Advertisement

பந்தம் – 4

நாம் ஒன்று நினைத்திட, நடப்பது ஒன்றாய் இருக்கும் பொழுது, நம்மால் என்னதான் செய்திட முடியும். ஆனால் உமா, கோடீஸ்வரன் விசயத்தில் விதி யார் பக்கம் இருக்கிறது என்று தெரியவில்லை. இல்லை இவர்களை வைத்து விதி தன் பொழுதை போக்கிக்கொண்டு இருந்ததா அதுவும் தெரியவில்லை.

வந்தது வந்தாகிவிட்டது, இன்னும் ஒருநாள் இருக்கிறது சுற்றி பார்ப்போம் என்று கொச்சின் கிளம்பியிருந்தனர் உமாவும், அவளது கூட்டாளிகளும்.

முதலில் வெளியே செல்ல அத்தனை இஷ்டமில்லை உமாவிற்கு. எங்க அங்கேயும் அவன் வருவானோ என்று தோன்றியது. அதற்கு காரணமும் இருந்தது.

நேற்று இதே ஹோட்டல் லாபியில் அவனை கண்டாள்.

யாரை பார்க்க வந்தான். தன்னை தானா?? இல்லை வேறு யாரையுமா?? என்றெல்லாம் அவளுக்கு தெரியாது.

ஆனாலும் அவனை கண்டதும் அவள் மனம் இயல்பை தொலைத்து உண்மை. பார்த்ததும் திக்கென்று இருக்க. அப்படியே நின்றுவிட்டாள். ஆனால் அவனோ இவளை காணதது போல் சென்றுவிட்டான்.

அதற்கும் அவள் மனம் சிணுக்கம் கொண்டது. ‘ஒருவேளை நிஜமாகவே பார்க்கவில்லையோ..’ என்று அவனுக்கு சார்பாய் மனம் பேசினாலும்,  அதெப்படி என்னை பார்க்காமல் போகலாம் என்றும் அடம் பிடித்துத் தொலைக்க, தலை வலி வந்தது தான் மிச்சம்.

அந்த நாள் முழுவதும் எங்கேயும் செல்லாமல் அறைக்குள்ளேயே இருந்தவளை இன்று தான் அவள் நண்பர்கள் உற்ச்சாகப் படுத்தி கிளப்பிக் கூட்டி வந்திருந்தனர்.                

“போட்டிங் செமையா இருக்கும்ல.. ஸ்கூல் டைம்ல ஒன்ஸ் இங்க வந்தது. அதுக்கப்புறம் இப்போதான் வர்றேன்…” என்றபடி நடந்தவளை யாரோ பார்ப்பது போலிருக்க, நடந்துகொண்டிருந்தவள் அப்படியே நின்று சுற்றி முற்றி பார்த்தாள்.

“என்ன மகி.. என்னாச்சு…??” என்று அனைவரும் கேட்க,

“நத்திங்.. யாரோ பார்த்த மாதிரி இருந்தது…” என்றபடி தலையை லேசாய் உலுக்கிவிட்டு நடக்க, அவள் மனம் அடித்து சொன்னது அவன் இங்கே தான் இருக்கிறான். உன்னை பார்த்துகொண்டு தான் இருக்கிறான் என்று.   

“நீ அன்னிக்கு இருந்து ரொம்ப டிஸ்டர்ப்பா இருக்க மகி…” என்று ஒருத்தி சொல்ல,

“நோ நோ.. ஐம் நார்மல்…” என்றபடி நடந்தாள்.

என்னதான் இயல்பாய் இருப்பது போல் காட்டிக்கொண்டாலும், மனதில் ஏதோ ஒரு உறுத்தல் இருந்துகொண்டே தான் இருந்தது. இன்னும் கூட தன்னை யாரோ பார்ப்பது போல தோன்ற,

அதற்குள் ஒருவன் “டிக்கெட் வாங்கியாச்சு, சீக்கிரம் வாங்க…” என்று கத்த,

தன் நினைவை ஒதுக்கிவிட்டு வேகமாய் சென்றாள். இவர்கள் குழுவோடு சேர்ந்து மொத்தம் இருபது பேர் இருப்பார்கள் போல, யார் இருக்கிறார்கள் என்றெல்லாம் காணாது, வேகமாய் இவள் படகின் மேல் தளத்திற்கு செல்ல, அவளோடு அவள் கூட்டமும் சேர்ந்தே சென்றது.

