Advertisement

அத்தியாயம் –5

 

 

“அஞ்சு நான் ஊருக்கு போறேன், எதுவும் சேதி இருக்கா?? என்று அஞ்சனாவை பார்த்து கேட்டாள்.

 

 

“என்ன சேதி சொல்லணும் உன்கிட்ட… யாருக்கு சேதி சொல்ல சொல்ற

 

 

“மாமாவுக்கு… உன்னோட மாமாவுக்கு எதுவும் சேதி இருக்கா… இல்லை எதாச்சும் கூரியர் டெலிவர் பண்ணணுமா சொல்லும்மா… ப்ரீ சர்வீஸ் பண்ணி தரேன் என்று வம்பிழுத்தாள் அவள்.

 

 

“வேணாம்டி என்னை வெறுப்பேத்தாம போயிரு மரியாதையா

 

 

“நான் என்ன தப்பா கேட்டேன், முடிஞ்சா கொடு இல்லன்னா விடு

 

 

“போடி நீ வேற, எனக்கு லீவ் வரும் போது போகலாம்ல நானும் வருவேன்ல… இப்போ நீ மட்டும் ஜாலியா ஊருக்கு போற என்று இடித்தாள் அஞ்சனா.

 

 

“நீ இன்னும் வளரவே இல்லை அஞ்சு… நான் என்னமோ லீவ்க்கு ஊருக்கு போற மாதிரி இப்படி சலிக்கிற, நானே ஆபீஸ் வேலையா போறேன்

 

 

“இருந்தாலும் அத்தை வீட்டுக்கு போறியே, நீ மட்டும் ஜாலியா இருப்பியே… அத்தை விதவிதமா பலகாரம் எல்லாம் செஞ்சு கொடுப்பாங்க… நீ மட்டும் தனியா மொக்குவ

 

 

“ஹா…ஹா…ஹா… உன்னோட கவலை அது தானா… அது மட்டும் தானா… இல்லை மாமாவை சைட் அடிக்க முடியாதேன்னு உனக்கு கவலையா??

 

 

“போடி நீ வேற…

 

 

“சரி சரி எல்லாம் விடு… இப்போ சீரியஸா கேட்குறேன்… மாமாவுக்கு எதுவும் கொடுத்தனுப்ப போறியா??

 

 

“ஹ்ம்ம்… ஆமா அவருக்கு ஒரு சட்டை எடுத்து வைச்சு இருக்கேன். அம்மாக்கு தெரியாம என்னோட பீரோவில வைச்சு இருக்கேன். அப்புறம் நானே எடுத்து அதை உன் பெட்டில வைச்சுடறேன் அவர்கிட்ட கொடுத்திரு.நானும் லீவ் கிடைக்கும் போது ஊருக்கு வரப் பார்க்குறேன்

 

 

“அஞ்சு அதெல்லாம் நடக்குமா… அம்மா அனுப்பிட்டு தான் மறுவேலை பார்ப்பாங்கன்னு நினைக்கிறியா நீ… கல்யாணப் பேச்சுன்னு வந்திடுச்சு… நிச்சயமும் முடிஞ்சிடுச்சு…

 

 

“இனி அப்படி எல்லாம் அம்மா அனுப்ப மாட்டாங்க… மாமாவுக்கு வேலைக்கு ஆர்டர் வந்திட்டா உங்க கல்யாண தேதியும் உறுதி ஆகிடும்… அதுவரைக்கும் உன்னால பொறுக்க முடியாதா… அவ்வளோ லவ்வா உனக்கு மாமா மேல. எங்க எல்லாரும் விட அவர் தான் இப்போ உனக்கு முக்கியமா போய்ட்டார்ல

 

 

“ஹேய் போடி சஞ்சு… உனக்கு அதெல்லாம் புரியாது… உனக்கும் ஒருத்தன் வந்து சிக்குவான்ல அப்போ தெரியும் என்னோட கஷ்டம் என்னன்னு. சரி நீ ஊருக்கு கிளம்ப எல்லாம் எடுத்து வைச்சுட்டியா… நாளைக்கு எத்தனை மணிக்கு கிளம்பற என்று அஞ்சனா அவளை எல்லாம் விசாரித்துக் கொண்டு கவனமாக இருக்குமாறு கூறினாள்.

 

 

இருவரும் பேசிக்கொண்டு வெளியில் வர அந்த மக்களை பெற்ற மகராசன் ரங்கராஜன் “சஞ்சும்மா என்றழைத்தார்.

 

 

“ப்பா… என்னப்பா சொல்லுங்க

 

 

“ஒரு முக்கியமான விஷயம்மா… நீ ஊருக்கு போயிட்டு வர்றதுக்குள்ள உனக்கு மாப்பிள்ளை பார்த்து வைக்கலாம்ன்னு உங்கம்மா…. இல்லையில்லை நாங்க முடிவு பண்ணி இருக்கோம்என்று அவசரமாக மனைவி முகத்தை பார்த்துவிட்டு மகளிடம் கூறினார்.

 

 

“அப்பா என்னப்பா விளையாடுறீங்களா???

 

 

“என்னடி அப்பா… விளையாடுறதுக்கு நீ என்ன சின்ன குழந்தையா??? உன்னோட பிறந்தவ, அவளுக்கு நிச்சயமும் முடிஞ்சிடுச்சு… உனக்கும் நாங்க காலாகாலத்துல ஒரு கல்யாணம் பண்ணி வைக்க வேணாமா??

 

 

“அப்ப தானே நாங்க நிம்மதியா இருக்க முடியும்… சும்மா எப்போ பார்த்தாலும் கல்யாணம் வேணாம் வேணாம்ன்னு சொல்லிட்டு போடி என்று முறைத்தார்.

 

 

“ஓ… அந்தளவுக்கு ஆகிடுச்சா… அப்போ உங்களோட கவலை என்னையும் அஞ்சுவையும் வீட்டை விட்டு துரத்தறது… அதுக்கு அப்புறம் நீங்க சந்தோசமா இருந்துடுவீங்களா

 

 

“உங்களை பிரிஞ்சா எங்களுக்கும் கஷ்டம் தான்… ஆனாலும் எல்லாம் நேரம் காலம் பார்த்து முடிச்சிட வேண்டாமா???

 

 

“அம்மா உனக்கு அப்பாவோட ஹனிமூன் போக மூடு வந்திடுச்சு… அதுக்கு என்னை பெட்டிய கட்ட பார்க்குறியா??? என்றதும் ரங்கராஜன் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தார்.

 

 

ராணியோ அவளை அடிக்க கையை ஓங்க அவருக்கு போக்கு காட்டி ஓடிக் கொண்டிருந்தாள். அவரால் முடியாமல் மூச்சு வாங்க நெஞ்சை பிடித்துக் கொண்டு சோபாவில் அமர்ந்துவிட்டார்.

 

 

பயந்து போன சஞ்சு வேகமாக அவர் காலடியில் அமர்ந்தவள் “அம்மா… எதுக்கும்மா நெஞ்சை பிடிக்கிற… என்னம்மா செய்யுது என்று கூற அஞ்சுவும் ரங்கராஜனும் அருகே வந்தனர்.

 

 

‘அடிப்பாவி நான் மூச்சு வாங்க தானே சோபாவில உட்கார்ந்தேன்… இதுக்கே பயந்துட்டாளே… இதையே சாக்கா வைச்சு இவ கல்யாண பேச்சை ஓகே பண்ணிட வேண்டியது தான் என்று சடுதியில் முடிவெடுத்தவர் மகளை பார்த்தார். “என்ன சஞ்சும்மா செய்ய, எல்லாம் உன்னை பத்தி தான் கவலை… இன்னும் கொஞ்ச நாள்ல அஞ்சு கல்யாணம் ஆகி போய்டுவா

 

 

“உனக்கு ஒரு நல்லது பண்ணிட்டா நான் நிம்மதியா இருப்பேன்… இப்போலாம் என்னால சரியா வேலை செய்ய முடியலைடா… உனக்கு கல்யாணம் லேட்டாகுதே அதே எண்ணம் தான் எனக்கு என்று வராத கண்ணீரை துடைத்துக் கொண்டார்.

 

 

“இப்போ என்னமா எனக்கு கல்யாணம் பண்ணனும் அவ்வளோ தானே… நான் ஊருக்கு போயிட்டு வந்ததும் நீங்க மாப்பிள்ளை பாருங்க போதுமா… அதுவரைக்கும் எதை பத்தியும் யோசிக்காம ரெஸ்ட் எடுங்கம்மா… இப்போ டாக்டர்கிட்ட போகலாமாம்மா என்றாள்.

 

 

“இல்லைம்மா அதெல்லாம் ஒண்ணும் வேணாம்… நான் இப்படியே கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கறேன்… சரியாகிடும்… நீ ஊருக்கு கிளம்புற வேலையை பாரும்மா என்று அவளை அனுப்பி வைத்தார்.

 

 

அவர்கள் மக்கள் அப்புறம் சென்றதும் “ராணி உன் ஆக்டிங் ஓவர் ஆக்டிங்கா இருக்கே??? என்று மனைவியை பார்த்து புன்னகைத்தார் அவர்.

 

 

“உங்களை உங்க பொண்ணுகிட்ட கேட்க சொன்னா, ரொம்ப லட்சணமா கேட்டு வைக்கறீங்க… நான் மூச்சு வாங்குதுன்னு உட்கார்ந்ததுக்கு இவளா என்னம்மா ஏதும்மான்னு கேட்டா… சரி இது தான் சந்தர்ப்பம்ன்னு நானும் இவளை நம்ம வழிக்கு கொண்டு வந்திட்டேன்ல என்று இல்லாத காலரை தூக்கி கொண்டார் அவர்.

 

 

மறுநாள் அவளை பஸ்சில் ஏற்றி விட அஞ்சனா பேருந்து நிலையத்திற்கு வந்தாள். அவர்கள் பேருந்து நிற்குமிடம் விசாரித்து அவள் பயணசீட்டை ஒரு முறை பரிசோதித்து அவள் உடைமைகளை உள்ளே சென்று வைத்தாள் சஞ்சு.

 

 

கையில் மாட்டியிருந்த பையுடன் வெளியில் வந்து அஞ்சனாவுடன் பேசிக் கொண்டிருந்தாள். “ஏங்க சேமியா… சேமியா என்று யாரோ குரல் கொடுத்து கொண்டிருக்க அவள் கவனம் சிதறி சுற்று முற்றும் பார்த்தாள்.

