Advertisement

சத்ரிய வேந்தன் – 21 – உதவிக்கரம்

பகல் பொழுதினில் விழிகளால் உணர முடியா விண்மீன்களையும், நிலவையும் இரவு புலர்ந்ததும் உணர முடிதல் போன்று, இத்தனை நேரமும் சமுத்திராவின் கூடவே இருந்தபொழுது உணர முடியா ஒரு இனம்புரியா உணர்வை, பிரிவு நெருங்குகையில் ரூபனரின் மனம் உணர்ந்து கொண்டு தவித்தது.

ஏனோ சமுத்திராவுடன் இருக்கும் இந்த நேரம் நீள வேண்டும் என மனம் ஏங்கியது, சமுத்திராவுடன் இருக்கும் இந்த தருணத்தின் ஆயுள் குறைவென தெளிவுற உணர்ந்தும் மனம் அதனை ஏற்க மறுத்தது.

நேற்று வரையிலும் யாரென்றே தெரியாத பெண், இன்று ரூபன சத்ரியரின் மனம் முழுதும் ஆக்கிரமித்து, அவளைப் பிரிவதே கடினம் என்ற நிலைக்கு மாற்றியிருந்தாள்.

சமுத்திராவின் மனமும் அதே நிலைமையில் தான் இருந்தது. தமது படைகள் தம்மை நோக்கி வருவதால் முகம் மலர்ந்த மறுநிமிடமே, ரூபனரைப் பிரிய போவது எண்ணி கலங்கத் தொடங்கியது.

ஏன் இந்த கலக்கம் என்று தான் அவளுக்கு புரியவில்லை. முன்பின் அறியாதவர் மீது இப்படி ஒரு எண்ணம் தோன்ற, அதனைப்பற்றி மேலும் மேலும் ஆராய மனம் விளையவில்லை.

உடன் இருக்கும் இந்த குறுகிய காலத்தையும் அமைதியில் கழிக்க மனம் விரும்பாமல், “என்ன உங்களுக்கு இன்னும் சந்தேகங்கள் தோன்றாமல் இருக்கிறதே?” என்று பேச்சை தொடங்கினாள் இளவரசி சமுத்திர தேவிகை.

ரூபனர் மனதிலும் சந்தேகங்கள் இருக்கத்தான் செய்தது. ஆனால், அதை தெளிவு படுத்திக்கொள்ளும் மனநிலையில் அவர் இல்லை.

“என்ன சந்தேகம் சமுத்திரா?”

“இல்லை இந்நேரம், ‘படைகள்தான் நம்மை நோக்கி வருகிறார்களே, நாமும் எதிரினில் சென்றால் விரைவாக அவர்களுடன் இணைந்து விடலாமே’ என்கிற சந்தேகம் உங்களுக்கு வந்திருக்க வேண்டுமே!” என அவரை சரியாக கணித்து கேட்டாள்.

அவள் கேட்டது பேச்சை வளர்க்கும் எண்ணத்தில்தான், ஆனால் அவளுடைய யூகம் கூட மிக சரியாகவே இருந்து ரூபனரை இம்சித்தது.

‘பெண்ணே! ஏற்கனவே என் மனம் இறகில்லாமல் உன் பின்னால் சுற்றுகிறது. இதில் நீ வேறு என் மன எண்ணங்களை சரியாக கணித்து என்னை மிகவும் சோதிக்காதே’ என்று மனதிற்குள் புலம்பினார்.

இளவரசி சமுத்திர தேவிகையின் யூகம் மிக சரிதான். இந்த சந்தேகம் ரூபனருக்கு எழுந்திருந்தது. ஆனால், எழுந்த மறுநிமிடமே, ‘இதைச் சொல்லி சமுத்திராவும் சம்மதித்து விட்டால், அவளுடன் இருக்கும் நேரம் இன்னும் குறைந்துவிடுமே!’ என கலங்கியவர், அவளிடம் தமது சந்தேகத்தை கேட்கவியில்லை.

“என்னவாயிற்று? எதனை சிந்தித்துக் கொண்டிருக்கிறீர்கள்?” ரூபனரின் சிந்தனை கொண்ட முகத்தை நோக்கியவாறு கேட்டாள்.

