சத்ரிய வேந்தன் – 11 – கனா கண்டேன்
இன்றைய அதிகாலை சொப்பணம்
என் பிணி தீர்க்கும் மருந்தாய்…
உன்னை எதிர் நோக்கும் ஆவலாய்…
என் விழி தேடும் வரமாய்…
நிலவின் ஆக்கிரமிப்பு முடியப்போகும் பின்னிரவு நேரத்தினில், செவ்விதழ்கள் இளமுறுவல் புரிய, ஏதோ ஒரு இனிய சொப்பணத்தில் தன்னையே மறந்து லயித்திருந்தாள் தோகையினி.
அவள் மெய் மறந்து உறங்கி, பல நாட்கள் ஆனது. இன்று அவளுடைய மெய் மட்டுமின்றி, உலகத்தையும் மறந்த உறக்க நிலையை அடைந்திருந்தாள். அவளுடைய கனவுகளின் நாயகன் என்றும் போல இன்றும் அவள் கனவினை முழுவதுமாக ஆக்கிரமித்து இருந்தான்.
தோகையினிக்கு நாள்தோறும் தோன்றும் கனவுகள், அவளுள் ஒருவித இயலாமையை தோற்றுவிக்கும், மனதின் பாரத்தை அதிகப்படுத்தும். ஏக்கங்கள் நிறைந்த கனவுகளையே கண்டு வந்தவளுக்கு, முதன்முறையாக இனிய சொப்பணங்கள் வந்தது. தன் மணவாளனின் மடி சேர்ந்தது போன்ற கனவு, அவனின் மார்பில் சாய்ந்து நிம்மதியாக உறங்குவது போன்ற கனவு. உண்மை போலவே இருந்த அந்த மாய சொப்பணத்தினால், நிஜத்திலும் ஆழ்ந்த உறக்கத்தை தழுவியிருந்தாள்.
என்றும் இல்லாத வண்ணம் இன்று சிறு பொலிவோடு தமது கயல் விழிகளைப் பிரித்து விடியலை வரவேற்றாள். நன்கு உறக்கம் கொண்டதினால் வந்த பொலிவோ, இல்லை மனதில் இருந்த ஒரு வித பாரம் இறங்கியதைப் போன்ற உணர்வில் வந்த பொலிவோ, மொத்தத்தில் பல தினங்கள் கழித்து, அவள் முகம் வழக்கத்தை விட அதிகமாக பிரகாசித்தது. அதே பொலிவோடும், மனதோரம் இளமுறுவலோடும் அன்றைய நாளினை இனிதே தொடங்கியவள், காலையிலேயே வெண்ணிற அல்லி மலர்களுக்கு ஊதா வண்ணத்தைப் பூச தொடங்கினாள்.
என்றும் இல்லாத வண்ணம் இன்று அதிகாலையிலேயே இந்த பணியை தொடங்கியிருந்தாள்.
தோகையினியின் அழகிய கைகள் அதன் வேலையில் மூழ்கியிருக்க, அவளுடைய மனமோ அவள் காதல் கொண்ட தருணத்தை தேடி அலைந்து கொண்டிருந்தது. அவளுக்கே அது மாயவித்தைதான்.
‘தீட்சணயர் வில்வித்தையில் வென்றபொழுது, சுற்றி இருந்தவர்கள் அத்தனை ஆராவாரம் செய்த போதிலும், மிகுந்த தன்னடக்கத்தோடு அவர் இருந்தது, அவர் மீது நன்மதிப்பையும், ஈர்ப்பையும் ஏற்படுத்தியது என்னவோ உண்மைதான். ஆனால், விழா மேடையில் இருந்து அத்தனை தொலைவினில் பார்த்தவரின் முகம் ஆழப் பதிந்திருப்பதை உணர்ந்த தருணம் (அதாவது அவருடன் நடந்து வந்த பொழுது, அவருடைய மாறுவேடத்திலும் அவரை சரியாக கணித்த தருணம்), இன்றும் மெய் சிலிர்க்கிறது.
