Advertisement

சத்ரிய வேந்தன் – 31 – ஊடல்

மனம் முழுவதும் நிறைந்துள்ள நேசம்

மலர்ந்து மனம் வீசி,

உன் நெஞ்சில் துயில் கொள்ளும்

சொப்பணங்களை தந்து,

உன் பார்வையில் நனைந்து,

வாழ்வு முழுவதும் இதம் மட்டும் பரப்புமா?

உனக்காக,
உன் துயருக்காக,
உன் ஆபத்துக்காக
என் இதயமும்மனமும்
விழிகளும் கலங்குகிறது
இது நேசத்தையும் தாண்டி
உயிர் வரை கலந்த உறவாய்

பல நாட்களாக கண்ட கனவு மெய்ப்படும் தருணம், இந்த உலகையே வென்று விட்ட உவகையைக் கொடுக்கும். வேங்கை நாட்டு இளவரசி தோகையினியும் தற்பொழுது அந்த நிலையில்தான் இருந்தாள்.

மருத கோட்டையே விழாக்கோலம் பூண்டிருக்க, மருத கோட்டையினுள் அமைந்திருந்த சிவாலயம் வண்ண வண்ண மலர்களால் மிக நேர்த்தியாகவும், அழகாகவும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இரு வீட்டின் பெரியவர்களின் முன்னிலையில், எல்லாம் வல்ல இறைவன் ஈசனின் அருள்பார்வையில், உறவினர்கள், சபையினர்களின் ஆசியோடு வேங்கை நாட்டு இளவரசி தோகையினியின் சங்கு கழுத்தினில், மருத தேசத்தின் யுவராஜர் தீட்சண்ய மருதர் மங்கள நாணை பூட்டி தனது பதி ஆக்கிக் கொண்டார்.

மஞ்சள் வண்ண அட்சதையால் மணமக்களை சபையோர்கள் வாழ்த்தினர். திருமண ஏற்பாடுகள் அனைத்தும் அனைவரும் வியக்கும்படி இருந்தது. திருமணத்திற்கு வந்தவர்கள் அனைவரும் தோகையினி, தீட்சண்யரின் பொருத்தத்தைப் பற்றியும், திருமண ஏற்பாடுகளைப் பற்றியும்தான் பேசிக்கொண்டிருந்தனர்.

மனதில் இருக்கும் காதல் முழுவதையும் விழிகளில் தேக்கி, தீட்சண்யரின் பார்வை தன்னவளை உரிமையாய் வருடியது. தன்னைக் காணாமல் உருக்குலைந்திருந்தவள், இப்பொழுது பழைய தோற்றத்திற்கு, இன்னும் கூறப்போனால் திருமணம் என்பதால் அவள் பொலிவு மேலும் கூடி தங்கமாய் ஜொலித்துக் கொண்டிருந்தாள். அரக்கு வண்ண பட்டுப்புடவையில் தேவகன்னிகை பூலோகம் வந்ததுபோல இருந்தாள் தோகையினி.

‘இந்த திருநாளுக்காகத்தானே எனது காத்திருப்பு’ என்று எண்ணிய தோகையினின் மனதில் இருக்கும் பூரிப்பு, அவளுடைய மதி முகத்தில் பிரதிபலித்து, அவள் வதனத்தை கூட்டிக் கொண்டே சென்றது.

அடர்நீல வர்ண புடவையில், பொருத்தமான அணிகலங்களுடன் சமுத்திராவின் அழகு ஜொலித்துக் கொண்டிருக்க, அவள்புறம் பார்வையை திருப்பாமல் இருப்பதற்கு பகிரதப் பிரயத்தனம் செய்து கொண்டிருந்தார் சந்திர நாட்டின் வேந்தர் ரூபன சத்ரியர்.

ஆனால், சமுத்திராவின் மனமோ, ‘இரு தினங்களில் சந்திர நாடு திரும்பவிருக்கும் ரூபனரிடம் தாம் நினைப்பதை எப்படி கூறுவது? அதை அவர் தவறாக எடுத்துக் கொள்ளக்கூடாதே!’ என்றவாறு கலக்கம் சூழ்ந்து இருந்தது. எவ்வளவு முயன்றும் அவள் மனதினை ஆக்கிரமிக்கும் பயத்தை, கவலையை தடுக்க முடியவில்லை. முயன்றவரை கலக்கத்தை மறைத்தவாறு திருமண கொண்டாட்டத்தில் கலந்து கொண்டாள்.

