Advertisement

பந்தம் – 7 

கோடீஸ்வரனுக்கு மனம் ஆனந்த கடலில் மூழ்கி திக்குமுக்காடி போயிருந்தது. உமா தன் காதலை ஏற்றுக்கொள்வாள் என்று அவனுக்கு நம்பிக்கையிருந்தாலும், அவள் மனதிலும், தனக்கு இருப்பது போல் அதே உணர்வுகள் இருக்கிறது என்று தெரியவும் இன்னும் பூரித்து போனான்.

தானாக காதலிப்பது வேறு, காதலை ஏற்றுகொள்வது வேறல்லவா??

உமா, அவனது காதலை ஏற்றுக்கொண்டாளோ இல்லையோ, தன் மனதிலும் அவன் மீதிருந்த விருப்பதை சொல்லிவிட்டாள்.

“எஸ்… நீங்க லாஸ்ட் டைம் ப்ரொபோஸ் பண்ண போதே.. ஐம் டிஸ்டர்ப்ட்…. நீங்க அடுத்து வருவீங்கன்னு நினைச்சேன்.. ஆனா வரவேயில்லை.. ரொம்ப எக்ஸ்பெக்ட் பண்ணேன்…” என்று உதட்டை சுருக்கி, லேசாய் முகத்தை தாழ்த்தி சொல்ல,

என்னடா சொல்கிறாள் இவள் என்று தோன்றியது கோடீஸ்வரனுக்கு.

“உம்ஸ்…!!!” என்று ஆச்சரியமாய் அவளை பார்க்க, அவளது கண்களோ லேசாய் நீர் கோர்த்திருந்தது.

“எஸ்… அன்னிக்கு.. அப்போ…” என்றவளுக்கு பேச்சு வராமல் தடுமாற, கோடீஸ்வரன் வேகமாய் காரை ஒரு ஓரத்தில் நிறுத்தினான்.

போக்குவரத்தற்ற சாலை, நல்லவேளை கிளைமேட்டும் ஜில்லென்று கூதல் காற்றோடு இருக்க, காரை விட்டு வேகமாய் இறங்கி நின்றாள் உமா. இறங்கிய பின் தான் அவளுக்கு சுவாசமே சீராய் வந்தது.

“வாட் ஹேப்பன் டியர்…” என்றபடி வேகமாய் அவளருகே வந்தவனிடம்,

“நத்திங்…” என்று சொல்லிவிட்டு,

“ஏன் வரல..?? அடுத்து ஏன் என்னை தேடி வரலை… எனக்கு எப்படி இருந்தது தெரியுமா?? ஒவ்வொரு நிமிசமும் நீங்க வருவீங்கன்னு நினைச்சேன்.. ஏதாவது புது நம்பர்ல இருந்து கால் வந்தா கூட அது நீங்களா இருக்குமோன்னு நினைச்சேன்.. உங்களை போல ரோட்ல யாராவது பார்த்தா அது நீங்களான்னு பார்க்க ஆரம்பிச்சேன்…

அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா.. இல்லை நீங்க அன்னிக்கு சொன்னதெல்லம் சும்மா.. விளையாட்டுக்கு.. எதோ பார்த்ததும் ஒரு அட்ராக்சன்ல பேசிட்டீங்கன்னு நினைச்சு என்னை நானே கொஞ்சம் கொஞ்சமா சமாதானம் செஞ்சு, நார்மல் ஆகும் போது….” என்று பேசிக்கொண்டு போனவளின் இதழ்களில் பட்டென்று ஒரு புன்னகை வந்து ஒட்டிக்கொண்டது.

“நீங்க சொன்னது போல, உங்களை நானே தேடி வர்ற மாதிரி ஆகிடுச்சு… ” என்று சிரிப்போடு சொல்ல,

இதெல்லாம் கேட்டவனுக்கோ, இவள் ஏன் அழுகிறாள், எதற்கு சிரிக்கிறாள் என்று   தெரியவில்லை.

அதையெல்லாம் தாண்டி, உமா தன்னை எதிர்பார்த்திருக்கிறாள் என்ற எண்ணமே மனதை போட்டு ஆட்டிப்படைக்க, அவனுள்ளே எதுவோ ஒன்று சற்று பெருமையாக கூட இருந்தது.

