Advertisement

பந்தம் – 8

“கோடி… நீ பண்றது கொஞ்சம் கூட சரியில்ல டா.. அந்த பொண்ணு ஏற்கனவே குழம்பி இருக்கா.. நீ ரொம்ப விளையாடுற.. வேற ஒரு பொண்ணா இருந்திருந்தா இந்நேரம் கல்யாணமே பண்ணிட்டு போயிருப்பா..” என்று அவனை திட்டியது அவன் அம்மா தான்.

அவருக்கு எல்லாம் தெரியும்.

உமா வந்து போன மறுநாளே அனைத்தையும் சொல்லிவிட்டான். இதை முன்னாடியே சொல்லியிருந்தால் உமாவையே பேசியிருப்போமே என்று சொல்ல,

அவனோ இல்லை காதல் அது இது என்று கதை பேசி, சுசியின் கதை வேறு சொல்லி அழைத்து சென்றிருந்தான். அங்கே போனவனோ, உமாவை பிடித்திருக்கிறது என்று எல்லார் முன்னும் சொல்லிவிட, இது அவன் வீட்டினருக்குமே அதிர்ச்சி தான்.

ஆனால் அடுத்து உமாவும் உள்ளே சென்றுவிட, அதன் பின் சரியாய் கிஷோர் குடும்பம் வந்துவிட, பேச்சு அப்படியே சுசி கிஷோர் விஷயத்திற்கு தாவ, இவன் சொன்னதை யாரும் பெரிதாய் நினைக்கவில்லை.

சுசியை தவிர்க்க இப்படி சொல்லியிருக்கிறான் என்றே எண்ணிக்கொண்டனர்.

கோடீஸ்வரனுக்கே சிறிது ஏமாற்றம் தான். என்னடா இது நாம் வெளிப்படையாய் சொல்லியும் அதை பற்றி யாரும் ஒன்றும் கேட்கவில்லை என்று.

ஆனால் அவர்கள் கிளம்பும் போது உமாவின் அப்பா அவனிடம் தனியே பேசினார்.

“தம்பி அப்போ என்னவோ சொன்னீங்க மகிய பார்த்து….” என்று கேட்டவரை,

‘ஹப்பா இப்போவாது கேட்டாங்களே…’ என்று நிம்மதியோடு பார்த்தான்.

“என்ன அங்கிள்…” என்று அவர் கேள்வி புரியாதவன் போல் பேச,

“இல்லை மகிய பார்த்து என்னவோ சொன்னீங்களே…” என்று அவர் மீண்டும் கேட்க,

“எஸ் அங்கிள்… எனக்கு உங்க பொண்ணை பிடிச்சிருக்கு…” என்று வெளிப்படையாக சொன்னவனை அவருக்கும் பிடித்தே இருந்தது.

இத்தனை நேரம் அவனை கவனித்துகொண்டு தானே இருந்தார். அவன் பேச்சு, நடவடிக்கை, அணுகுமுறை எல்லாம் பார்த்துகொண்டு தானே இருந்தார். சுசிக்கு தேர்வு செய்யும் பொழுதே எல்லாம் திருப்தியாக இருந்ததினால் தானே பேசினார்கள்.

இப்பொழுது அவனுக்கு உமாவை பிடித்திருக்கிறது என்று சொல்லவும் பெற்றவர் மனம் யோசிக்க தொடங்கியது.

ஆனால் கோடீஸ்வரன் ரொம்பவும் எல்லாம் யோசிக்கவிடவில்லை.

“உங்கட்ட கொஞ்சம் பேசணும் அங்கிள்…” என்று ஆரம்பித்தவன், அனைத்தையும் சொல்லிவிட்டான்.

அனைத்தையும் கேட்டவருக்கு, தன் மகள் இதை பற்றி ஒருவார்த்தை கூட சொல்லவில்லையே என்று தோன்றினாலும், இதில் அவளுக்கே உறுதியாய் ஒன்றும் தெரியாத பொழுது என்ன சொல்லிட முடியும் என்றும் நினைத்தார். ஆனாலும் ஒரு எண்ணம் அவளே இதை பெரிதாய் எடுக்கவில்லையோ என்று.

“மகி மனசுல என்ன இருக்குன்னு தெரியாம…” என்று அவர் சொல்லும் போதே,

“அதான் அங்கிள் நானும் இத்தனை நாள் சைலன்ட்டா இருந்தேன்…” என்றான் அவனும்.