படகின் மேல் தளத்தில் அங்கே தமிழ் பாட்டும், மலையாள பாட்டும் மாறி மாறி ஒலித்துக்கொண்டு இருந்தது. பேச்சும், சிரிப்பும், கும்மாளமுமாய் மகிழ்ச்சி அலைகள் அங்கே கடல் அலைகளோடு போட்டியிட, படகும் அழகாய் தன் ஓட்டத்தை தொடங்கியது.

உமாவிற்கு மனதில் அத்தனை நேரம் இருந்த குழப்பம் மறைய, மனதில் ஒருவித நிம்மதி பரவத் தொடங்கியது. இயற்கையோடு சேர்த்து இசையும் அவள் மனதை மாற்ற, குதூகலமாய் உணர்ந்தாள்.

மனம் கொஞ்சம் கொஞ்சமாய் இயல்பிற்கு மாற, தன் நண்பர்களுடன் கலகலத்து கொண்டிருக்க, திடீரென்று அவள் மனம் பட படவென்று அடிக்கத் தொடங்கியது. ஏனென்று காரணம் தெரியவில்லை. இதயத் துடிப்பு அதிகமாக, கண்ணிமைகள் பட படவென அடித்துக்கொள்ள, உடலோ ஒரு புதுவித உணர்வை அனுபவிக்க, மீண்டும் சுற்றி முற்றி பார்த்தாள்.

“என்ன மகி…” என்று அருகிலிருந்தவள் கேட்க,

“நத்திங்…” என்றபடி மீண்டும் பார்வையை ஓடவிட்டாள்.

‘என்ன இது, ஏன் இப்படி திடீர்னு ஆகுது.. அவன்.. அந்த கோடீஸ்வரன். இங்கேயும் இருக்கானா…???’ என்று எண்ணியவளின் கண்களோ அந்த படகு வீட்டின் மேல் தளத்தை முழுதுமாய் அலச, அங்கே இங்கே என்று தொட்டு மீண்டவளின் கண்கள் சட்டென்று ஒரு இடத்தில நிலைகுத்தி நின்றது.

அதோ அவன் தான். இவள் அமர்ந்திருந்த வரிசைக்கு எதிர் வரிசையில் கடைசியில் அமர்ந்திருந்தான். அவன் கண்கள் இவள் பக்கம் தான் பார்த்திருந்தது. ஆனால் கறுப்புக் கண்ணாடி அணிந்திருக்க, மற்றவர்களுக்கு அவன் யாரை காண்கிறான் என்று தெரியாது.  

மற்றவர்களுக்கு தெரியாது, இவளுக்குமா புரியாமல் போகும். உமா இவனை பார்த்ததுமே கோடீஸ்வரன் முகம் புன்னகையை பூச,

“ச்சே இங்கேயும் வந்துட்டானா???” என்று முகத்தை சுருக்கியவளுக்கு எப்போதடா இந்த படகு பயணம் முடியும் என்பது போல் தோன்றினாலும், கண்கள் அவன் பக்கம் செல்வதை தடுக்க முடியவில்லை அவளால்.

இதற்கும் கோடீஸ்வரன் அன்று போல் எல்லாம் இன்று எதுவும் வம்பளக்கவில்லை. அமைதியாய் ஒரு இடத்தில் அமர்ந்திருந்தான். அவ்வளவே. ஆனால் அவன் அப்படி அமைதியாய் அமர்ந்திருந்ததே இவளுக்கு இம்சையாய் இருந்தது.

