Advertisement

                           பந்தம் – 6

ஒருசில விஷயங்கள் நாம் நல்லதற்கு செய்தாலும், அதன் விளைவுகள் நமக்கு நல்லதாய் அமையாது. பலன் சுசிக்கு பாவம் உமாவிற்கு. அதுபோல தான் ஆனது உமாவிற்கும். சுசியின் காதலுக்கு உதவப்போக அது அவளுக்கே வினையாய் வந்து முளைத்தது.

எப்பொழுதும் உமா செய்யும் அனைத்திற்கும் துணையாய் இருந்த அவள் அம்மா, இந்த விசயத்தில் அப்படியே மாறிப்போனார். ஏனோ அவருக்கு மனதில் ஒரு பயம் வந்து ஒட்டிக்கொண்டது.

சுசியின் வாழ்வு இப்பொழுது நல்லபடியாய் அமைந்துவிட்டது சரி, இதேது வேறேதும் பிரச்சனை வந்திருந்தால் அதற்கு உமாவை அல்லவா பொறுப்பாக்கி இருப்பார்கள், அதும் சுசியின் அம்மா கேட்கவே வேண்டாம்.

அவளது காதலை ஏற்றுகொண்டதே பெரியது. அதுவும் கூட கிஷோரிடம் எவ்வித குறையும் இல்லை, எந்தெந்த தகுதிகளை எல்லாம் வைத்து கோடீஸ்வரனை தேர்ந்தெடுத்தார்களோ அதெல்லாம் கிஷோரிடமும் இருக்க, அவர்கள் மனம் சமன்பட்டுக்கொண்டது.

இப்பொழுது சுசி காதலித்தது கூட பெரிதாய் தெரியவில்லை, உமா சென்று அதுவும் தனியே சென்று கோடீஸ்வரனிடம் பேசியது தான் பிரச்சனையாகி போனது.

“சுசிக்கு, மகி அளவெல்லாம் தைரியம் இல்லை. அதான் பாரு லவ் பண்ணதை கூட சொல்ல முடியாம தவிச்சு இருக்கா… மகி பாரு நேரா அவங்க வீட்டுக்கே போயிருக்கா..” என்று சுசியின் அம்மா சொல்ல,

“என்ன இருந்தாலும் மகிக்கு இவ்வளோ குருட்டு தைரியம் ஆகாது அண்ணி.. சொல்லி வையுங்க.. நாளைக்கு இன்னொரு இடத்தில வாழ போறவ.. இதெல்லாம் வெளிய தெரிஞ்சா நம்ம மகிக்கு தானே கெட்ட பேரு…” என்று உமாவின் அத்தையும் சொல்ல,

உமாவின் அம்மாவிற்கோ சிவுக்கென்று ஆனது இதை கேட்டதும். என்னடா இது சுசிக்கு உதவ போய் உமாவின் பெயரல்லவா வேறு மாதிரி திரும்புகிறது என்று எண்ணம் தோன்ற,

“என்ன சுசி.. ஒருவார்த்தை என்கிட்ட கூட சொல்லியிருக்கலாமே. நான் தன்மையா வீட்டில எடுத்து சொல்லியிருப்பேனே… பாரு இப்போ எல்லாரும் மகிய ஒருமாதிரி பேசுறாங்க..” என்று சுசியிடம் ஆதங்கம்கொள்ள,

“ஸாரி சித்தி… நான் இப்படியெல்லாம் ஆகும்னு நினைக்கவே இல்லை.. மகி முடியாதுன்னு தான் சொன்னா.. நானும் கிஷோரும் தான் கெஞ்சிக்கேட்டோம்… ” என்று முகத்தை பாவமாய் வைத்து மன்னிப்பு வேண்ட, அவருக்கும் அடுத்து என்ன சொல்வது என்று தெரியவில்லை.

