Advertisement

உன் நினைவு – 1

உன்னை தேடி ஒருத்தி வருகிறாள்

அது உனக்கும் தெரியாது

அவளுக்கும் தெரியாது

ஆனாலும் வருகிறாள்..

உன்னோடு ஒரு புது

வாழ்வு தொடங்க – தன்

தாய் பிறந்த மண்ணிற்கு..

டோயோடோ இன்னோவோ வேகமாகசென்றுக்கொண்டிருந்தது. காரினுள் சண்முகநாதனும் சிவாவும்முன் பக்க இருக்கையில் அமர்ந்திருக்க, வசுமதி, வசந்தி பின் பக்கம் அமர்ந்திருந்தார்கள். வசந்தி மற்றும் சண்முகநாதன் இருவரின் முகமும் ஏதோ சொல்ல  முடியாத பதற்றத்தில்  இருந்தது.

சிவாவிற்கு அவனுடைய புதிய போன் தான் உலகம். அவன் அதில் மூழ்கி இருந்தான்.  ஆனால் வசுமதி  அவள்  அப்பா அம்மாவின்  முக பாவனைகளையும் அதை மறைக்க அவர்கள் துடிப்பதையும்  பார்த்துக்கொண்டே  வந்தாள்.

இருபத்தி  நான்கு வருடத்திற்கு பிறகு  வசந்தி தான் பிறந்த ஊருக்கு செல்கிறார். அம்மா அண்ணன் அண்ணி பிறந்து வளர்ந்த வீடு, ஊர் என அனைத்தையும் இத்தனை வருடங்களுக்கு பிறகு பார்க்க போகிறார்.ஒரு பக்கம் சந்தோசம் இன்னொரு பக்கம் பயம்

அங்கு வீட்டில் யார் யார் இருப்பார்கள். நம்மை  பார்த்ததும் என்ன செய்வார்கள் என்று  வசந்தி சிந்தைனையில்  மூழ்கி இருக்க

ஏன் திடீரென்று அப்பா நேற்று ஆபீஸில் இருந்து வந்தார்கள்,அம்மாவிடம்  தனியாய் சிறிது நேரம் பேசினார். ஊருக்கு போகவேண்டும்  உடனே கிளம்புங்கள் என்று கிளம்பி இதோ இன்னும் ஒரு  மணி நேரத்தில் போடிக்கு போய்விட போகிறோம்.அப்படி என்ன நமக்கு தெரியாமல்  ஒரு ரகசியம் இருக்கும். நம் அப்பா அம்மா வாழ்க்கையில்என்று வசுமதிக்கு ஒரே யோசனை ..

வண்டி தேனியை தாண்டி போடிநாயக்கனூரை நெருங்கிக்கொண்டி இருந்தது. ஜில்லென்று காற்றும் சாலையின் இரு புறம் ஓங்கி உயர்ந்த மரங்களும் அழகாக வரவேற்றன.. ஊரின் அருகில்  நெருங்க நெருங்க தான்  தெரிந்தது போடிநாயக்கனூரை சுற்றி மூன்று பக்கமும் மலைகள். மேற்க்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் தமிழக கேரள எல்லை தான் வசுமதியின் அன்னை வசந்தியின் பிறந்த ஊர்.

வசுமதிக்கு ஊரை பார்த்ததும் மிகவும் பிடித்துவிட்டது “இப்படி ஒரு ஊருக்கு வரவா  நம் அப்பா அம்மா இவ்வளோ பதற்றமா இருக்காங்க” என்று  நினைத்தாள்..

 “ டேய் சிவா அந்த போனை விட்டு கொஞ்சம் ஜென்னல் பக்கம் பாரேன் டா  எவ்வளோ அழகா இருக்கு ”என்று தம்பியிடம் சொல்லிக்கொண்டே

“அம்மா உன் ஊர் ரொம்பசூப்பர் மா..  இவ்வளோ பிரெஷ் ஏர் பிரீத் பண்ணதே  இல்லமா..”  என்று கூறினாள் 

வசந்தி தன்  மகளின்  உற்சாகத்தை பார்த்ததும் “ஊர்  மாட்டுமில்லை சுமதி எங்க வீட்டில் இருக்கிறவங்களும் ரொம்ப நல்லவங்க தான்…” என்றார்.

சண்முகநாதன் பின்னாள் திரும்பி தன் மனைவியை பார்த்து வருத்தமாக ஒரு முறுவல் பூத்தார்.