“ஐயோ இவனெதுக்கு இங்க வந்தான்…” என்பது போல அமர்ந்திருக்க, அத்தனை நேரம் இருந்த உற்சாகம் வடிந்துவிட்டது. என்னவோ அவன் தன்னையே பார்த்திருப்பது ஒருமாதிரி இருந்தது.

“வாட் ஹேப்பன் மகி… லுக்கிங் டிஸ்டர்ப்டு…” என்று அருகே இருந்தவள் கேட்க, உமாவோ பார்வையிலேயே அங்கே கோடீஸ்வரன் இருப்பதை உணர்த்தினாள்.

“ஓ.. இங்கேயும் வந்தாச்சா??!!! டோன்ட் வொரி பிராப்ளம் பண்ணா பார்த்துக்கலாம்…” என்று தைரியம் சொல்ல, உமாவும் சரியென்று தலையை உருட்டினாள்.

ஒவ்வொரு நொடியும் அவன் வந்து ஏதாவது பேசுவானோ, எதையாவது சொல்வானோ என்று உமாவின் மனம் நொடிக்கு நொடி எதையோ எதிர்பார்த்து பரப்பரப்பாய் காத்திருந்தது. ஆனால் அவள் எதிர்பார்த்தது போல் எதுவும் நடக்கவில்லை.

கோடீஸ்வரன் அமைதியாய் ஆனந்தமாய் அந்த பயணத்தை ரசித்தபடி இருக்க, உமாவோ இயல்பாய் இருக்க முடியாமல் தவித்தாள். ஆனால் உமாவின் ஒவ்வொரு மாற்றத்தையும் அவன் கண்கள் படம் பிடித்துகொண்டு தான் இருந்தன.

“உம்ஸ்… உன் மனசுக்குள்ள நான் இறங்கிட்டேன்.. அதுக்கு நீயே தான் டியர் சாட்சி….” என்று தனக்கு தானே கூறிக்கொண்டவன்,

படகு தான் நிற்க போகிறேன் என்பதற்கு ஏற்றாற்போல் சப்தம் ஒலிக்க, அனைவரும் இறங்க தயாராக, கோடீஸ்வரனும் எழுந்து நின்றான்.

உமாவிற்கோ மனதினுள்ளே நடுக்கம் பரவியது. இறங்கி போகும் பொழுது இவன் வந்து எதுவும் பேசுவானோ என்று தயங்கியபடியே மெல்ல மெல்ல கூட்டத்தோடு இணைந்து இறங்கி செல்ல, கோடீஸ்வரன் அவளை கண்டுகொண்டதாகவே தெரியவில்லை.

‘ஹப்பாடி.. விட்டது சனி… அன்னிக்கு எதுவோ தெரியாம செஞ்சிட்டான் போல.. பொழைச்சு போகட்டும்… ச்சே கொஞ்ச நேரத்துல எவ்வளோ டென்ஷன் பண்ணிட்டான்.. நானும் எவ்வளோ குழம்பிட்டேன்..’ என்று சற்றே ஆசுவாசப்படுத்திக்கொண்டு தன் நண்பர்களோடு வெளியே வந்தவளை,

“உம்ஸ்….” என்ற குரல் தடுத்து நிறுத்தியது.

‘இப்போதானே டா கொஞ்சம் நிம்மதியா இருக்குன்னு நினைச்சேன்…’ என்றபடி முகத்தை உர்ரென்று வைத்து திரும்ப, அவளோடு சேர்ந்து அவளின் குழு மொத்தமும் திரும்பியது.

‘எல்லாரையும் கூப்பிட்ட மாதிரி திரும்புதுங்க…’ என்று முனுமுனுத்துக்கொண்டே,

“உன்கிட்ட கொஞ்சம் பேசணும் பேபி…” என்றான் அவனது ட்ரேட் மார்க் புன்னகையோடு.

“ஹலோ Mr. நாங்களும் பார்க்கிறோம்.. அன்னிக்கு இருந்து மகி கிட்ட பிராப்ளம் பண்ணிட்டு இருக்கீங்க.. என்ன வேணும் உங்களுக்கு..???” என்று ஒருவன் முன்னே வர,

“ஜான்… வேணாம்.. பப்ளிக்ல இஸ்யு ஆக போகுது…” என்று தடுத்து நிறுத்தினாள் உமா.

உமா கல கல பேர்வழி தான். ஆனால் அதற்காக இந்த மாதிரி வம்பு தும்பு எல்லாம் அவளுக்கு பிடிக்காது. தான் இருக்குமிடம் கலகலப்பாக இருக்க வேண்டும் அதில் எவ்வித சலசலப்பு இருக்க கூடாது என்று எண்ணுவாள்.

ஆனால் அவளே ஒதுங்கி போக நினைத்தாலும், இந்த கோடீஸ்வரன் விடமாட்டான் போலவே.

இதோடு இதை முடிக்க வேண்டும் என்று மனதில் முடிவு செய்தவள், ஜானை தடுத்துவிட்டு அவனருகே சென்றாள்.

“என்ன பேசணும் உங்களுக்கு.. சரி வாங்க பேசலாம்.. இப்போவே எதுனாலும் பேசி முடிக்கலாம்.. சும்மா இப்படி நான் போற இடம் வர்ற இடமெல்லாம் வந்து என்னை டென்சன் பண்ணாதீங்க…” என்று படபடக்க,

“ஹே!!! உம்ஸ்… கூல் பேபி… நான் உன்னை பாலோ பண்ணலை.. ஜஸ்ட் உன்னை இங்க பார்த்தேன் பேசணும் தோணிச்சு அதான் கேட்டேன்.. இதில் என்ன தப்பிருக்கு…” என்று தோளை குலுக்க,

அவன் செய்த பாவனை உமாவிற்கே ஒரு சிரிப்பை வரவழைத்தது.

“ச்சே பண்றது எல்லாம் கேடித்தனம்… ஆனா ஒன்னுமே தெரியாத பச்சை பிள்ளை போல மூஞ்சிய வைக்கிறது…” என்று எண்ணியவள், அதை முகத்தில் காட்டாது,

“என்ன பேசணும்..??” என்றாள் இறுக்கமாய்.

“ஹ்ம்ம்..!!! என்ன பேசணும்… நிறைய பேசணும்.. லைப் லாங் பேசணும். பட் அதுக்கெல்லாம் உனக்கு இப்போ நேரமிருக்காதே. பிகாஸ் நீ நாளைக்கு சென்னை கிளம்பனும்.. நான் என் வேலையை பார்க்க போகணும்.. உன் பிரண்ட்ஸ் வேற இதோ என்னை கடிச்சு திங்கிற போல பார்த்துட்டு நிக்கிறாங்க… சோ….”

“சோ….!!!!”

“நம்ம நெக்ஸ்ட் டைம் மீட் பண்ணும் போது கண்டிப்பா நிறைய பேசலாம் பேபி.. ஓகே வா..” என்று சிரிப்பை அடக்கி கொண்டு கேட்டவனை என்ன செய்தால் தகும் என்று இருந்தது அவளுக்கு.

“மகி… இட்ஸ் கெட்டிங் லேட்…” என்று அவள் தோழி கத்த,

கோடீஸ்வரனோ, “இந்த கூட்டமில்லாம வந்தா கொஞ்சம் பேசலாம்… ஓவர் டிஸ்டர்பன்ஸ்..” என்று அவர்களை கை காட்டி சொல்ல,

“ஹலோ… தே ஆர் மை பிரண்ட்ஸ்…” என்று பல்லை கடித்தாள்.

“சோ வாட்.. உன்கிட்ட பேசணும்னு தோணினதுமே என் பிரண்ட்ஸ போக சொல்லிட்டேன்..”

“ஸ்ஸ்ஸ்…!!!!பேசி முடிச்சிட்டீங்களா?? நான் போகலாமா???”