அவருடன் தாமரைக் குளத்திலிருந்து நடந்து வரும்பொழுது, அவரையே குறை கூறிய வண்ணம் வந்திருக்கிறேன், இருப்பினும் அவர் எதுவுமே கூறவில்லை. இன்னும் சொல்லப்போனால் எனது கருத்தினை ஆமோதிப்பதைப் போன்று அவரும் கருத்தினை தெரிவித்தார்.
ஆனால், அவரை சரியாக எவ்வாறு நான் கணித்தேன்? இதற்கும் அவர் அத்தனை சிறப்பாக மாறுவேடம் தறித்திருந்த போதிலும், அந்த முதியவர் வேடத்தில் இருப்பது அவர்தான் என்பதை எப்படி என்னால் சரியாக கணிக்க முடிந்தது? அப்படி என்றால், அவர் எப்பொழுது என் மனதில் ஆழப்பதிந்தார்?’ வழக்கம் போல இன்றும் விடையறியா கேள்வியாய் நின்றது அவளுடைய மனதில்.
முன்தின சொப்பணத்தினால் ஏற்பட்ட முகப்பொலிவும், தனது மனதினில் யாதுமாகி நின்றவனின் எண்ணங்களால் வந்த முகச்சிவப்பும் ஒரு சேர தம்மை மறந்து லயித்திருந்தவளைக் கண்ட பொழுது, அங்கிருந்த பணிப்பெண்களுக்கு பெரும் வியப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது.
** வேங்கை நாட்டிலுள்ள கோயில் மடத்தினில், மருத தேசத்து இளவரசர் தீட்சண்யரும், அவருடைய இளைய சகோதரி சமுத்திர தேவிகையும் அவர்களுடன் வேங்கை நாட்டிற்கு வந்த நெசவாளர்களோடு இளைப்பாறிக் கொண்டிருந்தனர். அன்றைய பொழுது விடிந்ததும், அவர்கள் அனைவரும் கிளம்பி வேங்கை நாட்டு அரண்மனைக்கு செல்ல எண்ணியிருந்தனர்.
அனைவரும் பயணக் களைப்பினால் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க, தீட்சண்யர் மனம் முழுவதும் தோகையினியையே வலம் வந்தது. அவளைக் காணப் போகும் தருணம் ஒருபுறம் மகிழ்வைக் கொடுக்க, இத்தனை தினங்களும் நாட்டுப் பிரச்சனையில் அவளைக் காணாமல் விட்டது பிழையோ என மறுபுறம் வருத்தம் மேலோங்கியது.
‘எப்பொழுது விடியும்? எப்பொழுது அவளின் மதிமுகம் காணலாம்’ என்று விடியலுக்காக காத்திருந்து உறக்கமின்றி தவித்தார். அவரை அதிகம் சோதிக்காமல், ஆதவன் தமது வேலையை செவ்வனே செய்தது. அதற்காகவே காத்திருந்தாற் போல, விடிந்ததும் துரிதமாக அரண்மனைக்கு தயாரானார்.
அவரது அவசரத்தைப் பார்த்த சமுத்திராவிற்கு சிரிப்பு கட்டுக்குள் அடங்க மறுத்தது. இருப்பினும், இது பொது இடம் என்பதாலும், காலையிலேயே தமையனை கேலி செய்ய வேண்டாம் என்ற எண்ணத்தாலும், அமைதியாகவே அரண்மனைக்கு கிளம்பினாள்.
வேங்கை நாட்டு அரண்மனையை நெசவாளர்கள் அடைந்ததும், ஏற்கனவே இளவரசர் சேயோன் வாயிற் காவலர்களுக்கு நியமித்த கட்டளையின்படி, நெசவாளர்கள் அனைவரையும் சேயோனிடம் அழைத்து சென்றனர் அங்கிருந்த காவலர்கள்.