உமா அடுத்து யாரிடமும் பேசவில்லை. அம்மா, அப்பா, சுசி என்று யாரிடமும் பேசவில்லை. ஏனோ அவளுக்கு மனம் ஒருமாதிரி ஆகிவிட்டது. சுசியின் காதலை ஏற்றுக்கொண்டவர்கள், தான் செய்ததை தவறு என்று சொல்லும் போது, சுசிக்காக தானே அதை செய்தேன் என்று அதை ஏற்க முடியாதா என்ற கோவம் ஒரு பக்கம் இருந்தாலும்,

அனைவரும் சொல்வது போல், தான் செய்தது தவறோ என்றும் தோன்றியது. அத்தனை தூரம் ஒருவனை காண கிளம்பி சென்றிருக்க கூடாதோ என்று இருந்தது. யாரை நம்பி எதை நம்பி அப்படி கிளம்பி சென்றாள்??  நல்லவேளை அவ்விடத்தில கோடீஸ்வரன் இருந்தான், வேறு யாராவது இருந்திருந்தால் என்னவாகியிருக்கும்??

இதெல்லாம் போட்டு அவளை குழப்ப, அமைதியாய் இருந்துவிட்டாள். போதாத குறைக்கு அவள்  மனம் கோடீஸ்வரனை வேறு நினைத்தது.

சொன்னது தான் சொன்னான் இந்த கிறுக்கன் கடைசியில் நான் வந்ததை வேறு ஏன் சொன்னான். இது தான் இவன் என்னை காதலிக்கும் லட்சணமா, அனைவரின் முன்னும் இப்படி என்னை விட்டுக்கொடுத்து பேசிவிட்டானே  என்று நினைக்க, அவளது மனசாட்சியோ, கோடீஸ்வரன் உண்மையை தானே சொன்னான் என்று எடுத்துரைத்தது.

பாவம் அவளுக்கு தெரியவில்லை சொன்னது அவனல்ல கிஷோர் என்று.

இப்படியாக அவளுள்ளே பலவேறு எண்ணங்கள் தோன்ற, யாரிடமும் பேசாமல் அமைதியாய் இருக்க, வந்தவர்கள் எல்லாம் ஊருக்கு கிளம்பும் நாளும் வர, இவள் மீண்டும் ஹாஸ்டல் செல்லவேண்டியதாய் இருந்தது.

“இத்தனை நாள் உன்னை பத்தி நாங்க பெருசா கவலை பட்டதில்லை மகி.. ஆனா இப்போ உன்னை விட்டு போக பயமா இருக்கு.. இனியாவது பார்த்து நடந்துக்க..”

“ம்மா.. ப்ளீஸ்… நான் சுசிக்காக மட்டும் தான் அப்போ பார்த்தேன். நீங்க சொல்ற மாதிரி எல்லாம் நான் யோசிச்சு கூட பார்க்கலை. பட் இப்போ தோணுது நான் செஞ்சது தப்போன்னு. அதுக்காக சும்மா அதையே சொல்லாதீங்க..”

“அதில்ல டி.. நீ அவளுக்காக தான் பண்ண. ஆனா அதை யாரும் இப்போ நினைக்கலையே.. உன் பெரியம்மா வார்த்தைக்கு வார்த்தை மகி அளவுக்கு தைரியம் வராதுன்னு சொல்லி காட்டறாங்க.. அப்பா ரொம்ப சங்கடபட்டு போயிட்டார்…” என்று வருத்தப்பட,

“ஸாரி ம்மா…” என்றாள் உமா மனதிலிருந்து.

அதன் பின்னும் ஆயிரம் அறிவுரைகள் சொல்லி அனைவரும் கிளம்ப, இவளுக்கோ ஐயோ என்றானது.

இதில் சுசி வேறு என்னால் தானே எல்லாம் என்று கண்ணீர் வடிக்க,

“ஷ்…!!!! சுசி…. நம்ம எதுக்காக இது செய்தோமோ அது நடந்திடுச்சுல.. அதை மட்டும் பாரு.. எல்லாம் கொஞ்ச நாள்ல சரியாகிடும்.. சந்தோசமா இரு.. மனசை போட்டு அலட்டிக்காத…” என்று அவளுக்கும் தைரியம் சொல்லி அனுப்பினாள்.

அனைவரும் கிளம்பியபின், அவள் அத்தை வீட்டிலும் சொல்லிக்கொண்டு ஹாஸ்டல் வந்து தன்னறைக்குள் நுழைந்ததும் தான் அவளுக்கு மூச்சே இயல்பாய் வந்தது.

