Advertisement

அத்தியாயம் – 10

“ஏன் புவன் என்னை புரிஞ்சுக்கவே மாட்டேங்கிற??? நான் இவ்வளோ சொல்றேன்ல…” என்று கோவதிற்கும் கெஞ்சலுக்கும் இடையில் அகிலன் குரல் ஒலிக்க,

நீ சொல்லும் காரணங்கள் எதுவும் என் மனதை சமன் செய்யவில்லை என்ற ரீதியில் புவனாவின் பார்வை இருந்தது. அவளுக்கு தன் மனம் அகிலனிடம் இருந்து எதை எதிர்பார்க்கிறது என்றே தெரியவில்லை.

மௌனமாய் தான் பார்த்திருந்தாள். “என் வழியில நான் பார்த்துக்கிறேன்…” என்று அகிலன் சொன்னது அவளை எதுவோ பாதித்திருந்தது. அதுவும் அத்தனை பேரின் முன்னும் அம்பிகா பெருமையாய் கூற அவளுக்கு தன்மானம் பாதிக்க பட்டதாகவே இருந்தது.

இதையெல்லாம் அகிலனிடம் என்னவென்று சொல்லி புரியவைக்கவென்று புவனாவிற்கு தெரியவில்லை.  

“என்ன சைலென்ட் ஆகிட்ட புவன்…?? உனக்கே நீ பேசுறது சைல்டிஷா இருக்கா..” என்று அகிலன் நக்கலாய் கேட்க, அவனை நிமிர்ந்து பார்த்தவளுக்கு கண்ணீர் மட்டுமே..

தன் மனமே என்ன எதிர்பார்க்கிறது என்று தெரியாமல் இருப்பவளுக்கு அகிலன் கேள்விக்கு பதில் அழுகையாகவே இருக்க, முகத்தை மூடிக்கொண்டு அழுதாள்.

சில நேரம் வாழ்வில் ஏன் என்றே தெரியாத ஒரு வெறுப்பு வரும் , வந்த வேகத்தில் சென்றும் விடும்.. ஏன் வந்தது எங்கே போனது நமக்கும் தெரியாது அதற்கும் தெரியாது.. அப்படி ஒரு நிலை தான் புவனாவிற்கு,.

அகிலன் தன் மீதுகொண்ட காதலில் அவளுக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை ஆனாலும் அவன் அப்படி சொல்லியிருப்பது எதோ ஒருவகையில் அவள் மனதை பாதித்திருந்தது.

இவன் இழுத்த இழுப்புக்கெல்லாம் தான் மசிவேன் என்று நினைத்து தானே இப்படி முதல் நாளே சொல்லியிருக்கிறான் என்று நினைக்க தோன்றியது. புவனாவின் அழுகை இன்னும் கூட,  அகிலனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.

அவளின் கோவத்தை தாங்கியவன் அவளது அழுகையை காண முடியவில்லை.

“புவன் ப்ளீஸ்… அழாத… ” என்று அவள் தோளை பற்ற, அவளோ அவன் மார்பில் சாய்ந்துகொண்டாள்.

காதலும் உன்னால், காயமும் உன்னால், கதறுவதும் உன்னால் என்று அவள் நிலைமை இருக்க, அகிலனுக்கு ஒன்று மட்டும் நன்றாய் புரிந்தது புவனாவிற்கு தன் மீது கோவமில்லை தான் சொன்ன வார்த்தைகளின் மீது தான் கோவம் என்று.

சில நேரங்களில் நல்லது என்று நினைத்து சொல்வதே தவறாகி போய்விடுகிறது. இங்கேயும் அப்படித்தானே, எங்கே தன் வீட்டினர் மேலும் புவனாவின் வீட்டில் பேசினால் மேற்கொண்டு பிரச்சனை தான் வருமே ஒழிய நல்லது நடக்காது என்ற எண்ணத்தில் தானே அகிலன் அப்படி சொன்னது.

