Advertisement

தேடல் – 3

நாட்கள் வாரங்களாய் மாற, புவனாவிற்கு ஒவ்வொரு முறையும் பூர்வியை அழைத்துக்கொண்டு பூங்கா செல்லும் போதெல்லாம் இன்றும் அகிலன் வருவானோஎன்ற எண்ணம் அதிகமானது. அவளையும் அறியாது ஒரு தேடல் தொடங்க, சாதாரணமாய் அப்பக்கம் ஏதாவது கார் சென்றாலும் கூட அது அகிலன் தானோ என்று திடுக்கிட்டு காண தொடங்கினாள்.

ஏனெனில் அன்று அவன் பார்த்து போன பார்வை ‘மீண்டும் வருவேன்…’ என்று கூறாமல் கூறியாது அவளுக்கு நன்றாகவே புரிந்தது. அவன் வருவதற்கு முன்பு மனதில் ஒருவித கலக்கம் என்றால் வந்து சென்ற பிறகு வேறு விதமான கலக்கம்.

தேவையில்லாமல் அவனை அதிகமாய் பேசிவிட்டோமோ என்று தோன்றியது. அகிலன் சென்ற பிறகு புவனாவிடம் தனசேகர் அவனுக்கு எதுவும் தெரியாது என்பதனை கூற, முதலில் அவள் நம்ப மறுத்தாலும் பிறகு இத்தனை நாட்கள் அம்பிகா வந்து பேசியது, எல்லாம் வைத்து பார்க்கும் பொழுது நிஜமாகவே அகிலனுக்கு ஒன்றும் தெரியாது என்றே தோன்றியது.

அவனிடம் தன்மையாய் பேசியிருக்க வேண்டுமோ என்று நினைக்கும் போதே,

“ம்மா….” என்று அவள் கன்னம் தடவி பூர்வி எதிர்பக்கம் கை காட்டினாள்.

“என்ன டா குட்டிம்மா…” என்றபடி திரும்பியவளுக்கு கண்கள் ஆச்சர்யத்திலும் அதிர்ச்சியிலும் விரிந்தது. அகிலன் காரை நிறுத்திவிட்டு இவர்களை பார்த்து வந்துகொண்டு இருந்தான்.

“ஹாய் பூர்வி குட்டி…” என்றபடி அவளை நோக்கி ஒரு புசு புசு டெட்டியை நீட்ட, அவளோ வேகமாய் புவனாவின் முகம் நோக்கினாள்.புவனாவின் பார்வையோ அகிலனை பொசுக்கியது.

“ம்மா…” என்று பூர்வி தான் பார்க்கும் பார்வைக்கு புவனாவிடம் இருந்து பதில் வரவில்லை என்று அழுத்தமாய் அழைக்க, அகிலனோ இருவரையும் சிரித்த முகமாய் பார்த்தான்.

“எதுக்கு வந்தீங்க….???”

“ஏன் வர கூடாதா..??”

கேள்விக்கு பதில் சொன்னால் சரி, பதில் கேள்வி கேட்பவனை என்ன செய்ய. வந்த கோவத்தை அடக்கி, “நான் அதான் அன்னிக்கே எல்லாம் தெளிவா சொன்னேனே…” என்றாள்.

“தெளிவா…!!!” என்று அகிலன் கேட்ட பாவனையில், புவனாவிற்கு எரிச்சல் கூடியது. அவனோ ஒரு முடிவோடு தான் வந்திருந்தான்.

இதற்குமேல் தான் ஏதாவது பேசினால் நிச்சயம் பிரச்சனை வரும் என்று எண்ணிய புவனா, இனி எதுவாய் இருந்தாலும் அவனை பேசட்டும் என்று  அமைதியாய் பூர்வியின் மீது பார்வையை பதித்தாள், அவளோ அவன் கொடுத்த டெட்டியை வைத்து விளையாடிக் கொண்டிருந்தாள்.

