Advertisement

சத்ரிய வேந்தன் – 20 – மதி மகள்

வாள் ஏந்திய கைகளால்

மலர்களை ஏந்த வைக்கின்றாய்…

இறுக்கம் கொண்ட முகத்தினில்

இதழ்கள் விரிய செய்கின்றாய்…

நாடாளும் வேந்தனை

உன் சேவகனாய் மாற்றுகின்றாய்…

அடர்ந்த மரங்கள் சூழ்ந்த சிவவனம், அது நண்பகல் வேளை என்பதனைக் கூட உணர விடாமல், மரங்களின் குளுமையால் நிறைந்திருந்தது. உச்சி வேளையில், திக்கு தெரியாத காட்டினில் தனித்து இருந்தனர் சந்திர நாட்டு அரசர் ரூபன சத்ரியரும், மருத தேசத்து இளவரசி சமுத்திர தேவிகையும். 

“கிளம்பலாம் தானே பெண்ணே!” பழங்களை உண்டு முடித்ததும் சமுத்திராவிடம் ரூபனர் கேட்டார். 

“என்ன மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்கிறீர்கள்?” சிறு சலிப்புடன் சமுத்திரா கேட்டாள். 

“நீ தானே திட்டம் தயாராக இருப்பதாய் கூறினாய்?” 

“ஆம். அதற்காக அந்த திட்டம் என்னவென்று கேட்கும் பொறுமை கூட தங்களிடம் இல்லையா?” 

எதையும் எடுத்தோம் முடித்தோம் என்று வலம் வரும் ரூபனரிடம் பொறுமையைப் பற்றி கேட்டால் அவரின் நிலை சொல்லவும் வேண்டுமோ? 

ரூபனர் அவரின் மனதிற்குள், ‘என்னை முதன்முதலில் பார்ப்பவர்கள் என் நிறைகளைத்தான் பார்ப்பார்கள். என்னுடன் நெருங்கி பழகியவர்களைத் தவிர, வேறு யாராலும் என் குறைகளைக் கண்டறிய இயலாது. இந்த பெண் என்ன, என்னைப் பார்த்த சில நிமிடங்களிலேயே கணித்து விட்டாளே!’ என சிந்தனையுடன் அவளைப் பார்க்க, 

சமுத்திராவோ, இவன் பார்வையில் அவன் மனதை உணர்ந்ததாலோ, இல்லை இவனிடம் பதில் வராது போனதாலோ, அவளே மேற்கொண்டு பேசினாள். 

“ஆம் உங்களுக்கு பொறுமை என்பது கடுகளவும் இல்லை என்று தெரிந்தும் கேட்கிறேனே” என சொல்ல, ரூபனருக்கு ஏனோ கோபம் வராமல் சிறு வியப்பே வந்தது. பிறகு, இவ்வளவு ஆணித்தரமாக அவனைப்பற்றிய உண்மையை கணித்து சொன்னாள் வியக்காமல் இருக்கமுடியுமா? 

மெலிதாக புன்னகைத்தவர், “சரி உன் திட்டம் என்னவென்று கூறு சமுத்திரா? இது போதுமா இல்லை இன்னும் வேறு ஏதேனும் கேள்விகள் கேட்க வேண்டுமா?” உண்மையிலேயே மேற்கொண்டு என்ன கேட்க வேண்டும் என்பதனை அவர் அறிந்திருக்கவில்லை. அவர் முகத்திலும், குரலிலும் அதன் முகபாவம் மிகத்தெளிவாக தெரிந்தது. 

அவனுடைய இயல்பான பேச்சில் அவளுடைய இறுக்கம் முற்றிலும் மறைந்து மெல்லியதாக புன்னகைத்தாள் சமுத்திரா. 

“என்ன நீங்கள் சிறு பிள்ளை போல கேட்கிறீர்கள்? எந்த ஒரு செயலாக இருந்தாலும், அதனை தொடங்கும் முன்பு உடன் இருப்பவர்களிடம் கலந்தாலோசித்து, அதிலுள்ள சாதக பாதகங்களை அலசி ஆராய்ந்து முடிவு எடுத்தல் வேண்டும் அல்லவா? ஒரு வேளை நான் தீட்டிய திட்டத்தில் ஏதேனும் பிழை இருக்கலாம். அதனை நீங்கள் சுட்டிக்காட்டி சரி செய்யலாம். இல்லையெனில் திட்டத்தை மேம்படுத்த உதவலாம்.” 