இளவரசர் சேயோன், அனைவரையும் இன்முகமாகவே வரவேற்றார். அவர்கள் கொண்டு வந்த ஆடைகளை, அரண்மனையில் பணிபுரிவோரிடம் சொல்லி தோகையினியின் அறைக்கு அனுப்பி வைத்தார்.
“யாரேனும், இருவரோ மூவரோ மட்டும் உடன் வாருங்கள். மற்றவர்கள் அனைவரும் இந்த காவலாளிகளுடன் விருந்துண்ண செல்லுங்கள்” என்று சேயோன் நெசவாளர்களை நோக்கி கூற, சமுத்திராவும், தீட்சண்யரும் சேயோனுடன் வருவதாக முன்னே வர, மற்றவர்களிடம் விருந்துண்ண செல்லுமாறு சேயோன் அனுப்பி வைத்தார்.
எவர் கண்களுக்கும் புலப்படாத வண்ணம், இளமுறுவல் புரிந்த சேயோன், அவர்கள் இருவருடனும் தோகையினியின் அறைக்கு சென்றார்.
தீட்சண்யர் மிக பொருத்தமாக மாறுவேடம் தரித்திருந்தார். ஆகையால் முதலில் நெசவாளர்கள் கூட்டத்தை சந்தித்த பொழுது சேயோனால், தீட்சண்யரைக் கணிக்க முடியவில்லை. அதற்கு முக்கிய காரணம் அவர் கவனம் முழுவதும் வந்திருந்த பெண்களில் சமுத்திர தேவிகையை அலசியதுதான்.
ஆயிரம் கரங்கள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறையாதில்லையா? சமுத்திரையின் அழகும் அது போன்றதே! இயன்றவரை சிறப்பாக மாறுவேடம் தரித்திருந்த பொழுதிலும், அந்த வானத்து நிலவை விட பல மடங்கு பிரகாசிக்கும் பெண்ணவளை இனம் காண முடியவில்லை என்றால் சேயோன் அரச வம்சத்தினரே இல்லையே!
சமுத்திரையின் முகப் பொலிவின் காரணத்தினாலேயே, வரும் வழி நெடுகிலும் தீட்சண்யரின் ஆலோசனைப்படி அனைத்து பெண்களும் முக்காடிட்டு வந்தனர். ஆனால், அரண்மனைக்குள் அவ்வாறு பிரவேசிப்பது நாகரிகமாக இருக்காதே? ஆகையால்தான் சாதாரணமாக வந்தார்கள். இருப்பினும் சமுத்திரையை பெண்கள் கூட்டத்தின் மத்தியில், முதல் பார்வையில் புலப்படாதபடியே தீட்சண்யர் அழைத்து வந்தார்.
சேயோன் அனைவரையும் இன்முகமாக வரவேற்ற பொழுதிலும், வந்தவர்கள் அனைவரின் மீதும் பார்வையை படர விட்டது தீட்சண்யருக்கு சற்றே பதற்றத்தை ஏற்படுத்தியது. சேயோனும் தீட்சணயரும் ஏற்கனவே நன்கு அறிந்தவர்கள். சற்று கூர்ந்து கவனித்தால் சேயோன் தீட்சண்யரை இனம் காண முடியும் என்பதே அவரது பதற்றத்திற்கு முக்கிய காரணம். ஆனால், சேயோன் ஒருமுறை அனைவரையும் பார்வையில் அலசிவிட்டு, எந்த முக மாறுதலையும் காட்டாமல், மிக சாதாரணமாக யாரேனும் இருவரை வர சொல்லியதும், சற்றே நிம்மதி அடைந்து தங்கையுடன் முன்வந்தார்.
