Advertisement

தேடல் – 4

 

“நீ சீரியலே பார்க்க மாட்டியா…?? இல்லை என் சீரியல் பார்க்க மாட்டியா..??” என்று அகிலன் கேட்க,

“அப்படி இல்ல, இப்போ கொஞ்ச நாலா எதுவும் பார்க்கிறது இல்லை.. நேரமில்லைன்னு தான் சொல்லணும். பூர்விய கவனிக்கவே சரியா இருக்கு…” என்று புவனா சொல்ல,

ஹ்ம்ம் யார் யாரோ நம் நடிப்பை பார்க்க, இவளுக்கு என்ன பார்த்தால் குறைந்துவிடுவாளா என்று லேசாய் மனம் சுனங்க, முகம் திருப்பிக்கொண்டான். ஆனால் அதெல்லாம் உணரும் நிலையில் புவனா இல்லை. 

புவனாவிற்கு இன்னும் கூட தான் எடுத்த இம்முடிவு சரிதான என்று தெரியவில்லை. யோசிப்பதற்கான அவகாசமே அவளுக்கு தரவில்லை என்று தான் சொல்லவேண்டும்.

அன்று வீடு வந்து சென்றவன் தான் அதன் பின் சில முறை வந்தான் அவ்வளவே. ஆனால் இப்பொழுதோ அவனோடு ஒரே காரில் ஊட்டி பயணம். பூர்வி வேறு அழகாய் அவன் மடியில் தலையும், இவள் மடியில் காலும் வைத்து உறங்குகிறாள்.

அகிலனின் புது நாடக ஷூட்டிங் ஊட்டியில். அவனும் பூர்வியும் நடிக்கும் முதல் நாடகம். பூர்வி நடிக்க, புவனாவின் பெற்றோர்கள் சம்மதித்தாலும் புவனா சரியென்று சொல்லவில்லை. சொல்ல மனம் வரவில்லை.

ஆனால் அகிலனோ அடுத்து தான் செய்யவேண்டியதில் தெளிவாய் இருந்தான். அவனுக்கு புவனாவுடனான வாழ்வு வேண்டும். அந்த வாழ்வில் பூர்வியும் இருக்கிறாள் எவ்வித சந்தேகமும் அதில் இல்லை. இரு வீட்டினருக்குமே சம்மதம் என்ற நிலையில், அகிலனுக்கும் பிடித்தம் என்ற நிலையில் புவனா மட்டுமே சம்மதிக்க வேண்டியது இனி.

ஆனால் சம்மதிக்க வைக்கப்பட வேண்டியவளாகி போனாள்.

“அகில்… நீ பண்றது கொஞ்சம் கூட சரியில்ல… நாங்க பேசி முடிக்கிறோம்..” என்று பலராம் சொல்ல,

“அப்பா.. அம்மாக்கு சொன்னது தான் உங்களுக்கும். இனி யாரும் என் கல்யாண விசயத்துல தலையிட வேண்டாம். புவனா தான் என் வைப்.. அதுல எந்த சந்தேகமும் இல்லை…” என்று சொல்ல,

அம்பிகா நாங்கள் வேண்டுமானால் ஒருமுறை சென்று பேசுகிறோம் என்று சொல்ல,

“நீங்க எப்படி பேசுவீங்கனு எனக்கு நல்லா தெரியும்மா.. உங்க தோரணை எல்லாம் அங்க காட்ட வேண்டாம்..” என்று அதற்கும் முற்றுபுள்ளி வைத்து, தன் வீட்டினரை வாயடைக்க வைத்திருந்தான் அகிலன்.

இதற்குமேல் அவர்கள் இதில் தலையிட்டால் நிச்சயம் அது புவனாவிற்கு எதிர்மறையான எண்ணங்கள் தான் வரும். எதோ இப்பொழுது தான் முகம் பார்த்து இரண்டொரு வார்த்தை பேசுகிறாள், அதையும் அவன் கெடுத்துக்கொள்ள விரும்பவில்லை.

தனசேகரிடமும் கோமதியிடமும் பேசினான். தன் மனதில் இருப்பதை மறையாமல் சொன்னான். அவர்களுக்கு சந்தோசம் தான்.ஆனால் அதற்காக அகிலன் சொன்ன ஏற்பாடு தான் முதலில் தயக்கத்தை கொடுத்தது.