“பூர்வி யார் என்ன குடுத்தாலும் வாங்கிடுவியா…??”என்று புவனா லேசாய்  அதட்ட, பூர்வி திடுக்கிட்டு பார்க்க,

“ஷ்.. என்ன பழக்கம் குழந்தைய அதட்டுறது.. நீ விளையாடு பேபி..” என்று குழந்தையை சமாதானம் செய்தவன்,

“என்னை பேஸ் பண்ண முடியலைனா குழந்தையை திட்டனுமா??”

“முடியலைன்னு இல்லை. பிடிக்கலை…”

“பட் நான் என்ன தப்பு பண்ணேன்…??”

“இதுல சரி தப்புன்னு யாருமே இல்லை Mr. அகிலன். எனக்கு இப்போ மேரேஜ் பண்ற ஐடியா இல்லை. அதுவும் இல்லாம உங்க அம்மா… சாரி இப்படி சொல்றேன்னு தப்பா நினைக்க கூடாது.. அவங்க முதல் நாள் வந்து பேசின விதம் எனக்கு கொஞ்சமும் பிடிக்கலை… ஐம் நாட்ட சாய்ஸ் ரைட்…”

பொறுமையை இழுத்து பிடித்து சற்று தன்மையாகவே பேசும் புவனாவை அவனுக்கு பிடித்திருந்தது.

ஆம் புவனாவை பிடித்திருக்கிறது. பிடிதத்திற்கும் மேலாய் ஒரு பிடிப்பு.

யாரென்றே தெரியாதவள், பார்த்த முதல் நாளே சண்டை, ஆனாலும் அவளை  தான் மனம் தேடுகிறது. கிட்டதட்ட இந்த ஒரு வாரமும் நிறைய யோசித்தான். அவளை பற்றி சேகரித்தான். முடிவெடுத்த பின் அறிந்துகொள்ள தேவையில்லை என்றாலும் தப்பில்லை என்று எண்ணியே விசாரித்தான்.

தப்பி தவறி அவன் வீட்டினரிடமோ அவள் வீட்டினரிடமோ இல்லை. புவனா பூர்வி பற்றி தெரிந்த பிறகோ இன்னும் அவளை பிடித்திருந்தது. அவளது இயல்பான பேச்சு, தோற்றம், பழக்கம், முக்கியமாய் உறவுகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் என அனைத்துமே அவனுக்கு பிடித்திருந்தது. ஒரு விஷயம் வேண்டும் என்று முடிவு செய்ய சில நொடிகளே போதுமானதாய் இருக்கிறது மனதிற்கு பிடித்துவிட்டால்.

புவனாவும் பூர்வியும் அவன் வாழ்வில் இருந்தால் நிச்சயம் அவனது வாழ்வு, அவன் தேடலுக்கான விடையாய் இருக்கும்.

அகிலனுக்கு ஒன்று மட்டும் புரிந்தது, புவனாவிடம் நேருக்கு நேர் மோதுவதில் எந்த பயனும் இல்லை என்று. தானும் அவளை புரிந்து அவளும் தன்னை புரிந்துகொள்ள வேண்டும் என்பதில் திடமாய் இருந்தான். ஆனால் அதற்கான வழி, இப்பொழுது பூர்வியை தவிர வேறு எதுவும் அவன் மனதில் படவில்லை. ஒருபக்கம் பார்த்தால் சுயநலம் தான்.

காதல் சுயநலம், பொதுநலம் என்று எதுவும் பாராதே.

மெல்ல பேசி தன்னை புரியவைக்க வேண்டும் என்று அவனும், தன்மையாய் பேசி இந்த திருமண பேச்சை நிறுத்திட வேண்டும் என்று அவளும் முடிவெடுக்க, காதல் கண்ணாமூச்சி ஆடத் தொடங்கியது பூர்வியை நடுவராய் வைத்து.