சேயோன் மற்றவர்களை அனுப்பிவிட்டு இவர்களோடு நடந்த பொழுது, அவருக்கு விஷயம் புரிப்பட்டிருந்தது. முதல் பார்வையிலே சமுத்திராவை இனம் கண்ட பொழுதும் அதனை வெளிப்படுத்தவில்லை. சமுத்திரா தனியாக வந்திருக்க மாட்டாள், உடன் யாரேனும் தளபதியோ, மந்திரியோ வந்திருக்கக் கூடும் என்று எதிர்பார்த்தே யாரேனும் இருவரை வரச்சொன்னது. ஆனால் சமுத்திரையுடன் தீட்சண்யர் முன்வந்த பொழுது அவருக்கு அனைத்தும் புரிந்துவிட்டது.
சேயோன், அவர்கள் இருவரையும் விட வயதில் மூத்தவர். அவர் பார்க்க வளர்ந்தவர்களை அவரால் எப்படி கணிக்க இயலாமல் போகும்? அரச அலுவல் காரணமாக சந்திர நாட்டில் இரண்டு வருடங்களாக இருந்த தீட்சண்யர், அந்த அலுவல் முடியும் முன்னர் இங்கே வந்திருக்கிறார் என்றால், சேயோனால் காரணத்தை கணிக்க இயலாதா? தமது தங்கையின் கவலையை தீர்க்கப் போகும் அருமருந்தை கண்டுபிடித்தவர் உள்ளம், வார்த்தையில் வடிக்க முடியாத அளவு உவகையில் திளைத்தது.
மூவரும் தோகையினியின் அறையினை அடைந்த பொழுது, அவள் எதற்காக இந்த புத்தாடைகள் எல்லாம் வந்திருக்கிறது என்று புரியாமல், விழி விரிய நின்றிருந்தாள்.
உள்ளே முதலில் நுழைந்த சேயோன் அங்கிருந்த பணிப்பெண்களை வெளியேறும்படி சைகை செய்தார். அவர்கள் வெளியேறவும் மிகுந்த தயக்கத்தோடு தீட்சண்யரும், சமுத்திராவும் உள்ளே நுழையவும் சரியாக இருந்தது.
தீட்சண்யர் அறையினுள் நுழைந்ததும் அவருக்கு சுற்றம் மறந்து போனது. தனது எழில் தேவதையின் வாடிய தோற்றம் அவரை நிலைகுலைய செய்தது. இரண்டு வருடங்களுக்கு முன்னர், உலகின் உள்ள எழிலை எல்லாம் கொட்டி செதுக்கிய சிலைபோல இருந்தவள், இன்று வாடிய கொடி போன்று மெலிந்து, சோர்ந்து, கண்களில் ஜீவன் இழந்து இருந்தவளை காண அவரது இதயத்தில் உதிரம் வழிந்தது.
‘உன்னை இந்த கோலத்தில் காணவா இரண்டு வருடங்கள் காத்திருந்தேன். என் தங்கை கண்ணீர் சிந்தியதைக் கூட காண சகியாமல் தவித்திருந்தேனே? உன்னை இந்த கோலத்தில் பார்த்த உன் சகோதரர்கள் சேயோனும், அருளோனும் என்ன பாடு பட்டார்களோ?’ என்று அவன் மனம் பெரிதும் வருந்தியது.
தோகையினியும் அறையினுள் பிரவேசித்தவர்களைத்தான் பார்த்தாள். தீட்சண்யரைக் கண்டதும் அவளால் பார்வையை விலக்க முடியவில்லை. என்ன மாறுவேடம் தரித்தால் என்ன? காதல் கொண்ட மனம் ஒற்றை பார்வையில் அவரை இனம் கண்டுவிடுமே. இரண்டு வருடங்கள் முன்பு கண்டதை விடவும், இன்னும் சற்று மெருகேரிய தோற்றம், அதே நேர் கொண்ட பார்வை, கம்பீரமான தோற்றம், புதிதாக முகத்தினில் இருந்த சிறு தழும்புகள் கடந்த இரண்டு ஆண்டுகளின் அவரது கடுமையான காலத்தை நினைவுபடுத்தியது. ஆனால், தம்மையே ஆழ்ந்து நோக்கும் தன்னவனுடைய விழிகளில் தெரிந்த வலியில், தன் உயிரே உருகுவதைப் போல உணர்ந்தாள்.