 

 

“அஞ்சு நீ கிளம்பு மணியாகுது, பஸ் கொஞ்ச நேரத்துல கிளம்பிடும் நான் பார்த்துக்கறேன் என்று கூற அஞ்சனாவும் விடைபெற்று நகர்ந்தாள். சஞ்சுவும் அவள் பேருந்தை நோக்கி சென்றாள்.

 

 

அப்போது அவளருகே வந்தவன் “என்னங்க எவ்வளோ நேரமா உங்களை கூப்பிட்டு இருக்கேன். கத்தி கத்தி நான் டயர்ட் ஆகிட்டேங்க ஒரு நிமிஷம் என்றவன் கையில் இருந்த வாட்டர் பாட்டிலில் இருந்த நீரை மடமடவென்று குடித்தான்.

 

 

அவளோ அவனை வித்தியாசமாக பார்த்துக் கொண்டிருந்தாள் ‘யார் இவன் என்னை எதற்காக கூப்பிட்டதாக சொல்கிறான் என்று யோசனையுடனே அவனை நோக்கினாள்.

 

 

“என்னங்க அப்படி பார்க்கறீங்க… என்னை தெரியலையா… அன்னைக்கு ஹோட்டல்ல நீங்க சாப்பிட்ட சேமியா…. ச்சே… பலூடா ஐஸ் வாங்கி அப்புறம் நான் அதை சாப்பிட முடியாம கஷ்டப்பட்டு என்னோட நண்பன் தான் என்னை திட்டிட்டு கடைசில வேற யாரும் ஆதரவு கொடுக்காத அந்த ஐஸ்க்கு அவனே ஆதரவு கொடுத்தானே

 

 

“நான் கூட வெளிய வந்து உங்ககிட்ட பேசும் போது ஐஸ்கிரீம் பாயாசம் மாதிரி இருக்குன்னு உங்ககிட்ட சொன்னேனே… என்னோட நண்பன் கூட உங்களை திட்டிட்டு… ச்சே… என்னை திட்டி கூட்டிட்டு போனானே

 

 

“இப்போ கூட உங்களுக்கு என்னை ஞாபகம் வரலையா… என்னங்க இவ்வளோ ஞாபக மறதியா இருக்கீங்க… நீங்க கூட அன்னைக்கு மாங்கோ ஐஸ் சாப்பிட்டு இருந்தீங்களே என்று அவன் பாட்டுக்கு நிறுத்தாமல் பேசினான்.

 

 

“உங்க நண்பர் உங்களை திட்டலை, நிஜமாவே என்னை தான் திட்டினார்

 

 

“ஹப்பா பேசிட்டீங்க… உங்களுக்கு பேச வராதுன்னு நினைச்சேன்… நிஜமாவே அவன் என்னை தாங்க திட்டினான். வேலையை விட்டுட்டு வெட்டியா பேசிட்டு இருந்தேன்னு திட்டினான்

 

 

“அவர்க்கு நீங்க என்கூட பேசினது பிடிக்கலை அதான் உங்களை திட்டினார்

 

 

“ஓ… நான் உங்ககூட பேசினது பிடிக்காம திட்டி இருந்தா… என்று யோசித்தவன் “அப்போ அது தான்… நீங்க ரெண்டு பேரும் லவ்வர்ஸா

 

 

“ச்சே… வாயை கழுவுங்க… நாங்க லவ்வரஸா அப்படி ஒண்ணு நடக்கவே நடக்காது… என்றுவிட்டு அவள் பஸ்சில் ஏற போனாள்.

 

 

“ஏங்க நான் பேசிட்டே இருக்கேன் நீங்க பாட்டுக்கு போயிட்டே இருக்கீங்க… உங்களுக்குள்ள என்னங்க பிரச்சனை அதை சொல்லிட்டு போங்க

 

 

“அதை நீங்க உங்களோட நண்பர்கிட்டேயே கேட்டுக்கோங்க…

 

 

“ஏங்க என்னோட பேரு அர்ஜுன்

 

 

“இருக்கட்டும் அதுக்கென்ன இப்போ?

 

 

“ஏங்க ஒருத்தர் பேரை சொல்றார்ன்னா நீங்களும் பதிலுக்கு உங்க பேரை சொல்லணும்ன்னு அர்த்தங்க

 

 

“நீங்க சொன்னா நானும் சொல்லணும்ன்னு அவசியமில்லை

 

 

“ஏங்க நீங்க இந்த பஸ்ஸா…. என்று சொல்லி முடிப்பதற்குள் அவள் பஸ்சில் ஏறியிருந்தாள். ‘லூசுங்க எங்க இருந்து தான் வந்து சேருவானுங்களோ. இவனும் போலீஸ் தானே ஏன் இப்படி காலேஜ் பையன் மாதிரி வந்து வழிஞ்சுட்டு போறான் என்று திட்டி தீர்த்தாள்.

 

 

அது படுக்கை வசதி கொண்ட பேருந்து அவளின் சீட்டு கடைசி வரிசையில் ஒருவர் படுக்கும் வசதி கொண்ட படுக்கை. அதில் சென்று அமர்ந்தவள் சிறிது நேரம் பாட்டு கேட்டுக் கொண்டிருந்தாள்.

 

 

யாரோ அவளை உற்று பார்ப்பது போல தோன்ற பார்வையை சன்னல் புறத்தில் இருந்து திருப்பி சுற்றும் முற்றும் பார்க்க எதிரில் இருவர் படுக்கும் வசதி கொண்ட படுக்கையில் ஒருவன் படுத்துக் கொண்டு அவள் மேனி எங்கும் பார்வையை மேயவிட்டு பார்த்துக் கொண்டிருந்தான்.

 

 

அவனை சீய் என்பதாய் ஒரு பார்வை பார்த்தவள் திரைசீலையை இழுத்துவிட்டுக் கொண்டு படுத்துக் கொண்டாள். பேருந்து புறப்பட்டு சில மணி நேரங்கள் கடந்திருக்க பேருந்து இரவு உணவுக்காய் ஓரிடத்தில் நிறுத்தப்பட்டது. அவள் அன்னை கட்டிக் கொடுத்த இட்லியும் காரசட்னியும் சாப்பிட்டு கிழே இறங்கி கையை கழுவிவினாள்.

 

 

அங்கு சுக்கு காபி விற்க அந்த கடைக்கு சென்று “அண்ணே ஒரு சுக்கு காபி என்றுவிட்டு காசை நீட்டினாள். பழக்கமான பரிச்சய குரல் கேட்க நிரஞ்சன்திரும்பி பார்க்க சஞ்சு அங்கு நின்றிருப்பதை பார்த்ததும் அர்ஜுனிடம் “இவஎப்போ பார்த்தாலும் சாப்பிடறதே வேலையா வைச்சு இருக்கா என்றான்.

 

 

“நிரன் யாரைடா சொல்ற என்றான் அர்ஜுன்.

 

 

“அதோ நிக்குறாளே அவ தான் என்ற நிரஞ்சனை ஒரு மாதிரியா பார்த்துவிட்டு அவனை கேள்வி கேட்க ஆரம்பித்தான் அர்ஜுன்.

 

 

“அவங்களை உனக்கு முன்னாடியே தெரியுமா, உனக்கும் அந்த பொண்ணுக்கும் என்ன பிரச்சனை. எதாச்சும் காதல் தகராறா

 

 

“மவனே உனக்கு எப்படிடா இப்படி எல்லாம் கேட்க தோணுது… அவளுக்கும் எனக்குமா… அவ இதை கேட்டான்னு வை, உன்னை ஒரு வழி பண்ணிருவா. அவ பத்திரிகையில எழுதி கிழிச்சிருவா

 

 

“அப்போ உனக்கு ஓகேவா

 

 

“டேய் நீ அடி வாங்க போறே… அவ எல்லாம் ஒரு ஆளுன்னு என்னை போய் அவளோட சேர்த்து பேசற

 

 

“டேய் என்ன தான்டா உனக்கும் அந்த பொண்ணுக்கும் பிரச்சனை, அவளும் என்னை முறைக்கிறா நீயும் என்னை முறைக்கிற…. டேய் இவ அந்த அந்த பொண்ணு… உன்னை கரப்பான்பூச்சின்னு சொன்னான்னு சொன்னியே அந்த பொண்ணா என்றவன் விழுந்து விழுந்து சிரித்தான்.

 

 

“டேய் போதும் நிறுத்து, இப்போ உன்னை யாரு அதெல்லாம் ஞாபகம் படுத்த சொன்னது, வா போகலாம் நமக்கு எவ்வளவு வேலை இருக்கு அதை பத்தி பேசறதை விட்டு இவளை பத்தி பேசி எதுக்கு கடுப்பாக்குற…

 

 

“டேய் அர்ஜுன் இவ நம்ம பஸ்ல ஏறுறா, என்னடா நடக்குது என்னை பாலோ பண்ணிட்டு வர்றாளா… இரு இரு அவ போகட்டும் நாம அப்புறம் போவோம் என்றவன் அவள் ஏறிய பின்னே பஸ்ஸில் ஏறினான்.

 

 

“ஆமாடா நிரன் அந்த பொண்ணு நம்ம பஸ்ல தான் பார்த்தேன், நான் அவகிட்ட பேச்சு கொடுத்தா கட் பண்ணிட்டு போய்ட்டா… சரின்னு விட்டுட்டேன். டேய் ஒண்ணே ஒண்ணு கேட்பேன் அதுக்கு மட்டும் பதில் சொல்லுடா

 

 

என்ன என்பது போல் நிரஞ்சன் அவனை பார்த்தான். “நீ அந்த பொண்ணை விரும்பறியா?? என்று கேட்க “டேய் கொழுப்பா உனக்கு. நான் யாரையும் விரும்பலை, அதுவும் இவளை சான்சே இல்லை

 

 

“அப்போ ஓகேடா இனி நான் அவளை கரெக்ட் பண்ணுறதா முடிவு பண்ணிட்டேன் என்று சாவதானமாக கூறிவிட்டு அர்ஜுன் படுத்துக் கொண்டான். நிரஞ்சன் அவனை முறைத்தவாறே உள்பக்கம் படுத்துக் கொண்டான்.

 

 

பேருந்து மீண்டும் பயணத்தை தொடங்கியிருந்தது. நல்ல ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றிருந்த சஞ்சுவுக்கு ஏதோ நெருடலாக தோன்ற அவள் தூக்கம் லேசாக கலைய ஆரம்பித்தது.

 

 

லேசான தூக்கத்தில் அவள் விழித்து பார்க்க எதிர் படுக்கையில் இருந்தவன் அவளுக்கு வெகு நெருக்கத்தில் வந்திருந்தான். சட்டென்று முழு விழிப்பு நிலை வர விளக்கை போட முனைய அவன் ஒரு கையால் அதை தடுத்து அவளை அவன் இருக்கைக்கு தூக்க முயற்சித்தான்.

 

 

“டேய் கையை எடுடா பொறுக்கி… அறிவில்லை உனக்கு நான் யாருன்னு தெரியாம இப்படி பண்ணுற???

 

 

“நீ யாரா இருந்தா எனக்கென்ன செல்லம், வா நாம என்னோட படுக்கைக்கு போய்டலாம்… பாரு ரெண்டு சீட் நான் மொத்தமா போட்டிருக்கேன்… எப்போமே என்கூட கம்பெனி கொடுக்கற பொண்ணு இன்னைக்கு வரலை

 

 

“நீ வந்து எனக்கு கம்பெனி கொடு, உனக்கு நெறைய காசு தரேன் என்று கேவலமாக பேச அவனை பிடித்து தள்ள முயற்சிக்க லேசான சத்தத்தில் உறங்கிக் கொண்டிருந்த ஓரிருவர் எட்டிப் பார்த்துவிட்டு ஏதோ குடும்ப விஷயம் என்று பேசிக் கொண்டு இருக்கிறார்கள் போலும் என்று நினைத்து மீண்டும் உறங்க ஆரம்பித்தனர்.

 

 

அவன் மேல் லேசான மதுவின் வாடை வேறு வீசியது. “நான் யாருன்னு தெரியாம இப்படி பண்ணுற, சென்னை தானேடா நீ… அங்க அசிஸ்டெண்ட் கமிஷனர் நிரஞ்சன் தெரியுமா உனக்கு… அவர் எனக்கு ரொம்ப தெரிஞ்சவர் நான் ஒரு வார்த்தை சொன்னேன்… நீ காலி ஆகிடுவா என்று மிரட்டினாள்.

 

 

அப்படியாவது அவன் மிரண்டு போய் அவளிடம் வாலாட்ட மாட்டான் என்று அவள் நினைக்க அவனோ “நீ இப்படி எல்லாம் சொன்னா நான் பயந்திடுவேனா… என்றவன் அவள் மேனியில் கை வைக்க முயல அவளுக்கு தெரிந்த அரைகுறை கராத்தேயில் அவன் வயிற்றில் ஒரு குத்து விட்டாள்.

 

வேகமாக எழுந்து சென்றவள் கதைவை தட்டி ஓட்டுனருடன் இருந்தவரை அழைக்க அவரும் கதவை திறந்தார். “சார் இந்த பஸ்ல வர்ற பொண்ணுங்களுக்கு பாதுகாப்பே இல்லையா…

 

 

“என்ன மேடம் என்னாச்சு…

 

 

“சார் மெதுவா பேசுங்க, எல்லாரும் தூங்கிட்டு இருக்காங்க… எல்லாருக்கும் தொந்திரவா இருக்கும்… என்னோட சீட்க்கு எதிர் சீட்ல இருக்கவன் என்கிட்ட தகாத முறையில நடந்துக்கறான்

 

 

“இந்த பஸ்ல சிசிடிவி கேமரா இருக்கா இல்லையா அதை சொல்லுங்க… அவனை என்ன பண்ணுறதுன்னு நான் பார்த்துக்கறேன்

 

 

“மேடம் இந்த பஸ்ல சிசிடிவி கேமரா இருக்கு… ஆனா மேடம் இதுனால எங்களுக்கு எதுவும்… என்று இழுத்தார்.

 

 

“ஏன் சார்… அப்போ எனக்கு எது நடந்தாலும் பரவாயில்லையா… என்ன பேசறீங்க நீங்க… இதை நான் சும்மா விட போறதில்லை எங்க பத்திரிக்கையில எழுதி என்ன பண்ணணுமோ பண்ணிக்கறேன் என்றதும் அரண்ட அவன் சரி மேடம் நான் காபி பண்ணி தர்றேன்.

 

 

“மேடம் அவனை வேணும்ன்னா இங்கேயே இறக்கி விட்டிடலாமா…” என்க “வேணாம் எனக்கு ஒரு உதவி பண்ணுங்க இந்த சீட்டை மட்டும் மாத்தி கொடுங்க அது போதும்

 

 

“அவனை பாதியில இறக்கிவிட்டா என்னால எதுவும் பண்ண முடியாம போய்டும். அவன் ஊருக்கு போகட்டும் நான் என்ன பண்ணனும்னு அப்புறம் முடிவு பண்ணிக்கறேன்

 

 

அதற்குள் அவனும் எழுந்து வந்துவிட “ஏய்… என்ன ரொம்ப ஓவரா பண்ணுற, நீ இவன்கிட்ட கம்ப்ளைன்ட் பண்ணிட்டா நாங்க பயந்திடுவோமா??? என்று பாய “யோவ்… அறிவில்லை உனக்கு… அந்தம்மா எவ்வளோ டீசென்டா நடந்துக்கறாங்க

 

 

“அவங்க ஒரு சத்தம் கொடுத்தா எல்லாரும் சேர்ந்து உன்னை அடிச்சு துவைச்சு தூக்கி வெளிய போட்டிருவோம்… பேசாம வாயை மூடிட்டு போய் படு இல்லை இங்கயே இறங்கி நடந்தே ஊருக்கு போ… என்று அவர் குரல் கொடுக்க பம்மிக் கொண்டு உள்ளே சென்றுவிட்டான்.

 

 

முதல் சீட்டில் படுத்திருந்தவரை எழுப்பி பின்னால் போக சொல்லி முன்னால் இருந்த சீட்டை அவளுக்கு ஒதுக்கி கொடுத்தார். “சூப்பர் மேடம் தைரியமா இருக்கீங்க என்று முன்னில் இருந்தவர் பாராட்டிவிட்டு பின்னால் செல்ல “தேங்க்ஸ் பிரதர் என்றாள்.

 

 

“நன்றி சிஸ்டர் என்று பதிலுக்கு சொல்லிவிட்டு அவன் சென்றுவிட்டான். ‘அப்படி ஒரு பொறுக்கி… இப்படி தங்கைன்னு சொல்லி ஒருத்தன்… நல்லவனும் கெட்டவனும் இந்த உலகத்தில ஒண்ணா தான் இருக்கான்… ஏன் தான் இப்படி இருக்காங்களோ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்.

 

 

வண்டியில் இவ்வளவு கலவரம் நடந்துக் கொண்டிருக்க அர்ஜுன் நிரஞ்சனை திட்டிக் கொண்டிருந்தான். “டேய் ஏன்டா என்னை போக வேணாம்ன்னு சொன்ன

 

 

“பாவம்டா அந்த பொண்ணு, இங்க ஒருத்தனுக்கு ரெண்டு போலீஸ் இருக்கோம் ஏன்னு கேட்காம விட்டுட்டியே… என்னனு கேட்கறேன் சொன்ன என்னையும் தடுத்திட்டியே என்று பொருமினான்.

 

 

“எல்லாம் அந்த லேடி ஜாக்கியே பண்ணிட்டாளே… நீ போய் என்ன பண்ண போறே

 

 

“ரேடியோ ஜாக்கி கேள்விப்பட்டிருக்கேன், அதென்னடா லேடி ஜாக்கி…

 

 

“ஜாக்கிஜான் மாதிரி அவனை ஓங்கி என்ன குத்துவிட்டா பார்த்தில்ல அவளை லேடி ஜாக்கின்னு சொல்லாம வேற என்ன சொல்லுவாங்க என்றான் நிரஞ்சன்.

 

 

“நல்ல பேரு தான் வைச்சு இருக்க, இருந்தாலும்… என்று இழுக்க “டேய்… ஒரு பொண்ணு தைரியமா அவனை எதிர்த்து அவளை அவளே காப்பாத்திக்கிட்டா… இது எவ்வளவு பெரிய விஷயம்

 

 

“எத்தனை பேர் இப்படி செய்யறாங்க… அவளோட பிரச்சனையை முதல்ல அவ தான் எதிர்த்து போராடணும்… அவங்களால முடியாத பட்சத்தில நாம உதவலாம்… ஒரு வேலை அவ அழுதிருந்தாளோ இல்லை சத்தம் போட்டு மத்தவங்களை கூப்பிட்டு இருந்தான்னு வை கண்டிப்பா நான் உன்னை தடுத்திருக்க மாட்டேன். நானும் சும்மா இருந்திருக்க மாட்டேன்

 

 

“அவளோட தன்னம்பிக்கையை உடைக்க வேணாம்ன்னு தான் நான் உன்னை போக வேணாம்ன்னு சொன்னேன். அவளை எனக்கு பிடிக்காது தான் அவளோட இந்த செயல் இந்த தைரியம் எனக்கு பிடிச்சிருக்கு

 

 

“யாரையும் எந்த தொல்லையும் பண்ணாம எவ்வளவு நாசூக்கா இந்த பிரச்சனையை அவ கையாண்ட்டா பார்த்தியா… பொண்ணுங்கன்னா இப்படி தான் இருக்கணும்…

 

 

“அதுக்காக அவனை சும்மா விட்டது எனக்கு பிடிக்கலைடா நிரன்

 

 

“அவனை சும்மா விடச்சொல்லி நான் எப்போ சொன்னேன்… நாளைக்கு பஸ்ல இருந்து அவன் கிழ இறங்க கூடாது என்றான் அவன் ஒரு மாதிரி குரலில்.

 

 

“அப்பாடா எங்கடா இவ்வளவு ரியாக்ட் பண்ணுறியே ஆக்சன் இல்லாம போய்டுமோன்னு நினைச்சேன்… அப்போ ஓகே இனி நான் நிம்மதியா தூங்குவேன் என்று படுத்துக் கொண்டான் அர்ஜுன்.