** திருமணம் முடிந்து இரண்டு தினங்கள் ஆகியிருந்தது. விருந்தினர் மாளிகையில் இருந்த ரூபனரிடம் தீட்சண்யர் பேசிக் கொண்டிருந்தார்.

“நாளையே புறப்பட வேண்டுமா ரூபனா? பிரயாணத்தை சில தினங்கள் தள்ளிப்போடலாம் அல்லவா?”

“தீட்சண்யா எனக்கும் விருப்பம்தான். ஆனால், என் சூழல் அவ்வாறு. என்னை மன்னித்துவிடு. நேரம் கிடைக்கும் பொழுது கண்டிப்பாக வந்துவிட்டு செல்கிறேன்” என்று கூறிய ரூபனரின் மனமோ, இந்த ஐந்து நாட்களுக்குள் சந்திர நாட்டில் கார்முகிலன் ஏற்படுத்திய தொல்லைகளை எண்ணி கலக்கம் கொண்டது. சமீபத்தில் திருமணம் முடிந்த தீட்சண்யரிடமும் இதை எல்லாம் கூறி கலங்கச் செய்ய அவர் மனம் விரும்பவில்லை.

ஆனால், கார்முகிலனின் கூட்டத்தினர் ஏற்படுத்திய பாதிப்புகளாலும், சேதாரங்களாலும் ரூபனரின் மனம் முழுவதும் கோபமும், ஆத்திரமும் நிறைந்திருந்தது.

‘எப்படி இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண?’ என்கிற குழப்பம் மனம் முழுவதும் ஆக்கிரமிக்க ரூபனருக்கு உறக்கம் தூரப்போனது.

ரூபனரின் கலக்கத்துக்கு காரணம் இதுதான். மருத யுவராஜரின் திருமணத்திற்காக ரூபனரும், மூன்று மந்திரிப்பெருமக்களும் சில வீரர்களோடு மருத தேசம் புறப்பட்டிருக்க, சந்திர நாட்டில் தலைமை குருவும், மற்ற மந்திரிப் பெருமக்களும் இருந்தனர். ரூபனர் கிளம்பிய மறுதினமே, கார்முகிலன் கூட்டத்தினர் சில வீடுகளில் கொள்ளை அடித்திருக்கின்றனர். அதிக பொருள் சேதம் என்றபொழுதும், அதன்பிறகு, காவலை இரட்டிப்பாக்கி கண்காணித்து வந்தனர்.

ஆனால், அடுத்த இரு தினங்களில், நாட்டினுள் இருந்த இரண்டு பெரிய குளங்களில் பல சர்பங்களை விட்டு, யாராலும் குளத்தின் அருகேயே செல்ல முடியாமல் செய்து விட்டனர் கார்முகிலன் கூட்டத்தினர். அந்த சர்பங்கள் இருப்பது தெரியாமல், குளக்கரைக்கு சென்ற சிலரை சர்பம் தீண்டியிருக்க, நான்கு பெண்கள் உயிரிழந்து, சிலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்று இந்த சம்பவம் நடந்திருக்க, இன்று காலைதான் இது குறித்த தகவல்கள் ரூபனரை வந்தடைந்தது. ரூபனரிடம் கொள்ளை சம்பவத்தை நாடு திரும்பியதும் கூறலாம் என்று எண்ணிய தலைமை குரு, குளம் தொடர்பான பிரச்சனையில் உயிரிழப்பு ஏற்பட்டிருப்பதால் அதனை தள்ளிப் போடாமல் உடனே தெரிவித்துவிட்டார். காலையில் இருந்து அதே மனவுளைச்சலில் இருந்த ரூபனருக்கு, இரவும் அதே சிந்தனையாக இருந்தது.

இரவில் சிறுபொழுது கூட உறங்காமல் இருந்த ரூபனரின் மனம் அவரது கண்களுக்கு நிகராக எரிந்து கொண்டிருந்தது. இன்று நாடு திரும்ப வேண்டும், அதற்குமுன்பு சமுத்திரா வேறு சந்திக்க வர சொல்லி இருந்தாளே, என எண்ணிய ரூபனர் பொழுது புலரும் முன்பே, கரடுமலை செல்வதற்கு புறப்பட்டார்.

வழக்கம் போன்று, மிக சாதாரண உடையினில், அவரின் தோள் வரை வளர்ந்து சுருண்டிருந்த கேசத்தை தலைப்பாகையில் மறைத்து, சிறிய குண்டலமும், ஒட்டு தாடியையும் வைத்து மாறுவேடத்தில் தயாராகியவர், கரடுமலைக்கு சென்று அதன் அடிவாரத்தில் சமுத்திராவிற்காக காத்திருந்தார்.

அவர் வந்த சில நிமிடங்களில், சமுத்திராவும் முகத்தினில் திரையிட்டபடி சாதாரண உடையினில் வர, இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தனர்.

ரூபனரின் முக இறுக்கம் அவரது கோப மனநிலையை எடுத்துரைக்க, அவரது சிவந்த விழிகள் அவர் உறங்காததை தெளிவாக எடுத்துரைத்தது.

எதுவும் பேசாமல், அடிவாரத்தில் இருந்த விநாயகரை வணங்கிவிட்டு, கரடுமலையில் ரூபனரோடு ஏறத்தொடங்கினாள்.

ரூபனரை ஆராயும் பார்வை பார்த்தவள் முகம் வாடி அமைதியாகிவிட, அவளே பேசட்டும் என காத்திருந்தார் ரூபனர். அவள் பேசாமல் அமைதியாகவே இருக்க ரூபனரே சமுத்திராவிடம், “சமுத்திரா என்னவாயிற்று? ஏன் என்னைப் பார்த்ததும் அமைதியாகிவிட்டாய்?” என கேட்டார்.

‘இன்றும் விட்டால் இனி வாய்ப்பு எப்பொழுது அமையும் என தெரியாது. எவ்வாறாகினும் சொல்லிவிடலாம்’ என்று மனதினை திடப்படுத்தியவள் பேச முயன்றாள்.

ஆனால் பேச வேண்டியதை பேச நினைக்கையில் எங்கே தவறாக எடுத்துக்கொள்வாரோ என்று தயக்கம் எழவே திக்கித்தினறி, “நான்… அது…” என தயங்கவே,

அவளது தயக்கம் உணர்ந்து, மெல்ல அவளது தளிர் கரங்களைப் பற்றியவர், “ஏன் இத்தனை தயக்கம் தேவி? தயங்காமல் கூறு” என கரங்களுக்கு அழுத்தம் கொடுத்து விடுவித்தார்.

“நீங்கள் என்னை தவறாக எண்ண மாட்டீட்களே?” என கேட்டவளின் விழிகளில் தவிப்பும், கலக்கமும் சம விகிதத்தில் நிறைந்திருந்தது.

“தவறாக எண்ணும்படி என்ன கேட்கப் போகிறாய் தேவி? முதலில் சொல்லவந்ததை சொல். நேரம் கடத்தாதே.” ஏற்கனவே மனதில் கழன்று கொண்டிருக்கும் கோபம் முகபாவனையில் வெளிப்பட்டது.

‘சரி எண்ணியதை கூறிவிடுவோம். அவர் கோபம் கொண்டாலும் புரிய வைத்து விடலாம்…’ என்று எண்ணிய சமுத்திரா,

“சந்திர நாட்டின் நிலவரங்களைப் பற்றி, என்னிடம் தமையன் கூறுவார்…” என கூற,

அவள் தொடரும்முன், “தீட்சண்யர் கூறுவானா? அவன் கூறாமல் நீ விடுவதில்லை என்றல்லவா கேள்விப்பட்டேன்” என்றார் சற்று இலகுவான மனநிலையில்.

‘இவர் வேறு நானே முயன்று வரவழைத்த தைரியத்துடன் கூறுகிறேன், இதில் இடைப்புகுந்தால்…’ என்று மனதிற்குள் சலித்துக் கொண்டவள்,

“என்னை முழுவதுமாக சொல்ல விடுங்களேன்” என்றாள் கெஞ்சுதலாக.

“சரி சரி கூறு தேவி” என்றவர் அவள் முகத்திலேயே பார்வையை நிலைக்க விட்டார். அதில் இருந்த தயக்கமும், பயமும் ‘இவள் எதைப்பற்றி பேச விளைகிறாள்?’ என்கிற யோசனையைக் கொடுக்க, அவள் கூற விளைவதை ஊன்றி கவனித்தார்.