‘என்னவாயிற்று எதற்கு இத்தனை சோகமும், வலிநிறைந்த பாவனையும்? இரண்டு ஆண்டுகள் கழித்து பார்த்ததால் எனக்கு மகிழ்ச்சியே தோன்றுகிறதே! அவருக்கு ஏன் அவ்வாறு இல்லை?’ என மனதிற்குள் மருகினாள். இருவரும் தத்தம் உலகினில் மூழ்கி இருந்ததால் மற்றவர்களை மறந்தனர்.
சமுத்திரைக்கும் தோகையினியின் தோற்றம் அதிர்வே. ‘ஏன் இவ்வாறு? என்னவாயிற்று?’ என அவளுடைய மனம் பரிதவித்தது. அதோடு அவர்கள் இருவரின் பார்வை பரிமாற்றம் வேறு அவர்களின் ஏக்கத்தை தெளிவுற பறைசாற்ற என்ன செய்வதென தெரியாமல் கைகளை பிசைந்தபடி நின்றிருந்தாள். அவளும் அங்கே அவர்களை அழைத்து வந்த இளவரசர் சேயோனை மறந்தாள் என்றே கூறலாம்.
நடப்பதை அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்த சேயோனுக்கும் காதலர்கள் இருவரின் நிலை மிகுந்த மனக்கலக்கத்தைக் கொடுத்தது. என்றையும் விட இன்று தோகையினியின் பிரகாசமான தோற்றமே அவளின் காதலின் ஆழத்தை தெளிவுற உணர்த்துகிறதே! என்றுமே இல்லாமல் இன்று இத்தனை பொலிவுடன் இருக்கின்றாள் என்றால், அவள் மனம் எவ்வளவு சரியாக தீட்சண்யரின் வரவை கணித்திருக்கும்? அவர்கள் இருவரும் இப்பொழுது இருக்கும் தோற்றமே அவர்கள் பிரிவின் வலியை கல்லுக்கும் உணர்த்திவிடுமே!
ஒரு தமையனாய் தங்கையின் துயரை இரண்டு ஆண்டுகள் பார்த்தவராயிற்றே! மற்ற மூவரும் தத்தம் சூழலில் மூழ்கியிருக்க, இப்பொழுது தோகையினிக்கும், தீட்சண்யருக்கும் தனிமை தேவை என்பதை உணர்ந்த சேயோன், சமுத்திரையின் கைகளைப் பற்ற, தன்னுணர்வு பெற்ற சமுத்திரை, யோசனையாக சேயோனைப் பார்த்தாள்.
‘எதுவும் பேசாதே!’ என சைகை செய்தபடி அவ்வறையில் இருந்து வெளியே அழைத்து வந்தார். சமுத்திரையும் அவர்களுக்கு தனிமை தரவெண்ணி சேயோனுடன் வெளியேறினாள். அந்த நிமிடமே, சேயோன் அனைத்தையும் அறிந்து வைத்துள்ளார் என்பதனை கணித்துவிட்டாள்.
வெளி வராண்டாவிற்கு அழைத்து வந்த சேயோன், “என்ன சமுத்திரா நலமாக இருக்கிறாயா?” என்று நேரடியாக கேட்டதும், தமது கயல் விழிகள் படபடக்க இளவரசரை ஏறிட்டாள்.
லேசான இளமுறுவலுடன் நின்றவரைக் கண்டதும், “இளவரசரே எப்படி கணித்தீர்கள்?” தயக்கமேயின்றி ஆர்வம் மேலோங்க கேட்டாள்.
“என்ன சமுத்திரா நான் பார்த்து வளர்ந்த குழந்தைகள் நீங்கள். உங்களை கணிக்க இயலாவிட்டால் எப்படி?”
“இப்படி எல்லோருமே அதிக புத்தி கூர்மையுடன் இருந்தால், எனது அறிவு குறைவாக தோன்றுகிறதே இளவரசே!” வேண்டும் என்றே பாவம் போல முகத்தை வைத்தபடி கூறினாள்.
