Advertisement

சத்ரிய வேந்தன் – 28 – மருத கோட்டை

ரூபன சத்ரியர் மருத தேசத்து கோட்டையினை நெருங்கிக்கொண்டிருக்க, இதற்கு முன்பு மருத தேசம் வந்ததும், நவிரனோடு சண்டையிட்டதும் அவருடைய நினைவுகளில் வந்தது. 

அவனைக் கொல்லும் அளவு அன்றைய மற்போர் சென்றுவிட்டதற்கு ரூபனர் ஒருபொழுதும் வருந்தியதில்லை. அதிலும், அவனைப் பற்றிய விவரங்களும், உண்மையும் தெரிந்தபிறகு வருத்தம் கொள்வதற்கு எந்த அவசியமும் இல்லாமல் போய்விட்டது. 

கடந்த மாதம், தீட்சண்ய மருதர் ரூபனரைக் காண சந்திர நாடு வந்திருந்த பொழுது, நவிரனைப் பற்றி கூறியிருந்தார். தீட்சண்யருக்கு அவை எல்லாம் மருத சக்கரவர்த்தி வீரேந்திர மருதர் மூலம் தெரிய வந்திருந்த விஷயங்கள்.

தீட்சண்யர் அன்று கூறியதை எண்ணியவருக்கு இன்றும் உடல் இறுகி, கண்கள் சிவந்து நவிரனின் மீது எல்லையில்லா கோபம் வந்தது. அன்று தீட்சண்யர் ரூபனருடன் மேற்கொண்ட நவிரன் தொடர்பான உரையாடல்கள் இவைதான்…

“ரூபனா நீ நவிரனை அழிக்காமல் இருந்திருந்தால், அவன் மக்களுக்கு செய்த கொடுமைகளும், பாவங்களும் வெளிச்சத்திற்கு வராமலே சென்றிருக்கும்” என தீட்சண்யர் கூற, 

“என்ன தீட்சண்யா என்ன கூறுகிறாய்? அவன் மிகவும் தலைக்கனம் கொண்டவன் என்று மக்கள் கூறியிருந்தார்கள். அதனால் அனைவரையும் மரியாதை குறைவாக நடத்தியிருப்பான், உதாசீனப் படுத்தியிருப்பான் என்று தானே நான் எண்ணியிருந்தேன். நீ ஏதோ கொடுமைகள், பாவங்கள் என்கிறாயே?” 

“ஆம் ரூபனா. இதில் வருத்தம் என்னவென்றால் அவன் செய்த குற்றங்கள் யாவும் எங்கள் மேற்பார்வைக்கு வாராமலேயே இருந்துவிட்டது.” 

“ஒன்றுமே புரியவில்லை தீட்சண்யா. மன்னர் வீரேந்திர மருதரின் ஆட்சியில் ஒருவன் குற்றம் செய்து, அது வெளிச்சத்திற்கும் வராமல் சென்றிருக்கிறதா?” வியப்பு மேலோங்க ரூபனர் கேட்கவும்,

“இதுபோல விஷயங்கள் சாதாரணமாக நிகழும் ரூபனா. என்ன குற்றம் நடந்தாலும், பாதிக்கப்பட்டவர்கள் வெளியில் கூறும் வரையிலும், பெரும்பாலும் அது வெளிவர வாய்ப்பே இல்லாமல் போய்விடும். இவனும் அதைத்தான் சாதகமாக்கிக் கொண்டான். 

ஆரம்பத்தில் தனக்கு தேவையான பொருட்களை மக்களிடமிருந்து இலவசமாக பெற்றிருக்கிறான். மக்களும் அவன் வீரத்தின் மீது கொண்ட அச்சத்தினால் அவனுக்கு உடன்பட்டிருக்கின்றனர். 

நாளடைவில் அவனின் தேவைகளை அதிகரித்திருக்கிறான். மக்களின் நிலபுலங்களை அபகரிப்பது, எதிர்ப்பவர்களின் உயிரைப் பறிப்பது என அவன் வதைகளும், குற்றங்களும் பெருகிக்கொண்டே சென்றிருக்கிறது.” 

