Advertisement

அத்தியாயம் – 2

 

 

பலமாடி கட்டிடங்கள் உயர்ந்து நிற்க அதன் வாயிலில் வண்டியை சென்று நிறுத்தினான் சைதன்யன். அவனுக்கு வயது இருப்பத்தைந்து தான் இருக்கும்.

 

 

பார்க்க டிப்டாப்பாகவே இருப்பவன் அந்த பன்னாட்டு நிறுவன ஊழியர்களை கொண்டு வந்து விடும் வண்டியின் டிரைவர் என்றால் பார்ப்பவர்கள் நம்புவது சற்றே கடினம் தான். ஆனால் அது தான் அங்கு உண்மை.

 

 

அப்போது தோழிகள் இருவர் அவனை பார்த்து பேசிக்கொண்டே இறங்கினர். இருபெண்களில் ஒரு பெண்ணை சைதன்யன் வைத்த கண் வாங்காமல் பார்த்தான்.

 

 

“ஹேய் அங்க பாருடி அவன் வழக்கம் போல உன்னை பார்க்க ஆரம்பிச்சுட்டான் என்று ஒருத்தி சொல்ல மற்றவளோ “அச்சோ நீ கொஞ்சம் பேசாம இருக்கியாடி. அவன் வண்டி டிரைவர் அவனெல்லாம் நம்மை பார்க்கலாமா என்றாள் மற்றவள்.

 

 

“என்ன பேசறே நீ?? டிரைவர்ன்னா கேவலமா என்ன??

 

 

“நான் அப்படி சொல்லலை. ஆனா அவனுக்கு வந்த வாழ்வை பாரேன், டிரைவர் மாதிரியா டிரஸ் பண்ணிட்டு இருக்கான் என்றாள் மற்றவள்.

 

 

“என்னமோ நீ இப்படி பேசுறது எனக்கு பிடிக்கலை என்றுவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள் முதலில் பேச ஆரம்பித்தவள்.

 

 

அவனை பார்த்துக்கொண்டே இருவரும் முணுமுணுப்பதை கண்டுவிட்டிருந்த சைதன்யன் தனியே நின்றிருந்தவளை நெருங்கி வந்தான்.

 

 

“என்னை பத்தி பேசிட்டு இருந்தீங்க போல என்றான் அவளை நெருங்கி.

 

திடீரென்று அருகே கேட்ட குரலில் திடுக்கிட்டவள் “ஆமா உங்களை பத்தி தான் பேசிட்டு இருந்தோம். நீங்க தானே அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்ல நிக்கறவர் அதான் என்றாள் ஏகத்தாளமாக.

 

 

அவள் பேச்சை கேட்டு அவனுக்கு முகம் சுருங்கியது. “சாரி என்றுவிட்டு அவ்விடம் விட்டு நகர்ந்தான் அவன்.

 

 

“நல்லா வேணும் இவனுக்கு என்கிட்ட வந்து பேசுவானா இவன். அவ்வளவு தைரியமா இவனுக்கு. நான் என்ன படிச்சிருக்கேன். இவன் என்ன படிச்சிருக்கான்

 

 

“ஆப்ட்ரால் ஒரு டிரைவர் என்கிட்ட பேச இவனுக்கு என்ன தகுதி இருக்கு என்று சத்தமாகவே முணுமுணுத்து அவ்விடம் விட்டு நகர்ந்தாள் அப்பெண்.

 

 

சிறுவயதில் இருந்தே பணக்கார தோரணையுடன் வளர்ந்த பெண் அவள். அப்பர் மிடில் கிளாஸ் என்பார்களே அது போன்ற வகை சேர்ந்தவர்கள் அவர்கள்.

 

 

பணத்திற்கு என்றுமே குறைவில்லை அவர்கள் வீட்டில். கேட்டது கிடைக்கும் அளவில் அவர்கள் குடும்பம் இருந்ததில் எல்லாவற்றிலுமே ஒரு மிடுக்கும் செழிப்பும் அவளிடம் இருக்கும்.

