Advertisement

சத்ரிய வேந்தன் – 30 – ரூபனர் வருகை

என் விழி அரும்புகளை

முழுவதுமாய் மலரச் செய்கிறது

உன் திருமுகம்

மலர்ந்த விழிகளை

மீண்டும் அரும்பச் செய்கிறது

உன் பார்வை

மருத தேசத்து இளவரசர் தீட்சண்ய மருதருக்கும், வேங்கை நாட்டின் இளவரசி தோகையினிக்கும் திருமண ஏற்பாடுகள் அதிவேகமாக நடந்து வந்தது. திருமண ஏற்பாடுகளை மேற்பார்வையிட்ட மருத சக்ரவர்த்தி வீரேந்திர மருதருக்கு முழு திருப்தியாக இருந்தது.

வீரேந்திர மருதர் தீட்சண்யருடனும், முதன் மந்திரியாருடனும் திருமண ஏற்பாடுகளை மேற்பார்வையிட்டார். முதன் மந்திரியார்தான் அனைத்து ஏற்பாடுகளுக்கும் தலைமை வகித்திருந்தார்.

“முதன் மந்திரியாரே, அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக வந்திருக்கிறது. இத்தனை பணிகளையும் ஒருங்கிணைத்து சிறப்பான ஏற்பாடுகளை செய்திருக்கிறீர்கள்” என வீரேந்திர மருதர் தமது பாராட்டை தெரிவித்தார்.

“இதில் பெரும் பங்கு ரூபனருடயதுதான் வேந்தே. அனைத்து பணிகளுக்கும் சிறப்பான குழுக்களை தேர்வு செய்து அனுப்பியிருந்தார். அதில் மாற்று கருத்தே வேண்டாம் என்பது போன்று அவருடைய தேர்வு இருந்தது.

ரூபனர் இங்கு இல்லை என்பது போலவே இல்லை. சந்திர நாட்டில் இருந்த வண்ணம் இத்தனையும் செய்திருக்கிறார். உண்மையில் மிகவும் திறமை வாய்ந்தவர். உங்கள் தேர்வில் குறை இருக்குமா அரசே?” என்றார் பெருமிதத்துடன்.

“மிக்க மகிழ்ச்சி மந்திரியாரே. ரூபனரின் உதவி இதில் இருப்பதை அறிவேன். ஆனால், இப்பொழுதுதான் பெரும் பொறுப்பை ஏற்றிருக்கிறார் என்று தெரிந்து கொண்டேன். சரி விருந்தினர்களுக்கு ஒரு குறையும் இருக்கக்கூடாது. உடன் இருந்து கவனித்துக் கொள்ளுங்கள்” என்று கூறிவிட்டு மேலும் சில வேலைகளை நினைவு படுத்திவிட்டு தீட்சண்யருடன் அரண்மனை நோக்கி சென்றார்.

“என்ன தீட்சண்யா ரூபனர் எப்பொழுது வருவதாய் கூறினான்?”

“கண்டிப்பாக இரண்டு தினங்கள் முன்பு வருவதாய் கூறியிருந்தான் தந்தையே. அவனுக்கு அங்கு அலுவல்கள் அதிகமாக இருக்கிறது.”

“ஆமாம் நானும் அறிவேன். அத்தனை வேலைகளுக்கு மத்தியில் உனக்காகவும் நேரம் ஒதுக்கி இத்தனை ஏற்பாடுகளை செய்திருக்கிறானே? உண்மையில் மிகவும் பொறுப்பானவன்.”

“ஆம் தந்தையே. அதுவும் அவன் இரவு பகலாக வேலை செய்கிறான். சந்திர நாட்டு மக்களுக்கு கார்முகிலனின் கூட்டத்தினரால் எந்த துயரமும் வந்து விடக்கூடாது என ஓயாது உழைக்கின்றான். ஆனாலும் இந்த கார்முகிலன் கூட்டத்தினர், எப்படியாவது தங்கள் திட்டங்களை நிறைவேற்றிக் கொள்கிறார்கள்.

அத்தனை பணிகளிலும் நமக்காகவும் நேரம் ஒதுக்கும் அவனை எண்ணினாலே மிகவும் பெருமையாக உணர்கிறேன் தந்தையே. அவன் நட்பினை எண்ணி மிகவும் மகிழ்கிறேன்” என்றவரின் குரலிலும், முகத்திலும் அத்தனை மகிழ்ச்சி.