வசுமதிக்கு ஏனோ அவளை அறியாமலேயே வாழ்ந்தால்  இப்படி ஒரு ஊரில் வாழவேண்டும் என்ற  ஒரு எண்ணம் தோன்றியது.

“என்னடா இது இப்பதான் ஊருக்குள்ளபோறோம் அதுக்குள்ள இப்படி ஒரு எண்ணமா?? ” என்று  அவளுக்கே ஆச்சரியம்.

ஒரு பெரிய வீட்டின் முன் இவர்கள் கார் நிற்க, வசுமதிக்கும் சிவாவிற்கும் அந்த வீட்டை  பார்க்கும் போது ஒரே மலைப்பு. இந்த ஊரில் இப்படி ஒரு வீடா??  அதை வீடென்று சொல்லக்கூடாது மாளிகை என்று தான் சொல்ல வேண்டும்என்று நினைத்து கொண்டு இருக்கும் பொழுதே, உள்ளே இருந்து 

“ அய்யா அவங்க வந்துட்டாங்க” என்று உள்ள யாரோ சொல்லும் சத்தம் கேட்டது. வசந்தியும் , சண்முகநாதனும் பதற்றமாக நின்றிருந்தார்கள். வசுமதி, சிவா நடப்பது எல்லாம் என்ன என்று பார்த்துக்கொண்டு இருந்தனர்..

அந்த வீட்டில் நிறைய வருடங்களாக வேலை பார்க்கும் தனபால் தான் முதலில்  வெளியே  வந்தார். வசந்தியை  பார்க்கும்போது அவர் கண்கள் கலங்கின. அவர்  அறியாமல்  அவர் வாய் “ வசந்திமா ” என்று கூறியது.

“உள்ள வாங்க வாங்க..” என்று சொல்லி அனைவரயும் உள்ளே அழைத்து  சென்றார்.. 

பெரிய வரவேற்பு அரை, தேக்கு மரத்தாலான இருக்கைகள் சதுர வடிவில்  போட்டு  நடுவில் பெரிய விநாயகர் சிலை இருந்தது. வசந்திக்கு இதை பார்த்ததும் மிகவும் சந்தோசம் ஏனென்றால் அது அவர் மிகவும் ஆசை பட்டு வைத்த சிலை.

காமாட்சி தான் முதலில் அறையில் இருந்து வெளியில் வந்தார்.  வசந்தி “ அண்ணி ”  என்று அழைத்துக்கொண்டே ஓடி போய் அணைத்துக்கொண்டார்..

“வசந்திமா எப்படி இருக்க?? உன்னை பார்த்து எத்தனை வருஷம் ஆயிடுச்சு. பிடிவாதமாக இங்கே வராமலே  இத்தனை நாள் இருந்தியே..” என்று  மிகவும் பாசமாகவும் ஏக்கமாகவும் கேட்டார்.

“ஏன் அண்ணி நடந்த எல்லாமே உங்களுக்கும் தெரியும் தானே. அப்படி இருந்தும்  என்னை வீட்டுக்கு வான்னு கூப்பிட உங்களுக்கு இத்தனை வருஷம்..” என்று கூறும் பொழுதே வசந்திக்கு அழுகை வந்து விட்டது.

“ காமாட்சி இத்தனை வருசத்துக்கு அப்புறம்  வசந்தி வீட்டிற்கு வந்திருக்கா. அவளை அழாம இருக்க சொல்லு…”  என்று சொல்லிக்கொண்டே சிவபாண்டியன் வந்தார்.

“ அண்ணா..” என்று சொல்லிக்கொண்டே அவரிடம் சென்றார் வசந்தி. அங்கு ஒரு கனத்த மௌனம் நிலவியது ..

 “அண்ணா எப்படி இருக்கீங்க?? அண்ணா என்னை எல்லாருமாசேர்ந்து  மறந்துட்டிங்கன்னு நினைச்சேன் அண்ணா, என்னை மன்னிக்கவே மாட்டிங்களோன்னு எவ்வளோ ஏங்கிட்டு இருந்தேன் தெரியுமா அண்ணா..” என்று வார்த்தைக்கு வார்த்தை அண்ணா அண்ணா என்று கண்ணீர் வடித்தார்.

அதை பார்த்த அனைவருக்குமே மனதிற்குள் மிகவும் சங்கடமாக இருந்தது.“இத்தனை  வருஷமா அண்ணா என்னிடம் பேச, என்னையும் என் குடும்பத்தையும் இங்க அழைக்க..??”