“ஹ்ம்ம் நீ சொல்றது சரிதான் புவனா..” என்றவன் சுற்றிலும் தன் பார்வையை ஓட்ட,

“வீட்ல யாருமில்ல, அதான் வீட்டுக்கு கூப்பிடலை…”என்றாள் ஒரு மாதிரி குரலில்.

“யாருமில்லைன்னு வீட்டுக்கு கூப்பிடாம இருக்கிறது சேப்டின்னா, ஒரு செலிப்ரட்டி கூட இப்படி பார்க்ல பேசுறது ரொம்ப சேப்டி தானோ…” என்றவனின் பேச்சில் அவளுக்குமே லேசாய் சிரிப்பு வந்தது.

“நீங்க தானே செலிப்ரட்டி…”

“என்னோட நீதானே பேசிட்டு இருக்க, நாளைக்கே அழகா நியூஸ் போடுவாங்க, சின்னத்திரை நாயகன் அகிலனின் குடும்பம்னு..” என்றுவிட்டு அவன் சிரிக்க, மீண்டும் புவனாவின் முகம் சுருங்கியது.

“ஹே ஹே..!! ஜஸ்ட் சொன்னேன்.. அவ்வளோதான்…” என்று தோள் குலுக்கினான்.

“ம்ம்… வீட்டுக்கு போகலாம்…” என்றவள் பூர்வியை தூக்கி எழ,

“என்கிட்ட குடு…” என்று  பூர்வியை வாங்கிக்கொண்டவன், முன்னே நடந்தான்.

அவன் கொடுத்த டெட்டியையும், பூர்விக்கு ஊட்ட எடுத்து வந்த கிண்ணம் தண்ணீர் பாட்டில் அனைத்தையும் இவள் தூக்கி செல்ல, ஒரு சிலரது பார்வை ஆச்சரியமாய் இவர்களை தொட்டு போனது.அகிலன் இவர்களின் சொந்தம் எனும்வரையில் அங்கே பரவியிருக்க அது என்னவிதமான சொந்தம் என்று அத்தனை யாரும் அறியவில்லை.

கதவை திறக்கும் போதே, “யாருமில்லன்னு சொன்ன..” என்றவனின் பார்வை, இப்பொழுது மட்டும் எப்படி உள்ளே அழைக்கிறாய் என்ற கேள்வி கேட்க,

“நீங்க உள்ள வர்றது என் வீடு…” என்றவளின் பதிலில் இது என்னிடம் உன் வால் இங்கே ஆட முடியாது என்ற தொனி இருந்தது.

புருவம் உயர்த்தி லேசாய் சிரித்தபடி உள்ளே வந்தான். உபசரிப்பாய் ஏதாவது தர வேண்டுமே என்று இவள் அடுக்களை நுழைய, பூர்வி இயல்பாய் அகிலனிடம் ஒட்டிக்கொண்டாள். தன்னுடைய பொம்மைகளை எல்லாம் எடுத்து வந்து காட்டினாள்.

“இது பூவி பொம்ம…. இது ம்மா பொம்ம…” என்று ஒவ்வொன்றாய் கடை பரப்ப, அகிலனுமே அவளோடு ஒன்றித்தான் போனான். பூர்வியோடு தரையில் அமர்ந்து அவள் சொல்வதை எல்லாம் கதை கேட்பது போல ஆவலாய் கேட்டுக்கொண்டு இருந்தான்.

அவன் வீட்டில் இப்படியான இயல்புத்தன்மை இல்லை. பிரணவிடம் சத்தம் இட்டு விளையாடினால் கூட, அம்பிகா இப்படி அவனை பழக்காதே என்பார்.குழந்தைகளிடம் என்ன பெரிய மனித தோரணை காட்டுவது என்று கடுப்பாய் இருக்கும் அகிலனுக்கு.   