ஆனாலும் அவள் தன்னால் வருந்தியிருக்கிறாள் என்று தோன்ற, 

“ஸாரி பேபி. ஸாரி.. ரியல்லி ஸாரி.. உன்னை பார்த்ததுமே எனக்கு வேறெதுவும் தோணலை. நீ மட்டும் தான் எனக்கு மனசு முழுக்க இருந்த, இப்பவும் இருக்க, ஆனா நான் ஏன் வரலைன்னு நீ கேட்டது சரிதான் பேபி.. என்னோட சூழ்நிலை அப்போ அப்படி இருந்தது. டெப்புடேசன் போயிட்டேன் டியர்.. டூ மன்த்ஸ் பேக் தான் வந்தேன்…” என்று அவளை சமாதானம் செய்ய,

“வந்ததும் என்னை ஏன் பார்க்க வரலை…” என்றாள் சிறு குழந்தை போல.

இவளுக்கு என்னடா சொல்லி சமாதானம் செய்வது என்று ஆகிவிட்டது அவனுக்கு.

அவன் ஆரம்பித்து வைத்த ஒன்று தானே, ஆக அவன் தானே அதற்கு பொறுப்பேற்க வேண்டும். பதில் அவன் தானே சொல்லியாக வேண்டும். அவன் தானே அவள் மனதை சலனப்படுத்தினான். அடுத்து அவன் தானே வந்திருக்க வேண்டும். ஆனால் அவன் சூழல் வர முடியவில்லை.

சென்னை வந்த பிறகோ, உமா எங்கிருக்கிறாள் என்று தெரிந்தாலும், அவள் மனம் இப்பொழுது எப்படியிருக்கிறது என்று தெரியாதே. இத்தனை நாட்கள் கடந்தும் கோடீஸ்வரன் மனத்தில் இருந்த காதல் குறையவில்லை. ஆனாலும் என்னவோ ஒன்று அவள் முன்னே மீண்டும் போய் நிற்க ஒருமாதிரி இருந்தது.

அவள் மனதிலும் தனக்கிருப்பது போல் அப்படியே அதே உணர்வுகள் இருக்குமா?? இல்லையென்றால் என்ன செய்வது என்ற எண்ணம் அவனுக்கும் இருந்தது உண்மையே. 

ஆனாலும் உமாவை விட்டு அத்தனை ஒன்றும் எல்லாம் அவன் விலகியிருக்கவில்லை. அவ்வபோது அவளை காண வேண்டும் என்று தோன்றினால் அவள் போகும் வழி வரும் வழி என்று எங்காவது நின்று பார்ப்பான்.

அவள் யாரோடாவது சிரித்து பேசினால், அவளின் புன்னகை நிறைந்த முகத்தை தன்னகத்தே சேமித்துக் கொள்வான்.

அவனுக்கே சில நேரம் தோன்றும், என்னடா இது நம் காதல் இப்படி விசித்திரமாய் இருக்கிறதே. பார்க்காமல் பேசாமல் இருந்தோம், இப்போது பார்க்க வாய்ப்பிருந்தும், பேசும் முடியவில்லையே, நிஜமாகவே நமக்கு இருப்பது காதல் தானா என்றெல்லாம் தோன்ற, அவனே ஒருநொடி பயந்துவிட்டான் என்று தான் சொல்ல வேண்டும்.

கோடீஸ்வரன் மனதில் எத்தனை கற்பனைகள், ஆயிரமாயிரம் ஆசைகள், அனைத்தும் உமாவை வைத்தே. அவனுக்கும் அவளுக்குமான வாழ்வு என்பது அவனை பொறுத்தவரையில் சொர்க்கத்தில் முடிவான ஒன்று தான்.

ஆனால் லேசாய் மனதில் ஒரு சுய அலசல்.

தன் காதல் நிஜம் தானா?? நிஜமென்றால் அவனால் எப்படி இப்படி இருக்க முடிகிறது என்று தோன்றிய அடுத்த நொடி,

அவன் மனமோ அவன் காதல் நிஜமென்றால் அதுவே அவளை அழைத்து வந்து அவன் முன் நிறுத்தும்.. நிறுத்தவேண்டும் என்று ஆசை கொண்டது.