பூர்வியை அவன் நாடகத்தில் நடிக்க கேட்டான்.

இதற்கு யார் தான் உடனே சம்மதிப்பர்??

சொந்தத்தில் பெண்ணை கொடுத்துவிட்டால் காலம் முழுமைக்கும் ஒரு ஆதரவு இருக்கும் என்று புவனா வீட்டினரும், சொந்தத்தில், அதுவும் வசதியில் தங்களை விட கொஞ்சம் கம்மியாய் இருக்கும் புவனாவை அகிலனுக்கு முடித்தால் பழைய விஷயங்கள் எதுவும் வெளியே போகாது என்று அகிலன் வீட்டினரும் ஒரு கணக்கில் இவர்கள் திருமணதிற்கு சம்மதம் சொல்ல,

அகிலனோ முழுக்க முழுக்க தன் காதலை கொண்டு மட்டுமே இதை நோக்கினான். வேறு காரணங்கள் அவனுக்கு தேவையுமில்லை, கிடையவும் கிடையாது.

ஆனால் புவனா??

தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் தன் எண்ணங்கள் முழுவதையும் பூர்வி மீது வைத்திருந்தாள்.

அதுவும் ஒருவித நல்லதற்கே.

“அது எப்படி தம்பி சின்ன குழந்தைய நடிக்க வைக்க…” என்று தனசேகர் தயங்க,

“பூர்வி நடிக்க வேண்டியதே இல்லை மாமா.. அவ கேசுவலா இருந்தா போதும்.   பூர்விக்கு இதில பக்கா சேப்டி.. எல்லாத்துக்கும் நான் பொறுப்பு. எனக்குமே வேற வழி தெரியலை. என்னால இங்க வீட்டுக்கு அடிக்கடி வந்து போக  முடியாது. புவனா மனசுல நெருங்க எனக்கு வேற வழியும் கிடையாது. என்னோட ஒரே நம்பிக்கை எல்லாம் இப்போ பூர்வி தான்…” என்று அகிலன் கேட்க, அவர்களுக்கும் வேறு வழியிருக்கவில்லை.

ஆனால் நிச்சயமாய் இதில் புவனாவின் வார்த்தையும் முக்கியம் என்று சொல்ல,

அகிலனோ வேறு விதமாய் புவனாவை அணுகினான்.

“குட்டீஸ் வச்சு ஒரு போட்டோ சூட் நடக்குது, பேபிய கூட்டிட்டு வர முடியுமா??” என்று அகிலன் கேட்ட போது,

“பூர்வி எதுக்கு???” என்று விழிகள் விரித்தாள் புவனா.

“எனக்கு தெரிஞ்சு நீ பேபிய எங்கயும் கூட்டிட்டு போறது இல்லை. ஒரு சேஞ்சா இருக்கும் தானே. சும்மா வந்துட்டு போங்க…” என்று அகிலன் அழைப்பு வைக்க,

தன் உணர்வுகளை புரிந்து வீட்டில் திருமண பேச்சை நிருத்தியிருக்கிறான் என்பதே அவன் மீது ஒரு நல்லெண்ணம் வந்திருக்க,

“ம்ம்ம் சும்மா வேணும்னா வரோம்..” என்று சொல்லி பூர்வியை அழைத்துக்கொண்டு  சென்றாள். உடன் கோமதியும்..

இதுவரை அகிலன் வீடாட்கள் யாருமே ஷூட்டிங் வந்திருக்காத நிலையில் சொந்தம் என்று இவர்களை அங்கே அறிமுகம் செய்யவும் அதுவும் ஒரு தனி மரியாதையாகி போனது.

அங்கே அனைத்துமே வேடிக்கை தான். பூர்வி மட்டுமில்லை புவனாவே அனைத்தையும் வேடிக்கை பார்த்தாள். ஒரு பத்து குழந்தைகள் வந்திருந்தனர், அவர்களையே புகைபடத்தில் பார்த்து தேர்வு செய்திருந்தனர் என்று அகிலன் சொன்னான்.

ஆம் அகிலன் இவர்கள் அருகில் தான் அமர்ந்திருந்தான். அமர்ந்தது மட்டுமில்லாமல் இவள் பக்கம் தலையை சரித்து அவ்வப்போது அங்கே நடப்பவைகளை விளக்கிகொண்டுவேறு இருந்தான்.