“ஒன்றும் இல்லை சமுத்திரா. நாம் அவர்களை நோக்கி செல்லாமல் இருக்கும் காரணம் நானே அறிவேன். பிறகு எதற்காக உன்னிடம் சந்தேகம் கேட்க வேண்டும்?”

“நீங்களே அறிவீர்களா? எங்கே கூறுங்கள் பார்ப்போம்?” என்றாள் ஆச்சர்யத்துடன்.

“நாம் இங்கிருந்து தனித்து செல்வது பாதுகாப்பாற்றது. இடையில் விலங்குகளினால் ஆபத்து ஏற்படின் சமாளிப்பது கடினம். அவர்கள் கூட்டமாக வருவதால், சமாளித்து இங்கே வந்துவிடுவார்கள்.

பிறகு, நாம் இத்தனை நேரமாக இங்கே இருக்கிறோம். இதுவரை எந்த விலங்கும் தென்படவில்லை. ஆகவே இது சற்று பாதுகாப்பான பகுதியும் கூட. எனவே இங்கிருப்பது நல்லது. அப்படித்தானே?

உன் அளவு இல்லை என்றாலும் எனக்கும் சிந்தனை திறன் இருக்கிறது சமுத்திரா. நீ கேட்பதைப் பார்த்தால் என்னை அடி முட்டாளாக சித்தரித்து விட்டாய் போல” புருவங்கள் உயர்த்தி கேட்டவரின் ஆளுமையில் அவள் தன்னிலை மறந்துதான் போனாள்.

ஏனோ அவருடைய ஒவ்வொரு செயல்களும், அவளுடைய மனதில் ஆழப்பதிந்து இம்சித்தது.

“அப்படி எல்லாம் எதுவும் இல்லை. தாங்கள் பொதுவாக பல சந்தேகங்களை கேட்டுக்கொண்டே இருப்பீர்களா அதனால்தான் அவ்வாறு கேட்டேன்.

மற்றபடி உங்கள் மீது, நீங்கள் கூறியபடி தவறான அபிப்பிராயம் எதுவும் இல்லை” எங்கே ரூபனர் தன்னை தவறாக எண்ணி விடுவாரோ என்கிற கவலையில் தலைதாழ்த்தி மெல்லிய குரலில் கூறினாள்.

‘பிறகு, உனக்கு என் மீது என்ன மாதிரியான அபிப்பிராயம் சமுத்திரா?’ என்று கேட்க நினைத்த கேள்வியை தொண்டைக்குழியிலேயே விழுங்கிக் கொண்டார், முதன்முறை பார்த்த பெண்ணிடம் இதுபோல கேட்பது முறையானதாக தெரியவில்லை அவருக்கு.

அவரின் சிந்தனையை கலைக்கும் வண்ணம் கொம்பின் ஒலி கேட்டது.

“வழி தெரியாது நிற்கிறார்கள் போலும். இந்தாருங்கள் இதை விண்ணில் எய்து விடுங்கள்” என்றவாறு பல வண்ண மலர்கள் நிறைந்த இலைப்பந்தினை ரூபனரிடம் கொடுக்க, அவரும் வான் நோக்கி அதனை எய்தினார்.

மலர் பந்து வானில் சிதறுவதை கவனித்த தீட்சண்யர், “அதோ அந்த திசையில் செல்ல வேண்டும். விரைந்து வாருங்கள் இருள் சூழும் முன்பு சமுத்திரா இருக்கும் இடத்திற்கு செல்ல வேண்டும்” என்று தமது படைகளை துரிதப்படுத்தி வனத்திற்குள் வந்தார்.

வரும் வழி முழுவதும் திரும்பி செல்வதற்காக அடையாளத்தை ஏற்படுத்திக்கொண்டும், இடையில் வரும் விலங்குகளை அழித்த படியும் தீட்சண்யரின் படை வந்து கொண்டிருந்தது.

தீட்சண்யரும், அவர் படைகளும் அருகினில் நெருங்க நெருங்க ரூபனரின் அங்கவஸ்திர கொடியின் உதவியுடன் சமுத்திரா, ரூபனர் இருக்கும் இடத்தை நோக்கி வந்தனர்.

மாலை மங்கும் பொன் வெயில் நேரத்தில், சற்று தொலைவினில் பலர் வருவதைக் கண்ட ரூபனர் வியந்தார்.