ஆனால் இப்படியே எத்தனை நாள் இருந்திட முடியும், நாளுக்கு நாள் அவன் காதல் அவனை போட்டு பாடாய் படுத்த,

“போடா… போ… அவளிடம் பேசு…” என்று அவன் மனமே அவனை போட்டு உந்த, அதற்குள் அவன் வீட்டில் சுசியை பெண் பார்க்க போவோம் என்று அம்மாவும் அப்பாவும் வந்து நிற்க,

ஆரம்பத்தில் முடியவே முடியாது என்றான். சண்டை கூட போட்டான். ஆனால் அவனை பெற்றவர்களோ அவனையும் விட பிடிவாதமாய் இருக்க,   இதென்னடா புது பிரச்சனை என்று அவன் யோசிக்கும் பொழுது தான், சரி அங்கே போய் பெண்ணிடமே இது வேண்டாம் என்று சொல்லி வந்துவிடுவோம், அதன் பின் உமாவிடம் பேசிவிட்டு, தன் வீட்டிலும் அவளை பற்றி சொல்லிட வேண்டும் என்று எண்ணியிருக்க, உமாவே அவனை தேடி வந்தாள்.

ஆக அவன் நினைத்தது நடந்தேவிட்டது..!!!

அவன் காதல் நிஜமென்று அவனுக்கே புத்தியில் அடித்தார் போல் உரைக்க, உமாவிற்கும் மனதினுள்ளே தன் மீது சலனமிருக்கும் என்பது அவன் நினைக்காத ஒன்று.

கண் முன்னே போய் நின்றால் எப்படியாகினும் ஏற்றுகொள்வாள் என்று எண்ணினான்..

ஆனால் ‘ஏன் வரவில்லை…’ என்று கண்ணீர் வடிப்பாள் என்று சிறிதும் நினைக்கவில்லை.   

“ஸாரி பேபி…” என்று சொல்வதை தவிர அவனுக்கு இப்பொழுது என்ன சொல்லவென்றும் தெரியவில்லை.

அனைத்தையும் சிரித்தே சமாளித்தவன், அவளது ஒரு துளி கண்ணீரை எப்படி எதிர்கொள்வது என்று தெரியவில்லை. ஆனால் அவன் சொடிந்த முகத்தை கண்டு அவளுக்கு தான் பொறுக்கவில்லை.

“நான் தான் இப்போ உங்க கூட வந்தேனே… பின்ன ஏன் டல்லா இருக்கீங்க..???” என்று ஆராய்ச்சியை அவன் முகம் பார்க்க,

அதன் பிறகே அவனுக்கு தான் ஏன் அவளை அழைத்து வந்தோம் என்று தோன்ற, மீண்டும் அவன் முகத்தை புன்னகை ரேகை சொந்தமாக்கிக்கொண்டது.

“ஓ!!!! ஆமால்ல…” என்றவன், சுற்றம் உணர்ந்து,

“இப்படி ரோட்ல நின்னே பேசணுமா இல்லை வேற எங்கயாது போகலாமா??” என்று கேட்க,

அவளோ, “கார்ல போயிட்டே பேசலாம்.. பட் ட்ராபிக்ல போகவேணாம்… கொஞ்சம் சைலன்ட்டா இருக்க போல.. ஹாஸ்ட்டல் பக்கம் ரிட்டர்ன் போயிட்டே…” என்று சொல்ல, அவனுக்கு சரி என்று தலையாட்டுவது தவிர வேறு வழியில்லை.

மீண்டும் இவர்களது கார் பயணம்.

ஏறியமர்ந்து சிறிது தூரம் வரை சென்றாலும் அவன் மௌனித்து தான் இருந்தான். சட்டென்று பேசிடவில்லை. ஒருவேளை பேசிட ஒன்றுமே இல்லையோ, இல்லை யோசிக்கிறானோ தெரியவில்லை.

“இப்படி எவ்வளோ நேரம் சைலன்ட்டா  இருக்க போறீங்க…??”

“ம்ம் நீ இப்படி கேட்கிற வரைக்கும் இருக்கலாம்னு நினைச்சேன்…” என்று கூறி சிரித்தவனை, கண்டு லேசாய் கோவம் கூட வந்தது, இவனுக்கு அனைத்துமே விளையாட்டு தானா என்று.

“ம்ம்ச்…” என்று அவள் முகத்தை திருப்ப,

“ஸாரி அகைன் பேபி… என்னால தான் உனக்கு நல்ல திட்டு இல்லையா..  உன் அம்மா அப்பா கொஞ்சம் டென்சன் ஆகிட்டாங்க…”

“கொஞ்சமில்ல ரொம்பவே….”