ரூபனருக்கு சமுத்திராவின் பேச்சு வியப்பைத் தந்தது. இது தானே நாட்டில் நடைமுறை. அவன் தளபதியாக இருந்த சமயம் கூட இப்படித்தானே அனைத்து விஷயங்களையும் கலந்தாலோசித்து நாட்டில் செய்வார்கள். 

நாட்டின் தளபதியாய் இருந்த சமயமும் ஒரு வகை உயிரும், உணர்வும், பாதுகாப்பும் சேர்ந்த போராட்டங்கள் என்றால், இப்பொழுதைய நிலைமையும் அதுதானே. இப்பொழுது எந்த சிந்தனையும் இல்லாமல், எப்படி எடுத்தோம் கவிழ்த்தோம் என்று முடிவெடுக்க முடியும். 

என் உயிரோடு, முன்பின் தெரியாத பெண்ணின் உயிரும் பாதிக்கப்பட்டிருக்குமே!

அவன் மனம் நிதர்சனத்தை உணர, சமுத்திராவின் மீது பெரும் மதிப்பு வந்தது. 

பெருமிதத்துடன் சமுத்திராவை நோக்கி, “நீ சொல்வதும் சரிதான். உன் திட்டத்தைக் கூறு. இங்கிருந்து எந்த திசையில் பயணிக்கலாம்?” 

“இங்கிருந்து நாம் பயணம் மேற்கொள்ளக் கூடாது.” 

“பிறகு…?” 

“எப்படியும் என்னுடன் வந்தவர்கள் என்னைத் தேடிக்கொண்டு, இந்நேரம் இந்த வனத்திற்குள் அலசி ஆராய்ந்து கொண்டிருப்பார்கள். அவர்களை நாம் இருக்கும் இடத்திற்கு வரவழைக்க வேண்டும்.” 

“ஏன் அவர்களும் நம்முடன் மாட்டிக் கொள்வதற்காகவா?” 

“உங்கள் அறிவை எப்படி மெச்சுவது? சிறிது நேரம் பொறுமையாக சொல்வதைக் கேளுங்கள்” என்று கூறியவள், அவருடைய கேள்விக்கு பதில் கூறினாள். 

“அவர்கள் நடுக்காட்டில் வந்து மாட்டிக் கொள்வார்களா என்ன? அவர்கள் வரும் வழியில் அடையாளங்களை ஏற்படுத்துவார்கள். அதனைக் கொண்டு நாம் திரும்பி சென்று விடலாம்” என்றாள் நிதானமாக. 

சமுத்திராவின் அறிவு அவனை வெகுவாகக் கவர்ந்தது. “அருமை சமுத்திரா. சரி சொல்லு அவர்களை இங்கே வரவழைக்க நாம் என்ன செய்ய வேண்டும்?” 

“உங்கள் அங்கவஸ்திரத்தை தாருங்கள்.” அவள் கேட்டதுதான் தாமதம், அவள் மேல் இருந்த அபார நம்பிக்கையில் என்ன ஏது என்று கேட்காமல் உடனே அவனுடைய அங்கவஸ்திரத்தை சமுத்திராவிடம் கொடுத்தான். 

“இந்த மரத்தில் இருந்து ஒரு கிளையினை உடையுங்களேன்.” 

அவள் சொல்ல சொல்ல கணப்பொழுதும் தாமதிக்காமல் ரூபனர் செய்ய, அவளுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அதே சமயம், ரூபனர் மீது நன்மதிப்பும் வளர்ந்தது. 

ரூபனர் பறித்துக் கொடுத்த மரக்கிளையின் ஒரு முனையில், அவனுடைய அடர் பச்சை வண்ண அங்கவஸ்திரத்தை தேவைக்கேற்ப கிழித்து கொடி பறக்க விடுவது போலக் கட்டினாள். அந்த கிளையை ரூபனரிடம் கொடுத்து, அதனுடன் அருகில் படர்ந்திருந்த கொடியையும் பறித்துக் கொடுத்தாள். 

அங்கிருந்த ஒரு உயரமான மரத்தினைக் காட்டி, “இதன் உச்சியில், இந்த கொடியின் உதவியோடு அங்கவஸ்திரத்தை தாங்கியுள்ள இந்த மரக்கிளையினை கட்டிவிடுங்கள்” என்று கூறினாள். 

அவளுடைய அறிவாற்றலை வியக்காமல் இருக்க முடியவில்லை. இந்த அங்கவஸ்திரத்தை பறக்கவிட்டால், நிச்சயம் சுற்றுவட்டாரத்தில் தேடுபவர்களால் கண்டுகொள்ள இயலும். அவள் சொன்னதை உடனடியாக செயல்படுத்தினான். ஆனால் மரத்தின் உச்சி வரை போவது மிகவும் சிரமமாக இருந்தது. முடிந்தளவு ஒரு உயரமான இடத்தில் கொடியை பறக்கவிட்டான். 

ரூபனர் அந்த நெடிய மரத்தின் மீது ஏறி, அங்கே அங்கவஸ்திர கொடியினைக் கட்டிவிட்டு கீழே இறங்கினான். அப்பொழுது, சமுத்திரா ஆற்றங்கரையின் ஓரத்தில் இருக்கும் கொடிகளை பிணைத்து ஏதோ செய்து கொண்டிருந்தாள். 

ரூபனர் அருகினில் செல்ல, அவனிடமும் சிறிது வேலைகளைக் கொடுத்தாள். அனைத்தையும் முடித்த பிறகு, அந்த இடத்தினைப் பார்க்க மிகவும் அழகாய் இருந்தது. 

ஆற்றங்கரையில் வளர்ந்திருந்த இரண்டு மரங்களின் அருகே செடி, கொடிகள் படர்ந்திருந்தது. 

கொடிகளை இழுத்து மரங்களின் இடையில் கயிறு போல நீளமாக இணைத்திருந்தாள். அதோடு, மரத்தின் அடிவாரத்தில் இருக்கும் கொடிகளை, ஏற்கனவே கயிறு போன்று தொங்கி கொண்டிருக்கும் கயிற்றில் சரிவாக இணைக்க, அதனைக் காணும்பொழுது ஒதுக்கி வைத்த திரைசீலை போன்ற அமைப்பினைக் கொடுத்தது. 

“சமுத்திரா அழகாக இருக்கிறது. ஆமாம் இது எதற்காக?” 

“நான் ஆற்றில் அடித்து வந்ததினால், ஆறு வழியாக படைகினைக் கொண்டு தேடி வந்தார்களாயின்… இங்கே இந்த அடையாளத்தைப் புரிந்து கொள்வார்கள் இல்லையா? அதே சமயம் படகில் வருபவர்கள் மரத்தின் மேலே ஏற்றிய அங்கவஸ்திரத்தை கவனிக்காது, ஆற்றின் ஓரத்தில் நான் மயங்கி இருக்கின்றேனா என்று கரையோரத்தில் மட்டும் கவனம் செலுத்தவும் வாய்ப்பு இருக்கிறது அல்லவா?” 

“சமுத்திரா நீ இந்த ஆற்றில் தானே அடித்து வந்தாய்? நாம் ஏன் இதனைப் பின்பற்றி செல்லக்கூடாது?” 

“இது காட்டாறு, எங்கே வேண்டுமானாலும் கிளைகளாக பிரியும். எங்கே வேண்டுமானாலும் பல கிளை ஆறுகள் இணையும். என்னை அடித்து வந்த வழி கூட அது போலத்தான். நானும் ஆற்றில் அடித்து வரும்பொழுது சரியாக கவனிக்க இயலவில்லை. 

அதனால், நம்மால் இதனை பின்பற்றி செல்ல இயலாது. தவறுதலாக நாம் காட்டிற்குள் செல்ல செல்ல ஆபத்து நமக்குதான். 

சரி வாருங்கள். துரிதமாக அடுத்த வேலைகளை கவனிப்போம்” என்றபடி முன்னே செல்பவளைப் பின் தொடர்ந்தார் ரூபனர். 

சமுத்திரா வேலைகளைக் கொடுப்பேன் என்று கூறியபொழுது கூட, அவர் இத்தனை வேலைகளை எதிர்பார்க்கவில்லை. 

‘இவள் முன்பு மரம் ஏறி பழங்களை பறித்ததற்காக, மரத்தின் உச்சி வரை ஏற்றி விட்டுவிட்டாள். செடி, கொடிகளை பிணைக்கிறேன் பேர்வழி என்று எத்தனை வேலை வாங்கி விட்டாள். இன்னும் வேலை செய்ய வேண்டுமாம்!’ என்று மனதிற்குள் எண்ணியவாறே பின்தொடர்ந்தார். 

ஏனோ மங்கையவளுக்கு சேவகனாக இருப்பதும் ரூபனருக்கு மிகவும் பிடித்திருந்தது. அவளுடைய அழகில் வீழ்ந்தானோ என்னவோ, அவளுடைய மதியில் சிறிது சிறிதாக அவள்புறம் அவன் மனம் சாயத் தொடங்கியிருந்தது. அதை உணரும் மனநிலையிலோ, இல்லை ஆராயும் மனநிலையிலோ ரூபனர் இல்லை. 

சமுத்திரா ஒரு மரத்தின் அடியில் அமர்ந்து கொண்டு, பெரிய இலைகளை பறித்து வந்து போடச் சொன்னாள். பிறகு அங்கே இருக்கும் செடிகளில் இருந்த மலர்களை பறித்து வரும்படி சொன்னாள். 

எதற்கு? ஏன்? என்றெல்லாம் துளியும் புரியவில்லை. ஆனால், நிச்சயமாக ஏதோ வித்தியாசமாகத்தான் செய்யப்போகிறாள், அதுவும் இங்கு நாம் இருக்கிறோம் என அடையாளத்தை ஏற்படுத்த, என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில் சிறிது நேரம் கூட ஓய்வெடுக்காது அவள் கேட்டபடி அனைத்தையும் பறித்து வந்து போட்டான். 

அவள் ஏதோ திட்டத்தை செயல்படுத்த கேட்கிறாள் என்று ஐயம்திரிபுற தெரிந்த போதும், அவளிடம் வழக்கடிக்க விரும்பியவராய், 

“ஆமாம் அவர்கள் அனைவரும் உன்னைத்தேடி வரும்வரை, நீ மலர் மெத்தையில் துயில் கொள்ள வேண்டுமா?” என பரிகாசக் குரலில் கேட்டார். 

இயன்றவரை ரூபனரை முறைத்தவள், “நீங்கள் வம்பு வளர்க்க கேட்கிறீர்கள் என்பது உங்கள் குரலிலேயே தெரிகிறது” என்றாள் புன்னகையுடன். 

‘குரலிலேயே மனநிலையை உணரமுடியுமா? அதுவும் என்னை நேர் கொண்டு பார்க்காமல்? 

உண்மையில் இந்த பெண் மிகவும் புத்திசாலிதான். எனக்கு இங்கிருந்து தப்பிப்பதற்கு எந்த யோசனையும் இதுவரை தோன்றவில்லை. இவளானால், வினாடிக்கு ஒன்றை யோசித்து நடைமுறைப் படுத்துகிறாளே!’ மனதிற்குள் சமுத்திராவை எண்ணி வியந்தவருக்கு அவள் மீது மதிப்பு கூடிக்கொண்டே சென்றது. 

சமுத்திராவே போதும் என்று கூறும் வரை மலர்களையும், இலைகளையும் பறித்து வந்து சமுத்திராவின் அருகினில் போட்டார். அவளாகவே ஒரு கட்டத்தில் போதும் எனவும், அந்த இரும்பு மனிதனும் சற்று தளர்ந்துதான் இருந்தான். 