“விரைவில் அனைத்தும் நல்ல படியாக முடியும் தீட்சண்யா. சந்திர நாடு கூடிய விரைவில் நல்ல நிலைமையை எட்டும் என்பதில் எனக்கு துளியும் சந்தேகமில்லை.”

“உங்கள் தேர்வும், கணிப்பும் என்றும் பொய் ஆகாது தந்தையே. ஆனால், அவனுக்கு அதிக பொறுப்புகளை தந்துவிட்டோமோ என வருந்தாத நாட்களே இல்லை.

திடீரென்று ஒரு நாட்டினையே கட்டி காப்பாற்ற வேண்டும் என்று கூறுவதை செயல்படுத்துவதே சிரமம்தான். அதிலும் இது போன்ற பல சிக்கல்கள், சதிகள் நிறைந்துள்ள நாட்டின் பொறுப்பினைக் கொடுத்தால், அதன் சிரமத்தைக் கூறவும் வேண்டுமோ?

ஆனால் ரூபனர் இதுவரை சிறிதாய் கூட முக சுணக்கம் காட்டியதில்லை. நாள் முழுவதும் ஓயாது உழைக்கின்றான். அவன் முயற்சிக்கும், உழைப்பிற்கும், குணத்திற்கும் விரைவில் சந்திர நாடு நல்ல நிலைமையை அடையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை தந்தையே.”

“தீட்சண்யா உன் எண்ணம் விரைவில் ஈடேறும்” என்றார் மனமார.

“தந்தையே உங்களிடம் ஒன்று கேட்கலாமா?” என்றார் தயங்கியபடி,

“என்ன தயக்கம் தீட்சண்யா? மனதில் இருப்பதை தயங்காமல் கேள்.”

“தந்தையே, இரண்டரை ஆண்டுகளுக்கு முன்னர் நான் சந்திர நாடு செல்லும் முன்பு என் திருமணம் குறித்து பேசினீர்கள். அப்பொழுது சமுத்திராவிற்கு திருமண வயது எட்டவில்லை. ஆகையால் பெரிதாக வித்தியாசம் தெரியவில்லை. ஆனால், இப்பொழுது அவளுக்கும் திருமண வயது வந்துவிட்டதல்லவா? அவளது திருமண வைபவம் முடிந்ததும் நான் செய்து கொள்கிறேன் என்று கூறினால், அது சரியாக வராது என்றீர்களே, ஏன் என்று தெரிந்துகொள்ளலாமா?” ஒரு வழியாக பல நாட்களாய் மனதினில் அரித்த கேள்வியைத் தயக்கத்துடன் கேட்டு விட்டார்.

“இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு உன்னை திருமணம் செய்து கொள்ள யாரும் காத்திருக்கவில்லையே தீட்சண்யா?”

அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்று தீட்சண்யருக்கு புரியவில்லை. சமுத்திராவின் திருமணம் முடிந்தவுடன் எங்கள் திருமணமும் நடக்கப் போகிறது. தோகையினி இன்னும் அதிக காலம் காத்திருக்கப் போவதில்லை என்றவாறு எண்ணம்தான் தீட்சண்யருக்கு இருந்தது.

தீட்சண்யரது புரியாத பாவனையையும், மௌனத்தையும் கண்ட வீரேந்திர மருதர், “தோகையினி சமுத்திராவை விடவும் மூத்தவள். உனக்கு உன் தங்கையின் மீது இருக்கும் அக்கறையும், பாசமும் சேயோனுக்கும், அருளோனுக்கும் இருக்கும் அல்லவா? சமுத்திரா இப்பொழுது தான் திருமண வயதை நெருங்கி இருக்கிறாள். ஆனால், தோகையினி அவள் திருமண வயது வந்தும் உனக்காக இரண்டரை ஆண்டுகள் காத்திருக்கிறாள். எல்லாவற்றையும், எல்லோர் மனநிலையிலும் சிந்திக்க வேண்டும் தீட்சண்யா” என்றார் சிறிது கண்டிப்புடன்.

“மன்னித்து விடுங்கள் தந்தையே. இனி இதுபோன்று எப்பொழுதும் நடந்து கொள்ள மாட்டேன்” என்றார் வருத்தத்துடனும், உறுதியுடனும்.