அவளுடைய தோரணையில் சட்டென சிரித்தவர், “நீ எவ்வளவு வளர்ந்தும் உன் குறும்பும், விளையாட்டு குணமும் மாறவேயில்லை சமுத்திரா. அதோடு உனது புத்திகூர்மையைப் பற்றி நாங்கள் எல்லோரும் தெளிவாக அறிவோம். உனது தன்னடக்கம் கூட அழகுதான் சமுத்திரா. உனக்கு எந்த குறையும் இன்றி பல்லாண்டு வாழ வேண்டும் அம்மா” என மனதார வாழ்த்தினார்.
“மிக்க நன்றி இளவரசரே. ஆமாம் தோகையினிக்கு என்னவாயிற்று? ஏன் இப்படி பொலிவிழந்து இருக்கிறார்? அவரது உடல் நலமில்லையா?” என தம் மனதிலிருந்த வினாக்களை வரிசையாக கேட்களானாள்.
“பொறுமையாக கேள் சமுத்திரா. எல்லாவற்றிற்கும் பதில் கூறுகிறேன்” என்றவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவளுடைய தவிப்பையும், இப்பொழுது தீட்சண்யரைக் கண்டதும் ஏற்பட்ட மாறுதல்களையும் கூறினார். தொடர்ந்து இருவரும், அவர்கள் இருவரைப் பற்றி பேசிக் கொண்டிருந்தனர்.
** தோகையினியின் அறையினில் எத்தனை நேரம் இருவரும் பார்வையால் பேசிக் கொண்டிருந்தனர் என்பது தெரியாது. முதலில் தன்னுணர்வு பெற்றது தீட்சண்யர்தான். தன்னிலை உணர்ந்ததும் சுற்றிலும் பார்வையால் அலசினார், யாரையும் காணவில்லை. அந்த நேரத்தில் அதற்கான காரணத்தை ஆராய்வதைவிட, தன்னவளுடன் பேச இந்த தனிமை அவசியம் என்று தோன்றியதால், தோகையினியின் அருகினில் சென்றார்.
தன்னைக் கண்டது முதல் முகத்தில் பொலிவோடும், கண்களில் மகிழ்வோடும் இமைக்கக்கூட மறந்து தம்மையே ரசித்திருந்தவள் மீது காதல் பொங்கியது. அருகினில் வந்தவர், “தோகையினி…” என வார்த்தையில் காதலை தேக்கி அழைத்தார்.
சிலை ஒன்று உயிர் பெற்றதுபோல சிலிர்த்தெழுந்தவள், தீட்சண்யரை பார்வையால் ஒரு முறை வருடி, பின்னர் தமது கைகளால் உணர்ந்து, அவர் மார்பில் முகம் புதைத்து, அழுகையில் கரைந்து, “இது கனவில்லையே…” என உயிர் உருகும் குரலில் கேட்டாள்.
அதைக் கேட்டவனின் மனமும் உறுகியது. “இல்லை தோகையினி. இது கனவில்லை. இதோ உன் முன்னால்தான் நானிருக்கிறேன். இது என்ன கோலம் தேவி? உன்னை இப்படி காணவா இரண்டு வருடங்கள் காத்திருந்தேன்.”
“காத்திருந்தால் மட்டும் போதுமா?” விசும்பலுடன் கேட்டவளைக் கண்டு புரியாமல் விழித்தார்.
“அப்படியென்றால்? எனக்கு புரியவில்லை?”
“இங்கே என்னை உங்கள் நினைவில் தவிக்க விட்டுவிட்டு, என் நினைவே இல்லாமல் இரண்டு வருடங்கள் எப்படி தங்களால் இருக்க முடிந்தது? என்னால் ஒரு நொடி கூட உங்கள் நினைவின்றி இருக்க முடியவில்லை. எங்கும் எதிலும் நீங்களே பிரதானமாக தெரிகிறீர்கள். என்னால் உங்கள் பிரிவை கணப்பொழுதும் தாங்க இயலவில்லை தெரியுமா?” என விசும்பலின் இடையினில் கூறினாள்.