கையில் ஜூஸோடு வந்தவள், அகிலன் பூர்வியோடு பேசி விளையாடுவதை பார்த்து நின்றுவிட்டாள்.

ஏனெனில் தனசேகரிடமும் பூர்வி இப்படித்தான் கடை பரப்புவாள், சில நேரம் விளையாடுவார் ஆனால் பல நேரம் “தாத்தாக்கு டயர்ட்டா இருக்கு டா…” என்பார். அவரையும் குறை சொல்ல முடியாது.

வாழ்வு எத்தனை இழப்புகளை கொடுத்தாலும் இன்னும் கூட ஓடிக்கொண்டே இருக்கும் மனிதர். கோமதிக்கு பூர்வி இழுத்து போடுவதை ஒழுங்கு செய்யவே நேரமிருக்கும்.

பூர்வியின் மலர்ந்த முகமும், கலகல சிரிப்பும், அகிலனின் பந்தா இல்லாத பேச்சும் பாவனையும் புவனாவை நின்று கவனிக்க வைத்தது.குழந்தைகளுக்கு அம்மாவின் அன்பையும் தாண்டி அப்பாவின் அருகாமையும் தேவை தானோ என்று அவள் மனம் யோசிக்க,

“ஜூஸ் குடுக்க முடியாதபடி அவ்வளோ கேவலமா இருக்கா??” என்று அகிலன் புவனாவின் கவனத்தை தன் பக்கம் திருப்பினான்.

ஆம் அவளது கவனத்தை தன்பால் திருப்பி விட்டான் அகிலன். அவனறியாது அவளறியாது.

“ஹா…!!! என்.. என்ன சொன்னீங்க…???”

அவள் தன்னையும் குழந்தையும் தான் இத்தனை நேரம் பார்த்திருந்தாள் என்பது அவனுக்கு நன்றாகவே தெரியும், இருந்தாலும் கேட்டான். அனைத்தும் அவளிடம் இருந்தே வரவேண்டும் என்ற எண்ணம்.

“ஜூஸ் எனக்கு தான…”

“யா…” என்றவள் வேகமாய் வந்து குடுக்க, பூர்வி, “ம்மா பூவி சூஸ்…” என்று தனக்கும் வேண்டுமென்று கூற,

“நோ பூர்வி… சளி பிடிக்கும்…” என்று புவனா கூற, அடுத்த நொடி அகிலனையும், அவன் கையில் இருந்த ஜூஸையும் கண்டு உதடு சுருக்கி அழ தொடங்கினாள்.குழந்தைகளுக்கு இது ஒரு திட்டம் பிறர் முன் அழ தொடங்கினால் கேட்டது கிடைக்கும் என்பது.

ஆனால் புவனா ஒரேதாய் மறுக்க,

“பேபி நீ ஸ்மால் குட்டி சோ கொஞ்சம் ஜூஸ், மீ பிக் பாய் சோ நிறைய ஜூஸ்…” என்றபடி அகிலன் பூர்விக்கு கொஞ்சம் குடிக்க வைத்து மீதியை ஒரேமடக்கில் குடித்து முடித்தான். பூர்வியும் சமாதானம் ஆகியிருந்தாள்.

“ஹ்ம்ம் இவ்வளோதான்..” என்று புவனாவை காண,

“அது ஜில்லுன்னு இருந்தது அதான்…” என்று புவனா இழுத்தாள்.

“கொஞ்சமா குடுத்தா ஒன்னும் ஆகாது..” என்றவனின் புன்னகை அவளுக்கு ஏதோ ஒரு ஆறுதலை கொடுத்தது.

சில நொடிகள் மௌனம் நீடிக்க, அங்கே பூர்வியின் பேச்சு மட்டுமே.அவரவர்களுக்கு அவரவர் மனதில் இருப்பது ஓட, என்ன பேச, எதை பேச என்ற யோசனை.வீடு வரை வந்தாகிவிட்டது அதன் பின்னும் பின்வாங்குவதா என்று அகிலன் புவனாவை காண, அவள் முகமோ எதையோ எண்ணி கலங்கி இருந்தது.

