Advertisement

பந்தம் – 5

“டி சுசி.. தைரியமா இரு.. நான் எல்லாம் தெளிவா சொல்லியிருக்கேன்.. கோ… இல்லை அந்த மாப்பிள்ளை கண்டிப்பா நமக்கு சாதகமா தான் சொல்வார்..” என்று சுசிக்கு தைரியம் சொல்லியவளுக்கும் மனதில் நடுக்கம் இருக்கத்தான் செய்தது.

‘கடவுளே இந்த கோடீஸ்வரன் வேறெதுவும் பிரச்சனை செய்ய கூடாதே…’ என்று வேண்டிக்கொண்டாள்.

வெளியே அவள் வீட்டாட்களும், கோடீஸ்வரனும், அவனது பெற்றோர்களும் பேசும் குரல்கள் நன்றாகவே கேட்டது.

“மகி இன்னும் எவ்வளோ நேரம் செய்வீங்க.. சுசிய கூட்டிட்டு வா..” என்று சுசியின் அம்மா, லேசாய் வந்து கடிய,

“இதோ அஞ்சு நிமிஷம் பெரியம்மா…” என்றாள் உமா.

ஆனால் இருவருக்குமே எழுந்து செல்ல மனமில்லை. ஒருவித நடுக்கம். மேலும் நேரத்தை கடத்த, இவர்களின் அத்தையோ மீண்டும் அழைக்க வந்தார்.

“சுசி வாம்மா… மகி நீ என்ன உன்னை பார்க்க வந்த போல டென்சன்ல இருக்க…” என்று அவளையும் கேட்டுவிட்டு செல்ல,    

“டி மகி.. என் கைல தட்டு எதுவும் கொடுத்துடாதீங்க.. ஏற்கனவே நடுங்குது…” என்று சுசி கெஞ்ச,

“ஷ்… என்னவெல்லாம் டி சொல்ற.. சீக்கிரம் நட..” என்று உமா அவளை அதட்ட,

“ப்ளீஸ் டி…” என்று சுசி கெஞ்ச,     

“சரி சரி.. டென்சன் ஆகாத… நீ முன்னாடி நட, நான் தட்டு வாங்கிக்கறேன்…” என்று சொல்லியபடி இருவரும் வெளிய வர,

சரியாய் உமாவின் அம்மா வந்து சுசியின் கரங்களில் காப்பி டம்பளர் அடங்கிய தட்டினை நீட்ட,

“ம்மா அவ நெர்வஸா இருக்கா.. பிளேட்ட என்கிட்ட குடுங்க..” என்று உமா வாங்கிக்கொள்ள, உமாவின் அம்மா சுசியை அழைத்து சென்றார்.

சுசி சம்பிரதாயமாய் வணக்கம் சொல்ல, உமா தான் அனைவருக்கும் காப்பி எடுத்து கொடுத்தாள். இதை யாரும் வித்தியாசமாய் எண்ணவில்லை. இருந்தவர்களும் நினைக்கவில்லை, வந்தவர்களும் எண்ணவில்லை.

ஆனால் இது ஒன்றையே கோடீஸ்வரன் தனக்கு சாதகமாக்கிக்கொண்டான்.

கோடீஸ்வரனிடம் சென்று காப்பி கொடுக்கும் பொழுது அவளையும் அறியாது உமாவின் கைகள் நடுங்கியது.

அவள் மனமோ, இதேது இவன் தன்னை பெண் பார்க்க வந்திருந்தால் எத்தனை மகிழ்வாய் இருந்திருக்கும் என்று எண்ணாமல் இருக்க முடியவில்லை.

காதல் கொண்ட மனமல்லவா இஷ்டத்திற்கு யோசித்தது.   

“ரிலாக்ஸ் பேபி…” என்று அவள் மட்டுமே கேட்கும் குரலில் சொன்னவன், வெளியில் நல்லவன் போல் அமர்ந்துகொண்டான்.

அவன் அப்படி சொன்னது எதோ ஒருவகையில் மனம் ஆறுதல் கொள்ள, அமைதியாய் சுசி அருகே சென்று நின்றுகொண்டாள்.

சுசியோ பயத்தில் அவள் கைகளை இறுக பற்ற, உமாவோ தன்னுணர்வுகளை வெளிக்காட்டாது நின்றிருந்தாள்.