“தோகையினி…” சற்றே அதட்டலுடன் தீட்சண்யர் அழைத்ததும், அவர் மார்பிலிருந்து விலகி விழி விரிய அவரைப் பார்த்தாள். கண்ணீர் கூட அவளை அறியாமல் அந்த ஆளுமையான குரலில், பயத்தில் நின்றிருந்தது.
“நீ வேங்கை நாட்டின் இளவரசி. ஒரு சக்கரவர்த்தியின் மகள். அப்படி இருக்க அரச அலுவல் எவ்வாறு இருக்கும் என்று நான் சொல்லி நீ தெரிந்து கொள்ள வேண்டியதில்லை. உனக்கு எந்த இடத்தில் நம்பிக்கை தர தவறி விட்டேன்? உன்னிடம் எனது மனதை தெளிவாக உரைத்துவிட்டு தானே சந்திர நாட்டிற்கு பயணம் மேற்கொண்டேன். நான் இன்னும் தெளிவுற உணர்த்தும் முன்னர், நீ தானே பதற்றம் கொண்டு என்னை பேச விடவில்லை.
உன் பதற்றத்திலும், பயத்திலும் உன் மனதை தெளிவுற நான் உணர்ந்தேனே! நீ எந்த நொடியில் என்னை கணிக்கத் தவறினாய்? இப்பொழுதே இப்படி வாடினால், நமது திருமணத்திற்கு பிறகு போர் புரிய உன்னை விட்டு சென்றால், உன் நிலை என்ன? நாட்டின் அரசியாக உன் பொறுப்பை எப்படி ஏற்று நடத்துவாய்?
ஏன் உன் தமையன் அருளோன் கூட போர் புரிய சென்று எத்தனை மாதங்கள் ஆயிற்று? எனக்காக நம்பிக்கையுடன் காத்திருக்காமல் இப்படி வாடிக் கொண்டிருக்கிறாயே” தமது அதிருப்த்தியை வார்த்தையில் வெளிப்படுத்தினார்.
தம் தவறை உணர்ந்தவள், மிகவும் மனம் வருந்தினாள். அதிலும் தீட்சண்யரின் கோபமும், அதிருப்தியும் அவளை மிகவும் வாட்டியது.
“இல்லை இல்லை தங்களை நம்பாமல் நான் இவ்வாறு வருத்தம் கொள்ளவில்லை. தங்களை இனி எப்பொழுது காண்போமா என்கிற வருத்தம்தான். அதிலும் திருமண வயது நெருங்கியிருந்ததால், தாயார் சுயம்வரம் பற்றி பேசவும் மேலும் பயம் வந்துவிட்டது. திருமணத்திற்கு பிறகு இவ்வாறெல்லாம் செய்ய மாட்டேன்.
நீங்கள் கவலை கொள்ளாதீர்கள். அப்பொழுது உங்கள் மனைவி என்ற உரிமையுடன் உங்களுக்காக நான் காத்திருப்பேன். அப்பொழுது இப்படி சிறுபிள்ளைத் தனமாக செய்து கொண்டிருக்கமாட்டேன் என்னை நம்புங்கள்” என்று வேகமாக கூறினாள்.
அவளுடைய தோரணத்திலும், பேச்சிலும் கோபம் மறந்து இலகுதன்மை அடைந்த தீட்சண்யர், மெல்ல அவள் அருகினில் வந்து அவளுடைய கலைந்த கேசத்தை காதின் பின்னால் தள்ளி, “சிறு பிள்ளைத்தனம் என்று சொல்ல முடியாது. என் மீது நீ கொண்ட நேசம் புரிகிறது. ஆனால், நீ இப்படி உன்னை வருத்தியா நிலைமையை சமாளிப்பாய்?