தன்னை அகிலன் பார்ப்பதை புவனாவும் உணர்ந்து, “நீ.. நீங்க என்ன விசயமா..” என்று இழுத்தவள் ஏன் வந்தாய் என்று கேட்டால் தவறாய் நினைப்பானோ என்று தயங்கினாள்.

“ஹ்ம்ம் நீ கேட்ட ஒரு கேள்விக்கு பதில் சொல்ல வந்தேன்…” என்றவன் முகத்தில் இன்னதென்று புரியாத ஒரு தீவிரம்.

“நான் என்ன கேட்டேன்..??”

“உங்களுக்கு எந்த பீலிங்க்ஸும் இல்லையான்னு கேட்ட தானே..”

“அ.. அது…”

“ஸி… புவனா இத்தனை நாள்ல உனக்கே எங்க வீட்ல இருக்கிறவங்க பத்தி புரிஞ்சிருக்கும். என் மேரேஜ் என்னை பொறுத்த வரைக்கும் நான் சார்ந்தது மட்டுமில்லை, என் குடும்பம் சார்ந்ததும். அது எப்படி இருந்தாலும் சரி. என் பீல்ட்ல எத்தனையோ பேர் என்கிட்ட ப்ரொபோஸ் பண்ணிருக்காங்க, இப்போ சரின்னு சொன்னா கூட…” என்று பேசிக்கொண்டே போனவனின் பேச்சை கேட்டு அவள் நக்கலாய் பார்க்க,

“நீ என்ன நினைச்சாலும் இது தான் உண்மை…” என்றவன் மேலும் தொடர்ந்தான்.

“அஜிதாவ எனக்கு பார்க்கும் போதும் என்கிட்ட அம்மாவோ அப்பாவோ எதுவும் கலந்து பேசலை. முடிவு பண்ண போறோம் உன் ஒப்பினீயன் என்னன்னு கிட்டத்தட்ட லாஸ்ட் ஸ்டேஜ்ல தான் கேட்டாங்க. நோ சொல்ல எந்த ரீசனும் இல்லை.. ஓகே சொன்னேன்..”

“ஆனா அஜிதா வீட்ல பண்ண தப்பு, அவங்களும் என் வீட்டு ஆளுங்க போலவே யோசிச்சது தான். அஜிதாவோட தாட்ஸ் என்னன்னு கேட்கவே இல்லை. என்கேஜ்மென்ட்டும் நடந்தது. ஆனா எதோ ஒரு போர்ஸ், கம்பல்னஸ்  மத்தவங்களுக்காக பண்றோமேன்னு ஒரு எண்ணம். ரெண்டு பேருக்கும். அதை பெறுசா எடுக்க எனக்கு நேரமில்லை. ஆனா அஜிதா அப்படி இல்லை போல. சோ எல்லாம் முடிஞ்சது…”  என்று தோளை குலுக்கினான்.

அவன் காட்டிய பாவனையே அந்த நேரத்தில் எனக்கும் கொஞ்சம் வலித்தது என்று சொல்லாமல் சொல்ல,

“சாரி.. நான் அன்னைக்கு.. கொஞ்சம்…” என்று ஆறுதலாய் ஆரம்பித்தாள் புவனா.

“நோ நோ.. இதில உன் தப்பு இல்லை. ஒரு நல்ல விஷயம் மீடியாக்கு எதுவுமே இன்னும் தெரியாது. அவங்க வீட்டு சைடும் வெளிய சொன்னா ஸ்டேட்டஸ் பிராப்ளம்னு சைலன்ட்டாகிட்டாங்க. பட் எங்கம்மா எல்லாத்துக்கும் பொறுப்பு எடுத்து சரி பண்றேன் சொன்னாங்க. ஆனா இப்படி சரி பண்ண ட்ரை பண்ணுவாங்கன்னு நான் கொஞ்சம் கூட இமேஜின் பண்ணல..” என்று கூறியவன் தன் பக்கம் இது தான், இது மட்டும் தான் என்பதுபோல் பார்த்தான்.