சிறிது நேரம் நாடியை தடவியபடி யோசித்தவர்,

“சரி ஊருக்கு போனப்புறம், மகி அம்மாகிட்ட பேசிட்டு என்னனு சொல்லறேன்.. ஆனா மகிக்கு விருப்பம் இருந்தா மட்டும் தான் எதுவும்…” என்று அவர் சொல்லிச்  செல்ல,

‘உங்க பொண்ணுக்கு என்னை பிடிக்கும் அங்கிள்…’ என்று அவனே மனதிற்குள் சொல்லிக்கொண்டன்..

ஆனாலும் ஏனோ அவனுக்கு அவளை காண வேண்டும் பேச வேண்டும் போல் தோன்றவும் தான் அவளை காண சென்றான். அப்பொழுதும் இருவராலும் முழுதாய் பேசி முடிக்க முடியவில்லை.

அதற்குள் அவளும் இறங்கி ஹாஸ்டல் சென்றுவிட, அவனுமே திரும்பி வீட்டிற்கு வரவேண்டிய சூழல்.  

உமாவின் அப்பா சொன்னது போல, ஊருக்கு சென்றதும் மனைவியிடம் பேசியிருப்பார் போல, அவர்களுக்கும் முழு சம்மதம் ஆனால் மகள் விருப்பம் தான் என்று மறுநாள் காலை பொழுதிலேயே அழைத்து சொல்லிவிட,

கோடீஸ்வரனின் அம்மாவோ மகனை பிடித்தார்.

“அவங்களும் சரின்னு சொல்லிட்டாங்க… நீ என்னடா பண்ணனும்னு இருக்க…” என்று கேட்க, அவனோ முதல் நாள் நடந்ததை சொல்ல,

“நீ ரொம்ப விளையாடுற…” என்று அதற்கு தான் திட்டினார்.

“இல்லம்மா… நேத்து பேசி முடிக்கிறக்குள்ள அவ ஹாஸ்ட்டல் வந்திடுச்சு..” என்று அவன் சொல்ல,

“ஹாஸ்ட்டல் இருந்த இடத்தில தான் அப்படியே இருக்கு.. நீ தான் ஹாஸ்ட்டல் பக்கம் வண்டி விட்ருப்ப.. பின்ன என்ன டா… அதான் அவங்கப்பா இப்போ சரின்னு சொல்லிட்டாங்க தானே.. இன்னிக்கே போயி உமாக்கிட்ட பேசு..” என்று மகனை உசுப்பேத்த,

“அம்மா… அவ இப்போ ஆபிஸ் போயிருப்பா.. நானும் கிளம்பனும்… மீட்டிங் இருக்கு..” என்று சொல்லி கிளம்ப,

“என்னவோ பண்ணு டா.. ஆனா சீக்கிரமா ஒரு முடிவுக்கு வாங்க..” என்றவர் தன் வேலையை காண சென்றார்.

அவனுக்கும் இதே சிந்தனை தான். சீக்கிரம் ஒரு முடிவிற்கு வரவேண்டும். இனியாவது நிம்மதியாய் காதலிக்கவேண்டும் என்று தோன்ற, காரில் செல்லும் பொழுதே உமாவிற்கு அழைத்தான்.

அவள் எடுக்கவில்லை. மீண்டும் இரண்டொரு முறை அழைத்து பார்க்க, அவளோ எடுப்பதாய் தெரியவில்லை. சரி வேலையில் இருப்பாள் என்று அவனும் விட்டுவிட,

மாலை அவளே அழைத்தாள்.

“கால் பண்ணீங்களா??”

“எஸ் உம்ஸ்…”

“என்ன விஷயம்???” என்றவளின் குரலில் நேற்று இருந்த அதே கோவம் இன்னும் இருந்தது.

“என்ன விசயம்.. நமக்குள்ள என்ன விஷயம் பேபி இருக்க போகுது…?? ஒன்னே ஒன்னு தான்.. லவ்ஸ் தான்…” என்று சொல்லி சிரிக்க,

‘ச்சே எப்போ பார் இவனுக்கு இது தான் பேச்சே…’ என்று அவளோ அழைப்பை துண்டித்துவிட்டாள்.

அவள் துண்டித்த பின் தான் உரைத்தது, “டேய் முட்டாள்.. இப்படியெல்லாம் பேச கூடாதுன்னு கொஞ்ச நேரம் முன்னாடி தானே முடிவு பண்ண.. மறுபடியும் இப்படி பேசினா எப்படி…” என்று அவனே அவனை  திட்டிக்கொண்டே, அவளுக்கு அழைத்தான்.