தந்தையின் மீது எப்பொழுதும் போல மிகுந்த மதிப்பும், மரியாதையும் வந்தது. அவரைப்போன்றே நாமும் செயல்பட வேண்டும் என்று எண்ணிக்கொண்டார்.

** சமுத்திரா முதல் தளத்தில் இருக்கும் அவளுடைய அறையின் முகப்பில் அமர்ந்தவாறு, வெண்ணிலவினை ரசித்தபடி, இளந்தென்றல் மேனியில் தழுவ அமர்ந்திருந்தாள். சமுத்திராவின் எண்ண அலைகள் அவளுடைய சூழலை ரசிக்காமல் நிலையின்றி தவித்தது. பெரும்பாலும் ரூபனரைப் பற்றிய சிந்தனையில்தான் கடந்த சில நாட்களாக இருந்து வந்தாள்.

ரூபனரிடம் கலந்தாலோசிக்காமல், அவருடைய அனுமதியின்றி சில செயல்களை தொடங்கியிருந்தாள். ஆகையால் அதனைப்பற்றிய சிந்தனைகளே இத்தனை நாட்களாக பெரும்பாலும் மனதை ஆக்கிரமித்திருந்தது. ஆனால், இப்பொழுது தாமரையைப் பற்றிய கவலைகளும் மனதை ஆக்கிரமித்தது.

சில தினங்களாக தாமரை, சமுத்திராவிடம் ஓரளவு இணக்கம் காட்டத் தொடங்கியிருந்தாள். இரண்டு தினங்களுக்கு முன்பு இரகசிய வைத்தியசாலையில் நடந்த சம்பவத்தை எண்ணிப் பார்த்தாள்.

“தாமரை உன் உடல் முழுவதும் தேறிவிட்டது. இனி நீ வைத்திய சாலையில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை” என மெல்ல பேச்சினை தொடங்கினாள் சமுத்திரா.

அதைக் கூறியதுமே தாமரையின் முகம் வெளிறிவிட்டது. “நான் இங்கே இருக்க முடியாதா? என்னை அனுப்பி விடுவீர்களா?” என்று பயத்தை விழிகளில் நீரினைத் தேக்கி சமுத்திராவிடம் கேட்டாள்.

“நீ கவலைப்பட வேண்டாம் தாமரை. நீ என்னோடு வருகிறாயா? மருத அரண்மனையில் என் தோழிப்பெண்களுடன் தங்கிக்கொள்.”

“இல்லை இல்லை… இளவரசி மன்னித்து விடுங்கள். என்னால்… உங்களோடு வர இயலாது” என கூறியவளின் தேகம் நடுங்க, அதன் காரணத்தைத்தான் கண்டறிய முடியவில்லை.

“ஏன் அவ்வாறு கூறுகிறாய் தாமரை. உனக்கு உறவினர்களும் யாரும் இல்லை என்கிறாய். உன் உண்மையான பெயரைக் கூட கூற மறுக்கிறாய். சரி எங்கேனும் செல்ல விருப்பப் படுகிறாயா? எதுவாக இருந்தாலும் தயங்காமல் சொல்” என்று கேட்க,

தாமரையின் கண்களில் இருந்து கண்ணீர் நிற்காமல் வழிந்தது.

“என்னவாயிற்று தாமரை? நீ விவரம் எதுவும் கூற வேண்டாம். இப்பொழுது என்ன செய்யலாம் என்றாவது கூறினாயானால், அதற்கு தகுந்தாற்போல் முடிவெடுக்கலாம். இந்த இரகசிய வைத்தியசாலை இருவருக்கு மட்டும்தான் இடம் போதுமானதாக இருக்கும். ஏற்கனவே இங்கே அனுமதிக்க வேண்டியவர்களை வேறு வழியின்றி கீழேயே தங்க வைத்திருக்கிறோம்.

உனக்கு உடல் நிலை தேறியதும், கீழே இருக்கும் வைத்தியசாலைக்கு அழைத்த பொழுதும் வர மறுத்து விட்டாய். என்னுடனும் வர மறுக்கிறாய்” சமுத்திராவிற்கு அந்த பெண்ணை நினைத்து பாவமாய் இருந்தது. சித்தரே அவளின் நலனை விரும்புகிறார் என்றால் அவளைப்பற்றி தவறாகவும் எண்ண தோன்றவில்லை.