 

 

பேருந்து சிவகங்கையை வந்தடைய அதிலிருந்து கிழீறங்கினாள் அவள். அதன் பின் அவளிடம் வம்பு செய்தவனை இருவரும் பிடித்து நிறுத்தினர். “யார் சார் நீங்க எதுக்கு வழி விடமாட்டேங்குறீங்க என்றான் அவன்.

 

 

“நான் தான் நிரஞ்சன்… நேத்து அந்த மேடம் சொன்னாங்களே அது நான் தான்

 

 

“என்னய்யா கலாய்க்கிறியா… வழி விடுய்யா…

 

 

“அர்ஜுன் இவனை லோக்கல் போலீஸ் ஸ்டேஷன்ல ஹேன்ட் ஓவர் பண்ணிடலாம்… அங்க போய் வைச்சுக்குவோம் இவனுக்கு கச்சேரியை என்று கூற அர்ஜுன் அவன் சட்டையை கொத்தாக பற்றியிருந்தான்.

 

 

“சார் விட்டுடுங்க சார்… மன்னிச்சிடுங்க சார்… ஏற்கனவே அந்த பொண்ணு வயித்துல விட்ட குத்துல நைட் எல்லாம் ரத்தம் ரத்தமா வந்திச்சு வாயில… நைட் எல்லாம் நான் பட்ட கஷ்டம் எனக்கு தான் தெரியும்… நீங்க வேற அடிச்சா என் உடம்பு தாங்காது சார்… என்று புலம்ப ஆரம்பித்தான்.

 

 

“நீங்க நம்பலைன்னா இங்க பாருங்க சார் என்று அவன் ரத்தம் தோய்ந்த கைக்குட்டையை காண்பித்தான். அவனிடம் இது போல் செய்யக் கூடாது என்று எச்சரித்து அவன் கைப்பட குற்றத்தை ஒத்துக் கொண்டு இனி இது போல் செய்வத்தில்லை என்று எழுதி வாங்கிக் கொண்ட பிறகே விட்டனர்.

 

 

“டேய் நிரன் அங்க பாருடா கதையில ஒரு வில்லன் வந்திட்டான்… என்று அர்ஜுன் குரலிட்டதில் நிரஞ்சன் திரும்பி பார்த்தான்.

 

 

“டேய் அந்த பொண்ணு யாரையோ மாமா கூப்பிட்டு அவன் கூட போறாடா… அவன் ஆளு வேற செமையா இருக்கான்… என்றவனை நிரஞ்சன் முறைத்தான்.

 

 

“டேய் அவ எப்படி போனா நமக்கென்ன… எவ்வளவு முக்கியமான வேலைக்காக நாம இங்க வந்திருக்கோம் அதை பத்தி பேசுவோம்… என்றான்.

 

 

“சரி சரி இனி சீரியஸா பேசறேன் என்ற இருவரும் தங்களுக்கு ஏதோ ரகசியமாக பேசிக் கொண்டனர்.

 

“சரி நிரன் நீ போய் இன்னைக்கே சார்ஜ் எடுத்துக்கோ… நான் நாம பேசின மாதிரியே இருக்கேன்… எப்போ எனக்கு தகவல் கிடைக்குதோ அப்போ நானும் வர்றேன்… அதுக்கு நடுவுல நான் உன்கிட்ட பேசறேன்… நீ என்னை இந்த நம்பர்ல மட்டும் கூப்பிடு என்று சொல்லி ஒரு நம்பர் எழுதி நிரஞ்சனின் கையில் திணித்துவிட்டு அவன் வேறு திசையில் நடக்க நிரஞ்சனும் அவனுக்கு எதிர்புறமாக நடந்தான்.

 

 

ஒரு வாரம் சென்றிருக்க அன்றைய தினசரியை புரட்டியவனுக்கு கோபமும் ஆத்திரமும் ஒருங்கே வந்தது. உடனே அந்த பத்திரிகை அலுவலகத்திற்கு போன் செய்து அதை பற்றி பேசியவன் சம்மந்தப்பட்டவரை நேரடியாக அவன் அலுவலகம் வந்து சந்திக்குமாறு கூறிவிட்டு போனை வைத்தான்.

 

 

குளித்து சாப்பிட்டுவிட்டு அவன் அலுவலகம் வந்து சேர அங்கு அமர்ந்திருந்தவளை கண்டதும் எரிச்சல் தோன்றியது. “நீ எதுக்கு இங்க வந்த, நான் எங்க போனாலும் பின்னாடியே தொடர்ந்து வர்றே… உனக்கு வேற வேலையே இல்லையா என்றான் அவளுக்கு மட்டும் கேட்குமாறு கடுமையான குரலில்.

 

 

“நான் ஒண்ணும் உங்களை பார்க்க வரலை. ஏதோ பத்திரிக்கையில வந்த நியூஸ் பத்தி பேசணும்னு வரச்சொல்லி இருந்தாங்க, அதான் வந்தேன்

 

 

“உள்ள வா என்று சொல்லி அவன் முன்னே செல்ல பின்னோடு அவளும் சென்றாள். ‘நான் என்னமோ இவனை பார்க்க தான் வந்த மாதிரி ஓவரா சீன் போட்டுக்கறான் பக்கி. அவ்வளவு திட்டின பிறகு இவன் முகத்தில யாராச்சும் முழிப்பாங்களா என்று மனதிற்குள்ளேயே பேசிக் கொண்டாள்.

 

 

“என்னது இது?? என்று சொல்லி அவள் முன் அந்த தினசரியை தூக்கி போட்டான், கிட்டத்தட்ட விசிறினான் என்றே சொல்ல வேண்டும்.

 

 

“இப்படி மொட்டையா கேட்டா என்ன சொல்றது

 

 

“அலவா கோட்டையில் அமானுஷ்யம்… ஆவிகளின் அட்டக்காசம்ன்னு போட்டிருக்கே அதை கேட்டேன்

 

 

“அதான் படிச்சு பார்த்திருப்பீங்களே அப்புறம் எதுக்கு கேட்குறீங்க

 

 

“இதை எழுதினது யாரு???

 

 

“நான் தான் எழுதினேன்

 

 

“ஹேய் உனக்கெல்லாம் அறிவே இல்லையா?? இப்படி தான் தோணுறதை எல்லாம் எழுதி வைப்பியா?? படிச்சிருக்கியே மூளை இல்லை உனக்கு. இப்படி தான் ஆவி, பூதம்ன்னு சொல்லு மக்களை பயமுறுத்தறதா என்று கர்ஜித்தான்.

 

 

“ஹலோ என்ன சார் ரொம்ப பேசறீங்க… எல்லாம் விசாரிச்சு தான் எழுதி இருக்கோம்… உங்ககிட்ட அதிகாரம் இருக்குங்கறதுக்காக என்ன வேணாலும் பேசுவீங்க நான் கேட்டுட்டே இருப்பேன்னு நினைச்சீங்களா???

 

 

“இது ஒண்ணும் சென்னையில்லை… நீங்க சென்னைக்கு தான் ஏசி இந்த ஊருக்கு இல்லை… நீங்க எதுக்கு இவ்வளோ கேள்வி என்னை கேட்குறீங்க என்று பதிலுக்கு பட்டாசு போல் வெடித்தாள் அவள்.

 

 

“நான் எங்க வேணும்னாலும் இருப்பேன் அதை பத்தி உன்கிட்ட சொல்ல வேண்டிய அவசியம் எனக்கில்லை… பண்ணது தப்பு இதுல கூட கூட பேசிட்டு இருக்கே. நான் உங்க எடிட்டர்கிட்ட பேசினா என்னாகும் தெரியுமா???

 

 

“என்ன வேணும்னாலும் ஆகட்டும்

 

 

“உன் வேலை போகும் என்றான்

 

 

“இந்த மடம் இல்லன்னா வேற சந்தை மடம் என்றாள் அசட்டையாக

 

“நீ வேற எங்கயும் வேலை பார்க்க முடியாத மாதிரி பண்ணிடுவேன்

 

 

“என்ன வேணும்னாலும் செஞ்சிக்கோங்க… உங்களால என்னை தடுக்க முடியாது, நான் சோசியல் மீடியாவுல எழுதுவேன்… அப்போ என்ன செய்வீங்க

 

 

“கெட் அவுட் என்று சத்தமாக அவன் கூற “எல்லாம் அதிகார திமிர், ஆணவம் என்று முணுமுணுத்துக் கொண்டே வெளியில் சென்றாள்.

 

 

அவள் வெளியே செல்ல அங்கிருந்த காவலர் “என்ன மேடம் என்னாச்சி, சார் இவ்வளோ கோபமா பேச மாட்டாரே. நீங்க யாரு என்றதும் அவள் வந்த விபரத்தை கூற அவரோ “என்ன மேடம் அவருக்கு கோபம் வரத்தானே செய்யும் அவர் கேட்டதுல என்ன தப்பு

 

 

“சார் நீங்களும் அந்த ஆளு மாதிரியே பேசிட்டு…

 

“மேடம் நீங்க எழுதினது அவரோட அண்ணனை பத்தி… சார்க்கு கோபம் வரக்கூடாதா

 

“என்னது அந்த அருண் அவரோட அண்ணனா, அய்யோ இது தெரியாம ரொம்ப பேசிட்டேனே என்றவள் நேராக அவன் அறைக்குள் நுழைந்தாள்….

 

அத்தியாயம் –6

 

 

மீண்டும் அறைக்குள் நுழைந்தவளை என்ன என்பது போல் பார்த்தான். “சாரி… மன்னிச்சுடுங்க… “

 

 

“எதுக்கு??? என்ன புதுசா ஞானோதயம் எல்லாம் வந்திடுச்சா… பண்ணது தப்புன்னு

 

 

“இல்லை… வந்து… அது…

 

 

“என்ன??? வந்து அது இதுன்னு என்னன்னு சொல்லு???

 

 

“அருண் உங்க அண்ணன்னு தெரியாம நிறைய பேசிட்டேன்… தப்பு தான் மன்னிச்சுடுங்க…

 

 

“பரவாயில்லையே உனக்கு மன்னிப்பு எல்லாம் கேட்கக் கூட தெரியுதே… நீ எழுதினது தப்புன்னு இப்போவாச்சும் புரிஞ்சா சரி

 

 

“நான் எழுதினதுல எந்த தப்புமில்லைன்னு எனக்கு தெரியும்… உங்கண்ணான்னு தெரியாம ரொம்ப பேசிட்டேன் அதுக்கு தான் மன்னிப்பு கேட்டேன் என்றதும் அவனுக்குள் மீண்டும் சுறுசுறுவென்று கோபம் எழுந்தது.