 

 

இப்படியாக சைதன்யன் அப்பெண்ணை பார்ப்பதும் பதிலுக்கு அவள் அலட்சியமாய் பார்த்தாலும் பார்க்காதது போலவும் இருப்பது தொடர்கதையானது. பொறுத்து பொறுத்து பார்த்த சைதன்யன் ஒரு நாள் நேரடியாக அவளிடம் அவன் மனதில் இருப்பதை சொல்லியே விட்டான்.

 

 

“ஏங்க ஒரு நிமிஷம் நான் உங்க கூட பேசணுமே?? என்று அவளை பார்த்து கூறவும் அவளுடன் எப்போதும் ஒட்டுண்ணியாய் இருக்கும் அவள் தோழி அவனை கண்டதும் தோழியிடம் சொல்லிவிட்டு அங்கிருந்து விடைபெற்றாள்.

 

 

தனித்து நின்றவளின் அருகே வந்தவன் “உங்ககிட்ட பேசணும்ன்னு சொன்னேன். என்னன்னு கேட்க மாட்டீங்களா??

 

 

“பேசணும்ன்னு சொன்னது நீங்க?? என்ன பேசணுமோ அதை நீங்க தானே பேசணும் என்றாள் அவள் பதிலுக்கு.

 

 

“உங்களோட இந்த அலட்சியம் தான் என்னை உங்களை திரும்பி பார்க்க வைக்குது. அதுவே உங்க மேல ஒரு விருப்பம் எனக்கு உருவாக காரணமாகிடுச்சு என்று அவன் கூறியதும் முதலில் ஒன்றும் புரியாது விழித்தவள் முகத்தில் கோபத்தின் சாயல்.

 

 

“பொறுங்க நான் முதல்ல சொல்லி முடிச்சிறேன். உங்க பதிலோ இல்லை திட்டோ அப்புறம் வைச்சுக்கலாம்

 

 

“எனக்கு உங்களை பிடிச்சிருக்கு. நாம ஒண்ணா சேர்ந்தா நல்லாயிருக்கும்ன்னு தோணுது. எனக்கு தெரியும் உங்களுக்கும் என்னை பிடிக்கும்ன்னு

 

 

“இல்லைன்னு சொல்லி எல்லாம் ஏமாத்தாதீங்க, உங்களையும் ஏமாத்திக்காதீங்க

 

 

“என்னை பிடிக்கக் கூடாதுன்னு நீங்களே உங்களுக்கு ஏதோ கன்ட்ரோல் பண்ணிக்கறீங்கன்னு நினைக்கறேன். அதுக்கு ஏதோ ஒரு காரணம் இருக்குன்னு தெரியுது. அது என்னன்னு தெரிஞ்சா நாம அதை பேசி சரி பண்ணிக்கலாம் என்றான்.

 

 

அவன் பேசி முடிக்கவும் அவளுக்கு அயர்ச்சியாக இருந்தது. நிஜமாகவே தனக்கு அவனை பிடித்திருக்கிறதா?? என்ற சுய அலசலில் இறங்கியவளுக்கு அவன் முன்னே எதுவும் யோசிக்க பிடிக்கவில்லை.

 

 

“சொல்லிட்டீங்கள்ள நான் போகலாம் தானே என்றாள்.

 

 

“பதில் சொல்லாம போறீங்களே??

 

 

“இன்னைக்கே சொல்லணுமா என்ன??

 

 

“காத்திட்டு இருப்பேன் என்றுவிட்டு அவன் வண்டியை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டான்.

 

 

அவள் இருக்கைக்கு வந்து அமரவும் தோழி வந்து அவளை பிடித்துக்கொண்டாள். “என்னவாம் அவருக்கு உன்கிட்ட லவ் சொல்லிட்டாரா?? என்றாள்.