“என்ன தீட்சண்யா இத்தனை குற்றங்களையும் சாட்சி இல்லாமலா செய்தான்?” 

“ரூபனா சாட்சி என்பது இரண்டாம் பட்சம். இந்த விஷயங்களை நவிரன் தன்னுடைய குடும்பத்தினர் கூட அறியா வண்ணம் செய்திருக்கிறான்.” 

“மக்கள் ஏன் அவன் கொடுமைகளை சகித்துக் கொண்டனர் தீட்சண்யா?” 

“உயிர் பயம் ரூபனா. அது மட்டுமில்லாமல் சில பெண்களின் கற்பை சூறையாடியதாகவும் கேள்வி பட்டோம்” இதனைக் கூறும்பொழுதே தீட்சண்யரின் இறுகிய குரலே தெளிவு படுத்தியது அவரின் கோபத்தின் அளவை. 

“தீட்சண்யா…” ரூபனரும் அதிர்ச்சியில் இருந்தார். பெண்கள் தங்கள் கற்பை எப்படி பாதுகாப்பார்கள் என்பதை அறிந்திருந்த ரூபனருக்கு இந்த செய்தி கேட்டதும் நவிரன் மீது கட்டுக்கடங்காமல் சினம் வந்தது. அவனை கொல்லாமல் விட்டிருந்தால், இப்பொழுது தேடிப்பிடித்து அவனைக் கொல்லும் அளவு அவன் மீது வெறியும், வெறுப்புமாய் இருந்தது. நிச்சயம் அந்த பெண்கள் அப்பொழுதே உயிர் துறந்திருப்பார்கள் என்று எண்ணுகையிலேயே ரூபனரின் மனம்பட்ட வேதனையை வார்த்தைகளால் வடிக்க முடியவில்லை. 

அங்கே கனத்த மௌனம் நிலவியது. ரூபனரே தன்னை சமாளித்து, “அவனால் பாதிக்கப்பட்ட பெண்கள் உயிர் துறந்திருப்பார்களே தீட்சண்யா. அப்பொழுதுமா அவனைப் பற்றிய உண்மைகள் வெளிவராமல் போய்விட்டது?” 

“ஆம் ரூபனா. ஏற்கனவே தங்கள் மானம் போய்விட்டது. இதை வெளியே தெரியப்படுத்தி குடும்ப மானத்தையும், நிம்மதியையும் இழக்க செய்வதா என்று அந்த பெண்கள் யாரிடமும் தெரிவிக்காமல் தங்கள் உயிரை மாய்த்திருக்கிறார்கள் போல.” 

“இப்பொழுது மட்டும் அவன் செய்த குற்றங்கள் எப்படி தெரிய வந்தது தீட்சண்யா?” 

“நீ அவனை மற்போரில் வென்று கொண்டிருக்கும் பொழுதே மக்களின் ஆராவாரம் தந்தையாருக்கு சந்தேகம் வந்திருக்கிறது. உடனே ஒரு காவலரை மக்களோடு மக்களாக கலந்து அவர்களின் ஆராவாரத்திற்கான காரணங்களை கண்டறிந்தார். 

காவலர்கள் அப்பொழுது அறிந்து கூறிய விஷயமே பெரும் அதிர்ச்சியாக இருந்தது. ‘இத்தனை நாட்கள் நமக்கு தெரியாமல் இவன் இப்படி செய்திருந்தானா?’ என்று தந்தையார் அதிர்ந்திருக்கிறார். அதன்பிறகு அவர் நவிரனைப்பற்றிய விஷயங்களை கண்டறிய முற்பட, அவருக்கு கடந்த சில மாதங்களாக கிடைத்த தகவல்கள் எல்லாம் இப்படியாகத்தான் இருந்தது. அவனின் நில அபகரிப்புகளை கூட பொறுத்துக்கொள்ள முடிந்தவரால், அவனால் பலர் கொல்லப்பட்டதையும், மானபங்க படுத்தப்பட்டதையும் சகித்துக் கொள்ளவே முடியவில்லை.” 

“அவனால் சீரழிக்கப் பட்ட பெண்களே இறந்தபிறகு, அந்த விஷயங்கள் எப்படி வெளிச்சத்திற்கு வந்தது?” 