 

 

“அப்போ நீ எழுதினது எல்லாம் சரின்னு சொல்ல வர்றியா???

 

 

“நான் ஒண்ணும் பொய்யா எழுதலை… எல்லாம் விசாரிச்சு தான் எழுதி இருக்கேன்

 

 

அதற்கு மேல் பொறுமையா இழுத்து பிடிக்க முடியாமல் “நீ என்ன லூசா? நடந்ததை நீ நேர்ல பார்த்தியா. ஊர்ல இருக்கவங்க பயப்பட வைக்கிறது தான் உன் வேலையா?? அதுக்காக எது உண்மை எது பொய்ன்னு யோசிச்சு எழுத மாட்டியா? யார் என்ன சொன்னாலும் அதை அப்படியே நம்பி எழுதிடுவியோ??

 

“சார் சும்மா எப்போ பார்த்தாலும் என்னை திட்டுறதே பொழப்பா வைச்சு இருக்கீங்க??? என்ன தான் நினைச்சுட்டு இருக்கீங்க?? இப்போ என்ன உங்களுக்கு அங்க நடந்தது என்னனு தெரியணும் அவ்வளவு தானே??

 

 

“உங்க சைடுல நீங்க என்னனு கண்டுபிடிங்க… நான் எழுதினது உண்மையா பொய்யான்னு நானே நிருபிச்சு காட்டுறேன் என்று சவால் விட்டாள்.

 

 

“நான் என்ன கண்டுபிடிக்கணும் பிடிக்கக்கூடாது சொல்ல உனக்கு எந்த அதிகாரமும் இல்லை… நீ தேவையில்லாத வேலை பண்ணாம இருந்தாலே போதும்… எதை எப்போ எப்படி கண்டுபிடிக்கணும்ன்னு எங்களுக்கு நல்லாவே தெரியும்… நீ முதல்ல இப்போ வெளிய போ என்றான் கோபத்தில்.

 

 

“போக தான் போறேன்… சீக்கிரமே வருவேன், நான் உண்மை என்னன்னு எழுதுவேன்… இவ்வளவு நாள் பேசாம இருந்துட்டு இப்போ வந்திட்டார் பேசுறதுக்கு என்று கொஞ்சம் கூட பயப்படாமல் அவன் முகத்துக்கு நேரே சொல்லிவிட்டு வெளியேறினாள்.

 

 

மேஜையை ஓங்கி குத்தியவன் அப்படியே நாற்காலியில் சரிந்து அமர்ந்தான். ‘ச்சே… இவளெல்லாம் என்னை பேசுற அளவுக்கு வைச்சுட்டேனே… அண்ணன் கடைசியா என்கிட்ட தானே பேசினான். வீட்டில எல்லாரும் சேர்ந்து என்னை தடுத்திட்டாங்களே என்று நினைத்தவன் அன்றைய நிகழ்வுக்கு சென்றான்.

 

____________________

 

 

விடிந்ததும் அருண் இறந்து போன தகவல் அந்த வழியா சென்ற ஒருவர் பார்த்துவிட்டு போலீஸில் சொல்ல தகவல் நிரஞ்சனின் வீட்டிற்கு தெரிவிக்கப்பட்டது. மகன் இறந்த செய்தி கேட்டு நிரஞ்சனின் தந்தை நாகேந்திரன் நெஞ்சை பிடித்துக் கொண்டு மயங்கி விழ நிரஞ்சன் அவரை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு ஊருக்கு கிளம்பினான்.

 

 

அங்கு எல்லா பார்மாலிட்டிஸும் முடித்துக் கொண்டு அருணின் சடலத்தை எடுத்துக் கொண்டு சென்னைக்கு வந்து சேர்ந்தான். மடமடவென்று அடுத்தடுத்து காரியங்கள் நடந்தேற அருணின் இறுதி ஊர்வலம் நடந்து முடிந்தது.

 

 

நிரஞ்சனுக்கோ அருண் கடைசியாக தன்னிடம் தானே பேசினான் என்று உருகி மறுகிக் கொண்டிருந்தான். அங்கு ஏதோ நடந்திருக்கிறது என்பதை அவனால் ஊகிக்க முடிந்தது…

 

 

பூட்டிக் கிடந்த வீட்டில் வேலையாட்கள் இருக்கிறார்கள் என்று அருண் சொன்ன போது நிரஞ்சன் அதற்கு மறுத்துக் கூறிக் கொண்டிருக்கும் போதே அணைப்பு துண்டிக்கப்பட மீண்டும் அண்ணனுக்கு முயற்சித்தான் தொடர்ந்த அழைப்பில் அவனுடைய எண் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கிறார் என்றே சொல்ல பிறகு பேசிக் கொள்ளலாம் என்று முயற்சியை கைவிட்டான்.

 

 

மீண்டும் அருணே போன் செய்ய நிரஞ்சன் எடுத்து பேச அந்த புறம் இருந்து எந்த சத்தமுமே வரவில்லை… மீண்டும் மீண்டும் அவன் ஹலோ என்றது தான் மிச்சம்… மறுபடியும் அவன் அருணுக்கு முயற்சிக்க போன் அணைத்து வைக்கப்பட்டிருப்பதாக பதிவு செய்த குரல் மட்டுமே கேட்டது.

 

 

அருண் கடைசியாக பேசியது பற்றி அவன் தந்தைக்கு சொல்லலாமென நினைக்க அவரோ இப்போ தான் உடம்பு சரியாகி வீட்டுக்கு வந்திருந்தார். ஒரு முடிவுடன் அவன் அன்னை ஸ்ரீமதியிடம் சென்றவன் “அம்மா என்றழைத்தான்.

 

 

“என்னப்பா… என்றவரிடம் “அம்மா நான் ஒண்ணு சொல்லுவேன்… அதை பத்தி இப்போதைக்கு அப்பாகிட்ட எதுவும் சொல்ல வேண்டாம்… என்று பீடிகை போட்டான்.

 

 

“என்னப்பா அப்படி என்ன விஷயம்… சொல்லுப்பா

 

 

அருண் கடைசியாக அவனிடம் பேசிய விபரம் சொல்ல நிரஞ்சன் அவன் சந்தேகத்தை கூறினான். ஸ்ரீமதியும் “இல்லை நிரஞ்சன் ஊர்ல அந்த வீட்டுக்கு எந்த வேலைக்காரங்களும் இல்லை… எனக்கு நல்லா தெரியும்…

“நான் கூட உங்கப்பாகிட்ட அடிக்கடி கேட்பேன்… நமக்குன்னு ஊர்ல ஒரு தோட்டம், வீடு எல்லாம் இருக்கே… நாம பிள்ளைங்களை கூட்டிட்டு அங்க லீவ்க்கு போயிட்டு வரும்ன்னு எல்லாம் கேட்டிருக்கேன்

 

 

“உங்கப்பா எங்களை அங்க கூட்டிட்டு போனதே இல்லை… அங்க யாருமில்லைன்னும் அந்த வீடு ஊருக்கு வெளிய யாருமில்லாத காட்டுல இருக்குன்னும் அக்கம் பக்கம் மனுஷங்க இல்லைன்னும் அதுனால அங்க எல்லாம் போக வேண்டாம்ன்னு சொல்லிட்டார்

 

 

“அந்த வீடு பூட்டியே கிடக்குன்னும் சொல்லி இருக்காங்க… அந்த இடம் வேணாம்ன்னு தானே அப்பா அதை விற்கச் சொல்லி ஏற்கனவே ஒரு ஆள்கிட்ட சொல்லி வைச்சு இருக்காங்க…

 

 

“உங்கண்ணன் அந்த வீட்டு சாவியை எப்படி எடுத்து போனான்னு தெரியலையேப்பா… நீ சொல்றது பார்த்தா பயமாயிருக்கேப்பா… என்றார்

 

 

“அம்மா எதுக்கும்மா பயம்… நான் நாளைக்கே ஊருக்கு கிளம்பறேன்ம்மா… அங்க போய் என்ன ஏதுன்னு விசாரிக்கறேன்… என்று எழுந்தவனை நிறுத்தினார் ஸ்ரீமதி.

 

 

“வேணாம் நிரஞ்சன்… நீ இப்போ அங்க போக வேண்டாம்… எனக்கு பயமாயிருக்கு… ஏற்கனவே ஒரு மகனை இழந்து நான் கஷ்டப்படறேன்… உன்னை என்னால அனுப்ப முடியாதுப்பா

 

 

“அம்மா எனக்கு ஒண்ணும் ஆகாதும்மா….

 

 

“அதுக்கில்லைப்பா… உன்னோட ஐபிஎஸ் பரீட்சை அடுத்த வாரம் தொடங்குது… இது உன்னோட கனவு, லட்சியம்… சின்ன வயசுல இருந்தே நான் போலீஸ் ஆகணும்ன்னு சொல்லிட்டே இருப்ப… அதை எல்லாம் விட்டுவிட்டு போகப் போறியாப்பா

 

 

“போனவன் திரும்பி வரப்போறதில்லை… அதை பத்தி விசாரிக்க போய் நீ உன் வாழ்க்கையை கோட்டை விட்டுடாதே… ப்ளீஸ்ப்பா நான் சொல்றதை கேளு…

“அம்மா நான் சொல்றதை நீங்க கேளுங்கம்மா… என்னால அதை பத்தி தெரிஞ்சுக்காம நிம்மதியா இருக்க முடியாதும்மா…

 

 

“சரி எனக்காக ஒண்ணு செய்ப்பா… நீ எது செய்யறதா இருந்தாலும் உன்னோட ஐபிஎஸ் படிப்பை முடிச்சுட்டு செய்… நீ ஐபிஎஸ் ஆனதுக்கு அப்புறம் நீ இதை பத்தி விசாரிச்சிக்கோ…

 

 

“அப்போ நான் உன்னை தடுக்க மாட்டேன்… உனக்கு பிறகு ஒருத்தி இருக்கா… அவளுக்கு நல்லது எல்லாம் செய்யணும்… எல்லாம் நல்லபடியா முடியும்… அப்புறம் நீ நினைச்சதை செய்ப்பா என்று முடித்துவிட்டார் அவர்.