முதல் முறை அவள் எடுக்காமல் போக, சரி இது போனில் பேசி தீர்க்கும் விசயமில்லை நேரில் பார்த்து பேசவேண்டிய விஷயம் என்று, அவள் ஹாஸ்டலுக்கு வந்து வண்டியை நிறுத்தியவன், மீண்டும் அவளுக்கு அழைக்க,

கடுப்போடு தான், ‘ஹலோ…’ சொன்னாள்..

“உன் ஹாஸ்டல் வெளிய தான் நிக்கிறேன் பேபி.. நீயா வந்தா நல்லது.. நானே வந்து கூட்டிட்டு போகனும்னு ஆசைப்பட்டா அதுவும் சரிதான் உள்ள வர்றேன்…” என்று சொல்ல,

“இவன் திருந்தவே மாட்டானா?? இல்லை இவன் குணமே இதானா??” என்று ஆராய்ச்சியில் இருந்தவளின் வாய் தன்னப்போல் ‘சரி வர்றேன்..’ என்று சொல்லியிருந்தது.

“என்னடா இது.. கொஞ்சம் சவுன்ட் விட்டதுமே சரின்னு சொல்லிட்டா…” என்றபடி நின்றிருந்தவனை ஐந்து நிமிடங்கள் காத்திருக்க வைத்துவிட்டு வந்தாள்.

“ஹாய் உம்ஸ்….”

“சொல்லுங்க என்ன விஷயம்???”

“அடடா… என்ன பேபி நீ… எப்போ பாரு ஒன்னு என்ன வேணும்னு கேக்குற?? இல்லை என்ன விஷயம்னு கேக்குற?? வேற ஏதாவது கேளேன்…” என்றபடி கார் கதவை அவளுக்கு திறந்துவிட,

“ஆமா இந்த வாய்க்கு ஒன்னும் குறைச்சல் இல்லை..” என்றபடி அவளும் அமர்ந்தாள்.

“ஏன் வேறென்ன செய்யணும்???” என்றபடி அவனும் காரை எடுக்க,

அவளோ அடுத்து ஒன்றுமே பேசவேயில்லை. இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி என்னை இவன் தவிக்க விடுவான் என்று நினைத்தும் ஏனோ நெஞ்சு அடைத்து கண்ணீர் வந்துவிடும் போல் தோன்ற. கண்களை ஜன்னல் பக்கம் திருப்பிக்கொண்டாள்.

அவனும் சிறிது தூரம் வரை அமைதியாகவே வர, உமாவின் விசும்பல் சத்தம் தான் அவள் பக்கம் திரும்ப வைத்தது.

“ஹே…!!! உம்ஸ்… என்னாச்சு….??” என்று வேகமாய் காரை ஓரமாய் நிறுத்திவிட்டு, அவளிடம் பதற்றமாய் கேட்க, அவளோ இன்னும் இன்னும் அழவே தொடங்கிவிட்டாள்.

“ஹே உம்ஸ்… பேபி…” என்று அவன் ஆயிரம் சொல்லியும் அவள் அழுகை மட்டும் நிற்பேனா என்று இருந்தது.

எதற்கு அழுகிறாள் என்று தெரிந்தாலாவது அதற்கு தக்க பேசி அவளை சமாதானம் செய்யலாம். ஆனால் அதுவும் தெரியாமல் நிஜமாகவே முழித்தான் கோடீஸ்வரன்.

“டியர்… ப்ளீஸ் ஏன் அழறன்னு சொல்லிட்டாவது அழு பேபி…” என்க, அவன் பேச்சில் சற்றே நிமிர்ந்து அவன் முகம் பார்த்தவள்,

“நான் இப்படி எல்லாம் அழுததே இல்லை.. தெரியுமா… நீங்க தான் என்னை போட்டு பாடா படுத்தி எடுக்கறீங்க…” என்று அவனையே குற்றம் சொல்ல,

“என்ன பேபி நான் என்ன பண்ணேன்…” என்றான் பாவமாய்.