புதிய இடம், புதிய ஆட்கள், சூழல் என்று அனைத்தும் புதியாய் இருக்க, அகிலன் வேறு இப்படி நெருக்கம் காட்ட, புவனா லேசாய் தவித்து தான் போனாள். அங்கு வீட்டின் எதிரே அமர்ந்து பேசியதற்கே நியூஸில் வருமென்றான். இன்றோ அனைவரும் அவனை தெரிந்தவர் இருக்க, அருகில் அமர்ந்து பேசினால் மட்டும் இவனை பேசமாட்டார்களா என்று தோன்றியது.

கேட்கவும் செய்தாள்.

அவனோ, “இங்க இதெல்லாம் சகஜம்…” என்று வெகு சாதாரணமாய் சொன்னான்.

அவன் பதிலை கேட்டதும் நக்கல் புன்னகையை இதழுக்கு கொடுத்து கேலி பார்வையை கண்களுக்கு கொடுத்து அவனை காண,

“உன் கற்பனைக்கு நான் பொறுப்பில்ல ம்மா…” என்று கைகள் விரித்தான் அவன்.

அடுத்து அவனுக்கு பதில் சொல்லுமுன் பூர்வி இருவரின் கவனத்தையும் திருப்பிருந்தாள்.

“ம்மா… அங்க….” என்று கேமரா பக்கம் கை காட்ட,

“ஷ்.. பூர்வி குட்டி. வேடிக்கை மட்டும் பாரு…” என்று புவனா அடக்க, கோமதி அகிலனை காண, அவனோ சட்டென்று அடுத்து என்ன சொல்வது என்று பார்க்க, பூர்வியோ அங்கே போகவேண்டும் என்று பிடிவாதமாய் இருந்தாள்.

ஏனோ சிறுவர் சிறுமியரை அவளது வயதில, அவளை விட சற்றே பெரிய குழந்தைகள் சிலருமாய் இருக்க, அவர்களை வைத்து வித விதமாய் புகைப்படங்களை எடுக்க, அவளுக்கும் அங்கே போய் நிற்க ஆசையாய் இருந்தது.

“ம்மா.. ம்மா.. பாப்பா அங்க… பூவி… அங்க…” என இதழ்களை சுருக்க,

“இதுக்கு தான் இதெல்லாம் வேண்டாம்னு சொன்னேன்…” என்று புவனா அகிலனை முறைத்தாள்.

இது தானே அகிலன் புவனாவிடம் விழுந்ததன் காரணம்.

தன்னுணர்வுகளை மறைக்காமல் இயல்பாய் இருப்பது. அது அவன் வீட்டில் இல்லை. அன்பிருந்தாலும் வெளிக்காட்டுவது இல்லை.

வெளிபடுத்தாத அன்பு யாருக்கு வேண்டும்.

ஆனால் புவனா வெளிபடுத்தும் கோவமே ஒருநாள் நிச்சயம் அவன் மீது கொண்ட அன்பாய் மாறும் என்று நம்பினான்.

“ஹே!! அங்க பாரு பேபி எவ்வளோ என்ஜாய் பண்றான்னு.. உனக்கு பிடிக்கலைன்னா அவளும் ஒதுங்கி இருக்கனுமா..” என்றபடி பூர்வியை காட்ட, புவனா சம்மதம் சொல்லும் முன்னே, பூர்வி அங்கிருந்த குழந்தைகளோடு போய் நின்றிருந்தாள்.சற்று தள்ளி கோமதி நின்றிருந்தார்.

உண்மை தான் புவனா பூர்வியை யாரிடமும் கொடுப்பதில்லை. கோமதி கூட திட்டுவார், ஆனால் அவளோ அதில் மட்டும் பிடிவாதமாய் இருந்தாள். ஏனோ பூர்வி தன்னிடம் இருந்தால் மட்டுமே அவள் பாதுகாப்பாய் இருப்பதாய் ஒரு நினைப்பு.

ஆனால் அவளது விருப்பு வெறுப்புகள் பூர்விக்கும் பொதுவாகாதே. அவள் குழந்தை, அவளது இயல்பில் இருக்கவேண்டும். அதை தான் அகிலனும் கூறினான்.அமைதியாய் அமர்ந்துவிட்டாள் புவனா. அவளது பார்வை எல்லாம் பூர்வி மீது மட்டுமே.

