Advertisement

அத்தியாயம் –21

 

 

அன்று காலை விடியும் முன்பாகவே ராஜீவிடம் இருந்து ஆதிக்கு போன் வந்தது. அரைவிழிப்பு நிலையிலேயே எழுந்து போனை தடவியவனிடம் போனை எடுத்துக் கையில் கொடுத்தாள் ஆதிரா. “தேங்க்ஸ் ஆரா” என்றவாறே போனை எடுத்தான் ஆதி. “சொல்லுடா என்ன காலையிலேயே போன் பண்ணி இருக்கே” என்றான். “வெற்றி வந்திருக்கான் அதை சொல்ல தான் கூப்பிட்டேன்” என்றான் ராஜீவ். “ஹேய் எப்படா வந்தான் எனக்கு ஒரு போன் கூட பண்ணலை அவன்” என்றான் ஆதி.

 

“அவன் வந்து ரெண்டு நாளாச்சுடா” என்றான் ராஜீவ். “ரெண்டு நாளாச்சா ஏன்டா என்கிட்ட சொல்லலை” என்றான் ஆதி. “ஒரு சின்ன பிரச்சனை அவனுக்கு அதான் உனக்கு போன் பண்ணேன், நான் இன்னைக்கு ஒரு நாள் விடுப்பு எடுத்துக்கறேன்டா, நீ அலுவலகம் போவதற்கு முன்னால் வந்து அவனை ஒரு எட்டு பார்த்துவிட்டு போ, அவனுக்கு கொஞ்சம் ஆறுதலாகவாவது இருக்கும்” என்றான் ராஜீவ்.

 

“என்ன தான் அவனுக்கு பிரச்சனை அதை சொல்லுடா எனக்கு மண்டையே வெடிக்குது” என்றான் ஆதித்தியன். “அந்த லட்சுமிக்கு கல்யாணம் ஆகிடுச்சாம் அது தான் பிரச்சனை, மிச்சத்தை நீ நேர்ல வந்ததும் பேசிக்கலாம். நீ சீக்கிரமா கிளம்பி வா” என்று சொல்லிவிட்டு அவன் போனை வைத்தான். வேகமாக எழுந்து குளித்தவன் சாப்பிட்டுவிட்டு தந்தையிடம் சென்று ராஜீவ் விடுப்பு பற்றி கூறியவன் அவனும் சற்று தாமதமாக வருவதாகக் கூறிவிட்டு கிளம்பினான்.

 

ஆதிராவிடம் விடைபெற்று ராஜீவின் வீட்டிற்கு சென்றான். அங்கு வெகுவாக களைத்துப்போய் உட்கார்ந்திருந்த வெற்றி கண்ணில்பட்டான். “என்னடா நீ எப்போ வந்தே, ஒரு வார்த்தை எனக்கு போன் பண்ணி சொல்லலை” என்றான் ஆதி ஆதங்கத்துடன்.

 

“எனக்கு ஏன் இன்னும் உயிரோட இருக்கோம்னு தோணுதுடா, இத்தனை நாள் நான் யாருக்காக காத்திருந்தேனோ அந்த காத்திருப்பு எல்லாம் வீணா போச்சுடா. நான் தப்பு பண்ணிட்டேன் நான் வெளிநாட்டுக்கு போயிருக்கவே கூடாது. எல்லாம் என்னோட தப்பு தான்” என்று அழுது புலம்பியவனை தேற்றும் வழி தெரியாது நண்பர்கள் இருவரும் திகைத்தனர். ராஜீவின் மனைவி ராதிகா வேலைக்கு சென்றுவிட்டதால் இவர்கள் மட்டுமே வீட்டில் இருந்தனர்.

 

“என்ன தான் ஆச்சு நீயாவது சொல்லு ராஜீவ்” என்றான் ஆதி. “இவன் ஊர்ல இருக்கும் போதே யாரோ லட்சுமி வீட்டில இருக்க எல்லாரும் சென்னைக்கு போய்ட்டாங்கன்னு சொன்னாங்களாம். இவனும் ஊர்ல இருந்து வந்த அன்னைக்கே அவங்களை தேடி அவங்க வீட்டுக்கு போயிருக்கான். அவங்க எங்கயோ கிளம்பிட்டு இருந்துருக்காங்க. அப்போ தான் இவன் யதேச்சையா கேக்குற மாதிரி லட்சுமி எங்கன்னு கேட்க உனக்கு விஷயமே தெரியாதா, லட்சமி கல்யாணம் ஆகி அவ புருஷன் வீட்டுக்கு போய்ட்டான்னு சொல்லி இவன் தலையில இடியை இறக்கி இருக்காங்க…” என்று சொல்லிக் கொண்டிருந்தவனை இடைமறித்து, “அது மட்டுமா சொன்னாங்க அதுக்கு அப்புறம் நான் கேள்வி பட்டது தான் எனக்கு உயிரே போற மாதிரி வலிக்குது” என்று மேலும் புலம்பியவனை அமைதியாக இருக்கச் சொல்லிவிட்டு ராஜீவ் தொடர்ந்தான்.

 

அதுக்கு அப்புறம் அந்த பொண்ணோட தம்பிக்கிட்ட லட்சுமியை பத்தி விசாரிக்க அவளும் சென்னையில தான் இருக்கான்னு சொல்லியிருக்காங்க…” என்றவனை மீண்டும் இடைமறித்தான் வெற்றி. “அவளை எவனுக்கோ ரெண்டாம் தாரமா கட்டிக் கொடுத்து இருக்காங்கடா, அதை தான் என்னால தாங்கவே முடியலை, அவ எப்படிப்பட்ட பொண்ணு தெரியுமா… ஒரு பொக்கிஷம் மாதிரி நான் அவளை பார்த்து இருந்துருப்பேன். இப்படி எவனுக்கோ ரெண்டாம் தாரமா கொடுக்கற அளவுக்கு என்ன நடந்துச்சு. நான் ஊருக்கு போகாம இருந்திருந்தா அவளை எப்படியாச்சு கல்யாணம் பண்ணி இருந்துருப்பேன், எல்லாம் என்னால தான்” என்று மீண்டும் புலம்பியவனை இருவருமாக சேர்ந்து சமாதானப்படுத்தினர்.

 

வெற்றி பேசியது ஆதிக்குள் வலியை ஏற்படுத்தியது அவன் முகம் மாறியதை கவனித்த ராஜீவ் “சரி ஆதி நீ ஆபீஸ் கிளம்பு நேரமாச்சு, நான் இவனை பார்த்துக்கறேன், சாயங்காலம் கதிரும் ராகுலும் வந்துடுறேன் சொல்லி இருக்காங்க” என்று ஆதியை கிளம்பினான் அவன்.

 

“வெற்றி நீ எதையும் போட்டு மனசை குழப்பிக்காத சாயங்காலம் நீ வீட்டுக்கு வா, அங்க வந்து எல்லாரையும் பார்த்தா நீ கொஞ்சம் தெளிவா இருப்ப. நீ ஊருக்கு போறதுக்கு முன்ன வந்தது” என்று விட்டு ஆதி கிளம்பினான். வெற்றியின் வருகையால் குழப்பங்கள் வரும் என்று அறிந்திருந்தால் ஆதி இப்படி சொல்லி இருக்கவே மாட்டான்……

 

மாலை வேலை முடிந்து வீட்டிற்கு சென்றான் ஆதி. வீட்டிற்கு சென்றதும் ஞாபகம் வந்தவனாக ராஜீவிற்கு போன் செய்தான். “ராஜீவ் என்னாச்சுடா வெற்றி எப்படி இருக்கான் வீட்டுக்கு வரச் சொன்னனே” என்றான் ஆதி. “அப்படி இப்படின்னு பேசி கொஞ்சம் சமாதானப்படுத்தி இருக்கான்டா, உங்க வீட்டுக்கு வர்றேன்னு சொல்லி இப்ப தான் கிளம்பினான். கொஞ்ச நேரத்துல வீட்டுக்கு வந்துடுவான்” என்று சொல்லி போனை வைத்தான் அவன்.

 

ஆதி முகம் கழுவி அவன் அறையில் இருந்து வெளியில் வந்தவன் வரவேற்ப்பறையின் சோபாவில் வந்து அமர்ந்தான்.  ஆதிக்கு போன் வர எடுத்து பேசியவன் “வெற்றியா எங்கடா இருக்க, வழி மறந்துட்டியா. சரி இரு நான் வந்து கூட்டிட்டு வர்றேன்” என்று பேசிவிட்டு கிளம்பினான். “அம்மா நம்ம வெற்றி வந்துட்டு இருக்கான், வழி தெரியலையாம் நான் போய் கூட்டிட்டு வர்றேன். அப்புறம் அம்மா அவன் ஏதோ மனசு வருத்தத்துல இருக்கான். அதான் நம்ம வீட்டுக்கு வரச் சொன்னேன்” என்று சொல்லிவிட்டு சென்றான்.

 

சமையலறையில் இருந்து வெளியில் வந்த ஆதிரா ‘இப்போ தானே வீட்டுக்கு வந்தார், அதுக்குள்ள எங்க சொல்லாம கொள்ளாம வெளியே கிளம்பி போறார்’ என்று நினைத்துக் கொண்டே குழந்தைகளை பாடம் சொல்லிக் கொடுக்க கூட்டிச்சென்றாள். சிறிது நேரத்தில் நண்பனுடன் வீட்டிற்கு வந்தான் ஆதி, “அம்மா எப்படி இருக்கீங்க” என்றான் லட்சுமியிடம்.

 

“நல்லா இருக்கேன்பா, உனக்கு இப்போ தான் இந்த வீட்டுக்கு வர வழி தெரிஞ்சுதா, வீட்டில எல்லாரும் நல்லா இருக்காங்களா. தங்கச்சிக்கு கல்யாணம்ன்னு சொன்னியாமேப்பா, நல்ல இடமா” என்று விசாரித்துக் கொண்டிருந்தார் அவர்.

 

“எல்லாரும் நல்லா இருக்காங்கம்மா, எல்லாமே ஞாபகம் வைச்சு கேக்குறீங்க சந்தோசமா இருக்கும்மா” என்றான் வெற்றி. அதற்குள் ஆதி “ஆரா கொஞ்சம் காபி எடுத்துட்டு வா” என்றான். “இதோ வர்றேங்க” என்று சொல்லிவிட்டு சிறிது நேரத்தில் காபியுடன் வெளியில் வந்தவள் அதிர்ந்து நின்றாள். மனதிற்குள் செல்வம் மாமா என்று சொல்லிக் கொண்டவள் முகம் முதலில் அதிர்ச்சியை சுமந்தது அதை மாற்றிக் கொண்டு அவள் முன்னேறி நடக்க “லட்சுமி நீ எங்க இங்க” என்று வெற்றி கேட்க ஆதி சுக்கு நூறாக ஆனான். “என்னப்பா ஆதிராவை உனக்கு முன்னாடியே தெரியுமா, இவ தான் ஆதியோட மனைவி” என்று லட்சுமி சொல்ல இப்போது வெற்றியின் முகம் மாறியது. “அத்தை இவங்க எங்க அம்மாவோட சித்தி பையன், எனக்கு மாமா முறையாகணும்” என்று மாமியாருக்கு பதில் அளித்தவள், வெற்றியை நோக்கி “என்ன செல்வம் மாமா ஊர்ல இருந்து எப்போ வந்தீங்க சித்திக்கு கல்யாணம் கேள்விபட்டேன். கல்யாண வேலை எல்லாம் எப்படி போய்ட்டு இருக்கு” என்றாள் அவள் இயல்பாக.

 

“இம் நல்லா போய்ட்டு இருக்கு லட்சுமி” என்றான் அவன். “ரெண்டு பேரும் இருங்க என்னம்மா நீ இவனை செல்வம்ன்னு கூப்பிடுற, அவன் உன்னை லட்சுமின்னு சொல்லறான், என்ன விஷயம்” என்று அவர் கேட்க, “அத்தை மாமா பேரு வெற்றி செல்வம், ஊர்ல எல்லாரும் இவங்களை செல்வம்ன்னு தான் கூப்பிடுவோம். என்னோட பேரு ஆதிரை லட்சுமின்னு உங்களுக்கு தெரியுமே அத்தை. நான் பிறந்த பிறகு தான் எங்க வீட்டுக்கு செல்வம் பெருகுச்சுன்னு அப்பா என்னை லட்சுமின்னு தான் கூப்பிடுவாங்க, அதை பார்த்து எல்லாருமே அப்படியே கூப்பிட ஆரம்பிச்சுட்டாங்க” என்றாள் அவள்.

 

வெற்றிக்கு இதற்கு மேல் அங்கிருப்பது உசிதமாக படவில்லை, ஆதியின் முகத்தை பார்க்கவே அவனுக்கு முடியவில்லை. எப்படியோ கிளம்புகிறேன் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து எல்லோரிடமும் விடைபெற்று கிளம்பினான். ஆதி அவ்வளவு நேரமும் ஒரு பார்வையாளனாக இருந்து நடப்பத்தை பார்த்துக் கொண்டிருந்தான்.