தன் அம்மாவை சமாதானம் செய்ய நினைத்து வசுமதி ஒரு அடி முன் எடுத்து வைத்தாள். வேகமாக “வேண்டாம் சுமதி கொஞ்சம் ப்ரீயா விடு…”  என்று சண்முகநாதன் கூறவும் தான் சிவபாண்டியன் திரும்பி மற்றவர்களையும் பார்த்தார்.

ஒரு சிறு அமைதிக்குப்பின் “ எல்லாரும் வாங்க”  என்று கூறினார்.

“அண்ணா இது என் பொண்ணு பேரு வசுமதி சிவில் படுச்சிட்டு அவங்க அப்பா கம்பெனில வேலை செய்றா. இவன் எங்க இரண்டாவது பையன் சிவா இப்பதான் காலேஜ் முதல் வருஷம் முடிச்சிருக்கான்..”  என்று தன் பிள்ளைகளை அறிமுகம் செய்து வைத்தார்.

தன் தங்கையை சிறு வயதில் பார்த்தது போல் இருந்ததால் வசுமதியை பார்த்த உடனே பிடித்து போயிற்று. தங்கை தன் மீது கொண்ட பாசத்தின் அடையாளமாகத்தான் தன் பெயரின் பாதியை தன் மகனுக்கு வைத்திருக்கின்றாள் என்று புரிந்துக்கொண்டார்..

“ சுமதி, சிவா இவர் தான் என் அண்ணன், இவங்க என் அண்ணி..”  என்று கூறும்பொழுதே வசந்தி முகத்தில் அவ்வளவு சந்தோஷம் , பெருமை, பெருமிதம் எல்லாம்.

 “காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குங்க.. ” என்று கூறவும்

 “ அதல்லாம் வேண்டாம் வசந்தி, பிள்ளைங்க எப்பொழுதும் நல்லா இருப்பாங்க..”  என்று கூறிக்கொண்டே,

 “தனபால் அண்ணே வாங்க வந்து ரூம்ஸ் ரூம் காட்டுங்க”  என்று சொல்லிவிட்டு

 “போங்க போய் எல்லாரும் கொஞ்சம் பிரெஷ் ஆகிவிட்டு வாங்க…” என்று கூறினார் சிவபாண்டியன். 

அப்போதுதான் “ அண்ணா அம்மா எங்க?? ” என்று வசந்தி கேட்கவும் காமாட்சி மற்றும் சிவபாண்டியன் இருவரின் முகமும் இருண்டது. கொஞ்சம் சுதாரித்துக் கொண்டு

“போங்கமுதலில் போய் பிரெஷ் ஆகிவிட்டு வாங்க…”  என்று மறுபடியும் கூறிச்சென்றார். அனைவரும் ஒரு விதமான இறுக்கத்துடனும் குழப்பத்துடன் அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைகளுக்கு சென்றனர்.

வசுமதிக்கும் சிவாவிற்கும் தங்கள் பெற்றோர்களிடம் கேட்க ஆயிரம் கேள்விகள் இருந்தன. இருந்தாலும் வெளியில் எதையும் காட்டிக்கொள்ளாது இருந்தனர். அவர்களுக்கு தன் அம்மாவின் முகத்தில் இருந்த நிம்மதி மனதிற்கு மகிழ்ச்சியை தந்தது.. அங்கு சென்னையில் சந்தோசமாக இருந்தாலும் வசந்தியின் முகத்தில் ஒரு ஏக்கம் எதோ ஒரு சிந்தனை குடிகொண்டு இருக்கும் ஆனால் இன்று அதெல்லாம் எதுவும் இல்லாமல் நிர்மலமாக இருந்தது.. 

சிவாவிற்கும் வசுமதிக்கும் மாடியில் தனி தனி அறைகள் ஒதுக்கப்பட்டு இருந்தன.. வசந்தி மற்றும் சண்முகநாதனிற்கு கீழே ஒரு அறை ஒதுக்கி வைக்கப்பட்டு இருந்தது. அது வசந்தி முன்பு உபயோகித்த அறை சற்றும் மாறாது அப்படியே ஆனால் மிகவும் தூய்மையாகவும் புது பொழிவுடன் காட்சி அளித்தது.

வசந்திக்கு தன் அறையை பார்த்த உடன் பழைய நியாபகங்கள் அனைத்தும் மனதில் அலையாய் வந்தன. தன்னை மறந்து அப்பிடியே சிலை என நின்றார்.