கட்டிலில் வந்து விழுந்தவளுக்கு, நினைவுகள் இந்த நிகழ்வுகளை பற்றியே சுற்றிவர, ஒவ்வொரு முறையும் கோடீஸ்வரன் தன் வாழ்வில் வரும் போதெல்லாம் ஏதாவது ஒன்று நடந்துவிடுகிறது.

போன முறை அவன் காதல் சொன்னான். இம்முறை சுசியின் காதல் நிறைவேறியிருக்கிறது, ஆனால் என்ன இரண்டு முறையுமே உமாவின் நிம்மதி கெட்டுவிட்டது. அது தான் நிஜம்.

ஏன் இப்படி செய்கிறான்?? ஒவ்வொரு முறையும் தன்னை நிம்மதியிழக்க வைக்கிறான். அவனை பொருத்தமட்டில் அவன் செய்வது சரி. அவனுக்கு தோன்றுவதை உடனுக்கு உடன் செய்து முடித்து விடுகிறான். ஏன் ஒருமுறை கூட என்னை பற்றி சிந்திக்கவில்லை??

திடீரென்று ஒருநாள் கண் முன்னே வந்தான், காதல் சொன்னான். சுற்றி சுற்றி வந்தான். பின் நீயே என்னை தேடி வருவாய் என்றான். அதன் பின் ஓராண்டிற்கும் கண் முன்னே வரவேயில்லை. இப்பொழுது திடீரென்று அவன் முன் அவளே சென்று நிற்கும் சூழல். மீண்டும் மீண்டும் மனதினுள் தோன்ற அப்படியே படுத்துக்கிடந்தாள்.

சிறிது நேரம் அமைதியாய் இருக்கவேண்டும் போல் தோன்றியது, யாரிடமும் பேசிட தோன்றவில்லை. தன் செல் போனை அமர்த்திவைத்துவிட்டாள். கோடீஸ்வரன் மீண்டும் வருவானா?? தெரியாது. ஆனால் அவன் ஒவ்வொரு முறை அவள் முன்னே வந்து போகும் போதும் அதன் தாக்கம் அவளால் தாங்க முடியாமல் தான் இருந்தது.

“பெண்ணை பிடித்திருக்கிறது…” என்று அவன் சொன்ன பொழுது நிச்சயமாய் அவள் மனம் ஒருநொடி அதிர்ந்து தான் போனது.

‘யாரையடா சொல்கிறாய்…’ என்று அவள் அடித்துக்கொண்டது.

தன்னை வழிக்கு கொண்டுவர, ஒருவேளை சுசியை வைத்து எதுவும் செய்கிறானோ என்று தோன்றியது, ஆனால் அவன் தன்னை தான் மணப்பெண் என்று சொன்னதும் மனதில் ஒரே ஒரு நொடி ஒரு ஆனந்த அதிர்வலை வந்து போனது உமாவும் அறிவாள்.

‘எத்தனை தைரியம் இவனுக்கு….’ என்று எண்ணாமலும் இருக்க முடியவில்லை.

கோடீஸ்வரனை பற்றி அவள் கேரளா சென்று வந்ததுமே விசாரித்து தெரிந்து வைத்திருந்தாள். ஆனால் ஒருவரை பற்றி விசாரித்து தெரிந்துகொள்வதில் மட்டும் அனைத்தும் அவர்களை பற்றி தெரிந்த திருப்தி இருக்காதே.

எதுவாக இருந்தாலும் பழகி பார்த்தால் தானே தெரியும். அதுவும் அவள் மனதில் அவன் மீது ஒரு நாட்டம் இருக்கும் பொழுது. அவனோடு பழகவே அவள் மனம் ஒவ்வொரு முறையும் ஆசை கொண்டது.

ஆனால் எங்கே அவன் கண் முன் வந்தால் தானே. அதன் பிறகு தன்னை தானே சமாதானம் செய்துகொண்டு இருந்தவளுக்கோ  இப்படி ஒரு வாய்ப்பு அமைய அவள் அன்று சுசி பற்றி சொல்லவும், நிச்சயம் அவன் உதவுவான் என்ற நம்பிக்கை மனதில் இருந்தது. ஆனால் இப்படி கிஷோரையே அழைத்து வந்து நிறுத்துவான் என்று எண்ணவில்லை.