அவனுக்குள் ஒரு சுனாமியே வந்து போனது, வெற்றி விரும்பியது ஆதிராவை தான் என்று அறிந்த ஆதியின் மனம் வேதனையில் துடித்தது. வெற்றி பேசிய ஒவ்வொரு வார்த்தையும் இன்னமும் காதுகளில் ஒலித்துக் கொண்டிருந்தது. அவன் சொல்லியது உண்மை தானே ‘இரண்டாம் தாரமா ஒருத்தனை போய் அவளுக்கு கல்யாணம் பண்ணி இருக்காங்க’ என்று அவன் பேசியது ஆதியை மொத்தமாக உருக்குலைத்தது.

 

ஆதிராவின் வாழ்க்கையை கெடுத்துவிட்டோமோ என்று அவன் மனம் அவனை கேள்வி கேட்க ஆரம்பித்தது. பலவிதமான குழப்பத்தில் ஆழ்ந்தவன் யாரிடமும் எதுவும் பேசவில்லை, ராஜீவிடம் இருந்து அவனுக்கு அழைப்பு வந்துக்கொண்டிருந்தது. ஆதியோ அதை எடுக்கும் மனநிலையில் இல்லை. ஆதியின் வீட்டில் இருந்து கிளம்பிய வெற்றி ராஜீவிற்கு போன் செய்து விஷயத்தை சொன்னான்.

 

ராஜீவிற்கு நடந்தது புரிய அவனும் குழப்பத்தில் தவித்தான். ஆதி ஆதிராவின் மேல் கொண்டுள்ள காதல் அவனுக்கு மட்டுமே தெரியும், அதை ஆதி அவனிடம் சொல்லி இருக்கிறான். பலமுறை அவள் வாழ்க்கையை கெடுத்துவிட்டேனோ என்று சொல்லி ஆதிஅவனிடம் புலம்பி இருக்கிறான். ஆதியின் மனநிலையை ராஜீவால் புரிந்துக் கொள்ள முடிந்தது.

 

அவனிடம் பேசினால் அவன் குழப்பம் சற்று தீரும் என்று நினைத்தே அவன் ஆதிக்கு போன் செய்ய அந்த அழைப்புகள் எடுக்கப்படாமலே ஒய்ந்தது. ஆதி போன் எடுக்காமல் இருந்தது அவனுக்கு இன்னும் கவலையை கொடுக்க கடைசியாக ஆதிராவிற்கு முயற்சி செய்தான். முதல் அழைப்பிலேயே எடுத்தவள் “ஹலோ சொல்லுங்க அண்ணா” என்றாள். “இல்லைம்மா ரொம்ப நேரமா ஆதிக்கு போன் பண்ணிட்டே இருக்கேன், அவன் எடுக்கவே இல்லை, அதான் என்னவோ ஏதோன்னு உனக்கு போன் பண்ணேன்ம்மா. ஒண்ணும் பிரச்சனை இல்லையே’” என்றான் அவன்.

 

“ஒண்ணுமில்லை அண்ணா அவர் மாடியில இருக்கார்ன்னு நினைக்கிறேன், நான் வேணா போனை அவர்கிட்ட கொடுக்கவா” என்றாள் அவள். “கொடும்மா” என்றான் ராஜீவ். எப்படியாவது அவனை சென்று மாடியில் பார்த்துவிட மாட்டோமோ என்ற எண்ணம் அவளுக்கு. மாடிக்கு சென்று “என்னங்க ராஜீவ் அண்ணா போன், உங்ககிட்ட பேசணுமாம்” என்றாள் அவள். “நானே போன் பண்றேன்னு சொல்லிடு, இப்போதைக்கு யாரும் என்னை தொந்திரவு பண்ணவேண்டாம். நீ கீழே போ” என்றான் ஆதி.

 

____________________

 

திருக்குறுங்குடி அழகிய கிராமம், அழகிய நம்பி பெருமாள் வீற்றிருக்கும் நூத்தி எட்டு திவ்யதேசங்களில் எழுபத்தி ஒன்பதாம் திவ்யதேசமாகும். அங்கு இருக்கும் தாயாரின் பெயர் குறுங்குடிவல்லி நாச்சியார், புகழ் பெற்ற திருமழிசையாழ்வார், நம்மாழ்வார், பெரியாழ்வார், திருமங்கையாழ்வார் பாடிய புகழ் பெற்ற தலம் அமைந்த அழகிய ஊர் அது. அந்த ஊரின் கொடி மரம் மற்ற கோவில்களை அல்லாமல் விலகி இருக்கும், அதற்கு காரணம் பக்தன் ஒருவனுக்காக கடவுள் கொடி மரத்தை தள்ளி வைத்து அவனுக்கு காட்சி தந்ததால் என்று தலவரலாறு கூறுகிறது.

 

ஆதிராவின் பூர்விகம் தான் அந்த அழகிய ஊர். ஆதிராவின் தந்தைக்கு விவசாயம் தான் உயிர் மூச்சு, அவருக்கு வயல், தோப்புத்துரவு என்று அந்த ஊரில் பெரிய மனிதராகவே திகழ்ந்தார். பிள்ளைகளை வெளியூருக்கு அனுப்பி படிக்கவும் வைத்தார் அவர்.

 

குழந்தைகளுக்கு நல்ல படிப்பு தான் எதிர்காலத்தை தரும் என்பதில் நம்பிக்கை கொண்ட சங்கரன் அவர்களை வெளியூரில் விடுதியில் தங்கி படிக்க வைத்தார். இதனால் ஊரில் உள்ளவர்கள் அவரை பலவாறு பேசிய போதும் அது எதையும் அவர் பொருட்படுத்தவில்லை.

 

ஆதிராவும் பத்தாம் வகுப்பு வரை அந்த ஊரிலேயே படித்தாள், அதன் பின் தான் அவளை திருநெல்வேலியில் உள்ள பள்ளியில் சேர்ந்து படிக்க வைத்தார். சூர்யாவையும் அடுத்து அதே பள்ளியில் சேர்த்து விடுதியில் சேர்ந்துவிட்டார் அவர். வாரவிடுமுறை தினங்களில் வீட்டிற்கு வரும் இருவரும் சண்டை இட்டுக் கொள்வதிலேயே அவர்கள் விடுமுறை கழிந்து விடும்.

 

கோமதி இருவரையும் ஏசுவார், “நீங்க ரெண்டு பேரும் வர்றதே வாரத்துக்கு ஒரு முறை தான் அதுக்கே என்னால முடியலையே. வர்றவங்க சண்டை போடாமலாவது இருங்களேன்” என்று இருவரையும் அவர் ஏசினாலும் அவர்கள் இல்லாது கழியும் அந்த ஒருவாரமும் கணவனுக்கும் மனைவிக்கும் நரகமாகவே இருக்கும்.

 

நேத்ராவின் தந்தையை பெற்ற தாயும் தகப்பனும் அப்போது அந்த ஊரில் இருந்ததால் அவள் விடுமுறைக்கு என்று வருடத்திற்கொரு முறை அங்கு வருவது வழக்கம். ஆதிராவின் வீட்டை ஒட்டிய அடுத்த வீடே நேத்ராவின் ஆச்சி வீடு என்பதால் ஆதிராவிற்கு நேத்ரா உற்ற தோழியாகி போனாள்.

 

வருடாந்திர விடுமுறையில் ஆதிராவுக்கு சூர்யாவுடன் சண்டையிட கூட நேரமிருக்காது நேத்ரா வந்துவிட்டால், தோழியர் இருவரும் அவர்கள் வயலையும் தோப்பையும் சுற்றி வரவே நேரமிருக்காது. இருவரும் தங்கள் பள்ளிகளில் நடந்த சுவையான பல விஷயங்களை பேசிக் கொள்வர்.

 

இருவருக்கும் பம்புசெட்டில் குளிப்பது, மாங்காய் தோப்பிற்கு சென்று மாங்காய் பறித்து தின்பதும், தென்னந்தோப்பிற்கு சென்று அங்கு வேலை செய்பவர்களை விரட்டி இளநீர் வெட்டிக் குடிப்பதும் என்றே பொழுது போகும் அவர்களுக்கு. தொட்டாசிணுங்கியை தொட்டு தொட்டு சிணுங்க வைப்பது இருவருக்கும் சுவாரசியமான விளையாட்டு.

 

சாப்பிடுவதற்கு மட்டுமே வீட்டிற்கு செல்லும் தோழியர் விடுமுறையில் அடிக்கடி செல்வது அழகிய நம்பி கோவிலுக்கும் தான். ஆதிராவின் அன்னை சூர்யாவையும் அவர்களுக்கு துணைக்கு அனுப்பி வைப்பார், ஆதிரா வேண்டுமென்றே அவனை சீண்டி விளையாடி அவனை தனியாக அனுப்பிவிடுவாள்.

 

அவர்களுக்கு அந்த கோவில் மிகப் பிடிக்கும். நின்ற, அமர்ந்த, நடந்த, கிடந்த, இருந்த என ஐந்து நிலைகளிலும் காட்சி தரும் அந்த அழகிய நம்பிராயரை நாளெல்லாம் பார்த்துக் கொண்டே இருப்பாள் அவள். தோப்பில் தோழியர் இருவரும் சுற்றிக் கொண்டிருக்க எதிரில் வந்து வழிமறித்தான் அவன்.

 

“என்ன செல்வம் மாமா எதுக்கு வந்து இப்போ வழி மறிக்கிற, உனக்கு வேலை ஏதும் இல்லையா” என்றாள் ஆதிரா. வெற்றி செல்வத்தின் ஆச்சி இந்த ஊரில் இருப்பதால் அவனும் விடுமுறைக்கு எப்போதும் அங்கு வந்து விடுவான். அவனுடைய தாய் தந்தையர் பாபநாசத்தில் இருக்க இவன் விடுமுறை முழுதும் ஊரிலேயே கழிப்பான். அதற்கு முக்கிய காரணம் ஆதிரா, அவனுக்கு ஆதிராவின் மேல் எப்போதும் ஒரு பிடித்தம் உண்டு.

 

“என்னாலே இப்படி கேட்டுட்ட மாமா உன்னைய வழி மறிக்கக் கூடாதா, சொல்லு லட்சுமி” என்றான் அவன், “மாமா என்ன விஷயமா இப்போ என்னை வழி மறிச்சு நிக்குற, எனக்கு நெறைய வேலை இருக்கு மாமா வழியை விடு” என்றாள் அவள். “ஒண்ணுமில்லை எங்க அக்கா உன்னை வீட்டுக்கு வரச் சொல்லிச்சு அதை சொல்லிட்டு போக தான் வந்தேன், நீ உன் சினேகிதி வந்தா சாப்பாட்டை மறந்துடுவியாமே. அதான் என்கிட்ட சொல்லிவிட்டுச்சு. போய் முதல்ல சாப்பிடுற வழியை பாருலே” என்றான் அவன்.

 

“எல்லாம் எங்களுக்கு தெரியும் நீ உன் வேலையை பாரு” என்றுவிட்டு அவள் தோழியை இழுத்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தாள். ஆதிராவின் பள்ளி படிப்பு முடிந்து அந்த வருடம் அவள் கல்லூரி முதல் வருடம் சேர்ந்திருந்தாள். நேத்ராவின் ஆச்சியும் தாத்தாவும் அவள் சித்தப்பாவிற்கு தென்காசியில் அரசாங்க உத்தியோகம் கிடைத்துவிட்டதால் அங்கு சென்றுவிட்டனர். நேத்ரா கடந்த ஒருவருடமாக ஊருக்கு வருவதில்லை.

 

தோழிகள் இருவரும் போனில் பேசியும் கடிதம் போட்டும் தங்கள் நட்பை வளர்த்துக் கொண்டனர். அந்த வருடம் விடுமுறையின் போது நேத்ரா அவள் வீட்டிற்கு வருமாறு ரொம்பவும் கட்டாயப்படுத்த அன்னை தந்தையிடம் அனுமதி பெற்று அவள் தோழி வீட்டிற்கு முதல் முறையாக சென்னைக்கு சென்றாள், சங்கரன் அவளை கூட்டி வந்து சென்னையில் நேத்ராவின் வீட்டில் விட்டுவிட்டு அன்றே கிளம்பி அவர் ஊருக்கு சென்று விட்டார்.

 

பத்து நாட்கள் கழித்து திரும்ப வந்து கூட்டி போவதாகச் சொல்லிவிட்டு சென்றார். நேத்ராவின் அண்ணன் கார்த்திக்கிற்கு ஆதிராவின் மேல் எப்போதும் ஒரு தனி கரிசனம் இருக்கும். அவளும் அவனை அண்ணா அண்ணா என்றழைத்து அவனுடன் நன்றாக பழகுவாள். அங்கு இருந்த எல்லோருக்குமே அவள் பிடித்தம் என்பதால் அவளுக்கு அந்த வீட்டில் இருப்பது கஷ்டமாக இல்லை.

 

அவளுக்கு ஒன்று மட்டும் தான் கஷ்டமாக இருந்தது, எப்போதும் சத்தமாக ஜனநெருக்கடியுடன் இருந்த அந்த ஊர் அவளுக்கு வித்தியாசமாக இருந்தது. திருநெல்வேலியில் ஜனசந்தடி இருக்கும், ஆனால் இப்படி ஒரேயடியாக இருக்காது என்று நினைத்துக் கொண்டாள். அவள் ஊருக்கு வந்திருந்த முதல் நாள் அவர்கள் எங்கும் செல்லவில்லை வந்த களைப்பு தீர தூங்கி எழுந்தாள் அவள்.

 

அப்போது தான் நினைவு வந்தவளாக நேத்ராவிடம் அதை நீட்டினாள் அவள். “என்னடி இது” என்றாள் நேத்ரா, “பிரிச்சு பாரு, பிடிச்சுருக்கான்னு சொல்லுடி” என்றாள் அவள். அந்த கவரை பிரித்து பார்த்தவள் அசந்து போனாள், அது நேத்ராவின் ஓவியம் பாவாடை தாவணியில் இருந்தது அது, மிக தத்ரூபமாக அவள் வரைந்திருந்தாள்.

 

“ஹேய் இது நான் தானா, என்னை எப்படி நீ பாவாடை தாவணில வரைஞ்சடி, நான் ஊருக்கு வரும் போது ஒரு தடவை கூட பாவாடை தாவணி கட்டிக்கிட்டதே இல்லையே” என்றாள் அவள். “தெரியும்டி அதான் என் மனசுல பதிஞ்ச உன் உருவத்தை எனக்கு பிடிச்ச மாதிரி வரைஞ்சேன்” என்று சொல்லிவிட்டு கண்ணடித்தாள் தோழியை பார்த்து, அவளருகில் வந்து அவளை கட்டிக் கொண்டாள் நேத்ரா. “என்னை உனக்கு அவ்வளோ பிடிக்குமாடி” என்றாள் பெருமிதத்துடன், “இதை நீ கேட்கணுமா” என்றாள் ஆதிரா. “இதை நானே வைச்சுக்கட்டுமா” என்றாள் அவள்.

 

“உனக்காக தான் நான் வரைஞ்சதே இது என் ஞாபகம் எப்போமே உன்கிட்ட இருக்கட்டும்” என்றாள் அவள். “சரி நாளைக்கு எங்க போகலாம் சொல்லு, நானே உன்னை என் வண்டில கூட்டிட்டு போறேன்” என்றாள் நேத்ரா. “இந்த ஊரை பத்தி எனக்கென்னடி தெரியும் நீ எங்க கூட்டிட்டு போனாலும் நான் வர்றேன். ஆ அப்புறம் என்னை ஒரு தடவை கடற்கரைக்கு மட்டும் கூட்டிட்டு போடி, ஊர்ல எல்லாரும் அதை தான் சொல்லி அனுப்பினாங்க. இங்க பெருசா கடல் இருக்கு அதை போய் பாருன்னு சரியா” என்றாள் ஆதிரா.

 

“சரி நாளைக்கு நாம ஸ்பென்சர் போகலாம், சாயங்காலம் பீச்சுக்கு போகலாம்” என்றாள் நேத்ரா. மறுநாள் காலை உணவை முடித்துக் கொண்டு சந்திராவிடம் சொல்லிவிட்டு தோழிகள் இருவரும் வெளியில் கிளம்பினர். “நேத்ரா நான் இந்த வண்டில எங்க பிடிச்சுகறது” என்றாள் ஆதிரா.

 

“இதுக்கு தான் சொன்னேன் சுடிதார் போடுடின்னு, நீ சுடிதார் போட்டு இருந்தா அழகா ரெண்டு பக்கமும் கால் போட்டு வந்து இருக்கலாம்ல. நீ வேற இன்னைக்கு வெள்ளிக்கிழமை தாவணி தான் கட்டுவேன்னு கட்டிட்டு வர்ற. சரி என் தோள்ல கை வைச்சுகோ பின்னாடியும் பிடிச்சுக்கோ. பார்த்து பத்திரமா உட்காரு” என்று தோழிக்கு விளக்கம் கொடுத்துவிட்டு அவள் வசதியாக ஏறி உட்கார்ந்ததும் வண்டியை கிளப்பினாள்.

 

அவர்கள் வீட்டில் இருந்து ஒரு அரைமணி நேர பயணத்தில் அவர்கள் ஸ்பென்சரை வந்தடைந்திருந்தனர். நேத்ரா வண்டி நிறுத்துமிடத்தில் வண்டியை நிறுத்திவிட்டு வர இருவருமாக உள்ளே சென்றனர். உள்ளே சென்ற ஆதிரா அந்த கட்டிடத்தை சுற்றி சுற்றி பார்த்தாள் எல்லோருமே கூடுமானவரையில் யாராவது ஒரு பெண்ணுடனே சுற்றிக் கொண்டும் தோளில் கைபோட்டுக் கொண்டும் கையில் ஐஸ்க்ரீமை சுவைத்துக் கொண்டும் நின்றிருந்தனர்.

 

“என்னடி எல்லாரும் நடந்துட்டே இருக்காங்க இங்க உக்காந்து சாப்பிட மாட்டாங்களா” என்றாள் ஆதிரா. “இங்க இப்படி தான்டி சாப்பிட்டே சுத்தி பார்த்துட்டு வருவாங்க” என்று சொல்லிக்கொண்டே அவளையும் இழுத்துக் கொண்டு கீழே உள்ள கடைகளை சுற்றிப் பார்த்துக் கொண்டே வந்தனர். லிப்ட்டின் அருகே வந்ததும் ஆதிராவை உள்ளே இழுத்துக் கொண்டு அவள் மூன்றாவது மாடிக்கு சென்றாள். அங்கிருந்த ஒரு கடைக்கு அவளை கூட்டிச்சென்று அவளுக்கு ஒரு அழகிய சுடிதாரை வாங்கிக் கொடுத்தாள். அதன் விலையை பார்த்த ஆதிராவுக்கு மயக்கமே வந்தது, அந்த சுடிதாரின் விலை ஆயிரம் ரூபாய்க்கு மேல் இருந்தது.

 

“எதுக்குடி இவ்வளவு விலைல எனக்கு துணி எடுத்திருக்க, நான் ஐநூறு ரூபாய்க்கு வாங்கறதுக்கே பத்து தடவை யோசிப்பேன், நீ யோசிக்காம இவ்வளவு விலைல எடுக்கறீயே” என்று புலம்பிக் கொண்டே வெளியே வந்தவள் தோழி அடுத்து சொன்னதை காதில் வாங்கவே இல்லை. “வாடி போய் சாப்பிடலாம்” என்று அவள் சொல்லிக்கொண்டே நகரும் படிக்கட்டில் மேலே ஏறி சென்றுவிட்டாள்.

 

ஆதிராவோ அங்கேயே நின்றுக்கொண்டு திரு திருவென்று விழித்தாள். அவளுக்கு முன் பின் இது போன்று நகரும் படிக்கட்டில் ஏறிச் சென்று பழக்கம் இல்லை, இங்கு தான் முதன் முதலாக அவள் இதை பார்க்கிறாள். அவளுக்கு எங்கு எப்படி செல்ல வேண்டும் என்றும் புரியவில்லை, யாரை கேட்கலாம் என்று பார்த்தாலும் எல்லோரும் அவளை வித்தியாசமாக பார்ப்பது போல் இருந்தது. கிட்டத்தட்ட அவள் அழுதுவிடுபவள் இருந்தாள். மலங்க மலங்க விழித்தவாறே கையை பிசைந்து நின்றுக் கொண்டிருந்தவளின் அருகே வந்தான் அந்த இளைஞன்.

 

“என்னாச்சு” என்று கேட்டவனை கடவுளே நேரில் வந்தது போல் தோன்றியது அவளுக்கு “என்னோட தோழி சாப்பிட போகலாம் வான்னு சொல்லிட்டு மேலே ஏறி போய்ட்டா, எனக்கு இதுல போய் பழக்கம் இல்லை, பயமாயிருக்கு நான் இப்ப அவக்கிட்ட போகணும், இல்லைனா அவளை தொலைச்சுடுவேன்” என்றவளிடம், “நீ இந்த ஊருக்கு புதுசா” என்றவனுக்கு இம் என்பது போல் அவள் தலையை ஆட்டினாள்.

“சரி வா” என்று அவள் கையை பிடித்துக் கொண்டு அவளை கூட்டிக் கொண்டு அந்த படிக்கட்டின் அருகில் சென்றான். “எனக்கு பயமாயிருக்கு” என்றவளை “நான் கூட்டிட்டு போறேன் நீ கண்ணை மட்டும் மூடிக்கோ, நான் சொல்றதை மட்டும் செய் உனக்கு பயம் போய்டும்” என்றான் அவன். சரியென்று தலையாட்டினாள் அவள். அவள் கண்ணை இறுக்கி மூடிக் கொள்ள “காலை முன்னாடி வை” என்றான் அவன்.

 

அவன் சொன்னது போல் அவள் நடக்க சில நொடிகளில் அவள் மேலே வந்துவிட்டிருந்தாள். “ஹைய் நான் மேலே வந்துட்டேன் எப்படி, அம்மா தாயே காந்திமதி நீ தான் என்னை காப்பாத்துன”  என்று சத்தமாக வேண்டியவளின் கையை பிடித்து மீண்டும் இறங்கும் படிக்கட்டின் வழியாக சென்று கீழே இறங்கினான். “என்ன செய்யுறீங்க” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே கீழே வந்துவிட்டிருந்தனர். அவள் கையை விடாமல் பற்றிக் கொண்டு மீண்டும் ஏறும் படிக்கட்டில் ஏறி மேலே வந்தனர்.

 

“அப்பா எதுக்கு இப்படி பிடிச்சு இழுத்துட்டு வந்தீங்க” என்றவளை நோக்கி அவன் கண் சிமிட்டினான். “எப்படி இப்ப பயம் போயிடுச்சா” என்று அவன் கேட்க அவளுக்கு அப்போது தன் புரிந்தது அவன் அவள் பயம் போக்கவே இப்படி ஏறி இறங்கி என்று அவளை அலையவிட்டது.

 

அவனை பார்த்து லேசாக அசடு வழிந்தவள், “சரி நான் கிளம்பறேன் என் தோழி அங்க வர்றா” என்றுவிட்டு நகர்ந்தாள் அவள். அவனும் அவளை கடந்து சென்று விட்டான். “எங்கடி போயிட்ட உன்னை என் பின்னாடியே தானே வரச் சொன்னேன், அதுக்குள்ள் எங்க  போன உன்னைத் தான் தேடிட்டு வந்தேன்” என்றாள் நேத்ரா. “போடி நீ வேற எனக்கு இந்த படிக்கட்டுல ஏறி வரத்தெரியாது நீ பாட்டுக்கு ஏறி மேல போய்ட்ட, ஏதோ ஒரு புண்ணியவான் வந்து என்னை ஏத்தி விட்டுட்டு போனார். இல்லன்னா என்ன பண்றதுன்னு தெரியாம நான் முழிச்சுட்டு நின்றிருப்பேன்” என்றாள் ஆதிரா.

 

“சாரிடி எனக்கு தெரியாது, நீயும் வர்றேன் நினைச்சு நான் வேகமா ஏறிட்டேன். சரி வா போய் சாப்பிடலாம்” என்று அவளையும் அழைத்துக் கொண்டு சென்றாள். ஏனோ ஆதிராவுக்குள் அந்த இளைஞனின் முகம் அடிக்கடி வந்து போனது, யாரோ எவரோ என்று கூட நினைக்காமல் என்னைத் தேடி வந்து உதவி செய்தாரே அவருக்கு ஒரு நன்றி கூட சொல்லவில்லையே என்று தன்னையே கடிந்துக் கொண்டாள்.

 

தோழிகள் இருவரும் அடுத்து கடற்கரைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்து சேர்ந்தனர். மறுநாள் நேத்ராவிற்கு ஏதோ வேலை இருப்பதால் அவள் வெளியே சென்றிருக்க ஆதிரா அவள் அறையில் இருந்தாள். ஏதாவது வரையலாம் என்று தோன்ற அவள் கையோடு கொண்டு வந்திருந்த அந்த நோட்டில் அவள் ஓவியம் தீட்டினாள்.

 

அவள் வரைந்து முடித்ததும் தான் அவளுக்கு புரிந்தது அவள் வரைந்தது நேற்று பார்த்த அந்த இளைஞனை என்று, எப்படி அவன் முகம் மனதில் பதிந்தது என்று அவள் எண்ணிக் கொண்டிருந்தாள். இதுவரை அவள் மனதில் பதிந்த அவளுக்கு மிகப் பிடித்தவர்களை மட்டுமே அவள் படம் வரைந்திருந்தாள். அவள், அன்னை, தந்தை, சூர்யா மற்றும் நேத்ரா, ஆனால் இன்று அவன் முகத்தை வரைந்தது அவளுக்கே ஆச்சரியமாக இருந்தது. யாரும் அறியாமல் அதை எடுத்து அவள் பையில் பத்திரப்படுத்தினாள்.

 

வெளியில் சென்றிருந்த நேத்ரா வீட்டிற்கு வந்துவிட தோழிகள் பேசிக் கொண்டே அன்றைய பொழுதை கழித்தனர். அப்போது ஆதிரா அந்த இளைஞனை பற்றி அறியும் வாய்ப்பு கிடைத்தது. நேத்ரா அவர்கள் வீட்டில் உள்ள போட்டோ ஆல்பத்தை தோழிக்கு கொண்டு வந்து காட்டிக் கொண்டிருந்தாள். அதில் ஒரு குறிப்பிட்ட போட்டோவை பார்த்த ஆதிரா திகைத்தாள், இது நேற்று எனக்கு உதவியவன் போல் இருக்கிறதே என்று நினைத்தவள் யதார்த்தமாக கேட்பது போல் தோழியை விசாரித்தாள்.

 

“நேத்ரா இவங்க யாரு” என்றாள் அவள். “இவங்களா, இவங்க எங்க அம்மாவோட அண்ணா பாபநாசத்துல இருக்காங்கன்னு சொல்லி இருக்கேன்ல அந்த அத்தையோட கூட பிறந்த அக்கா இவங்க, இவங்க எல்லாரும் அவங்களோட பசங்க” என்றாள் நேத்ரா. “ஓ அதான் இவங்க ரெண்டு பேரும் ஒரே மாதிரி இருக்காங்களா இவங்க பேரு என்ன” என்று மேலும் தோழியை துருவினாள் அவள். “எங்க அத்தை பேரு பார்வதி, மாமா உலகநாதன், அத்தையோட அக்கா பேரு லட்சுமி, இது அவங்க கணவர் அருணாசலம், இது பெரியத்தான் ஆதித்தியன், இது சின்னத்தான் ஆதவன் இது அவங்களோட குட்டி தங்கச்சி ஆதர்ஷா” என்று எல்லோரின் பெயரையும் அவளுக்குச் சொன்னாள் நேத்ரா.

 

நேத்ரா அறியாமல் அவள் அதிலிருந்து ஒரு போட்டோவை எடுத்து மறைத்து வைத்தாள். நேத்ரா மறுநாள் சினிமாவிற்கு செல்லலாம் என்று அவளை அழைக்க ஆதிரா “நேத்ரா அன்னைக்கு போனோமே அந்த இடத்துக்கு போகலாமா” என்றாள் அவள். “அதான் அன்னைக்கு போனோமேடி இப்போ எதுக்கு திரும்ப அங்க போகலாம்ன்னு சொல்ற” என்றாள் அவள்.

 

“இல்லைடி அன்னைக்கு சரியாவே சுத்தி பார்க்கலை அதான் போகலாம்ன்னு…” என்று ஆதிரா இழுக்க, “சரி போகலாம் முதல்ல படத்துக்கு போயிட்டு அப்புறம் வரும் போது அங்க போயிட்டு வரலாம்” என்று அவளை அழைத்துக் கொண்டு சென்றாள் அவள்.

 

படத்திற்கு போய்விட்டு அவர்கள் மீண்டும் ஸ்பென்சருக்கு சென்றனர். ஆதிரா உள்ளே சென்றதில் இருந்து ஆதிராவின் விழிகள் அங்குமிங்கும் பாய்ந்தன. தோழி அறியாமல் பார்வையை சுழலவிட்டவளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

 

அவளை கூட்டிக் கொண்டு அந்த மாலை முழுவதுமாக சுற்றிக் காண்பித்தாள் நேத்ரா. பின் அவளைக் கூட்டிக் கொண்டு நேத்ரா உணவு வளாகத்துக்குள் நுழைந்தாள். “வாடி ஒரு ஜூஸ் குடிச்சுட்டு போகலாம்” என்று சொல்லி உள்ளே சென்று ஒரு மேஜையின் ஓரமாக அமர்ந்தனர்.

 

அப்போது ஆதிரா அவனை மீண்டும் பார்த்தாள் அவர்கள் அமர்ந்திருந்த மேஜையில் இருந்து ஐந்தாறு மேஜை தாண்டி அவன் ஒரு கூட்டத்துடன் உட்கார்ந்திருந்தான். அங்கு அமர்ந்திருந்தவர்கள் அவன் நண்பர்கள் போலும் எல்லோரும் சந்தோசமாக கிண்டலடித்துக் கொண்டும் பேசிக்கொண்டும் சிரித்துக் கொண்டும் இருந்தனர்.

 

நேத்ராவை அழைத்து அவள் உறவினர் அமர்ந்திருக்கிறார் என்று சொல்லலாமென நினைத்தவள் பின் வேண்டாமென்று விட்டுவிட்டாள். கிளம்பும் வரை அவள் பார்வை அவனையும் அவனை சுற்றி இருந்தவர்களையுமே பார்த்திருந்தது ஒருவழியாக அங்கிருந்து கிளம்பினார்கள்.

 

இப்படியே நாட்கள் செல்ல ஆதிரா ஊருக்கு கிளம்பும் நாளும் வந்தது. சங்கரன் வந்து அவளை கூட்டிச்சென்றார், நேத்ரா அடுத்த வருடமும் விடுமுறைக்கு அவளை வருமாறு அழைத்திருந்தாள். ஊருக்கு கிளம்புவதற்கு முதல் நாள் அவள் நேத்ராவை அழைத்துக் கொண்டு மீண்டும் அங்கு சென்று அவனை தேடினாள், தோழி என்னவென்று கேட்டதற்கு ஏதோதோ காரணம் சொல்லி அவள் வாயை அடைத்தாள். ஆதிரா இரண்டாம் வருட படிப்பை முடித்திருக்க அவன் நினைவுகள் அவளுக்கு அவ்வபோது வந்து போனது. அவள் விடுமுறைக்காக ஊருக்கு வந்திருந்தாள்.

 

அந்த வாரம் வெற்றிச்செல்வம் அவன் தாயுடன் அவர்கள் வீட்டிற்கு வந்திருந்தான். “வாங்க ஆச்சி என்ன செல்வம் மாமா படிப்பு முடிஞ்சுருச்சு அப்புறம் வெளிநாட்டுக்கு போகப் போறதா கேள்விப்பட்டேன். அதான் இந்த பக்கம் வரமாட்டேங்குறீங்களா” என்றாள் ஆதிரா.

 

“அதெல்லாம் இல்லை லட்சுமி அக்கா கல்யாண வேலை அதான் கொஞ்சம் வேலையா இருந்துட்டேன்” என்றான் அவன். அவர்கள் கல்யாணத்திற்கு அழைத்துவிட்டு போக கல்யாணம் மறுவாரமே வைத்திருந்தனர். சங்கரன் வயலில் அறுவடை நடந்து கொண்டிருப்பதால் அவர் வரமுடியாதென்று சொல்லி மனைவி மக்களை திருமணத்திற்கு செல்லுமாறு சொல்லிவிட்டார்.

 

ஆதிரா அவள் அன்னையிடம் அவளும் தந்தையுடன் வீட்டில் இருந்து கொள்வதாகக் கூற அவரோ “அதெல்லாம் சரியா வராதும்மா, நீயும் வரணும் அவங்க வீடு தேடி வந்து அப்பாக்கு மரியாதை எல்லாம் செஞ்சு கூப்பிட்டு இருக்காங்க. நாம எல்லாரும் போயே ஆகணும், அப்பாக்கு வேலை இருக்கு அதுனால தான் அவங்க வரமுடியலை. நீ எந்த சாக்கும் சொல்லாம வாலே” என்று அவர் கண்டிப்பு காட்ட அவள் வேண்டா வெறுப்பாக திருமணத்திற்கு கிளம்பி சென்றாள்.

 

அவன் அங்கு வருவான் என்று அவளுக்கு முன்னமே தெரிந்திருந்தால் சந்தோசத்துடன் முதல் ஆளாக அவள் தான் கிளம்பி இருப்பாள். மூவருமாக வள்ளியூருக்கு சென்று அங்கிருந்து தென்காசி பேருந்தில் ஏறி பாபநாசம் சென்றடைந்தனர்…………..

 

சாரலாய்

உன் நினைவுகள்

என்னுள் பூ மழை

தூவி செல்கிறது…

மென்பனியாய்

உன் நினைவு

என்னை

குளிர்விக்கிறது…

 

அடர்ந்த

கானகத்தே

மையிருளில்

தனித்து சென்றாலும்

பயம் கொள்ளேன்

நீ என்னருகில்

இருந்தால்…

என் கரம் பற்றி

பயம் போக்கினாய்

இப்போது பயமே

என்னை கண்டு

பயந்தது…

 

மனதில் பதிந்த

உன்னை ஓவியமாய்

வடித்தேன்…

யாரும் அறியாமல்

அதை என்னறையில்

பத்திரப்படுத்தினேன்…

கள்ளம் என்

உடன் பிறந்ததல்ல

உன்னை கண்டபின்

அது என் உடன்

பிறந்ததாகிப்போனது…

 

 

அத்தியாயம் –22

 

எல்லோரும் கல்யாண வீட்டிற்கு வந்திறங்க வெற்றி அவர்களை உற்சாகமாக வரவேற்றான். ஆதிரா வந்ததில் அவன் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தான். அவர்களை அழைத்து சென்று மண்டபம் பக்கத்தில் அவர்கள் எடுத்திருந்த வீட்டில் தங்க வைத்தான். எல்லோருமாக மாலை நடக்கும் பரிசத்திற்கு தயாராகிக் கொண்டிருந்தனர்.

 

சபையில் எல்லோரும் வந்து அமர்ந்திருக்க தாய்மாமனை முன்னிறுத்தி அங்கு பரிசம் போட்டுக் கொண்டிருந்தனர். அப்போது தான் ஆதிரா அவனை மீண்டும் சந்தித்தாள். ‘இது அவர் மாதிரியே இருக்கே, செல்வம் மாமா கூட வர்றாரு எப்படி’ என்று யோசித்தவள் வெற்றியின் தங்கை ரமணியிடம் சென்றாள்.

 

“சித்தி” என்றாள் அவள். “ஏ புள்ள நீ வேணா என் பேரை வேணா சொல்லி கூப்பிடு சித்தின்னு மட்டும் கூப்பிடாதே உனக்கும் எனக்கும் ஒரு மூணு வயசு தான்லே வித்தியாசம்” என்றாள் அவள்.

 

“அதெப்படி சித்தி மூணு வயசு பெரியவங்களை போய் மரியாதை இல்லாம பேர் சொல்லி கூப்பிட முடியுமா, அப்புறம் உங்க அக்கா என்னை திட்டுவாங்க. நீ அதை விடு சித்தி, யாரு அவங்க எல்லாம் செல்வம் மாமாகூட ஒரு பெரிய பட்டாளமே வருதே” என்றாள் அவள்.

 

ஆதிரா சுட்டிக்காட்டிய திசையில் திரும்பி பார்த்தவள் வெற்றி அவன் நண்பர்களுடன் வந்துக் கொண்டிருப்பதை பார்த்தாள், “ஓ அவங்களா அவங்க எல்லாம் அண்ணாவோட நண்பர்கள். அங்க அண்ணா பக்கத்துல வர்றாங்கல அவங்களுக்கு இந்த ஊரு தான் அவங்க ஆச்சி வீடு நம்ம வீட்டுக்கு ரெண்டு தெரு தள்ளி இருக்கு, அவங்க சித்திக்கூட இங்க தான் இருக்காங்க அவங்க வீடு கூட இங்க தான் எங்கயோ பக்கத்துல இருக்கு” என்று அவள் கேட்காமலே ரமணி விஷயத்தை சொல்லிக் கொண்டிருந்தாள்.

 

“அப்புறம் சித்தி அவங்களை எப்படி மாமாக்கு தெரியும்” என்று அவளை மேலும் கூறுமாறு ஊக்கினாள் அவள். “அண்ணா சென்னையில இன்ஜினியர்க்கு படிக்க போகும் போது அங்க யாரையும் தெரியாதுல அப்போ அவங்க ஆச்சி தான் என் மக வீடு சென்னைல தான் இருக்கு அங்க போங்க அவங்க உதவி பண்ணுவாங்கன்னு சொல்லி அனுப்பி வைச்சாங்க. அண்ணாவும் சென்னையில படிச்ச நாள்ல அவங்க வீட்டுக்கு அடிக்கடி போய் வருவாங்க. அந்த அண்ணாகூட ரொம்ப நல்ல மாதிரி. இத்தனைக்கும் அவங்க நல்ல வசதியானவங்க எந்த பந்தாவும் இல்லாம பழகுறாங்க. அவங்க கூட வந்த எல்லா அண்ணாவும் அப்படி தான் இருக்காங்க” என்று அவள் எல்லாவற்றையும் கொட்டினாள்.

 

“சரி சித்தி என்கூட இப்படி வெட்டியா பேசிட்டு இருக்கியே, உனக்கு உங்க அக்கா கல்யாணத்துக்கு எந்த வேலையும் இல்லையா” என்றாள் அவள். “ஏ புள்ள உனக்கு ரொம்ப கொழுப்பு தாம்லே என்னைய வேலை பார்க்க விடாம அவங்க யாரு என்னன்னு விசாரிச்சுட்டு இப்போ என்னையே கிண்டல் பண்றியா” என்று அவள் செல்லமாக ஆதிராவின் முதுகில் ஒரு அடி போட்டாள்.

 

“சரி சரி நீ கிளம்பு சித்தி” என்று அவளிடம் இருந்து தப்பியோடி எதிரில் நின்றவர்களை தள்ளிக் கொண்டு வேகமாக ஓடினாள். வெற்றி அவளை அழைக்க அதை காதில் வாங்காமல் ஓடினாள். “ஹேய் இப்ப வந்து இடிச்சுட்டு போனாளே அவ தான் லட்சுமி” என்றான் வெற்றி நண்பர்களிடம்.

 

“ஏன்டா உனக்கே இது நியாயமா இருக்கா அந்த பொண்ணு முகம் கூட நாங்க பார்க்கலை இது தான் லட்சுமின்னு எங்களுக்கு அடையாளம் வேற சொல்ற. அவளை கூட்டிட்டு வந்து எங்களுக்கு காமிடா” என்றான் கதிர்.

 

“டேய் அப்படி எல்லாம் காட்ட முடியாது இதென்ன சென்னையா இது தான் நான் விரும்பற பொண்ணுன்னு கூட்டிட்டு வந்து காமிக்க, அவளை நான் கூப்பிட்டா அவ அப்படி எல்லாம் வரமாட்டா, அதுவும் இல்லாம அவளுக்கு இன்னும் என் மனசுல என்ன இருக்குன்னு தெரியாது. நான் வெளிநாட்டுக்கு போயிட்டு வந்து கொஞ்சம் பணம் காசு சேர்த்த பிறகு தான் அவங்க வீட்டுக்கு போய் பொண்ணு கேட்கணும்ன்னு நினைக்கிறேன்டா. தங்கச்சி கல்யாணம் வேற முடிக்கணும், பார்போம் லட்சுமி இப்போ படிச்சுட்டு தானே இருக்கா” என்றான் வெற்றி. “அந்த பொண்ணுக்கிட்டயாச்சும் உன் காதலை சொல்ல வேண்டியது தானே” என்றான் ஆதி.

 

“பயமாயிருக்குடா நான் எப்ப அவகிட்ட பேசினாலும் என்கூட மல்லு கட்டற மாதிரியே தான் பேசுவா. பிடிக்கலைன்னு சொல்லிட்டா என்ன பண்றது அதுவே நான் நேர்ல போய் பொண்ணு கேட்டா எங்க அக்காவும் அத்தானும் மறுக்கமாட்டாங்கடா, பார்போம்டா” என்றான் அவன். மறுநாள் பொழுது விடிந்தது, அதிகாலை நேரம் முஹுர்த்தத்திற்கு சில மணிநே ரங்களே இருந்தது.

 

ஆதி அன்று ஆச்சி வீட்டில் தங்காமல் கல்யாண வீட்டிலேயே தங்கிக் கொண்டான். ஆதி அப்போது தான் லேசாக கண் விழித்து பார்த்தான். வெற்றி எதையோ பறிகொடுத்தது போன்று நின்றிருந்தான், முகத்தில் ஒருவித பதட்டம் இருந்தது. சரக்கென்று எழுந்து உட்கார்ந்தவன் “என்னடா என்னாச்சு எதாச்சும் பிரச்சனையா” என்றான்.

 

“அது… வந்து… பிரச்சனை தான்டா தாலியை காணோம்டா, இப்போ தான் மாப்பிள்ளை வீட்டுல என்னை தனியா கூப்பிட்டு சொன்னாங்க. நேத்து கூட இருந்துச்சாம் இப்போ தான் காணோமாம் எனக்கு என்ன பண்றதுன்னே தெரியலைடா யாருமே இப்போ வெளிய போக முடியாது இந்த விஷயம் தெரிஞ்சா எல்லாரும் கண்ணு காது மூக்கு வைச்சு பேசுவாங்க.

 

“இந்த கல்யாணம்கூட மாப்பிள்ளை வீட்டில தான் பண்றாங்க, அக்காவை அவங்களுக்கு ரொம்ப பிடிச்சு போய் அவங்களா வந்து பொண்ணு கேட்டாங்க. நகை எல்லாம் கூட அவங்க தான் போட்டு கல்யாணம் பண்ணி கூட்டி போறாங்க. இந்த மண்டபத்துக்கும் சாப்பாட்டுக்கும் கூட அவங்களே தான்  ஏற்பாடு பண்ணாங்க” என்று சொல்லி நிறுத்தினான்.

 

ஒரு பெருமூச்சுடன் மீண்டும் தொடர்ந்தவன் “இப்போ தாலி புதுசு வாங்கணும்னா என்ன பண்றதுன்னே எனக்கு புரியலை, பாவம் அவங்களும் ரொம்ப ஒண்ணும் வசதியானவங்க இல்லை. அவங்களுக்கு எங்க அத்தான் ஒரே பையன் அதுனால அத்தை அவங்க நகை எல்லாம் போட்டு தான் இந்த கல்யாணம் நடக்குது.

 

“அவங்ககிட்ட மேல மேல எதிர்பார்க்கறது தப்பில்லையா, அவங்கக்கிட்ட நான் பார்த்துக்கறேன்ன்னு சொல்லிட்டு வந்துட்டேன். நானும் கொஞ்சம் பேருகிட்ட பணம் கேட்டேன் கிடைக்கவே இல்லை” என்று நீளமாக பேசி மனம் சுனங்கியவனின் தோள் மீது கை வைத்தவன், “ஏன்டா நாங்கலாம் இல்லையா எங்களை எல்லாம் கேட்க மாட்டியா, நீ போய் வந்தவங்களை கவனி. வீட்டில வேற யாருக்கும் இந்த விஷயம் தெரியாதே” என்றான் அவன். “தெரியாதுடா என்னை மட்டும் தான் கூப்பிட்டு சொன்னாங்க” என்றான் அவன்.

 

“சரி நான் கொஞ்ச நேரத்துல வந்துடுறேன்” என்றவன் முகம் கழுவி விட்டு வர கதிர் எழுந்திருந்தான். “கதிர் என்கூட வா கொஞ்சம் வெளிய போகலாம்” என்றான் ஆதி. “என்னடா எங்க போகணும் கல்யாணத்தை வைச்சுக்கிட்டு இப்ப போய் வெளியே கூப்பிடுற” என்றான் அவன்.

 

“கல்யாணம் நடக்கணும்னா நாம இப்போ வெளிய போகணும் நீ கிளம்பு, போகும் போது என்னாச்சுன்னு சொல்றேன்” என்றான் அவன். இருவருமாக கிளம்பி வெளியில் வர “என்னடா என்ன விஷயம்” என்றான் கதிர். ஆதி நடந்த விஷயங்களை கதிரிடம் கூறினான். “ஆனா எனக்கு ஒருத்தன் மேல சந்தேகம்டா” என்றான் அவன். “என்னடா சந்தேகமா எதுக்கு ஏன் எதை பத்தி” என்று மாற்றி மாற்றி கேட்டான் கதிர்.

 

“நேத்து பொண்ணு அறைக்கும் மாப்பிள்ளை அறைக்கும் ஒருத்தன் போய்ட்டு போய்ட்டு வந்துட்டு இருந்தான், நான் வெற்றிகிட்ட கேட்டபோது அது அவன் சொந்தக்காரன்னு சொன்னான். அதான் அப்போதைக்கு நான் அதை பத்தி எதுவும் யோசிக்கலை ஆனா இப்ப யோசிச்சா ஏதோ தப்பா தோணுதுடா” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே “ஹேய் அதோ போறான் பாருடா அவன் தான் நான் நேத்து பார்த்ததா சொன்ன ஆளு, வா அவனை விடக்கூடாது” என்றான் ஆதி.

 

இருவருமாக சென்று அவனை பின்னிருந்து பிடித்தனர், முதலில் பயந்தவன் பின்னர் சுதாரித்துக் கொண்டு “யார் நீங்க எதுக்கு என்னை பிடிக்கறீங்க” என்றான் அவன். “சரி நீ வெற்றியோட சொந்தக்காரன் தானே கல்யாணத்துக்கு வராம எங்க போற” என்றான் கதிர். “வெற்றியா யார் அது அப்படி யாரையும் எனக்கு தெரியாது” என்றான் அவன்.

 

“தாலி எங்க” என்றான் ஆதி. “தாலியா எனக்கு தெரியாது நான் எதுவும் எடுக்கலை” என்று அவன் உளறிக்கொட்டினான். ஆதி அவன் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட அவன் அழுதுவிட்டான். “சாரிங்க நான் தான் எடுத்தேன், எனக்கு வெற்றியோட அக்கா மேல ஒரு விருப்பம் அவங்க வீட்டில போய் பொண்ணு கேக்கவும் தயக்கம்.

 

“எங்க வீட்டில சொன்னா அவங்க பொண்ணுக்கு வசதி குறைச்சலா இருக்கு அதெல்லாம் வேணாம்ன்னு சொல்லிட்டாங்க. தாலியை எடுத்து வைச்சுட்டா அவங்க சகுனம் எதுவும் பார்த்து கல்யாணத்தை நிறுத்திடுவாங்க, அங்கேயே வைச்சு நான் எப்படியாச்சும் தாலி கட்டிடலாம்ன்னு நினைச்சு தான் எடுத்தேன்” என்றவனிடம் “சரி தாலி எங்க இருக்கு” என்றான் அவன். “வீட்டில இருக்கு” என்றான் அவன்.

 

“சரி வா” என்று அவனையும் அழைத்துக் கொண்டு போய் அவர்கள் தாலியை மீட்டு வர கிளம்பு முன் ஆதி அவனிடம் “இந்த விஷயம் யாருக்கும் தெரிய வேண்டாம்” என்றான். “ரொம்ப நன்றிங்க எங்க என்னை காட்டிக் கொடுத்துடுவீங்களோன்னு பயந்துட்டேங்க” என்றான் அவன். கதிரும் அவனுமாக அதன் பின் கடைக்கு சென்று விட்டு மண்டபத்திற்கு வந்தனர். வெற்றியை அழைத்துக் கொண்டு நேராக மாப்பிள்ளை வீட்டினரை தனியே அழைத்து பேசினர். ஆதி தாலியை எடுத்துக் கொடுத்து நடந்த விஷயத்தை அவர்களிடம் சுருக்கமாகக் கூறினான். தாலியை எடுத்த நபரை தெரியாதது போல் காட்டிக் கொண்டான். அதன் பின் ஒரு தங்க சங்கிலியை எடுத்து வெற்றியிடம் கொடுத்தான். “வெற்றி இது நீ உன் அக்காவுக்கு வாங்கிட்டு வரச் சொன்ன சங்கிலி” என்று அவனிடம் கொடுக்க அவனோ புரியாமல் பார்த்தான்.

 

“இவன் காலேஜ் படிக்கும் போதே சாயங்காலம் வேலைக்கு போய் கஷ்டப்பட்டு கொஞ்சம் கொஞ்சமா சேர்த்து வைச்ச காசுல வாங்கினது தான் இந்த சங்கிலி. அவங்க அக்காக்கு இவன் எதுவும் செய்யலைன்னு இருக்ககூடாதாம் அதுக்கு தான் வாங்கி கொடுத்து இருக்கான்” என்றான் நண்பனை பற்றி பெருமையாக.

 

அங்கிருந்து விடைபெற்று வெளியே வர “ஏன்டா அப்படி சொன்ன நான் எப்போடா வாங்கிட்டு வரச் சொன்னேன்” என்றான் வெற்றி. “டேய் நீ வாங்கி கொடுத்ததா சொன்னா அவங்க சந்தோசப்படுவாங்கடா உங்க அக்காவுக்கும் கௌரவமா இருக்கும். அதுனால தான் அப்படி சொன்னேன்” என்றவனை கட்டிக் கொண்டு அழுதான் வெற்றி.

 

கதிரும் அதுவரை ஒரு பார்வையாளனாக இருக்க அப்போது தான் அவனுக்கும் ஆதி ஏன் அப்படி செய்தான் என்பது புரிந்தது. நண்பனை பெருமிதமாகப் பார்த்தான் அவன். “இப்படி ஒரு நண்பன் கிடைக்க நான் ரொம்பவும் புண்ணியம் செஞ்சு இருக்கணும்டா” என்றான் வெற்றி.

நடந்த விஷயங்களை பக்கத்து அறையில் ஸ்டோர் சாமான் எடுக்க வந்த ஆதிராவும் ரமணியும் கேட்டனர். அதுவரை சாரலாய் அவ்வப்போது அவள் மனதில் வந்து போனவன் அது முதல் நிரந்தரமாக அவள் மனதில் குடியேறினான். திருமணமும் இனிதே நடந்து முடிய ஆதிரா யாரிடமோ பேசிவிட்டு திரும்ப எதிரில் ஆதி நடந்து வந்துக் கொண்டிருந்தான்.

 

அவளை பார்த்ததும் அவனுக்கு அவளை எங்கோ பார்த்த ஞாபகம் வர அவளிடம் நெருங்கி “உங்களை நான் எங்கயோ பார்த்த மாதிரி இருக்கு, எங்கன்னு ஞாபகம் வரலை நீங்க என்னை பார்த்து இருக்கீங்களா” என்றான் அவன் கண்களில் ஒரு சுவாரசியத்தை தேக்கி, ஆதிரா ஏதோ சொல்ல வாயெடுக்கும் முன் அருகில் யாரோ பேசுவது அவள் காதில் ஸ்பஷ்டமாக விழுந்தது.

 

“யாரு இது சங்கரன் பொண்ணு தானே யாருகிட்ட பேசிட்டு இருக்கா, அந்த பையனை பார்த்தா ஏதோ பெரிய வீட்டு பையன் மாதிரி இருக்கு, பட்டணத்துல இருந்து வந்த தம்பி மாதிரி இருக்கு கையில கூட கருப்பு கண்ணாடி எல்லாம் வைச்சு இருக்கு” என்று யாரோ புரளி பேச ஆரம்பிக்க, தான் இதற்கு மேல் இங்கு நின்றால் மேலும் எதாவது பேசி தந்தைக்கு ஏதேனும் கெட்ட பெயர் வந்துவிடும் என்று பயந்தவளாக அங்கிருந்து நகர்ந்தாள் அவள்.

 

‘என்ன இந்த பொண்ணு தெரியலன்னா தெரியலன்னு சொல்ல வேண்டியது தானே, கொஞ்சம் கூட மதிக்காம போகுது’ என்று நினைத்துக் கொண்டு அவன் வேறு வேலை பார்க்கச் சென்று விட்டான். திருமணம் முடிந்ததும் கோமதி, சூர்யாவையும், ஆதிராவையும் அழைத்துக் கொண்டு ஊருக்கு கிளம்பிச் சென்று விட்டார். ஆதிராவுக்கு இப்போதெல்லாம் ஆதியின் நினைவு அதிகமாய் வாட்டியது. திருமணத்தில் அவனாக வந்து பேசிய போது பேசாமல் விட்டு விட்டோமே என்று நினைத்து வருந்தினாள். யாரோ ஏதோ பேசினாங்கன்னு நான் அவர்க்கிட்ட பேசாம இருந்துருக்க கூடாது என்று தன்னையே இடித்துக் கொண்டாள்.

 

அந்த வருடத்துடன் அவள் படிப்பு முடிய அவள் மனதில் ஒரு எண்ணம் தோன்றியது, அதை பற்றி தந்தையிடம் பேசினாள். “அப்பா” என்று அவள் அழைக்க “சொல்லுடா லட்சுமி” என்றார் அவர். “அப்பா நாம சென்னைக்கு போய்டலாமா, எனக்கு அங்க போய் பேஷன் டிசைனிங் படிக்கணும்னு ஆசைப்பா” என்றாள் அவள்.

 

“சரிம்மா நீ போய் படிச்சுட்டு வந்துடு” என்றார் சங்கரன். “அப்பா நாம இந்த ஊர்ல இருந்து என்னப்பா பண்ண போறோம், அங்க போனா சூர்யாவையும் நல்ல காலேஜ்ல சேர்த்துடலாம், எனக்கும் நல்ல வேலை கிடைக்கும்ப்பா. நாம எல்லாருமே சென்னைக்கு போய்டலாம்ப்பா, அப்பா சரின்னு சொல்லுங்கப்பா” என்றாள் அவள்.

 

“அப்போ இந்த விவசாயம் என்னம்மா பண்றது. நிலபுலன் எல்லாம் விற்றுவிட சொல்கிறாயா” என்றார் அவர் குரலில் வேதனை இழையோட “இல்லைப்பா நம்ம நிலத்தை நாம கிரயத்துக்கு விட்டுடலாம்” என்றாள் அவள். “அப்போ சென்னையில போய் என்ன வேலைம்மா செய்யுறது” என்றார் அவர். “நம்ம தோப்பு காய் எல்லாம் வண்டில போட்டு அனுப்பச் சொல்லலாம்ப்பா அங்க இந்த மாதிரி பச்சை காய்கறிகள் மொத்தமாகவோ இல்லை சில்லறையாகவோ நாம் வியாபாரம் செய்வோம்” என்றாள் அவள்.

 

அவருக்கு ஒரு பக்கம் வருத்தமாக இருந்தாலும் மகளுக்காக சரியென்றார். ஆதிரா என்ன சொன்னாலும் அது அவருக்கு வேதமே, அவளில் தன் பெற்ற தாயை கண்டார் அவர். அதனால் அவள் விருப்புக்கு ஒத்துக் கொண்டு அவர்கள் சென்னைக்கு மொத்தமாக குடியேறினர். சூர்யா பள்ளி படிப்பு முடியும் வரை அங்கேயே விடுதியில் தங்கி படுக்கட்டும் என்று அவனை மட்டும் விட்டு விட்டு கிளம்பினர்.

 

நேத்ராவுக்கு ஆதிரா சென்னை வருவதில் மிகுந்த மகிழ்ச்சி ஆனால் ஒரு பக்கம் வருத்தமாகவும் இருந்தது, ஏனெனில் அவள் கேம்பஸில் தேர்வாகி இருந்தாள் அந்த திட்டம் சம்மந்தமாக அவள் இன்னும் சில மாதங்களில் வெளிநாட்டிற்கு செல்ல வேண்டும் அவளுக்கு அந்த கவலை தான்.

 

அவள் அங்கு சென்றால் குறைந்தது இரண்டு மூன்று வருடமாவது ஆகும் திரும்பி வர இடையில் வந்து போகலாமே ஒழிய நிரந்தரமாக வருவதற்கு கால தாமதம் ஆகும் என்று வருந்தினாள். தோழிக்கு வீடு பார்த்து கொடுத்து அவர்கள் புது வீடு வந்ததும் அவர்களுக்கு உதவி செய்வது என்று அவளும் அவள் குடும்பத்தினரும் வந்தார்கள்.

 

ஆதிராவும் அவள் வகுப்புக்கு செல்ல ஆரம்பித்திருந்தாள், வகுப்புக்கு போகும் போதோ அல்லது திரும்பி வரும் போதோ அவள் ஸ்பென்சருக்கு தவறாமல் சென்று வந்தாள், அவனை பார்க்க முடியுமாவென்று, ஆனால் அவனை அவளால் பார்க்க முடியவில்லை. ஞாயிறு அன்று மட்டும் அவள் எங்கும் செல்வதில்லை, ஏனெனில் மற்ற நாட்கள் அவள் வீட்டில் இல்லாமல் வகுப்புக்கு சென்று விடுவதால் வீட்டினருடன் அவ்வளவாக நேரம் செலவழிப்பதில்லை என்று அவள் அன்று மட்டும் எங்கும் செல்வதில்லை.

 

சூர்யாவும் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு சென்னை வந்து கல்லூரியில் சேர்ந்துவிட்டான். அந்த வாரம் சங்கரனும் கோமதியும் ஊரில் ஒரு திருமணம் என்று சென்றுவிட்டனர். காலையில் எழுந்து குளித்து காலை சாப்பாட்டை அக்காவும் தம்பியுமாக சேர்ந்து சாப்பிட சூர்யா அவனுக்கு ஏதோ அசைன்மென்ட் வேலை இருப்பதாகவும் நண்பன் வீட்டிற்கு செல்வதாகவும் கூறினான்.

 

மாலை தான் வீட்டிற்கு வருவதாக கூறிவிட்டு அவன் செல்ல ஆதிராவுக்கு ரொம்பவும் போர் அடித்தது, நேத்ரா வெளி நாட்டுக்கு செல்ல வேண்டி இருப்பதால் அந்த வேலையாக அவள் அலைந்து கொண்டிருந்தாள், அதனால் தோழியை தொந்திரவு செய்ய விரும்பாதவள் இன்று போய் மீண்டும் ஸ்பென்சரில் அவனை தேடிப் பார்க்கலாம் என்று நினைத்து கதவை பூட்டிவிட்டு பேருந்து நிலையம் வந்து, அங்கு செல்ல வேண்டிய பேருந்தில் ஏறிச் சென்றாள்.

 

அவள் ஒவ்வொரு இடமாக தேடி விட்டு மதிய உணவு நேரமாகி விட்டதால் ஒரு ஜூஸ் குடித்துவிட்டு அப்புறம் வீட்டிற்கு கிளம்பிச் செல்லலாம் என்று நினைத்து ஜூஸ் வாங்கி குடித்துக் கொண்டிருக்க அவன் அவனுடைய நண்பர்கள் பட்டாளத்துடன் வந்தான். ‘செல்வம் மாமா ஊருக்கு போய்விட்டதால் இவர்கள் மட்டும் வந்திருக்கிறார்கள் போலும்’ என்று நினைத்துக் கொண்டாள்.

 

அவளுக்கு அவனை மீண்டும் கண்டதில் மிகுந்த சந்தோசம் வந்திருந்தது. அவனிடம் பேசலாம் என்று ஒரு பக்கம் தோன்ற, ஒரு பக்கம் எப்படி பேசுவது என்று இருந்தது. அன்று ஆதி அவன் நண்பர்களுக்கு அவன் பெண் பார்க்க போகும் விஷயத்தை சொன்ன நாள். அவள் தன்னிலேயே உழன்று அவனிடம் பேசத் தயங்க அவள் விதி மாறியது. ஒரு வேளை அவள் அவனிடம் பேசி இருந்தால் ஆதிக்கு புரிந்திருக்கலாம்.

 

அவர்கள் கிளம்பிச் செல்லும் வரை அவனையே பார்த்திருந்தவள் நேரமானது கண்டு வீட்டிற்கு கிளம்பிச் சென்றாள். நாட்கள் மெதுவாக சென்றுக் கொண்டிருந்தது. ஆதிரா அவள் மனதில் உள்ளதை தோழியிடமும் சொல்லவில்லை. ஒரு மாதம் கடந்திருக்க நேத்ரா இன்னும் பதினைந்து நாட்களில் வெளிநாட்டுக்கு சென்று விடுவாள் என்று அவளைப் பார்க்க ஆதிரா அங்கு வந்தாள்.

 

ஆனால் அவர்கள் வீட்டில் எங்கோ கிளம்பிக் கொண்டிருந்தனர். “ஹேய் வாடி என்னடி ஒரு போன் கூட பண்ணாம வந்துட்ட” என்றாள் நேத்ரா. “நான் உனக்கு போன் பண்ணேன் நீ தான் எடுக்கலை” என்றாள் ஆதிரா. “சாரிடி போன் சரியா வேலை செய்யலை நான் அதை மறந்துட்டேன், நாளைக்கு வேற வாங்கிடுவேன். நாங்க எங்க அத்தான் கல்யாணத்துக்கு கிளம்பிட்டு இருக்கோம். நான் நாளைக்கு கல்யாணம் முடிஞ்சதும் வீட்டுக்கு வர்றேன்” என்றாள் நேத்ரா.

 

“யாருக்கு கல்யாணம்” என்றாள் ஆதிரா. “அதான் சொன்னனே எங்க அத்தையோட அக்கா இங்க சென்னையில இருக்காங்கன்னு அவங்க பெரிய பையன் ஆதி அத்தானுக்கு தான் கல்யாணம்” என்று அவள் கிளம்பிக் கொண்டே அவளுக்கு பதிலளித்தாள் அவள்.

 

ஆதிராவுக்கு உலகமே சுற்றுவது போல் இருந்தது, விழிகளில் சட்டென்று நீர் தளும்ப நிலை குலைந்து நின்றாள் அவள். தோழியிடம் இருந்து எந்த பதிலும் இல்லாததில் திரும்பி பார்த்த நேத்ரா அங்கு அவள் இல்லாதிருப்பதை கண்டாள். உடனே தன் அன்னையின் போனை வாங்கி அவளுக்கு முயற்சிக்க அழைப்பு எடுக்கப் படாமலே போனது.

 

‘சரி திருமணத்திற்கு சென்று விட்டு வந்து அவளிடம் பேசிக் கொள்ளலாம் என்று விட்டு நேத்ராவும் கிளம்பிச் சென்று விட்டாள். மறுநாள் திருமணம் முடிந்து அவர்கள் வீட்டிற்கு வந்ததும் அவள் மீண்டும் தோழிக்கு முயற்சிக்க அவள் எடுக்கவே இல்லை. அன்று இருந்த களைப்பில் அவள் உறங்கிவிட மறுநாள் தோழியை நேரில் காணச் சென்றாள். அவள் வீட்டிற்கு சென்றால் அவள் உடல் நிலை சரி இல்லாமல் இருந்தாள். அவள் பெற்றோரிடம் ஓரிரு வார்த்தை பேசிவிட்டு அவளைத் தேடி அவள் அறைக்குச் செல்ல கண்ணை மூடி படுத்திருந்தவளின் விழிகளில் நீர் கோடுகள்.

 

அவள் அருகில் வந்து அவள் கைகளை தொட அந்த தொடுகையில் விழித்தவள் எழுந்து அமர்ந்தாள். “என்னடி ஆச்சு உனக்கு, ஏதோ பிரச்சனைன்னு தெரியுது. என்ன பிரச்சனை என்கிட்டே சொல்லுடி” என்றாள் நேத்ரா.

 

“அப்படி எல்லாம் எதுவும் இல்லைடி” என்று ஆதிரா மழுப்ப எழுந்து சென்று கதவை அடைத்துவிட்டு வந்தவள், “உண்மையை சொல்லுடி உனக்கு ஏதோ பெரிய கஷ்டம் அதான் நீ இப்படி இருக்க, எனக்கு தெரியும் நீ இப்படி இருக்கற பொண்ணே இல்லை. நீ இப்போ சொல்லப் போறியா இல்லையா” என்றாள் நேத்ரா சற்று உரத்த குரலில்.

 

 

தோழியின் கேள்வியில் உள்ளே அடைத்துக் கொண்டிருந்தது பேரும் கேவலாக எழ ஓவென்று கதறி தீர்த்தாள் அவள். இப்படி எதுவும் சொல்லாமல் அழும் தோழியை என்ன சொல்லி சமாதானப் படுத்துவது என்று நேத்ரா புரியாமல் விழித்தாள். “அழாம என்ன நடந்ததுன்னு சொல்லுடி” என்றாள் அவள். ஆதித்தியனை கண்டது முதல் நடந்ததை சொல்ல நேத்ரா சிலையென சமைந்தாள்.

 

“நீ முட்டாளாடி இவ்வளோ பெரிய விஷயம் நடந்து இருக்கு, உனக்கு அவர் மேல காதல்ன்னு என்கிட்டே ஒரு வார்த்தை சொல்றதுக்கு என்ன உனக்கு. உங்க ரெண்டு பேரையும் பேசவைக்க வாச்சும் நான் முயற்சி செஞ்சு இருப்பேன்ல. இப்படி நீ அழறது பார்த்துட்டு என்னாலஎதுவும் செய்ய முடியாம இருக்க வைச்சுட்டீயேடி” என்று அவள் கண்கள் கலங்கினாள்.

 

“உன்கிட்ட சொல்லக் கூடாதுன்னு நான் நினைக்கலைடி, இது நடக்குமா நடக்காதா, இது காதல் தானா இல்லையான்னு எனக்குள்ள ஒரு பெரிய போராட்டமே நடந்துச்சு. நான் ஏன் சென்னைக்கு வரணும் நினைச்சேன், அவரை பார்க்க முடியுமான்னு தான், நான் அப்போதைக்கு அதை மட்டும் தான் யோசிச்சேன். நீயும் வெளிநாட்டுக்கு போறதுல கொஞ்சம் வேலையா இருந்ததுல என்னால் உன்கிட்ட சொல்ல முடியாமலே போச்சு. தப்பு தான் அந்த தப்புக்கு தண்டனை தான் இது” என்று அழுதவளை ஏதேதோ கூறி சமாதானப் படுத்தி விட்டு சென்றாள் நேத்ரா.

 

மறுவாரம் அவள் மீண்டும் வந்து ஆதிராவிடம் பேசிவிட்டு மறுநாள் அவள் வெளிநாட்டிற்கு கிளம்பிச் சென்றுவிட்டாள். ஆதிராவிற்க்கு மாப்பிள்ளை பார்க்கவென்று அவர் தந்தை அவள் ஜாதகத்தை எடுக்க, ஆதிரா வீட்டினரிடம் திட்டவட்டமாக தனக்கு திருமணம் வேண்டாம் என்று மறுத்தாள். ஏதோ சின்னப் பெண் பயப்படுகிறாள் என்று நினைத்தவர்கள் அப்போதைக்கு அந்த பேச்சை தள்ளி வைத்தனர். மீண்டும் ஒரு தரம் இது போல் ஆரம்பிக்க ஆதிரா மறுக்க முதல் முறையாக சங்கரன் மகளின் மீது கோபம் காட்டினார்.

 

அவர் கோபம் காட்டி பேச ஆதிராவோ அழுது கதறி தீர்த்தாள். “அப்பா தயவு செய்து எனக்கு கல்யாணம் வேணாம்ப்பா, இதுக்கு மேல என்னை எதுவும் கேக்காதீங்கப்பா. என்னை இப்படியே விட்டுடுங்க நான் உங்ககூடவே கடைசி வரைக்கும் இருந்துக்கறேன்” என்று அழுத மகளை அணைத்துக் கொண்டனர் அன்னையும் தந்தையும்.

 

“சரிம்மா நான் உன்னை கட்டாயப்படுத்த மாட்டேன்” என்று சொன்னாலும், முதல் முறையாக மகளின் எதிர் காலம் குறித்த பயம் அவர்கள் மனதில் எழுந்தது. இப்படியே அவளை திருமணம் பண்ணாமல் வீட்டில் வைக்க முடியாதே, இப்போதே ஊரில் ஆயிரம் பேர் ஆயிரம் விதமாக பேசுகிறார்கள்’ என்ன செய்வது என்று குழம்பித் தவித்தனர் பெற்றோர்.

 

நேத்ரா இடையில் ஒரு தரம் இந்தியாவிற்கு வந்து செல்ல தோழியை காண வந்திருந்தவளிடம் ஆதிராவின் பெற்றோர் கதறினர், அவளுக்கு யாரை பிடித்திருந்தாலும் திருமணம் முடித்துக் கொடுப்பதாக கூறினர். இதைக் கேட்டு வருந்தியவள் தோழியிடம் சென்று பேசிப் பார்த்தாள் அவளை வேறு திருமணத்திற்க்கு சம்மதிக்க வைக்க முயன்று தோற்றாள்.ஆதிரா அவள் எண்ணத்தில் உறுதியாக நின்றாள் வேறு திருமணம் என்ற பேச்சிற்கே இடமில்லை என்று விட்டாள் அவள். நேத்ரா வருத்ததுடனே ஊருக்கு கிளம்பிச் சென்றாள். அவள் பெற்றோரிடம் இன்னும் சில நாட்கள் பொறுத்திருக்குமாறு அவர்களிடம் சொல்லிவிட்டு சென்றாள்.

 

மேலும் சில மாதங்கள் கடந்திருக்க ஆதிரா பேஷன் டிசைனிங் முடித்துவிட்டு தனியாக ஒரு இடம் பார்த்து ஒரு கடையை வைத்தாள், உடன் படித்த தோழி ஒருத்தியின் துணையுடன் மனதிற்கு பிடித்த அந்த வேலையை பார்த்தாள். விடுமுறை தினங்களில் குழந்தைகளுக்கு இலவசமாக ஓவிய வகுப்பு எடுத்தாள்.

 

ஏனோ அவளுக்கு நேத்ராவிடம் பேசி நாளாகிவிட்டது என்று தோன்ற எப்படியாவது அவளுடன் இன்று இணையத்தில் பேசிவிட வேண்டும் என்று முடிவு செய்து அவள் வேலைகளை விரைந்து முடிந்து அவள் மடிகணினியை எடுத்துக் கொண்டு அமர்ந்தாள். அவளுக்கு முயற்சிக்க அவளோ வேலை இருப்பதாகவும் பிறகு பேசுவதாகவும் சொல்லிவிட அவளுக்கு ஒரு வெறுமை உணர்வு தோன்றியது.

 

இரண்டு மாதங்கள் கழித்து ஒரு நாள் ஆதிரா கடைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வர அங்கு நேத்ரா அவள் அன்னை தந்தையுடன் பேசிக் கொண்டிருந்தாள். அவளை கண்ட சந்தோசத்தில் “என்னடி நீ வரப் போறான்னு ஒரு வார்த்தை கூட சொல்லவே இல்லை. உன்னை பார்க்க மாட்டோமான்னு நினைச்சுட்டே இருந்தேன், நீ வந்துட்ட சந்தோசமா இருக்குடி” என்று அவளை அழைத்துக் கொண்டு அவளுடைய அறைக்கு சென்றாள்.

 

தோழியையே பார்த்துக் கொண்டிருந்த நேத்ரா “சந்தோசமா இருக்கியாடி” என்றாள். “இம் நல்லாயிருக்கேன்” என்றாள் பதிலுக்கு. ஒரு பெருமூச்சுடன் நேத்ரா அவளை பார்த்தாள், “சரி உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்ல தான் வந்தேன், அதை போன்ல பேச முடியாதுன்னு தான் உன்கிட்ட நான் எதுவும் பேச முயற்சி செய்யலை” என்று நிறுத்தினாள் அவள்.

 

“என்னடி என்ன விஷயம் சொல்லு” என்றாள் ஆதிரா. “ஹரிணி இறந்துட்டாங்க” என்றாள் அவள். “ஹரிணி யாரு” என்றாள் அவள் மனதில் இவள் ஆதியின் மனைவியை பற்றி சொல்கிறாளோ என்ற எண்ணம் எழுந்தாலும் அந்த பதட்டத்தை மறைத்துக் கொண்டு அவளிடம் கேட்டாள். “ஆதி அத்தானோட மனைவி” என்றாள் அவள். ஆதிரா அதைக் கேட்டு துடித்து போனாள், “என்ன… என்னடி சொல்ற” என்றாள்.

 

அவள் குரல் தழுதழுப்பதை உணர்ந்திருந்தாள் நேத்ரா, “எனக்கு ரெண்டு மாசம் முன்னாடி தான் தெரியும் அவங்க மஞ்சள் காமாலை முற்றி அதுல இறந்துட்டாங்க. அவங்களுக்கு இரட்டை குழந்தைகள் ஒரு பையன் ஒரு பொண்ணு அவங்களுக்கு இப்போ தான் ஒரு வயசாகுது” என்றாள் நேத்ரா.

 

ஆதிராவின் கண்களில் இருந்து கண்ணீர் தாரை தாரையாக பெருகிக் கொண்டிருந்தது. “ஏன்டி இப்படி எல்லாம் நடக்குது, எங்க ரெண்டு பேருக்குமே நிம்மதியான வாழ்க்கை இல்லையா. அவர் வாழ்க்கை சந்தோசமா இருக்குன்னு நினைச்சு நான் இருக்க கடவுள் ஏன் இப்படி கருணையே இல்லாம அவர் வாழ்க்கையை இப்படி ஆக்கி வைச்சு இருக்கார். அந்த பிஞ்சு குழந்தைகள் என்ன பாவம் செஞ்சுது, அவங்க அம்மாவை ஏன் அவங்ககிட்ட இருந்து பிரிச்சான் என்று கண்ணீர் வடித்தாள் அவள்.

 

அவள் அழுது முடிக்கும் வரை அமைதியாக இருந்த நேத்ரா “நீ வருத்தப்படுவேன்னு தான் நான் உன்கிட்ட எதுவுமே பேசலை” என்றாள். “ஆதிரா நீ ஏன் அவரை கல்யாணம் பண்ணிக்கக் கூடாது” என்றாள் அவள். அதுவரை அழுது கொண்டிருந்தவள் தோழியை நிமிர்ந்து பார்த்தாள், “என்னடி பேசற அவங்க வீட்டில ஒரு இழப்பு நடந்து இருக்கு, அதுல என்னை ஆதாயம் தேடச் சொல்றியா, பிரிவோட வலி என்னன்னு எனக்கு தெரியும், அது போல ஒரு வலில துடிச்சுக்கிட்டு இருக்கிறாங்க. நீ இப்படி சொல்லறியேடி எனக்கு அந்த மாதிரி ஒரு நினைப்பு இல்லவே இல்லை. இனிமே நீ இப்படி என்கிட்ட பேசாதேடி. எனக்காக ஒரு உதவி பண்ணு எனக்கு… எனக்கு…” என்று இழுத்தாள் அவள்.

 

“என்ன சொல்லு” என்றாள் நேத்ரா, “எனக்கு அந்த குழந்தைகளை பார்க்கணும்” என்றாள். தோழியை முறைத்துவிட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றாள் நேத்ரா. ஆயிற்று இரண்டு வருடம் ஆதிராவின் பெற்றோரும் அவளை திருமணத்திற்கு சம்மதிக்க வைக்க சூர்யாவும் அவர்களுடன் சேர்ந்துக் கொண்டு அவளை கெஞ்சினான். அவளோ தனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை என்று ஒரேடியாக மறுத்துவிட்டாள்.

 

தினம் தினம் கண்ணீர் வடித்தனர் அவள் பெற்றோர், நேத்ரா இரண்டு வருடமாக இந்தியாவிற்கு வரவேயில்லை, கடைசியாக அன்று ஆதிராவிடம் பேசியது தான் அதன் பின் அவள் ஆதிராவை தொடர்பு கொள்ளவே இல்லை. ஆதிரா அவள் அலுவலகத்தில் வேலையில் இருக்க அவள் அலைபேசி அழைத்தது, நேத்ரா தான் அவளை அழைத்திருந்தாள்.

 

வேகமாக போனை எடுத்து காதுக்கு கொடுத்து “ஹலோ நேத்ரா எப்படிடி இருக்க எப்படிடி என்கிட்ட பேசாம இவ்வளோ நாள் இருந்த…” என்று கேட்டுக் கொண்டிருந்தவளை இடைமறித்தாள் நேத்ரா. “உன்கிட்ட பேசணும் நீ உடனே வீட்டுக்கு வா” என்று சொல்லிவிட்டு வேறு எதுவும் சொல்லாமல் போனை அணைத்துவிட்டாள்.

 

போனை வைத்துவிட்டு கீழே இறங்கி வந்தாள், அவள் சென்னைக்கு வந்து இரண்டு நாட்களாகிவிட்டது, அவள் ஊரில் இருந்து வந்ததும் தான் அந்த விஷயம் கேள்வி பட்டாள் ஆதிக்கு இரண்டாம் திருமணத்திற்கு ஏற்பாடு செய்கிறார்கள் என்று. அவள் அன்னையிடம் இருந்து விஷயத்தை வாங்கியவளின் எண்ணம் முழுதும் ஆதிராவுக்கும் ஆதிக்கும் திருமணம் நடந்தினால் என்ன என்பதிலேயே இருந்தது. “அம்மா” என்றாள் அவள், “என்னம்மா” என்றார் சந்திரா. “அம்மா பெரியத்தானுக்கு பொண்ணு பார்க்கறாங்கன்னு சொன்னியே, ஏம்மா எனக்கு ஒண்ணு தோணுது சொல்லவா” என்ற மகளை ஒரு வித பதட்டத்துடன் ஏறிட்டார் சந்திரா.