“ என்னங்க பார்த்தீங்களா எங்கவீட்டில என்னை இன்னும் மறக்கல. அப்படியே என் பொருள் எல்லாம் நான் வைத்த இடத்தில் வைத்த மாதரியே இருக்கு. நாமதான் தப்பா புரிஞ்சுகிட்டோம் பல. இத்தனை வருசமாக நானும் வறட்டு கெளரவம் பார்த்து இங்க வராம  இருந்துட்டேன்…”  என்று வருத்தமாக கூறினார்..     

சண்முகநாதன் வசந்தியிடம் “கவலை படாதவசந்தா, எல்லாமே நல்லதாதான் நடக்கும். நீ இப்படி இருக்கிறதை பார்த்தா நம் பசங்களும் வருத்தப்படுவாங்க, எனக்கும் கஷ்டமாவும் குற்ற உணர்ச்சியாவும் இருக்கும். இப்போ நாம் கொஞ்சமாவாது  நினைச்சோமா இங்க இருந்து நமக்கு அழைப்பு வரும்னு?? நீ  இத்தனை நாள் வேண்டினது எல்லாம் வீண் போகலை வசந்தா கவலை படாம இரு சரியா??”  என்று கூறி அவரின் தலையை தடவிகொடுத்தார்.

வசந்தி உடனே தன் முகத்தை துடைத்து கொண்டு “இல்லைங்க நான் எதுவும் வருத்தப்படல. நீங்கஏதுவும் நினைக்க வேண்டாம் ப்ளீஸ்..நடந்ததில்  முடிவு எடுத்தது நான்.  இதில் நீங்க எதுவும் தப்பு செய்யலை, அதனாலஎதுவும் நினைக்காம  நடப்பதை நாம் ஒண்ணா நின்னு  சந்திக்கலாம்” என்று கூறினார்.

வசுமதி தனக்கு கொடுத்து இருந்த அறையை ஒருமுறை சுற்றி சுற்றி பார்த்தாள். ஒரு அறைக்கே இவ்ளோ விலாசமான இடவசதியா??? என்று ஆச்சர்யப்பட்டாள். “ சென்னையில் இதை ஒரு பிளாட்டாக மாற்றி விற்று விடுவார்கள் ” என்று எண்ணி சிரித்துக்கொண்டாள்.

ஜென்னலை திறந்து பார்த்தாள் கண்ணுக்கு எட்டிய துரத்தில் சுற்றி மலைகள் தெரிந்தன. ஜென்னலுக்கு வெளியே வேப்பமரம், மாம்மரம், பல வண்ண மலர்செடிகள் இருந்தன வெளியே. அவளுக்கு ரோஜா செடிகள் என்றால் மிகவும் ஆசை. ஆனால் ஒரு  முறை கூட செடியில் இருந்து  மலரை பரிக்கமாடாள்.  இங்கு வீட்டை சுற்றியும் தோட்டம் தான் மலர் செடிகள் தான் அதிலும் வண்ண வண்ணமாக பல ரோஜா செடிகள் பார்த்த மாத்திரத்தில் மிகவும் பிடித்து போய்விட்டது .    

“ ரொம்ப அழகு. எப்படி அம்மா இத்தனை வருஷம் இந்த மாதிரி ஒரு அருமையான ஊரை விட்டு அந்த சென்னையில் இருந்தாங்களோ.. ”  என்று நினைக்க தோன்றியது..

“ நேரமாச்சு… ”  என்று நினைத்துக்கொண்டே வேகமாக குளித்துவிட்டு பிங்க் கலர் சுடிதார் அணிந்துக்கொண்டு அங்கு இருந்த ஆளுயர கண்ணாடி முன் நின்று பார்த்தாள். தன் நீள முடியை தளர பின்னி ஒரு பொட்டு இட்டு அதன் மேலே சந்தனம் பூசிக்கொண்டாள். கண்ணுக்கு லேசாக மை இட்டுக்கொண்டாள்.

“ சுமதி..”  என்று கீழே இருந்து தன் அம்மாவின் அழைப்பு வரவும் “ இதோ வரேன் மா..”  என்று கூறிக்கொண்டே தன் கையில் அணிந்திருந்த மெல்லிய பிரேஸ்லெட்டை சரி செய்துக்கொண்டே வேகமாக இறங்கியவள் எதிரே வந்தவனை பார்க்கவில்லை.

வசுமதி எப்போதுமே அவள் பெற்றோர்களுக்கு சுமதி தான். தன் நட்பு வட்டாரத்தில் வசு.  அவள் தம்பி மட்டும் கிண்டலாக “ வா சுமதி, பாசுமதி அரிசி” என்று அழைப்பான்.. அவன் அப்படி அழைத்துவிட்டால் போதும் அவர்கள் வீட்டில் ஒரு குருக்ஷேத்திரமே நடக்கும்.