“என்ன பண்ணல?? லவ் சொன்னீங்க… தென் பார்க்கவே இல்லை… இப்போ அகைன் பார்த்தப்போவும் அதே லவ் இப்பவும் இருக்குன்னு சொன்னீங்க.. எல்லார் முன்னாடியும் பிடிச்சிருக்குன்னு சொன்னீங்க.. ஆனா அதுக்கப்புறம் எதுவுமே இல்லை.. நீங்களும் பேசலை.. யாரும் பேசலை…” என்று தன் மனதில் இருப்பதை கொட்ட,

“நான் தான் உன்னை பார்க்க வந்தேனே பேபி….”

“ம்ம் ஆமா வந்தீங்க பெருசா…. ம்ம்ச்…. எனக்குள்ள எவ்வளோ டென்சன் தெரியுமா?? ச்சே.. போதாத குறைக்கு வீட்ல திட்டு வேற…” என்று அவள் பேசிக்கொண்டே போக, அவன் அவளை நிறுத்தவில்லை.

பேசி முடிக்கட்டும் என்று காத்திருந்தான்.

பேசி பேசி அவளே ஓய்ந்து போய், “என்ன நான் இவ்வளோ பேசுறேன்… நீங்க பதிலே சொல்லாம இருக்கீங்க… ” என்று கோவமாய் கேட்க,

“நான் உன் அப்பா கிட்ட பேசிட்டேன் பேபி…” என்றான் அமைதியாய்.

முதலில் என்ன சொன்னான் என்று புரியவில்லை. புரிந்த பின்னோ அவன் சொன்னது உண்மை தானா என்று அத்தனை எளிதில் நம்ப முடியவில்லை. ஏனெனில் இப்பொழுது வரைக்கும் இதை பற்றி அவள் வீட்டினர் அவளிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

அன்று காலையில் கூட தன் அம்மாவிடம் பேசினாளே..

“எதுவா இருந்தாலும் பார்த்து செய் மகி…” என்றுதான் சொன்னாரே தவிர வேறெதுவும் கேட்கவில்லை.

அவளும் அதை பெரிதாய் நினைக்கவில்லை. பொதுவாய் அறிவுரை சொல்கிறார் என்று தான் நினைத்தாள். ஆனால் இப்பொழுது கோடீஸ்வரன் உன் அப்பாவிடம் பேசிவிட்டேன் என்று சொல்லவும் அவளுக்கு பக்கென்று ஆனது.      

“வாட்…??!!!” என்று அதிர்ந்து கேட்க,

“எஸ் உம்ஸ்… நீ சொன்னியே நேத்து… நீங்க சொன்னதுக்கு எங்க வீட்லயும் எதுவும் சொல்லலைன்னு.. அந்த டைம் டென்சன்ல யாரும் அதை நோட்டீஸ் பண்ணலை பட் உன் டாட் பண்ணிருக்கார். லாஸ்ட்டா கிளம்பும் போது பேசினார். தென் இன்னிக்கு அகைன் பேசினார்.. உன் அப்பா அம்மா ரெண்டு பேருக்குமே ஓகே..

ஆனா இப்பவும் முடிவு உன் கைல தான் டியர்… உனக்கு பிடிச்சா மட்டும் தான் எதுவுமே… சரியா.. எங்கம்மாவும் ஒரே திட்டு. நீ சும்மா அந்த பொண்ணுகிட்ட விளையாடுற… எதுவா இருந்தாலும் சீக்கிரம் முடிவு பண்ணுன்னு… சோ அதான் உன்னை பார்க்க வந்தேன்…” என்று சிறு குழந்தைக்கு எடுத்து சொல்வது போல் சொல்ல,

“இதில என்னை பார்க்க என்ன இருக்கு…??” என்றாள் புருவத்தை சுருக்கி.

“என்ன உம்ஸ் இப்படி கேட்கிற.. உன்கிட்ட தானே கேட்கணும் அடுத்து என்னன்னு…”

“ஓ!!!! சோ… நீங்களா வரலை.. உங்கம்மா, எங்கப்பா பேசினதுனால தான் வந்தீங்க… அப்படியா…” என்று ஏறிட்டவளை, என்ன சொல்லி சரி செய்யவென்று தெரியவில்லை அவனுக்கு.

காதல் முன்னேயும் போக விடாது, பின்னேயும் போக விடாது. அதுபோல தான் உமாவிற்கு. கோடீஸ்வரன் மீதிருப்பது காதல் தான் என்று உறுதியாய் தெரிந்துவிட்ட பின்னும், அவன் தன்னை இத்தனை நாள் தேடி வராத கோவம் மனதினில் இருக்க,

இப்பொழுதும் அவன் வந்தது, அவன் அம்மா பேசியதற்காகவும், தன் அப்பா சம்மதம் சொன்னதற்காகவும் என்று தெரியவும் இன்னும் கோவம் அதிமானது.

