Advertisement

அத்தியாயம் நான்கு :

நிஜமா? நிழலா?                                                                               நிஜமின்றி நிழல் சாத்தியமல்ல!!!

இந்த ஜகன் செய்து வைத்த வேலையால், ஈஸ்வர் மிகுந்த மனக்குழப்பத்தில் இருந்தான். என்ன செய்வது என்று தெரியவில்லை. எவ்வளவு பணம் எப்படிச் சரி செய்வது… தெரியவில்லை.

இருபத்தி ஐந்து வயது இளைஞன், இப்போது தான் ஃபைனான்ஸ் கவனித்துக் கொள்ள ஆரம்பித்து இரண்டு வருடங்கள் ஆகின்றன. ஓரளவிற்கு இப்போது தான் பிடிபட ஆரம்பித்து இருக்கிறது.

பெரியப்பாவிற்கு மிகுந்த புத்தி கூர்மை, அவர் வளர்த்தது தான் இந்த தொழில். அவரின் இழப்பு குடும்பத்தை விட நிறுவனத்திற்குத் தான் மிகுந்த இழப்பு.

அவரின் கூர்மை நமசிவாயதிற்கோ ஜகனிற்கோ இல்லை. இப்போது தான் ஈஸ்வர் புரிந்து அதைச் சற்றுத் திறம்பட நடத்த துவங்கியிருக்கிறான். ஆனாலும் அனுபவமின்மை அவனைத் தடுமாற வைக்கிறது.

இப்போது ஜகன் இழுத்து விட்டிருக்கும் பிரச்சனை, பணம் திரும்ப வாங்க வேண்டும். எப்படி என்று தான் தெரியவில்லை.

ஆம்! ஜகனுடன் எப்போதும் சுற்றிக் கொண்டு இருப்பவன் ரூபாவின் தம்பி அஸ்வின். அவன் மாட்ட வைத்திருக்கும் பணம் இவர்களின் பைனான்ஸ் தொழிலையே அழித்து விடும். சிறிது சிறிதாக ஆரம்பித்து இப்போது பெரிய அளவில் தொகை ஒன்று சிக்கிக் கொண்டு இருக்கிறது.

சிறிது என்பது அவர்களைப் பொறுத்தவரை ஆயிரமோ லட்சமோ அல்ல கோடிகளில் தான். இதில் பெரிது என்பது சில கோடிகளில் அல்ல பல கோடிகளில்.

அந்த அஸ்வின்னானால் ஆள் பதினைந்து நாட்களாக கண்ணில் படக் காணோம்.

அப்பாவிடம் மெதுவாக விஷயத்தை ஒருவாறு சொல்லி விட்டான் ஈஸ்வர். விஷயம் கேள்விப் பட்டதில் இருந்து நமசிவாயம் அப்படியே அமர்ந்தது அமர்ந்த படி இருந்து விட்டார்.

பணப் பிரச்சனை என்று தெரியும், ஆனால் இவ்வளவு பெரிது என்று தெரியாது. பணப் பிரச்னையை சரி செய்ய தான் முரளியின் அப்பாவிடம் உதவி கேட்க வேண்டி திருமணதிற்கு சென்று அவ்வளவு நேரம் இருந்து வந்தார்.

இப்போது ஈஸ்வர் சொல்லும் தொகை கண்டிப்பாக கேட்க முடியாது. எப்படி எப்படி இப்படி தவறு நேர்ந்தது என்றால் ஜகன், அவனின் நல்ல தன்மையை அஸ்வின் உபயோகித்துக் கொண்ட விதம். அப்படிதான் நமசிவாயமும் ஈஸ்வரும் நினைத்துக் கொண்டிருந்தனர்.

“என்னடா பண்ணலாம் விஷ்வா, இன்னும் ரெண்டு மாசத்துல ஒரு க்ரூப் மக்களுக்கு நாம் அறிவிச்ச ஸ்கீம் படி பணம் மெச்சூர் ஆகுது! எல்லோருக்கும் பணம் திரும்பக் கொடுக்கணும், என்னடா இது எப்படி கொடுக்க போறோம்”.

“ஒருத்தனுக்குக் கொடுக்கலைன்னா கூட பிரச்சனை பெருசாகிடுமே, என்ன பண்ண?”

“இன்னும் ரெண்டு மாசம் இருக்கு தானேப்பா, இந்த அஸ்வினைப் பிடிக்கறேன். பணத்தை வாங்கப் பார்க்கிறேன்”

“ஜகன் என்ன சொல்றாண்டா?”

“அவனுக்கு எதுவுமே தெரியலைப்பா, முழிக்கறான், கேட்டா அஸ்வினைப் பிடிக்க முடியலை சொல்றான், குடுத்த சரி அவ்வளவு பெரிய தொகை எதுக்குன்னு கேட்டான், பணம் இருக்க இல்லையா என்னடா பண்ணுநீங்கன்னு கேட்டா ஒண்ணுமே பேச மாட்டேங்கறான்”.

இருவரும் அதற்கு மேல் பேசிக் கொள்ளவில்லை.

என்ன செய்யலாம் என்று எப்போதும் முரளியிடம் கேட்பான், இப்போது திருமண நேரம் என்பதால் அவனுடனும் பேச முடியவில்லை.

பணம் திரும்ப வாங்கியே ஆக வேண்டும், அஸ்வின் என்ன செய்து வைத்திருக்கிறான் தெரியவில்லை ஜகன் வேறுக் கூட இருந்திருக்கிறான். மனம் வழியை யோசிக்க முடியவில்லை.