“நீங்கள் தவறாக எண்ணாதீர்கள். எனக்கு என்னவோ அன்று வயல்வெளிகளில் சர்பங்கள் வந்தது யாரோ வேண்டுமென்றே செயல்படுத்திய சதியாக இருக்கும் என்று சந்தேகம் எழுகிறது.”

புருவங்கள் முடிச்சிட சமுத்திராவை நோக்கிய ரூபன சத்ரியர், “வயல்வெளிகளில் சர்பங்கள் வந்தது தொடர்பாக நான் தீட்சண்யரிடம் இன்னும் தெரிவிக்கவில்லையே?” என்றார் கேள்வியாக.

‘பதற்றத்தில் இதனை சிந்திக்காது கூறிவிட்டோமே’ என திணறியவளுக்கு, இதனை எப்படி கையாள என்றே தெரியவில்லை. சமுத்திரா இதுவரை இது போன்ற சங்கடங்களை சந்திக்க நேர்ந்ததே இல்லை.

அவள் ஏதேனும் செய்ய நினைத்தால், தந்தையாரிடமும், தமையனிடமும் தயங்காமல் கூறுவாள். அவர்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றால், அவர்களின் உத்தரவினை அடுத்து, அதனை சிறப்பாக செயல்படுத்தியும் விடுவாள். ஆனால், எல்லாம் மருத தேசத்தில் மட்டும்தான். இந்த நாட்டின் இளவரசியாக அவளுக்கு அந்த உரிமையும் இருந்தது.

ஆனால், தற்பொழுது அவள் தலையிட விரும்புவதோ அண்டை நாட்டின் ஆட்சியில். ரூபன சத்ரியரின் மீது அளவு கடந்த நேசம் என்றாலும், அவருக்காக எதையும் செய்யும் துணிவு மனதிற்குள் எழுந்தாலும், அவரை தன்னில் இருந்து பிரித்து தனியாக பார்க்க மனம் விரும்பாத போதிலும், அது அவள் அளவில் மட்டுமல்லவா? அதே அளவு நேசத்தை ரூபன சத்ரியர் கொண்டிருந்த போதிலும், அவளுக்கு உரிமை என்பது ரூபனரின் மீது மட்டும்தான். அவருடைய நாட்டிலோ, ஆட்சியிலோ தலையிடும் உரிமை அவளுக்கு நிச்சயம் இல்லைதான்.

அவள் மிகவும் தயங்கிக் கொண்டு இருக்கவே, ஏற்கனவே மனம் முழுதும் கோபமும், ஆத்திரமும், எரிச்சலுமாய் இருப்பவருக்கு, அவளின் அமைதி அதுவரை இருந்த இலகுத்தன்மையை விடுத்து மேலும் கோபத்தை தூண்டியது.

“சமுத்திரா முதலில் என்னை நிமிர்ந்து பார். நான் கேட்டதற்கு பதிலைக் கூறு. நான் இன்று நாடு திரும்பியாக வேண்டும். நீ வேறு தாமதிக்காமல், எனது கோபத்தை அதிகப்படுத்தாமல் சொல்ல வந்ததை கூறு” என்றார் எரிச்சலுடன்.

ரூபனரின் கோபமான வார்த்தைகளால் மனதிற்குள் திடப்படுத்திய தைரியம் முழுவதும் வடிந்தே விட்டது. கலங்கிய விழிகளோடு ரூபனரை நோக்க, அவளுடைய முகத்திரையை விலக்கி விட்டார் ரூபன சத்ரியர்.

“பார் சமுத்திரா உனக்கு எப்படி இதெல்லாம் தெரியும்? என் பொறுமையை சோதிக்காமல் பதிலைக் கூறு” என்று கண்கள் சிவக்க கேட்க,

இதுவரை எதற்குமே சமுத்திரா அச்சம் கொண்டதில்லை. முதன் முதலாய் இன்று அச்சத்தின் உச்சியில் இருந்தாள். தன் அமைதி அவரை மேலும் மேலும் சினம் கொள்ள வைக்கும் என்று உணர்ந்தவளாய் அவள் பேச தொடங்கினாள்.