வசுமதிக்கு  எதிரே வந்தது வேறு யாரும் இல்லை.  நம் நாயகன் கதிரவன்.

கதிரவன், சிவபாண்டியன், காமாட்சி தம்பதிகளின் ஒரே புதல்வன். முதுகலை விவசாயம் படித்துவிட்டு அதை நடைமுறையில் செயல்படுத்துபவன். இருபத்தி எட்டு வயது இளைஞன். அவனது தினசரி வழக்கம் அதிகாலை எல்லாம் எழுந்து விடுவான். அவர்களது வீட்டை சுற்றி இல்லை வயலை சுற்றி பத்து முறை ஓடி விட்டு வருவான்.

நன்கு உழைக்கும் உடம்பு ஆதலால் வேறு எந்த உடற் பயிற்சியும் அவனுக்கு தேவை படவில்லை. கதிரவன் வேகமாக யாரிடமோ அலைபேசியில் அன்று செய்ய வேண்டிய வேலைகளை பட்டியல் இட்டுக்கொண்டே மாடி ஏறி கொண்டிருந்தான்..

அவனும் அவளை கவனிக்கவில்லை…

வேகமாக வந்த இருவரும் மோதிக்கொண்டனர்… “ ஹேய்  Mr .“ என்று அவளும்

“யார் அது கண்ண பிடரியில் வச்சு  இறங்குறது..”  என்று அவனும் கோவமாக ஒருவரை ஒருவர் முறைத்துக்கொண்டு நின்றனர். மோதியதில் அவளின் பிரேஸ்லெட் அவனின் கை கடிகாரத்தில் சிக்கி அறுந்ததை இருவரும் அறியவில்லை.

 “ யார்  நீ?? ”  என்று அவளிடம் சற்று அதட்டலாக கேட்கவும் அவளுக்கும் கோவம் வந்து விட்டது..

 “ நீங்க யார் Mr…??? “ என்று அவனிடம் பதில் கேள்விக்கேட்டாள்..

அவன் ஒரு நிமிடம் அவளை கூர்மையாக பார்த்துவிட்டு “ என் வீட்டில் வந்து என்னையே மோதிவிட்டு, என்னை பார்த்தே யாருன்னு வேறு கேட்கிற??ம்ம் ” என்று சற்று நக்கலாக கூறினான்.

அவளுக்கு தான் கேட்ட கேள்வியின் அசட்டுத்தனம் புரிந்தது. இருந்தாலும் அவன் முன் அசடு வழிவதா என்று எண்ணி “இன்று உங்கள் வீட்டிற்கு கெஸ்ட் வர்றாங்கன்னு உங்களுக்கு தெரியாதா ??”  என்று அந்த உங்களில் சற்று அழுத்தமாக கூறினாள்.

“ஓ வந்துட்டீங்களா??” என்று கூறியவனின் முகத்தில் எந்த உணர்வையும் கண்ணடுபிடிக்க முடியவில்லை.

ஆனால் ஒன்று மட்டும் அவளுக்கு புரிந்தது மாமா அத்தை தனபால் போல இந்த புதியவனுக்கு நாம் இங்கு வந்ததில் சந்தோசம் இல்லைஎன்று நினைத்துக்கொண்டாள். தன் நினைவுகளில் இருந்து வெளியே வந்தவள் சுற்றும் முற்றும் பார்த்தாள் அவனை காணவில்லை..

 “போயிட்டான் திமிர் பிடிச்சவன். முதல் முறை பாக்குற  ஒரு பொண்ணு கிட்ட இப்படியா பேறது ??” என்று புலம்பிக்கொண்டே வந்தாள்.

“என்ன சுமதி எவ்வளோ நேரம் நான் உன்னை கூப்பிடுறது..”  என்று வசந்தி கடிய, இங்கு  வந்த முதல் நாளே தன் அன்னையிடம் திட்டு வாங்கி தந்த அவனை பிடிக்கவில்லை. சரியான காட்டான் என்று மனதினுள் திட்டிக்கொண்டாள் ..

“என்ன பாசுமதி தனியாக புலம்பிட்டு வர. நீ சரியான ஹாப் பாயில் அரிசின்னு  சென்னையில் எல்லாருக்கும் தெரிஞ்சது போல இங்கயும் எல்லாருக்கும் தெரிஞ்சுட போகுது,..”  என்று கிண்டல் செய்த தம்பியை பார்த்து கோவமாக தன் கண்களை விரித்து முறைத்தாள்.