“ஒரு பெண் தற்கொலைக்கு முயன்று உயிர்துறக்கும் முன் அவளுடைய குடும்பத்தார் காப்பாற்றி விட்டார்கள் ரூபனா. அப்பொழுது அந்த பெண் அவர்கள் குடும்பத்தாரிடம், ‘நவிரனால் மானபங்கப் படுத்தப்பட்டதே தன் தற்கொலைக்கு காரணம்’ என்று கூறியிருக்கிறாள். அதன்பின்னர் அவர்கள் எவ்வளவோ சமாதானம் கொடுத்தும் அவள் உயிர்வாழ பிடிக்காமல் மீண்டும் சந்தர்ப்பம் அமைந்த தருணம் தன் உயிரை மாய்த்து விட்டாள். 

அந்த பெண்ணின் வீட்டிலும் நிலத்தை அபகரித்திருக்கிறான். நில அபகரிப்பு தொடர்பாக அந்த பெண்ணின் குடும்பத்தினரை தந்தையார் நேரடியாக அழைத்து விசாரித்த பொழுதுதான், அவர்கள் குடும்பத்து பெண் மானபங்க பட்டு இறந்த விஷயமும் வெளியே வந்திருக்கிறது. 

ரூபனா இதைக் கேட்டதும் ஒரு தந்தையாக, அரசராக தந்தையார் எப்படி துடித்தார் தெரியுமா?” 

“தீட்சண்யா என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. அவனைப் போன்றவர்களுக்கு மிகவும் கொடூரமான தண்டனை தந்திருக்க வேண்டும். ஆனால் அவன் குற்றம் செய்ததே தெரிய வராமல் இருந்தால், அது மன்னர் பதவியில் இருப்பவருக்கு எத்தனை வேதனை தரும் என்பதை என்னால் உணர முடிகிறது. இதே போன்ற தவறை மலைக்கள்ளர்கள் செய்தார்கள் என்று தெரிந்த பொழுது தான் அவர்கள் மீது கட்டுக்கடங்காத கோபமே பொங்கியது” என்றார் ரூபனர். 

“நீ கூறுவதும் சரிதான் ரூபனா. தந்தையாருக்கும் அதே நிலை தான். அந்த பெண்ணின் மரணத்தைப் பற்றி தெரிந்து கொண்ட பிறகு, கடந்த இரண்டு ஆண்டுகளாக தற்கொலை செய்து கொண்ட இளம்பெண்களின் பட்டியல் எடுத்து அதன் காரணத்தை கண்டறிய முற்பட்ட பொழுது அதில் பெரும்பாலும் நவிரன் சம்மந்தப் பட்டிருப்பது தெரியவந்தது” என்றார் வேதனையுடன். 

“மன்னர் என்ன நடவடிக்கை எடுத்தார் தீட்சண்யா?” 

“இறந்தவன் மீது என்ன நடவடிக்கை எடுக்க இயலும். அதுவும் அவன் குற்றங்கள் அவனது குடும்பத்தினரே உணரா பொழுது, யாரை தண்டிக்க இயலும். நவிரன் அபகரித்திருந்த நிலபுலன்களை மக்களிடமே திருப்பி தந்து விட்டார். 

நவிரனின் குற்றங்கள் வெளியே தெரிய வந்தால், உயிர்துறந்த பெண்கள் மானபங்கப் பட்டதும் வெளி வருமே. அது வெளியில் தெரிந்து விடக்கூடாது என்றல்லவா அந்த பெண்கள் உயிர் துறந்தார்கள். ஆகையால் இந்த விஷயங்களை தந்தையார் வெளியில் தெரியப்படுத்தவில்லை ரூபனா. 

கோட்டை வாயிலினை காவல் வேலை பார்த்து வந்த நவிரனின் சகோதரர்களும் அவன் இறந்ததும் ஊரைவிட்டு சென்றுவிட்டனர் போலும்” என்று கூறி இருந்தார் தீட்சண்யர். 

** அன்றைய நாளின் நிகழ்வினில் வாயிலை நோக்கி வந்து கொண்டிருந்த ரூபனர், கரடுமலையில் இருந்து கிளம்பும் பொழுதே தமது மாறுவேடத்தை கலைத்து ராஜ உடையினில் இருந்தார். மருத தேசத்து கோட்டை வாயிலை அடைந்ததும் தீட்சண்யர் தம்மிடம் தந்திருந்த அடையாள முத்திரை கொண்ட தங்க நாணயத்தை வாயில் காவலனிடம் காண்பிக்க, வாயில் காவலன் இரு வீரர்களோடு ரூபன சத்ரியரை உள்ளே அனுப்பி வைத்தார். 

இடையில் எந்தவித தடைகளும் இன்றி, நேரடியாக ரூபனரை தலைமை காவலரிடம் அனுமதித்தனர். 

தலைமை காவலர் ரூபனரை அடையாளம் கண்டு கொண்டவராய், “வணக்கம் அரசே! வாருங்கள் வாருங்கள். தாங்கள் யாரைக் காண வேண்டும்?” என்றார் பணிவாக. 

“வணக்கம். தீட்சண்யர் எங்கே இருக்கிறார்?” 

“உள்ளே வாருங்கள் அரசே” என்றவர் விருந்தினர் மாளிகைக்கு ரூபனரை அழைத்து சென்றவாறே, “இளவரசர் அரசபையில் இருக்கிறார். அவரிடம் தாங்கள் வந்திருப்பதை தெரியப்படுத்த காவலர்களை அனுப்பி இருக்கிறேன் அரசே. அவர் வரும் முன்பு நீங்கள் இங்கே ஓய்வெடுங்கள்” என்று கூறிய தலைமை காவலர், ரூபனர் உண்ண பலகாரங்களையும், பழச்சாறையும் வரவழைத்தார். 

ரூபன சத்ரியர் பழச்சாறை குடித்து முடிக்கவும், தீட்சண்ய மருதர் ரூபனரைக் காண வரவும் சரியாக இருந்தது. 

ரூபனரைக் கண்டதும் அகமும் முகமும் மலர ரூபனரை அணைத்துக் கொண்டவர், ரூபனரை உச்சி முதல் பாதம் வரை ஆராய்ந்தார். 

இந்த நான்கு மாதங்களில் நல்ல மாறுதல். கடந்த மாதம் பார்த்த பொழுது இருந்ததை விடவும் ரூபனரின் பொலிவு கூடியிருந்தது. ஏற்கனவே கம்பீரமான ஆண்மகன், இப்பொழுது அவருடைய கம்பீரம் இன்னும் கூடியிருந்தது. 

இளம் முறுவலுடன், “என்ன அரசரே தங்களின் முகப்பொலிவு கூடிக்கொண்டே போகிறதே. என்ன விசேஷம்?” என கேளிக்கை பேச, 

“தீட்சண்யா வந்த உடனேயே தொடங்கிவிட்டாயா? ஆமாம் என்னை சொல்வது இருக்கட்டும். இன்னும் மூன்று வாரங்களில் திருமணம். உன் முகத்திலும் திருமணக்களை தாண்டவம் ஆடுகிறது. நான் கேட்கும் முன்பாக நீ கேட்டு என்னை திசை திருப்பப் பார்க்கிறாயா?” 

“ரூபனா, அது இருக்கட்டும். நீ இத்தனை நாட்களாய் இங்கே வராமல் இருந்ததால், எனக்கு உன்மீது எல்லையில்லா கோபம். இன்னும் சொல்லப்போனால், என் குடும்பத்தினர் அனைவருக்கும் மிக மிக மிக கோபம்” என்று கடைசி வாக்கியத்தை இதழ் மறைவில் தவளவிட்ட புன்னகையுடன் அழுத்தமாக கூறினார். 

ரூபனருக்கு எதுவோ புரிந்து, தீட்சண்யரை ஆழ்ந்து நோக்க, அதற்குள் முகத்தை சாதாரணமாக வைத்துக் கொண்டார். 

“தீட்சண்யா நீ தான் அங்கிருக்கும் நிலைமையை அறிவாயே. நானும் எல்லாவற்றையும் உனக்கு தெரியப்படுத்திக் கொண்டு தானே இருக்கிறேன்” என்றார் ரூபனர். 

“சரி திருமணத்திற்காக மூன்று வாரங்கள் முன்பே வந்துவிட்டாய் அல்லவா, அதற்காக என் கோபத்தை உனக்காக விட்டு கொடுக்கிறேன் நண்பா” என்று தீட்சண்யர் கூற, 

“தீட்சண்யா, என்ன மூன்று வாரங்களா? நீ தவறாக புரிந்து கொண்டாய். நான் இரண்டு தினங்களில் சந்திர நாடு திரும்ப வேண்டும். சென்றுவிட்டு உன் திருமணத்திற்கு வருகை தருகிறேன். தவறாக எண்ணிக் கொள்ளாதே. அங்கே கார்முகிலனின் கூட்டத்தினர் ஒருபுறம், மக்களுடைய துயரங்கள் மறுபுறம். இது போன்ற தருணங்களில் நான் எவ்வாறு இங்கே இத்தனை நாட்கள் செலவழிக்க இயலும்” என்றார் இயலாமையுடன். 

“ரூபனா நீ இரவு பகல் பாராமல் அரச அலுவலில் ஈடுபடுவதாக கேள்வி படுகிறேன். உன் உடல்நிலையை கவனித்துக் கொள். அவ்வப்பொழுது ஓய்வெடு” என நண்பனாய் கவலை கொண்டார் தீட்சண்யர். 

அதன்பிறகு இருவரும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு, தீட்சண்யர் அவர் குடும்பத்தினருடன் தங்கியிருந்த அரண்மனைக்கு சென்றனர். 

“நீ இங்கே வந்ததை தாயாருக்கு தெரிவித்து விட்டேன். உனக்காக இன்று விருந்து தயாராகிக் கொண்டிருக்கிறது. என் அன்னையார் உன்னைக் காண வேண்டும் என்று மிகவும் ஆவலாக இருக்கிறார் ரூபனா. உன்னைப் பார்த்தால் மிகவும் மகிழ்ந்து போவார்.” 

“தீட்சண்யா உன் தாயாரிடம் என்னைப்பற்றி கூறியிருக்கிறாயா?” என்றார் ஆச்சர்யத்துடன். தன்னைக் காண வேண்டும் என்கிற ஆவல் என்றால், தம்மைப்பற்றி அடிக்கடி பேசியிருக்கிறான் என்று எண்ணும் பொழுதே மனதிற்குள் இதமாக இருந்தது. 

“இது என்ன கேள்வி ரூபனா? உன்னைப்பற்றி கூறாமலா? நாங்கள் நால்வரும் உணவருந்தும் பொழுது, உனது ஓலைகளைப் பற்றி அதில் நீ அனுப்பிய செய்திகளைப் பற்றி தாயாரிடமும், சமுத்திராவிடமும் கூறியே ஆகவேண்டும்” என்றார் கட்டுப்படுத்திய புன்னைகையோடு. 

“கூறியே ஆக வேண்டுமா? ஏன் அப்படி என்ன கட்டாயம் தீட்சண்யா” முகம் முழுக்க குழப்பத்துடன் ரூபனர் இருந்தார். 

“அது என்னவோ தெரியவில்லை ரூபனா. நான் சந்திர நாட்டின் நிலவரத்தைப் பற்றி இங்கு வந்த புதிதில் கூறினேன். அதன்பிறகு தாயார், சந்திர நாட்டின் தற்போதைய நிலவரங்களை கேட்டுக் கொண்டே இருந்தார். பிறகு எனக்கும் அதுவே பழக்கம் ஆகிவிட்டது. நானே மறந்து விட்டாலும், எனக்கு ஒரு அருமை தங்கை இருக்கிறாளே, ‘அம்மா இன்று சந்திர நாட்டிலிருந்து அண்ணனுக்கு ஓலை வந்தது என்று நினைக்கின்றேன்’ என்று தாயாரிடம் கூறிவிடுவாள். அதன்பிறகு, நான் மறைக்க இயலுமா சொல்.” 