“கோபம் கொள்ளாதீர்கள். நான் கூறுவதை பொறுமையாக கேளுங்கள். எனக்கு சிறிது நாட்களாகவே மனதிற்குள் ஓர் இனம் புரியாத பதற்றம். அதற்கு காரணம் என்னவென்று தெரியவில்லை. அண்ணன் கூறியதை எல்லாம் வைத்துப் பார்த்த பொழுது, சந்திர நாட்டில் தற்பொழுது நிலைமை சரியாக இல்லை என புரிந்தது.

அதோடு அவரிடம் நீங்கள் அனுப்பும் ஓலைகளைப் பற்றி தெரிந்து கொண்டேன். நீங்கள் ஏதோ ஆபத்தில் இருப்பது போலவே மனம் பதறியது.

ஆகையால்தான், இது தொடர்பாக உங்களிடம் பேச வேண்டும் என்று, நீங்கள் கடந்த முறை அண்ணன் திருமணத்திற்கு ஏற்பாடு செய்ய வந்திருந்த பொழுது, நீங்கள் என்னைக் காண வருவீர்கள் என்று எண்ணினேன். நீங்கள் வரவே இல்லை. ஆகையால்தான் உங்களை தனிமையில் சந்திக்க வந்திருந்தேன். ஆனால், நீங்கள் என்னை பேசவே அனுமதிக்காமல் அனுப்பிவிட்டீர்கள்.”

“நீ எதுவும் பேச வந்தது போல தெரியவில்லையே. நான் உன்னைக் காண வரவில்லை என்கிற கோபத்தைத்தான் உன் விழிகளில் உணர்ந்தேன். ஆகையால் சமாதானம் செய்து, காண வராததன் காரணத்தைக் கூறினேன். நீ வேறு எதுவும் பேச முயற்சிக்கவில்லையே.”

“அது… உண்மையில் நீங்கள் உங்கள் மனதிலிருப்பதை உணர்த்தியதால், நான் மகிழ்வில் என்னையே மறந்து விட்டேன். பிறகு… நீங்கள் நான் உங்களோடு தனித்து இருப்பதையும் விரும்பவில்லை என்று உணர்ந்து கொண்டேன். ஆகையால், என்னால் கேட்க விரும்பியதை கேட்க இயலவில்லை.”

“அதற்காக, நான் கூறாத விஷயங்களை நீயாகவே தெரிந்து கொண்டாயா?”

என்ன சமாதானம் பேசினாலும் ரூபனரின் கோபம் குறையாமல் இருப்பது, அவளை வெகுவாக கலங்கச் செய்தது. “அவ்வாறு இல்லை. நீங்கள் தவறாக எண்ண வேண்டாம். மீண்டும் நீங்கள் வருவதற்கு காலதாமதம் ஆகும். அண்ணன் கூறியதிலிருந்து எனக்கு வேண்டியதை தெரிந்து கொள்ள இயலவில்லை. அதனால்தான்…”

“அதனால்…? சொல் எவ்வாறு தெரிந்து கொண்டாய்? என் நாட்டின் ரகசியங்களை எப்படி அறிந்து கொண்டாய்?”

‘என் நாடு’ என்கிற சொல்லே அவருக்கு இருக்கும் உரிமையையும், தனக்கு இல்லாத உரிமையையும் தெளிவாய் பறைசாற்ற, எது நடக்கக்கூடாது என்று எண்ணினாளோ அதுவே நடந்து கொண்டிருப்பதைப் பார்த்து மனம் கனக்க அந்த நொடிகளை கடக்க முயன்றாள்.

“நான்… நான்… நாட்டின் ராஜ்யத்தில் எதையும் தெரிந்து கொள்ள முயற்சி செய்யவில்லை. உங்களுக்கு ஏதேனும் ஆபத்து வந்ததா என்றவாறுதான் தெரிந்து கொள்ள முயற்சித்தேன்” என்றாள் திக்கித்தினறி. இதுவரை இதுபோன்ற ஒரு நிலையில் எல்லாம் அவள் நின்றதில்லை, இப்பொழுது தன் நிலையை எண்ணி மிகவும் அவமானமாக உணர்ந்தாள்.

“எவ்வாறு தெரிந்து கொண்டாய்?” என்று கேட்டவர் கோபத்தின் உச்சியில் இருந்தார்.