என் திருமணம், நான் சார்ந்தது மட்டுமில்லை என் குடும்பம் சார்ந்தது என்று கூறிய இதே அகிலன் தான் அன்று அவன் அம்மாவிடம் யாரும் எதிலும் தலையிட கூடாது என்று கூறியது.இனி அவனுக்கும் புவனாவிற்கும் இடையில் யாரும் வருவதை அவன் அனுமதியான். யாராய் இருந்தாலும்.

புவனாவிற்கு அகிலன் பேச்சை கேட்டபிறகு, தன்னை நினைத்தே கோவம் வந்தது. பொறுமை சிறிதும் இப்பொழுதெல்லாம் இருப்பதில்லை.

“ச்சே என் கோவத்தால எல்லாரையும் கஷ்டப்படுத்திட்டோம்..” என்று எண்ண,

“சாரியெல்லாம் கேட்க தேவையில்ல…” என்று புன்னகை புரிந்தான் அவன்.

எப்படித்தான் சிரித்துக்கொண்டே இருக்கானோ என்று நினைக்க தோன்றியது அவளுக்கு.

“இல்ல.. நான்.. இப்போ மேரேஜ் பத்தி நினைக்கல.. அதுவும் ஒருத்தர் இல்லாட்டி இன்னொருத்தர்னு வந்து பேசினது எல்லாம் சேர்ந்து என்னை கொஞ்சம் ஓவர் ரியாக்ட் பண்ண வச்சிட்டது..”

“ஹ்ம்ம் ஐ அண்டர்ஸ்டுட்…”

“ஆனா உங்க வீட்ல…???”

“நோ ப்ராப்ளம்.. என் வீட்ல இனிமே இதை பத்தி யாரும் பேசவோ தலையிடவோ  மாட்டாங்க…” என்றவனின் குரலில் வேறு எதுவோ இருந்தது அவளுக்கு நன்றாகவே புரிந்தது.

ஆராய்ச்சியாய் ஒரு பார்வை அவன் முகத்தில் வீச,

“இதுக்கு மேலயும் யாருகிட்டவும் பேச்சு வாங்க எனக்கு பிடிக்கலை.. சோ ஐ வில் மேனேஜ் தெம்…” என்று பதில் சொன்னான்.

“ம்ம்.. சரி… இது சொல்ல தான் வந்தீங்களா…???” என்றவளின் கேள்வியில் வந்த வேலை முடிந்தால் கிளம்பு என்ற தோரணை.

அவனுக்கும் அது புரிந்தது. ஆனால் காதலில் மான ரோசம் பார்க்க கூடாதே.     

“இன்னொரு விஷயம் இருக்கு. ஆனா மாமா அத்தை வரட்டும் பேசிக்கலாம்..”

“மாமா… அத்தை..??” என்று புருவம் உயர்த்த,

“என் அம்மாக்கு உன் அப்பா தம்பி தானே.. அந்த முறைக்கு சொன்னேன்..” என்றவன் பூர்வியை தூக்கி ஒருமுறை கொஞ்சிவிட்டே கிளம்பினான்.

ஆனால் கடைசிவரை அவன் வந்த மற்றொரு காரணம் சொல்லாமலே செல்ல புவனாவின் மண்டை குடைய தொடங்கியது. மனதும்.

ஒருவரை வெளியிருந்து தொல்லை செய்வது வேறு, அவர்கள் உள்ளிருந்தே அவர்களையே தொல்லை செய்வது என்பது வேறு. அகிலன் அதை தான் செய்தான்.

 

 

 

 

 

 

 

 

Advertisement