சரி எதுவென்றாலும் நன்மைக்கே என்று எண்ணியிருக்க, தன் பெற்றோர்கள் மனம் இதில் இத்தனை காயமடையும் என்று அவள் நினைத்துகூட பார்க்கவில்லை.

இதெல்லாம் இருக்கட்டும், இத்தனை நடந்து முடிந்த பிறகு, அடுத்து ஒருமுறை கூட கோடீஸ்வரன் இவளிடம் பேசவில்லை. இப்பொழுது அவளது பிரச்சனையே அது தான்.

என்ன நினைத்துகொண்டு இருக்கிறான்??

திடீர் திடீரென்று வருகிறான் போகிறான், கடைசியில் முழிப்பது நானா?? அன்று அத்தனை பேரின் முன்னிலும் என்னை பிடித்திருக்கிறது என்றான், அதன் பின் அவனும் அதை பற்றி பேசிடவில்லை, அவள் வீட்டிலும் அதை பத்தின பேச்சில்லை, என்னடா இது என்று மண்டை காய்ந்தது.

அவளுக்கு இப்பொழுது தெரியவேண்டியது எல்லாம் ஒன்றே ஒன்று தான், அடுத்து கோடீஸ்வரன் என்ன செய்வதாய் இருக்கிறான்?? மீண்டும் வருவானா?? வந்து என்ன செய்ய போகிறான்??

இப்படியாக அவள் யோசித்திருக்க, அவள் அறை கதவு தட்டப்பட்டது.

“ம்ம்ச் நிம்மதியா படுக்க கூட முடியாது…” என்றபடி கதவை திறக்க,

“உமா உங்களுக்கு விசிட்டர் வந்திருக்காங்க…” என்று ஒரு பெண்மணி வந்து சொல்ல,

“இப்போ தானே எல்லாம் ஊருக்கு கிளம்பி போனாங்க… அப்புறம் யாரா இருக்கும்….” என்று எண்ணியபடி சென்றாள்.

வேறு யாராய் இருக்க முடியும்??? எல்லாம் அவன் தான்.

கோடீஸ்வரன் தான்.

ஆனால் அவன் முகத்தில் என்றுமே படர்ந்திருக்கும் புன்னகை இல்லை. அதற்கு நேர்மாறாய் அவன் முகம் இறுகியிருந்தது. அவனை கண்டதும், இங்கே ஏன் வந்தான் என்ற கேள்வி அவள் மனதில் தோன்றிய அடுத்த நொடி, ஏன் இப்படி இருக்கிறான் என்ற கேள்விக்கு மாறிவிட்டது.

அவளை கண்டதுமே, “ஸாரி.. இந்த டைம்ல வரக்கூடாது தான். பட் பார்க்கணும் போல தோணிச்சு…” என்றான் ஒருமாதிரி.

என்னடா இது, முகமும் சரியில்லை, பேச்சிலும் உற்சாகமில்லை, என்றும் எப்பொழுதும் அவனிடம் ஒட்டிக்கொண்டு இருக்கும் புன்னகை இல்லை என்ற யோசனையோடு பதில் எதுவும் கூறாமல் அவன் முகத்தை மட்டுமே பார்க்க,

“என்னோட ஒரு டென் மினிட்ஸ் வெளிய வர முடியுமா ப்ளீஸ்…” என்றான்.

“எதுக்கு??” என்றாள் மொட்டையாக.

கோடீஸ்வரன் வரமாட்டானா?? வருவானா?? என்ற எண்ணத்தின் ஊஞ்சலில் ஆடிக்கொண்டு இருந்தவளுக்கு, அவன் கண் முன்னே வந்து நின்றதும், ஏன் வந்தான் என்று நினைக்காமலும் இருக்க முடியவில்லை.

“ப்ளீஸ் உம்… உம்ஸ்… உன்கிட்ட கொஞ்சம் பேசணும்…” என்றவனின் குரலில் அப்பட்டமாய் வருத்தம் தெரிய, அவளால் மறுக்க முடியவில்லை.