“இளவரசி என் உயிரைக் காப்பாற்றிய உங்களுக்கு நான் பெரும் தொல்லையாகவும், சிரமமாகவும் இருக்கின்றேன். ஆனால், என்னால் மருத தேசத்தில் இருக்க முடியாது இளவரசி. என் உடன்பிறவா சகோதரர்கள் இருவரை சந்திக்கும் முன்னர் என்னால் இந்த உயிரைக் கூட துறக்க இயலாத துர்பாக்கியவதியாக இருக்கிறேன் இளவரசி” என்றாள் அழுகையோடு.

“தாமரை ஏன் இவ்வாறெல்லாம் பேசுகிறாய்? நீ கவலை கொள்ளாதே தாமரை. நான் உன்னை விரைவில் வேறு நாட்டில் பாதுகாப்பாக சேர்க்கிறேன். தயங்காமல் உனக்கு வேண்டிய உதவியை என்னிடம் கேள். உனக்கு எப்பொழுதும் நான் இருக்கிறேன்” என்று ஆறுதல் அளித்து வந்திருந்தாள்.

தற்பொழுதும் தாமரையைப் பற்றி எண்ணிக் கொண்டிருந்தவள், அவளை எங்கு பாதுகாப்பாய் வைப்பது? அவள் இங்கு எதற்காகவோ பயம் கொள்கிறாள் அதை எப்படி தெரிந்து கொள்வது? என்றவாறு சிந்தனையில் உழன்றாள்.

இந்த சிந்தனைகள் எல்லாம் சிறிது நேரம்தான். மீண்டும் சமுத்திராவின் மனம் முழுவதும் ரூபன சத்ரியர் தான். ‘அன்று வந்த பொழுதே அவரை தனியாக சந்திக்க முயற்சித்தேன். அப்பொழுதே என்னை பேச அனுமதித்திருந்தால், அவரைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியதை அவரிடமே கேட்டிருப்பேன்.

இப்பொழுது அதற்காக வேறு முயற்சிகளை செய்து, அதற்கு அவர் என்ன கூறுவாரோ என பயந்து பயந்து மனதிற்குள் அனுதினமும் துவள வேண்டி இருந்திருக்காது’ என மனதிற்குள் வருந்திக் கொண்டிருந்தாள்.

** மருத கோட்டையின் தெற்கு பகுதியில் அமைந்த சாலையில் விடியற்காலைப் பொழுதினில், சாதாரண உடையினில் முகத்தினை மறைத்தவாறு, ஒரு மரத்தின் பின்னால் நின்று கொண்டு, ரூபன சத்ரியரை எதிர்நோக்கி காத்திருந்தாள் மருத தேசத்தின் இளவரசி சமுத்திர தேவிகை.

மருத யுவராஜரின் திருமணத்திற்கு இன்னும் இரண்டு தினங்களே இருந்தது. ரூபன சத்ரியர் இதுவரையிலும் மருத தேசம் வரவில்லை. இன்றோ, நாளையோ வருவார் என்று அனைவரும் எண்ணியிருந்தனர்.

ரூபனரிடம் ஒரு விஷயத்தைப் பற்றி கலந்தாலோசிக்க வேண்டி அவரை எதிர்நோக்கி தனிமையில் காத்திருந்தாள் சமுத்திரா.

அவள் எதிர்பார்த்தது போன்றே ரூபன சத்ரியர் அன்றைய தினமே வருகை தந்தார். ஆனால், அவர் வருகையை நினைத்து அவளால் மகிழத்தான் இயலவில்லை.

ரூபனரிடம் தனிமையில் கலந்தாலோசிக்க வேண்டி அவள் தனித்து காத்திருக்க, ரூபன சத்ரியரோ தமது படை வீரர்களுடன் வந்து கொண்டிருப்பதன் அடையாளமாக தூரத்தில் பல குதிரைகளின் காலடி ஓசைகள் கேட்டது.