“ஹ்ம்ம் அவங்க இவ்வளோ ரியாக்ட் செய்வாங்கன்னு தெரியாது.. பட் நீ வந்ததை நான் சொல்லலை. கிஷோர் தான் உன்கிட்ட ஹெல்ப் கேட்டதா சொல்லிட்டான்…” என்றதும் சட்டென்று அவனை நிமிர்ந்து பார்த்தவள், 

“ஹ்ம்ம் எந்த பேரன்ட்ஸுக்கு தான், தன் பொண்ணு வீட்ல நடக்க போற ஒரு நல்ல விசயத்தை நிறுத்த, யாரு என்னன்னே தெரியாத ஒருத்தரை பார்க்க, அதுவும் தனியா அவங்க வீட்டுக்கே போய் பார்க்க போனதை கேட்டா  ரிலாக்ஸா இருக்க முடியுமா..” என்று அவள் பெற்றோரின் கோபத்தை நியாயப்படுத்தினாள்.

“எஸ்.. பட் நான்… கிஷோர் சொல்லும் போது மறுத்து பேச முடியலை அப்போ. பிகாஸ் கிஷோர் பேரன்ட்ஸ் நான் சொன்னதுக்காக தான் வந்தாங்க.. சுசியோட அம்மா முதல்ல அவ லவ் பத்தி சொன்னப்போ நம்பவேயில்லை.. என் பொண்ணு அப்படி இல்லவே இல்லைன்னு பேசினாங்க..

கிஷோர் சொன்னப்போ கூட அவங்க அதை நம்பலை.. அப்போதான் எல்லாம் எடுத்து சொல்ல வேண்டியதா இருந்தது.. பட் அது உனக்கு இப்படி ஒரு டென்சன் தரும்னு நினைக்கலை…” என்று நிஜமாகவே வருத்தத்துடன் சொல்ல,

இதெல்லாம் அவளுக்கும் சுசிக்கும் தெரியாதே, அறைக்கு சென்று விட்டார்களே அப்பொழுது.

ஓ!! அதன் பின் இத்தனை நடந்ததா என்று தோன்ற, என்ன இருந்தாலும் இவன் தன்னை விட்டுக்கொடுக்கவில்லை, சந்தர்ப்ப சூழ்நிலை அப்படியாகி போனது என்றும் தோன்ற. அவளுக்குமே மனம் ஓரளவு தெளிவடைந்திருந்ததால்,

“ம்ம் லீவ் இட்.. அதான் எல்லாம் சரியாகிடுச்சே.. சுசி லவ்வ வீட்ல அக்ஸப்ட் பண்ணிட்டாங்களே… அப்புறம் என்ன.. லீவ் இட்..” என்று அவனை சமாதானம் செய்தாள்.

“ஹ்ம்ம் குட்….” என்றபடி தலையை லேசாய் ஆட்டியவன் சாலையில் கவனம் செலுத்த,

அவளும் சிறிது நேரம் அமைதியாய் இருந்தவள் சட்டென்று,

“ஆமா என்னை ஏன் அப்படி சொன்னீங்க..??” என்றாள் வேகமாய்.

கோடீஸ்வரனுக்கு முதலில் புரியவில்லை. என்ன கேட்கிறாள், எதை பற்றி கேட்கிறாள், நானறிந்து உமாவை பற்றி தவறாய் எதுவும் சொல்லவில்லையே என்று யோசிக்க,

“அதான்.. எல்லார் முன்னாடியும் என்னை பிடிச்சிருக்குன்னு சொன்னீங்களே… இப்போ என்ன தெரியாத மாதிரி ஒரு யோசனை…” என்று சற்றே தாங்கலாய் கேட்க,

“ஓ..!!! அதுவா…” என்றவன் ஒரு நமட்டு சிரிப்பு சிரிக்க,

“என்ன?? கேள்வி கேட்டா பதில் சொல்லணும், அதை விட்டு எப்போ பார் ஒரு சிரிப்பு..” என்று மீண்டும் அவள் சண்டைக்கு தயாராக,

“ஹா… ஹா ஒண்ணுமில்ல பேபி… இப்போவாது அதைபத்தி கேட்கணும் தோணிச்சேன்னு நினைச்சேன்… சிரிச்சேன்..” என்றான் இன்னும் தன் புன்னகையை நீட்டித்து.

உமாவிற்கு இப்பொழுது கோடீஸ்வரனோடு பேசுகையில் பேச்சு சரளமாய் வந்தது, சற்று உரிமையாகவும் கூட வந்தது. அவனுக்கு அதெல்லாம் உணரும் போது இன்னும் இன்னும் மகிழ்வு கூடியது.