அனைவரும் அது இது என்று பேசி கடைசியில் பெண்ணுக்கு மாப்பிள்ளை பிடித்திருக்கா என்ற கேள்வியில் வந்து நிற்க,

சுசியின் அம்மாவோ, “அதெல்லாம் எங்க பொண்ணு எங்க முடிவுக்கு கட்டுபடுவா.. நான் அப்படிதான் வளர்த்திருக்கேன்…” என்று சொல்லிவிட,

கோடீஸ்வரன் அம்மாவோ, “அதில்லைங்க.. பொண்ணே ஒருவார்த்தை சரின்னு சொல்லிட்டா எங்களுக்கு  திருப்பதியா இருக்கும்…” என்று சுசி முகம் பார்க்க,

உமாவோ இதென்னடா புது சோதனை என்று கோடீஸ்வரன் முகம் பார்த்தாள். அவனோ நடப்பதெல்லாம் நல்ல வேடிக்கை என்பது போல் பார்த்திருக்க, உமா வேகமாய்,

“ஏதாவது செய்..” என்பது போல் சைகை காட்ட,

அவனோ வேண்டுமென்றே புரியாத பாவம் காட்டினான்.

“ஐயோ கடைசி நேரத்துல கொல்றானே…” என்று கையை பிசைந்தபடி சுசியை கண்டால், அவள் இதோ அழுதுவிடுவேன் என்பது போல் நின்றிருந்தாள்.

“என்னமா சுசி.. உனக்கு என் மகனை கட்டிக்க சம்மதமா??” என்று கோடீஸ்வரனின் அம்மா நேரடியாகவே கேட்க, அவள் என்ன பதில் சொல்வது என்று கலங்கி, குழம்பி, உமாவின் முகம் பார்க்க,

அவளோ, “ஏமாற்றிவிட்டாயே…” என்பது போல் கோடீஸ்வரன் முகம் பார்த்தாள்.

“என்னம்மா சுசி… உன்னை கேட்டா நீ அந்த பொண்ணு முகத்தை பார்க்கிற..” என்று மீண்டும் கேள்வி வர,

“ம்மா எனக்கு பொண்ணை பிடிச்சிருக்கு…” என்று அதற்குள் கோடீஸ்வரன் சற்றே அழுத்தம் திருத்தமாய் சொல்ல,

“ஐயோ…” என்று சுசியும், 

“என்ன இது…” என்று உமாவும் இவனை காண, 

“டேய் இரு டா உன்னையும் கேட்போம்… முதல்ல பொண்ணு சொல்லட்டும்…” என்று அவனை அவன் அம்மா அடக்க, 

சுசியின் அம்மாவோ, “சுசி வாயை திறந்து சம்மதம்னு சொல்லு டி.. எங்க மானத்தை வாங்காத. மகி முகத்தை என்ன பார்க்கிற..” என்று இடிக்க, அவளோ வசமாய் மாட்டிக் கொண்டோம் என்று முழிக்க,

“ஆன்ட்டி ஒன் செகண்ட்..” என்று சுசியின் அம்மாவை அழைத்தவன்,

“பொண்ணு இவங்க தானே… நீங்க ஏன் அவங்களை கேக்குறீங்க..??” என்று உமாவை கை காட்ட,

“அடப்பாவி…” என்றுதான் அனைவருக்கும் தோன்றியது.

உமாவோ இவன் இப்படி சொல்லவும் விக்கினாளில்லை, விறைத்தாளில்லை.

சுசியோ, “என்ன சொல்கிறான் இவன்…” என்பது போல் பார்க்க, சுற்றி இருந்த மற்ற அனைவரும் கூட, அதே போலத்தான் பார்த்தனர்.

கோடீஸ்வரன் பெற்றோரோ, “கோடி.. என்ன டா உளர்ற.. பொண்ணு அதில்ல. இந்த பொண்ணு…” என்று சுசியை காட்ட,

“ம்மா.. காப்பி தட்டு எடுத்திட்டு வந்தது தானே கல்யாண பொண்ணு.. நான் அப்படித்தான் நினைச்சேன்…” என்று வெகு கூலாய் சொல்ல,

அனைவரின் நிலையையும் கேட்கவும் வேண்டுமா.

உமாவோ, “ஐயோ என்ன இது.. கடைசியில் என்னை இழுக்கிறான்…” என்பது போல் பார்க்க,

“தேங்க்ஸ் டி மகி… இதான் பிளான்னா.. சூப்பர் டி… உனக்கும் அவர்க்கும் பொருத்தம் நல்லாருக்கு…” என்று சுசி தான் தப்பிவிட்ட மகிழ்வில் சொல்ல, இப்பொழுது வசமாய் மாட்டிக்கொண்டது உமா.