‘நான் எப்படி இதனைப்பற்றி சிந்திக்க மறந்தேன்? கடந்த முறை தனியாக வந்தார் என்பதற்காக, இப்பொழுதும் அவ்வாறே வருவாரா? கடந்த முறை அவர் மருத தேசம் வரக்கூடும் என்று யாரும் எண்ணியிருக்க மாட்டார்கள். அப்படி இருந்துமே, அவர் உயிருக்கு பாதுகாப்பு இல்லாத தருணத்தில் அவர் தனித்து ஏன் வரவேண்டும்? என்று நாம் கவலை கொண்டோம்.

இப்பொழுது அண்ணனின் திருமணம் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இதற்கு சந்திர நாட்டு வேந்தர் செல்வார் என்பதும் அனைவரும் கணிக்க கூடியதே. இதுபோன்ற தருணத்தில் தனிமையில் வருவது பாதுகாப்பும் இல்லை. அதை யாரும் அனுமதிக்கவும் மாட்டார்கள். இது எதையும் சிந்திக்காமல் இங்கு வந்து காத்திருக்கின்றேனே?’ என மனதிற்குள் எண்ணியவள், குதிரைகள் வரும் வழியை பார்வையிட்டாள்.

சற்று தொலைவில் குதிரையில் வீரர்கள் சூழ, அதற்கு நடுநாயகமாக ஒரு ரதமும் வந்து கொண்டிருந்தது.

‘திருமண வைபவத்தில் அவரை சந்தித்து நிச்சயம் பேச இயலாது. அரண்மனை முழுவதும் கூடியிருக்கும் உறவினர்கள் ஒருபுறம், திருமண ஏற்பாடுகள் மறுபுறம் இதில் இவரை எப்படி காண்பது? சென்ற முறை வந்த பொழுதே இவரும் என்னைக் காண வரவில்லை. நான் காண சென்றாலும், எதை எதையோ பேசி அனுப்பி வைத்து விட்டார். இப்பொழுது என்ன செய்ய?’ என்று மனம் கலங்கி பதறியது.

‘அவரிடம் கலந்தாலோசிக்காமல் நாம் இந்த காரியத்தை தொடங்கியிருக்கக் கூடாதோ? அவர் தவறாக எண்ணிக்கொண்டால் என்ன செய்வது?’ ஏனோ மனம் முழுவதும் பயம் சூழ்ந்து கொண்டது.

எதையும் எடுத்தோம் முடித்தோம் என்று செயல்படுவது சமுத்திராவின் வழக்கம் இல்லை. ஆனால், சமுத்திரா தற்பொழுது தலையிட்ட காரியம், அவளால் யாரிடமும் கலந்தாலோசிக்கவும் முடியவில்லை, தள்ளிப்போடவும் முடியாது என்பதாய் இருந்தது. நன்கு பொறுமையாய் சிந்தித்து, அவளின் உள்ளுணர்வு உணர்த்தியதாலே இந்த காரியத்தை தொடங்கி இருந்தாள்.

அவளது சந்தேகம் ஊர்ஜிதம் ஆகாமல் இருந்திருந்தால், இப்பொழுது அதனைப்பற்றி எந்த கவலையும் இல்லை. ஆனால், இப்பொழுது சந்தேகம் உறுதிப்படவே, ரூபனரிடம் கலந்தாலோசிக்க வேண்டுமாய் இருந்தது. ரூபனரிடம் கலந்தாலோசிக்காமல் இந்த விஷயத்தில் தலையிட்டதற்கு, ரூபனர் என்ன கூறுவாரோ என்ற பயமும், குழப்பமும் தான் சமுத்திராவின் மனம் முழுவதும் வியாபித்திருந்தது. அவள் மனதின் எண்ணங்கள் ஓடிக்கொண்டிருக்க,

அதற்குள்ளாக ரதம் அருகினில் நெருங்கியது. ரூபனரின் உள்ளுணர்வு உணர்த்த வலப்புறம் திரும்பியவரின் பார்வையில் ஒரு பெரிய மரத்தின் பின் இருந்தவாறு, முகத்தை மட்டும் எட்டிப்பார்த்து தன்னையே கவனித்துக் கொண்டிருந்தவளைப் பார்த்ததும் இதழ்கள் மலர்ந்தது.

‘இவள் என்ன முகத்தை மறைத்தபடியே தான் இருப்பாளா? எதற்காக இப்படி அடிக்கடி பாதுகாப்பின்றி வருகிறாள்?’ என்று சிறு கோபம் எட்டிப்பார்த்தது.