“என்ன தீட்சண்யா. நான் நீயும், தந்தையாரும் மட்டுமே கலந்துரையாடுவீர்கள் என்று நினைத்தேன். நீயும் இதுவரை இதனைப் பற்றி கூறியது இல்லையே.” 

“இதற்காக ஏன் வருத்தம் கொள்கிறாய் ரூபனா? மன்னித்துவிடு. நீ தவறாக எடுத்துக் கொள்வாய் என்று தெரியாது.” 

“தீட்சண்யா தவறாக எல்லாம் எடுத்துக் கொள்ளவில்லை. அவர்களிடம் கூறுவாய் என்று தெரிந்திருந்தால், அவர்களின் நலனையும் விசாரித்திருப்பேன் அல்லவா?” 

சற்றே சத்தமாக சிரித்தவர், “அனைவரும் நலத்தையையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் என்று ஓலையினை முடித்திருப்பாயே! அப்பொழுது என்னுடைய, தந்தையாருடைய நலத்தை மட்டும்தான் கேட்டிருந்தாயா? நான் கூட வேறுமாதிரி நினைத்தேன்.” 

‘இவனிடம் பேச்சை வளர்ப்பது சரியில்லை போல. பேச்சின் திசை மாறி போகிறது’ என்ற சிந்தனையில் ரூபனர் அமைதியாக பதில் கூறாமல் இருக்க, அதற்குள்ளாக அரண்மனைக்கு வந்திருந்தனர். 

லலிதாம்பிகை தேவியார் தீட்சண்யர் கூறியது போல, ரூபனரை மிகவும் எதிர்பார்த்து காத்திருந்தார். ரூபனரை வரவேற்று உபசரித்தார். முன்பே விருந்துண்ண வந்தபொழுது அவரைப் பார்த்து பேசி இருந்தாலும், இந்த முறை இன்னும் சற்று உரிமையையாய் ரூபனர் உணர்ந்தார்.

சிறிது நேரம் ரூபனரின் நலத்தையும், நாட்டின் நிலையையும் லலிதாம்பிகை தேவியார் கேட்டறிந்தார். அப்பொழுது தீட்சண்யர், “அம்மா விருந்தை சமைத்துவிட்டு இப்படி பேசிக் கொண்டே இருக்கிறீர்களே?” என்று புன்னகையுடன் கேட்க, 

“சரி வாருங்கள் உணவு தயாராக இருக்கிறது” என்று ரூபனரிடமும், தீட்சண்யரிடமும் கூறியவர், அங்கிருந்த பணிப்பெண்ணிடம், “சமுத்திராவை உணவருந்த அழைத்து வாருங்கள்” என கூறினார். 

“என்ன அம்மா அதற்குள் சமுத்திரா திரும்பி விட்டாளா?” 

“அதே ஆச்சர்யம் தான் எனக்கும் தீட்சண்யா. எப்பொழுதும் திரும்புவதற்கு முன்மாலை பொழுதாகிவிடும். இன்றானால், வெகு நேரம் முன்பே வந்துவிட்டாள்” 

“என்ன அம்மா உடல்நிலை எதுவும் சரியில்லையா? சிறிது நாட்களாக சற்று முகமலர்ச்சி குறைந்துதான் காணப்படுகிறாள்” 

“இல்லை தீட்சண்யா வழக்கத்தை விடவும் இன்று பிரகாசமாகத்தான் காட்சியளித்தாள். ஆனால், வழக்கத்தை விடவும் சற்று அமைதியாக இருந்தாள்” 

“என்ன அம்மா எதையுமே தெளிவாக கூற மாட்டீர்களா? ஏன் விரைவில் வந்துவிட்டாளாம்?” 

“சென்ற வேலை முடித்துவிட்டதாம்” 

“என்ன அதிசயம் அம்மா. அவளுக்கு இல்லாத வேலைகளையும் உருவாக்கித்தானே பழக்கம்” என்றார் ஆச்சர்யத்துடன். 

இவர்கள் உரையாடல்களை கவனித்துக் கொண்டு சமுத்திராவின் வரவிற்காக காத்திருந்தார் ரூபன சத்ரியர்.

_row]

Advertisement