 

 

பதிலுக்கு ஆம் என்பது போல் தலையசைத்தாள் மற்றவள். “நீ இன்னும் என்ன யோசனையில இருக்க, சரின்னு சொல்ல வேண்டியது தானே

 

 

“உனக்கும் அவரை பிடிச்ச மாதிரி தான் தெரியுது. அப்புறம் ஏன் பிகு பண்ணுற என்றாள் தோழி.

 

 

“உனக்கும் அப்படியா தோணுது. எனக்கு அவனை பிடிக்குதா?? நிஜமாவே நீயும் அப்படி தான் நினைக்கறியா?

 

 

“அதென்ன நிஜமாவேன்னு டவுட்டு உனக்கு. பிடிக்கலை பிடிக்கலைன்னு சொல்லிட்டு தினமும் அவரை பத்தி தானே பேசுற??சரி என்ன முடிவெடுத்து இருக்க??

 

 

“தெரியலை என்ன முடிவேடுக்கன்னு, யோசிச்சு அப்புறம் சொல்லறேன் என்றுவிட்டு அவள் வேலையை பார்க்கச் சென்றாள்.

 

 

அவளின் தோழியும் தோளைக் குலுக்கிவிட்டு சென்றுவிட்டாள். ஒரு வாரம் சென்றிருக்கும் ஏதோவொரு முடிவுடன் அவள் இருப்பது போல் தோன்ற அவள் முகத்தை பார்த்த அவள் தோழி “என்னடி முடிவு பண்ணிட்ட போல என்றாள்.

 

 

“ஹ்ம்ம் ஆமாம்டி. முடிவு பண்ணிட்டேன், எனக்கும் ஓகே தான் ஆனா சில விஷயங்களை தெளிவுப்படுத்திக்கிட்டு தான் ஓகே சொல்லுவேன்

 

 

“என்ன விஷயம் தெளிவாகணும் உனக்கு??

“முதல்ல எனக்கு அவன் பார்க்கற வேலையே பிடிக்கலை. நான் இவ்வளவு நாளும் அதுக்கு தான் தயங்கினேன்னு நினைக்கறேன். ரெண்டாவது என்னால இப்போ அனுப்பவிக்கற வசதி வாய்ப்பு எல்லாம் விட்டுட்டு வரமுடியாது

 

 

“எங்க வீட்டுக்கு நான் ஒரே பொண்ணு. எங்க வீட்டில இருக்கறவங்க எனக்கு வீட்டோட மாப்பிள்ளையா தான் பார்க்கறாங்க. அதுக்கெல்லாம் சரின்னா தான் எனக்கும் ஓகே

 

 

“லூசாடி நீ… இல்லை லூசா நீன்னு கேக்குறேன். உனக்கு அப்படி என்னடி கவுரவம்?? மனசுக்கு பிடிச்சவனை விட அவனோட வசதி வாய்ப்பு தான் முக்கியமா??

 

 

“இவ்வளவு பார்க்குற நீ எப்படி என் கூட பழகின, நான் ஒண்ணும் உன் வசதிக்கு இல்லையே?? அதுவும் இல்லாம கிராமத்து பொண்ணு வேற?? என்றாள் தோழி.

 

 

“உன்னை பார்த்தா வசதி இல்லாத போல தோணலை. அப்படியே இருந்தாலும் நீ படிச்சிருக்க, நல்ல வேலை பார்க்கற இல்லையா?? அதான் உன்னோட பழகறேன் என்று தயங்காமல் உண்மையை ஒப்புக்கொண்டவளை பார்த்ததும் வெட்கினாள் அவள் தோழி.

 

 

“சாரி ரொம்ப சாரி உன் கூட எல்லாம் நான் எப்படி தான் பழகினனோ தெரியலை. உன்னோட வாழ்க்கை உன்னோட முடிவு என்னமோ பண்ணிக்கோ. இனிமே உனக்கும் எனக்கும் சரி வராது என்றுவிட்டு அவள் தோழி நகர்ந்து சென்றுவிட்டாள்.