இனி தயங்குவதில் பிரயோஜனமில்லை என்று புரிந்து, ஜகனை அழைத்துக் கொண்டு அடுத்த நாள் காலையிலேயே ரூபாவின் வீட்டிற்கு சென்றான், காலை என்றால் கிட்ட தட்ட ஆறு மணிக்கே சென்றனர்.

அவர்கள் வீடு விழிக்கவேயில்லை. கதவை ரூபாவின் அம்மா தான் திறந்தார். காலையில் இவர்களை பார்த்ததும், என்ன இந்த நேரத்தில் என்று முகம் குழப்பத்தைக் காட்டிய போதும், “வாங்க வாங்க” என்று உபசரித்தார்.

கூட ஈஸ்வரை பார்த்ததும் ஏதோ தொழில் விஷயம் என்று புரிந்தது. ஏனென்றால் ரூபாவிற்கு திருமணமாகி இத்தனை வருடத்தில் ஈஸ்வர் அவர்களின் வீட்டிற்கு வந்தது மூன்று நான்கு முறை இருக்கும் அவ்வளவு தான்.

“அஸ்வின் இருக்கானா” என்று எடுத்தவுடனே ஈஸ்வர் விஷயத்திற்கு வர.

“அவன் ஊருக்கு போயிருக்கான்”

“எந்த ஊருக்கு?”

“மலேசியா” என்றார்.

“என்ன?” என்று அதிர்ந்தான் ஈஸ்வர்.

ஜகனை பார்த்து முறைக்க,

“நேத்து வரைக்கும் என் கூட போன்ல காண்டாக்ட்ல தான் இருந்தான். அவன் மலேசியா போறது தெரியாது”

“நேத்து நைட் தான் போனான்” என்று அவனின் அம்மா சொல்ல,

“எதுக்கு போனான்? எப்போ வருவான்?”

“தெரியாதுங்க, ஏதாவது பிரச்சனையா” என்றார்.

“அவங்கப்பாவை வரச் சொல்லுங்க” என்றான் ஈஸ்வர், “மாமா” என்ற அழைப்பு எல்லாம் வரவில்லை.

அதுவே தெரியப்படுத்தியது பிரச்சனை பெரிது என்று

அவர் கணவரை எழுப்ப செல்ல, அப்போதுதான் ஐஸ்வர்யா எழுந்து வந்தாள், இருவரையும் பார்த்தவள், “வாங்க மாமா” என்று ஜகனை வரவேற்ற போதும், நொடியும் விடாமல் கண்கள் ஈஸ்வரைப் பார்த்தது. பார்த்து ஒரு வாரம் இருக்கும், நேற்றிலிருந்து அவளின் போன் எடுக்கவில்லை, பார்த்து அவனாகக் கூப்பிடுவான், அதுவுமில்லை, மெசேஜ்ஜிற்கு எந்த பதிலுமில்லை.

காலையில் இங்கே வந்திருக்கிறார்கள், தன்னைப் பார்க்க ஏதாவது சாக்கிட்டு வந்திருக்கிறானோ என்று சில நொடிகள் அந்த பேதை நெஞ்சம் நினைத்தது, ஆனால் அறிவு இல்லை என்று அடித்து சொன்னது அவன் அமர்ந்து இருந்த பாவனையைப் பார்த்து.

எப்போதும் ஐஸ்வர்யாவைப் பார்த்ததும் கண்களில் தோன்றும் ஒரு ஆர்வம், பளபளப்பு, எதுவும் இல்லை. இவள் வருவதைப் பார்த்தும் பார்வையைத் திருப்பியவன், இவளின் புறம் திரும்பவேயில்லை.

அடி வயிற்றில் ஏனென்று புரியாத ஒரு கலக்கம் ஐஸ்வர்யாவிற்கு. அற்புத அழகி ஐஸ்வர்யா. ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் வியக்கும் அழகி. அவளைப் பார்க்கும் போதே ரசனையாய்த் தான் பார்ப்பான் ஈஸ்வர். இன்று பார்க்கக் கூட இல்லை. எங்கோ பார்த்து அமர்ந்து இருந்தான்.

“ரூபா வரலையா மாமா” என்றாள் ஜகனைப் பார்த்து.

“இல்லை” என்பது போல ஜகனும் தலையை மட்டும் அசைத்தான் பதில் சொல்லவில்லை.

“என்ன மாமா? ஏதும் பிரச்சனையா?”

“அஸ்வின் எங்கே?” என்றான் ஜகன்.

“எங்களை விட அவன் எங்க இருக்கான்னு உங்களுக்கு தானே மாமா தெரியும்” என்று ஐஸ்வர்யா சொல்ல,

“உனக்குத் தெரிஞ்சா தெரியும்னு சொல்லு, அதை விட்டுட்டு உங்களுக்குத் தானே தெரியும்னு சொன்னா, என்ன பதில் இது? கேட்டா கேட்ட கேள்விக்கு பதில் சொல்லணும்” என்று ஈஸ்வர் கோபத்தில் கர்ஜித்தான்.

எதற்கு இவ்வளவு கோபம் என்று புரியாமல், ஈஸ்வர் பேசிய விதத்தில் பயந்து, நின்ற இடத்தில் இருந்து இரண்டடி தள்ளி நின்றாள் ஐஷ்வர்யா.

