குட்டை என்கிறீர்கள், நானா ?? அது சரி இப்படி கண்டதையும் குடித்து விட்டு நீங்கள் தான் இஷ்டதிற்கு வளர்ந்து இருந்தால் நான்  குட்டையோ??? உங்களுக்கு கண் சரியாக தெரியவில்லையா அத்தான் நன்றாக பாருங்கள் நான் என்ன சிலிண்டர் போல் ஆகிவிடுவேணா??”

“நான் எப்பொழுதும் ஐம்பது கிலோ தான் நான் தெரிந்து கொள்ளுங்கள் Mr. பனைமரம்”  என்று சரிக்கு சரியாக கூறவும். அங்கு இருந்த அனைவரும் நகைத்தனர்..

 

Advertisement