“சமுத்திரா நீ கூறியது அவர்களையா என்று பார்” என அந்த கூட்டத்தினரைக் கேட்க,

“ஆம்” என்றவள் உற்சாகமானாள்.

“சமுத்திரா நீ கூறியபொழுது கூட, உன் உடன் பிறந்தவர்களோ, உறவினர்களோ வருவார்கள் என்று எதிர்பார்த்தேன். ஆனால், இது என்ன குதிரைகளில் வாளும், வேலும், வில் அம்புகளையும் ஏந்திய வீரர்கள்? இதனை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை” என்றார் வியப்புடன்.

சிறு புன்னகையை மட்டும் பதிலாக்கினாள். ‘நாம் கூறும் முன்பு அவரே புரிந்து கொள்வார் போலும்’ என்று எண்ணி நிம்மதி அடைந்த அதே தருணம், அவருக்கு நான் மருத தேசத்து இளவரசி என்கிற உண்மை தெரிந்த பின்னர் என்னிடம் ஒதுக்கம் காட்டக்கூடுமோ என்கிற கவலையும் மனதில் எழுந்தது.

“மருத அரசர் சிறப்பை பற்றி கூறிக்கொண்டே போகலாம். அவர்தான் தம் மக்கள் மீது எத்தனை அன்பு கொண்டுள்ளார்” என மனமார ரூபனர் கூற,

‘இவர் ஏன் திடீரென்று தந்தையின் புகழை பாடுகிறார்?’ என சமுத்திரா எண்ணிக்கொண்டிருக்கும் பொழுதே, ரூபனர் தொடர்ந்தார்.

“தேசத்தின் குடிமகள் காணவில்லை என்றதும் நாட்டின் காவல் வீரர்களையே அனுப்பி வைத்திருக்கிறாரே!

அவருக்கு சாதாரண குடிமக்களாக இருந்தாலும், மந்திரி பெருமக்களாக இருந்தாலும், அரச குடும்பத்தினராக இருந்தாலும் ஆபத்து என்று வந்துவிட்டால் அனைவரும் ஒன்றுதான்.

ஆபத்தில் இருப்பவரை காப்பாற்றுவதே தலையாய கடமை அவருக்கு” தந்தையினைப் பற்றி பெருமிதமாக ரூபனர் கூற அவள் உள்ளம் குளிர்ந்தது.

ஆம் ரூபனர் கூறியதும் உண்மைதான். இந்த நிலையில் யார் இருந்திருந்தாலும் தமது தந்தையார் ஆபத்தில் இருப்பவர்களை மீட்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பார் என்று எண்ணுகையிலேயே தந்தையை நினைத்து மனம் மலர்ந்து, முகமும் மலர்ந்தது.

அவளது மலர்ந்த முகத்தையே இமைக்காது பார்த்துக் கொண்டிருந்த ரூபனர், தன்னிலை மறந்து ரசிக்கலானார். ஏனோ சிந்தையே மயங்கிவிடும் போன்றதொரு உணர்வு. தமது இதழ்களில் மென்னகையை படரவிட,

‘இவரின் புன்னகை முகம் தான் எத்தனை அழகு!’ தன்னை மறந்து சமுத்திராவும் ரசிக்கலானாள்.

அருகினில் கேட்ட குதிரைகளின் காலடி ஓசையில் இருவரும் தமது பார்வைகளை விலக்கிக் கொள்ள, ரூபனர் அந்த படை வீரர்களைக் காண, தீட்சண்யர் அவர்களுக்கு தலைமை தாங்கி வருவதைக் கண்டு ஆச்சர்யமடைந்தார்.

“சமுத்திரா அங்கே பார். உன்னைக் காண அரசர் படைகளை மட்டும் அனுப்பிடவில்லை. சந்திர நாட்டின் யுவராஜர் தீட்சண்ய மருதரையே அனுப்பி இருக்கிறார்” எனக் கூற,

‘நல்ல வேளை தந்தையாரும் கிளம்பி வரவில்லை’ என நிம்மதியுற்றவள், தமையனின் வசை மொழிகளில் இருந்து தப்பிக்கும் மார்க்கத்தை கலக்கத்துடன் யோசிக்கலானாள்.

தீட்சண்யர் வருவதை சமுத்திராவிடம் கூறிவிட்டு, ரூபனர் தீட்சண்யரை நோக்கி செல்ல, தீட்சண்யரும் சமுத்திரா, ரூபனர் இருவரையும் ஒன்றே கண்ட வியப்போடு எதிரே வந்தார்.

“தீட்சண்யா உன்னை இன்றே காண்பேன் என நான் கனவிலும் எண்ணவில்லை. இந்த எதிர்பாரா சந்திப்பு எத்தனை மகிழ்வைத் தருகிறது தெரியுமா?” என்றபடி தீட்சண்யரை ரூபனர் ஆரத்தழுவிக் கொண்டார்.

“ரூபனா நீ எங்கே இங்கு? நேற்றுதான் பட்டாபிஷேகம் நடைபெற்றது. அதற்குள் நடுக்காட்டில் என்ன செய்து கொண்டிருக்கிறாய்?” நண்பனை உரிமையாய் அதட்டும் தோரணையில் தீட்சண்யர் கேட்க, 

இவர்கள் உரையாடல்களைக் கேட்ட சமுத்திரா என்ன மாதிரி உணர்ந்தாள் என்றே வரையறுக்க இயலவில்லை. குழப்பம், ஆச்சரியம், அதிர்ச்சி என பல வகையான மனோநிலையில் இருந்தாள்.

ரூபனரும், தீட்சண்யரும் அறிமுகமானவர்கள் என்பதே அதிர்ச்சி என்றால், ஒருமையில் பேசிக்கொள்ளும் அளவு நண்பர்கள் என்பது பேரதிர்ச்சி. தீட்சண்யர் அனைவரிடமும் நட்பு பாராட்டும் ரகம்தான் எனினும், அவ்வளவு எளிதாக யாரிடமும் மிகவும் நெருங்கி பழக மாட்டார்.

ஆனால், ரூபனரும் தீட்சண்யரும் ஆரத்தழுவி இருக்கும் காட்சியே அவர்களின் உறவின் ஆழத்தை தெளிவுற உணர்த்துகிறதே!

‘அதோடு, பட்டாபிஷேகம் என்றார்களே, அப்படியானால் ரூபன சத்ரியர் தான் சந்திர நாட்டின் புதிய வேந்தரா? ஆமாம் வேங்கை நாட்டு இளவரசர் அருளோன் சந்திர நாட்டின் வேந்தர் பெயரை கூறி தானே அனுப்பினார். அதை எப்படி மறந்தேன்?’

தமது சிந்தனையில் சமுத்திர தேவிகை மூழ்கியிருக்க, ரூபனர் பதில் கூறும் முன்பு, தீட்சண்யர் ரூபனரிடம், “பொறு நண்பா விவரங்களை பிறகு கேட்கிறேன். வந்த வேலையை முதலில் கவனிப்போம்” என்றபடி காவலர்களிடம் அனைவரும் தங்குவதற்கு கூடாரம் அமைக்க சொல்லி உத்தரவு பிறப்பித்து விட்டு சமுத்திராவை நோக்கி நகர்ந்தான்.

ஒருவித படபடப்புடனேயே தீட்சண்யரைப் பார்த்துக் கொண்டிருந்தாள் சமுத்திரா.

தீட்சண்யர் எவ்வளவு அன்பானவரோ, அதே அளவு கண்டிப்பும் கொண்டவர். எதையும் துணிந்து செய்துவிடும் சமுத்திரா தீட்சண்யரிடம் மாட்டிக் கொண்ட பின்னரே, ‘ஏன் அவ்வாறு செய்தோம்?’ என்கிற ஞானோதயத்தை பெறுவாள்.

“வா இங்கு வந்து அமர்ந்துகொள்” என்று சமுத்திராவைப் பார்த்து தீட்சண்யர் கூற, அவனது கோப வார்த்தைகளில் பயம் எட்டிப்பார்க்க, தலையைக் குனிந்தபடி தீட்சண்யர் அமர்ந்திருந்த மரத்தின் அடியில் சென்று அமராமல், அமைதியாக நின்று கொண்டாள்.

தீட்சண்யரின் கோப முகம் ரூபனருக்கு புதிதாய் இருக்க, சமாதானம் செய்யும் நோக்கில், “அறியா பெண்பிள்ளை. தெரியாமல் செய்து விட்டாள் போலும். நீராடும்பொழுது இவ்வாறு நேரிடும் என்று அவளும் எண்ணி இருக்க மாட்டாள் இல்லையா?

அதோடு என்னதான் நாட்டின் யுவராஜனாக நீ இருந்தாலும், ஒரு பெண்பிள்ளையை நீ கண்டிப்பது முறையானதாக இருக்காது. அவர்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைத்து விடலாம். கண்டிக்கும் உரிமை அவர்களுக்குத்தான் இருக்கிறது தீட்சண்யா” என கூற,

இருக்கும் நிலைமை மறந்து சமுத்திராவுக்கு புன்னகை வர, அதைக் கட்டுப்படுத்த பெரும் முயற்சி செய்தாள்.

அதனை சரியாக கணித்த தீட்சண்யர், “சமுத்திரா…” என்றார் அதட்டலுடன்.

அவர் ஆளுமையான குரலில், மீண்டும் முகம் வாடி தலை குனிந்து கொண்டாள்.

“ரூபனா இவள் யாரென்று உனக்கு தெரியாதா?” தீட்சண்யர் ரூபனரிடம் கேட்க,

“பெயரையும், நாட்டையும் மட்டும்தான் கேட்டேன் தீட்சண்யா” என்று ரூபனர் சொல்லி முடிக்கும் முன்னர், 

“அண்ணா! உங்கள் தோழர் கூடத்தான், அவர் யார் என்பதை கூறவில்லை. நீங்கள் என்னிடம் மட்டும் குறையை கண்டுபிடிக்காதீர்கள்” என்று தன்மேல் இருக்கும் குற்றங்கள் பெருகுவதை பொறுக்க முடியாமல் இடையிட்டு சமுத்திரா பேசினாள்.

‘இவள் தீட்சண்யரை என்னவென்று அழைத்தாள். அண்ணன் என்றா? அவ்வாறெனில் சமுத்திரா?’ என ரூபனர் யோசனையில் மூழ்க,

“சமுத்திரா…” என்று மீண்டும் அதட்டினார் தீட்சண்யர்.

மீண்டும் முகம் வாட, அதனைக் கண்ட இருவருக்கும் உயிர் துடிக்க, முகத்தினில் எந்த வித பாவனையும் வெளிப்படுத்தாமல் இருந்தனர்.

“நீ எதற்காக சிவன் ஆலயம் சென்றாய் என்பதை நான் அறிவேன்” என சமுத்திராவிடம் தீட்சண்யர் கூற,

“அண்ணா நீங்கள் நினைப்பது போல் இல்லை…” என சமுத்திரா மறுத்து கூற வந்ததை தடுத்தவர்,

“நான் என்ன நினைத்தேன் என்று இன்னும் கூறி முடிக்கவே இல்லை” என்றார் முறைப்புடன். எப்படியும் தமையனிடம் இருந்து தப்பிக்க இயலாது என்பதால் அமைதியாக நின்றாள்.

“சரி அந்த பிரச்சனையை பிறகு பார்த்துக் கொள்ளலாம். ஆலயம் சென்றாய் சரி, எதற்காக நீராடினாய்? அரண்மனையில் இல்லாத குளமா?”

“இல்லை அண்ணா உண்மையிலேயே அறியாமல் நடந்துவிட்ட ஒன்று. நான் வேண்டுமென்றே செய்யவில்லை. எப்படி கவனம் சிதறியது என்றே தெரியவில்லை அண்ணா. மன்னித்து விடுங்கள். இனி ஒருபொழுதும் இப்படி கவனக்குறைவாக நடந்து கொள்ள மாட்டேன்” விழிகள் கலங்க சமுத்திரா கூற,

சமுத்திரா கண்கலங்குவதை தாங்கமுடியாத தீட்சண்யர், “சரி இங்கே வா சமுத்திரா” என அருகே அழைத்து, அவளுடைய தலையை மெல்ல வருடிவிட, 

நொடியில் முகம் மலர்ந்தவள், “கோபம் குறைந்து விட்டதா அண்ணா?” என்றாள் நெகிழ்வுடன்.