கடைசியில் அவன் சொன்னதே அவனுக்கு வினையாய் வர, என்ன சொல்லி தன் காதலியை சமாதானம் செய்வது என்று அறியவில்லை.

“ஷ் புவன் ப்ளீஸ்.. நிச்சயமா நான் மட்டமா நினைச்சு அப்படி சொல்லல டா…” என்றான் அவள் முதுகை வருடி..

புவனாவிடமோ பதிலே இல்லை..

“சரி இப்போ சொல்லு.. நான் என்ன செய்யணும்..?? எதுவா இருந்தாலும் சொல்லு செய்றேன்.. உனக்காக… நமக்காக…. சொல்லு புவன்…” என்று அவளை கேட்க, மெல்ல விழிகள் நிமிர்த்தி பார்த்தாள். கண்கள் சிவந்து, முகம் லேசாய் வீங்கி, தலைமுடி கலைந்து பார்க்கவே எப்படியோ இருந்தது அவளை.

“என்ன புவன் இது….” என்று அவள் முகத்தை அழுந்த துடைத்தவன், மீண்டும் அதையே கேட்டான்,

“நான் என்ன செய்யணும்…???” என்று..

சில நொடிகள் பார்வை விலக்காது அவன் முகமே பார்த்தவளோ, “தெரியலையே… ” என்றாள் அப்பாவியாய்.

அங்கே இருந்த சோபாவில் அகிலனும் அமர்ந்து, புவனாவையும் தன் மீது சாய்த்து அமர்த்திக்கொண்டான்.

இருவருமே ஒன்றும் பேசவில்லை..

அவள் மனம் குழம்பியிருக்க, அவன் மனமோ யோசனையில் இருந்தது..

சிறிது நேரத்திற்கு பிறகு “புவன்… ” என்றழைக்க,

“ம்ம்…” என்று மட்டுமே பதில் வந்தது..

“நான் கேட்கிறதுக்கு கொஞ்சம் தெளிவா பதில் சொல்லு…” என்றவனின் குரல் அழுத்தத்திற்கு மாறியிருக்க, புவனாவுமே நிமிர்ந்து அமர்ந்தாள்.

“ம்ம் சொல்லுங்க…”

“உனக்கு என் மேல கோவமா, நான் அப்படி சொன்ன வார்த்தைகள் மேல கோவமா..??”

அவனை ஒருநொடி எறிட்டவள், “அந்த வார்த்தைய சொன்னது நீங்க தானே…??” என்றாள் பதில் கேள்வியோடு..

“ம்ம்ம் உன்னை நான் பதில் தான் கேட்டேன்… கேள்வி கேட்க சொல்லலை…”

“ம்ம் என் பதில் இது தான்…”

“சரி விடு… நான் உன்கிட்ட பழகினதுலாம் நடிப்புன்னு நினைக்கிறியா?? அதாவது பேபிய நடிக்க கேட்டது?? தென் உன்கூட நான் பழகினது எல்லாம்…” என்று கேட்கும் பொழுதே அவன் குரலில் அத்தனை வலி எட்டி பார்த்தது.

நிச்சயம் அவன் குரலில் இப்பொழுதும் நடிப்பில்லை என்று புரிய, அவள் தலை இல்லையென்று சொல்ல,

“சரி அப்புறம் எதுக்கு இந்த கோவம், அழுகை??” என்றான்..

அதற்கும் அவள் பதில் தெரியவில்லை என்பதே..

காரணம் இல்லாத கோவம், அதுவே அழுகையும் தர சட்டென்று ஒரு முடிவிற்கு வரமுடியவில்லை அவளால். அகிலனுக்குமே மனதில் கோவம் இருந்தது தான். ஒருவார்த்தைக்கு இவள் தன்னை நம்பவில்லையே என்ற ஆதங்கம் நிரம்பியிருக்க இதயம் கனத்து தான் போனது.