“வேணாம்டா நான் ஏற்கனவே ஒரு டென்ஷன்ல இருக்கேன் நீ சும்மா போயிடு?? ” என்று தான் தம்பியிடம் சண்டையிட தயாரானாள்..

 “ஏய் நிறுத்துங்க!! இரண்டு பேரும் வந்த இடத்திலும் உங்கபஞ்சாயத்தை ஆரம்பிக்காம  நல்ல பிள்ளைகளா நடங்க..” என்று தன் பிள்ளைகளை அதட்டினார் வசந்தி..

“ விடு வசந்தி. அவங்க எப்பொழுதும் போல இருக்கட்டும்”  என்று கூறிக்கொண்டே வந்தார் காமாட்சி.அன்பாக பேசும் அத்தையை வசுமதிக்கும் சிவாவிற்கும் மிகவும் பிடித்துவிட்டது..

“தேங்க்ஸ் அத்தை” என்று இருவரும் ஒரே சமயத்தில் கூறி ஹாய் பை அடித்துக்கொண்டனர்..

“வீடு இவ்வளோ கலகலப்பா இருந்து ரொம்ப நாள் ஆகிடுச்சும்மா…” 

“விடுங்க அண்ணி எல்லாம் சரியா போய்டும் அண்.. அண்ணனுக்கு தான் இன்னும் உள்ளூர கோவம் இருக்கு போல” என்று தன் அண்ணியிடம் குறைப்பட்டார் வசந்தி..

இதை எல்லாம் மேல் இருந்து கதிரவன் பார்த்துக்கொண்டிருந்தான். வந்த அன்றே  தன் அம்மாவின் மனதில் இந்த வாண்டுகள் இடம் பிடித்து விட்டன என்று எண்ணிக்கொண்டான்.

“ என்கிட்டே திமிரா பேசிட்டு கிழ அம்மாகிட்ட இளிக்கிரத்தை பார்…”  என்று  வசுமதியை மனதினுள் திட்டிகொண்டிருந்தான் …

எதேர்ச்சையாக மேலே பார்த்த வசுமதி அவன் பார்த்துக்கொண்டிருந்ததை பார்த்துவிட்டாள். இருவரின் பார்வையும் இருவரின் கோவத்தை தாங்கிக்கொண்டு நிலைத்து நின்றது.   ஆரம்பமே மோதலும் கோவமும்மாக எதிர் எதிர் துருவங்களாக நின்றனர்.

காமாட்சி மகனை அழைத்தார் “ தம்பி, கதிரவா இங்கவா சாமி. இன்னும் மாடியில் என்ன பண்ணிட்டு இருக்க??  வா யார்வந்திருக்காங்கன்னு  பார் சாமி..”  என்று.

“ ஓ!!!! இந்த காட்டான் பெயர் கதிரவனா..” என்று மனதிற்குள்ளேயே நினைத்துக்கொண்டு இருந்தாள் வசுமதி. தன் அம்மா அழைத்தவுடன் அப்பொழுதுதான் அவர்களை பார்ப்பது போல ஒரு சிறு முறுவலை புரிந்துக்கொண்டே இறங்கி வந்தான்..

குளித்துவிட்டு வேறு உடை அணிந்துக்கொண்டு வருகிறான் போல. கதிரவன் எப்போதும் வேட்டி சட்டை தான் அணிவான். நண்பர்கள் உடன் வெளியே செல்லும்போது ஜீன்ஸ்.அன்றும் தூய்மையான வெள்ளை நிற வெட்டியும் அழகான நீல நிற காட்டன் சட்டையும் அணிந்துக்கொண்டு கையில் தான் அணிந்திருந்த காப்பை சரி செய்துக்கொண்டே வந்தான்.

அவனை பார்த்ததும் வசந்தி “கண்ணா எப்படிப்பா இருக்க?? என்னை அடையாளம் தெரியுதா??  உன்னை கடைசியா பாக்கும் போது உனக்கு மூணு  வயசு.. அப்பதான் அழகா மழலையில் பேசிட்டு இருப்ப.  இப்போ இவ்ளோ உயரமா நானே அன்னாந்து பார்க்கும் அளவு வளர்ந்து இருக்க..” என்று அவன் கன்னம் வருடினார்.