 

 

‘இவளுக்கு என்ன பித்தா பிடிச்சிருக்கு. ஓவரா ரியாக்ட் பண்ணிட்டு போறா என்று மனதிற்குள் எண்ணிக்கொண்டவள் மறுநாள் சைதன்யனை நேரில் பார்த்த போது தனியே பேச வேண்டும் என்றாள்.

 

 

“சொல்லுங்க என்ன பேசணும் என்றான் அவன்.

 

 

“அன்னைக்கு சொன்னீங்களே, நான் என்னமோ சொல்லத் தயங்குறேன்னு. அதை பத்தி தான்

“சொல்லுங்க

 

 

“எனக்கும் ஓகே தான், ஆனா

 

 

“அது தான் எனக்கு அன்னைக்கே தெரியுமே. உங்களுக்கு தடையா இருக்கறது என்னன்னு சொல்லுங்க

 

 

“தடைன்னு எல்லாம் இல்லை. நாம இப்படியே இருக்க முடியாது இல்லையா?? நீங்க ஏன் வேற பிசினஸ் எல்லாம் பண்ணக்கூடாது. இப்படியே டிரைவர் வேலை பார்த்திட்டே இருக்க முடியாதுல

 

 

“அதான் சொன்னேன், இல்லைன்னா நீங்க வீட்டில கூட இருங்க, நான் தான் சம்பாதிக்கறேன்ல

 

 

“எனக்கு பிடிச்சா போதும் எங்க வீட்டில யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க. நீங்க எங்க வீட்டிலேயே இருக்கலாம் என்று ஒருவாறு தான் சொல்ல வந்ததை சொல்லிவிட்டாள்.

 

 

“அப்புறம்

 

 

“அதான் எல்லாம் சொல்லிட்டேனே, இதுக்கெல்லாம் உங்களுக்கு ஓகேன்னா எனக்கும் ஓகே தான்

 

 

“அப்போ என்னோட குடும்பம் எல்லாம் என்ன பண்ணணும்?? என்று நெற்றி சுருக்கி கேட்டான்.

 

 

“அவங்க இப்போ இருக்கற மாதிரியே இருக்கட்டும். நாம மாச மாசம் காசு கொடுத்திடலாம். இப்போ நீங்க எவ்வளவு கொடுக்கறீங்களோ அதைவிட கூடவே கூட கொடுத்திடலாம்

 

 

“நான் இப்படி சொல்றேனேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க. எங்க வீட்டுக்கு நான் ஒரே பொண்ணு அவங்களை நான் தான் பார்த்துக்கணும். வேற யாரும் இல்லை அதனால தான்

 

“அப்போ நான் பார்க்கற இந்த வேலை தான் உனக்கு பிரச்சனை என்றவனின் மரியாதையைவிட்டு ஒருமைக்கு தாவியிருந்ததை அவனின் சம்மதம் என்று எடுத்துக் கொண்டிருந்தாள் அவள்.

 

 

“அதுவும் ஒரு காரணம் அவ்வளவு தான். அப்போ உங்களுக்கு நான் சொன்னதுல சம்மதமா?? சீக்கிரமே ஒரு நல்ல நாளா பார்த்து எங்க வீட்டில இருந்து உங்க வீட்டுக்கு அனுப்பி வைக்கட்டுமா என்றாள்

 

 

“நான் தப்பு பண்ணிட்டேன்னு நினைக்கிறேன்

 

 

“என்ன தப்பு பண்ணதா நினைக்கறீங்க?? புரியலியே??

 

 

“உன் அலட்சியம் எல்லாம் ஏதோ என்னை விரும்பிடக் கூடாதுன்னு நீ பண்ணுறியோன்னு நினைச்சேன். இப்போ தானே புரியுது

 

 

“என்ன பேசறீங்க??

 

 

“உன்னை சரியா புரியாம தான் விரும்பிட்டேன். நான் என்ன பண்ணுறேன் ஏது பண்ணுறேன்னு என்னைப்பத்தி எதுவுமே தெரியாம நீ உன் விருப்பத்துக்கு என்னை ஆட்டுவிக்கணும்ன்னு நினைக்கிற

 

 

“உன் இஷ்டத்துக்கு ஆடறவன் நானில்லை. உன்னை இப்பவும் விரும்பறேன் உன்னோட திமிர், அலட்சியம் எனக்கு உன்னை பிடிக்க வைச்சுது

 

 

“அதே திமிரும் அலட்சியமும் தான் உன்னைவிட்டு விலகி போகவும் வைக்குது. நமக்குள்ள சரி வராதுன்னு நினைக்கிறேன்

 

 

“நான் இப்போ என்ன தப்பா சொல்லிட்டேன்னு அதிகமா பேசறீங்க?? நான் யதார்த்தமானவ நான் யோசித்துல பேசினதுல எதுவுமே தப்பில்லை. இதுக்காக நீங்க ஒரு நாள் ரொம்ப வருத்தப்படுவீங்க

 

 

“நான் நிச்சயம் கடவுளுக்கு நன்றி தான் சொல்லுவேன். ஆனா நீ தான் இப்படி எல்லாம் பேசினதுக்கு ரொம்ப வருத்தப்படப் போறே?? உன்னை விரும்பின குற்றத்துக்கு என்னை வீட்டோட மாப்பிள்ளை ஆக்கி மூலையில உட்கார வைக்கணும்னு தானே உன்னோட எண்ணம்

 

 

“நான் ஒண்ணும் அப்படி சொல்லலை. நல்ல வேலை கிடைக்கற வரை வீட்டில இருக்கலாமேன்னு தான் சொன்னேன் என்றாள் மிடுக்காய்.

 

 

“உங்க நல்ல எண்ணத்துக்கு ரொம்ப ரொம்ப நன்றி. அதுக்கு நான் ஆளில்லை. எனக்கு குடும்பம் இருக்கு அவங்களை காப்பாத்துற கடமையும் இருக்கு

 

 

“உங்க வீட்டுக்கு நீங்க ஒரே பொண்ணா இருக்கலாம். எங்க வீட்டுக்கு நான் தான் இப்போ தலைவன் நான் தான் அவங்களை பார்க்கணும். நீங்க உங்க வீட்டுக்கு தகுந்த மாதிரி உங்களோட கண்டிஷனுக்கு ஏத்த மாதிரி நல்ல பையனை வாங்கிக்கோங்க என்று நக்கலான குரலில் வாங்கி என்பதை அழுத்திச் சொன்னான்.

 

 

“என்ன ரொம்ப அதிகமா பேசறீங்க. எங்க இருந்து வந்தது இவ்வளவோ தைரியம் என்று கோபத்தில் சீறினாள் அவள்.

 

 

“அதிகமா பேச வைச்சது நீ தான். நான் உன்கிட்ட நாகரீகமா என்னோட லவ் சொன்னேன். நீ என்ன செஞ்சிருக்கணும் பிடிச்சிருந்தா சரி சொல்லியிருக்கலாம். இல்லைன்னா சாரி சொல்லியிருக்கலாம். அதைவிட்டுட்டு அதிகமா பேசினது நீ தானே. அதுக்கு நான் பதில் கொடுத்தேன் அவ்வளவு தான்.

 

 

“அப்போ நீங்க எப்படி இருந்தாலும் நான் கண்ணை மூடிட்டு சரின்னு சொல்லணும்ன்னு சொல்றீங்களா??

 

 

“அப்படி சொல்லவே இல்லை. நீ பேசின விதம் சரியில்லை உன்னோட எண்ணம் சரியில்லைன்னு சொல்றேன். உனக்கு இவ்வளவு தூரம் புரிய வைக்கணும்ன்னு எனக்கு அவசியமில்லை

 

 

“குட் பை இனி உன்னை நான் பார்க்கும் போது நிச்சயம் நீ பார்த்து பொறாமைப்படுற நிலைமையில தான் இருப்பேன். இதை என்னால உறுதியா சொல்ல முடியும், வர்றேன் என்று சொல்லிவிட்டு அவளை நிமிர்ந்தும் பார்க்காமல் சென்றான் அவன்.

 

 

“நீ தான் என்னை மிஸ் பண்ணதை நினைச்சு வருத்தப்படுவ என்று அவள் சொன்னது காற்றுவாக்கில் வந்து அவன் காதில் விழுந்தது. அதே ஆத்திரத்துடன் அவள் அலுவலகத்திற்குள் நுழைந்தாள்.

 

 

அப்போது அவள் தோழி அவளைத் தாண்டி சென்றாள். அவளின் கைப்பிடித்து இழுத்தவள் தனியே இழுத்துச் சென்றாள்.

 

 

“என்ன?? என்றாள் அவள் சிடுசிடுப்பாய்.

 

 

“என்னடி ஆச்சு உனக்கு?? இப்போ நான் என்ன தப்பு பண்ணிட்டேன்னு இப்படி முகத்தை திருப்பிக்கிட்டு போறே?? அந்த லூசு அவனும் நான் வேணாம்ன்னு சொல்லிட்டு போய்ட்டான்

 

 

“நான் அப்படி என்ன தான் தப்பு செஞ்சேன் ஏன் இப்படி பண்றீங்க எல்லாரும்

 

 

“உன்னோட எண்ணமே தப்புன்னு உனக்கு புரியலையா என்றாள் தோழி நிதானமாய்.

 

 

“என்னடி எண்ணம் தப்பு வண்ணம் தப்புன்னு ரெண்டு பேரும் ஒரே மாதிரி சொல்றீங்க?? அப்படி என்ன தப்பை கண்டுட்டீங்க என் மேல

 

 

“என்ன தப்புன்னு யோசிச்சா உனக்கே புரியும். உன்கிட்ட பேச எனக்கு இஷ்டமில்லை. எனக்கு இப்படி தகுதி பழகுறவங்களோட எந்த நட்பும் வேணாம். இனிமே என்னை இப்படி நிறுத்தி பேச முயற்சி பண்ணாதே என்றுவிட்டு நகர்ந்தாள் அவள்.

 

 

அவளுக்கு அயர்வாக இருந்தது. ‘என் எண்ணத்தில் என்ன தவறு இருக்கிறது, நியாயமான ஒரு ஆசை தானே எனக்கும் இதை ஏன் எல்லோரும் தவறாக புரிந்து கொள்ளுகிறார்கள்

 

 

‘அவர்கள் சொல்லுவது போல் நிஜமாகவே என் எண்ணங்களில் தவறிருக்கிறதா?? என்று யோசித்தவள் தலையை சிலுப்பி இல்லவே இல்லை என்று உறுதியாக நம்பத் தொடங்கியவள் அவள் வேலையை கவனிக்கச் சென்றாள்.

 

 

மறுநாளில் இருந்து சைதன்யன் அவர்களை அழைத்துச் செல்ல வரவில்லை. வேறு ஒரு டிரைவர் வந்திருந்தார். இதை நான் சொன்னப்போ கசந்துச்சு,அதையே தானே இவரும் செஞ்சிருக்கார்.

 

 

இதுக்கு என் பேச்சை கேட்டிருந்தா நாங்க சந்தோசமாக இருந்திருக்கலாமே என்று எண்ணினாள். உண்மையிலேயே அவளுக்கு சைதன்யனை மறக்க முடியவில்லை.

 

 

ஒவ்வொரு நிமிடமும் அவன் நினைவுகள் வந்து அவளை அலைக்கழித்தது. நெருங்கிய தோழியும் முன்பு போல் பேசுவதில்லை. அங்கிருக்க பிடிக்காமல் அவர்கள் அலுவலகத்தின் வேறு கிளைக்கு மாற்றல் விண்ணப்பதித்தவள் அடுத்த பத்து நாட்களில் அங்கு சென்றும்விட்டாள்.

 

 

நாட்கள் வேகமாக கடந்து செல்ல ஆறுமாதம் கழிந்திருந்தது. அப்போது ஒரு நாள் சைதன்யன் விரும்பிய பெண்ணின் தோழியை ஒரு பேருந்து நிறுத்தத்தில் சந்தித்தான்.

 

 

அவளைக் கண்டதும் ஆட்டோவை நிறுத்திவிட்டு அவளருகே சென்றான். “என்னை உங்களுக்கு ஞாபகமிருக்கா?? என்றான் அவன்.

 

 

அவனைக் கண்டதுமே அடையாளம் கண்டுகொண்டவள் “நல்லா ஞாபகமிருக்குங்க. எப்படி இருக்கீங்க??

 

 

“நான் நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க??

 

 

“ஹ்ம்ம் நல்லாயிருக்கேன்

 

 

“ஆபீஸ்க்கா??

 

“இல்லை வீட்டுக்கு போயிட்டு இருக்கேன். இன்னைக்கு எனக்கு ஆபீஸ் லீவ். வெளிய ஒரு வேலையா வந்தேன், வந்த வேலை முடிஞ்சுது அதான் பஸ்க்கு வெயிட் பண்ணிட்டு இருக்கேன்

 

 

“வாங்க நான் ட்ராப் பண்ணுறேன்

 

 

“இல்லைங்கபரவாயில்லை நீங்க கிளம்புங்க. இப்போ பஸ் வந்திடும் நான் போய்க்குவேன்

 

 

“நான் காசு எல்லாம் கேட்க மாட்டேங்க வாங்க போகலாம்

 

 

“அச்சோ நான் அதுக்காக பார்க்கலைங்க. சரி வாங்க என்று அவன் பின்னே நடந்தாள்.

 

 

“ஒரு காபி சாப்பிட்டு போகலாமா??

 

 

“ஹ்ம்ம்

 

 

அவளை பின்னால் ஏற்றி சற்று தொலைவு சென்றதும் ஒரு ஹோட்டலில் நிறுத்தினான். ஏதோ யோசனையுடனே அவனிருப்பது கண்ணில்ப்பட்டது.

 

 

இருவருமாக சென்று எதிர் எதிர் திசையில் அமர்ந்ததும் இருவருக்குமாக காபியை சொல்லிவிட்டு காத்திருந்த நொடிகளிலும் அவனாக எதுவும் பேசவில்லை.

 

 

அவளும் நமக்கென்ன என்பது போல் அமர்ந்திருந்தாலும் அவன் எதுவும் பேசாமல் இருப்பது ஒரு மாதிரியாக இருந்தது. அதற்குள் காபி வந்துவிட அதை எடுத்து பருக ஆரம்பித்தவள் அவனை கவனிக்க அவன் காபி இன்னும் எடுக்கப்படாமலே இருந்தது.

 

 

“என்னாச்சு காபி குடிக்கலையா?? ஆறிடப்போகுது

 

 

“என்னை கல்யாணம் பண்ணிக்கறீங்களா?? என்று கேட்ட சைதன்யனை அதிர்ச்சியாய் பார்த்தாள்.

 

 

“என்ன என்ன சொல்றீங்க நீங்கன்னு புரிஞ்சு தான் பேசறீங்களா??

 

 

“புரிஞ்சு தான் கேட்கறேன், நீங்க எனக்கு சரி சொல்லுவீங்களா இல்லை உங்க தோழி போல எதுவும் அவமானப்படுத்திடுவீங்களா??

 

Advertisement