“அதான் சொன்னேனே நெக்ஸ்ட் மீட் பண்றபோ நிறைய பேசலாம்..”

“அதுக்கு வாய்ப்பே இல்லை…”

“வொய் நாட்…!!!  நிச்சயம் ஒருநாள் நீயே என்னை தேடி வருவ…” என்றவனின் குரலில் அத்தனை உறுதி இருந்தது.

உமாவிற்கே மனதினுள்ளே ஆச்சரியம் தான். பார்த்த அடுத்த சில நேரத்திலேயே காதல் சொன்னான், இப்பொழுது இப்படியெல்லாம் பேசுகிறான். தன்னை பற்றி இவனுக்கு என்ன தெரியும்?? எதை வைத்து இவன் இத்தனை உறுதியாக இருக்கிறான்??

இதெல்லாம் நினைக்கும் பொழுது ஆச்சரியம் தான். பார்க்க நல்லவன் போல் தான் தெரிகிறான். ஆனால் அதற்காகவெல்லாம் அவனிடம் நான் பேசிட முடியுமா?? என்று தோன்ற, தன் எண்ணத்தை வெளிக்காட்டினால் அவன் இன்னும் அட்வான்டேஜ் எடுப்பான் என்றும் தோன்ற,

“உங்க நம்பிக்கைக்கு என் வாழ்த்துக்கள்…” என்று மட்டும் சொல்லிவிட்டு திரும்பி நடந்தாள்.

“உம்ஸ்… நான் பேசுறது ஜாலியா வேணும்னா இருக்கும். பட் மை லவ் இஸ் ட்ரூ..  கண்டிப்பா ஒரு நாள் நீ என்னை தேடி வருவ பேபி… அப்போவும் என் லவ் உனக்கு தான்…” என்று கத்த,

சட்டென்று திரும்பி பார்த்தவள், “அப்படியா பாப்போம்.. மீட் பண்ணா…!!!!” என்று மட்டும் சொல்லிவிட்டு சென்றுவிட்டாள்.

அவ்வளவு தான். அதன் பிறகு கோடீஸ்வரன் உமாவை காணவில்லை, காண முயற்சிக்கவும் இல்லை. உமாவும் சென்னை வந்துவிட்டாள். நாட்கள் மாதங்களாகி, மாதங்கள் வருடத்தில் வந்து நின்றது.

ஆனால் அன்று நடந்த நிகழ்வும், அந்நிகழ்வு தந்த தாக்கமும் உமாவின் மனதில் அப்படியே இருந்தது.

சென்னை வந்தபின்னும், தன் வேலையிலும், தினசரி வாழ்விலும் தன்னை மூழ்கடித்துகொண்டாலும், உமாவின் மனத்தில் சில மாதங்கள் வரை அந்த பரபரப்பு இருந்துகொண்டே தான் இருந்தது.

அவன் வருவானா?? இல்லை அவன் சொன்னது போல் நானே அவனை தேடி சென்றுவிடுவேனா?? என்றெல்லாம் தோன்ற தன்னை நினைத்தே பயந்து போனாள் உமா.  

என்ன இது, திடீரென்று வந்து கண் முன்னே நின்றான். காதல் சொன்னான்.. பின்னேயே சுற்றினான். மீண்டும் சந்திப்போம் என்றான். ஆனால் அவ்வளவு தான். அதன் பின் ஒன்றுமே இல்லை. அவனாய் அவளை காண முயற்சிக்கவும் இல்லை. தொடர்புகொள்ளவும் இல்லை. அவன்  நினைத்திருந்தால் முடியாததா.

கேரளா சென்று வந்ததில் இருந்து ஏதாவது புதிய எண்ணில் இருந்து அழைப்பு வந்தால் கூட அவனாய் இருக்குமோ என்றே எண்ணம் எழாமல் இல்லை.