“தோட்டத்திற்கு போடுற உரத்தை எல்லாம் இவனும் கொஞ்சம் யூஸ் செஞ்சிருப்பான் போல அதுதான் இப்படி வளர்ந்து இருக்கான் பனைமரம்..”  என்று நினைத்தது வேறு யாரும் அல்ல வசுமதி தான் …

அவனும் பதிலுக்கு “ அத்தை நாங்க யாரும் உங்கள மறக்கலை..”  என்று அவரின் கைகளை பிடித்துக்கொண்டான், 

“ அத்தை நீங்க எப்படி இருக்கீங்க?? ” என்று மரியாதையுடனும் பண்பாகவும் கேட்டவன் என்ன நினைத்தானோ பின்

“ நான் உயரமா இருக்கிறதுனால நிறைய பேர் என்னை பனைமரம் போலன்னு நினைக்கிறாங்க..” என்று வசுமதியை பார்த்து கூறினான்

“ கண்டுவிட்டானோ!!! இல்லை,, இவனுக்கு எதிர் இருப்பவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று கண்டுபிடிக்க தெரியுமோ?? ” என்று எண்ணினால் வசுமதி …

கதிரவன் வசுமதியை காணவும் வசந்தி,  “ கண்ணா இது என் பொண்ணு வசுமதி இது என் பையன்  சிவா ” என்று அறிமுகம் செய்தார்…

“உங்களுக்கு இவன் அத்தான்”  என்று காமாட்சி கூறினார். சிவாவிற்கு கதிரை பார்த்ததுமே பிடித்துபோய்விட்டது

 “ ஹாய்  அத்தான் ஐம் சிவா ” என்று கை குலுக்கவும்

“ஹாய் சிவா…” என்று அவனும் முழு சந்தோசத்துடன் கை குலுக்கி அணைத்துக்கொண்டான்.. கதிரவனுக்கு சிறு வயதில் இருந்தே தன் உடன்  பிறந்தவர்கள் யாரும் இல்லை என்று மிகவும் வருத்தம்.. ஏனோ அவனுக்கு சிவாவை பார்க்கவும் தனக்கு ஒரு  தம்பி இருந்தால் இப்படித்தான் இருப்பான் என்று எண்ணிக்கொண்டான்..

இதை எல்லாம் பார்த்த வசுமதி மனதிற்குள் நினைத்தாள் “ எல்லாம் நடிப்பு இந்த காட்டான் இல்ல  இல்ல கதிரவன் , அம்மா எப்படி அழைத்தார்கள்  கண்ணா, அத்தை எப்படி அழைத்தார்கள் சாமி.. அடடா பெரிய மகராஜா இவர்..” என்று மனதிற்குள்ளேயே அவனுக்கு வசை மாலைகள் சூடிக்கொண்டிருந்தாள்.

 “ என்னடிபார்த்துட்டு அப்படியே நிக்கிற?? ”  என்று வசந்தி அம்மா அதட்டினர்.. உடனே வசுமதிக்கு உள்ளே வந்த கோவத்தை வெளியே காட்டாமல்

“ ஹலோ “ என்று கூறி சிறுப்புன்னகை பூத்தாள். அவனும் அதே போல் “ ஹாய்”  என்று கூறினான்..

அப்பொழுது தான் வசுமதிக்கு உரைத்தது தன் கையில் பிரேஸ்லெட்  இல்லை என்று. அது அப்பாவும், அம்மாவும் ஆசை ஆசையாக அவளின் பதினெட்டாவது  பிறந்தநாளுக்காக பரிசளித்தது..

அன்றிலிருந்து அது அவளின் கையில் தான் எப்பொழுதும் அணிந்திருப்பாள்..“மேல இருந்து கிழே வரும்போது இருந்ததே. ஆனா இப்ப இல்லையே..”  என்று யோசனையில் இருந்தாள்.அவளின் எண்ணத்தை அறிந்த கதிரவனோ மனதினுள் நகைத்துக்கொண்டான்.  அதை அறியாத அவளின் அருமை தம்பி  

 “ஹே!! பாசுமதி என்ன ஹலோ சொல்லிட்டு இருக்க?? நீ என்ன போன்லயா  பேசுறநான் பார் எப்படி ஹாய் அத்தான் சொன்னேன்..” என்று தான் அக்காவை மீண்டும் வம்பிழுத்தான்…

அவன் பாசுமதி என்று கூறவுமே கதிரவன், காமாட்சி,  வசந்தி என அனைவருக்கும் சிரிப்பு வந்து விட்டது. மற்றவர்கள் சிரித்தது கூட  அவளுக்கு பெரிதாக தெரியவில்லை. அவன் அந்த கதிரவன் தன்னை பார்த்து கிண்டலாக சிரிக்கவும் இவளுக்கு ரோஷம் வந்துவிட்டது

“ வேணாம்டா சிவா, இது அனைத்திற்கும் சேர்த்து உனக்கு ஆப்பு வைக்கிறேன் “ என்று மனதிற்குள் கருவிக்கொண்டு “ யு மஸ்ட் பே பார் திஸ்…” என்று தன் தம்பியை பார்த்து கூறினாள்..