அவளுக்குமே ஆச்சரியம் தான், தான் இவனோடு இந்த குறுகிய நாட்களில் இத்தனை சகஜமாய், உரிமையாய் பேசிடுவோம் என்று எண்ணிக்கூட பார்க்கவில்லை.  ஆனால் இதெல்லாம் நடக்கவேண்டும் என்று எத்தனை நாள் ஆசைகொண்டாள்.

“ஹேய்…!!! சிரிச்சுட்டே இருக்கீங்க…??” என்று அவன் தோளை லேசாய் உமா தட்ட,

“ஹா ஹா..!!! உண்மை அதானே உம்ஸ்.. உன்னை எனக்கு பிடிச்சிருக்கு.. அதை தான் சொன்னேன்.. இதில என்ன தப்பிருக்கு…” என்றான்

“அதெல்லாம் சரி.. ஆனா அதுக்கப்புறம்…???”

“என்ன உம்ஸ்….”

“என்ன என்ன உம்ஸ்?? அப்படி சொல்லிட்டு அடுத்து நீங்க கிளம்பி போயிட்டீங்க.. எங்க வீட்லையும் யாரும் அதை கண்டுக்கலை போல….” என்று பாவமாய் சொன்னவளை கண்டு அவனுக்கு அடக்கமாட்டாமல் சிரிப்பு வந்தது.

அவன் சிரிக்க சிரிக்க, அவளுக்கு இன்னும் எரிச்சல் கூடியதே தவிர குறையவில்லை.

“ம்ம்ச்… காரை ஸ்டாப் பண்ணுங்க… நானே போயிக்கிறேன்..” என்று முறுக்கிக்கொள்ள,

“ஹேய்… சரி சரி… சிரிக்கலை போதுமா…” என்றவன்,

“டிரைவ் பண்ணிகிட்டே பேசுறது கொஞ்சம் கண்வீனியன்ட்டா இல்ல உம்ஸ்… உன் முகம் பார்த்து பேசணும்… நிறைய பேசணும்…” என்றான் காதலோடு.

“ஹ்ம்ம்…. இப்போ என்ன பண்றது… நேரமாச்சே….” என்று அவளும் முகம் சுருக்க,

“நோ நோ… இனி நேரம் காலமெல்லாம் நமக்கு இல்லை பேபி… ஒன்லி லவ்ஸ் மட்டும் தான்…” என்க..

“என்னது லவ்ஸா… நான் இன்னும் ஓகேவே சொல்லலை…” என்று வேகமாய் மறுத்தவளை,

“நோ நோ… நீ என்கூட வந்தப்போவே நீ கமிட் ஆகிட்ட பேபி… பேச்சு மாறக்கூடாது… ” என்று அவன் சொல்ல,

“நான் கேட்டதுக்கு பதிலே சொல்லாம நீங்க தான் பேச்சு மாத்துறீங்க…” என்று இவள் சொல்ல,

அதற்குள் இவள் ஹாஸ்டல் வந்துவிட, நேரமும் இரவை தொட்டுவிட, உமா இறங்கவேண்டியதாய் இருந்தது.

கோடீஸ்வரனிடம் ஒன்றுமே சொல்லாமல் இறங்க,

“உம்ஸ் கோவமா..” என்று கை பிடிக்க,

“ஒண்ணுமில்லை…” என்று கையை உறுவிக்கொண்டு நடக்க,

அவனுக்கும் என்னவோ போல் ஆனது. இத்தனை நேரம் இருந்த மகிழ்ச்சி, நிம்மதி இப்பொழுது ஒன்றுமே இல்லை என்பது போல் ஆனது.

உமாவிடம் தான் ரொம்ப விளையாடுகிறோமோ என்று தோன்றியது. அவள் எதிர்பார்ப்பது சரி தானே. எத்தனை நாள் இப்படி கண்ணாமூச்சி ஆட்டம் ஆடுவது என்று தோன்றினாலும், இப்படி எதுவும் நடக்கவில்லை என்றால் உமா இந்நேரம் தன் மனதில் இருப்பதை சொல்லியிருக்க மாட்டாள் என்றே தோன்றியது.

நேசிக்கிறேன் என்று வெளிப்படையாய் சொல்லவில்லை. ஆனால் அவள் மனதில் அவனுக்கான இடம் அழகாய் ஆழமாய் இருக்கிறது என்பதனை தன் செயல்கள் மூலம் வெளிப்படுத்தி விட்டாள். அது போதாதா.

அவள் கோவமாய் போனது கவலையாய் இருந்தாலும், எல்லாம் சரியாகும் என்ற நம்பிக்கையோடு அவனும் சென்றான்.

 

Advertisement