“ஹ்ம்ம்.. இங்க பாரு புவன், நான் அப்படி சொன்னது என் அம்மாவை கண்ட்ரோல் பண்ணதானே தவிர உன்னை கம்மியா நினைச்சு இல்லை.. எல்லா நேரத்துலையும் யோசிச்சு யோசிச்சு பேசிட்டு இருக்க முடியாது… கடைசியில நம்ம என்ன பேசனும்ங்கிறது கூட மறந்து போயிடும்…நான் சொன்ன வார்த்தைகள் உனக்கு தப்பா தெரிஞ்சு இருக்கலாம்.. ஆனா என் மனசுல இப்போவரைக்கும் தப்பா எந்த எண்ணமும் இல்லை…” என்றான் இதற்குமேல் தன்னிலை விளக்கம் எதுவும் என்னிடம் இல்லை என்பது போல.

புவனா தலைகுனிந்து தான் அமர்ந்திருந்தாள். அகிலன் சொல்வது போல அனைத்து நேரமும் நாம் யோசித்து வார்த்தைகளை தொடுக்க முடியாது. பல நேரங்களில் மனதில் என்ன இருக்கிறதோ அதுவே வந்துவிடும். இப்போது அவளது கோவம் கூட அப்படித்தானே..

மனதில் தோன்றியது அதை சட்டென்று வெளிப்படுத்திவிட்டாள். யோசித்திருந்தால் இதில் ஒன்றுமேயில்லை என்று தோன்றியிருக்கும். இதெல்லாம் புவனா மனதில் ஓட, அகிலன் இப்பொழுது வந்து பேசியது கூட நல்லது தானோ என்று இருந்தது.

ஏனெனில் அவளை பொருத்தமட்டில் சிறு விஷயம் என்றாலும் அதிகம் உணர்ச்சிவச படும் ரகம்..

இப்படியாக தனக்குளே அவள் சிந்தையில் மூழ்கியிருக்க, அகிலனுக்கோ பொறுமை பறந்தது. தான் இத்தனை சொல்லியும் இவள் சமாதானம் ஆகவில்லை என்றால் எப்படி?? அப்படி என்ன நான் இவளிடம் தவறாய் நடந்துவிட்டேன். என்று நினைக்க, சட்டென்று எழுந்தவன்,

“ஓகே… உனக்கு இன்னமும் தெளிவு இல்லைனா, மேரேஜ் டேட்ட தள்ளிவைக்க சொல்லிடலாம்…” என்றவன் அவ்வளவுதான் என்பது போல கிளம்ப எத்தனித்தான்.

புவனாவிற்கோ திக்கென்றானது.. இத்தனை கோவபட்டவள் ஒருதரம் கூட திருமணத்தை தள்ளிவைப்பது பற்றி சிந்திக்கவில்லை. அப்படியிருக்க அகிலன் இப்படி கூறியது, என்னவோ போல் ஆனது.

குழப்பமாய் இருக்கும் போது ஒரு முடிவு எடுக்க முடியாது தான். ஆனால் இது எத்தனை பெரிய முடிவு. ஏற்கனவே அவன் திருமணம் நின்று போன ஒன்று, இதில் இத்திருமணத்தையும் தள்ளி வைப்பது என்றால் அவ்வளவு தான் இரு குடும்பத்திலும் என்ன நினைப்பார்கள்.

ஒருவார்த்தை இப்படி செய்யலாமா என்று கூட கேட்காமல் இப்படிதான் என்று முடிவு எடுத்தது போல் ஆணித்தரமாய் சொல்லி எழுகிறானே என்று தோன்ற,

“உங்களுக்கு கொஞ்சம் கூட என் பீலிங்க்ஸ் பத்தி கவலை இல்லையா??” என்றாள் வேதனை நிரம்பி.

இத்தனை நேரம் பொறுமையாய் தானே இருந்தான், இப்பொழுதும் அப்படிதான் பேசுவான் என்று எதிர்பார்க்க, அவனோ எரிமலையாய் சீறினான்.

“பீலிங்க்ஸ்…. ஹா…. என்ன பீலிங்க்ஸ்…. இதை தான் டி நீ முதல் நாளும் சொன்ன… உங்களுக்கு எல்லாம் பீலிங்க்ஸ் இல்லையான்னு.. நியாபகம் இருக்கா?? உனக்கு இருக்கோ இல்லையோ எனக்கு இருக்கு… ஏன்னா என்னோட எல்லா பீலிங்க்ஸும் உனக்காக இருக்கே அதான்…” என்றவன் கோவத்தில் கர்ஜிக்க, புவனாவிற்கு உள்ளே நடுங்க ஆரம்பித்தது..

“இல்… இல்ல… ஆகி…”

“ஸ்டாப் இட் புவனா… நானும் பொறுமையா சின்ன குழந்தைக்கு எடுத்து சொல்ற மாதிரி சொல்லிட்டு இருக்கேன், அகைன் என் பீலிங்க்ஸ்னு சொன்னா என்ன டி அர்த்தம்??”  என்று எகிற,

“ஐயோ நான் அதை சொல்லவரல…” என்று அவள் பேச முயற்சிக்க,

“நீ எதுவும் சொல்ல வேண்டாம்.. சொன்ன எல்லாமே ரொம்ப குளு குளுன்னு இருக்கு.. ஒரு சின்ன விஷயத்துக்கு என் மேல நம்பிக்க இல்லைனா பின்ன என்ன லைப்ல நம்ம பெருசா வாழ்ந்திட போறோம்… மேரேஜ் டேட் தள்ளிதான் வைக்கணும் வேற வழி இல்லை..  லாஸ்ட் மினிட்ல கூட நீ எப்படி ரியாக்ட் பண்ணுவன்னு எனக்கு தெரியாது…” என்று அகிலன் பொங்க, இவளுக்கோ ஐயோ என்றானது.

அந்த நிமிடம் மனதில் இருந்த கோவம் குழப்பம் எல்லாம் காணமல் போக, அகிலனை எப்படி சமாதானம் செய்வது என்பது மட்டுமே அவள் கருத்தில் இருந்தது.

காதல் விசித்திரமானது… வீரியமானது.. எதையும் எப்படியும் மாற்றும் வல்லமை கொண்டது..

புவனா மாறிவிட்டாள், அகிலனும்..

“நான் சொல்றதை கேளுங்களேன்…”

“என்ன ?? என்ன கேக்கணும்?? இவ்வளோ நேரம் நான் சொன்னேனே நீ கேட்டியா.. பெருசா பீலிங்க்ஸ் பத்தி பேசுறா… ஆமா எனக்கு ஏற்கனவே ஒரு பொண்ணு கூட நிச்சயம் ஆகி நின்னது.. நீ சொன்னது போல நான் எல்லாத்தையும் பிளான் பண்றவனா இருந்தா இந்நேரம் எனக்கும் அஜிதாக்கும் கல்யாணமே ஆகியிருக்கும்…” என்றவன் தன் கோவத்தை அடக்க கை முஷ்டியை இறுக்கினான்.

ஆனால் அவன் கடைசியாய் கூறிய வார்த்தைகள் புவனாவின் மனதில் பெரும் வலியை கொடுக்க, மீண்டும் கண்ணீர் எட்டி பார்த்தது.

“என்ன உண்மை தான.. நான் நினைச்சிருந்தா அஜித்தாவையே அகைன் கன்வின்ஸ் பண்ணிருக்க முடியாதா.. ஏன் டி உன்னை தேடி வந்தேன்… யாரு என்னானு தெரியுறதுக்கு முன்னாடியே உன்னையும் பேபியும் பார்க்க வருவேன் அது தெரியுமா உனக்கு…” என்று அவன் கூற, இது அவளுக்கு முற்றிலும் புதிது அல்லவா, விழிகள் விரித்து ஆச்சரியமாய் பார்த்தாள்.

“என்ன அப்படி பார்க்கிற?? அதுவும் நான் முன்னமே டிசைட் பண்ணினதுன்னு சொல்லிடாத..”

அகிலன் சொன்னதை கேட்டதும் நிஜமாகவே புவனாவிற்கு எப்படியோ ஆகிவிட்டது.. ‘ரொம்ப ரியாக்ட் பண்ணிட்டோமோ’ என்று தோன்ற,  “ம்ம்ம் இப்போ ஏன் இவ்வளோ கோவமா பேசுறீங்க….” என்றாள் இறங்கிவிட்ட குரலில்.

“வேறென்ன பண்ண சொல்ற?? எவ்வளோ சொன்னாலும் நம்பலைனா எப்படி…??”

“நம்பலைன்னு நான் சொன்னேனா???”

“நீ பேசுறது அப்படிதான் இருக்கு…”

பதிலுக்கு பதில் பேசுவது கூட நன்றாய் தான் இருந்தது. இன்னும் கொஞ்ச நேரம் இப்படியே பேசினால் இருக்கும் கோவம் கூட காணாமல் போகும் என்றே தோன்றியது.. ஆனால் அகிலனோ தன் முடிவில் பிடிவாதமாய் இருந்தான்.

“இந்த சின்ன விஷயத்துக்கு ஏன் மேரேஜ தள்ளிவைக்கணும் சொல்றீங்க…??” என்றவளின் குரலில் அப்பட்டமாய் கெஞ்சல்.

“எது சின்னவிஷயம்?? சரி இது சின்ன விஷயம் தான்.. ஆனா நீ ஓவர் ரியாக்ட் பண்ணல சொல்லு…”

எப்படி பேசினாலும் மடக்குகிறானே என்று இருந்தது. தன்னை சமாதானம் செய்ய வந்தவனை தானே சமாதானம் செய்யும் நிலை வந்ததே என்று ஒருபக்கம் சிரிப்பு கூட வந்தது.

அகிலன் தன்னை தேடி இந்த காலை பொழுதில் வந்ததும் ஏதோ அவளுக்கு இதமாய் இருந்தது. வெகு நாளைக்கு பிறகான தனிமை.. ஊட்டியில் எப்பொழுதும் காலை பொழுது இருவருக்குமே அழகாய் தான் விடியும்…

பேசியபடி இயற்கை காட்சியை ரசித்தபடி இருவரும் டீ குடிக்கும் நேரத்திற்காக போட்டி போட்டு வேகமாய் எழுவதும் உண்டு.. அதெல்லாம் இப்பொழுது நினைவில் வர, ச்சே ஒருநோடியில் தவறாய் நினைத்தோமே என்று தன்னையே திட்டிக்கொண்டாள்.

இதழில் மெல்ல புன்னகை பரவ நிமிர்ந்தவளை அகிலனும் பார்த்துகொண்டு தான் இருந்தான்.

“என்ன சிரிப்பு…??”

“ஒண்ணுமில்லையே…”

“சரி நான் கிளம்புறேன்…”

“ம்ம்ச்.. இருங்களேன் ஒரு டீ சாப்பிட்டு போகலாம்…” வெகு சாதாரணமாய் அவள் குரல் ஒலிக்க, அதுவே காட்டியது  புவனா தெளிந்துவிட்டாள் என்பதை.

ஆனால் அகிலன் முறை என்று ஒன்று இருக்கிறதே..

“ரொம்ப வேகமா கேட்டுட்ட… காலையில எந்திரிச்சதும் வீட்ல அம்மா கூட சண்டை… அகைன் உன்னோட போன் கால்…” என்று சலித்தவனும் கிளம்புவதாய் தெரியவில்லை.

“ஏன்… ஏன் அத்தை கூட சண்டை…??” என்று அவனோடு பேசியபடி இவள் டீ தயாரிக்க, அகிலனுமே அடுப்படிக்கு வந்திருந்தான்..

“எல்லாம் இந்த நியூஸ்னால தான்…” என்றவன், புவனா அவனுக்கு பிடித்தமாதிரி டீயில் இஞ்சி தட்டி போட,

“என்ன கவனிப்பு எல்லாம் பலமா இருக்கு…??” என்றான் நக்கலாய்..

இப்பொழுது லேசாய் அவனுக்கும் கோவம் குறைந்திருக்க. பேச்சு சற்றே சகஜமாய் வந்தது.

“ஹ்ம்ம் ஊட்டில நான்தானே டீ போட்டு குடுத்தேன்….”

“அதெல்லாம் நியாபகம் இருக்கா உனக்கு…” என்றான் பட்டென்று..

அவன் கேட்டதில் அவளுக்கே சங்கடமாய் போக, அவன் முகத்தையே பார்த்தாள்..

“நிஜமாத்தான் கேக்குறேன்..?? அதெல்லாம் நியாபகம் இருக்கா?? நீ நினைச்ச மாதிரி நான் பிளான் பண்ணி உன்னைய கவுக்கனும்னு நினைச்சிருந்தா அங்க லவ் மட்டும் சொல்லிட்டு விட்டிருக்க மாட்டேன்…” என்றான் சீரியசாய்..

இதயம் பக்கென்றது புவனாவிற்கு. எத்தனை கன்யமாய் நடந்தான். அதையெல்லாம் எப்படி மறந்தோம். இப்பொழுதும் கூட தேடி வந்திருக்கிறான். அகிலன் எதிர்பார்த்தது எல்லாம் இயல்பான ஒரு வாழ்வு என்று எத்தனை முறை சொல்லியிருப்பான். புவன் புவன் என்று அன்பாய் சுற்றி வரும் போதெல்லாம் தானும் மயங்கி சிரித்தது நினைவில் வந்தது.

ஏன் இப்படி ஒருநொடியில் புத்தியை பேதலிக்க விட்டோம் என்று அவளுக்கே குற்றவுணர்வாய் இருந்தது..

“சாரி….” என்றாள் மெல்ல இறங்கிய குரலில்..

“நீ சாரி கேட்கனும்னு இதை சொல்லல… புரிஞ்சு நடந்துக்கோ அவ்வளோதான்…” என்றவனுக்கு பதில் சொல்லும் முன்னே,

“ப்பா….” என்று பூர்வி ஓடி வர, அகிலனுக்கு அப்படியே முகம் புன்னகைக்கு மாறிவிட்டது..

“பேபி….” என்று டீ கப்பை வைத்துவிட்டு தூக்கிக்கொண்டான்..

“வாங்க தம்பி…” என்று கோமதியும், தனசேகரும் வரவேற்க, அவர்களுக்கு ஒரு சிரிப்பை கொடுத்துவிட்டு,

“எங்க பேபி போனிங்க??” என்று குழந்தையிடம் கொஞ்சியபடி கேட்க,

“ம்ம்ம் சாமி பாக்க…” என்றது அதுவும்..

“பாத்தீங்களா…??”

“ம்ம்ம் எஸ் பா..”

“சாமி கிட்ட என்ன கேட்டீங்க பேபி…” என்று வினவ,

பூர்வியோ சில நொடிகள் சிந்தனை செய்து “தெர்லியே….” என்றது இரு கைகளையும் விரித்து..

“ஹ்ம்ம் நீயும் உங்க அம்மா போலவே சொல்லு தெரியலைன்னு…” என்றவன் மேலும் சிறிது நேரம் பேசிவிட்டு கிளம்பினான்..

ஆனாலும் போகும் போது, “யோசிச்சு சொல்லு.. நீ தெளிஞ்ச அப்புறம் தான் கல்யாணம்…” என்றுவிட்டு செல்ல,

“அடப்பாவி தெளியவிட்டு தெளியவிட்டு அடிக்கிறானே…” என்று அலறியது புவனாவின் மனம்.     

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement