Advertisement

சத்ரிய வேந்தன் – 13 – வீராதி வீரன்

உன் பாவங்களை

மன்னரும், மற்றவர்களும்

அறியாமல் செய்வதால்

நீ தப்பிக்கொள்ளலாம்

என எண்ணினாயா?

கடவுள் காணா

பிழையா???

உன்னை வதம் செய்ய…

உன் பாவக்கணக்கைத்

தீர்க்க…

உன் கர்வத்தை

தவிடு பொடியாக்க…

உன்னை நோக்கி

ஆயுதம் எரிந்துவிட்டான்…

நீ அழியும்

காலம் வெகு

தொலைவில் இல்லை…

இரை தேட தமது கூட்டிலிருந்து புறப்பட்ட பறவைகளின் சங்கீதத்திலும், ஆழ்ந்து உறங்கியதால் களைப்பு முழுவதும் நீங்கியதாலும், ரூபன சத்ரியர் தமது உறக்கத்திலிருந்து விழித்தெழுந்தான். கனவுகள் கூட தீண்டிடாத ஆழ்ந்த உறக்கம் கொண்டவருக்கு முகமும், உள்ளமும் மிகுந்த மலர்ச்சியாய் இருந்தது. அதே புத்துணர்வோடு அந்த நாளினைத் தொடங்கினான்.

அவர் தன்னை தயார்படுத்திக் கொண்டு வெளியேறியதும், அங்கே பணிபுரிவோர்கள் அவனிடம், “கரடு மலை ஆண்டவரை தரிசனம் செய்துவிட்டு வாருங்கள் ஐயா. காலை உணவு தயாராக இருக்கிறது” என்று தன்மையாக கூறினார்.

சிறு தலையசைப்புடன் அவர்களுக்கு நன்றி உரைத்துவிட்டு, கரடு மலையை ஏறினான். மலை முழுவதிலும் அடர்ந்த மரங்கள் நிறைந்திருக்க, கோயிலை அடைவதற்கு சற்று அகலமான பாதையை அமைத்திருந்தனர். “இந்த மலையை செப்பனிட எத்தனை வீரர்கள் உழைத்திருப்பார்கள். எப்படியும் ஆயிரம் படிகளேனும் நிறைந்திருக்குமே” என்கிற எண்ணம் முதன் முதலில் அந்த மலைக்கு வந்திருந்த ரூபனருக்கு தோன்றியது. போகும் வழி நெடுகிலும் சிறு சிற்பங்கள், ஆங்காங்கே பிரமாண்டமான பாறைகள் என அதன் அமைப்பே அழகாய் இருந்தது.

மலை உச்சியை அடைந்ததும், அங்கே அமைந்திருந்த பிரமாண்டமான கோயிலின் அழகை ரடித்தபடி, சர்வ அலங்காரத்தில் இருந்த முருகப்பெருமானை கண்குளிர தரிசித்தார். அவன் மனம் முழுவதும், மன்னர் வேலவர் உடல்நலம் விரைவில் குணமாக வேண்டும் என்கிற வேண்டுதல் மட்டுமே நிறைந்திருந்தது.

தமது தரிசனத்தை முடித்துவிட்டு, மலையில் இருந்து ரூபனர் இறங்கிக் கொண்டிருந்தான். சில நாட்களாய் வைத்திய சாலையில் சிகிச்சையில் இருந்தவர் என்பதால், நேற்று மாலையில் இந்த மடத்திற்கு வந்தது முதல், கிடைக்கப்பெற்ற மூலிகை வாசனைகளை அவரால் நன்கு உணர முடிந்தது.

மூலிகை வாசனைகளுக்கான காரணம், அருகே உள்ள வைத்தியசாலை என்று எண்ணி இருந்தவருக்கு, அந்த மூலிகைகளும், வைத்தியச் செடிகளும் இந்த மலை முழுவதும் அதிகம் இருப்பதை, தற்போது அவரது நாசியை துளைக்கும் நறுமணத்திலிருந்து உணர்ந்து கொள்ள முடிந்தது. மலைப் பாதையில் ஏறும் பொழுதும், இறங்கும் பொழுதும் அவரால் அதனை நன்கு உணர முடிந்தது.

ஏனோ இந்த சுத்தமான காற்றும், மூலிகை மனமும் இன்னும் சிறிது நேரம் வேண்டும் என மனம் கேட்க, நின்று நிதானமாய் சுவாசத்தை சீராக்கி, அந்த நறுமணத்தை ஆழ்ந்து அனுபவித்தான்.

தேனின் சுவையை ருசித்த பிறகு மீண்டும் மீண்டும் ருசிக்க வேண்டும் என்று எண்ணம் தோன்றுவது போல, அவருக்கும் இந்த மூலிகை வாசனை, சுவாசத்தில் மீண்டும் மீண்டும் வேண்டும் என மனம் உந்தி தள்ளியது. ஏனோ அந்த அடர்ந்த வனத்திற்குள் செல்ல வேண்டும் போல மனம் ஆசைப்பட, இது என்ன மாதிரியான உள்ளுணர்வு என அவராலேயே அனுமானிக்க முடியவில்லை.

ஆனால், அவன் மன நிலையை அந்த முருகப்பெருமான் உணர்ந்து கொண்டாரோ என்னவோ, அவன் நின்றிருந்த பாறையின் பின்னால் யார் கண்களுக்கும் புலப்படாத வண்ணம் இருந்த ஒற்றையடிப்பாதையை, அவன் கண்களுக்கு புலப்படுத்தினார். அவன் நடந்து கொண்டே இருந்திருந்தால் அவன் கண்களுக்கு புலப்பட்டிருக்காதோ என்னவோ? ஆனால் அந்த இடத்தினிலேயே வெகுநேரம் நின்று சுற்றியிலும் நோட்டம்விட்டபடி இருந்தமையால், அவன் கண்கள் அந்த பாதையைக் கண்டு கொண்டது போலும்.

ஆச்சர்யத்தில் விழி விரித்தவன், அந்த பாதையில் நடக்கலானான். ஏன் செய்கிறோம் எதற்கு செய்கிறோம் என்றெல்லாம் அவனுக்கு விளங்கவில்லை. ஏனோ அவன் மனம் உந்த, கால் போன போக்கினில் அங்கு தெரிந்த பாதையில் சென்றான். கானகத்தில் ஏதேனும் ஆபத்து இருக்கலாம் என்றுகூட அவன் பின்வாங்கவில்லை. பொழுது விடிந்தும் கூட, இருட்டில் நடப்பது போன்ற உணர்வை அந்த கானகத்தின் அடர்ந்த மரங்கள்தர, அதனை பொருட்படுத்தாது தொடர்ந்து நடந்தான். பாதையின் முடிவில் அவன் கண்ட காட்சியில் அதிர்ந்து நின்றான்.

அங்கே ஒரு குடிசை அமைக்கப் பட்டிருந்தது. அந்த அடர்ந்த வானகத்தில் நடுவினில் சிறிது இடம் சுத்தம் செய்யப்பட்டு அழகானதொரு குடிசை, இதனை அவன் நிச்சயம் எதிர்பார்க்கவில்லை. அந்த குடிசையில் இருந்து வந்த மூலிகை மணத்திலிருந்து அந்த குடிசை இந்த காட்டில் இருக்கும் மூலிகைகளை பறித்து வைத்திய சிகிச்சைகளுக்கு தேவையான மருந்து தயார் செய்யும் இடம் என்கிற எண்ணத்தினை ரூபனருள் தோற்றுவித்தது.

நிச்சயம் இந்த கரடு மலை கானகத்தில் இப்படி ஒரு குடிசை இருக்கும் என யாராலும் கணிக்க இயலாது. ‘எதற்காக இந்த மறைவான இடம்?’ என்கிற கேள்வி ரூபனரின் மனதினில் தோன்றாமல் இல்லை.

அந்த குடிசை எதற்காக என தெளிவாக அறியும் ஆவல் எழ, சப்தம் எழுப்பாமல் அங்கே என்ன நடக்கிறது என்பதனைப் பார்க்க, அந்த குடிசையின் ஒரு புறம் சென்று கவனம் செலுத்தலானான். உள்ளே ஒரு முதியவர் இருந்தார். அவர் சிலரிடம் பேசிக் கொண்டிருந்தார்.

அந்த முதியவர் வைத்தியராக இருப்பார் என்றும், மற்றவர்கள் உதவியாளர்களாக இருப்பார்கள் என்றும் அனுமானித்தான்.

அந்த பெரியவர், “இதுவரை அந்த பெண்ணிடம் எந்த முன்னேற்றமும் இல்லை. இளவரசியாரும் வேங்கை நாட்டில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அவர் நாடு திரும்பும் முன்பு, நாம் அந்த பெண்ணின் உடல் நிலையில் சிறு முன்னேற்றமேனும் கொண்டுவர வேண்டும். இளவரசி நம்மை நம்பி ஒப்படைத்த வேலையை சரியாக செய்தாக வேண்டும்” என்று மற்றவர்களிடம் கூறிக் கொண்டிருந்தார்.

“ஆம் குருவே! தங்களது கவலையை எங்களால் உணர முடிகிறது, நாமும் நம்மால் ஆன முயற்சியை செய்து கொண்டு தானே இருக்கிறோம். இன்று சிவன் மலை சித்தர் நிச்சயம் வந்துவிடுவார். அவர் மூலம் கண்டிப்பாக நமக்கு நற்பலன் கிடைக்கும்” என பதில் தந்தான் அவரின் உதவியாளர்களில் ஒருவன்.

அப்பொழுதுதான், ரூபனர் அவர்கள் அமர்ந்திருக்கும் கூடத்தின் பக்கவாட்டில், ஒரு கதவு இருப்பதை உணர்ந்தான். ‘ஒருவேளை முக்கியமான சிகிச்சை பெறுபவர்கள், இங்கே யாருக்கும் தெரியாமல் தனியாக வைத்தியம் பார்க்கப்படுகிறார்கள் போல’ என்று எண்ணியபடி திரும்பினான்.

அவனுக்கு பின்னால் காவி வேஷ்டி அணிந்து, வெற்றுடலில் காவி நிறத்திலான ஒரு ஆடையை குறுக்காக போட்டபடி, கழுத்திலும், மணிக்கட்டிலும், முழங்கையின் மேல் பகுதியிலும் ருத்திராட்ச மாலை அணிந்து, நீண்ட தாடியுடனும், தலையில் இருக்கும் முடியினில் உச்சிக் கொண்டையை அடுக்கடுக்காய் போட்டபடியும் ஒரு முதியவர் நின்றிருந்தார்.

அவருடைய தோற்றமே, இவர்தான் சற்று முன்பு வைத்தியர்கள் பேசிக்கொண்டிருந்த சித்தர் என்பதை ரூபனரால் கணிக்க முடிந்தது.

‘அனுமதி இல்லாத இடத்தினில் நுழைந்து விட்டோமே’ என ரூபனன் மனம் பதற, சித்தரோ அவனிடம் இன்முகமாக,

“உன் பணி இப்பொழுதுதான் தொடங்குகிறது. இனி நீ அனைத்திலும் வெற்றிவாகை சூடுவாய். உன் வீரம் மட்டும் மக்கள் தொண்டிற்கு போதாது, விவேகமும் முக்கியம் என்பதை மனதில் வைத்துக்கொள். அதை நீ கற்றுக்கொள்ள உனக்கு நல்ல துணைகள் அமையும்.

இப்பொழுது கடவுள், என்னை இங்கே அனுப்பியது கூட உன் தொண்டிற்காகத்தான். கவலைப் படாமல் செல், உன் கடினமான காலங்களில் உனக்கு துணை நிற்க நல்ல துணை அமையும். எத்தனை சோதனைகள் வந்தாலும், அதனை தாங்கும் மனவலிமையை கடவுள் உனக்கு அளிப்பார். எல்லாம் நல்லபடியாக முடியும். என் உதவியும் உரிய காலத்தில் உன்னை வந்தடைந்து, உன் துயர் முழுவதையும் துடைக்கும்” என்று சித்தர் ஆசி கூற,

ரூபனருக்கு ஆதியும் புரியவில்லை அந்தமும் புரியவில்லை. ஏதேனும் சாபம் தந்துவிடுவாரோ என்று பயந்தவனுக்கு, அவருடைய வாழ்த்துக்கள் மிகுந்த அதிர்ச்சியளிக்க, அவரிடம் ஆசி பெற்று விட்டு, வந்த வழியில் மடத்திற்கு திரும்பி நடக்கலானான்.

அவர் சொன்ன வார்த்தைகள் எல்லாம் அச்சரம் பிசகாமல் அவன் மனதினில் பதிந்திருந்தது. ஆனால், அதன் பொருள்தான் விளங்கவில்லை. “மக்கள் தொண்டு என்றால், நானே ஒரு தளபதி என் படையை நன்குதான் கவனித்துக் கொள்கிறேன். போரில் இயன்றவரை விவேகத்தோடு செயல்படுகிறேன். இன்னும் அவர் எதைக் கூறுகிறார்?” என்ற எண்ணமே வலம் வர, எப்பொழுது மடத்தை அடைந்தான் என்பதை அவனே அறியான்.

மடத்தினில் அவனுக்கான காலை உணவை வழங்கினார்கள். அந்த கேழ்வரகு அப்பங்களும், மலைக்கிழங்குகளும் மிகுந்த சுவையுடன் இருக்கவே தமது வயிறார உண்டான். மடத்திலிருந்து தமது உடைமைகளோடு புறப்பட்டவன், அங்கிருக்கும் பணியாளர்களுக்கு அவர்களின் சேவைக்காக செப்பு காசுகளை தந்துவிட்டு, மருத கோட்டையை நோக்கி புறப்பட்டான்.

மருத கோட்டையை அடைந்ததும், அங்கே மக்கள் அனைவரும் கோட்டையினுள் செல்வதற்காக, கோட்டை வாயிலில் இருந்தவனை வணங்கியபடி, தலைதாழ்த்தி தங்க சங்கிலியின் வழியே உள் நுழைவதைக் கண்டான். அந்த தங்க சங்கிலி, அங்கிருந்தவன் காலையும், கோட்டை வாயிலையும் இணைத்த வண்ணம் இருந்தது.

அங்கே இருந்தவனின் தோற்றமும், தோரணையும், கர்வமும் ஏனோ அவன்மீது நன்மதிப்பை உருவாக்கவில்லை. அங்கே வரிசையில் நின்றிருந்தவர்களிடம், “எதற்காக அவரை வணங்கி செல்கிறீர்கள்?” என தமது சந்தேகத்தைக் கேட்டான்.

மக்கள் இயலாமையுடன் மன்னரின் உத்திரவையும், அதனால் இவனுக்கு இருக்கும் தலைக்கணத்தையும் கூற, ரூபனரின் கோபத்தைத் தூண்ட அதுவே போதுமானதாக இருந்தது.

ரூபனரின் முறை வந்த பொழுது, அவன் நவிரனை வணங்காமல் நிமிர்வுடன் வாயிலில் நின்றான்.

“என்ன இங்கேயே நிற்கிறாய்? உள்ளே செல்லும் எண்ணம் இல்லையென்றால், வழியை விடு உனக்கு பின்னால் இருப்பவர்கள் செல்லட்டும்” என்று திமிர் நிறைந்த அலட்சியமான குரலில் நவிரன் கூறினான்.

“எனக்கு அழைப்பு விடுத்தது மருத சக்கரவர்த்தி வீரேந்திர மருதர். நான் குறிஞ்சி நகரத்தின் படைத்தளபதி ரூபன சத்ரியர். நான் நிச்சயம் உள்ளே செல்ல வேண்டும். ஆனால், உன்னை வணங்கி அல்ல” என்று மிகுந்த நிமிர்வுடன் ரூபனர் பதில் கூற,

அங்கே இருந்த மக்களில், ஒரு சிலருக்கு ரூபனரின் நிமிர்வு மன மகிழ்வைக் கொடுத்தாலும், ஒரு சிலருக்கு நவிரன் இந்த வீரனையும் எதுவும் செய்து விடுவானோ என்று ரூபனருக்காக மனம் வருந்தினர்.

அதற்குள் நவிரன் ரூபனரைப் பார்த்து ஏளனமாக சிரித்து, “நீ சாதாரண படைத்தளபதி தானே, மன்னரைக் காண வரும் சிற்றரசர்கள், குறுநில மன்னர்கள் கூட என்னை வணங்கிய பின்புதான் கோட்டையினுள் செல்ல முடியும். என்னுடைய வீரம் பற்றி தெரியாமல் விளையாடதே! இறுதியாக எச்சரிக்கிறேன், என்னை வணங்கி செல். இல்லையேல் வழியை விடு” என்று கர்ஜித்தான்.

அவனது சிம்ம கர்ஜனையில் மக்கள் அனைவரும் அரண்டு நிற்க, ரூபனரோ, சிறிதும் பதறாது அதே நிமிர்வுடன், “இரண்டும் இயலாத காரியம். வேறு ஏதேனும் சொல்” என்று மதியாத பார்வையை அவன் மீது செலுத்தியபடி கூற,

“எத்தனை திமிர்! அதுவும் இந்த நவிரனிடமே காட்டுகிறாயா? உன்னால் இவ்விரண்டும் முடியாதென்றால், என்னிடம் மல்யுத்தத்திற்கு வருவதனைத்தவிர வேறு வழியில்லை. கடந்த நான்கு வருடங்களில் என்னை எவனும் வென்றதில்லை. நீ உன் எண்ணம் போல கோட்டைக்குள் நுழையத்தான் போகிறாய் என்னிடம் மற்போர் புரிவதற்காக. ஆனால் பாவம் மன்னரைக் காணாமலே உன் உயிர் உன்னிடமிருந்து பிரியப் போகிறது” என்றான் கர்வமாக.

“நான் மன்னரைக் காண்பேனா இல்லையா என்பதனை நீ தீர்மானிக்கதே! உடனே போட்டிக்கான ஏற்பாடுகளை செய்” என்று நிதானமாகவும் அழுத்தமாகவும் ரூபனர் கூறினார்.

“எத்தனை திமிர்! இன்று உன் தலை உன்னிடம் இருக்கும் கடைசி நாள்” என்று கர்ஜித்தவன், கோட்டையின் உள்ளே உள்ள காவலர்கள் இருவரை அழைத்து, மற்போருக்கான ஏற்பாட்டினை தொடங்க சொல்லி ரூபனரை அவர்களோடு அனுப்பி வைத்தான்.

அதற்குள், அங்கிருந்த மக்கள் ஆர்வத்துடன் மற்போர் நடக்கும் திடலில் கூட, இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டு நாட்டு மக்கள் எல்லாம் வெள்ளமென திரள ஆரம்பித்தனர். ஏற்கனவே கோட்டையினுள் வசிக்கும் மக்களுக்கும் விஷயம் பரவ அவர்களும் கூடத் தொடங்கியிருந்தனர்.

மற்போர் நடக்கும் திடலை சுற்றிலும், மக்கள் திரண்டு இருக்க, நவிரனுக்கும் ரூபன சத்ரியருக்கும் போட்டி தொடங்கியது.

மக்கள் வெள்ளம் மேலும் மேலும் திரண்ட வண்ணம் இருக்க, நவிரனுக்கு ஈடு கொடுத்து சண்டை புரியும் ரூபனரின் வீரம் அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியது.

இதுவரையில் நவிரனுடன் போட்டிக்கு வந்தவர்கள் சில நிமிடங்கள் கூட தாக்கு பிடிக்காமல் இருக்க, ரூபனர் நவிரனுக்கு சரியான போட்டியாக இருந்தான். இதை நவிரனே எதிர்பார்க்கவில்லை.

அதற்குள்ளாக அரசவையில் இருந்தோரும் விஷயம் கேள்விப்பட்டு மற்போர் திடலுக்கு வந்திருந்தனர். ரூபனரின் வீரம் மன்னரை வியக்க வைத்தது. வாய் வழியே கேட்டறிந்த அவனுடைய வீரத்தை, கண்களால் முதன் முதலில் பார்த்தவருக்கு அவன் மீது பெரும் மதிப்பு உண்டானது.

ரூபனர் உடல் நிலை முழுவதும் தேறி இருந்தால், நவிரனை இந்நேரம் வென்று இருப்பான். ஆனாலும், சரிவர குணமாகாத உடல்நிலையிலும், துளியும் தொய்வடையாமல், நவிரனுக்கு இணையாக களத்தில் இருந்தான் அந்த மாவீரன்.

போட்டி மிகவும் கடுமையாக இருந்தது. நேரம் செல்ல செல்ல ரூபனரின் கை ஓங்கியது, நவிரனின் ஒவ்வொரு அணுவும் வலி பெறும்படி ரூபனர் அவனை துளைத்துக் கொண்டுருந்தான். நவிரன் வீழ்வது தெரிந்ததும் மக்கள் ஆரவாரம் அதிகரித்தது.