 

 

அவனாலும் அதற்கு மேல் அவரை கஷ்டப்படுத்த விருப்பமில்லாததால் அவர் சொன்னபடியே செய்தான். இதோ ஐபிஎஸ் படிப்பை முடித்துவிட்டு பதவி ஏற்றும் விட்டான்… அவன் நினைத்ததை முடிக்கவே இப்போ ஊருக்கும் வந்தாயிற்று…

 

____________________

 

 

நினைவுகள் கலைந்து நிகழ்காலத்திற்கு வரவும் மேஜையில் இருந்த தொலைப்பேசி தான் அங்கிருப்பதை உணர்த்தும் நோக்குடன் அவனுக்கு அழைப்பு வந்திருப்பதை அறிவிக்க ஓசை எழுப்பியது…

 

 

“ஹலோ… ஹ்ம்ம் சொல்லுங்க… எப்போல இருந்து… எதுக்கு இப்படி பண்றாங்க… மாறன் ஊர்ல இல்லை… சரி நான் வர்றேன்… இல்லை பரவாயில்லை நானே நேர்ல ஸ்பாட்க்கு வர்றேன் என்று விட்டு போனை வைத்தவன் வெளியில் சென்று வண்டியில் ஏறி கிளம்பினான்.

 

 

பக்கத்து கிராம மக்கள் சிலர் தண்ணீர் வரவில்லை என்பதற்காக திடீர் தர்ணாவில் ஈடுப்பட்டிருப்பதாக அவனுக்கு தகவல் வந்திருந்தது. அதற்காகவே கிளம்பிச் சென்றான்.

 

 

சஞ்சனாவும் அங்கு வந்திருந்தாள், வண்டியில் இருந்து இறங்கியவனை கண்டவள் ‘இவன் என்ன பண்ணப் போறான்… பார்ப்போம் என்று மனதிற்குள் பேசிக் கொண்டாள்…

 

“என்னாச்சு… திடிர்ன்னு எதுக்கு போராட்டம் பண்றீங்க… என்று அங்கு முன்னால் நின்றிருந்தவர்களை பார்த்துக் கேட்டான்.

 

 

“சார் எல்லாம் தெரிஞ்சு தானே சார் வந்திருக்கீங்க… தண்ணி தான் சார் எங்க பிரச்சனை… தினமும் ஒழுங்கா வந்திட்டு இருந்த தண்ணி இப்போ ஏன் சார் வரலை… கேட்டா எங்களுக்கு சரியா பதில் வரமாட்டேங்குதே என்று ஒருவர் கூற அவன் உடனே சம்மந்தப்பட்டவர்களை போனில் அழைத்து விசாரித்தான்.

 

 

“சார் அந்த ஊர்ல இருக்கவங்களுக்கு நாங்க ஏற்கனவே இன்பார்ம் பண்ணிட்டோம் சார்… ரெண்டு நாளைக்கு தண்ணி வராதுன்னு… அதுக்கு ஏத்த மாதிரி முத நாளே தண்ணி எல்லாம் பிடிச்சு வைக்க சொல்லிட்டோம் சார்

 

 

“அதுக்கு அப்புறமும் அவங்க ஏன் பிரச்சனை பண்றாங்கன்னு புரியலை சார்…

 

 

“சரி நீங்க இப்போ போன்ல சொன்னதை நேர்ல வந்து சொல்ல முடியுமா

 

 

“கண்டிப்பா வர்றேன் சார்… நான் இன்னும் பத்து நிமிஷத்துல அங்க இருப்பேன் சார் என்றுவிட்டு போனை வைத்தார் அவர்.

 

 

போனில் பேசும் போதே அவன் கண்ணில் ஒரு விஷயம் பட அங்கு போராட்டம் செய்துக் கொண்டிருந்தவர்களில் தனித்து தெரிந்த ஒருவனை அருகே அழைத்தான்…

 

 

“சார்… என்று பணிந்துக் கொண்டே அருகில் வந்தான் அவன். “எதுக்காக சார் இவங்க பிரச்சனை பண்றாங்க… உங்களை பார்த்தா இதுக்கும் உங்களுக்கும் சம்மந்தம் இல்லாத மாதிரி தெரியுதே… நானும் சம்மந்தப்பட்டவங்ககிட்ட விசாரிச்சுட்டேன்

 

 

“அவங்க ஏற்கனவே இதை எல்லாரும் அறிவிப்பு செஞ்சிட்டதாக சொன்னார்… நீங்க என்ன நடக்குதுன்னு சொல்ல முடியாம என்று தோழமையுடன் கேட்க அவனுக்கும் சற்றே தெம்பு வந்து பதில் சொன்னான்.

 

 

“சார் நானும் அதே தான் சொன்னேன்… தேவையில்லாம பிரச்சனை வேண்டாம்ன்னு… ஆனா ஊர்ல புதுசா சிலர் சொல்றதை தான் எல்லாரும் கேட்குறாங்க… அவங்க தேவையில்லாம சொல்றதை எல்லாம் கேட்டு தான் இங்க வந்து நிற்கறோம் சார்

 

 

“நான் வரமாட்டேன்னு தான் சொன்னேன்… ஆனா எல்லாரும் எங்க கேட்குறாங்க… நான் மட்டும் வரலன்னா என்னை எதுக்குமே கூப்பிட மாட்டோம்ன்னு சொன்னாங்க அதான் சார் நானும் இவங்களோட வந்தேன்…

 

 

“பிரச்சனை பண்றவங்க யாருன்னு கொஞ்சம் காட்டுங்க… என்றவனுக்கு மற்றவன் அடையாளம் காட்ட அவர்களை நோட்டம் விட்டுக் கொண்டான் அவன். சம்மந்தப்பட்ட அந்த துறை அதிகாரி வந்ததும் எல்லோரையும் அழைத்து ஒருவாறு சமாதானம் பேசியும்… சிலரை மிரட்டியும் அனுப்பி வைத்தான்.

 

 

‘ஹ்ம்ம் பரவாயில்லையே… போலீஸ் நல்லாவே வேலை செய்யறாரே என்று மனதிற்குள் மெச்சிக் கொண்டாள். நிரஞ்சன் அந்த இடத்தை விட்டு நகரும் போது தான் அவளைக் கண்டான்.

 

 

அவளை பார்த்து முறைத்துக் கொண்டே காரில் ஏறி அமர்ந்தவனை பார்த்து ஒழுங்கு காட்டியவளை வித்தியாசமாக பார்த்தான்.

 

 

சிவகங்கையை ஒட்டிய சில கிராமங்களிலும் சில இடங்களிலும் திருட்டு சம்பவங்கள் நடப்பதும் ஆங்காங்கே சில கலவரங்களும் நடப்பதுமாக இருந்தது. உளவுத்துறையின் மூலமாக அவர்களுக்கு சில தகவல்கள் வந்திருந்தது.

 

 

அதை கண்டுபிடிக்கும் பொருட்டே கமிஷனரின் நேரடி உத்தரவின் பேரில் நிரஞ்சன் அந்த ஊருக்கு வந்திருந்தான். அது மட்டுமில்லாமல் தனிப்பட்ட வேறு காரணமும் அவனுக்கு இருந்தது அவ்வூருக்கு வருவதற்கு. அவன் அண்ணன் அருணின் இறப்பை பற்றிய அவன் சந்தேகத்தை விசாரித்து தெரிந்து கொள்வது தான் அது.

 

 

சிவகங்கையின் DSP மாறன் அவனுடன் ஐபிஎஸ் ட்ரைனிங் முடித்தவன் என்பதால், கமிஷனரின் உத்தரவை ஏற்றுக் கொண்டு நண்பனின் உதவியுடன் அவன் விசாரணையில் இறங்கினான்.

 

 

அது விஷயமாக அன்று அவன் ஒருவரை சந்திக்க வேண்டி இருந்தது. அந்த நபரின் எண்ணை கோப்புகளில் தேடி எடுத்தவன் அவருக்கு போன் செய்தான். “ஹலோ… நான் நிரஞ்சன் பேசறேன்… நீங்க கார்த்திக் தானே

 

 

“நீங்க கூட ஒரு கேஸ் விஷயமா இங்க கம்ப்ளைன்ட் பண்ணியிருந்தீங்களே. அதை பத்தி உங்ககிட்ட பேசணும், நீங்க DSP ஆபீஸ் வரைக்கும் வர முடியுமா???

 

 

“ஓ… கண்டிப்பா வர்றேன் சார்…நான் ஒரு அரைமணி நேரத்தில அங்க இருப்பேன்… என்றுவிட்டு போனை வைத்தான் மறுமுனையில் இருந்தவன்.

 

 

கார்த்திக் DSP அலுவலகம் வந்து சேரவும் அவனை அடையாளம் கண்டுக் கொண்ட ஒருவர் அவனிடம் வந்தார். “என்ன Mr கார்த்தி மறுபடியும் இங்க வந்திருக்கீங்க… அதான் நீங்க கொடுத்த கம்ப்ளைன்ட் அர்த்தமில்லாததுன்னு சொல்லிட்டோமே

 

 

“அப்புறமும் ஏன் இங்க வந்திருக்கீங்க… இங்க யாரையாச்சும் பார்க்க வந்திருக்கீங்களா?? என்று விசாரித்தார் அந்த போலீஸ் அதிகாரி. அதற்குள் நிரஞ்சன் அங்கு வந்துவிட “என்ன சாமி அவர்கிட்ட என்ன பேசிட்டு இருக்கீங்க… என்றவன் திரும்பி கார்த்திக்கை பார்த்தான்.

 

 

“டேய் கார்த்திக்… இங்க என்னடா நின்னு பேசிட்டு இருக்க, என்னை பார்க்க வந்தா நேரா உள்ள வரவேண்டியது தானே… அப்புறம் அம்மா எப்படி இருக்காங்க… வா நாம உள்ள போய் பேசுவோம் என்று அவனை உள்ளே அழைத்தான்.

 

 

“என்ன சாமி என்ன பார்த்திட்டு இருக்கீங்க… கார்த்திக் என்னோட பிரண்ட் தான்… இங்க முக்கியமான ஒருத்தரை நான் பார்க்கணும் அது விஷயமா தான் அவனை வரச்சொல்லி இருந்தேன். அப்புறம் உங்ககிட்ட நான் முக்கியமா பேசணும், நான் வந்து பேசறேன் என்றுவிட்டு உள்ளே சென்று விட்டான்.