இப்படியே சில நாட்கள் கழிய, இல்லை அவனில்லை. அவன் வரமாட்டான். அன்று எதோ வம்பிழுத்து இருக்கிறான். நான் தான் முட்டாள் போல் மனதை ஓடவிட்டு விட்டேன் என்று தன்னை தானே சமாதானம் செய்துகொண்டு கொஞ்சம் கொஞ்சமாய் அதிலிருந்து மீண்டு தெளிவாக முயற்சித்தாள்.

என்னதான் அதெல்லாம் நினைக்கவே கூடாது என்று இருந்தாலும் அவன்பால் ஈர்க்கப்பட்டு அவனோடு பழகிட ஆசைகொண்ட மனம் எத்தனை நாள் அமைதியாய் இருக்கும். அவன் நினைவுகள் வருவதை தவிர்க்க முடியாமல் தான் இருந்தாள்.  

ஆனால் இப்படி கொஞ்சம் கூட எதிர்பாராமல் அவனை சந்திப்போம் என்று உமா கனவிலும் எண்ணவில்லை.

ஓராண்டிற்கு பிறகு, மீண்டும் கோடீஸ்வரனை சந்தித்து விட்டு வீடு வந்தவளுக்கு, தனிமையும் கை கொடுக்க, பழைய நினைவுகளை எல்லாம் மனதில் ஒருமுறை ஓட்டிப்பார்த்துக்கொண்டு இருந்தாள்.

ஒரு வருடம்… என்று நினைக்கும் பொழுதே.. அவளுக்கு படக்கென்று தோன்றியது சரியாய் இதே நாளில் தான் அவனை அந்த திருமண மண்டபத்தில் சந்தித்தாள். அவன் சொன்னது போலவே, அவளாகவே அவனை தேடி செல்லும்படி நடந்துவிட்டது.

அவன் சொன்னது போலவே, அவன் காதலும் ஜெயித்திடுமா??

உமாவின் எண்ணங்கள் இப்படி பயணிக்க, திடுக்கிட்டாள்.

“ச்சே என்ன இது… நான் இப்படியெல்லாம் யோசிக்கவே கூடாது. முதல்ல சுசி பிராப்ளம் முடியனும்…” என்று எண்ணியவளுக்கு, வேறெதுவும் சிந்திக்க முடியவில்லை.

தனியே இருக்கவும் ஒருமாதிரி இருந்தது. சுசிக்கு அழைத்து பார்த்தாள் அவள் எடுக்கவில்லை. அடுத்து அவள் அம்மாவிற்கு அழைத்தாள்.

சொல்லாமல் கொள்ளாமல் எங்கே போனாய் என்று திட்டு வேறு. தலைவலி அது இதென்று சொல்லி சமாளித்து எப்போது வருவீர்கள் என்று கேட்க, உமாவின் அம்மாவோ நாங்கள் வர இன்னும் நேரமாகும் சுசியை அனுப்புகிறேன் என்று சொல்லி அனுப்பியும் வைத்தார்.     

இதுதான் சாக்கென்று மற்றவர்களுக்கு முன்னே வீடு வந்த சுசியோ,

“டி மகி.. என்னாச்சு டி… எதுவும் பிரச்சனை இல்லையே.. ஏன் டி முகமே ஒரு மாதிரி இருக்கு… ” என்றவளை பார்த்து,

“நத்திங் சுசி.. லேசா தலைவலி… வேற ஒன்னுமில்லை…” என்று ஆறுதல் சொன்னாள்.

“நிஜமாவே அந்த மாப்பிள்ளை சரின்னு சொல்லிட்டாரா..??” என்று சுசி பதற்றமாய் கேட்க,

“சரின்னு சொல்லலை.. ஆனா யோசிப்பார் சுசி கண்டிப்பா..” என்று உறுதியளித்தாள்.

கண்டிப்பாய் கோடீஸ்வரன் சுசிக்கு சம்மதம் சொல்ல மாட்டான் என்று தெரியும், ஆனால் உமாவின் பதற்றமெல்லாம் இதை வைத்து அவன் வேறெதுவும் செய்ய கூடாதே என்றுதான்.

 

 

 

Advertisement