ரதத்தினை ஓட்டும் சாரதியிடம், “ரதத்தை சற்று நிறுத்துங்கள்” என கூற, பின்னாலும் முன்னாலும் செல்லும் வீரர்களுக்கு சமிக்ஞை செய்தபடி ரத்தத்தை நிறுத்தினார் சாரதி.

உடன் வந்த மந்திரிகளும், ரதத்திற்கு முன்னால் பயணித்த சந்திர நாட்டின் படைத்தளபதி கதிரவனும் கேள்வியாக நோக்கினார்.

கதிரவன் தமது குதிரையில் ரதத்தின் அருகினில் வந்து, “என்னவாயிற்று வேந்தே. அருகினில் நெருங்கி விட்டோமே. ஏன் இங்கேயே நிறுத்த சொன்னீர்கள்?”

“ஒன்றுமில்லை கதிரவா. நீங்கள் முன்னே செல்லுங்கள். நான் சிறிது நேரத்தில் வந்துவிடுகிறேன்” என ரூபனர் கூற, அனைவரும் தயங்கினார்கள்.

ரூபனர் திடீரென்று மரத்தினை நோக்கி திரும்பவும் வேகமாக தலையை உள்ளிழுத்துக் கொண்ட சமுத்திரா, ‘ஒரு வேளை என்னை கவனித்திருப்பாரோ?’ என்று எண்ணிக்கொண்டு இருக்கும் பொழுதே ரதம் நின்றிருந்தது. அதற்கு பிறகு மீண்டும் அங்கு பார்வையை செலுத்த மனம் விளையவில்லை. ‘ஏன் நிற்கிறார்கள்?’ என்றவாறு யோசித்துக் கொண்டிருந்தாலும் பார்வையை மட்டும் அங்கு திருப்பவில்லை.

ரூபனர் இவ்வாறு கூறியதும், முதன் மந்திரியார், “ஏன் அரசே. கோட்டையின் அருகினில்தான் நெருங்கி விட்டோமே, எதுவாக இருப்பினும் அங்கே சென்றதும் முடிவெடுத்துக் கொள்ளலாமே?” வெகுவாக தயங்கியபடி கேட்டார்.

‘இவர்களிடம் என்ன கூறுவது?’ என சிந்தித்த ரூபனர்,

“யாரும் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். நான் மட்டும் தனிமையில் கவனிக்க வேண்டிய வேலை ஒன்று இருக்கிறது. ஒருவரை சந்தித்தாக வேண்டும். நீங்கள் முன்னே செல்லுங்கள். விரைந்து வந்து விடுகிறேன்” என்றவர் தமது கிரீடத்தை விலக்கி சாதாரண தலைப்பாகையை அணிந்தவர், தமது ஆடை அணிகலன்கள் தெரியாமல் இருப்பதற்கு மேலே ஒரு சாதாரண போர்வையை போர்த்தி, “இப்பொழுது திருப்தி தானே” என்று ரூபனர் கேட்க, தயக்கம் இருந்த பொழுதிலும் ‘மருத தேசத்தினுள் வந்துவிட்டோம் அதுவும் கோட்டைக்கு வெகு அருகில், ஆகவே எந்த ஆபத்தும் இருக்காது’ என்று நினைத்தவர்கள், “ஆகட்டும் அரசே விரைவில் வந்துவிடுங்கள். நாங்கள் கோட்டையின் அருகினில் காத்திருக்கிறோம். தயவுசெய்து மறுத்து விடாதீர்கள். நீங்கள் தனிமையில் வருவது சரியாக இருக்காது” என்று கூறவே, “ஆகட்டும் விரைவில் வருகிறேன். காத்திருங்கள்” என்றவாறு விடைபெற்றார்.

அவர்கள் அனைவரும் பார்வை வட்டத்திலிருந்து மறையும் வரையும் அங்கேயே காத்திருந்தார்.

ரதத்தின் சப்தமும், குதிரைகளின் காலடி ஓசையும் சமுத்திராவின் செவிகளைத் தீண்ட, அவள் தலையினை மட்டும் எட்டிப்பார்க்க, அங்கே யாரும் இருந்ததற்கான அடையாளமே தெரியவில்லை. ஒரே ஒரு குதிரை மட்டும் தனித்து இருந்தது. அங்கேயே அருகினில் ரூபனர் இருக்கிறாரா என பார்வையால் அலசினாள்.