அங்கே எல்லாருக்குமே அதிர்ச்சி தான். ஒரு பெண்ணை பார்க்க வந்துவிட்டு மற்றொரு பெண்ணை பிடித்திருக்கிறது என்று சொன்னால் எப்படி.

அனைவரும் ஒரு முகத்தை ஒருவர் பார்த்துக்கொள்ள, உமாவின் அம்மா சுசியையும், உமாவையும் உள்ளே போக சொல்ல, தப்பித்தால் போதும் என்று அடித்து பிடித்து உள்ளே முதலில் ஓடியது உமா தான்.

இதயம் பல மடங்கு வேகமாய் துடிக்க, கட்டிலில் பொத்தென்று வந்தமர, பின்னோடு சிரிப்போடு வந்த சுசி,

“டி மகி.. சூப்பர் ப்ளான் டி.. சொல்லவே இல்லை. உன்னை அவர்க்கு முன்னமே தெரியுமா.. வந்ததுல இருந்து உன்னை தான் பார்த்தார்…” என்று சந்தோசமாய் கேட்க, உமாவோ அவளை எரித்துவிடுவது போல் பார்த்தாள்.

“என்ன மகி…??” என்று சுசி கேட்க,

“பேசமா போயிடு… உன் லைன் இப்போ கிளியர் ஆகிடுச்சுல…” என்று முறைத்தாள் உமா.

“அதில்ல மகி… அவர் பார்க்கவும் நல்லாத்தான் இருக்கார்.. நல்ல பேமிலி, படிப்பு சம்பளம்.. எல்லாமே ஓகே தானே…” என்று சுசி சொல்லி முடிக்கவில்லை.

“அப்போ நீயே கட்டிக்கோயேன்…” என்றாள் உமா அலட்டாமல்.

“ஹேய் என்ன மகி… என் லவ் தான் உனக்கு தெரியும்ல…”

“அப்போ நீங்க மட்டும் உங்களுக்கு பிடிச்சவங்கள பார்த்து லவ் பண்ணி கல்யாணம் பண்ணனும். நான் மட்டும் என்னை ஒருத்தன் பிடிச்சிருக்குன்னு சொன்னா உடனே நான் கல்யாணம் பண்ணிக்கனுமா..” என்று சண்டைக்கு தயாராக, இப்படியாக பதிலுக்கு பதில் சுசியும், உமாவும் பேசியபடி இருக்க, நேரம் போனது தெரியவில்லை.

வெளியே என்ன நடக்கிறது என்றும் தெரியவில்லை. யார் யார் என்ன பேசுகிறார்கள் என்றும் தெரியவில்லை.    

மேலும் சிறிது நேரம் சென்றிருக்க, உமாவின் அம்மா வந்து “மகி, சுசி வாங்க…” என்றழைக்க,

“என்னம்மா…??”என்றாள் உமா  பாவமாய்.

“ரெண்டு பேரும் வெளிய வாங்க…”

“எதுக்குமா…??”

“ம்ம்ச் கேள்வி மேல கேள்வி கேட்காத மகி.. வா. அங்க உன் பெரியம்மா வேற, அழுது புலம்பிட்டு இருக்காங்க..” என்று சொல்ல,

உமாவோ அனைத்தும் உன்னால் தான் என்பது போல சுசியை முறைத்தாள்.

“அவளை ஏன் டி முறைக்கிற.. மாப்பிள்ளை எல்லா உண்மையும் சொல்லிட்டார் வாங்க….” என்று அவள் கையை பிடித்து இழுக்க,

“எல்லாத்தையுமா?? என்ன என்ன சொல்லிருக்கான்… இவங்க வேற இன்னும் அவனை மாப்பிளைன்னு சொல்லிட்டு இருக்காங்களே… ஐயோ…” என்று எண்ணியவள் பதறி எழ,

சுசியோ, “ஐயோ என்ன சித்தி சொன்னாங்க…?” என்று பயந்து எழ,

“ம்ம் நீங்க ரெண்டு பேரும் செஞ்ச கூத்தை தான் சொன்னாங்க… ஒழுங்கா கிளம்பி வெளிய வாங்க.. அங்க மாப்பிள்ளை வீட்ல எல்லாம் வெய்ட் பண்ணிட்டு இருக்காங்க.. உங்களுக்கு ரொம்ப செல்லம் குடுத்து கெடுத்துட்டோம்..” என்று இருவரையுமே கை பிடித்து இழுத்து தான் சென்றார்.