“ ஆ!!!  சரி சரி பே பண்றேன்..”  என்று அவனும் கிண்டலாக கூறினான். இவர்கள் இருவரின் சண்டையை பெரிய பெண்மணிகள் சந்தோசமாக பார்த்துக்கொண்டிருந்தனர். கதிரவனோ சற்று பொறாமையுடன் ரசித்துக்கொண்டிருந்தான். அதே நேரம் சிவபாண்டியன் சண்முகநாதன் இருந்த அறைக்குள் நுழைந்தார்..

“என்னை மன்னிச்சிடுங்க மாப்பிள்ளை. உங்களை எல்லாம் இத்தனை நாள் நாங்க கஷ்ட படுத்திட்டோம்” 

சண்முகநாதன் “வேண்டாம் வேண்டாம், மன்னிப்பு எல்லாம் கேட்டு என்னை இனியும் வேறா நினைக்கவேண்டாம், நடப்பது எல்லாம் இனி நல்லதாய் நடக்கட்டும்..” என்று கூறி கை குலுக்கினார்..

சிவபாண்டியன் அதை ஆமோதிப்பவர்போல் புன்னகை செய்தார். இருவரும் அறையை விட்டு சிரித்துக்கொண்டே வெளியே வரவும் காமாட்சிக்கும் வசந்திக்கும் மனதிற்குள் இருந்த கவலை மறைந்தது.. தான் அண்ணனிடம் வசந்தி

“ அண்ணா  இப்போவாது சொல்லுங்கஅம்மா எங்க??  வந்த உடனே கேட்டதிற்கும்  பதில் சொல்லவில்லை..” என்று கேட்டார்.

“இப்போ அம்மாவை தான் பார்க்க போறோம்..” என்று கூறினார்..

உடனே கதிரவன் அப்பா ஒரு நிமிடம் என்றான்

“யாரும் உடனே டென்ஷன் ஆகிவிட வேண்டாம்..  இது அப்பத்தா ப்ரேக் பாஸ்ட்  நேரம் அது தான் எல்லாரையும் நிக்க சொன்னேன் ”

உடனே காமாட்சி “ இல்லகதிரவா, அத்தை இன்னும் சாப்பிடலை எல்லாரையும் பார்த்துட்டு சாப்பிடுறேன்னு சொன்னாங்க..” எனவும் ,

கதிரவன் “ என்னம்மா மணி என்ன ஆச்சு..?? ஏற்கனவே ரொம்ப தளர்ந்து போய் இருக்காங்க. முதலிலேயே அப்பத்தா சாப்பிடலைன்னு  சொன்னா  என்ன?? ” என்று தன் அன்னையிடம் சற்று அழுத்தமாக பேசினான் ..

அதை கேட்ட உடன் வசந்தி மிகவும் பயந்து விட்டார் “ அண்ணி அம்மாக்கு என்ன?? உடம்பு சரி இல்லையா?? அதனால தான் எங்க எல்லாரையும் வர சொன்னீங்களா??” என்று பதற்றப்பட்டார்.. காமாட்சி பதில் கூறுமுன் கதிரவன்,

“ அத்தை அப்பத்தாவிற்கு உடலில் எந்த குறையும் இல்லை.. எல்லாமே மனதில் தான் இத்தனை வருசமா உங்கள பார்க்காம  பேசாம  எதையும் வெளிக்காட்டாம  இருந்தாங்க.  முதுமை வர வர அதுமனதில் வருத்தம் வேதனையை அதிகரித்து, நடமாட்டத்தை குறைத்துவிட்டது”  என்று சுருக்கமாக கூறியபடியே முன்னே நடந்தான்.

போகும்போதே “ தங்கம் அக்கா அப்பத்தாக்கு ஒரு டென் மினிட்ஸ் கழித்து   சாப்பிட கொண்டு வாங்க… ” என்று கூறிச்சென்றான்.. அவனின் வேகமும் சமயோசித புத்தியும் வசுமதியை சற்று ஆச்சர்யப்பட வைத்தது ..

 

Advertisement