அவள் முகத்தையே கூர்ந்து பார்த்தவன், இன்னும் அவள்புறம் சற்றே நெருங்கி அமர, அவளோ என்னவென்பது போல் பார்த்தாள்.

“உனக்கு என்ன கோவம்னு புரியுது பேபி… பட்… நான் சென்னை வந்து மோர் தென் டூ மன்த்ஸ் ஆச்சு… உன்னை பார்க்காம இருந்திருப்பேன்னு நினைக்கிறியா??” என்று ஆழ்ந்த குரலில் கேட்க,

அவன் நெருக்கமும், குரலின் மாற்றமும் அவளுள் ஒருவித மாற்றத்தை உருவாக்க, பின்னே நகர முடிந்தாலும், அவன் கரங்கள் அவளை பிடித்திருந்தது.

“ஹேய்..!!! என்.. என்ன பண்றீங்க….??” என்றவளின் நா வரண்டது.

“என்ன பண்றேன்??? லவ் பண்றேன்… உம்ஸ்… நான் சென்னை வந்தபிறகு, அடிக்கடி உன்னை பார்த்தேன்.. என்ன கொஞ்சம் தூரமா நின்னு…” என்றவன் ஒரு பெருமூச்சை விட,

“இவ்வளோ லவ் இருக்கிறவர் ஏன் தூரமா நின்னு பார்க்கணும்…??” என்று சலித்தவளும், அடுத்து விலகியமர நினைக்கவில்லை.

“அப்படி தூரமா நின்னதுனால தான் இப்போ என் டியர கிட்ட வச்சு பார்க்க முடியுது….” என்று கண்ணடிக்க,

“ஷ்…!!! எப்போவுமே… இப்படிதான் பேசுறீங்க.. இதான் என்னை டென்சன் பண்ணுது….” என்று முகம் சுருக்க,

“சரி சரி ஜோக்ஸ் அப்பார்ட்… நான் சென்னை வந்ததுமே உன்னை வந்து பார்க்கணும்னு தான் நினைச்சேன் பேபி.. பட் நம்ம மீட் பண்ணி லாங் கேப்.. நானும் ஒன்னும் முதல் தடவையே உன்னை இம்ப்ரெஸ் பண்ற மாதிரி எல்லாம் நடந்துக்கல..

சொல்ல போனா உன்னை ரொம்ப டென்சன் தான் பண்ணினேன்… சோ அதை நீ ஒரு பேட் ட்ரீமா நினைச்சு கூட மறந்திருக்கலாம். இல்லை உன் லைப்ல வேற யாரும் வந்திருக்கலாம். முறைக்காத பேபி. லைப்ல எவ்வளவோ நடந்திருக்கலாம்… அதான் கொஞ்சம் தள்ளி நின்னேன்…

ஆனா அப்படியெல்லாம் எதுவுமில்லைனு யு ஆர் ஸ்டில் மை பேபின்னு தெரியவும்.. எனக்கு எவ்வளோ நிம்மதி தெரியுமா?? உன்கிட்ட வந்து பேசணும் நினைச்சேன்… ஆனா அதுக்குள்ள தான் இவ்வளோ ப்ராப்ளம்ஸ்… இல்லாட்டி இன்னுமே கூட அழகான லவ் ஸ்டோரி ஆகிருக்கும் நமக்கு…” என்று சொல்லி சிரிக்க,

“ஹ்ம்ம் ஆமா… எனக்கும் சில நேரம் தோணும் என்ன டா இது நம்ம லவ் இப்படி ஜவ்வு மிட்டாய் போல இழுக்குதேன்னு.. சில நேரம் ஆசையா இருக்கும்.. ஏக்கமா கூட இருக்கும்.. ஊருக்கு போறப்போ எல்லாம் சுசி கிஷோர் கூட பேசுறதை பார்த்தா எனக்கும் உங்கட்ட பேசணும் போல தோணும்.. இப்படி நிறைய…

அப்போல்லாம் எனக்கு உங்க மேல அவ்வளோ கோவம் வரும்.. என்னடா இவன் வந்தான்.. சொன்னான்… போனான்னு… சிரிக்காதீங்க.. நிஜமா தான் சொல்றேன்.. ஒருவேளை சும்மா என்கிட்ட விளையாடி பார்த்தீங்களோன்னும் தோணும். ஆனாலும் உங்களை அவ்வளோ ஈசியா நினைக்காம இருக்கவும் முடியலை. நினைக்கவும் பயமா இருந்தது. ஒருவேளை இதெல்லாம் ஒண்ணுமே இல்லைன்னு ஆகிட்டா என்ன செய்யன்னு..