அரண்மனையிலிருந்து அதிகாலையில் கிளம்பியது. சரி வர உண்ணாமல், நீர் கூட சரியாக அருந்தாமல், இப்படி காட்டிற்குள் ஓயாமல் அழைந்ததில் ஓய்ந்து போனான். ஆனால், ரூபனரின் முகத்தில் களைப்பு துளியும் தெரியவில்லை. இதனைவிட பலவற்றை அனுபவித்தவர் ஆயிற்றே! 

சரி சிறிது நேரம் இளைப்பாறலாம் என்றபடி ரூபனர் அமர்ந்தால், சிறிதும் ஓய்வெடுக்க முடியாமல், சமுத்திரா அடுத்தகட்ட வேலைகளைக் கொடுத்தாள். இதனை ரூபனர் துளியும் எதிர்பார்க்கவில்லை. 

இருந்தாலும், அவள் கூறிய பணிகளை செய்யத்தொடங்கினான். இலைகளைக்கொண்டு பந்து போன்ற அமைப்பினை சமுத்திரா ஏற்படுத்தி இருந்தாள். அதன் மேல்பகுதியில் சிறிது இடைவெளி இருக்க, அதன் வழியே மலர்களை போடச் சொன்னாள்.. 

அந்த இலைப்பந்து முழுவதும் மலர்களால் மூடியதும், அதன் மேலே மூடப்படாத இடங்களிலும் சில இலைகளை வைத்து, சிறிய முள்ளினைக் கொண்டு இணைத்தாள். 

இப்படியே சில மலர்கள் நிறைந்த பந்துகளை தயார் செய்தாள். அதுபோக மேலும் சில மலர் பந்துகளை செய்து, அந்த பந்திற்குள் முழுவதும் சிகப்பு நிற மலர்களைக் கொண்டு மட்டும் நிறைத்திருந்த்தாள். 

சிகப்பு நிற மலர்கள் நிறைந்த இலைப்பந்துகளை தனியே வைத்தவள், ரூபனரிடம், “நீங்கள் வேட்டையாட கொண்டு வந்த வில் அம்புகளைத் தாருங்கள்” என கேட்டாள். 

அருகினில் ஒரு மரத்தடியில் தாம் வந்த குதிரையினைக் கட்டி வைத்திருந்தார். அதன் அருகினில் இருந்த வில்லையும், அம்புகளையும் கொண்டு வந்து சமுத்திராவிடம் தந்தார். 

அதனைப் பெற்றுக்கொண்ட சமுத்திரா, பல வண்ண மலர்களால் நிரம்பிய இலைப்பந்தினை, அம்பின் நுனிப்பகுதியில் வைத்து வான் நோக்கி வில்லின் உதவியுடன் அம்பினை செலுத்தினாள். 

சமுத்திரா அறிவானவள் மட்டுமில்லை. வீரத்திலும் சலைத்தவள் இல்லை என நிரூபிக்கும் பொருட்டு, வான் நோக்கி சீறிப்பாய்ந்த அம்பு, அந்த மலர் பந்தினை விண்ணில் செலுத்தி சிதற செய்தது. 

‘வான்வெளியில் திடீரென தோன்றும் வர்ண ஜாலங்கள் நிச்சயம் யார் கண்களிலேனும் புலப்படும்’ என்ற எண்ணம் தோன்றிய கனமே, தன்னவளை பெருமிதத்துடனும், காதலுடனும் பார்வையால் வருடினார். 

இதே இடத்தில் வேறு பெண்பிள்ளைகள் இருந்திருந்தால், நிச்சயம் தனிமையில் ஒரு ஆணுடன் இருக்க பயம் கொள்வர். அதோடு இது போன்ற இக்கட்டான சூழ்நிலையை சமாளிக்க தெரியாமல் தவித்திருப்பர். என்னவள் மிகவும் வித்தியாசமானவள் என்கிற எண்ணமே தித்தித்தது ரூபனருக்கு. 

“அதி அற்புதம் தேவி” என்று தம்மையும் அறியாமல் ரூபனர் கூற, 

சமுத்திர தேவிகை என்ற பெயரில் இருந்துதான் தேவி என அழைக்கிறார் போலும் என சமுத்திரா எண்ணிக் கொண்டாள். 