 

 

“சார் என்னது இது… திடிர்னு என்னை உங்க பிரின்ட்ன்னு சொல்லிட்டீங்க… என்ன விஷயம் சார்… என்றான் கார்த்திக் புரியாமல்.

 

 

“இல்லை கார்த்திக்… சாமி மேல எனக்கு கொஞ்சம் சந்தேகம் இருக்கு… அதான் அப்படி சொன்னேன்… நீங்க எப்பவோ வந்ததை ஞாபகம் வைச்சுட்டு அவர் உங்களை விசாரிக்கிறார்ன்னா அவர் யாருக்கோ உளவு சொல்றார்ன்னு புரியலையா உங்களுக்கு…

 

 

“அதான் உங்களை என்னோட நண்பன்னு சொல்லிட்டேன்… இனி அவருக்கு எந்த சந்தேகமும் இருக்காது… அப்புறம் நீங்க என்னை நிரஞ்சன் கூப்பிடலாம்… நமக்கு ஒரே வயசா தான் இருக்கும்ன்னு நினைக்கிறேன்…

 

 

“ஓ தேங்க்ஸ் சார்… சாரி நிரஞ்சன்…சொல்லுங்க உங்களுக்கு நான் என்ன தகவல் தரணும்

 

 

“உங்க கம்ப்ளைன்ட் படி அடிக்கடி இங்க நடக்குற கொள்ளைக்கும் சில முக்கியஸ்தர்களுக்கும் சம்மந்தம் இருக்கும்ன்னு நினைக்கிறீங்க இல்லையா…

 

 

“நிரஞ்சன்!! நான் கம்ப்ளைன்ட் அப்படி கொடுக்கலை… இங்க அடிக்கடி கொள்ளை சம்பவம் நடக்குது… அதுவும் ஒரே மாதிரியானதா இருக்கு… அதை பத்தி விசாரிக்க சொல்லி தான் நான் கொடுத்திருந்தேன்

 

 

“இங்க இருக்கவங்க எந்த ஆக்சனும் எடுக்கலை… அதுனால தான் நான் கமிஷனர்க்கு நேரடியா எழுதினேன்…

 

 

“நீங்க இங்க உள்ள DSPக்கு சொல்லி இருக்கலாமே…

 

“எங்க நிரஞ்சன் சொல்ல விட்டாங்க… இப்போ வெளிய பார்த்தோமே சாமி அவர் என்னை DSPகிட்ட பேசவே விடலை… அதுனால தான் நான் கம்ப்ளைன்ட் எழுதி கொடுத்தேன். ஒருவகையில நீங்க சாமியை பற்றி யூகிச்சது போலவே தான் எனக்கும் தோணிச்சு

 

 

“சரி நீங்க ஏன் இந்த கேஸ்ல இவ்வளவு அக்கறையா இருக்கீங்க??

 

 

“நிரஞ்சன் நீங்க எப்படி சொன்னீங்களோ தெரியலை… நான் உங்களை என்னோட நண்பனாவே நினைச்சு இந்த உண்மையை சொல்றேன்… xxxx….. தொடர்ந்து ஏதோ சொல்ல நிரஞ்சன் முகத்தில் தெளிவு வந்திருந்தது.

 

 

“ஓகே கார்த்திக்… உங்களை சந்திச்சதுல ரொம்ப சந்தோசம்… சீக்கிரமே இந்த கேசை கண்டிப்பிடிக்கறேன் என்றான் நிரஞ்சன்.

 

 

“அய்யோ… ஒரு விஷயம் மறந்திட்டேன் நிரஞ்சன் என்றவன் அவன் பேண்ட் பாக்கெட்டில் கையைவிட்டு துழாவி எதையோ எடுத்தான். “இந்தாங்க இது ஒரு சிம் கார்ட்… அன்னைக்கு எங்க பக்கத்து வீட்டில திருட வந்தவங்க எங்க வீட்டு காம்பவுண்ட் சுவர் ஏறி குதிச்சு போய் இருக்காங்க

 

 

“அப்போ யாரோ ஒருத்தர் தவற விட்ட சிம் கார்ட் தான் இது… இது ஒரு பேப்பர்ல சுத்தி இருந்துச்சு… இதை சாமிகிட்ட கொடுக்க எனக்கு தோணலை… அதான் உங்ககிட்ட கொடுக்கறேன்… பார்த்துக்கோங்க

 

 

“அப்புறம் இன்னொரு விஷயம் எங்க வீட்டுக்கு ஒரு நாலைஞ்சு வீடு தள்ளி புதுசா சிலர் குடிவந்து இருக்காங்க… அப்பப்போ இங்க பக்கத்து ஊர்களுக்கு போய் பிரச்சனையை தீர்த்து வைக்கிறேன்னு சொல்லி மேல மேல பிரச்சனை பண்ணிட்டு இருக்காங்க…

 

 

“எனக்கு அவங்க மேல கொஞ்சம் சந்தேகம் இருக்கு… அவங்களுக்கு இந்த கொள்ளை சம்பவத்துக்கும் கூட ஏதாவது ஒரு வகையில சம்மந்தம் இருக்கலாம்ன்னு தோணுது என்றான் கூடுதல் தகவலாக.

 

 

“ரொம்ப தேங்க்ஸ் கார்த்தி… நீங்க நெறைய விஷயம் சொல்லி இருக்கீங்க… இந்த கேசை மேற்கொண்டு கவனிக்க இந்த விஷயம் ரொம்பவும் உதவும்… மறுபடியும் சொல்றேன் ரொம்ப தேங்க்ஸ் கார்த்திக்… என்றவன் வாசல் வரை வந்து அவனை வழியனுப்பினான். “தேங்க்ஸ் எல்லாம் எதுக்கு நிரஞ்சன்… அது என்னோட கடமையும் கூட என்றான் அவன் பதிலுக்கு.

 

 

இருவரும் வாசலுக்கு வரவும் அங்கு வண்டி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடத்தில் சஞ்சனா நின்றிருந்தாள். கார்த்திக் அவளை பார்த்ததும் இரண்டு நிமிடம் காத்திரு என்பதாய் சைகை செய்ய அவளோ இருவரையும் பார்த்து முறைத்தாள்.

 

 

“அய்யய்யோ… முறைக்க ஆரம்பிச்சுட்டா… இன்னைக்கு நான் காலி என்றான் கார்த்திக். ஏனோ அர்ஜுன் பேருந்து நிலையத்தில் கூறியது சம்மந்தமே இல்லாமல் நினைவுக்கு வந்தது நிரஞ்சனுக்கு. அவள் யாரையோ மாமா என்று அழைத்து அவனுடன் செல்கிறாள் உனக்கு வில்லன் வந்துவிட்டான் என்பதே அது.

 

 

“கார்த்திக் யார் அவங்க??

 

 

“என்னோட மாமா பொண்ணு நிரஞ்சன்…

 

 

“நீங்க கட்டிக்க போற பொண்ணுன்னு சொல்லுங்க… என்றவனுக்கு உள்ளே எதுவோ செய்தது.

 

 

“அட நீங்க வேற நிரஞ்சன் இவளை போய் யாராச்சும் கட்டிக்குவாங்களா… தப்பா எடுத்துக்காதீங்க… இவ நல்ல பொண்ணு தான்… ரொம்ப வாலு… சரியான அரவை மிசின் இவ… எப்படி வீங்கி போய் இருக்கா பாருங்க…

 

 

“ஏன் கார்த்திக் அப்படி சொல்றீங்க…

 

 

“நமக்கு வேற ஆளு நிரஞ்சன், இவளோட அக்கா… அக்கான்னு சொன்னா இவ சண்டைக்கு வருவா… அப்படி சொல்லலைன்னா அவ சண்டைக்கு வருவா… ரெண்டு பேரும் ட்வின்ஸ்… இவளோட அக்கா அஞ்சனாவை தான் எனக்கு பேசியிருக்காங்க என்றவனின் கண்களில் காதல் வழிந்தது.

 

 

அப்போது தான் நிரஞ்சனுக்கு மனம் லேசானது போல் இருந்தது. அது ஏன் என்று அவனுக்கு அப்போது புரியவில்லை. அவர்கள் இருவரும் அவளை பற்றி பேசி சிரிப்பதை கண்டுவிட்டு கார்த்திக்கை முறைத்துக் கொண்டே அவர்களின் அருகில் வந்தாள் அவள்.

 

 

“என்ன மாமா வேலை முடிஞ்சுது தானே… அப்புறம் என்ன வெட்டியா அரட்டை… இவர் என்னை பத்தி என்ன சொல்லிட்டு இருந்தார்… நீங்க இப்படி சிரிக்கறீங்க என்று பொரிந்தாள்.

 

 

“அவர் உன்னை பத்தி எதுவும் சொல்லலை… நான் தான் நீயும் அஞ்சுவும் என்ன பண்ணுவீங்கன்னு சொல்லிட்டு இருந்தேன். சரி வா… உனக்கு டைம் ஆச்சுல நாம கிளம்புவோம்… உன் ஸ்கூட்டி இன்னைக்கு சாயங்காலம் சர்வீஸ் ஆகி வந்திடும் ஓகே தானே… கிளம்புவோமா??

 

 

“ஹ்ம்ம்… என்று முணுமுணுத்தவள் நிரஞ்சனை முறைத்துக் கொண்டே சென்றாள். கிளம்பும் முன் “கார்த்திக் ஒரு நிமிஷம்… நாளைக்கு நான் உங்க வீட்டுக்கு வரலாமா என்றவன் அவன் அருகில் வந்து மேலும் ஏதோ சொல்ல “கண்டிப்பா வாங்க நிரஞ்சன் என்று அவனும் அழைப்பு விடுத்தான்.

 

 

மறுநாள் சொன்னது போலவே காலையில் கார்த்திக்கின் வீட்டிலிருந்தான் நிரஞ்சன். கார்த்திக் அவனை அழைத்து உள்ளே சென்று அமர வைத்தான். கார்த்திக்கிற்கு அன்னை மட்டுமே தந்தை உயிருடன் இல்லை…

 

 

“அம்மா என்னோட பிரின்ட் நிரஞ்சன் வந்திருக்காரு… என்று அவன் அன்னையை அழைத்தான்.