என்னால உங்களை மறக்க முடியுமான்னு கூட தெரியலை.. ஒருவேளை அப்படி மறந்திட்டு நான் வேற ஒரு லைப்ன்னு கமிட் ஆகிட்டா அதுக்கப்புறம் நீங்க வந்து நின்னா நான் செய்யன்னு.. இப்படியெல்லாம் எனக்குள்ளேயே நிறைய குழப்பம்… ஒன்ஸ் கேரளா போவோமான்னு கூட தோணிச்சு..

என் பிரன்ட் கிட்ட கேட்டப்போ, உங்களை பத்தி எந்த டீடைல்ஸும் சரியா தெரியலை.. எனக்கு எப்படி இருந்திருக்கும் சொல்லுங்க.. ” என்று அவள் தன் உணர்வுகளை அவனிடம் கொட்ட,

அவனுக்கு மிக நன்றாய் புரிந்தது இவளை தான் என்ன மாதிரி ஒரு தவிப்பில் ஆழ்த்தியிருக்கிறோம் என்று. சுசியை அப்படி ஒரு இக்காட்டன சூழலில் விட்டு வேலை என்று சென்றதற்கே கிஷோரை அத்தனை பேசினான் கோடீஸ்வரன்.  

‘அவளுக்கு நானிருக்கேன்னு உணர்த்தாம அப்படி என்னடா உனக்கு வேலை முக்கியமா போச்சு…’ என்று எவ்வளோ கத்தினான். ஆனால் இன்றோ தான் அவனை விட செய்திருக்கிறோம் என்று தோன்றும் பொழுது அவனுக்கு மிக சங்கடமாய் போனது.

இதேது வேறு பெண்ணாய் இருந்தால், நிச்சயம் உமா அளவிற்கு தன்னை எதிர்பார்த்திருக்க மாட்டாள் என்றே நினைக்கத் தோன்றியது. அவள் மனதிலும் அதே போல எண்ணங்கள் இருந்ததினால் தானே தன் மனதிற்குள் இத்தனை கஷ்டங்களை வைத்து வெளியே ஒன்றும் காட்டிகொள்ளாமல் எப்படித்தான் இருந்தாளோ என்று தோன்றியது. அப்படியே அமைதியாய் அமர்ந்திருந்தான்.

“என்ன சைலன்ட் ஆகிட்டீங்க…??” என்று உமா அவன் கரம் பற்ற,

“நிஜமா சொல்றேன் பேபி.. என் லவ்வை விட உன் லவ் தான் ரொம்ப பெருசு.. நான் இப்போ கொஞ்ச நேரம் முன்னாடி வரைக்கும் நினைச்சேன். என் லவ் ட்ரூ அதான் உன்னை நான் சொன்னது போலவே என் முன்னாடி வந்து நிக்க வச்சதுன்னு..

பட் தட்ஸ் நாட் ட்ரூ டியர்.. நீ மனசில ஒவ்வொரு நிமிசமும் என்னை தேடின பாரேன்.. அதான்.. அந்த தேடல் தான் என்னை உன் கண்ணில காட்டிருக்கு.. ஐ லவ் யு சோ மச் பேபி…” என்றான் ஆத்மார்த்தமாய்.

அவன் சொன்ன வார்த்தைகள் அவளுக்கு எத்தனை ஆறுதலையும், ஆனந்தத்தையும் கொடுத்தது என்று அவள் மட்டுமே உணர்வாள்.  இதற்காகத்தானே அவளும் காத்திருந்தாள்.

காத்திருப்பு வீண் போகவில்லையே. உண்மையான காதலுக்கு காத்திருப்பும் துணை இருக்குமோ என்னவோ. உமாவின் காத்திருப்பும், கோடீஸ்வரனின் காத்திருப்பும் வீண் போகவில்லை.  

இத்தனை நாள் இருந்த குழப்பம், கவலை எதுவும் இன்றி, அவன் கரம் பற்றி அமர்ந்திருந்தவளின் மனம் நிர்மலமாய் இருக்க, அவனுக்கும் மனம் அமைதியாய் உணர்ந்தது.

 

 

Advertisement