சுசியும் உமாவும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி செல்ல, அங்கே வெளியிலோ கோடீஸ்வரன் அருகில் கிஷோர் அமர்ந்திருந்தான்.

கிஷோரை கண்டதுமே சுசிக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. முதலில் அவளால் நம்ப முடியவில்லை.. எப்படி?? எப்படி இது?? என்று அவனை காண, அவனோ அழகாய் அவளை பார்த்து புன்னகைத்தான்.    

அடுத்த வாரம் தான் வருவேன் என்றவன் இப்பொழுது கண் முன்னே, அதுவும் இங்கே வந்து நிற்க, அதுவும் அவன் குடும்பத்தோடு வந்து நிற்க, அவளுக்கு நடப்பது என்னவென்றே புரியவில்லை.

மனம் ஒருபுறம் நிம்மதியை உணர்ந்தாலும், அடுத்தது என்னவோ என்ற அச்சமும் சேர்ந்தே வந்தது. 

உமாவிற்கும் அப்படியே. எதுவுமே புரியவில்லை. வேகமாய் திரும்பி கோடீஸ்வரனை பார்த்தாள். அவனோ தன் ட்ரேட் மார்க் புன்னகையோடு இவளை காண, பட்டென்று பார்வையை திருப்பிக்கொண்டாள்.

‘களவாணி.. என்னவோ செஞ்சிருக்கான்.. அதான்… ச்சே கொஞ்ச நேரத்தில என்னை எப்படி டென்சன் பண்ணிட்டான்.. இன்னும் என்ன என்ன செய்ய நினைச்சிருக்கானோ.. கடவுளே என்னை ஏன் இவன் கண்ணில பட வைச்ச.. இவனை பார்த்த அன்னிக்கு இருந்து எனக்கு நிம்மதி இல்லை..’ என்று நினைக்கும் பொழுதே,

“டி சுசி… ஊமை கொட்டான் போல இருந்துட்டு, என்ன வேலை செஞ்சிருக்க. சரி அதை எங்க கிட்ட எல்லாம் சொல்லியிருக்க வேண்டாமா??? சின்ன பிள்ளைங்கங்கிறது சரியாதானே போச்சு.

விளையாட்டுத்தனமா செய்ய போக ஏதாவது பிரச்சனை ஆகியிருந்தா என்ன ஆகுறது.. பெத்தவங்க நாங்க குண்டு கல்லாட்டம் தானே இருக்கோம்…” சுசியின் அம்மா மகளையும், உமாவையும் ஒரு சேர பார்த்தே திட்ட, இருவருமே ஒன்றும் சொல்லாமல் தலையை குனிந்துகொண்டனர்.

“ஸாரி ஆன்ட்டி.. என்னால தான்… நான் தான் வொர்க்ல மாட்டிக்கிட்டேன்.. நான் சொன்னதுனால தான் மகிகிட்ட சுசி ஹெல்ப் கேட்டா…” என்று கிஷோர் பதில் சொல்ல,

“அப்படியில்ல மாப்பிள்ளை, இவங்க உங்களுக்கு சொந்தமா போனதுனால இப்போ பிரச்சனை இல்லை.. இதேது வேற யாராவதா இருந்திருந்தா, அதுவும் இந்த மகி வீடு தேடி போயி பேசியிருக்கா. போன இடத்துல ஏதாவது பிரச்சனைன்னா என்ன செய்றது…” என்று உமாவின் அம்மா தன் பங்கிற்கு மகளை கடிய,

‘என்னது சொந்தமா???? கிஷோரும் கோடீஸ்வரனும் சொந்தமா???’ என்று சுசியும் உமாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்.

“மகி.. எதுவா இருந்தாலும் எங்ககிட்ட சொல்லுவ தானே… இதையேன் சொல்லலை.. சுசி உன்கிட்ட நம்பி சொல்லிருக்கா.. சரிதான். கல்யாணங்கிறது எவ்வளோ பெரிய விஷயம்.. நீ போன இடத்துல இந்த தம்பி இருந்தனால சரி. இதேது தப்பான இடத்துக்கு போயிருந்தா நீ என்ன பண்ணிருப்ப??” என்று உமாவின் தந்தை மகளை கேட்க,

அவளோ பதில் பேசாமல் நின்றிருந்தாள். அவளின் கண்களோ கோடீஸ்வரனை காண,

மனமோ, ‘டேய் ஒரு செகன்ட்ல நீ ஸ்கோர் பண்ணிட்டியே.. உன்னை போய் நல்லவன்னு சொல்றாங்களே… நீ என்ன என்ன செஞ்சன்னு எனக்கு தானே தெரியும்… நீ இருந்ததுனால பரவாயில்லையாம்… ஹ்ம்ம் இந்த கொடுமையை எங்க போய் சொல்வேன்…’ என்று எண்ண,

“அங்கிள்.. டென்சன் வேண்டாம்.. உம்… உமா என்கிட்ட வந்து பேசினது சரிதான். இல்லைனா பிராப்ளம் பெரிசு தான் ஆகிருக்குமே தவிர, முடிஞ்சிருக்காது. இப்போ பாருங்க எல்லாருக்குமே நிம்மதி.. சோ இதை இப்படியே விடுங்களேன்…” என்றான் பெரிய மனித தோரணையில்.

போதாத குறைக்கு, அவனின் அப்பா வேறு, “அதெல்லாம் நம்ம பிள்ளைங்க எல்லாம் சரியா தான் செய்வாங்க சம்பந்தி.. இப்போ பாருங்க இது எவ்வளோ சுமுகமா முடிஞ்சது…” என்று எடுத்து சொல்ல, சற்றே அங்கே ஒரு அமைதியான நிலை உருவானது. 

அடுத்து ஆளாளுக்கு ஒன்றொன்று பேசி, கடைசியாய் சுசியின் பெற்றோரும், கிஷோரின் பெற்றோரும் தாம்பூலம் மாற்ற, அனைவர்க்கும் மகிழ்வாய் இருந்தது. முக்கியமாய் சுசிக்கும் கிஷோருக்கும்.

இருவருமே உமாவிற்கும் கோடீஸ்வரனுக்கும் நன்றி சொல்ல, அவர்களது முறைப்பையும் பெற்றுகொண்டனர்.    

இதற்கிடையில் ‘எப்படி..??’ என்பது போல் உமாவை கோடீஸ்வரன் பார்க்க, அனைத்தும் நல்லதாய் முடிந்ததில் மகிழ்ச்சி இருந்தாலும்,  தன்னையும் சேர்த்து போட்டுக்கொடுத்து விட்டானே என்ற கோவமும் அவளுக்கு இருக்க, உதட்டை சுளித்து முகத்தை திருப்பிக்கொண்டாள்.  

‘சுளிச்சுக்கோ.. நல்லா சுளிச்சுக்கோ…’ என்று லேசாய் முறுக்கிக்கொண்டான்.  

உமாவை பார்க்கும் போதெல்லாம் அவள் அம்மா திட்டிக்கொண்டும் முறைத்துக்கொண்டும் தான் இருந்தார்.

“தைரியம் கூடி போச்சு.. வாய் கூடி போச்சு… அவ்வளோ பெரிய மனுசி ஆகிட்டியா நீ…” என்று மகளை காணும்போதெல்லாம் கடிந்துகொண்டே இருக்க, முகத்தை உம்மென்று வைத்து ஒரு ஓரமாய் போய் நின்றிருந்தாள் உமா.

ஆரம்பத்தில் சுசியின் அம்மாவும் அப்பாவும் அவளை லேசாய் திட்டினாலும், மகளின் சந்தோசமான வாழ்வு தான் முக்கியம் என்று புரிய, ஓரளவிற்கு மனம் சமாதானம் ஆகியிருந்தனர்.

அப்படி பேசி அவர்கள் மனதை கரைத்திருந்தான் கோடீஸ்வரன்.

உமா அவனை பார்த்து பேசிவிட்டு வந்தபிறகு, இதில் தான் என்ன செய்யமுடியும் என்று நிறைய யோசித்தான். சுசிக்கு அவள் காதல் கிடைக்கவேண்டும், அவனுக்கு அவன் காதல் கிடைக்கவேண்டும். இதில் பெரியவர்கள் யார் மனமும் நோகக் கூடாது.

உமா வேறு கிஷோரை பற்றி சொல்ல, அவள் சொன்ன விவரங்களை வைத்து  யாரடா அவன் என்று விசாரித்து பார்க்க, கடைசியில் அங்கே சுற்றி இங்கே சுற்றி அவன் குடும்பத்திற்குள்ளேயே வந்து நின்றது.

கிஷோர், கோடீஸ்வரனின் ஒன்றுவிட்ட சித்தி மகன்.