“ம்ம் டூ மினிட்ஸ்…” என்றவள் தன்னறைக்கு சென்று தயாராகி வர,

மனமோ சற்று முன்னே உன் அப்பா அம்மா சொல்லி சென்ற அறிவுரை என்ன இப்போது நீ இவனோடு தனிய கிளம்புவதென்ன என்று இடித்துரைக்க,

“எதுவா இருந்தாலும் சரி. இவன் என்னதான் சொல்றான்னு பாப்போம்.. என்னால இன்னும் ரொம்ம நாள் எல்லாம் இந்த டென்சனை தாங்க முடியாது.. ” என்ற எண்ணமே மேலோங்க, அவனோடு கிளம்பினாள்.

அதெல்லாம் இல்லை அவள் அவன் மீது கொண்ட காதல் அவளை அவனிடம் இழுத்து சென்றது. அது தான் உண்மை. அதை அவள் உணரவில்லை.  

காரில் ஏறியதில் இருந்து ஒருவரை ஒருவர் முகத்தைப் பார்த்துக்கொண்டனரே தவிர, மௌனம் மட்டுமே பேசிக்கொண்டது.

நேரம் கரைந்து ஓடிக்கொண்டு இருக்க, உமாவிற்கு சீக்கிரம் திரும்ப வேண்டும் என்று தோன்ற,

“என்ன வேணும் உங்களுக்கு…??” என்றாள் சற்றே குரலை உயர்த்தி.

அவள் அப்படிக்கேட்டதும், அவள் முகத்தை கண்டவன், பின் என்ன நினைத்தானோ, மெல்ல சிரித்துக்கொண்டான்.

“என்ன வேணும் உங்களுக்கு..??? இதே கேள்வி தான் பேபி சரியா ஒன் இயர்க்கு முன்னாடி என்கிட்ட கேட்ட.. அதுக்கு நான் பதிலும் சொன்னேன்.. நியாபகம் இல்லையா???” என்று அவன் கேட்க,

“எஸ்.. நீங்க சொன்னீங்க.. ஆனா போயிட்டீங்க…” என்றாள் அவளும்.

“நான் போகலை நீதான் கிளம்பி சென்னை வந்த…”

“நீங்களும் அடுத்து தேடி வரலையே….”

“ம்ம்ம்… சோ அந்த கோவம் உனக்கு.. நான் உன்னை தேடி வரலைன்னு.. அப்படித்தானே…” என்று கோடீஸ்வரன் கேட்க, உமா திகைத்து தான் போனாள். தன்னுள்ளத்தை கண்டுகொண்டானோ என்று.

நிஜம் தானே. அவன் அடுத்து வரவில்லை என்று மனதின் ஓரத்தில் ஒரு கோவம் இருந்தது தான். இத்தனை கலாட்டா செய்துவிட்டு ஒன்றுமே இல்லையென்பது போல அடுத்து ஆளே கண்ணில் படாமல் இருக்க, உமா தன்னை நிதானப்படுதிக்கொள்ள எத்தனை சிரமப்பட்டிருப்பாள் என்று அவளுக்கு தானே தெரியும்.

பதிலேதும் சொல்லாது உமா அமைதியாய் இருக்க,

“சொல்லு பேபி.. என் மேல கோவம் தான…” என்று மீண்டும் கேட்க,

“ம்ம்ச் இப்போ எதுக்கு என்னை கூட்டிட்டு வந்தீங்க??? இதை பேசவா???” என்றாள் காட்டமாய்.

“இல்லை… நீ என்ன முடிவு பண்ணிருக்கன்னு கேட்க தான்…” என்றான் அவனும் பட்டென்று.

“எதை பத்தி…??”

“ஷ்..!! நான் எதை பத்தி பேசுறேன்னு உனக்கே நல்லா தெரியும்…சும்மா சும்மா தெரியாத மாதிரி நடிக்காத உம்ஸ்.. உன் மனசிலையும் என் மேல ஒரு தாட் இருக்குனு எனக்கு தெரியும்…” என்றான் வேகமாய் , சற்றே கோவமாய்.

கோடீஸ்வரன் எறிந்த காதல் கல்லில் உமாவின் மனம் சலனமடைந்தது உண்மை தானே.. அதை அவள் ஒத்துக்கொள்ள வேண்டும் அவ்வளவே.

 

Advertisement