 

எங்கே மகள் தானே அவரை திருமணம் செய்து கொள்கிறேன் என்று சொல்லிவிடுவாளோ என்று நினைத்தார் அவர். “நம்ம ஆதிரா கல்யாணமே வேண்டாம்ன்னு இருக்கா, அவளுக்கு ஏன் நாம அத்தானை கேட்க கூடாது” என்றாள் அவள். “என்னடி பேசற தெரிஞ்சு தான் பேசறியா, உனக்கு வந்து அவரை பெண் கேட்டா நான் யோசிப்பேனா மாட்டேனா. அது போல தானே அவங்க அப்பா அம்மாவுக்கும் இருக்கும். நீ யோசிச்சு தான் பேசறியா, அவளோட அப்பா அம்மாக்கு எவ்வளவு கற்பனைகள் இருக்கும் அவங்க பெண்ணோட கல்யாணத்தை பற்றி. இனி இது மாதிரி பேசற முட்டாள்தனத்தை விடு” என்று கூறி அவளை முறைத்தார்.

 

“பேசிட்டியாம்மா என்னை கொஞ்சம் பேசவிடறியா” என்றவள் தொடர்ந்தாள், “இங்க பாரும்மா ஆதிரா அவளுக்கு கல்யாணமே வேண்டாம்ன்னு சொல்லிட்டு இருக்கா, அது ஒரு காதல் விவகாரம், அதுக்குள்ள என்னை முறைக்காதே இதுக்கு மேல என்னால உன்கிட்ட எதுவும் சொல்ல முடியாதும்மா, அது அவளோட தனிப்பட்ட விஷயம் என்னை தவிர அவளை பற்றி முழுசா யாருக்கும் தெரியாது. ஆனா ஒண்ணு என்னால அவளை இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்க முடியும்” என்றாள் அவள் முகத்தில் ஒரு தீவிரத்துடன்.

 

அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே ஆதிரா வந்துவிட, “என்னடி என்னை அவசரமா வரச் சொன்ன, நீ ஊருக்கு வந்த விஷயம் கூட என்கிட்ட சொல்லவே இல்லை…” என்று அவள் பேசிக் கொண்டிருக்க, “நீ வா” என்று அவளை இழுத்துக் கொண்டு அவள் அறைக்கு சென்றாள். செல்லும் முன் அவள் அன்னையை ஒரு அர்த்தத்துடன் பார்த்து சென்றாள்.

 

அவருக்கு அங்கு நடப்பது என்ன என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை மகள் ஏதோ பெரிய வேலை செய்கிறாள் என்று யூகித்தார். சமையலறைக்கு சென்று இருவருக்கும் ஜூசை எடுத்துக் கொண்டு மேலே ஏறினார். தோழியை அவள் அறைக்கு அழைத்துச் சென்றவள் “உன்கிட்ட பேசணும் நான் பேசி முடிக்கற வரை பொறுமையா கேளு, குறுக்க பேசாதே” என்றாள் நேத்ரா.

 

“சொல்லு” என்றாள் ஆதிரா. “பெரியத்தானுக்கு பொண்ணு பார்க்கறாங்க, அவர் ஒருவழியா வேற கல்யாணம் பண்ண இப்ப தான் சம்மதிச்சு இருக்கார்” என்றவளை ஆதிரா “அதுக்கு இப்ப..” கையை வாயில் வைத்து அவளை பேசாதிருக்குமாறு சொன்னாள் ஆதிரா. “நான் அம்மாகிட்ட பேசிட்டேன், அவங்க உங்க வீட்டில வந்து பேசுவாங்க. பெரியத்தானுக்கு உன்னை பெண் கேட்பாங்க, அப்போ நீ சம்மதம் சொன்னா மட்டும் போதும். நீ எதுவும் மறுத்து பேசாதேடி, உன் காதலை தான் என்னால சேர்த்து வைக்க முடியலை. உன்னை அவரோட சேர்த்து வைக்கறதுக்கு என்னால முடிஞ்சதை செய்யுறேன், அதுக்கு நீ ஒத்துழைப்பு கொடு. அவரை கல்யாணம் பண்ணிகிட்டா நீங்க சந்தோசமா இருப்பீங்கன்னு தோணுது. நீ எப்படியும் வேற கல்யாணம் பண்ணிக்க போறது இல்லை, நீ விரும்பினவரே உன் வாழ்க்கையில உனக்கு கிடைக்கப் போறார்

 

“நீ இதுக்கு சம்மதிக்கணும். அந்த குழந்தைகள் பற்றி அன்னைக்கு நீ வருத்தப்பட்ட தானே, அது நிஜம்னா நீ இதுக்கு சம்மதிக்கணும்” என்றாள் நேத்ரா. தோழிக்கு தன்னால் எதுவும் செய்ய முடியவில்லை என்று குற்றவுணர்வில் இருந்தவளுக்கு அப்போது தான் மனதில் ஒரு நிம்மதி பரவியது.

 

ஆதிராவோ எதுவும் பேச முடியாமல் திகைத்து நின்றாள், “நான் யோசிக்கணும்” என்று அவளிடம் சொல்லிவிட்டு அவள் கிளம்பிச் சென்று விட்டாள். மீண்டும் அன்னையிடம் வந்த நேத்ரா ஆதிராவின் வீட்டில் அது பற்றி பேசுமாறு கூறினாள். அவர்களுக்கு ஜூஸ் எடுத்துக் கொண்டு வந்த சந்திராவின் காதில் தோழியர் இருவரும் பேசிக் கொண்டது காதில் விழ அவர் முழுவதுமாக எல்லாவற்றையும் கேட்டுவிட்டே சென்றார்.

 

மறுநாளே ஆதிராவின் வீட்டிற்கு சங்கரன் இல்லாத நேரமாக பார்த்து சென்றார். “வா வா சந்திரா இப்போ தான் உனக்கு எங்க வீட்டுக்கு வர்றதுக்கு நேரம் கிடைச்சுதா” என்று சொல்லி அவரை வரவேற்றார் கோமதி. “ஒரு முக்கியமான விஷயம் பேசலாம்ன்னு தான் வந்தேன்” என்றார் சந்திரா. அதற்குள் அவரை அமர வைத்துவிட்டு கோமதி இருவருக்குமாக காபியை கலந்து எடுத்து வந்தார்.

 

“சொல்லு சந்திரா” என்றார் அவர். “கோமதி நம்ம ஆதிராவுக்கு ஒரு வரன் சொல்லலாம்ன்னு தான் வந்தேன்” என்றார் அவர். “எங்க சந்திரா அவ தான் கல்யாணம் வேணாம்ன்னு சொல்றாளே, மீறி அந்த பேச்சை எடுத்த அழறா நாங்க ரெண்டு பேரும் என்ன பண்றதுன்னு தெரியாம இருக்கோம்” என்றார் கோமதி வேதனையுடன்.

 

“இந்த வரனை பத்தி அவகிட்ட பேசுங்க அவ நிச்சயம் சம்மதம் சொல்லுவா” என்றார் அவர். கோமதி அவரை ஆச்சரியமாக பார்க்க சந்திரா தொடர்ந்தார், “இங்க என் அண்ணியோட அக்கா இருக்காங்கன்னு சொல்லி இருக்கேன்ல அவங்க பெரிய பையனுக்கு தான்….” என்று ஆரம்பித்து அவர் எல்லா விவரமும் கூற கோமதியின் முகம் கோபத்தில் சிவந்தது.

 

“ஏன் சந்திரா இந்த மாதிரி ரெண்டாம் கல்யாணம் பண்றதுக்கு உன் பொண்ணுனா சம்மதிப்பியா” என்றார் காட்டமாக, “நான் இப்போதைக்கு எந்த பதிலும் சொல்ல விரும்பலை எனக்கு ஆதிராவும் நேத்ராவும் ஒண்ணு தான். கோமதி இந்த விஷயத்தை நீ வீட்டில எல்லார்கிட்டயும் பேசிட்டு முக்கியமா ஆதிராக்கிட்ட பேசு, அவ என்ன சொல்றான்னு பார்த்துட்டு அப்புறம் என்ன பண்ணலாம்ன்னு முடிவெடுக்கலாம். நான் நாளைக்கு வர்றேன்” என்று சொல்லிவிட்டு அவர் கிளம்பிவிட்டார். அவர் ஆதிராவிடம் பேசுங்கள் என்று மீண்டும் மீண்டும் அழுத்தி கூறியது கோமதியை யோசனைக்கு உள்ளாக்கியது.

 

மாலை எல்லோரும் வீட்டிற்கு வந்ததும் அந்த பேச்சை ஆரம்பித்தார். சூர்யா மாடியில் அவன் அறையில் படித்துக் கொண்டிருக்க கீழே சோபாவில் தந்தையும் மகளும் அமர்ந்திருக்க கோமதி அந்த பேச்சை ஆரம்பித்தார். அதை கேட்ட சங்கரன் ருத்ர தாண்டவமே ஆடிவிட்டார்.

 

அவங்க எப்படி அப்படி கேட்கலாம், “என் பொண்ணுக்கு மாப்பிள்ளை கிடைக்காமையா இருக்கு, அவளை நான் அப்படி ரெண்டாம் தாரமா தான் கொடுக்கணும்னு என்ன அவசியம் இருக்கு” என்று தாம்தூமென குதித்தார் அவர். கோமதியோ ஆதிரா என்ன சொல்லப் போகிறாள் என்று மட்டுமே கவனித்துக் கொண்டிருந்தார். நிச்சலனமாக எந்த வித உணர்வுகளையும் முகத்தில் காட்டாது மறைத்தவள் மெதுவாக வாயை திறந்தாள்.

 

“அப்பா எனக்கு இந்த கல்யாணத்துல சம்மதம்” என்றவளை இருவருமே புதிதாக பார்த்தனர். கணவர் எதையோ கூற வாயெடுக்க அவரை பேசாமலிருக்குமாறு சைகை செய்துவிட்டு மகளை நோக்கி  “நிஜமா தான் சொல்றியாம்மா” என்றார் கோமதி. “எனக்கு முழு சம்மதம்மா” என்றுவிட்டு அவள் அறைக்கு சென்றுவிட்டாள்.

 

கோமதி கணவரிடம் ஏதோ பேச அவர் அப்போதைக்கு வாயை மூடிக் கொண்டார். மறுநாள் சந்திராவை வரச் சொல்லி கோமதி போன் செய்ய அவர் வந்தார். “என்ன கோமதி ஆதிரா என்ன சொன்னா” என்றார் அவர். “லட்சுமிக்கு இந்த கல்யாணத்துல முழு சம்மதம்ன்னு சொன்னா, ஆனா எப்படி எனக்கு புரியவே இல்லை” என்றார் கோமதி வேதனையுடன்.

 

சங்கரனும் அங்கிருக்க அவரும் மிகுந்த வருத்தத்தில் இருந்தார். நேத்ராவும் ஆதிராவும் பேசிக் கொண்ட விஷயத்தை பற்றிக் கூற இருவரும் திகைத்தனர். தங்கள் மகளின் வாழ்க்கையில் ஏதோ பெரிய சங்கடம் இருக்கிறது என்று அவர்களுக்கு புரிந்தது, ஆனால் என்னவென்று புரியாமல் இருந்தவர்களுக்கு ஏதோ புரிந்தது போல் இருந்தது.

 

அதன் பின் அவர்களும் திருமணத்திற்கு சம்மதிக்க சந்திரா தான் இரு வீட்டிற்கும் இடையில் நின்று பேசி அந்த திருமணத்தை முடித்து வைத்தார். சூர்யா விஷயம் கேள்விபட்டு அவனும் குதிக்க ஒருவழியாக பெற்றோர்கள் அவனை சமாளிக்க வேண்டா வெறுப்பாகவே இருந்தான். இந்த திருமண நடக்க காரணமாயிருந்த நேத்ரா அவளின் திருமணத்தின் போது அங்கிருக்க முடியாத சூழ்நிலை அமைய அவள் வெளிநாட்டுக்கு செல்ல வேண்டிய நிர்பந்தத்தில் மீண்டும் கிளம்பிச் சென்று விட்டாள்.

 

____________________

 

 

காதல் கூடவில்லை என்றாலும் திருமணம் கூடியது அவளுக்கு ஆதியின் குழப்பம் தீர்ந்து அவன் ஆதிராவை முழுதாக அறிவானா வெற்றியால் மீண்டும் ஏதும் குழப்பம் நேருமா அவர்களுக்குள்….. காலம் தான் பதில் சொல்லும் காத்திருப்போம் தோழமைகளே…..

 

 

விழித்திரை மூடினாலும்

உன் ஞாபகம் முழுவதும்

என் நெஞ்சுக்கூட்டில்…

உறைகிறது…

உன் நினைவுகள் மட்டுமே

என் நினைவடுக்குகள்

சேமிக்கிறது…

 

பூஞ்சிதறலாய் எனக்குள்

நேசம் விதைத்தவனே…

என்னுள் நீ என் உயிராய்

இருக்கிறாய்…

 

எட்டாக் கதிரவன் என்று

நானிருந்தேன்…

எனை எட்டிப் பிடிக்க

வைத்தாய்…

 

நிலவுக்கு கதிரவன்

ஒளி தருவது போல்

உன் நினைவில் எனக்கு

உயிர் தருகிறாய்….

 

வெளிச்சம் கொடுத்தவனே

என்னை நீ அறிவது எப்போது…

உன்னுள் நான் கரைவது எப்போது…

உன் உயிராய் நான் உறைவது எப்போது

Advertisement