குழந்தைகளை விளையாட விட்டு அவர்கள் முகம் காட்டும் பாவங்களை அழகாய் தன் கேமாரவில் சேகரித்துக்கொண்டு இருந்தார் கேமாரா மென்.மொத்தம் நான்கு கோணங்களில் கேமரா வைக்கபட்டிருக்க, குழந்தைகள் தனி தனியாகவோ இல்லை அவர்கள் சேர்ந்து விளையாடும் குழுவாகவோ படம் பிடிக்க பட்டது.

பூர்வியும் இதில் ஒன்றிவிட, அவளது மகிழ்வை கொண்டாட்டத்தை ரசிப்பதை தவிர வேறு செய்ய முடியவில்லை புவனாவால்.அவளுக்குமே இது புதிதாய் இருக்க, மனம் ஒருவித ரிலாக்ஸ் உணர்வில் இருந்தது.

அடுத்து அகிலனோடு குழந்தைகளை வைத்து படம் எடுத்தனர். இத்தனை நேரம் தன்னருகில் இருந்தவனுக்கும் கேமரா முன் நிற்பவனுக்கும் நிறைய வித்தியாசங்களை உணர்ந்தாள் புவனா.

அவன் காட்டும் பாவங்கள் எல்லாம் கேமராவில் பதிந்ததோ இல்லையோ இவள் மனதில் பதிந்தது.

பதிய செய்தான்…

புவனா எப்பக்கம் அமர்ந்திருக்கிறாளோ அந்த பக்கம் பார்த்து தான் அகிலனும் போஸ் கொடுத்தான். அவனை சுற்றிலும் குழந்தைகள் நிரம்பியிருக்க, அடுத்து அடுத்து ஒவ்வொரு போஸில் வைத்து எடுத்தார்கள்.

மொத்தத்தில் அந்த நாள் அனைவருக்குமே மகிழ்வாய் முடிந்தது.

அதன் பின் ஒருவாரம் கழித்து அகிலனே வந்தான், உடன் வேறு ஒருவர். தான் நடிக்க போகும் நாடகத்தின் இயக்குனர் என்று அறிமுகம் செய்தான். நாடகத்தில் குழந்தை கதாபாத்திரத்திற்கு பூர்வி பொருத்தமாய் இருப்பாள் என்று இயக்குனர் கூறவும் அங்கே புவனா மட்டும் தான் அதிர்ந்தாள். தனசேகரும், கோமதியும் அதிர்ந்ததை போல் காட்டினர்.   

கேட்டதும் “நோ நோ…” என்று புவனா மறுக்க, இயக்குனரோ, அகிலன் முகம் காண,

அவனோ, “இதை தான் தயா நான் முன்னாடியே சொன்னேன்.. நீங்க தான் இந்த பேபி தான் சரியா இருக்குன்னு சொன்னீங்க.. இங்க ஓகே சொல்லமாட்டாங்க.. அல்ரடி எனக்கும் மேடம்கும் கொஞ்சம் டெர்ம்ஸ் சரியில்லை..” என்று விளக்க தொடங்க,

புவனா என்ன இது என்பது போல் பார்த்தாள்.

மொத்தம் ஒன்றை மாத டெலிகாஸ்ட். அதற்கான ஷூட்டிங் கூட ஒரு மாதம் தான். வித்தியாசமான முயற்சியில் தயாரிக்கப்படும் மினி சீரியல். வெவ்வேறு காரணங்களுக்காக கடத்தப்படும் ஒரு குழந்தையும், இளைஞனும் ஒரே அறையில் தங்க வைக்கபட்டால், என்னாகும்?? யார் யாரை தப்புவிக்க செய்கிறார்கள். இது தான் கதை என்று இயக்குனர் விளக்க, அது நிஜமாகவே புதிதாய் தான் இருந்தது.

பூர்வி ஒரு பத்து நாள் மட்டும் நடித்தால் போதும் என்று கூற, ஒரே அறைக்குள் நடக்கும் கதை, அதுவும் அகிலனும் பூர்வியும் மட்டும். இதில் வேறு எவ்வித குழப்படியும் பிரச்சனை இல்லைதான்.

பாதுகாப்பிற்கு தான் பொறுப்பு என்றான் அகிலன்.

இயக்குனரும் ஆயிரம் எடுத்து சொன்னார்.

எல்லாம் சரிதான் ஆனால் குழந்தையை நடிக்க வைதப்பதா??