நம் நாட்டு வீரன் தோற்பதை மக்கள் அனைவரும் இத்தனை ஆரவாரம் செய்து கொண்டாடுகிறார்கள் என்றால், சக்கரவர்த்தி வீரேந்திரருக்கு எதுவோ உறுத்தியது. ஒரு அர்த்தமான பார்வையை அங்கிருந்த காவலன் ஒருவன் மீது செலுத்த, அடுத்த நிமிடம் அவருடைய கட்டளையை நிறைவேற்ற வேலை தொடங்கியிருந்தது.

நவிரனால் தாக்கு பிடிக்க முடியவில்லை. இருப்பினும் தாம் தோற்க போகும் ஆத்திரம் தாங்காமல், ரூபனரை கொல்லும் வெறி அவன் மனதில் அதிகரித்துக் கொண்டே செல்ல, அவன் மறைத்து வைத்திருந்த கூறிய வாளினைக் கொண்டு ரூபனரை தாக்கத் தொடங்கினான்.

மற்போர் என்பதே ஆயுதங்கள் இன்றி போரிடும் ஒரு கலை. அதில் அவன் ஆயுதம் எடுத்ததும் சுற்றியிருந்த அனைவரும் அவன் செயலில் கோபம் கொள்ள, நவிரனை போட்டியிலிருந்து வெளியேற்ற நடுவர் முயல, மன்னர் நடுவரைத் தடுத்துவிட்டார். மன்னருக்கு ரூபனரின் வீரத்தின்மேல் அத்தனை நம்பிக்கை இருந்தது.

கடந்த வாரம் சிகிச்சையில் இருந்த ரூபனர், இன்று சரிவர தேராத உடல்நிலையோடு இவ்வளவு கடினமான சண்டையிடுகிறான் என்றால்? அவனுடைய வீரம் எத்தகையது என்பதை மன்னரால் கணிக்க இயலாதா?. அந்த நம்பிக்கையில்தான் நடுவரைத் தடுத்தார்.

அவரின் நம்பிக்கையை பொய்யாக்காமல், கடும் சண்டைக்கு பிறகு, நவிரனுடைய வாளினைப் பறித்த ரூபனர், அவனையே வீழ்த்தி அவன் தலையையே கொய்தான்.

நவிரனின் தலையை கொய்ததும், மக்களின் ஆராவாரத்திற்கு அளவே இல்லை. அங்கே கூடி இருந்த மக்கள் பலருக்கும், குறிப்பாக கோட்டையினுள் ஜாகை அமைந்துள்ள மக்களுக்கு மற்றவர்களின் ஆராவாரத்திற்கான காரணம் புரியவில்லை.

நவிரன் இதுவரை கோட்டைக்கு வெளியேயே தமது கைங்கரியத்தை காட்டி இருந்தான். மன்னர் பார்வைக்கு துளியும் தமது தவறு வெளிப்பட்டு விடக்கூடாது என்பதில் மிகுந்த கவனமாய் இருந்திருந்தான்.

இத்தனை தினங்களும் நவிரன் மீது கொண்ட பயத்தினால், வெளியில் அவனது அநியாயங்களை மறைத்த மக்கள் இன்று அவன் வீழ்ந்ததும் தங்களது மன ஆற்றாமையையும், நவிரனின் கொடுமைகளையும், அவனால் தாங்கள் இழந்ததையும் பகிரத்தொடங்க, நவிரனின் தீமைகள் மக்களிடையே வெளிச்சத்திற்கு வந்தது.

சக்கரவர்த்தி வீரேந்திரர் அறிய வேண்டிய தகவலும் இதுவே! அவர் செவிகளுக்கும் இந்த தகவல்கள், அவர் அனுப்பிய காவலன் மூலம் வந்தடைந்தது.

அதற்குள்ளாக நவிரனின் தலையை கொய்த ரூபனரை மக்கள் அனைவரும் ஆரவாரம் செய்து கொண்டாடினர்.

ரூபனரின் வெற்றி மன்னருக்கு மிகுந்த பெருமையையும், மகிழ்வையும் கொடுத்தது. அவனுக்கான கௌரவத்தை மன்னர் அந்த நொடியே தீர்மானித்துவிட்டார்.

Advertisement