கூடவே “அஸ்வின் எங்கேன்னு தெரியாது” என்று கலக்கமாக சொல்ல…

யாரையும் எதையும் செய்ய முடியாத இயலாமையில், அவளை முறைத்துப் பார்த்தான்.

“அவகிட்ட எதுக்கு இப்பக் கத்துற” என்று ஜகன் சொல்ல,

“உன்னைக் கத்த முடியலை, அதுதான் அவளைக் கத்துறேன். வேற என்ன பண்ண?” என்றவன் மீண்டும் அவளை மேலிருந்து கீழ் பார்த்து முறைத்தான்,

அப்போது தான் தன் உடையைப் பார்த்தால், அது ஒரு சேட்டின் நைட்டி, உடலோடு ஒட்டி இருந்தது, ஸ்லீவ் லெஸ் என்று சொல்ல முடியாவிட்டாலும் குட்டைக் கை, அவனின் பார்வையை உணர்ந்தவள், வேகமாக உடை மாற்ற விரைந்தாள்.

எப்ப்போதும் பெண்களின் உடை விஷயம் என்று வரும் போது ஈஸ்வர் அவ்வளவு பார்ப்பான். அழகாக அணியலாம், ஆனால் அடுத்தவரின் கண்களை உறுத்தும் விதமாக அணியக் கூடாது.  “நீங்க ஏன் இப்படி டிரஸ் பண்ணறீங்க அப்புறம் பசங்க பார்க்கக் கூடாது அவனுங்க கிண்டல் பண்ணக் கூடாது ஏன் சொல்றீங்க”

“டிரஸ் பண்றது எங்க உரிமைன்னு சொன்னா? அதை பேசறது எங்க உரிமைன்னு அவனுங்க சொல்வானுங்க. ஏன் இப்படி ஒரு சினாரியோ க்ரியேட் பண்றீங்க” என்று பேச ஆரம்பித்தான் என்றால் நிறுத்தவே மாட்டான்.

ரஞ்சனி “அண்ணா…… டேய்!!!!! வாயை மூடுடா, உன் வீட்டு பொண்ணுங்களுக்கு சொல்றதோட நிறுத்து, அடுத்தவங்க வாழ்க்கை அவங்க அவங்க உரிமை” என்று சொல்வது எப்போதும் வழமை.

“நீ இப்படி எங்கள் முன் வந்து நிற்பாயா, ஜகன் இருக்கின்றான்” என்று அவனின் பார்வை குற்றம் சொல்லியதைத் தொடர்ந்து தான் ஐஸ்வர்யா வேகமாக விரைந்தாள் உடை மாற்ற…

அவள் மாற்றி பத்து நிமிடம் கழித்து வந்த போதும், அவளின் அப்பாவோ அம்மாவோ வரவில்லை.

இவள் சென்று பார்த்தால் அங்கே தாழ்ந்த குரலில் பெரிய வாக்குவாதம் நடந்து கொண்டிருந்தது, “எனக்கு உடம்பு சரியில்லை, தூங்கறேன்னு சொல்லு போ”

“வீட்டு மாப்பிள்ளை அவர் கிட்ட எப்படி சொல்ல, கூட ஈஸ்வர் தம்பியும் வந்திருக்காங்க”

“எவன் வந்தா என்ன? தூங்கறேன்னு சொல்லு போ” என்று நின்றார்.

“மாட்டேன்” என்பது போல அவளின் அம்மா நிற்க,

“போ சொல்லு!” என்று அதட்டி அனுப்பினார்.

வேறு வழியில்லாமல் அவர் செல்ல, என்ன நடக்கிறது என்று புரியாமல் பார்த்து நின்ற ஐஸ்வர்யாவை “உனக்கு வேற தனியா சொல்லணுமா அனுப்பு அவங்களை” என்றார்.

இருவரும் வந்து நிற்க, யார் சொல்வது என்று தெரியாமல் தடுமாறினர்.

“அவருக்கு உடம்பு சரியில்லை, தூங்கறார்” என்றனர்,

“என்ன பதில் இது?” என்று அதிர்ந்து எழுந்து நின்று விட்டான், சில நொடிகள்.

கண்மண் தெரியாத கோபம் ஈஸ்வருக்கு “என்ன?” என்றவன், கண்களை மூடி நின்றான். “இதில் கோபம் வேண்டாமடா” என்று கட்டுக்குள் வந்தான்.

பொறுமையாக திரும்பவும் அமர்ந்தவன், “அவர் எழுந்துக்கற வரைக்கும் உட்கார்ந்து இருக்கேன்” என்ற படி அமர்ந்து கொண்டான்.

அஸ்வின் தான் ஏதோ செய்து விட்டான் என்று நினைத்திருக்க இப்போதுதான் தோன்றியது அவனின் அப்பாவிற்கும் பங்கு இருக்குமோ என்று.

யாரை நொந்தும் பயனில்லை, தன்னைத் தான் நொந்து கொள்ள வேண்டு என்றும் தோன்றியது. ஜகனின் புத்திசாலித்தனம் தெரிந்தும் அவனிடம் பண வரவுகளை பார்க்க விட்டது தப்பு தானே.

ஆனால் என்ன செய்ய முடியும்? அவனும் இதில் ஒரு நிர்வாகி. அவனை பார்க்க வேண்டாம் என்று சொல்லும் உரிமை ஈஸ்வருக்கு இல்லை. யாருடனும் அதிகம் பழகாத ஜகன், அஸ்வின் உடன் பழகவும், சரி பழகுகிறானே என்று அனுமதித்தது தன் தவறு தானே?

இது யாரிடமும் கோபம் காட்டும் நேரமில்லை, பணம் எங்கிருக்கிறது என்று தெரிய வேண்டும். முதலில் அதைக் கைப்பற்ற வேண்டும். பின்பு பார்த்துக் கொள்ளலாம் இவர்களை என்று அமைதியாக அமர்ந்து இருந்தான்.

மனதில் எதுவும் ஓடவில்லை, பணத்தை தங்கள் ஃபைனான்சில் போட்டவர்களுக்கு திரும்பக் கொடுக்க வேண்டும், அது ஒன்றே பிரதான எண்ணமாக மனதினில் ஓடிக் கொண்டிருந்தது.

ஐந்து வருடங்களக்கு முன் பணத்தை அப்படியே இரட்டிப்பாக  தருகிறோம் ஐந்து வருட டிபாசிட்டில் என்று சொன்ன ஸ்கீம், நிறைய பேர் டிபாசிட் செய்திருந்தனர்.

இன்னும் இரண்டு மாதங்களில் அது முடிகிறது, அப்போது பெரிய அமௌன்ட் கொடுக்க வேண்டும். அது  மட்டுமின்றி சிறு சிறுக முதலீடு செய்தவர்கள் நடைமுறையில் வரும் பொழுது கொடுக்க வேண்டும், அது மட்டுமின்றி இந்த மாதிரி சிறு பணப் பிரச்சனை ஃபைனான்சில் என்று தெரிந்தாலும் பணத்தை லோனாக வாங்கியவன் எவனும் சரியாக திரும்பக் கட்ட மாட்டான், மொத்தமாக எல்லாம் முடிந்து விடும்.

நிறைய பணம் லோனாக தான் வெளியில் சுற்றிக் கொண்டு உள்ளது. அது வராது பிறகு, எல்லாம் சரியாக இருக்கும் பட்சத்தில் பணத்தை ஒழுங்காகக் கட்டுவார்கள், அதிலும் சில பேர் ஏமாற்ற முயலுவார்கள்.  இப்படி சிறு பிரச்சனை என்றாலும் எப்படி பணத்தைக் கட்டாமல் ஏமாற்றலாம் என்று தான் அநேகம் பேர் பார்ப்பார்கள்.

கத்தி மேல் நடக்கும் தொழில் இது. அதனால் தான் எவ்வளவு நன்றாகச் செய்தாலும் பல நிறுவனங்கள் சறுக்கி விடுகின்றன. சிறு நிறுவனங்களுக்கே அந்த கதி என்றால் இவர்களது பெரியது.

தாங்கள் சறுக்குவது ஒரு புறம் இருந்தாலும், நம்பி டெபாசிட் செய்த சாதாரண மக்கள், நினைக்கும் போதே நெஞ்சுக்குள் பிசைந்தது.

ஐஸ்வர்யா அவர்களுக்கு குடிக்க காஃபி எடுத்து வந்தாள். ஜகன் எடுப்பதா வேண்டாமா என்று ஈஸ்வரின் முகத்தைப் பார்த்தான்.

“கோடிக்கணக்குல பணத்தை விடும் போது என்னைப் பார்க்கலை, இந்த ஃகாபிக்கு எதுக்குடா என்னை பார்க்குற” என்று வார்த்தைகளை கடித்துத் துப்பினான்.

ஜகனின் முகம் அப்படியே விழுந்து விட்டது, தனியாக அவனை ஈஸ்வர் என்ன பேசினாலும் பிரச்சனை இல்லை, ஆனால் எல்லோர் முன்னிலையிலும் பேசினால் அதை அவனால் தாங்க முடியவில்லை.

என்ன பிரச்சனை என்று ஐஸ்வர்யாவிர்க்கும் அவளின் அம்மாவிற்கும் புரியவில்லை ஆனால் பிரச்சனை பெரிது என்று புரிந்தது. ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, மனிதனைக் கடித்த கதையாய், எல்லோரையும் ஏமாற்றும் தன் கணவர், தங்கள் மகளைக் கொடுத்த வீட்டிலும் கை வைத்து விட்டாரா அவரின் நெஞ்சு பதறியது.

கிட்ட தட்ட ஒரு மணி நேரம் அமர்ந்து இருந்தனர், திரும்ப திரும்ப மனைவி போய் சொல்லவும், மெதுவாக எழுந்து வந்தார்.

பார்த்தவுடன், “அடடே, வாங்க மாப்பிள்ளை!” என்று ஜகனை பலமாக உபசரித்தவர், “கூட சின்ன மாப்பிள்ளையும் வந்திருக்கீங்களா” என்றார்.

கூடவே மனைவியைப் பார்த்து, “ஏண்டி முதல்லயே சொல்லலை, நான் தூங்கிட்டு இருந்தா எழுப்ப மாட்டியா” என்று அவரிடம் ஏதோ மனைவியிடம் தான் தவறு என்பது போல பேசினார்.

அவரின் வார்த்தை ஜாலங்கள் புரிந்தாலும், நேராக விஷயத்திற்கு வந்தான் ஈஸ்வர், “அஸ்வின் எங்க போயிருக்கான்”

“வேர்ல்ட் டூர் போயிருக்கான் தம்பி” என்றார் அசால்டாக.

மலேசியா போய் இப்போது வேர்ல்ட் டூரா கண்ணைக் கட்டியது ஈஸ்வரிற்கு, “எப்ப வருவான்”

“தெரியலை, தோணின போது வருவான்” என்றார் அலட்சியமாக.

அவரின் பாவனையில் முகத்தில் ஓங்கி ஒரு குத்து விட வேண்டும் என்று கைகள் பரபரத்த போதும் பொறுமை பொறுமை என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டான்.

ஒரு தொகையைச் சொன்ன ஈஸ்வர், “அவ்வளவு பணத்தை ஜகன் அவன் கிட்ட கொடுத்திருக்கான், எங்களுக்கு அது திரும்ப வேணும்” என்றான் பொறுமையாகவே.

“என்னது அவ்வளவு தொகையா?”, என்று வெகுவாக வாயை பிளந்து ஆச்சர்யத்தைக் காட்டினார்.  “அவன் சின்ன பையன், அவனை நம்பி எதுக்கு அவ்வளவு பணம் கொடுத்தீங்க”

“அதெல்லாம் அப்புறம் பேசலாம், இப்ப பணம் வேணும்”

“குடுத்தது உங்க தப்பு, அதை விட அதை என்கிட்டே கேட்கறது இன்னும் தப்பு! யார் கிட்ட குடுத்தீங்களோ அவன் கிட்ட கேளுங்க” என்றார் அலட்சியமாகவே.

அவர் பேச பேச ஆத்திரம் ஓங்கியது, கண்கள் ரத்தமென சிவக்க, கைகளை இறுகக் கட்டிக் கொண்டான் ஈஸ்வர், “அடித்து கிடித்து விடாதே! பொறுமை! பொறுமை! பணத்தை வாங்க வேண்டும்” என்று சொல்லிக் கொண்டு.

என்ன நடக்கிறது என்று சரி வர புரியாத போதும், அப்பாவும் அஸ்வினும் ஏதோ செய்து விட்டனர் என்று புரிந்து கண்ணில் நீர் கலங்க ஐஸ்வர்யா ஈஸ்வரைப் பார்த்து நின்றாள்.

கண்ணுக்குள்ளே கண்ணீர் வெப்பம்!!! 

 

அத்தியாயம் ஐந்து :

 

நிபந்தனைகளுக்கு உட்பட்டது!!! இந்த வாசகம், இது செய்யும் சதி அதற்கு எந்த நிபந்தனையும் கிடையாது!!!   

ஜகன் கோபமாக “என்ன பேசறீங்க மாமா நீங்க! அவன் என்ன செய்யறான்னு உங்களுக்கு எப்பவும் தெரியும்! தெரியாம இருக்காது!”

“தெரியுது! தெரியலை! அது வேற விஷயம் மாப்பிள்ளை! என்னைக் கேட்டா பணத்தைக் குடுத்தீங்க! எனக்கு தெரியாது!” என்றார் கறாராக.

என்ன இப்படி பேசுகிறார் என்று தோன்றிய போதும் “நீங்க பேசறது சரியில்லீங்க எங்களுக்கு பணம் வேணும்” என்றான் ஈஸ்வர்.

“தோ பாருங்க! என்கிட்டே பணம் கிடையாது! இருந்தா எடுத்துக்கங்க! உங்களுக்கு இல்லாததா!” என்றார் தாராள மனது போல.

ஈஸ்வரும் ஜகனும் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்து நிற்க,

“தம்பி, ஃபைனான்ஸ் நடத்தறது பணத்தை திரும்பக் கொடுக்க இல்லை நாம எடுத்துக்க தான். இதெல்லாம் சகஜம்… இருக்குற பணத்தை ஃசேப் பண்ணிக்கிட்டு திவால் அறிவிச்சிடுங்க சோ சிம்பிள்” என்றார்.

“நாங்க ஒன்னும் ஆர்டினரி ஃபைனான்ஸ் நடத்தலை, ரிசர்வ பேங்க் ஆஃப் இந்தியால ரெஜிஸ்டர் பண்ணியிருக்கோம். அதுக்கு கீழ வர்றோம். ஆல் ஓவர் தமிழ் நாடு பிரான்ச் இருக்கு, எவ்வளவு ரெபுடெஷன் தெரியுமா எங்களுக்கு”

“அவ்வளவு இருந்தா சமாளிங்க… இதெல்லாம் ஒரு அமௌண்டா” என்றார் அசால்டாக.

ஈஸ்வருக்கு என்ன செய்வது என்பதை விட என்ன பேசுவது என்று கூடத் தெரியவில்லை… இப்படி ஒரு சூழலை அவன் எதிர்பார்க்கவில்லை. அவரை கொன்று புதைத்துவிடும் ஆத்திரம் முளைத்த போதும் பணம் வராமல் எதுவும் முடியாது, முழுப்பணம் இல்லாவிட்டாலும் ஏதாவது பணத்தைக் கைப்பற்றியே ஆக வேண்டிய சூழ்நிலை.

“சமாளிக்கறது! எப்படி நடத்தறது! எல்லாம் நாங்க பார்த்துக்கறோம்! நீங்க உங்க பையன் எங்க? அதை மட்டும் சொல்லுங்க!” என்றான் இவனும் கறாராக.

“அதான் சொல்றனே வேர்ல்ட் டூர் போயிருக்கான்னு. வரும் போது பாருங்க”

“யார் வீட்டுக் காசுல யார் வேர்ல்ட் டூர் போறது”

“என்ன உங்க வீட்டுக் காசு மாதிரி குதிக்கறீங்க, இது உங்களது இல்லை, எவனோ போட்ட பணம் தானே”

“பணம் எங்களுக்கு வரணும்! வந்தே ஆகணும்!” என்று பொறுமையா விட்டுக் கோபமாக கத்தினான்.

“என்ன தம்பி மிரட்டுறீங்களா?”

“எப்படி வேணா வெச்சிக்கங்க, எனக்கு பணம் வரணும்”

“என்கிட்டே இல்லை! யார் கிட்ட குடுத்தீங்களோ கேளுங்க!” என்றவர் அப்புறம் எனக்கு அவசர வேலை, நீங்க இருந்து சாப்பிடிட்டு போங்க, மாப்பிள்ளையைக் கவனி” என்று மனைவியிடம் சொன்னவர், கூட நின்ற ஐஸ்வர்யாயைப் பார்த்தார்.

கண்கள் கலங்க உதடு துடிக்க முகமெல்லாம் சிவந்து ஈஸ்வரையே பார்த்து நின்றிருந்தாள்.

“எம் பொண்ணு என்னடா இப்படி நிக்கறா?” என்று யோசனையாகப் பார்த்த போதும், அப்போது அங்கே நிற்க முடியாது என்பதால் வெளியே விட்டார்.

ஈஸ்வருக்கு ஒன்றுமே ஓடவில்லை, இப்படி ஒரு நிலையை கற்பனைக் கூட செய்ததில்லை எனும் போது அதை எப்படி அணுகுவது என்று கூடத் தெரியவில்லை. சாதாரணமாக பேசும் ஆளுமையான பேச்சுக் கூட வரவில்லை

படித்து படித்து அப்பாவும் பெரியப்பாவும் சொன்னார்களே, இந்த சம்மந்தம் வேண்டாம் என்று, இவன் ஆசைப்படுகிறான் என்று தான் தானே  இந்த சம்மந்தத்தை ஆதரித்தோம்! எத்தகைய முட்டாள் தனம்! தாங்கள் மீள முடியாவிட்டாலும் பரவாயில்லை, ஆனால் பணம் செலுத்தியவர்கள்… நினைக்க நினைக்க நெஞ்சுக்குள் பாரமாக அழுத்தியது.

எதுவும் பேசாமல் வெளியே வந்தான், காரை எடுக்க ஜகன் அவசரமாக உடன் அமர்ந்தான்.

சென்னை மாநகரின் சாலை போக்குவரத்தில் கலந்தவன், சிறிது தூரம் வந்ததும் “நீ வீட்டுக்குப் போ, எனக்கு வேலை இருக்கு” என்று ஜகனை இறக்கி விட்டு, நேரே அவன் சென்றது முரளியின் வீடு,

இவனின் காரைப் பார்த்ததும் காவலாளி திறந்து விட்டான். அடிக்கடி வருபவன் தானே! காரைப் போர்டிகோவில் நிறுத்தி வீட்டின் உள் சென்றான். காலை அப்போது எட்டரை மணி.

வீடு வெறிச்சென்று இருந்தது. இவன் வந்ததைப் பார்த்து வேலையாள் வந்தவன், “வாங்க சர், விடியக்காலைலே எல்லோரும் கோவிலுக்கு போயிட்டாங்க. முரளி சார் இல்லை” என்றான்.

“எந்தக் கோவிலுக்கு?”

“அவங்க குல தெய்வம் கோவிலுக்கு, கல்யாணம் முடிஞ்சது இல்லையா, போயிருக்காங்க!” என்றதும் அப்படியே அமர்ந்து விட்டான்.

அப்போதுதான் முரளிக்கு திருமணமாகி இரண்டு நாட்கள் தான் ஆகியிருந்தது ஞாபகம் வந்தது. தான் ஒரு போன் செய்தாவது வந்திருக்க வேண்டும் என்று உரைத்தது.

“எப்ப வருவாங்க?”

“சாயந்தரம் ஆகிடும்னு நினைக்கிறேன், அப்படி தான் பேசிக்கிட்டாங்க”,

ஈஸ்வரின் முகம் எப்போதும் இருப்பதை போல இல்லாததைக் கண்டு, “சின்ன அம்மாக்குத் தெரியும், அவங்க இருக்காங்க, நான் கூப்பிடறேன்” என்று அவன் விரைந்து விட்டான்.

யார் சின்ன அம்மா என்றுக் கூட அவனுக்கு தெரியவில்லை, மூளை மழுங்கி அப்படியே அமர்ந்து இருந்தான்.

மேலேயிருந்து வர்ஷினி யார் என்பதுப் போல எட்டிப் பார்த்தாள், அவள் கோவிலுக்குப் போகவில்லை, அவள் கோவிலுக்கு போகக் கூடாத் சூழல்.

ஈஸ்வரை பார்த்தவள், இவனுக்கு பதில் சொல்ல வேண்டுமா தேவையில்லை என்பது போல திரும்ப போனவள் அவனின் தோற்றத்தை பார்த்து நின்றாள்.

மேலேயிருந்து வர்ஷினி பார்த்துக் கொண்டிருந்ததால் ஈஸ்வருக்கு தெரியவில்லை. ஆனால் எதிரே இருந்திருந்தால் கூட அவனுக்கு தெரிந்திருக்குமா தெரியவில்லை

இரண்டு நாட்களுக்கு முன் பளபள வென்று இருந்தவன் முகம் இப்போது இரண்டு நாள் தாடியுடன், தோற்றம் பொலிவிழந்து இவனையா ஹேண்ட்சம் என்று சொன்னோம் என்று தோன்றும் படி இருந்தான்.

அந்தத் தோற்றத்தில் ஏனோ இன்னும் வர்ஷினியை ஈர்த்தான், ஒரு முரட்டு தோற்றம்.  என்னை வேலையாள் மாதிரி பேசினானே போவதா வேண்டாமா என்று பட்டி மன்றம் மனதிற்குள் நடத்தி மெதுவாக இறங்கி வந்தாள்.

இவளைப் பார்த்ததும், இவளையா சின்ன அம்மான்னு சொன்னான் என்று திகைத்தவன், வேறு யாரும் இருக்கிறார்களா என்று அவளின் பின் பார்வையை ஓட்டினான்

“யாரைத் தேடுறீங்க”

“சின்ன அம்மான்னு யாரையோ சொன்னான், யார் இருக்காங்க”

“ஏன் என்னைப் பார்த்தா சின்ன அம்மா மாதிரி தெரியலையா? நீங்க வேலைக்காரங்க மாதிரி பார்த்து ட்ரீட் பண்ணினதால, நான் அப்படி ஆகிட மாட்டேன்” என்றாள் அன்றைய நிகழ்வைக் கொண்டு,

சாதாரண நேரமாக இருந்தால் நன்றாக திருப்பிக் கொடுத்திருப்பான், விட்டுக் கொடுத்துப் போவது என்பது அவனின் அகராதியிலியே கிடையாது. சரியோ தவறோ கடைசிப் பேச்சு அவனதாக தான் இருக்க வேண்டும் சிறு வயதில் இருந்து அப்படிதான். இன்று முடியவில்லை.

“முரளி எப்ப வருவான்?”

“ஈவினிங் ஆகிடும்”

தலையை அசைத்து திரும்ப நடந்தான், கவனமில்லாமல் நடந்ததால் வழியில் இருந்த கண்ணாடி டீபாயில் நன்கு இடித்துக் கொண்டான்,

“ஊப்ஸ்” என்றவன் காலைப் பிடித்து அப்படியே மண்டியிட,

“அச்சோ! இடிச்சிகிட்டீங்களா பார்த்துப் போகக் கூடாது” என்று விரைந்து அவனின் அருகில் வந்தாள்,

சுதாரித்து எழுந்தான், “இல்லை, ஓகே” என்றபடி நடந்த போதும் சற்று விந்தி விந்தி வந்தது.

அவன் பாட்டிற்கு நடந்தான், வேகமாக அவன் முன் சென்று “ஒரு நிமிஷம் இருங்க” என்று மீண்டும் ஓடி ஒரு பீன் பேக் கொண்டு வந்தவள் “உட்காருங்க” என்றாள்.

என்ன வென்று புரியாமல் ஈஸ்வர் பார்க்க, “இடிச்சிட்டு போகக் கூடாது, சகுனம் சரியில்லைன்னு கமலாம்மா சொல்வாங்க! நான் இதெல்லாம் நமபறது இல்லை! ஆனா ஃபாலோ பண்றதுல நஷ்டம் ஒன்னும் இல்லை”.

எதுவும் பேசமால் அமர்ந்தான்.

சமீபமாக திருமணத்தில் இரண்டு நாட்கள் ஈஸ்வரைப் பார்த்து இருந்ததினால், அவனின் மாற்றம் நன்கு தெரிந்தது. “ஏதாவது ப்ராப்ளமா என்னால ஏதாவது ஹெல்ப் பண்ண முடியுமா” என்றாள்.

எல்லோருக்கும் தெரியும்படியா இருக்கிறோம் என்று முகத்தை சுருக்கினான். “நீயா நீயென்ன ஹெல்ப் பண்ண முடியும்” என்றான்.

“சொல்லி தான் பாருங்களேன்”

இவள் என்ன கையில் இருக்கும் மிட்டாயை கொடுப்பது போலக் கேட்கிறாள். விரக்தி புன்னகை ஒன்றை சிந்தியவன் “உன்னால முடியாது” என்றான்.

“நீங்களே முடிவு பண்ணிக்கிடீங்க. நானென்ன செய்ய முடியும்” என்றவளின் பேச்சு எல்லாம் பெரிய மனித தோரணையுடன் தான் இருந்தது. ஆனால் அந்தக் குரலில் ஒரு குழந்தை தன்மையும் கூட இருந்தது. இரண்டும் அவனையும் மீறி வர்ஷினியின் பால் வசீகரித்தது.

“வேலுண்ணா ஒரு இளநீர் கொண்டு வாங்க” என்று கத்தினாள்.

சொல்லி முடித்த இரண்டு நிமிடத்தில் வந்தது, “குடிங்க” என்றாள்.

எல்லாம் மறந்து ஈஸ்வரின் முகத்தில் ஒரு புன்னகை, “நான் இளநீர் குடிக்கும் விதம் என்ன? பதம் என்ன? இவள் எப்படிக் கொடுக்கிறாள்” என்பதுப் போல அவளைப் பார்த்தான்.

வர்ஷினியும் ஈஸ்வரைத் தான் பார்த்தாள், இரண்டு நாட்களுக்கு முன் இவன் என்னைப் பார்த்த அலட்சிய பார்வை என்ன, இப்போது அந்த அலட்சியம் இல்லையே. அவனுக்கு ஏதோ கஷ்டம் என்று புரிந்தது. மனிதரின் கஷ்டங்கள் தான் அவர்களை பக்குவப் படுத்துகின்றன என்று கூடவே தோன்றியது.

சற்று மனநிலை மாறி, ஈஸ்வர் அதைக் கையில் வாங்கினாலும், குடிக்க முடியவில்லை, குடிக்கக் குடிக்க நெஞ்சை அடைத்தது, ஒரு வழியாக குடித்து கிளம்பினான்.

வலி இருக்க மெதுவாக தான் நடந்தான், அவன் சென்று கார் கதவை திறக்க, படியில் நின்று பார்த்துக் கொண்டிருந்தவள் அவன் ஏதோ தடுமாறுவது தெரிந்து, இறங்கி வந்தாள்.

“டிரைவர் யாரும் இல்லை, ஐ திங்க் யு ஆர் நாட் ஓகே. நான் டிரைவ் பண்ணட்டுமா” என்றாள்.

அவளின் கேள்வியை கேட்டு அந்த நிலையிலும் திரும்பவும் மெல்லிய புன்னகை ஈஸ்வர் முகத்தில். “இவள் என்னடா நான் என்னவோ இவளுக்கு சிறியவன் போல உதவி செய்யட்டுமா என்கிறாள், டிரைவ் பண்ணட்டுமா என்கின்றாள். இன்னும் டீன் ஏஜ் கூடத் தாண்டவில்லை, இவள் ஈஸ்வருக்கு உதவி செய்வாளா” என்று அவனின் இயற்கையான  கர்வம் திமிர் எட்டிப் பார்த்தது.

“நான் சோழாவரம் ரேஸ் போவேன்” என்றான்.

“உங்களுக்குக் கார் ஓட்டத் தெரியாதுன்னு எப்போ சொன்னேன் நான், இப்ப நான் ஓட்டறேன்னு தானே சொன்னேன்”

“நீயா? நீ சின்ன பொண்ணு, டிரைவ் பண்ணுவியா?”

“நான் ஒன்னும் சின்னப் பொண்ணு இல்லை, எங்க கிளாஸ்லயே நான் தான் ஹைட், உங்க கண்ணுக் கிட்ட என் தலை இருக்கு” என்று சொல்லி அவனை நேருக்கு நேர் பார்த்தாள், அந்த நீல நிற கண்கள் மீண்டும் என்னுள் மூழ்கிவிடு என்று தான் அழைத்தது.

அந்தக் கண்களுக்குள் மூழ்காமல் மீட்டெடுத்தவன் பார்வை கட்டுப் பாட்டை மீறி அவளின் வனப்பை தான் ஆராய்ந்தது.

முட்டி வரை இருந்த உடை, அதன் கீழ் தெரிந்த அந்தக் கால்களின் பளபளப்பு, மேலே இருந்த ஒரு டாப்ஸ், உடையின் உள் இருக்கும் அங்கங்களை கற்பனை செய்ய துடிக்கும் மனது, வேகமாக பார்வை வேறு இடம் திருப்பினான்.

ஒரு மெல்லிய பயம் மனதினில், இந்தப் பணப் பிரச்னையை விட வர்ஷினி இப்போது மிகவும் பெரிய பிரச்சனையாகத் தெரிந்தாள். பருவ வயது பெண் யாரிடமும் அதிகம் பேசாதவள் தன்னோடு பேசுகிறாள். ஏதோ ஒரு மரியாதை தன்னிடம் இருக்கவும் தான் பேசுகிறாள் என்று சரியாகக் கணித்தான்.

இதில் தான் செய்வது என்ன? மாபாதகம் என்று புரிந்தது. அதுவும் இரண்டாவது முறை பார்க்கும் சிறு பெண். என்னுடைய இத்தனை பிரச்சனைகளையும் மீறி நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன்.

தன் இந்த பார்வை.. அது போகும் இடங்கள்… மிகவும் தவறு என்று புரிந்தது. தானா இப்படி? அதுவும் இந்த நிலையில்? ஒரு அச்சம் மனதினில்.

“நான் டிரைவ் பண்ணட்டுமா?” அவளின் குரல் குழந்தைத்தனமாக  இருந்தாலும் அதில் ஒரு பெரிய மனிதத் தன்மையும் இருந்தது. அதெல்லாம் ஈஸ்வரின் கவனத்தில் இல்லை,

கண்ணின் முன் ஒரு மாயை!!!!

அவளையே விடாமல் பார்க்க, அந்தப் பார்வையின் தீவிரம், மாற்றம் வர்ஷினிக்குப் புரியவில்லை,

ஏதோ தடுமாற்றத்தில் இருகின்றான் அவனுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் தான் வர்ஷினியிடம், அவனின் பார்வை மாற்றத்தை புரிந்து கொள்ளாமல் அவள் கையை நீட்ட,

“என் கண்ணு முன்னாடி இவ ஏன் வர்றா, இவளுக்கு யாரு சொல்லுவா” என்று மனது நினைத்த போதும், நீயே எடுத்துக் கொள் என்பது போல ஈஸ்வர் கைகளை நீட்டினான்.

கை தொட்டு எடுப்பாளா இல்லையா என்று உடலும் பார்வையும் எதிர்பார்த்துக் காத்திருக்க,

மிகவும் இயல்பாக விரல்கள் சற்றும் அவனின் கைகளில் படாமல் வர்ஷினி அதை எடுத்தாள்.

பொன்னி நதி!!! கன்னி நதி!!! ஜீவ நதி!!!    

Advertisement