என்ன தேவைக்கு?? என்று தோன்றியது புவனாவிற்கு.

பெற்றோர் முகம் பார்த்தாள், அவர்களோ உன் முடிவு என்பது போல் பார்க்க, அடுத்து பூர்வியை காண, அவளோ அகிலனிடம் தன் மழலையில் எதுவோ பேசிக்கொண்டிருக்க, நிஜமாகவே அகிலன் வந்தால் பூர்வி ஒரு புது உற்சாகத்தில் இருப்பதாய் தெரிந்தது புவனாவிற்கு.

குழந்தையை நடிக்க வைப்பதா????இந்த கேள்விக்கு தான் அவளால் சமாதானம் ஆகமுடியவில்லை.

“யோசி…” என்று மட்டும் சொல்லி அகிலன் சென்றுவிட்டான்.

பூர்வி தான் அவன் பின்னோடு சென்று கொண்டு இருந்தது. தூக்கி ஒருமுறை கொஞ்சிவிட்டு தான் சென்றான். பூர்வியின் பார்வை அகிலனை தொடர்ந்தது.

புவனாவின் பார்வையும்.

அதன் பின் நிறைய யோசித்தாள். இதில் தவறு எதுவும் இல்லையென்றாலும், மனம் சமாதானம் ஆகவில்லை. தன் பெற்றோர்களோடு ஆலோசித்தாள்.

“இதில என்ன புவி இருக்கு, நம்ம பூர்விக்கும் ஒரு சேஞ் இருக்கும்… உனக்கும் இருக்கும்..” என்று அவர்கள் சொல்ல,

பூர்வியும் கூட ஏதாவது வண்டி சத்தம் கேட்டால் ஆவலாய் ஜன்னல் பக்கமோ, பால்கனியோ இல்லை கதவையோ எட்டிப்பார்க்க, புவனாவிற்குமே சரி என்று சொல்ல தோன்றியது.

சிறிது நாட்கள் மாறுபட்ட சூழல் கிடைத்தால் அனைவருக்குமே சற்று நன்றாய் இருக்கும் என்று தோன்ற, அகிலனுக்கு அழைத்து சம்மதம் சொன்னாள். 

ஆனால் அதன் பிறகு தான் சொன்னான் ஷூட்டிங் ஊட்டியில் என்று.

சற்றே தெளிந்த மனம், ஊட்டி என்றதும் மீண்டும் குழம்ப, அவளை ஒருவழியாய் வேறு எதுவும் யோசிக்கவிடாமல் செய்து கிளப்பி பூர்வியையும், புவனாவையும் அழைத்து வருவதற்குள் அகிலனுக்கு மூச்சு முட்டிவிட்டது.

வெளியூர் செல்வது பூர்விக்கு எப்படி புரிந்ததோ மிக மகிழ்வாய் இருந்தாள்..

இதோ இவர்களின் பயணமும் இனிதாய் ஆரம்பித்தது.

அகிலனுக்கு ஒருவித பயமும் இருந்தது மனதில். அனைத்தும் சரியாய் இருக்கவேண்டுமே என்று இருந்தது. புவனாவின் திடம் அவன் கண்டதே.  தைரியமாய் அம்பிகாவையே எதிர்தவள்.

அவள் மனதில் இந்த குறுகிய நாட்களில் இடம் பிடிப்பது கடினம் தான். ஆனால் பிடிக்கத்தான் வேண்டும்..இதற்கெல்லாம் மீறி பூர்விக்கு தான் பொறுப்பெடுத்து இருந்தான். ஷூட்டிங்கில் வேறு எந்த குளறுபடிகளும் வந்துவிடக்கூடாது.

பின்அதுவே பெறும் பாதிப்பை கொடுக்கும். அனைத்தையும் மனதில் போட்டு உருட்டிக்கொண்டு இருந்தவனின் விரல்களோ அவன் அறியாமல் பூர்வியின் தலையை வருடிக்கொடுக்க, அவளோ ஆழ்ந்த உறக்கத்தில் என்ன உணர்ந்தாளோ இதழ்கள் மெல்ல புன்னகை புரிந்தது.

இக்காட்சியை கண்ட புவனாவிற்கு இத்தனை நாள் இல்லாத ஒரு நம்பிக்கை அகிலன் மீது ஏற்பட, அவளது விழிகளும் லேசாய் புன்னகை சிந்தியது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement