Advertisement

அத்தியாயம் –15

 

“வண்டியை நிறுத்துங்க” என்றாள் அவள். “எதுக்கு” என்றான் அவன். “சரி நிறுத்த வேண்டாம் நீங்க நம்ம ஆபீஸ்க்கு போங்க ஆது” என்றாள். “ஏன்” என்றான் அவன். “சொன்னா கேளுங்க ப்ளீஸ்” என்றாள். அவளின் நம் அலுவலகம் என்றதிலும் அவளின் ஆது என்ற அழைப்பிலும் குளிர்ந்தவன் வேறு பேசாமல் அவன் அலுவலகத்திற்கு வண்டியை செலுத்தினான்.

 

அங்கு அவன் நண்பன் மூர்த்தி இருந்தான். “என்னடா அண்ணிகிட்ட பேசிட்டியா” என்று அவனை வரவேற்றான் அவன். “இவங்க தான் சின்ன அண்ணியா” என்று அவன் ஆதவனை பார்த்து கண் சிமிட்ட அவனும் சிரித்துவிட்டான்.

 

“வாங்க அண்ணி, உள்ளே வாங்க. நான் போய் உங்களுக்கு குடிக்க எதாச்சும் வாங்கிட்டு வர்றேன். ஆதவா நான் தாமதமா தான் வருவேன். அப்புறம் ஆதவா இன்னைக்கு நீ சொன்ன மாதிரி அந்த பங்குகள் எல்லாம் வாங்கியாச்சு. அப்புறம் நீ சொன்ன அந்த xxx கம்பெனி பங்குகள் கொஞ்சம் சரிவா இருக்கு அதுனால நான் அதை வாங்கலை” என்று அவனுக்கு அலுவலகம் சம்மந்தமான விஷயத்தை பகிர்ந்தான்.

 

“அண்ணா” என்ற அழைப்பில் திரும்பிய மூர்த்தி “என்னையா கூப்பிட்டீங்க” என்றான். “ஆமாம், நீங்க ஏன் அந்த xxx கம்பெனி பங்கு வாங்கலை. நீங்க வேணா பாருங்க அது நாளைக்கு கண்டிப்பா ஏறிடும். நீங்க இன்னைக்கு விலை குறைவா இருக்கும் போதே வாங்கி போடுங்க. நான் சொல்றது நடக்கலைனா என்னை கேளுங்க” என்றாள் அவள். அவன் ஆதவனை நோக்க அவனும் யோசனையுடன் சரி வாங்கலாம் என்பது போல் தலையசைத்தான். “சரி தங்கச்சி, நான் போய் உங்களுக்கு குடிக்க எதாச்சும் வாங்கிட்டு வர்றேன், வந்து நீ சொன்ன மாதிரி அந்த பங்குகள் வாங்கி போடுறேன்” என்றான் அவன்.

 

அவன் வெளியில் சென்றதும் கதவை அடைத்த ஆதவனுக்கு கோபம் குறைந்திருந்தது. “உனக்கு பங்கு வர்த்தகம் பற்றி எல்லாம் தெரியுமா” என்றான் அவன் மெலிதான ஒரு ஆச்சரியத்துடன். “தெரியும் அப்பா அண்ணா எல்லாம் பேசுவாங்க, அதுனால எனக்கும் அதுல ஒரு பிடிப்பு அதனால தான் அதை பத்தி தெரிஞ்சுகிட்டேன்” என்றாள்.

 

“எல்லாம் தெரியும் என்னை பனைமரம், அடாவடிக்காரன்னும் சொல்லத் தெரியும் இல்லை” என்று சொன்னவனின் முகம் மாறியது. “ஆது நான் சொன்னதுல ஏதும் தப்பு இருக்கா” என்று அவள் நியாயப்படுத்த அவன் முகம் இறுகியது.

 

“காரணமே இல்லாம நீங்க என்னை வெறுக்கலை, எங்க வீட்டில அப்படி சொன்னதுக்கு நான் எப்படி காரணம் ஆவேன். நீங்க எதையும் புரிஞ்சுக்காம என்னை கோவிச்சுகிட்டீங்க. அப்புறம் அன்னைக்கு என்கிட்ட உங்க காதலை சொல்லும் போதும் என்னை மிரட்டி தானே கூட்டி வந்தீங்க. எனக்கும் உங்களை பிடிச்சுருக்குன்னு சொன்ன போதும் நீங்க அடாவடி தனம் தானே பண்ணீங்க” என்று சொல்லி முகம் சிவந்தாள் அவள்.

 

“அப்போ நான் எல்லாத்துலயும் அடாவடிங்கற, போனா போகுதுன்னு அன்னைக்கு உன்னை ஒண்ணும் செய்யாம விட்டது தப்பு போல இருக்கே” என்று அவளை இழுத்து தன் மேல் சாய்த்தான். அதற்குமேலும் அமைதியாக இராமல் அவன் கைகள் அவள் இடையை பற்ற அவள் கைகள் அவன் கழுத்தில் மாலையாக கோர்த்தாள். அவன் அவள் இதழ்களில் தேனேடுக்க அவள் துவண்டாள்.

 

வெகுநேரம் கழித்து அவளை விடுவித்தவன் “என்னை அடாவடி சொன்ன இல்லை இது போதுமா இன்னும் நான் எதாச்சும் செய்யணுமா” என்று கண் சிமிட்டினான் அவன். “அய்யோ போதும் ஆது விடுங்க, நீங்க இப்படி எல்லாம் பேசுவீங்களா. எனக்கு கூச்சமா இருக்கு” என்றாள் அவள். “அடிப்பாவி இப்போ வளைச்சு வளைச்சு முத்தம் கொடுத்தேன், அப்போலாம் வராத கூச்சம் நான் பேசினதும் வருதா” என்று மேலும் அவளை சீண்டினான்.

 

“ஆது ப்ளீஸ்” என்று முகம் சிவந்தவளை கைவளைவில் கொண்டு வந்தான். “ஆது கேக்க மறந்துட்டேன், நீங்க லேட்டா தானே வருவீங்கன்னு ஆதிரா சொன்னா, நாங்க பேசினது நீங்க எப்படி கேட்டீங்க. அப்படினா நீங்க முன்னாடியே வந்துட்டீங்களா” என்று வரிசையாக அவள் கேள்விகளை அடுக்கினாள்.

 

“அண்ணி என்னை லேட்டா தான் வரச் சொன்னாங்க, நீ வர்றேன்னு சொன்னதும் நான் ரொம்ப சந்தோசமா உன்னை பார்க்கலாமேன்னு ஒரு ஆர்வத்துல சீக்கிரமா வந்தா, அம்மணி என்னை பத்தி ரொம்ப புகழாரம் சூட்டிட்டு இருந்தீங்க”

 

“நீ சரியான மட்டி, என்னடா திறந்து இருக்கற கதவுக்கு ஒருத்தன் மணி அடிக்கறானே அப்படின்னு யோசிக்க மாட்டியா. நான் நீ உள்ள வரும் போதே வந்துட்டேன். அண்ணி பேசாத பேசாதன்னு சொல்ல சொல்ல நீ வாயடிச்சுட்டு இருந்த, சரி கொஞ்சம் கோவமா பேசினேன். அம்மணி பயந்துட்டீங்க, நீயே என்னை இங்க கூட்டிட்டு வந்து எனக்கு நல்ல பூஸ்ட் கொடுத்துட்ட இது எப்படியும் ஒரு வாரத்துக்கு தாங்கும்” என்று கண் சிமிட்டினான் அவன்.

 

“அடப்பாவி சும்மா விளையாடுனியா, படவா உன்னை என்ன பண்றேன் பார்” என்று சொல்லி அவள் அங்கிருந்த குஷனை எடுத்து அவன் மேல் வீசினாள். அவன் விலகிக் கொள்ள அவள் அவன் அருகே வந்து அவன் கன்னத்தை கடித்து வைத்தாள். “ஹேய் வலிக்குதுடி நான் பாவம்டி ப்ளீஸ் என்னை விட்டுடு” என்றான் அவன்.

 

“ஆமாடி சும்மா தான் பயமுறுத்தினேன், பின்ன உன்னை பார்க்கலாம் வான்னு கூப்பிட்டா நீ வரமாட்டேங்குற, முன்னலாம் வீட்டுக்கு வருவ, உன்னை பார்த்து சந்தோசப்பட்டேன். எப்போ காதலை சொன்னேனோ அப்புறம் அம்மணி அங்க வர்றது இல்லை.

 

“அன்னைக்கு அண்ணியை ஆஸ்பத்திரியில் வைச்சு பார்க்க வந்த போது உன்னை பார்த்தது. அப்புறம் இன்னைக்கு தான் சந்தர்ப்பம் கிடைச்சுது. வந்ததுக்கு பரிசும் கிடைச்சுது. அப்புறம் என்ன சொன்ன அன்னைக்கு காதலை சொன்ன அன்னைக்கு நான் தள்ளி தானே இருந்தேன். நீ தானே சரின்னு, அப்புறம் தானே உன்னை கட்டி பிடிச்சேன். என்னமோ நான் உன்னை ஏதோ செஞ்சுட்ட மாதிரி கதை சொல்லற” என்று சொல்லி அவளை மேலும் முகம் சிவக்க வைத்தான் அவன்.

 

“சரின்னு சொன்னா அதுக்காக நீங்க, நீங்க…” என்று இழுத்தவள் “என்னடி இழுக்கற” என்ற. “ஒண்ணும் இல்லை, தப்பு தான் சாமி விடுங்க” என்றாள் அவள்.

 

“இங்க பாரு இன்னைக்கு நான் உன்னை இங்க கூட்டி வரலை. நீ தான் கூட்டிட்டு வந்து இந்த சின்ன பையன் மனசை கெடுத்துட்ட, அப்புறம் இதுக்கு ஒரு பஞ்சாயத்தை அண்ணிகிட்ட வைச்சுறாத. அப்புறம் நான் திரும்பவும் அங்க வந்து நிப்பேன்” என்றான் அவன். “

 

இதெல்லாமா சொல்லுவாங்க, போங்க நீங்க” என்றாள் அவள். “நீ தான் சொன்ன அவங்க உங்களுக்கு தான் அண்ணி எனக்கு தோழி நான் எல்லாம் சொல்லுவேன் அன்னைக்கு போன்ல பேசும் போது சொன்னியே” என்றான் அவன். “அப்படி நீ எல்லாம் சொல்லுவேனா, இதையும் போய் நீ அவங்ககிட்ட சொல்லிடு” என்று மீண்டும் அவளை இழுத்து அணைத்து முத்தமிட்டான்.

 

“போடா, இன்னைக்கு தெரியாம உங்களை பேசிட்டு நான் படற அவஸ்தை இருக்கே, அய்யோய்யோ” என்று அவள் சந்தானம் பாணியில் சொல்ல அவன் பக்கென்று சிரித்துவிட்டான்.

 

“சரி வாடி கிளம்பலாம், நெறைய வேலை இருக்கு” என்று அவன் சொல்ல அவர்கள் கிளம்பவும் மூர்த்தி உள்ளே நுழையவும் சரியாக இருந்தது. அவ குளிர்பானத்தை கொடுக்க இருவரும் குடித்துவிட்டு கிளம்பினர்.

 

____________________

 

 

“என்னடா மச்சி என்ன ரொம்ப யோசனைல இருக்கா, அப்படி என்ன தீவிரமா யோசனை. சொன்னா நாங்களும் யோசிப்போம்ல” என்றான் சூர்யாவின் கல்லூரி தோழன் சுந்தர். “மச்சின்னு கூப்பிடாதேன்னு எத்தனை தடவைடா சொல்றது, நல்லாவே இல்லைடா. என்ன தான் மொழியோ இது” என்று அங்கலாய்த்தான் சூர்யா. “அதெல்லாம் இருக்கட்டும் மச்சான் நீ விஷயத்துக்கு வா, என்னாச்சு என்ன யோசனை” என்றான் அவன் மீண்டும்.

 

“ஒரு சந்தேகம் அதை பத்தி தான் யோசிச்சுட்டு இருந்தேன்” என்றான் அவன். “என்ன சந்தேகம் அதை கேட்டாதானே தெரியும், சொல்லுடா. நீ எப்பவும் இப்படி யோசிச்சது இல்லையே” என்றான் அவன். “ஒரு பொண்ணு ஒரு பையனை முறைச்சு முறைச்சு பார்க்குற எப்போ பார்த்தாலும். அந்த பார்வைக்கு என்ன அர்த்தம்ன்னு தான் புரியலை” என்றான் சூர்யா. “முதல்ல யார் அந்த பொண்ணுன்னு சொல்லு, என்ன வயசிருக்கும்” என்றான் அவன்.

 

“தெரிஞ்ச பொண்ணு தான் என்ன என்னைவிட ஒரு ரெண்டு வயசு சின்ன பொண்ணு” என்றான் அவன். “யாரு அன்னைக்கு பார்த்தோமே அந்த CSE முத வருஷம் படிக்கற பொண்ணு அவளா” என்று நேரடியாக அவன் விஷயத்துக்கு வந்தான்.

 

“எப்படிடா கண்டுபிடிச்ச” என்று வியந்தான் சூர்யா. “ஹ்ம்ம் வெத்தலைல மை போட்டு கண்டு பிடிச்சேன். அட போடா அதான் நீயே யோசிச்சி ஒரு ரெண்டு வருஷம் என்னை விட கம்மியா இருக்கும் சொன்னியே, அதை வைச்சி தான் நாம மூணாவது வருஷம் படிக்கறோம். இதை கண்டுபிடிக்கறது சிரமமா, அதுவும் இல்லாம அந்த பொண்ணை நீ கூட்டிட்டு வந்தியே, அன்னைக்கே அது கண்ணுல ஒரு இது தெரிஞ்சுது. ஆனா நீ தான் எதுவும் இல்லைன்னு சொல்லிட்டியா அப்புறம் நான் அதை பத்தி யோசிக்கலை. இப்போ என்னாச்சு” என்றான் சுந்தர்.

 

“இல்லைடா அந்த பொண்ணு என்னை வெறிக்க வெறிக்க பார்க்குது. இப்படி தான் ஊர்ல வைச்சு ஒரு தடவை பார்த்தா, ஊர்ல இவளோட சேர்ந்து இவ சித்தி பொண்ணு ஒருத்தி என்னை ஓட ஓட விரட்டினா. நான் அவளுகளை கண்டுக்கவே இல்லை. ஆனா இவ மட்டும் விடாம என்னை பார்த்துட்டே இருக்கா. அன்னை அக்கா ஆஸ்பத்திரியில் இருக்காங்கன்னு பார்க்க போனேன் அங்க இவளும் இருந்தா, அப்பவும் என்னை அப்படி தான் பார்க்குறா, அவளுக்கு என்ன தான் வேணும். அதான் ஒண்ணும் புரியலை. எங்க அக்காகிட்ட இதை பத்தி பேசலாமான்னு யோசனை பண்ணிட்டு இருந்தேன்” என்றான் சூர்யா.

 

“ஊர்ல இருக்க எல்லாரும் உன்னை மாதிரியாடா இருக்காங்க, ஏன்டா நீ இப்படி இருக்க, ஒரு பொண்ணு உன்னை விடாம பார்க்குறான்னா அவளுக்கு உன்னை பிடிச்சு இருக்குன்னு தானே அர்த்தம். உனக்கு பிடிச்சிருந்த நீ சரி சொல்லு இல்லைன்னா வேணாம்னு சொல்லு அதை விட்டு அக்காகிட்ட சொல்றேன் ஆட்டுக்குட்டி சொல்றேன்ட்டு போடா டேய் நீயும் உன் யோசனையும்”. “ஹேய் என்னடா சொல்ற, அவளுக்கு என்னை பிடிச்சுருக்கா, எப்படிடா அவ்வளவு உறுதியா சொல்ற” என்றான் சூர்யா.

 

“உனக்கு சந்தேகமா இருந்தா நீ சோதிச்சு பாரு” என்றான் சுந்தர். “எப்படி” என்றான் மற்றவன். “நீ போய் அந்த பொண்ணுகிட்ட எதாச்சும் பேசு, அப்போ அந்த பொண்ணோட கண்ணை பாரு அது உன்னை பார்த்து சிரிச்சா நான் சொன்னது தான் சரி. ஓகே வா” என்றான் அவன். “அதெப்படி கண்ணு சிரிக்கும், வாய் தானே சிரிக்கும்” என்றான் சூர்யா.

 

“நீ எப்போமே இப்படி தானா, இல்லை இப்படி தான் எப்போமேவா, உனக்கு போய் பாடம் எடுத்த என்னை நானே அடிச்சுக்கணும்” என்று தன் தலையில் குட்டிக் கொண்டான் சுந்தர். “சரி சரி வா, சும்மா தான் கேட்டேன்” என்று மழுப்பிவிட்டு மணி அடித்துவிட்டதால் மாலையில் பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்து அவர்கள் வகுப்பறைக்குச் சென்றனர்.

 

 

மாலையில் ஆதர்ஷா அவள் தோழிகளுடன் நடந்து வந்துக் கொண்டிருந்தாள். சுந்தர் எங்கிருந்தோ ஓடி வந்து சூர்யாவின் கையை பிடித்து இழுத்துச் சென்றான். “டேய் எங்கடா போறோம், கையை விடுடா” என்று அவன் கூற வம்படியாக அவனை இழுத்துக் கொண்டு ஆதர்ஷா முன் சென்று நின்றான் அவன்.

 

மூச்சு வாங்க ஏற இறங்க பார்த்தவனை ஒரு முறை முறைத்துவிட்டு ஆதர்ஷாவிடம் “ஒரு நிமிஷம்” என்றான் சூர்யா. அவன் அவளிடத்தில் பேசியதில் அவள் மனம் பறக்க அவள் கண்கள் ரகசிய சிரிப்பில் மலர்ந்தது.அதை காணாதது போல் கண்டுகொண்டார்கள் நண்பர்கள் இருவரும், “சொல்லுங்க” என்றாள் அவள். என்ன கேட்பது என்று முழித்தவன், “அக்கா அக்கா எப்படி இருக்காங்க, நான் அவங்களை மருத்துவமனையில் வந்து பார்த்தது. வீட்டுக்கு வந்துட்டாங்களா. நான் வந்து பார்க்கணுமே” என்று கோர்வையாக சொல்லி முடித்தான். “

அண்ணி வீட்டுக்கு வந்தாச்சு, அண்ணாவும் ஊர்ல இருந்து வந்துட்டாங்க, இப்போ அவங்க வீட்டுக்கு போய்ட்டாங்க” என்றாள் அவள். அவளிடம் ஏதோ பேசவேண்டும் என்று பேசியவனுக்கு தான் இந்த விஷயம் எல்லாம் முன்பே தெரியுமே, அவன் பெற்றோர் தான் மகளை பார்த்துவிட்டு வந்து ஏற்கனவே இந்த விஷயத்தை சொன்னார்களே. அவளை கண்டும் காணாததுபோல் கண்டுவிட்டு அவளுக்கு நன்றியுரைத்து விட்டு அவன் அங்கிருந்து நகர்ந்தான் அவன் நண்பனை இழுத்துக் கொண்டே.

 

“டேய் என்னடா நான் சொன்னது உண்மை தானே, சொல்லு நீ என்ன முடிவு எடுக்க போறே, அந்த பொண்ணை பார்த்தா நல்ல பொண்ணா தெரியுது. நீயும் சரி சொல்ல வேண்டியது தானே” என்றான் சுந்தர். “டேய் நீ வேற விவரம் தெரியாம பேசாதே, எனக்கு இப்போ தான் பயமா இருக்கு, எங்க அக்காவை கட்டிக் கொடுத்த இடம் அவங்க வீட்டு பொண்ணை நான் எப்படி, எங்க அக்காவுக்கு இதுனால எதாச்சும் பிரச்சனை வந்தா என்னால தாங்க முடியாது” என்று ஒதுங்கினான் சூர்யா.

 

“நீ சுத்த வேஸ்ட்டுடா, உன்கிட்ட போய் சொன்னனே என்னை அடிச்சுக்கணும். ஆனா ஒண்ணு அந்த பொண்ணு கண்ணுல உன்னை கண்டா ஒரு பிரகாசம் தெரியுது. உனக்கும் அந்த பொண்ணு முறையா தானே ஆகுது ஏன்டா தப்புன்னு நினைக்குற. அப்படின்னா உனக்கும் இஷ்டம் தானா, இதுனால உங்க அக்காக்கு எதாச்சும் பிரச்சனை வந்துடும்னு நினைக்கிறியா” என்று மடக்கினான் சுந்தர்.

 

“எனக்கு இது வரைக்கும் அந்த பொண்ணு மேல அப்படி ஒரு எண்ணம் வரலை சுந்தர். அந்த பொண்ணால எதாச்சும் பிரச்சனை வரக்கூடாதுன்னு தான் அக்காகிட்ட இதை பத்தி பேசலாமான்னு யோசிக்கறேன்” என்றான். “டேய் அந்த மாதிரி எதுவும் செஞ்சு வைக்காதே அந்த பொண்ணு உறுதியா இன்னும் எதுவும் சொல்லலை. உனக்கு தான் அப்படி ஒரு எண்ணம் இல்லைல பேசாம விடுடா” என்றான் சுந்தர்.

 

எப்போது அப்படி ஒரு எண்ணம் இல்லை என்று சொன்னானோ அப்போதிருந்து அவன் கண்கள் தன்னையுமறியாமல் அவளை சுற்றி வட்டமிட ஆரம்பித்தது. அவள் மனதில் பூப்பூக்க சந்தோசத்துடன் அவன் இருந்த திசையை அவள் பார்க்க, அவனும் ஏதோ தோன்ற திரும்பி பார்த்தான். அவன் பார்வையை கண்டதும் அவனுக்கு தலையசைத்து அவள் விடைபெற அவனும் பதிலுக்கு தன்னையும் மீறி தலையசைத்து விடைக் கொடுத்தான். “ச்சே, என்னாச்சு எனக்கு” என்று தலை மூடியை கலைத்தவனை அருகில் இருந்த சுந்தர் ஒரு மார்க்கமாக பார்த்தான். “என்னடா என்னடா நடக்குது இங்க” என்றான். “என்ன நடக்குது ஒண்ணுமில்லை சுந்தர், என்னாச்சு எதாச்சும் கனவா கண்டுட்டு இருக்க” என்றான் அவன். “கனவு எனக்கா இல்லை உனக்கா” என்றான் சுந்தர். “தெரியலைடா” என்றான் அவன்

 

____________________

 

ஆதிக்கு அலுவலகத்தில் வேலையே ஓடவில்லை அவள் நினைப்பாகவே இருக்க, நேரமாகவே கிளம்பி வீட்டிற்கு வந்துவிட்டான். அழைப்பு மணியை அழுத்த ‘யாரா இருக்கும் இந்த நேரத்துல’ என்று நினைத்துக் கொண்டே கதவை திறந்தவளின் முகம் அவனை கண்டதும் மலர்ந்தது. “என்னங்க சீக்கிரமா வந்துட்டீங்க” என்றாள் அவள். “இல்லை இன்னைக்கு எனக்கு கொஞ்சம் தலைவலியா இருந்துச்சு அதான் சீக்கிரம் வந்துட்டேன்” என்று பொய்யுரைத்தான் அவன்.

 

“நீங்க போய் டிரஸ் மாத்துங்க, நான் உங்களுக்கு சூடா காபி எடுத்துட்டு வர்றேன்” என்று அடுக்களைக்குள் நுழைந்தாள் அவள். பில்டரில் டிகாஷன் இறக்கிவிட்டு பாலை சூடு செய்து அளவாக டிகாஷன் கலந்து அவனுக்கு அவள் எடுத்து வரவும் அவன் உடை மாற்றிக் கொண்டு வரவும் சரியாக இருந்தது.

 

காபியை வாங்கி குடித்தவன் அவள் அவனுக்கு பிடித்த மாதிரி கலந்து கொண்டுவந்தது அவனுக்கு பிடித்திருந்தது. காபியை குடித்து கோப்பையை அவளிடம் நீட்டினான். கவினும் கவினியும் அவன் மடி மேல் அமர்ந்துக்கொண்டு அவனிடம் விளையாட அவனும் குழந்தையாய் மாறி அவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தான்.

 

வீட்டுக்கு வந்த போது ஒரு வார்த்தை பேசியதை தவிர ஏதும் பேசாமல் இருந்தவனை ஒரு கவலையோடு பார்த்தாள் அவள். அவளிடம் பேசவில்லையே தவிர குழந்தைகளோடு விளையாடிக் கொண்டிருந்தாலும் அவன் பார்வை அவளையே சுற்றி சுற்றி வந்ததை அவள் அறியவில்லை. காலையில் அவளிடம் மிகவும் அதிகப்படியாக நடந்துக் கொண்டோமே என்று அவனுக்கு சங்கடமாக இருந்ததில் அவன் அவளிடம் பேசத் தயங்கினான்.

 

கவனம் குழந்தைகளின் மீது திரும்ப அவள் அவனருகில் வந்து அமர்ந்தாள். “என்னங்க இன்னைக்கு தம்பியும் நேத்ராவும் வந்து இருந்தாங்க. விளம்பர படம் எடுக்கற வேலை சம்மந்தமா நான் தான் அவங்க ரெண்டு பேரையும் வெளிய அனுப்பினேன்” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்க அவன் “இம்” என்றான். “என்னாச்சுங்க, தலைவலி இன்னும் சரியாகலையா” என்று கூறி அவன் தலையை பிடிக்க “நான் வேணா பிடிச்சு விடட்டுமா” என்றாள். “வேணாம், நீ கொஞ்ச நேரம் பேசாம இருக்கியா” என்றான் அவன்.

 

அவள் முகம் வாடிவிட எழுந்து சென்று விட்டாள். அவனுக்கும் அப்படி சொல்லியதில் வருத்தமே, அப்படி சொல்லவில்லை எனில் அவள் இங்கிருந்து அவள் எழுந்து சென்றிருக்க மாட்டாள் என்று எண்ணினான். அவன் ஏற்கனவே சோர்ந்திருக்க அவள் வருத்தம் மேலும் அவனை வருந்த செய்ய உண்மையிலேயே அவனுக்கு தலைவலித்தது.

 

அப்போது அவன் அலைபேசி அழைக்க எடுத்து பேசினான். “ஹலோ சித்தி, எப்படி இருக்கீங்க, சொல்லுங்க சந்திரா அத்தைகிட்ட பேசியாச்சா” என்றான். “இருப்பா ஆதி உங்க சித்தப்பாவே அதை பத்தி உன்கிட்ட பேசுவார், அதுக்கு முன்ன எனக்கு பதில் சொல்லு மருமக எப்படி இருக்கா, உடம்பு சுகமில்லைன்னு அக்கா சொல்லிச்சே, நல்லா இருக்காளா, நல்லா பார்த்துக்கோப்பா ரொம்ப நல்ல பொண்ணுப்பா அவ” என்றார்.

 

“அவ நல்லா இருக்கா சித்தி இப்போ எல்லாம் சரியா போச்சு. நான் அப்புறம் அவகிட்ட போனை தர்றேன் நீங்க உங்க மருமககிட்ட பேசிக்கோங்க, சரியா. சித்தப்பாகிட்ட போனை கொடுங்க சித்தி” என்றான். அவர் உலகநாதனிடம் போனை கொடுக்க “என்னப்பா ஆதி நல்லா இருக்கியா, ஆதிரா எப்படி இருக்கா” என்று சம்பிரதாயமாக விசாரித்துவிட்டு “ஆதி நான் சந்திராகிட்ட பேசிட்டேன், சந்திராக்கு இதுல எந்த வருத்தமும் இல்லை. ஆனா” என்று நிறுத்தினார்.

 

“ஆனா என்னாச்சு சித்தப்பா” என்றான் அவன். “அவளுக்கு அண்ணன் பொண்ணு தான் வேணுமாம் அது எந்த பொண்ணா இருந்தா என்னன்னு அவ இப்போ கீர்த்தியை பொண்ணு கேக்குறா. எனக்கு என்ன சொல்லறதுன்னே தெரியலை. அதான்பா உனக்கு போன் பண்ணேன், இந்த குடும்பத்துக்கு நீ தானே மூத்த வாரிசு, உன்கிட்ட கேட்டுட்டு செய்யலாம்ன்னு இருக்கேன். என்னப்பா சொல்ற” என்றார் அவர். அவரின் பாசத்தில் நெகிழ்ந்தவன்,

 

“சித்தப்பா இதுல என்ன இருக்கு அவங்களுக்கு பொண்ணு கொடுக்கறது பத்தி ஒண்ணுமில்லை, ஆனா கீர்த்தி படிச்சுட்டு இருக்காளே. இப்போ எப்படி அதான் யோசிக்கறேன் சித்தப்பா” என்றான் அவன். “அப்புறம் ஆதி, சரவணன் வீட்டில இருந்து வந்து முறையா நம்ம அம்முவை பெண் பார்த்துட்டு பூ வைச்சுட்டு போனாங்க. நாங்க ஒரு ரெண்டு நாள்ல குடும்பத்தோட அங்க வருவோம்.

 

“எல்லார்கிட்டயும் பேசிட்டு கல்யாண தேதி முடிவு பண்ணிட்டு ஜவுளி எடுத்திட்டு போகலாம்ன்னு தான் வர்றோம். அப்புறம் பரிசம் போடுறது கல்யாணத்துக்கு முதநாள் பேசிக்கலாம் சொன்னாங்க. அவங்க திடுதிப்புன்னு வந்ததுனால உங்ககிட்ட முன்னாடி சொல்ல முடியலைப்பா, தப்பா எடுத்துக்காதீங்க” என்றார் அவர்.

 

“என்ன சித்தப்பா நீங்க, ரொம்ப சந்தோசமான விஷயம், சரி நீங்க எல்லாரும் கிளம்புனதும் எனக்கு போன் பண்ணுங்க, காலையில நானே வந்து ஸ்டேஷன்ல இருந்து உங்களை கூட்டிட்டு வர்றேன்” என்று பேசிவிட்டு போனை சித்தியிடம் கொடுக்கச்சொல்லி அவன் போனை ஆதிராவிடம் கொடுத்தான்.

 

அவள் பேசிவிட்டு போனை அவனிடம் கொடுக்க “என்னங்க அவங்க எல்லாரும் ஊருக்கு வர்றேன்னு சொல்லி இருக்காங்க ரொம்ப சந்தோசம். ஒருவழியா சரவணன் அண்ணனுக்கும் அம்முவுக்கும் கல்யாணம் நிச்சயம் ஆச்சு. ஏங்க நம்ம தம்பி கல்யாணத்தையும் நிச்சயம் பண்ணிட்டா என்னங்க, எவ்வளோ நாள் தான் அவங்களை காக்க வைக்கிறது” என்றாள் அவள். “என்னாச்சுங்க நான் பேசிட்டு இருக்கேன் நீங்க யோசனையா இருக்கீங்க” என்றாள்.

 

“இல்லை சந்திரா அத்தை நம்மை கீர்த்தியை பொண்ணு கேக்குறாங்களாம், அதான் யோசிச்சேன், அவ படிச்சுட்டு இருக்காளே என்ன செய்யலாம் யோசிச்சுட்டு இருக்கேன். சித்தப்பா என்னை யோசிச்சு சொல்ல சொல்றார். என்ன பண்ணலாம்” என்றான் அவன் அவளிடம். “ஏங்க கார்த்தி அண்ணாவை உங்களுக்கு பிடிக்கலையா, அவங்க ரொம்ப நல்ல மாதிரி கீர்த்தி அவங்களுக்கு பொருத்தமா இருப்பா” என்றாள் அவள்.

 

“எனக்கு கார்த்திக் பத்தி எந்த தப்பு எண்ணமும் இல்லை, கீர்த்தி படிக்கறாலேன்னு தான், மத்தபடி நான் வேற எதுவும் யோசிக்கலை” என்றான் அவன். “ஏங்க எனக்கு ஒரு யோசனை நாம நேத்ராவை போய் பொண்ணு கேட்போம், எனகென்னமோ அவங்க இப்போ மறுக்க மாட்டாங்கன்னு தோணுது. அப்படியே கீர்த்தி கல்யாணத்துக்கும் சம்மதம் சொல்லிடலாம். அவ கல்யாணத்துக்கு அப்புறம் இங்க வந்து படிக்கட்டுமே, எப்படியும் அம்மு கல்யாணம் முடிஞ்சு தான் இந்த கல்யாணம் பண்ணனும், அதுக்கு எப்படியும் ஒரு மூணு மாசம் ஆகும். நாம இப்போ பேச ஆரம்பிச்சா சரியா இருக்குங்க, மாமா, அத்தை இங்க வரும் போதே நாம போய் பேசிட்டு வந்துடாலாமே” என்றாள் அவள்.

 

“எப்படிடி இப்படி எல்லாம் யோசிக்கற, நீ சொல்றதும் சரியா தான் இருக்கு. ஆதவன் கல்யாணம் பத்தி  ரொம்ப நாளா பேசிட்டு இருக்கோம். உன்னால தான் அது நடக்கணும்னு இருக்கு. எப்படியோ அவங்களை ஒண்ணு சேர்த்துட்ட” என்று சொல்லிவிட்டு அவன் ஒரு மார்க்கமாக அவளை பார்க்க அவளுக்கு உள்ளுர குளிர் பிறந்தது.

 

இவனுக்கு இதே வேலையா போச்சு எப்போ எந்த பார்வை பார்க்குறானே தெரிய மாட்டேங்குது. இந்த பார்வைக்கு என்ன அர்த்தம் என்று அவள் விழிகளை விரிக்க அவனுக்கு அப்போது தான் அது நினைவுக்கு வந்தது. “ஆரா மறந்துட்டேன், ஊர்ல இருந்து வரும் போது உங்க எல்லாருக்கும் நான் துணி எடுத்துட்டு வந்தேன். உனக்கு உடம்பு சரி இல்லாம போனதுல அதை மறந்துட்டேன்” என்று சொல்லிவிட்டு உள்ளே விரைந்தவன் பெட்டியை தேட ஒரு பெட்டியை அவள் ஏற்கனவே திறந்து அதில் உள்ள துணிகளை எடுத்து அவள் சலவை செய்திருந்தாள்.

 

“என்னங்க அந்த பெட்டில உள்ள துணி எல்லாம் எடுத்து துவைச்சு வைச்சாச்சு, இந்த பெட்டி நம்பர் லாக் போல அதான் நான் திறக்கலை” என்றாள் அவள். “அந்த பெட்டில ஒரு சின்ன பாக்ஸ் இருந்துச்சே” என்றான் அவன். அவள் பீரோவை திறந்து “இந்தாங்க, நான் எடுத்து உள்ள வைச்சேன்” என்று எடுத்து அவனிடம் கொடுத்தாள். அதை வாங்கி பத்திரப்படுத்தியவன் அந்த இன்னொரு பெட்டியை திறந்து எல்லாருக்கும் அவன் வாங்கியதை எடுத்து காண்பித்தான். அவளோ இது இவங்களுக்கு நல்லாயிருக்கும் இது அவங்களுக்கு நல்லாயிருக்கும் என்று சொல்லிக் கொண்டே வந்தாள். கடைசியாக அவன் அவளுக்கு எடுத்த புடவையை விரித்து காண்பிக்க “இதுவும் நல்லா இருக்குங்க” என்றாள்.

 

மஞ்சளில் வெளிர் ரோஜா வண்ண பார்டரில் அழகாக ஜரிகை வேலைப்பாடுடன் அமைந்த அந்த புடவை கண்ணை கவர்ந்தது. இதுவரை அவன் எடுத்த புடவைகளை எது எது யாருக்கு என்று அவன் சொல்லவே இல்லை. அவள் கைகள் தன்னிச்சையாக புடவையை தடவி பார்க்க அவள் காதருகில் குனிந்து “பிடிச்சுருக்கா” என்றான் ஆழ்ந்த குரலில்.

 

“இம் ரொம்ப அழகா இருக்குங்க” என்றாள். “உனக்காக நானே எடுத்த புடவை இது நல்லாயிருக்கா” என்றான். அவள் கண்கள் மலர்ந்து விழிகள் நீரில் நிறைய அவள் அவனை பார்த்தாள். “ஹேய் என்னாச்சு எதுக்கு கண்ணுல தண்ணி வருது” என்றான் அவன்.

 

“இல்லைங்க நீங்க முதல் முதலா எனக்கு வாங்கிட்டு வந்து இருக்கீங்களா, அதான் இது சந்தோசத்துல வந்த கண்ணீர்” என்று அவள் கூற, அவன் இரு கை கொண்டு அவள் முகத்தை கைகளில் ஏந்தி கட்டை விரல் கொண்டு அவள் விழி நீரை துடைத்தான். “தயவு செய்து இனிமே அழாதேடி எனக்கு என்னமோ செய்யுது” என்று கூறி அவள் விழிகளுக்குள் அவன் ஊடுருவினான். அவள் நெற்றியில் மென்மையாக முத்தமிட்டு அவளை தன் மேல் சாய்த்துக் கொண்டான். கவின் ஓடி வந்து “அப்பா இங்க பாங்கப்பா அடிக்கிறா” என்றான்.

 

அவள் மெல்ல விலகிக்கொள்ள அவன் எழுந்து சென்று குழந்தைகளுடன் விளையாடச் சென்றான். அவள் புடவையை மீண்டும் ஒரு தரம் தடவியவள் எடுத்து பீரோவில் வைத்தாள். அவள் சென்றதும் அவன் அந்த சிறு பெட்டியை எடுத்து திறந்து பார்த்துவிட்டு ஒரு பெரு மூச்சுடன் உள்ளே வைத்தான்.

 

‘இதை எப்படி அவளிடம் கொடுப்பது’ என்று யோசித்துவிட்டு அதை மூடி உள்ளே அவன் துணிகளுக்கு இடையில் வைத்தான். எல்லோருக்கும் வாங்கியவற்றை தனிதனியாக கவரில் போட்டு எடுத்து வைத்தனர். குழந்தைகள் அவரவர் பொம்மைகளை எடுத்து வைத்துக் கொண்டு விளையாடச் சென்று விட்டனர்.

 

எந்தவித சலனமும் இல்லாமல் இரண்டு நாட்கள் ஓடிவிட மறுநாள் காலை ஊரில் இருந்து எல்லோரும் வந்திறங்கினர். ஆதவனும் ஆதியும் சென்று அவர்களை அழைத்து வந்து அவர்கள் வீட்டில் விட்டுவிட்டு ஆதி கிளம்பி வீடு வந்தான்.

 

எதிர்பட்டவனிடம் ஆதிரா “என்னங்க அவங்களை இங்கே கூட்டிட்டு வரலையா” என்றாள் வருத்தத்துடன். “நீ வேணா அவங்களை அங்க போய் பாரு, ஒரு நாள் நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வந்து விருந்து வைக்கலாம் சரியா” என்றான் அவன். “என்னங்க நீங்க விருந்துன்னு சொன்னதும் தான் ஞாபகம் வருது, உங்க நண்பர்களை எல்லாம் நாம சாப்பிட கூப்பிட்டு இருந்தோமே, நீங்க ஊருக்கு போனதால தள்ளி போயிடுச்சு இந்த வாரமாச்சும் அவங்களை கூப்பிடுங்க. எனக்கும் அவங்களை பார்க்கணும் போல இருக்கு” என்றாள்.

 

“சரி ஆரா நான் ராஜீவ்கிட்ட சொல்லி வைக்கிறேன். இந்த வாரம் வேண்டாம் அடுத்த வாரம் வைச்சுக்கலாம். இந்த வாரம் சித்தி, சித்தப்பா எல்லாரும் கூப்பிடுவோம், அத்தை, மாமா, சூர்யாவையும் வரச் சொல்லிடலாம். சரி தானே” என்றான் அவன். “பாருடா என் புருஷனுக்கு மாமனார், மாமியார், மச்சினர் ஞாபகம் எல்லாம் இருக்கே” என்றாள் அவள் குறும்புடன்.

 

“உன் புருஷனுக்கு அந்த நினைப்பிருக்கு, ஆனா என் அருமை பொண்டாட்டிக்கு தான் அவங்க அப்பா, அம்மா, தம்பி எல்லாரும் மறந்துட்டாங்க. பாவம் எங்க மாமனார் எனக்கு போன் பண்ணி ரொம்பவும் வருத்தப்பட்டார். நீ அவங்ககிட்ட போன்ல பேசறது இல்லையா” என்றான் அவன்.

 

“அப்படி எதுவும் இல்லைங்க, நான் தினமும் எங்க அம்மாகிட்ட பேசிட்டு தான் இருக்கேன்” என்றாள் அவள். “இப்போ தான் ஒரு பத்து நாளா சரியா பேசமுடியலை, அவங்க அதை தான் சொல்லி இருப்பாங்க” என்றாள் அவள்.

 

“சரி நான் குளிச்சுட்டு ஆபீஸ் கிளம்பறேன், நீ பசங்களை தயார் பண்ணிடு. நான் போகும் போது உங்களை நம்ம வீட்டுல போறேன்” என்று சொல்லிவிட்டு அவன் குளிக்கச் சென்று விட்டான். அவன் குழந்தைகளை தயார் செய்துவிட்டு அவனுக்கு பிடித்த டிபனை எடுத்து வைத்தாள்.

 

சாப்பிட்டு முடிக்கும் தருவாயில் அவள் கொடுத்த வெல்லப் பாயசத்தை வழக்கம் போல் அவன் குடிக்காமல் விட்டான். பாயசத்தை ஒரு தூக்கில் எடுத்துக் கொண்டு அவளும் கிளம்பிவர அவன் அவர்களை கொண்டு சென்று அவர்கள் வீட்டில் விட்டுவிட்டு அவன் தந்தையை அழைத்துக் கொண்டு அலுவலகம் சென்று விட்டான்.

 

அருணாசலம் நேரமாக வீடு வந்து விடுவதாக சொல்லிவிட்டு ஆதியுடன் அலுவலகம் சென்றுவிட்டார். “என்ன கல்யாண பொண்ணுக்கு களை வந்துருச்சு போல, வாங்க மாமா, வாங்க அத்தை நல்லா இருக்கீங்களா. கீர்த்தி எங்க காணோம்” என்றாள் அவள். “வாம்மா ஆதிரா, நாங்க நல்ல இருக்கோம், உனக்கு உடம்பு சரியில்லைன்னு சொன்னாங்களே நீ எப்படிம்மா இருக்க, அம்மாகூட உன்னை பார்க்கணும்ன்னு சொல்லிட்டு இருந்தாங்க, ஒரு எட்டு வந்துட்டு போங்களேன்” என்றார் பார்வதி.

 

“கண்டிப்பா வர்றோம் அத்தை, அப்புறம் அத்தை உங்க மகன் உங்ககிட்ட எதுவும் சொன்னாங்களா” என்றாள் அவள். “இல்லைம்மா நீ வந்து ஒரு முக்கியமான விஷயம் பேசுவேன்னு சொன்னான் சொல்லும்மா” என்றார் உலகநாதன். “பெரியத்தை நீங்களும் வாங்க உங்ககிட்டயும் பேசணும்” என்று அவள் லட்சுமியையும் அழைக்க அவரும் அருகில் வந்து அமர்ந்தார். ஆதவன் அப்போது தான் வெளியில் சென்று விட்டு வீட்டிற்கு வந்தான். அவனும் உலகநாதனும் சோபாவில் அமர்ந்திருக்க, பெண்கள் தரையில் அமர்ந்திருந்தனர்.

 

“அத்தை நாம தம்பிக்கு பொண்ணு பார்க்க சந்திரா சித்தி வீட்டுக்கு போகணும்” என்று அவள் நிறுத்த ஆதவன் நிமிர்ந்து உட்கார்ந்தான். உலகநாதனின் பார்வை சட்டென்று அவனை அளவேடுத்தது. அதை மனதில் குறித்துக் கொண்டார். “என்னம்மா உனக்கு விஷயம் தெரியாதா, அக்கா எதுவும் சொல்லலையா” என்றார் பார்வதி. “அத்தை எல்லாம் சொன்னாங்க, ஆனா அவங்க இப்பவும் மறுப்பாங்கன்னு என்ன நிச்சயம்” என்றாள் அவள். “நீ சுத்தி வளைக்காம நேரடியா சொல்லும்மா, எனக்கு விளங்கலை” என்றார் பார்வதி.

 

“பார்வதி மருக சொல்றது என்னன்னா ஆதவனுக்கும் நேத்ராக்கும் பிடிச்சு இருக்கும் போது இனியும் அவங்க மறுக்க மாட்டாங்கன்னு சொல்றா. சரி தானேம்மா” என்றார் உலகநாதன். “சரி தான் மாமா ஆனா நீங்க எப்படி கண்டு பிடிச்சீங்க” என்றாள் ஆதிரா ஆச்சரியமாக, “நீ இந்த பேச்சை எடுத்ததும் சின்னவன் முகத்தில் ஒரு பிரகாசம் வந்துச்சு, அதை வைச்சு தான் ஒரு சின்ன கணக்கு போட்டேன். இதுவா தான் இருக்கும்ன்னு நினைச்சு தான் கேட்டேன். அதுவே தான் போல இருக்கே” என்றார் அவர்.

 

லட்சுமியும் “அன்னைக்கு இதுக்கு தான் நீ என்கிட்ட துருவி துருவி விசாரிச்சியா உன் மச்சினனை பற்றி, எப்படியோ அவன் கல்யாணம் நல்ல படியாக நடந்தால் அதுவே எனக்கு போதும்” என்றார் அவர். “நீங்க கவலைபடாதீங்க அத்தை எல்லாம் நல்லபடியா நடக்கும். நாளைக்கே நாள் நல்லா இருக்கு நாம அவங்க வீட்டுக்கு பெண் கேட்டு போவோம். நீங்க அவங்ககிட்ட நாளைக்கு பெண் பார்க்க வர்றதா சொல்ல வேண்டாம். பொதுவா கல்யாண விஷயம் பேச வர்றோம்ன்னு மட்டும் சொல்லுங்க மாமா” என்றாள் அவரை பார்த்து.

 

“அப்புறம் மாமா கீர்த்தி கல்யாண விஷயமா நீங்க என்ன முடிவு பண்ணி இருக்கீங்க” என்றாள் அவள். “இன்னும் எதுவும் முடிவெடுக்கலைம்மா உனக்கு என்ன தோணுது” என்று அவளை ஆராய்ந்தார் அவர். “கார்த்திக் அண்ணா ரொம்ப நல்ல மாதிரி அவங்களுக்கு கீர்த்தி நல்ல பொருத்தமா இருப்பா, நீங்க அவளோட படிப்பை பார்க்கிறதா இருந்தா வேண்டாம். இல்லைன்னா இன்னொரு வழி இருக்கு, அவள் கல்யாணம் பண்ணிக்கிட்டு இங்க வந்து படிக்கட்டுமே. மாமா நான் சொல்லறதுல தப்பு இருந்தா மன்னிச்சுடுங்க. என் மனசுக்கு பட்டதை தான் நான் சொன்னேன்” என்றாள் அவள். “சரிம்மா பார்க்கலாம்” என்று சொன்னவர் அதற்கு மேல் எதுவும் பேசவில்லை.

 

மறுநாள் காலையிலேயே அவர்கள் கிளம்ப வேண்டும் என்பதால் ஆதிரா சீக்கிரமே எழுந்து குளித்து தயாரானாள். “என்னங்க எழுந்திருங்க தம்பிக்கு பொண்ணு பார்க்க போக வேணாமா” என்று அவனை எழுப்பினாள். “என்னடி இது காலையிலேயே எழுப்பற” என்று அலுத்துக் கொண்டே எழுந்து அவன் கிளம்பினான். குழந்தைகளை தயார் செய்துவிட்டு அவனிடம் பார்த்துக் கொள்ள சொன்னாள். “நீ எங்க போற குழந்தைகளை என்கிட்ட விட்டுட்டு” என்றான் அவன்.

 

“நான் புடவை மாத்த வேண்டாமா. ஒரு பத்து நிமிஷம் இருங்க வந்துடுறேன்” என்று விட்டு உள்ளே சென்றவள் புடவை கட்டி வெளியில் வந்தாள். கண்ணாடியின் முன் நின்று அவள் மிதமான ஒப்பனை செய்து விட்டு நெருக்கி கோர்த்த மல்லிகை சரத்தை எடுத்து தலையில் வைத்தாள்.

 

“கவின், கவினி உங்க அம்மாவை கிளம்ப சொன்னா எவ்வளவு நேரம் ஆக்குறா பாருங்க. நான் போய் கூட்டிட்டு வர்றேன்நீங்க இங்க சமத்தா டிவி பாருங்க” என்று சொல்லிவிட்டு உள்ளே வந்தவன் மயங்கி நின்றுவிட்டான். அவன் அவளுக்காக எடுத்திருந்த அந்த மஞ்சள் வண்ண சேலையின் ரவிக்கையை அழகாக தைத்து அதை அவள் பெண் பார்க்கும் விசேஷத்திற்கு உடுத்தியிருந்தாள். அந்த சேலையின் ஒளி பட்டு அவள் முகமும் சொர்ணமாக ஜொலித்தது…..

 

 

மஞ்சளிலே சீலையுடுத்தி

மஞ்சள் நிலவவள்

சொர்ணமென என்னெதிரில் நிற்க…

 

மல்லிகையிலே சரம் தொடுத்து

தோகைமயிலாய் விரிந்த குழலில்

பூச்சூட்டி அன்னமென என்னெதிரில் நிற்க…

 

கார்மேகம் தனையெடுத்து

கை விரலில் பூசி விழியிரண்டில் மை தீட்டி

அஞ்சனையாள் என்னெதிரில் நிற்க…

 

எதிரில் நின்றவன் காணாமல் போனது

வஞ்சியவள் அவள் சீலையிலா, குழலிலா,

கூர்விழியிலா… என்றறியேன்…

 

அத்தியாயம் –16

 

 

விழிகள் விரிய அவளைக் கண்டு மயங்கி நின்றான் அவன். அருகில் வந்து நின்று அவள் நீண்ட நேரமாக ஏதோ கேட்பது அப்போது தான் அவனுக்கு கேட்டது. “என்ன ஆரா, என்ன சொன்ன” என்றான். “என்னங்க ரொம்ப நேரமா கேட்டுட்டு இருக்கேன், என்ன யோசனையில இருக்கீங்க, இந்த புடவை எனக்கு நல்லாயிருக்கா” என்றாள் அவனை பார்த்து, அவன் கைகள் அவளை அணைக்க துடிக்க கட்டுப் படுத்த முடியாமல் அவன் அவள் அருகில் நெருங்கி அவள் இடையைத் தழுவினான்.

இடைவெளி இல்லாத நெருக்கத்தில் குனிந்து அவள் காதில் “உண்மையை சொல்லட்டுமா” என்றான். அவனுக்கு மட்டும் கேட்குமளவில் இம் என்றாள் அவள். “நீ ரொம்ப அழகா இருக்கேடி அப்படியே மயக்குது” என்று மயங்கியவன் அவள் கழுத்தில் முகம் புதைத்து அவள் கூந்தல் மலர் வாசம் பிடித்தான். கழுத்து வளைவில் அவன் கொடுத்த முத்தத்தின் ஈரம் அவளுக்குள் சிலிர்ப்பை ஓடச்செய்தது.

 

கன்னத்தோடு கன்னம் வைத்து தேய்த்தவன் அவள் இதழ் நோக்கி குனிந்தான். அழுத்தமானதொரு முத்தம் கொடுத்தவன் அவளை அணைத்தவாறே வெளியில் அழைத்துச் சென்றான். அவன் மனதில் இனியும் அவளை தள்ளி வைக்கக் கூடாது இன்றே அவளிடம் பேசிவிட வேண்டும் என்று முடிவெடுத்தான்.

 

காலம் வேறாக முடிவெடுத்தது. சந்தோசமாக வெளியில் வந்தவர்கள் ஆளுக்கு ஒருவராக குழந்தைகளை தூக்கிக் கொண்டு கதவை பூட்டி விட்டு வெளியில் வந்தனர். காரில் ஏறி அமர்ந்தவனது பார்வை அவ்வப்போது அவள் மீது படிந்து மீண்டது. மனம் சந்தோஷ வானில் சிறகடிக்க அவளுக்காக அவன் வாங்கி கொடுக்காமல் விட்ட பரிசை இன்று அவளிடம் கொடுத்துவிட வேண்டும் என்று நினைத்தான்.

 

அவர்கள் வீட்டிற்கு சென்று இறங்க இருவரையும் புதிதாக பார்ப்பது போல் பார்த்துக் கொண்டிருந்தனர் எல்லோரும். லட்சுமிக்கு அவர்கள் இருவரும் என்றும் இல்லாத ஒரு சந்தோசத்துடன் இருப்பது போல் தோன்ற அவர் மனம் மகிழ்ந்தார்.

 

“அண்ணி இன்னைக்கு நீங்க ரொம்ப பளிச்சுன்னு இருக்கீங்களே” என்று ஓடிவந்து அவளை கன்னத்தில் முத்தமிட்டாள். “சூப்பரா இருக்கீங்க அண்ணி எனக்கே உங்களுக்கு முத்தம் கொடுக்கணும் தோணுது. பாவம் எங்க அண்ணா பாடு” என்றாள் அவள். “ஹேய் பேசாம இருக்க மாட்டா, விவஸ்தை இல்லாம பேசிகிட்டு, போடி உள்ளே” என்று அவளை அதட்டினார் பார்வதி.

 

“அட போங்கம்மா நீங்க வேற, அண்ணி இந்த சேலை ரொம்ப நல்லா இருக்கு அண்ணி. சேலையில நீங்க அழகா, உங்களால இந்த சேலைக்கு அழகா சொல்ல தெரியலை அண்ணி” என்று அவள் கூற, ஆதிரா கூச்சத்தில் நெளிந்தாள்.

 

“அதை விடு கீர்த்தி இந்தா இந்த புடவை உனக்கு தான் உங்க அண்ணா டெல்லில இருந்து எடுத்துட்டு வந்தது” என்று கூறி எல்லோருக்கும் வாங்கி இருந்ததை எடுத்துக் கொடுத்தாள். உலகநாதன், அருணாசலம், பார்வதி, லட்சுமி, ஆதர்ஷா, ஆதவன், சின்ன காந்திமதி, கீர்த்தி என்று அவன் ஒருவரும் மறக்காமல் எடுத்திருந்ததில் எல்லோரும் மகிழ்ந்தனர்.

 

காந்திமதி, ஆதர்ஷா மற்றும் கீர்த்தியை வீட்டில் விட்டுவிட்டு மற்றவர்கள் கிளம்பினர். “அண்ணி ஒரு விஷயம்” என்று ஆதிராவை ரகசியமாக அழைத்தான் ஆதவன். “சொல்லுங்க தம்பி” என்றாள் அவள். “அவளை… அவளை… புடவை கட்டச் சொல்லுங்க அண்ணி, அவ பாட்டுக்கு ஜீன்ஸ் பேன்ட் போட்டுட்டு இருக்க போறா” என்றான் அவன்.

 

“கண்டிப்பா சொல்லறேன், நீங்க சொன்னீங்கன்னு சொல்லறேன். சரி தானே” என்று அவள் கேட்க, “என்ன விஷயம்” என்றவாறே ஆதித்தியன் அங்கு வந்தான். “ஒண்ணுமில்லை அண்ணா” என்று வேகமாக படியேறிவிட்டான் ஆதவன். “என்னாச்சு ஆரா” என்றான் அவளை பார்த்து, “ஒண்ணுமில்லைங்க உங்க தம்பி நேத்ராவை புடவை கட்டச் சொல்லுங்க அவ பாட்டுக்கு ஜீன்ஸ் போட்டு வந்து நிக்க போறான்னு சொல்லிட்டு போறாரு” என்றாள் அவள்.

 

 

“பரவாயில்லையே என் தம்பி கொஞ்சம் விவரமா தான் இருக்கான்” என்றான் அவன். “ரொம்ப சரி உங்க தம்பிக்கு இருக்க விவரம் உங்ககிட்ட இல்லை” என்று சொல்லிவிட்டு அவள் வேகமாக ஓடி மறைந்தாள். “ஹேய் என்னடி சொல்ற, சொல்லிட்டு போ, எனக்கு எதுல விவரம் பத்தாது” என்று கேட்டது காற்றிலே கலந்து போனது.

 

ஆதவன் பின்னர் வருவதாகக் கூறிவிட ஆதிராவும் அதுவே சரி என்று சொல்லிவிட்டு அவர்கள் கிளம்பி நேத்ராவின் வீட்டிற்கு சென்றனர். செல்லும் வழியில் ஆதிரா அவள் தோழிக்கு போன் செய்தாள். “ஹலோ நேத்ரா வீட்டில தானே இருக்கே” என்றாள் அவள். “ஆமாடி வீட்டில தான் இருக்கேன், என்னாச்சு என்ன விஷயம்” என்றாள் நேத்ரா. “சரி புடவை கட்டி தயாரா இரு, நாங்க உன்னை பெண் கேக்க உங்க வீட்டுக்கு வந்துட்டு இருக்கோம்” என்றாள் அவள். “என்னடி இப்படி குண்டை போடுற” என்றாள் நேத்ரா மறுமுனையில்.

 

“குண்டா, என்ன உளர்ற உனக்கு இப்போ கல்யாணம் வேண்டாமா. சரிடி நாங்க அப்படியே வீட்டுக்கு கிளம்பறோம். நாங்க தம்பிக்கு வேற நல்ல பொண்ணா பார்த்து கட்டி வைச்சுக்கறோம், என்னங்க நீங்க சொன்னீங்களே உங்க நண்பரோட தங்கை அந்த பொண்ணை இன்னைக்கு பார்க்க போகலாமா” என்று அவள் வேண்டுமென்றே ஆதியிடம் சொல்ல, நேத்ரா அழுதுவிடுபவள் போல் பேசினாள்.

 

“ஹேய் ஏன்டி இப்படி செய்யற, நான் நீங்க திடுதிப்புன்னு வர்றீங்கலேன்னு நினைச்சேன். வேற எதுவும் இல்லை, நீ பனைமரத்துகிட்ட எதுவும் சொல்லாதடி. அவர்…. அவரும் வர்றாரா” என்று இழுத்தாள் அவள். “உன் அவர் வருவார், ஆனால் கொஞ்சம் தாமதமாக வந்து சேர்ந்து கொள்வார். போதுமா. அப்புறம் நீ புடவை கட்ட வேண்டும் என்பது உன் அவரின் வேண்டுகோள் சொல்லிவிட்டேன். அப்புறம் உன்னிஷ்டம்” என்று சொல்லி போனை வைத்தாள்.

“என்ன உன் தோழியை நல்லா கலாட்டா பண்ணிட்ட, பாவம் பயந்து போயிருப்பா” என்றான் ஆதி. “இதெல்லாம் எங்களுக்குள்ள சகஜம் தாங்க” என்றாள் அவள். “சரி எனக்கு விவரம் பத்தாதுன்னு சொன்னியே எதுல எனக்கு விவரம் பத்தாது” என்றான் அவன். அவள் பேச்சை மாற்ற, “நீ பேச்சை மாத்துறன்னு தெரியுது, கண்டிப்பா நீ இதுக்கு என்கிட்ட பதில் சொல்லித்தான் ஆகணும். பார்ப்போம்” என்றான் அவன்.

 

நேத்ராவின் வீட்டு வாசலில் காரை நிறுத்த ஒவ்வொருத்தராக இறங்கினர். உள்ளிருந்து அவர்கள் வருவதை பார்த்த சந்திரா கணவரிடம் திரும்பினார். “என்னங்க எல்லாரும் வந்து இருக்கறதை பார்த்தா நம்ம நேத்ராவை ஆதவன் தம்பிக்கு பொண்ணு கேக்க வர்றாங்கன்னு நினைக்கிறேன்” என்றாள். “நாம தான் அப்போவே வேணாம்ன்னு சொல்லிட்டோமே” என்றார் நேத்ராவின் தந்தை. “இப்போ அப்படி சொல்ல முடியாதுங்க, நம்ம பொண்ணுக்கு அவர் மேல ஒரு விருப்பம் இருக்கு” என்று சொல்லிவிட்டு வாசலுக்கு விரைந்தார்.

 

“வாங்க, வாங்க அண்ணா வாங்க அண்ணி, வாப்பா ஆதி, என்னம்மா ஆதிரா உனக்கு சித்தி ஞாபகம் இப்போ தான் வருதா” என்று விட்டு அவர் கவினை தூக்க அவன் அவரிடம் தவ்வினான். எல்லோரையும் அழைத்து உள்ளே அமர வைத்தவர், அடுக்களைக்குள் சென்று பழச்சாறு தயாரித்துக் கொண்டு வந்தார். அனைவருக்கும் கொடுத்துவிட்டு அவர் அமர, உலகநாதன் வந்த விஷயத்தை கூறினார்.

 

“சந்திராம்மா நாங்க வந்த விஷயத்தை சொல்லிடுறோம், ஆதவனுக்கு நம்ம நேத்ராவை பெண் கேட்டு தான் வந்து இருக்கோம். ரெண்டு பேருக்கும் ஒருத்தரை ஒருத்தர் பிடிச்சு இருக்கு. நீங்க என்ன நினைக்கிறீங்க மாப்பிள்ளை” என்று தங்கச்சியில் ஆரம்பித்து நேத்ராவின் தந்தை கருப்பசாமியில் முடித்தார் அவர்.

 

விஷயத்தை கேள்வி பட்டதும் அவர் மனைவின் முகத்தை பார்க்க அவர் முகத்தில் அர்த்தம் பொதிந்த ஒரு பார்வை இருந்தது. “என்ன சித்தி ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துட்டு இருந்தா எப்படி, நீங்க என்ன நினைக்கிறீங்க. என்னப்பா உங்களுக்கோட விருப்பம் என்ன” என்றாள் அவள்.

 

“இனி நாங்க விருப்பப்பட என்னம்மா இருக்கு, எங்க பொண்ணோட விருப்பம் தான் எங்க விருப்பமும். இருந்தாலும் நாங்க அவளை ஒருதரம் கேட்டு விடுகிறோம். சந்திரா நீ போய் நேத்ராகிட்ட பேசு, அப்படியே கார்த்தியை வரச் சொல்லு. அவளுக்கு சம்மதம்னா தயார் பண்ணி கூட்டிட்டு வா” என்றார் அவர்.

 

முகம் மலர சந்திரா உள்ளே சென்றார். கார்த்தியின் அறைக்குச் சென்று அவனை அழைத்தார். “கார்த்திக், நம்ம நேத்ராவை பொண்ணு பார்க்க வந்து இருக்காங்கப்பா” என்றார் அவர். “என்னம்மா மொட்டையா சொன்னா என்ன அர்த்தம், யாரு வந்து இருக்கா” என்றான் கார்த்திக். “உங்க மாமா, அத்தை அப்புறம் பெரிய மாமா, அத்தை, ஆதி அப்புறம் நம்ம ஆதிராவும் வந்து இருக்காப்பா. ஆதவனுக்கு பொண்ணு கேட்டு தான் வந்து இருக்காங்க” என்றார் அவர். “ஏம்மா, நாம தான் முத கேட்டப்ப வேண்டாம் சொல்லிட்டோம்ன்னு சொன்னீங்களே, இப்போ எதுக்கு திரும்ப வந்து இருக்காங்க” என்றான் அவன்.

 

“நம்ம நேத்ராக்கு ஆதவனை பிடிச்சு இருக்குடா” என்றார் அவர். “அதெப்படி அவ்வளவு உறுதியா சொல்றீங்க, அவகிட்ட கேட்டீங்களா” என்றான் அவன். “அவகிட்ட இனிமே தான் கேக்கப் போறேன், ஆனா ஒரு தாய்க்கு தெரியாதா அவ பொண்ணோட மனசு, அவ நடவடிக்கை எல்லாம் பார்த்துட்டு தான் சொல்லறேன்” என்றார் அவர். “சரி நீ வா நாம அவகிட்ட நேராவே கேட்டுடலாம்” என்று அவனையும் அழைத்துக் கொண்டு அடுத்திருந்த நேத்ராவின் அறைக்குள் நுழைந்தார் அவர்.

 

அவர் உள்ளே செல்லவும் நேத்ரா அங்கு புடவை கட்டி நின்றிருந்தாள். மகனை அர்த்தத்துடன் பார்த்து புன்னகைத்துக் கொண்டார் சந்திரா. “நேத்ரா என்னம்மா புடவை கட்டி இருக்க” என்றார். “சும்மா தான்மா கட்டி இருக்கேன்” என்று மழுப்பினாள் அவள். “கீழே உங்க மாமா அத்தை எல்லாரும் வந்து இருக்காங்க, அவங்க ஒரு விஷயம் சொன்னாங்க அது உண்மையான்னு உன்கிட்ட கேட்டுட்டு போகலாம்ன்னு தான் வந்தேன்” என்றார்.

 

“என்னம்மா” என்றாள் தெரியாதவள் போல். “உனக்கு ஆதவனை பெண் கேட்டு வந்து இருக்காங்க, நீங்க ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் விரும்பறதா சொல்றாங்க” என்று நிறுத்தினார் அவர்.

 

“என்ன நேத்ரா அவங்க சொல்றது எல்லாம் உண்மையா” என்றான் கார்த்திக்கும். “ஆமா அண்ணா எனக்கு அவரை பிடிச்சு இருக்கு. அம்மா நீங்க முதல்ல வேண்டாம்ன்னு சொன்னீங்களே அதுக்கு முன்னாடி இருந்தே எனக்கு அவரை தான் ரொம்ப பிடிக்கும். நீங்க வேணாம்ன்னு சொன்னதும் மனசுக்கு கஷ்டமா இருந்துச்சு, அப்புறம் அவருக்கு என்னை பிடிச்சு இருக்கான்னு தெரியாம தவிச்சுட்டு இருந்தேன். இப்போ தேன் எனக்கு அவர் மனசு தெரிஞ்சுது அவருக்கும் என்னை பிடிச்சு இருக்குன்னு. உங்க சம்மதத்தோடயும் ஆசிர்வாதத்தோடயும் எங்க கல்யாணம் நடக்கணும்மா” என்று அருகில் வந்து அவள் அன்னையின் கைகளை பிடித்துக் கொண்டாள்.

 

“அண்ணா ப்ளீஸ்” என்றவளை “உன் விருப்பம் தான் நேத்ரா எங்களுக்கு முக்கியம்” என்றான் அவன். “கார்த்திக் அப்புறம் இன்னொரு விஷயம் அவங்க இங்க வந்து இருக்கும் போதே நான் பேசிடனும்ன்னு நான் நினைக்கிறேன். எங்க அண்ணா பொண்ணை கட்டிக்க உனக்கு சம்மதம் தானே, இல்லை உனக்கும் வேற பொண்ணு பிடிச்சு இருந்தா இப்பவே சொல்லிடுப்பா, நான் அந்த பேச்சை பேசறதா இல்லை” என்றார் அவர்.

 

“அம்மா எனக்கு எந்த பொண்ணு மேலயும் எந்த விருப்பமும் வரலை, நீங்க பார்த்து எந்த பொண்ணை கட்டி வைச்சாலும் நான் கட்டிக்கறேன் போதுமா” என்றான் அவன். “சரி நேத்ரா நீ வேற புடவை கட்டிக்கோ இந்த புடவை ரொம்ப சாதாரணமா இருக்கு. சீக்கிரம் தயார் ஆகி கீழே வா” என்று சொன்னவர் திரும்பி “வேணாம் நான் ஆதிராவை அனுப்பறேன், நீ அப்புறம் கீழே வா” என்றார் அவர்.

 

கீழே வந்தவர் “என்னங்க நான் நேத்ராவை தயாராகி வரச் சொல்லி இருக்கேன். இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவா, மாப்பிள்ளை வரலையா” என்று அவர் சம்மதத்தை சொல்லாமல் சொன்னார். “எந்த முடிவும் எடுக்காம அவனை வர வேண்டாம்ன்னு சொல்லி இருந்தோம். போன் பண்ணா கிளம்பி வந்துடுவான்” என்றார் உலகநாதன்.

 

“ஆதிரா உன் தோழி கொஞ்ச நேரத்துல தயார் ஆகிடுவா, நீ போய் கூட்டிட்டு வாம்மா” என்றார். அவருடன் வந்த கார்த்திக்கோ எல்லாரையும் வரவேற்று ஆதிராவிடம் ஏதும் பேசாமல் அவளை தவிர்த்தான். “ஆதிரா எழுந்து சென்று அவனிடம் பேச முயல அவன் அதை எதிர்பார்த்தவன் போல் உள்ளே சென்றான். ‘அண்ணா இன்னும் கோவமா தான் இருக்காங்க போல’ என்று நினைத்தவாறே மாடியேறினாள்.

 

ஆதியிடம் ஆதவனுக்கு போன் செய்து வருமாறு சொல்லச் சொன்னாள்.  அவள் மேலே ஏறிச் செல்ல அங்கு கார்த்திக் மாடி பால்கனியில் நின்றிருந்தான். அவன் அருகில் சென்றவள் “அண்ணா” என்றழைத்தாள். கார்த்திக் திரும்பி பார்த்துவிட்டு முகத்தை வேறு புறம் திருப்பிக் கொண்டான்.

 

“அண்ணா என் மேல உங்களுக்கு என்ன கோவம், எதுக்கு என்கிட்ட பேசமாட்டேன்ங்கறீங்க, ப்ளீஸ் அண்ணா சொல்லுங்க” என்றாள் கண்களில் துளிர்த்த நீருடன். “நான் யாரும்மா உனக்கு, நான் கோவப்பட்டு என்ன நடக்கப் போகுது” என்றான் அவன். “அண்ணா நீங்க எதுக்கு இப்படி பேசுறீங்க, தயவுசெய்து எதையும் நேரா சொல்லுங்க அண்ணா. நான் எதாச்சும் தப்பு பண்ணி இருந்தா மன்னிச்சுடுங்க ப்ளீஸ் அண்ணா” என்றாள் அவள்.

 

“ஏன்மா உனக்கு என்ன தலையெழுத்தா உனக்கு நல்ல மாப்பிள்ளையா நாங்க பார்க்க மாட்டோமா, நீ அப்படி இரண்டாவதா கல்யாணம் பண்ணிக்கணும்னு என்ன அவசியம். நான் வெளிநாட்டுக்கு போயிருந்தேன் அதுனால என்னால அப்போ எதுவுமே உன்கிட்ட பேசமுடியலை. உன் கல்யாணம் முடிவான சமயத்துல தான் நான் ஊர்ல இருந்து வந்தேன்.

 

“அதுக்குள்ள கல்யாணத்துக்கு நீங்க எல்லாரும் ஊருக்கு கிளம்பிட்டீங்க, எனக்கு அந்த கல்யாணத்துக்கு வர்றதுக்கு இஷ்டம் இல்லை அதான் என் நண்பன் கல்யாணத்துக்கு ஊருக்கு போறதா சொல்லிட்டு நான் போயிட்டேன். சொல்லும்மா, நீ உண்மையிலேயே என்ன அண்ணனா நினைக்கிற தானே, என் கூட பிறந்த தங்கச்சியை விட எனக்கு உன்மேல தான் பாசம் அதிகம். நீ எதுக்கும்மா இப்படி கல்யாணத்துக்கு சம்மதிச்ச” என்று அவளை கேள்வியாய் நோக்கினான் அவன்.

விதிவசம் கார்த்திக் பேசியதை கீழே ஆதவனுக்கு போன் செய்ய வெளியே வந்த ஆதித்தியன் கேட்க அவன் மனம் சுக்கு நூறாக உடைந்தது. ‘தேவையா எனக்கு இரண்டாவதாக திருமணம் வேண்டும் என்று நான் கேட்டேனா. இப்போது அவளை நான் விரும்ப ஆரம்பித்த இந்த வேளை, ச்சே நானாவது மறுத்திருக்க வேண்டுமோ அவளுக்கு இது முதல் திருமணம் என்ற போதே நான் யோசித்திருக்க வேண்டுமோ’ என்று பலவாறாக எண்ணி அவன் மனம் குழம்பினான்.

 

வந்த வேலை ஞாபகம் வர ஆதவனுக்கு போன் செய்து வரச்சொன்னான். ஆதிராவின் பதில் என்னவாக இருக்கும் என்று அவன் அங்கேயே நிற்க மாடியில் இருந்து எந்த சத்தமும் இல்லை, அவன் மேலே கண்ணை உயர்த்தி பார்க்க அங்கு ஒருவரும் இல்லை என்றதும் அவன் உள்ளே சென்றான்.

 

“என்னம்மா நான் உன்கிட்ட கேட்டா, நீ நேத்ராகிட்ட கூட்டிட்டு வர்றா. என்ன விஷயம்” என்றான் அவன். ஆதிரா அவனை நேத்ராவின் அறைக்கு அழைத்து வந்திருந்தாள். “நேத்ரா அண்ணா ஒரு விஷயம் கேக்குறாங்க, நீயே அவங்ககிட்ட சொல்லு நான் இந்த கல்யாணத்துக்கு ஏன் சம்மதம் சொன்னேன்னு நீயே சொல்லு நான் சொன்னா அண்ணா நம்ப மாட்டாங்க” என்றாள் அவள்.

 

“என்ன அண்ணா உனக்கு என் இவ ஏன் இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சான்னு தெரியணும் அவ்வளோதானே” என்றாள். அவள் சிரித்துவிட்டு “அண்ணா உங்க யாருக்கும் தெரியாத ஒரு விஷயம்” என்று நிறுத்தினாள் பீடிகையுடன். “என்ன விஷயம், என்ன நேத்ரா டென்ஷன் ஏத்தாம என்ன விஷயம்ன்னு சொல்லு” என்றான் அவன். “அண்ணா ஆதி அத்தானை அவ ரொம்பவும் விரும்பறா, அவரை விரும்பி தான் அவ கல்யாணம் பண்ணிகிட்டா” என்றாள் அவள். அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை.

 

“ஹேய் புரியற மாதிரி சொல்லு எனக்கு குழம்புது இவளுக்கு எப்படி அவரை தெரியும். எப்போல இருந்து இந்த காதல்” என்றான் அவன். அவள் நடந்த விஷயத்தை அவனிடம் சொல்ல அவன் தெளிவடைந்தான். அவள் கூறி முடிக்க கார்த்திக் ஆதிராவிடம் திரும்பி “சாரிம்மா உன்னோட இத்தனை வருஷ காத்திருப்பு புரியாம நான் கோவப்பட்டுட்டேன். ஆனா நீ இதை முன்னாடியே என்கிட்ட சொல்லி இருக்கலாமேம்மா” என்றான் சிறு வருத்தத்துடன்.

 

“அண்ணா நீங்க சொன்னது தான் உங்களை நான் என் சொந்த அண்ணனா தான் நினைக்கிறேன், உங்ககிட்ட எப்படி என்னோட காதலை நான் சொல்றது. ஏன் நேத்ரா அவளோட காதலை உங்ககிட்ட சொல்லலை, உங்ககிட்ட சொல்ல தயக்கம் அதான் நாங்க இதை பத்தி உங்ககிட்ட சொல்லலை. தப்பு தான் அண்ணா மன்னிச்சுடுங்க” என்றாள் அவள். “சரி நேரமாச்சு நான் நேத்ராவை கீழே அழைச்சுட்டு போறேன்” என்று அவள் நேத்ராவை அழைத்துச் செல்ல கார்த்திக்கும் பின்னோடு வந்து எல்லோருடனும் கலகலத்தான்.

 

ஆகாய நீலத்தில் பட்டுடுத்தி நேத்ரா வந்து எல்லோர் முன்னும் அமர்ந்தாள். அப்போது சரியாக ஆதவன் உள்ளே நுழைய அவன் கண்கள் அவளை அள்ளிப் பருகியது. பின் எல்லோரும் சேர்ந்து பேசி அவர்கள் கல்யாண தேதியை முடிவு செய்ய, சந்திரா கீர்த்தியை கார்த்திக்கு கொடுப்பதை பற்றி கேட்க, எல்லோரும் ஒத்துக் கொண்டனர்.

 

அவள் படிப்பு முடிய வேண்டும் என்று அவர்கள் கூற சந்திரா அவள் திருமணத்திற்கு பின் சென்னையில் வந்து படிக்கட்டும் என்று கூற அவர்களும் சம்மதித்தனர். ஆதவன் நேத்ரா திருமணத்தின் போது கீர்த்தி மற்றும் கார்த்திக்கு நிச்சயம் செய்துவிட்டு அடுத்து வரும் முகூர்த்தத்தில் திருமணம் முடிக்கலாம் என்று பேசிக் கொண்டனர்.

 

ஆதவன்-நேத்ரா திருமணம், சரவணன்-மதி திருமணம் அடுத்தடுத்த தேதியில் நடந்த முடிவு செய்யப்பட்டது. திருமணத்திற்கு மூன்று மாதங்களே இருந்தது. சம்பிரதாயங்கள் எல்லாம் பேசிவிட்டு அவர்கள் கிளம்பினர். வரும் போது இருந்த சந்தோசத்துடன் ஆதி இல்லை என்பதை அங்கிருந்து கிளம்பிய தருவாயில் தான் ஆதிரா உணர்ந்தாள். எல்லோரும் கிளம்பி வீட்டிற்கு வந்தனர்.

 

அப்போதும் ஆதித்தியன் எதுவும் பேசவில்லை, அவனையே பார்த்துக் கொண்டிருந்த ஆதிராவுக்கு ‘என்னாச்சு இவருக்கு ஒருவேளை உடம்புக்கு முடியவில்லையா’ என்று நினைத்தவள் எல்லோரிடம் பேசிவிட்டு நாளை வருவதாகக் கூறிவிட்டு ஆதியை அழைக்க வந்தாள். “என்னங்க வீட்டுக்கு போகலாம்” என்றாள் அவள்.

 

“இம் சரி போகலாம்” என்று கிளம்பியவன் யாரிடமும் விடை பெறாமல் வெளியே சென்று காரை எடுத்தான், அவர்கள் வீட்டிற்கு கிளம்பி வந்தனர். வீட்டிற்கு வந்தும் ஏதும் பேசாமல் இருந்தவன், குழந்தைகளிடம்கூட விளையாடாமல் யோசைனையுடனே இருந்தான்.

 

“என்னாச்சுங்க ஏன் ஏதோ மாதிரி இருக்கீங்க, எதாச்சும் பிரச்சனையா என்கிட்ட சொல்லுங்க” என்றாள் அவள். “நீ தான் எனக்கு பிரச்சனை தயவு செய்து என்னை தொந்திரவு செய்யாம என்னை இப்படி மாத்தி மாத்தி கேள்வி கேட்காம போறியா” என்று அவன் குரலை உயர்த்த, அன்று இருந்த சந்தோசமான மனநிலை மொத்தமாக வடிந்து போனது.

 

அவள் அவனிடம் ஏதும் பேசாமல் இரவு உணவை தயாரித்து எடுத்து வைக்க சாப்பிட்டு விட்டு அவன் உடனே படுத்துவிட்டான். இப்படியே மீண்டும் அவர்களுக்குள் கண்ணாமூச்சி ஆட்டம் ஆரம்பித்தது. அவள் இருக்கும் இடத்தில் அவன் இல்லாமல் இருப்பதும் அவன் இருந்தால் அவள் விலகுவதுமாக அவர்களுக்குள் ஒரு விலகல் தன்மை வந்திருந்தது. அந்த வாரத்தில் ஒரு நாள் அவர்கள் சென்று குழந்தைகளை பள்ளியில் சேர்த்தனர்.

அடுத்த வாரத்தில் இருந்து பள்ளி தொடங்குவதால் குழந்தைகளுக்கு தேவையானவற்றை இருவருமாக சென்று வாங்கினர். என்ன தான் இருவரும் சேர்ந்து போனபோதும் அவர்கள் இடையில் ஒரு பெரும் சுவர் இருந்தது போல் உணர்ந்தனர். கல்யாணத்திற்கு ஜவுளிகள் எடுக்கவென இடையில் ஒரு நாள் எல்லோரும் காஞ்சிபுரம் சென்று வந்தனர்.

 

திருமணம் ஊரில் நடத்துவது என்று முடிவானதால் என்னென்ன வாங்க வேண்டுமோ ஒவ்வொன்றாக வாங்கினர். நாட்கள் விரைந்தோடியது. ஆதவனும் ஆதிராவும் சேர்ந்து செய்த விளம்பரம் எல்லோருக்கும் பிடிக்க அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது, இதனால் மேலும் அவர்களுக்கு பல வெளி ஒப்பந்தங்கள் கிடைக்க ஆதிக்கு அவர்களின் முன்னேற்றம் சந்தோசத்தை கொடுத்தது.

 

அவன் நட்பு வட்டத்தை பயன் படுத்தி மேலும் சில ஒப்பந்தங்கள் அவர்களுக்கு கிடைக்குமாறு செய்தான். ஆதவன் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தான். நேத்ராவின் சொல்படி வாங்கி இருந்த பங்குகள் அவனுக்கு நல்ல லாபத்தை கொடுக்க, விளம்பரமும் நன்றாக வந்து அவனுக்கு நல்ல பெயரை கொடுத்திருந்தன.

 

கல்யாணத்திற்கு ஒரு மாதமே இருந்த நிலையில் ஒரு நாள் காலை ஆதித்தியன் அலுவலகம் இல்லாமல் அன்று விடுமுறையில் வீட்டில் இருந்தான். இப்போதெல்லாம் பெரும்பாலும் அவன் வீட்டில் இருக்கும் நேரத்தை குறைத்துக் கொள்ள ஏதோ பண்டிகையின் காரணமாக அன்று அலுவலகம் விடுமுறை விடப்பட்டிருந்ததால் அவன் வீட்டில் இருந்தான்.

 

ஆதிரா தயங்கியவாறே அவன் எதிரில் வந்து நின்றாள். குழந்தைகளிடம் விளையாடிக் கொண்டிருந்தவன் அவன் எதிரில் நிழலாட நிமிர்ந்தான். ‘என்ன’ என்பது போல் அவன் கேள்வியை அவளை நோக்க “உங்ககிட்ட ஒரு விஷயம் பேசணும்” என்றாள் அவள் தயங்கி, “சொல்லு” என்று சொல்லிவிட்டு பார்வையை வேறு புறம் திருப்பினான் அவன்.

 

“நாம எல்லாரும் ஒண்ணா ஒரே வீட்டில இருக்கலாமே” என்றாள் அவள். திரும்பி அவளை பார்த்தவன் “அதுக்கு இப்போ என்ன அவசியம் வந்துச்சு” என்றான் அவன். “நான் சொல்றதை நீங்க தப்பா எடுத்துக்க கூடாது, நாளைக்கு தம்பிக்கு கல்யாணம் ஆகப் போகுது, அடுத்து நாம ஆதர்ஷாவுக்கு கல்யாணம் பண்ணுவோம். அப்போ அந்த குடும்பத்தோட மூத்த பிள்ளையா மூத்த மருமகளா நாம அங்க இருக்க வேண்டாமா” என்று நிறுத்தினாள் அவள்.

 

அவள் என்ன சொல்லப் போகிறாள் என்று அவள் புறம் திரும்பி அவன் கவனிக்கலானான். “கல்யாணம் காட்சின்னு வரும் போது ஒரு சொல் வராதா, உங்க தம்பி தங்கச்சிக்கு செய்ய வேண்டியது உங்க கடமை இல்லையா” என்றாள் அவள். அவன் பதிலேதும் பேசாமல் அமர்ந்திருந்தான். அவன் கைபேசி அந்த நேரத்தில் அழைக்க அவளிடம் ஒரு நிமிடம் என்று சொல்லிவிட்டு போனை காதுக்கு கொடுத்தான். அழைத்து அவன் அன்னை “சொல்லுங்கம்மா” என்றான் ஆதி. “ஆதி உன்கிட்ட ஒண்ணு கேட்பேன் செய்வியாப்பா” என்றார் அவர்.

 

“சொல்லுங்கம்மா என்ன விஷயம்” என்றான் அவன் “நீங்க எல்லாரும் இங்கே வந்துடுங்கப்பா அன்னைக்கு நீ என்கிட்ட பேசினதுல இருந்து எனக்கு அதே எண்ணமா இருக்குப்பா. அன்னைக்கு உன்னை கூப்பிட்டா நீ மன்னிப்பு கேக்குறதுக்காக நான் காத்து இருந்த மாதிரி இருக்கும்ன்னு தோணிச்சு. இவ்வளவு நாள் உங்களை பிரிஞ்சு இருந்ததே போதும்மா, ப்ளீஸ் எல்லாரும் இங்க வந்துடுங்களேன்” என்றவரின் குரல் தழுதழுக்க “அம்மா நீங்க இதை பத்தி ஆதிராகிட்ட எதுவும் பேசுனீங்களா” என்றான் அவன். “இல்லைப்பா, நானா தான் உனக்கு போன் பண்றேன். உங்க அப்பாகிட்ட கூட நான் இதை பத்தி எதுவும் பேசலைப்பா” என்றார் லட்சுமி.

 

“அம்மா நீங்க வருத்தப்படாதீங்க நாங்க கூடிய சீக்கிரமே அங்க வர்றோம். நீங்க அதுக்கு நல்ல நாள் பாருங்க” என்று அவரிடம் பேசிவிட்டு அவளிடம் வந்தான். “நாம சீக்கிரமே அங்க போய்டலாம்” என்றவனால் அவளிடம் கேட்காமல் இருக்க முடியவில்லை, “எப்படிடி உனக்கு இதெல்லாம் தோணுது, அம்மா என்கிட்ட பேசுன விஷயமும் இது தான் அவங்க பேசுறதுக்கு முன்னயே நீ இதை பத்தி என்கிட்ட பேசுற. எப்போமே நீ இந்த குடும்பத்தை பத்தி மட்டும் தான் யோசிப்பியா” என்றான் அவன்.