“சமுத்திரா அந்த வில்லினைக் கொடு நான் ஒன்றை எய்து பார்க்கிறேன்” என கேட்டவரிடம் வில்லையும் அம்புகளையும் தந்தாள். 

இம்முறை, மலர்பந்தினை வான் நோக்கி ரூபனர் செலுத்த, சமுத்திரா செலுத்தியதை விட, பல மடங்கு உயரத்தில் அம்பு சென்றடைய, இம்முறை மிக மிக உயரத்தில் மலர்கள் சிதறியது. 

இவ்வளவு உயரத்தில் மலர்கள் சிதறியதும், சமுத்திரா மிகவும் வியந்தாள். அவன் உருவத்தை வைத்து ஒரு போர் வீரனாய் இருப்பான் என்று எண்ணியிருந்தவள், அவன் ஒரு மாவீரனாய் இருப்பான் என்று நிச்சயம் எதிர்பார்க்கவில்லை. 

இவ்வளவு சிறந்த மாவீரனை, ஒரு சேவைகனைப் போன்று வேலை வாங்கியும், துளியும் முகம் சுளிக்காத அவன்மீது பெரும் மதிப்பு வந்தது. 

அவன் வில் எய்துவதை இமைக்க மறந்து ரசித்துக் கொண்டிருந்தாள். ரூபனர் மூன்று பந்துகளை வானில் செலுத்தியதும், வடதிசையில் இருந்து ஏதோ ஒரு ஒலி வந்தது. 

“சமுத்திரா கவனித்தாயா? ஏதோ சப்தம் கேட்கிறது.” 

சமுத்திராவும் பிறகு உன்னிப்பாக கவனிக்க, கொம்பு என்கிற தூம்பு வகை ஊது கருவியின் மூலம் இசை ஒலித்தது. 

கொம்பு இசைக்கருவி பண்டைக் காலத்தில் விலங்குகளின் கொம்புகளைப் பயன்படுத்தி செய்யப்பட்டதால், கொம்பு எனப் பெயர் பெற்றது.. பொதுவாக மன்னரிடம் இருந்து அறிவிப்பு வரும் முன்னர், அரண்மனையில் கொம்பின் மூலம் ஒலி எழுப்புவர். 

வடதிசையில் ஓயாது இசை ஒலிக்கவும், “என்னைத்தேடி வருபவர்கள்தான், நாம் எய்திய மலர் பந்தினை பார்த்திருப்பார்கள் போலும், அதனாலேயே ஓசை எழுப்புகின்றனர்” என்ற சமுத்திரா மேலும் தொடர்ந்து, 

சிகப்பு மலர்களால் நிரப்பிய பந்தினை எடுத்தவள், “இப்பொழுது வான் நோக்கி இந்த பந்தினை செலுத்துங்கள்” என்றாள். 

“ஏன் இப்பொழுது இந்த பந்து சமுத்திரா?” 

“வழக்கமாக செலுத்திய பந்தினையே எப்படி செலுத்த, இம்முறை அவர்களின் செய்தி கிடைத்து விட்டது என்பதை தெரிவிக்க வேண்டும் அல்லவா? 

அதற்காக இந்த பந்து, இல்லாவிடில், நமக்கு அந்த ஓசை கேட்கவில்லை என்று எண்ணிக்கொண்டு, அவர்கள் இடைவிடாது ஓசை எழுப்புவார்கள்.” 

மெலிதாக புன்னகைத்து விட்டு, சிகப்பு நிற மலர்கள் கொண்ட இலை பந்தினை வானில் சிதறடித்தார். 

இப்பொழுதய ஒலி சற்று வித்தியாசமாக வந்தது. 

“அவர்களுக்கும் நம் செய்தி கிடைத்து விட்டது. இனி வழி தெரியாவிட்டால் மட்டுமே மீண்டும் ஓசை எழுப்புவார்கள்” என்றாள் எதையோ சாதித்து விட்ட திருப்தியில். 

சமுத்திராவும், ரூபனரும் காத்திருக்க, மருத இளவரசர் தீட்சண்ய மருதர் தமது படையோடு சமுத்திராவை மீட்க வந்து கொண்டிருந்தார். 

Advertisement