“எப்படி துடித்து விட்டோம் தெரியுமா? உன்னைப் பார்த்ததும்தான் உயிரே மீண்டு வந்தது. எங்களைப் பற்றிய எண்ணமே உனக்கு இல்லையா?” என்றார் வருத்தம் இழையோடிய குரலில்.

“அண்ணா தந்தையார் அடிக்கடி ‘எல்லாம் நன்மைக்காகவே’ என்று கூறுவார் தானே. இதனையும் அது போல எடுத்துக் கொள்வோம் அண்ணா. உண்மையிலேயே அறியாமல் நடந்து விட்டது அண்ணா” என்று கூறிக்கொண்டிருக்கும் பொழுது, அவளின் பார்வை ரூபனர் கவனிக்காத வண்ணம், ரூபனரை தொட்டு மீள, அதனை தீட்சண்யர் கவனித்துவிட்டார்.

“அப்படி என்ன நன்மை சமுத்திரா?” அவளையே ஊடுருவியபடி தீட்சண்யர் கேட்க,

ஒருவேளை அண்ணன் கவனித்திருப்பரோ என அவரையே ஆழ்ந்து நோக்க, அவர் முகபாவத்திலிருந்து எதையும் கணிக்க இயலவில்லை. அவர் தன் பதிலுக்காக காத்திருப்பதை உணர்ந்து,

“அது… அது.. நான் இங்கு வரவில்லையெனில், உங்கள் ஆருயிர் நண்பரை காப்பாற்றுபவர் தான் யார்? அண்ணா தங்களுக்கு தெரியுமா எனக்கு மயக்கம் தெளிய வைத்ததும், இந்த திக்கு தெரியாத கானகத்தில் இருந்து என்னை அழைத்து செல்வதாக கூறுகிறார். எந்த திசையில் செல்ல வேண்டும்? எப்படி இங்கிருந்து வெளியேறுவது என எந்த திட்டமிடுதலும் இல்லாமல் இப்படி கூறியவரை தனியே விட்டிருந்தால், தந்தையின் இரண்டாண்டு தேடலும் ஒரே நாளில் வீணாகி இருக்குமே!” என கண்சிமிட்டி தமையனிடம் கூறினாள்.

‘சமுத்திரா எப்படி சமாளிக்கிறாய். என் மனதை மட்டும் நொடியில் கணித்தாய். உன்னை நான் அறிய மாட்டேனா?’ என மனதிற்குள் எண்ணிய தீட்சண்யர்,

“என் நண்பனை மிகவும் குறைவாக எடை போட்டு விட்டாய் சமுத்திரா. நீ இருந்ததால்தான் அவன் இன்னும் இந்த கானகத்திற்குள் இருக்கிறான்.

நீ இல்லையெனில் இந்நேரம் நாடு திரும்பியிருப்பான். உன் புத்தியின் வேகத்தைக் காட்டிலும் அவனுடைய வீரத்தின் வேகம் அதிகம்.” தீட்சண்யர் கூறியதும் உண்மைதான். சரியோ தவறோ துணிந்து முடிவெடுத்து, செயல்படுத்தி எப்படியும் நாடு திரும்பியிருப்பார் ரூபனர்.

இவர்கள் இருவரும், உரையாடிக் கொண்டிருக்க, தங்குவதற்கான கூடாரங்களை வீரர்கள் அமைத்து, சிறு கட்டைகளை வைத்து, நெருப்பு மூட்டியிருந்தனர்.

காட்டில் கிடைத்த கிழங்குகளை நெருப்பில் சுட்டு அதோடு காட்டில் பறித்த பழங்களையும் அனைவரும் உண்ணக் கொடுத்தனர். அதன்பிறகு, சில வீரர்கள் காவல் காக்க மற்றவர்கள் ஓய்வெடுக்க தயாராயினர்.

சமுத்திராவை கூடாரத்திற்கு அனுப்பிவிட்டு, ரூபனரை நோக்கி திரும்பியவர், “நேற்றுதான் பட்டாபிஷேகம் முடிந்துள்ளது. அடுத்த தினமே உனக்கு கானகத்திற்குள் என்ன வேலை?” என்றார் கோபத்துடன்.

Advertisement