 

அவன் பேசியது அவளுக்கு வருத்தமாக இருந்தது அதே வருத்ததுடன் அவனிடம் “ஏங்க இது என் குடும்பம் இல்லையா, நான் இதை தவிர வேற எப்படி யோசிப்பேன். எனக்கு இந்த குடும்பம் தான் உலகம், என்னோட எண்ணம் முழுக்க இந்த குடும்பம் பத்தி தான் யோசிக்கும். தயவு செய்து இனிமே இப்படி கேட்டு என்னை கஷ்டப்படுத்தாதீங்க” என்று சொல்லிவிட்டு விருட்டேன்று எழுந்து சென்று விட்டாள்.

 

அடுத்து வந்த ஒரு நல்ல நாளில் ஆதி குடும்பத்துடன் அவர்கள் வீட்டிற்கு குடிபெயர்ந்தான். ஆரத்தியுடன் வந்தவரை பார்த்து “எதுக்கு அத்தை இதெல்லாம்” என்றாள் அவள். அதெல்லாம் முடியாது என்று மறுத்து எல்லோரையும் வாசலில் நிற்க வைத்து ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்தார் லட்சுமி.

 

அவர்கள் அறையை அவர் ஏற்கனவே தயார் செய்து வைத்திருக்க ஆதிரா எல்லாவற்றையும் அடுக்கி முடித்தாள். அவர்கள் இருந்த வீட்டை சுத்தம் செய்து புதிதாக பெயிண்ட் அடித்து வாடகைக்கு விட்டனர். நாட்கள் விரைந்தோடி அவர்கள் ஊருக்கு கிளம்பு நாளும் வந்தது. அன்று இரவு ரயிலில் அவர்கள் பொதிகையில் ஊருக்கு கிளம்பினர், ஒவ்வொருவருக்குள்ளும் ஒவ்வொரு விதமான சிந்தனைகளுடன் அவர்கள் ரயிலில் பயணம் செய்தனர். ஆதிராவை பற்றிய சிந்தனைகள் மேலோங்க ஆதி மிகுந்த குழப்பத்திற்கு ஆளானான்.

தான் அவளுக்கு பொருத்தமில்லாதவன் என்ற எண்ணம் அவனை அலைகழித்தது. கார்த்திக் ஆதிராவிடம் பேசி அன்றிலிருந்து அவனுக்குள் இந்த எண்ணம் வேருன்ற ஆரம்பித்தது. ஆதிரா தன்னை பிடித்து தான் இந்த கல்யாணத்திற்கு சம்மதித்தாளா என்று அவன் மனம் அவனை குடைந்தது.

 

கூடிய சீக்கிரமே இதற்கு ஒரு முடிவு காண வேண்டும் என்று நினைத்தான். ஆதிராவுக்கு ஆதியின் திடீர் மாற்றம் பெருத்த வேதனையை அளித்தது, அவனிடம் அவள் பேச்சு கொடுத்தால் அவன் அதற்கு பதில் சொல்லாமல் வேறு பேசி மனதை காயப்படுத்த அத்துடன் அவனிடம் எதுவும் கேட்பதை நிறுத்திவிட்டாள். அவர்களுக்குள் நடக்கும் இந்த பனிப்போர் மற்றவர்களுக்கு தெரியாமல் பார்த்துக் கொண்டாள். என்று அவன் மனம் அவளை புரிந்து கொள்ளும் என்று ஏங்கி தவிக்க ஆரம்பித்தாள்.

 

அவளை பிடிக்காமலா அவளுக்கு சேலை வாங்கி கொடுத்தான் என்ற எண்ணம் வர அன்றைய நாளின் பொழுது மனதுக்குள் வந்து அவள் கன்னம் சிவக்கச் செய்தது. அவளுக்கு எதிரில் இருந்த பெர்த்தில் படுத்திருந்த ஆதி அவளின் முகமாற்றத்தை கவனித்துக் கொண்டிருந்தான். அவள் முகம் சிவந்தது அவனுக்குள்ளும் இதற்கு முன் நடந்த நிகழ்வுகளை நினைவுபடுத்தியது.

 

மறுநாள் காலை அனைவரும் சென்று தென்காசியில் இறங்கி அங்கிருந்து ஒரு வண்டியை பிடித்துக் கொண்டு பாபநாசம் சென்று காந்திமதியின் வீட்டை அடைந்தனர். காந்திமதிக்கு எல்லோரையும் கண்டு மனம் கொள்ள மகிழ்ச்சியாக இருந்தது.

 

பேச்சியும் அங்கு தானிருந்தார் அவரை கண்ட ஆதிரா “என்ன அத்தை ஒரு மாசத்துல வர்றேன்னு சொல்லிட்டு இப்படி வராமா இருந்துகிட்டீங்களே, கவினி உங்களை ரொம்ப தேடினா அத்தை, நீங்க எப்போ திரும்பவும் நம்ம வீட்டுக்கு வருவீங்க” என்று உரிமையுடன் அவள் கோபித்துக் கொள்ள பேச்சி மனம் நெகிழ்ந்தார். “என்ன பேச்சி என்ன சொல்றா என் பேத்தி” என்றார் காந்திமதி.

 

“ஆச்சி நான் உங்க மேல கோவமா இருக்கேன், நீங்க எங்களோட வந்து இருக்கறேன்னு சொல்லிட்டு இப்போ பேச்சி அத்தையும் உங்ககூடவே வைச்சுக்கிட்டீங்க. நாங்க ஊருக்கு போகும் போது நீங்க ரெண்டு பேரும் எங்ககூடவே வர்றீங்க, அவ்வளோ தான் சொல்லிட்டேன் பார்த்துக்கோங்க” என்று சொல்லி அவர்களை மிரட்டிவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.

 

அவள் என்ன தான் சகஜமாக பேசி சிரித்தாலும் வீட்டின் பெரிய பெண்மணியின் கண்களில் இருந்து தப்பவில்லை அவர்கள் இருவரும். காந்திமதிக்கு அவர்கள் சந்தோசமாக இல்லை என்று பார்த்ததுமே கண்ணில் பட்டுவிட்டது. இதை பற்றி பிறகு பேசிக் கொள்ளலாம் என்று நினைத்தவர் அப்போதைக்கு அந்த பிரச்சனையை விட்டார். ஆதவன் தங்கை கல்யாணம் தான் முதலில் நடக்க வேண்டும் என்று சொல்லிவிட்டதால் முதலில் சரவணனும் மதிக்கும் பாபநாசம் கோவிலில் வைத்து திருமணமும் பின்னர் அருகில் உள்ள மண்டபத்தில் மற்ற சடங்குகளும் மாலை வரவேற்பும் என்று முடிவு செய்திருந்தனர்.

 

அதற்கு மறு தினம் ஆதவனுக்கும் நேத்ராவுக்கும் அதே கோவிலில் திருமணமும் சென்னையில் வரவேற்பும் என்று முடிவு செய்திருந்தனர். ஆதவன்–நேத்ரா திருமணம் அன்றே கார்த்திக்கும் கீர்த்திக்கும் திருமணம் உறுதி செய்து விட எண்ணியிருந்தனர்.

 

மறுநாள் காலை திருமணம் என்பதால் ஆதிரா அம்மு, கீர்த்தி மற்றும் நேத்ராவை பார்லருக்கு அழைத்து சென்று அவர்களுக்கு அழகு படுத்தி விட்டு மருதாணியை அவளே இட்டு விடுவதாக சொல்லி மற்ற விசயங்கள் மட்டும் முடித்துவிட்டு அங்கிருந்து கிளம்பினர். பின்னர் வீட்டிற்கு வந்ததும் ஆதிரா எல்லோருக்கும் மருதாணி இட்டுவிட்டாள்.

 

விடிந்ததும் எல்லோரும் குளித்துவிட்டு கோவிலுக்கு கிளம்பினார். பாபநாசநாதர் உலகம்மை சன்னதில் எல்லோரும் வாழ்த்த சரவணனின் மதியின் கழுத்தில் பொன் தாலியிட்டான். சரவணனுக்கு கூடப் பிறந்தவர்கள் யாரும் இல்லாதலால் நாத்தனார் முடிச்சை ஆதிரா போட சரவணனுக்கு அவள் மேல் பேரும் மதிப்பு வந்தது. திருமணத்திற்கு ஆதிராவின் குடும்பத்தினரும் வந்திருந்தனர்.

 

ஆதியின் வயலுக்கு பக்கத்தில் உள்ள நிலமும் விலைக்கு வந்திருப்பதாக சரவணன் கூற அதை ஏற்கனவே வாங்கி போட்டிருந்தான் ஆதி. அதையே இருவருக்கும் திருமண பரிசாக அவன் கொடுக்க சரவணன் “எதுக்கு ஆதி இதெல்லாம்” என்றாள். “சீர் சரவணா உங்க ரெண்டு பேருக்கும் நாங்க செய்ய வேண்டிய சீர், என்ன ஆரா சொல்லு இவங்ககிட்ட” என்று அவன் நீண்ட நாளுக்கு பின் அவளை ஆரா என்று அழைக்க “என்ன அண்ணா வாங்கிக்க மாட்டீங்களா” என்றாள் ஆதிரா.

 

மதிக்கும் கண்களில் நீர் வழிய ஆதிரா அவளுக்கு ஒரு தங்கசெயினை அவள் கழுத்தில் போட்டுவிட்டாள். சரவணனுக்கு ஆதி ஒரு தங்க கைசெயினை போட்டுவிட்டான். சரவணனும் மதியும் நிறைந்த சந்தோசத்தில் இருந்தனர். திருமணத்திற்காக எடுத்துக் கொடுத்திருந்த புடவையை ஆதிரா கட்டிவிட்டிருக்க ஆதர்ஷா அதை கட்டிக் கொண்டு வளைய வந்தாள். முதல் முதலாக புடவையில் ஆதர்ஷாவை கண்டவனுக்கு இதயம் சுரம் தப்பியது.

 

தன்னை மறந்து அவள் பக்கம் பார்வை செல்ல கஷ்டப்பட்டு அவன் பார்வையை திருப்பினான். என்ன முயன்றும் அவன் பார்வை அவளை பின் தொடர்வதை அவனால் தடுக்க முடியவில்லை. இதை கண்டுவிட்ட கீர்த்தி அவனை வந்து கலாட்டா செய்தாள். “என்ன அத்தான் என்னை இப்படி ஏமாத்திட்டீங்க நான் உங்ககிட்ட என்ன சொன்னேன். என்னை எங்க பார்த்தாலும் பேசணும்ன்னு சொல்லி இருக்கேனா இல்லையா” என்று ஆதர்ஷா கண்ணில் படுமாறு அவனிடம் பேசினாள். ஆதர்ஷாவுக்கு இதை கண்டு கோபத்தில் கண்கள் சிவந்தது. ‘இவளுக்கு என்ன வந்தது அது தான் இவளுக்கு நிச்சயம் செய்யப் போகிறார்களே இன்னும் என்ன இவருடன் கடலையை போடுகிறாள்’ என்று ஆத்திரமாக வந்தது அவளுக்கு.

 

கீழே காந்திமதி லட்சுமியிடம் “என்ன லட்சுமி நீ சொன்ன மாதிரி உன் மகனையும் மருமகளையும் அந்த அறையை தயார் பண்ண சொல்லிட்டியா” என்றார் அவர். “சொல்லிட்டேன்ம்மா” என்றார் லட்சுமி. அன்று இரவுக்கு ஆதிராவையும் ஆதியயையும் முதலிரவு அறையை அலங்கரிக்கச் சொன்னார்  லட்சுமி. இருவரும் சேர்ந்து அறைக்குள் சென்று அந்த அறையை அலங்கரிக்க ஆரம்பித்தனர்………….

 

 

ஒரு நேரம் அனலாய்

என்னை காய்க்கிறாய்…

ஒரு நேரம் பனியாய்

என்னை குளிர்விக்கிறாய்…

 

மாறி மாறி நீ காட்டும்

முகத்தில் பேதை இவள்

மனம் பேதலிக்கிறது…

 

நீ கொடுத்த சேலை

சொல்லியது உனக்கு

என் மேல் நேசமுண்டென்று…

 

உன் கண்கள் என்னை

தீண்டியதை நானறிவேன்

பின் ஏன் என்னை

மறுதலிக்கிறாய்…

 

என் ஆதியும் அந்தமும்

நீயேயென நான் இருக்க

என்னை விட்டு

விலகிப் போகிறாய்…

 

கண்ணீருடன்

என்னை நீ புரிந்து

கொள்வாய் என

காத்திருக்கிறேன்…

 

 

 

 

Advertisement