“என்னைத்தான் தேடுகிறாயா?” கம்பீரமான குரல் செவியினை அடையவும், “இவர் எப்பொழுது வந்தார்?” என்று எண்ணியபடி திரும்ப, தமக்கு எதிரினில் நின்றிருந்தவரைப் பார்த்து மெலிதாக புன்னகைத்தாள்.

சமுத்திராவின் முகத்தில் இருக்கும் திரை, அவள் புன்னகையை வெளிக்காட்டா விட்டாலும், அவளது விழிகளில் மலர்ச்சியைக் கண்டவர், “என்ன தேவி இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறாய்?”

“உங்களை… காண்பதற்காகத்தான்” என்றாள் மெல்ல தயக்கத்துடன்.

புருவங்களை உயர்த்தி, விழிகளிலும், இதழ்களிலும் மகிழ்வை வெளிப்படுத்தி, “நான் மருத கோட்டைக்கு தானே வந்து கொண்டிருக்கிறேன்.”

“அப்படியானால், கோட்டையிலேயே பார்த்துக் கொள். இங்கே ஏன் நிற்கிறாய் என்று கேட்கிறீர்களா?” தயக்கம் விலகி கோபம் வந்திருந்தது.

“தேவி நான் அவ்வாறு கூறவில்லை. திருமண வேலைகள் இருக்கும் தருணம், உறவினர்கள் சூழ்ந்துள்ள இடத்தினில் நீ இல்லை என்றால், வீணாக கேள்விகள் எழுமே அதற்காகத்தான் கூறினேன்.”

“நான் அப்படி ஒரு சூழலில் வந்திருக்கிறேன் என்றால், எத்தனை முக்கியமான விஷயமாக இருக்கும் என்று சிந்திக்க மாட்டீர்களா? அதுதானே உங்களுக்கு ஏது சிந்தனைத்திறன்? உங்கள் அறிவைப் பற்றியும், பொறுமையைப் பற்றியும் தான் எனக்கு முன்பே தெரியுமே!” என்றாள் சிவவனத்தினில் சிக்கியிருந்த தருணத்தின் நினைவாக.

“நேரம் ஆகிறது தேவி. வாக்குவாதம் செய்து கொண்டிருக்க நேரமில்லை. என்னவென்று கூறுகிறாயா?” ரூபனருக்கும் சிறிது கோபம் எட்டிப்பார்த்தது.

ஏற்கனவே இறுதி நேரத்தில்தான் வரமுடிந்ததே என்கிற தவிப்பு, என்னதான் உடன் வந்தவர்களை அனுப்பிய போதிலும், அவர்கள் காத்திருப்பார்களே, அவர்களை காக்க வைப்பதா என்கிற பதற்றம் ரூபனருக்கு சிறிது கோபத்தை வரவழைத்திருந்தது.

“ஏதாவது கோபமாக இருக்கிறீர்களா?” சற்றே முக வாடத்துடன் கேட்க,

“தேவி அவ்வாறெல்லாம் ஒன்றும் இல்லை. மன்னித்துவிடு. என்னுடன் வந்தவர்கள் எனக்காக காத்திருப்பார்கள் அதற்காகத்தான்…” என்று கூற,

“அவர்கள் செல்லவில்லையா?” என கேட்டவள், மனதிற்குள், ‘பொறுமையாக பேச வேண்டியதை அவசரமாக எவ்வாறு பேசுவது?’ என்று எண்ணினாள்.

“ஆம் தேவி” என்று சொல்லும் பொழுதே, உடனடியாக செல்ல வேண்டும் என்ற தவிப்பு அவரது முகத்தில் அப்பட்டமாய் தெரிந்தது.

“சரி நீங்கள் புறப்படுங்கள். திருமணம் முடிந்து நீங்கள் கிளம்பும் முன்பு கரடுமலை வந்துவிடுங்கள். உங்களிடம் பேச வேண்டும்” என ஆவலாய் கூற,

“ஆகட்டும் தேவி. புறப்படும் தினம் அதிகாலையிலேயே வந்து விடுகிறேன். கோட்டையினுள் சந்திப்போம். விரைந்து வந்துவிடு” என்று விடைபெற்று சென்றார் ரூபன சத்ரியர்.

Advertisement