உன் குடும்பத்தினர் உன்னை எண்ணி எவ்வளவு வருந்தியிருப்பர். உன் சுயம்வரம் பற்றி பேச்சினை தொடங்கும் பொழுதே, என்னைப் பற்றி கூறி இருக்க வேண்டாமா? அது உனக்கு சிரமமாக இருந்தாலும் நீ சமுத்திராவிற்கு விஷயத்தை தெரிவித்திருந்தால் இத்தனை துயரம் வேண்டாமே!
எளிதில் முடியக்கூடிய விஷயத்திற்காக, நீ உன்னையும் வருத்தி, உன் குடும்பத்தையும் வருத்தி என்ன தோகையினி இது? பார் நாம் சொல்லி தெரிய வேண்டிய விஷயத்தை இப்பொழுது அவர்களாக அறிந்து கொள்ளும்படி செய்து விட்டாய். இந்நேரம் இளவரசர் சேயோனுக்கும், எமது தந்தைக்கும் நம் விஷயம் தெரிந்திருக்கும்.
சரி விடு நீ வருந்தாதே! எல்லாம் நன்மைக்கே என்று வைத்துக் கொள்வோம். இன்னும் சில மாதங்கள் பொறுத்திரு. சந்திர நாட்டின் பிரச்சனைகள் முடிவுக்கு வரும் தருவாயில் இருக்கிறது அதனை முடித்துவிட்டு விரைந்து வந்து உன் கரம் பிடிக்கிறேன். நான் உன்னை மீண்டும் காணும் பொழுது நீ பழைய தோற்றத்தில் இருக்க வேண்டும் சரிதானே?” என்று கூறியவரைக் கண்டு சம்மதமென தலையசைத்தாள்.
“நாங்கள் உள்ளே வரலாமா?” சமுத்திரையின் குரலில் இருவரும் விலகி நின்றனர்.
இளவரசர் சேயோனைக் கண்டதும், தீட்சண்யருக்கு மிகுந்த சங்கடமாயிற்று. அதிலும் அவருடைய கேலிப்பார்வையை கண் கொண்டு காண இயலாமல் தவித்தார். பிறகு சேயோனே தீட்சண்யரின் நிலை உணர்ந்து அவர்களை நெருங்கி வந்து தீட்சண்யரை அணைக்க,
“மன்னித்து விடுங்கள் இளவரசே!” என்று வருத்தம் மேலோங்க தீட்சண்யர் கூறினார்.
“இதில் உம் தவறு எதுவுமில்லை தீட்சண்யா. நீ வருந்த வேண்டாம். என் தங்கையின் புன்னகையை மீட்டெடுத்ததற்கு உனக்கு நான்தான் நன்றி கூற வேண்டும்” என்றார்.
“அதனை தொலைய செய்ததும் நான்தானே இளவரசே!” என குற்ற உணர்ச்சியோடு தீட்சண்யர் கூறினார்.
“அதெல்லாம் ஒன்றும் இல்லை தீட்சண்யா. சரி இப்பொழுதுதான் உன் தந்தையிடமிருந்து ஓலை வந்தது என்னவென்று பார்” எனவும் சமுத்திரா ஓலையை தீட்சண்யரிடம் கொடுத்தாள்.
ஓலையில், “உமது அலுவல் முடிந்ததும் சந்திர நாட்டிற்கு புறப்படவும். சமுத்திரையை சேயோன் அழைத்து வந்து நமது தேசத்தில் விட்டுவிடுவார்” என்றிருந்தது.
பிறகு அனைவரிடமும் விஷயத்தை கூறிவிட்டு சந்திர நாட்டினை நோக்கி தமது பயணத்தை தொடர்ந்தார். ஒவ்வொரு நாட்டின் எல்லை வரையிலும் அந்தந்த நாட்டு படைவீரர்கள் சிலர், மருத சக்கரவர்த்தி வீரேந்திரர் ஏற்பாட்டின்படி தீட்சண்யருடன் பயணித்தனர்.