“நான் தந்தையாரின் ஒற்றர் ஒருவரின் உதவியுடன்…” என்று சமுத்திரா கூறி முடிக்கவில்லை, “சமுத்திரா…” என்று அதட்டலுடன் அவளை நெருங்கி, அவளது புஜங்களில் தனது இரு கரங்களையும் அழுத்தி பிடித்தார் ரூபன சத்ரியர்.

சமுத்திரா தன் நாட்டு விஷயத்தில் தன் அனுமதியின்றி நுழைந்ததே கட்டுக்கடங்கா கோபம் என்றால், ஒற்றரிடம் இதை தெரிவித்தது அதை விட பல மடங்கு கோபம் பெருகியது.

ஒற்றரிடம் சமுத்திரா கூறியதை வைத்தே, ஒற்றர் சமுத்திராவின் மனதை அறிந்திருப்பார். அவர் மருத மகாராஜர் வீரேந்திர மருதரின் ஒற்றர் என்பதால் அவருக்கும் விஷயத்தை தெரிவித்திருக்க வாய்ப்புகள் அதிகம். நம் விஷயத்தை நாமாக கூறாமல் மற்றவர்கள் மூலம் அறிவதா? என்கிற கோபமும் சேர்ந்து ரூபனரை தன்னிலை மறக்க செய்தது.

சமுத்திராவின் புஜங்களில் பதிந்த கைகள் இரண்டும் கோபத்தில் இறுக்கி பிடித்திருக்க, சிவந்த கண்களோடும் இறுகிய முகத்தோடும் சமுத்திராவைப் பார்த்துக் கொண்டிருந்தார். வேலையும், வாளையும் ஏந்திய கைகளினால் இறுக பிடிக்கப்பட்ட கரங்கள் இரண்டும் உச்ச கட்ட வலியினைக் கொடுக்க, அது தந்த வலியில் சமுத்திராவின் முகம் சுருங்கி, கண்கள் கலங்கி இருந்தது. அதனை உணர்ந்தாலும், ரூபனரது கோபம் துளியும் குறையவில்லை.

இதுவரை யாரும் சமுத்திராவிடம் இத்தனை கோபத்தையும், எரிச்சலையும், ஆத்திரத்தையும் வெளிப்படுத்தியது இல்லை. நிச்சயம் அவள் ரூபனரிடமிருந்து இத்தனை கோபத்தை எதிர்பார்க்கவில்லை.

“உன்னிடம் என் மனதினை உரைத்ததுதான் என் வாழ்நாளில் செய்த மிகப்பெரும் பிழை சமுத்திரா. உன்னிடமிருந்து இது போன்ற ஒரு செயலை நான் நிச்சயம் எதிர்பார்க்கவில்லை.

என்னிடம் உன் தந்தையார் ஒப்படைத்த நாட்டினையே, இன்னும் நான் நல்ல நிலைமைக்கு மாற்றவில்லை. அந்த கடமையையே இன்னும் சரிவர முடிக்காமல், அவர் நம்பிக்கையை காப்பற்றாமல் இருக்கின்றேன். இதில் உங்கள் பெண்ணையும் என்னை நம்பி கொடுங்கள் என்று எவ்வாறு நான் கேட்க இயலும்? அந்த அளவு தகுதியை நான் வளர்த்துவிட்டேனா? என் தகுதியை வளர்த்துக் கொள்ளும் முன்பு, என் கடமையை நிறைவேற்றும் முன்பு உன்னிடம் என் மனதை உரைத்தேனே, இது போன்ற ஒரு அறிவீனமான செயலை யாரும் செய்திருக்க மாட்டார்கள். உன்னை சந்தித்த நொடியையே வெறுக்கிறேன்” என கூறியவர் அவளை தன் கரங்களில் இருந்து உதறிவிட்டு, ஆலயத்திற்கு கூட செல்லாமல், அவளுடைய பதிலையும் எதிர்பார்க்காமல் தனது வேக எட்டுக்களால் மலையிலிருந்து கீழே இறங்கினார்.

ரூபனர் பற்றியிருந்த கரங்கள் இரண்டும் அதிக வலியைக் கொடுக்க, அதைவிட அவர் கூறிவிட்டு சென்ற சொற்கள் உயிர்வலி தர, தன்னிலை மறந்து கதறி அழத்தொடங்கினாள். மனம் முழுவதும் விஷ அம்புகளால் துளைத்ததைப் போன்ற உயிர் வலியில் அழுதே கரைந்தாள் சமுத்திர தேவிகை.

Advertisement