“ஹப்பாடா… ஒரு பெரும் பிரச்சனை தீர்ந்தது…” என்று எண்ணிக்கொண்டே, கிஷோரை அழைத்து பேசி, நீ வந்தால் தான் இது சரியாகும் என்று  நிலைமையை சொன்னவன், இதை பற்றி சுசியிடமோ, உமாவிடமோ சொல்லவேண்டாம் என்றும் சொல்லிவிட்டு, 

அடுத்து அவன் வீட்டிலும், தன் வீட்டிலும் விசயத்தை சொல்லி, தான் என்ன பேசுகிறேனோ அதற்கு ஏற்றபடி பதில் பேசினால் போதுமென்று தான் அனைவரையும் அழைத்து  வந்திருந்தான்.

ஆனால் நடந்த இவையாவும் இங்கே யாருக்கும் தெரியாதே, அத்தோடு உமாவையும் அப்படியே விட மனமில்லை, பல நாட்கள் கழித்து அவளை கண்ட மகிழ்ச்சி வேறு. மனதினுள்ளே ஆசை இருந்தாலும் தன்னிடம் கோபத்தை மட்டுமே காட்டும் அவளிடம் சீண்டி பார்க்க ஆசை வந்தது.  சின்னதாய் அவளோடு ஒரு விளையாடி பார்க்க ஆவல் கொண்டான்.

‘பெண்ணை எனக்கு பிடித்திருக்கிறது…’ என்று சொல்லும் போது உமாவின் முகத்தில் தோன்றும் மாற்றத்தை கண்டிட எண்ணம் கொண்டான்.

அவன் நினைத்தது போலவே அனைத்தும் நடக்க, சுசியின் அம்மா அப்பா கூட ஓரளவிற்கு சமாதானம் ஆகியிருந்தனர், ஆனால் உமாவின் அம்மாவோ காணும் போதெல்லாம் மகளை ஏச, அவனுக்கே ஒரு மாதிரி ஆகிவிட்டது.

‘ச்சே.. இந்த கிஷோர் சும்மா இருக்காமல் வாயை விட்டுவிட்டான்.. இல்லையென்றால் உமா வந்ததையே சொல்லியிருக்க வேண்டியதில்லை..’ என்று சிந்தனை ஓட,

அங்கே உமாவின் அம்மா தன் மகளை முறைத்துகொண்டு இருந்தார்.      பெண்பிள்ளை தனியே போன இடத்தில் ஏதாவது ஒன்றாகியிருந்தால் என்னவாகியிருக்கும் என்ற எண்ணமே அவரை பேச வைக்க,

“அங்கிள் ப்ளீஸ்.. ஆன்ட்டிய ரொம்ப திட்ட வேணாம்னு சொல்லுங்க.. உமா பண்ணதில எந்த தப்பும் இல்லையே.. சுசிக்காக பேச வந்தாங்க அவ்வளோதானே…” என்று உமாவின் அப்பாவிடம் அவளுக்காய் பரிந்து பேச,

“இல்ல தம்பி, எல்லா நேரமும் ஒரே மாதிரி இருக்காது தானே.. கொஞ்சம் கண்டிக்கட்டும். எப்பவுமே தான் பண்றது சரின்னு அவளுக்கு ஒரு நினைப்பிருக்கு. நாங்களும் அப்படிதான் நினைச்சு விட்டிருந்தோம்.. இப்போ கிஷோர் பேமிலியே வேற யாரோவா இருந்தா, இந்நேரம் எங்க அண்ணா சம்மதிச்சே இருக்க மாட்டார்.

எதுவும் யோசிச்சு செய்யணும், வீட்ல பெரியவங்க நாங்க எதுக்கு இருக்கோம். திட்டினாலும் பிள்ளைங்க நல்லதுக்கு தானே.. இந்த காலத்துல என்னென்னவோ நடக்குது…” என்றவரின் குரலில் எங்கே தன் மகளை யாரும் தவறாய் நினைத்துவிடுவரோ என்ற ஆதங்கம் அப்படியே தெரிந்தது.

அது அவனுக்கும் புரிய, தானாவது இதில் பெரியவர்களிடம் முன்னமே சொல்லியிருக்க வேண்டுமோ என்று தோன்றியது அவனுக்கு. இப்பொழுது கடைசியில் அவனது உமா அல்லவா பேச்சு வாங்குகிறாள்.

பாவமாய் ஒரு ஓரத்தில் அமர்ந்து இருந்தவளை காண அவனுக்கே சங்கடமாய் போனது.

மனதினுள்ளே ‘ஸாரி பேபி…’ என்று சொல்லிக்கொண்டான்.

 

 

Advertisement