 

 

“கார்த்திக் நீ வா போன்னே கூப்பிடுங்க… என்றவன் கார்த்திக்கின் பார்வையில் “நானும் அப்படியே கூப்பிடுறேன் போதுமா

 

 

“வாங்க தம்பி… என்று அழைத்துக் கொண்டே கையில் காபியுடன் வந்தார் கார்த்திக்கின் அன்னை சுந்தரி. அவனிடம் ஒரு கோப்பையை நீட்டியவர் மகனிடம் ஒன்றை கொடுத்துவிட்டு இருக்கையில் அமர்ந்தார்.

 

 

“அப்புறம் தம்பி உங்களுக்கு சென்னைன்னு கார்த்திக் சொன்னான்… சென்னையில எங்க??? என்னோட அண்ணன் வீடு கூட அங்க தான் இருக்கு என்றார் அவர்.

 

 

“எங்களுக்கு சொந்த ஊர் இது தான்ம்மா… ரொம்ப வருஷம் முன்னாடி நாங்க சென்னை போய்ட்டோம்… இப்போ இங்க ஒரு வேலையா நான் வந்திருக்கேன் என்றான் அவன் பதிலுக்கு.

 

 

“இந்த ஊரா… இந்த ஊர்ல எங்க… உங்க அப்பா பேரு என்ன… என்று விசாரிக்க அவன் அளித்த பதில் அவரை யோசனைக்கு உள்ளாக்கியது. மேற்கொண்டு எதுவும் கேளாமல் அவர் எழுந்து உள்ளே சென்றுவிட்டார்.

 

 

“நிரஞ்சன் இங்க வா… அந்த வீட்டை உனக்கு காட்டுறேன்… என்ற கார்த்தி அவனை இழுத்துக் கொண்டு அவர்கள் வீட்டின் பலகணிக்கு சென்றான்.

 

 

“அதோ அந்த வீடு தான் நான் சொன்ன வீடு??? என்று சுட்டிக் காண்பித்தான். நிரஞ்சனும் அந்த வீட்டை நன்றாக பார்த்துக் கொண்டான்… “சரி கார்த்தி… நான் கிளம்பறேன்… எந்த முக்கியமான விஷயம்ன்னாலும் நீ எனக்கு இந்த நம்பர்ல காண்டக்ட் பண்ணு என்றவன் அவன் பர்சனல் எண்ணை குறித்துக் கொடுத்தான்.

 

 

நிரஞ்சன் அன்று இரவிலிருந்து கார்த்திக்கின் வீடு இருக்கும் தெருவை ரோந்து வர ஆரம்பித்தான்… தூரத்தில் இருந்து கார்த்திக் காட்டிய வீட்டையும் நோட்டமிட்டான்.

 

 

இரண்டு நாள் சென்றிருக்கும் அன்று இரவும் அவன் வழக்கம் போலே அந்த தெருவை நோட்டமிட்டு ரோந்து வந்திருந்தான். அவன் பைக்கை ஒரு ஓரமாக நிறுத்தி அடர்ந்த இருளில் நின்றுக் கொண்டிருந்தான்.

பார்ப்பவர்களுக்கு அங்கு ஒருவன் இருப்பது சட்டென்று தெரியாது… அப்போது கார்த்திக்கின் வீட்டு வெளி கேட் மெதுவாக திறந்தது. சஞ்சனா அவள் ஸ்கூட்டியை சத்தமில்லாமல் தள்ளிக் கொண்டு வெளியில் வந்து நிறுத்தியவள் வெளிகேட்டை மீண்டும் அடைத்தாள்.

 

 

‘இந்த லேடி ஜாக்கி இந்த நேரத்துக்கு எங்க கிளம்புது. அதுவும் யாருக்கும் தெரியாம?? என்று யோசித்துக் கொண்டிருந்தான் நிரஞ்சன்.

 

 

நான்கைந்து வீடு வரை ஸ்கூட்டியை தள்ளிச் சென்றவள் அதில் ஏறி அமர்ந்து வண்டியை ஸ்டார்ட் செய்து ஓட்ட ஆரம்பித்தாள். நிரஞ்சனும் அவளறியாமல் அவளை பின் தொடர முடிவு செய்தான்.

 

 

‘இருந்தாலும் இந்த ஜான்சிராணிக்கு ரொம்ப தான் திமிர்… இப்படி அர்த்த ராத்திரியில எந்த பயமும் இல்லாம இவ பாட்டுக்கு வண்டி எடுத்துட்டு போறாளே என்று ஒரு புறம் நினைத்தாலும் அவள் தைரியத்தை அவன் மெச்சிக் கொண்டான் என்பதே உண்மை.

 

 

அவள் வண்டி ஊரைத் தாண்டி நெடுஞ்சாலையில் பயணிக்க நிரஞ்சனும் கணிசமான இடைவெளியில் அவளை பின்தொடர்ந்தான்.

 

 

‘இன்னைக்கு நிலா வெளிச்சம் கூட இல்லை… கும்மிருட்டா இருக்கு எப்படி இவ்வளோ தைரியம் இவளுக்கு. எங்க தான் போறா?? என்று வானத்தை நோக்கியவன் பார்வை சாலையை நோக்க அவள் அங்கிருந்து மறைந்திருந்தாள்.

 

 

‘இவ எங்க தான் போனான்னு தெரியலை… எப்படி மிஸ் பண்ணோம் இவளை… கொஞ்சம் கேப்ல எங்க போயிருப்பா என்று வண்டியை நிறுத்தி யோசித்துக் கொண்டிருந்தான் அவன்.

 

 

அவனுக்கு முன்னே சென்ற சஞ்சனா சாலையில் வலது புறமாக சென்ற பாதையில் சென்றதை நிரஞ்சன் கவனிக்க தவறியிருந்தான். ஸ்கூட்டியில் வந்து கொண்டிருந்தவளுக்கு அந்த இடத்தின் அசாத்திய அமைதி சற்றே பயம் கொடுத்தது.

 

 

இருந்தாலும் எடுத்த காரியம் முடிக்காமல் விட மனமில்லாதவள் அந்த தோப்பு வீட்டை நோக்கி பயணம் செய்தாள். அவ்வபோது உஸ்ஸ் உஸ்ஸ் என்ற காற்று வேறு அடிவயிற்றில் குளிரை பரப்பியது.

 

 

அந்த வீட்டின் முன்னே வந்து வண்டியை நிறுத்தியவள் மேற்கொண்டு போகலாமா வேண்டாமா என்று அங்கேயே நின்று பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருந்தாள்.

 

 

இவ்வளவு தூரம் வந்துட்டு யோசிக்க கூடாது என்று எண்ணியவள் கைப்பையில் இருந்த சிறிய டார்ச்சை எடுத்துக் கொண்டு வெளிகேட்டை திறந்துக் கொண்டு உள்ளே நுழைந்தாள்.

 

 

அங்கு வெளியில் இருந்த ஸ்விட்ச்சை போட அது எரியாமல் இருந்தது. ‘ச்சே… கரண்ட் இல்லை போல இருக்கே… இல்லை காசு கட்டாம இருந்திருப்பாங்களோ என்று நினைத்தவள் அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்தாள்.

 

 

சரி பின்னாடி போய் பார்ப்போம் என்று யோசித்தவள் பக்கவாட்டில் நடக்க ஆரம்பித்தாள். பக்கவாட்டில் மூடியிருந்த சன்னல் ஒன்று படீர் என்று திறந்து மூடிய ஓசை கேட்டது. நான் வரும் போது மூடி தானே இருந்துச்சு. அப்போ எப்படி இப்படி சத்தம் கேட்குது.

 

 

அவள் இதயம் வேகமாக துடிக்கும் ஓசை கை வைக்காமலே அவளுக்கு கேட்டது. மெதுவாக நடந்து வீட்டிற்கு நேர் பின் பக்கம் சென்றிருந்தாள்… அவள் நடந்து செல்லும் போது பின்னோடே சருகுகள் மிதிபடும் ஓசை கேட்டது வேறு அவளுக்குள் மேலும் கலக்கத்தை விதைத்தது.

 

 

மெதுவாக அவள் நடந்து வந்த திசையை பார்க்க காற்றில் அந்த காய்ந்த சருகுகள் இங்குமங்குமாக நகர்ந்ததில் வந்த சத்தம் என்று புரிந்தது. இருந்தாலும் காலடியோசை கேட்டது போல் இருந்ததே என்று மனம் யோசித்தது.

 

 

என்ன ஆனாலும் ஆகட்டும் என்று அங்கு ஒரு சன்னல் கதவு லேசாக திறந்திருக்க ‘ஹைய் இதை திறந்து உள்ள எதாச்சும் இருக்கா பார்க்கலாம் என்று தோன்ற கதவை மெதுவாக திறந்தாள்.

கதவை முழுதாக அவளால் திறக்க முடியவில்லை… பாதி திறந்த நிலையில் இருந்த கதவிடுக்கின் வழியாக டார்ச்சை அடித்து பார்க்க அங்கு அருகிலிருந்த மேஜையின் மேல் ஒரு பை இருந்தது.

 

 

சன்னலை விட்டு சற்றே தள்ளி இருந்த மேஜை மேல் இருந்த பையை எட்டி எடுக்கலாம் என்று தோன்றியது அவளுக்கு. சன்னலின் மற்றுமொரு கதவை திறக்க முயற்சிக்க அது திறப்பேனா என்றது.

 

 

‘ஒரு வேளை இது அருணோட பையா இருக்குமோ என்ற யோசனையுடனே கையை உள்ளே விட்டு பையை எடுக்க முயன்றாள். அப்போது கையை யாரோ பிடிக்க அவள் நெஞ்சு உலர்ந்து போய் உடல் முழுதும் வெலவெலத்து போனது.

 

 

ஒரு கணம் திடுக்கிட்டவள் மறுகணம் தன்னை சுதாரித்துக் கொண்டு மறுகையால் டார்ச்சை உள்ளே விட்டு பார்க்க அரண்டு போனாள். அங்கு அவள் கையை பிடித்துக் கொண்டிருந்தது நிரஞ்சனின் இறந்து போன அண்ணன் அருணே.

 

 

“எதுக்கு என்னோட பையை எடுக்கற?? என்ற அமானுஷ்ய குரலில் கூறியவன் காற்றில் அரூபமாக மேலேழும்பி நின்றிருந்ததை பார்த்தவள் உடல் சில்லிட்டு போய், கால்கள் துவள ஆரம்பிக்க கண்கள் இருட்டிக் கொண்டு வந்தது…..

 

 

 

 

 

 

 

Advertisement